அத்தியாயம் - 5

3. தூறல்:

ழுத்து செருகிய சேலையும், இறுக மாட்டிய ஹெல்மெட்டுமாய், ஈக்காட்டுத்தாங்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கீர்த்தியின் சிந்தனை முழுதும், அன்று காலை செய்தித்தாளில் கண்ட செக்கு மாட்டையே சுற்றி வந்தது.

நடந்தது இது தான்.

காலை காஃபியைக் கையில் வைத்தபடி காற்றோட்டமாக, அவள் ஜன்னலருகே அமர்ந்திருந்த போது.. அவளைக் காது கேட்காத காண்டாமிருகமாகப் பாவித்துக் கொண்ட அவளது அண்ணன்காரன்,

“ம்க்கும்” எனக் கோவேறுக் கழுதை ஹை-டெசிபலில் கனைத்தது போல், தொண்டையைச் செருமி..

“அனன்யா சிங் தோள்ல அல்வா கிண்டி-ன்னு இருக்குற அழகுபாண்டி, நம்ம டாடி பார்த்த.. ‘தாடி’ மாறி இருக்கானே” – எனக் கையிலிருந்த செய்தித்தாளின் மீது ஒரு கண்ணும், தங்கையின் மீது ஒரு கண்ணுமாய் கமெண்ட்டரி கொடுத்துக் கொண்டிருந்தான்.

நிமிர்ந்து அவனை முறைத்தவளிடம், பேப்பரை நீட்டி,

“மந்தகாசப் புன்னகையுடன் மன்மதன்” என நக்கலடிக்க.. வெடுக்கென அவனிடமிருந்துப் பேப்பரைப் பிடுங்கி பார்வையை ஓட்டியவளின் விழிகளில்..

கதர் சட்டையும்,காக்கி பாண்ட்டுமாய் அருகிலிருந்த கலர் பாட்டிலின் தோளில் கை வைத்தபடி கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த அசோக் பட,

அந்தப் பல் வரிசை கொடுத்த வலியில், அந்தத் தொடுகை கொடுத்தத் தொய்வில், உள்ளே ஆட்டம் கண்ட அகத்தை, மூக்கை உறிஞ்சி அடக்கி… “ப்ச்” என்றபடிப் பேப்பரை அவன் மீது தூக்கியெறிந்து விட்டு பொறுமையாய் மிச்சமிருந்த காஃபியைக் குடிக்கத் தொடங்கினாள் கீர்த்தி.

தங்கை காண்டாகி விட்டதைக் கண்டு கொண்ட அண்ணங்காரன் உற்சாகத்துடன்…

“கிளி, ஊட்டி காரட்டுன்னு தெரிஞ்சதால தான், பய ஊக்க மருந்து சாப்பிட்ட மாதிரி கிண்ணுன்னு நிற்குறான் போல! என்னா சிரிப்பு என்னா சிரிப்பு”

“…………..”

“அனன்யா சிங்கோட அஜால்குஜாலா இருக்கிறவனைப் போய், அலகு குத்தி அம்மன் கோயில்ல நிற்க வைக்கப் பார்க்குறாரே டாடி”

“……….”

“இவனை மாதிரி சினிமாக்காரனெல்லாம், நாற்பது வயசுல நாக்கு செத்து போனப்புறம், நார்த்தங்காய் ஊறுகாய்க்கு சைட்-டிஷ் கேட்பானுங்க! கெட்டப் பசங்க”

“……………”

-அவன் கூறிய அத்தனையைக் கேட்டும் அசராமல் அமர்ந்திருந்தவளைக் கண்டு.. ‘என்ன இத்தனை கௌண்ட்டர் போட்டும் ரியாக்ஷனே இல்லாம உட்கார்ந்திருக்கா?’ – என்று அவன் தாடையைச் சொரியும் நேரம்.. ராஜாங்கம் வர.. அவரிடமும் ஆற்றிய பாலையே மறுபடி ஆற்றினான் அண்ணன்.

“ஷோல்டரைத் தொட்டதுக்கு எதுக்கு டா இப்பிடி ‘ஷோ’ காட்டுற?, அப்டிப்பார்த்தா.. உன் ஜூனியர் இன்ஷிகா இடுப்புல நீ இஞ்சிமுரப்பா எடுத்த சம்பவத்தையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்குறது?”

“டா….டி இ இ இ இ, இஞ்சினியரைக் கல்யாணம் பண்ணி இலினாய்ஸ்ல செட்டிலாய்ட்டவளைப் பத்தி இப்போ என்னப் பேச்சு?”

“பய புகைச்சல்ல இருக்கான் போல” – என மகளிடம் முணுமுணுத்தவர்..

“இதெல்லாம் வெறும் ப்ரஃபஷனல் ‘டச்’ தான்!! அதனால ஹேண்ட்ஷேக் பண்றவங்களுக்கெல்லாம் ஹாண்ட்கஃப் மாட்டி விடத் துடிக்காம, சிந்தனையை சீராக்குற வழியைப் பாருங்க” – என இருவருக்கும் பொதுவாகக் கூறி விட்டு நகர்ந்திருந்தார்.

ஓவர் ரியாக்ட் செய்யும் தனது ஓவர் திங்கிங் மைண்டை,அவள் கட்டுப்படுத்த நினைத்தாலும், அந்த ஆட்டக்கார சிங்கின் தோள்ப்பகுதியை நோக்கு வர்மத்தில் தாக்கிக் கொண்டிருந்த அவள் கண்கள், அங்கு அவனது நீள் விரல்கள் ஐந்தும் அடக்கமாய் படிந்திருந்த விதத்தை இதயத்திடம் அடிக்கடி காட்டி, அதன் இதத்தை வதம் செய்து கொண்டிருந்தது.

போதாததற்கு வழியிலிருந்த போஸ்டரில் வேறு அனன்யா சிங், ஆளைக் கொல்லும் சிரிப்புடன் தன் அகண்ட வாயைத் திறந்து வைத்திருக்க, கடுப்பாகிப் போனவள், சூறைக் காற்றின் வேகத்தில், சூர காண்டோடு வண்டியை ஓட்டியதில் தடுமாறி.. ரோட்டோரமாகத் தடாலெனக் கீழே விழுந்தாள்.

ஆளில்லாத ரோட்டில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், அவளைக் கை கொடுத்துத் தூக்கி விட்டதும் “பெருசா ஒன்னும் அடி படல! நான் பார்த்துக்கிறேன்” என்றபடி எழுந்து நின்று கை,காலை உதறியவள், தன் வயதுக்குத் தான் நடந்து கொள்ளும் விதத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டாள்.

முப்பது வயசு முப்பாத்தாவெல்லாம் முட்டுக்காடுல முக்காடு போட்டு உட்காரனும்ன்னு ஆசைப்பட்றது, இறையாண்மைக்கு எதிரானதாச்சே! – எனப் புலம்பிக் கொண்டவளுக்கு.. இடது கை வலி இம்சையைக் கொடுக்க, வழியிலிருக்கும் தன் தந்தையின் நண்பரது மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தினாள்.

வீங்கத் துவங்கிய மேற்கையும், காலில் ஏற்பட்ட சிராய்ப்பும் கொடுத்த வலியை விட, மருத்துவர் இடுப்பில் குத்திய ஊசி பெரும் வேதனையைக் கொடுக்க… மூக்கு விடைக்கப் பல்லைக் கடித்தவள், அந்நொடி அசோக்கும்,அனன்யா சிங்கும் கையில் கிடைத்திருந்தால், அறுவை சிகிச்சை செய்திருப்பாள்.

அவளது பற்கள் போட்ட ‘பாலே’ நடனத்தின் ஒலி அனன்யா சிங்கிற்குக் கேட்டதோ இல்லையோ, அசோக்கிற்குக் கேட்டு விட்டது போலும்.

நர்ஸ் போட்ட இஞ்செக்ஷனில், இஞ்சி தின்ற குரங்காய் மாறிப் போயிருந்த முகத்துடன், வீக்கத்தில் மருந்தை அப்பியபடி அவள் அமர்ந்திருந்த போது, திரைக்கு மறு பக்கம் வெளியே, டாக்டரின் முன்பு வந்தமர்ந்தான் அசோக்.

“வைத்தியரே, கொட்டை வடிநீர் கிடைக்குமா?” – சிவந்த கண்களும்,சோர்ந்து வடிந்த முகமுமாய் கொட்டாவி விட்டபடி கேள்வி கேட்டவனை நிமிர்ந்து முறைத்தார் மருத்துவர்.

“ஏன் கொட்டை வடிநீரோட நிப்பாட்டிட்ட?, முட்டை ஆம்லேட்டும் சேர்த்துக் கேளேன்”

“ஹிஹிஹிஹி! உங்க ஹியூமர் சென்ஸை சும்மா டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்!?”

“புதுசா ஒரு மருந்து இறங்கியிருக்கு! உன்னை வைச்சுத் தான் டெஸ்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்! நீயே வந்துட்ட! சாப்பிட்டா.. சங்குல சரவெடி வெச்ச மாதிரி இருக்கும்! ட்ரை பண்றியா?”

“உங்களை நான், பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்தியக்கார வைத்தியர்ன்னு கூப்பிட்றது சரி தான் போல இருக்கு! அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க!”

“சரி, நம்ம வாய்ப்போரை அப்புறம் வைச்சுக்கலாம்! இப்ப பேஷண்ட்ஸ் வெளியே இருக்காங்க, சீக்கிரம் வந்த விஷயத்தை சொல்லு”

“தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர்”

“திடீர்ன்னு ஏன் இப்பிடி?”

“ரெண்டு நாளா டே-நைட் ஷூட்டிங்! தூக்கத்தை விரட்டி வேலை பார்த்தேன்! விரட்டுனதாலயோ என்னவோ, லீவ் அன்னிக்குக் கூட தூக்கம் பக்கத்துல வர மாட்டேங்குது டாக்டர்”

“சாப்பாடு எப்பிடி?” – என்றபடியே அவனது கையை நீட்டி, BP பார்க்கத் துவங்கினார் மருத்துவர்.

அவன் கூறிய பிரச்சனைகளைனைத்தையும் கேட்டுக் கொண்டு ப்ரஸ்க்ரிப்ஷனை ஃபில் செய்தவர், “இஞ்செக்ஷன் ஒன்னு போட்டுக்கலாம்” எனக் கூறி திரையை நோக்கிக் கை காட்டியதும்..

“ஊர்வஷி, ஊர்வஷி ஊசி போட்டா வரும் குஷி…” எனப் பாடியபடியே நடந்து சென்றுத் திரையை விலக்கியவன்..

வீங்கிப் போன கையும்,கால் பெருவிரலில் கட்டுமாய் தன்னை நோக்கி நிமிர்ந்த கீர்த்தியைக் கண்டு.. மொத்தமாய் முகம் மாற… “என்னாச்சு?” எனக் கேட்டான்.

அதிர்வாய்த் தன் முகம் நோக்குபவனை, மெதுவாய் அளவிட்டவள், சோர்வான கண்களும், சூம்பிப் போன முகமுமாய் காட்சியளித்தவனைக் கண்டு..

“உனக்கு என்னாச்சு?” என பதில் கேள்வி கேட்டாள்.

இந்த ‘என்னாச்சுக்களில்’ காண்டாகிப் போன டாக்டர்,

“உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு?, இண்டர்வெல் சீன்ல மீட் பண்ணிக்கிற ஹூரோ,வில்லன் மாதிரி ஷாக்-ஆ முகத்தை வைச்சிருக்கீங்க?” – எனக் கேட்டு விட்டு.. அவனிடமிருந்துப் பார்வையைத் திருப்பி தன்னை நோக்கிய கீர்த்தியிடம்..

“என்ன?, உத்து உத்துப் பார்த்தே வீக்கத்தை வத்த வைச்சிடலாம்ன்ற நினைப்பா உனக்கு? காயத்தையே முறைச்சுப் பார்த்திட்டிருக்க? மீதியை வீட்ல போய் பாரு, இப்போ எழுந்திரு” என்று விட்டு.. “டேய்.. நீ உட்கார்றா” என்று அசோக்கிடம் கூற..

பார்வையை அவள் மீது மட்டுமே பதித்திருந்தவன், “ஃபீஸ் வேணும்ன்னா எக்ஸ்ட்ராவா கொடுக்கிறேன், அந்த ஊசியை நீங்களே உங்களுக்குப் போட்டுக்கங்க” எனக் கூறி,

நீல பெட்டுடன் நீச்சலடித்தபடி எழுந்து நின்று கொண்டிருந்தவளின் அருகே விரைந்து, அவள் தோளைப் பற்றி..

“எங்க விழுந்து இப்பிடி வாரி வைச்சிருக்க?, வானத்துக்கும்,பூமிக்கும் வித்தியாசமே தெரியாதவளுக்கெல்லாம் எதுக்கு வண்டி?, பெருசா அடிபட்டிருந்தா என்னாயிருக்கும்?, அறிவில்லையா உனக்கு?” – எனத் திட்டத் தொடங்க..

முசுட்டு முகத்துடன் “ப்ச்,” என்றவள் “சட்டில கொட்டுன பச்சை சுண்டல் மாதிரி எதுக்கு இப்ப லொட,லொடன்னு பேசிட்டிருக்க?, எவனாவது தெரிஞ்சே போய் விழுவானா?” என்று விட்டு “தேன்க்ஸ் அங்கிள்” என்றபடி அறையை விட்டு வெளியே நடக்கத் தொடங்க.. தானும் அவரிடம் ஒரு சல்யூட்டை வைத்து விட்டு விறுவிறுவென அவள் பின்னே ஓடிச் சென்றான் அசோக்.

“வலிக்கலயா?, எதுக்கு இப்போ இவ்ளோ வேகமா நடக்குற?” – அவளது வலது தோளில் ஒரு கையும், இடது பக்கம் ஒரு கையுமாய், அழுந்தப் பற்றி அவள் வேகத்தை அடக்கிக் கேள்வி கேட்டான் அவன்.

“வலி பொறுக்க முடியாமத் தான் வேகமா நடக்குறேன்!” – பல்லைக் கடித்தவளைக் கண்டு கவலையுற்று..

“நான் வேணா, தூக்கிட்டுப் போகவா?” எனக் கேட்டான் அவன்.

அவனது.. விளையாட்டுத்தனமில்லாத வித்தியாசமான குரலைக் கேட்டுக் கண்ணை விரித்து அவள் அவனை பார்க்க..

“என்ன?, தூக்கட்டுமா?” – என்றான் அவன் மறுபடியும்.

எச்சில் விழுங்கி ஆச்சரியத்தை அடக்கியவள் ‘வேண்டாம்’ என்பது போல் தலையை ஆட்ட..

“சரி, மெதுவா நட” என்றவன் “கை பாரு, எப்பிடி வீங்கியிருக்குன்னு?, அப்பிடி என்ன நினைப்புல வண்டி ஓட்டுவ நீ?” என்று திட்டியதும்.. செய்தித்தாள் சம்பவம் நினைவிற்கு வர.. மூச்சு வாங்க அவனை முறைத்தவள்..

“எல்லாத்துக்கும் காரணம் நீ தான்” என்றாள்.

“நானா????” – என்றவனை மூக்கு விடைக்க முறைத்துத் தன் தோளில் பதிந்திருந்த அவனது கரத்தை விலக்கித் தள்ளி..

“இந்தக் கையால என்னைத் தொட்ற வேலை வைச்சுக்காத” எனப் பாய்ந்தாள்.

நீள ஜடை தோளிலாட, குடை ஜிமிக்கிக் காற்றிலாட, நயனங்களிரெண்டும் கோபத்தில் நடனமாட.. வியர்த்த நெற்றியுடன் நின்றவளை, இரு கைகளில் அள்ளி, இறுக்கி அணைத்துக் கொள்ளத் தோன்றியது அவனுக்கு.

இடுப்பில் கை வைத்தபடித் தன் சோர்வுற்ற கண்களால் அவள் முகத்தை அளவிட்டவன்..

“ஏன்?, இந்தக் கைக்கு என்ன குறை?” எனக் கேட்டான்.

“குறையா?, கும்கி யானையோட கும்தாவா இருக்குற கைக்குக் குறை என்ன இருந்துடப் போகுது??”

“என்ன சொல்ற நீ?”

“புரியாத மாதிரியே நடிக்காத” – என்றவள் தன் டூ-வீலரை நோக்கி நடக்கத் தொடங்க,

“இந்தக் கையை வைச்சுக்கிட்டு எப்பிடி வண்டி ஓட்டிட்டுப் போவ?, வா நான் ட்ராப் பண்றேன்” என்றான்.

“ஒன்னும் தேவையில்ல!” என்று கத்திக் கூறியவள்,

“தோள்ல தோடி ராகம் வாசிச்சவன், வண்டில எத்தனை வராளி ராகத்தை ஏத்தியிருக்கானோ” – என்று புலம்பியபடியே நடக்க.. எரிச்சலுடன் அவளை ஏறிட்டவன், வெடுக்கென அவளது கைப்பையைப் பறித்துக் கொண்டு…

“புரியுற மாதிரி பேச மாட்டியா நீ?, ஆனா, நீ ஏன் டி கத்துற?? நியாயமா பார்த்தா நான் தான் உன் மேல காண்டா இருக்கனும்!?” – எனக் கோபப்பட..

“ஏன்?, என் தோளை எவன் தொட்டதைப் பார்த்த நீ?” – என்றவளிடம்..

“என்னடி உளர்ற?” – என ஆயாசமான குரலில் கேட்டான் அவன்..

“உளர்றேனா?, நியூஸ் பேப்பர்ல, நியூலி-வெட்ஸ் மாதிரி அந்த நியூட்ரான் தோள்ல கையைப் போட்டுக்கிட்டு நிகோபார் தீவுல நீச்சலடிக்கிறவனாட்டம் நின்னது நீ தான?” – என்றாள் அவள்.

புருவம் சுருங்க அவள் பேசியதை டிகோட் செய்தவன், புரிந்ததும்.. தோள் குலுங்கப் புன்னகைத்து.. அவளிடம் பதிலேதும் கூறாமல்.. திரும்பித் தன் காரை நோக்கி நடந்தான்.

“என் ஹேண்ட்பாக்கை கொடுத்துட்டுப் போடா பேமானி”

“வந்து வண்டில ஏறுடி சோமாரி”

“நான் வர மாட்டேன்! அந்த அனன்யா சிங் மாதிரி, எத்தனை அவிச்ச முட்டைகளை நீ வண்டில ஏத்தியிருக்கியோ!, என்னால வர முடியாது”

மறுத்துக் கொண்டிருந்தவளின் முன்பு காரை நிறுத்தியவன், கதவைத் திறந்து விட்டு..

“நீ தான் என் வண்டில ஏறுற முதல் அவிச்ச முட்டை! போதுமா?, ஏறு ஏறு” என்றான்.

கையைக் கட்டிக் கொண்டு, தலை சாய்த்து அவனை முறைத்துப் பார்த்தவள்,

சுருக்கிய புருவங்களுடன் “உன்னை நம்ப முடியாதே” என்றாள்.

அவள் செய்கையை கண் கொட்டாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் பேச்சற்று அவளையே நோக்கிய வண்ணமிருக்க, ஒரு நொடி எச்சில் விழுங்கி வேறு புறம் பார்த்தவள், மீண்டும் அவன் முகம் நோக்குகையில்..

“ஏறு டி.. ப்ளீஸ்..” என்றான் வார்த்தைகளற்ற வாயசைப்பில்.

அவனது சோர்வான முகம் வேறு உள் மனதை சோதிக்க “ம்க்கும்” என்றவள் “அப்போ என் ஸ்கூட்டி?” எனக் கேட்டாள்.

“அதை அப்புறமா, ஒரு அப்ரண்டிஸ் வந்து எடுத்துட்டுப் போவான்” என்று விட்டு.. அவள் ஏறி அமர்ந்ததும்.. வண்டியைச் செலுத்தினான் அசோக்.

தூறல் போடும் கரு மேகத்தை ஜன்னல் வழி கண்டபடி, அமைதியாய் அமர்ந்திருந்தவளைத் திரும்பி நோக்கினான் அவன்.

கலைந்திருந்த முடிகளைக் காதோரம் ஒதுக்கி, தன்னைக் கிளர்ந்தெழச் செய்யும் கழுத்தில் மெதுவாய் முத்தமிட்டு, நீண்டு நின்ற கைகளைத் தன் கன்னத்தில் பதித்துக் கொண்டு, அவள் தோள் ஓரம் தலை சாய்த்து, கண் மூடி விடத் தோன்றியது அவனுக்கு.

மழையும், மங்கையும் மன்மதனோடு கை கோர்த்ததில், சோர்வுற்றிருந்த அவன் உடல் சோதனைக்குள்ளாக்கப்பட, பிடரியைக் கோதிக் கொண்டு.. மூச்சை இழுத்து விட்டவன்.. அவளிடம்..

“ஏதாவது பேசலாமே?” என்றான்.

“அனன்யா சிங்கைப் பத்தியா?”

நொடியும் யோசிக்காமல் பட்டெனக் கேட்டவளைக் கண்டு சிரிப்பு வர, வாய் விட்டு நகைத்தவன்,

“அனன்யா சிங் பேரைக் கேட்டாலே, உன் Adrenaline அசுர வேகத்துல வேலை செய்யுது போல ” என்றான்.

“எனக்கா? உனக்கா?”

“ம்ஹ்ம், எனக்கு, உன்னைப் பார்த்தா மட்டும் தான் உற்சாகமா கிளம்புது”

“அதனால தான் அவ தோள்ல தூசி தட்டிட்டு இருந்தியாக்கும்?”

“இதுக்கெல்லாம் என்னால எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்க முடியாது”

“யார் உன் கிட்ட கேட்டா?” – என்று முணுமுணுத்தவள், மீண்டும் ஜன்னல் புறம் திரும்பிக் கொள்ள.. அவள் முகம் பார்த்து, அகலச் சிரித்தவன்..

“பரவாயில்ல! சுமாரா இருக்குற உன் மூஞ்சி, நீ பொறாமைப்படும் போது சூப்பரா மாறுறதைப் பார்க்க நல்லாத் தான் இருக்கு” என்றான்.

மூக்கு விடைக்க அவன் புறம் திரும்பி முறைத்தவளின் முன் கை நீட்டி,

“என்ன இந்த மூக்கு தான், மூடி போட்ட முறுக்கு டப்பா மாதிரி கொஞ்சம் புடைப்பா இருக்கு!” எனக் கூறியபடி அவளது நாசியைத் தீண்ட வர.. தலையைப் பின்னே சாய்த்தவள்..

“முன் ஜென்மத்துல முனிவரா பிறந்தவங்களுக்குத் தான் என் மூக்கைப் பத்தி பேசுற ரைட்ஸ் இருக்கு. உன்னை மாதிரி முடிச்சவிக்குக்கு இல்ல. அதனால நீ உன் வாயை மூடு” எனக் கூற..

அவள் தன்னைத் தவிர்த்ததில் கடுப்பாகிப் போனவன், “இந்த ஜென்மத்துல என்னை முனிவராக்கத் தான் நீ இப்பிடிப் பண்ற போல?” – என்றான் அடிக்குரலில்.

“எப்பிடிப் பண்றேன்?”

“தொட வந்தா தள்ளிப் போற?”

“நீ எந்த உரிமைல தொட வர்ற?”

“நீ வேற எவனைத் தொட விட்ருவ?”

“மரக்கடை வினோத்??”

“மண்டைலயே ஒன்னு போட்ருவேன் சொல்லிட்டேன்”

“நீ என்னை மர்கயா பண்ணாலும், என் வோட்டு மரக்கடைக்குத் தான்!”

“அப்ப அந்த வினோத்தை வீல்-சேர்ல உட்கார வைக்கிறதைத் தவிர எனக்கு வேற ஆப்ஷன் இல்ல” – நம்பியாராய் முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல்..

“அந்த ரெஸ்டாரண்ட்ல நிறுத்து, எனக்குப் பசிக்குது” – என்றாள் அவள்.

“நான் சாப்பிட்றதுக்கும் சேர்த்து நீ தான் பில் பே பண்ணனும் பரவாயில்லயா?” – என வம்பு வளர்த்தபடியே ரெஸ்டாரண்டில் வண்டியை நிறுத்தினான் அவன்.

ஒரு மசால் தோசையுடன் அவளும், ஒரு ப்ளேட் இட்லியுடன் அவனும் ஜன்னலோர இருக்கையில் ஜில்லென அமர்ந்திருந்தனர்.

கை தன் போக்கில் இட்லியை வதம் செய்து கொண்டிருந்தாலும், பார்வையை மட்டும் பாவை மீதே வைத்திருந்தான் அவன்.

அவன் பார்வையில் சிறிதும் பாதிப்படையாமல், தோசையை விழுங்கிக் கொண்டிருந்தவளிடம்..

“நிறைய சேஞ்ச் காட்டுறியே?” எனத் தொடங்கினான் அவன்.

“என்ன சேஞ்சு?”

“இல்ல பொதுவா, நாலு கௌண்ட்டரைப் போட்டு நக்கல் பண்ணிட்டு, போ நாயேன்னு என்னைத் தொரத்தி விட்ருவ! ஆனா.. இன்னிக்கு.. கையைப் பிடிக்க விட்ற, கார்ல ஏறுற, என் கூட காஃபி சாப்பிட்ற?, எல்லாம் புதுசா இருக்கே”

“நீ கூடத் தான் சேஞ்ச் காட்டுற?”

“நானா?”

“ஆமா! என் கால்ல அடிபட்டாக் கவலையா பார்க்குற, வண்டில ஏற வைக்க ப்ளீஸ் போடுற, கையைத் தட்டி விட்டா மூஞ்சியைத் தூக்குற?”

“அ…அது…. வெளியே மழை பெய்யுதுல்ல?, அதான் மூட் ஆயிடுச்சு”

“என்னது??”

“ம்க்க்க்க்க்கும், மூட் மாறிடுச்சுன்னு சொல்ல வந்தேன், நாக்கு நழுவிடுச்சு”

“ம்ஹ்ம்?? நழுவுற நாக்கை நாலா மடிச்சு நாலுகால பூஜை பண்ணுனா.. எல்லாம் சரியாப் போகும்”

“பூஜை போடத் தான் நானும் ஆசைப் பட்றேன்! ஹ்ம்ம்ம்! எங்க….” – பெருமூச்சுடன் முணுமுணுத்தவனை முறைத்து..

“சத்தமாப் பேசு டா சாவுகிராக்கி” என்றாள் அவள்.

“மிஸ்டர்.ராஜாங்கம் உன்னோட மறுபேச்சு வார்த்தை நடத்துனாருன்னு கேள்வி பட்டேன்!”

“………….” – இந்தக் கேள்வியை டீலில் விட்டு விட்டு கண்ணாடி தம்ளரிலிருந்த தண்ணீரைப் பருகினாள் அவள்.

மடக்,மடக் என ஏறியிறங்கிய அவளது தொண்டைக் குழியைக் கண்டு, அவன் இதயம் எம்பிக் குதிக்கத் தொடங்கியது.

தடுமாறிய விழிகளை, கடந்த பதினைந்து நிமிடங்களில் முதன் முறையாக அவளிடமிருந்து அகற்றியவன் தானும் தண்ணீரைக் குடித்து, இதயத்தின் குத்தாட்டத்தை அடக்கி நிமிர்ந்து அமர்ந்தான்.

அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் அமர்ந்திருந்தவளை தலை சாய்த்து நோக்கி..

“அப்போ நீ ஒத்துக்க மாட்ட?” எனக் கேட்டான்.

அலட்டிக் கொள்ளாது, சட்னியில் தோசையை முக்கி எடுத்தவள்,

“மதுரவாயில் மதுமிதாவை மருமகளாக்கியே தீருவேன்னு உங்கம்மா ஒத்தக் கால்ல நிற்குறதா நானும் கேள்வி பட்டேன்”

“அப்டின்னு உங்கண்ணன் சொன்னானாக்கும்?”

“உண்மை தான?”

“ஏய்ய் அவன் சொல்றதையெல்லாம் நம்புவியாடி நீ?”

“ஏன், நீ தான் உன்னைப் பெத்து வளர்த்த அம்மா,அப்பா யாரைக் கை காட்டுனாலும் கட்டிப்பியே! மதுமிதாவோட மேரேஜை கொண்டாடுறதுல என்ன பிரச்சனை உனக்கு?”

“லாக் பண்றியா?”

“ஆஹான்??, அப்போ நீ பண்றதுக்கு என்ன பேரு?”

“அப்டின்னா நீ சொல்லப் போறதில்ல??”

“என்னன்னு?”

“உன் மனசுல மத்தாப்பு வைச்ச மாமன் நான் தான்னு?”

“மாமனாம்! மாடு போட்ட சாணில மாவிளக்கு வைச்ச மாதிரி இருக்கான்! இவன் மாமனாம்” – வழக்கம் போல் வசனத்தைக் கொட்டி விட்டு காலாட்டியபடி அமர்ந்திருந்தவளை, நாடியில் கை வைத்துக் கொண்டு நகராது நோக்கினான் அவன்.

“VallanTheVillain நீ தான?”

அவன் கேள்வியில், ஆடிய கால்கள் ஒரு நொடி அசையாது நின்றுப் பின் மிகத் தீவிரமாக ஆடத் தொடங்க…

தலை சாய்த்து அவளை முறைத்துப் பார்த்தவன், டேபிளைத் தட்டியபடி எழுந்து நின்று,

“செய்றேன் டி செய்றேன்!! எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு உன்னை ஒரு நாள் மொத்தமா செய்றேன்” எனக் கடித்தப் பற்களுடன் கூறி விட்டு பில் கவுண்ட்டரை நோக்கி நடந்தான்.

அதன் பின்பு சாரலோடு சரசமாடிக் காரை வந்தடைந்தததும், முகத்திலிருந்தத் தண்ணீரை வழித்துக் கொண்டிருந்தவளிடம்..

“இங்கயிருந்து பத்து நிமிஷ தூரத்துல, பத்தாவது தெருவுல பத்தாம் நம்பர் வீடு ஒன்னு இருக்கு” என்றான் அவன்.

அதுக்கென்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தவளிடம்..

“பூப் போட்ட கேட் எல்லாம் போட்டு பச்சைக் கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும்” எனத் தொடர்ந்து வர்ணித்தவனின் பேச்சில் காண்டாகி முறைத்தவளைக் கண்டு சிரித்து..

“என் வீடு தான் அது” என்றவன், விரிந்த கண்களுடன் தன்னை நோக்குபவளிடம்..

“போலாமா?” எனக் கேட்டான்.

பார்வையை சாலையில் திருப்பியவள் “வீட்ல.. உங்கம்மா,அப்பாலாம் இருப்பாங்களே” எனத் தயங்கியபடி கேட்க..

“வீடுன்னா அம்மா,அப்பா இருக்கத் தான் செய்வாங்க! ஹேய்ய், நான் உன்னைக் குஜால் பண்ண கூப்பிட்றேன்னு நினைச்சியா?, என் வீட்டு வாசல்ல விற்குற குச்சி ஐஸ் நல்லாயிருக்கும்! அதுக்குத் தான் கூப்பிட்டேன்” என்றவனின் பேச்சில் முழு காண்டாகி.. தலையில் அடித்துக் கொண்டவள் ‘போ’ என்பது போல் சாலையைக் கை காட்டி சாந்தமாய் அமர்ந்து விட்டாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அந்தப் பச்சைக் கலர் வீட்டின் பலகணி வைத்த அறையில் நின்றிருந்தனர் இருவரும்.

“ஆள் இல்லாத வீட்டுக்கு என்னை எதுக்கு டா கூட்டி வந்த?” – சந்தேகமாய் முறைத்தவளிடம்..

“ஏய் ச்சீ பே..” என்று விட்டுக் கீழே சென்று கையில் எதையோ எடுத்து வந்தான்.

சுற்றி,சுற்றிப் பார்த்தபடி நின்றிருந்தவளிடம் “இந்தா” எனத் தூக்கி வீச.. கேட்ச் பிடித்தவள்.. தன் கையிலிருந்த எக்லேர்ஸ் சாக்லேட்டைக் கண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“முதன் முறையா வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஸ்வீட் கொடுக்கனுமாமே”

“நீயெல்லாம் என்னைக்குத் தான் வளரப் போறியோ” – என சலித்தபடி அவள் சாக்லேட்டைப் பிரிக்கத் துவங்கியதும் அருகில் வந்து நின்றான்.

ராப்பரைப் பிரித்து சாக்லேட்டை, அவள் வாயிலிட எத்தனித்த போது அவசரமாய் அதைக் கைப்பற்றியவன், பாதியைத் தான் கடித்து, மீதியை அவள் வாயில் திணித்து விட்டான்.

துப்ப எத்தனித்தவளின் வாயை இறுகப் பொத்தியவன்,

“இப்போ நீ இதைத் துப்புனேனா, என் வாய்ல இருக்கிறதை, உன் வாயோட வாய் வைச்சு தான் ஊட்டுவேன்! நீ கத்துனாலும்,கதறுனாலும் காப்பாத்த ஆள் இல்ல இங்க! ஒழுங்கா கடிச்சு முழுங்கிடு” – என மிரட்ட..

தன் இதழ் மீது பதிந்திருந்த அவன் கரத்தை விலக்கித் தள்ளியவள்,

“ஏன் டா டீனேஜ் பையன் மாதிரி பண்ணிட்டிருக்க?” எனத் திட்ட..

“டீனேஜ்ல இதெல்லாம் எங்கடி பண்ண விட்டான் உன் நொண்ணன்?” – என்றவனை முறைத்தவள், அவனை விட்டுப் பத்தடி தள்ளி நின்று..

“நீ பண்ண வரைக்கும் போதும்! நான் கிளம்புறேன்” எனக் கூறி நகரப் பார்க்க..

“ஏய்ய் ஏய்ய்ய் ஏய்ய்ய்” எனக் கூவி வேகமாய்ச் சென்று அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.

“ஆஆஆஆஆஆஆ” – என வாயை அகலத் திறந்தவள் “அடிபட்டக் கை டா அது, பரதேசி” என்று கத்தி...

“ஹய்யோ! சாரி, சாரி,சாரிடி” என்றவனை ஆத்திரமாய் நோக்கி, அவன் தலையில் அடிக்கக் கை ஓங்க.. அவசரமாய் அவள் கரம் பற்றி அடக்கிக் கீழே இறக்கியவன்,

“சாரிடி சாரிடி! தெரியாம பிடிச்சுட்டேன், வலிக்குதா?” எனக் கேட்க.. வீக்கத்தைப் பார்த்தபடி முசுட்டு முகத்துடன் நின்றாள் அவள்.

சுருக்கிய புருவங்களும்,அழுந்த மூடிய இதழ்களுமாய் நின்றவளைத் தாண்டி, பின்னே இவர்களிருவரது பிம்பத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருந்த கண்ணாடியை நோக்கினான் அசோக்.

“நல்லாத் தான் இருக்கு”

“எனக்கு வலிக்கிறதா?”

“இல்ல” என்றவன் பின்னே கண்ணைக் காட்ட.. திரும்பி கண்ணாடியை நோக்கியவள், மெல்லிய சிரிப்போடு அவளை ஆர்வமாய் பார்த்தபடி நிற்பவனின் பிம்பத்தைக் கண்டு விட்டுத் திரும்பி, அவன் முகத்தை நோக்கினாள்.

அகண்ட கண்களில் ஆச்சரியம் வழிய.. லேசாய்த் திறந்திருந்த இதழ்களுடன் தன் முகம் பார்த்தவளைக் கண்டு சிரிப்பு மறைய.. கிறங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டான் அவன்.

முகம் மாற நின்றவனைக் கண்டு மனம் ஊசலாட.. சட்டென மறுபுறம் திரும்பி “ம்க்கும்” என்றவள்.. எதிரே தெரிந்த புத்தக அலமாரியைக் கண்டு..

“நீ புக்ஸ் எல்லாம் படிப்பியா?” எனக் கேட்டபடி நகர்ந்து விட்டாள்.

எரிச்சலோடு பிடரியைக் கோதியவன்..

“எவ்ளோ நல்லாயிருந்தது! ஒரு ரெண்டு நிமிஷம் நின்றிருக்கலாம்ல?” என சலித்துக் கொண்டான்.

அவனது சலிப்பை கண்டுகொள்ளாமல், அவள் புத்தகங்களைப் பார்வையிடத் தொடங்க..

“ப்ச்” என்றபடிப் படுக்கையில் விழுந்தவன், தலையணையில் கன்னத்தை அழுத்திக் கொண்டு, தள்ளி நின்றவளைத் தன் பார்வையால் தொடர்ந்தான்.

இருப்பதிலேயே காஸ்ட்லியான இரண்டு புத்தகங்களை நைசாக லவட்டியவள்,

“எனக்கு இது வேணும்! படிச்சுட்டுத் திருப்பிக் கொடுத்திட்றேன்”என்றாள்.

“நான் இந்த புக்ஸ் ஷெல்ஃபையே உனக்கு சொந்தமாக்க ஆசைப்பட்றேன்! நீ என்னடான்னா ரெண்டு புக்கை லவட்டிட்டுப் போறதுல குறியா இருக்க”

“புத்தகத்துக்காக ஒரு பொறம்போக்கைப் போய்.. ம்ஹ்ம்! சான்ஸ் இல்ல”

“பொறம்போக்கு தான் டி! கைக்கெட்டுற தூரத்துல நீ இருந்தும், இப்பிடி தனியா சாய்ஞ்சிருக்கேன் பாரு”

“………….”

“இதுக்கு மட்டும் பதிலே வராது”

“ப்ச்”

“ஏய்ய்ய்..”

“என்ன?”

“இந்த estrogen,progesterone ஹார்மோன்ஸ் எல்லாம் உன் பாடி-ல என்ன தான் டி செய்யுது?”

அவன் கேள்வியில், திறந்து வைத்திருந்தப் புத்தகத்தைப் பட்டென மூடியவள், விறுவிறுவென வாசலை நோக்கி நடக்க.. படு வேகத்தில் படுக்கையில் உருண்டு வந்து.. அவளது முந்தானையைப் பற்றியவன்..

“போகாத, போகாத ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என்றான்.

அவன் கையிலிருந்தத் தன் சேலையை உருவிக் கொண்டவள்,

“நீ கெஞ்சுறதைப் பார்க்க நல்லாத் தான் இருக்கு! ஆனா.. நீ பேசுறதையெல்லாம் பார்த்தா.. பயமா இருக்கே” என்றாள்.

“சரி, இனி எதுவும் பேசல! போகாத” – சமாதானமாய்க் கூறியவனை அவள் சந்தேகமாய் நோக்குகையிலேயே.. மெல்ல அவள் கையைப் பற்றினான் அவன்.

“டேய்..”

“இது எனக்காக இல்ல. இப்ப எனக்குள்ளத் தாறுமாறா சுரந்திட்டிருக்கிற androgen-க்காக”

அறிவாளித்தனமாய் அவன் சமாளிக்கும் விதம் சிரிப்பைக் கொடுக்க, அடக்கிப் பார்த்தும் முடியாமல் நகைத்தவளைக் கண்டபடி மீண்டும் தலையணையில் முகம் புதைத்தவனுக்கு.. காலையிலிருந்து நெருங்கியிராதத் தூக்கம், அண்டி வருவதைப் போலிருந்தது.

சோர்வுற்றிருந்த விழிகள் சொக்கத் துவங்க, தன் கையில் சிக்கியிருந்த அவள் கரத்தைப் பற்றித் தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டான் அவன்.

தாடியோடு தணிந்து போன அவளது உள்ளங்கை மென்மை தகிப்பைக் கொடுக்க.. மேலும் அழுத்திக் கொண்டவன், மெல்ல நிமிர்ந்து அவள் முகம் நோக்கினான்.

Estrogen,progesterone-உம் கலந்தடித்துத் தாக்கியதில், திகிலடித்துப் போய் நின்றவளின் முகம், ஏகத்துக்கும் சிவந்து போயிருக்க.. அடக்கிய மூச்சுடன் பொம்மையாய் நின்றவளைக் கண்டு.. மெலிதாய்ப் புன்னகைத்து மெல்லக் கண் மூடிக் கொண்டான் அசோக்.