சம்பிரதாயச் சங்கிலியும்... தன்னிச்சை வாழ்க்கையும்!
8/22/20261 min read


நான் ‘Maternity leave’-ல் இருந்த சமயம் அது! பெங்களூருவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்திருந்தோம்.
வரலட்சுமி விரத நாள் கடந்து மறு வார வெள்ளிக்கிழமை, மதிய வேளை எங்கள் வீட்டுக் கதவை யாரோ பட,படவென உக்கிரமாகத் தட்டினார்கள்! தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தப் பிள்ளையை அவசரமாய் ஒரு பார்வை பார்த்து விட்டுக் கடுப்புடன் சென்று கதவைத் திறந்தேன் நான்.
கீழ் வீட்டில் குடியிருக்கும் தெலுங்கு (ஆந்திரா) பெண்ணொருத்திப் பதட்டமாக நின்றிருந்தாள்! எதிரெதிரே பார்த்துக் கொள்ளும் நேரம் புன்னகைக்குமளவிற்கு எனக்குப் பரிட்சயமானவள் தான் என்றாலும், பெரிதாக நான் உரையாடியதில்லை!
நான் ‘நாக்கு தெலுகு கொஞ்சம், கொஞ்சம் தெலுசு’ – case ஆதலால், ‘என்னாம்மா?, என்னாச்சு?’ – எனக் கலவரத்துடன் அடுகினேன்!
“வீட்ல, வரலட்சுமி பூஜை பண்ணுனேன், என்னை ஆசீர்வாதம் பண்ண யாருமேயில்ல!, கீழ,மேல-ன்னு எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுக் கதவையெல்லாம் தட்டிப் பார்த்துட்டேன்! எல்லாரும் வேலைக்குப் போயிட்டாங்க போல! யாரும் வீட்ல இல்ல” -எனக் கவலையாகக் கூறினாள்.
‘ஆசீர்வாதம்’-என்கிற வார்த்தையை, என் mind பெருசுங்களோடு tag செய்து வைத்திருந்ததால், நான் immediate ஆகத் திரும்பி அம்மாவைப் பார்த்தேன்!
என் அம்மா மறுப்பதற்கு முன்னமே அந்தப் பெண், “இல்ல! இல்ல! சுமங்கலிகள் தான் பண்ணனும்! அதனால நீங்க வாங்க!” என்றாள்.
‘வீட்டில் விசேஷம் என்றால் மட்டுமே, தாலி,மெட்டியையெல்லாம் எடுத்து மாட்டிக் கொள்ளும் சூனா பானா-வாகிய எனக்கு அந்த சுமங்கலிப் பட்டத்தைக் கேட்டுக் கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், (எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா படும் பாட்டைக் கண்டு வளர்ந்ததால், எனக்கு இந்த வார்த்தையின் மீது பெரும் அசூயை உண்டு) அழுக்கு நைட்டியைக் குனிந்து பார்த்து, “சரிம்மா, ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்” - என அனுப்பி வைத்து விட்டு, சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன்.
“போன வாரமே பண்ணியிருந்திருக்கனும்! ஆனா எனக்கு பீரியட்ஸ்! பூஜை பண்ணலாமா,வேணாம்-ன்ற confusion-லயே இருந்தேன். திடீர்ன்னு இன்னைக்கு மார்னிங் தான் டிசைட் பண்ணினேன். இருக்குறவங்களைக் கூப்பிட்டுக் கும்பிட்டுக்கலாம்ன்னு அசால்ட்-ஆ இருந்துட்டேன். பார்த்தா, பக்கத்து வீடுகள்ல யாருமே இல்ல” – எனப் பேசியபடியே பரபரப்பாக எதை,எதையோ கையில் எடுத்துக் கொண்டு, பூஜை செட் அப்-ஐ வேடிக்கை பார்த்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்த என்னருகே வந்தாள்!
இதற்கு முன்பு எந்த வரலட்சுமி பூஜைக்கும் நான் சென்றதே கிடையாது! அங்கு ஃபாலோ செய்யப்படும் சம்பிரதாயம் குறித்த ஐடியாவும் எனக்கில்லை! சாமி கும்பிட்டு, பொங்கல்,சுண்டலெல்லாம் சாப்பிட விட்டு, ஜாக்கெட் பிட்டு, தேங்காய்,வாழைப்பழத்தைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்புவார்கள் போல என்றே நினைத்திருந்தேன்!
ஆனால்…. திடீரென என்னருகே தரையில் அமர்ந்த அந்தப் பெண், என் கால்களைப் பற்றித் தாம்பாளத்தட்டில் வைத்து, தண்ணீரை ஊற்றிக் கழுவி, மஞ்சளை அப்பி, குங்குமத்தைத் தடவி, முணுமுணுவெனத் தெலுங்கிலேயே ‘ஜ……ண்…..டாஆஆஆ’-என மந்திரம் போட ஆரம்பித்து விட்டது!
காலைப் பிடிப்பதெல்லாம் அவமதிப்பிற்குரிய, சர்ச்சைக்குரிய விசயமில்லையா?, நான் ஆடிப் போய், சுரக்கத் தொடங்கி விட்ட வியர்வையுடன், அமர முடியாது, Embarrassment-ல், “ஐயோ,என்ன?, என்னம்மா இதெல்லாம்?, வேண்டாம்,வேண்டாம்”-எனத் துள்ள ,
என் காலை அமுக்கி, தாம்பாளத்தில் அழுத்தி, “இதெல்லாம் சம்பிரதாயம்!, நான் கண்டிப்பா செய்யனும்! ப்ளீஸ்! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” எனத் திட்டி விட்டு மறுபடி ஏதோ செய்யத் தொடங்கி விட்டாள் அந்தப் பெண்.
பிறகு அரிசியோ,பூவோ எதையோ என் கையில் கொடுத்து, “இப்பிடித் திரும்பி நில்லுங்க” என ஏதோ ஒரு திசையைப் பார்த்து நிற்க வைத்து, என்னவோ ஒரு வரித் தெலுங்கு மந்திரத்தை என்னை சொல்லச் சொன்னாள்!
தட்டுத்தடுமாறி தப்பும்,தவறுமாக ஒரு தடவை சொன்ன என்னை, “3 முறை சொல்லுங்க”-என முரட்டுத்தனமாக அதட்டினாள்!
‘இதென்னா டா அராஜகமா இருக்கு’-எனத் தோன்றினாலும், வேற வழியின்றித் தப்பு,தப்பாகவே 3 முறை ‘Baba blacksheep’ போன்றிருந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன்!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! அழுக்கு நைட்டியில் மதியத் தூக்கத்தில் இருந்த நான், முகம் கழுவி,துணி மாற்றிக் கீழே வந்து, யாருமேயில்லாத ஃப்ளோரில்.. திறந்திருக்கிற வீட்டிற்குள் கதறக் கதற.. தெரியாத பாஷையில் மந்திரம் சொன்னபடி, பதற்றத்தில் வியர்வை வழிய நின்றது எத்தனை பெரிய அசட்டுத்தனம்?
நொந்தபடி ஒரு வழியாக நான் மந்திரத்தை முடித்த பின், ஒரு தேங்காயை என் கையில் கொடுத்து, அவள் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பக்கத்தை விரித்து, “தேங்காயை இதுல போடுங்க”-என்றாள்! ஒன்றும் புரியாவிடினும், அவள் சொன்னதைச் செய்தேன்!
அதை அணைவாக, இறுகப் பற்றிக் கொண்ட அந்தப் பெண், பெருமூச்சை வெளியிட்டு, கண்ணெல்லாம் கலங்கிப் போய், “எனக்குக் கல்யாணமாகி 6 வருஷமா குழந்தை இல்லங்க! அதான்.. குழந்தை வேண்டி விரதமிருக்கிறேன்” என்றாள்.
அதுவரையிருந்த மந்த மனநிலை அடியோடு மாறி, எனக்கும் உள்ளே கலங்கிப் போனது!, ஏனெனில், என் முதல் ப்ரக்னென்ஸி, ectopic pregnancy ஆகி, 7,8 மாதம் கழித்து, அடுத்து உண்டான பாப்பா தான்.. அப்போது delivery ஆகியிருந்தது! அந்த 7,8 மாத காலத்தையும் நாங்கள் நரகத்தில் கழித்திருந்தோம்! அதனால், sentiment-ல் உருகி, அந்தப் பெண்ணின் கையைப் பற்றிக் கொண்டேன் நான்.
எனக்கு இந்த விரதத்தின் மீதெல்லாம் பெரிதான நம்பிக்கை இல்லாவிடினும், அன்று அந்தப் பெண்ணின் கவலை அத்தனையும் தீர்ந்து, அவள் நினைத்தது நடக்க வேண்டுமென மனதார எண்ணிக் கொண்டேன்.
“எனக்கும் இது மாதிரி பூஜையில எல்லாம் நம்பிக்கை விட்டுப் போச்சுங்க! முதல்ல ஆர்வமாகத் தான் செஞ்சேன்! இப்போ மனசு விட்டுப் போச்சு! காலைல எங்கம்மா ஃபோன் பண்ணி திட்டுனதால தான் லீவ் போட்டுட்டு அவசர,அவசரமா ஏற்பாடு பண்ணுனேன்.” – என்றாள்.
Master degree,IT வேலை, சொந்த வீடு, கார், வளமான வாழ்வென தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் ஃபர்ஃபெக்ட் ஆக அமைத்துக் கொள்ளத் தெரிந்த பெண் தான்! ‘குழந்தை வரும் போது வரட்டும்!’ என ரிலாக்ஸ் ஆக வாழ அனைத்துத் தகுதிகளும் உள்ளவள்! ஆனாலும், ‘எனக்கு நல்லா காஃபி போட வரும்’ என்கிற பெண்ணிடம், ‘டீ போட்டுக் கொண்டு வா’- எனக் கேட்கும் பழக்கமுள்ள குடும்பமும்,சமூகமும் அப்படியெல்லாம் விட்டு விடுமா என்ன?,
தெளிவான பெண்களைக் கூட வலுவிலக்கச் செய்து விடும் இது போன்ற கான்செப்டுகள் ஒழிந்து, பெண்ணைச் சுற்றி நெய்யப்படும் குடும்ப அமைப்பு உடைந்து, எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்கிற நிலை வந்து, இந்த மனித இனமே அழிந்து, நாசமாய்ப் போனால் தான் என்ன?,
கவலையும்,துக்கமுமாகப் பேசியவளிடம் topic-ஐ மாற்றி, அவள் செய்திருந்த பொங்கலின் சுவையைப் பாராட்டி, ‘புனுகுலு’ ரெசிபியைக் கேட்டுக் கொண்டு, அவளது வேலையையும், கம்பெனியையும் குறித்து பேச்சு வளர்த்து, பெங்களூருவில் கிடைக்கும் பெஸ்ட் ஹைதராபாதி பிரியாணி பற்றி வாதம் செய்து என.. அவள் வாழ்க்கை குழந்தையைச் சார்ந்தது மட்டுமல்ல என்பதால், ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளோடு என் ‘விசிட்’-ஐ முடித்து விட்டு, அவள் கொடுத்த பிரசாதப் பையை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்!
பிறப்புக்கும்,இறப்புக்கும் நடுவுல, வாழ்கிற காலத்துல, இந்த உலகத்து சந்தோஷங்களெல்லாம் எல்லாருக்குமே வேணும் தான்! எல்லாருமே அனுபவிக்கனும் தான்! ஆனா.. அதெல்லாம்… அது,அதோட own pace-ல own timing-ல தன்னிச்சையா.. தன்னியல்பா.. நடக்குறப்போ நடக்கட்டுமே! அநாவசியமான judgemental-களுடன், அநாவசியமான pressure-ஐ நாமளும் அனுபவிச்சுக்கிட்டு, அடுத்தவனுக்கும் ஏன் கொடுக்கனும்! ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!
ஆனா ஒன்னு மக்களே! fashion, trend, collaboration, networking -க்காக பண்றவங்களைத் தவிர்த்து, நம்மைப் போல ஆட்கள் எல்லாம் இந்த மாதிரி வரலட்சுமி விரதம்ன்ற பேர்ல காசை வீணாக்குறதை விட்டுட்டு… Vietnam,Vienna-ன்னு குடும்பத்தோட tour போய், நினைவுகளை சேமிக்கிற தெளிவை உருவாக்கிக்குற வரை சமூகம் மாறாது!
-நிவேதா.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து?
