அத்தியாயம் - 6

4.மழை:

ந்த ஆளுயுரக் கண்ணாடியின் முன்பு நின்று தலை வாரிக் கொண்டிருந்த அசோக்கின் கண்கள், நொடிக்கொருதரம் முன்னேயிருந்த செல்ஃபோனில் படிந்து,மீண்டு கொண்டிருந்தது.

Equation Calling…

-அந்தக் காலை வேளையில் ஐந்தாவது முறையாக அவளை, வீடியோ காலில் அழைக்கிறான். அவள் எடுத்த பாடில்லை!

சலிப்புடன் தலை வாரி முடித்தவன், சீப்பைக் கீழே வைத்து விட்டு நிமிர்கையில்.. அவள் கால்-ஐ அட்டெண்ட் செய்திருந்தாள்.

அலுவலகத்தில் இருக்கிறாள் போலும். கண்ணாடி அறைக்குள் கணினியின் முன்பு கனகாம்பரப் பூவாய் அமர்ந்திருந்தாள்.

திரையில் அவள் முகம் தெரிந்ததும் அகலமாய்ப் புன்னகைத்தவன்.. “குட்மார்னிங்” என்றான்.

அவனைக் கண்டதும் வழக்கம் போல் முகத்தை ஏகத்துக்கும் சுருக்கியவள்,

“என்ன டா வேணும் உனக்கு?” எனக் கேட்டாள்.

“இல்ல, சட்டையில்லாம என்னைப் பார்த்தா, நீ எப்பிடி ரியாக்ட் பண்ணுவன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு கூப்பிட்டேன்….” – சிரிக்காமல் அவன் கூற..

“நெட்வர்க் சரியில்ல! ப்ளர்-ஆ தெரியுது” என்றாள் அவள்.

“ஓ! அப்போ நல்லாத் தெரிஞ்சா, பார்ப்பியா?”

“ஏன் நீ சிக்ஸ் பேக் வைச்சிருக்கியா?”

“இல்லையேடி”

“அப்போ டவுட் தான்”

“ப்ச், போடி!” – என்றவன் அருகே தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து மாட்டியபடி..

“நேத்து எப்பிடி வீட்டுக்குப் போன-ன்னு கேட்கத் தான் கூப்பிட்டேன்” என்றான்.

“அப்ரண்டிஸை வர வைச்சுத் தான்”

“யாரு? உன் அண்ணனா”

"ஆமா”

“ஓஹோ!! அதான் காலைல இருந்து மச்சான் கெட்ட,கெட்ட வார்த்தையாப் போட்டு கண்டபடி மெசேஜ் அனுப்புறானா?” –முணுமுணுத்தவனின் முகத்தை நேராய் நோக்கினாள் அவள்.

அதுவரை கணினியைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவள் தன்னை நேராய் நோக்கியதும், செல்ஃபோனைக் கையில் எடுத்தவன், ஜன்னலருகே நின்று..

“என்ன?” என்றான்.

கை தன் போக்கில் தாடி,மீசையை உருவி விட்டபடி இருக்க, தன்னையே நோக்குபவளைக் கண்டு புருவம் உயர்த்தியவனிடம்..

“நல்லா தூங்கிட்ட போல! நேத்து முகத்துல இருந்த டயர்ட்நெஸ் எல்லாம் காணாம போச்சு” என்றாள்.

அவள் கேள்விக்குப் பதில் கூறாமல் அவள் முகம் பார்த்தவன்,

“உனக்கெதுவும் கோபமில்லையே” எனக் கேட்டான்.

“எதுக்கு?”

“இல்ல, சான்ஸ் கிடைச்சும் சரக்கடிக்காம விட்டுட்டேனேன்னு தான்! நீ வேற ஏகப்பட்ட எதிர்பார்ப்புல வந்திருப்ப” – அடக்கப்பட்ட சிரிப்புடன் பேசியவனைக் கண்டு.. பொங்கி எழுந்தவள்..

“நேர்ல வந்தேன்னு வை, நெத்தியை பேத்தெடுத்துருவேன்” – எனக் கடித்தப் பற்களிடையே வார்த்தைகளை முணுமுணுத்தாள்.

“வர்றியா?”

“என்னது?”

“நேர்ல வர்றியான்னு கேட்டேன்”

“நான் எதுக்கு வரனும்?”

“என்னடி இப்பிடிக் கேட்குற?”

“ப்ச், நீ ஃபோனை வை”

“அப்போ நீ வர மாட்ட?”

“மாட்டேன்”

“சரி, அப்டின்னா நான் வரேன்”

“டேய்ய்” –மூக்கை விடைத்தவளைக் கண்டு கொள்ளாது..

“பாய்ய்ய்ய்” – என ஃபோனைக் கட் செய்தவன், அடுத்து மச்சானை அழைத்தான்.

ஒரே ரிங்கிலேயே எடுத்து “டேய்ய்ய் பொறம்போக்கு..” எனப் பாய்ந்தவனைக் கேட்டுக் காதைச் சொரிந்த அசோக்,

“ப்ச், எப்பப் பாரு எருமை ஏப்பம் விட்ட மாதிரி ஹை-டெசிபல்லயே கத்தி-ன்னு இருக்காத மச்சான்! காது ஜவ்வுல காக்கா உட்கார்ந்த மாதிரி இருக்குது” என அசால்ட்டாய் கூற…

பல்லைக் கடித்த அண்ணன்காரன் “எடுபட்ட பயலே! என் தங்கச்சியை என்னடா பண்ண?” -என மீண்டும் தொண்டையைத் திறந்தான்.

“உன் தங்கச்சியை நான் என்ன பண்ண?, என்னைத் தான் மச்சான் அவ என்னென்னமோ பண்றா!”

“டேய்ய், நான் உன்னை என்னென்னவோ பண்ணேன்னு வை, பார்ட் பை பார்ட்-ஆ பிரிஞ்சிருவ சொல்லிட்டேன்”

“ஆஹான்??, நீ கழட்ற வரைக்கும் நான் காஃபி குடிச்சு-ன்னு இருப்பேன்னு நினைச்சியா?, கக்கத்துல கையை விட்டுக் கிச்சு,கிச்சு மூட்டிட மாட்டேன்??”

“டேய்.. சாவுகிராக்கி”

“ப்ச், உன் தங்கச்சி தான் மச்சான் ரொம்ப கிராக்கி!”

“உன்னைத் தான் அவ டிஸ்ப்ளே போன செல்ஃபோனா நினைச்சுத் தூக்கி எறிஞ்சுட்டாள்ல?, இன்னும் ஏன் டா அவ முன்னாடி டிஸ்கோ ஆடி-ன்னு இருக்குற நீ?”

“எல்லாம் உனக்காகத் தான் மச்சான்! உன் முரட்டுக் கொள்கைக்காகத் தான்”

“என்னடா நாயே சொல்ற?”

“தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாம, நான் கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு, சரஸ்வதி சிலை முன்னாடி நீ சபதம் எடுத்திருக்கியாமா?”

“ம்க்க்க்க்க்க்கும்”

“பார்த்தியா, பம்முற?,அப்போ நிசம் தான் போல! எனக்கு உன்னைப் பத்தி நல்லாத் தெரியும் மச்சான்! அது போக, ஒரு கன்னிப் பையன் மனசை இன்னொரு கன்னிப் பையனால தான் மச்சான் புரிஞ்சுக்க முடியும்”

“அட த்தூ.. நாயே”

“ஹான்?, நல்லவனாட்டம் துப்புற?, நடிப்பைப் போடாத மச்சான்! நீ பார்க்குற கில்மா வேலையெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”

“அப்பிடி என்னடா தெரியும் உனக்கு?”

“என்ன தெரி…..யுமா?? ப்ச், உன் இன்பாக்ஸ்க்கு தினம், இனிமையான இரவுகள்-ன்ற பேர்ல ஐட்டமா இறக்குறதே நான் தான் மச்சான்!”

குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேற லொக்,லொக் என அந்தப்புறம் இருமிய அண்ணன்காரன்,

“அட நாசமா போறவனே” எனக் கத்தத் தொடங்க.. அசராமல்..

“ஏன் மச்சான் பதறுற?,கவலைப்படாத! இதையெல்லாம் உன் தங்கச்சிக் கிட்ட சொல்ல மாட்டேன்” எனக் கூற..

“டேய் டேய்ய்…” என்ற அண்ணன்காரனுக்கு பேச்சு வர மறுக்க.. “ஹாஹாஹாஹா” என வெற்றிச் சிரிப்பு சிரித்த அசோக்,

“அடுத்த தடவை பேசும் போது பாசமா நீ என்னை மாப்ள-ன்னு கூப்பிடனும்! என்ன?” – என்கிற மிரட்டலுடன் ஃபோனைக் கட் செய்தான்.

மாலை அலுவலகம் முடிந்து வெளியே வந்த கீர்த்தி, காரில் சாய்ந்தபடி காலாட்டிக் கொண்டு நின்றிருந்த அசோக்கைக் கண்டுப் புருவம் உயர்த்தினாள்.

“என்ன?, ஐ ப்ரோ அப்-ல போகுது?, அயித்தான் வருவேன்னு காலைலயே சொன்னேன் தான?”

தூரத்தில் நின்றபடியே சத்தமாய்ப் பேசியவனைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டவள், அவசரமாய் அவனருகே சென்று நின்று..

“எதுக்கு டா இப்பக் கத்துற?” – என்று திட்ட.. அவள் முகத்தை அருகில் கண்டுத் தாடையை இறக்கியவன், ஒரு புறம் மெல்ல உதடு வளைய..

“பீச் கலர் சேரி-ல, அழகை சும்மா பீச்சியடிச்சிட்டிருக்கிற உன்னை, பீச்சுக்குக் கூட்டிப் போய்.. உன் உதட்டுல பீப்பி ஊதாட்டி நான்-லாம் என்னடி மாமன்?” – என்றான்.

“பீங்கான் பாத்திரத்துக்குக் கை,கால் முளைச்ச மாதிரி இருக்கிற நீயெல்லாம் பீப்பி ஊதுறதைப் பத்தி பேசுற பாரேன்”

-நெற்றியை நிரப்பியக் கூந்தலை இழுத்துக் காதோரம் செருகிக் கொண்டுக் கண்கள் சுருங்கப் பேசியவளை நோக்கியபடிப் பாக்கெட்டுக்குள் கை விட்டு ஒரு பக்கமாகக் காரில் சாய்ந்து நின்றவன்,

“ஜொலிக்குறியே டி, என் கருப்பழகி” என்றான்.

“ப்ச்” – முகத்தைச் சுழித்து வேறு பக்கம் திரும்பியவளிடம்..

“முகத்துல ஒரு தனி பளபளப்பே வந்திருக்கு!” – என்றவன், தூக்கிய புருவங்களுடன் அசால்ட்டாக நின்றவளை அசராது நோக்கி “என்னால தான?” எனக் கேட்டான்.

“ஷ்ஷ்ஷ்ஷ்” – எனக் காதைச் சொரிந்தவளைக் கண்டு கடுப்பாகிப் போனவன்,

“நான் பேசுறது பிடிக்காத மாதிரியே முகத்தை வைச்சுக்காத டி” – என்றான்.

“பிடிச்சிருக்குன்னு நான் எப்போ சொன்னேன்?”

“ஓஹோ! அப்ப நீ உன் வீட்டைப் பார்த்துக் கிளம்பு! நானும் கிளம்புறேன்” என்றவன் காரை நோக்கித் திரும்ப..

“சரி ஓகே” – என்றபடி அவள் திரும்பி நடக்கத் தொடங்கியதும் “ஏய் ஏய்ய்” எனக் கூவி அவள் கையைப் பற்றி நிறுத்தியவன்..

“வா போகலாம்” என்றான்.

“எங்க?”

“பீச்-க்குத் தான்”

“நான் வர்ல”

“ஏன்??”

“நான் வீட்டுக்குப் போகனும்”

“ராத்திரியானா எல்லாரும் வீட்டுக்குப் போறது தான்! ஆனா அதுவரைக்கும் வீதில சுத்துறது தான் வீரனுக்கு அழகு! வா” – பற்றியிருந்த அவள் கையை இழுத்துத் தன் காரருகே நிறுத்தியவனை நிமிர்ந்து நோக்கி..

“நீ என்ன உரிமைல, என்ன தைரியத்துல இப்பிடிலாம் பண்ற?” – என்றாள் அவள்.

“உரிமை நீ தான் கொடுக்கனும்!, தைரியம்ம்ம்… நீ எப்பிடியும் கொடுத்திடுவன்ற நினைப்புல வந்தது” – பேச்சோடு பேச்சாகக் கார்க்கதவைத் திறந்தவன், அவளை ஏறிக்கொள்ளுமாறு சைகை செய்ய.. கையைக் கட்டிக் கொண்டு அவன் முகத்தை அளவிட்டாள் அவள்.

திறந்திருந்த காரின் மறுபக்கம் நின்றவள், தீர்க்கமாய்த் தன்னை ஏறிடுவதை உணர்ந்து,

“சரி, வேண்டாம்ன்னா வேண்டாம்” – எனக் கூறி கதவைச் சாற்றி விட்டுக் கையைக் கட்டிக் கொண்டு காரில் சாய்ந்து நின்றான்.

“முகமெல்லாம் மாறுது??” – நக்கலாய்க் கேட்டவளை உணர்ந்தாலும்.. அவள் புறம் திரும்பாமல்.. வளைந்த உதட்டுடன் மூக்கு விடைக்க நேர் வெறித்தபடி நின்றிருந்தான்.

கார்க் கதவைத் திறந்து, அதில் சாய்ந்து நின்றவனை நகர்த்தி விட்டு, உள்ளே ஏறி அமர்ந்தாள் அவள்.

பொங்கிய சிரிப்பை அடக்கி டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், காரை ஸ்டார்ட் செய்தான்.

டிராஃபிக்கில் டைவ் அடித்து, அவர்கள் சிட்டியை விட்டு வெளியே வந்த போது, கருமேகம் சூழக் கூதலுடன், தூறல் விட ஆரம்பித்திருந்தது வானம்.

“என்ன பட்டுன்னு கார்ல ஏறிட்ட?, பத்துப் பக்கத்துக்குப் பேசிப் பத்து நிமிஷம் போராடனும்ன்னு நினைச்சேன்” – சாலையில் ஒரு கண்ணும், சோலையில் ஒரு கண்ணுமாய் அசோக்.

கையைக் கட்டிக் கொண்டு சீட்டில் நன்றாகச் சாய்ந்தமர்ந்தவள், பார்வையை நேரே வைத்தபடி “உன் தாட்-ப்ராசஸ் என்னன்னு நான் தெரிஞ்சுக்கனும், அதான்” என்றாள்.

“அது நீ நடந்துக்கிற விதத்தைப் பொறுத்து மாறுமே”

“ஆஹான்??”

“ஹ்ம்ம் ஹ்ம்ம்”

“நீ கூப்பிட்டதும் நான் வண்டில ஏறிடனுமா டா?, பெருசா மூஞ்சியைத் தூக்குற?”

“நான் உன்னைக் கட்டாயப்படுத்தவே இல்லயே! நான் மூஞ்சியைத் தூக்குனா உனக்கென்ன? வழக்கம் போல போடா மூதேவின்னுட்டுப் போக வேண்டியது தான?”

“…………….” – பதிலற்றுக் கண்ணை இறுக மூடி, உதட்டை ஈரப்படுத்தியவளை சிரிப்புடன் நோக்கி..

“உன்னால முடியாது டி! ஆனா.. நீ ஒத்துக்க மாட்ட” என்றான் அவன்.

“நீ மட்டும் ஒத்துக்கிட்டியாக்கும்?”

“என்னன்னு?”

“அரேபியக் குதிரை ஆத்தை சுத்தி வந்து, அயிரை மீனை நோட்டம் விட்றது out of ஆசைல தான்னு”

“ஹாஹா நல்ல உவமை”

“பதில் சொல்றா கேடி..”

“ஒத்துக்கிட்டா அந்தப் பக்கம் ரெஸ்பான்ஸ் பாசிட்டிவ்-ஆ வரும்ன்னா சொல்லு, ஒத்துக்கிறேன்”

“அது, நீ ஒத்துக்கிறப்போ தான் தெரியும்”

“அப்போ ஒத்துக்க முடியாது”

“டேய்ய்”

அவள் காட்டிய எரிச்சலில், தோள் குலுங்கத் தன் நீளப் பல் வரிசையைக் காட்டிப் புன்னகைத்தவன்..

இடுங்கிய புருவங்களுடன் இமைக்காது தன்னையே நோக்கியவளின் பார்வை புரிந்து..

“கிளாமரா சிரிக்கிறேனா?” எனக் கேட்டான்.

பதிலற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளின் புறம் திரும்பி “ம்??” என்று அவன் புருவம் உயர்த்த..

“ஆமா” என ஒத்துக் கொண்டாள் அவள்.

உயர்த்திய புருவங்களை உச்சி மேட்டுக்குக் கொண்டு சென்றவன், உதட்டை வளைத்தபடி அவளைப் பார்க்க..

“சிட்-அவுட்ல சிம்னி விளக்கு வைச்சா மாதிரி நல்லா பளிச்,பளிச்ன்னு இருக்கு உன் சிரிப்பு” என்றாள்.

“அதை இப்பிடியொரு ரோபோ வாய்ஸ்ல தான் சொல்லனுமா?”

“ப்ச்”

“பரவாயில்ல! இதுவே ரோஜாப்பூவை நெஞ்சுல வைச்ச மாதிரி ஜில்லுன்னு தான் இருக்கு”

சாலையிலிருந்து அவன் பார்வை சோலை மீதுத் தாவி விட, கொஞ்சமும் வெட்க,மானமின்றி அவள் முகத்தையே விழியால் மொய்த்தவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் பல்லைக் கடித்தவள்,

“ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுடா” என முணுமுணுத்த வேளை.. அவளது செல்ஃபோன் ஒலித்தது.

எட்டி அவளது டிஸ்ப்ளேயை நோக்கி.. “ஓ! மச்சானா?” என்றவன் வெடுக்கெனப் பிடுங்கி, கால்-ஐ அட்டெண்ட் செய்து காதில் வைத்து “வணக்கம் மச்சான்” என்றான்.

ஒரு நொடி பேச்சற்றுப் போன எதிர்ப்புறம் மறு நொடி, “டேய்ய்ய் சாவுகிராக்கி, என் தங்கச்சி ஃபோன் எப்பிடிடா உன் கைல வந்துச்சு?” என அடிக்குரலில் சீறியது.

“உன் தங்கச்சியே என் கிட்ட வந்துப் பல நாளாச்சு! அவ ஃபோன் வராதா?, என்ன மச்சான் நீ! மன்மதக்கலைல இம்புட்டு மக்கா இருக்குற” – ஜன்னல் புறம் திரும்பி அவளுக்குக் கேட்காத வண்ணம் குசு,குசுவெனப் பேசினான் அவன்.

“ஏய்ய்ய் என்ன டா உளர்ற?”

“காலம் போன காலத்துல, கன்னி கழியாம இருக்குற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு இதெல்ல்லாம் புரியாது மச்சான்!”

“என் தங்கச்சி எங்கடா?”

“என் தோள்ல சாஞ்சு தூங்கிட்டிருக்கா மச்சான்”

“டேய்ய்ய்..”

“உண்மை தான் மச்சான்! வேணும்ன்னா ஃபோட்டோ எடுத்து அனுப்பவா?”

“டேய் மானங்கெட்டவனே”

“எதுக்கு மச்சான் திட்ற?”

“உண்மையை சொல்லுடா! எங்கடா அவ?”

“நீ தன்மையா பேசுனா நான் உண்மையைச் சொல்றேன்”

“டேய்.. ***********”

“ரைட் வுடு! நானும்,உன் தங்கச்சியும் ஈ.சீ.ஆர் ரோட்ல, ஈ-அண்டாத இடமா பார்த்து, ஈஷிக்கின்னு உட்காரலாம்ன்னு ப்ளான் பண்ணி கார்ல போயிட்டிருக்கோம் மச்சான்!”

“என்ன டா சொல்ற?”

“இதுக்கே ஷாக் ஆனா எப்பிடி மச்சான்?, இன்னும் பார்க்க வேண்டியது எவ்ளோ இருக்கு?” – என்றவன் பேசிக் கொண்டே அவள் புறம் திரும்பினான்.

தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டுத் தொண்டையைச் செருமியவன் “சரி சரி மச்சான், இ.இ குரூப்ல புதுசா இந்தோனேசியா ஐட்டம் ஒன்னு இறங்கியிருக்கு! அதை அனுப்பி வைக்குறேன்! நீ அதைப் பார்த்துட்டே, அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு எங்களை எந்த டிஸ்டர்பன்ஸூம் பண்ணாம இருப்பியாமா! ஓகே?? பாய்” எனக் கூறிப் பட்டெனக் கட் செய்து விட்டான்.

“என்ன பார்க்குற?” – முறைத்துப் பார்த்தவளிடம் கேள்வி அவன் கேட்க..

“இப்போ தெரியுது, ஏன் எங்கண்ணன் உன் நெத்தில நெருப்பு வைச்சான்னு” – எனக் கூறிப் பல்லைக் கடித்தாள் அவள்.

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அசால்டாகத் தோளைக் குலுக்கியவன், வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்..

அவள் புறக் கார் கதவை திறந்து, அவளருகே குனிந்து நின்றவன், அவளை நோக்கித் தன் வலது கையை நீட்ட..

ஒரு கையைக் கார் கதவின் மீது வைத்துக் கொண்டுத் மறு கையைத் தன் முன்னே நீட்டி முகத்தருகே குனிந்து நின்றவனை அவள் குறுகுறுவெனப் பார்த்தாள்.

“இப்ப என் கையைப் பிடிச்சேனா.. இங்கயிருந்து கிளம்புற வரைக்கும் உன் கை,என் கைக்குள்ள தான் இருக்கும்! ஓகேன்னா, வா! இல்லேன்னா வேண்டாம்! சாய்ஸ் உன்னோடது” என்றான்.

‘லாக் பண்றானே’ - உதட்டைக் கடித்தபடி இழுத்து விட்ட மூச்சுடன் நெற்றியை சுருக்கி யோசித்தவள்..

“இங்கயிருந்து போற வரைக்கும் மட்டும் தான?” எனக் கேட்டாள்.

‘கழுவுற மீனுல நழுவுற மீனுடி நீ’- உள்ளுக்குள் புகைந்தவன்..

“இப்…போதைக்கு அப்பிடித் தான்” – என்றான்.

அநியாயத்திற்கு முகத்தில் பாய்ந்த ரத்த அலைகளில் மிதந்து.. மீண்டு.. லேசாக அவன் கை மீதுத் தன் கையை வைத்தாள் அவள்.

அவள் ஸ்பரிசம் பட்டதும் தானாய் விரிந்த அவன் இதழ்கள், தன் அழகான பல் வரிசையைக் காட்டி அகலமாய் சிரிக்க… பட்டும்,படாமல் தன் கரத்தின் மீது பதிந்திருந்த அவள் விரல்களை அழுத்தமாய் இறுக்கிக் கொண்டவன், அதே சிரிப்புடனே முன்னே நடந்தான்.

கூதலும்,தூறலும் கடலைக் கொந்தளிக்கச் செய்திருக்க.. ஆள் அரவமற்றிருந்த மணல் வெளியில் அவளோடு கால் பதிய நடந்தான் அவன்.

அடித்தக் காற்றில் கூந்தலும்,முந்தானையும் ஆளுக்கொரு புறமாய் ஓடிக் கொண்டிருக்க, ஒற்றைக் கையால் அதனைப் பிடித்து வைக்க முயன்று தோற்றுப் போனவள் அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

“என்ன?”

“பேச்சுக்குத் தான் கையை விட மாட்டேன்னு சொன்னன்னு நினைச்சா, நீ நிஜமாவே விட மாட்ட போலயே”

“ஏன் விடனும்?”

“ப்ச், என் சேரி பறக்குது!, ஹேர் கலையுது! யாரு அதையெல்லாம் பிடிச்சு வைப்பா?”

“ஓஓஓ” என்றவன், தன் வலப்பக்கம் நின்றவளின் இடது கையை விடுத்து, அவள் இடையோடு கரம் சேர்த்துத் தன்னருகே இழுத்துக் கொண்டான்.

இழுத்த இழுப்புக்கு உடன் சென்றவள், கண்கள் விரிய அவன் முகம் பார்த்தாள்.

“கையை மட்டும் தான் பிடிப்ப-ன்னு நம்பி வந்தேன்”

“அது உன் தப்பு தான?”

“கரெக்ட்டு! உளுந்த வடை சாப்பிட்றவனையெல்லாம் உத்தமன்னு நினைக்க முடியுமா?”

“அது தெரியாது. ஆனா நான் உத்தமன் இல்ல”

“அப்போ கையை எடுக்க மாட்டியா?, எனக்கு அன்கம்ஃபர்டபுளா இருக்கு” – முகத்தைச் சுருக்கியவளைக் கண்டுத் தன் பிடியைத் தளர்த்தியவன், கையை மேலே உயர்த்தி அவள் தோளில் விரல் பதித்தான்.

“ஷ்ஷ்ஷ்” எனக் கண்ணை இறுக மூடித் திறந்தவள் “இதுக்கு அதுவே பெட்டர்” என்றபடி அவன் கையைத் தட்டி விட்டு..

“என்னை என்ன அனன்யா சிங்ன்னு நினைச்சியா?” – எனக் கேட்டு முறைக்க.. “ஹாஹாஹா”-வென வாய் விட்டுச் சிரித்தான் அவன்.

ஃப்ரண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு தலையைப் பின்னே சாய்த்து, கண்கள் மின்ன, அகலச் சிரிப்பவனையே அவள் விழி விரிய, மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க..

பக்கவாட்டில் நின்றவளின் வசியப் பார்வையில் கொள்ளை போனவன், மெல்லிய முறுவலோடு.. அவள் விழி பார்த்துக் கிறங்கி.. குனிந்து.. அவள் காதருகே முத்தமிட்டான்.

அவன் எச்சில் ஈரம் உணர்ந்த காதோர மயிர்கள் சிலிர்ப்பில் தொட்டாஞ்சிணுங்கியாய் சுருங்கி விட, உள்ளே ஆர்ப்பரித்த adrenaline-ன் ஆரவாரத்தில் ஆடிப் போன கீர்த்தி, அவன் முகம் பாராமல் தலையைத் திருப்பி, விறுவிறுவென நடந்தாள்.

பத்தடி தூரம், மூச்சு வாங்க முழு வேகத்தில் நடந்து வந்தவள், நின்று, கண் மூடி, எச்சில் விழுங்கித் தன்னை சமன்படுத்திக் கொண்டு, அவனைத் திரும்பி நோக்கினாள்.

கையைக் கட்டிக் கொண்டு அதே இடத்தில் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தவனைக் கண்டு அடைத்தத் தொண்டையைச் செருமி, அலைகடலிடம் பார்வையைப் பதித்தாள்.

“நீ தள்ளி நிற்குறது நல்லது தான்” – பத்தடி தூரத்திலிருந்து அவன் குரல் சற்று சத்தமாய் அவள் செவியை வந்தடைந்ததும் அவன் முகம் நோக்கினாள் அவள்..

“இப்ப உன் முகம் காட்டுற அழகைக் கிட்டயிருந்து பார்த்திருந்தா, என்னால கட்டிப்பிடிக்காம இருந்திருக்க முடியாது”

அவன் வார்த்தை கேட்டு நடுங்கத் தொடங்கியக் கைகளை அடக்க வழி தெரியாது அவள் மேலும் இரண்டடி பின்னே நடக்க, அவன் இரண்டடி முன்னே வந்தான்.

“தள்ளி, தள்ளிப் போனா என்ன அர்த்தம்?” - அவன்

“நீ கிட்ட,கிட்ட வர்றதுக்கு என்ன அர்த்தம்?” – அவள்.

“நீ முதல்ல பதில் சொல்லப் போறதில்லயா?”

“நீ ஒத்துக்கப் போறதில்லையா?”

“நீ எனக்கு சாதகமா பதில் சொல்லுவ-ன்னு சத்தியம் பண்ணு! நான் ஒத்துக்கிறேன்”

“இதுக்கெதுக்கு நீ ஒத்துக்கனும்?”

“அப்போ விடு”

“ஷ்ஷ்ஷ்..”

“என்ன??”

“சும்மா வம்பு வளர்க்கத் தான நீ இப்பிடிலாம் பண்ற?” – கிட்டத்தட்ட அழுகுரலில் அவள்.

“உனக்கு அப்படித் தோணுச்சுன்னா, அப்படித் தான் போல”

“நீ சீரியஸாவே பேச மாட்டியா டா”

“உன் கூட? சீரியஸாவா?, சான்ஸே இல்ல”

“………..” – ஆத்திரத்தில் பல்லைக் கடித்தாள் அவள்.

அடக்கப்பட்ட சிரிப்புடன் அவள் முகம் நோக்கியவன், மேலும் இரண்டடி முன்னே வந்து..

“என்னைக் கதற விடுவேன்னு சபதம் எடுத்துட்டு, இப்போ நீ தான் ரொம்பக் கதறுற போலயே” என்றான்.

“சரியான சைக்கோ டா நீ”

“தேங்க் யூ”

உர்ரென நின்றவளைக் காண்பது உற்சாகமாயிருக்க.. இடைவெளியைக் குறைத்து இன்னும் முன்னேறியவன்..

“கோபமாய்ட்டியா?” எனக் கேட்டான்.

“ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ?”

“இன்னும் உன்னைக் கோபப்பட வைக்க என்னலாம் பண்ண முடியுமோ, எல்லாம் பண்ணுவேன்”

“அதுல என்ன டா சந்தோசம் கிடைக்குது உனக்கு?”

“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடி” – இரு கைகளையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தபடிக் கூறியவனைக் கையைக் கட்டிக் கொண்டு முறைத்தவள்..

“அப்பிடியா?? இப்போ நான் உன்னைக் கோபப்படுத்திக் காட்டட்டுமா?” – எனக் கேட்டாள்.

புருவம் உயர்த்தி உதட்டை வளைத்து, அவன் அவளை நோக்க.. இருவருக்குமிடையேயான இடைவெளியை முற்றிலுமாகக் குறைத்து அவனை நெருங்கி நின்றாள் அவள்.

தன் நெஞ்சருகே நின்று கொண்டு அண்ணார்ந்து தன் முகம் பார்ப்பவளைக் குனிந்து நோக்கியவனுக்கு உதட்டோரம் முறுவல் பூக்க..

“நான் வேணா ஐடியா கொடுக்கட்டுமா?” எனக் கேட்டான்.

“என்ன?”

“என்னைக் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்துப் பாரேன், நான் பயங்கரமா கோபப்படுவேன்”

சிரிக்காமல் அவன் கூறியதைக் கேட்டு “அய்ய, ஜோக்கு??” என்றவள்.. தன்னை ஆர்வமாய் நோக்குபவனின் சட்டைப்பையிலிருந்து அவனது கார்சாவியை எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் வீசி விட்டாள்.

“ஏ.ஏ…ஏய்ய்ய் என்…என்னடி பண்ற?” என்று அவன் தடுக்க நினைக்கும் முன் அவள் வீசி விட..

“ஏய்ய் என்னடி பண்ணி வைச்சிருக்க?, அறிவு கெட்டவளே!” என்றவன் வேகமாக ஓடிச் சென்று.. அலையில் உருண்டு,நனைந்து அவள் வீசியெறிந்த இடத்தில் குத்துமதிப்பாக சாவியைத் தேடித் துலாவ.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு கலகலவென சிரிக்கத் தொடங்கினாள் அவள்.

“சிரிக்காத டி சிம்ட்டாங்காரி! சாவி இல்லாம எப்பிட்றி வீட்டுக்குப் போறது?”

“எனக்கு பிரச்சனையில்லப்பா! என் அப்ரண்டிஸைக் கூப்பிட்டா அஞ்சே நிமிஷத்துல வந்து நிற்பான்! உன் நிலைமையை நினைச்சாத் தான் பாவமா இருக்கு”

“அடியேய்.. மைசூர் போண்டா, உன் மை வைச்ச கண்ணைப் பார்த்து நான் மயங்கி நின்னது குத்தமா? கேப்ல கெடா வெட்டிட்டியேடி”

“ஹாஹாஹா”

“மாமன் இங்க மாங்கு,மாங்குன்னு தேடி-ன்னு இருக்குறேன்! நீ அங்க, மாலை போட்ட மன்னாரு மாதிரி நிற்பியா? வாடி இங்க”

“சரி சரி போதும்! இத்தோட நிறுத்திக்கலாம்”

“என்னத்த?”

“துலாவுறதைத் தான்”

“அப்போ சாவி?”

“அது தான் என் கைல இருக்கே?” – புருவம் தூக்கிப் புன்னகைத்துத் தன் கையிலிருந்த சாவியை அவள் இருவிரல்களால் பிடித்து ஆட்ட..

“அடியேய்… கெண்டை மீனு” எனக் கெட்டக் கோபத்தில் கத்தியவன்..

“நீ செத்தடி இன்னிக்கு” என்று அவளை நோக்கி ஓடி வர..

“அய்யய்யோ” என்றபடி சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவசரமாய் ஓடியவளை நாலே எட்டில் பிடித்து விட்டான் அவன்.

துள்ளி,குதித்துத் தப்பிக்கப் பார்த்தவளை அனாயசமாய் அடக்கி, இரு கைகளால் அள்ளிக் கொண்டவன்..

“உன்னைக் கடல்ல தூக்கி எறிஞ்சு கண்டமாக்குனா தான் டி எனக்கு மனசு ஆறும்” – என்றபடி கடலை நோக்கிச் செல்ல..

“டேய் டேய் வேணாம் டா வேணாம் டா” – எனத் திமிறித் துள்ளியவள்.. “சாரில வேற இருக்கேன் டா!, நனைஞ்சா செக்ஸியாத் தெரிவேன் டா! ப்ளீஸ் டா ப்ளீஸ் டா ப்ளீஸ்” என்று கெஞ்சுவதைப் பொருட்படுத்தாது..

“எனக்கு அது தான் வேணும்” என்றவன் தொப்பென அவளைக் கடலில் வீசியெறிந்தான்.

அடித்துச் சென்ற அலையில் அமளிதுமளிப்பட்டு, ஒரு வழியாக எழுந்து நின்றவள், முகத்திலிருந்த நீரை வழித்தபடி எதிரே நின்றவனின் தோளில் அடித்து…

“காதல் கதகளி ஆட்ற வயசா டா உனக்கு?” என்று கத்த…

அவள் முகம் பாராமல் புன்னகைத்தவன், “பரவாயில்லயே! ஒரு வழியா காதல்-ன்ற வார்த்தை உன் வாய்ல இருந்து வந்துடுச்சு” என்றான்.

முகம் மாற அதிர்வாய் நின்றவளைக் கண்டு கொள்ளாமல் மறுபுறம் குனிந்துத் தலையிலிருந்த நீரை உதறிக் கொண்டிருந்தவன், அவசர,அவசரமாக புடவையைச் சரி செய்பவளை ஓர விழியில் நோக்கி சிரித்துக் கொண்டான்.

திரும்பி நின்ற நிலையிலேயே, நனைந்த பாண்ட்டை மடித்து விட்டவன்,

“இப்போ யாரு உன்னைப் பார்க்கப் போறாங்கன்னு இவ்ளோ அவசரமா மூட்ற?” என்றான் மெல்லிய குரலில்.

“பொறுக்கித்தனமா பேசாத”

“பொறுக்கியாகத் தான் விட மாட்டேங்குறியே”

“கொல்லப் போறேன் டா உன்னை”

“ஆல்ரெடி androgen என்னைக் கொன்னுட்டுத் தான் டி இருக்கு!” – முணுமுணுத்துக் கொண்டவன், “ப்ச்,முடிஞ்சதா, இல்லையா?” என சிடுசிடுத்தான்.

பதில் கூறாமல் முன்னே நடந்து சென்றவளை உணர்ந்துத் திரும்பியவன்…

முந்தானையால் மொத்தமாக மூடிக் கொண்டு, நனைந்திருந்த புடவையைத் தூக்கிப் பிடித்தபடி சிரமப்பட்டு நடந்தவளைக் கண்டு.. “நில்லு,நில்லு” எனக் கூறி அருகே சென்று.. குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.

மறுத்து இறங்கவோ, திமிறவோ முனையாமல் அவன் முகம் பார்த்தவள்..

“நானே உனக்கு சான்ஸ் கொடுத்துட்டேன் போல” என்றாள்.

மெலிதாய்ப் புன்னகைத்தவன் பதிலின்றி அவளை நோக்க.. புருவம் சுருக்கியவளின் கைகள் தானாக, போர்த்தியிருந்த முந்தானையை இழுத்து விட்டுக் கொள்ள.. உதட்டை வளைத்தவன்..

“என்னைக்கா இருந்தாலும் நான் தான் பார்க்கப் போறேன்! அதனால ரொம்ப மூடிக்காத” எனக் கூற… மூக்கு விடைக்க மூச்சு விட்டவளை.. மனமில்லாது.. காரருகே கீழே இறக்கி விட்டான் அசோக்.

அத்தனை நேரம் தூறலும்,சாரலுமாய் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த வானம், பூ மழை தூவத் தொடங்க, காரின் bootlid-ஐத் திறந்து வைத்துக் கொண்டு உள்ளே அமர்ந்தனர் இருவரும்.

“வீட்டுக்குப் போலாம்ல?” – கீர்த்தி.

“மழை பெய்றது தெரிலயா உனக்கு?”

“அதனால?”

“டிரஸ் காயட்டும், அப்புறம் போலாம்”

“ப்ச், இதெல்லாம் ஒரு ரீசனா”

“20 லட்ச ரூபா கார் டி! உனக்கு நக்கலாத் தெரியுதா?!”

“அதுசரி!” – அலுத்துக் கொண்டவள் விரித்து விட்டக் கூந்தலை மொத்தமாய் அள்ளி, வலது புறமிட்டுத் தண்ணீரைத் தட்டி விடத் தொடங்க.. உஷ்ண மூச்சுடன் நிமிர்ந்தமர்ந்தவன், தன் காலை உரசியபடி அருகே அமர்ந்திருந்தவளைக் கன்னத்தில் கை வைத்து நோக்கினான்.

புருவம் உயர்த்தி, விழியை விரித்து ‘என்ன’ என்றவளிடம், தன் வலது கரத்தை நீட்டினான்.

“என்ன?”

“இங்கயிருந்து போற வரைக்கும் கையை விட மாட்டேன்னு சொன்னேன்ல?”

“நான் வாக்குத் தவறிப் பல நேரமாச்சு”

“ஏய்ய்ய்” – அவன் முறைத்ததும், சிரித்து, அவன் கரத்தின் மீதுத் தன் இடது கரத்தை வைத்து விட்டு நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

இணைந்திருந்தத் தங்களிருவரின் கைகளை உயர்த்திப் புன்னகைத்தவன், குனிந்து அவள் விரல்களில் முத்தமிட்டான்.

“ப்ச்” என்றபடி வெடுக்கெனக் கையைப் பிடுங்கிக் கொண்டு முறைத்தவளிடம்..

“ஓ! இங்க வேண்டாமா?” என்றவன், அத்தனை நேரமாகத் தன்னை உசுப்பேற்றிக் கொண்டிருந்த அவளது வெற்றுத் தோளில் முகம் பதிய முத்தமிட்டு.. “இங்க ஓகேவா?” எனக் கேட்க.. கூசிச் சிலிர்த்த சருமம் கொடுத்தத் துள்ளலில் அவனைத் தள்ளி விட்டுக் கீழிறங்கி நின்றாள் அவள்.

அவசரமாய் அவள் கைப்பற்றியிழுத்துத் தன்னருகே அமர்த்தியவன்.. “எங்க போற?” எனக் கடிந்து கொள்ள..

“இன்னொரு தடவை இப்பிடிப் பண்ணேனா, அடிச்சுப் பொளந்துடுவேன் சொல்லிட்டேன்! ஏற்கனவே உன் வாயை உடைச்ச ஆளு நான்! மறந்துடாத” என சீறினாள்.

அவள் பேசுவதைக் கண்டு கொள்ளாமல் உப்பு நீரில் ஊறிச் சிவந்திருந்த அவள் உதடுகளிலேயே அவனது முழுப் பார்வையும் பதிந்திருக்க.. அவனை உறுத்து விழித்தவளிடம்.. “எல்லாம் ஞாபகம் இருக்குடி! அதுக்கு என்னன்ற இப்போ?” – என்றான் அவன்.

”எந்த உரிமைல இப்பிடிப் பண்றானோ தெரியல! கேட்டா, வெட்டி வம்பிழுத்துப் பத்துப் பக்கம் பேசுவானே தவிர, விஷயம் வெளிய வராது! கஸ்மாலம்”

-விடாது முணுமுணுத்த அவள் இதழ்கள் உச்சரித்த வார்த்தைகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்..

அவள் விழியசையும் விதத்தை, மூக்கு விடைக்கும் வித்தையை, இதழ் புரியும் நடனத்தை விடாது பார்த்துக் கொண்டிருந்தவன்.. அவள் பேச்சிற்குத் தலையாட்டியபடி, அவள் கூந்தலில் சிக்கியிருந்த காது ஜிமிக்கியை மெல்ல விடுவித்தான்.

தன் இடது கன்னத்தைத் தீண்டித் தாண்டிச் செல்லும் அவனது கரத்தின் சில்லிப்பு, இதயத்தை சில்லு,சில்லாய் நொறுக்கி விட.. தானாய் மூடத் தொடங்கிய கண்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்து.. அவனை முறைக்க முயன்று முடியாமல் இமை நடுங்க.. எச்சில் விழுங்கினாள் அவள்.

அதுவரை எட்டிப் பார்ப்பதும், எட்ட நிற்பதுமாய் அவனோடு விளையாடிக் கொண்டிருந்த அவளுக்கான உணர்வுகள், அவளது தொண்டைக்குழியின் அழகில் மொத்தமாய் சரணடைந்து விட.. முகம் மாற.. விழி மூடி.. அவள் தொண்டைக்குழியில் தன் இதழ் சேர்த்தான் அவன்.

அதிர்வாய்ப் பின்னே சாய்ந்தவளின் பிடரியை அவசரமாய்ப் பற்றியபடித் தானும் சாய்ந்தவன்,

அலைபாயும் கருமணிகளுடன், நெற்றி வியர்க்க, நடுங்கிய விரல்களோடு அவனை ஏறிட்டவளின் கன்னத்தைப் பற்றி மெல்ல வருடி.. அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.

அவன் நோக்கம் புரிந்து விழி விரித்தவள், அவசரமாய் அவன் தோளில் புதைந்துத் தன் முகம் மறைத்துக் கொள்ள, மெல்லிய சிரிப்புடன் இரு கரங்களால் அவள் முகம் நிமிர்த்தியவன், நடுக்கம் குறையாதிருந்தவளிடம் “ஏன்?” – எனப் புருவம் உயர்த்தினான்.

ஆசையும்,ஆர்வமுமாய் தன் முகம் நோக்குபவனின் விழி காண முடியாது இமைகளைத் தயங்கி தாழ்த்தியவளிடம்..

“ஏத்தி விட்டு எஸ் ஆகப் பார்க்காதடி” என்றான் மெல்லிய குரலில்.

“நானா ஏத்தி விட்டேன்?”

“இப்போ என்ன கை எடுத்துட்டு நான் தள்ளிப் போயிடனுமா?”

கிறங்கிய கண்களும், மோகனப் புன்னகையுமாய் உதடு உரசப் பேசியவனைக் கண்டு, இமைகள் படபடத்து விட, அவன் வார்த்தைகளைக் கேட்டு மூக்கை விடைத்தவளின் கன்னத்தில் தடம் பதித்து நிமிர்ந்தான்.

கண்களை அழுந்த மூடித் திறந்து, தன்னருகே தெரியும் அவன் முகத்தை அவள் தன் அகத்தில் பதித்தபடி, அவனை அசையாது நோக்க… தன் பார்வையை அவள் கண்களில் பதித்து, அவள் இதழ்களோடு தன்னைக் கலந்தான் அவன்.

நொடி தாண்டி, நிமிடம் கடந்து, நில்லாது பெய்து கொண்டிருந்த மழைக்குப் போட்டியாக விடாது தொடர்ந்த அந்த முத்தம், முற்று பெற்று ஓய்ந்த போது.. நடுங்கிய உடலுடன் காரை விட்டிறங்கி கையைக் கட்டிக் கொண்டு, மூச்சு வாங்க நின்றிருந்தாள் அவள்.

தூர நின்றவளை தூக்கி அள்ளிக் கொள்ள மனம் பரபரத்தாலும், அடக்கி, பிடரி முடியைக் கோதியவன் அவளருகே சென்று நின்றான்.

அவன் முகம் பாராது மறுபுறம் திரும்ப எத்தனித்தவளின் கரம் பற்றியிழுத்து இறுக அணைத்துக் கொண்டவன், அவள் கன்னத்தில் தன் கன்னம் பதித்துக் கொள்ள, ஒரு நொடி அமைதியாய் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள், நிமிர்ந்து..

“இப்போ கூட ஒத்துக்க மாட்டியா?” எனக் கேட்டாள்.

அவள் கேள்வியில் உள்ளே மூண்ட சிரிப்பை மறைத்து, அவளது இரு கன்னங்களையும் பற்றி முகம் முழுக்க முத்தமிட்டவன்,

“உன்னைப் பார்க்க பாவமா தான் இருக்கு! ஆனா.. முடியாதே டி” எனக் கூற.. ஆத்திரமாய் அவன் தோளைப் பற்றிப் பின்னே தள்ளியவள்..

“பொறுக்கி,பொறுக்கி உன்ன-லாம் நம்பவே முடியாது டா! நீ திருந்தவே மாட்ட” – என்று திட்டி விட்டுக் காரைத் திறந்து உள்ளே அமர்ந்து கொள்ள.. தானும் வந்தமர்ந்தவன்.. அவள் கோப முகம் கண்டு சிரித்து..

“பத்து வருஷத்துக்கு முன்னாடி, உன்னை சுத்தி,சுத்தி வந்து, நான் சொன்னப்போ நீ மதிச்சியா டி?” என்றான்.

“அதனால?”

“இப்போ நீ சொல்லு வாயைத் திறந்து! என்ன பெருசா குறைஞ்சிடப் போற?”

“அ..அது முடியாது!”

“அப்போ என்னாலயும் முடியாதுடி”

“டேய்ய்ய்”

“நீ சொல்லு! இல்ல கேளு! நான் ஒத்துக்க முயற்சி பண்றேன்”

“அப்பிடி ஒன்னும் நீ ஒத்துக்கத் தேவையில்ல”

“சரி போ! நீ கொடுத்து வைச்சது அவ்ளோ தான்”

அசால்ட்டாகக் கூறி விட்டு ஸ்டியரிங் வீலில் தாளமிடத் தொடங்கியவனை அற்ப ஜென்மமென நோக்கியவள்,

“ஆனா, சரியான ஆளு டா நீ! இவ்ளோ நேரம் காதல் மன்னனுக்குக் காக்கா வலிப்பு வந்தா மாதிரி கலர்,கலரா ரொமான்ஸ் பண்ணிட்டு, இப்போ கெத்து காட்டுறியா??, கண்டமாக்கிடுவேன் சொல்ட்டேன்” – என மிரட்ட,

“எக்குத்தப்பான எக்ஸ்பிரஷனைப் போட்டு, மாமனை எட்டுக்கட்டைல பாட வைச்சதே நீ தான டி!”

“டேய்ய்ய்ய்”

“உசுப்பேத்தி,உசுப்பேத்தி என்னை உஜாலாக்கு மாற வைச்சுட்டு, இப்போ உருண்டு,பிரண்டு அழுதா நான் என்ன பண்ண முடியும்?”

“யாரு? நான் அழுகுறேனா?”

“ப்ச், அதையெல்லாம் விடு! நல்லாயிருந்ததா இல்லையா?, ஃபீட்பேக் கொடு முதல்ல”

“என்ன டா, தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்தவன் கிட்ட,தியேட்டர் வாசல்ல மைக்கை நீட்டிக் கேட்குற மாதிரி கேட்குற?”

“நாம ஓட்டுனதும் படம் தானடி?”

“க்ளைமாக்ஸே இல்லாத படம் டா அது”

“ஏன் இல்ல?, தரமான க்ளைமாக்ஸ் ஒன்னு இருக்கு” – என்றவன் பின் சீட்டிலிருந்து எதையோ எடுத்து அவள் மடியில் விசிறியடித்தான்.

தன் மீது வந்து விழுந்த அந்த இண்விடேஷன் கார்டைக் கையில் எடுத்து, அவனைக் கேள்வியாக நோக்கினாள் அவள்.

“அடுத்த பத்து நாள்ல எனக்குக் கல்யாணம். வந்துடு”

சிரிக்காமல் பேசியவனைக் கண்டுப் புருவம் உயர்த்தியவள், அவனை அளவிட்டபடியே கார்டை வெளியிலெடுத்தாள்.

Bank Manager weds Film Director

-என்றிருந்தத் திருமணப் பத்திரிக்கையைக் கண்டுப் பல்லைக் கடித்தவள், அதீதக் கோபத்தில் நெற்றியைத் தேய்த்துக் கொள்ள..

கண்ணை மூடி, உதடு கடித்துப் பொங்கி வழிந்த சிரிப்பை அடக்கிய அசோக்..

“ஆறாம் தேதி, நீ ஃப்ரீ தான?, உன்னால வர முடியாம போனாலும் ஒன்னும் பிரச்சனையில்ல! எல்லாத்தையும் ஆன்லைன்ல பார்த்துக்கலாம்!” என்றான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பண்ணுன ஜல்சாவையும் ஆன்லைன்லயே பார்த்துக்கலாமா?”

“பிட்-ன்னு பேரு வைச்சிடுவானுங்க! அதனால அது மட்டும் வேணாம்”

“டேய்ய்ய்ய் செத்த நாயே!! இப்பவும் என்ன டா விளையாட்டு வேண்டிக் கிடக்கு உனக்கு?” – அடக்கிப் பார்த்தும் முடியாமல் முழுக் கோபத்தில் பாய்ந்தாள் அவள்.

“நான் எங்கடி விளையாட்றேன்??”

“பின்ன, என்ன எழவு டா இதெல்லாம்?”

“ஏன் நீ டென்ஷன் ஆகுற இப்போ?”

“…………..”

“பத்து வருஷத்துக்கு முன்னாடி ப்ரபோஸ் பண்ணி, பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கிஸ் பண்ணவனுக்கு, பத்து நாள்ல கல்யாணம் பண்ணிக்க உரிமை இல்லையா?”

“……………”

“என்….னடி???”

“………….”

“சந்தோஷப்படுவ-ன்னு பார்த்தா, உர்ருன்னு உட்கார்ந்திருக்க?”

சலிப்பாய்க் கேட்டவனை நிமிர்ந்து முறைத்தவள்..

“அன்னிக்கு ரெஸ்ட்டாரண்ட்ல மீட் பண்ணாம போயிருந்தா என்ன பண்ணியிருப்ப?” – எனக் கேட்டாள்.

“ஒரு படம் ஹிட் கொடுத்ததும், உன்னைத் தேடி ஓடி வந்திருப்பேன்”

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருந்தா?”

“வாய்ப்பில்ல! ஏன்னா, 5 வருஷமா என்னைத் தீவிரமா ஃபாலோ பண்ணிட்டிருக்கிற VallanTheVillain-ஐ நான் அதை விட அதிதீவிரமா ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்”

“………..” – பதிலின்றி அமைதியாய் தன் கையிலிருந்தப் பத்திரிக்கையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை, காதலாய் நோக்கியவன்..

“நான் ஒத்துக்கிட்டேன்! மேடம் எப்போ எனக்குப் பதில் சொல்லப் போறீங்க?” – என்றான் மெல்லிய குரலில்.

உதட்டைக் கடித்தபடி அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவள், தன் செல்ஃபோனைக் கையிலெடுத்து அண்ணன்காரனை அழைத்தாள்.

“டேய் அண்ணா, ஒரு ஈத்தரப்பய என்னை ஈசிஆர்-ல உட்கார வைச்சு இஷ்டத்துக்கு வெறுப்பேத்திட்டிருக்கான். நீ இப்போவே வந்து என்னைக் கூட்டிப் போ”

-பேசி முடித்து ஃபோனை டேஷ்போர்டில் எறிந்தவள், விரிந்து கிடந்த முடியை அள்ளிக் கொண்டையாக்கிக் கொண்டு, அவனைக் கண்டு கொள்ளாது காரை விட்டு இறங்கி நின்றாள்.

தானும் காரைத் திறந்துத் இறங்கியவன், மறுபுறம் கார்க்கதவில் சாய்ந்து நின்றிருந்தவளின் கொண்டையை நோக்கியபடி..

“என்னடி ரியாக்ஷன் இது?” என்றான் அவளருகே செல்ல முயற்சிக்காமல்.

அமைதியாய்க் கையைக் கட்டிக் கொண்டு காலாட்டியபடி நின்றாள் அவள்.

“நீ மூஞ்சியைத் தூக்குனாலும், மூக்கால அழுதாலும் பத்து நாள்ல நீ என் பொண்டாட்டியாகப் போறதை யாராலும் தடுக்க முடியாது”

“இப்போ யாரு இங்க அழுதிட்டிருக்கா?” – முணுமுணுத்தாள் அவள்.

“ஏய்ய்ய்ய் முகத்தைப் பார்த்துப் பேசுடி! முனகிட்டு நிற்குறா! பெரிய இவளாட்டம்…”

“……….”

“ஏய்ய்ய்ய்ய்ய், கிட்ட வந்தேன்னு வை, செவுலு மேலயே ஒன்னு வுடுவேன்”

“ம்ஹ்ம்??, வந்து கையை வைச்சுப் பாரு! உயிர்நாடில ஒரு எத்து விட்றேன்”

“அப்டிலாம் பண்ணித் தொலஞ்சிடாத டி! பத்து புள்ள பெத்து உன் கூடப் பல வருஷம் வாழனும்ன்னு ஆசை வைச்சிருக்கேன்”

“ஏய்ய், ச்சீ!”

“என்ன ச்சீ???”

“………….”

“வெறுப்பேத்தாம, வாயைத் திறந்து பேசுடி”

“எனக்கே தெரியாம, பேக் க்ரவுண்ட்ல இவ்ளோ வேலை பார்த்துட்டு, என்னை சுத்தல்ல விட்ருக்க நீ?”

“ஆமா! அம்மா,அப்பாவை விட்டுக் கல்யாணம் பேச வைச்சுக் கமுக்கமா எல்லாத்தையும் முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்! நீ ஒத்துக்கல! அதான் நான் அண்டர்க்ரௌண்ட் ஆஃபிசரா பொறுப்பேத்துக்க வேண்டியதாய்டுச்சு”

“ஏன், இப்போ சொன்னதை அப்போ சொல்லி, நேரடியா என் கிட்டப் பேசியிருக்க வேண்டியது தான?”

“5 வருஷமா என்னை ஃபாலோ பண்ற நீ, இதுவரைக்கும் என்னத்த என் கிட்ட நேரடியா பேசிட்ட?”

“………..” – பல்லைக் கடித்தபடிக் காதோரமுடியைப் பற்றிக் கொண்டவளைக் கண்டவனின் முகம் மென்மையாக..

“வெட்டி ஈகோவையெல்லாம் தள்ளி வை! இப்போ நேரடியாக் கேட்குறேன் உன் கிட்ட! பதில் சொல்லு எனக்கு” என்றான்.

“………..” – பதிலின்றித் தயங்கிய முகத்துடன் கழுத்துச் செயினைத் திருகினாள் அவள்.

“நான் வேண்டாமா?” – கரகரப்பாய் வெளி வந்தது அவன் குரல்.

“…………”

“அப்போ சரி, இந்தப் பத்திரிக்கையைக் கிழிச்சிப் போட்டு, நம்மப் பத்து வருஷக் காதலை பத்து செகண்ட்ல பிரேக் அப் பண்ணிக்கலாம்” – என்றவன் பத்திரிக்கையைக் கிழிக்கப் பார்க்க..

“ஏய்ய்ய்,ஏய்ய்ய்ய்” என அவசரமாய் ஓடிச் சென்று அவன் கையிலிருந்ததைப் பறித்தவள்..

“அறிவிருக்காடா உனக்கு?” எனத் திட்ட..

“பின்ன என்னை என்ன தான் டி பண்ணச் சொல்ற?, நான் கீழ இறங்கி வரனும்ன்னு தான நினைச்ச?, நான் தான் தரைல தவந்துட்டு இருக்கேனே!, இன்னும் என்ன வேணும் உனக்கு?” – என்றான் ஆயாசத்துடன்.

“ப்ச்” என்றபடி முசுட்டு முகத்துடன் பத்திரிக்கையை வருடியவள்,

“இருந்தாஆஆலும், நீ என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுப் பண்ணியிருந்திருக்கலாம்” – என்றாள்.

“எதை?”

“பத்திரிக்கையைத் தான்! இப்டியா பச்சைக் கலர் சிங் சா-ன்னு அடிப்பாங்க?” – என்றவளைக் கண்டு.. சிரிப்பும், கோபமும் ஒரு சேர எழ..

இரு கைகளால் அவள் கழுத்தை வளைத்துக் கன்னத்தில் பற்கள் பதியக் கடித்து வைத்தவனிடமிருந்து, துள்ளித் திமிறி விலகப் பார்த்தவளை இறுக அணைத்துக் கொண்டவன்..

“கதற விட்றேல என்னை?, கல்யாணம் மட்டும் முடியட்டும்! அதுக்கப்புறம் உன்னைத் தினம்,தினம் வைச்சு செய்யல, என் பேரு அசோக் இல்லடி” – என்று வசனம் பேச..

முழு சிரிப்புடன் அவனை நிமிர்ந்து நோக்கியவள்.. “பார்ப்போமா??” எனக் கேட்டாள்.

பல்லைக் கடித்தபடி “பார்ப்போம்டி” என்றவனை புன்னகையும்,காதலுமாய் அவள் நோக்க.. அகல விரிந்திருந்த அவள் இதழ்களை மெல்ல வருடியவன்.. அவள் முகம் நோக்கிக் குனிந்து முத்தமிட்டான்.

இறுக்கமாய்க் கண் மூடி, அவனை இறுக அணைத்துக் கொண்டவளின் ஸ்பரிசம் மயக்கத்தைக் கொடுக்க.. அண்டம் கடந்து, அவளோடு அவன் சொர்க்கம் சென்று கொண்டிருந்த வேளை.. முகத்தில் வெளிச்சமடிக்க.. பதறி விலகியவன், நிமிர்ந்து நோக்குகையில்..

“அடேய்ய்ய்ய் கடன்காரா” என்றபடி முழு வேகத்தில் முன்னே ஓடி வந்து கொண்டிருந்தான் அண்ணன்காரன்.

“அய்யய்யோ இவனாஆஆ” என்ற அசோக் அவசரமாய் காரின் பின்னே ஓட... “ஷ்ஷ்ஷ்” – எனத் தலையில் கை வைத்த கீர்த்தி, அண்ணன் திரு.உசேன் போல்ட்டைப் பிடித்து நிறுத்தி..

“என்ன டா அண்ணா உனக்குப் பிரச்சனை” என்றாள்.

“ஏய்ய் கையை எட்றி!! உன்னை நம்புனத்துக்கு என் மூஞ்சில சாணியடிச்சுட்டேல நீ?”

“அய்யோ ஆண்டவா”

“மசால் வடைக்கு மல்லிப்பூ வைச்ச மாதிரியிருக்கிற இவன், எனக்கு மாப்பிள்ளையா?, இந்த ஜென்மத்துல எனக்கு நடக்குற பெரிய அவமானம் இதுவாத் தான் டி இருக்கும்! என்னால இவனை ஏத்துக்க முடியாதுடி”

“நீ ஏன் டா சனியனே ஏத்துக்கனும்?, கட்டிக்கப் போறது நான் தான்”

“ஆனா, அவன் கழுத்தைப் பிடிச்சு செயின் போடப் போற மச்சான் நான் டி”

“அய்யோ! தண்ணீல போற தவளையெல்லாம் தவ்விக் குதிச்சு சீன் போடுதே”

“நீ பேசுவடி பேசுவ! கூடப் பிறந்த அண்ணனை விட, இன்னிக்கு வந்தவன் பெருசா போயிட்டான்ல உனக்கு?, ஆனா.. இவன் உயிரோட இருந்தாத் தான நீ கட்டிக்குவ?, இப்பவே இவன் இதயத்தை இறுக்கிப் பிழிஞ்சு இஞ்சி சாறு போட்டுட்றேன்”

“எல்லாம் ஓகே தான் மச்சான்… ஆனா அதுக்கு முன்னாடி அந்த இந்தோனேஷியா பிட்டைப் பத்திதிதிதிதிக் கொஞ்சம்ம்ம்…”

-அதுவரை காருக்குப் பின் பம்மி நின்றபடி எட்டி,எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அசோக் சமயம் பார்த்து வாயை விட..

போதையிறங்கிய போகன்வில்லாவாய் ஆட்டத்தை நிறுத்திப் பதறிய அண்ணன்,

“டேய்ய் அம்பிக்குப் பொறந்த அந்நியனே!, வாயை மூட்றா” எனக் கூவ..

“என்ன இந்தோனிஷியா???” எனச் சந்தேகமாய்க் கேட்டத் தங்கையிடம்..

“அங்க தான் ஜாவான்னு ஒரு தீவு இருக்கு! மாப்ள அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் என்னைக் கூப்பிட்றாரு! நான் வந்திட்றேன்” என்றவன் அவசரமாக அசோக்கின் அருகே சென்று.. அவன் வயிற்றில் ஒரு குத்து விட..

“கீர்த்திதிதிதி, உங்கண்ணன் என்னை அடிக்கிறான்” – என்று அசோக் சத்தமிட்டதும் கண்ணை விரித்தவளைக் கண்டு..

“இல்ல, இல்ல, மாப்ளையோட வில் பவரை செக் பண்ண சின்ன டெஸ்ட் வைச்சேன்! பாவம் ஃபெயில் ஆயிட்டாப்பிடி! நாளைக்கு காலைல 5 மணிக்கு ஜிம்க்கு வந்துடுங்க மாப்ள! உங்களை வைச்சு நிறைய்ய்ய்ய பண்ண வேண்டியிருக்கு” என்றான் கடித்த பற்களுக்கிடையே.

“ஓஹோ!! அப்போ அந்தக் கிறிஸ்டியன் பொண்ணு கரோலினோட நீங்க ஆடுன கரகாட்ட வீடியோவை இப்பவே உங்க தங்கச்சிக்கு ஃபார்வர்ட் பண்ணி, உங்க வில் பவரை நான் செக் பண்றேன் மச்சான்” என்றபடி செல்ஃபோனை எடுத்தவனின் கையைப் பற்றித் தடுத்தவன்..

“வேணாம்,வேணாம்” எனப் பதற..

“ம்ம்ம்ம்ம்?? சரியாக் கேட்கல” எனக் காதைச் சொரிந்த அசோக்கை முறைத்து..

“வேணாம் மாப்ப்ப்ப்ப்ப்ள” என்றவன், “இன்னும் லவ் மேட்டரை வீட்ல சொல்லல மாப்ள! அரிசி வேகுறதுக்குள்ள அடுப்பை அமத்திப் போட்டா எப்பிடிப்பா?” எனப் பம்ம..

“ஆஹான்!!” எனக் காலரைத் தூக்கி விட்ட அசோக்.. “கீர்த்திதிதிதி… உனக்குக் கரோலினைத் தெரியுமா?” எனக் கேட்டபடி அவளருகே சென்று விட…

புரியாமல் அவனைப் பார்த்த கீர்த்தி பதில் சொல்லும் முன், “carol,carol-ம்மா, சர்ச்-ல பாடுவாங்கள்ல அது,அது!” என்ற அண்ணன், மாப்பிள்ளையின் தோளைப் பற்றியழுத்தி முறைக்க..

அவன் அழுத்தியக் கையைக் கீழிறக்கியவன்..

“மச்சான் இப்போ வீட்டுக்குப் போனதும் நீங்க என்ன பண்ணுவீங்க?” – எனக் கேட்டான்.

“பூரி தின்னுட்டுப் புகையிலை போடுவேன்”

“ம்ம்ம்ம்???”

“க..கல்யாண வேலையைப் பார்க்கனுமில்ல மாப்ள?, இது என்ன கேள்வி?”

“ம்ம், அது” – என்றவன் அவனது பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு பைக் சாவியை எடுத்துக் கொண்டு..

“ஏய் நாட்டு சரக்கு! நாம இந்த சாரல்ல நனைஞ்சு, சாங் பாடிக்கிட்டே சர்ருன்னு இந்த சாரட்டு வண்டில போவோம்! வர்றியா??” – என அண்ணங்காரனின் பைக்கைக் காட்டிக் கீர்த்தியிடம் கேட்டான் அசோக்.

“அப்போ காரு??” – கீர்த்தி.

“அதை மச்சான் எடுத்துட்டுப் போய் வீட்ல விட்ருவாரு! என்ன மச்சான்??”

“…….”

“எ…ன்…ன மச்சான்??”

“செய்றேன் மாப்ள! செய்றேன்! உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்” – புன்னகைக்க முயன்று முடியாமல் பல்லைக்கடித்தபடிக் கூறியவனைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிய அசோக்,

கீர்த்தியின் கரம் பற்றியிழுத்து, அவள் தோளைச் சுற்றிக் கை போட்டுக் கொண்டுத் திரும்பி மச்சானைப் பார்த்துக் கண்ணடித்தான்.

காண்டில் கையை மடக்கித் தொடையைக் குத்திக் கொண்டவனைக் கண்டபடியே வண்டியில் ஏறியமர்ந்தவன், கீர்த்தியின் கையைப் பற்றித் தன் வயிற்றோடு கட்டிக் கொண்டு.. “பாய்ய்ய்ய் மச்சான்! காரு பத்திரம்” என்று விட்டு.. அவன் பம்முவதில் குஷியாகி சர்ரெனப் பறந்து விட்டான்.

தன் பின்பு அவன் சொன்னபடி, அடுத்தப் பத்தே நாளில் இருவருக்கும் திருமணம் நடக்க, காண்டுக் கண்ணாயிரமாக கல்யாண மண்டபத்தைச் சுற்றி வந்த அண்ணங்காரனை மகிழ்விக்கும் பொருட்டு கரோலினை இறக்கினான் அசோக்.

அதைக் கண்டு கொண்டு, இந்தியத் தொலைகாட்சிகளில் முதன் முறையாகத் தன்னை நோக்கிப் பாசமாய்ப் புன்னகைத்த மச்சானின் பல்வரிசை பிடிக்காமல் போய் விட, “வேற மதத்தை சேர்ந்த பொண்ணை எப்படி அத்தை உங்களால ஏத்துக்க முடியும்??, பார்த்துப் பண்ணுங்க” என மாமியாரை உசுப்பேற்றி விட்டு, மச்சானின் வழக்கமான முறைப்பை வாங்கித் திருப்தி பட்டுக் கொண்டான்.

சம்பவத்துக்கே சம்பவம் நடந்த ஒரு நாள்:

‘Thank you for all your lovely wishes’

-நைட் பாண்ட்-டீஷர்ட் சகிதம் தூக்கிக் கட்டியக் கொண்டையுடன் புன்னகை முகமாகத் தன் கைபேசியில் டைப் செய்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

கையில் டவலுடன் பரபரவெனத் தலைமுடியைத் துடைத்தபடி அவளருகே சென்று நின்ற அசோக், குனிந்து அவளது அலைபேசியை நோக்கினான்.

“கல்யாணமாகிப் பத்து நாளாச்சு! இன்னுமாடி நன்றி சொல்லிட்டு இருக்க?” – எனக் கேட்டவனின் விழிகள் அந்த வாட்ஸ் அப் குரூப்பின் பெயரில் நின்றது.

“மாப்பிள்ளைகள்!!!!”

“இப்பிடி ஒரு குரூப்-ஆ?,” – சுருக்கிய புருவங்களுடன் அவளது அலைபேசியைப் பிடுங்கியவன், அந்த குரூப்பின் மெம்பர்ஸ் லிஸ்ட்டை ஆராய்ந்தான்.

“மரக்கடை வினோத் – குரூப் அட்மின்” –வாய் விட்டு வாசித்தவன் நிமிர்ந்து அவளை முறைத்தான்.

“இந்த மயில்வாகனத்தோட நம்பர் எதுக்குடி உன் ஃபோன்ல இருக்கு?” – எனத் திட்டியவன் முசுட்டு முகத்துடன் அந்த குரூப்பிலிருந்தப் பெயர்களை வாசித்தான்.

“யாருடி இவனுங்கலாம்??, பரிட்சயமே இல்லாத ஆட்களா இருக்கானுங்க?”

குழம்பிப் போய் கேட்டவனிடம் புருவம் உயர்த்தியவள், முகத்தைக் கெத்தாக வைத்துக் கொண்டு..

“அவங்கள்லாம் எங்கப்பா எனக்காகப் பார்த்த மாப்பிள்ளைங்க” என்றாள்.

“என்ன்ன்ன????”-என வாய் பிளந்தவன், “மொத்தம் பதினெட்டுப் பேர் இருக்கானுங்களேடி” எனக் கேட்க…

“யெஸ்!! ஐ வாஸ் இன் ஹை டிமாண்ட் யூ நோ” – என்றவளை அற்பமாக நோக்கியவன்..

“இத்தனை பேரை எப்பிடிடி ரிஜெக்ட் பண்ணுன?” என்றான் ஆச்சரியம் தாளாமல்.

“சிம்பிள்! நான் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணிட்டிருக்கேன்னு சொன்னேன்! போயிட்டானுங்க”

“ஆஹான்??, ஆனா, குரூப் ஐகான்-ஆ எதுக்கு டி என் ஃபோட்டோவை வைச்சிருக்க?, அதுவும் என் ஃபர்ஸ்ட் ஷூட்ல, நான் ஷூ கூட போடாம எடுத்த ஃபோட்டோவை??”

“ஒரு அழகான பொண்ணு, ஹை-டிமாண்ட்ல இருக்குறப் பொண்ணு, வேண்டாம்ன்னு ரிஜெக்ட் பண்ணுனா, உடனே சும்மா விட்ருவாங்களா மாப்பிள்ளைங்கலாம்?, யாரை லவ் பண்ற-ன்னு கேட்டாங்க! முதல்ல மைக்கேல் ஜாக்சன் ஃபோட்டோவைக் காட்டி உழட்டி விட்ரலாம்ன்னு தான் நினைச்சேன்! அப்போ தான் இந்த ஃபோட்டோ கிடைச்சது! எப்பிடியும், சைட்-ல இருந்து பார்க்க, உன் ஃபேஸ் கூட ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாதிரி தான இருக்கு! அதான் உன் ஃபோட்டோவையே கொடுத்துட்டேன்”

“எப்பிடி சமாளிக்குறா பாரு! சரியான தில்லு தில்லாலங்கடி டி நீ”

“தேங்க் யூ! தேங்க் யூ”

“ஆனா, என்னை ஃபாலோ பண்ணனும்ன்னு நினைச்சவ எதுக்குடி வில்லன் பேரை வைச்சுக்கிட்டு, என் வீடியோஸ்க்குக் கெட்ட கமெண்ட்-ஆ போட்டுட்டிருந்த?”

“அப்ப தான நீ என்னை நோட்டிஸ் பண்ணுவ? அதான்”

“கேடி”

“ஆனா, நான் கமெண்ட் போட்டு உன்னைக் கவர்ந்திழுக்காம இருந்திருந்தா.. நீ என்னை எட்டிக் கூடப் பார்த்திருக்க மாட்ட தான?”

“யார் சொன்னா?, என் இன்ஃபார்மர் வவ்வாலு வாரம் தவறாம உன்னைப் பத்தினத் தகவலை வலை தளம் மூலமா எனக்கு தெரியப் படுத்திடுவான்”

“அப்புறம் ஏன் டா என்னைத் தேடி வரல நீ?”

“இதையே நான் உன் கிட்ட கேட்டா??”

“போஸ்டரைக் கிழிச்சு நாலா மடிச்சு, நடுவீதில நீட்டி ஐ லவ் யூன்னு சொன்னது நீ தான டா?, அப்போ நீ தான் வரனும்”

“உனக்காக நெத்தில ‘பத்து’ வாங்கி, நீ கேட்டுக்கிட்டதுக்காக உன் பின்னாடி வராம, பன்னிரெண்டாங்க்ளாஸ்லயே பக்குவமா நடந்துக்கிட்ட என்னைத் தேடி வர்றதுல உனக்கென்னடி ஈகோ?”

“சரி விடு! இந்த சண்டை ஓயாது! ஆனா, அந்த ரெஸ்டாரண்ட் சம்பவம் எதார்த்தமா நடந்தது தான?”

“ஏன் கேட்குற?”

“இல்ல, இப்போ யோசிச்சா அதுலயும் வில்லங்கம் இருக்குமோன்னு தோணுது எனக்கு”

“உனக்கு அப்பிடித் தோணுதுன்னா, அப்பிடித் தான் போல”

“டேய் உண்மையைச் சொல்லுடா, அது unexpected தான?”

“Planned Murder-ஐப் போய் suicide-ன்றா! கிறுக்கி” – கையிலிருந்தத் துண்டைத் தூக்கி தூர எறிந்தவன், அவளை இடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

“டேய்ய்ய் என்னடா சொல்ற” – அவன் புறம் திரும்பி ஆச்சரியமாய் வினவியவளிடம்..

“execute பண்ணினது நான் தான்-னாலும் sketch போட்டுக் கொடுத்தது என் மச்சான் டி” – என்றான் அவன் அசால்ட்டாய்.

“எ..என்னது??” – அதிர்ச்சியில் எழுந்து நின்றவளை நோக்கி..

“மச்சான் உடையவன் காதலுக்கு அஞ்சான்” – என்றான்.

“அட நாதாரிங்களா! சண்டை போட்டுக்கிற மாதிரி என் முன்னாடி அப்பிடி நடிச்சீங்களே டா”

“இல்லாட்டி உன்னை ஓகே பண்ண வைக்கிறது கஷ்டமாச்சேடி”

“நம்பவே முடியல என்னால! என் அண்ணனா உனக்கு ஹெல்ப் பண்ணுனான்???” – ஆச்சரியம் தாங்காது வினவியவளைக் கண்டு..

“ஹிஹிஹிஹி” – என இளித்து வைத்தான் அவன்.

“ஆனா, உன்னால எனக்கு எப்பவும் ஷாக் மேல ஷாக், சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் தான் டா! கடங்காரா! உன்னை நம்பி கல்யாணம் வேற பண்ணியிருக்கேன்! இன்னும் என்னலாம் வரப் போகுதோ!!” – தலையில் அடித்துக் கொண்டவளிடம்..

“ப்ச், புலம்பாதடி! இது அத்தனைக்கும் காரணம் நீ தான்” – என்றான்.

“நானா?”

“ஆமா! அன்னிக்கு சயன்ஸ் எக்ஸிபிஷன்ல நான் கேட்டப்பவே நீ ஒழுங்கா அந்த equation-ஐ சொல்லியிருந்தா இவ்வளவும் நடந்திருக்குமா???”

-அலுத்தபடிக் கூறியவனைக் கேட்டு அசந்து போய் அமர்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை கீர்த்திக்கு!!!!

                                                                                        *****************முற்றும்***************