அத்தியாயம் - 2

வி..வினோத்??”

கற்களாய் தன் மீது பதிந்து போயிருந்த அவனது கருமணிகளிடம் மறுமுறை கேள்வி கேட்டாள் அவள்.

அவள் குரலை உணர்ந்ததும், சட்டெனக் கீழே குனிந்து “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிக் கொண்டவன் பின் நிமிர்ந்து, அவள் கேள்விக்கு ஆம் என்றோ இல்லையென்றோ கூறாமல்.. எதிரேயிருந்த இருக்கையைக் காட்டி அவளை உட்காருமாறு சைகை செய்தான்.

அவள் அமர்ந்த பின்னும் கூட தன் முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கைக் கழட்டாதிருந்தவனை ஒரு மாதிரியாக நோக்கியவள்..

“எனக்கு நெகட்டிவ் தான்” என்றாள்.

“என்னது?”

“கொரோனா டெஸ்ட்டு”

“அதுக்கு??”

“இல்ல, முகக் கவசத்தை கழட்டுறதுல முனைப்பு காட்ட மாட்டேங்குறீங்களே! அதான் ஒரு இன்ஃபர்மேஷனுக்கு சொன்னேன்”

அவள் குரலில் வழிந்த நக்கல், அவன் கண்களில் தெறித்தது.

“நான் அரசு விதிகளை அசராம ஃபாலோ பண்ற ஆளு. அதனால பொது இடங்கள்ல மாஸ்க்கை கழட்டுறதில்ல”

“நீங்க கழட்டுனாலும் பெருசா பிரயோஜனம் இருக்கும்ன்னு எனக்குத் தோணல”

“ஏன்?”

“இல்ல, ஃபோட்டோலயே பார்க்க.. சுமாரா தான் இருந்தீங்க! நேர்ல மட்டும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துடப் போகுது”

“ஃபோட்டோவா?”

“ஆமா, இவர் தான் மாப்பிள்ளைப் பையன்னு வீட்ல.. காட்டுனாங்க”

“ஆஹா…..ன்!”

“உங்க தோற்றத்தைப் பத்திப் பேசுறேனேன்னு, நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலயே”

“ச்ச,ச்ச”

“பரவாயில்ல! ஸ்போர்டிவ் ஆன ஆள் தான் போல! கலாய்ச்சாலும் கண்டுக்காம இருக்கீங்க”

“…………”

“உங்கம்மா,அப்பா-லாம் வர்றதா எங்கண்ணன் சொன்னானே! எப்போ வருவாங்க?”

“வந்துடுவாங்க”

“ஹ்ம்ம்ம்” – என்றபடி கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தவளுக்கு அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியவில்லை!

ஓரக்கண்ணில் நோக்கிய போது அவன் தன்னையே விடாமல் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.

மெல்லத் திரும்பி அவனை நோக்கியவள், காதைச் சொறிந்தபடியே ‘ஈஈஈஈஈஈஈ’ என இளித்தாள்.

‘கருமாந்திரம் பிடிச்சவன், மொகரையைக் காட்டுனாவாது என்ன நினைக்கிறான்னு கண்டுபிடிக்கலாம்!, இத்துணூண்டு கண்ணுல என்ன இமாலய ரகசியத்தைக் கண்டு பிடிச்சிட முடியும்!’

“ம்க்க்க்கும், மாஸ்க்குக்குள்ள வாயை சும்மா தான வைச்சிருக்கீங்க?

“ஏன்?”

“இல்ல, ஏதாவது பேசலாம்ல?”

“அதான் இவ்ளோ நேரம் அம்மன் கோயில்ல அருள் வாக்கு கொடுக்கிறா மாதிரி விடாம பேசுனீங்களே! அப்டியே கண்டினியூ பண்ணுங்க”

“அடேங்கப்பா! உங்களுக்கும் எதுகை,மோனை எல்லாம் பலமா வரும் போல”

“நீங்க படிச்ச ஸ்கூலுக்கு நான் ஹெட் மாஸ்டரு”

“பார்றா! ஆமா, உங்கப்பா மந்தவெளில மரக்கடை வைச்சிருக்காருன்னு சொன்னாங்களே! அதை கவனிச்சிக்கிறது தான் உங்க வேலையா?”

“மரக்கடையா?”

“அதாங்க, ஃபர்னிச்சர் ஷோ ரூம்”

“ம்??, ஆமாமாமாமா”

“ஹ்ம்ம்! செட்டில் ஆன அப்பாக்கு பிள்ளையாப் பிறந்தா வாழ்க்கை வசந்தமாத் தான் இருக்கும் போலிருக்கு”

“……….”

“சொந்த மூளையை சொகுசா வைச்சுக்கிட்டு, அப்பாவை அண்டியே அண்டத்தைக் கடந்திடலாம்”

“அதுல என்ன தப்பிருக்கு? அம்பானி புள்ளைங்கள்லாம் ஆட்டோவா ஓட்டுதுங்க?, அப்பன் தொழிலைத் தான பார்க்குதுங்க?”

“நல்ல லாஜிக்கு”

“மேடம் என்ன பண்றீங்க?”

“******-பேங்க்ல மேனேஜரா இருக்கேன். ஏன்?, உங்க அம்பானி சாரி.. உங்கப்பா சொல்லலியா?”

“சொன்னாரு சொன்னாரு! உங்களுக்கு.. வயசு 2……9 இருக்குமா?”

“2…….9-ன்னு ஏன் இழுக்குறீங்க? 29-க்கு என்ன குறை?”

“29-க்கு ஒரு குறையும் இல்ல! ஆனா 29-அ திருப்பிப் போட்ட மாதிரி ஒரு ஃபேஸை வைச்சுக்கிட்டு, இன்னும் கல்யாணம் பண்ணிக்காம, பேங்க் மேனேஜர்ன்னு பேட்ஜ் குத்திட்டு சுத்திட்டிருக்கீங்களே! அதுக்குக் கேட்டேன்! போதாததுக்கு, இன்னும் புடவை,மூக்குத்தி,ஒத்த ஜடைன்னு டி.ராஜேந்தர் ஹீரோயினி மாதிரி வேற இருக்கீங்க”

“இது வர்க்-காக போட்ட கெட்-அப்பு! மத்தபடி ரெஸ்ட்ல இருக்கும் போது கை இல்லாத சட்டையும், கால் இல்லாத டவுசரும் போட்டு மாடர்ன் மங்கையா தான் இருப்பேன்”

“யாரு நீங்களா?”

“ஆமா! ப்ச்! என்னை விடுங்க! நீங்க முப்பத்திரெண்டுலயும் மூனு முடிச்சுப் போட்றதுக்கு ஆள் கிடைக்காம திண்டாடிட்டு இருக்கீங்களே! உங்க நிலைமை தான் என்னை விட கவலைக்கிடம்!”

“ஆம்பள அறுபது வயசுல கூட கல்யாணம் பண்ணலாம்ங்க”

“அதெல்லாம் கிறிஸ்து பிறப்புக்கு முன்-ங்க! இப்பலாம் நாற்பது வயசு பொண்ணுங்களைக் கட்டிக்கிறதுக்குக் கூட நானூறு பேரு க்யூல நிற்கிறானுங்க”

“எனக்கென்னமோ, உங்களுக்கு இருக்குற வாய்க்கு, நீங்க சமாதியாகுற வரைக்கும் சக்கு பாய்-ஆ தான் வாழ்வீங்கன்னு தோணுது”

“மிக்க நன்றிங்க! என்னைப் பத்திக் கவலைபட்றது இருக்கட்டும்! உங்களுக்கு வழுக்கை விழுகுறதுக்குள்ள, சீக்கிரம் வாழ்க்கைத் துணையை தேடுற வழியைப் பாருங்க”

“எங்கங்க! வழி தேடுற எனக்கு சிக்குறதெல்லாம் உங்களை மாதிரி சீக்கு வந்த சில்வண்டா தான் இருக்கு! என்னத்த சொல்ல”

அவன் அங்கலாய்த்துக் கொண்டதும்.. எரிச்சலுற்றவள்..

“மூக்கை மூடி வைச்சிருக்கும் போதே உங்களுக்குப் பேச்சு இத்தினி மூர்க்கமா வருது”

-என முழுதாகப் பொங்கி விடாமல், கடித்த பற்களிடையே வார்த்தைகளைக் கக்கிய போது ஃபோன் வர, தன்னையே நக்கலாக நோக்கும் அவன் கண்களை கோபமாய் பார்த்தபடி “ஹலோ” என்றாள்.

“சொல்லுண்ணா!”

“……..”

“என்னது??, மாப்ள வர…லியா? என்ன சொல்ற நீ?” – என்றவளின் முகம் சட்டென நிறம் மாறி விட, ஒரு நொடி திகைத்தவள்,மறு நொடி சுருக்கிய புருவங்களுடன் ஆராய்ச்சியாய் எதிரேயிருந்தவனை நோக்கினாள்.

காதில் வைத்த ஃபோனுடன் தன்னையே விடாது பார்ப்பவளைக் கண்டு சிரிப்பு வர.. விரிந்த இதழ்களுடன் மாஸ்க்கைக் கழட்டினான் அசோக்.

தலையைப் பின்னுக்கு சாய்த்து.. கைகளைக் கட்டிக் கொண்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவனை அங்கே..அந்த நொடி.. அவள்.. சற்றும் எதிர்பார்க்கவில்லையென்றாலும், அதிர்ச்சியை அடக்கி, முதிர்ச்சியை முன்னே கொண்டு வந்து.. ஒரு நொடி இமையை இறக்கி உதட்டை ஈரப்படுத்தியவள் பின் நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

“ட்ரெண்டிங் டைரக்டர் அசோக் மணிகண்டன்”

பொறுமையாக அவள் தன் பெயரையும்,அது பெற்ற பெயரையும் சேர்த்துக் கூற.. உதட்டை வளைத்து, புருவத்தை உயர்த்தினான் அவன்.

“யூடியூப் சேனல்ல தொடங்கி, ஷார்ட் ஃபிலிம்ஸ்ல வளர்ந்து, ஒரு ஹிட் வெப்-சீரீஸ் கொடுத்து, கரண்ட் ட்ரெண்டிங்ல இருக்குற மோஸ்ட் வாண்டட் டைரக்டர்”

“ம்க்கும்” என்றபடி இருக்கையில் சரியாக அமர்ந்தவன்,

“என்னை நிறைய ஃபாலோ பண்ற போலயே” என்றான்.

“உன்னை… ஃபாலோ வேற பண்ணனுமாக்கும்! உன் மூஞ்சி தான் டிஜிட்டல் மீடியால டிசைன்,டிசைனா உலா போயிட்டிருக்கே”

“ஓ! நீ சோஷியல் நெட்வர்க்ல-லாம் இருக்கியா?”

“வங்கி மேலாளர்ன்னா எப்பவும் வரவு,செலவு பார்த்துட்டே இருப்பேன்னு நினைச்சியா?, நான்-லாம் யூடியூப்,இன்ஸ்டா,ஃபேஸ்புக்குன்னு டிஜிட்டல் மீடியால டே,நைட் ஸ்டே பண்ற ஆளு!”

“ஓஹோ! அதான் 29 வயசு வரைக்கும் இல்லற வாழ்க்கை உன்னை இழுக்காம இருக்கு போல”

“நீ என்னவோ பத்து புள்ள பெத்து பங்களால குடியிருக்க மாதிரி பேசுற?, நீயும் இன்னும் முரட்டு சிங்கிளா தான இருக்க? பாவம்,உன் நெத்தி வேற நெசப்பாக்கத்தை நோக்கி போயிட்டிருக்கு! மிச்ச,சொச்ச முடியும் கொட்டிப் போறதுக்கு முன்னாடி, கன்னாலம் கட்டி கரை சேரப் பாரு””

“நீ எப்பிடி? மரக்கடை வினோத்தைக் கட்டிக்கிட்டு மால்தீவ்ஸ்க்கு ஹனிமூன் போகப் போறியா?, ஆனா.. உனக்கு அவனைப் பிடிச்சா மாதிரியும் தெரிலயே! வந்ததுல இருந்து வாரிக்கிட்டே இருந்த?”

“ஆ..மா! எனக்குக் கல்யாணம்ன்ற வார்த்தையைக் கேட்டாலே கரிச்சுக்கிட்டு வருது”

“ஏன் அப்பிடி?”

“என்ன ஏன்?”

“இல்ல பொதுவா கல்யாணம் வேணாம்ன்னு சொல்ற பொண்ணுங்க, ஒரு ஃப்ளாஷ்பேக் வைச்சிருக்கும்ங்களே, மௌனராகம் ரேவதி மாதிரி! உனக்கு அப்பிடி எதுவும் இருக்கான்னு கேட்குறேன்”

“அது ஏன் கல்யாணம் ஆகலன்னு சொன்னாலே, காதல் தோல்வி தான்னு கன்ஃபார்ம் பண்றீங்க?, மோர் ஓவர், கல்யாணம் தான் பொம்பளைங்களுக்கு அடையாளமா இருக்கனுமா?, இந்த வயசுல மேனேஜர் பதவில இருக்கேன்! அதையெல்லாம் பெருசா பேச மாட்டீங்களா?”

“அடேங்கப்பா! நீ பேசுறதை கேட்டா, லேடீஸ் க்ளப்ல உட்கார்ந்து லேஸ் சிப்ஸ் சாப்பிட்ட ஃபீல் வருது!, உனக்கெல்லாம்.. 29 இல்ல, 59 ஆனாலும்.. எவனும் செட் ஆக மாட்டான்”

-அசால்ட்டாய் கூறியவனைக் கண்டு அதுவரை முகத்திலிருந்த நக்கல் விடைபெற்றுக் கோபம் வந்து விட.. மேஜையின் மீதிருந்த பழச்சாறால், அவனது முகத்தைப் பதம் பார்க்க எத்தனித்தாள்.

அவளது முயற்சி புரிந்தவன், “ஏ…ஏ..ஏய்ய்..” என்றபடி அவசரமாக அவளது கையைப் பற்றிய வேளை..

“அசோக்…” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி நோக்கினர்.

பழச்சாற்றை இறுகப் பற்றியிருந்தவளையும், அதை விட இறுக்கமாக அவளது கையைப் பற்றியிருந்தவனையும் நோக்கிய, அசோக்கின் தந்தை “என்னப்பா இங்க?” எனக் கேட்டார்.

பொறுமையாக அவள் கையிலிருந்தத் தன் கையை எடுத்தவன் “நீங்க எங்க இங்க?” என்றான்.

அவன் இறுகப் பற்றியதில் வலித்த கையை நீவியபடி அமர்ந்திருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு..

“ஹோட்டலுக்கு ஹோலி கொண்டாடவா வருவாங்க??, சாப்பிடத்தான்” என்று அவர் கூறிக் கொண்டிருக்கையில் “டேய் அசோக்.. யாரோ பிரடியூசரைப் பார்க்கப் போறதா சொன்ன?, இந்த ஹோட்டல்ல தானா?,” என்றபடி அவனது தாயும் வர..

“அட ஆமா, பிரடியூசர் பிச்சை பெருமாள் என்ன ஆனார்ன்னு தெரிலயே” என்றவன் அவசரமாகத் தன் மொபைலை எடுத்து நோக்கினான்.

அவன் தனது மொபைலுடன் ஐக்கியமாகிய வேளை தன் இருக்கையிலிருந்து அவள் எழுந்து கொள்ள..

“நீ யாரும்மா?, அசோக் ஃப்ரெண்ட்-ஆ?” எனக் கேட்டார் அவன் தாய்.

“ஃப்ரெண்ட்-ஆ?” என முகத்தைச் சுருக்கியவள் “அதெல்லாம் இல்ல” என்றாள் அசட்டையுடன்.

அன்னையிடம் அவள் காட்டும் ஆட்டிடியூடை நோக்கியபடி ஃபோன் பேசி முடித்தவன்,

“ஆமாம்மா, இது அந்த சர்வரோட சகதர்மினி போல! ஆப்பிள் ஜூஸ் வேணுமா, ஆரஞ்சு ஜூஸ் வேணுமா-ன்னு கேட்டுப் போக வந்துச்சு” – எனக் கூறியபடித் தானும் எழுந்து..

“சரி,வந்ததும் வந்துட்டீங்க இந்த ஹோட்டல்ல ஹல்வா நல்லாயிருக்கும்! சாப்பிட்டுப் போங்க” என்றவன், அவளிடம் “நட, நட” என்றபடி அவளை நகர்த்தப் பார்க்க..

“ப்ச்” என்ற முகச் சுழிப்புடன் அவனை விட்டு விலகி நின்றவள் எதிரே வந்து கொண்டிருந்தத் தன் குடும்பத்தாரைக் கண்டு.. “அண்ணா” என்றாள்.

அந்த மேஜையைச் சுற்றி நின்றிருந்த இவர்கள் நால்வரையும் கண்ட கீர்த்தியின் குடும்பம் (அன்னை,தந்தை,அண்ணன்- ஒரு நாய்க்குட்டி இருக்கு, ஆனா அது வீட்ல இருக்கு) இவர்களின் அருகே வந்து நின்றது.

தங்கையைக் கண்ட அடுத்த நொடி அண்ணனின் பார்வை அருகேயிருந்தவர்களை அளவிட,

அவனது பார்வையை உணர்ந்தும், அவன் புறம் திரும்பாமல் பாக்கெட்டுக்குள் கை விட்டபடி குறையாத கெத்துடன் நின்று கொண்டிருந்த அசோக்கைக் கண்டதும், நடையின் வேகத்தை ஒரு நொடி குறைத்த அண்ணன்காரன், பின் விறுவிறுவென நடந்து வந்து தங்கையின் அருகே நின்றான்.

“என்ன கீர்த்தி?” – அவசர மூச்சோடு அண்ணன்.

“ம்ம்ம், ஆர்.கீர்த்தி” – நக்கலாய் அசோக்.

“இவன் எங்க இங்க வந்தான்?” – அடிக்குரலில் அனலைக் கக்கியபடி அண்ணன்.

“எதுக்கு இப்ப உங்கண்ணன் மியூட்ல முக்கி-ன்னு இருக்குறான்?” – அதே அடிக்குரலில் அசோக்.

அவளது இருபுறமும் நின்று கொண்டு ஒருவரையொருர் நேரிடையாக எதிர்கொள்ளாமல், தன்னிடம் கேள்வி கேட்டதில் காண்டாகிப் போன கீர்த்தி, இவர்களை விட்டு விலகி..

“என்னப்பா, நீங்க பார்த்த மாப்ள இப்பிடி சொல்லாம,கொள்ளாம எகிறிட்டான்?” எனக் கேட்டபடித் தந்தையின் அருகே சென்று நின்றாள்.

“வாயைக் குறை கீர்த்தி” – என்று திட்டிய தந்தை… அருகே நின்றிருந்த அசோக்கின் தந்தையை நோக்கி “நீ…. மணிகண்டன் தான?” எனக் கேட்டார்.

“ஆமாம்! நீ.. ராசிபுரம் ராஜாங்கம் தான?”

“அட மணி! எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து! எப்படி மேன் இருக்க? கடைசியா நீ ஈ.பி-ல ஈயோட்டிட்டு இருக்கும் போது பார்த்தது”

“நீ மட்டும் என்ன கப்பலா ஓட்டிட்டு இருந்த?, யோவ் பிள்ளைங்க முன்னாடி ஏன்ய்யா மானத்தை வாங்குற?, வருஷம் கடந்தாலும் உன் வாய் குறையலேய்ய்யா?”

“அது ஒன்னு தான் என்னை வாழ வைக்குது! அதையும் ஏன்ய்யா குறைச்சிக்க சொல்ற?”

-அரட்டையோடு அரட்டையாக பெருசுகள் இரண்டும் குடும்ப சகிதம் அறிமுகப் படலத்தை முடிக்க.. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.

அண்ணனுக்கும்,அசோக்குக்கும் நடுவே கீர்த்தி.

“என்ன பேரண்ட்ஸ் பர்ஃபார்மன்ஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு”

தன்னருகே குனிந்து முணுமுணுத்தவனை சட்டை செய்யாது அவள் ஃப்ரைட் ரைஸை வாயில் அடைப்பதை கண்ட அண்ணன்..

“கீர்த்தி, நான் வேணா அந்தப் பக்கம் உட்காரட்டுமா?” என்றான்.

“ஏன், இந்தப் பக்கம் எளங்காத்து வீசுதா??” – அண்ணனின் அக்கறையைக் கேட்டு விட்ட அசோக், கீர்த்தியிடம்.

“இல்ல, ஒரு எடுபட்ட நாய் உட்கார்ந்துருக்கு” – எரிச்சலில் அண்ணன்.

“ஒரு டிஸ்கவரி சானல் என்னைய டாக் -ங்குது”

“கீ..ர்..த்..தீஈஈஈ”

“ஷ்ஷ்ஷ்” – தலையில் கை வைத்தக் கீர்த்தியிடம்..

“என்னம்மா, ரைஸ் காரமா இருக்குதா?” – அசோக்கின் தந்தை வேறு நடப்பது தெரியாமல் உள்ளே வர..

“ரைஸ் மட்டுமா காரமா இருக்கு??” – என்றவளைப் புரியாது நோக்கியவர்..

“நீயும்,அசோக்கும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சீங்கன்னு தெரியும், ஆனா ரெண்டு பேருக்கும் முன்னமே பரிட்சயம் இருக்காம்மா?” – எனக் கேட்டார்.

“ஹாங்?? ஹ்ம்ம் ஹ்ம்ம்” – தலையை நாலாபுறமும் ஆட்டியவளைக் கண்ட அண்ணன்,

“அதெப்படி தெரியாம இருக்கும்?, உங்க பையன் எவ்ளோ பெரிய ஆளு” – என்றான் நக்கலாய்.

“என்னப்பா??”

“இல்ல, அப்போ இருந்தே அவர் ரெபுடேஷன் அப்பிடி! அதைச் சொன்னேன்”

“என்னமோப்பா, டைரக்ஷன்,டிஜிட்டல் மீடியா-ன்னு இவன் சொல்ற எதுவும் எனக்குப் புரியவும் இல்ல, புடிக்கவுமில்ல! படிச்ச படிப்புக்குக் கிடைச்ச வேலையை விட்டுட்டு, இவன் இப்படியொரு நிலையில்லாத துறைல இருக்கிறது எனக்கு வருத்தம் தான்”

-மகன் குறித்தக் கவலையை அவர் பகிர்ந்து கொண்டிருக்க, அவனோ ‘இந்தாளுக்கு வேற வேலையில்ல’ என்பது போல் மஞ்சூரியனிலிருந்த கடைசி காலி ஃப்ளவரை,வெங்காயத்தோடு சேர்த்து வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தான்.

“என்னய்யா மணி இப்பிடி சொல்லிட்ட?, ப்ச், க்ரியேட்டரா இருக்கிறதுக்கெல்லாம் திறமை வேணும்ய்யா! நீயும்,நானும் கவர்மெண்டு உத்தியோகம் பார்த்துப் பெருசா என்னத்த சாதிச்சிட்டோம், புள்ளை பெத்துக்கிட்டதைத் தவிர!”

“அதுசரி! இருந்தாலும் ஸ்கூல்,காலேஜ்ன்னு டாப்பர்-ஆ இருந்த பய புத்தி இப்பிடி மாறிப் போயிருக்கேன்னு நினைக்கும் போது தான்…”

“யோவ், நான் பெத்ததுகளும் நல்லாப் படிக்குற கேஸ்-ங்க தான்! இப்ப 9 டூ 5 ஜாப்ல உட்கார்ந்து நாள ஓட்டிட்டு இருக்குதுங்க! இதுல புதுமை,திறமையெல்லாம் எங்க இருக்கு?, நம்ம காலம், ஃபினான்ஷியலா குடும்பத்தை உயர்த்துறதுலயே கரைஞ்சு போயிடுச்சு! இதுங்களுக்குத் தான் எல்லா வசதியும் செஞ்சு கொடுத்திருக்கோமே! புதுசா எதுவும் யோசிக்க வேணாம்?, உன் பையனை மாதிரி என் பொண்ணும் கெமிக்கல் இஞ்சினியர் தான்! நான் சயண்டிஸ்ட் ஆவா-ன்னு நினைச்சிட்டிருந்தேன்! இவ என்னடான்னா, அவ அப்பனையும், அண்ணனையும் ஃபாலோ பண்ணி பரீட்சை எழுதி பேங்கு வேலைக்கு சேர்ந்துட்டா”

“ப்ப்ப்ப்ப்ப்ப்ப்” – வாயை மூடி சிரித்த அசோக்கைக் கண்டுப் பல்லைக் கடித்த கீர்த்தி…

“தோப்பனாரே…..” என்று குரல் கொடுக்க..

“என்னம்மா?, பேசக் கூடாதா நானு?, எங்க ஆதங்கத்தைப் பதிவு பண்ணிட்டிருக்கோம்மா நாங்க” – என்றவரிடம்..

“இதைத் தான் இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்லுவாங்க அங்கிள்” – என சிரித்தபடிக் கூறினான் அசோக்.

“நல்லவனாட்டமே பேசுறான் பாரேன்” – வழக்கம் போல் அடிக்குரலில் அண்ணன்.

“நான் வில்லன் தான்! அதுக்கென்னவாம் இப்போ?” – கீர்த்தியிடம் அசோக்.

“ரெண்டு பேரும் அப்டிப் போய்.. சட்டையைப் பிடிச்சு சண்டை போடுங்க”

“உங்கண்ணனுக்கு அவ்ளோ வர்த் எல்லாம் இல்ல”-அசோக்.

“ஆமா, சார் ரொம்ப வர்த் ஆன ஆளு”

-இந்த நெவர் எண்டிங் ஆர்கியூமெண்ட் கொடுத்த ஆத்திரத்தில் படாரென எழுந்த கீர்த்தி “நான் வாஷ்ரூம் போயிட்டு வரேன்” எனப் பொதுவாகக் கூறி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டாள்.

கீர்த்தி நகர்ந்ததும் அந்த இடத்தை இருவரின் உஷ்ணக்காற்று மட்டுமே நிறைத்திருக்க..

“vallanTHEvillain நீ தான?” – என்றான் அசோக்.

“வா…வாட்??”

“ராட்சசன் படத்துல வர்ற வில்லன் மூஞ்சி டிபி-யோட vallanTHEvillain-ன்னு பேர் வைச்சுக்கிட்டு, என் படம் போட்டு வர்ற யூடியூப் வீடியோஸ் எல்லாத்துலயும் கெட்ட கமெண்ட் போடுறது நீ தான?”

“டேய்ய்.. பொறம்போக்கு! என்னை என்னன்னு நினைச்ச?”

“பரவாயில்ல, உண்மையை ஒத்துக்க”

“நீ டைரக்டர்ன்றதே இங்க வந்தப்புறம் தான் டா எனக்குத் தெரியும்! கழிசடை!”

“எப்பா! ஆஸ்கர் வாங்குன ஆண்டிரியூஸூ! என்னம்மா நடிக்குற! நான் கழிசடைன்னா, நீ என்ன சாக்கடையா?”

“ஆமா சாக்கடை தான்! இதோ பாரு, கிடச்சது வாய்ப்புன்னு,இன்னொரு தடவை என் தங்கச்சி பின்னால சுத்தி, செகண்ட் இன்னிங்க்ஸ் ஆடலாம்ன்னு நினைச்சன்னு வை, கூவ ஆத்துல வைச்சுக் கூறு போட்ருவேன் சொல்லிட்டேன்”

“ஏஹேய்ய்ய்.. முத்திப் போன கத்திரிக்காயாட்டம் இருக்குற உன் தங்கச்சியை வைச்சு நான் முக்தி தான் அடையனும்! ஆனாலும்.. உனக்கு ஆசையைப் பாரேன்! எக்ஸ்பயர் ஆன மாத்திரையை சைலண்ட்-ஆ என் வாய்க்குள்ள அமுக்கப் பார்க்குற”

“டேய்ய்ய்ய் பரதேசி நாயே….”

“ஆனாலும்.. நீ இவ்ளோ ஆசைப்பட்டு கேட்டுக்கிட்டப்புறம்.. உன் கோரிக்கையை நான் நிறைவேத்தாம இருப்பேனா??”

“என்னடா சொல்ற?”

“புரியலையா???, சீக்கிரமே புரிய வைச்சிட்றேன்.. மச்….ச்சான்!!!!!”

அதுவரை தட்டை நோக்கியபடியே அடிக்குரலில் ஆத்திரமாய் பேசிக் கொண்டிருந்த இருவரும்.. ஒருவரையொருவரின் முகம் பார்த்துக் கொள்ள..

கொலைவெறியோடு அண்ணனும், கொள்ளை சிரிப்போடு அசோக்கும் அமர்ந்திருந்த அசாத்தியமான சூழ்நிலையை வேடிக்கை பார்த்தபடி மீண்டும் வந்தமர்ந்தாள் கீர்த்தி.

அவள் அமர்ந்ததும் சட்டென எழுந்த அண்ணன்காரன், “ப்பா ஒரு அவசர வேலையிருக்கு. நானும்,கீர்த்தியும் கிளம்புறோம்” என்றான்.

“அவசர வேலையா?” – சுருக்கிய புருவங்களோடு வினவிய கீர்த்தியிடம்..

“பாத்ரூம் போகனும் போல” – அசட்டையாக முணுமுணுத்தான் அசோக்.

“ப்ச்” – என்றவளிடம்..

“கீர்த்தி, அவனோட அநாவசியமான பேச்சு வேண்டாம். முதல்ல கிளம்பு இங்கயிருந்து” – என்று அண்ணன் ஆத்திரப்பட.. எரிச்சல் கொண்டவள்.. திரும்பி அசோக்கை முறைத்தாள்.

“ஸ்கூட்டி சாவியைக் கொடு, நான் ஃப்ரண்ட் கேட்ல நிற்கிறேன், நீ வந்துடு” – என்றவன் அனைவரும் அவனை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அசோக்கை வெளிப்படையாக முறைத்து விட்டு நகர்ந்தான்.

“அப்பிடி என்ன கோபம் உனக்கு எங்கண்ணன் மேல?”

அவள் கேள்விக்குப் பதில் கூறாமல்.. தன் முன் நெற்றி முடியை ஒதுக்கியவன், இடது ஓரத்திலிருந்தத் தழும்பைக் காட்டி…

“இது என்ன தெரியுமா?” எனக் கேட்டான்.

சுழித்த முகத்துடனே அமர்ந்திருந்தவளிடம்..

“உங்கண்ணன் பூகோளம், என் மூஞ்சில பூ கோலம் வரைஞ்சதால வந்தது” – என்றான்.

“நீ அவன் தங்கச்சிக்கு நூல் விட்ட, அவன் உன்னை நொங்கெடுத்தான்! அப்பவே கணக்கு சரியாய்ப் போச்சு!”

“நான் நூல் விட்டும் கூட, நீ சேதாரமில்லாமத் தான இருக்க?, எனக்கு மட்டும் எதுக்குடி ஸ்டிக்கர் ஒட்டி விட்ருக்கான்?” – எரிச்சலுடன் பாய்ந்தவனைக் கண்டுப் பல்லைக் கடித்தபடி அவள் பதில் சொல்ல முனைந்த போது அவளது செல்ஃபோன் அழைக்க..

“இதோ வர்றேண்ணா” என்றவள் அனைவரிடமும் பொதுவாகத் தலையாட்டி விட்டுக் கிளம்பி விட்டாள்.

பிங்க் நிற காட்டன் புடவையில், நீள ஜடை அசைந்தாட, ஒற்றைக்கல் மூக்குத்தியோடு, மேக்கப் இல்லாத முகம் பளபளக்க… ஜன்னல் வழியே தன்னைப் பார்த்தபடி நடந்து சென்றவளைக் கண்டவன், மெல்ல நெற்றித் தழும்பை தடவிக் கொண்டான்.

மனம் சில,பல வசந்தகாலங்களுக்கு முன்பான இலையுதிர் காலத்தை எண்ணிக் கொண்டது.