வாழ்தல் இனிது!

8/13/20261 min read

ப்போது நாங்கள் பெங்களூரு, coconut garden layout-ல் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்திருந்தோம்! 5 தளங்கள் மற்றும், தளத்திற்கு 6,7 வீடுகள் நிறைந்தக் கட்டிடத்திற்குப் பெரிய கார்-பார்க்கிங் வசதி உண்டு! அந்த ஏரியாவில் இது போன்ற அபார்ட்மெண்ட் கட்டிடங்கள் நிறைய!

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் security guard பெரும்பாலும் அஸ்ஸாம்,நேபாலைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்! அபார்ட்மெண்ட் மெயிண்டெனென்ஸூம் அவர்களது பொறுப்பே! மனைவி, குழந்தைகளென குடும்பமாக வசிக்கும் அவர்களுக்கு, கார்-பார்க்கிங்கிலேயே 8*6 கணக்கில், ஒற்றை ஜன்னலோடு (கதவுக்கு மேலே, மேற்கூரையோடு இணைந்த செவ்வக வடிவ சின்ன்ன்ன ஜன்னல்) கூடிய சிறிய அறையொன்றை ஒதுக்கியிருப்பார்கள். சமையல்,படுக்கை அத்தனையும் அந்த அறைக்குள் தான்! கட்டிடத்தின் பின்புறம் சௌசாலயமிருக்கும்!

நாங்கள் குடிபுகுந்த காலத்தில், ஒரு அஸ்ஸாமீஸ் குடும்பம் அங்கு வசித்து வந்தது. அழுக்கு ட்ரவுசரும்,சட்டையுமாய், ‘கெட்டுப் போன மீன்’ நாற்றத்தை ஒத்த மணத்தைப் பரப்பித் திரியும் security-க்கு, அதே நாற்றம் குறையாத மனைவி, & இரண்டு குழந்தைகள் இருந்தது. மனைவி, அந்த அபார்ட்மெண்ட் வீடுகள் சிலவற்றில் வீட்டு வேலை செய்வாள். சரியாகப் பேணப்படாத இவர்களது குழந்தைகள், செம்பட்டைத் தலையும், மூக்குச்சளியுமாய், நிறம் மங்கி சீக்கு வந்த கோழிகளைப் போலிருப்பார்கள்!

செக்யூரிட்டி அவ்வப்போது ‘தண்ணியைப்’ போட்டு விட்டு அந்தச் சிறிய வீட்டுக்குள் சலம்பல் பண்ணிக் கொண்டிருப்பான். மனைவி ரொட்டியோடு சேர்ந்து அவனையும் சுட்டுத் தள்ளிக் கொண்டிருப்பாள். இவர்கள் கடனுக்குப் பெற்றுப் போட்டப் பிள்ளைகள், ‘ப்ளே ஏரியா’ மண்ணுக்குள் கொசுக்கடியோடு புரண்டு கொண்டிருக்கும்!

பிறகு அவன், அருகிலிருக்கும் அவர்களைப் போன்ற செக்யூரிட்டி ஆட்களோடு சேர்ந்து கொண்டு, நள்ளிரவில் கூட்டாகத் தண்ணியடிப்பது, மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவது, அதைத் தட்டிக் கேட்ட குடியிருப்பு வாசிகளிடம் ‘rude’ ஆக நடந்து கொண்டது என பற்பல காரணங்களால் குடும்பமாகத் துரத்தியடிக்கப்பட்டு விட்டான். அருகிலேயே இரண்டு தெரு தள்ளி, வேறு ஒரு அபார்ட்மெண்ட்டிற்குப் பின்னாளில் குடிபுகுந்து விட்டானென்று கேள்விப்பட்டோம்! இந்த செக்யூரிட்டி குடும்பம் போன பிறகு, மற்றொரு அஸ்ஸாமீஸ் குடும்பம் வந்தது.

அக்கம்பக்கத்திலிருந்த வசிப்பிடங்களிலும் தொடர்ந்து இது மாதிரியான ‘செக்யூரிட்டி’ ப்ராப்ளங்களைக் கேள்வியுற்றபடி இருந்ததால், குடியிருப்புவாசிகளுக்கு, ‘இவன் என்னா பண்ணக் காத்திருக்கானோ’ என்கிற நிலை தான்!

ந்த ‘Bhaiya’ தினம் அனைத்துத் தளங்களிலும் மாலை, விளக்குகளை ‘ஆன்’ செய்யும் போதும், காலை ‘ஆஃப்’ செய்யும் போதும், நண்பகல் பதினொன்று,பன்னிரெண்டு மணி வாக்கில், காரிடார், படிக்கட்டு, எலிவேட்டர்களை ‘dettol’ வாசனையோடுத் துடைப்பதையும் (முன்னவர் துடைக்கையில் டெட்டாலை மீறிக் கொண்டு, அவரது குளியல் காணாத ‘Body’ மணம் பரப்பிக் கொண்டிருக்கும்), tanker lorry-களில் வரும் தண்ணீரை, தொட்டிக்கு ஏற்றும் போதும், நான் பார்க்க நேர்ந்தது.

அதுபோக, ஒவ்வொரு வீட்டின் வெளியில் வைக்கப்படும் குப்பைகளைத் துப்புரவு செய்துக் கட்டிடத்தின் பின் வாசலிலிருக்கும் இரண்டு பெரிய plastic drum-களில் நிரப்ப வேண்டும்! கார்ப்பரேஷன் வண்டி வருகையில், ட்ரம்மிலிருப்பதை empty செய்வார்கள். சில சமயம் வீட்டுக் குப்பைகள் நிரம்பி விட்டால், நேராக அந்த டிரம்மிலேயே கொட்டுவதை வழக்கமாக்கியிருந்தோம். அந்த டிரம்மின் மூடியைத் தூக்கினால், அதனடியில் லட்சம் புழுக்களையேனும் காணலாம்! தரையிலும், டிரம் இருந்த மூலையிலும் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். அந்தப் புழுக்களை மிதித்து,நசுக்கி விட்டுத் தான் இதற்கு முன்னிருந்த செக்யூரிட்டி குடும்பம், டிரம்மிற்கு அடுத்திருந்த சௌசாலயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்த ‘Bhaiya’, charge எடுத்ததும் செய்த முதல் வேலை அந்த ‘blue drum’-ஐயும், அதைச் சுற்றியிருந்த ஏரியாவையும் சுத்தம் செய்தது தான்!

அதுமட்டுமின்றி, கார் பார்க்கிங் மொத்தத்தையும் தினம் கூட்டிக் குப்பையேதுமின்றித் தூய்மையாக வைத்திருப்பான். ஏனென்றால் அவனைப் பொறுத்தவரை, அது அவன் வீட்டு வாசல்!, அவனது 7 வயதுப் பெண் குழந்தை புத்தகத்தோடும், 5,6 மாத ஆண் குழந்தை பொம்மைகளோடும், ஓரமாக ‘mat’ விரித்து அமர்ந்திருக்கும் இடமது!, அது போக மாலையானால் கொசுத் தொல்லையைத் தவிர்க்க ‘புகை’ போட்டு வைத்திருப்பான்.

அவனது மனைவி, எங்கள் வீடு உட்பட அபார்ட்மெண்ட் வீடுகள் பலவற்றிற்கு வீட்டு வேலை செய்து வந்தாள். சின்ன,சின்ன ஆங்கில வார்த்தைகளோடு, நிறைய ஹிந்தி கலந்து சுவாரசியமாக எதையேனும் எங்களோடு பேசுவாள்! வேலை முடிந்து சென்ற பிறகு, மாலை வேளைகளில் அவளைப் படிய வாரிய தலையுடன், மடிப்பு கலையாத ஆடையுடன் அவள் வீட்டில் பார்க்கலாம்!

‘Bhaiya’- வும் கூட அப்படியே! வேலை செய்யும் நேரம் போக, மற்ற நேரங்களில் நேர்த்தியாக உடுத்தியிருப்பான். 2nd hand bike ஒன்றும் வைத்திருந்தான். அபார்ட்மெண்ட் வாசிகள் சொல்லும் errands-களுக்கு அதை உபயோகப்படுத்திக் கொள்வான். அது போக, அவனது 7 வயது பெண் குழந்தை அருகிலிருந்த அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளை கூட்டிச் செல்ல,அழைத்து வர, வண்டி பெரிதும் உதவியாக இருந்தது அவனுக்கு. காலை நேரத்தில், கணவனும்,மனைவியுமாகச் சேர்ந்து அந்தக் குழந்தைக்கு யூனிஃபார்ம்,ஷூ,ரெட்டைப் பின்னல் அணிவித்துப் பள்ளிக்குக் கிளப்பி விடும் காட்சியைக் காண அற்புதமாக இருக்கும்!

மனைவி வீட்டு வேலைக்கும், பெண் குழந்தை பள்ளிக்கும் சென்ற பிறகு, நடை வண்டியில் மகனை உட்கார வைத்து விட்டு அவனுக்கு விளையாட்டு காட்டியபடி பார்க்கிங்கை க்ளீன் செய்யும் போதும் சரி, செக்யூரிட்டி நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஒரு கையில் ஃபோனுடன், மறு கையில் குழந்தையைத் தட்டித் தூங்க வைப்பதிலும் சரி, பெண் குழந்தை பார்க் மண்ணில் விளையாடி முடித்த பிறகு, அவளை அருகிலிருக்கும் குழாயில் கை,கால் கழுவ வைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போதும் சரி, ‘bhaiya’ ஒரு green forest என்றே தோன்றும்!

வையனைத்தையும் தாண்டி, அந்தக் குட்டி வீடு! அதை ஒரு மாளிகையைப் போல் வைத்திருந்தான். அறை முழுதிலும் கார்பெட். உள்ளே.. ஒற்றைக்கட்டில், அதில் தான் மகனும்,மகளும் படுத்திருப்பார்கள். அதைச் சுற்றிக் கொசுவலையிருக்கும். உயரத்தில் செல்ஃப் ஒன்றைப் பதித்து அதில் அவன் அடுக்கியிருந்த க்ரீம்,பவுடர்,dabur almond oil-களை ‘ஆஆஆ’-வெனப் பார்த்திருக்கிறேன் நான்! இதுவல்லவா luxury!

இரவு சமையல் மனைவியின் பொறுப்பிலும், பகல் சமையல் அவனிடமுமிருந்தது. வீட்டிற்குள் குழந்தைகளுக்கு உணவளித்து விட்டு, மனைவி வாசற்படியிலும், அதையொட்டி ‘bhaiya’ இண்டர்காம் அருகிலிருக்கும் செக்யூரிட்டி நாற்காலியிலும் அமர்ந்தவாறு… எதையேனும் பேசியபடியே உண்பதைக் காண்கையில்.. அன்பும்,புரிதலுமாய் அவர்கள் பாந்தமாக நடத்தும் வாழ்க்கையை எண்ணி வியப்பாக இருக்கும்!

அந்தப் பெண் குழந்தையின் உடையிலும் சரி, நடையிலும் சரி, ஏழ்மையே பிரதிபலிக்காது! ‘அம்மா-அப்பாவின்’ வாழ்க்கை முறையிலிருக்கும் ‘தரம்’ அப்படியே அவளிடம் பிரதிபலிக்கும்! குடியிருப்புவாசிகளின் வீட்டில், ‘பிறந்தநாள்’ போன்று ஏதேனும் விழா நடக்கையில், நேர்த்தியாக பார்ட்டி வியர் அணிய வைத்துக் குழந்தையை அனுப்பி வைப்பாள் மனைவி. அஸ்ஸாமீஸ்களுக்கே உரித்தான நிறத்திலும்,அழகிலும்.. அந்தப் பாப்பா, பெரும்பாலான பணக்கார வீட்டுப் பாப்பாக்களை விட, மிக அழகாக இருப்பாள்!

‘bhaiya’ இங்கு குடி வந்த சில மாதங்களில், அவனது மகனுக்கு முதல் பிறந்தநாள் வந்தது. அபார்ட்மெண்ட்டிலிருக்கும் ‘party hall’-லில் கேக் வெட்டப் போவதாகச் சொல்லி, குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். ஆர்வம் தாங்காது நானும் சென்றேன்!

அங்கு, அவர்கள் வழக்கப்படி ஏதோ பூஜை செய்து, கேக் வெட்டி, வந்திருந்தோர் அனைவருக்கும் ஒரு பேப்பர் ப்ளேட்டில், 1 சமோசா, கொஞ்சமாக உருளை சிப்ஸ், ஒரு ஸ்வீட், 2 சாக்லேட் என வைத்துக் கொடுத்து.. அமர்க்களப்படுத்தியிருந்தான். வந்திருந்தோர் அனைவரும் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு பணமோ,பரிசோ கொடுத்து வாழ்த்திச் சென்றிருந்தனர்.

அன்று முழுப்புன்னகையும்,மகிழ்ச்சியுமாய் நின்ற அந்தக் குடும்பத்தைக் கண்ட போது மிகவும் நெகிழ்ச்சியாயிருந்தது.

அவன் வைத்திருக்கும் பொருட்களாகட்டும், வாழும் வாழ்க்கை முறையாகட்டும் அனைத்துமே அவனுக்கான ‘budget’-க்குள் தான்! அது அத்தனைத் தரமானதாகத் தெரிந்தது எனக்கு.

எங்கள் ஊர்ப்பக்கம், ஏக்கர் கணக்கில் சொத்து,பத்துக்களை வைத்துக் கொண்டு ‘டாய்லட் க்ளீனரில்’ காசு செலவழிக்க மனமில்லாமல் கழுவப்படாத கக்கூஸ்களோடு நாற்றம் பிடித்த வாழ்க்கை வாழும், பல கஞ்சத் ******-களை கண் கூடக் கண்டிருக்கிறேன் நான்! அந்த வகையில் ‘bhaiya’ எனக்கு, ஒரு காவியமாகத் தெரிந்தான்!

அவன் நினைத்திருந்தால், முன்னவன் மாதிரியில்லா விடினும், மனைவியையும்,குழந்தையையும் வீட்டு வேலைக்கு அனுப்பி விட்டு, வருகிற பணத்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, நிறைய சேர்த்து வைத்துப் பின்னாஆஆஆஆளில் நன்றாக வாழலாம் எனக் கணக்குப் போட்டிருக்கலாம்!

இப்போதும் கூட அவனுக்கு எதிர்காலம் குறித்த கணக்கும், கனவும் நிச்சயமிருக்கும்! ஆனால்.. அதையும் தாண்டி அவன், ‘வாழ்தலுக்கு’ முன்னுரிமையளிக்கிறான்! அது… எத்தனை பெரிய ‘தன்னம்பிக்கையை’, 'நிறைவை' அவன் குடும்பத்தினரிடம் உருவாக்குகிறதென்பதை முற்றிலுமாகப் புரிந்து வைத்திருக்கிறான். வள்ளுவன் ‘யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’-ன்னு சொன்னது மாதிரி, அவன் குறிக்கோள் ‘முயல்’ அல்ல! ‘யானை’! அவன் யானையைக் குறி வைக்கிறான்!!

அவனுக்குக் கொடுக்கப்பட்ட ‘resource’-களை சரியாக சுவீகரித்துக் கொண்டு, அவனால் முடிந்த,தெரிந்த அத்தனை நேர்மையான வகையிலும் பணம் ஈட்டி, அதை மிகச் சரியான முறையில் உபயோகித்துத் தரமான வாழ்க்கையை வாழும் ‘bhaiya’, மண்ணையும்,கல்லையும் பொன்னாக்கத் தெரிந்த வித்தை கற்றவன் என்றே நினைத்தேன் நான்!

வாழ்வில் எந்த நிலையை எட்டினாலும், எந்தப் புகாருமில்லாமல், கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, வாழ்தலை இனிமையாக்கும் ‘bhaiya’ ஒரு அரிய புத்தகம்!

கொரோனாவுக்குப் பிறகு நாங்கள் பெங்களூருவை காலி செய்து விட்டோம்! கணவரின் ஃபோனிலிருந்த ‘bhaiya’-வின் தற்போதைய whatsapp DP-யில், ஒருபுறம் டீனேஜை எட்டிய மகள், ஸ்கூல் யூனிஃபார்மில்!, மறுபுறம் 5,6 வயதிலிருந்தக் குட்டிச் சிறுவன் ஸ்கூல் யூனிஃபார்மில்!

-நிவேதா.