அத்தியாயம் - 1

ப்ப்ப் என்கிற சத்தத்துடன் பளாரெனக் கன்னத்தில் விழுந்த அறையில், தன்னிச்சையாகப் பக்கவாட்டில் திரும்பி விட்டத் தலையோடு, ஒரு நொடி தடுமாறிக் காலூன்றி நின்றாள் பல்லவி.

நெளி நெளியாய் அவள் முகம் நிறைத்த சுருள் முடிகள், அவளது அடர் கன்னத்தில் வரிசை கட்டி நின்ற விரல் தடங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அனிச்சையாய்க் கண்களில் தேங்கி விட்ட கண்ணீரை அடக்க, துடித்த இதழ்களைக் கடித்தபடி இமைகளை அழுந்த மூடித் திறந்தாள்.

ஆக்ரோஷமாய் அறைந்த பின்பும் ஆத்திரம் குறையாது, அடங்காத ஆவேசத்துடன் பெரிது,பெரிதாய் மூச்சை வெளியேற்றியவாறுத் தன் எதிரே நின்றிருந்த பெண்ணை, உணர்ச்சியற்ற விழிகளால் மெல்ல நிமிர்ந்து நோக்கினாள்.

கடுங்கோபத்தில் வார்த்தைகளற்றுத் திக்கிச் சுழன்ற நாக்கோடு, அழுந்தக் கடித்தப் பற்களோடு, அழுகையும், ஆதங்கமுமாய் அவளை ஏறிட்ட அந்தப் பெண், உச்சகட்ட அருவெறுப்புடன் முகத்தைச் சுழித்து, கை நீட்டி ஏதோ கூற வந்து, பின் “ச்ச்ச்சீ” என்றபடிக் காறி அவள் முகத்தில் உமிழ்ந்தாள்.

சுருள் முடிகளில் சொட்டி நின்ற எச்சிலை உணர்ந்தும், எதிர்வினை காட்டாது, தாழ்ந்த இமைகளுடன் ஜடமாய் நின்றவளைக் கண்டு விட்டு, வெடுக்கெனத் திரும்பி வேக எட்டுக்களுடன் விரைந்து வெளியேறியது அந்தப் பெண்.

நகரும் அவள் கால்களைக் கண்டபடி அசைவற்று நின்ற பல்லவி, ஏதோ உறுத்த மெல்லத் திரும்பி, வெறுப்புடன் தன்னை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சிறிய உருவத்தின் மீது விழி பதித்தாள்.

பத்து,பதினோறு வயது சிறுமி! இச்சூழ்நிலை அவளுக்கு என்ன புரிதலை கொடுத்திருக்கும்?

அதுவரையல்லாத குற்றக் குறுகுறுப்பொன்று லேசாய் நெஞ்சைக் கீற, வலித்த இதழ்களை மெல்ல விரித்து அச்சிறுமியை நோக்கிப் புன்னகைக்க முயன்றாள் பல்லவி.

பதிலுக்குப் புன்னகைக்காமல் ரோஷமாய் விடைத்த மூக்குடன், அழுது வடிந்திருந்த கண்ணை விரித்துக் கோபத்தோடு நோக்கிய சிறுமி, அருகிலிருந்த பூ ஜாடியை எடுத்து, ஓங்கி அவள் புறம் எறிந்து விட்டு, அன்னையைத் தொடர்ந்து விறுவிறுவென வெளியே ஓடி மறைந்தது.

தன் கையைத் தாக்கிக் கீழே விழுந்து உடைந்து நொறுங்கிய கண்ணாடி ஜாடியை வெறித்து நோக்கியபடி விறைத்து நின்றிருந்தாள் பல்லவி.

Royal Caribbean International, Ovation of the seas.

ந்த பிரம்மாண்ட சொகுசுக் கப்பலின் Suites-Only கோஸ்டல் கிட்சனில் (dining area) அமர்ந்திருந்தான் அவன். ஒரு கையில் காஃபி கப்புடனும், மறு கையில் புத்தகத்துடனும் வீற்றிருந்தவனின் முன்னிருந்த மேஜையில், பரவிக் கிடந்த காலித் தட்டுக்கள் அவனது திவ்ய போஜனத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

சுருக்கிய புருவங்களினடியில் இடமும்,வலமுமாய் சென்று வந்து கொண்டிருந்தக் கரு மணிகளோடுத் தீவிரமாய் வாசித்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் ஒரு நொடி வளைய, மறு நொடி முகத்தைச் சுழித்துப் புத்தகத்தை மூடியவன், கையிலிருந்த காஃபி கப்பை நோக்கினான்.

பாதி கூடக் காலியாகவில்லை!

புத்தகம்,காஃபி இரண்டுமே அவன் எதிர்பார்த்த சுவாரஸியத்தை அளிக்கவில்லை போலும்!

கப்பைக் கீழே வைத்து விட்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்த போது, அவன் உண்டு முடித்து விட்டதைக் கண்ட பணியாள் ஒருவன், அவனது மேஜையை சுத்தம் செய்ய, அவனிடம் நன்றி கூறி விட்டு பார்வையை சுழற்றினான்.

பலதரப்பட்ட மனிதர்களைச் சுமந்து கொண்டு பாந்தமாய்க் கடலில் மிதந்து கொண்டிருந்தது அந்த சொகுசுக்கப்பல்.

நீலக் கடலையும், நீள் வானத்தையும், அலையோசையையும், உப்புக் காற்றையும் உள் வாங்கியவாறு, ஒரு கோப்பை காஃபியும்,புத்தகமும் தராத சுவாரசியத்தை தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களிடம் தேடியபடி அந்த டைனிங் ஹாலை வலம் வந்தது அவன் விழிகள்.

ன்னருகே அமர்ந்திருந்த மகன் கையில் டிஷ்யூவை நீட்டி விட்டு, மகளது தட்டில் பழங்களை அடுக்கியபடி நிமிர்ந்து, மேஜையில் சாய்ந்து நின்றிருந்த கணவனிடம் முகத்தைச் சுருக்கி அடிக்குரலில் கோபமாய் ஏதோ கூறிக் கொண்டிருந்த பெண்ணையும், அசடு வழியும் முகத்தோடு பதில் கூற இயலாது திணறியபடி மண்டையைச் சொரிந்து கொண்டு நின்ற அவள் கணவனையும் நோக்கி விட்டு, லேசான சிரிப்போடு பார்வையைத் திருப்பினான்.

மனைவிகளிடத்தில் மட்டும் ஏன் இந்தக் கணவன்மார்கள், காமன் சென்ஸ்(common sense) இல்லாதவர்கள் போல நடந்து கொள்கிறார்கள்?

கணவர்களிடத்தில் மட்டும் ஏன் இந்த மனைவிமார்கள் அதிபுத்திசாலிகளாக நடந்து கொள்கிறார்கள்?

விந்தை!

அவர்களைத் தொடர்ந்து அவன் விழிகள், ஓரமாயிருந்த இருக்கைகளை ஆக்கிரமித்திருந்த ஜோடியிடம் பதிந்தது.

கிட்டத்தட்ட அப்பெண்ணைத் தன் மடி மீது அமர்த்தாத குறையாக அவளருகே ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஆடவனொருவன், ஒரு கையால் உணவையும்,மறு கையால் அவளையும் ஒரு சேர விழுங்கிக் கொண்டிருந்தான்.

உற்று நோக்கினாலொழிய, கண்டறிய முடியாத அளவிற்கு நூதனமான சில்லறை சில்மிஷம்!

இருவரது (tummy) டம்மியையும் டகீலா நிறைத்திருக்கலாம்!

அதனாலோ என்னவோ, அந்த இடமோ, சுற்றியிருந்த மனிதர்களோ, சூழ்நிலையோ அவர்களது கருத்தில் பதிந்திருப்பதைப் போலத் தெரியவில்லை!

அநேகமாக அவர்களது இன்றைய சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ் ‘sun,sea,sex’-ஆக இருக்கலாம்!

அவர்களைச் சுற்றியோடிய காற்று கூட ஒரு நொடி போதையில் தள்ளாடியே கடப்பது போலிருந்தது அவனுக்கு.

காமம் மென்மையையும்,வக்கிரத்தையும் சரிவிகிதத்தில் கொண்டிருக்கும் காம்ப்ளிகேடட் உணர்வு.

பார்த்ததும் பற்றிக் கொண்ட உடலை “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமி அடக்கி வைத்தான்.

இதமாய் இதயம் தீண்டும்படியான இயற்கையும்,சூழலும் சுற்றியிருந்தாலும், இது போன்ற கிளுகிளுப்பைக் கண்டால் தான் மூளை சுறுசுறுப்படையும் போலும்!

மனிதன் ஆகச் சிறந்த சல்லிப் பயல்!

நக்கலாய் வளைந்த உதடுகளோடுத் தலையைத் திருப்பியவனின் பார்வை, இப்போது கண்ணாடி ஜன்னலின் வழியே தெரிந்த கடற்பரப்பை வெறித்தபடி, காதில் ஹெட் செட்டுடன், கையைக் கட்டிக் கொண்டு இமை சிமிட்டாது ஒற்றையாய் அமர்ந்திருந்த பெண்ணின் மீது படிந்தது.

நூடுல்ஸ் மண்டை, புறாக்கூடு தலை, ஸ்ப்ரிங் முடி - இப்படி எண்ணற்ற வார்த்தைகளுக்குப் பெயர் போன சுருள் கேசம் அவளுக்கு. தோள் வரை மட்டுமே நீண்டிருந்தது.

சீரற்ற புருவங்கள், பெரிய கண்கள், நீண்ட நாசி, வடிவான இதழ்கள், கொழுத்த கன்னம், செழித்த உடல் என அழகியாய், பேரழகியாய்த் தானிருந்தாள்.

ஆனாலும் அவன் ரசிக்கவில்லை! ஏனெனில், அவள் கருப்பாய் இருந்தாள்.

பொதுவாக அவனுக்கு நிறம் குறைந்த பெண்களின் மீது ஆர்வம் குறைவு!

‘அமி தாக்கே பச்சொந்தோ கொரி நா (எனக்கு அவளைப் பிடிக்கவில்லை’ – எனத் தன் தாய்மொழியில் முணுமுணுத்தபடி சுருக்கிய முகத்துடன் திரும்பிக் கொண்டான்.

அவன் பிரஜரஞ்சன் சக்ரபொர்த்தி. வங்காள வாலிபன்.

ரசகுலாக்களையும், ராஜ்போக்-களையும் ரசித்து ருசிப்பவனுக்கு, ரச வடையின் மீது ஆர்வமில்லாததில் ஆச்சரியமேதுமில்லை.

இங்கே இவன் நிறப்பிரிகையில் ஈடுபட்டிருந்த நேரம், அங்கே நீலக்கடலில் விழிகளை நீந்த விட்டிருந்தவளின் காதில், காலை அலைபேசி வழி வந்து விழுந்த வார்த்தைகளே திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

“He is getting divorced பல்லவி.” – கோபமும், ஆதங்கமும் சரிவிகிதத்தில் தெறித்தது அந்தப் பெண் குரலில்.

“……..”

“உன் இல்லாமை எந்த மாற்றத்தையும் கொண்டு வராது பல்லவி. நீ என்ன எதிர்பார்த்த?, நீ போயிட்டா எல்லாம் பழைய நிலைக்கு மாறிடும்ன்னா?”

“…….”

“அவன் துரோகம் பண்ணியிருக்கான். அவனுக்கு நேர்மையாயிருந்த பொண்டாட்டிக்கும்,புள்ளைக்கும்! இத்தனைக்குப் பிறகும் அந்தப் பொண்ணு எப்படி அவன் கூட வாழும்?, இங்க அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடுச்சு பல்லவி. இனி அதுல கோட்டை கட்டுறது சாத்தியமில்லை. நீ எதை நினைச்சு விலகிப் போனயோ அது நடக்க இனி வாய்ப்பில்லை.”

“…………..”

“எங்க இருக்க பல்லவி?, நல்லாயிருக்க தானே?”

“…….”

“பதில் பேசு பல்லவி” – சிதறக் காத்திருந்தப் பொறுமையை நிறுத்தி வைத்துப் பேசியது அக்குரல்.

“……”

“நீ பேச மாட்ட! பேசவும் கூடாது! ஒரு நேரம் நீ என்ன பண்றியோ, ஏது பண்றியோ, எப்படியிருக்கியோன்னு நினைச்சு அழுகையா வருது. ஆனா பல சமயம், உன் மேல வெறுப்பும்,ஆத்திரமும் தான் அதிகமா வருது பல்லவி! நீ…. நீ என்னவோ பண்ணு.. எப்படியோ போ” – எரிச்சலுடன் ஒலித்தத் தோழியின் குரலில் வடிந்த அன்பில் மெல்ல இதழ் விரித்த பல்லவியின் புன்னகை அடுத்து அவள் கூறியதைக் கேட்டு அப்படியே உறைந்தது.

“யூ நோ பல்லவி, she is pregnant now. with her second child.”

நிறுத்தி நிதானமாக அக்குரல் கூறியவற்றை மறுபடி மறுபடி ஒலிக்கச் செய்து, மூளையைப் பிராண்டிய வார்த்தைகளின் கீறல்களில் ரத்தம் சொட்ட, துயரம் தாங்காது துடித்து, மடிந்து, விழுந்த மனதின் முனகல்களைக் கேட்டபடி, வெளியே சாந்தமாய் அமர்ந்திருந்த பல்லவியின் விழிகள், கைபேசி திரையில் தெரிந்த,

“ஐ ஆம் சாரி பல்லவி – கார்த்திக்”-ஐ நோக்கி விட்டுப் பின் அந்த chat-ஐ delete செய்தது.

சூரியன் மறைந்து வானைக் கவ்வியிருந்த கருமை, கடலிலும் பிரதிபலித்ததில் சுற்றிலும் இருள் பரவி, சூழல் சுருண்டு படுத்திருந்தது.

நாள் முழுக்கக் கொளுத்திய வெயிலை உள் வாங்கி விட்டு, இரவில் குளிர்க் காற்றை ஊதித் தள்ளும் கடலின் உன்னதத்தை உணர்ந்தவாறு, அக்கப்பலின் ஸ்மோக்கிங் zone-ல் நின்றிருந்தான் பிரஜரஞ்சன்.

அந்தகாரத்தினுள் அழகைத் தேடியபடி அக்கடாவென நின்றிருந்தவனின் விரல்கள் சிகரெட்டோடு இணைந்து வித்தை காட்டிக் கொண்டிருந்தது.

காற்றிலாடிக் கண்ணை மறைத்த முன்னுச்சி முடியை, விழி மூடிக் கோதி விலக்கியபடி எதேச்சையாகத் திரும்பியவனின் பார்வை.. lounge-ல் தலை சாய்த்து, அதே ஹெட்செட் தோற்றத்துடன் அமர்ந்திருந்த அந்த சுருள் முடிப் பெண்ணின் மீது விழுந்தது.

மறுபடி மறுபடிக் கண்ணில் பட்டுக் கவனத்தைக் கவர்பவளை சுருக்கிய புருவங்களுடன் நோக்கியபடி, சிகரெட்டை இழுத்து ஊதினான்.

புகை நடுவே அவள் முகம் புள்ளியாய்த் தேய்ந்தது.

சிமிட்டாத இமைகளுடன் சிலையாய்க் கிடந்தவளின் கண்களையே கவனித்திருந்தான். மதியம் டைனிங் ஏரியாவில் தற்செயலாக அவற்றை நேர் கொண்டு விட்ட நிகழ்வு நினைவிற்கு வந்தது.

Indian,English,Chinese,Malay – எனப் பலதரப்பட்ட உணவுகளுடன் அவனைச் சூழ்ந்திருந்த பஃபே ஸ்டேஷன்களில் சீன போஜனத்தைத் தேர்ந்தெடுத்து, dim sum-களை அவன் தட்டில் அடுக்கிக் கொண்டிருந்த போது, அவனெதிரே நூடுல்ஸை நோக்கி ஒரு கரம் நீண்டது.

நிமிர்ந்தவனுக்கு ஒரு நூடுல்ஸ் மண்டையே நூடுல்ஸ் சாப்பிடுகிறதே எனத் தோன்றிய ஆச்சரியத்தை விட,

தாழ்ந்திருந்த இமைகளுடன் அந்த மஞ்சள் விளக்கின் கீழ் மிளிர்ந்த அவளது கருப்புக் கன்னங்களே அதிக வியப்பைக் கொடுத்தது.

கடல் நீர் தீண்டிய கரும்பாறை போலிருந்தாள்!

அவ்வியப்பை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தவனை, ஏதோ உறுத்தலில் ஒரு நொடி நிமிர்ந்து பதில் பார்வை பார்த்தாள் அவள்.

அவனுக்கு எப்போதுமே அடர்த்தியாய் மையிட்ட உருண்ட,வட்ட விழிகளின் மீது தான் மையல் அதிகம்!

ஆனால் இவள்.. நீள் விழியைப் பெற்றிருந்தாள்.

மையிடப்படாத நீ…ண்…ட கருவிழி! 5 சென்ட்டிமீட்டர்களேனும் நீண்டிருக்கும்.

அவனை நேராய் நோக்கியக் கண்மணிகள் அடர் ப்ரௌன் நிறத்தில் மிரட்டியது.

கருப்புக் கன்னங்களும், பழுப்புக் கண்களும், சுருட்டை முடியுமாய், சத்தியமாக உள்ளே திகில் பரப்பியது அவள் தோற்றம்.

அரண்டு,மிரண்ட மனதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அலட்டாது அவள் கண்களைத் தவிர்த்து விட்டு, dim sum-ஓடு தில்லாய் நகர்ந்து விட்டான் அவன்.

சிந்தனை சிகரெட்டைக் கரைத்திருக்க, அதைக் குப்பையில் எறிந்து விட்டு.. பார்வையை அவள் மீது பதித்தபடியே lounge-ஐ நோக்கி நடந்தான்.

அவளைத் தாண்டி அறைக்குச் சென்று விடும் எண்ணத்தோடு நடந்தவனுக்கு, அந்தக் கவிழ்ந்த இமைகளைக் கடக்க முடியாது போய் விட, நின்று கண் மூடித் திறந்து பின் “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியபடி அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அந்த இரவு நேரத்திலும் ஸ்விம்மிங் பூல்-ஐ ஆக்கிரமித்திருந்த ஆட்களை வேடிக்கை பார்த்தவாறு மூங்கில் நாற்காலியில் முடங்கியிருந்தவன், ஓர விழியைப் பார்வையை மட்டும் ஒய்யாரியிடமே வைத்திருந்தான்.

அவனது செருமலில் விழி திறந்தவள், நிமிர்ந்தமர்ந்து அலைபேசியில் ஏதோ செய்தாள்.

ஒலித்துக் கொண்டிருந்த பாட்டை மாற்றுகிறாள் போலும்!

அதன் பின்பு விழி மூடிச் சாயாமல்,வெறுமையாய் விழியை சுற்றியிருந்த சூழலில் மேய விட்டாள்.

அவள் பார்வையோடுத் தானும் பயணித்துக் கொண்டிருந்தவன், அலையோசை ஏந்தி வந்த குளிர்ந்த காற்றின் கூச்சல்களின் நடுவே இரைச்சலாய், அவளது ஹெட்செட்டிலிருந்து குதித்து இவனது காது வரை ஒலித்த இசையை உணர்ந்து தன்னிச்சையாய் அவள் புறம் தலை திருப்பினான்.

“ம் ஹ் ம்.. ஜிகு ஜிகு.. ம் ஹ் ம் ஜிகு ஜிகு.. ஜிகு ஜிகு ஜிகு..” – எனத் தொடங்கித் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் வாய் பிளந்து விட்டது அவனுக்கு.

ஏதோவொரு எரோட்டிக் இண்டியன் சாங்! எந்த மொழியெனத் தெரியவில்லை! ஆனால் புரிந்தது.

“she is not innocent, Man!” – அவளைக் கண்டபடியே அவன் வாய் விட்டுக் கூறிய போது, இவன் பார்வை எட்டியதில் இவன்புறம் திரும்பியிருந்தவளும், அவன் ஏதோ கூறுவதை உணர்ந்தாள்.

ஆனாலும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

அவன் என்ன கூறுகிறான்?, தன்னிடம் தான் பேசுகிறானா? – எதையும் அவள் அறிய விழைந்ததாகத் தெரியவில்லை.

ஒரு நீண்ட நொடி அவனையே நோக்கினாள்.

பழுப்புக் கண்கள் மிரட்டல் விடுத்தாலும், பதறாது எதிர் கொண்டவனை அசராது கண்டு விட்டுப் பின் பார்வையைத் திருப்பினாள்.

‘ஷே க்கி போபா பா க்கி?’ (இவள் ஊமையா என்ன?) எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் அவன்.