அத்தியாயம் - 6

நேரம் அதிகாலை 4.30.

பால்கனியில் நின்றபடி கருத்த அலைகளை வெறித்துக் கொண்டிருந்த பிரஜரஞ்சனின் கூர் விழிகள் சிவந்து சிறுத்திருந்தது.

அவன் பின்னே மேஜையின் மீது, தூக்கில் தொங்கிய டீ பேக்கைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலிக் கோப்பை, ஆஷ் ட்ரேயில் செத்துக் கிடந்த இரண்டு சிகரெட் துண்டுகள், ஆஆ-வெனப் பிளந்த வாயுடன் திறந்த நிலையில் லாப்டாப், அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தரையை அலங்கரித்திருந்த இண்டோர் ஸ்லிப்பர்கள் என அத்தனையும் அவனது உறக்கமில்லா இரவை பறைசாற்றியது.

மூன்றாவது சிகரெட்டைப் புகைத்தபடி தூரத்தில் ஒளிர்ந்தக் கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குக் கப்பல் டாஸ்மேனியா நகரை எட்டப் போவது புரிந்தது.

புகையும்,குளிரும் லொக்,லொக்கென இருமலை வரவழைக்க, எரிச்சலோடுக் கையிலிருந்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் விட்டெறிந்தான்.

புகைமூட்டத்தின் நடுவே திணறிக் கொண்டிருந்த அவனது நுரையீரல்களிரெண்டும் ஆஷ் ட்ரேயில் கிடந்த சிகரெட்டுக்களின் எண்ணிக்கையைக் கண்டு அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டி.. மேலும் இருமலைக் கொடுத்து அவனைப் பழி தீர்த்துக் கொண்டது.

எரிந்த நெஞ்சை நீவியவாறு இருமியபடியே நாற்காலியில் விழுந்து விழிகளை மூடினான்.

மனக்கண்ணில், நீச்சல் குளத்துக்குள் கால்களை விட்டபடி, விறைத்த முதுகுடன், அவன் முகம் பார்த்த சாம்பல் விழிகள், முன்னே வந்து எரிந்த நெஞ்சில் எண்ணெய் ஊற்ற,

‘ப்ச்’ – என சலித்தவாறு நெற்றியை நீவியவனின் கண்கள் பக்கத்து அறையை நோக்கியது.

உறங்குகிறாள் போலும்! அவன் கொடுத்த மாத்திரையை எடுத்திருக்க வேண்டும்! இழுத்து மூடப்பட்டிருந்தத் திரைச்சீலை அவளது ஆழ்ந்த நித்திரையைச் சொன்னது.

கையைக் கட்டிக் கொண்டு, கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து, ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தான்.

சோம்பலாய் நெட்டி முறித்த சாம்பல் மேகங்களோடு, விடியலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வானம்!

இரவு முழுக்கப் பொட்டுத் தூக்கமில்லை அவனுக்கு!

டீ,சிகரெட் தொடங்கி லாப்டாப்பில் ஆங்கிலப்படம் வரை பற்பல வித்தைகளைக் காட்டி விழிகளைக் களைப்படையச் செய்ய அவன் எடுத்த முயற்சிகளனைத்தும் மூளையின் தொடர் விழிப்பால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

மனதிலிருந்த உறுத்தல் மூளையிடம் சரணடைந்திருக்க வேண்டும். அது ஓயாத அறிவுரைகளுடன் அவனை ஓய்வடைய விடாதுத் தடுத்துக் கொண்டிருந்தது.

ஆம்! உறுத்தல் தான்!

அறிமுகமாகி மூன்றே நாட்களான, முன்னே,பின்னே தெரியாத பெண்ணை, தகாத வார்த்தைகளைக் கூறி அவமதித்ததுப் பெரிதாய் உறுத்தியது அவனுக்கு.

பொதுவாக அவன், இவ்வாறு சிந்திப்பவனே அல்ல!

ஆணாக இருப்பதாலேயே, தன்னை ‘ஜட்ஜ்’ பொசிஷனில் நிறுத்திக் கொண்டுப் பெண்களின் ஒழுக்கத்தை எடை போடும் சராசரி இந்திய ஆணின் மனநிலை அவனுக்கு என்றுமே இருந்ததில்லை.

ஒழுக்கம்,கற்பு என்கிற வார்த்தைக்களுக்கானப் பொறுப்பும்,விளக்கமும் பெண்ணிடம் மட்டும் தான் உள்ளது என்பது போலவும், அவள் ஒழுக்கமற்றுப் போனால் உலகம் ஒன்றுமில்லாததாகி விடும் எனவும் சின்னபுத்தியோடுப் பெண்களைத் தாழ்த்தி யோசிக்கும் நம் சமூகத்தின் கலாச்சாரப் புடுங்கிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவனே அல்ல.

அவன், ஆணையும்,பெண்ணையும் ஒரே தராசில் நிறுத்தி, இருவரையும் வெறும் மனித உயிர்களாக மட்டுமே பார்ப்பவன்!

பெண், ஆணை உடலளவில்,உள்ளத்தளவில் எத்தனை ஈர்க்கிறாளோ, அதே ஈர்ப்பை அவளும், ஆண் மீது கொண்டிருப்பாள் எனும் இயற்கை விதியை இயல்பாக ஏற்பவன்!

அவரவர் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ அவரவருக்கு உரிமையும்,சுதந்திரமும் இருக்கிறது. நாகரீக மாற்றத்திற்கேற்றார் போல் அடிக்கடி மாறும் ஒழுக்கநெறிகளின் மீது, கலாச்சாரத்தின் மீது, எது சரி,எது தவறு என்கிற கான்செப்ட்டின் மீதெல்லாம் அவனுக்கு ஈடுபாடிருந்ததில்லை.

ஆணுக்கும்,பெண்ணுக்குமிடையே இருவரது பரஸ்பர விருப்பத்தின் பேரில் நடக்கும் எதுவும், அது கூடலாக,ஊடலாக,பிரிதலாக,சேர்தலாக.. எதுவாக இருந்தாலும் சரி என்றே நம்புபவன்!

Casual sex,hypersexual,bisexual தொடங்கி lesbian,gay வரை எதன் மீதும் பெரிதாக அவனுக்கு எதிர்ப்பு இருந்ததில்லை.

அதற்காக வன்புணர்வு,கற்பழிப்பு,cheating,killing – போன்ற தண்டனைக்குரிய violence-கள் அத்தனையையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டுக் கடப்பவனும் அல்ல.

நண்பர்களிடையே ‘அவன் அவளை வைச்சிருக்கான்’ என்ற gossip-கள், கள்ளக்காதல் குறித்த ஜோக்குகள், மீம்கள் போன்று எங்கோ நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகக் கடந்து போகும் மனது, அதை உற்றாரிடையேக் காணும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உணர்ந்திருக்கிறான்.

அதற்காக, ஒரு ஒழுக்கக் கேட்டைக் காண்கையில், அதற்குப் பெண் தான் தூண்டுதல், பெண்ணாலேயே அது நிகழ்ந்ததெனப் பெண்ணை மட்டுமே தூற்றும் மட்டமான மனப்பாங்கை அவன் எப்போதும் வளர்த்துக் கொண்டதில்லை.

அப்படிப்பட்டவன், அவள் மீது அப்படியொரு வார்த்தையை விட்டெறிந்தது இப்போது தவறெனப் பட்டது.

முதலில், அவனுக்கென்ன உரிமை இருக்கிறது அவளைப் பழிக்க?

என்ன தகுதி இருக்கிறது அந்த வார்த்தையைச் சொல்லி நிந்திக்க? அவன் ஒன்றும் யோக்கியப்புடுங்கி இல்லையே!

18 வயதில் கொல்கத்தாவிலிருந்த போது, தேவ்ஜனியோடு கணித வகுப்பில் தொடங்கிய காதல், விக்டோரியா பேலஸில் விரல் கோர்த்துத் தொடர்ந்து, டார்ஜிலிங் ட்ரிப் வரை சென்று, மேற்படிப்பிற்காக வெளிநாடு வந்ததில் முடிந்து, ஒரு கட்டத்தில் மறந்தே போனது. அந்த வயதில் கல்யாணம் பற்றிய ஐடியா எல்லாம் கிடையாது அவனுக்கு.

25-ல் லண்டனிலிருந்த போது டெல்லிப் பெண் மஹிமாவுடன் கொண்டிருந்த காதல், அவன் தங்கியிருந்த அறையில் அடிக்கடி பானிபூரி டேட்டிங் என்ற பெயரில் அமர்க்களமாக வளர்ந்து, ‘என் வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க பிரஜன். I think he will be the best fit for me and my family’ என அவளாலேயே முடித்து வைக்கப்பட்டது. ஒரு வேளை அந்தக் காதல் தொடர்ந்திருந்தால், கல்யாணத்தில் முடிந்திருக்கலாம்.

30-ல் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி விட்டப் பிறகு, ஒலிவியா சார்லஸ் என்கிற டிவர்ஸியுடன் காதல். அது கல்யாணத்தில் முடிய வாய்ப்பில்லாமல் போனது as she was not ready to get committed with an Indian guy.

அதுவரை, ஏன் அதன் பிறகும் கூட அவனிடம் கல்யாணம் குடும்ப வாழ்க்கை மீது பெரிதான எதிர்ப்போ,ஆதரவோ இருந்ததில்லை.

Love,breakup,move on – என்பது போன்ற இக்கால வாழ்க்கை முறையை, உறுத்தல்கள் ஏதுமின்றி ஏற்றுக் கொண்டிருப்பவன். ஒரு செடியில் ஒரு முறை தான் பூ பூக்கும் என்பது அவனுக்கு செட் ஆகாத வாக்கியம்.

ஒரு முறை மட்டுமே பூத்து soulmates-களாக வாழும் தம்பதியினரைப் பார்த்திருக்கிறான். வாழ்த்தியிருக்கிறான். வணங்கியிருக்கிறான். ஆனால், அது அனைவருக்கும் சாத்தியமில்லை என்கிற உண்மையைப் புரிந்துமிருக்கிறான்.

தான் காதலித்த காலங்களில் தன் துணையாக இருந்தப் பெண்ணிடம் நல்லவனாக இருந்திருக்கிறான். பரஸ்பர அன்போடு, புரிதல்களோடு நேர்மையாகக் காதலித்திருக்கிறான். ‘இது ஒத்து வராது பிரஜன், இத்தோடு முடித்துக் கொள்வோமா’ எனக் கேட்ட போது கண்ணியமாக விடைபெற்றிருக்கிறான்.

இனி அன்னையின் கட்டாயத்தில் எவளையேனும் மணக்க நேர்ந்தால், அவள் virgin-ஆக இருக்க வேண்டுமென்கிற சராசரி இந்திய ஆணின் மட்டமான எதிர்பார்ப்பெதுவும் அவனுக்குக் கிடையாது. ஏனெனில் அவனே virgin கிடையாது. Virginity-ஐ வைத்து புனையப்படும் அரசியலை எல்லாம் மயிறாகக் கூட மதிக்காதவன்.

அவனைப் பொறுத்தவரை, ஆண்,பெண் ஈர்ப்பு,லவ்,செக்ஸ் அனைத்தும் வெகு சாதாரணமான மனித உணர்வு! ‘It’s a pure thing’ – என glorify செய்பவனுமில்லை, அதே நேரம் வெறும் ‘lust’ என அவ்வுணர்வை மட்டப்படுத்தி ஒதுக்குபவனுமில்லை! அலட்டல் இல்லாது கடப்பவனாகத் தான் இருந்திருக்கிறான்.

இவ்வளவு ஏன்?, இங்கு, முதலில் இந்த சுருட்டை முடியின் மீது ஆர்வம் கொண்டு, அவளை நோட்டம் விட்டவாறு திரிந்தது கூட, வேலை,வெட்டி ஏதுமின்றி bore ஆகக் கடக்கப் போகும் 7 நாள் ட்ரிப்பை சுவாரசியமாக்கிக் கொள்ளும் எண்ணம் தான்!

ஆனால்… தான் வளர்த்துக் குவித்துத் தேத்தி வைத்திருந்த இத்தனை சித்தாந்தங்களைத் தாண்டி எப்படி,எதனால்… அவனுக்குள்ளிருக்கும் சராசரி இந்திய ஆணின் எண்ண வடிவம் வெளி வந்ததெனப் புரியவில்லை.

அவளை மட்டுமே குற்றம் சொல்லிக் கத்தி விட்டு வந்தது இப்போது சின்னத்தனமாகப் பட்டது. தான் அப்படிக் குறுகிய மனப்பான்மை கொண்டவன் அல்ல என மனசாட்சியிடம் வாதம் செய்ய வேண்டியிருந்தது.

After all, மனித மனம்! முக்குணங்களையும் உள்ளடக்கியது. தப்பும்,தவறும் இயல்பானது! அதில் ஆண் என்ன, பெண் என்ன!

தன்னைத் தானேத் திட்டிக் கொண்டு, அமர்ந்திருந்த நாற்காலியில் பின்னந்தலையை டம்,டம் என இடித்துக் கொண்டிருந்தவன் விழி திறந்து போது, விடிந்திருந்தது.

கண் கூசச் செய்த சூரியனை மீறி, வாய் கொட்டாவியை வெளியிட, நேரே சென்று படுக்கையில் விழுந்து உறங்கிப் போனவனுக்குக் கனவெல்லாம், கருப்பு உருவம் தான்!

ன்று கப்பல் டாஸ்மேனியா நகரில் ஹால்ட் அடித்திருந்தது. கப்பலிலிருந்த மக்கள் கூட்டம் அந்நகரை சுற்றிப் பார்க்கக் கிளம்பியிருக்க, காலியாக இருந்த கோஸ்டல் கிட்சனில் அமர்ந்திருந்தாள் பல்லவி.

அரைகுறையாகக் கொறிக்கப்பட்டிருந்த உணவுத் தட்டுக்கள், அவளைக் கவலையுடன் பார்த்தபடி மேஜையில் பரவிக் கிடந்தது.

பிய்ந்த தோலுடன் வரண்டு காணப்பட்ட வெளுத்த உதடுகள், நல்ல உறக்கத்தால் உப்பியிருந்த முகம், நீள் விழியில் சுருக்கமென அலைபேசியைக் கையில் ஏந்தியிருந்தவளின் விரல்கள்,

“எங்க இருக்கன்னு தயவு செஞ்சு சொல்லு பல்லவி. நான் யார்க்கிட்டயும் உன் இருப்பிடத்தைப் பகிர்ந்துக்கப் போறதில்ல, உன் சிஸ்டர் உட்பட”

-என்றனுப்பியிருந்தத் தன் தோழி ரம்யாவிற்கு,

“Atlassian, Sydney, Australia.” – எனத் தான் வேலைக்கு சேரவிருக்கும் நிறுவனத்தின் பெயரையும், தான் தங்கப் போகும் ஊரின் பெயரையும் கூறி சுருக்கமானப் பதில் மெசேஜை டைப் செய்து கொண்டிருந்தது.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு ரம்யாவிடமிருந்து,

“she is with her parents now பல்லவி. ஏற்கனவே அவங்கப்பா பிசினஸை இந்தப் பொண்ணு தான் பார்த்துட்டிருந்துச்சாம். அதனால அவங்கப்பா,அம்மா ஊருக்கே move ஆயிடுச்சு.”

“…………”

“அந்தப் பொண்ணோட அப்பா, கார்த்திக் மேல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. பட், கார்த்திக்கோட அம்மா, அந்தப் பொண்ணு கால்ல விழுந்து ட்ராமா போட்டு சமரசம் பேசி, தன் பையனைக் காப்பாத்தியிருக்காங்க.”

“…………”

“you know பல்லவி, கார்த்திக்கோட பொண்ணு அவனைப் பக்கத்துலக் கூட சேர்க்கலயாம்.”

“…………”

“பெத்தப் பொண்ணாலயே அப்பன்-ன்ற அடையாளம் அழிக்கப்பட்டத் துக்கத்துல அவன் பைத்தியக்காரனா சுத்திட்டிருக்கிறதாக் கேள்விப்பட்டேன். இரக்கமே வரல. He deserves it. Completely. “

“………….”

“அவனோட தப்புக்குத் தண்டனையா, அவன் ஒட்டு மொத்தக் குடும்பமும் அவனை ஒதுக்கி, நிராகரிச்சுத் தனிமைப் படுத்தி, பைத்தியக்காரனாக்கிடுச்சு.”

“…………”

“உன்னோடத் தப்புக்கு என்ன தண்டனை பல்லவி??”

-அந்த மெசேஜைத் தடவிய பல்லவியின் இதழ்கள், அதை ரிபீட் செய்து,

‘என்ன தண்டனை?’ – என முணுமுணுத்த வேளை,

அவள் முன்னே crème brulee நிறைந்த ramekin ஒன்று வைக்கப்பட்டது.

அனிச்சையாய் நிமிர்ந்தவள் கண்டது, அவளையே பார்த்தபடித் தன் கையில் ஒரு ramekin-உடன் நின்றிருந்த பிரஜரஞ்சனைத் தான்.

தன்னை நேர் கொண்டு நோக்கும் பழுப்பு விழிகளை ஒரு நொடி அவதானித்து விட்டுப் பின், மறு கையிலிருந்த dessert spoon-களில் ஒன்றை அவள் புறம் நீட்டி, அவளெதிரே அமர்ந்தான்.

அலட்டிக் கொள்ளாது தன்னுடையதை உண்டவனை அவள் பார்த்தபடி இருக்க, நிமிர்ந்தவன்,

“சாப்பிடு பல்லவி…” என்றான் அமைதியான குரலில்.

மேற்கின் மடியில் சூரியன் தலை சாய்த்து விட்ட, மங்கிய மாலை நேரம். செந்நிற வானம், கடலில் பிரதிபலித்ததில், அலைகள் ஊதா நிறத்தில் உருமாறியிருந்தது.

டாஸ்மேனியா நகரிலிருந்து புறப்பட்டிருந்தக் கப்பல் மெல்ல மிதந்து கொண்டிருக்க, north star என்றழைக்கப்படும் தட்டை வடிவப் பெட்டகத்துக்குள் நின்றபடி செவ்வானத்தை வெறித்திருந்தனர் பிரஜரஞ்சனும் பல்லவியும்.

கப்பலிலிருந்து 300 அடி உயரத்தில், க்ரேன் போன்ற அமைப்பின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் அப்பெட்டகமானது, 360 டிகிரியில், ஒரு குறிப்பிட்ட தூரத்தை வட்டமாய்ச் சுற்றி வரும்.

அப்பெட்டகத்துக்குள் நின்று கொண்டு, கப்பலின் ஒட்டு மொத்த நீள,அகலத்தையும், நீலக்கடலின் பெரும்பரப்பையும், 300 அடி உயரத்திலிருந்துக் காணலாம்.

கண்ணாடியின் புறம் நின்று, ஒளியிழந்து கொண்டிருக்கும் சூரியனையே பார்த்திருந்தவளின் எதிரே, அவளது பின் கழுத்தில் இட்லிப்பூவாய் பூத்திருந்த சுருட்டைமுடியைக் கண்டவாறு, சாய்ந்து நின்றிருந்த பிரஜரஞ்சன்,

“ஏன்… பல்லவி?” – என்றான் நிதானமான குரலில்.

அவன் கேள்வி எட்டி விட்டதன் பொருளாய் நீள் விழிகள் நகர்ந்து.. மெல்ல பக்கவாட்டில் திரும்பியது.

“you deserved a better life பல்லவி”

“………”

“ஏன்…… பல்லவி…..?” – அடக்கிப் பார்த்தும் முடியாமல், குரல் ஆதங்கமாய் அதிர்ந்தது அவனுக்கு.

செக்கச் சிவந்த வானத்தை வெறித்ததன் விளைவால், அரக்கு நிறம் பெற்றிருந்த அவள் விழிமணிகள், அவனது கேள்வி உருவாக்கிய அதிகப்படியான ஈரத்தில் நனைந்துக் கடலலையின் ஊதா நிறத்தைப் பிரதிபலித்தது.

ஏன்…. முணுமுணுத்தபடிப் புருவம் சுருக்கித் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள், பின்,

“அம்மா மறைவுக்குப் பிறகு, அவங்க ஆசைக்கு வாங்குன வீடு யாருமில்லாம அநாதையா நின்னப்போ, அதுக்குத் துணையா இருந்தது நான் மட்டும் தான்! அந்த வீட்டோட சூனியமான வெறுமையும், தனிமையும் எனக்கு எந்த விதத்துலயும் ஆதரவோ, அடைக்கலமோ கொடுக்கல. பல நாள், தூக்கத்தைத் திருடிக்கிட்டு என்னைத் திண்டாட வைச்சுச்சு. சில நாள், பசியை மழுங்கடிச்சு, என்னைப் பட்டினியா திரிய வைச்சுச்சு. ஒரு நாள் மொத்தமா என்னை மயக்கடிச்சு, கொல்லவும் பார்த்துச்சு. வேற வழியேயில்லாம, நான் விடை கொடுத்த போது, கொஞ்சமும் உறுத்தலின்றி, வெறுப்போடு என்னை வெளியே உமிழ்ந்துத் தள்ளுச்சு!”

“……….”

– பைத்தியமா இவள்? என்று மனம் இகழ்ந்தாலும், இது ஆலோசனைக்குட்படுத்த வேண்டிய மன அழுத்தம் என அவன் மூளை அறிவுரை கூறியது.

“மனசு, பொருந்தாதக் கண்ணாடியை அணிஞ்சிட்டிருக்கிற மாதிரி, எதையும் தெளிவாகப் பார்க்க முடியாம, முழு நேரமும் குழப்பத்துலயே இருந்தது! எரிமலைக்கு நடுவுல நிற்கிற போல, ஒவ்வொரு நிமிஷமும் உடல் அதிகபட்ச அனலையும்,வெப்பத்தையும் உணர்ந்துக்கிட்டே இருந்தது.

ஆதங்கம்,தன்னிரக்கம், இயலாமைன்னு அத்தனை எதிர்மறை எண்ணங்களும் உள்ளுக்குள்ளக் குடியிருந்து, இதயத்துல ஒரு வெற்றிடத்தை உருவாக்குச்சு. அது மெல்ல,மெல்ல விரிஞ்சுப் பள்ளமாகுற வரைக் காலம் ஒன்று.. இரண்டு.. மூன்றுன்னு வருஷக் கணக்கா என்னைக் கடத்திட்டுப் போச்சு.

இவ்ளோ தான் என் மனத்திண்மை, இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன்னு வாய் விட்டுச் சொல்லி உதவி கேட்க எனக்கு வரல. ஏன்னா, மனசு விட்டுப் பழகுறதெல்லாம், என் வாழ்க்கையில ஒரு நிலையில் வழக்கொழிஞ்சு போச்சு.

உள்ளே உடைஞ்சு, நொறுங்கிக் கிடக்காளோன்னு என் கண்ணைப் பார்த்து, என் சிதறல்களைக் கண்டு கொள்ளுமளவிற்கு யாருக்கும் ஆர்வமிருக்கல. நேரமுமிருக்கல.

அழுத்தம் தந்த இறுக்கம், கழுத்தை நெரிக்குற சமயம், கலங்கச் சொல்லிக் காந்துறக் கண்களோட கதறலைத் தவிர்க்க முடியாத நேரம், நான் மொத்தமா ஒடுங்கி ஒதுங்கிப் போய் நிற்குறதைப் பார்த்து என் ஃப்ரண்டு ரம்யா இரக்கப்பட்டு, கல்யாணம் தான் என் தனிமைக்கான நிரந்தரத் தீர்வுன்னு அறிவுரை சொன்னா.”

“…………”

“ஆனா… எப்படி?, யாரைக் கல்யாணம் பண்ணிக்கனும்?, எனக்குத் தெரிந்திருக்கல”

“…………”

“உடன் பிறந்தவளுக்குப் பணத் தேவை இருந்த அளவிற்கு, தங்கையோடத் தேவை இருக்கல. பொறுப்பெடுத்துப் பார்க்கப் பாசமான உறவினர்கள் யாருமில்ல! அதனால, என் சிஸ்டரோடக் கோபப்பட்டு,போராடிப் பார்த்துட்டு, ரம்யாவே முன் வந்து மேட்ரிமோனியல்ல ரெஜிஸ்டர் செஞ்சா.”

“……….”

“இந்த சமூகத்துல ‘எலிஜிபிள் மாப்பிள்ளைகள்’-ன்னு பேர் வாங்குன நான்கைந்து பேர் என்னை நேர்ல சந்திச்சாங்க. என் வயசு, வேலை, சம்பாத்தியம், சேவிங்ஸ், வீடு எல்லாம் விசாரிச்சுக்கிட்டாங்க. அம்மா,அப்பா இல்லாத அநாதையான என் நிலைமைக்காக இரக்கப் பட்டாங்க, வருத்தம் தெரிவிச்சாங்க. அப்புறம் அவங்களுக்கானக் குடும்பம்,பொறுப்பு, கடமைகளைப் பத்தி கொஞ்சம்! பிறகு future குறித்த calculative-ஆன சில டிஸ்கஷன்கள்! அவ்வளவு தான்! ஒரு பிசினஸ் டாக் மாதிரி! ரம்யாவுக்கு அவங்க பேசிட்டுப் போன எல்லாமே சரின்னு பட்டதாகத் தான் சொன்னா. 30 வயசுக்கு மேல எல்லாரும் இப்படித் தான் யோசிப்பாங்கன்னு சொன்னா. ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்! ஆனா…..”

“……..”

“நான்…. நான் சின்ன வயசுல இருந்து கனவு கண்டு ஏங்குனேனே, ஒரு ஆணோட அன்பு,பாசம்,அக்கறை, இருப்பு.. அதெல்லாம்… அதெல்லாம் எப்போ எனக்குக் கிடைக்குறது?, நான் யார்க்கிட்ட எதிர்பார்க்குறது?, மறுபடி நிறையக் குழப்பம், தெளிவின்மை!”

“……….”

“இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் haunted house-ஆ சித்தரிச்சு ஒரு வித anxiety-லயே இருந்த மனசுக்கு, பயம்,பதட்டம்ன்றது நிரந்தர உணர்வாகிட்டதால, நடக்குற விஷயங்கள் சரியா,தவறான்னு ஆராய்ஞ்சு பார்த்துத் தெளிவான நிலையிலிருந்து எதையும் ஏற்றுக் கொள்கிற சக்தியை இழந்திருந்துச்சு. ரம்யாவோட பேச்சுக்கு முரண்பட்டுச்சு. இது வேணாம்ன்னு ஒதுங்குச்சு. பிறகு, என் கூட சண்டை போட்டுப் பார்த்துக் கடைசில எப்படியோ போ-ன்னு அவளும் விட்டுட்டா.”

“……..”

“சாய்ந்து கொள்ளத் தோள், ஏந்திக் கொள்ள மார்பு, ஆதரவா ஒரு அணைப்புன்னு ஒரு காலத்துல என் எதிர்பார்ப்புகளா இருந்த அத்தனையையும் நான், எட்டாக்கனி, பேராசைகள்-ன்ற இடத்துல நிறுத்தி, இனி அதெல்லாம் எனக்குக் கிடைக்கவே போறதில்லன்னு முடிவுக்கு வந்துட்டேன். ஆனா..“

“……….”

“விடாம எட்டித் தள்ளி, தூரமா,ஆழமா இழுத்துட்டுப் போகிற அலைகளுக்கிடையே மாட்டித் தத்தளிச்சு, மூச்சுத் திணற முழுசா மூழ்குன பிறகு, கடைசி கட்ட முயற்சியாகக் கைகளிரெண்டையும் உதவிக்காக தண்ணிக்கு வெளியே நீட்டுவோமே!, நான் அந்த நிலையில் இருந்தேன். என் கைகளை இறுக்கமா பற்றிக் கொள்ளப் பத்து விரல்கள் மட்டுமே தேவைப்பட்டது எனக்கு.”

“ ’அந்த’ விரல்கள் எனக்குக் கிடைச்சது. என் கைகளைப் பற்றியது…! தத்தளிச்சுக்கிட்டிருந்த நானும் அந்த விரல்களை இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டேன்.”

-அதுவரை அவள் பேசியதை சுருக்கியப் புருவங்களுடன் அமைதியாய் வினவியவன், அவள் நிறுத்தியதும் விடைத்த மூக்கின் வழி, ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப் என அனல் மூச்சை வெளியிட்டுத் தன் எரிச்சலைக் காட்டி,

“நீ தேர்ந்தெடுத்த அழகான வார்த்தைகள் அத்தனையும் உன் பேச்சு வளத்தைத் தான் காட்டுது பல்லவி. மத்தபடி, இப்படிக் கவிதையாப் பேசி கள்ளக்காதலையெல்லாம் புனிதப்படுத்துனா, நாடு தாங்காது” என்றான் கடுப்புடன்.

“…………” – அவளுக்கும் அது தெரிந்திருந்தது. புரிந்துமிருந்தது.

பாதி மறைந்திருந்த சூரியனின் செம்மஞ்சள் கதிர்கள், அவர்களிருவரும் நின்றிருந்த பெட்டகத்தைத் துளைத்து உள்ளே வர… துரு (rust) நிறத்தில் மாறும் அவள் கண்களைக் கண்டபடி,

“எதனால…….. ‘அவன்’ பல்லவி?” – என்று வினவினான்.

ஏகக் கடுப்பும், எரிச்சலுமாய்க் கேட்டவனின் குரலில் இருந்ததெல்லாம் ‘இப்படி வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாளே’ என்கிற ஆதங்கம் மட்டுமே.

அவன் கேள்வியில் எச்சில் விழுங்கி, தொண்டைக்குழி ஏறி,இறங்க வரண்ட உதட்டை ஈரப்படுத்தியவள், புருவம் சுருக்கி,

“என்னைச் சுற்றிக் கீறி,பிராண்டிக் காயம் தரக் காத்திருந்தக் கோர விரல்களுக்கு மத்தியில, அந்த விரல்கள், என்னால மறுக்கவே முடியாத மென்மை மொழியைப் பேசியது.

அக்கறை, அன்பு,ஆதரவு,அரவணைப்புன்னு என் தனிமைக்குப் பெருந்தேவையாயிருந்த அத்தனை உணர்வுகளையும் ஆர்ப்பரிப்பில்லாம, அமைதியா என் கண் முன்னேக் கடைப்பரப்பி வைச்சது.

கையும்,காலும் கட்டப்பட்டுக் கொடும்பசியில தவிச்சுக் கிடந்தக் கோழையான எனக்கு, அறுசுவையும் கலந்த உணவு, பெரிய கவளமாக, என் வாயருகே, பரிவோடு நீட்டப்பட்ட போது, வேண்டாம்ன்னு சொல்ல வக்கிருக்கல.” என்றாள்.

ப்ளடி….. பரிவு! அன்பு! அவள் உபயோக்கிக்கும் இந்த வார்த்தைகள் அவனுக்கு அர்த்தமற்றதாய்த் தோன்றியது!, என்ன பெரிய அன்பு! மயிறு! அது கிடைக்காமலேயே வாழ்ந்து மடிய முடியாதா?, இந்த ஒரு புள்ளியில், பெண்கள் ஏன் இத்தனை பலவீனமானவர்களாக இருக்கிறார்கள்? தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்ளக் கூடத் தயங்காதவர்களாக? ஷ்ஷ்ஷ்ஷ்….!

“வாழ்க்கை உனக்கு வசந்தத்தை அள்ளிக் கொடுக்கக் காத்திருந்திருக்கலாம் பல்லவி. நீ அவசரப்பட்டுட்ட” – பெருமூச்சை வெளியிட்டபடி, அந்நொடி அவ்வளவு தான் சொல்ல முடிந்தது அவனால்.

அவள் ‘ஆம்’ போடவில்லை. மாறாக,

“சீழ் பிடிச்சு வீச்சமடிச்சக் காயம் கொடுத்த வலி, உயிருக்கு விடுதலை கிடைச்சாப் போதும்ன்னு தான் நினைச்சது. வசந்தத்தோட வாசனைக்கெல்லாம் அது கனவு காணல” – என்றாள்.

-அவள் வெளிப்படுத்தும் இது போன்ற ஆழமான உணர்வுகள் அத்தனையும் வயிற்றெரிச்சலையும், உலகமே அவளுக்கு எதிராய் நின்று, அவளை வஞ்சிப்பது போன்ற பிரம்மையையும் ‘ஏன் இப்படி’ என்கிற ஆதங்கத்தையும் தான் அதிகம் ஏற்படுத்தியது.

கண் முன்னே நிற்பவளும், அவள் நிலையும், அவள் பேச்சும் மன அழுத்தத்தைக் கொடுத்தது அவனுக்கு. அவளைப் பார்ப்பது கூட ஸ்ட்ரெஸ்ஸைக் கொடுக்க, சரியான ‘stress godown’ – என முணுமுணுத்தவாறுப் பார்வையை அவளிலிருந்துத் திருப்பினான் அவன்.

முற்றிலும் மறைந்து விட்ட சூரியனின் தடத்தை விடாது பற்றிக் கொண்டு வானம் இளஞ்சிவப்பாய்க் காட்சியளித்தது இப்போது.

மௌனமாய் ஏதோ யோசித்தபடி வானில் தோன்றும் நிற மாற்றங்களைக் கவனித்திருந்தவனுக்கு, உள்ளே ஒரு உறுத்தல்.

உறுத்தலை உமிழச் சொன்னது உள்ளம். உமிழ்ந்தான்.

“உன்னோட தேவை அன்பு,பாசம்,ஆதரவு,அரவணைப்பு…. சரி! அவனோட தேவை என்ன பல்லவி?”

கேட்கும் போதே அது, என்னவாக இருந்திருக்குமெனப் புரிந்தது. ஆனாலும் வினவினான்.

“………..”

“காசு,பணம்??, செக்ஸ்??” – அவள் மௌனம் அளித்த அதிகபட்சக் கோபத்தில் அவன் குரல் கரகரத்தது.

“…….” – கருத்துச் சிறுத்த முகம், கண் சிமிட்டாது சிலையாய் நின்றது.

“ரெண்டும் தான் இல்ல?”

“………..” – அவள் அமைதி அவனை வெறி ஏற்றி உள்ளிருந்த எரிச்சலை, எரிமலையாகவே உருமாற்றியது.

‘F*******G Bastard’ – விடைத்த மூக்குடன் வாய் விட்டு முணுமுணுத்துப் பிடித்திருந்தக் கம்பியை ஆத்திரமாய்க் குத்தினான்.

“கவிதையான உன் வார்த்தைகளெல்லாம் ஒரு அழகானக் காதலை பேருவகையோட சொல்லியிருக்கும் பல்லவி, இது அத்தனையும் சரியான ஆளைக் குறிக்கிறதா இருந்திருந்தா!” – பற்கள் நறநறக்க வார்த்தைகளைத் துப்பியது அவன் இதழ்கள்.

“………….”

-அவளது மௌனம் மேலும் வெறியேற்ற, அவள் புறம் நோக்கி ஒரு எட்டு வைத்து,

“இது…. இது…. தப்புன்னு… ஒரு நொடி கூடத் தெரியவே இல்லையா பல்லவி?” – என அடிக்குரலில் வினவினான் அவன்.

“தெரிஞ்சது. ஒவ்வொரு நொடியும் தெரிஞ்சது!” – தழைந்துத் தரையில் விழுந்தது அவள் குரல்.

“……” – முட்டாள்ப் பெண்! படித்து, சம்பாதனை செய்து, சுயமாய் நின்று ஜெயித்து என்ன பிரயோஜனம்?, வெட்டப்பட வேண்டிய தழைகளுக்குள், தலையைக் கொடுத்து விட்டு, முண்டமாய் நிற்கிறாளே!

“வானளவு கொழுந்து விட்டுப் பற்றி எரிஞ்சுட்டிருக்கிற நெருப்புல குதிக்கிறேன்னு புரிஞ்சே தான் குதிச்சேன். வெந்து,கருகி, சாம்பலாகி.. தடமில்லாம.. உருத்தெரியாம.. அழிஞ்சு போவேன்னு தெரியும்.” என்றவள், காற்றாகிப் போன குரலில்..

“ஆனா…. ஆனா…. என் கூடவே இன்னும் 3 பேரோட சதையை சிதையில இழுத்து விட்ருக்கேன்றதை அப்போ நான் உணரல” என்றவளின் உதடுகள் கோணிக் கொள்ள, உடல் கிடுகிடுவென நடுங்க, கம்பியைப் பற்றியிருந்த அவள் விரல்கள் தடுமாறித் தவித்தது.

அவள் நிலை உணர்ந்து “பல்லவி….” என ஓடிச் சென்று, அவளருகே நின்று, அவள் கரத்தைப் பற்றி நடுக்கத்தைக் குறைக்க முயன்றான் பிரஜரஞ்சன்.

சில்லிட்டிருந்த அவளது உள்ளங்கைகளைப் பரபரவெனத் தேய்த்து சூடேற்றியபடி அவள் முகம் பார்த்தான்.

கண்களில் பெரிதாய்க் குளம் கட்டியிருந்த கண்ணீர், வெளியே வந்து விடாதவாறு, நீள் விழிகளை அகல விரித்து, விரித்துப் பெரு முயற்சி செய்து உள்ளேயே தேக்கிக் கொண்டிருந்தவளுக்கு… தன் மீதான அதிருப்தி, கோபம் கொடுத்த உணர்வுக் கொந்தளிப்பில் உடலின் ஒட்டு மொத்த ரத்தமும் முகத்தில் வந்து பாய்ந்து, அவளது கருத்த முகம் அரக்காகி, அடைத்தத் தொண்டை ஏறி,இறங்க… மூச்சு வாங்க.. வியர்த்துப் போய் தள்ளாடி நிற்பவளை ஒரு பார்வையில் கண்டு, பின்,

“ப்ச்” என எரிச்சல் கொண்டவன், எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளின் நாடியை ஒரு கையால் பற்றித் திருப்பி தன் முகம் பார்க்கச் செய்து,

“பண்றதெல்லாம் பண்ணிட்டு, உன்னை,நீயே வருத்திக்கிற மாதிரி எதுக்கு இந்த உணர்வுப் போராட்டம் பல்லவி?, செஞ்சதை நியாயப்படுத்தவா?” –இரக்கம் கொள்ளத் தோன்றவில்லை அவனுக்கு. அதனால் கேள்வியை, ஈட்டியாகவே வீசினான்.

மறுத்துத் தலையாட்டி எச்சில் விழுங்கிக் கண் மூடித் தன்னை நிலைப்படுத்தினாள் அவள்.

“இல்ல, நியாயமே இல்லன்னு நல்லாத் தெரிஞ்சதால தான் ஒதுங்கி வந்தேன்”

“அது தீர்வாகாது பல்லவி” – வெடுக்கெனக் கூறியவனுக்குக் கோபமும்,ஆதங்கமும் கொஞ்சமும் குறையவில்லை.

“ஒதுங்கிப் போக நினைச்ச மாதிரி, ஒன்னுமில்லாம போகவும் முயற்சி செஞ்சா… தீர்வு கிடைச்சிடும்ன்னு நம்புறேன்” – என்றவளின் குரல்,பாதிப் பாதியாக வெளி வந்தது.

அவன் பற்றியிருந்த அவள் கைகளின் சில்லிப்பு நொடிக்கு நொடி, அதிகரித்துக் கொண்டே சென்றது. நெற்றியினோரம் பூத்த வியர்வை, சுரப்பதை நிறுத்துவது போல் தெரியவில்லை. அதிகப்படியாக ஏறி,இறங்கும் மூச்சு, அவள் தன்னிலையில் இல்லை என்பதை எடுத்துரைக்க… பற்றியிருந்த அவள் கைகளை இறுக்கி,

“ரிலாக்ஸ் பல்லவி.. ரிலாக்ஸ்… போதும்…. ரிலாக்ஸ்” எனக் கூறி ஆசுவாசப்படுத்த முயன்றான்.

அப்போது North star தனது பயணத்தை முடித்துக் கொண்டுக் கதவைத் திறக்க, வெளியேறி, அங்கு Open Pool-ன் அருகிலிருந்த பெஞ்சில் காற்றாட அவளை அமர வைத்தவன், ஓடிச் சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் பிடித்து வந்தான்.

அவன் கொடுத்ததை வாங்கிக் கடகடவெனப் பருகிய பின்பும், மூச்சு வாங்க அமர்ந்திருப்பவளையே பார்த்திருந்தான்.

“இதுக்கு முன்னாடி இந்த மாதிரி anxiety attack வந்திருக்கா பல்லவி?”

“இதுக்குப் பேரு தான் anxiety attack-ஆ?”

“ப்ச்,பல்லவி”

அவன் அதட்டலைக் கண்டுகொள்ளாது, தூரமாய் வெறித்தாள் அவள்.

“ஹெல்த் விஷயத்துலக் கொஞ்சமாவது அக்கறைப்படு பல்லவி” – அவளை அளவிட்டபடிக் கூறியவனிடம்,

வெறுமையாய்த் தோளைக் குலுக்கினாள்.

வியர்வை காய்ந்து நெற்றி முடிகள் காற்றில் பறக்கத் தொடங்கியிருக்க, கருத்த முகம் வெளுத்து, முழி பிதுங்கி, பல நாள் நோய்வாய்ப்பட்ட நோயாளியைப் போலிருந்த அவளது தோற்றத்தை அவன் கவலையும்,காந்தலுமாய்ப் பார்த்திருந்தான்.

ன்றிரவு அந்த அறை பால்கனி, அவனது usual சிகரெட் ஸ்மோக்கிங் தோற்றத்தைத் தலையெழுத்தே எனப் பார்த்திருந்தது.

வழக்கத்திற்கு மாறாய் நெரித்தப் புருவங்களுடன், சற்று வேகத்தோடு அவன் ஊதித் தள்ளிய புகை, அவன் மன அழுத்தத்தின் அடர்த்தியைச் சொன்னது.

அவள் அவனிடம் கூறிய வார்த்தைகளனைத்தையும் ரிபீட் மோடில் ஓட விட்டு, அவள் குரலின் ஏற்ற இறக்கங்களை, அதன் பின்னிருந்த உணர்வுகளை, அதன் அர்த்தங்களை, அது கூற விழைந்த எண்ணங்களை என அத்தனையையும் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தது அவன் மூளை.

கடைசியாக… திணறிய மூச்சுக்கு மத்தியில்.. பாதிப் பாதியாய் அவள் கூறியவற்றை யோசித்துப் பார்த்தவன், அதன் அர்த்தத்தைக் கிரகித்துப் பின் திடுக்கிட்டு, அதுவரையிருந்த அசட்டை நிலை மாறி, சிகரெட்டை எறிந்து விட்டு அவசர,அவசரமாய்த் தடுப்பின் அருகே சென்றான்.

“பல்லவி….” – உரக்க அழைத்தவனுக்குப் பதிலாய் அறையிலிருந்து வெளி வந்தவளிடம்,

“கடைசியா நீ சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?” எனக் கேட்டான்.

புருவம் சுருக்கி அவனைப் புரியாது பார்த்தாள் அவள்.

“ப்ச், ஒன்னுமே இல்லாம போறதுன்னா…. என்ன அர்த்தம் பல்லவி?” – பதட்டம் குறையாது வினவியவனை,

இதற்காகத் தான் கத்தி அழைத்தாயா என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, பால்கனிக் கம்பியின் அருகே சென்றாள்.

“பதில் சொல்லு பல்லவி”

“ஒன்னுமே இல்லாம போறதுன்னா… ஒன்னுமே இல்லாம ஆயிட்றது! காற்றோடு காற்றா கரைஞ்சு போகிறக் கற்பூரம் மாதிரி, மண் உரிஞ்சுக்கிற மழைத் தண்ணீர் மாதிரி, இருந்தத் தடமே தெரியாதபடி… இல்லாம போயிட்றது”

பால்கனிக் கம்பியில் தெறித்திருந்த உப்பு நீரில் வடிவமில்லா ஏதோ உருவத்தை வரைந்தபடித் தன் போக்கில் மெல்லிய குரலில் பேசுபவளைச் சந்தேகமாய் நோக்கி,

“அப்டின்னா?, நீ என்ன மீன் பண்ற?” என்றான்.

“……….” – பதிலற்று நின்றவளின் தோற்றம், மேலும் சந்தேகத்தைக் கொடுக்க,

“நீ எதுக்காக இந்த ட்ரிப்பை ச்சூஸ் பண்ணுன?, உன் நோக்கம் என்ன பல்லவி?” – கலவரத்தோடு விசாரித்தான்.

“………”

“ஏன் இந்தப் பயணம்?, குறிப்பாகக் கப்பல் பயணம்?”

“…………” – பதில் சொல்லப் போவதில்லை என்பது போல் அவள் கைகளைக்கட்டிக் கொண்டு கடலை வெறித்தாள்.

அவள் இடுப்பளவு உயரமேயிருந்த பால்கனிக் கம்பியையும், அவளையும், அங்கிருந்து கடலின் தூரத்தையும் அளந்தவன், திடீரென முளைத்த சந்தேகத்தோடு,

“உனக்கு ஸ்விம்மிங் தெரியுமா பல்லவி?” எனக் கேட்டான்.

எதற்கு இந்த சம்மந்தமில்லாத கேள்வி என்பது போல் திரும்பி அவன் முகம் பார்த்தவளைக் கண்டு, தன் எண்ணப்போக்கை எண்ணி ‘ஷ்ஷ்ஷ்’ என நெற்றியைச் சொரிந்தவன், திடீரென நினைவு வந்தவனாக,

“நான் கொடுத்தத் தூக்க மாத்திரை டப்பா எங்க?” என்றான்.

பரபரப்பானக் குரலில் படபடப்போடு கேள்விகளாகத் தொடுப்பவனை அவள் விநோதமாக நோக்க,

ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தியவன்,

“உன்னையே அழிச்சுக்கிட்டு நீ பண்ண நினைக்குறத் தியாகம், நடந்த எதையும் மாத்தாது பல்லவி” என்றான்.

“…………” – என்ன கூற வருகிறாயென்பது போல் பார்த்தவளிடம், அவள் விழி நோக்காது, பார்வையைத் திருப்பி,

“த… த.. தற்கொலை எதற்கும் தீர்வாகாது பல்லவி” என்றான் தடுமாறிய குரலில்.

“தற்கொலையா?” – லேசாய் இதழ் பிளந்து, இமை விரிய வியந்து மெலிதாய் முணுமுணுத்தவாறு அவனை நோக்கியவளின் விழிகள், யோசனையில் சுருங்கிப் பின் மெல்ல ஒளிர்வது கண்டு, அதுவரை அவள் விழிமொழியை அவதானித்துக் கொண்டிருந்தவன், அதில் வந்து போன உணர்வுகளின் வழி, அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டு,

“நோ, நோ…. நோ…. நோ பல்லவி” – என்றவாறு தடுப்பைத் தாண்டிக் குதித்து அவளருகே நெருங்கினான்.

மூச்சு வாங்க அவள் விழிகளை நோக்கியவன்,

“முட்டாள்! முட்டாள்! நீ என்ன யோசிக்கிறன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சுப் பல்லவி!” என்று சீறி விட்டுப் பின், “நானே ஐடியா கொடுத்துட்டேனா?” என்றான் சங்கடமான குரலில்.

அவனுக்குப் பதில் சொல்லாது, அவள் அறையை நோக்கி நடக்க, அவசரமாய் வழி மறித்து,

“நீ ரொம்பவும் தைரியசாலி பல்லவி” என்றான்.

உணர்வற்று அவன் முகம் பார்த்தாள்.

“ஆமா பல்லவி” என்றவன், கண்ணை மூடிப் பிடரியைத் தேய்த்து “எப்படி சொல்ல” என்று முணுமுணுத்துப், பின் அவள் முகம் நெருங்கி,

“மனசாட்சியே இல்லாம பொண்டாட்டி,புள்ளைங்களை வெளியே துரத்தி விட்டு, எதைப் பற்றியும்,யாரைப் பற்றியும் கவலைப்படாம ஒன்னாக் குடித்தனம் நடத்திக்கிட்டுத் தப்புன்னு தெரிஞ்சும், தொடர்ந்து அதையேப் பண்ற, ரொம்பக் கேவலமான ஆட்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கேன் பல்லவி”

“ஆமாம்! அவங்களெல்லாம் ரொம்பக் கேவலமானவங்க! நான்……. கொஞ்சம் கேவலமானவள்.”

“இல்ல பல்லவி, நான் அப்படி சொல்ல வரல. விலகி,ஒதுங்கி வந்த உன் முடிவுக்குப் பின்னேயும் ஒரு துணிச்சல் இருக்குன்னு சொல்றேன்”

“நான் விலகி மட்டும் வரல. தப்பிச்சு ஓடி வந்துருக்கேன்..”

“பல்லவி…” – வார்த்தைகளற்று நின்றவனைக் கண்டு விட்டு அவள் அறைக்குள் மறைந்து விட, அவள் எப்போதும் படுத்துறங்கும் சன் லாஞ்சரில் தொப்பென அமர்ந்துத் தலை முடியைப் பரபரவெனக் கோதிக் கொண்டான் பிரஜரஞ்சன்.

நள்ளிரவு….

வானில் முழுப் பௌர்ணமி. கடலலைகள் வெள்ளியில் வார்த்தது போல்.. ஒளிர்ந்து.. நிலவொளியோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

திடீரென எங்கிருந்தோ முளைத்த சூறைக்காற்று மேகத்தையும், கடலையும் இணைத்து சுழலை உருவாக்கி, அலைகளின் நடுவே பெரிய துளையொன்றைப் போட்டது.

கடலினுள்ளே ஆழமாகச் செல்லும் அந்தத் துளையை அவன் ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வேளை, திடீரென அவளது பால்கனிக் கம்பியில் வந்தமர்ந்தாள் பல்லவி.

கால்களைக் கடலின் புறம் போட்டு, ஆபத்தான நிலையில் அமர்ந்திருப்பவளைக் கண்டுப் பதட்டத்துடன் அவன் எச்சரிக்க முற்படுகையில், அவன் புறம் மெல்லத் திரும்பி,

“எனக்கு நீச்சல் தெரியாது” – எனக் கூறிப் பற்கள் தெரியப் புன்னகைத்தாள்.

அவன், அவளிடம் பார்க்க நினைத்த புன்னகை அது! படுபாவி! சிரிப்பைக் கூட விட்டு வைக்கவில்லை. வரிசைப் பற்களோடு புன்னகையிலும் கவர்ச்சியைக் கொட்டுகிறாள்!

அவனது ரசனை, வர்ணனைகளை வாரி இறைத்த நேரம், அப்புன்னகை மறைய, உணர்வைத் தொலைத்தப் பழுப்பு விழிகளுடன்,

“ஒன்னுமே இல்லாம போகப் போறேன் நான்! காற்றோடு காற்றாக… கடலோடுக் கடலாக…” – என்றவாறு, அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, டபாலென அந்தத் துளைக்குள் குதித்து விட்டாள்.

வாயைத் திறந்து “பல்லவி……’ எனக் கத்த முயன்றவனுக்குத் தொண்டையை யாரோ அழுத்தும் உணர்வு! கண்ணெதிரே அவளைக் கைவிட்டு விட்டப் படபடப்பில், அடிவயிற்றிலிருந்து, “பல்லவி……………” என முழுக் குரலில் கத்தியபடி அவன் விதிர்த்தெழுந்த போது,

அவன் தோளை உலுக்கியவண்ணம், அவனருகே நின்றிருந்தாள் பல்லவி.

கண்டது கனவென்றுப் புரிந்தது.

ஆனாலும் அதன் தாக்கம் சற்றும் குறையாதிருக்க, “ப…. பல்லவி…” என்ற முணுமுணுப்புடன், அவன் அவளது முழங்கையைப் பற்றியிழுத்ததில், மண்டியிட்டு அவனருகே அமர்ந்து, அவனை சுருக்கியப் புருவங்களுடன் நோக்கினாள்.

“பல்லவி...” என்றபடி.. அந்தக் கருத்த நிறத்தை,சுருட்டிய முடியை, நீள் விழியை, பழுப்புக்கண்மணியைக் காட்டேரி தோற்றத்தைக் கடகடவெனப் பார்வையால் ஆராய்ந்து, மெல்ல ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டான்.

“என்ன ஆச்சு?” – என்றவளின் மெல்லிய குரலுக்கு, மறுத்துத் தலையசைத்தபடிக் குனிந்து இரு கண்களையும் உள்ளங்கையால் தேய்த்து “ஷ்ஷ்ஷ்ஷ்” எனப் பெருமூச்சை வெளியிட்டவன்,தன் மீதிருந்தப் போர்வையைக் கண்டான்.

அப்போது தான், அவள் அறை பால்கனியில் சன்லாஞ்சரில் அமர்ந்தவாறே உறங்கிப் போயிருந்தது புரிந்தது.

நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

“நீ என் கண் முன்னாடி தான் இருக்க பல்லவி” – என முணுமுணுத்துப் பின்,

“உனக்கு நீச்சல் தெரியுமான்னு நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லல பல்லவி” என்றான்.

அவனது முகத்தை உற்று நோக்கி அவன் எண்ணங்களைக் கிரகிக்க முயன்றபடி, ‘ஆம்’ எனத் தலையாட்டினாள்.

“ம்ம்” என அதே தலையாட்டலைப் பிரதிபலித்து, அர்த்தமற்றப் பார்வையுடன் அவளையே பார்த்திருப்பவனைக் கண்டு, அருகிலிருந்தக் கோப்பையை எடுத்து,

“coffee?” – என்றாள் மியூட் மோடில் தயங்கியவாறு.

அவள் கேள்விக்குப் பதிலளிக்கத் தோன்றாமல், அவளையே பார்த்திருந்தவனுக்குக் குபுகுபுவென அடிவயிற்றிலிருந்துப் பற்றி எரியும் எரிமலையாய், வெப்ப அனலொன்று மெல்லக் கிளம்பியது.

ஒரு முறை சிரியப் போரில் (Syria), கடலுக்கருகே, உயிரிழந்து, கவிழ்ந்து கிடந்த 2 வயது சிறுவனின் உடலை செய்திகளில் கண்ட போது, ஓர் உணர்வு தோன்றியது அவனுக்கு.

Empathy – என்பதைத் தாண்டி, தான் ஏன் அவன் அருகில் இருந்திருக்கவில்லை?, தன்னால் ஏன் அவனைக் காப்பாற்ற இயலவில்லை?, எப்பாடுபட்டேனும் அந்தக் குட்டி உயிரைக் காத்து, பொத்திப் பாதுகாத்திருக்க வேண்டாமா?, ஏன் அவனைச் சாக விட்டேன்? – என இயலாமையுடன் நினைத்திருக்கிறான்.

அவன் ஒன்றும் அண்டத்தைக் காக்க முடிந்த ஆகப் பெரும் சக்தி இல்லை தான்! ஆனால்.. உலகின் ஒரு மூலையில் எனக்கான உணவை, 3 வேளையும் நான் நிம்மதியாக உண்டு களித்திருக்கும் போது, மறு மூலையில் அவன் மட்டும் ஏன் தன்னைக் காத்துக் கொள்ளப் போராடிச் சாக வேண்டும்?,

ஏன் இப்படி?, - என அந்தச் சிறுவனருகேத் தன்னை நிறுத்தி வைத்து அவன் செய்த சிந்தனைகள் அனைத்தும், அடி வயிறைக் காந்தச் செய்து, பல நாட்கள் அவனைத் தூக்கமின்றித் திரிய வைத்திருந்தது.

இன்று… இந்த நொடி… இவளைக் காணும் போதும் அதே காந்தல் தான் அவனுக்கு.