1.Galileo_Gangster
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில், இடப்புறமாக, மேற்கு பார்த்த வாசலுடன், சோம்பலாய் ஒளிரும் மஞ்சள் விளக்கின் கீழ், சற்று சொங்கித் தெரிந்தது அந்த இரண்டு படுக்கையறை வீடு.
வலப்பக்கம் ஒட்டியிருந்த செல்லோ டேப் பசையிழந்ததன் விளைவு, உள்ளங்கையிலிருந்துப் பாய்ந்தோடும் ஒளி வீச்சுடன், லேமினேஷன் செய்யப்பட்டிருந்தக் கர்த்தர், வாசற்கதவின் மேற்சுவரில் சற்று மடங்கிக் காட்சியளித்தார்,!
அதனையொட்டி நிலப்படியில், தூசி படிந்த கோல்டன் ஸ்டார் ஒன்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது.
கீழே, பேருக்கு shoe rack என ஒன்றிருந்தாலும், Top rack-ன் மீது சீண்டப்படாது கிடந்த Birkenstock sandals-ஐத் தவிர மற்ற அனைத்தும், அதாவது ஃபார்மல் மற்றும் கேஸூவல் ஷூக்கள் தலா ஒன்று, கரித்துணியின் நிறத்தில் சுருண்டிருந்த வெள்ளை நிற சாக்ஸூகள் இரண்டு, ஐவிரல் அச்சு பதிந்த flip flop ஒன்று, திறந்த மூடியுடன் ஷூ பாலிஷ் டப்பா என அத்தனையும், வீட்டு ஓனரின் இடது காலால், rack-ஐ ஒட்டி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அருகிலேயே, இரண்டு நாட்களுக்கு முன்பு ‘garbage collection’-ற்காக வெளியே வைக்கப்பட்டிருந்த, ‘க்ரே’ நிற குப்பைக் கூடை, ‘கப்’படித்தபடி!
அண்டை வீட்டாரை அற்பாயுசில் அனுப்பக் கூடிய வீரியத்தோடு அதகளமாய்க் காட்சியளித்த அவ்வீட்டின் உள்ளே, மாஸ்டர் பெட்ரூமில்….
அதாவது.. ஒரு புறம் table mate, அதனை ஒட்டினாற் போல் முதுகில் துண்டுடனும், மடியில் துணிக்குவியலுடனும் ஒரு ப்ளாஸ்டிக் சேர், அதனை அடுத்து சுவற்றில்.. சோழி பதித்தக் கண்ணாடி, மூலையில் பிய்ந்த ஹாண்டிலுடன் வார்ட்ரோப், கதவில் ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்று ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர், நடுவில் ஒரு ஒற்றைக் கட்டில், அதன் மீது bed, அதற்கு மேல் ஒரு ‘பேமானி’, அவனைப் பாந்தமாய்த் தழுவியிருந்தப் பல நாள் துவைக்காத போர்வை என்று… ஒரு மாதிரி.. Godrej air freshener, naphthalene balls, comfort fabric conditioner, Harpic toilet cleaner என சகலமும் கலந்த ஒரு வகையான வாடை சூழ்ந்திருந்தது.
அனுதினமும் அவ்வாடையுடனே வசிப்பதாலோ என்னவோ, அந்த ‘bed மேல் பேமானி’, ஏதோ நறுமணத்தை நுகர்பவன் போன்று சுருங்கி விரியும் நாசியோடு, பிளந்த வாயில் நெகிழ்ந்த சிரிப்புடன், சுகமாய்க் கனவு கண்டபடி ஆழ்ந்த சயனத்திலிருந்தான்.
நாள் தவறாது அவனை நாடி வரும் நான்கு மணிக் கனவு அன்றும் வந்திருந்தது.
கலகலவென ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையோரம் ஓங்கு, தாங்காய் வளர்ந்திருந்த பெரிய மரத்தில் சின்னதாய் வீற்றிருந்தது ‘மர வீடு’ ஒன்று. வீட்டின் மத்தியிலிருந்த படுக்கையைச் சுற்றி சரம்,சரமாய் மல்லிப் பூக்கள்! மரிக்கொழுந்தோடு பிணைந்து குப்பென வாசம் பரப்பிக் கொண்டிருந்தது!
சலசலத்த நீரோடு சல்லாபம் புரிந்து, சுக ராகம் பாடியவாறு சிணுங்கிய காற்று, கொள்ளை,கொள்ளையாய்க் குளிர் அள்ளித் தெறித்துச் சென்றதில், கிளுகிளுப்போடு… வாசலிலிருந்த மரப்பாலத்தில் நின்றிருந்தான் அவன்.
வெள்ளை வேட்டி சட்டை, சவ்வாது செண்ட்டு, புலிப்பல் சங்கிலி, பட்டையாய் ப்ரேஸ்லெட் எனப் புது மாப்பிள்ளையின் தோரணையிலிருந்தவனின் கையில் ஆப்பிள் பலூன்.
காத்திருப்பு, காளையவனைக் கடுப்பேற்றியதில், பலூனின் நூலைப் பற்றி முன்னும்,பின்னும் இழுத்து ஆடச் செய்து, அதனுள்ளிருக்கும் சிறு கற்கள் எழுப்பும் டிஷ்க்,டிஷ்க் ஓசையை அவதானித்துக் கொண்டிருந்தவன், அறைக்குள் ஒலித்த மெல்லிய கொலுசொலியில்… பலூனைப் பறக்க விட்டு ஆவலாய்த் திரும்பினான்.
தரை தழையப் புடவை கட்டி, தலை நிறைய மல்லிப்பூவுடன், முதுகு காட்டி நின்றிருந்த பைங்கிளியை நோக்கி அவன், மடித்துக் கட்டிய வேஷ்டியும், முறுக்கி விட்ட மீசையுமாய் மிடுக்குடன் நடந்து வர, களுக்கென்ற சிரிப்புடன் கொலுசு மெல்ல நகர்ந்து சன்னல் புறம் சென்றது.
‘பார்ரா! வெட்கமா?’ – என்றபடித் தன் சட்டைக் கையை மேல் ஏற்றி விட்டவன், முதல் மரியாதை சிவாஜியைப் போல slow jogging-ல், விரல் நீட்டி அவளைப் பிடிக்கச் செல்ல, கொலுசு அகப்படாது அவனுக்கு ஆட்டம் காட்டியது.
தொடர்ந்து முப்பது நிமிடங்களாக முகம் காட்டாது ஓடுபவளை மூச்சு வாங்கத் துரத்தியதில், ‘மூட்’, ‘பேட் மூட்’ ஆகி விட, ஆத்திரத்தில் அன்ட்ராயர் தெரியுமளவிற்கு வேட்டியைத் தூக்கிக் கட்டியவன், undertaker-ஆக மாறி, கொலுசைத் தூக்கி tombstone போட்டு விடும் நோக்கத்துடன் நெருங்கிச் செல்கையில்,
“இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. சர்ச்சுக்குப் போடா அலெக்ஸூ” – என்றொரு குரல்.
வியர்த்து வழிய நின்றவன், குழம்பி.. அவள் முதுகை வெறிக்கையில் மறுபடியும்,
“இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. சர்ச்சுக்குப் போடா அலெக்ஸூ” – என்றது.
“எந்த நேரத்துல.. என்ன பேசுறா.. இவளை…”
“இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. சர்ச்சுக்குப் போடா அலெக்ஸூ” – சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தக் கிளியின் தோளைப் பற்றி சடாரெனத் திருப்பிய நேரம், படாரெனக் கண் விழித்தான் அலெக்ஸ்.
மல்லிகையும், மரிக்கொழுந்தும் மறைந்து, Godrej air freshener, naphthalene balls, comfort fabric conditioner, Harpic toilet cleaner – வாடையை சுவாசித்த நாசி, நடப்பைச் சொல்ல..
“இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. சர்ச்சுக்குப் போடா அலெக்ஸூ” – நான்காவது முறையாக மேரி மாதாவின் குரல், அலாரமாய் ஒலிப்பதைக் கேட்டு எரிச்சலுடன் அதை அணைத்து வைத்தான்.
மீண்டும் கண் மூடி.. மடித்துக் கட்டிய வேஷ்டியோடு மர வீட்டையும், மங்கையையும் நோக்கிச் செல்ல முனைந்தவனை…
‘மரிக்கொழுந்தே….. என் மல்லிகைப் பூவே…’ என Android phone எழவைக் கூட்ட, ‘எந்த எடுபட்ட நாய் என் ஏகாந்த நேரத்தைக் கெடுக்குறது’ எனப் பல்லைக் கடித்தபடி, முகம் போர்த்தியிருந்த போர்வையை வெடுக்கெனத் திறந்து, நண்பன் ‘George pig’-ன் கால்-ஐ கட் செய்தான்.
Wifi- On ஆனதும் சடசடவெனப் பொழிந்த மெசேஜ் மழையைக் கண்டு புருவம் சுருக்கியபடி எழுந்தமர்ந்தவன், ‘Androgen army’ – என்றிருந்த வாட்ஸ் ஆப் க்ரூப்பைத் திறந்து நோக்கினான்.
அலெக்ஸ்,அலெக்ஸ் எனக் கதறிச் சிதறிக் கிடந்த மெசேஜ்கள் அத்தனையையும் கடந்து பள்ளி நண்பன் ‘பாண்டியன் (லொடுக்கு)’ அனுப்பியிருந்த pink & yellow கல்யாணப் பத்திரிக்கையைத் திறந்தான்.
‘நிகழும் மங்கலகரமான-வில் தொடங்கி, ‘இரு வீட்டார்’ அழைப்பு வரைப் பத்திரிக்கையை வலம் வந்தவன், நண்பனுக்குத் தன் வாழ்த்துகளை அனுப்பி விட்டு, நெற்றியைச் சொரிந்தபடி, ஒவ்வாத பாவனையுடன் மற்ற செய்திகளை நோக்கினான்.
முதிர்கண்ணனவனை முச்சந்தியில் நிற்க வைத்து, செருப்பை சாணியில் முக்கி விளாசிக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.
“ஆறு மனமே ஆறு, அலெக்ஸூ ஆண்டவன் கட்டளை ஆறு” – மோசஸ் (மோசமானவன்).
“அலெக்ஸா?, பாண்டியனா? – அப்டின்னு நடந்த போட்டியில் அலெக்ஸை வென்று வெற்றிக் கொடியை நாட்டி விட்டார் பாண்டியன்” – சாதிக் (பாட்ஷா)
“அலெக்ஸூ, அப்ப உனக்குக் கடைசி வரை கல்யாணமே ஆகாதா? ☹ ” – அரசன்(Flower). – அதாவது பூவரசன்.
“பேசாம நீ ஸ்ட்ரைட்-ஆ vasectomy பண்ணிடுடா அலெக்ஸூ!” – மோசஸ்
“இல்ல, நீ ஜெண்டர் சேஞ்ச் சர்ஜரி பண்ணி, பொண்ணா மாறிடு! அப்பவாவது ஏதாவது தேறுதான்னு பார்ப்போம்” – அரசன் (Art). அதாவது கலையரசன்.
“டேய் பாவம் டா அவன், விடுங்க டா” – சங்கர் (சொடக்கு)
“என்னா பாவம்?, ஏன் டா அலெக்ஸூ கோவம் வருதா? உனக்கு ரோஷம், மானமெல்லாம் கூட இருக்கா டா?” - சாதிக்
“டேய் டேய் 35 வயசுல அந்த ஹார்மோன்ஸெல்லாம் ஆக்டிவ்-ஆ இருக்காது டா” – மோசஸ்
“அவனுக்கு எந்த ஹார்மோனும் ஆக்டிவ்-ஆ இருக்குற மாதிரித் தெரியலயே டா” – கவலையுடன் கலை.
“அலெக்ஸூ, எனக்குத் தெரிஞ்ச சித்தா டாக்டர் இருக்காரு! ஒரே சூரணம் தான்! சாப்பிட்டா, சூரப்புலி மாதிரி சீறி விளையாடலாம்! வர்றியா, போவோம்?” – சாதிக்.
“இந்தாடா சாதிக்-கு, நீ சீறி விளையாடிப் பெத்த உன் இரண்டாவது பொண்ணு, மூச்சா போய் முப்பது நிமிசமாச்சு, போய் பேம்பர்ஸ் மாத்தி விடு. போ” – ‘வந்துட்டானுங்க காலங்கார்த்தால’ – என்ற கடுப்புடன் அலெக்ஸ்.
அப்படியும் அடங்காமல் “இம்பூட்டு நல்லவனான உன் வயித்துல ஒரு புழு,பூச்சி உண்டாகலயேன்னு நினைக்கையில…. எனக்கு.. எனக்கு…” – இழுத்தவனிடம் இடைபுகுந்து..
“கக்கா வருது. நான் அப்புறம் பேசுறேன்”
-எனக் கூறி conversation-ஐ cut செய்து, தலையைப் பரபரவெனத் தேய்த்து விட்டு, கண்களை இறுக மூடித் திறந்தவாறு எரிச்சலுடன் படுக்கையிலிருந்து எழுந்தவன், ‘அடுத்த கனவுல முகத்தைக் காட்டலேனா, கிளிக்கு chairshot தான்’ – என்றெண்ணிக் கொண்டு பாத்ரூமை நோக்கி நடந்தான்.
@Jesuraj_Alexander – எனும் Instagram handle-ஐக் கொண்டிருக்கும் அலெக்ஸ், பெண், Bun, Gin – இவை மூன்றின் மீதும் ஒவ்வாமை கொண்டுள்ள ஒரு 35 வயது, முற்றிப் போன முரட்டுக் காளை!
படிப்பு மற்றும் வேலை:
கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் முடித்த கையோடு வேலைக்கு சேர்ந்து, பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் துறையில் சேவையை ஆற்றி, ‘Fun Friday’-க்களில் ‘வாட் இஸ் யுவர் பேஷன்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு ‘RJ-ing’ – என்ற ஒரே பதிலை திரும்பத் திரும்பச் சொல்லி, ஒரு கட்டத்தில் வானம் FM-ன் டெக்னிக்கல் டீமில் சேர்ந்து, பின் மேனேஜரை விடாது தொல்லை செய்து ‘Prank call பரட்டை’ எனும் அரட்டை show ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறான்.
தோற்றம்:
ஸ்டூல் தேவைப்படாத உயரம், மாநிறம், மாரளவு- Medium.
மைதா, சுகர், அளவில்லா பிரியாணி, ஆல்கஹால் – போன்றவற்றைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் இரவு நேரத்தில், நெஞ்செரிச்சல், இடப்புறம் தோள் மற்றும் கை வலி வருவதால்… அவற்றையெல்லாம் குறைத்துக் கொண்டதாலும், வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸர்சைஸ் செய்வதாலும்… தொப்பையற்றிருந்தது வயிறு!
At any given time, பெண் கிடைத்துக் கல்யாணம் நடந்து விடும் வாய்ப்பிருப்பதால், தோற்றத்தை ஓரளவு இளமையுடன் maintain செய்தாலும், முடி உதிர்தல், முன் சொட்டை, மூட்டு வலி, முதுகு வலியென வயதிற்குரிய அம்சங்கள் அனைத்தும் அவ்வப்போது தலை காட்டி, அவனை சோதிக்கத் தான் செய்கிறது.
அந்த corporate building-ன் நான்காவது தளத்தில் அமைந்திருந்தது வானம் FM.
தனது access card-ஐ swipe செய்து விட்டு உள் நுழைந்தான் அலெக்ஸ்.
டொய்ங், டொய்ங் என விடாது Android எழுப்பிய ஒலி ‘Androgen Army’ இன்னும் அடங்கவில்லையென்பதைப் பறைசாற்றினாலும், கண்டுகொள்ளாதுத் தனது டெஸ்க்கை நோக்கி நடை போட்டான்.
“என்னா டா, ஞாயித்துக் கிழமை சர்ச்சுக்குப் போகாம ஆஃபிஸ்க்கு வந்திருக்க?” – தன்னை எதிர்கொண்ட மோசமானவன்-மோசஸிடம் சிக்காது, தொடர்ந்து நடந்தபடி,
“இன்னிக்கு எனக்கு ரெக்கார்டிங் இருக்கு” என்றவனிடம்,
“அலெக்ஸூ.. டேய்ய்… என்னாடா இப்பிடி ஆயிருச்சு?, உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டு, லொடுக்கு செஞ்ச வேலையைப் பார்த்தியா டா?” – துக்கம் விசாரித்தபடிப் பக்கவாட்டிலிருந்து எழுந்து வந்த ஜார்ஜ் pig-ஐக் கண்டு சிரித்தான் மோசஸ்.
அவன் தலையில் தட்டி அடக்கி, “போய் வேலையைப் பாரு டா போடா..” – என முன்னே நடந்தவனிடம் மோசஸ்,
“டேய் அலெக்ஸூ, உன் first night கனவுக்கு இன்னிக்கு funeral-ஐப் போட்றலாம் டா! பத்து மணிக்கு பார்-க்கு வந்துடு” - எனக் கத்தியதைப் பொருட்படுத்தாது, அவன் காதைக் குடைய,
“அடுத்த வாரம் நம்ம காலேஜ்ல Alumni meet இருக்கு டா! இன்விடேஷன் பார்த்தியா?, நாம எல்லாரும் போறோம்” – தொடர்ந்த ஜார்ஜைக் கேட்டு,
‘எதுக்கு?, குடும்பஸ்தனுங்களா ஒன்னு சேர்ந்து அங்க வைச்சும் என் கற்பைக் கும்மியடிக்குறதுக்கா?, போங்க டா டேய்!’ – என்று முனகியபடி சென்று விட்டான் அலெக்ஸ்.
பின் கடுப்பும்,வெறுப்புமாய் கணினி முன்பமர்ந்து Prank call பரட்டை show-ற்காகத் தனது Instagram பக்கத்தில் வந்து விழுந்திருந்த மெசேஜ்களை ஒவ்வொன்றாகப் பார்வையிடத் தொடங்கினான்.
General knowledge-ஐ genocide செய்யும் Gen-Z-க்கள் ஈக்களாய் அவனது இன்பாக்ஸை மொய்த்திருந்தனர்.
“ண்ணே, எங்கப்பன் சொட்டைத் தலையன் என்னைய திருப்பதில மொட்டை போடச் சொல்லி வற்புறுத்துறாருண்ணே! அவருக்கு ஒரு ப்ராங்க் கால் பண்ணுண்ணே! அழுகையா வருதுண்ணே” – breakup_boy_007.
‘அழுவாத டா அண்ணேன் இருக்கேன்’ – துயர் துடைத்தபடி அலெக்ஸ்.
“அலெக்ஸ் அண்ணே, மேரி மாதாவுக்கு எப்ப Prank call பண்ணப் போறீங்க?” – dairy_milk_sekar.
‘பல வருஷமா அதுவே, உனக்கு பொண்ணு பார்க்கிறேன் டா மவனேன்னு சொல்லி என்னைய prank பண்ணிட்டிருக்குது! இவனுங்க வேற’
“அண்ணேஏஏஏஏ என் லவர் தீபா என்னைய ப்ரேக் அப் பண்ணிடுச்சுண்ணே! அதுக்குக் காரணம் என் எதிரி சம்பத்-ஆ-ன்னு கேட்டு சொல்லுங்கண்ணே!” – un__lucky__boy_1109.
‘என் வேலையவே மாத்துறானுங்களே! குட்டிக் ****னுங்க”
“யோவ் அலெக்ஸூ, ட்ரம்ப்க்கு ஒரு ஃபோனைப் போட்டு.. ‘அப்டி இன்னா உனக்கு அதுப்பு?’ -ன்னு கேளுய்யா” – water_packet_vetri
‘ஏன், நீ கேளேன்’
“ண்ணே, அலெக்ஸ்ண்ணே, ரிப்ளை பண்ணுண்ணே” – Galileo_Gangster
‘ப்ச், ஸ்டாக்கர் கம்னாட்டி, இவன் வேற!’
“அலெக்ஸ் அண்ணே, மாநாட்டுக்குப் போய், மண்டைல அடி வாங்கி மல்லாக்கப் படுத்துக் கிடக்கும் என் நண்பன் மகேஸ்வரனை ப்ராங்க் கால் செய்து மானாவாரியாகக் கலாய்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” – pavi_thran_2506
‘மகேஸூக்குத் தான் இன்னிக்கு மாலை சூட்டு விழா’ – என்றெண்ணிக் கொண்டு மீதமிருந்த மெசேஜ்களை பார்த்துக் குறித்துக் கொண்டு ரெகார்டிங் ஸ்டேஷனுக்குச் சென்றான்.
Multiple layer-களால் sound proof செய்யப்பட்டிருந்த அறைக்குள்.. console-ன் முன்பு ஹெட்-ஃபோனுடன் உடன் அமர்ந்திருந்தவன், mike, mixers, ஹெட் ஃபோன்ஸை சரி பார்த்து, Recording sign-ஐ enable செய்து விட்டு ஷோ-வைத் தொடங்கினான்.
ட்ரிங், ட்ரிங் – என்ற ரிங்கைத் தொடர்ந்து எதிர்ப்புறம் ‘ஹலோ’ என்றதும், இவன் குரலை மாற்றி, அக்கறையைத் தேக்கி,
“மகேஸ்வரன், உங்களுக்கு மண்டைல அடிபட்டிருக்கா?” எனக் கேட்டான்.
“ஆ..ஆமா, நீங்க யாருங்க பேசுறது?”
“மக்கு முண்டமான நீயெல்லாம் எதுக்கு டா மாநாட்டுக்குப் போற அப்டின்னு உங்கப்பா மயில்சாமி, மானக்கேடா கேட்டாராமே! உண்மையா? ”
“எங்கப்பாப் பேரு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“உன் தாத்தா பேரு கூட எனக்குத் தெரியும்?”
“யாருங்க நீங்க?”
“என்னைத் தெரியல?”
“தெரியலயே”
“நான் தான் ‘மாநாடு’ சிம்பு”
“ஹலோ…. என்ன ப்ராங்க் பண்றீங்களா?, டேய், ரமேஷ் பரதேசி, நீ தான?”
“இல்ல நான் சுரேஷ்”
“சுரேஷா?? அது யாரு?”
“ப்ச், டாப்பிக்கு வாங்க மகேஸ், எதுக்காக கரண்டு கம்பத்து மேல குரங்கு மாதிரி ஏறுனீங்க?”
“அ..அ..அது தலைவரைப் பார்க்கனும்ங்குற ஆர்வத்துல…”
“ஆத்தா வையும்-ன்ற பயம் இல்லையா மகேஸ் உங்களுக்கு?”
“அது ஒரு பக்கம் இருக்கு தான்”
“துடைப்பக்கட்டையா? செருப்பா? – எதால அடி வாங்குனீங்க?”
“அய்ய, அதெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்குத் தான்! எங்களையெல்லாம் கட்டிப் பிடிச்சு அழுது, KFC chicken வாங்கிக் கொடுப்பாங்க”
“அதனால தான், கபாலம் பொளந்தாலும் பரவாயில்லன்னு, கண்டவன் பின்னாடி கழிசடையா சுத்துறீங்க” – நாசூக்கு தவறி, நார்மல் வாய்ஸ் வெளி வந்ததும்,
“அலெக்ஸ் அண்ணாஆஆ….. நீங்களா?” – என்றான் குட்டிக் ****ன்.
“ஆமாம் டா டால்டா! ஏன் டா, பேசுறது நான்-ன்னு கண்டுபிடிக்கிறதுக்கே, உனக்கு மாமாங்கம் ஆகுது!, இப்பிடி மங்கிப் போன மூளையை வைச்சுக்கிட்டு நீயெல்லாம் எதுக்கு டா மாநாட்டுக்குப் போற?”
“ண்ணே ண்ணே!, நீங்களுமாண்ணே!”
“சரி, உங்க கட்சிக் கொள்கைகள் ரெண்டை உலகத்துக்கு எடுத்துச் சொல்லு. பார்ப்போம்”
“கொள்கையா? அப்டின்னா?”
“உங்கப்பா,அம்மாவுக்கு கொள்ளி வைக்க முடியாம போனாலும் பரவாயில்ல! நீங்க கரண்டு கம்பத்துலயே தொங்கிருங்க மகேஸ்”
“கொள்ளி-ன்னா என்னாண்ணே?”
“அது ஒரு கட்டை மகேஸ்! செத்தப்புறம் முதுகு அரிச்சா, சொரிஞ்சுக்கலாம்”
“ண்ணே! கலாய்க்காதீங்க ண்ணே! இப்ப ஞாபகம் வந்திருச்சு. எங்க தலைவர் ஆட்சிக்கு வந்தா, நாங்க சாதியை ஒழிப்போம்ண்ணே”
“ஓஹோ, உங்க இன்ஸ்டாக்ராம் ஐடி என்ன மகேஸ்”
“Mahesh_V********R”
“வாய்ல வண்டை,வண்டையா வருது மகேஸ்”
“ஹாஹாஹா”
“இளிக்காத டா எருமை! ஆனா… ஒன்னு புரியல டா எனக்கு! எதுலயுமே பற்றில்லாத தற்குறிங்க உங்களுக்கு, சாதிப்பற்று மட்டும் எங்க இருந்து டா வருது?”
“அது….. கொஞ்சம் கெத்தா இருக்குலண்ணே! வேட்டியை மடிச்சுக் கட்டி, நெத்தி நடுவுல குங்குமத்தோட, வீச்சறுவாள பல்லுக்கிடையில கடிச்சுக்கிட்டு, புருவத்தை நெரிச்சு போஸ் கொடுத்தா, கொல மாஸ்-ஆ இருக்கும்ண்ணே”
“உனக்கு என்னா டா வயசு?”
“16-ண்ணே!”
“வீச்சறுவாள.. ஒத்தக் கைல தூக்கிருவியா?”
“ண்ணே ண்ணே.. என்னாண்ணே!”
“ஒன்னு,ரெண்டு தறுதலையா இருந்தா பரவாயில்ல! ஒரு தலைமுறையே தற்குறியா இருக்கீங்களேடா! ‘படிச்சா நல்லா வந்துரலாம்’ன்னு நம்புன க்ரூப்புக்கு பெருசா ஆப்பு வைச்சுட்டீங்க டா டேய்”
“ண்ணே, போங்கண்ணே”
“தலைவர், தலைவர்ன்னு கண்ட தற்குறிங்க பின்னாடி போறதை விட்டுட்டு… முதல்ல அடிப்படை அறிவை வளர்க்கப் பாருங்க டா! அப்புறமா உங்களுக்கு பட்டறிவு,பகுத்தறிவெல்லாம் வருதான்னு பார்ப்போம்!”
“ண்ணே, என்னான்ணே இப்பிடி சொல்றீங்க?, என் க்ளாஸ்ல நான் டாப்பர்-ங்கண்ணே”
“அதான், LED LAMP-மேல ஏறுனியாக்கும்?”
“ஹிஹிஹிஹி”
“படிப்பு மட்டும் போதாதுன்னு பேரண்ட்ஸை ஃபீல் பண்ண வைச்சுட்டீங்க டா”
“ண்ணே, எனக்கு ஸ்போர்ட்ஸ் கூட நல்லா வரும்ண்ணே”
“ஐயோ! இவனுக்கு context-ஏ புரிய மாட்டேங்குதே!, சரி டா, என்னா ஸ்போர்ட்ஸ் வரும் உனக்கு? இந்த குகேஸ்,பிரக்ஞானந்தா மாதிரி செஸ்,கிஸ் எதுவும் விளையாடுவியா?”
“செஸ்ஸெல்லாம் எனக்குத் தெரியாது! ஆனா… ரெண்டாவது மேட்டருக்கு.. எனக்கு ஆள் இருக்குண்ணே”
“டேய்ய் டேய்ய்ய்ய்… எப்பிட்றா? எல்லாக் குட்டிக் ****னுங்களும் ஆளோட இருக்கீங்க?, என் காலத்துல புள்ளைகளெல்லாம் மூஞ்சில முள்ளைக் கட்டிட்டு சுத்துவாளுகளே டா!, சிரிச்சா முறைப்பாளுக! பேசப் போனா.. அப்பனைக் கூட்டி வந்துடுவாளுக! கையைப் பிடிச்சா.. கண்டமாக்கிடுவாளுங்க”
“எங்களுக்கு அந்தக் கஷ்டமெல்லாம் இல்லண்ணே! Baggy pants, sweat shirt, clogs-எல்லாம் போட்டுக்கிட்டு ப்ளாக் அண்ட் வைட்ல Instagram profile photo வைச்சா, பொண்ணுங்க நம்ம Follow request-ஐ accept பண்ணிடுவாங்கண்ணே”
“நெசமாவா டா?”
“அப்புறம் Bio ரொம்ப முக்கியம்ண்ணே!, அப்பப்போ டீ க்ளாஸ், ஓசி பைக், கார்ல சாய்ஞ்சு ஃபோட்டோ, மொட்டை மாடி, கோயில், குளம், வானம், மேகம்ன்னு எதையாவது ஃபோகஸ் பண்ணி ஸ்டோரி, ஸ்டேட்டஸ் வைக்கத் தெரிஞ்சுருக்கனும்! இந்த ஸ்கில் எல்லாம் இருந்தாலே, மணிக்கணக்கா பொண்ணுங்களோட, மங்கலகரமா சாட் பண்ணலாம்ண்ணே”
“இம்புட்டையும் பண்ணிட்டு எப்பிடி டா படிப்ப?”
“அதெல்லாம் படிச்சுப்போம்ண்ணே, எங்களுக்கு எல்லாமே அசால்ட்டு! பெரட்டி விடு, செதற விடு-ன்ட்டு போய்ட்டே இருப்போம்ண்ணே!”
“போய் என்ன பிரயோஜனம்?, அதான் கூட்டத்துல சிக்கி மூச்சடைச்சு சாவுறீங்களே! தம்பி, இதெல்லாம் வாழ்க்கையா டா?”
“இந்த அட்வைஸ் எல்லாம் நான் AI கிட்டக் கேட்டுக்குறேன்-ண்ணே! ஃபோனை வை-ண்ணே! எங்கம்மா கூப்பிடுது”
“ஹலோ மகேஸ்… மண்டக் கிறுக்கு மகேஸ்… இர்றா”
-எனும் போதே கீங்,கீங் என கால் கட் ஆகி விட, அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் உலகம் குறித்து அரை மணி நேரம் தொண்டை கிழிய பேசி விட்டு, ஷோ-வை முடித்துக் கொண்டு எழுந்தான்.
“ஏன் டா அலெக்ஸூ, இப்பிடி சின்னப் பையன் மேல வன்மத்தைக் கக்குற?” – என்றவாறு எடிட்டிங்கிற்கு உதவி செய்ய வந்த ஜார்ஜை முறைத்தவனின், Instagram பக்கம் ஒளிர,
எடுத்துப் பார்க்கையில், Galileo_gangster மறுபடி “அண்ணே அலெக்ஸ் அண்ணே! ரிப்ளை பண்ணுண்ணே” என்றனுப்பியிருந்தான்.
எரிச்சல் புடை சூழ, “டேய் gangster கணேஷூ, காப்பரீட்சைக்குப் படிக்கிறதை விட்டுட்டு, ஏன் டா கணக்கில்லாம மெசேஜ் அனுப்பி அண்ணனை சாவடிக்குற?” – என்று காய்ந்தவனிடம்,
“ண்ணே! என் பிரச்சனையைத் தீர்த்து வைக்க உன்னை விட்டா எனக்கு யாருண்ணே இருக்கா?” – என்றான் gangster.
“அப்பிடி இன்னா டா பிரச்சனை உனக்கு?”
“ண்ணே!, நம்மக் கிட்ட நிறைய நேரம் இல்லண்ணே! நாம உடனடியா செயல்ல ஈடுபட்டாக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்”
“நாமளா?, தவளை வாயா! என்னைய எதுல டா கூட்டு சேர்க்குற?”
“நாம ‘பாம்’ வைக்கப் போறோம்ண்ணே”
“எங்க?”
“கலிலியோ காலனி, 3-ர்ட் ஸ்ட்ரீட்ல”.
