படித்ததும் சிரித்து விடவும்

4/14/20241 min read

Our 9th wedding anniversary is around the corner (மே 1-ம் திகதி). ஆதலால், எங்களது மணவாழ்வைப் புகழ்ந்து(?!) கவிதை எழுதியாக வேண்டிய கட்டாயம்! வெட்டியாத் தான இருக்கோம்! எழுதி விடுவோம் கழுதயன்னு எழுதி வுட்டேன்! புதுக் கவிதை,மரபுக்கவிதை எழுதுபவர்களெல்லாம்.... கூச்சப்படாம கண்ணீர் விட்டுக் கதறலாம்! நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்!

கன்னிப்பருவத்தில் கனவொன்றிருந்தது!

கட்டாந்தரை இரவுகளில்.. விட்டத்தைப் பார்த்து..

கொட்டக் கொட்ட விழித்து சேர்த்து வைத்தது!

அது.. அன்பு,பண்பென அறத்துப்பாலால் நிரம்பியிருந்தது!

(கெரகம்) நீ வந்து சேர்ந்தாய்!

அகம், அன்புடைமையை விட்டு விட்டு..

நையப்புடைத்தலை நாடத் தொடங்கிவிட்டது!

அழகாய் ஆடை உடுத்துவதும்,

அலங்காரம் செய்து கொள்வதும்,

அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனப்படாது உன்னிடம்!

ஆனால்.. அழுக்கு நைட்டியுடனும்

அள்ளி முடித்தக் கொண்டையுடனும்

அஷ்டக்கோணலாய் முகம் வைத்துக் கொண்டு..

அடுப்படியில் நிற்கையில்… ஆஆஆ-வெனப் பார்ப்பாய்!

காலைக்குளியல் முடித்து.. என் கண் முன் வந்து..

காபியோடு கனவிலிருக்கும்.. என் முகத்தில் ஊதி..

‘பல்லு விளக்கிட்டேன் தான?’ எனக் கேட்டு..

விடியலிலேயே விளக்குமாறைத் தேட வைக்கிறாய்!

கார்னரில்.. ஹாஷ்டேக் கிட்சன்ரொமான்ஸ்..

கதறும் சத்தம்.. கேட்கிறதா உனக்கு?

L for Love, S for Soulmate என..

நான் புனிதப்படுத்தும் சொற்களினெதிரே..

L for Lust, S for Sex என நிதர்சனம் பேசி..

என் அகராதியை மாற்றி எழுதுகிறாய்!

என் playlist-ல் ‘நினைவோ ஒரு பறவை’

‘நீ ஒரு காதல் சங்கீதம்’ எனக் கொஞ்சும் இளையராஜா,

உன் playlist-ல் ‘நிலா அது வானத்து மேலே’

‘ஆத்தாடி பாவாட காத்தாட’ எனக் கூவிக்

கடுப்பைக் கிளப்புகிறார்!

எனக்கு சினிமா! உனக்கு அரசியல்!

நான் Instagram-வாசி, நீ Twitter-வாசி!

எனக்கு Saturday நோ சமையல்! உனக்கு Sunday நோ குளியல்!

எனக்கு மர்மதேசம்! உனக்கு பாக்கியலட்சுமி!

இப்படியாக… உண்ணும் உணவிலிருந்து,

எண்ணும் எண்ணம் வரை..

எதிலும் நமக்கு ஒத்துப்போவதில்லை!

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்குமென்கிறார்கள்!

ஆனால் எனக்கு.. எட்டுக்கட்டையில்..

உன் எலும்பை எண்ணத் தான் தோன்றுகிறது!

காதல் வசனங்களெல்லாம்..

கண்காணாத இடத்திற்குப் போய் விட்டது!

ரொமான்ஸ் - ரோட்டோர நாயுடன்

பொறை தின்று கொண்டிருக்கலாம்!

ஈகோ – ஈ ஓட்டிய நிலையில்!

அன்பு – அதல பாதாளத்தில்!

‘ஐ லவ் யூ’- அழிவின் பிடியில்!

நம்மிருவருக்கிடையே.. நிறைந்திருப்பதாய்

நான் நினைத்திருந்த அத்தனையும்..

இப்போது… அர்த்தமற்றதாய்த் தோன்றுகிறது!

நீ,நான் என்கிற வேறுபாட்டைக் கடந்து…

நீயே… நானாகவும்… நானே நீயாகவும்..

உருமாறி விட்ட.. இன்றைய நிலை..

உன்னதம் எனப் புரிகிறது!

-நிவேதா.