அத்தியாயம் - 2

டுநிசி இரவில் வயிற்றைப் பிரட்டிய உணர்வில் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள் பல்லவி. சற்று அதிகமாகவே ஆடிய கப்பலின் ஆட்டத்திற்கேற்ப சுழன்ற தலையால் நெஞ்சடைத்து ஓங்கரித்துக் கொண்டு வந்தது.

Seasickness! ஏசி அறையிலும் வியர்த்து வடிய, பால்கனியைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள், அங்கிருந்த சன்லவுஞ்சரில் சாய்ந்தமர்ந்தாள்.

பளிச்சிடும் நிலவின்றி, மினுக்கும் நட்சத்திரமின்றி இருளுக்குள் வானம் தொலைந்து போயிருந்தது.

அவளாலும் அது போல் தொலைந்து விட முடியுமா?, சுவடேதுமின்றி?

ஏதேதோ சிந்தனைகளில், கடலலைகளுக்குப் போட்டியாக அலைபாய்ந்து திரிந்த மனதோடு கண் மூடிப் போனாள்.

றுநாள் விடியலில், திரைச்சீலையைத் தாண்டி முகத்தில் அடித்த வெளிச்சத்தில் கண்மணிகள் அசைய உறக்கத்திலிருந்து வெளி வர முயற்சித்துக் கொண்டிருந்தான் பிரஜரஞ்சன்.

தலையணையில் முகம் அழுத்தி சோம்பலை விரட்டிய போது, திடீரென ஏதோ தோன்ற, விருட்டெனப் போர்வையை விலக்கி எழுந்தவன், பரபரவெனத் தலையைக் கோதிச் சரி செய்தபடியே, அவசரமாய் பால்கனி கதவைத் திறந்தான்.

நேற்றிரவு அறைக்குத் திரும்பிய போது, அவனைத் தொடர்ந்து வந்தவள், பக்கத்து அறையில் நுழைந்ததைக் கண்டிருந்தான்.

கை நீட்டி நெட்டி முறித்தபடி எதேச்சையாய்த் திரும்புவது போல அருகிலிருந்த அறையின் பால்கனியை நோக்கியவனின் விழிகள், ஒரு நொடி விரிந்து, அதுவரை இமை ஒட்டி நின்ற தூக்கத்தை மொத்தமாய் வழித்தெடுத்தது.

பால்கனியிலிருந்த சன்லவுஞ்சரில் (sunlounger), குறுக்கிய கால்களுடன் போர்வைக்குள் சுருண்டு கிடந்தது சுருட்டை முடி.

ஏன் இப்படி? அவர்கள் தங்கியிருக்கும் வரிசையில் அமைந்திருப்பதனைத்தும், அக்கப்பலின் வசதிமிக்க விலை உயர்ந்த அறைகள் தான்!

அறையினுள் ஆடம்பரம் அக்கறை காட்டக் காத்திருக்கையில், இவள் எதற்காக பால்கனி மூலையில் பஞ்சப்பரதேசியைப் போல் படுத்துக் கிடக்க வேண்டும்?

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை.

உடலோ,மனதோ எதுவோ அவளை அசௌகரியத்தில் ஆழ்த்தி நிம்மதியைப் பறித்திருப்பது புரிந்தது.

வியர்த்த முகத்தை வெகுவாய் சுழித்தும்,சுருக்கியும் தவித்தும், தளர்ந்தும் தன் இருப்பை, தானே இம்சித்துக் கொண்டிருந்தாள்.

உடன் யாருமிருப்பது போலத் தென்படவில்லை. ஒற்றை ஆளாய்ப் பயணிக்கிறாள்.

அப்படியென்ன சங்கடம் இவளுக்கு?

கஞ்சா அடித்தவள் போன்று முழு நேரமும் கிறங்கிய தோற்றத்தோடு, வெறித்த கண்களும், வெளுத்த முகமுமாய், சூனியத்தைப் பரப்பியபடி, சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறாள்?

எரிச்சலுடன் சிந்தித்தவன், பெருமூச்சொன்றை வெளியிட்டபடி அறைக்குள் சென்று மறைந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு கையில் காஃபியுடனும், மறுகையில் லாப்டாப்புடனும் வெளி வந்தவன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஒரு கண்ணை அவளிடமும், மறு கண்ணை கணினித் திரையிடமும் வைத்தான்.

“you deserve this vacation buddy” “enjoy yourself” – எனத் தன் அலுவலக இன் பாக்ஸை நிரப்பியிருந்த மெயில்களைப் புன்னகையோடு பார்வையிட்டவன்,

“7 நாள் ட்ரிப் முடிஞ்சதும், நீ ஒரு கடல்கன்னியோட கரைக்கு வரனும்! நான் கண்ணீரோட உன்னைக் கட்டிப்பிடிக்கனும்! அண்ட் Macallan பூல்பென் நா. தீக்காச்சே? (Macallan மறந்துடாத. ஓகே?)?” – என்றனுப்பியிருந்த நண்பனை எண்ணி இதழ் விரித்துப் புன்னகைக்கையில், அவள் மெல்லப் புரள்வது ஓரக்கண்ணில் தெரிந்தது.

அங்கொருவன் அமர்ந்திருந்தது கருத்தில் பதியவில்லையோ, அல்லது அவள் கருத்தில் கொள்ளவில்லையோ, தன் போக்கில் தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையிட்டுக் கொண்டு, போர்வையை உதறி கையிலெடுத்தபடி அறைக்குள் நுழைந்து விட்டாள். தோளைக் குலுக்கிக் கொண்டவனும், தன் வேலையைத் தொடர்ந்தான்.

ங்கும் பிரம்மாண்டம் தொக்கி நின்ற அக்கப்பலின் இரண்டாவது டெக்கிலிருந்த (deck) கடைகளில் அன்று ‘டிஸ்கவ்ண்ட் சேல்’ நடப்பது கண்டு, அங்கு தனது ஷாப்பிங்கை முடித்தவன், நண்பன் கேட்ட Macallen-ஐயும் வாங்கிப் பையை நிரப்பி அறையில் பத்திரப்படுத்தி விட்டு டைனிங் ஹாலிற்கு அடுத்திருந்த ‘ஆக்டிவிடி ஏரியா’-விற்கு வந்தான்.

கூட்டமாய்க் குவிந்திருந்த மக்கள் குதூகலமாய்க் கைத் தட்டி ஆரவாரத்துடன் குதித்திருப்பது கண்டு அருகே சென்றவன், அங்கிருந்த flowrider-ல் அன்னையும்,மகளுமாய் இருவர் தம் கட்டி surf செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

12 மீட்டர் நீளத்தில் அலை,அலையாய் அமைக்கப்பட்டிருந்தப் படுக்கையின் மீது முழு வேகத்தில் பாயும் நீரை, surfing board-ல் அமர்ந்தோ,நின்றோ,படுத்தோ, கீழே விழாமல் சமநிலையோடு எதிர்கொள்ள வேண்டும்.

அன்னை படுத்த நிலையிலும், மகள் நின்ற நிலையிலும் முன்னும்,பின்னும் தண்ணீரின் வேகத்திற்கேற்ப சென்று வந்து கொண்டிருக்க, அந்தப் பெண்மணியின் கதறலும், மகளின் குதூகலமும் காண்போர் அனைவரிடமும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தது.

கடைசியில் அப்பெண்மணி board-லிருந்து தவறி தண்ணீருக்குள் விழுந்ததும் ஆட்டம் முடிய “ஓஓஓஓஓஓஓஓ” – என்ற கூட்டத்தின் சோர்ந்த குரலில் புன்னகைத்து நிமிர்ந்தவன், சற்றுத் தள்ளி நின்றிருந்த சுருள் முடியைக் கண்டு, இரண்டடி பின்னே நகர்ந்து எட்டி அவள் முகம் நோக்கினான்.

துண்டைப் போர்த்தியபடி வெளியே வந்த அப்பெண்மணித் தன் மகளின் தோளைத் தட்டித் திட்டித் தீர்ப்பதையும், அதற்கு கலகலவெனச் சிரித்த மகள் அன்னையை அணைத்துக் கொள்வதையும் தொடர்ந்த அவளது பார்வையில் என்ன இருந்ததெனப் புரியவில்லை அவனுக்கு.

அன்பாய்,ஏக்கமாய் மென்மையோடு தொடங்கிப் பின் ஆதங்கமாய்த் தடம் புரண்டு, கடைசியில் உணர்ச்சியற்று உருமாறியது அவள் முகம்.

ஒரு நொடி என்றாலும், அவளது பாலைவன முகத்தின் நடுவே மொட்டு விட்ட மென்மையைக் கண்டவன், அதன் பின்பு அன்றைய நாள் முழுதும் அவளைத் தொடர்வதையே வேலையாக மாற்றிக் கொண்டான்.

நேற்றைய கஞ்சா நிலை மாறி இன்று கொஞ்சம் தெளிந்திருந்தாள்.

காதை ஹெட்செட்டுக்குக் கடன் கொடுத்து விட்டுக் கனவில் தொலைபவள், இன்று நிஜத்தை அவதானித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

சுற்றியிருந்த மனிதர்கள் அவள் கண்ணிலும், கருத்திலும் நின்றார்கள்.

அந்த டிஜே இரவைக் கையில் குளிர்பானத்துடன் தொடங்கியிருந்தவன், அவளது தோற்றத்தையும், மனநிலையையும் கூட்டிப் பெருக்கிக் கணக்குப் பார்த்தபடி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

வருடம் முழுதும் அயராது உழைத்தவனுக்கு 7 நாட்கள் வெகேஷன் என்றதும் வெரைட்டியாய் நண்பர்கள் அளித்த லிஸ்ட்டைப் புறக்கணித்து விட்டு அவன் இந்த ‘க்ரூஸ் ட்ரிப்’-ஐ செலக்ட் செய்ததற்கானக் காரணமே முழு நேரமும் உண்டு,உறங்கி, ஓய்வாக உருண்டு புரளத் தான்!

வந்த வேலையை விட்டு விட்டு இப்படி இந்த சுருட்டை முடியை சிடுக்கெடுத்துக் கொண்டிருப்பது அநாவசியமென அவனுக்குப் புரிகிறது!

அவளது முடியும்,முழியும், நிறமும், நிலையும் அவனை நாற்பதடி நகர்ந்து ஓடச் சொல்கிறது தான், ஆனாலும்.. என்றெண்ணியவாறு,

டிஜேவின் தாளத்திற்கேற்பத் தன் முன்னே ஆடிக் கொண்டிருந்த ‘பாடி’ அவளை மறைப்பதை உணர்ந்து, தலை சாய்த்து நோக்கியவன்,

பழுப்புக் கண்மணிகளில் மின்னிய ஆர்வத்தைக் கண்டு வியந்து அவள் பார்வையைத் தொடர்ந்தான்.

கையில் மைக்குடன், ஒலித்த பாடலுக்கேற்பப் பாடியபடி ஆடிக் கொண்டிருந்த ‘host’-ஐக் கண்டு விட்டு மீண்டும் அவளை நோக்கினான்.

அவள்.. அவனை… அதாவது ஒரு ஆடவனை… ஆர்வமாக.. பார்க்கிறாள்!

நெற்றி சுருங்க, அவளது expression-ஐ decrypt செய்ய முயன்றான்.

இல்லை! இல்லை!

அவள் ஆர்வமாகப் பார்ப்பது அந்த ஆடவனை அல்ல.. அவன் அசைவுகளை!

அவள், நடனத்தை ரசிக்கிறாள்!

அங்கு அவன் ஆடிய நடனத்திற்கு, இங்கு இவள் விழிகள் ஆடும் நாட்டியத்தில் லயித்திருந்தவனுக்குப் புரிந்து விட்டது, எதற்காக மனம் அவளை ஆராய ஆர்வம் காட்டுகிறதென்று!

இவள்…. அவனைக் குழப்புகிறாள்!

கருப்பென்று ஒதுக்க நினைத்தால், பழுப்பைக் காட்டுகிறாள்.

ஜீவனற்ற முகத்தை வைத்துக் கொண்டு ‘ஜிகு.. ஜிகு..’-வென ஜதி கேட்கிறாள். சுருட்டை முடிக்குள் சுருண்டு கொள்கிறாள்!

சற்று முன் மின்னி மறைந்த மென்மை, இப்போது மிளிரும் ஆர்வம்! எப்போதும் காட்டும் உணர்வற்ற முகம்! ப்ச்!

சலிப்பாய் அவன் இதழ் சுழித்துக் கொண்ட போது, ஆர்வ விழிகள் அரங்கத்தை விட்டு வெளி நகர்வது தெரிந்தது.

அத்தனை அருகில் தன்னைக் கடந்து செல்பவளைக் கண்டவனுக்கு உள்ளே ஒரு நமைச்சல்!

உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இவ்வனைத்துக் குழப்பங்களையும்,கேள்விகளையும் தாண்டி அடி மனதில் அவளுக்காக ஆர்ப்பரிக்கும் உணர்வொன்று உண்டு அவனுக்கு.

அது நாகரீக எல்லையைக் கடந்து அவளைத் தலை முதல் கால் வரை அளவிடச் சொல்லி அவனை நச்சரிக்க, அது கொடுத்த உந்துதலில் முழுதாய் அவளை வலம் வந்தவனின் பார்வை, மெல்ல சூடேறியது.

உணர்வுகளை உசுப்பேற்றும் அழகான வளைவுகளோடு பார்வைக்கே பந்தி பரிமாறினாள் அவள்.

போதை ஏறிய விழிகளுடன் அவளை வெறித்தவனின் கையிலிருந்த குளிர்பானம், வெப்பமாய் உள்ளிறங்கியது!

அந்த வெப்பம், அகமும்,புறமுமாய் அவளை அறிந்து கொள்ளச் சொல்லி, ஆர்வத்தைத் தூண்டியது.