அத்தியாயம் -1
“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்..”
அந்த மைதானம் முழுக்க ‘அட்டென்ஷன்’-ல் நின்றிருந்த மாணவர்களின் இதழ்கள் சீரான குரலில் நீராரும் எனப் பாடிக் கொண்டிருக்க.. ஒருவன் மட்டும் மனோன்மணியத்தை நினையாமல், மேத்ஸ் வாத்தியாரையும் மதிக்காமல், பின்னால் கட்டியிருந்தக் கைகளுடன் ‘ஸ்டேன்ட் அட் ஈஸ்’-ல் நின்றபடி வாயில் சுயிங்கம்மை மென்று கொண்டிருந்தான்.
அளவுக்கதிகமாக அசைந்து கொண்டிருந்த அவன் இதழ்களுக்கு மாறாக, விழிகள் மட்டும் எதிர் வரிசையில் நான்காவதாய் நின்றிருந்த ரெட்டை ஜடை ரோசாவையே வெறித்த வண்ணமிருந்தது.
எக்கி எக்கி எகத்தாளமாய் நோக்கிக் கொண்டிருந்தவனின் பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ, “அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற..” – என முணுமுணுப்பாய் பாடிக் கொண்டிருந்தவளின் உலகம் அந்நொடி அத்தனை இன்பமாய் இருக்கவில்லை!
மூக்கு விடைக்க தன்னையே நேர்ப் பார்வையாய் பார்த்தபடி உக்கிரமாய் நின்றிருந்தவளைக் கண்டவனுக்கு உல்லாசமாய் இருந்தது போலும்!
வலது கை விரல்களால் காதைத் தடவியபடி அவளை நோக்கிக் கண்ணடித்து, உதட்டைக் குவித்து காற்றில் ஒரு உம்மா வைத்தான்!
பல்லைக் கடித்துக் கொண்டுக் கையை இறுக்கியவளின் கோபம், அவனை எட்டியதோ இல்லையோ, கெமிஸ்ட்ரி வாத்தியாரை எட்டி விட்டது போலும்!
உம்மா கொடுத்தவனின் வாயில் புறங்கையால் சும்மா ரெண்டு விட்டு விட, சொத்தென்கிற சத்தத்துடன் சுரீரென்று விழுந்த அடியால்.. வலி தாங்க முடியாமல் கண்ணை மூடியவன், தன் இதழ்களைக் கையால் பற்றிக் கொண்டு ‘அம்மாஆஆ’ எனக் கீழே குனிந்தான்.
ஆடவள் எண்ணியதை ஆசிரியர் நிறைவேற்றி விட்டதாலோ என்னவோ ‘வெற்றி! வெற்றி! நல்ல்லாஆஆ வேணும் டா உனக்கு’ எனக் கறுவிய கீர்த்தி நமுட்டுச் சிரிப்புடன் அவனை நோக்கினாள்.
எரிந்த உதட்டைத் தடவியபடி வாத்தியாரை நோக்கியவன், “என்ன சார், காலைச் சாப்பாடு கமலாவோட காரச்சட்னி போல இருக்கு?, இந்த எரி,எரியுது!” என்று சலித்து விட்டு.. வாயைப் பிளந்தபடித் தன்னை நோக்கியவரிடம் நெருங்கி “கமலா யாருன்னு கேட்குறீங்களா?, உங்க வைஃப் தான்!” என்றவன் கையைத் தட்டி “ஹாஹாஹா’வெனச் சிரித்து விட்டு மீண்டும் அவள் புறம் திரும்பினான்.
சுள்ளென வாங்கியும் அடங்காமல் வாயடிப்பவனின் பின்னந்தலையில் ஒரு இடியை இறக்கியவர் “அங்க,அங்க.. என்னடா பார்வை?, உச்சில தொங்கிட்டிருக்கிற தேசியக் கொடியோட சேர்த்து உன்னையும் பறக்க விட்ருவேன்” என்று கர்ஜிக்க..
இப்போது அடக்க முடியாமல் வாயை மூடிக் கெக்கே,பெக்கேவெனச் சிரித்தாள் அவள்.
விடாமல் தலையில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த வாத்தியைக் கண்டு கொள்ளாமல், இரு பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டுக் கொண்டு ஸ்டைலாக நின்றபடி அவள் சிரிப்பை ரசிக்க முயன்றவன், முடியாமல்.. கடுப்பாகி..
“இந்தா ஏய்ய்.. சும்மா பல்லை,பல்லைக் காட்டிட்டு இருந்தேனா, செவுலத் திருப்பிடுவேன் சொல்லிட்டேன்” – என சத்தமிட்டதும், அருகில் நின்றிருந்த மாணவ,மாணவிகளின் சிரிக்கத் தொடங்க, மேடையில் நின்றிருந்த ஹெட் மாஸ்டர் “சைலன்ஸ்” என்று கத்தி விட்டு “இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்கள் கனிமொழி,செல்வமணி,சுதாகரன்..” எனப் பேசிக் கொண்டே செல்ல..
அவன் காலரைப் பற்றியிருந்த கெமிஸ்ட்ரி வாத்தியிடமிருந்துத் தப்பிக்க முயன்றவனின் தலை முடியைப் பிடித்திழுத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகி நடந்தார் வாத்தி.
பாக்கெட்டில் செருகியிருந்தக் கைகளை விலக்காமல், அவரிடம் பிடி பட்டிருந்த முடி தந்த வலியை உணராமல், அவர் இழுத்த இழுப்புக்கு நடந்தபடித் திரும்பி அவளை நோக்கியவன், மீண்டும் கண்ணடித்து, இதழ் குவித்து விட்டுத் தான் சென்றான்.
எரிச்சலுடன் முகத்தைக் கோணியவளைக் கண்டு கீர்த்தியின் தோழிகள் நகைக்க, அவள் பார்வை முழுதும் பக்கவாட்டிலிருந்தபடித் தன்னைக் கேவலமாய் நோக்கிக் கொண்டிருந்த ஃபிஸிக்ஸ் மிஸ்ஸிடம் பதிந்தது.
‘எனக்கும்,அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல மேம்! அவன் ஒரு பொறுக்கி மேம்!’ – என வாய் விட்டுப் புலம்பியவள், ‘அய்யோ! என் ஃபேவரைட் மிஸ்ஸையே, என்னை வேஸ்ட் பீஸ்ன்னு நினைக்க வைச்சுட்டானே! கட்டைல போறவன்!’ – மிதமிஞ்சிய கோபத்தில் நகத்தைக் கடித்துத் துப்பினாள் அவள்.
அதற்குள் ‘அசெம்ப்ளி’ முடிந்து அனைவரும் அவரவர் வகுப்புக்கு அனுப்பப்பட்டிருக்க, இங்கே அசோக் ஒருவனை மட்டும் கட்டம் கட்டியிருந்தனர், கெமிஸ்ட்ரி,பிஸிக்ஸ் மற்றும் பாட்டனி வாத்தியார்-மக்கள்!
லேப் வாசலிலிருந்த புளியமரத்தடியில் வாத்தியார்கள் சரமாரியாக வாசித்துக் கொண்டிருக்க, அவனோ மென்று,மென்று சக்கையாகிப் போயிருந்த சுயிங்கம்மை ‘மர்கயா சாலா’ செய்தபடி அதே ஸ்டாண்ட்-அட்-ஈஸ் பொஸிஷனில் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
“ஏன் டா டேய்.. நான் பேசுறதெல்லாம் உன் காதுல விழுகுதா இல்லையா டா?” – கெமிஸ்ட்ரி வாத்தி.
“ஏன், எனக்கென்ன காது டமாரமா?, அதெல்லாம் நல்லாத் தான் கேட்குது” – அகட்டி வைத்திருந்தக் காலை அசால்ட்டாய் ஆட்டியபடி அசோக்!
“எவ்ளோ திமிரா பேசுறான் பாருய்யா தாவரம்!” – தாவரவியல் ஆசிரியரைத் துணைக்கழைத்தபடி கெமிஸ்ட்ரி.
“இவன் சரிப்பட்டு வர மாட்டான் சார்! வீட்ல இருந்து பேரண்ட்ஸைக் கூட்டி வரச் சொல்லுவோம், அது தான் சரி வரும்” – என பாட்டனி பாய்ந்ததும்.. பொங்கி விட்டான் அசோக்.
“எத்தனை தடவ சார்? இல்ல எத்தன தடவன்னு கேக்குறேன்! இந்த மாசத்துல ஏற்கனவே 3 தடவ கூட்டி வந்தாச்சு! அம்மா,அப்பா,சித்தப்பா,பெரியப்பான்னு அத்தனை பேரும் விசிட் பண்ணிட்டாங்க! இனி கூட்டி வர என் வீட்ல ஆள் இல்ல சார்! சொன்னா புரிஞ்சுக்கங்க” – எரிச்சல் மிகுதியில் கட்-அண்ட் ரைட்டாகப் பேசியவனைக் கண்டுப் பல்லைக் கடித்த பாட்டனி, மேஜை மீதிருந்த டஸ்டரை எடுத்து அவன் நெற்றியில் விட்டடித்தார்.
புருவத்தில் பட்டு தெறித்துக் கீழே விழுந்த டஸ்டரை எடுத்து வந்தவன் டொக்கென மேஜை மீது வைத்து..
“நான் உண்மையை தான் சார் சொல்றேன்! இனி நான் கூப்பிட்டாலும் யாரும் வர மாட்டாங்க சார்! வேணும்ன்னா, நீங்க என் வீட்டுக்கு வாங்க! ஈவ்னிங் 5 டூ 6 டாடி,மம்மி ரெண்டு பேரும் ஃப்ரீ தான்! டைம்க்கு வந்தீங்கன்னா கண்டிப்பா மீட் பண்ணலாம்! டீ,காஃபி கூட நான் ஏற்பாடு பண்றேன்! என்ன சொல்றீங்க?” – என்றவனைக் கண்டு தாவரம் தலையைப் பிடித்துக் கொள்ள..
“இவனை என்ன தான் சார் பண்றது?” எனப் புலம்பிய கெமிஸ்ட்ரி..
“டேய் அசோக்கு, க்ளாஸ் பசங்களைக் கூட்டா சேர்த்துக்கிட்டு நீ அடிச்ச லூட்டி லிஸ்ட்ல இது வராது டா! பொண்ணுங்களோட வம்பு பண்றதெல்லாம் பெரிய தப்பு டா! டைரக்ட்-ஆ டீசீ தான்! சொன்னா புரிஞ்சுக்க! நீ எவ்ளோ சேட்டை பண்ணாலும், நல்லா படிக்கிறன்ற ஒரு காரணத்துக்காகத் தான் ஹெச்.எம் வரைக்கும் இந்த விஷயத்தை எடுத்துட்டுப் போகாம நாங்க அமைதியா இருக்கோம்” – என பொறுமையாக எடுத்துக் கூற..
எங்கே! அவன் அவர் பேசியதனைத்தையும் காது கொடுத்துக் கேட்டதாகக் கூடத் தெரியவில்லை.
தூரத்தில் கூட்டமாக வரும் ரெட்டை ஜடைப் பெண்களையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.
“டேய்..” – பாட்டனி.
“ம்ம்” – மேஜையில் ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் வைத்துக் கொண்டு ஒய்யாரமாய் நின்றபடி அவன்.
“டேய்ய்..” – முட்டியில் ஃபிஸிக்ஸ் வாத்தி கொடுத்த வெட்டில் நேராக நின்றவன், பார்வையைத் திருப்பாமல்..
“என்னாங்க சார்?” – என்றான் எரிச்சலுடன்.
“அங்க என்ன டா பார்வை?”
“ஃபர்ஸ்ட் பீரியட் கெமிஸ்ட்ரி லேப் சார்”
“யாருக்கு?”
“அவளுக்குத் தான்”
“டேய்ய்ய்ய்ய்ய்” – மூவரும் பொங்கியதை கண்டு கொள்ளாமல் பின் கழுத்தைத் தேய்த்தவன்.. பக்கவாட்டில் தன்னை முறைத்தபடி நடந்து வந்தவளைக் கண்டு “த..ர..ரி..ந…” என ஸ்வரவரிசைகளை எடுத்து விட.. கடுப்பாகிப் போனவர்கள்..
“ஏம்மா கீர்த்தி… வா இங்க..” என அவளை அழைத்தனர்.
கோபத்தைக் காலில் காட்டித் தொங்,தொங்கென நடந்து வந்து நின்றவள் “குட்மார்னிங் சார்” என்றாள்.
ஆறடி தள்ளி நின்றவளைக் கண்டு புருவத்தைத் தூக்கி உதட்டை வளைத்தவன் பின்..
“1….. 2… 3…….” – என வலது காலை அடி,அடியாக எடுத்து வைத்து தனக்கும்,அவளுக்குமான இடைவெளியைக் குறைத்தான்.
அவன் நகரத் துவங்கியதும்.. “ஏய்ய்.. ஏய்.. ஏய்ய்ய்” எனக் கோரசாகக் கத்தியவர்களிடம், இடது கையை உயர்த்தியவன்..
“டிஸ்டன்ஸ் இருக்கு,டிஸ்டன்ஸ் இருக்கு! கடவாப் பல்லுக்குக் காலரா வந்த மாதிரி வாயைப் பொளக்காதீங்க” எனக் கூற..
வாத்தியார்களிடமே வாயடிக்கும் அவனை விழி உயர்த்திக் கேவலமாய் நோக்கியவள், இடைவெளியை அதிகப்படுத்த முனையாமல் அமைதியாய் நின்றாள்.
“ஏம்மா கீர்த்தி, அவன் தான் பொறுக்கிப் பய மாதிரி பண்ணிட்டிருக்கான்னா, நீ என்னம்மா?”
“நான் என்ன சார் பண்ணேன்?”
“என்ன பண்ணல?” – அவள் புறம் குனிந்து முணுமுணுத்தவனைத் தவிர்த்து விட்டு வாத்தியார்களை எரிச்சலுடன் நோக்கினாள்.
“அவன் பார்த்தா, நீ என்னத்துக்கு பதில் பார்வை பார்க்குற?,”
“ப்ச், அவ கண்ணு அவ பார்க்குறா! உங்களுக்கென்ன சார் கஷ்டம் அதுல?”
“ஏய்ய் வாயை மூட்றா நீ”
“ஆமாமா நான் வாயை மூடிக்கிறேன்! எம்மா, நீ பேசும்மா!” – பவ்யமாய் அவளுக்கு வழி விட்டவனை நிமிர்ந்து அநியாயத்திற்கு முறைத்தவள்.. வாத்தியார்களிடம் திரும்பி..
“இதுக்குப் பேரு பார்க்குறதா?” என்றாள் கடித்த பற்களுக்கிடையே!
“இல்ல! முறைக்குறது!” – இடையில் புகுந்த அசோக் தொடர்ந்து..
“என்னத்துக்கு சார் முறைக்கனும்?, ஒருத்தன் பார்க்குறான்னா, பிடிச்சிருந்தா பதில் பார்வை பார்க்கனும்! பிடிக்கலையா திரும்பிட்டுப் போகனும்! அத விட்டுட்டு நான் பார்க்கும் போதெல்லாம் முறைக்கிறேன்ற பேர்ல என்னைப் பதிலுக்குப் பார்த்துட்டு, அப்புறம் ‘இவன் என்னை டிஸ்டர்ப் பண்றான்’, ‘எனக்கு இவனைப் பிடிக்கலன்னு’ தவ்வுறதெல்லாம் என்னா சார் லாஜிக்கு?” – எனப் புலம்ப…
ஃப்ளோவில் தாவரம் வேறு “நியாயம் தான்” என்று விட.. அன்லிமிடட் ஆத்திரத்தில் பொங்கிய கீர்த்தி..
“இவனைக் கொண்டு போய் ஹெச்.எம் முன்னாடி நிறுத்தி டீசியைக் கிழிச்சு வெளியே தூக்கி எறியுறதை விட்டுட்டு இப்பிடி என்னை நிற்க வைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?, என்ன வாத்தியாருங்க நீங்க?” – என வாயை விட..
“ப்ப்ப்ப்ப்ப்” – என எச்சில் தெறிக்க வாயில் கை வைத்து சிரித்த அசோக்,
“இதுக்கு நானே பரவால போல சார்” – என்றான்.
“இந்தாம்மா! என்ன வாய் நீளுது?” – என அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து பாட்டனி பட்டென எழ..
எரிச்சலுற்ற முகத்துடன் தரையை வெறித்தவள் ஏகக் கடுப்போடு நிற்க..
“இதுக்கெல்லாம் தீர்வே கிடையாது! இவனை மாதிரி காவாலியை கண்காணிக்கிறது எங்க வேலை கிடையாது! ஒன்னு இவனை காக்கா,குருவி லிஸ்ட்ல சேர்த்து.. புறங்கையால பத்தி விடு! இல்ல, உன் வீட்ல இருந்து ஆளைக் கூட்டி வந்து ஹெச்.எம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணி.. பொடனியைப் பிடிச்சு இவனை ஸ்கூலை விட்டு வெளிய தள்ளு! இப்போதைக்கு இது தான் வழி!” – என்ற கெமிஸ்ட்ரி.. தூரத்தில் நின்றபடி குசுகுசுவெனத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி நகர்ந்து விட்டார்.
பாட்டனியும்,பிஸிக்ஸூம் கூட தத்தமது லேப்களுக்குள் நுழைந்து விட.. கையிலிருந்த ரெக்கார்டு நோட்டைப் பட்டென மேஜையில் விசிறியடித்தவளைக் கண்டு.. தலையைப் பின்னுக்குச் சாய்த்து பிடரியைக் கோதிய அசோக்,
அவள் விசிறியடித்த நோட்டை எடுத்துப் பொறுமையாகப் பிரித்து..
“ஊ-னா சுழி! பெரிய கருப்பன் துணை! ஆர்.கீர்த்தி, 11th B, கெமிஸ்ட்ரி ரெக்கார்ட் நோட்டு! – என அவள் எழுதியிருந்ததைப் பொறுமையாக வாசிக்க.. வெடுக்கென அவன் கையிலிருந்து நோட்டைப் பறித்தவள்..
“உனக்கெல்லாம் பயம்-ங்கிறதே கொஞ்சம் கூட கிடையாதா? ஏன் டா இப்பிடி இருக்க?” எனக் கத்தினாள்.
“எனக்கும் கஷ்டமாத் தான் இருக்குது! ஒன்றரை மாசமா முடி வெட்டாம இருக்குறதும்! மூக்கு ஓட்டைய மறைக்குற அளவுக்கு மீசை வளர்க்குறதும்! பொண்ணுங்களுக்கு அடர்த்தியா முடி வைச்சிருக்கிறவன் மேல தான் ஆசை வருமாமே!” – என்று உளறியபடியே மீசையைத் தடவிக் கொடுக்க..
கையிலிருந்த ரெக்கார்டு நோட்டாலேயே தன் தலையில் அடித்துக் கொண்டவள்..
“உன்னைப் பார்த்தா ஆசை வரல டா! உன் ஃபோட்டோவுக்கு மாலையை மாட்டி பூசை போடலாம்ன்னு தான் தோணுது”
“ஓஓஓ!!! அப்பிடி! அதாவது இந்தக் காளையை நீ கடவுள் ஸ்தானத்துல வைச்சிருக்க-ன்னு சொல்ல வர்ற?”
“யாரு நீ காளையா?, முப்பது நாள் சோறு திங்காத மூஞ்சுறு மாதிரி இருக்குற! நீ காளையாக்கும்?”
“மூஞ்சுறா??, ஏன் டி கருகிப் போன பட்டர் பன்-ன்னாட்டம் ஒரு மூஞ்சியை வைச்சிக்கிட்டு நீ என்னைய மூஞ்சுறு-ன்றியா?, மவளே! மூக்கை உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்!”
“ஆஹான்?? கருகுன பன்னை என்ன இதுக்கு டா, பாட்டி வடை சுட்ட கதைல வர்ற காக்கா மாதிரி பார்க்குறவன்?”
“ஏய்ய் நான் என்ன உன்னை ஆசைப்பட்டுப் பார்க்குறேன்னு நினைச்சியா??, அ-னா,ஆ-வன்னா,இ-யன்னா.. பொண்ணுங்க பின்னாடி சுத்த நான் என்ன கேனையனா?”
“அடேங்கப்பா! உண்மையை ஒத்துக்கிட்டானப்பா மகராசன்!”எனக் கூவியபடி கையைத் தட்டியவள் “கேட்டுக்க டா! க்,ங்கு,ச்சு உன் டங்குவாரு அந்து போச்சு”-என்றாள்.
“ஹாஹாஹா பரவாயில்லடி உனக்கும் வருது!”
“ஆமாம்! வருது! வருது! உன் மொகரையைப் பார்த்தாலே வாந்தி வருது!”
“வரட்டும்! வரட்டும்! பொம்பளப் புள்ளைக்கு வாந்தி வந்தா விசேஷம் தான?”
“ஏய்.. ச்சீ!”
“அது ச்சீ இல்லடி.. ச்…….சீஈஈஈ” – சிணுங்கியவனைக் கண்டு..
தலையிலடித்துக் கொண்டு “ஆண்டவா” – என்றவளிடம்..
“கதறு! கதறு! நல்லாக் கதறு! இந்த வருஷம் முழுக்க என்னால நீ கதறிக்கிட்டே தான் இருக்கனும்” – திமிராகக் கூறியபடிக் கையிலிருந்தக் காப்பை இறுக்கியவனைக் கண்டு பற்றிக் கொண்டு வர..
“பார்ப்போம் டா! என்னால நீ கதறுறியா?, உன்னால நான் கதறுறேனான்னு!” – என்று அவள் சவால் விட.. கண்டு கொள்ளாமல் உதட்டைச் சுழித்தவன்..
சட்டையின் முதல் பட்டனைக் கழட்டிக் காலரைப் பின்னே தள்ளியபடி..
“சரி சரி! சபதம் எடுத்தாச்சுல்ல?, சீன் முடிஞ்சது! டக்குன்னு ஒரு ஐ லவ் யூ-வை சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணு” என்றவன்.. ‘என்ன வெயில்,என்ன வெயில்’ என்றபடி நெற்றி வியர்வையைச் சுண்டி அவள் முகத்தில் தெறிக்க விட..
“ச்சை” எனக் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தவள்..
“வெய்யக் காலத்துல குச்சி ஐஸ் விற்கிறவன் மாதிரி இருக்குறான், இவனைப் பார்த்து நான் ஐ லவ் யூ சொல்லனுமாம்! போடா.. மக்ரோன் மண்டையா!” – என்று விட்டு விறுவிறுவென முன்னே நடந்து விட்டாள்.
“ஏய்ய்ய்… இந்த அசோக்கை அசால்ட்டா எடை போடாதடி! உன்னைக் காதலிக்க வைக்க உயிரையும் குடுப்பேன்!”
“அதை வைச்சு நான் மயிரைக் கூடப் புடுங்க முடியாது! போடா டேய்!”
“வர்றேன் டி நாளைக்கு, விஷ பாட்டிலோட! நான் மிரட்டுற மிரட்டுல நீ என்னைப் பார்த்து.. ‘ஆமா, நான் உன்னைக் காதலிக்கிறேன்னு’- சொல்லுவடி! சொல்ல வைப்பேன் உன்ன!”
-விடாமல் ஒலித்த அவன் குரல் கேட்டுத் தோளைக் குலுக்கியவள்.. “அப்டியே செத்து ஒழிஞ்சிடு டா முலாம் பழ மூக்கா!” என்று சபித்து விட்டு நகர்ந்து விட்டாள்.
இப்படி அடிமட்டத்திற்கு நாயாய்,பேயாய் அடித்துக் கொள்ளும் இருவருக்குமிடையே ஜென்மப் பகையோ, வாய்க்காத் தகராறோ, பங்காலி சண்டையோ கிடையாது!
நடந்ததென்னவோ மூன்றே சம்பவங்கள் தான்! அவனை முட்டுச் சந்தில் நிறுத்தி முக்க வைத்த மூன்றே சம்பவங்கள்!
சம்பவம் – 1
அன்று அவர்களது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது.
வயது வரம்பு பாராமல் பலதரப்பட்ட மாணவர்களும் தங்களுக்குளிருக்கும் அறிவியல் அறிவை வெளிக்காட்டி அப்துல் கலாம் ஆக உருமாறி நிற்கும் தினம் அது!
அந்த வகுப்பறையில் ‘ப’ வடிவில் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில், தங்களது கண்டுபிடிப்புகளை கடை பரப்பி கலை நயத்தோடு விவரித்துக் கொண்டிருந்த மாணவமணிகளில் கீர்த்தியும் ஒருத்தி.
கலர்,கலர் திரவியங்கள் நிரம்பிய பாட்டில்களோடு ஒரு குட்டி கெமிஸ்ட்ரி லேபையே முன்னே வைத்துக் கொண்டு நின்றவள், ஏதேதோ வேதிச் சமன்பாடுகளை விளக்கியபடி சில,பல திரவியங்களை ஒன்றாகக் கலக்கி புகை விட்டுப் பார்வையாளர்களை அசத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது பார்த்து தனது அணில் கூட்டத்துடன் அளவளாவியபடி அசால்ட்டாய் சுற்றி வந்து கொண்டிருந்த அசோக், அந்த வகுப்பறையில் அவளை மட்டுமே ‘ஆ-வெனப் பார்த்தபடி குவிந்து கிடக்கும் கூட்டத்தைக் கண்டு, புகைகளுக்கு நடுவே நின்றவளை சுருக்கிய புருவங்களுடன் நோக்கினான்.
அசோக் நன்றாகப் படிக்கும் மாணவன் தானென்றாலும், தனது பங்களிப்பை அவன் கமெண்ட் செக்ஷனோடு நிறுத்திக் கொள்வதோடு சரி, மற்றபடி உருளைக் கிழங்கில் லைட் எரிய வைக்கும் உருப்படாத வேலைகளிலெல்லாம் அவனுக்குப் பெரிதாக ஈடுபாடில்லை.!
கெமிஸ்ட்ரி ஈக்வேஷனை கீரைக் கட்டைப் போல் ஆய்ந்து எறிந்து கொண்டிருந்தவளின் அருகே சென்று நின்றான்.
வழக்கம் போல் வாயில் சுயிங்கம்மை அசைத்துக் கொண்டிருந்தவன், முன்னே நின்ற ஜூனியர் மாணவர்களின் தலையைத் தட்டிப் பின்னே தள்ளி விட்டு,
“அந்த ஈக்வேஷனை திரும்ப சொல்லு” என்றான் அவளிடம் அதிகாரமாக.
ஒரு கையைப் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டு மறு கையால் தாடையைத் தடவியபடித் தன்னையே நோக்கியவனைக் கண்டு கண்ணைச் சுருக்கினாள் கீர்த்தி.
கையிலிருந்த கோனிகல் ஃப்ளாஸ்க்கை நோகாமல் கீழே வைத்தவள், கூட்டத்திடம் திரும்பி ஆங்கிலத்தில் “உங்களுக்கெல்லாம் நான் சொன்னது புரிஞ்சதா?” எனக் கேட்டாள்.
“ஓ! பீட்டரு! அதான் பொரியைப் பார்த்த மீன் கூட்டமாட்டம் மொய்க்கிறாய்ங்க பசங்க” – என நண்பனிடம் முனகியவன்..
பதிலுக்குத் தெளிவான ஆங்கிலத்தில் அவளிடம் “உன்னைத் தான் கேட்குறேன்! பதில் சொல்லு” என்றான்.
கூட்டம் மெல்ல விலகிச் செல்லத் தொடங்கியதும் அவன் புறம் திரும்பியவள்..
“யார்றா நீயி?” என்றாள் தமிழில்.
“யாரு டா-வா??” – கண்களை அகல விரித்தவனிடம்..
“ஆமா டா! (கால்வாய்) காவால விழுந்த காக்கா மாதிரி இருந்துக்கிட்டு என்னையே கேள்வி கேட்குற?, யார்றா நீ” என்றாள்.
கமுக்கமான குரலில் கழுவி ஊற்றியவளைக் கண்டு வாயைப் பிளந்தவன்..
“ஏஹேய்ய்…. ஏன் டி யூனிஃபார்ம் போட்ட யூரியா மூட்டையாட்டம் இருக்க நீ என்னைய காக்கா-ன்றியா?, முதல்ல நீ யார்றி? கோனிக்கல் ஃப்ளாஸ்க்குப் போட்டியா கோண மூஞ்சியோட நிற்கிறவ?”
ஏகத்துக்கும் எகிறியவனைக் கண்ட அவனது நண்பன் வவ்வாலு “மாமா என்னா டா?” – என அவன் காதைக் கடித்தான்.
“அதையே தான் நானும் கேட்குறேன், என்னா டா இது? யார்றா இவ? முதல் தடவை பார்க்குற என் கிட்ட முக்கோணத் தாக்குதல் நடத்திட்டிருக்கா??” – என்றவன்.. அவளை ஆராய்ச்சியாய் நோக்கினான்.
அவன் வார்த்தைகளுக்கெல்லாம் கோபம் கொள்ளாமல் கையைக் கட்டிக் கொண்டு நக்கலாய் சிரித்தவள்,
“நானும் நேத்துல இருந்து உன்னைப் பார்த்துட்டே தான் இருக்கேன், காலைல வந்து கார்னர்ல நிற்குற ரெண்டு பேரை கலாய்ச்சுட்டுப் போன! மதியம் வந்து மத்தில நிற்குற ரெண்டை கலாய்ச்ச! ஆனா.. ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா.. இன்னிக்கு என் டேபிளையே கட்டம் கட்டுற?” – எனக் கூற..
நண்பனின் தோளில் கையைப் போட்டபடி புருவத்தைச் சுருக்கி, தாடையைத் தடவியவன்..
“நம்மளைப் பத்தி, நம்மள விட அதிகமா தெரிஞ்சு வைச்சிருக்கிறாளே! யாரு மாமா இவ?” என்றான்.
உடனே பின்னாலிருந்து ஒருவன்,
“பேரு கீர்த்தி டா மாப்ள! 11த் பி! கேர்ள்ஸ் ஹை ஸ்கூல்ல இருந்து இங்க மாறி வந்திருக்கு! 10த்-ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்! கெமிஸ்ட்ரில புலியாம்! இங்க்லிஷ்ல நரியாம்”
“அப்ப கணக்குல என்ன கழுதையா?” – பிணாத்திக் கொண்டே சென்றவனை இடைமறித்து அசோக் கேட்க.. அவனது வானரக் கூட்டம் இடி,இடியென சிரித்தது.
வார்த்தையென்னவோ வானரங்களிடம் தான் என்றாலும், பார்வை மட்டும் அவளையே சுற்றி வந்தது.
உதட்டை மடித்துக் கடித்தபடி கெத்து குறையாத முகத்தோடு நின்றவளிடம்..
“நோஞ்சானாட்டம் இருந்துக்கிட்டு நோட்டம் விட்றதுல கில்லியா இருக்குற நீ! ஹ்ம்! ரெண்டு நாளா ஒருத்தி என்னை ஃபாலோ பண்றது தெரியாம, பக்கித்தனமா சுத்திட்டிருந்திருக்கேன் நானும்” – எனக் கூற.. கடுப்பாகிப் போனவள்..
“ஏய்ய்.. உன்னை நோட்டம் விட்டு நான் என்ன நோபல் பரிசா வாங்கப் போறேன்?, கஷ்டப்பட்டு நாங்க எக்ஸ்பரிமெண்ட் பண்ணி, போற வர்றவனுக்கெல்லாம் தொண்டைத் தண்ணி வத்த எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டிருப்போமாம்! சார், நோகாம வந்து நின்னுக்கிட்டு, சிகப்பா இருக்கிறது சட்னியா, பச்சையா இருக்கிறது பாதரசமா-ன்னு கேள்வி கேட்பாராம்! ஏய்ய்.. நான் உன் மூஞ்சில ஆசிட் ஊத்துறதுக்கு முன்னாடி மரியாதையா நீயே நவுந்துரு! (நகர்ந்து விடு)” – என்று மிரட்டினாள்.
“அய்யய்ய்ய்ய, டேய் என்னாடா இவ?, தகரத்து மேல தண்ணியைத் தெளிச்சு விட்டா மாதிரி லொட,லொடன்னு மூச்சு வாங்காம பேசுறா!, ஏய், உன்னைய என்னா கேட்டுட்டாங்க இப்ப? வீக்கோ விளம்பரமாட்டம் காலையிலிருந்து ஒரே ஈக்வேஷனை ஓராயிரம் தடவ சொல்லிட்ட! அதை இன்னொருக்கா.. என் கிட்ட சொல்றதுல என்ன கஷ்டத்தைக் கண்டுட்ட?”
“சொல்ல முடியாது டா”
“ஏய்ய்.. நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டே இருக்கேன், வாடா,போடான்ற?, ஏதோ நீ போட்டிருக்கிற மூக்குத்தி அழகா இருக்கேன்னு தான் உன் மூக்கை விட்டு வைச்சிருக்கேன்! இல்ல, நீ முதல் தடவை டா போட்டப்பவே, உன் சில்லு மூக்குல வில்லு பாட்டு பாடிருப்பேன்”
“மூக்குத்தி அழகா இருக்காஆஆஆஆஆஆ, என்னா டா நம்ம பய வாய்ல வர்ணனை எல்லாம் வருது!” – வவ்வாலு வாயைப் பிளக்க..
வானரக் கூட்டம் இப்போது அவளது முகத்தை விட்டு விட்டு மூக்கை நோக்கியது.
“மாப்ள, வைரம் போல டா! டால் அடிக்குது பாரேன்”
“பணக்கார வூட்டுப் புள்ள போல டே”
“என்ன கலரு தான் கொஞ்சம்…. கருகிப் போனாப்ல இருக்கு”
-கடைசி கமெண்ட்டில் காண்டாகிப் போன கீர்த்தி..
“அடேய்.. மக்னீசீயத்துல செஞ்ச மலக் குரங்கே! யாரைப் பார்த்து டா கருகிப் போன கலருன்னு சொல்ற?” – என்று கத்த.. காதைத் தேய்த்துக் கொண்ட அசோக்,
“உன்னால இப்ப ஈக்வேஷனை சொல்ல முடியுமா முடியாதா?” – என்று அவளோடு போராடிக் கொண்டிருந்த வேளையில்.. உள்ளே நுழைந்தார் கெமிஸ்ட்ரி வாத்தியார்.
கூட்டமாய் கீர்த்தியின் முன்பு நின்றவர்களை நோக்கி “இங்க என்ன கூட்டம்?” எனக் கேட்டவரிடம்..
“எக்ஸிபிஷன் சார்” என்றான் துடுக்காய் ஒருவன்.
“ம்ம்???” – முறைப்பாய் திரும்பியவரிடம்..
“கண்காட்சி கண்காட்சி! அறிவியல் கண்காட்சி” என்றான் அவன்.
அவனது முன் தலை முடியைப் பற்றி ஆட்டி “அறிவே இல்லாத நாய்க்கெல்லாம் அறிவியல் கண்காட்சி ஒரு கேடு” என்றவர் கீர்த்தியிடம் “என்னம்மா?, எப்படிப் போயிட்டிருக்கு?” என்றார்.
“நன்ன்னாஆஆ போயிட்டிருக்கு சார்” - அழுத்தமாய் பதில் அசோக்கிடமிருந்து வர.. எரிச்சலுடன் நிமிர்ந்தவள்..
“ஆமா சார்! எக்ஸ்பரிமெண்ட்டை பார்த்ததும் சாரே எக்ஸ்ப்ளைன் பண்ண ஆரம்பிச்சுட்டார்! ஈக்வஷேனெல்லாம் ஈசியா சொல்றாரு சார்! நீங்களே கேளுங்களேன்! அண்ணே, அண்ணே, அந்த ஈக்வஷேனை சொல்லுங்கண்ணே” என அவனைக் கோர்த்து விட.. பல்லைக் கடித்தான் அவன்.
“அப்டியா?” என்று நிமிர்ந்த கெமிஸ்ட்ரி கண்ணாடியைச் சரி செய்தபடி அவனை நோக்கி..
“அடடே! நம்ம அசோக்கு!” என்றவர் “சொல்லுப்பா” என்றார்.
“என்னத்த சொல்ல?, கீர்த்தின்னு நேம் போர்டை வைச்சுக்கிட்டு குடுவைக்கு நடுவுல நிற்குறவ அவ தான் சார்! நான் என்னத்துக்கு சொல்லனும்?, அவளைச் சொல்லச் சொல்லுங்க”
“ஒரு சீனியரோட கெமிஸ்ட்ரி ஆர்வத்தைத் தெரிஞ்சுக்க வேண்டியது ஒரு ஜூனியரோட கடமை சார்! அண்ணனைச் சொல்லச் சொல்லுங்க”
“ஏய்ய் அண்ணன்,நொன்னன்னேன்னா வாயை உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்” – வாத்தியாரை மதிக்காமல் நேரடியாகப் பாய்ந்தவனைக் கண்டு அவள் மிரள..
“அதான, ஏம்மா உன் மூக்குத்தி அழகா இருக்குன்னு சொன்னவனைப் பார்த்து நீ அண்ணன்னுவியா?” – வவ்வாலும் அவனோடு கூட்டு சேர.. அடப்பாவி என நண்பனை நோக்கியவன்..
“டேய் மாப்ள.. நான் கூடு தான் டா கட்றேன்! ஆனா.. நீ வூடே கட்டிருவ போலயே டா!” – என்று விட்டு.. கெமிஸ்ட்ரியிடம்..
“என்னா சார் ஜூனியர் புள்ளைங்க ஒன்னும் தேறாது போலயே! ஈக்வேஷனைக் கேட்டா இந்தப் புள்ள ஈஈஈஈஈ-ன்னு நிற்குது! இப்பிடியே போனா.. அடுத்த செட்-ல இந்த ஸ்கூல்ல இருந்து கெமிஸ்ட்ரில டிஸ்ட்ரிக் ஃபர்ஸ்ட் வராது சார்” என்று ஏகத்துக்கும் குறை பாட..
டென்ஷனாகிப் போன கெமிஸ்ட்ரி “கீர்த்தி, எக்ஸ்பரிமெண்ட்டை எக்ஸ்ப்ளை பண்ணு” என்றார்.
‘கொட்டை போட்ட மொட்டத் தலையா! ஐடியா ஆரம்பிச்சதுல இருந்து ஐயாயிரம் தடவை எக்ஸ்ப்ளைன் பண்ண தியரியை, ஒரு ஐராவதத்துக்கு முன்னால சொல்லச் சொல்லிக் கேட்குறானே’ – என உள்ளுக்குள் பொறுமித் தள்ளியவள்..
வேறு வழியின்றி எக்ஸ்ப்ளைன் செய்யத் துவங்க.. வவ்வாலின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு, ஸ்டைலாக சுயிங்கம்மை மென்றபடி, நக்கல் புன்னகையுடன் அவள் பேசுவதற்கேற்ப தலையாட்டிக் கொண்டிருந்தான் அசோக்.
அவனது எக்ஸ்ப்ரஷன் கொடுத்த ப்ரஷரில், கடுப்பாகிப் போய் முன்னே நின்றவனின் முகத்தில் அவள் புகையடித்து விட, ‘லொக்,லொக்’ என இருமியபடி பின்னே சென்றவன்..
“என்னங்க சார் இது கண்ணெல்லாம் எரியுது?” – என இரு கண்களையும் தேய்த்து விடத் தொடங்க..
வெற்றிச் சிரிப்பு சிரித்தவள்..
“கேஸ்-ன்னா, கேர்ர்ர் ஆகத் தான்ப்பா செய்யும்! என்னா சார் இது? சீனியரெல்லாம் இப்பிடி இருக்காங்க?, இந்த செட்-ல டிஸ்ட்ரிக் ஃபர்ஸ்ட்டெல்லாம் ரொம்ம்ம்பக் கஷ்டம் போலயே!” – என அவனது டயலாக்கை அவனுக்கே திருப்பிப் படிக்க காண்டாகிப் போனவன், கண்ணை விழித்துப் பார்த்து அவளை முறைக்க முடியாமல், தடுமாறி, வவ்வாலின் தோளைப் பற்ற..
அவளது வில்லிச் சிரிப்பில் பம்மிப் போயிருந்த வவ்வாலு “மாப்ள, இது ஒரு மூக்குத்தி போட்ட வைஜெயந்தி மாலா டா! வா வா போய்ரலாம்” - என்றபடி அவனை இழுத்துக் கொண்டு முன்னே நடந்தான்..
எரிச்சலில் பொங்கி வழிந்த நீரைத் துடைத்தபடி “பார்த்த அன்னிக்கே கண்ணுல தண்ணி வர வைச்சுட்டாளே! இவளை சும்மா விடக் கூடாது மாமா” – என மூடிய கண்களுடன் முனகியவனிடம்..
“ஏன் டா டேய், அவ உன் கண்ணை நோண்டி காக்காய்க்குப் போடாத குறையா டேமேஜ் பண்ணி அனுப்பியிருக்கா! இன்னும் எதுக்கு டா டயலாக் பேசுற? மாப்ள, பொண்ணுங்க சகவாசம், அதுலயும் இவளை மாதிரி டேஞ்சரஸ் பொண்ணுங்க சகவாசம் என்னிக்குமே நல்லதில்ல டா” என வவ்வாலு சவடால் பேச..
“அப்டின்றியா?, அதுவும் சரி தான் மாமா” – என பட்டென்று ஒப்புக் கொண்டவன்.. கன்னத்தில் ஒழுகிய நீரைத் துடைத்து “இனி இவ பக்கமே போகக் கூடாது டா சாமி! “ – எனப் புலம்பியபடி ஓடி விட்டான்.
சம்பவம் – 2
அன்று காலாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்கள் தங்களுக்குள் காப்பியடிப்பதற்குத் தடை போடும் பொருட்டு +1 மாணவர்களை +2 மாணவர்களோடு இணைத்து அமர வைத்திருந்தனர்.
அசோக்கின் கேடு காலமோ என்னவோ, அவனுக்கு அருகே கீர்த்தி!
அவளைக் கண்டதும், உள்ளே ஜெர்க் ஆனாலும் சமாளித்து.. பயத்தை மறைக்கும் பொருட்டு ‘த ர ரி ந…’ எனப் பாடியபடி முன் தலை முடியைக் கோதிக் கொண்டு காலாட்டியபடி அமர்ந்திருந்தான்.
அவன் ஆட்டிய ஆட்டில், பெஞ்ச் ஆட.. பக்கவாட்டில் திரும்பி அவனை முறைத்தாள் அவள்.
‘எதுக்கு பார்க்குறா’ என்று நினைத்தாலும் திரும்பாமல்.. மீண்டும் ‘த ர ரி ந…’ என்றவனைக் கண்டுப் பல்லைக் கடித்து.. டெஸ்க்கை நொட்,நொட்டெனத் தட்டி அவனை அழைத்தாள்.
அசால்ட்டாய் அவள் புறம் திரும்பியவன், புருவத்தை உயர்த்தி “என்ன?” என்றான் சைகையில்.
ஆடிக் கொண்டிருந்த அவன் கால்களையும், டெஸ்க்கையும் பார்வையிட்டு அவன் முகத்தை நோக்கியவளிடம்.. புருவத்தை சுருக்கியவன்..
“என்ன ஷூ வேணுமா?? இல்லையா??? ஓஓஓ பென்சிலா?” எனக் கேட்க.. பல்லைக் கடித்தவள்..
“கால் ஆட்டுறதை நிறுத்து” என்றாள்.
அவள் ஏக வசனத்தில் தன்னைக் குறிப்பிட்டதை உணர்ந்துத் தாடையை இறுக்கியவன்.. கால்களை நன்றாகக் குலுக்கி..
“ரோமியோ ஆட்டம் போட்டா.. சுற்றும் பூமி சுற்றாதே” – என ஹை ஸ்பீடில் பாட.. அய்யோ என நெற்றியைப் பிடித்தவள்.. அவன் குதித்த குதிக்கு ஆடிய தன் பாடியைப் பிடித்து வைக்க எண்ணித் தரையில் காலை பலமாக ஊன்றினாள்.
அதன் பின்பு அனைவரும் தேர்வெழுதத் தொடங்கி விட.. ஒவ்வொரு முறையும், யோசிக்கும் போது நிமிர்பவன்.. ‘த ர ரி ந…’ என வாசித்ததையே வாசித்தபடி.. எழுதிக் கொண்டிருக்க.. பாதி நேரம், கடித்தப் பற்களுடனே அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
கிட்டத்தட்டத் தேர்வு முடிவுறும் சமயம், ‘ஷ்ஷ்’ என்கிற சத்தத்தில் இருவரும் பின்னால் திரும்பி நோக்கினர்.
அசோக்கின் பின்னே அமர்ந்திருந்த வவ்வாலு பரிதாபமான முகத்துடன் “மாப்ள பெயிலா போயிருவேன் போல டா” என்று முணுமுணுத்தான்.
இன்விஜிலேட்டரை ஒரு முறை நோக்கி விட்டு மெல்லத் திரும்பிய அசோக் “எத்தனாவது க்வஸ்டின்?” என்றான்.
அவன் கேள்விகளைக் கூறியதும், அதற்கான விடைத்தாள்களைத் தனியே பிரித்தெடுத்தவன், இன்விஜிலேட்டரை நோட்டம் விட்டபடிப் பட்டெனப் பின்னே நீட்டி விட்டு, அமைதியாய் அமர்ந்து விட்டான்.
வழக்கம் போல் கால் ஆட்டியபடி ‘த ர ரி ந..’ என்றவன் பக்கவாட்டில் தன்னை பிளந்த வாயுடன் நோக்கிக் கொண்டிருப்பவளைக் கண்டு “ப்ச், இது ஒரு அதிர்ச்சி பைத்தியம்” என்று முணுமுணுத்து விட்டுப் பின்னே திரும்பி நண்பனுக்கு சைகை செய்தான்.
அடுத்த பத்தாவது நிமிடம் கீர்த்தியின் துப்பட்டா சுரண்டப்பட, மெல்லத் திரும்பினாள்.
அவளது வகுப்புத் தோழியொருத்தி “பத்து மார்க் க்வெஸ்டின் 1 மட்டும் காட்டு கீர்த்தி” என்றாள்.
கண்ணைப் பெரிதாய் முழித்து “ம்ஹ்ம்ம்ம்ம் முடியாது” எனத் தலையாட்டியவள் முன்னே திரும்பிக் கொள்ள..
அவளைக் கேவலமாய் நோக்கியவன் “மனசாட்சியில்லாத மண் சட்டி” என்று திட்ட வேறு செய்ய..
குற்ற உணர்விற்கும்,பய உணர்விற்கும் இடையே திண்டாடியபடி மெல்லத் திரும்பித் தோழியை நோக்கினாள் கீர்த்தி.
அவள் அழுகையும்,கோபமுமாய் அமர்ந்திருப்பதைக் கண்டு எரிச்சல் வர “உங்கப்பன் எனக்கும் சேர்த்தா டி ஃபீஸ் கட்டுறான்?, காட்டு,காட்டுன்னு கடுப்பேத்துற?” என்று திட்டித் தீர்த்தவள், மெல்ல நகர்ந்து.. விடைத்தாளை வலது புறமாய் அவளுக்குத் தெரியும்படி நகர்த்தித் தொங்க விட்டு, அவளிடம் சீக்கிரமாய் எழுதச் சொல்லி சைகை செய்தாள்.
அவள் செய்கையைக் கண்டு வந்த சிரிப்பை உதட்டில் அடக்கியவன் “பரவாயில்லயே! பயந்தாலும் பர்ஃபார்மன்ஸ் காட்டுறா” என்று விட்டு வவ்வாலிடம் “டேய்.. சீக்கிரம் டா” என்றான்.
காயப்போட்டத் துணியைப் போல் தொங்கிக் கிடந்த அவளது பேப்பரையும், இங்கொரு கண்ணும்,தன் பேப்பரில் ஒரு கண்ணுமாய் அப்பட்டமாகக் காப்பி அடித்துக் கொண்டிருந்த தோழிப் பெண்ணையும் கண்டு விட்ட இன்விஜிலேட்டர்.. அவளது பெஞ்சினருகே நிற்க.. வியர்த்து வழிந்த முகத்துடன்.. அவசரமாய் பேப்பரை நகர்த்தினாள் கீர்த்தி.
“ஏய்ய்.. எழுந்திருங்க ரெண்டு பேரும்” என்று அவர் அதட்டியதும் அவசரமாய் அவள் எழுந்து நிற்க..
பின்னாடி பெஞ்சில் மாட்டிக் கொண்டத் தன் பேப்பரின் கதியை நினைத்துக் கவலை கொண்டான் அசோக்.
“வர வர பொம்பளப் பிள்ளைங்களுக்கும் தைரியம் கூடிப் போச்சு! அசிங்கத்துக்கு அஞ்சுறதில்ல! காப்பி அடிச்சா பரீட்சைல பெயில்ன்னு சொல்லித் தான உள்ளே அனுப்பினோம்? ம்?? “ என்று அதட்ட.. ஒட்டு மொத்த வகுப்பறையும் தன்னை நிமிர்ந்து பார்ப்பது கண்டு அவமானமாய் போய் விட்டது தோழிகள் இருவருக்கும்!
“நா..நான் எழுதுனதை ரிவைஸ் தான் பண்ணிட்டிருந்தேன், இந்தப் புள்ள பின்னாடியிருந்து பார்க்கும்ன்னு எனக்குத் தெரியாது சார்”
தான் மட்டும் தப்பித்துக் கொள்ள எண்ணி கீர்த்தி பிட்டைப் போட..
“அடிப்பாவி!” என்றெண்ணிய அசோக், கால் ஆட்டியபடியே ஓரக்கண்ணால் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரிவைஸ் பண்றவ தான், கொடில காயப்போட்ட துணியாட்டம் பேப்பரைத் தொங்க விட்டிருந்தியாக்கும்?”
“அ..அ..அது வந்து சார்..”
“ரெண்டு பேரும் எழுதுன வரைக்கும் போதும்! எழுந்திருங்க! ஹெச்.எம் ரூமுக்கு!” - என்றவர் வெடுக்கென இருவரது பேப்பரையும் பிடுங்கிக் கொள்ள..
“சார்.. சார்.. சாரி சார்! இனிமே பண்ண மாட்டோம் சார்” – என்ற தோழி அவர் பின்னேயே போக..
“காப்பி அடிச்சது அவ தான்! நான் வேற எதுக்கு சார்?” – எனக் கெஞ்சிய கீர்த்தியிடம்..
“அவ காப்பி அடிக்க உதவி பண்ணதே நீ தான?, நட நட” என்று விட்டு அவர் முன்னே நடக்க.. அடக்கிப் பார்த்தும் முடியாமல் ‘களுக்கென’ சிரித்தனர் அசோக்கும்,வவ்வாலும்!
இருவரும் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துப் புகைந்து போனவள்.. முன்னே நடந்தவரை நிறுத்தி..
“நியாயமா பார்த்தா, எங்களோட சேர்ந்து இன்னும் ரெண்டு பேர் ஹெச்.எம் ரூமுக்கு வர வேண்டியிருக்கு சார்” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டு ஜெர்க்கான இருவரும் “அட மரப்பல்லி” என்று மனதுக்குள் திட்டியபடி அவசரமாய் தலை தாழ்த்த..
“யாரைச் சொல்ற?” என்ற வாத்தியின் கேள்வியைத் தொடர்ந்து.. எதுவுமே தெரியாதது போல் முகத்தை வைத்தபடி தங்களது பேப்பரை நோக்கிக் குனிந்திருந்த இருவரையும் கை காட்டினாள் கீர்த்தி.
“செத்தடி இன்னிக்கு நீ!” எனத் திட்டியவன் தைரியமாய் நிமிர்ந்து “மீ???” எனக் கேட்டு “ஹ்ம்ம்! ஃபன்னி கேர்ள்” என்று விட்டு மீண்டும் பேப்பரில் குனிந்து விட..
“என் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பன்னிரெண்டாங் க்ளாஸ் பையன் பேப்பரு, அவன் பின்னால உட்கார்ந்திருக்கிற வவ்வாலு கிட்ட இருக்குது சார்” எனப் போட்டுக் கொடுத்தாள்.
அவள் கூறியதும் வேக,வேகமாய் தங்களை நோக்கி நடந்து வந்தவரைக் கண்டு… குனிந்து “மாமா.. சமாளி டா!” என்று முணுமுணுத்தவன்..
“குட் ஆஃப்டர்னூன் சார்” என்று சல்யூட் வைத்தான்.
அவனது சல்யூட்டை சாக்கடையில் போட்டு விட்டு, பொளீரென அவனது பின் மண்டையில் இடியை இறக்கியவர், “பேப்பரை மாத்துறீங்களா டா பன்னாடைகளா?” என்றார்.
அவரது இடியில் தலையைத் தேய்த்தவன் “சார்..” எனக் கத்தியபடி எழுந்து நிற்க.. பம்மிய நிலையில் தானும் எழுந்தான் வவ்வாலு.
“சார் அந்தப் புள்ள பொய் சொல்லுது சார்! நாங்க பேப்பரெல்லாம் மாத்தல சார்”
“பொய்,பொய்யா டா சொல்ற?” – கன்னத்தில் அறைய வந்தவரைத் தடுத்துப் பின்னே சென்றவன்..
“மினிஸ்டர் மகன்னு கூடப் பார்க்காம நீங்க இப்பிடி மின்னல் வேகத்துல தாக்குறதெல்லாம் ரொம்பத் தப்பு சார்” எனக் கூற..
“மினிஸ்டர் மகனா டா நீயி??” – என அதிர்ச்சியாய் வினவியவரிடம்..
“அப்பிடின்னு சொல்லிக்க எனக்கும் ஆசை தான் சார்! ஆனா எங்கப்பா மின்வாரியத்துல மேனேஜரா இருக்காரு சார்” – என்று அவன் பங்கமாய் வார..
“டேய்….” என்று பல்லைக் கடித்தவர்… “உன் பேப்பரைக் காட்டுடா” என்றார்.
“காட்டுறேன் காட்டுறேன் சார்! உங்களுக்குக் காட்டாம எங்க போயிடப் போறேன்! ஆனா.. அதுக்கு முன்னாடி, இதான் சாக்குன்னு பேப்பரைப் பின்னாடி டெஸ்க்குல வைச்சு, ஸ்ட்ரைட்டாவே காப்பி அடிக்குறவனைக் கொஞ்சம் நோட்டம் விடுங்க சார்” – என்று மற்றொருவனை இவன் காட்டிக் கொடுக்க..
“என்னது??” என்று அவர் திரும்பிய கேப்பில், சட்டெனத் தனது பேப்பரை வவ்வாலிடமிருந்து பறித்து தனது டெஸ்க்கில் பதுக்கினான் அசோக்.
அவன் செய்கையைக் கண்டு “சார்.. சார்.. சார்…” என்று கூவிய கீர்த்தியைப் பார்வையால் எரித்தவன்..
“அடியேய்ய்ய் ஆதிமந்தி!! உன்னை அப்புறமா கவனிக்குறேன் டி!” என்று பல்லைக் கடித்து, பவ்யமாய் நின்றான்.
“சார்ர்ர்ர்..” – உரையாற்றிக் கொண்டிருந்தவரை இடையில் நிறுத்தியபடி கீர்த்தி.
“என்னாம்மா?”
“நீங்க அந்தப்பக்கம் ஆத்துன கேப்ல, இந்தப் பக்கம் இவங்க பேப்பரை மாத்திட்டாங்க சார்”
“டேய்.. செவிலு பிய்யனுமாடா உங்களுக்கு?”
“சார், ஆரம்பத்துல இருந்தே என் பேப்பரு என் கிட்ட தான் சார் இருக்கு! இது ஏதோ கடுப்புல கப்பல் ஓட்டுது”
“சார்ர்ர்…”
“என்னா சார்,மோர்ன்னு??, சார், இந்தப் புள்ளையெல்லாம் அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்ல இப்பிடி பகடி வேலை பார்த்திட்டிருந்துச்சுன்னா, நம்ம ஸ்கூல் மானம் என்னா சார் ஆகுறது?, இந்த ஸ்கூல்ல பதினொன்னாங் க்ளாஸ் புள்ளைகளுக்கு பயமே இல்ல சார்! முக்கியமா இதுக்கு.”
“சார், இவன் யோக்கியனாட்டம் பேசி உங்களை திசை திருப்பப் பார்க்குறான்! பேப்பரை மாத்திட்ட தைரியத்துல பேசுறான் சார்”
“பார்த்தீங்களா சார்?, சீனியர்ங்குற மரியாதையே இல்லாம அவன்,இவன்ங்குது என்னைய!” என்றவன் தொடர்ந்து “வெளிய வா நீயி! கழுத்தைத் திருகுறேன்!” என்று சைகை செய்ய..
“ஏய் ச்சீ.. வாயை மூடுங்க” என்ற வாத்தி, அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மாணவர்களிடம் அவன் பேப்பர் மாற்றியதைப் பற்றி விசாரிக்க.. அவர்கள் ஆம் எனத் தலையாட்டியதும், அசோக்கின் காலரைப் பற்றியவர்..
“கொஞ்ச,நஞ்சப் பேச்சா டா பேசுன நீ?” என்று அவனை இழுத்துக் கொண்டு முன்னே நடக்க..
“சார்,சார் சார், நான் எதுவும் பண்ணல சார்” எனப் புலம்பியபடியே நடந்தவன்.. பகிரங்கமாய் சிரித்துக் கொண்டுப் பின்னே வந்தவளை ஆத்திரத்துடன் நோக்கி “அடியேய் பொம்பள ரூபத்துல இருக்குற நம்பியாரு! உனக்கு இருக்கு டி”- எனக் கூவினான்.
சம்பவம் -3
காந்தி ஜெயந்திக்கு முந்தைய நாள் அன்று மதிய நேரம்.
லோக்கல் பொலிடிஷியன் ஒருவரின் வருகையால் மாணவ,மாணவிகள் அனைவரும் மைதானத்தில் தரையில் அமர்ந்திருந்தனர். தேச பக்திப் பாடல்கள் ஒரு புறம் ஒலித்துக் கொண்டிருக்க, மேடை முழுதும் பெருசுகளால் நிரம்பியிருந்தது.
“சங்கே முழங்கு” – எனக் கத்திப் பாடியபடி மைதானத்தின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த அசோக், தலையை ஆட்டியபடி பக்கவாட்டில் திரும்புகையில், எதிரே தெரிந்தாள் சிலுக்கு சின்னாத்தா.
முழங்காலில் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தோழியுடன் இளித்துப் பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் இஞ்சி கடித்தது போல் சுர்ரென்று இருக்க..
“ஆனா.. இவ-லாம் என்ன ஜென்மம்?, பிட் அடிச்ச அன்னிக்கு அந்த ஃப்ரெண்டு புள்ளைய பங்கமா மாட்டி விட்டுட்டு, இன்னிக்கு அவளோடயே அரட்டை அடிச்சிட்டிருக்கா” -என்று திட்டியவன்..
“டேய் மாமா.. வவ்வாலு… எனக்கு அவளைப் பார்த்தாலே.. அவெர்ஷனா இருக்கு டா” என்றான்.
“பார்க்காத மாப்பு! பார்க்காத! அவ ஒரு கொள்ளிக் கண்ணு வைச்ச குரங்கு மாப்ள! அவ பார்வை பட்டாலே.. நமக்கு பால் ஊத்துறாய்ங்க! பேசாம விட்ரு மாப்ள!”
அவளை முறைத்தபடியே “வாஸ்தவம் டா மாமா! சரியான சூனியக்காரி” என்றவன் பின் திடீரென ரோஷப்பட்டு “மாமா இவளையெல்லாம் பார்த்து பயப்பட்ற அளவுக்காடா நம்ம நிலைமை இருக்கு?, மீசை வைச்ச ஆம்பளைங்க டா நாம”
“ஆனா… நான் அப்பிடி டக்குன்னு சொல்லிட முடியாது மாப்ள! எனக்கு இப்பத் தான் தாவாங்கட்டைல தம்மத்துண்டு முடி வந்திருக்கு”
“அடச்சை! தொடைநடுங்கி நாயே!”
“இப்ப என்னா மாப்ள பண்ணனும்ன்ற? சொல்றா! செஞ்சிருவோம்! வேகமா போய்.. அவ ரிப்பனை அவுத்து விட்டுட்டு ஓடி வந்திறவா?”
ஆர்வத்துடன் கேட்டவனை அல்ப்பமாய் நோக்கியவன்..
“உனக்கெல்லாம் மீசை வளர்றது கஷ்டம் தான்” என்றான்.
“ப்ச், பின்ன என்னா தான் டா செய்யச் சொல்ற?”
“ஹ்ம்ம்ம்” – எனத் தாடையைத் தடவிக் கொண்டுத் தரையைப் பார்த்தபடி யோசித்தவன், கீழே ஊர்ந்து கொண்டிருந்த கம்பளிப் பூச்சியை நோக்கினான்.
“மாமா.. டேய்..”
“என்ன டா?”
“இந்தப் பூச்சியைப் பிடிச்சுக் கொண்டு போய் அந்தப் பட்சி மேல போட்றவா?”
“ம்க்கும்! இதுக்கு என் ரிப்பன் ஐடியாவே பெட்டரு”
“ப்ச், நம்ம வளர்ந்த வளர்ப்பு அப்டி டா மாமா! நாம-லாம் கௌரவமான குடும்பத்துல பிறந்தவங்க டா”
“அதுசரி”
“மாமா.. இந்தா… இந்தப் பேப்பர்ல பூச்சியைப் பிடி” என்றவன்.. கம்பளிப்பூச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு அவளுக்குக் கட்டம் கட்டச் சென்றான்.
கடைசி வரிசையில் அமர்ந்திருந்தவளைக் கடந்து செல்லும் போது, அசால்ட்டாய் பூச்சியை அவள் மீது அவன் வீசி விட.. அவளது கழுத்துச் சங்கிலியில் சுருண்டு அமர்ந்து கொண்டது பூச்சியும்.
அதன் பின்பு தனக்கான இடத்திற்கு வந்து சேர்ந்தவன், அவளை நோட்டம் விட்டபடியே அமர்ந்திருந்தான்.
“என்னடா மாப்ள ரியாக்ஷனே இல்ல?” – வவ்வாலு.
“ஓரு வேளை பூச்சி செத்திருச்சோ?” – அசோக்.
“சான்ஸ் இருக்கு மாப்ள!”
“ப்ச், அப்ப பூச்சி ப்ளான் ஃப்ளாப்-ஆ?” – என்று அவன் புலம்பிய வேளை, தன் தோழியிடம் ஏதோ கூறி விட்டு அவள் கூட்டத்தை விட்டு நகர்ந்து செல்வது தெரிந்தது.
“மாமா, இன்னொரு பூச்சியைப் பிடிடா” என்றவன் விறுவிறுவென எழுந்து அவள் பின்னே சென்றான்.
தண்ணீர்த் தொட்டியினருகே நின்றிருந்தவள் அண்ணார்ந்து தண்ணீர் பருகிக் கொண்டிருக்க, நான்கடி இடைவெளியில் அவள் பின்னே நின்றவன், அவள் கழுத்தருகே பூச்சியைத் தேடினான்.
“பூச்சிக்கு சமாதி கட்டிட்டியேடி மூதேவி!” – என்று மனதுக்குள் திட்டியவன் ‘நீடுழி வாழ்க’ என்று விட்டு பூ தூவுவதைப் போல் பூச்சியை அவள் மீது தெறிக்க விட.. திடீரெனத் தன் கழுத்தருகே வந்து விழுந்தப் பூச்சியைக் கண்டுப் பதறிக் குதித்து.. உடலைக் குலுக்கியவளைக் கண்டு..
“அட அட அட அட! என்னா ஆட்டம்! வாடி என் வைஜெயந்தி மாலா” என்று கையைத் தட்டியவன்..
“இங்க, இங்க, இங்க ஷோல்டர்ல ஷோ காட்டிட்டு நிற்குது பாரு” எனக் கூற..
“எங்க,எங்க, எங்க” என்று துள்ளியவள் கைகளால் இப்படியும்,அப்படியுமாய்த் தட்டி விட..
“ஆடிய ஆட்டமென்ன… பேசிய வார்த்தையென்னஅஅஅ…!!! “ என்று பாட்டு வேறு பாடினான்..
“அடேய்… பரதேசி! பூச்சி எங்கடாஆஆஆ?” என்று கத்தியவளை நோக்கி..
“அது முதுகை நோக்கி முன்னேற ஆரம்பிச்சு முக்கால் அவர் ஆச்சு டி மாலா” எனக் கூற..
“ஆஆஆஆஆஆ” என முதுகைத் தட்டிக் குதித்தவள்.. நிலை தடுமாறி.. பின்னால் கைகளை வீசியபடிக் கீழே விழப் பார்த்தாள்.
“ஏய்…ஏய்ய்..” என அதிர்வதைப் போல் தொடங்கியவன் பின் “ஹாஹாஹாஹா” என சிரித்து வைக்க.. கீழே விழ இருந்தக் கடைசி நொடி அவள் கையில் சிக்கிய அவனது முன்னுச்சி முடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தண்ணீர்த் தொட்டியின் அருகே தேங்கியிருந்த சேற்றில் விழுந்தாள் கீர்த்தி.
அவளது கையைத் தட்டி விட முனைந்து முடியாமல்.. கீழே விழுந்தவளின் தோள்ப்பட்டையருகே நச்சென முகத்தை சேற்றில் பதித்தபடிக் குப்புறக் கிடந்தான் அசோக்.
அவசர,அவசரமாய்ப் பதறி எழுந்த கீர்த்தி, முகத்தை வழித்தபடி நிமிர்ந்தமர்ந்தவனை நோக்கிக் காலை உயர்த்தி மிதிக்க எத்தனிக்க,
“ஏய்ய், ஏய்ய்..” என அதிர்ந்து… தூக்கிய அவளது காலைப் பற்றியவன் அவள் இழுத்துக் கொள்ள முயன்ற நேரம் பிடித்திழுத்து விட.. மறுபடியும் தலை குப்புறக் கீழே விழுந்தாள் கீர்த்தி.
அதற்குள் முகத்தைத் துடைத்தபடி எழுந்து நின்றவனைக் கண்டவள் “அடேய்ய்ய்ய் ஓசோனுக்குப் பிறந்த ஓணானே! உன்ன….” என்று பொங்கிய நேரம்..
“கீர்த்தீஈஈஈஈஈ” என்கிற ஃபிஸிக்ஸ் மிஸ்ஸின் சத்தத்தில் “மேம்ம்ம்” என்றபடி அடித்துப் பிடித்து எழுந்து நின்றாள்.
சகதியில் புரண்டு விளையாடிய பன்றிக்குட்டிகளாய் நின்ற இருவரையும் பல்லைக் கடித்தபடி நோக்கிய டீச்சர், “நாளைக்கு ரெண்டு பேரும் பேரண்ட்ஸோட என்னை மீட் பண்ணுங்க” என்று விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டார்.
அவன் தன் மீது பூச்சியை விட்டெறிந்து பிள்ளப்பூச்சித்தனமாய் நடந்து கொண்ட விதத்தை மிஸ்ஸிடம் எடுத்துக் கூறிய கீர்த்தி, அவன் மீது மட்டுமே தவறிருப்பதாய் சித்தரித்து விட, தனது செல்லப் பிள்ளையான கீர்த்தி சொல்வதனைத்தும் உண்மை என்று நம்பிய ஃபிஸிக்ஸ் மிஸ், அவளை மட்டும் மன்னித்தருளி விட்டு, அசோக்கை அவனது அம்மா,அப்பாவுடன் டிபார்ட்மெண்ட்டில் கட்டம் கட்ட..
அவன் ஆறாங்க்ளாஸில் அறிவியல் மிஸ்ஸிடம் ஆர்ம்ஸ் காட்டியதிலிருந்துத் தொடங்கி, பதினோறாம் வகுப்பில் கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டு பன்னு தின்னது வரை அவனது லூட்டிகள் அனைத்தையும் பெற்றோரிடம் எடுத்துச் சொன்னார்கள் வாத்தி-மக்கள்.
அவ்வனைத்தையும் கேட்டும் கூட, நிமிர்ந்த நெஞ்சுடன் விறைத்துப் போய் நின்றிருந்த அசோக், கடைசியாக ஃபிஸிக்ஸ் மிஸ் அவனைப் பொறுக்கி ரேஞ்சிற்கு கற்பனை செய்து கொண்டு, கன்னா,பின்னாவென கடைந்தெடுத்த போது.. ஆத்திரத்தின் ஆல்ப்ஸ் மலையை அடைந்து விட்டிருந்தான்.
“அவ என்ன பண்ணான்னு உங்களுக்குத் தெரியுமா மேடம்??” – எனத் தொடங்கியவனின் கன்னத்தில் அறைந்து கத்தரித்தவர்.. அதன் பின்பு அவனைப் பேச விடாமல் வூடு கட்டி அடித்ததில்.. கீர்த்தி மீதுக் கொலை காண்டை வளர்த்துக் கொண்டான் அசோக்.
இரண்டு மணி நேர இம்சையை முடித்துக் கொண்டு ஹெச்.எம் அறையிலிருந்து வெளியே வந்தவன்,முதல் வேலையாக பள்ளி வாசலருகேயிருந்த கடையில் பேனா வாங்கிக் கொண்டிருந்த கீர்த்தியின் முன்பு சென்று நின்றான்.
ஹெச்.எம் அறையில் கிடைக்கும் சூட்டில், அவன் அவிந்த அவலாக மாறி வெளி வருவான் என்று அவள் நினைத்திருக்க..
ஈஈஈஈஈ-யென்ற வாயுடன் பின் கழுத்தைத் தேய்த்தபடி சுயிங்கம்மை மென்று கொண்டிருந்தவனைக் கண்டு.. அதிர்ந்து நின்றவளின் முகத்தருகே “ம்க்கும்,ம்க்க்கும்” என்று இருமியவன்.. பின்னாலிருந்த சுவற்றின் புறம் திரும்பி.. அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் பாதியைக் கிழித்து.. மடித்து.. அவளிடம் நீட்டி..
“ஐ லவ் யூ…” என்றான்.
சில,பல வசந்த காலங்களுக்குப் பிறகான.. ஒரு கார்காலம்..
நகரத்தின் மையத்திலுள்ள அந்த ஸ்டார் ஹோட்டலில் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருந்தான் அவன். ஆர்டர் கேட்டு வந்த வெயிட்டரிடம் ஆள் வருவதாகக் கூறி வெய்ட் செய்யச் சொன்னவன், இருகைகளையும் நாடிக்கு முட்டுக் கொடுத்து.. வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அதே ஸ்டார் ஹோட்டலுக்கு ஸ்கூட்டியில் வந்திறங்கிய அவள், கையிலிருந்த ஃபோனைக் காதுக்குக் கொடுத்து “அண்ணா நான் வந்துட்டேன்! நீங்க எப்போ வர்றீங்க? எனக் கேட்டு விட்டு.. “நான் போய் ஃபர்ஸ்ட் மீட் பண்றதா?,ப்ச், அண்ணா..”என சலித்து “சரி ஓகே” என்றவள் உள்ளே நுழைந்தாள்.
கார்னர் இருக்கை, காக்கி கலர் பேண்ட், கருப்பு நிற தொப்பி! ஆள் இவன் தான் போலும்!
மெல்ல நடந்து அவனருகே வந்து நின்றவள், மாஸ்க்குக்குள் மறைந்து கிடந்த அவன் முகத்தினருகே குனிந்து “வினோத்???” எனச் சொல்லிக் கேள்வியாக அவன் கண்களை நோக்கினாள்.
நிமிர்ந்து, மாஸ்க் அணிந்திருந்த அவள் கண்களை சுருக்கிய புருவத்துடன் பார்த்தவனைக் கண்டு, தான் அணிந்திருந்த மாஸ்க்கைக் கழட்டியவள், புன்னகைத்து.. “ஐம் கீர்த்தி..” என்றாள்.
வெளியே அடித்துக் கொண்டிருந்த மஞ்சள் வெயிலுக்குப் போட்டியாக.. ஜொலித்து மின்னிய அவன் கண்களுக்குள், சுருக்கிய புருவங்களுடன் அவள் உருவம்.
