2.Alumni meet-ம், அவளும்!
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி
Alumni Meet.
நகரின் மத்தியிலிருந்த பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த முன்னாள் மாணவர் சந்திப்பு. கிட்டத்தட்ட 14,15 வருடங்களுக்குப் பிறகு ஜூனியர், சீனியர் என உடன் பயின்ற அனைவரும் ஒன்று கூடிய நிகழ்வாதலால், அந்த நீண்ட ஹால் முழுதிலும் நிரம்பியிருந்த முகங்களில் மகிழ்ச்சியும், உற்சாகமும் கரை புரண்டோடிக் கொண்டிருந்தது.
ஆனால் ஒருவன் மட்டும், pizza மேல் pineapple போல, அந்தக் கூட்டத்திற்குச் சற்றும் பொருந்தாத பாவனையுடன், தன்னைச் சுற்றி ஒலித்த குரல்களுக்கு மைண்ட் வாய்ஸில் counter கொடுத்தபடி ஒவ்வாமையோடு ஓரமாக அமர்ந்திருந்தான்.
“இது கலிஃபோர்னியா காளியம்மன் கோயில், தீ மிதித் திருவிழாவுல எடுத்தது மாப்ள! நம்மூர் மாதிரியே இருக்குது பார்த்தியா?, நாடு விட்டு நாடு போனாலும், நம்ம கலாச்சாரத்தை மறந்துடக் கூடாதுல்ல டே!” – தனது செல்ஃபோனிலிருந்தப் புகைப்படத்தைக் காட்டி பீற்றிக் கொண்டிருந்தக் கணபதியைக் கண்டு,
‘கலாச்சாரத்தைக் காப்பாத்த நினைக்குற கம்னாட்டிங்க, கூமாப்பட்டில செட்டில் ஆகுங்க டா! உங்களுக்கெல்லாம் எதுக்கு டா கலிஃபோர்னியா?, கல்ச்சர்ன்ற பேர்ல அங்க போய் நடுரோட்டுல நின்னு தேங்காய் உடைக்க வேண்டியது, அவிங்க ‘Indians-க்கு civic sense இல்லையான்னு கேட்டு இவனுங்க மண்டைய உடைச்சு ஊர்ப்பக்கம் துரத்துனா, ஊளு,ஊளுன்னு அழ வேண்டியது!, சில்றப் பசங்க!’ – என ஏளனமாய் உதட்டை வளைத்தான் இவன்.
“ஹேய் பத்மா, நீ போன வாரம் இன்ஸ்டக்ராம்ல போஸ்ட் பண்ணுன உன் பொண்ணோட அரங்கேற்றம் (பரதநாட்டியம்) வீடியோ பார்த்தேன், சூப்பரா இருந்தது! சிங்கப்பூர்ல அரங்கேற்றத்துக்கெல்லாம் எவ்ளோடி செலவாகுது?”
“30000 சிங்கப்பூர் டாலர் டி பூர்த்தி”
அசால்ட்டாக சொன்னவளைக் கேட்டு வாயைப் பிளந்தபடி ‘ஆஆஆஆத்தி….. சிங்கப்பூர் 1 டாலரோட மதிப்பு 68 ரூபா, 30000-ன்னா….., அடிச் சண்டாளிகளா 20 லட்சம் ஓவா கொடுத்தாடி கலையை வளர்க்குறீங்க! உங்களுக்கெல்லாம் ஒரு அழிவே இல்லையா?, பேசாம NRI ஒழிக-ன்னு கோஷம் போட்டுட்டு ஓடிடலாமா?’ – என்ற சிந்தனையிலிருந்தவனை, சலசலவெனப் பேசியபடி அருகே வந்தமர்ந்த நண்பர் கூட்டம் திசை திருப்பியது.
புறணி பேசுவதில் வல்லவர்களான Androgen Army புறம்போக்குகள், அசுர வேகத்தில் ஆக்டிவேட் ஆகி, அனைவரது ஆக்டிவிடிகளையும் அக்கு வேர்,ஆணி வேராக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
“ஃபர்ஸ்ட் இயர்ல உருகி,உருகிக் காதலிச்சு, 4த் இயர்ல ப்ரேக் அப் பண்ணுன கனகாவும், கண்ணனும் கன்னி மூலைல உட்கார்ந்து, கடலை போட்டுட்டிருக்காய்ங்க, பார்த்தியா டூட் (dude)” – ஜார்ஜ்.
“ஃபோட்டோ புடிடா. ஃபேஸ்புக்ல போடுவோம்” – மோசஸ்.
“டேய்,டேய் அவனுக்கு மணி,மணியா ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க இருக்குங்க டா. குடும்பஸ்தனை வைச்சுக் குஸ்கா போடாம, சும்மா இருங்க டா” – அலெக்ஸ்.
“அப்புறம் என்ன இதுக்கு டா இவன், அவ முன்னாடி நின்னு மணி ஆட்டிட்டிருக்கான்?”
“டேய்ய்ய்ய்...” – பல்லைக் கடித்தவனைப் பொருட்படுத்தாது,
“நம்ம டிபார்ட்மெண்ட் டாப்பர் புள்ள மல்லேஸ்வரி, இண்ஸ்டக்ராம்ல மசால் பொடி விக்குதாம் டூட்! நல்ல சேல்ஸ்ன்னு பேசிக்கிறாங்க டே” – என்றான் சாதிக்.
“யூட்யூப்ல அது போட்ற சமையல் வீடியோஸ்க்கு மட்டும், லட்சம்,லட்சமா காசு கொட்டுதாம் டா மோசஸூ” – கலை.
“நோக்கு ஏன் டூட் எரியறது?” -அலெக்ஸ்.
“நானும் கூட அப்பப்ப ரீல்ஸ் போடுவேன் டூட், ஆனா வியூஸே வர்றதில்ல டே!” -மோசஸ்
“ஏது?, உங்கூரு மாந்தோப்பு பம்பு செட்டுல, கள்ளிப் பூவை மிதக்க விட்டு, ‘மஞ்சள், மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே’-ன்னு பேக்-க்ரவுண்ட்ல பாட்டு போட்டியே, அதுவா?” – அலெக்ஸ்.
“இவன் கிடக்கான் அஞ்ஞானி! அதெல்லாம் Aesthetic montages! டூட், நீ அடுத்த முறை ‘சாய் அபயங்கர்’ பாட்டு ட்ரை பண்ணு டா!”
“அது யாரு டே?”
“அவுரு தமிழ்த்திரையுலக இசையை மீட்க வந்திருக்கிற புது மீட்பர்”
“அப்ப அநிருத்து?”
“அவுரு மீட்டது போக மிச்சத்தை இவுரு மீட்பாரு”
“டூட்,டூட் கண்ணன் இங்கிட்டு வர்றான் டே”
அருகே வந்த கண்ணனின் கன்னத்தில் இடித்து “கண்ணாடி போடாட்டி நாய்க்குக் கண்ணே தெரியாது, இதுல பேரு மட்டும் கண்ணொன்ன்ன்!” – என்ற மோசஸிடம்,
“டே, ஏன் டா டேய்” – எனப் பம்மியவனின் தோளை வளைத்து கனகா குறித்து விசாரிக்க,
“என் மவனுக்குக் கணக்கு டியூஷனுக்குக் கேட்டுட்டிருந்தேன் டே! வேற ஒன்னுமில்ல! விடுங்க டே என்னைய” – கதறிக் கொண்டிருந்தவனைக் கண்டு சிரித்தபடி மெல்ல பார்வையைப் பெண்கள் புறம் மேய விட்டான் அலெக்ஸ்.
உடன் பயில்கையில் சுமாராகத் தெரிந்த முகங்கள், இப்போது வெகு சுமாராய்த் தெரிவது கண்டு, கடுப்பில் தன் கன்னக்கதுப்பைக் கடித்தவனின் காதோரமாய்....
“ஒன்னு கூடத் தேறல. இல்ல டூட்?” – என்றான் சாதிக்.
பக்கவாட்டில் திரும்பி நண்பனை முறைத்து “தேக்கடி தேவாங்கு நீயெல்லாம், அந்தப் புள்ளைங்களைத் தேறல-ன்றியா டா? - என்று எகிறினான் அலெக்ஸ்.
“டேய்ய் நீ மனசுல நினைச்சதை, நான் வாயால சொன்னா, என்னைத் தேவாங்குன்னு சொல்லுவியா?”
“ஃபேட்டி லிவரோட (Fatty liver) வாழ்ற நீயெல்லாம் ஏன் டூட் facts பேசுற?”
“உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வந்த எனக்கு, இதெல்லாம் தேவை தான் டே”
“என்னா நல்ல செய்தி?”
“சொல்ல முடியாது. போடா!”
“சரி, சரி கோச்சுக்காதீங்க பாட்ஷா பாய்! என்னன்னு சொல்லுங்க”
“நம்ம க்ளாஸ், மிடில் பெஞ்ச் மாலதி இருக்குல்ல…. அதுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி டிவர்ஸ் ஆயிடுச்சாம் டூட்” – மெலிதாய்க் கிசுகிசுத்தான் பாய் (Bhai).
“அது மான்செஸ்டர்ல செட்டில் ஆயிடுச்சுன்னு சொன்னாங்களே”
“ஆமா மைக்ரோசாஃப்ட்ல வேலை செய்யுது”
“இதுல என்ன நல்ல செய்தி?”
“இ..இல்ல…. மாலதி… Single ஆம்!” – மெல்லப் பம்மினான்.
“அதுக்கு?”
“வலி தீர.. வழி என்னவோன்னு புலம்பிட்டிருக்கிற மாலதியும், காலம் கடந்தும் கட்டில் இன்பம் காணாத காளையான நீயும், ஒன்னு சேர்ந்தா… ஓஹோன்னு வருவீங்களோன்னு ஒரு நல்ல எண்ணத்……துல….” – என்று இழுத்தவனை உக்கிரமாய் முறைத்துப் பின் அவன் சங்கை நெரித்து,
“எந்திரிச்சுப் போடா நாயே! போடா” – எனத் துரத்தியவனின் கையை விலக்கி, “உனக்கெல்லாம் கடைசி வரைக் கனவுல மட்டும் தான் டா கட்டில் இன்பம் கிடைக்கும்” – என சாபம் விட்டுத் தள்ளி அமர்ந்தான் சாதிக்.
‘யாரை யார் கூட கோர்த்து விட்றான் பரதேசி!, அவ அப்பன் என்னை windmill-ல கட்டித் தொங்க விட்றதுக்கா’ – எனப் புலம்பியவாறு, மெல்ல எட்டி எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த மாலதியை நோக்கினான்.
அந்தப் பெண்ணும், அதே நேரம் இவன் புறம் பார்த்து விட, சட்டெனப் பார்வையை அகற்ற முடியாமல் அசடு வழிய லேசாய்ப் புன்னகை புரிந்தவனிடம், பெரிதாய்ச் சிரித்துக் கையசைத்தாள் அவள்.
பதிலுக்குத் தலையாட்டி விட்டு மேடையில் வளவளத்துக் கொண்டிருந்த Organizers-ன் புறம் கவனம் போல், திரும்பிக் கொண்டான்.
அமர்ந்திருந்த மேஜைக்கே வந்து சென்ற திட,நீர் ஆகாரங்கள், பேச்சு, பாட்டு, சிரிப்பு, அரட்டை எனக் கலகலப்புக்குக் குறைவின்றிக் குதூகலமாய்ச் சென்று கொண்டிருந்த சந்திப்பு, இறுதியாக.. ஆட்டத்தில் வந்து நின்றது.
80,90-களில் வெளிவந்தத் துள்ளல் பாடல்கள் உச்சஸ்தாதியில் ஒலிக்கத் தொடங்க, Dance floor-ல் இடையாடப் பெண்களும், தொப்பை குலுங்க ஆண்களும், வராத ஆட்டத்தை வரவழைக்கும் முயற்சியில் இறங்கியவாறு, vibrant colour-களில் அணைந்து, எரிந்த விளக்கு வெளிச்சத்தின் கீழ், வயது திரும்ப.. இளமை பொங்க.. இனிமையாய் நேரம் செலவழித்துக் கொண்டிருந்தனர்.
“டேய், டேய் ஹெவி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் போடாதீங்க டா! இந்த மாதிரி ஃபங்க்ஷன்ல உற்சாக மிகுதில உல்லாசமா ஆடுறவன் பூரா, மாரடைப்பு வந்து பொடீர்,பொடீர்ன்னு விழுந்து சாவுறாய்ங்களாம் டா!” – மோசஸ்.
“அச்சாணியமாப் பேசாத டா அரைவேக்காடு” - ஜார்ஜ்
“அலெக்ஸூ நீ வா டா”
-கூவியழைத்த நண்பர்களிடம் ‘வேண்டாம், வேண்டாம்’ என்பது போல் தலையசைத்து விட்டு, ஆரஞ்சு ஜூஸைப் பருகியபடி, ஆட்டக்காரர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அலெக்ஸ்.
DJ இப்போது, ‘மாருகோ, மாருகோ மாரு கயி, ஜோரு கோ ஜோரு கோ ஜோரு கயி’ என ஜோராய்த் தொடங்கி விட, ‘ஊஊஊஊ’ என ஆர்ப்பரித்தக் கூட்டம், 2x வேகத்தில் இஷ்டத்திற்குத் துள்ள.. இது தான் சாக்கென, கனகாவோடு கண்டமேனிக்கு ஆடிய கண்ணனைக் கண்டு தோள் குலுங்கச் சிரித்த அலெக்ஸின் பார்வை, அவர்களருகே நடனமாடிக் கொண்டிருந்தப் பெண்ணின் மீது எதேச்சையாகப் படிந்தது.
நீல நிற solid satin silk புடவையும், கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸூமாய், முதுகு முழுதும் பரவியிருந்தக் கூந்தலை, அலட்சியமாக ஒதுக்கி இடது தோளில் படர விட்டு, தன் கழுத்தோர மச்சத்தை flaunt செய்தபடி, காண்போரை freeze செய்து விடும் நோக்கத்தோடு இடை அசையக் கவர்ச்சியாய் ஆடிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
பச்சை,நீலம்,சிகப்பு,ஊதா என மாற்றி,மாற்றி பாய்ந்த ஒளிக் கற்றைகளுக்கு மத்தியில், உற்சாகம் ததும்ப, முழுச் சிரிப்புடன் ஆடியவளின் முகம் முழுதாகத் தெரியாவிடினும், அளவான உயரத்தோடு, அழகான உடற்கட்டோடு நெளிந்து, வளைந்துக் கும்தாவாக ஆடிக் கொண்டிருந்தவளை… கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ உறுத்த, மெல்லத் திரும்பி அருகே அமர்ந்திருந்த சாதிக்கை நோக்கினான்.
பிளந்த வாயும், கலர்,கலராய் ஒளிரும் கண்மணிகளுமாய், தொப்பையில் தேங்கிக் கிடந்த மூச்சுக் காற்றை வெளி விட மறந்து, ஆஆஆ-வென மேடையைப் பார்த்தபடி அசையாது வீற்றிருந்தான் அவன்.
“அப்பிடிப் பார்க்காதீங்க டூட்” – பட்டென ஆணையிட்டவனை,
“ஏன் டூட்?” – சட்டென எதிர்த்தான் அவன்.
“உங்களுக்குத் தகுதியில்ல டூட்”
“ஏன்வாம்? ஏன் ஏன் ஏன்?”
“இல்லன்னா இல்ல டூட்”
“ஏன்-ன்னு சொல்லு டே”
“ப்ச், கம்புக்கூட்டைக் கரு,கருன்னு வைச்சிருக்கிற நீங்க எங்க?, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு சிலுக்கு மாதிரி ஆடிட்டிருக்கிற அந்தப் புள்ள எங்க?”
Underarms-ஐப் பற்றிப் பேசியதும் ஆக்ரோஷம் பொங்க, “ஆஆஆஆங்க்ங்க், நிறுத்து, நிறுத்து… உனக்கு மட்டும் என்ன..” – எனத் தொடங்கியவனை இடைமறித்து,
“இந்த மாசம் உன் Netflix subscription-ஐ நான் take care பண்ணிக்கிறேன்.” – என்று உடன்படிக்கையில் ஈடுபட்டான் அலெக்ஸ்.
“பத்தாது, பத்தாது”
“உன் மவ கேட்ட, பிங்க் கிட்சன் செட்-ஐ அமேசான்ல ஆர்டர் போட்டுத் தரேன்”
“மேல, மேல! மேல சொல்லு”
“ப்ச்! அடுத்த வாரம், என் பெரியப்பா மவன் கொண்டு வர்ற மிலிட்டரி சரக்கு, மொத்தமும் உனக்கு”
“ரைட்டு! அந்தப் பக்கமா போனா, கால் இடிக்கும். இப்பிடி வா டூட்”
“எங்க?”
“டான்ஸ் ஃப்ளோருக்கு” – போதைக்கு மயங்கி பாதையை clear செய்தவனைக் கண்டு சிரித்து..
“ச்ச! பாட்ஷான்னா, பாட்ஷா தான்! புஜூக்,புஜூக்,புஜூக்” – என அவனது தொப்பையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவனின் அருகே வேகமாக வந்து, கையைப் பற்றி எழுப்பிய மோசஸ்,
“டேய் டேய், ஆரஞ்சு ஜூஸ் குடிச்சுட்டு ஆஆஆ-ன்னு வேடிக்கை பார்க்கத் தான் Alumni meet-க்கு வந்தியா?, அங்க பொம்பளைப் புள்ளைக பூரா பயங்கரமா ஆடுதுங்க டா! இவனுங்களைப் பார்றா, 2 குதி,குதிச்சுட்டு, நெஞ்சைப் புடிச்சுட்டு உட்கார்ந்துட்டானுங்க! சீக்காளிப் பயலுக! நீ வா டா அலெக்ஸூ! நீ தான் டா நம்ம பேட்ச் பிரபு தேவா” – என்று மூக்கால் அழுக,
“யாரு இவனா?, ‘சித்தகத்திப் பூக்களே’-ன்னு இளைய திலகம் பிரபு மாறி மண்டைய மட்டும் ஆட்டுறவனைப் போய் ‘சிக்குபுக்கு ரயிலே’ பிரபுதேவான்னு கூப்பிட்றீங்களே டா?” – எனக் கலாய்த்த சாதிக்கை மிதித்துத் தள்ளி விட்டு.. நண்பனோடு மேடைக்குச் சென்றான் அலெக்ஸ்.
‘சம்பா, சம்பா அடி ரம்பா… ரம்பா….’ – என உற்சாகம் தெறித்த எஸ்.பி.பியின் குரலைப் பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் துள்ளலுடன் நடனமாடிக் கொண்டிருக்க, தானும் அவர்களோடு ஐக்கியமான அலெக்ஸ், நொடியில் மேடையைத் தன்வசப்படுத்த, அதுவரை ஆங்காங்கு ஒதுங்கி நின்றிருந்த ஆண்கள் கூட்டம், ஒரு வழியாக அவனோடு இணைந்து கும்மாளமிடத் துவங்கினர்.
அதுகாறும் அந்த ஸ்லீவ்லெஸ் பெண் மீது ஒரு கண் வைத்திருந்தவன், இரண்டாவது BGM தொடங்கியதும்.. மெல்ல ஆண்கள் கூட்டத்திலிருந்து நழுவி, அவளருகே சென்றான்.
உடன் ஆடுபவருக்கேற்றவாறுத் தன் ஆட்டத்தின் வேகத்தை ஏற்றியும், குறைத்தும், ஒத்துழைத்து ஆடுபவளின் போக்கு பிடித்துப் போய், அவள் அசைவுகளை அவன் பிரதிபலிக்கத் துவங்க, அதைக் கண்டுகொண்டவளும், அவன் ஆட்டத்திற்கு ஸ்ருதி சேர்க்க, சிறிது நேரத்தில் மேடையின் மத்தியை ஆக்கிரமித்திருந்த இருவரும் ரிதமாய் ஆட ஆரம்பித்திருந்தனர்.
அதுவரை லைட் மூவ்மெண்ட்களோடு மென்மையாய் அசைந்து கொண்டிருந்தவள், தனக்கேற்ற ஜோடி கிடைத்து விட்ட உற்சாகத்தால், பிஜிஎம் முடியும் தருவாயில் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, குத்தாட்டம் போடத் துவங்கி விட, அவளுக்கு ஈடு கொடுத்தபடி வேகத்தைக் கூட்டினான் அலெக்ஸ்.
‘நான் சின்னப் பொண்ணு… செவ்வாழைக் கண்ணு..
நீ கல்யாண வேலி கட்டு….’
-தன் வலது தோளால் அவனது இடது மார்பை இடித்தவளைக் கண்டு….
‘ஆஹாஆஆஆங்….’ என்று வாயைப் பிளந்தவன்,
‘என் செந்தாமரை கை சேரும் வரை, நான் நின்றேனே.. தூக்கம் கெட்டு…’ – என மயங்க….
‘உன் ஆசை என்ன?, உன் தேவை என்ன?, நீ லேசாகக் காதைக் கடி..’ – அவன் காலரைப் பற்றி இழுத்து…. கழுத்தோர மச்சத்தைக் காட்டி.. சிணுங்கியவளைக் கண்டு…. கிறங்கி..
“நிஜமாவா?” என்று முனகி.. வழிந்தவன்,
‘என் எண்ணங்களை நான் சொல்லாமலே, நீ இந்நேரம் கண்டுபிடி’ – எனப் பாட்டைத் தொடர,
‘கேட்குது,கேட்குது ஏதோ ஒன்னு, பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு’ – தோளைத் தாக்கியவளிடம்..
“பண்ணவா??????” – என விழியசைத்தவன்,
‘தாக்குது, தாக்குது ஊதக் காத்து.. தள்ளித் தள்ளி நிற்குற ஆளைப் பார்த்து….’ – என்று ஏங்கிச் சாக..
இரண்டடித் தள்ளி தெளிவாய் ஒளிர்ந்த விளக்கின் கீழ், முழுதாய் முகம் காட்டியவள்,
‘காலம் வரும், நல்ல நேரம் வரும்! அள்ளி நீ சேர்த்துக்கோ! ஆசையைத் தீர்த்துக்கோ’ – என வலக் கையை நீட்டி அனுமதி கொடுத்து, சில்லறையைச் சிதற விட…
ஆளைச் சாய்க்கும் அழகோடு,அம்சமாய் நின்றவள், அதீதமாய், அதிரடியாய்க் காட்டிய நெருக்கத்தில் அசந்து போய், ஆஆஆ-வென வாயைப் பிளந்தபடி ஆட மறந்து சிலையாகி விட்டவனை,
‘மாருகோ, மாருகோ, மாரு கயி’ – எனக் கூட்டமாய்ச் சூழ்ந்து காப்பாற்றி விட்டனர் நண்பர்கள்.
அடுத்தடுத்து ஒலித்த பாடல்களுக்குத் தொடர்ந்து ஆடியபடி மேடையை ஆக்கிரமித்திருந்தவளின் மீதிருந்துப் பார்வையை விலக்க முடியாது, ஒரு வித மோன நிலையிலேயே அமர்ந்திருந்தான் அலெக்ஸ்.
காலரைப் பற்றிய போது, அவள் விரல் தீண்டிச் சென்ற அவனது கழுத்தெழும்பு, காய்ச்சல் கண்டிருந்தது! மெல்லத் தடவி அதன் வெப்ப நிலையை சோதித்தான்! சொல்லிக் கொள்ளும்படி இல்லை!
தன் இடது மார்பை இடித்துப் பின்னுடல் உரச அவள் காட்டிய நெருக்கம், அவனைக் கிறுக்கனாக்கி, வசியம் செய்திருக்க…. தேன் கிண்ணத்தில் மூழ்கி மிதக்கும் கட்டெறும்பாய்… அதீத போதையில் பித்தனாகியிருந்தான்.
உப்பிக் குவிந்த கன்னங்களோடு கண்கள் சுருங்க சிரிக்கும் அந்த முகம், வெகு பரிட்சயமானதாகத் தோன்றியது அவனுக்கு.
‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ – எனப் புருவம் சுருக்கி யோசித்தவனின் அருகே வந்தமர்ந்த மோசஸ்,
“யார் டே அலெக்ஸ் அது?” என்றான்.
“தெரியல டூட்” – சன்னமாய் வந்தது குரல்.
“முன்ன,பின்ன அறியாத பொண்ணோட அஜால்,குஜாலா ஆடுவியா?, உண்மையைச் சொல்லு டா! பீக்காளி நாயே!”
“டேய்ய், சத்தியமா எனக்கு யாருன்னே தெரியாது டா”
“மாலதியோட கூட அந்தப் பொண்ணு, நெருக்கமா நின்னுத் தான் ஆடுச்சு.” – க்ராஸ் டாக் சாதிக்.
“டேய்ய், மாலதி பெண் டா. இவன் ஆண் டா” – மோசஸ்.
“அப்பிடியா டா?”
“ஆமா டா, பார்க்குறியா டா?,” எனக் கேட்டவனைக் கண்டு அசூயையாய் முகத்தைச் சுருக்கிக் கொண்ட சாதிக்கை டீலில் விட்டு, அலெக்ஸை சந்தேகமாய் நோக்கினான் மோசஸ்.
“வேணும்ன்னா, நீயும் போ! உன் கூட நெருக்கமா ஆடுதா,இல்லையான்னு செக் பண்ணுவோம்”
“நானாஆஆஆ?, எனக்கும் சான்ஸ் இருக்கா” – என, எச்சில் விழுங்கியபடிச் சட்டையை இழுத்து விட்டு ஆர்வத்தோடு எழப் பார்த்தவன், “வேணாம் டா மோசஸூ!, தொப்பை தாங்காது டா!, ஹார்ட் அட்டாக் வந்துடும்! உன் மவனுக்கு அடுத்த மாசம் பொறந்தநாளு வேற!” – என்று வரிசையாக அடுக்கிய சாதிக்கின் பேச்சைக் கேட்டுப் பயந்து, பம்மி அமர்ந்து விட,
மெல்ல அலெக்ஸின் புறம் திரும்பி, ‘எப்பிடித் தடுத்தேன் பார்த்தியா!, எல்லாம் உனக்காகத் தான்’ எனப் புருவம் தூக்கிய சாதிக், “சரக்கு எனக்குத் தான?” என Reconfirm செய்து கொண்டான்.
‘Family-யே இல்லாத உனக்கு Family Pack எதற்கு?’ – என diet maintain செய்து தொந்தியைக் கரைத்ததற்காகத் தனக்குத் தானே நன்றி கூறியபடி ஸ்லீவ்லெஸ் சிலுக்கையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் அலெக்ஸ்.
அத்தனை நெருக்கத்தைக் காட்டி இழைந்து குழைந்தவள், அவன் மேடையை விட்டு இறங்கிய பின்பு, ஒரு முறை கூட அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
அவள் செய்கை கொடுத்த மயக்கமும், அவள் யாரெனத் தெரியாத குழப்பமுமாய் முகம் சுருங்க அமர்ந்திருந்தவனை, Organizer-களின் குரல் மீட்க, நிமிர்ந்து மேடையை நோக்கினான்.
‘Then and now’ – என்ற தலைப்பில் அங்கு கூடியிருந்த அனைவரது பழைய மற்றும் புதிய புகைப்படங்கள், வரிசையாகத் திரையில் வரத் தொடங்க, சிரிப்பும்,கேலியுமாய்க் கூட்டம் ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தது.
அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அலெக்ஸ் மற்றும் மோசஸ் திரையிலேயே பார்வையைப் பதித்திருக்க, அவர்களது டிபார்ட்மெண்ட் ஜூனியர்களென வலம் வந்த முகங்களில், ‘ஜெபமலர் சூசையப்பன்’ – என்ற பெயரின் கீழ் திரையிடப்பட்ட அன்றும், இன்றுமான புகைப்படத்தைக் கண்டு, நொடியில் இருவரது முகமும் பேயறைந்தது போல் மாறியது.
அதுவரை காட்டிய பாராமுகத்தைத் துறந்து மெல்லத் திரும்பி இவர்கள் புறம் நோக்கியவள், கோணலாய் உதட்டை வளைத்து, ‘ஹ்ம்’ எனத் தோள் குலுங்க, எகத்தாளமானப் பார்வையொன்றைச் செலுத்தி விட்டு, வெடுக்கென முகம் திருப்பிக் கொள்ள, எச்சில் விழுங்கியபடி ஒருவரையொருவர் நோக்கினர் இருவரும்.
“என் ஆளு டூட்” – முணுமுணுத்த மோசஸை முறைத்து…
“மூஞ்சி தேய்ஞ்சிடும்” – எனப் பல்லைக் கடித்த அலெக்ஸை அலட்சியம் செய்து, அவன் மெல்ல எட்டி அவளைப் பார்க்க,
முஷ்டியை இறுக்கி, விடைத்த மூக்குடன், நாக்கை மடித்துக் கண்ணை உருட்டியவளின் தோற்றத்தைக் கண்டுப் பயந்து அவசரமாய்ப் பார்வையைத் திருப்பிக் கொண்டான் மோசஸ்.
“இப்ப என்னா டே பண்றது அலெக்ஸூ?”
“நான் போய் பேசிட்டு வர்றேன் டா”
“வேணாம் டே! சொன்னாக் கேளு டே!”
“ப்ச், நீ சும்மா இரு” – என நண்பனை அடக்கியவன், எழுந்து நிற்கையில் செல்ஃபோன் அழைத்தது. திரையில் மேரி மாதா!
“என்னாம்மா?”
“தம்பி, விழா முடிஞ்சிடுச்சாப்பா?”
“இன்னும் நேரமாகும். என்னான்னு சொல்லு”
“இல்ல, உன் ஃப்ரெண்டு, அந்தத் துபாய்க்காரத் தம்பி வந்திருக்குன்னு சொன்னியே”
“ஆமா, அதுக்கென்ன இப்ப?”
“கோடாலித் தைலம் கொண்டு வந்திருக்கான்னு கேட்டு, 2 வாங்கிட்டு வா-ப்பா”
“ம்மாஆஆ” எனப் பல்லைக் கடித்தவன் “ஃபோனை வை-ம்மா” எனத் திட்ட,
“இடுப்பு,கால் எல்லாம் குடையுது டா தம்பி! துபாய்த் தைலம் தேய்ச்சா, நல்ல்லாஆஆ கேட்கும் டே” – எனத் தொடர்ந்து பேசியவரைத் தடுத்து,
“இப்ப நீ ஃபோனை வைக்கலேனா, நல்ல்ல்லாஆஆ நான் கேட்பேன்” – எனக் கூறி எரிச்சலுடன் call கட் செய்தவன், எதிர்ப்புறம் அவளைக் காணாது சுற்றி,சுற்றி நோக்கினான்.
“எங்க டா அவ?”
“எங்கேயோ போயிடுச்சு!, அலெக்ஸூ, தொலைஞ்சது சனியன்னு விட்றா!, அது கிட்ட சிக்குனா, முழுசா வீடு போய்ச் சேர முடியாது டா! Alumni meet-க்கு வந்த என்னைய, நெளிஞ்ச அலுமினிய சொம்பா மாத்தி விட்ராதீங்க டா! ஐயோ!, என் மவனுக்கு அடுத்த மாசம் பொறந்தநாள் டா” – என விடாது புலம்பியவனைத் தவிர்த்து விட்டு, விறுவிறுவென வெளியேறினான் அலெக்ஸ்.
Corridor-ஐக் கடந்து ஃபங்க்ஷன் ஹாலின் பக்கவாட்டில் பூத்திருந்தச் செடிகளின் நடுவே நின்றபடி சுற்றும்,முற்றும் நோக்கியவன் மீண்டும் மோசஸை ஃபோனில் அழைத்து,
“வெளியே இல்லையே டா” என்றான்.
“உள்ளேயும் இல்லடா. அலெக்ஸூ! கர்த்தர் நம்மளக் காப்பாத்திட்டாரு! வா டே! சத்தமில்லாம வீட்டுக்கு ஓடிடலாம்!”
பயத்தில் உளறியவனை “டேய்ய்” என ஏதோ கூறி சமாதானப் படுத்தத் தொடங்கியவனின் பிடரியில் சொத்தென விழுந்த அடியில், கையிலிருந்த செல்ஃபோனைத் தவற விட்டு, தொங்கிய தலையுடன் ஒரு அடி முன்னே நகர்ந்தவன், பின் கோபமும், கடுப்புமாய், பட்டெனத் திரும்புகையில்,
கையைக் கட்டிக் கொண்டு அலட்சியமான பாவனையுடன் அவன் எதிரே நின்றிருந்தாள் அவள்.
வலித்த கழுத்தைத் தடவியபடி ‘நீ சிலுக்கு இல்லடி! சுலுக்கு!’ – எனப் பல்லைக் கடித்தவன்…
“ஏன் மக்கா?” என்றான் எழும்பாத குரலில்.
“மக்கா இல்ல டா! அக்கா! ஸ்லீவ்வ்வ்வ்லெஸ் அக்கா”
பாபூ…. ஸ்நேஏஏஏக் பாபூஊஊ – ரீதியில் சொன்னவளைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் அடக்கி, “அக்காவா?” – என வாயைப் பிளந்தவனின் காலரைக் கொத்தாகப் பற்றி இழுத்து, அடிக்குரலில்,
“கொஞ்சம் பக்கத்துல வந்தா, இடிச்சு, உரசி அட்வான்டேஜ் எடுத்துக்குவியா?, எவ்ளோ தைரியம் உனக்கு?” – சீறியவளிடம்,
“அது… கொஞ்ஞ்ஞ்சமா??” என்று எதிர்த்துக் கேள்வி கேட்டவன்,
“ஆடும் போது, அந்த விளக்கு வெளிச்சத்துல நீ-ன்னு தெரியல மக்கா” – எனத் தன்னிலை விளக்கம் கொடுக்க முற்பட,
“தெரிஞ்சுருந்தா?? ம்?, தெரிஞ்சுருந்தா?” – பற்றியிருந்தக் காலரை இறுக்கி, பல்லைக் கடித்தபடி மேலும் அருகே இழுத்தவளின் முகத்தைக் காண முயலாது, கண்களை அழுந்த மூடி,
“தொடாம பேசு மக்கா…” – என ஒற்றை விரலால் அவள் கையை ஒதுக்கப் பார்த்தவனைப் பட்டென விடுத்து,
“ஓ, தொடக்கூடாது! நான் தொடக் கூடாது!, நான் தொட்டா உனக்குப் பிடிக்காது!, அப்பிடித் தான?” எனக் கேட்டதும்,
“ஏன்டி இப்பிடிப் பேசுற?” – சலித்துக் கொண்டவனை,
“ஹ்ம்! உனக்குத் தான் என்னையே பிடிக்காதே!, ‘நீ எனக்கு வேண்டாம், இத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்-ன்னு என் மூஞ்சிக்கு நேரா.. மனசாட்சியே இல்லாம சொன்னக் கல்நெஞ்சுக்காரன் தான நீ?” – என்றாள் கோபமும், கொதிப்புமாய்.
அவள் குரல், உள்ளே.. உறுத்தியதில் அவசரமாய்,
“அது அப்பிடியில்ல மக்கா! உன் நல்லதுக்காகத் தான்…” – எனத் தொடர்ந்தவனைக் கையமர்த்தித் தடுத்து,
“நீ எந்த நொல்லதை நினைச்சு என்னை வேண்டாம்ன்னு சொன்னியோ தெரியாது!, ஆனா, அந்த மாதிரி எந்த எழவும், இதுவரை என் வாழ்க்கைல நடக்க்க்கவேயில்லை” – என்றாள்.
அவள் குரல் கக்கிய ஆத்திரத்தை அலட்சியம் செய்து, “கல்யாணம் கட்டிக்கலையா நீ?” – என்றான் புருவம் சுருங்க.
“கட்டிக்கல”
“ஏன்??”
“உன்னால தான்” – குற்றம் சாட்டியவளைக் கேட்டு,
“என்னாலயா?” – எனக் கண்ணை விரித்தான் அவன்.
“ஆமா!, ‘ஆனந்தம்,ஆனந்தம் பாடும்’-ன்னு நீ வந்து கச்சேரி வைச்சு, பூ தூவி, ஆசீர்வாதம் பண்ணாம, நான் எப்பிடிக் கல்யாணம் பண்ணிக்க முடியும்?” – மேஜர் சுந்தர்ராஜனைப் போல் தோள்களைத் தூக்கியவளைக் கண்டு,
“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” – என அவன் நெற்றியைப் பிடிக்க,
மென்னடையாக, அவனை வட்டம் போட்டுச் சுற்றி வந்து, நீலாம்பரி வாய்ஸில்,
“ரெண்டு நாள்! முழுசா ரெண்ண்ண்ண்ண்டு நாள்! கலர்,கலரா கனவு கண்டு, கற்பனைல கோட்டை கட்டி, கானாங்குருவி மாதிரி கலகலன்னு பாடித் திரிஞ்ச என்னைய, ஒத்த வார்த்தைல கழுத்தறுத்துப் போட்டேல?, உன்னைப் பழிவாங்காம நான் செட்டில் ஆகுறதா? நோ சான்ஸ்!” – என்றாள் அவள்.
“வில்லி மாதிரி பேசாத”
“ஹீரோயின் ஆகத் தான் நீ விடலயே!”
“ப்ச்! அப்போ நீ…. குழந்தைப் புள்ள மக்கா”
“அதனால தான் ஏமாத்தப் பார்த்தியோ?”
“யாரு ஏமாத்துனா?” – என ரோஷமாய்த் தொடங்கியவன் பிடரியை அழுந்தக் கோதித் தன்னை அடக்கி,
“சரி, இப்ப என்ன?, நான் உன் கல்யாணத்துக்கு வந்து பாட்டு பாடி, பூ தூவனும். அதான?” என்றான்.
அலட்டிக் கொள்ளாது அவளும் “ஆமா” என்றாள்.
“சரி, எப்ப கல்யாணம் கட்டிக்கிற?”
“எப்ப வேணாலும்”
“மாப்பிள்ளை??”
“நீ தான் பார்க்கனும்”
“ஜெபாஆஆஆ”
“சேவை மனப்பான்மை கொண்ட சேவியர் தான நீங்க?, எனக்கு நல்லது மட்டுமே நினைக்குற உன்னை விட யாரால பெஸ்ட்-ஆ மாப்பிள்ளை பார்த்துட முடியும்?”
“உன் அம்மா????”
“அதை சவப்பெட்டில அடைச்சு 6 வருஷமாச்சு”
“என்ன சொல்ற ஜெபா?” – அவள் அன்னை மீது வைத்திருந்த அளவில்லா அன்பைக் குறித்து அறிந்திருந்தவன், கவலையும், கலக்கமுமாய் அவளருகே செல்ல முயல,
முஷ்டியால் அவன் வயிற்றில் குத்தி, விலக்கி நிறுத்தியவள்,
“ப்ச்! உன் இரக்க ****-றெல்ல்லாம் எனக்குத் தேவையில்ல! எண்ணி 3 மாசம் தான் உனக்கு டைம்! அதுக்குள்ள சீக்கிரமே எனக்கொரு மாப்பிள்ளை பார்த்து, கல்யாண ஏற்பாடு பண்ணி, மேடை போட்டுக் கச்சேரி வைச்சு, என்னை மிஸ் பண்ணதை நினைச்சுக் கண்ணீர் விட்டுப் பாட்டுப் பாடி, பூ தூவி என்னை ஆசீர்வாதம் பண்ணுற!”
“இல்லேன்னா?”
“உனக்குக் கல்யாணம்-ங்குறது கடைசி வரை Prank-ஆ மட்டும் தான் இருக்கும்”
“என்ன்ன்ன்ன்ன?” - புரியாது விழித்தவனிடம்,
“ஹேய்ய்ய்! இன்னுமா உனக்குப் புரியல?, இந்தக் கன்னி தோஷத்தைக் கழிச்சா மட்டும் தான்… நீ கன்னி கழிய முடியும் டா… மக்கு மூதேவி”
“என்னாடி சொல்ற?”
“ப்ச்! உனக்கு முதன்முதல்ல பார்த்த பொண்ணு மரியாவுல இருந்து, கடைசியா பார்த்த பொண்ணு கிருபா வரைக்கும் அத்தனையும் முடிச்சுக் கட்டுனதே நான் தான் டா, டால்டா!” – கெத்தாய் முந்தானையை வீசியவளைக் கண்டுக் கண்களைப் பெரிதாய் விரித்து…
“அடிச்சண்டாளி…” – என வாயில் கை வைத்தவனிடம், அசால்ட்டாகத் தலையைச் சிலுப்பியவளைக் கொலைவெறியோடு நோக்கி,
“ஒரு ஆம்பளை வாழ்க்கையை இப்பிடி நாசம் பண்ண நினைக்குறியே! நீ நல்லா இருப்பியா?, உன்னையெல்லாம் கர்த்தர் கேட்பாருடி!”
“மாட்டாரு!, ஏன்னா… உனக்கிருக்கிற தோஷம் தீரனும்ன்னா… வறுமையில தவிக்கிற 2 பிள்ளைகளை, உன் சம்பளத்துல படிக்க வைக்கனும்ன்னு சொல்லி, பெஞ்சமின் ஃபாதரை வைச்சு மேரி மாதா கிட்டப் பேசி, 2 அப்பாவிக் குழந்தைங்க படிப்புக்கு வழி செஞ்சுட்டிருக்கேன்!, சோ, பாவக்கணக்கைக் கர்த்தர் எப்பவோ தள்ளுபடி பண்ணியிருப்பார்”
“உன் பாவத்தை, என் சம்பளத்துல கரைப்பியா?, என்னாடி நியாயம் இது?”
“என்னைப் பாவம் செய்யத் தூண்டுனதே நீ தான டா?”
“சின்னப்புள்ளன்னு அன்னைக்கு உன்னை விட்டு வைச்சது என் தப்பு தான் டி”
“இல்லாட்டி, என்னா டா செஞ்சுருப்ப?” – எள்ளலாய்க் கேட்டவளின் திமிரான தோரணை வெறியேற்றியதில், பாய்ந்து அவளது கழுத்தைப் பற்றினான் அலெக்ஸ்.
குரவளையை இறுக்கியவனின் செய்கையில், அனிச்சையாகக் கண் மூடி, பின் அலட்டிக் கொள்ளாது “ப்ச்” என முகம் சுழித்துப் பல்லைக் கடித்தபடி “கையை எட்றா கபோதி” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவள், அவனிடமிருந்து பதில் வராது போவதையும், அவன் கைகளின் இறுக்கம் மெல்லத் தளர்வதையும் உணர்ந்து, சுருக்கிய புருவங்களுடன் விழி திறந்தாள்.
இறுக்கமாய் அவள் புஜம் பற்றி, நெருக்கமாய் உரசி நின்று, அழுத்தமாய் அவள் கழுத்தை வளைத்திருந்தவன், கோபத்தில் விழி மூடி, கடித்தப் பற்களும், இறுகிய தாடையுமாய், தன் முகம் நோக்கி நிமிர்ந்திருந்த அவள் அழகு வதனத்தை அத்தனை அருகே கண்டு, கைகள் தளர, மூச்சை -2.5x ல் வெளியிட்டவாறு, அவள் கழுத்தின் மென்மையில் இடறி, திணறிக் கரைந்த மனம் கொடுத்த உந்துதலில்… தன்னை மீறி… மெல்ல அவள் மச்சத்தைப் பெரு விரலால் வருடி….
“மச்சம் வழுக்குமா ஜெபா?” – எனப் பைத்தியமாய்ப் பிதற்றினான்.
“தினம் 2 தடவை moisturizer போட்டா, வழுக்கும்”
“ஜெபா……”
“……….”
“என் வாழ்க்கைல நீ போட்டு வைச்சிருக்கிற firewall-ஐ தயவுசெஞ்சு revert பண்ணி விடு ஜெபா”
“ஏன்?”
“இதுக்கு மேல என் வயசு தாங்காது மக்கா!, பாரு, உன்னைத் தொட்டாக் கூட கன்ட்ரோல் இல்லாம விரல் எல்லாம் நடுங்குது” – என்றவாறு அவள் கழுத்திலிருந்துக் கன்னம் வரைப் புறங்கையால் வருடியவனின் விரல்களை, விலக்கி, ஒடித்து, இறக்கித் தள்ளி நிறுத்தியவள்,
“அதென்ன உன்னைத் தொட்டாக் கூட?, நான்-னா உனக்கு அவ்ளோ மட்டமா?” – என்று சீறினாள்.
“ஏன்டி எப்பவும் என்னைத் தப்பாவே புரிஞ்சுக்குற?”
“நீயே தப்பானவன் தான் டா! பொறுக்கி, ஃப்ராடு, ஏமாத்துக்காரன்”
“ஏய்ய்ய்.. இதுக்கு மேல பேசுனேனா, பல்லை உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்”
“எங்க உடை, உடை பார்ப்போம்!” – எகிறிக் கொண்டு வந்து நெஞ்சோடு மோதியவளை அவசரமாய் விலக்கி,
“தொடாம பேசு மக்கா..” - என்று எரிந்து விழுந்தவன்,
“3 மாசத்துக்குள்ள உனக்கு மாப்பிள்ளை பார்க்கனும். அதான?, பார்க்குறேன் டி பார்க்குறேன்! பார்த்த்து… எல்ல்ல்லாத்துக்கும் சீக்கிரமே முடிவு கட்டுறேன்” – எனப் பல்லைக் கடித்தபடி வாக்கு கொடுக்க..
அவனுக்குப் பதிலளிக்காது அலட்சியமாய் புருவத்தைச் சுழித்து விட்டு, அத்தனை நேரமாக அவனோடு மல்லுக்கட்டியதால் வியர்த்திருந்த நெற்றியையும், மேலுதட்டையும் முந்தானையால் ஒற்றி எடுத்தவள், கண்டபடிக் கலைந்திருந்தக் கூந்தலைக் கைகளால் கோதிக் கொண்டையிட்டாள்.
அவள் செய்கையைப் பிரதிபலித்தவனின் கரங்களும், காலரை சரி செய்து, கந்தலாகியிருந்த சட்டையை நேர்ப்படுத்தி, நெற்றி வியர்வையைத் துடைத்தெறிந்தவாறு தன் போக்கில் வேலை செய்தாலும், வளம் செறி விளை நிலமாக, முழுச் செழுமையுடன் அவனை முக்தி நிலைக்கு இழுத்துச் சென்ற தெரிவையின் தோற்றத்தை வெறித்து, விழுங்கி, வழுக்கி, விழுந்து, எழுந்து கொண்டிருந்தவனைக் கண்டு….
“இங்க வா” என்றாள்.
“என்ன மக்கா?” – அக்கறையாய்க் கேட்டபடி அருகே வந்தவனின் முன் தலை முடியைப் பற்றிக் குனியச் செய்து, முதுகில் பட்டென அடியைப் போட்டு நாக்கைத் துருத்திக் காட்டி விட்டுச் சென்றவளைக் கோபமாய் நோக்கியவன்,
சுரீரென எரிந்த முதுகைத் தடவியவாறு, “நான் பார்த்தா… தப்பு! நீ காட்டுனா.. தப்பில்லையோ!” – எனக் கணக்காய்ச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
