அத்தியாயம் - 7
அன்று அந்தக் கப்பல் பயணத்தின் கடைசி நாள்.
அன்றைய பகலும்,இரவும் cruising-ல் இருக்கும் கப்பல், மறுநாள் விடியலில் சிட்னி நகரை எட்டி விடும். அதன் பிறகு வழக்கமான வேலை,ஓட்டம்,தூக்கம் என வாழ்க்கைத் தன் இயல்பை நோக்கித் திரும்ப வேண்டியது தான். இனி இது போன்ற long vacation எல்லாம் பிரஜனால் அடுத்த ஒரு வருடத்திற்கு நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் Asia Pacific operations Lead ஆகப் பணி புரிபவன் அவன். பிஸியான பேர்வழி!
அந்த நாளைக் கோஸ்டல் கிட்சனில் அமர்ந்து கொண்டு ப்ரேக்ஃபாஸ்ட் உண்டபடித் தன் அன்னையுடன் அலைபேசியில் உரையாடியவாறுத் தொடங்கியிருந்தான்.
“அம்மா உனக்கு அனுப்பியிருக்கிற பார்சல் ரெண்டு நாள்ல ரீச் ஆயிடும் பிரஜன். எல்லாத்தையும் உன் ஃப்ரென்ட்ஸ்க்கே distribute பண்ணிடாம, உனக்கு நிறைய எடுத்து வைச்சு நல்லாச் சாப்பிடு”
“ம்ம் தீக்காச்சே ம்மா (ஓகே ம்மா)” – பட்டர் தடவிய பிரெட்டை விழுங்கியபடிப் பதிலளித்தான் பிரஜன்.
“அப்புறம்?,சொல்லு. என்ன பண்ணுன இந்த 7 நாள் ட்ரிப்ல? சிகரெட் டப்பாவைக் காலி பண்ணதைத் தவிர?”
“நிறைய ஸ்ட்ரெஸ் ஆனேன்”
“க்கெனோ? (ஏன்?)”
“அம்மா…”
“ம்ம்”
“பொண்ணுங்களால இந்த அன்பு,பாசம், அக்கறை, அரவணைப்புன்னு ஸ்டுப்பிட் செண்ட்டிமெண்ட்ஸ், மீனிங்லெஸ் எமோஷன்ஸ் எல்லாம் இல்லாம வாழவே முடியாதா?”
“மீனிங்லெஸ்ன்னு நீ நினைக்குற உணர்வுகள் தான பிரஜன், இந்த மனித குலத்துக்கே ஆதாரமா இருக்கு?, humanity, compassion எல்லாம் இல்லேன்னா, யுத்தத்துலயே உலகம் அழிஞ்சிடாது?”
“காசோ,பணமோ,அன்போ,அக்கறையோ.. எல்லாம் நேரத்துக்குக் கிடைச்சு அனுபவிக்கிறவன் நிம்மதியா,சந்தோஷமா வாழ்றான்! இது எதுக்கும் வக்கில்லாதவன், நாசமா போகனும்ன்றது தான் விதி-ன்னா, எப்படிம்மா?”
“அந்தப் பொண்ணுக்குக் காசு,பணம் பிரச்சனையா?, இல்ல அன்பு, பாசமா?”
“எந்தப் பொண்ணுக்கு?”
“உன் பின்னால உட்கார்ந்திருக்கிற பொண்ணுக்கு! அதான் அந்த ராதிகா ஆப்தே”
நிமிர்ந்து கேமராவின் வழி பின்னே தெரிந்த பல்லவியைப் பார்த்தவாறு ஆப்பிளை மென்றவன், “ப்ச்” என முகத்தைச் சுழித்து,
“அவளுக்கு இந்த உலகமே பிரச்சனை தான்ம்மா! தானே, தன் தலையில மண்ணை வாரிப் போட்டுட்டு, இப்ப சொரியுது,எரியுதுன்னு அழுது,புரண்டுட்டு இருக்கா! அடிமுட்டாள்” என்று பல்லைக் கடித்தான்.
“சத்தமாப் பேசாத பிரஜன், அந்தப் பொண்ணுக்குக் கேட்கப் போகுது”
“கேட்டாலும் ரியாக்ட் பண்ண மாட்டா! ரோபோ! அவ காதுக்கும்,மூளைக்கும் கனெக்ஷன் கட் ஆகி ரொம்ப நாளாச்சு”
“ப்ச், நக்கல் அடிக்காத பிரஜன்! பாவம் பார்க்க ரொம்ப அப்பாவியான பொண்ணாத் தெரியுறா”
“இவளா அப்பாவி?, ம்க்கும், அதுசரி” – புருவத்தை உயர்த்தினான் அவன்.
“ரொம்ப லட்சணமாகவும் இருக்கா! நீளமான கண்ணு!, தமிழ்ப் பொண்ணுங்க இவ்ளோ அழகாகக் கூட இருப்பாங்களா பிரஜன்?”
“controversial-ஆ பேசாதம்மா”
“அவ பேர் என்ன?”
“பல்லவி”
“பல்லபி??, நைஸ் நேம்”
“நேம் மட்டுமா நைஸ்?” – சலிப்பாக முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
“நீ பேசிப் பார்த்தியா பிரஜன்?”
“பேசுனேன்” – அசட்டையாகக் கூறினான்.
“உனக்கு செட் ஆவாளா?”
“ப்ச், ம்மாஆஆ”
“அமி சவுத் இன்டியன்ஸ் ஷத்தே பாலோ ஆச்சின் (எனக்கு south Indians ok தான்). அவ சிங்கிளா பிரஜன்?”
“ம்ம்ம்ம்” – தனக்குப் பின்னிருந்த மேஜையில் அமர்ந்திருப்பவளை செல்ஃபோனில் கண்டபடி உம் கொட்டினான்.
“உனக்கும் பிடிச்சிருக்குப் போலயே! பார்வையே சொல்லுது”
“எனக்கு அவளை மட்டுமில்ல. அவளுக்கு ரைட் சைட் டேபிள்ல உட்கார்ந்திருக்கிற சைனீஸ் பொண்ணையும் கூடத் தான் பிடிச்சிருக்கு”
“ம்ஹ்ம்?, அப்ப சரி! உன் தலையெழுத்து பிராஞ்சல் தான்-ன்னு இருந்தா, யாரால மாத்த முடியும்?”
“ம்மாஆஆ, இன்னும் அவ அப்பாக் கிட்ட நோ சொல்லலையா நீ?”
“சரியான காரணமில்லாம எப்படி நோ சொல்றது?, காண்டாமிருகம், காட்டெருமைன்னு நீ அவளைப் பத்தி அடிக்குற கமெண்ட்டையெல்லாம் அவ அப்பாக்கிட்ட ரிஜெக்ஷனுக்கு ரீசனா சொல்ல முடியுமா?”
“ஏன் காம்ப்ளிகேட் பண்ணிக்கிற?, நான் ஆஸ்திரேலியாவிலேயே வேற ஒரு பொண்ணைப் பார்த்து செட்டில் ஆகிட்டேன்னு சொல்லி முடிச்சு விடும்மா. சிம்பிள்!”
“அப்படி சொன்னா, பொண்ணு யாருன்னு கேட்டு நம்ம ஒட்டு மொத்த சொந்தக்காரங்களும் திரண்டெழுந்து வந்து நாளைக்கே நம்ம வீட்டு வாசல்ல நிற்பாங்க. பிராஞ்சல் அப்பா ஒரு ஆல் இண்டியா ரேடியோ!”
“அவங்களுக்கெல்லாம் பயப்பட்ற ஆளா நீ?”
“இல்ல தான்! நீ வேணா, ஆஸ்திரேலியாவிலேயே அந்த ஒலிவியா மாதிரி இல்லாம, நல்ல பொண்ணாப் பார்த்து, கல்யாணம் கட்டிக்கிட்டு அம்மாக் கிட்ட சொல்லேன்! இவங்க எல்லாரையும் ‘இப்பிடி’-ங்குறதுக்குள்ள சமாளிச்சுடுவேன் நான்” – சொடுக்கிட்டவரிடம்,
“ஷ்ஷ்ஷ் உனக்கு வேற வேலையே இல்லம்மா! ஆளை விடு. நான் வைக்குறேன்” – அவன் அவசரமாய்க் கட் செய்யப் பார்க்க,
“புதுசா என்ன உனக்கு ஈகோ பிரஜன்?, பிடிச்சிருக்குன்னா, பிடிச்சிருக்குன்னு தான் சொல்லேன்” – விடாமல் கத்தியவரைக் கண்டு பற்கள் தெரிய சிரித்து, மறுத்துத் தலையசைத்தபடி,
“ம்ஹ்ம் சொல்ல மாட்டேன்! அதுவும் கருப்பா இருக்கிறப் பொண்ணைப் பார்த்து…. பிடிச்சிருக்குன்னு…. சத்தியமா சொல்ல மாட்டேன்” – என்றவன் அந்தப் புன்னகையோடேக் கட் செய்து விட்டான்.
அவன் உண்டு முடித்து எழுந்த போது, அந்தக் கோஸ்டல் கிட்சனில் சிறிய கூட்டமொன்று கூடியிருந்தது.
அன்று தான் கடைசி நாளென்பதால், அந்த கிட்சனில் சமைத்த head chef-ற்கு நன்றி கூறும் விதமாக, அவரை அழைத்து, பலர் சுற்றி நின்று உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
மற்ற chef-கள், க்ளீனர்கள் என kitchen-ஐ சேர்ந்த அனைவரும் அவருடன் இணைந்து கொள்ள, மக்கள் நன்றி தெரிவித்துக் கைத் தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
அந்த head chef-ற்கு இந்த ட்ரிப் தொடங்கிய சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்ததெனவும், அவர் தன் மனைவியோடு இந்த க்ரூஸ் பயணத்திற்கு வந்திருக்கிறார் எனவும் கூறிய பணியாளர்கள், அவருக்காக அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பரிசையும், கேக்கையும் நீட்டி அவரை சர்ப்ரைஸ் செய்தனர்.
அங்குப் புன்னகையும்,வெட்கமுமாய் நின்று கொண்டிருந்தத் தனது மனைவியையும் அழைத்த செஃப், அவரோடு இணைந்து கேக்கை வெட்டக் கைத்தட்டி ஆர்ப்பரித்தது கூட்டம்.
கடைசியாக அவரது மனைவிக்காகப் பாட்டு பாடும் படிக் கேட்டு அவரிடம் மைக் ஒன்றை நீட்ட, மறுத்துத் தயங்கி பின்னால் சென்றவரை, நச்சரித்துப் பாட வைத்தனர்.
அவர் நெஞ்சில் கை வைத்து உருகிக் குழைந்து, ஏதோ சைனீஸ் பாட்டை பாடியபடி அவர் மனைவியைச் சுற்றி வர, கூட்டத்திலிருந்த சைனீஸ் மக்களும், கூடச் சேர்ந்து பாடி, ஆடிக் கொண்டிருந்தனர்.
பாடி முடித்ததும், நன்றி கூறி, அவர் தன் மனைவியின் தோளில் கை போட்டபடி, உடன் பணிபுரிபவர்களினருகே நகர்ந்து விட, கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது.
சிரிப்பும்,மகிழ்ச்சியுமாய் அந்நியோன்யத்தோடுக் காணப்பட்டத் தம்பதியைப் பார்த்தவாறுத் திரும்பியவன், தன்னருகே நின்றிருந்தப் பல்லவியை நோக்கினான்.
அந்தத் தம்பதியைப் பார்த்திருந்த அவளும், தன் முகம் கண்டதும், கையிலிருந்த ஃப்ரெஷ் ஜூஸை அவளிடம் நீட்டினான்,
“சரியா சாப்பிட்டது போலத் தெரியல” – என்றபடி.
வழக்கம் போல அவன் நீட்டியதை வாங்கிக் கொண்டவள், மறுக்காது வாயில் ஊற்றிக் கொண்டாள்.
இவள் ஏன் விநோத ஜந்துவாக இருக்கிறாள்?
அதன் பின்பு மௌன நடைபயணமாக இருவரும் இரண்டாம் deck-ல் இருந்த casino royale-க்குள் வந்தனர். அன்று கடைசி நாளாகையால் பெரிதாகக் கூட்டமேதும் தென்படவில்லை. பெரும்பாலான கேம்-கள் லாக் செய்யப்பட்டிருக்க, ஏரியா காத்தாடியது.
சுற்றி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் video poker machine-ஐக் கை காட்டி ,
“கேம் ஆடலாமா?” எனக் கேட்டான்.
சுவாரசியமற்றப் பார்வையுடன் “எனக்கு எப்படி விளையாடனும்ன்னு தெரியாதே” – மியூட்டில் பேசியவளிடம்,
“நான் சொல்லித் தர்றேன் வா” என்றவன், மெஷினின் அருகே கூட்டிச் சென்று விதிகளை விளக்கிக் கையிலிருந்த காசை (coin) மெஷினுக்குள் இட்டான்.
கொடுக்கப்பட்ட 5 கார்டுகளில் (சீட்டுக்கட்டு) இரண்டை hold செய்து, மூன்றை release செய்து, அதற்குப் பதிலாக மெஷின் கொடுக்கும் கார்டுகளில் மூன்றைத் தேர்ந்தெடுத்துப் பின், கடைசியாக நம்மிடமிருக்கும் 5 கார்டுகள், மெஷின் வைத்திருக்கும் 5 கார்டுகள் கொண்ட 4 winning combination-களில் ஒன்றோடுப் பொருந்திப் போனால், ஜெயித்ததாக அர்த்தம்.
இரண்டு முறைத் தோற்றவள் மூன்றாம் முறை ஆட்டத்தில் லயித்து strategy உடன் விளையாடத் துவங்க, அருகில் நின்று கொண்டு, அவள் அடுத்தடுத்து ஜெயிப்பதை வியப்பாய்ப் பார்த்திருந்தான் பிரஜன்.
“ஹேய்ய்.. உனக்கு விளையாடத் தெரியாதுன்னு பொய் தான சொன்ன?” – வெகு அருகே நின்று அவள் முகம் பார்த்து அவன் வினவ,
“இல்ல, இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் விளையாடுறேன்” – திரையைப் பார்த்தபடிக் கூறியவள், ஜெயிப்பதே நோக்கமாகத் தீவிரமாய் கேம்மில் லயித்து விட, உதட்டைப் பிதுக்கிப் புருவம் தூக்கியவன்,
“நீ ரொம்ப ஷார்ப் பல்லவி” என்றான்.
“இதுலயெல்லாம் ஷார்ப்-ஆ இருந்து என்ன பிரயோஜனம்?” – மெஷினிலேயே விழிகளைப் பதித்து அவள் உணர்ச்சி கலக்காத மெல்லிய குரலில் கூற,
“வாஸ்தவமான வார்த்தைகள்”– அவளையேக் கண்டவாறு சீண்டலாக அவன் முணுமுணுத்தது அவள் காதில் ஏறவேயில்லை.
சுருக்கிய புருவங்களும், அழுந்த மூடியிருந்த இதழ்களுமாய் மெஷினின் திரைக்குள்ளேயே சென்று விட்டவளை ஆராய்தலோடு நோக்கினான் அவன்.
Distraction-ற்காக அவள் போராடுவது புரிந்தது. எந்த சிந்தனையுமின்றி, எதிலேனும் உலகம் மறந்து லயித்து விட வேண்டுமென்கிற அவளின் எதிர்பார்ப்புத் தெரிந்தது.
மெஷின் அவளை ‘winner’ என்று அறிவித்ததும், உள்ளடக்கிய மூச்சுடன், அவள் தோளைத் தட்டியவன்,
“போதும் பல்லவி. போகலாம். வா..” என்றான்.
மெஷினையும்,அவனையும் மாறி,மாறிப் பார்த்தபடி மெல்லத் தலையாட்டியவளுக்கு அத்தனை நேரமிருந்தத் தீவிரம் மாறி, முகம் மறுபடி செத்த நிலைக்குச் சென்றது.
அதன் பின் அந்த deck-ல் இருந்த காஃபி ஷாப்பை வந்தடைந்தனர். அவள் முன்னிருந்த டீடேபிளில் மார்பிள் கேக்கையும், thai tea-ஐயும் வைத்தவன், அவள் அமர்ந்திருந்த ஷோஃபாவில், அவளருகே அமர்ந்தான்.
எதிரில் அந்த head chef-ம், அவரது மனைவியும் கைக் கோர்த்துக் கொண்டு, அறிமுகமாய்ப் புன்னகைத்து நகர்ந்த மக்களிடம் தலையை அசைத்துப் பேசிச் சிரித்தபடி கடந்து சென்றனர்.
அவர்கள் செல்வதைக் கண்டவாறு யோசனையுடன் டீயை அருந்தியவன்,
“என்ன மாதிரியான வாழ்க்கைத் துணை உன் எதிர்பார்ப்பா இருந்திருக்கு பல்லவி?” எனக் கேட்டான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்,
“இப்படியொரு பார்ட்னர் வாழ்க்கை முழுக்கக் கூட இருந்தா, நல்லாயிருக்கும்ன்னு நினைச்சதுண்டா?” – என்றான் அவன்.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்றுத் தோன்றியது அவனுக்கு,
புருவம் சுருக்கி யோசித்துப் பின் அசட்டையாய்த் தோளைக் குலுக்கி,
“காதலையும், காதலிச்சவனையும் வேண்டாம்ன்னு புறக்கணிச்சு ஒதுங்கி வந்தப்புறம், அந்த மாதிரியான எதிர்பார்ப்புகளெல்லாம் அர்த்தமில்லாததாகிடுச்சு.”
“……….”
“கல்யாணம்,குடும்ப வாழ்க்கைன்றதெல்லாம் இனி என் அகராதில இருக்கப் போறதில்ல, கடைசி வரை சம்பாதிச்சு என் அம்மாவைத் திருப்திபடுத்தியபடி தான் என் ஓட்டம் இருக்கப் போகுதுன்னு நினைச்சிருந்தேன். பட்…”
“பட்??”
“துணையோடு ஒரு வாழ்க்கை எப்படியிருக்கும்ன்னு யோசிக்குற அளவுக்கான ஆசைகளை என் சூழ்நிலை வளர்த்துக்க விடல. ஆனா.. அம்மா,அப்பான்னா இப்படித் தான் இருக்கனும்ன்னு நினைச்சிருக்கேன்!”
“வ்வாட்?” – புரியாமல் வினவியவனிடம்,
“ம்ம்… ஒரு முழுமையான குடும்ப சூழலுக்குள்ள நான் வளரல. அப்பா-ன்ற ஒரு கேரக்டர் இல்லாததால எங்களைக் குடும்பம்ங்குற கூட்டுக்குள்ள இந்தச் சமூகம் நிறுத்தி வைக்கப் பிரியப்படல. நாங்க வளர்ந்தது பூரா ஒரு incomplete circle-க்குள்ள தான்!
விசேஷம்,விழாவுலயெல்லாம் ஃபோட்டோ எடுக்க,பரிசு கொடுக்க அம்மா,அப்பா இருக்குறவங்க முதல் ஆளா, முன்ன போய் ஸ்டேஜ் ஏறுவாங்க. எங்களை… யாராவது சொந்தக்காரவங்கப் பாவப்பட்டு அழைச்சு பக்கத்துல நிற்க வைச்சுப்பாங்க, அல்லது கட்டக்கடைசில போனா,போகுதுன்னு கூப்பிடுவாங்க. பெரும்பாலான சமயம், அதுவும் இருக்காது. எங்கேயுமே எங்களுக்குப் பெருசா இம்பார்டன்ஸ் இருந்ததில்ல.
அதனால, என் கற்பனையெல்லாம் அம்மா,அப்பா இருக்குற ஒரு முழுமையான குடும்ப சூழலைக் குறித்துத் தான்!” – என்றாள்.
இறுக்கமானப் பார்வையுடன் அவள் முகம் பார்த்திருந்தான் பிரஜரஞ்சன்.
“படிக்கும் போது, பக்கத்துத் தெருவுலக் குடியிருந்த என் ஃப்ரெண்ட் சத்யாவை பிக்-அப் பண்ணிட்டுத் தான் காலைல ஸ்கூலுக்குப் போவேன். நான் போகுற நேரம் அவங்க வீட்ல அம்மா,அப்பா, அக்கா,தம்பி, சத்யான்னு எல்லாரும் இருப்பாங்க.! அந்த சூழலை வேடிக்கை பார்க்குறது எனக்கு ரொம்பவும் இண்ட்ரெஸ்ட்டிங்-ஆ இருக்கும்.
காலையில பரபரன்னு குழந்தைகளை ஸ்கூலுக்குக் கிளப்பி விட்டுட்டிருக்கிற நேரம், சாவகாசமா தூங்கி எழுந்து வந்து காபி கேட்குற அப்பா, அதை முறைக்குற அம்மா.
வக்கணையா வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு, குழம்பைக் குறை சொல்லி வம்பு செய்கிற அப்பா, அதுக்கு முகத்தைத் தூக்கிட்டு மல்லுக்கு நிற்கிற அம்மா.
பாட்டிக் கூட சண்டை போட்டு அழற அம்மாவை, வீட்ல யாருக்கும் தெரியாமக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போய் சமாதானம் பண்ணுற அப்பா, திரும்பி வரும் போது தலையில மல்லிப் பூவையும், முகத்துல சிரிப்பையும் சூடிக்கிட்டு வருகிற அம்மா.
எவ்ளோ தான் பொண்டாட்டியைக் குறை சொன்னாலும், வீட்டு விஷயத்துல,காசு செலவழிக்குறதுல மனைவியைக் கேட்டுக்கிட்டு எதுனாலும் செய்கிற அப்பா, அதுக்குப் பூரிச்சுப் போகிற அம்மா.
-இதெல்லாம் பார்க்க எனக்குப் புதுசா இருந்தது. அம்மா,அப்பா இருக்குற வீடு இப்படித் தான் இருக்கும் போலன்னு நினைக்க வைச்சது”
“………….” – வெகுவாய்ச் சிலாகித்து மலர்ந்த முகத்துடன் அவள் கூறுவதை வினோதமாய்ப் பார்த்திருந்தான் அவன்.
“அப்புறம், படிப்பு,வேலைன்னு முன்னேறி பெண் சுதந்திரம், சுய மரியாதைப் பற்றியெல்லாம் புரிதல் வந்த பிறகு, குழந்தை வளர்ப்பு தொடங்கி, சமையல், வீட்டு வேலை, கரண்ட் பில், சாப்பாடு, சொத்து சேர்க்குறதுன்னு அத்தனைலயும் சரிசமமா பங்கெடுத்துக்கிறத் தம்பதிகள் மேல மரியாதை உண்டாகியிருக்கு. மற்றபடி….” – என்று விட்டுத் தோளைக் குலுக்கியவளிடம்,
-அவள் முடிக்காது விட்டதை டீலில் விட்டுத் தொண்டையைச் செருமியவன்,
“ஓ!! அப்டின்னா…. வாழ்க்கைத் துணையா வர்றவனுக்குக் கண்டிப்பா சமைக்கத் தெரிஞ்சுருக்கனும்ன்னு சொல்ற?” – எனக் கேட்டான்.
“…………” – பதில் கூறாதுத் தவிர்த்து அவனை நேராய்ப் பார்த்தாள் அவள்.
ஆனாலும் விடாது, தூக்கியப் புருவங்களுடன் “பெங்காலி ஃபுட்-ஐப் பத்தி நீ என்ன நினைக்குற?” எனக் கேட்டான்.
நெரித்தப் புருவங்களுடன் எங்கோ நோக்கினாள் அவள்.
“பராத்தா,ரொட்டி,லுச்சி, தம் ஆலு,கூக்னி, ஆலு பாஜா, மச்சி பத், மங்க்ஷொர் ஜோல், ச்சிங்க்ரி…” – என அந்தக் கத்தி வீசும் கண்களை, அழுந்த மடிந்திருந்த இதழ்களைக் கண்டவாறே வேண்டுமென்றே அடுக்கிக் கொண்டே சென்றவன்,
“இதெல்லாம் டேஸ்ட் பண்ணியிருக்கியா?” எனக் கேட்டான்.
அவன் புறம் திரும்பி, அவன் கண்களைப் பார்த்து,
“நீங்க ‘கலக்கி’ சாப்பிட்டிருக்கீங்களா?” என்றாள்.
“கலக்கி?, வாட் இஸ் கலக்கி?”
“தெரியாதுல்ல?, பின்ன லுச்சி,லொச்சியெல்லாம் எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?”
நியாயம் தான் என்றெண்ணிக் கொண்டு ‘ம்க்கும்’ எனத் தொண்டையைச் செருமியபடி,
“ஆனா எனக்கு இட்லி,தோசா,உப்மா,வடா,சாம்பர்ர் எல்லாம் தெரியும்” என சுயதம்பட்டம் அடித்தவனைக் கேவலமாய் நோக்கி,
“that’s not சாம்பர்ர்ர், சாம்பார்” என்றாள் விடைத்த மூக்குடன்.
“ஓகே ஓகே!” எனக் கைகளைத் தூக்கி சரணடைந்தவன்,
“ரஸ்குலா,ரஸ்மலாய் தெரியும் தானே உனக்கு?” – என்று வினவினான்.
ஆம் என்பது போல் தலையாட்டியவளைக் கண்டு,
“அதுவே போதும்” எனத் திருப்திப்பட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவனை சைடாய்ப் (side) பார்த்து,
“எனக்கு ஸ்வீட்ஸே பிடிக்காது” என்றாள்.
அதற்கும் அலட்டிக் கொள்ளாதுத், தோளைக் குலுக்கியவன்,
“பரவாயில்ல! எங்கக்கிட்டக் காரமா நிறைய டிஷஸ் இருக்கு. நீ கட்டாயம் அதை டேஸ்ட் பண்ணத் தான் போற” எனக் கூறிக் கொண்டிருக்கையில்,
ஸ்கேட் செய்தபடி முழு வேகத்தில் வந்து கொண்டிருந்தக் குட்டி ஒருவன், டமாலென அவன் அமர்ந்திருந்த ஷோஃபாவை இடித்து அவன் மடியிலேயே கவிழ,
அவன் விழுந்த வேகத்தில் வலித்தத் தொடையால் “ஆஆஆ” என அலறி, அனிச்சையாய் சிறுவனைப் பிடித்து நிறுத்தினான் பிரஜன்.
அவன் பின்னே வந்த வெள்ளைக்காரப் பெற்றோர் அவசரமாய் ஓடி வந்து, அவனைப் பற்றித் தூக்கிக் காயம் ஏதுமிருக்கிறதா என ஆராய்ந்து, பிரஜனிடம் “சாரி,சாரி” என மன்னிப்புக் கேட்க,
“இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே” என்றவன், சிறுவனின் தோளைத் தட்டிக் கொடுத்து, “ஆர் யூ ஓகே சாம்ப்?” என்று சிரிப்புடன் வினவினான்.
எங்கே திட்டி விடுவானோ என்ற பயத்தில் மிரண்டிருந்த சிறுவன் அவன் சிரித்ததும் தயக்கப்பட்டு மெல்லத் தலையாட்டினான்.
அவர்கள் மீண்டும் மன்னிப்புக் கேட்டு நகர்ந்ததும், திரும்பிப் பல்லவியை நோக்கினான் பிரஜரஞ்சன்.
அந்தச் சிறுவன் வந்து விழுந்த போது அவள் பதற்றமடையவுமில்லை. குழந்தை என்கிற இயல்பான ஆர்வம், பரிவுடன் அவனைப் பார்க்கவுமில்லை. ரோபோவைப் போல் ரியாக்ஷனே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.
“என்ன பல்லவி?”
“……..” – அவள் அமைதியாயிருக்கவும், கைகளை நீட்டி நெட்டி முறித்தவன்,
“குழந்தை வளர்ப்பு ரொம்பக் கஷ்டம் தான் இல்ல?” என்றான்.
“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஏன் வளர்க்கனும்?” – அவள் குரல் மாறியது.
“ப்ச், பல்லவி”
“ஆமா தான?, கஷ்டப்பட்டு வளர்த்துட்டு, பின்னாடி அதையேக் காரணம் காட்டி பிள்ளைகளை டாமினேட் பண்ணி, வாழ விடாம செஞ்சு.. அவங்க வாழ்க்கைக்கு வில்லனா மாறிப் போறதுக்கு, பெத்துக்காமலேயே இருக்கலாம்”
“வெறுப்பாப் பேசாத பல்லவி. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்குறதில்லை”
“நியாயம் தான்”
“உனக்குக் குழந்தைங்க மேல ஈடுபாடு இல்லையா பல்லவி?”
“…………”
“இந்த விசயத்துலயும் விரக்தியை வளர்த்துக்காத பல்லவி. பிறப்பும்,இறப்பும் மனித இனத்தோட அடிப்படை. Science படி இனப்பெருக்கம் இங்க vital ஆன விஷயம். சிஸ்டமே இது தான். இப்படித் தான். அன்பு, பாசம், லொட்டு, லொசுக்கெல்லாம், பிறந்ததற்குப் பிறகான வாழ்க்கையை வாழக் காரணிகள் மட்டுமே!”
“…………”
“நீ யோசிக்கிற மாதிரியான இமோஷனல் பாய்ண்ட் ஆஃப் வியூலயே சொல்றேன்! உனக்குள்ள ஒரு குட்டி ஜீவன், உன் சாயல்ல, ஏன் உன் குணங்களைக் கூடப் பிரதிபலிக்குற மாதிரி உன் எதிர்ல நின்னா, வேண்டாம்ன்னு அதை ஒதுக்கிட்டுப் போய்ட முடியுமா உன்னால?”
“……….” – முகம் மாறி வெளுத்தது அவளுக்கு. விரல்கள் கூட லேசாய் அதிர்வதைப் போலிருந்தது.
“சொல்லு பல்லவி”
“வேண்டாம்” – என்றாள் மெல்லிய குரலில்.
“ஏன் வேண்டாம்?”
“நான்…. நான் அதையெல்லாம் யோசிச்சதில்லை”
“ஏன் யோசிச்சதில்லை?”
“ஒரு வேளை என் அம்மாவோட குணம் எனக்குமிருந்து, என்னை மீறி அந்தக் குழந்தை மேல நிறைய எதிர்பார்ப்புகளை வைச்சு, அதையெல்லாம் அது நிறைவேத்தாம போனா, கோபப்பட்டு, வெறுப்படைஞ்சு, அதைக் கட்டாயப்படுத்தி என் வழிக்குக் கொண்டு வர, டார்சர் பண்ணிடுவேனோ-ங்குற பயத்தால”
“ப்ச், முட்டாள்தனமா யோசிக்குற பல்லவி”
“எப்படி யோசிச்சும் இனி எந்தப் பிரயோஜனமும் இல்ல. ஏன்னா, அதுக்கெல்லாம் இனி வாய்ப்பில்லை” – ரோபோ குரலில் கூறியவள், “ஆனா?” என நிறுத்தினாள்.
“ஆனா??”
எதிரே சுவரில் ஒட்டப்பட்டிருந்த நாய்க்குட்டிகளின் படங்களைப் புருவம் சுருங்கப் பார்த்தவாறு,
“குழந்தையெல்லாம் வளர்க்குற அளவுக்கு எனக்குத் தகுதியிருக்கா, capacity இருக்கான்னு தெரியல. ஆனா….. ஒருகாலத்துல, நிறைய dogs வளர்க்கனும்ன்னு யோசிச்சிருக்கேன்” என்றாள்.
இதை எதிர்பாராது சற்றுப் பிளந்த வாயோடு, கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் எரிச்சல் எனக் கலவை உணர்வுகளுடன் ஒரு நொடி அவளைப் பார்த்தவன், பின் நெற்றியைப் பிடித்தபடி ‘இவ என்ன ஆளு’ என்றவாறு தோள் குலுங்கச் சிரிக்க,
தான் கூறியதை எண்ணி சங்கடமாய் உதட்டைக் கடித்துக் குனிந்து விரல்களைப் பிசைந்தாள் அவள்.
“dog-ன்னா இஷ்டமா?” – ஷோஃபாவில் இடதுகை முட்டியைப் பதித்து, விரல்களை மடக்கி அதில் ஒரு கன்னத்தைச் சாய்த்தவாறு சிரிப்புடன் வினவினான்.
“ம்ம்”
“என்ன dog பிடிக்கும்?”
சுருக்கியப் புருவங்களுடன் யோசித்தவள், “Bulldog…. pug….” எனக் கூறத் தொடங்கிப் பின், அவன் முகம் போகும் போக்கில் பார்வை தழைய.. சங்கடமாய் நிறுத்த, “ஹாஹாஹா”-வெனப் பெரிதாய் வாய் விட்டு சிரித்தவன்,
“உனக்கும் bulldog-க்கும் வெகு பொருத்தம் தான்! ரெண்டு பேருக்கும் ஒரே ஃபேஸ்! நீ பெத்து வளர்க்குற மாதிரியே இருக்கும்” – எனக் கூறி ‘ம்ம்ம்ம்’ என உதட்டை வளைத்துத் தொங்க விட்டு புல் டாக்-இன் முகத்தை imitate செய்து காட்ட,
தாடையை இறக்கி, புருவம் சுருக்கி அவனை முறைத்துப் பார்த்தவள், பின் முடியாது, பற்கள் தெரிய இதழ் விரித்து அகலமாய்ச் சிரித்தாள்.
அவள் விழிகளைப் போலவே புன்னகையும் பல சென்ட்டிமீட்டர்கள் நீண்டது. கனவில் கண்டதை விட, வரிசையாய் நின்ற பளீச் பற்களோடு மிகக் கவர்ச்சியாய்ச் சிரித்தாள். அந்தப் பழுப்பு விழிகளும், கருப்புக் கன்னங்களும், வெண்பற்களும், சுருட்டைமுடியின் நடுவே கவிதையாய்த் தெரிந்தது.
புத்துணர்ச்சி அளித்த அப்புன்னகையை இமைக்காது பார்த்தவனுக்குத் தன்னாலேயே கைகள் நீள, அவள் மடியிலிருந்த இடது கை விரல்களை இறுகப் பற்றி,
“நீ ரொம்ப… ரொம்ப…. அழகானவள் பல்லவி” என்றான் உள்ளார்ந்து.
சட்டெனக் கசங்கிப் போன முகத்துடன், விழிகள் தழைய, சுருங்கிவிட்ட இதழ்களோடுத் தலை தாழ்ந்து இறுகினாள் அவள்.
அவனுக்குத் தெரிந்து உலகில் எந்தப் பெண்ணும் ‘நீ அழகாயிருக்கிறாய்’ என்ற வசனத்திற்கு இத்தனை விசனப்பட மாட்டாள். அவள் மனநிலை புரிந்தது.
சில்லிட்ட அவளது விரல்களை… மேலும் அழுந்தப் பற்றி,
“ரிலாக்ஸ்!, இந்த compliment எப்பவும்.. எந்தவிதத்துலயும்.. உன் ஒழுக்கத்தை சீண்டிப் பார்க்காது பல்லவி” என்றான்.
ஒரு நொடி அசையாது நின்ற அவள் விழிமணிகள் பின் நிமிர்ந்து எங்கோ வெறித்தது.
மேலும் உறைந்து விறைத்த அவள் விரல்களை மீண்டுமொரு அழுத்தி விட்டு, மனமில்லாதுத் தன் கையைப் பிரித்தான் பிரஜரஞ்சன்.
அன்றிரவு pool deck-ல் pool party நடைபெற்றுக் கொண்டிருந்தது. Open pools, whirlpools- களுக்கு மத்தியில்.. உயரத்திலிருந்த பெரிய திரையில் ஏதோ ஆங்கிலப் படமொன்று ஓடிக் கொண்டிருக்க, கீழிருந்த station-ல் DJ தன் சகாக்களுடன் ஆட்டம்,பாட்டு என அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.
உல்லாசமாய் ஆடிக் கொண்டிருந்தவர்களின் கைகளில் உற்சாக பானங்கள் வந்து சென்ற வண்ணமிருக்க, இது எதிலும் கலந்து கொள்ளாமல், தூரமாய்க் கடலை வெறித்தவாறு நின்றிருந்தாள் பல்லவி.
கொண்டு வந்திருந்தப் பொருட்களை அள்ளிப் பையில் திணித்தாயிற்று. இரவு கடந்து விட்டால் இந்தப் பயணம் முடிவுக்கு வந்து விடும். இனி… இனி… என்ன?,
கண்ணிழந்தத் தன்னிடம் அகப்படாது, இருளுக்குள் ஒளிந்து கொண்டத் தன் கேள்விக்கானப் பதிலை, தவிப்புடன் தேடிக் கொண்டிருந்தாள்.
“இங்க என்ன பண்ற பல்லவி?” – பிரஜரஞ்சனின் குரல்.
Warm and bubbly whirlpool-க்குள் soak ஆகி வந்திருக்கிறான் போலும்! கையிலிருந்தத் துண்டால் காதில் புகுந்த விட்ட நீரைக் குடைந்துத் துடைத்துக் கொண்டிருந்தான்.
பின் அருகிலிருந்த லாஞ்சரில் துண்டை விரித்து விட்டு,
“pool party-க்குப் போகலையா?” – என மீண்டும் வினவியவனின் குரலில் அவன் புறம் திரும்பி, கம்பியில் சாய்ந்து நின்றவள், விழிகளைத் திருப்பித் தூரத்தில் தெரிந்த டிஜேவைக் கண்டவாறு, ‘இல்லை’-எனத் தலையசைத்தாள்.
அவளது நீள் விழிகளுக்குள், பழுப்புக் கருமணிகள் பக்கவாட்டில் மெல்ல நீந்திச் செல்லும் விதத்தைக் கவனித்தவாறு,
“ஏன்?” என்றான்.
‘ப்ச்’ எனத் தோளைக் குலுக்கியவள் மௌனமாய் நிற்க,
கடற்காற்றினால் கம்பி போல் எழுந்து விறைப்பாய் நிற்கும் அவளது சுருட்டை முடிகளைக் கண்டு விரிந்த இதழ்களோடு,
“நேரம் ஒதுக்கி இனி நிறைய டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணு பல்லவி!, ஸ்டேஜ் டான்சர் ஆகனும்ன்னு ஆசையெல்லாம் வைச்சிருக்கியே!” – என்றான்.
“ஆட்டமா? இந்த வயசுலயா?”
“வயசெல்லாம் ஒரு பொருட்டே இல்ல பல்லவி!, அதுவும் இப்போ இருக்கிற காலகட்டத்துல! 70 வயசுலயும் சேலையை இழுத்துக் கட்டிக்கிட்டு மாரத்தான்ல ஓடுறப் பாட்டியைப் பார்த்ததில்ல நீ?”
ஆம் எனத் தலையாட்டியபடி, மூடிய இதழ்களை மெலிதாய் விரித்தாள்.
“நீ ரொம்பத் திறமையானவள் பல்லவி! முயற்சி செஞ்சா நீ நினைச்சது நடக்க அதிக வாய்ப்பிருக்கு”
அவள் ஆமோதிக்கவுமில்லை. ஆதரிக்கவுமில்லை. பதிலற்று டிஜேவின் ஆட்டத்தை வெறித்தாள்.
அவன் விழிகளின் முன்னே இருந்த, அவளது இடது கன்னம் அந்த மெல்லிய விளக்கொளியில், பளபளத்தது. அவள் விழிகளுக்குப் போட்டியாக காதைத் தொடும் முயற்சியில் வளைந்திருந்தப் புருவங்களின் நீளத்தை அளக்கத் துறுதுறுத்தது அவன் விரல்கள்.
“ஹெல்த் விஷயத்துல கேர்லெஸ்-ஆ இருக்கக்கூடாது பல்லவி. பட்டுன்னு உயிரை மாய்ச்சுக்கிட்டு சட்டுன்னு செத்துட்ற ஐடியா எதுவும் உனக்கு இல்லன்னா, உன் ஆரோக்கியத்தைப் பராமரிச்சே ஆக வேண்டியக் கட்டாயத்துல இருக்க நீ.”
“………..”
“இப்போ உன் வயசு, மனசு எதிர்கொள்கிற அத்தனை அலட்டல்களுக்கும், உன் உடலை வருத்திக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும். ஆனா, வயசோட வாய் அடங்குனப்புறம், சரியாகப் பராமரிக்கப்படாம நோய்வாய்ப்பட்டுக் கிடக்குற உடம்புக்கு, உயிரை விடக் கூட உதவி தேவைப்படுற நிலைமை வந்துடும்.”
“……………”
“anxiety attack-க்கு ப்ராப்பரா ட்ரீட்மெண்ட் எடு பல்லவி. அசட்டையா இருக்காத.”
“……….”
“உன் வயசுக்கு, தூக்க மாத்திரையோட உதவியில்லாமத் தூங்க முடியாதுன்றதெல்லாம் சீரியஸ் இஷ்யூ பல்லவி. கட்டாயம் டாக்டரை கன்சல்ட் பண்ணு”
“…………”
“coffee, healer தான். medicine இல்ல. அதனால அடிக்கடி எடுத்துக்காத”
“…………”
“இவ்ளோ அழுத்தம் அவசியமில்ல பல்லவி. Pressure release ஆகி cooker-ஐத் திறந்தாத் தான் வயித்துக்கு சாப்பாடு. மறந்துடாத”
தன்னைக் காணாது வேறு எங்கோ பதிந்திருந்தப் பழுப்பு விழிகளைக் கண்டவாறு உள்ளே தோன்றிய அனைத்து எண்ணங்களுக்கும் யோசிக்காது வார்த்தை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.
தான் கூறுவதுக் குறித்து அவள் என்ன நினைக்கிறாள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கவில்லை அவனுக்கு.
தோன்றியதைப் பேசினான்.
“you know பல்லவி….”
“……..”
“எனக்கு… ஸ்கூபா டைவிங்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். காற்றோடு சண்டை போட்டு ஆர்ப்பரிச்சுப் பொங்கும் அலைகள் இருக்கிற கடலோட மேற்பரப்பை விட, ஆழ்கடலின் அமைதி தான் பேரழகுன்னு நினைச்சிருக்கேன்.”
“………”
“4 நாட்களுக்கு முன்ன, டைவிங்ல இருந்த போது, எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது.”
“………”
“நீ……. அந்த ஆழ்கடலைப் போன்றவள் பல்லவி. இந்த ஆர்ப்பரிப்புகளையும், அலைபாய்தல்களையும் தாண்டி உன் கிட்ட ஒரு ஆழ்ந்த அமைதி உண்டு.”
“………….”
“அந்த அமைதி தான்…. பல்லவிக்கான விளக்கம், பல்லவியோட அழகு…”
–இளம் புன்னகையோடு, மென்மையேந்தி, மெலிதாய் வருட வந்த அந்தக் குரலில், பக்கவாட்டில் நிலை கொண்டிருந்தப் பழுப்பு விழிகளை மெல்ல அவன் புறம் நகர்த்தி, நேராய் நிறுத்தினாள் பல்லவி.
என்ன கூறுகின்றன அந்தக் கண்கள்?
புரியவில்லை அவனுக்கு.
கடற்காற்றிலாடிய ஆடைக்குள் உடல் அசையாது இறுகி நின்று,கைகளை அழுந்த மூடி, மூச்சு விட மறந்து, இமைக்காது அவள் பார்த்த பார்வை, அவனை உருக்கி விட, ஏதோ உந்துததில் “பல்லவி….” என முணுமுணுத்து அவள் பின்னிருந்தக் கம்பியில் தன் இரு கைகளையும் பதித்து, அவளை முட்டி நின்றான் அவன்.
அனிச்சையாய் வலது புறம் திரும்பி விட்ட அவள் நீள் விழிகளை, கருப்புக் கன்னத்தை, அத்தனை அருகில் கண்டவனின் இதயம், சற்று முன்பு whirlpool-க்குள் அமர்ந்திருந்த போது வெந்நீரில் அனுபவித்தக் கதகதப்பை, அவளிடம் உணரத் துடித்தது.
அவளை உரசி நிற்பது கிறக்கத்தைக் கொடுக்க, விழிகள் சொக்கி, இமை மூடி அவள் கன்னத்தின் மென்மையோடு, தன் நாசியின் சொரசொரப்பை உறவாட விட்டவன், கரகரத்தக் குரலில் “பல்லவி…” என்றான்.
கொந்தளித்த அவன் உடல், கொப்பளித்த உணர்ச்சிகள் எதுவும் அவளைத் தீண்டவேயில்லை.
திரும்பித் தன் வெகு அருகே தெரிந்த அவன் விழிகளை அண்ணார்ந்து நோக்கினாள்.
“பல்லவி….” – மயக்கம் குறையாதக் குரலில் மெல்ல முணுமுணுத்தவனிடம்,
“உன்னைப் போல ஒருத்தனை விதி ஏன், முன்னமே என் கண்ணுல காட்டல ரஞ்சன்? – என்றாள் மெல்லிய குரலில்.. நிறுத்தி நிதானமாக.
“………..” – புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவன். விழித்தான்.
“எனக்கு அதுக்கானத் தகுதியில்லையா?, தகுதி இல்லாம போகிற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன் ரஞ்சன்?”
“ப….ல்லவி” – என வாயசைத்தவனுக்கு, கிறக்கம் முற்றிலும் மறைந்து, வார்த்தைகளற்றுப் போய் விட, அதிர்வாய் அவள் முகம் பார்த்தான்.
“எல்லாரைப் போலவும் பெத்தவளைக் கடவுளா பார்த்தேன். கடைசி வரை நன்றியோடு நடந்துக்க நினைச்சேன். பெத்தக் கடனுக்கு ஈடாக அவங்க என் வாழ்க்கையைக் கேட்டப்போ, என் ஆசை,கனவு,நிம்மதி,சந்தோஷம்ன்னு அத்தனையையும், முழு மனசோட அர்ப்பணிச்சேன்.”
“……….”
“தாய்மை புனிதம்,pure-ன்னுலாம் சொல்றாங்களே!, அதை உணர எனக்கு ஏன் வாய்ப்புத் தரப்படல?, அப்பாவோட அன்புக்குத் தான் வழியில்லாமப் போயிடுச்சு! அம்மாவோட அன்பாவது எனக்கு முழுமையாகக் கிடைக்குறது தானே நியாயம் ரஞ்சன்?, ஏன் கிடைக்கல?”
“………..”
“நான் நேர்மையாகத் தானே இருந்தேன்?, என் அம்மாக் கிட்ட.. என்னைக் காதலிச்சவன் கிட்ட.. என் எண்ணங்கள் உண்மையானதாகத் தானே இருந்தது?, அப்புறம் ஏன் என்னோட ஹானஸ்ட்டி அவங்கக்கிட்ட செல்லுபடியாகவே இல்ல?”
“………..”
“என் அம்மாவோட எண்ணங்களுக்குப் பின்னாடிப் பச்சை சுயநலம் இருக்கும்ன்னு தெரிஞ்சும், நான் ஏன் பெரிய தியாகி மாதிரி உருவெடுத்து என் வாழ்கையை இழந்திருக்கனும்? என்னையே நம்பியிருக்கிற அம்மாவை எதிர்த்துக்கிட்டு, நான் காதலிச்சவனோடப் போய்ட்டா… அது அவங்களுக்கு செய்ற துரோகமாகிடும்ன்னு நான் ஏன் நம்பனும்?, என்னை அவங்க hurt பண்ணத் தயாரா இருந்தப்போ, நான் ஏன் அவங்க hurt ஆகுறதை நினைச்சுப் பயப்பட்டிருக்கனும்?”
“………”
“இனி இப்படித் தான் எல்லாம்ன்னு என் நிலையை ஏத்துக்கிட்டு, ஓடத் தொடங்குன போது, விதி ஏன், என்னை ஆட்டுவிச்சவங்களை இல்லாம ஆக்கி, இத்தனை பெரிய விபத்தை ஏற்படுத்தி என் கையையும்,காலையும் முறிச்சுப் போட்டு மூலையில் ஒடுங்க வைக்கனும்?”
“…………”
“என் அப்பா இல்லாம போனது எந்தவிதத்துலயாவது என் தவறா ரஞ்சன்?, இந்த உலகத்துல அப்பா இல்லாத எல்லாக் குழந்தைகளும் இதே மாதிரி தான் வாழ்றாங்களா?”
-எனப் பேசிக் கொண்டே சென்றவள், திடீரென நிறுத்தி, முகம் வெளுத்து… உறைந்தாள்.
அதுவரை ஆதங்கமும்,ஆத்திரமுமாய் மெல்லிய குரலில் சீறிக் கொண்டிருந்தவளின் விழிகள், சட்டென எல்லையில்லா வேதனையைப் பிரதிபலிக்க, நிமிடத்தில் தேங்கி விட்டக் கண்ணீருடன், வலியில் கசங்கிச் சிறுத்த முகத்தோடு, அவன் விழிகளை நோக்கினாள்.
“ஆனா…. ஆனா…. ரஞ்சன்…. அப்பா-ன்ற ஸ்தானத்தோட இல்லாமையை, வாழ்நாள் முழுக்க, ஏக்கமும், வேதனையுமாய் வலிக்க,வலிக்க இயலாமையோடுக் கடந்து வந்த நான்…… அந்த உறவு காட்டுகிற அன்பும்,அக்கறையும் எத்தனைப் பெரிய தைரியத்தையும்,பலத்தையும் குழந்தைங்களுக்குள்ள உண்டாக்கும்ங்குற முக்கியத்துவம் தெரிஞ்ச நான்….
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம.. அந்த உறவு அழியக் காரணமாகி… இன்னொரு பல்லவியை…. உருவாக்கிட்டு வந்திருக்கேன் ரஞ்சன்”
-காற்றாகிப் போன குரலில், தடுமாறி மொழிந்தவளின் கன்னங்கள் கண்ணீரில் நனைவதை அந்த இருளிலும் உணர முடிந்தது அவனால்.
பல்லவி அழுகிறாள்! உள்ளே அடித்துக் கொண்டது அவனுக்கு.
அவள் அன்னையின் அட்டகாசங்கள் அத்தனையையும் ஆதங்கத்துடன் பகிர்ந்த போது, உயிராய் நேசித்தவனுடனான உறவு முறிந்ததாகச் சொன்ன போது, அவளை இத்தனைக்கும் ஆட்படுத்திய அன்னை, ஆம்புலன்ஸில் அவள் மடியில் உயிர் விட்டதைக் கூறிய போது… எவனோ ஒருவனுடன் முறையற்ற உறவில் இருந்ததை வெளிப்படுத்திய போது… அவள் கன்னத்தை எட்டியிராதக் கண்ணீர், இன்று அணையுடைத்துக் கொண்டு முழு வேகத்துடன் வந்திறங்கியிருந்தது.
வலித்தது உள்ளே. எப்பாடுபட்டேனும், அக்கண்ணீரை நிறுத்தி விட வேண்டுமென உந்துதல் வந்தது.
பெண்களின் கண்ணீர், ஆண்களின் மிகப்பெரிய பலவீனமென அந்நொடி புரிந்தது!
“இந்தக் கப்பலை விட்டு வெளியே கால் எடுத்து வைச்சதும்.. எனக்கு என்ன வாழ்க்கையிருக்கு ரஞ்சன்?, வாழ எனக்குத் தகுதியிருக்கா?
அப்பா இருந்திருந்தா… எவ்ளோ நல்லாயிருக்கும்ன்னு இத்துணூண்டு வயசுல இருந்து நான் ஏங்கித் தவிச்ச நாட்கள் அத்தனையும் கண்ணு முன்ன வந்து நின்னு, என்னை எள்ளலோடப் பார்க்குது ரஞ்சன். அந்த ஏக்கங்கள் அத்தனையையும் மூட்டைக்கட்டி அந்தக் குழந்தைகளுக்குப் பரிசாக் கொடுத்துட்டு வந்திருக்கேனே! நான் எத்தனை ஈவு,இரக்கமில்லாத ஆள்!,
அவங்களும் என்னைப் போல… ஒவ்வொரு நிகழ்வுலயும், ஒவ்வொரு நிலையிலயும் அப்பாவோட இருப்பைத் தேடித் தேடி, ஏங்கிச் சாகனுமா?, அந்தக் குழந்தைங்களுக்கு என்ன பதில் இருக்கு என் கிட்ட?”
“……….”
“நா….நா.. நான் ஏன்…. ஏன்… இதைச் செய்யனும்?, என்ன என் புத்தியிலிருந்தது?, ஏன் இப்படி ஆனேன்?, என்னிடமிருந்தத் திடமும்,உறுதியும் எங்கே போச்சு?, இத்தனை பலவீனமானவளா நான்?, கேவலமானவளா நான்?
அம்மா,அப்பா இல்லாம, தாங்கிப் பிடிக்க ஆளில்லாம, உற்றத்தாலயும்,சுற்றத்தாலயும் கைவிடப்பட்டுத் தன்னந்தனியா நிற்குற… என்னை மாதிரியான அநாதைங்களுக்குச் சாவு தானே முடிவு?, நான் எந்தத் தைரியத்துல எனக்கு வாழத் தகுதி இருக்குன்னு நினைச்சேன்?, காசும்,பணமும் கையிலிருந்தத் துணிச்சலா?, அதை வைச்சு யாரை, எதை சாதிக்க முடிஞ்சது என்னால?, ஏன் இப்படியாகனும்?,”
–விழிகள் அலைபாய்ந்துத் தடுமாறித் தவிக்க, கண்களிலிருந்தும்,மூக்கிலிருந்தும் ஆறாய் வடியும் நீரோடு…. இரு கைகளாலும் தலையைப் பற்றிக் கொண்டவள், ‘ஏன், ஏன், ஏன்’ எனத் தனக்குத் தானே பைத்தியம் போல திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு, தன்னிரக்கத்தில் துவள்வதைக் காணச் சகிக்காது,
அவள் இரு கைகளைப் பற்றி, “இல்ல, இல்ல இல்ல பல்லவி… இந்த மாதிரி வார்த்தைகளெல்லாம் உபயோகிக்காத. நீ அநாதை இல்ல! உனக்குன்னு நிறைய உறவுகள் இருக்கு” – எனத் தவிப்பாய்க் கூறினான் அவன்.
குனிந்து… குலுங்கி.. சத்தமின்றி… விடாதுக் கண்ணீரை சொரிபவளை.. அழுகையிலும் அமைதியைக் கடைபிடிப்பவளை, தாங்கலுடன் நோக்கியவாறு, அவள் நாடியைப் பற்றி நிமிர்த்தித் தன்னைப் பார்க்கச் செய்தான்.
கன்னங்களில் வழிந்தோடிய நீரை ஆற்றாமையுடன் அழுத்தமாய்த் துடைத்து “அழுகையை நிறுத்திட்டு, நான் சொல்றதைக் கேளு பல்லவி” என்றான்.
ஊற்றாய் மாறி விட்ட அவள் விழிகளைக் கண்டுப் பக்கவாட்டில் திரும்பி ஆழ்ந்த மூச்செடுத்து இமை மூடித் தன்னை நிலைப்படுத்தியவன்,
“இதையெல்லாம் உன் கிட்டப் பேசவேக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன்” என முணுமுணுத்துப் பின் அவள் முகம் பார்த்தான்.
“இதோப் பாரு பல்லவி, முறையான நேரத்துல பெறப்படாத அன்பு, முறைக்கேடான இடத்துல இருந்து கிடைக்கப்பட நிறைய,நிறைய வாய்ப்பிருக்கு. இது இந்த உலகத்துக்குப் புதுசில்ல.
‘தேவை’-ன்ற board-க்குக் கீழ அக்கறை,ஆதரவு, அரவணைப்புன்னு எழுதி வைச்சுக் கையில் ஏந்திக்கிட்டு, யாராவது இதைத் தீர்ப்பாங்களான்னு, அதைச் சுத்தி,சுத்தியே ஓடி வந்த உன் சிந்தனைகளுக்கு முன்னால…… உன் கண்ணு முன்னால…. ‘அவன்’ பொண்டாட்டியோ,பிள்ளைங்களோ இல்ல.
அதாவது, அவங்க உன் picture-க்குள்ளயே இல்ல.
ஆனா.. அவனுக்கு அப்படியில்ல.
அந்தப் பக்கம் தினம்,தினம் வீட்ல தன் பொண்டாட்டி,பிள்ளைங்க முகத்துல முழிச்சு, அவங்களோட பேசி,சிரிச்சு, கொஞ்சி, விளையாடி, நல்ல புருஷனா, நல்ல அப்பாவா நடந்துக்கிட்டு… இந்தப் பக்கம் உன் கூடவும்… கொஞ்சமும் உறுத்தல் இல்லாம… உறவை வளர்த்திருக்கான்.
நிறைவான குடும்பச் சூழலுக்குள்ள, இசைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருத்தனுக்கு, உன்னைப் போல காரணங்களோ,தேவைகளோ இருந்திருக்க வாய்ப்பில்லை பல்லவி.
அதனால…. அவனுக்கிருந்தது வெறும் சபலம் தான்ங்குறது என்னோட கணிப்பு. அவன் பொண்டாட்டி இப்போ ப்ரெக்னண்ட்-ஆ இருக்காங்க-ன்றதே இதுக்கு மிகப் பெரிய ஆதாரம். அதாவது, அவனுக்கு… ஒரே நேரத்துல… நீங்க ரெண்டு பேருமே தேவைப்பட்டிருக்கீங்க.
அப்டிப் பார்த்தா, உன் இடத்துல, ஒரு சாம்பவியோ, சைந்தவியோ இருந்திருந்தாலும், அவன் சபலப்பட்டிருப்பான். இதே தவறைச் செய்திருப்பான்.
அதுக்காக நீ ரொம்ப அப்பாவி, அவன் தான் உன்னை ஏமாத்திட்டான்னு சொல்லி உன் நிலையை justify பண்ணி, உன்னை நல்லவள்-ன்னு சொல்றது என் நோக்கமில்லை பல்லவி.
அவனுக்கிருக்கிறது சபலம் தான்னும், அவன் உன்னை use பண்ணிக்கிறான்னும் நீ நிச்சயம் உணர்ந்திருப்ப. ஆனாலும், அவனுக்கு இசைந்து கொடுத்திருக்க.
ரெண்டு பேர்ல யார் பக்கம் அதிகத் தவறுன்னு தராசுல நிறுத்தி வைச்சு, ஜட்ஜ்மெண்ட் எழுதுறது அபத்தம்ன்னு எனக்குத் தெரியும். ஆனா….
உன்னால தான் இது அத்தனையும்ன்ற மாதிரி, உன் தலைல எல்லாக் குற்றத்தையும் ஏத்திக்கிட்டு,உன் மேல மட்டுமே தப்பு இருப்பதாக நீ இப்படி உன்னை ‘வாழத் தகுதியில்லாதவள்’ன்னு வருத்தி, புலம்பித் தவிக்கிறது நியாயம்ன்னும் படல எனக்கு.”
“………….”
“ஒரு வேளை என் கணிப்புத் தவறாக இருந்து, அவன் சபலக்காரனாக இல்லாமல்… நிஜமாகவே… உன் மேல உண்மையான அக்கறையும்,அன்பும் வைச்சிருந்திருக்கலாம் பல்லவி. Who knows!
சபலமோ, சாத்வீகக் குணமோ.. எதுவாக இருந்தாலும்… அவனை நம்பியிருந்த உறவுகளுக்கு…. அவன் செஞ்சது பச்சைத் துரோகம் தான்! அதுல மாற்றமில்ல.
அப்படித் துரோகம் செய்தவனைத் தந்தையா ஏற்றுக் கொள்ள, எந்தக் குழந்தையும் ஆசைப்படாது பல்லவி!
தினம் தினம் அவன் பொண்ணு, கண்டிப்பா ‘அப்பா,அப்பா’-ன்னு அவனைச் சுத்தி வந்திருக்கும். அவனோட ஸ்தானத்துக்குண்டான புனிதத்தை ஒவ்வொரு நொடியும் நினைவுபடுத்துகிற அந்த அழைப்பு, அவனுக்குத் தான் செய்கிறத் தவறை உணர்த்தியிருக்கனும். துரோகம்ன்னு உறுத்தி வருத்தியிருக்கனும். உன்னை விட்டு விலகனும்ங்குற உந்துதலை ஏற்படுத்தியிருக்கனும்.
ஆனா, அவன் விலகல. தானாக இந்த உறவு வெளியே தெரிய வர்ற வரைக்கும், இதை விட்டு உதறி ஒதுங்கனும்ங்குற சிந்தனை, அவனுக்கு இல்லவே இல்ல.
நீ சொல்கிற ஏக்கம்,வேதனை,அப்பா இருந்திருக்கலாமேன்ற உருகல் எல்லாம் நல்ல அப்பனா நடந்துக்கிறவன் கிட்ட மட்டும் தான் தோணும்!
அந்தப் பக்கம் உன்னோடப் பழகிக்கிட்டே, இந்தப்பக்கம் தன்னைத் தூக்கிக் கொஞ்சி ரெட்டை வேஷம் போட்ட அப்பன் மேல, அந்தக் குழந்தைக்குப் பாசமெல்லாம் ஊற்றெடுக்க வாய்ப்பேயில்ல. கடுங்கோபம் வேணா பெருகும்.
என்னைக் கேட்டா, இப்படியொரு அப்பன் அந்தக் குழந்தைங்களுக்குத் தேவையே இல்ல.
இப்போ இல்லாட்டியும், ஒரு ஸ்டேஜ்ல அந்தக் குழந்தை நிச்சயம் யோசிக்கும். நீ (பல்லவி) கேரக்டர்லெஸ் ஆளாகவே இருந்திருந்தாலும், நம்ம அப்பனுக்கு எங்கப் போச்சு புத்தின்னு. இந்தத் தப்புல சரிபங்குத் தன் தகப்பனுக்கும் இருக்குங்கிறதைப் புரிஞ்சுக்கும்.
இது.. நிச்சயம் அந்தக் குழந்தைக்கு ரிலேஷன்ஷிப் குறித்தப் புரிதலை உண்டாக்கும் பல்லவி. ஆண்-பெண் உறவுக்கிடையே அன்பு மட்டுமில்ல, அறமும் முக்கியம்ங்குற எண்ணத்தை உருவாக்கும். இந்த எண்ணங்கள் நிச்சயம் அதன் தாக்கத்தைப் பிரதிபலிச்சு, இனி எதிர்காலத்துல அந்தப் பொண்ணுத் தனக்குச் சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க உதவும்.
உன்னோட அந்தக் குழந்தைங்களை ஒப்பிடாத பல்லவி! உன்னைப் போல, வறுமையில, உதவி செய்ய யாருமே இல்லாம… படிப்பறிவும்,பகுத்தறிவுமில்லாத அம்மாவை மட்டுமே சுத்தி யோசிக்குற traumatic சூழல்ல.. அவங்க வாழப் போறதில்ல. அப்பா இல்லைன்ற குறை தெரியாம, அவங்களை ஏங்க விடாம, முழுசா சப்போர்ட் பண்ணுகிற நல்ல உறவுகளுக்கு மத்தியில அவங்க சொகுசா வளரலாம்!
உன்னை மாதிரி அன்பு, பாசம், லொட்டு, லொசுக்கையெல்லாம் அடிப்படைத் தேவைகள்ல சேர்த்துக்கிட்டு, அது இல்லாட்டி மனுஷனால வாழவே முடியாதுங்குற முட்டாள்தனமான சிந்தனைகளெல்லாம் இல்லாம, அவங்க வாழ்க்கையை அதன் போக்குல ஏற்றுக் கொள்கிற.. அலட்டல் இல்லாத.. யதார்த்தவாதிகளாக வளரலாம்!
அதே போல, அவனை டிவர்ஸ் பண்ண முடிவெடுத்த அவன் வைஃப், ‘தி பிசினஸ் வுமன்’, அந்தப் பொண்ணுக்கும் எதிர்காலத்துல, அவங்க மனசுக்கு ஏத்த மாதிரி.. நேர்மையா நடந்து கொள்கிற ஒரு நல்ல வாழ்க்கைத் துணை நிச்சயம் அமையலாம்!
நாம உன் அம்மா காலத்துலயோ, என் அம்மா காலத்துலயோ இல்ல பல்லவி! நாகரீக மாற்றத்தின் உச்சத்தைத் தொட்டு விட்ட AI உலகத்துல வாழ்ந்துட்டிருக்கோம். 20 வருஷத்துக்கு முன்னாடி எங்கோ ஒரு மூலையில, யாருக்கோ நடந்ததாக நாமக் கேள்விப்பட்ட மறுமணம் என்பது, இப்போ close ஆன circle-க்குள்ளயே, casual-ஆ நடக்குறதைப் பார்க்குறோம்! இனிமே no one is gonna stay single forever பல்லவி!
குழந்தைகளைக் காரணமாக் காட்டி மறுமணத்தைத் தவிர்க்குறக் காலங்களெல்லாம் கடந்திருச்சு! குழந்தைகளுக்கும் வாழ்க்கையிருக்கு, தங்களுக்கும் வாழ்க்கையிருக்குங்குறதைப் புரிஞ்சுக்கிட்ட ஆண்களும்,பெண்களும் இந்தச் சமூகத்துல பெருகத் தொடங்கிட்டாங்க. எதுவுமே முன்னப் போல இருக்கப் போறதில்ல பல்லவி. எல்லாமே மாறிடுச்சு. இன்னும் மாறும்.
இதெல்லாம் நம்ம so called இந்தியக் கலாச்சாரத்துக்கு சீர்குலைவை ஏற்படுத்தும்ன்னா, அந்தக் கருமம் பிடிச்சக் கலாச்சாரம், சீரழிஞ்சே போகட்டும்! யாருக்கு என்ன நஷ்டம்!”
-என எரிச்சலாகக் கூறியவன், அவள் இருபுறமும் பற்றி நின்றக் கம்பியை இறுக்கி, அவள் முகம் நோக்கிக் குனிந்து,
“நடந்த அத்தனைக்கும் நீ மட்டுமே காரணமில்ல பல்லவி. அப்படி நினைச்சு, நீ கற்பனை பண்ணிக்கிற worst scenarios எதுவும் happen ஆகப் போறதேயில்ல.
அந்தக் குழந்தைங்க அப்பாவை வெறுக்குறதுக்கும், அந்தப் பொண்ணுத் தன் கணவனை ஒதுக்குனதுக்கும் ரீசன் நீ மட்டுமேயில்ல. அவன் மேல அவங்க வைச்சிருந்த நம்பிக்கை அவனாலேயே அநியாயமாக நொறுக்கப்பட்டதால!” – என்றவன்,
“நான் சொல்றது புரியுதா உனக்கு?” எனக் கேட்டான்.
அவன் கூறிய அத்தனையும் அவள் மூளையில் பதிந்ததா, இல்லையாவெனப் புரியவில்லை. ஏனெனில் அவள் பழுப்பு விழிகள் அவன் பேசியதை ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. கல்லுச்சிலை போல் அவன் முகத்தில் நிலை கொண்டிருந்தன.
மறுபடி ஓர் ஆழ்ந்த மூச்சுடன், தனக்கு வெகு அருகே இருந்த முகத்திடம்,
“என் பேச்சோட நோக்கம், நடந்தவற்றில் இருவருக்குமே சரிபங்கிருக்குன்றதை உன் மனசுக்குப் புரிய வைப்பது தான் பல்லவி. மற்றபடி, உன் private life-ஐப் பத்தி கருத்து சொல்றது…. அநாகரீகம்ன்னு நினைக்குறேன்.
நான் வாழுகிற இடத்துல இதெல்லாம் ரொம்பச் சாதாரணம் பல்லவி. இம்மாதிரியான விஷயங்களையெல்லாம் தட்டி விட்டு move on ஆகிப் போகிற வெள்ளைக்காரவங்க மத்தியில பிழைப்பு நடத்துபவன் நான்.
இந்த உலகம் எல்லா மாதிரியான மனிதர்களையும் கொண்டது. சிரிப்பு,அழுகை,பசி,தூக்கம் மாதிரி வஞ்சம், வன்மம், வக்கிரம்ங்குறதும் மனித உணர்வுகள் தான்ங்குற புரிதல் எனக்கு இருக்கு.
அதனால, உன்னை நீயே, சமூக விரோதி மாதிரி, தேசத் துரோகி மாதிரி, இந்த மனிதக் குலத்துக்கே threat-ங்குற மாதிரி உருவகப்படுத்திக்கிட்டு, உனக்குள்ளேயே உன்னை விலக்கி வைச்சுக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருது.
பிரச்சனையை வெளிய இருந்து பார்க்கிறதாலோ என்னவோ, “ஆமா இப்படி ஆயிடுச்சு. அதான் விலகி வந்தாச்சே! அப்புறமும் ஏன் இந்தப் பொண்ணு இவ்ளோ அலட்டிக்குது”-ன்னு என் மூளை உன்னை முட்டாளாகத் தான் பார்க்கச் சொல்லுது.
Life has to move on பல்லவி. பிரளயமே வந்தாலும், மறுநாள் சூரியன் உதிக்கத் தான் செய்யுது. ‘எந்திரிச்சுப் போய் வேலையைப் பாருங்க டா’-ன்னு பிடரில தட்டி நம்மை உசுப்பி விடுது.
Be practical பல்லவி. Emotional-ஆகவே எல்லா விஷயத்தையும் அணுகுறதும் ஒரு வகையில் weakness தான். Come out of it. Come out of all these. You gonna be alright. You will be.” – தரையை நோக்கித் தளர்ந்து,தழைந்திருந்த நீள் இமைகளைக் கண்டவாறு ஆழ்ந்த மூச்சுடன், குனிந்திருந்த அவள் தலை மீதுத் தன் நாடியைப் பதித்தபடிக் கூறி முடித்தான் அவன்.
அன்று அந்நொடித் தன் மார்பைச் சுட்ட அவளது மூச்சுக்காற்றை சிந்தனைகளேதுமின்றி உள்வாங்கியவன் தான்! அதன் பின்பு அவளைச் சந்திக்கவேயில்லை.
மறுநாள் காலை Sydney harbour-ல் கையில் ட்ராலியுடன் நடந்து செல்பவளைத் தூரத்திலிருந்து கண்டு, உதட்டை வளைத்துப் பெருமூச்சை வெளியிட்டுப் பின் ஒரு தோள் குலுக்கலுடன் நகர்ந்து விட்டான்.
அத்தோடு அவளைத் தொலைத்துத் தலை முழுகி விட்டதாகத் தான் நினைத்திருந்தான், அடுத்தடுத்து வந்த நாட்களில் இரவு,பகல் பாராது அவளது சுருட்டை முடிக்குள் சிக்கித் தொங்கி… ஊசலாடும் மனதின் தள்ளாட்டத்தைக் கண்டு கொள்ளும் வரை!
முதல் இரண்டு நாட்கள் அனைத்தும் நன்றாகத் தான் சென்றது. வேலை இடத்தில்.. தான் இல்லாத சமயம், நடந்த சம்பவங்களைக் குறித்துக் கேட்டுக் கொண்டது, அடுத்தடுத்த நாட்களுக்கான திட்டமிடல், டீமுடன் ஸ்டேட்டஸ் மீட்டிங், க்ளையண்ட் கால், ப்ரசண்டேஷன் என நேரம் ரெக்கைக் கட்டிக் கொண்டுப் பறந்தது.
பின்னர் கொஞ்சம் தளர்ந்தமரும் சூழல் வந்ததும், காஃபி வெண்டிங் மெஷினில் நின்று espresso-வை அழுத்தியவனுக்கு, மனதின் ஓரம் லேசாய் ஒரு குறுகுறுப்பு.
‘Life happens, coffee helps!’
‘என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது?’,- யோசனையுடனே நெற்றியைத் தேய்த்தபடி இமை மூடியவனின் விழிகளுக்குள்…. காதில் ஹெட்செட்டோடு, கையைக் கட்டிக் கொண்டுப் பழுப்பு விழிகளால் கடலை வெறித்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தது சுருட்டை முடி.
பட்டென விழித்து, சுருக்கியப் புருவங்களுடன் காலர் பட்டனைத் திறந்து மார்பைத் தேய்த்துக் கொண்டவனுக்கு, அன்று பட்ட அவளது மூச்சுக் காற்று.. நெஞ்சில்.. இன்று தகிப்பதாய் ஓர் உணர்வு.
“ப்ச்” என முகம் சுழித்தவன், “கண்டிப்பா ஏதாவது பிட்டு சாங் கேட்டுக்கிட்டே… எங்கேயாவது பராக்கு பார்த்துட்டு உட்கார்ந்திருப்பா” என்றுக் கடித்தப் பற்களுக்குள் முணுமுணுத்து நகர்ந்து விட்டான்.
அடுத்தடுத்து வேலைகளில் தொலைந்து போனாலும், அடிமனதில் பழுப்பு விழிகள் ஹெட்செட்டோடு சட்டமாக அமர்ந்து, அவனை வெறித்து வெறித்துப் பார்த்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.
ஒரு முறை காலை உணவோடு ஃப்ரெஷ் ஜூஸைக் கையிலெடுக்கையில், ‘சரியாக உண்கிறாளா, இல்லை இன்னமும் கொறித்துக் கொண்டு தானிருக்கிறாளா’ என நினைவு சென்றது.
அது கொடுத்தத் தாக்கத்தில் ஜூஸைப் பருக மறந்து, யோசனையுடனே அமர்ந்திருந்துப் பின், மீட்டிங் ரிமைண்டர் என ஐஃபோன் கூவிய பின்பு அவசரமாய் அடித்துப் பிடித்து அலுவலகம் ஓடியிருந்தான்.
அந்த வீக் எண்ட்.. pub-ல் நடந்தப் பார்ட்டியிலும்… மெல்லிய விளக்கு வெளிச்சத்துக்குள்.. குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த நண்பர்களின் மத்தியில்… அன்று.. அழகான நெளிவுகளுடன் நளினமாய் வளைந்தாடியக் கருப்பு உருவத்தை சிகரெட் புகைக்கு நடுவே தேடித் தோற்றான்.
ஒரு நாள் இரவு.. உறக்கம் வராதுப் படுக்கையில் இருந்தவன் திடீரென எழுந்து.. வேலை மெனக்கெட்டு, யூ ட்யூபில் ‘கலக்கி’ குறித்து search செய்து… உடனே சமைத்துப் பார்க்கவும் ஆசைப்பட்டு, ஃப்ரிட்ஜிலிருந்து முட்டைகளை எடுத்து அடுக்கி விட்டான்.
பின் அதற்கு சால்னா தேவையெனத் தெரிந்து.. சால்னா செய்யத் தேங்காய் தேவையெனப் புரிந்து… அந்த நள்ளிரவில் சூப்பர் மார்க்கெட் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்து.. வீடியோவில் காட்டியபடி செய்து முடித்துக் கலக்கியை அவன் தட்டிலிட்ட போது… மணி அதிகாலை 2.
ஆனாலும் அசராமல்.. உண்டு பார்த்து ‘Not bad’ எனப் புருவம் உயர்த்தி, உதடு பிதுக்கியவனின் விரல்கள், மறுநாள் இரவு சாம்பார் ரெசிபியை யூ ட்யூபில் search செய்து கொண்டிருந்தது.
தெருவிலும், அலுவலகத்திலும் எதிர்ப்படும் சுருட்டை முடிகளையெல்லாம்.. ஒரு நொடி நின்று பார்த்து விட்டே நகரும் பழக்கம் தானாகவேத் தோன்றியிருந்தது.
அப்படி ஒரு நாள் நடு ரோட்டில் காரையே நிறுத்திப் பார்த்ததன் விளைவு, டிராஃபிக் ரூல்ஸை ப்ரேக் செய்ததற்காக, வீட்டுக்கு penalty notice அனுப்பப்பட, தெண்டமாக சில,பல ஆஸ்திரேலியன் டாலர்களை ஃபைன் கட்டியிருந்தான்.
கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டுக் கலவரம் செய்பவளை ‘காலோ (கருப்பி)’ எனத் திட்டியவன், அதற்குத் தாடையை இறக்கி முறைத்துப் பின் நீளமாய், கவர்ச்சியாய்ச் சிரித்த பளீச் பற்களை எண்ணி, மென்புன்னகையுடன் தலை கோதிக் கொண்டான்.
ஒருமுறை அவன் வீட்டினருகேயிருந்த ஏரியைச் சுற்றி jog செய்து கொண்டிருந்தவன், எதிரே நாய் மேய்த்துக் கொண்டு வந்தப் பெண்ணைக் கண்டு ஒரு நொடி அப்படியே நின்று விட்டான். ஏனெனில் அவள் கையிலிருந்தக் கயிற்றின் முடிவில், கருப்பு நிற bulldog ஒன்று நடையிட்டுக் கொண்டிருந்தது.
தன்னைக் கடந்து செல்லும் அதன் ‘தொங்கு மூஞ்சியைக்’ கண்டவாறு ஏறியிறங்கும் மூச்சுடன் இடையில் கை வைத்து நின்றவன், அது… இடம் பார்த்து மலம் கழித்து விட்டு நகர்ந்ததும்,
அதை அந்தப் பெண், ப்ளாஸ்டிக் உறை அணிந்திருந்தத் தன் இடது கையால் கலெக்ட் செய்து, மறுகையிலிருந்த பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வதைக் கண்டு முகத்தைச் சுழித்துக் கொண்டான்.
“பெருசா நாய் வளர்க்கனும்ன்னு சொல்றா! இந்த மாதிரி பின்னாடியே போய்… பொறுக்கிப் போடுவாளாமா?” – என்று முணுமுணுத்துக் கொண்டான்.
அன்று காலை அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தவனின் அலைபேசித் திரையில் அவனது அன்னை முகம் காட்டிக் கொண்டிருந்தார்.
“ஒரு வழியா பிராஞ்சல் அப்பாக் கிட்ட, நீ No சொன்னதை convey பண்ணிட்டேன் பிரஜன்”
“வெல் டன்-ம்மா. ஹௌரா பிரிட்ஜ்ல உனக்கொரு சிலை வைக்கட்டுமா?”
“ப்ச், ப்ரஜன்… அந்தாளு நீ அவர் பொண்ணை, ரிஜெக்ட் பண்ணினக் கோபத்துல.. பார்க்குறவங்கக்கிட்ட எல்லாம் உன்னைப் பத்தித் தப்பு,தப்பா சொல்றதாக் கேள்விப்பட்டேன்”
“என்ன சொல்றாராம்?”
“நீ ஆஸ்திரேலியாவுலேயே எவளையோக் கல்யாணம் கட்டி செட்டில் ஆகிட்டியாம்”
“இது அந்தாளு சொன்னதா, இல்ல நீயேக் கிளப்பி விட்டதா?” – என்றவாறு நகர்ந்து டோஸ்ட்டரிலிருந்த ப்ரெட் ஸ்லைஸை எடுத்து, அதன் மீது அவகாடோ பேஸ்ட்டைக் கத்தியால் தடவிக் கொண்டிருந்தவன்..
“ரஞ்சன்….” எனக் கோபமாய் அழைத்த அன்னையின் குரலில் ஒரு நொடித் தன் இயக்கத்தை நிறுத்திப் பின் அவசரமாய் அலைபேசியின் முன்னே வந்து,
“என்னை என்ன சொல்லிக் கூப்பிட்ட?” எனக் கேட்டான் வியப்புடன்.
“ரஞ்சன்னு தான்! ஏன்?” என்றவர், “அதுவும் உன் பேரு தான?, என் டீனேஜ் க்ரஷ் ஜோதிரஞ்சன் நினைவா நான் தேர்ந்தெடுத்தப் பேரு” எனப் பெருமையாய்ப் பீற்றிக் கொள்ள…
“அப்போ தாதாவுக்கு Dibyendu-ன்னு பேர் வைச்சிருக்கியே?, அது யாரு?” என்றான்.
“ப்ச்” என முகத்தைக் கோணலாக்கிக் கொண்டவர், “அது உன் தாதாம்ஷாய் (தாத்தா) நினைவா உன் அப்பா வைச்சப் பேரு ரஞ்சன்” என எரிச்சலாய்க் கூற, அவரைக் கண்டு கொள்ளாது.. ப்ரெட்டை மென்றவனுக்கு….
‘உன்னை மாதிரி ஒருத்தனை நான் ஏன் முன்னமே பார்க்கல ரஞ்சன்?’ – என்றவளின் மெல்லிய குரலே காதுக்குள் கவி பாடிக் கொண்டிருந்தது.
அவள் அன்று கூறிய அத்தனை ரஞ்சன்-களும், மொத்தமாய் அவனைச் சுற்றி வந்து.. சூழ்ந்து கொண்டு.. மூளையைக் குடைய.. பலமாகத் தலையை உலுக்கி, அவற்றை விரட்ட முயன்றான்.
அனைத்திற்கும் உச்சமாக அன்றிரவு நல்ல உறக்கத்திலிருந்தவனுக்கு ஏதேதோ.. அர்த்தமில்லா… தொடர் கனவு…
சன் லாஞ்சரில்.. மூடியிருந்தப் போர்வைக்குள் சுருண்டு கிடந்த சுருட்டை முடியை வருடி எழுப்பி.. காஃபியை நீட்டுகிறான் அவன்.
பழுப்பு விழிகள்.. அரக்கு நிறம் கொள்ள… விரக்தியைச் சிந்தும் முகத்துடன்.. அவன் கண்களைப் பார்த்து “எனக்கு மலை உச்சத்தைக் காண்பதில் உடன்பாடு இல்லை ரஞ்சன்” என்கிறாள் அவள்.
மலர்ந்த முகத்துடன் உடலை வளைத்து நடனம் ஆடுகிறாள், தீவிர பாவத்துடன் மெஷின் முன்னே நின்று ‘poker game’ விளையாடுகிறாள்.
திடீரென ஏறி,இறங்கும் மூச்சுடன் அவன் கைகளில் சாய்கிறாள். என்னவோ,ஏதோவெனப் பதறித் தாங்குபவனிடம், உள்ளங்கையிலிருந்தத் தூக்க மாத்திரையை நீட்டுகிறாள்.
‘இது நான் கொடுத்த மாத்திரை!, நோ பல்லவி.. நோ’ – எனக் கத்துபவனைக் கண்டு கொள்ளாது எழுந்து சென்று, பலகணியில் அமர்ந்தபடி, “அநாதையான எனக்கு ஆழ்கடல் தானே முடிவு ரஞ்சன்?” எனக் கேட்டு அவனைக் கலங்கடிக்கிறாள்.
கடைசியாக… ஆழ் கடலுக்குள்.. மெல்லிய சூரிய வெளிச்சத்தினூடே.. ஸ்கூபா டைவிங்கிலிருப்பவன், தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருந்த வெள்ளி மீன் கூட்டங்களை அசையாது மிதந்தவாறு ரசித்த வேளை… தூரத்தில்…. மூடிய விழிகளுடன்… விரிந்த கை,கால்களுடன்.. சுருட்டைமுடிக் கண்டபடி நீரில் விரவிக் கிடக்க.. செத்த உடலாய் மிதந்தவளைக் கண்டு… அதிர்ந்து.. அலறி…
அவளை எட்ட விடாது.. தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த மீன் கூட்டங்களை விரட்ட முயன்று… கைகளை அசைத்து… கால்களை உதறி…. விரல்களை நீட்டி… முன்னேற முயன்று… முடியாமல்…. தண்ணீருக்குள் புரண்டு… Snorkel-ஐ மறந்து.. “பல்லவி…..” எனக் கத்தி… மூச்சுக்குத் திணறி… டொம்ம்ம்மெனக் கட்டிலிலிருந்துக் கீழே விழுந்தான்.
வியர்த்து வழிந்த முகத்தோடு மூச்சு வாங்க சுற்றி,சுற்றிப் பார்த்துத் தான் தண்ணீருக்குள் இல்லையென்பதைப் புரிந்து கொண்டு ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ – எனக் கண்மூடித் தன்னை நிலைபடுத்தியவன், ‘இதற்கு மேல் தாங்காது. இப்படியே போனால்.. தனக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி’ என்றெண்ணியவாறு அவசர,அவசரமாய்த் தன் லாப்டாப்பை ஆன் செய்தான்.
Facebook-ஐ open செய்து people search-ல் அவன் cursor-ஐ நிறுத்திய போது, அங்கு ஏற்கனவே ‘பல்லவி மைத்ரேயன்’ என்கிறப் பெயர் அமர்ந்திருந்தது.
FB-ல் மட்டுமல்ல, Instagram, Twitter, LinkedIn என அனைத்திலும் அவள் பெயரைத் தேடிச் சலித்து விட்டான். எங்கும் அவள் தென்படவில்லை.
அவள் தங்கியிருக்கும் இடம், வேலை செய்யும் கம்பெனி என எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாது விட்டத் தன் மடத்தனத்தைச் சபித்தபடி பல்லைக் கடித்துப் புருவம் சுருக்கிப் பின், நினைவு வந்தவனாக, search box-ல் ‘ரம்யா ஜெகநாதன்’ என டைப் செய்தவன்,
அடுத்த இரண்டு நாட்களில் அந்த 2 storey apartment-ன் ground floor-லிருந்த வீட்டின் முன்பு நின்று… audio doorbell-ஐ அழுத்திக் கொண்டிருந்தான்.
அவன் அழுத்தியதற்குப் பதிலாக உள்ளிருந்து “who is it?” என்றது ஒடிசலான குரலொன்று.
“பல்லவி??”
“யெஸ்”
“ஐம் பிரஜரஞ்சன்”
–அவன் கூறியதும் மௌனமான எதிர்ப்புறத்தைக் கண்டு அவன் உதடு பிதுக்கிய சமயம், சின்ன ஒலியுடன் கதவு திறந்தது.
தொள தொள டீஷர்ட்டில், தூக்கிக் கட்டியக் குருவிக் கூட்டில் நெரித்தப் புருவங்களுடன் தரிசனம் தந்த பல்லவியின் பழுப்பு விழிகள்… கையில் bulldog உடன் வாசலில் நிற்பவனைக் கண்டு முதலில்.. திகைத்துப் பின்.. புரியாது சுருங்கிக்… கடைசியில் ஆராயும் நோக்குடன்.. அவனைக் கேள்வியாய்ப் பார்த்தது.
அந்த இல்லாத நெற்றியை, நீண்ட புருவங்களை, நீள் விழிகளை, கூர் நாசியை, பளபளக் கன்னங்களை, வரைந்து வைத்த இதழ்களை, வெற்றுக் கழுத்தை, அதில் இழைந்துக் கிடந்த சுருள் முடியை… கடகடவென வலம் வந்தது அவன் கண்கள்.
ஒரே பார்வையில் மொத்தமாய் அவள் இருப்பை உள்வாங்கிக் கொண்டவன், அவளது விழிகளிலிருந்த வினாக்களைக் கண்டுகொள்ளாது, அவளைத் தாண்டிச் சென்றுக் குனிந்து கையிலிருந்த bulldog-ஐ வீட்டினுள் விட்டான்.
அது ‘bow vow’ எனக் கத்திக் கொண்டுக் குதித்து உள்ளே ஓடிச் செல்வதைப் பார்த்தவாறே நிமிர்ந்தவனுக்குத், தன் தோள் உரசப் பக்கவாட்டில் நின்றவளைக் கண்டு… உணர்வுகள் பொங்கியதில்.. தன்னாலேயே இதழ்கள் விரியப் பார்க்க… அடக்கிப் பார்வையை அந்தப் பழுப்பு விழிகளில் பதித்தான்.
கோபம்,விரக்தி,அழுகை,ஆத்திரம் என அனைத்து உணர்வுகளுக்கும் நிறம் மாறும் அந்த விழிமணிகளின் ஜாலம் குறித்து அவனுக்கு அத்துப்படி.
இன்று எதிர்ப்புற வெயில் முகத்தில் பட்டு விழிகள் பொன்னிறம் கொண்டிருந்தது.
I missed it a lot! – அவள் விழிகளையேப் பார்த்திருந்தவன் முணுமுணுத்துக் கொண்டான்.
நின்ற நிலை மாறாதுத் தலையை மட்டும் பக்கவாட்டில் திருப்பி அவன் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவளைப் பார்க்க,பார்க்க ஆசை வந்துத் தொலைத்தது அவனுக்கு.
மௌனமாய்க் கடந்த நிமிடங்களைத் தொடர்ந்து, தான் அவளைத் தேடி வந்ததன் காரணத்தை எப்படிக் கூறுவதெனப் புரியாது பிடரியைக் கோதியவன் பின், “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமி, தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஐஃபோனைக் கையிலெடுத்தான்.
Photos-க்குள் நுழைந்து புகைப்படம் ஒன்றைத் தொட்டவன், நிமிர்ந்து அவளிடம் நீட்டினான்.
நட்ட நடு ராத்திரியொன்றில் அவன் செய்த கன்னிமுயற்சி… கலக்கியின் புகைப்படம் அது. புருவம் சுருக்கிப் பார்த்தவளிடம்,
“நீ சொன்ன கலக்கி. ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட். நானே சமைச்சது. டேஸ்ட் பண்ணிட்டேன். நாட் பேட்” என்றான்.
கையிலிருந்தப் புகைப்படத்தையும்,அவனையும் மாறி மாறிப் பார்த்தாள் அவள். சத்தியமாகப் புரியவில்லை.
“கலக்கி மட்டுமில்ல. I can cook most of the south Indian dishes now. ஈவன் சாம்பர்.... ஐ மீன்… சாம்பார்…. நிறைய ரெசிபிஸ் கத்துக்கிட்டேன்.”
“………….”
“உனக்காகவே” – குரல் கிறங்கியது.
அதுவரை சுழித்திருந்தப் புருவங்களுக்கு நிகராக சுருங்கியிருந்த அவள் விழிகள், அவன் கூறிய தொனியில்.. விரிந்து.. வியப்பைக் காட்ட..
லேசாய்ப் பிளந்து விட்ட அவளது இதழ்களைக் கண்டதும், உள்ளே கண்டமேனிக்குக் கத்திக் குதித்த இதயத்தின் ஆர்ப்பாட்டத்தில், சிரிப்புப் பொங்கியது அவனுக்கு.
தன்னையே பார்த்திருப்பவளிடம்,
“ஒவ்வொரு ரெசிபி ட்ரை பண்ணும் போதும், உள்ளுக்குள்ள ஒரு கற்பனை ஓடுச்சுப் பல்லவி. அந்தக் கற்பனைல… நீ இருந்த! என் கிட்சன்ல…! கையில நான் சமைச்ச சாப்பாட்டோட! இதழ் முழுக்க… அன்னைக்கு முழுப்பற்களையும் காட்டி நீளமா சிரிச்சியே! அதே சிரிப்போட…!” என்றான்.
“அன்றைக்குப் பிறகு எப்போவாவது…. அதே மாதிரி… சிரிச்சியா பல்லவி?”
பிளந்த இதழ்கள்.. பள்ளமாகி விரிந்த நிலையிலேயே நின்று விட… அனிச்சையாய் அவன் கேள்விக்கு ‘இல்லையென’ மெல்லத் தலையசைத்தாள்.
“நான் இங்க…. இப்போ.. வந்ததே.. அந்த சிரிப்பைப் பார்க்கத் தான் பல்லவி. ஒரு முறை சிரிச்சுக் காட்டுறியா? எனக்காக…?”
பைத்தியம் பிடித்து விட்டதா இவனுக்கு?, எதற்காக இப்படி வசனம் பேசுகிறான்?
பிளந்திருந்த இதழ்கள் இப்போது ஒரு புறமாய் வளைய, அவனைக் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தவளைக் கண்டு,
“ஏய்ய், பல்லவி” எனக் கண்டனமாய் அழைக்க முயன்றுப் பின், அவள் fired out செய்ய முயலும் தனது flirting technique-களை எண்ணி சங்கடமாய்ச் சிரித்துப் பிடரியைக் கோதிக் கொண்டு,
“ப்ச்! I’ll make it simple.” என்றவன்… அவளை நேராய்ப் பார்த்து..
“உனக்காக என் கிட்சன் காத்திட்டிருக்குப் பல்லவி. நீ…. எப்போ என் கூட வரப் போற?” என்றான்.
அழுத்தமாய் அவன் மீது பதிந்திருந்தப் பழுப்பு விழிகள்.. அவன் பேச்சையும்,பேச்சின் போக்கையும் புரிந்து கொள்ள முயற்சித்தது.
அவனுக்கு அவள் மீது ஆர்வமுண்டு. அதை அவள் மனம் அறியா விட்டாலும், அவள் பெண்மை உணர்ந்தேயிருந்தது. ஆர்வம் தாண்டி அவனுக்கு அவள் மீது நிறைய இரக்கமும், அக்கறையும் கூட உண்டு. அதையும் அவள் உணர்ந்திருக்கிறாள். அது அவனது மனிதாபிமானத்தின் அனிச்சை செயல் என்பதே அவள் எண்ணம்.
ஆனால் இப்படித் தேடி வந்து வசனம் பேசுமளவிற்கு.. எது அவனைத் தூண்டுகிறது?, வெற்று ஆர்வமும்,இரக்கமும் இத்தனை தூரத்திற்கு இழுத்து வர வாய்ப்பில்லை. பிறகு என்ன?
யோசனையில் நின்றவளிடம்,
“புரியுதா பல்லவி.. நான் சொல்ல வர்றது?” எனக் கேட்டான்.
Instant-ஆக இல்லை எனத் தலையாட்டியவளிடம்,
வீட்டினுள் கையைக் காட்டி..
“அந்த…. bulldog-ஐ நாம ரெண்டு பேரும்… சேர்ந்து வளர்ப்போமா பல்லவி?” எனக் கேட்டான்.
அப்படியென்றால்?- அவள் விழிகள் கேட்டது.
“இன்னுமா புரியல?” – என முணுமுணுத்தவன், ஒரு முடிவோடு,
“நீ பார்த்து ரசிச்ச…. அம்மா-அப்பாவுக்கிடையேயிருந்த அந்நியோன்யம் அத்தனையையும், உன் கூட வாழ்ந்து தெரிஞ்சுக்கனும்ன்னு ஆசைப்பட்றேன் பல்லவி... I want to live my life with you..” – என்றான்.
எதிர்பார்க்கவில்லை அவள். விழித்தாள்.
ஒரே வாரம் தான் அவளுடன் அவன் பழகியது! இல்லை, அது ‘பழகுதல்’ – என்பதன் கீழ் வராது. பழகுவதென்றால்.. இருவரும்,இருவரைப் பற்றியும் தெரிந்து,அறிந்து,பகிர்ந்து கொள்வது! அந்தக் கப்பல் பயணத்தில்.. அவர்களிருவரிடையே நடந்தது வெறும் interrogative session மட்டுமே! அவன் கேள்விகளை அடுக்கினான். அவள் பதில்களைத் தொடுத்தாள். அவ்வளவே!
பிறகு எப்படி இது சாத்தியம்?
முதலில் யார் இவன்?, பெயர் சொன்னான். பெங்காலி என்றான். Gym செல்வான். நீச்சலடிப்பான். நடனம் ஆடுவான். சிகரெட் பிடிப்பான். அவன் குறித்து, அவளது அடிமனதில் இவ்வளவு தான் பதிந்திருந்தது.
வேறு ஏதேனும் அவளிடம் பகிர்ந்திருக்கிறானா? நினைவு வரவில்லை!
நிமிர்ந்து அவன் முகம் பார்த்து... அவனை அளவிட்டாள்.
உயரமாயிருக்கிறான். வெள்ளையாய் இருக்கிறான். தாடி வைத்திருக்கிறான். புருவம் அடர்ந்து படர்ந்திருக்கிறது. நாசியில் ஓர் மச்சம். கண்கள் சிறுத்திருக்கிறது. இதழ்கள்…. புன்னகையில் விரிந்திருக்கிறது.
ஏன்? ஏன் சிரிக்கிறான்? என்னவாம்?
விரிந்த அவனது புன்னகை… தோள் குலுங்கலுடன் சிரிப்பாய் மாற… “finally!!! நீ என்னைப் பார்க்குற பல்லவி!” என்றான் எதையோ சாதித்தத் திருப்தியில்!
“என்னைப் பார்க்க வைச்சுட்டேன்… ஒரு வழியா..! இதே மாதிரி… உன்னை என் கூட வாழவும் வைப்பேன் பல்லவி! I swear” – தீர்க்கமாய்க் கூறினான்.
அவன் முகத்திலும்,குரலிலும் இருந்தத் தீவிரம் புரிந்தது. ஆனால்…. இது என்னப் பைத்தியக்காரத்தனம்?, அவள் குறித்து அத்தனையும் அறிந்து கொண்ட பின்பும்… என்ன பேச்சு இது?
மறுப்பாய் ஆடிய தலையுடன்…. “ரஞ்சன்…” – என்ற அவளது வாயசைப்பில்… சகலமும் மறந்து, அதிவேகத்தில் நெருங்கியவன், அவளை முட்டி நின்றான்.
“நீ என் பேரைச் சொல்லனும்ன்னு தான் நான் இவ்ளோ நேரமாக் காத்திட்டிருந்தேன் பல்லவி… you know, how I feel rightnow?” என முணுமுணுத்தவனின் இதழ்கள் அவள் நெற்றி உரசியது.
“divine பல்லவி. It is pure divine” என்றவனின் வலக்கை விரல்கள், அவளது இடக்கை விரல்களோடு.. முழுதாய்ப் பிணைந்து இறுக்கிக் கொண்டிருந்தது.
அன்று அவளது மூச்சுக்காற்றின் வெப்பத்தில் தகித்த மார்பு, இன்று பனிமலையாய்க் குளிர்வது போலிருந்தது.
சிட்னி நகரின் இருபது டிகிரி வெயில் கூட.. அவனது நெருக்கத்தின் விளைவால்.. அதிகமாய் வியர்வையைச் சுரக்கச் செய்தது அவளுக்கு.
அண்ணார்ந்து நேர்ப்பார்வையாய் அவனைப் பார்த்தவாறு எதுவுமே புரியாது நின்றவளிடம்… புன்னகைத்து அவள் கன்னம் பற்றியவன்,
“நீ எப்பவும் என் கண்ணைப் பார்க்குற பல்லவி! தயக்கம்,கூச்சமெதுவும் இல்லாம.. ரொம்ப.. அழுத்தமா நேர்ப்பார்வையா பார்த்து… என்னைப் பயப்பட வைக்குற...” எனக் கூறி… மெல்ல அவள் நெற்றியில் தன் நாசியை உரசி,
“க்ளோஸ் யுவர் ஐஸ் பல்லவி” என்றான் கரகரத்தக் குரலில்.
அவன் முகம் முழுக்கப் பரவிக் கிடக்கும் மயக்கத்தையும்,கிறக்கத்தையும்… அதைத் தாண்டிய உரிமையையும்.. ‘இது எப்படி சாத்தியம்’ எனக் குழம்பியப் பார்வை பார்த்தவாறே நின்றவளைக் கண்டுப் புன்னகை நீள…. “நீ கடைசி வரை குழப்பத்துலேயே தான் இருக்கப் போற பல்லவி” என்று விட்டு, “இப்போ நீ…. உன் கண்ணை மூடியே ஆகனும் பல்லவி…” என்றவன்… யோசிக்காது…. குனிந்து… அவள் இதழ்களுக்குத் தன் புன்னகையைப் பகிர்ந்தளித்தான்.
அதிர்ச்சியையோ,ஆச்சரியத்தையோப் பிரதிபலிக்காது… சிந்திக்கும் சக்தியிழந்து.. பழுப்பு விழி முழுக்க…. மலைத்தப் பார்வையோடு… மங்குணியாய்த் தன் கைகளுக்குள் நின்றவளின் மீது, தொடர்ப்புன்னகையுடன்… மீண்டும் மீண்டும் பதிந்த… அவன் முத்தங்களிலிருந்து… இந்த ஜென்மத்தில் அவள் இதழ்களுக்கு.. விடுதலை கிட்டுமெனத் தோன்றவில்லை!!
சில வருடங்களுக்குப் பிறகு….
‘I’m home’ – என வாட்ஸ் ஆப்பில்.. ‘kanmani’ என்றிருந்த எண்ணிற்கு.. இடது கையால் மெசேஜ் டைப் செய்தவாறு.. தன் வீட்டின் digital door lock-ல் 2408 என க்ளிக்கிக் கொண்டிருந்தான் பிரஜரஞ்சன்.
கதவு திறந்ததும், ‘bow vow’ எனக் குரைத்தபடிக் காலைச் சுற்றி வந்த bulldog-ஐக் கொஞ்சி விட்டு.. ஹாலைக் கடந்து உள்ளே வந்தவன், எதிரிலிருந்த கிட்சனில்.. லாப்டாப்பின் முன்னே, கண்ணாடி அணிந்திருந்த பழுப்புக் கண்களிரெண்டுத் தீவிரமாய் வேலை பார்த்தபடி அமர்ந்திருப்பது கண்டு..
“ஹேய்ய்ய் நீ வீட்ல தான் இருக்கியா?, எப்போ வந்த? சொல்லியிருந்தா நானும் சீக்கிரம் வந்திருப்பேன்ல?” – என்றவாறே அவளைத் தாண்டிச் சென்றுக் கிட்சன் சிங்க்கில் கைகளைக் கழுவி விட்டு அருகே வந்தான்.
“எப்போ வந்த பல்லவி?”
“மார்னிங் மீட்டிங் முடிஞ்சதுமே வந்துட்டேன்” – லாப்டாப்பில் பார்வையைப் பதித்தவாறே பதில் கூறியவளின் குரல் இன்னமும் ஒல்லியாகத் தானிருந்தது.
“அதை வீட்ல இருந்தே அட்டெண்ட் பண்ணக் கூடாதாமா?, ஏன் அலைய வைக்குறாங்க?”
“ப்ச், 2 வீக்ஸ் தான?, அப்புறம் நான் 3 மந்த்ஸ் லீவ்ல போயிடுவேன். அதான் இவ்ளோ பிரஷர்” – என்றவள் கண்ணாடியைக் கழட்டி விட்டுக் கண்களைத் தேய்த்துக் கொள்ள… அவள் கைகளை விலக்கி.. நெற்றியை அழுத்தி விட்டான் அவன்.
கண் மூடி… அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்தவள், பின் விழிகளைத் திறந்து..
“உங்களுக்கு டயர்ட்-ஆ இல்லையா?” எனக் கேட்டாள்.
“இருக்கு”
“அப்டின்னா… coffee??” – ஆர்வம் சொட்ட வினவியவளை முறைத்து…
“வேண்டாம், நானும் ஃப்ரூட் ஜூஸே குடிச்சுக்கிறேன்” – என்று அவன் கூறியதும்.. உதடு பிதுக்கியவள்.. கணினியின் புறம் திரும்பிக் கொள்ள… மெல்லிய சிரிப்புடன் நகர்ந்தவன்.. சில நொடிகளில் அவள் முன்பு காஃபி கப்பை வைத்தான்.
“ரெண்டே சிப் தான் பல்லவி” – ஸ்ட்ரிக்டாய் ஒலித்த அவன் குரலில் மெல்லப் புன்னகைத்தவள்,
“நான் கேட்கவே இல்லையே” எனக் கூற..
“கேட்காட்டியும், பல்லவிக்கு என்ன வேணும்ன்னு பல்லவியோட ரஞ்சனுக்குத் தெரியும்” என்றான்.
பெரிதாய்ப் புருவம் தூக்கி உதட்டை வளைத்தவள், அவன் சொன்னது போல இரண்டு சிப் அருந்தி விட்டுக் கப்பை அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டவன்,
“ஸ்டேஜ் டான்சர் ஆகனும், டான்ஸ் க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணனும்ன்னு என்னன்னவோ சொன்ன?, ஆனா.. இன்னும்.. இந்தப் பொட்டியைத் தட்டிட்டுக் காலத்தை ஓட்டிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“Be practical பல்லவி….!” – என அவனைப் போலவே சொல்லிக் காட்டியவள், “நீங்க சொன்னது வார்த்தைகள் தான்! Passion-ஐ profession-ஆக மாத்திக்கிற interest எல்லாம் எனக்கு என்னைக்குமே கிடையாது! என் profession-ல நான் expert-ஆ இருக்கேன். ஆனா.. டான்ஸ்ல கத்துக்குட்டி தான்! எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். அதுக்கெல்லாம் எனக்குப் பொறுமையிருக்கிறதாத் தோணல! So, அது passion-ஆ மட்டும் இருக்கட்டும்!” எனக்கூறி “அதான்… அடிக்கடி உங்கக் கூட டான்ஸ் ஆடுறேனே! அதுவே எனக்குப் போதும்” என்றாள்.
அவள் பேசுவதைக் கேட்டபடியே அவளை வலம் வந்தவனின் விழிகள் பாதங்களில் பதிந்ததும், “கால் வீங்கியிருக்குப் பாரு பல்லவி… எவ்ளோ நேரமா இப்படி உட்கார்ந்திருக்க நீ?” எனக் கடிந்தவாறு, அவளை எழுப்பி நிறுத்தினான்.
8 மாதக் குழந்தை உள்ளே வளர்ந்து கொண்டிருப்பது, பார்த்தால் தெரியாத அளவிற்கு… அவளது ஒடிசலான தேகத்தில்.. குட்டியாயிருந்தது வயிறு.
நடந்து கொடுத்தபடி “வேலை பார்க்குற மும்முரத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டேன் போல” என்றவளின் முன்னே, சுடுதண்ணீர் நிரம்பிய டப்-ஐ வைத்தான் பிரஜன்.
அவள் அமர்ந்துக் கால்களைத் தண்ணீருக்குள் விட்டதும், தானும் கீழே அமர்ந்து.. நீருக்குள்ளிருந்த பாதங்களை அழுத்தி.. அவன் மசாஜ் செய்யத் துவங்க…
“அம்மா மார்னிங் கால் பண்ணியிருந்தாங்க” என்றாள்.
“என்னவாம்?” – தமிழில் அவனுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை.
“வழக்கம் போல தான்! எப்போ தாலி கட்டிக்கப் போற பல்லபி-ன்னு கேட்டாங்க”
“பல்….ல…பி-ன்னு கேட்டாங்களா?, ஹாஹாஹா, பெங்காலிஸ்க்கு ‘வி’ வராது பல்லவி!” என்றவன்,
“நீ என்ன சொன்ன?” எனக் கேட்டான்.
“எதுவும் சொல்லல. இந்த ரம்யா வேற அவங்களுக்கு சப்போர்ட்.”
“ப்ச்! எங்கம்மாவுக்கு வேற வேலையில்லை பல்லவி! அதான் மேரேஜை சட்டப்பூர்வமா ரெஜிஸ்டர் பண்ணியிருக்கோமே! அப்புறம், தாலியெல்லாம் எதுக்கு?, எங்களுக்கு அதுலலாம் நம்பிக்கையில்லைன்னு சொல்ல வேண்டியது தானே?”
“சண்டை போடுவாங்க”
“ஹேய், நீ எங்கம்மாவுக்குப் பயப்பட்றியா பல்லவி?”
“கொஞ்….சம்….”
“ஹாஹாஹா விடு! எங்கம்மா சும்மா சௌண்ட் மட்டும் தான் கொடுப்பாங்க! மத்தபடி, எப்பவும், நம்ம எண்ணங்களுக்கு.. நம்ம போக்குக்கு.. தடை சொல்ல மாட்டாங்க”
“ஐ நோ”
“சீக்கிரம் ஸ்விட்சர்லாண்ட்க்கு டிக்கெட் போட்டுக் கொடுத்துடலாம்! சமாதானம் ஆயிடுவாங்க. கூடவே ரம்யாவையும்,அவங்க ஹஸ்பெண்டையும் ஜாயின் பண்ணிக்க சொல்லிடலாம்”
‘அதுசரி’ என்பது போல் இதழ் விரித்தாள் அவள்.
“உனக்குத் தாலி செண்ட்டிமெண்ட் எல்லாம் இல்லையா?, எனக்குப் பெருசா objection இல்ல பல்லவி! உனக்கு வேணும்ன்னா.. சொல்லு”
“ம்ஹ்ம்… வேண்டாம்”
“ஏன்?”
“மறுக்கப்பட்டது, மறுக்கப்பட்டதாகவே இருக்கட்டுமே”
“பல்லவி….” – எரிச்சல் எட்டிப் பார்த்தது அவன் குரலில்.
“எனக்கும் அதுல பெருசா நம்பிக்கை இல்ல. காலத்துக்குமான அன்பையும்,அறத்தையும்… ஒரு கயிறு தீர்மானிச்சுடுமா என்ன?”
“ம்ஹ்ம்??, உன் அம்மாவோட அந்த ‘மாங்கல்ய தோஷம்’ மேட்டரை இன்னும் ஞாபகத்துல வைச்சிட்டிருக்கியா என்ன? அதனால தான் வேண்டாம்ன்னு சொல்றியா?”
“அதெல்லாம் இன்னும் என் நினைப்புல இருக்குன்னு நினைக்குறீங்களா?”
“பின்ன என்ன இருக்காமாம்….? பல்லவியோட நினைப்புல…?” – துறுதுறுக்கும் கண்களில் குறுகுறுப்போடு கேட்டவனுக்குப் பதில் கூறாது… விழி சுருக்கி அழகாய்ச் சிரித்தாள் அவள்.
“lawn-ல நடக்கலாமா?”
அவன் வினவியதும் எழுந்தவள், கால்களைத் துடைத்துக் கொண்டு அவனைத் தொடர்ந்தாள்.
இப்போது இருவரும் வசிப்பது ஆஸ்திரேலியாவின் Melbourne-ல் Williamstown எனப்படும் கடற்கரை நகரில்.
தூரத்தில் தெரிந்த கடற்பரப்பைக் கண்டவாறு, தன்னருகில் நடந்தவளைச் சுற்றி, அவள் இடையில் கரத்தைப் படர விட்டவன்,
“2 வீக்ஸ்ல எப்போ வேணாலும் பெய்ன் வரலாம் பல்லவி. அசட்டையா இருக்கக் கூடாது” என்றான்.
“மாட்டேன்! ப்ச், குழந்தை விஷயத்துல யாராவது அசட்டையா இருப்பாங்களா ரஞ்சன்?”
“பார்றா! குழந்தையே வேணாம்ன்னு சொன்ன பல்லவியா இது?, toxic mother ஆக மாறிடுவோமோன்ற பயம் இப்போ இல்லையாமா?”
“ம்ஹ்ம் நான் toxic mother-ஆகவே இருந்தாலும், easy going father-ஆ நீங்க இருக்கீங்களே! அப்புறம் என்ன?”
“அடேங்கப்பா! Finally… பல்லவி, ரஞ்சனை நம்புறாங்க!” – அங்கலாய்த்துக் கொண்டவனைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன் இதழ் மடக்கினாள்.
“சிரிக்குற நீ?” – எனப் பல்லைக்கடித்து, அவள் இடையை அழுந்தப்பற்றித் தன்னோடு இறுக்கினான் அவன்.
அன்று தன் விருப்பம் தெரிவித்து.. அதன் பின்.. அவளது மறுப்பைக் கிரகித்து, “இனி வாழ்நாள் முழுக்க உறுத்தலும், குற்ற உணர்வும் தான் தனக்குத் துணை என்றும், அதுவே தான் செய்தப் பிழைக்குத் தண்டனை என்றும், மகிழ்ச்சியான வாழ்வுக்கெல்லாம் தான் தகுதியானவள் இல்லை!”- என்றும் விலகிச் சென்று ஒடுங்கியவளின் பின்னே.. பல நாட்கள்.. பல மாதங்கள்… கெஞ்சி.. போராடி… ஒரு சைக்யாட்ரிஸ்ட்டிடம் தொடர்ந்து அவளைக் கவுன்சிலிங் பெறச் செய்து.. அவள் மனநிலையை… உடல்நிலையைத் தேற்றி… ஒரு வழியாக… அவளைத் தன்னுடன் வாழ ஒப்புக் கொள்ள வைத்திருந்தான்.
அதன் பின் ஒரு முத்தத்துக்குக் கெஞ்சி… பின் மொத்தமாய் அவளிடம் கிறங்கி… இப்போது வட்டமாய் வயிறு வீங்குமளவிற்கு… அவள் மீதான அவன் அன்பு ஓங்கி.. வளர்ந்து செழித்திருந்தது.
இப்போதும் ஒடுங்கித் தானிருக்கிறாள். பெரிதான கலகலப்போ, ஆர்ப்பரிப்போ இருக்காது. எப்போதும்.. ஆழ்கடலின் அமைதி தான்! அதுவே அவளது சுபாவமெனப் புரிந்திருந்தது அவனுக்கு. பிடித்துமிருந்தது.
அதற்காக மாற்றமே இல்லையென்றும் கூற முடியாது.
முகம் எப்போதும் மலர்ந்தேயிருக்கிறது. இதழில் நிரந்தரமாய் ஒரு புன்னகைக் குடி கொண்டிருக்கிறது. அது அடிக்கடி.. பிரஜரஞ்சனால் விரிந்து… 32 பற்களையும் காட்டுகிறது! அவனைக் காணும் போதெல்லாம் ஒளிரும் பழுப்புக் கண்கள், அவன் மீதான இணக்கத்தைச் சொல்கிறது. மற்றபடி பொறுமை,நிதானம்,அமைதி என பெரிதாக எதையும் express செய்யாத… ஒரு விதமான உயிரினம் அவள்.
அவன் 40 வரிகளில் பேசினால், 4 வரிகளில் பதில் கூறுவாள். அதில் நிச்சயம் நக்கலும்,நையாண்டியும் இருக்கும்!
முத்தமும் அப்படியே! அவன் அளிக்கும் 400 முத்தங்களில் 4 கூடத் திரும்பி வராது.
400 என்ன?, உன்னிடம் 4000 ஆகத் திரும்பப் பெறுவேன் என அவன் சபதமிட்டிருக்கிறான். அவளும் ‘ஆல் த பெஸ்ட்’ என்றிருக்கிறாள்.
அனைத்தையும் எண்ணியவாறு மெல்லிய சிரிப்புடன் தன் தோளில் சாய்ந்திருப்பவளின் கன்னம் பற்றித் தூக்கியவன், பழுப்பு விழியில் தெரிந்த அமைதியில்.. முகம் மாற… அவள் இதழ்களில் தன்னை அழுந்தப் பதித்து, மாலைக் காற்றில் மணம் பரப்புபவளிடம், “பல்லவிக்குப் பிடிக்குதா?” என்றான் மெல்லிய குரலில்.
நூறு,ஆயிரம்,லட்சம் முறை இதே கேள்வியைக் கேட்டிருக்கிறான். ஆனாலும்…
“என்னது?” – என்றாள் அவள்.
“இந்த ஊரு… இந்த வீடு… இந்த வாழ்க்கை..??”
நான்காவதாய் அவன் சொல்லாமல் விட்டதை உணர்ந்து.. சிரிப்பு வர, விழி சுருக்கி, “அவ்ளோ தானா?” என்றவளிடம்…
“அதுக்கு மேல கேட்க மாட்டேன்” – என்றான் அவன்.
“ம்ஹ்ம்?”
“கேட்டாலும், நீ பதில் சொல்லப் போறதில்ல”
புருவம் தூக்கிச் சிரித்தாள் அவள்.
மெல்ல அப்புன்னகையை தனக்குள் வாங்கிக் கொண்டு.. மயங்கியவன்…
“சொல்லாட்டியும் எனக்குத் தெரியும்.” என்றான்.
“என்னன்னு?”
“பல்லவிக்கு ரஞ்சனை ரொம்ப, ரொம்பப் பிடிக்கும்ன்னு” என முணுமுணுக்க… தன்னை நோக்கிக் குனிந்திருந்தவனின் பின்னந்தலையை வருடி…. மலர்ந்து புன்னகைத்தாள்.
அவள் வருடலில் கிறங்கி… அவளை இறுக அணைத்துக் கொண்டு.. பளீச்சிடும் பற்களுடன்.. வடிவாய் விரிந்த இதழ்களில்… மீண்டும்,மீண்டும் தொலைந்தவனை அவள் எப்போதும் போல.. விழி விரிய… மலைத்துப் பார்க்க…
“கண்ணை மூடு பல்லவி..” என அலுப்பாய்க் கூறியவாறு சிரிப்புடன் நெற்றி முட்டினான் அவன்.
மாட்டேன் எனத் தலையசைத்துத் தீவிரமாய் அவன் முகம் பார்த்தவளின் நாசியை உரசி…
“கருப்பா இருக்குற பொண்ணுங்களைப் பார்க்கவேக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா.. நீ…. குடித்தனமே நடத்த வைச்சுட்ட” – என்று சலித்துக் கொண்டவனை முறைத்தவளின் கழுத்தை வளைத்துத் தன் மீது சாய்த்துக் கொண்டவன்… அவள் சுருட்டை முடியை வருடிக் கொடுக்க…
அவன் விரல்களோடு சேர்ந்து மெல்ல வருடிச் சென்ற கடற்காற்றை உணர்ந்தவாறு, கண் மூடி இரு நொடிகள் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள், பின் அண்ணார்ந்து அவனை நோக்கி, “இப்படியே continue பண்ணீங்கன்னா, கொஞ்ச நேரத்துல நான் தூங்கிடுவேன்” என்றாள்.
“பரவாயில்ல தூங்கு”
“அப்போ தோய் மாச் (Doi maach-fish curry) இல்லையா இன்னிக்கு?” – அதிர்ச்சியாய் வினவியவளைக் கண்டுப் பெரிதாய் சிரித்து.. அவள் தோளில் கையிட்டு இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தவன்,
“நீங்க ரஞ்சனுக்கும்,அவன் சமையலுக்கும் மயங்கிப் போயிருக்கீங்கன்றதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டியக் கட்டாயத்துல இருக்கீங்க பல்லவி” எனக் கர்வமாய்க் கூவ,
“ஒத்துக்கலன்னா தோய் மாச் கிடைக்காதா?” – என வாரினாள் அவள்.
“பல்ல்ல்ல்லவி….”
“ஹாஹாஹா…”
“சிரிச்சது போதும். வந்து வெங்காயம் நறுக்கிக் கொடு..”
“நோ நோ… நோ.. அது மட்டும் வேண்டாம் ப்ளீஸ்” – அலறிக் கொண்டே வீட்டினுள் செல்பவளின் குரல்… ‘bow vow’-ன் சத்தத்தில் தேய்ந்து மறைந்தது.
அவர்கள் சென்ற பின்பும் கூட, அவர்களது அன்பும்,அறமும் பரவிக் கிடந்த அந்த lawn முழுதையும்.. கடலும்,காற்றும் பெரு மகிழ்ச்சியுடன் சுற்றிச் சூழ்ந்து கொண்டது.
******************முற்றும்*******************
