5. அதிசய மலர் முகம்!

ந்த வாழைத் தோட்டத்தின் முகப்பிலிருந்தக் கொட்டிலினுள்ளே, கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த பெர்சியாவின் கைகள், அருகே அலுமினிய வட்டிலில் கறித்துண்டைக் கொறித்திருந்த சிப்பிப் பாறையின் முதுகைத் தடவியவண்ணமிருந்தது. உறக்கமற்றுச் சிவந்திருந்த விழிகள், வாராத தலை, பேணப்படாத முகம் என சீக்காளித் தோற்றத்துடன் வானத்தை வெறித்தபடி, அர்த்தமற்ற சிந்தனைகளோடு மௌனமாய் வீற்றிருந்தார்.

சற்று முன்பு மழை பொழிந்ததன் விளைவாக மண் தரை நனைந்திருக்க, விர்ர்ர்ரென வீசிச் சென்றக் பருவக்காற்றுக்குப் பதிலளித்தபடி ஒருபுறம் பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளும், மறுபுறம் கொட்டகையிலிருந்தக் கோழிகளும் சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

உட்புறமிருந்தக் கிணற்றைத் தொடர்ந்து இட,வலப்புறங்களில் சீரான இடைவெளியில், ஒரு ஏக்கர் நிலம் முழுக்க வாழை பயிரிடப்பட்டிருந்தது.

ஒத்தாசையாக உடனிருந்த மாரி, இதோ வருகிறேன் எனக்கூறி வெளியே சென்றிருக்க, தனிமை, தாங்கி வந்த தரமற்ற நினைவுகள், தகிப்பேற்றியதில், தன்னிரக்கம் சூழ, மனதோடு தடுமாறியபடி கண்ணீர்க் கறை படிந்திருந்த கன்னங்களுடன் பாவமாய் வீற்றிருந்திருந்தவரைக் கண்டவாறு, அவர் காலடியருகே வந்தமர்ந்தான் அலெக்ஸ்.

அவனைக் கண்டதும், முகம் இறுக, பார்வையைத் தீவிரமாக்கிப் பொறுமையற்ற மூச்சுடன் மூக்கை உறிஞ்சியவரைத் திரும்பி நோக்கியவன், அவர் கண்கள் காட்டியக் கோபத்தில், உதட்டைச் சுழித்து,

“இப்ப என்ன ஆயி?, நாலு சுவத்துக்குள்ள நடந்தக் குற்றத்துக்கு, நாலு சுவத்துக்குள்ளேயே தண்டனையைக் கொடுத்து முடிச்சு விடாம, ஊரைக் கூட்டி, முச்சந்தில நிற்க வைச்சு, உங்க புர்ர்ர்ர்ருசரைக் கேள்வி கேட்டு, அவமானப்படுத்தி, விரட்டியடிச்சது தப்புன்னு சொல்றியா?” – எனக் கேட்டான்.

“………”

“நாலு சுவரு வேணும்ன்னு கூட உங்க புருசரு நினைக்கல”

“அந்தாளு என் புருசனே இல்ல”

“அந்தத் தெளிவு தான் இருக்குல்ல?, பிறகென்னத்துக்கு அழுகை?”

“………”

“ஊர்சனம் கூடியிருச்சே!, எங்க அடிச்சுக் கொன்னுடுவாங்களோன்னு உசுருக்குப் பயந்து, வெட்கமேயில்லாம உன் காலைப் புடிச்சு, கண்ணீர் விட்டு, செஞ்சது அத்தனையையும் ஒரே நிமிசத்துல ஒதுக்கிட்டு, ‘இனித் தப்பே பண்ண மாட்டேன் செல்வி, என்னை மன்னிச்சுடும்மான்னு’-கூச்சமில்லாம நடிப்பைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்குறாரு! இந்தாளைப் போய் நாகரீகமான முறையில நடுவீட்ல உட்கார வைச்சு, நடந்ததை விசாரிச்சு, நியாயம் பேசி, பிரச்சனைக்கு சுமூகமாகத் தீர்வு காண நினைக்குறதெல்லாம் நடக்குற காரியமா?”

“சுமூகமான தீர்வா?” – விரக்தியாய்த் தோளைக் குலுக்கினார்.

“ஏன்?, அதில்லையா உன் எண்ணம்?, இப்பிடி அசிங்கப்பட்டு நிற்குறேனேன்னு இங்க வந்து உட்கார்ந்து, விடாம அழுது புலம்பி, கண்ணீர் விட்டுக் கிணத்தை நிரப்புறியாம்??”

“பகடியா லே?”

“ஏன், சிரியேன்! என்னவாம் இப்ப?”

“ப்ச்”

“இதுக்கெல்லாம் பொறுத்துப் போனாத் தான் தப்பு ஆயி! பொங்கி எழுறது தான் நியாயம்! நல்ல பொண்டாட்டின்னா, படுக்கைல புருசனுக்கு தாசியா இருக்கனும், தேவைப்பட்டா தாசி வீட்டுக்குத் தூக்கிட்டுப் போகனும், தாசியோட வாழ்ந்தவனுக்காக ஊரை எரிக்கக் கூடத் தயங்கக் கூடாதுன்னு முட்டாள்தனமான எண்ணங்களோட பொம்பளைங்க வாழ்ந்த சங்க காலமெல்லாம் மலையேறிப் போச்சு! இது சாஃப்ட்வேர் காலம் ஆயி!, இப்பப் போய்… உலகமே ஆம்பளைங்களுக்காக இயங்குற மாதிரியும், பொம்பளைங்க பிறப்பெடுக்கிறதே அவனுங்களை சொகுசா வைச்சுக்கிறதுக்காகத் தான்-ங்குற மாதிரியும், எவனோ 4 கேனப்பய புனைஞ்சு (புனைந்து) வைச்சுட்டுப் போயிருக்கிற கேடுகெட்ட கலாச்சாரத்துக்காக, மனசாட்சியைப் பணயம் வைச்சிட்டு, கண்ட,கண்ட **** பயலுக *****க்குக் கீழ மண்டியிட்டு வாழனும்ன்னு நினைக்கிறது சாத்தியமா?”

“………”

“அதுவும் உன்னைப் பாரு!, வக்கத்த ஒரு நாதாரிக்கு, காசு,சொத்து, 3 வேளை சோறு, பிள்ளை,குடும்ப சூழல், சமூகத்தோட பார்வையில அப்பா-ங்குற கௌரவமான பேருன்னு.. அந்தாளு நோகாம,சொகுசா நல்லவன் போர்வைல வாழ அத்தனையும் அமைச்சுக் கொடுத்துருக்கீங்க நீயும், உன் நொண்ணனும்!, உரிமைக்காரி நீயி!, உழைக்குறதும் நீயி! ஆனாலும்… ஆம்பளைன்னு ஒருத்தன் தான் இந்த குடும்பக் கோபுரத்தைத் தூக்கி நிறுத்துறதா உன் அடிமனசுல ரொம்ப ஆழமா ஒரு எண்ணம் வகுத்து வைச்சிருக்க! ம்??, அடித்தளமே நீ தான்-ங்குறதை மறந்துட்டு, அவன் இல்லாம போயிட்டா, கோபுரம் சரிஞ்சிடுமோன்னு பயப்பட வேற செய்யுற! அந்தப் பயத்தை தான் இந்தப் பரதேசி தெளிவா உபயோகிச்சுக்கிட்டான்”

“………….”

“ஆணிவேரா நிற்குற நீயி, உருவாக்குற சக்தியில, பெருவாரியை உறிஞ்சுத் தொல்லை கொடுத்துட்டுத் திரிஞ்ச சீக்கு புடிச்சக் கிளை ஒன்னு ஒடிஞ்சு விழுந்துட்டதா நினைச்சுக்க ஆயி!, இனி உனக்காகவே.. மொட்டு விட்டு, பூ பூத்து, காய் காய்ச்சு, கனி கொடுத்து, செழிப்பா வளர்ந்து நிற்குற கிளையைக் கவனிக்குற வழியைப் பாரு!”

“…………..”

“4 நாளாச்சு!, உன் மவ காலேஜ் பக்கம் எட்டிப் பார்த்து!”

“இனி படிப்பையெல்லாம் நம்பிக்கிட்டிருக்க முடியாது டே!, என் அண்ணன்ங்கிட்டச் சொல்லி சீக்கிரம் நாள் பார்க்கச் சொல்லனும்! அவளை அருளப்பன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா… நான் நிம்மதியாக் கண்ணை மூடுவேன்”

“சாகப் போறியா ஆயி?”

“அதெங்க, நினைச்ச நேரம் வருது?”

“சலிப்பைப் பார்ரா!, நீ பள்ளிக்கூடம் போயிட்டிருந்த காலத்துல, மதவக்குறிச்சி இருதயராஜூ, காலையிலயும், மாலையிலயும் கையில இருட்டுக்கடை அல்வாவோட உன் பொறத்தாலயே திரிஞ்சாராமா? உண்மையா?”

“ப்ச், அந்தக் கதையெல்லாம் இப்ப என்னத்துக்கே டே பேசுற?”

“அவுரு கடைசி வரை கல்யாணமே பண்ணிக்கலையாம் ஆயி”

“அதுக்கு?”

“நீ வேணா, அவருக்கொரு சான்ஸ் கொடுத்துப் பாரேன்”

“எலே, எடுபட்டப் பயலே!, யாருட்ட வந்து என்னாலே பேசுற?, கருமம் கருமம்! கேட்கவே நாராசமா இருக்கு”

“பின்ன? மிச்சக் காலத்தை ஒண்டியாவே வாழ்ந்து கழிக்கனும்ன்னு உனக்கென்ன தலையெழுத்து ஆயி?, உன் புருசன், புதுசா போய் சேர்ந்த ஊர்ல சைஸா ஒரு செட்-அப்பை வைச்சுக்கிட்டு சொகுசா செட்டில் ஆயிருவான்! உன் மவளை… உன் நொண்ணன் மகனுக்குக் கட்டிக் கொடுத்துக் கழிச்சு விட்ருவ! அப்புறம்…. உனக்குன்னு என்ன இருக்கு?, யாரு இருக்கா?” – பாயிண்ட்டாய் கேட்டவனுக்குப் பதிலளிக்க விருப்பமற்று,

“எந்திரிச்சுப் போ லே நீயி!, அசிங்கம் புடிச்ச பேச்சா பேசிக்கிட்டு! ஒருத்தனைக் கட்டி.. வாங்குன பாவத்தையே எங்க கழிக்கிறதுன்னு தெரியாம இருக்கேன்! இதுல இன்னொன்னைப் பிடிக்கனுமாம்! எலே!, போ லே அங்கிட்டு” – என்று எரிந்து விழுந்தவரிடம்,

“ஒரு நாள், இல்ல, ஒரு நாளு… நான் சொல்ற மாதிரி, பொம்பளைங்க ஒரு தடவை தோத்ததுக்கு சுணங்கிடாம, போட்டக் கோட்டைத் தாண்டி தெளிவும்,தைரியமா, தனக்கானத் துணையைத் தேர்ந்தெடுத்து அழகா செகண்ட் இன்னிங்க்ஸ் ஆடத் தான் போறாங்க பாரு ஆயி” – என்றான்.

“எனக்கு ஆம்பளைங்களே வேணாம் டே! இனி எந்த ******* பயலையும் நான் நம்புறதாகவே இல்ல!, இந்தப் பொறம்போக்குங்களை விட்டா, எங்க வாழ்க்கைல சந்தோசம்ங்குறதே கிடையாதுன்னு நினைச்சியா?, என்னா படிச்சு என்ன பிரயோசனம்?, நீயும் குறுகலாத் தான் லே யோசிக்குற”

“ஆ…….யி…. ரொம்ப அட்வான்ஸ்ட் ஆன ஆளு நீயி!, சரியாச் சொன்ன! தனிமையில இனிமை காண பழகிட்டா, எந்தத் தற்குறி நாயும் தேவையில்ல ஆயி” – ஆர்ப்பரித்தவனிடம்,

“யாருக்கு லே வேணும் சந்தோசம்?, அந்தக் கண்றாவியைப் பார்த்த வரை போதும்! எனக்கு நிம்மதி தான் லே வேணும்! அது எங்க கிடைக்கும்ன்னு சொல்லு.. அதைத் தேடிப் போய்க்கிறேன்!” – என்றார் அவர் அமைதியாக.

“தேடுவோம் தேடுவோம்”

“இப்போதைக்கு, என் மவ வாழ்க்கைக்கு ஒரு வழி பண்ணிட்டா போதும் டே எனக்கு”

“ப்ச் தப்பு ஆயி!, உன் வாழ்க்கையை சரிப்படுத்திக்கிறதும், சிக்கலாக்கிக்கிறதும் உன்னோட விருப்பம்! அவளுக்கென்ன தேவை, என்ன வேணும்ன்னு நீ தீர்மானிக்கிறது தப்பு! அவ சின்னப்புள்ள ஆயி!, கல்யாணம், அதைத் தொடர்ந்த வாழ்க்கையைப் பத்தியெல்லாம் அவளுக்கு என்ன புரிதல் இருந்திடப் போகுது?, அப்பன் பண்ணத் துரோகமே, எத்தனை ஆழமா அவ மனசைக் காயப்படுத்தியிருக்கோ தெரியல, இதுல திடீர்ன்னு படிப்பை நிறுத்தி, கல்யாணம் கட்டி வைச்சு மேலும்,மேலும் அவளை சோதிக்கப் போறியா?, தப்பு பண்ணுனவனுக்கு எந்தக் கேடும் வரல, அவன் வாழ்க்கைல எந்த மாற்றமுமில்ல! நீங்க மட்டும் ஏன், அடுத்து என்ன?, என்ன பண்ணி நிலைமையை சரிப்படுத்துறதுன்னு பறக்குறீங்க?, நிதானமா இரு ஆயி! எப்பவும் போல காடு,கழனின்னு உன் அன்றாட வேலையைக் கவனி! அவ படிக்குற சோலியைப் பார்க்கட்டும்! காலம் அனுபவத்தையும்,முதிர்ச்சியையும் அவளுக்கு கத்துக் கொடுக்கட்டும்! அப்புறம், மொல்லமா.. கல்யாணம்,லொட்டு,லொசுக்கையெல்லாம் பார்த்துக்கலாம்”

“……….” – மௌனமாய் இருந்தவரிடம்,

“உனக்கு சரின்னா சொல்லு! எங்கம்மா மசால்பொடி பிசினஸ் தொடங்கப் போகுதாம்! உன்னையும் ஒரு பார்ட்னரா சேர்த்துக்க சொல்லுறேன்” – என்றான் சமாதானமாய்.

“உன்னை தைரியமாத் தான் டே அன்னமேரி வளர்த்திருக்கா!”

“எங்களை விடத் தைரியமான ஆளு நீ தான் ஆயி! பொட்டியைத் தூக்கி பொடீர்ன்னு அந்தாளு முகரைல விட்டெறிஞ்சதுலயே தெரிஞ்சது”

“ப்ச், அடப் போ லே”

“ரெம்ப சலிச்சுக்காத ஆயி! இங்கயே உட்கார்ந்து நாய்க்குக் காவ காக்காம, போய் உன் மவளைக் காலேஜ்க்குக் கிளப்புற வழியைப் பாரு”

“படிக்க வையின்றியா லே?”

“பின்ன, பன்னி மேய்க்க விடுவமா?”

“ப்ச்”

“படிப்பு, குறுகிக் கிடக்குற மூளையை விசாலப்படுத்தும் ஆயி!, சிந்திக்குற புத்தியைக் கொடுக்கும்! தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கத்துத் தரும்! அவ படிப்பை முடிக்கட்டும்! அப்புறம் அவ ஆசைப்பட்டா, உன் விருப்பப்படி உன் நொண்ணன் மவன், அந்த காட்டெருமைக்கே கட்டி வை”

“உனக்கென்னாலே அவன் மேல அத்தனைக் கடுப்பு”

“ப்ச், அது வேற கணக்கு!, அதை விடு! முதல்ல உன் மவளுக்கு சோத்தைப் போட்டு உடம்பைப் பெருக்க வைக்கப் பாரு ஆயி! காத்தடிச்சா, கன்னத்தைத் தவிர மொத்த பாடியும், பறந்துரும் போல! எப்பப் பாரு சூசூசூசூடாஆஆ டீயும், அனல் பறக்க வடையும் தின்னுட்டு… கொதிச்சுப் போயேத் திரியுது!

கேப்பை, கம்பு, கொண்டைக்கடலை, நாட்டுக்கோழி, மண்ணீரல்ன்னு சத்தான ஆகாரமாக் கொடு ஆயி! கொஞ்சமாவது சதை வைக்கட்டும்!, இந்தா…. இந்த நாயெல்லாம் ஒரு கவ்வு,கவ்வுச்சுன்னா… உன் மவ மொத்த சதையையும் ஒரே உறிஞ்சுல,உறிஞ்சு எடுத்துரும் போல… என்னத்துக்கு அப்பிடி ஒடிஞ்சு விழுகுற மாதிரி வளர்த்து வைச்சிருக்கிற?”

“நானா டே சோறு போடாம இருக்கேன்?, அவ அப்பன் ம******ண்டி பழக்கி விட்டது, முழு நேரமும் டீயும்,வடையுமாத் திங்கிறது! இவனால.. இது வரை எனக்கு ஒரு பிரயோஜனம் இருந்திருக்கா?, வெட்டிப்பய” – எனத் தொடங்கியவர் அடுத்தப் பதினைந்து நிமிடம்.. கெட்ட,கெட்ட வார்த்தைகளில் சூசையை சுலுக்கெடுக்க.. தலையை ஆட்டியவாறு ஆட்டுப்பட்டியை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவன், சற்று நேரத்தில் எழுந்து,

“அப்போ மசால்பொடி பாட்னர்ஷிப்புக்கு ஒத்துக்க மாட்ட?” எனக் கேட்டான்.

“அடப் போ லே!, இருக்குற சோலியைப் பார்க்குறதுக்கே எனக்கு நேரம் போத மாட்டேங்குது!”

“அப்பிடியா?, அப்போ கண்ணைக் கசக்குறதை நிறுத்திட்டு எந்திரிச்சு வீட்டுக்குப் போ ஆயி!” என்றவன், “நான் வரேன்” – என்று விட்டுத் திரும்பி நடக்க,

கொட்டிலின் மறுபுறம் கையைக் கட்டிக் கொண்டு, அவனையே பார்த்தவாறு இறுக்கமானத் தோற்றத்துடன் நின்றிருந்த ஜெபமலரைக் கண்டு ஒரு நொடி ஜெர்க் ஆகி, பின் அவளைக் கண்டும்,காணாதது போல முகத்தை உர்ரென மாற்றிக் கொண்டு விறுவிறுவென வெளியேறி விட்டான்.

பின்புறம் அவள் அன்னையிடம்,

“இவனை உனக்கு ஏற்கனவே தெரியுமா?” எனக் கேட்பதும்,

“பூந்தோட்டத்து அன்னமேரி மவன் டி!” -என அவர் பதில் கூறுவதும் கேட்டது.

‘தெரிஞ்சவனா இல்லேன்னா…. என்னா பண்ணுவாளாம்! தொரட்டிக் கம்பைக் கொண்டி குடலை உருவி மாலையா மாட்டிக்குவாளாமா!, பெரிய புருஸ் லீ! Wheel kick பண்ணி விரட்ட வந்துட்டா! ஆளையும்,மண்டையும் பாரு!’ – எனப் புலம்பியவாறு சென்றவனின் விழிகள், மறுநாள் கல்லூரியில் அவள் இருப்பை உறுதி செய்து கொண்டது.

காலை பஸ் ஸ்டாப்பில் பைக்கில் அமர்ந்திருந்த போதே, “மாப்ள, ஜெபமலர் காலேஜ்க்கு வந்திருச்சு டே” – எனச் சுரண்டிய ஜார்ஜைக் கேட்டு, திரும்பி நோக்கியவனைத் தீவிரமாய்ப் பார்த்தவாறே அவள் கடந்து செல்ல,

“எதுக்கு டே உன்னைய முறைக்குது?” எனக் கேட்ட ஜார்ஜிடம்,

“முறைக்குறாளா?” எனக் குழம்பியவன், பின் மூக்கை விடைத்து,

“முறைச்சா,முறைச்சுட்டுப் போறா!” என கோபமாய்த் திரும்பிக் கொண்டான்.

காலை இடைவேளையில் கேண்டீனுக்குள் செல்லாது, மரத்தடி ஒன்றில் புத்தகத்தைத் திறந்து வைத்தபடி மௌனமாய் அமர்ந்திருந்தவளை அளவிட்டவாறு நடந்து சென்றவனை, அப்போதும் அவள் அதே பார்வை பார்க்க, இவனும் பதிலுக்குப் பெரிதாய் முறைத்துத் தள்ளியிருந்தான் ‘என்னாடி, மட்டையைத் தூக்கி அடிச்சா, நீ என்னா பெரிய மைக் டைசனா’ என்ற முணுமுணுப்புடன்.

மதிய இடைவேளையிலும் அதே மரத்தடியில் அமர்ந்தவளைக் கண்டு புருவம் சுருக்கியவன், “டீயுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் பின் செல்பவர்’-ன்னு, காலேஜ்ல கால் வைச்சா கப்,கப்-ஆ டீ அடிக்குறவ, எதுக்குக் கேண்டீன்குள்ளக் கூட போகாம ஸ்ட்ரைக் பண்ணிட்டிருக்கா?” என்றெண்ணியவாறு,

“ஏன் டே ஜார்ஜூ, ப்ரேக்ல பால் டீ குடிக்காட்டி, பரலோகத்தை ஆளும் பரமபிதா உன்னை ரட்சிக்க மாட்டாருன்னு சொல்லுவியே! இன்னிக்கு என்ன டே, மந்திரிச்சு விட்ட மாதிரி இந்த மரத்தையே சுத்திட்டிருக்க?” – என அவள் அமர்ந்திருந்த மரத்தடியிலிருந்து சற்றுத் தள்ளி நின்றிருந்தவன், நண்பனைக் கேட்பது போல, சத்தமாக வினவினான்.

அவன் கத்தியதில் பதறிப் போன ஜார்ஜ், “டேய் அமைதியா இர்றா!, அவ பாட்டுக்க பாய்ஞ்சு, மரக்கிளையை ஒடிச்சு, நம்மள விளாசித் தள்ளிடப் போறா” என்று முணுமுணுக்க..

“கை வைச்சுப் பார்க்கட்டும் இன்னிக்கு!” என்று பல்லைக் கடித்தவன்,

நிமிர்ந்து தன்னைக் கண்டவளை நோக்கி, “என்னா??, அடிப்பியா??” என்றான் கோபம் குறையாமல்.

சலிப்பாய் விழி மூடித் திறந்து விட்டு “ப்ச்” எனத் திரும்பிக் கொண்டவளிடம் மேலும்,

“பெரிய வாஞ்சிநாதன் வாரிசு இவங்க!, wall fight வேற பண்ணுவாங்க! பாஸ்கட் பால் கோர்ட்ல slam dunk பண்றா மாதிரி, எகிறிக் குதிச்சு, மட்டையை வைச்சு அவன் முதுகை ஒடிச்சுப் போட்டா டா!, கோவத்தை எங்க காட்டனுமோ, அங்க காட்டத் துப்பில்லாம!” – என்று திட்ட,

சீறலாய் அவன் புறம் நோக்கியவளை மதிக்காமல்,

“வரி,வரியா முதுகு முழுக்கக் காயம் அவனுக்கு! பாவம், ஜன்னி கண்டு, ஜமுக்காளத்துலயே ஒருக்களிச்சுக் கிடக்குறான்! அப்பிடி என்ன கண்ணு,மண்ணு தெரியாத ஆத்திரம்?” என்று அதட்டவும்,

ஒரு நொடி குற்றக் குறுகுறுப்பில் உள்ளம் கலங்கியதில், முகம் கன்ற, இமை தாழ்த்தித் தலை குனிந்தவள், மண்ணைக் கீறியவாறு மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

அவள் அமைதி பொறுக்காது, மேலும் வம்பிழுக்கும் பொருlட்டு “வாய்க் கொழுப்பைக் குறைக்க, வடையைத் தியாகம் பண்றது நல்லது தான்!” – என்றவனுக்கு எந்த எதிர்வினையுமில்லாது, நரம்போடிய விரல்களால், கம்பளிப்பூச்சியை சுருண்டு,விரியச் செய்தபடி, தெளிவற்ற முகத்துடன் யோசனையில் ஆழ்ந்திருந்தவளை, ஆராய முயன்றவனை ஜார்ஜ் இழுத்துக் கொண்டு நகர்ந்திருக்க,

மாலை கல்லூரி முடிந்து மல்லிகைத் தோட்டத்திலிருந்தவனிடம், ஜெபாவின் வகுப்பைச் சேர்ந்த ஒருவன், “ண்ணே, அந்தப் புள்ள ஜெபாவைக் காணோமாம்ண்ணே! காலேஜ் முடிஞ்சு வீட்டுக்குப் போகலயாம்!, கடைசி பீரியட்ல இருந்து ஆளைப் பார்க்கவே இல்லன்னு ஃப்ரண்ட் புள்ள ப்ரின்சிபல் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கு! அது சொந்தக்காரனுங்க பூரா காலேஜை சுத்தி தேடிட்டு இருக்காங்கண்ணே” – என்றதில் திகைத்தவனின் கால்கள், தன்னாலேயே கல்லூரியை நோக்கி ஓடியிருந்தது.

ல்லூரியில், அவர்களது டிபார்ட்மெண்ட்டின் மொட்டைமாடி, syntex தொட்டியின் பின்னிருந்த மிகச்சிறிய இடத்தை, நீண்டு வளர்ந்த பெரிய மரத்தின் கிளையொன்று மொத்தமாக மறைத்திருந்தது.

உள்ளே சென்றமர்ந்தால், வெளியே தெரியாத அளவிற்கு, சிறிய அறை போல் தரை வரை அடர்ந்து,நீண்டு தொங்கியிருந்தது. மொட்டைமாடிக் கதவு கல்லூரி நிர்வாகத்தால் பூட்டப்பட்டிருந்தாலும், அவ்வப்போதுத் தடையைத் தகர்த்தி உள் நுழையும், சிகரெட் சாவுகிராக்கிகளின் பஃப்ஃப்ஃப்ஃப்ஃப்க்களையும், அமரக்காதல் ஜோடிகளின் இச்சுக்களையும், வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருந்தது அந்த சில்லறைச் சாவடி.

இன்று பூட்டை உடைத்து வெற்றி வாகை சூடிப் பூத்திருந்த ஜெபமலர் தன் விழி வழித் தெறிக்க விட்ட ஒன்றிரண்டு முத்துக்கள் சாவடிக்குப் புதிது தான்!

தண்ணீர்த் தொட்டியிருந்த சுவற்றில் முதுகைச் சாய்த்து, மரக்கிளையை மடியாக எண்ணிக் கண் மூடிக் கிடந்தவளின் சோர்ந்த முகம், இரத்தப் பசையின்றி வெளுத்துக் காட்சியளித்தது.

இரக்கம்,ஆறுதல் அதைத் தொடர்ந்த எள்ளல், நக்கல், நையாண்டியென்று- இது தான் சாக்கென வன்மத்தையும், வஞ்சத்தையும் கக்கிய சுற்றார்,உற்றாரின் போக்கு கடுப்பைக் கிளப்பியிருந்தது அவளுக்கு.

ஆதங்கம்,ஆத்திரம்,அசிங்கம்,ஆவேசமென கடந்த சில நாட்களாக மூளையைத் தின்று தீர்த்திருந்த உணர்வுகள், அடுத்து இதயத்தை நோக்கிப் படையெடுத்ததில் சக்தியிழந்து, ஆளரவமற்ற தனித்தீவில் ஒளிந்து கொள்ளத் தூண்டிய மனதின் பேச்சுக்கு செவி சாய்த்து, இங்கு வந்து சரணடைந்திருந்தாள்.

விடாது அரற்றித் திரியும் ஆழ்மனதின் சலம்பலில் உணவும்,உறக்கமும் தூரச் சென்றிருக்க, அதன் விளைவாக, சுழன்ற தலையையும், எரிந்த கண்களையும், நடுங்கும் கைகளையும், கண்டு கொள்ளாது.. சிலை போல் அமர்ந்திருந்தவள், சரக்க்க்க்கென கிளையைப் பிரித்துக் கொண்டு உள் நுழையும் உருவத்தை உணர்ந்து, எரிச்சலுடன் விழி மலர்த்தினாள்.

பயமும்,பதற்றமுமாக அவர்களது டிபார்ட்மெண்ட் முழுக்க அவளைத் தேடி,ஓடி ஓய்ந்திருந்த அலெக்ஸ், எதேச்சையாக மொட்டைமாடியை நோக்கி, அது உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு, உடனிருந்தவனின் துணையோடுக் கதவை உடைத்து.. ஒரு வழியாக ‘smoking zone’-க்குள் நுழைந்திருந்தான்.

கட்டிய கைகளுடனும், நீட்டிய கால்களுடனும், சத்தமில்லாது சாய்ந்திருந்தவள், சலனமற்ற விழிகளோடுத் தன்புறம் நோக்குவது கண்டு, மூச்சு வாங்க முறைத்தவன், திரும்பி,

“லேய்ய் தம்பி, ஆளைக் கண்டுபிடிச்சாச்சுன்னு போய்ச் சொல்லு டே” என்றான் வெளியே நின்றிருந்தவனிடம்.

‘சரி’ என்றபடி அவன் ஓடிச் செல்ல, இவள் புறம் திரும்பி, “வெளியே வா” என்றான் நறநறத்தப் பற்களோடு.

‘ப்ச்’ என சோர்வுடன் மறுபுறம் திரும்பிக் கொண்டவளைக் கடிய முடியாது, சுற்றும்,முற்றும் நோக்கினான். ஏகப்பட்ட சிகரெட் துண்டுகளும், பாக்கு, சாக்லேட் பாக்கெட்டுகளும், ஓரத்தில் சில,பல ரம், விஸ்கி பாட்டில்களுமாய் பேச்சிலர் ரூமிற்கானப் பத்துப் பொருத்தத்துடன் பக்காவாய்க் காட்சியளித்தது அந்தக் கிளை அறை.

“சிகரெட் இழுத்தியா மக்கா?” – மரக்கிளையை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடித் தன்புறம் குனிந்து கேட்டவனுக்குப் பதில் கூறாமல் அவள் அமைதி காக்க,

“நீ பாட்டுக்க துக்கம் தொண்டையைக் கவ்வுதுன்னு, ரெண்டு இழு,இழுத்துடாத!, சீக்காளியாய்டப் போற” – என்றவனின் நக்கலைக் கேட்டுக் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தவளிடம்,

“எந்திரிச்சு வா மக்கா” என்றான் பொறுமையாக.

அவள் அப்போதும் அசையாதிருக்க,

“ப்ச், துப்பட்டால கட்டெறும்பு ஊறிட்டிருக்குடி! சோகத்துல சொரணையில்லாம போயிடுச்சா உனக்கு?” – என்று எரிச்சல் பட்டவனைக் கணக்கில் கொள்ளாது,

ஒவ்வொரு எறும்பையும் ‘கேரம் காயினாக’ பாவித்து இருவிரல்களால் தட்டி விட்டவளைக் கண்டு கடுப்பாகி, அவளது இடது தோளை அழுந்தப் பற்றி எழுப்பி, இழுத்து வெளியே நிறுத்தினான்.

“அறிவிருக்காடி?, எங்க வந்து உட்கார்ந்து சண்டித்தனம் பண்ணிட்டிருக்க?, ஓடி ஒளியனும்ன்னா போய் கிணறு, கம்மாய்ன்னு பதுங்க வேண்டியது தான?, காலேஜ் தான் கிடைச்சதா உனக்கு?, எங்க வைச்சு மானத்தை வாங்கிட்டிருக்க?,”

“ஏற்கனவே மானம், வானமேறித் தான கிடக்கு?, நான் புதுசா வாங்க என்ன இருக்கு?”

“அகராதித்தனமா பேசாத மக்கா!, இருக்குற கஷ்டம் போதாதா உன் அம்மைக்கு?, புதுசா நீ வேற இழுத்து விட்டுட்டிருக்க?, அங்க காடு,கரையெல்லாம் உன்னைத் தேடித் தவிச்சிட்டிருக்குது அது”

அவன், தன் அன்னையைப் பற்றிப் பேசியதும் “ப்ச்” என்றவள் மீண்டும் உள் நோக்கி நடக்க,

அவசரமாய் அவள் கரம் பற்றி நிறுத்தியவனிடமிருந்து வெடுக்கெனத் தன் கையை உறுவிக் கொண்டவள், மறு கரத்தை அவனை நோக்கி உயர்த்திய நேரம், அவள் உத்தேசம் புரிந்துப் பொங்கி வந்த கோபத்தில் பல்லைக் கடித்தவன்,

அவள் உயர்த்திய கரத்தை முரட்டுத்தனமாகப் பற்றித் திருகி, முதுகோடு வளைத்து,

“என்னடி பழக்கமிது?, எப்பப் பார்த்தாலும் கை ஓங்குறது?, என்னைப் பார்த்தா எப்பிடித் தெரியுது உனக்கு?, எங்களுக்குத் திருப்பி அடிக்கத் தெரியாதுன்னு நினைச்சியா?, நீ பெரிய ஜான்சிராணி-ன்னா, நாங்க ஜான் சேனா டி!, என் ஒரு அடிக்குத் தாங்குமா உன் ஓமக்குச்சி உடம்பு?, பொட்டப்புள்ளையாச்சேன்னு பொறுத்துப் போனா, யாரு,என்னன்னு பார்க்காம உன் இஷ்டத்துக்கு அடிக்க வருவியா?”

-ஒரு கையை இறுகப்பற்றிக் கொண்டு, மறு கரத்தை வளைத்தவாறு, தன்னை நோக்கி உயர்ந்திருந்த முகத்தைக் கண்டபடிக் கோபத்தில் திட்டித் தீர்த்தவனின் வார்தைகளை உணராது, வலியில் சுழித்த இதழ்களுடன் கண்களை அழுந்த மூடியவள், “கையை விடுடா கபோதி” எனப் பல்லைக் கடித்து, அடிக்குரலில் மிரட்டினாள்.

அதில் மேலும் கொந்தளித்து, “அடங்கமாட்டடி நீ” – என அழுத்தம் கூட்டி கையைத் திருகியவனின் செய்கையில், மூக்கை விடைத்துத் தோளைச் சுருக்கியவள், மூடிய விழிகளில் உருண்ட ஒரு துளி நீருடன்,

“துப்பட்டாவை சரி பண்ணத் தான் கையைத் தூக்குனேன்!, வலி….க்…கு..து… கையைஐஐஐஐ விடு” – என நடுங்கும் உதடுகளோடு சக்தியற்றக் குரலில் கூறியதும் திகைத்து, பட்டென அவள் கையை விடுத்தவன், வலியில் புருவம் சுருங்க, தன்னாலேயே தாழ்ந்து விட்டத் தலையுடன், தோளைப் பிடித்தவளைக் கண்டுப் பதறி, வேகமாக அவள் கையைப் பற்றி, மெல்ல அழுத்தி விட்டபடி,

“சாரி,சாரி மக்கா!, ரொம்ப வலிச்சுடுச்சா?, சாரி டி! நீ… அடிக்க வர்றியோன்னு கோபத்துல…. ப்ச், சாரி மக்கா” எனச் சமாதானம் செய்தவனிடம் கையைக் கொடுத்து விட்டு… கண்ணீர் தேங்கிய விழிகளுடன் அமைதியுடனே நின்றாள்.

“ரொம்ப வலிக்குதா மக்கா?, லேசாத் தான் டி பிடிச்சேன்!, இனி இப்பிடிப் பண்ண மாட்டேன்! சாரி. ம்ம்?”– எனத் தலை சாய்த்து அவள் முகம் நோக்கிக் கூறியவன்,

உதட்டை அழுந்தக் கடித்துக் கண்ணீரை அடக்கியபடி, கலங்கிச் சிவந்த முகத்தோடு, அவன் அழுத்தி விடும் தன் கைகளிலேயே விழிகளைப் பதித்திருந்தவளை, ஆராயும் பார்வை பார்த்து,

“உடம்பெல்லாம் தெம்பில்லாம நடுங்குது?, கிட்ட வந்தாலே அனல் அடிக்குது?, சோறு,தண்ணியில்லாம திரியுறியா நீயி?, ம்ம்?, என்ன மக்கா உன் உத்தேசம்?, பட்டினி கிடந்து சாகப் போறியா?” எனக் கேட்டான்.

எச்சில் விழுங்கியவாறு, மூக்கை உறிஞ்சியபடி எங்கோ நோக்கியவளை தூண்டி விட்டுப் பேச வைக்கும் பொருட்டு,

“டீ குடிக்கிறியா?, இல்ல, வடை சாப்பிடுறியா?, என்ன கொடுத்தா, உண்ணா விரதத்தை முடிப்ப?” என வினவியவனை அவள் வெடுக்கெனத் திரும்பிக் கோபமாய்ப் பார்க்க,

“என்ன?, எதுக்கு முறைக்குற?, டீயும்,வடையும் என்ன, உங்கொப்பன் கண்டுபிடிப்பா?”

“அந்தாளைப் பத்தி பேசாத” – அடிக்குரலில் சீறியவளிடம்,

“நாங்க நிறுத்திட்டோம்! ஏன், உங்கம்மை கூட நாலு நாள் அழுது, மூக்கை சீந்திட்டு, ஐஞ்சாவது நாள் மொத்தமா தலை முழுகிட்டு, அடுத்த சோலியைப் பார்க்கக் கிளம்பிடுச்சு! நீ தான் பாவம், டீயைப் பார்த்தா, அவுரு டிவிஎஸ் 50 ஞாபகத்துக்கு வருது, வடை தின்னா, அவுரு வட்ட முகம் நினைவு வருதுன்னு சொப்பனத்துல, அப்பனைக் காணோம்ன்னு தவியாய்த் தவிச்சுக் கிடக்குற?” – எனக் கூறியபடி அவள் கையை அழுத்திக் கொண்டிருந்தவனிடமிருந்து வெடுக்கென கரத்தைப் பறித்துக் கொண்டவள், கோபமாய்த் திரும்பி நின்று கொள்ள,

“அப்பனில்லாம வாழவே முடியாதா என்ன?, அப்பிடி என்னா குறைஞ்சிடும்ன்னு ரொம்பத் தான் அலட்டிக்கிற?” – என நக்கலாய் வினவினான்.

அனல் மூச்சோடு தகித்தவளின் தோள் உரச, பக்கவாட்டில் நின்று எதிரே பார்த்தபடி,

“அப்பிடிப் பார்த்தா.. எங்கப்பனெல்லாம் என்னோட 4-வது வயசுல கள்ளச்சாராயம் குடிச்சு செத்துப் போனாப்ல! அப்ப இருந்து இப்ப வரை அப்பனில்லாம தான் இருக்கேன்! அழுது கரையாம,துக்கத்துல புரளாம 3 வேளை தின்னு,தூங்கி ஒரு குறையுமில்லாது, கை,கால் சுகத்தோட, நல்லாஆஆஆத் திருப்தியா தான் வாழ்றேன்!” – simple ஆன குரலில் சாதாரணமாகக் கூறியவன் புறம், அவள் ஓரவிழியை மெதுவாய் நகர்த்த,

“இதுல பியூட்டி என்னன்னா, ஏன்ய்யா குடிச்சன்னு எங்கம்மையால சடவுக்குக் கூட போக முடியல! ஏன்னா, எங்கப்பனுக்குக் குடிப்பழக்கமே கிடையாது!, சேக்காளிங்க வற்புறுத்தல்ல அன்னைக்குத் தான் குடிச்சிருக்காப்ல!, பட்ட சாராயம்… பொட்டுன்னு போட்ருச்சு! கண்ணியமும், கௌரவமுமா வாழ்ந்து கடைசில கள்ளச்சாராயத்தால செத்துப் போனாப்ல!, அவுரு நல்லவரா, கெட்டவரான்னு இப்ப வரை குடும்பமா நாங்க கன்ஃபியூசன்ல தான் இருக்கோம்” – என்றவன் தொடர்ந்து,

“போன மனுசன் சும்மா போகல!, 4-வயசுல ஒரு ஆண் குழந்தையையும், 10-வயசுல மூளை வளர்ச்சியில்லாத பெண் குழந்தையையும் எங்கம்மை தலையில கட்டிட்டுப் போயிட்டாரு”

“எங்கக்காவைப் பார்த்துக்க முழு நேரமும் எங்கம்மை, வீட்டோட இருந்தாக வேண்டிய கட்டாயமிருக்குன்னு எங்கப்பனுக்கு நல்லாத் தெரியும்! இவுரு இல்லாத நிலை வந்து, எங்களுக்கு சோத்துக்கு வழி பண்ண வேண்டி எங்கம்மை வீட்டை விட்டு வெளியேறுனா, எங்கக்கா கதி என்னாகும்ன்றதும் தெரியும்! கள்ளச்சாராயம் எப்ப வேணாலும் கபால்ன்னு உயிரைக் குடிச்சிடும்ன்றதும் தெரியும்! எல்லாம் தெரிஞ்சும், குடிச்சு, எங்களை அநியாயமா நட்டாத்துல விட்டுட்டாரேன்னு கோபப்படுறதா… இல்ல, என்னைக்கும் குடிக்காத மனுசன், அன்னைக்குக் குடிச்சு.. இப்பிடித் திடீர்ன்னு போயிட்டாரேன்னு நினைச்சு வருத்தப்படுறதான்னே தெரியல!”

“சந்தோசமா இருக்கும் போது எங்கப்பனைப் பத்தி அருமை பெருமையா பேசிக்குவோம்! துக்கம் வரும் போது ‘எப்பிடிப் போய் செத்திருக்கிறான் பாருன்னு’ தூத்துவோம்! ஆக மொத்தம் எங்க குடும்பத்தைப் பொறுத்தவரை, எங்கப்பா கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவையாத் தான் இருக்குறாரு.. இப்ப வரைக்கும்” – என்றான்.

அவன் தந்தை குறித்து அவ்வப்போது காதில் பட்ட சேதி தானென்றாலும், அவன் கூறக் கேட்கும் போது கொஞ்சம் துக்கமாகவும், நிறைய கோபமாகவும் வந்தது ஜெபாவிற்கு.

“காசு,பணமில்லாம வாழ்றது தான் கஷ்டம் மக்கா!, அப்பனில்லாம வாழ்றது ரொம்பச் சுலபம்”

கையைக் கட்டிக் கொண்டு வெகு அலட்சியமாய்க் கூறியவனைத் திரும்பி நோக்கினாள்.

“சாகும் போது, உங்களை நினைச்சிருப்பாருல்ல?”

“மரத்தடில மஜா பண்ணும் போது.. உங்கப்பன் நினைவுல நீ இல்ல”

-அவள் எதை நோக்கி வருகிறாளெனப் புரிந்து பட்டெனப் பதில் கூறி விட்டவனின் வார்த்தைகள் தேளாய்க் கொட்டியதில், கரகரவெனக் கண்ணீர் உருண்டு கன்னத்தில் வடிந்து விட, அதைக் கண்டு கொள்ளாது,

“ஒரு நிலை வரை வீடு,காடு,கழனின்னு அத்தனைக்கும் ஈடுகொடுக்க முடிஞ்ச எங்கம்மையோட வயசு, எங்கக்கா பெரிய மனுசியானப்புறம், தளர ஆரம்பிச்சிடுச்சு! வாழ்தலை விடு, இயங்குதலே போராட்டமா இருந்ததால, ஒரு கட்டத்துல, ரொம்ப சோதிக்காம ‘சாவு’-ன்ற பேர்ல இயற்கையே அவளைத் திரும்ப எடுத்துக்கிச்சு! அழுகைக்கு முன்னாடி, அயர்ச்சி தீர்ந்த ஆசுவாசம் தான் எங்கம்மைக்கு!”

-தொடர்ந்து பேசியவனைக் கேட்டு மேலும் துக்கம் பொங்கியது அவளுக்கு.

“எங்கப்பன் போனப்பவும் எங்கம்மை சோர்வடையல! எங்கக்கா போன பிறகும் அசந்து உட்கார்ந்திடல! ஓடிக்கிட்டே தான் இருக்குது! உலகம் உருவான காலத்துல பாறை இடுக்குல வாழத் தொடங்குன மனுசன், புலிக்கும்,எலிக்கும் பயந்து ஓடிக்கிட்டே இருந்ததாலயோ என்னவோ, எப்படியாயிருந்தாலும், யாராயிருந்தாலும், எதை நோக்கியாவது பயணிச்சுக்கிட்டே இருக்க வேண்டியது கட்டாயமாத் தானிருக்கு! இது எல்லா ஜீவராசிக்கும் பொருத்தம் தான?

எங்கப்பா போன பிறகு, வாழ்றதுக்கு ஆதாரமா எங்க 2 பேரையும் கை காட்டுன எங்கம்மை, எங்கக்கா போனதுக்கப்புறம் எனக்காக வாழ்றதா சொல்லுது! எனக்குப் பிறகும் கூட.. எதையாவது,யாரையாவது சாக்கு சொல்லித் தொடர்ந்து ஓடிக்கிட்டே தான் இருக்கப் போகுது! அங்கங்க தவறுது-ன்றதுக்காக, நீண்டு, நெடுக கிடக்குறப் பாதையை அம்போ-ன்னு விட்டுட்டுத் திரும்பி நடக்க முடியாது ஜெபா! பொன்னோ, பொருளோ, ஊனோ, உயிரோ எதையாவது ஒன்னைக் குறியா வைச்சுக்கிட்டுத் தொடரத் தான் வேணும்! இல்லாட்டி என்ன சுவாரசியம் இருந்திடப் போகுது வாழ்க்கைல?” – என்று ஒரு நொடி நிறுத்தியவன், பின் மெதுவாக,

“உங்கப்பன் இருக்குற இடம் எனக்குத் தெரியும் ஜெபா. அன்போ, ஆத்திரமோ எதையாவது ஒன்னை அந்தாளு மூஞ்சிக்கு நேரா வெளிப்படுத்திட்டா, இந்த அலைப்புறுதல் எல்லாம் உனக்குக் குறைஞ்சிடும்ன்னா, நான் உன்னை அவர் கிட்ட அழைச்சிட்டுப் போகவா?” எனக் கேட்டான்.

பட்டென நிமிர்ந்து, அதிர்ந்து விரிந்த விழிகளால்.. தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் முகத்தை நோக்கியவளிடம், தீவிரமான குரலில்,

“அந்தாளை ஏத்துக்கிறதும், வெறுக்கிறதும் உன்னோட சாய்ஸ் தான் ஜெபா! இதுல நீ, உங்கம்மையைப் பத்திக் கூட யோசிக்கத் தேவையில்ல. என்ன சொல்ற?” – என்று வினவவும், உடல் குலுங்கப் பொல,பொலவெனக் கண்ணீரைக் கொட்டியவள், அருகே நின்றிருந்தவனின் தோளில் நெற்றியை அழுத்தி, முகம் மறைத்து, மொத்தமாய்ச் சாய்ந்து விட,

அவள் எடையில் உடல் ஆடத் தடுமாறிப் பின் சமாளித்துக் காலூன்றி நின்றவன்,

“எலும்பா இருந்தாலும், இந்தக் கனம்,கனக்குறியே மக்கா! ஸ்டீல் பாடியா டி நீ?” எனக் கேலி செய்ய, கட்டியிருந்த அவன் கைக்கும், தோளுக்குமிடையே முகம் மறைத்திருந்தவள், படிப்படியாக அழுகை குறைந்து, மூக்கை உறிஞ்சி, அவன் சட்டையிலேயே கன்னமசைத்துக் கண்ணீரைத் துடைப்பதை, வேடிக்கை பார்த்திருந்தவன்,

“நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லல?, என்ன போவோமா?” எனக் கேட்டான் மீண்டும்.

நிமிர்ந்து எதிரே நோக்கியவளின் விழிகள் வெறுப்பை உமிழ, கோப முகத்துடன், “என் வாழ்நாள்ல இனி அந்தாளு முகத்துல நான் முழிக்கவே கூடாது” – என்று கடித்தப் பற்களிடையே, ஆத்திரமாய்க் கூறினாள்.

“அப்டின்னா, இந்த ஒளிஞ்சு விளையாடுற விளையாட்டையெல்லாம் இன்னையோட விட்றனும்! காலேஜூக்குப் போகாம வீட்டுக்குள்ளயே மறைஞ்சு கிடக்கலாம்ன்ற எண்ணத்தையும் மாத்திக்கனும்! தலைமறைவா இருக்க வேண்டியவனே, தலை நிமிர்ந்து நடமாடிட்டிருக்கான்! நீ ஏன் இயல்பு வாழ்க்கை வாழாம, இயந்திரகதியா நாளைக் கடத்தனும்ன்னு நினைக்குற?

உன்னை இரக்கமா,ஆறுதலா,கேலியா,கிண்டலா பார்க்குற அத்தனைப் பார்வையும் ஒரு நாள் மொத்தமா நீர்த்துப் போயிடும் ஜெபா! கொஞ்ச நாளைக்குக் காதையும், கண்ணையும் மூடியே வை! மனசை மட்டும் திறந்து வை.. அது, நிம்மதியைத் தீனியா கேட்கும்! முடிஞ்சா போடு… முடியலேன்னா அமைதியை மட்டும் கொடு.. அதுவே போதும்!”

-என்றவனின் பேச்சில், பெருமூச்சை வெளியிட்டு கண்களை இறுக மூடி, அவன் தோளில் முகத்தை மேலும் அழுத்திச் சாய்ந்தவளின் அசைவில், மீண்டும் தடுமாறி நின்றவன்,

“சாய்ச்சுடாதடி என்னை! விழுந்திடப் போறேன்” என்று திட்ட,

அண்ணார்ந்து அவன் முகம் நோக்கியவள், சவாலாய்,

“இனி என் நோக்கமே உன்னை சாய்க்கிறது தான்” என்றாள்.

அழுது, சிவந்து,வெளிறியிருந்த முகத்தில் தெளிவு திரும்பியிருக்க.. புதிதாய் மின்னிய சின்னக் கண்களின் பளபளப்பில் ஈர்க்கப்பட்டு, பார்வை மாற.. அவளில் லயிக்கத் தொடங்கியவன், பின் இட,வலமாகத் தலையசைத்து,

“நான் விழ மாட்டேன்டி” என்றான் உறுதியாய்.

உதடு வளைய அலட்சியமாய் ஒரு பார்வை, பார்த்து விட்டு விலகி நின்றவளை அழைத்துக் கொண்டு, பசியில் காதடைத்துப் போய், இருண்ட கண்களுடன் பாதை தெரியாதுத் தட்டுத் தடுமாறியவளிடம்,

“டீயா, வடையா?” எனக் கேட்டு அவள் இரண்டுமே வேண்டாமென்றதும், கம்மங்கூழை நீட்டி, “இனி தினம் இதைக் குடி” என்று அவளைப் பருகச் செய்து வீட்டில் விட்டிருந்தான்.

அழுது கரைந்த அவள் அன்னையிடமும் “இனி சண்டை பிடிக்காம அந்தப் புள்ள காலேஜூக்கு வரும் ஆயி!, சின்னப்புள்ள தான?, நடக்குறதை ஜீரணிக்கவும்,சமாளிக்கவும் அது பழக வேணாமா?, அது போக்குல விடு ஆயி! சரியாய்டும்!” எனச் சமாதானம் கூற,

அவன் பேசுவதையும், அவள் அன்னை இதமாகவும்,மாமன் பதமாகவும் அதற்குப் பதில் கூறுவதையும், அருளப்பன் விடாது அலெக்ஸை முறைப்பதையும், கண்டு கொள்ளாது.. வட்டிலிலிருந்த சோற்றை வக்கணையாகத் தின்று கொண்டிருந்தாள் ஜெபமலர்.

தன் பின்பு தொடர்ந்து கல்லூரி வரத் தொடங்கியவளின் leisure time முழுதும் அலெக்ஸின் laid-back attitude-ஐ, வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழிந்தது.

கவனித்ததில் கண்டுபிடித்தது: கல்லூரிக்கென அவன் நான்கே சட்டைகளைத் தான் ஒதுக்கியிருந்தான். வெள்ளையில் நீல ஸ்ட்ரைப்ஸ் ஒன்று, கருப்பு நிற ப்ளைன் ஷர்ட், சிகப்பில்,கருப்பு நிற சின்னக் கட்டம் போட்ட சட்டை, பச்சையில் அகலக் கட்டம் போட்ட சட்டை! அவ்வளவு தான்! மீதமிருக்கும் ஒரு நாளில்.. அவன் கல்லூரிக்கு வருகை தருவது அரிதோ அரிது!

மதிய இடைவேளையில் மரத்தடியில் அமர்பவன், கொண்டு வரும் வட்டமான பெரிய சைஸ் டிபன் பாக்ஸ் முழுதிலும் தினம், கறியும்,கோழியும்,மீனும்,நண்டுமாய் ஒரே கவுச்சி நாற்றம்! நான்,நீ எனப் போட்டிப் போட்டுக் கொண்டு அவனது டிபன் பாக்ஸைக் கைப்பற்ற நண்பர்கள் இடும் சண்டையிலேயே தெரிந்தது அன்னமேரியின் கைப்பக்குவம்!

கொஞ்சமும் கூச்சமின்றி, வஞ்சமில்லாது, வக்கணையாய் அவன் அயிரை மீனை உறிஞ்சுவதையும், கோழிக்காலைக் கடித்திழுப்பதையும், நல்லி எலும்பைத் தட்டி சுவைப்பதையும் தூர இருந்து எச்சில் ஊறப் பார்ப்பவளுக்கு, நான்-வெஜ்ஜில் நாட்டம் எழுந்ததன் விளைவாக அவள் டப்பாவும் லெமன் சாதம்,புளி சாதத்திலிருந்து மாறி.. கறிக்குழம்பு, காடை வறுவல் என மோட்சம் பெற்றிருந்தது.

தேநீர் பருகும் நேரத்தைத் தேவி கணங்களாக எண்ணி, கையில் டீ க்ளாஸோடு, பாரபட்சம் பாராது அனைத்து டிபார்ட்மெண்ட் தேவதைகளையும் அகண்ட புன்னகையுடன் வெறித்து/ரசித்துப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.

வள் தன்னைப் பார்வையால் தொடர்வது புரிந்தாலும், தானும் அவளது இருப்பை/நலத்தை உறுதி செய்ய அவளைக் கண்காணிப்பதை வழக்கமாக வைத்திருந்தாலும், நண்பர்களின் வாய்க்குப் பயந்து, அவளைக் கண்டும் காணாததும் போல் கடப்பவன், ஒரு நாள்.. அவள் அந்த ‘நோ டீ ஸ்ட்ரைக்’ செய்து கொண்டிருந்த மரத்தடியில், கையிலிருந்தப் பேப்பரைப் பார்த்தபடி முசுட்டு முகத்தோடு தனியே அமர்ந்திருப்பது கண்டு, மெல்லத் தேங்கினான்.

“என்ன மக்கா, ஆள் கிடைக்கலைன்னு பேப்பரை முறைச்சிட்டிருக்க போல?” – அவன் குரலில் நிமிர்ந்தவள்,

“எனக்கு ஆள் கிடைக்கலைன்னு சொன்னேனா?” – எனக் கேட்டாள்.

எச்சரிக்கை உணர்வு தலை தூக்க,

“ஆள் எல்லாம் பைய்ய கிடைக்கட்டும்!, இப்ப பேப்பர்ல என்ன சங்கதின்னு சொல்லு” என்றான்.

“ப்ச்” எனச் சோர்வுடன் விழி மூடித் திறந்தவள், “க்ளாஸ் டெஸ்ட்ல ஃபெயில் ஆயிட்டேன்! நான் வராத வாரத்துல நடத்துன எதையும் ஃபாலோ பண்ண முடியல! நோட்ஸூம் இல்ல” எனக் கூற,

“நீ க்ளாஸ் டெஸ்ட்டுக்குப் படிப்பியா??” என அதிர்ச்சியாய்க் கேட்டவன், அவளது முறைப்பில் அடங்கி,

“அதனால என்ன?, ஃப்ரண்ட்ஸ்ங்கக் கிட்ட வாங்கிப்படிக்க வேண்டியது தான? இது ஒரு பிரச்சனையா” என்றவனிடம் முகம் இறுக,

“எனக்கு ஃப்ரெண்ட்ஸே இல்ல” என்றாள் அவள் எரிச்சலுடன்.

“அதுசரி!”

“நாளைக்கு லஞ்ச் ப்ரேக்ல என்னை மட்டும் டெஸ்ட் எழுதச் சொல்லியிருக்குது வாத்தி. புரியாத இத்தனையையும்.. ஒரே நாள்ல எப்பிடிப் படிச்சுக் கிழிக்க முடியும்?” – பேப்பரைப் பார்த்தபடிக் கடுப்பாய்ப் புலம்பியவளைக் கேட்டு, சுற்றும் முற்றும் நோக்கியவன், தூரத்தில் சென்று கொண்டிருந்த ஃபர்ஸ்ட் இயர் பையனை அழைத்து, அவனிடம் பேரம் பேசி கெமிஸ்ட்ரி நோட்ஸை வாங்கி நீட்டியதும், முகம் மலர நன்றி கூறிப் பெற்றுக் கொண்டவள், பரபரவெனப் பக்கங்களைப் புரட்டத் தொடங்க,

அவளது புன்னகையைக் கண்டு, எதையோ சாதித்தத் திருப்தியில் கர்வமாய் முகத்தை வைத்தபடி அவளையே பார்த்து நின்றவனின் தோளைச் சுரண்டி,

“உன் ஆளா-ண்ணே?” எனக் கேட்டான் ஃபர்ஸ்ட் இயர் பன்னாடை.

சட்டெனத் திரும்பி, நமுட்டுச் சிரிப்புடன் நோட்ஸையே நோக்கிக் கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“வாயை மூட்றாக் கொரங்கு” என்று திட்டியவன், அவள் சிரிப்பு உசுப்பேற்றியதில்,

“என் ஆளு இல்ல தம்பி! என் ஃப்ரண்டோட ஆளு” என்றான்.

அவள் வெடுக்கென நிமிர்ந்து முறைத்ததும்,

“என்ன? காகிதத்துல கவி வடிச்ச என் நண்பனோட காதல், உனக்குக் கத்திரிக்காய்த் தொக்கா?, அவன் என்ன ஆனான்-னாவது தெரியுமா உனக்கு?, அவனைப் பத்தி இதுவரை ஒரு வார்த்தையாவது கேட்டியா?” – எனக் குற்றம் சாட்டியவனிடம், முகம் கன்ற,

“நான் அவனைப் பார்க்கலாமா?” எனக் கேட்டாள்.

“எப்போ?”

“இப்பவே??” – நோட்ஸை மூடிப் பைக்குள் திணித்தபடித் தயாரானவளை, மோசஸின் வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டுத் தன் வண்டியில் அவளைத் தொடர்ந்தான்.

ருவரையும் வரவேற்ற மோசஸின் அன்னை, ஜெபமலரின் தாய் குறித்து விசாரித்து, அவளது தந்தையை வசை பாடத் தொடங்க, முகம் மாறாது காத்தபடி அசையாது நின்றவளின் நிலை புரிந்து, “ஆயியியியி! வீட்டுக்கு வந்தா காபி,கலரு, காரா பூந்தின்னு கொடுக்குறதை விட்டுட்டுக் கண்ட பேச்செல்லாம் பேசுவியா?, போ ஆயி அங்குட்டு!” என்று நகர்த்தி விட்டு நண்பனைத் தேடி உள்ளறையை நோக்கி நடந்தான்.

“குப்புறப் படுத்து ***** காத்து வாங்குறது…. என்ன்னாஆஆஆ சொகமாஆஆஆஆ இருக்கு….!” – என்ற முணுமுணுப்பைத் தொடர்ந்து,

“அடி வான்மதிஈஈஈ… என் பார்வதிஈஈஈ….

தேடி வந்த தேவதாசைக் காண ஓடி வா…. ஓஓஓஓ பார்வதிஈஈஈ”

– என சிச்சுவேஷன் அறியாது, சில்மிஷமாய்ப் பாடியவனைக் கேட்டபடி அடக்கப்பட்ட சிரிப்புடன் அறைக்குள் நுழைந்த அலெக்ஸ்,

உள்ளே சிதறிக் கிடந்த போர்பன் பிஸ்கெட், அச்சு முறுக்கு, எள்ளுருண்டை, நறுக்கிய ஆப்பிள், கழுவிய திராட்சை, உரித்த ஆரஞ்சு, பாதிக் கிண்ணத்தில் ஆட்டுக்கால் சூப், நடுவிலிருந்தப் படுக்கையில் அரை நிர்வாணத்தில் மோசஸ், அவன் வாயிலிருந்த alpenliebe மிட்டாய் என… அறையின் கோலத்தை நொடியில் கண்டு கொண்டு, அவசரமாய்த் திரும்பி, ஜெபமலரை வாசலிலேயே நிறுத்தி,

“ரூம் இப்போ A certificate-ல இருக்கு! நான் U certificate வாங்கிட்டு உன்னைக் கூப்பிட்றேன்! இங்கயே நில்லு மக்கா” என்றவன், திரையை இழுத்து விட்டு, நண்பனை மிதித்து எழுப்பி, விவரம் சொல்லிக் கடகடவென அறையை ஒதுக்கி.. அவளை உள்ளே அழைத்தான்.

ஜெபமலரைத் தன் வீட்டில் எதிர்பாராததிலும், அலெக்ஸ் செய்த ஆர்ப்பாட்டத்திலும் வாயிலிருந்த alpenliebe-வைத் துப்ப மறந்திருந்த மோசஸ், அதை ஓரமாய் ஒதுக்கி விட்டு, சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு, அவளைத் தயக்கத்துடன் ஏறிட்டு மெல்ல வரவேற்றுத் தலையசைத்தான்.

“எப்படியிருக்க?” – கவலையாய்க் கேட்டவளின் முகம் பாராது மண்டை ஆட்டியவனுக்கு, அவள் விரட்டி வெளுக்கும் போது வராத வெட்கம், தன் வீட்டில், தன் அறையில், தன் முகம் பார்த்து அமர்ந்திருந்தவளைக் கண்டதும், லிட்டர் கணக்கில் வழிந்தது.

மெல்ல நிமிர்ந்து ஃபேனை நோக்கி விட்டு, நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டவன், அவள் நெற்றியை லேசாய் நோக்கி, அங்கும் வியர்வை பூத்திருப்பது கண்டு,

“வெ..வெளியில இருக்குற டேபிள் ஃபேனைக் கூட எடுத்துட்டு வா டே அலெக்ஸூ… வே…வேர்க்குது போல” – என அவளைக் கை காட்டிச் சொல்ல,

‘அடேயப்பா’ என உதட்டை வளைத்த அலெக்ஸிடம், “வேண்டாம், வேண்டாம்! அது பஸ்ல வந்ததால இருக்கும்! ஒன்னும் பிரச்சனையில்ல” என்றவள் துப்பட்டாவினால் முகத்தைத் துடைத்துக் கொள்ள, எச்சில் விழுங்கிய மோசஸ், அவள் நிமிர்ந்ததும் அவசரமாய்க் குனிந்து கொண்டான்.

“கா…..யம் பெருசாஆஆ?” – மொல்லமாய் வினவியவளிடம்,

“சட்டையைக் கழட்டி முதுகைக் காட்டு டே மோசஸூ” என்றான் அலெக்ஸ் வெடுக்கென.

“டேய்ய்ய்ய் சும்மா இர்றா” என நண்பனைக் கடிந்து கொண்ட மோசஸ்,

“போ டே! போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா” – என்று அவனைத் துரத்தி விட்டு,

“பெரிய காயமெல்லாம் ஒன்னுமில்ல! பத்துப் போட்டதும் ரெண்டு நாள்ல சரியாய்டுச்சு! எங்கம்மை தான், 11 நாளைக்கு வெளிய விடக் வேண்டாம்ன்னு ஃபாதர் சொன்னாருன்னு என்னை இப்பிடி வீட்டுக்குள்ள உட்கார வைச்சிருக்குது”

“……….”

“இ..இதுவும் நல்லாத் தான் இருக்கு! வேளா,வேளைக்குச் சாப்பாடு, தீனி, நித்திரை,டிவின்னு.. ஜாலியா” – என்றவனிடம் லேசாகச் சிரித்தவள்,

“சாரி…” என்றாள்.

“ஐயோ ஜெபா…. அதெல்லாம் வேணாம்!, நான் ஒன்னும் நினைச்சுக்கல” – பதறியவனிடம்,

“இல்ல, அன்னைக்கு.. யார் மேல இருந்த கோபத்தையோ, உன் மேல காட்டி.. இவ்ளோ சிரமப்படுத்திட்டேன்! என்னை மன்னிச்சிடு. நிச்சயம் இதுக்கு எனக்குத் தண்டனை கிடைக்கும்!” என்று அவள் கவலைக் குரலில் கூற,

“ச்சி,ச்சி! என்ன பேசுற நீ! அப்பிடியெல்லாம் எதுவுமில்ல! நானும் அன்னைக்கு.. உன் மனநிலை புரியாம.. லூசு மாதிரி ஏதோ பேசி… ப்ச், விடு ஜெபா.. எனக்கு ஒன்னுமில்ல! நான் நாளையிலிருந்து காலேஜூக்கு வர ஆரம்பிச்சுடுவேன்” – என்றான் சமாதானமாய்.

“அம்மா கிட்ட என்னன்னு?” – என இழுத்தவளிடம்,

“வண்டில இருந்து கீழ விழுந்துட்டோம்ன்னு சொல்லி சமாளிச்சுட்டான் அலெக்ஸூ”

“ஸாரி..”

“ஐயோ போதும் ஜெபா..” – என்று அவன் கூறிக் கொண்டிருக்கையில் கலர் தட்டுடன் உள் நுழைந்த அலெக்ஸ், அவளிடம் ஒன்றை நீட்டி விட்டு,

“நீ சூப்பைக் குடிப்பியாம் டே! வாழ்வு தான் டே உனக்கு!, பேசாம.. நானும் இதுக்கிட்ட அடி வாங்கிட்டு.. இப்பிடி ஜாலியா படுத்துரலாம் போலயே” – என்றவனிடம்,

“ப்ச், சும்மா இர்றா!, ஏற்கனவே அந்தப் புள்ள ஃபீல் பண்ணிட்டிருக்குது” எனத் திட்டியவனைக் கண்டுப் புருவம் உயர்த்தியவன்,

“ஃபீல் பண்ணுதா?, அப்புறம் என்ன?, சட்டு,புட்டுன்னு அந்த லவ் லெட்டரை எடுத்துக் கையில கொடுத்து ‘ஸ்வீட் எண்டிங்’ போட வேண்டியது தான?” எனக் கேட்க,

அரண்டு விழித்த மோசஸ், “வாயை மூட்றா” என முணுமுணுத்துப் பின் சங்கடமான முகத்துடன் ஜெபாவின் புறம் திரும்ப,

இருவரையும் ஒரு பார்வை பார்த்தபடிப் பொறுமையாய்க் கலரை முடித்துக் கோப்பையைக் கீழே வைத்தவள்,

“தப்பு என் பேர்லன்றதால தான், சாரி கேட்க வந்தேன்! இதான் சாக்குன்னு.. சேட்டை விட்டீங்க… லெட்டர் கொடுக்கக் கை இருக்காது” எனப் பல்லைக் கடித்து மிரட்டியதும்,

“ஐய ஜெபா… நான் அன்னைக்குத் தாமிரபரணில தாவும் போதே, கடுதாசியைக் காறித் துப்பிக் காட்டுப்பக்கம் எறிஞ்சுட்டேன்! இனி வாழ்க்கைல நான் காதலே பண்ண மாட்டேன்! சத்தியமா… கர்த்தர் மேல சத்தியமா” – என மோசஸ் பயத்தில் சத்தியப் பிரமாணமெடுக்க,

“ப்ச், என்ன டே சப்ப்புன்னு முடிச்சுட்ட?, பயந்தாங்கோழி! அடப் போ டே” என்ற அலெக்ஸை முறைத்துத் தள்ளி, ஜெபமலரின் மனசு கோணாதபடி நல்லபடியாகப் பேசி, வழியனுப்பி வைத்தான் மோசஸ்.

அவன் வீட்டிலிருந்து வெளியே வந்ததும்,

“எதிர்த்தாப்ல இருக்குற பஸ் ஸ்டாப் மக்கா!, எப்பிடிப் போகனும்ன்னு தெரியும் தான?” எனக் கேட்டபடித் தன் வண்டியின் புறம் நகர்ந்தவனிடம்,

“நீ வீட்டுக்குத்தான போற?, அப்போ என்னைக் காலேஜ்ல இறக்கி விட்ரு” – என அசால்ட்டாய் இடியை இறக்கியவளை, ஆச்சரியமாய் அவன் திரும்பி நோக்குகையில்,

“என்ன?” எனக் கேட்டவாறு அருகே வந்து நின்றாள் அவள்.

மெல்ல, ‘ஒன்றுமில்லை’-யென்பது போல் தலையாட்டியவன், வண்டியில் ஏறியமர்ந்து, படபடப்புடனே சாவியைத் துளையிலிட்டான்.

அவனைப் பின்பற்றி, அவன் தோளைப் பிடித்து இருபுறமும் கால் இட்டு, உரசியபடி அமர்ந்தவளை உணர்ந்து, அவனது முதுகுப்புறம் குதூகலமாகி விட, இது தொடர்ந்தால்.. மூச்சுக்குத் தவிக்கப் போவது உறுதியென மூளை அலறியதில், அவசரமாய் வண்டியிலிருந்துக் குதித்து இறங்கியவன்,

அவனைக் குழப்பமாய் நோக்கியவளின் முகம் பார்க்காமல், “வண்டி ஸ்டார்ட் ஆகல! நீ பஸ்லயே போ” என்றான்.

“ஸ்டார்ட் ஆகலயா??”

“ம்ம்”

“அப்போ நீ??”

“எனக்கு…. ம்க்கும், இங்க இன்னொரு ஃப்ரண்டை பார்க்கப் போகனும். உன்னை பஸ் ஏத்தி விட்டுட்டுப் போய்க்கிறேன்”

-ஒரு கையால் வண்டியைப் பற்றிக் கொண்டு நின்றவனை, இறங்காமல் சந்தேகமாய் நோக்கியவளிடம்,

“என்ன மக்கா?, இறங்கு” என்றான்.

அவள் ஒன்றும் கூறாது, இறங்கி நடக்கத் தொடங்கியதும், ஊஃப்ஃப்ஃப் என வாயைக் குவித்து சத்தமில்லாது மூச்சை வெளியிட்டுத் தன்னைச் சமன்படுத்தியவாறு அவளைத் தொடர்ந்தான் அலெக்ஸ்.

நீல நிறச் சுடிதாரில், நீண்ட பின்னலசைய முன் செல்பவளின் மீதே கவனத்தைப் பதித்துப் பின்னே நடந்தவன், பஸ் ஸ்டாப் வந்ததும் நின்றவளைக் கண்டு, அவசரமாய்ப் பார்வையை மாற்றி,

“இந்த பஸ்லயே ஏறிக்க” என்றான்.

சரியென்று விட்டு இரண்டடி நடந்தவள், நின்று, திரும்பி அவன் முகத்தை முழுதாய் நோக்கி, மெல்லத் தலையசைக்க, பதிலுக்குத் தலையாட்டத் தோன்றாது, அவளையேப் பார்த்தவாறு நின்றவனைத் திரும்பி,திரும்பிக் கண்டபடி பஸ்ஸில் ஏறி அமர்ந்தவள், ஜன்னல் ஓரமாய், முகத்தில் அடித்த மாலை வெயிலில்.. மினுமினுத்தச், சின்னக் கண்கள் வழி பளபளப்பாய்ப் பார்த்தப் பார்வையில்,

அவள் விழி நோக்கி ஈர்க்கப்பட்டு, தன்னிச்சையாய்க் கால்கள் நகர, தானும் அவள் பின்னே… அதே பஸ்ஸில் ஏறியிருந்தான் அலெக்ஸ்.

அவன் ஏறியதும் விரிந்த புன்னகையைப் பரிசாக்கி விட்டு ஜன்னல் புறம் நோக்கியபடி, படபடப்பாக உதடு கடித்துக் கூந்தலை ஒதுக்கிக் கொண்டவளின் செய்கையில்,

‘ஷ்ஷ்ஷ்ஷ்’ எனத் தலையிலடித்துக் கொண்டவன், கடித்தப் பற்களுடன் கண்களை அழுந்த மூடித் திறந்து, “அது சின்னப்புள்ள டே அலெக்ஸூ! என்னா டே பண்ணித் தொலைக்குற” எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

ணை நோக்கிப் பெண் ஈர்க்கப்படுவதற்கும், பெண்ணை நோக்கி ஆண் ஈர்க்கப்படுவதற்கும், விளக்கம் அவசியமா என்ன?,

உயிரியலும், வேதியியலும் மென் பொறியாளர்களுக்குச் சம்மந்தமில்லாத சப்ஜெக்ட் தானென்றாலும், இயற்கை இடை புகுந்ததில், இருவரும் ஒரு கோட்டில் இயங்கத் தொடங்கியிருந்தனர்.

ப்படித் தான் ஒரு நாள், இடைவேளையில் நண்பர்களோடு கேண்டீனில் அமர்ந்திருந்தவன் முன்பு ஒரு காகிதத்தை வைத்து விட்டு, முசுட்டு முகத்துடன் கைக்கட்டித் தள்ளி நின்றவளைத் திகைத்து நோக்கி, பதற்றத்தில் அதைக் கையில் எடுக்காமல், அவளது expression-ஐ analyse செய்ய முனைந்தவாறு,

“என்ன மக்கா?” என்றவனிடம்,

“லவ் லெட்டராம்” என்றாள் அவள் எரிச்சலாக.

அவளது எரிச்சல் குரலில் ஆசுவாசம் கொண்டுப் பொறுமையாக, “யாரு கொடுத்தா?” எனக் கேட்டான்.

“சுதாகர். செகண்ட் இயர் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் பையன்”

-அவள் கூறியதும், உடனிருந்த ஜார்ஜூம்,மோசஸூம்,

“நம்ம க்ளாஸ் பிரபாகரன் தம்பி டே அலெக்ஸூ!, அவனுக்கு என்னத்துக்கு இந்தத் தேவையில்லாத சோலி?, பிரபாகரனை இழுத்துட்டுப் போய், என்னான்னு கேட்டு வருவோம் டே மாப்ள” என அவர்களுக்குள் பேசியவாறு எழுந்து நிற்க,

அவர்களது பேச்சில் கலந்து கொள்ளாது, லெட்டரையும்,அவளையும் மாறி,மாறிப் பார்த்த அலெக்ஸ் அவளிடம்,

“அவன் நல்லாத் தான இருக்கான்?, நீ அவனை ஒன்னும் பண்ணிடலையே?” எனக் கேட்டான்.

‘அதான?, ஆதாரம் இங்க இருக்கு. சேதாரம் எங்க?’- என்றெண்ணியவாறு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட நண்பர்களிருவரும், மெல்லத் திரும்பி ஜெபமலரை நோக்க,

மூக்கை விடைத்து, பல்லைக் கடித்துக் கோபமாய் அவனை ஏறிட்டவள்,

“நான் எதுவும் பண்ணல” என எரிச்சலாய்க் கூற,

அவளைக் கடுப்பேற்றி விட்டதில் பதறி அவசரமாய் எழுந்து அருகே வந்தவன்,

“சரி,சரி கோபப்படாத மக்கா! நீ வழக்கம் போல அவன் முகரை மேலயே இதைக் கிழிச்சுப் போட்டு, ‘ச்சீ போ நாயே’-ன்னு விரட்டி விட வேண்டி தான?” என அக்கறையாய்க் கேட்க,

“அப்போ… நீ அவனை ஒன்னும் பண்ண மாட்ட?”

– அடிக்குரலில் வினவியவளைக் கண்டுத் திகைத்து, வேகமாகத் திரும்பி நண்பர்களை நோக்கி, தன்னைச் சந்தேகமாய்ப் பார்த்தவர்களின் பார்வை கொடுத்த சங்கடத்தில் பிடரியைக் கோதியவாறு, அழாத குறையாக,

“சத்தத்தைக் குறை டி!, அவனுங்க என்னைக் கிண்டல் பண்ணி கண்டமாக்கிடுவானுங்க! நான் உனக்கு என்னாடி பாவம் பண்ணேன் சண்டாளி?, இப்பிடிக் கோர்த்து விடுற?, நான் எதுக்குடி அவனை,எதுவும் பண்ணனும்?, எனக்கா லவ் லெட்டர் கொடுத்தான்?” எனக் கேட்க,

“அப்போ உனக்குக் கோபம் வரலையா?” என்றாள் அவள் குழப்பத்துடன்.

“எனக்கெதுக்கு மக்கா கோபம் வரனும்?” – அவன் நறநறத்தப் பற்களிடையே வார்த்தைகளைத் துப்பியதும்,

நெரித்தப் புருவங்களுடன், பெருவிரல் நகத்தைக் கடித்துத் தரையைப் பார்த்தபடித் தீவிரமாய் யோசித்தவள், பின்,

“நீ நேத்து…. கம்ப்யூட்டர் லேப்ல….. சரண்யா மேம் கூட…. சிரிச்சு,சிரிச்சுப் பேசுனப்போ….. எனக்கு…. கோபம் வந்துச்சு….” என நிறுத்தி,நிறுத்தி ரோபோ குரலில் கூற,

பிளந்த வாயுடன், விழி விரிய அவளை நோக்கியவன், அவள் பார்வையின் வீரியத்தில், அனிச்சையாக ஒரு அடி பின்னே நகர்ந்து, முன் நெற்றி முடியைக் கோதும் சாக்கில் நண்பர்களின் புறம் நோக்கி விட்டு,

“மனசாட்சியே இல்லையா மக்கா உனக்கு?, எங்க நின்னு என்னாடி பேசுற?, என்னை முடிச்சுக் கட்டத் தான், பையைத் தூக்கிட்டு வீட்ல இருந்து கிளம்பி வந்தியா?,” எனப் படபடத்தவன், மீண்டும் நண்பர்களின் புறம் பார்த்துப் பின்,

“பேசாம போ…. மக்காஆஆ” என்றான் அடிக்குரலில்.

பதில் கூறாது விலகி நடந்தவளின் புறம் செல்லத் துடித்தப் பார்வையைக் கவனமாய்த் தவிர்த்து நண்பர்களோடு அமர்ந்து விட்டாலும், அன்று மாலை சுதாகரைத் தனியே பிடித்து ‘தம்பி நீ சுனாமில ஸ்விம்மிங்கைப் போட ஆசைப்படுறப்பா! உடம்பு புண்ணாகாம இருக்கனும்ன்னா, அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துறதை நிறுத்திக்கப்பா’ – எனக் கூறி, மோசம் போன மோசஸின் விழுப்புண்ணை மேற்கோள் காட்டி, எட்ட நிற்குமாறு அறிவுறுத்தியிருந்தான்.

தன் பின் அந்த வார வெள்ளியன்று, வழக்கம் போல் காலேஜைக் கட் அடித்து விட்டு, அவர்களது மல்லிகைத் தோட்டத்திலிருந்தக் குடிலில் அமர்ந்து தீவிரமாய்க் கணக்கெழுதிக் கொண்டிருந்தான்.

பொதுவாக இது போன்ற வேளைகளில், சத்யராஜ் ஹிட்ஸைத் துணைக்கழைத்து ‘தீம்தலக்கடி தில்லாலே’, ‘உம்மா,உம்மம்மா’, ‘தகடு தகடு’ – பாடல்களை ‘Mood lifting’-க்காகவும், ‘வருது,வருது இளங்காற்று’, ‘நடுசாமத்தில சாமந்தப்பூ’ – போன்றவற்றை ‘Mood soothing’-க்காகவும் ஒலிக்கச் செய்யும் அவனது ரேடியோ...

அன்று.. எஸ்.பி.பியோடு கைகோர்த்து….

‘பாரதி கண்ணம்மா! நீயடி சின்னம்மா!

கேளடி பொன்னம்மா! அதிசய மலர்முகம்! தினசரி பலரகம்!’

என இளமை பொங்கும் குரலில்.. காதலாய்.. ‘அவளை’ சிலாகித்துப் பாடுவதைக் கேட்டு..

ஒரு நொடி பேனா வேலை செய்வதை நிறுத்தி விட…. அவரது ‘அதிசய மலர் முகம்’ – என்ற உச்சரிப்பைத் தானும் முணுமுணுத்தவனுக்கு, உள்ளே ஒரு அவஸ்தையான உணர்வு!

கண் மூடி,நெஞ்சை பற்றியவன்,பின் பக்கவாட்டில் திரும்பித் தன் வலது தோளை அழுத்தி, பின் தன் கைக்கும்,தோளுக்குமிடையே உள்ளங்கையை விரித்து, ‘இத்துணூண்டு சைஸ்ல ஒரு முகம்’ என்று முனகி… அன்று தோன்றிய எண்ணத்தை, இன்று செயல்படுத்தும் நோக்கில்.. மெல்லக்கரம் உயர்த்தி… காற்றில்.. அவள் கேசத்தை வருடிக் கொடுக்க…

மறுபடி…. ‘அதிசய மலர் முகம்ம்ம்….’ என உள்நுழைந்த எஸ்.பி.பியின் குரலில், சின்னதாய்ப் புன்னகைத்து, கோதிய கரத்தாலே.. முகத்தில் அறைந்து கொண்டவன், ‘உனக்குப் பைத்தியம் பிடிச்சுடுச்சு டே அலெக்ஸூ!, அது சின்னப் புள்ள டே!’ – எனப் புலம்பிய வேளை, வெளியே,

“மெர்சிக்கும் உன்னை மாதிரி தான் லே, நல்ல அடர்த்தியோட நீள முடியா இருந்துச்சு!, இரண்டு சடை போட்டு, மடக்கிக் கட்டுனாலும், இடுப்புக்குத் தொங்கும்..” – எனத் தன் மகள் குறித்து சிலாகித்துக் கொண்டிருந்த மேரி மாதாவின் குரல் கேட்டு எழுந்து வந்தவன்,

Teal green – நிற தாவணியில், முதுகு முழுக்க விரிந்து படர்ந்திருந்த அடர்க் கூந்தல் காற்றிலாட, ஆட்டுக்குட்டியைத் கையில் ஏந்தி, அதன் நெற்றியில் தன் கன்னத்தைத் தேய்த்தபடி சின்ன ஜிமிக்கி சிணுங்க.. சிங்காரப் புன்னகையுடன் ‘மேய்ப்பர்’ தோற்றத்தில் சாந்தமாய் நின்றிருந்த ஜெபமலரைக் கண்டு, ஆச்சரியம் கொண்டான்.

“உங்கம்மை சொல்றான்னு முடியை வெட்டிப் போடாத!, அவளுக்குத் தலை தேய்ச்சு விட சோம்பேறித்தனம்! நீ வார,வாரம் இங்க வந்துரு. நான் நல்லா சீயக்காய் போட்டுத் தேய்ச்சு விட்றேன்”

“ப்ச், நான் என்ன குழந்தையா ஆயி?, அதெல்லாம் நானே தேய்ச்சுக் குளிச்சுக்குவேன்!, காய வைக்குறது தான் கஷ்டம் ஆயி”

“அதென்னக் கஷ்டம்?, உன் வீட்டுக் கிணத்தடில நின்னா.. தன்னால காய்ஞ்சுட்டுப் போகுது”

“ம்க்கும்! காலைல நான் அவசர,அவசரமா காலேஜ்க்குக் கிளம்புறதா, இல்ல, கிணத்தடில நின்னு காத்து வாங்கிட்டிருக்கிறதா?, போ ஆயி”

-எரிச்சலாய் சிணுங்கிக் கொண்டவள் ஆட்டுக்குட்டியை அணைத்து முதுகை வருடிக் கொடுக்க… என்பு தோல் போர்த்திய அவள் உடல் குத்தியதில், குதித்திறங்கிய ஆடு ‘மேஏஏஏஏஏ’-வென ஓடிச் சென்று விட்டதைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கியவன்,

“வீட்டுக்குப் போய் ஜடை பின்னி வைச்சுக்குறேன் ஆயி!, தூக்குச்சட்டியில போட்டுக் கொடு” – என அவள் கூறுவதையும், அதற்கு மேரி மாதா,

“சட்டியில ஏந்திக்கிட்டுப் போவாங்க!, தலையில வைச்சுக்கிட்டுப் போ லே” – என்றபடி அவளை வாகாய்த் திருப்பி நிறுத்தி, இரண்டு பக்கமிருந்தும் முடியெடுத்துப் பின்னி, ஒரு பந்துப் பூவை அவள் தலையில் நிறைத்து விட்டு, மீதமிருந்ததை தூக்குச்சட்டியில் போட்டு நீட்டுவதைக் கண்டவாறு அருகே வந்தான்.

மகனைக் கண்டதும், “யாருன்னு தெரியுதா டே?, சாமுவேல் ஐயா பேத்தி!, உன் காலேஜ்ல தான் படிக்குதாம்” என்று கூற,

“ஓஹோ” எனத் தலையாட்டியவன், அவனைக் கண்டு கொள்ளாது ஆட்டுக்குட்டியை ஓட விடாமல் தடுத்தபடி இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருந்தவளிடமிருந்துப் பார்வையை விலக்காதிருக்க,

“என்னா டே அப்பிடிப் பார்க்குற?” எனக் கேட்டார் மேரி மாதா.

“ஆட்டைப் பார்த்தேன்ம்மா” – எனக் கூறிச் சமாளித்தவன் வாயில் ஒலி எழுப்பி ஆட்டைத் தன் பக்கம் இழுக்க,

“நான் கிளம்புறேன் ஆயி!, சீயக்காய்த் தூளை ஓசிக்குக் கொடுத்ததுக்கு நன்றி” – என்றவாறு, ஊறுகாய்,மசால்பொடி,சீயக்காய்த்தூள் என மொத்த வியாபாரம் செய்பவர் இலவசமாகக் கொடுத்த 2 கிலோ பாக்கெட்டை ஆட்டிச் சிரித்து குடிலைக் கடந்து, வாசல் நோக்கி செல்வதைக் கண்டு,

“அழகு பெத்தப் புள்ள, எந்தப் பேய் ஏறுச்சோ அந்த எடுபட்டபய மேல!, இப்பிடி நட்டாத்துல விட்டுப்போட்டு போயிட்டான்! களவாணி நாயி” என்று புலம்பியவாறு செடிகளின் புறம் நகர்ந்து விட்ட மேரிமாதாவிற்குப் பதிலாய்,

“பேய் எங்க ஏறுச்சு?, இந்தாளு பேய் மேல ஏறுனது தான பிரச்சனையே!” – என்று முணுமுணுத்துத் திரும்பி.. அவள் சென்ற திசையை நோக்கி நடந்தவன், குடிலின் பின்புறமிருந்து சடாரென வெளிப்பட்டவளைக் கண்டுத் திடுக்கிட்டு நின்று விட,

சுற்றும்,முற்றும் பார்த்து, யாருமில்லையென உறுதி செய்து கொண்டு,

“அதென்ன பாக்கெட்ல?, மிட்டாயா?” எனக் கேட்டாள் அவள்.

சீயக்காய் வாசமும், மல்லிகை மணமும் அவனுக்கு வாடிக்கை தானென்றாலும், அதைத் தாண்டி அவளுக்கே உரித்தான நறுமணத்தோடு அவன் நாசியை ஈர்த்தவளை, அருகே கண்டதில் தன் தடுமாற்றத்தை மறைக்க முடியாது திணறி, அவள் பேசுவது புரியாமல்,

“ம்ம்?” என்றவனிடம்,

“பாக்கெட்ல…” என்றவள் கை நீட்டி, அவன் நெஞ்சைத் தொட முயல, பட்டென அவள் விரல்களைத் தட்டி விட்டு,

“தொடாம பேசு மக்கா” என்று அதட்டினான்.

அவனது ஸ்ட்ரிக்ட் வாய்ஸில் சீண்டப்பட்டவள், அவன் தடுத்தும் கேளாமல், வேகமாய் அவனை நெருங்கிப் பாக்கெட்டுக்குள் கை நுழைத்து மிட்டாயை வெளியிலெடுக்க முனைந்தாள்.

பாக்கெட்டை மறைத்துப் பிடித்தபடி பின்னால் அடியெடுத்து வைத்துத் தடுமாறி சுவரோடு சரிந்தவனோடுத் தானும் சாய்ந்தவள், விழாதிருக்க.. அவன் காலரை இறுகப் பற்றிக் கொண்டு, ஒருவழியாக மிட்டாயைக் கைப்பற்றி,

“Maha lacto-வா?” – என்று கேட்டு, அவசரமாய் wrapper-ஐப் பிரித்து பாதி கடித்து, மீதியை, அவளைத் தாங்கச் சொன்ன வயதையும், தவிர்க்கச் சொன்ன அறிவையும், சமாளிக்க முடியாமல், தடுமாறித் தவித்து, பேரவஸ்தையுடன், வியர்த்து நின்றவனின் வாயில் திணித்தாள்.

“எனக்கு இனிப்புப் பிடிக்காது மக்கா”

“நான் கடிச்சது கூடவா?”

“விலகி நில்லு டி.. ப்ளீஸ்ஸ்ஸ்” – நிமிரப் பார்த்தவனை அசைய விடாது, மேலும் காலரை இறுகப் பற்றித் தன்னை நோக்கிக் குனியச் செய்தவள்,

“அப்புறம் எதுக்கு மிட்டாய் வைச்சிருக்க?, சிகரெட் இழுப்பியா?” – என ரகசியக் குரலில் கேட்க,

முன்னால் சாய்ந்திருந்ததில், தோள் தாண்டித் தொங்கியக் குண்டு மல்லிக்குப் போட்டியாய்க் கொழுத்திருந்தக் கன்னங்களும், நெற்றியிலாடியக் கூந்தலும், பளபளத்தக் கண்களும்,சின்ன ஜிமிக்கியும், வட்ட முகமும், அவனை வெகுவாய் ஈர்த்ததில், அசையாது அவளை வெறித்திருந்தவனின் காதுகளுக்குள் சற்று முன்பு கேட்ட… ‘அதிசய மலர் முகம்..’ ஒலிக்க… அவன் நிலை உணராது,

“சொல்ல்ல்ல்லு” – எனப் படுத்தியவளிடம்,

“அந்த மிட்டாய் வேற டி” – எனக் கூறியவாறு சரியாகக் கால் ஊன்றி, நேராய் நிற்க முயன்றவனின் செய்கையில் எரிச்சல் கொண்டவள்,

“கொஞ்ச நேரம் என்னைத் தாங்கிக்க மாட்டியா?” – என்று கடுப்பாய்க் கேட்க,

“மாட்டேன் டி” – எனத் தானும் கடுப்புடன் கூறிப் பட்டென விலக்கி நிறுத்தியவன்,

“மனுசன் அவஸ்தை புரியாம….” என்று முணுமுணுத்து..

விடைத்த மூக்குடன் நின்றவளின் தோற்றத்தை விரல் நீட்டி சுட்டிக் காட்டி,

“என்னா மக்கா வேசம் இது?, தாவணி,ஜிமிக்கி, மல்லிகைப்பூ-ன்னு?” எனக் கேட்க, குனிந்துத் தன்னை நோக்கியவள், “ஏன் நல்லாயில்லையா?” என்றாள்.

பதில் கூறாது, இடுப்பில் கை வைத்து ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவனிடம்,

“உனக்குப் பிடிக்கலையா?” எனக் கேட்டாள் மீண்டும்.

“இதைக் கட்டிக்கிட்டு, எப்பிடி மட்டையை ஓங்கி அடிப்ப?” – என்றவனுக்குப் பதிலாய்,

தாவணியையும், பாவாடையையும் தூக்கிச் சொருகுவது போல் செய்து காட்டி, கையிலிருந்தத் தூக்கை ஓங்கி, நாக்கை மடித்தவளின் செய்கையில் பக்கென சிரித்தவனைக் கண்டுத் தானும், புருவம் தூக்கி அசடு வழிய, உதடு பிரியாது மென்மையாய்ப் புன்னகைத்தவளை விடாது நோக்கி,

“என்னாடி முகம் இது?” என்று முனகியவன்,

“கொள்ளை அழகா இருந்துக்கிட்டு, மனுசனைக் கொலை பண்ணப் பார்க்குது” – என்று ‘வேண்டாம்,வேண்டாம்’-என அலறிய அறிவின் பேச்சை மீறி, வயது செய்த அலப்பரையில்.. தன்னை மீறி.. மறுபுறம் திரும்பி முணுமுணுக்க…

அவனது உதட்டசைவை ‘ரீட்’ செய்து விட்டவளுக்கு, வெட்கமாய் ஓர் உணர்வு தோன்றியிருக்க வேண்டும்.

காற்றில் கன்னம் தீண்டிய கார்கூந்தலை ஒதுக்க முனையாது, அவன் முகம் பாராமல், எங்கோ நோக்கியபடி… அகத்தின் பாதிப்பு முகத்தில் தெரிந்து விடாது காத்தபடி, நடுங்கும் விரல்களால் தூக்குச் சட்டியை இறுகப் பற்றிக் கொண்டு, படபடவெனக் கண் சிமிட்டி நின்றவளின் அகம் காட்டிய உணர்வில், ஆர்ப்பரித்த மனதை அடக்க முடியாமல், கலங்கித்,திணறி கையாலாகதவனாக நின்றிருந்தான் அலெக்ஸ்.

அதன் பின்பு அவளைக் கண்டாலே ஓடி விடச் சொல்லிய அறிவின் பேச்சைக் கேட்டு அவன் அடங்கியிருக்க, அவனது வயதை சோதிக்கவென்றே அடிக்கடி கண்ணில் பட்டுக் கண்டமாக்குபவளை என்ன செய்வதெனப் புரியாது, திண்டாடிக் கொண்டிருந்தவனை அவள் மொத்தமாய் வீழ்த்திச் சாய்க்கும் நாளொன்று வந்தது.

கார் காலக் காலை வேளை அது!

மூன்று மாதத்திற்கு முன்பு ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த சூரியகாந்தி, இன்று நீளமாய் வளர்ந்து, மஞ்சளாய் மலர்ந்து, முதிர்ந்து, கிழக்கு நோக்கி முகம் காட்டி.. தன் கதிர்க்கரங்களால் முத்தமிட்டக் கதிரவனின் இதழீரத்தில்.. பொன்னாய் ஜொலித்தவாறு, காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அடுத்த 10,15 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும் பூக்கள் என்பதால், மலர்ந்து நிற்கும் நாட்களைக் கண்டுகளிக்கும் பொருட்டு, அந்தக் காலை வேளையில்… வாழைத் தோட்டத்திலிருந்த அன்னையிடம் டீயையும்,உணவையும் கொடுத்து விட்டு இங்கு வருகை தந்திருந்தாள் ஜெபமலர்.

காலை வெயிலும், சூழ்ந்திருந்த பனியும், லேசான குளிரும், இதமான காற்றும்… கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மனதை நிறைத்த மஞ்சள் பூக்களும், சொர்க்கத்தில் சொக்கி நிற்கும் உணர்வைத் தர.. கைகளைக் கட்டிக் கொண்டுப் பூக்களைப் பின்பற்றி, கிழக்கு நோக்கி.. சூரியனிடம் முகம் காட்டியபடிக் கண் மூடி நின்றாள்.

மூடிய விழிகளுக்குள், வெகு அருகே தன் முகம் பார்த்து ‘ஏத்துக்கிறதும்,வெறுக்கிறதும் உன் சாய்ஸ் தான் ஜெபா!, சொல்லு அழைச்சிட்டுப் போகட்டுமா?’ எனக் கேட்டவனின் குரல், உயிர் தீண்டியதில் இதழ் நெளிய மெல்லச் சிரித்தாள்.

மனதிலிருந்த வெறுமை மறைந்து… வெற்றிடம் நிறைந்து.. வாழ்க்கை மீண்டும் உயிர் பெற்றது போலிருந்தது.

சூழலும்,வயதும் மீண்டும் அவன் தோள் சாய அழைத்ததில், கட்டியிருந்தக் கைகளை இறுக்கி.. மனம் மயங்க நின்றவள்..

“இங்க என்ன பண்ற மக்கா?” என்று பின்னால் கேட்டக் குரலில் விழி விரியத் திகைத்து பட்டெனத் திரும்ப..

பச்சை சட்டையும்,வெள்ளை வேட்டியுமாய்.. எதிர் வெயிலில் முகம் சுருக்கி.. அவளைப் பார்த்து நின்றிருந்தவனை பதில் கூறாது நோக்கினாள்.

“ஆள் அரவமில்லாத இடத்துல தனியா நிற்குற?, அறிவில்லையா உனக்கு?”

“நீ எங்க இங்க?”

“கடைக்கு மசால் பொடி எடுத்துட்டுப் போயிட்டிருக்கேன்” – என்று சற்றுத் தள்ளி வண்டியிலிருந்த மூட்டையைக் காட்டியவன், வேஷ்டியை மடித்துக் கட்டியபடி சுற்றும்,முற்றும் நோக்கி… மஞ்சள் வானத்திற்குப் போட்டியாக.. நிலம் சூடியிருந்த மஞ்சள் பூக்களைக் கண்டு.. தானாய் மலர்ந்து விட்ட முகத்தோடு, அருகேயிருந்த மரத்தின் கிளையில் ஏறியமர்ந்தான்.

“காலை சாப்பாடு ஆச்சா?” – அலெக்ஸ்.

“இனி தான்”

“உங்கம்மைக்கு சாப்பாடு கொடுக்க வந்தியா?”

“ம்ம்”

“குளிச்சிட்டியா?”

“ப்ச்”

“இல்ல, கண்ணுப் பூளையும்,கட்டுன கொண்டையுமா காட்டுப் பக்கம் திரியுறியே!, அதான் கேட்டேன்”

“நீ ரொம்ப சுத்த,பத்தமான ஆளு தான்”

“ஏய்ய் நான் குளிச்சுட்டேன் டி”

“ம்க்கும்”- அலுத்துக் கொண்டவளிடம்,

“க்ளாஸ் டெஸ்ட் நல்லா எழுதினியா?, இப்ப எதுவும் கஷ்டமாயில்லையே?” – என விசாரித்தான்.

“அதெல்லாம் இல்ல” – நகத்தைப் பார்த்தபடி முணுமுணுத்தாள்.

ஒரு கையைக் கட்டிக் கொண்டு மறு கையால் கழுத்திலிருந்த டாலர் செயினைத் ஒற்றை விரலால் திருகியபடி அழகே உருவமாய்த் தெரிந்தவளை.. வெகு நாட்களுக்குப் பிறகு வெகு அருகே பார்ப்பதில்.. அவளைத் தவிர்க்கச் சொன்ன அறிவை அலட்சியம் செய்து… கண் நிறைய நிற்பவளை முழுதாய் அளந்தபடி,

“தோடு எங்க மக்கா?” எனக் கேட்டான்.

அனிச்சையாய்க் காதைத் தொட்டவாறு, “கழட்டி வைச்சுட்டேன்” என்றவளிடம்,

“ஏன் கழட்டுன?” என்றான்.

“என்ன கேள்வி இது?, உறங்கும் போது உறுத்தும்.. அதான்”

“ஓஓ!, தினமும் கழட்டி வைச்சிருவியா?”

“……………..”- பதில் கூறாது அவள் திரும்பி முறைத்ததில், பம்மி,

“எங்கம்மை அரைக்குற சீயக்காய் பொடியைத் தேய்க்குறியே! முடி கொட்டலை உனக்கு?” – என டாபிக்கை மாற்றினான்.

“அடப்பாவி”

“நான்-லாம் அண்ணாச்சிக் கடை சன் சில்க் ஷாம்பூ தான் போடுறேன்”

“சீக்கிரமே சொட்டை விழுகப் போகுது உனக்கு”

“ஏன் இப்பல்லாம் நீ சர்ச்சுக்கு வர்றதில்ல மக்கா?” – அதுவரையிருந்த மனநிலை மாறி, அவன் கேள்வியில் முகம் இறுக,

“எனக்குக் கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு” – என உணர்ச்சியற்ற குரலில் கூறியவளைக் கேட்டு..

“உன் இஷ்டம் தான் மக்கா!, தோணுனா வா.. இல்லாட்டி, வேண்டாம்”

“…………..” - சமாதானக் குரலில் கூறியவனுக்குப் பதில் கூறாது நிற்பவளைக் கண்டு..

“ஏய்ய்ய்….. என்ன்ன்ன்ன?” – என்றான்.

ஒரு நொடி அமைதியாய் நிலம் பார்த்து நின்றவள், பின் திரும்பி, நான்கடித் தள்ளி மரக்கிளையில் அமர்ந்திருந்தவனின் முகம் பார்த்து,

“உலகத்துல இருக்கிற எல்லா ஆம்பளைங்களும், எங்கப்பனை மாதிரித் தான் இருப்பாங்களா?” எனக் கேட்டாள்.

“வாய்ப்பு கம்மி தான்”

“நீ?”

“என்ன நான்??”

“நீ எப்படியானவன்?”

“நான் எப்படியானவனா இருக்கனும்ன்னு உனக்குத் தோணுது?” – புருவம் சுருங்க தீவிரமான குரலில் அவன்.

“…………”

“சொல்லு ஜெபா…”

“என்னை…. மட்டும்…. கடைசி…. வரை… நேசிக்குறவனா…….” – அவன் முகம் பார்த்தபடி.. வழக்கம் போல.. நிறுத்தி, நிறுத்தி… நிதானமாய்க் கூறியவளைக் கேட்டு….

சுர்ர்ர்ர்ர்ரெனத் தலைக்கேறிய உணர்வில்.. இதயம் ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்து விட, அகண்டு விரிந்த விழிகளுடன்.. மூச்சு விட மறந்து… அவளை அசையாது நோக்கியவன், ஏக்கமாய், நேசமாய், நீர் தேங்கிய கண்களோடு, தொண்டைக்குழி துடிக்க தவிப்பாய் அவனைப் பார்த்தவளிடமிருந்து, அவசரமாய் பார்வையைத் திருப்பி, அலைபாய்ந்த விழிகளுடன்.. தடுமாறியவனை..

‘கூறு கெட்டவனே! இந்த நொடியை தவிர்க்கத் தானே டா அந்தப் பாடுபட்டேன்!, கடைசில.. அவளை எந்த நிலையில கொண்டு வந்து நிறுத்தியிருக்கப் பார்த்தியா!, இனி என்ன டா பண்ணப் போற?, அவளை எப்பிடி சமாளிக்கப் போற?’ – காறித் துப்பி வசை பாடிய அறிவு..

அதுவரை ஏகாந்த உணர்வில் சில்லிட்டிருந்த சூழலைத் தகிக்கச் செய்து.. நடப்பை உணர்த்தியதில்.. நெற்றியிலிருந்து வடிந்த வியர்வையுடன்.. அவள் முகம் பாராது, கிளையிலிருந்து இறங்கியவனின் அருகே வந்து நின்றவள்,

“நான் பதில் சொல்லிட்டேன்!” என்றாள்.

இதைத் தொடர விரும்பாத தொனியில், “நேரமாச்சு, வீட்டுக்குப் போ ஜெபா” – எனக் கூறி நகரப் பார்த்தவனை மறித்து… அவனது வலது கன்னத்தைப் பற்றித் தன் புறம் திருப்பியவளின் கண்களைப் பாராது..

“தொடாம பேசு மக்கா” – என்று விலக்க முயன்றவனின் செய்கையைக் கண்டு கொள்ளாமல்,

“நான் இதை சொல்லுவேன்னு உனக்குத் தெரியாது?” – எனக் கேட்டாள்.

“நான் இதைத் தவிர்க்க நினைச்சது உனக்குத் தெரியாது?”

“எதுக்கு தவிர்க்கனும்?”

“படிக்குற வயசு டி உனக்கு”

“அதனால என்ன?, காலேஜ் பாடத்தோட சேர்த்து இதையும் படிச்சுக்கிறேன்”

“ப்ச், நீ சின்னப் புள்ள மக்கா”

“அதை, என் முகத்தைப் பார்த்துச் சொல்லு”

“முடியாது ஜெபா”

“ஏன், ஏன் முடியாது?”– காதோரம் நகம் பதிய.. அவன் விழிகளைச் சந்தித்து விடும் நோக்கத்தோடு அழுந்தப் பற்றியவளின், விரல்களைத் தவிர்க்க முயன்றபடி,

“என் வீக்னெஸோட நீ விளையாடுற மக்கா.. தள்ளிப் போடி” - என்றவன் வலுக்கட்டாயமாய் அவளை விலக்கி நிறுத்தித் திரும்பி நடக்க,

“தனியா விட்டுட்டுப் போற என்னை?” – கடித்தப் பற்களுடன் கூறியவளைக் கேட்டு நின்று….’ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ என நெற்றியைத் தேய்த்தவன், அவள் புறம் திரும்பாது,

“வீட்ல விட்டுட்டுப் போறேன். நட….” என்றான்.

“ஒன்னும் தேவையில்ல”

“சரி,அப்ப நீயே போய்க்க” – என்று விட்டு விறுவிறுவென நான்கடி நடந்தவன், பின் நின்று, தலையைப் பின்னே சாய்த்து, பிடரியை அழுந்தக் கோதி, அவளருகே வந்தான்.

கொப்பளித்தக் கோபத்துடன், மூக்கு விடைக்க, ஆத்திரத்தில் விரிந்த தோள்களுடன் மூச்சு வாங்க கைகளைக் கட்டிக் கொண்டு தரையைப் பார்த்து நின்றவளிடம்,

“இதெல்லாம் வெறும் வயசுக் கோளாறு மக்கா!, இப்ப இந்தப் பேச்சே தேவையில்லை! உங்கம்மையை யோசிச்சுப் பார்த்து… முதல்ல படிப்பை நல்லபடியா முடி!” என்று அறிவுரை கூற,

“அப்புறம்?” என அசால்ட்டாய்க் கேட்டாள் அவள்.

“என்ன அப்புறம்?”

“நல்லபடியா படிச்சு முடிச்சப்புறம்?” – நறநறவெனக் கேட்டவளிடம்,

“அதை நாலு வருஷம் கடந்ததும் யோசிப்போம்! இப்ப வீட்டுக்கு நடக்குறியா இல்லையா நீயி?”

“உனக்கென்ன அக்கறை?, போ பேசாம..”

“அப்பிடியெல்லாம் விட்டுப் போக முடியாது மக்கா”

“கூட இருக்கவும் மாட்ட! விட்டுட்டும் போ மாட்ட. என்ன?”

“நீ, உன் மாமன் மவனைக் கட்டிக்கனும்ன்றது தான் உங்கம்மையோட ஆசை மக்கா”

“அதுக்குத் தான் நீ தள்ளி நிற்குறியா?”

“…………..” – என்ன சொல்லிப் புரிய வைப்பதெனப் புரியாது உதட்டைக்கடித்தபடிக் கடுப்பாய் நோக்கினான்.

“அவன் வேற புள்ளையைக் காதலிக்குறான்”

“ஆனா, அந்தப் புள்ள அவனைக் காதலிக்கல”

“படிச்சு முடிச்சப்புறம் காதலிக்குறேன்னு சொல்லியிருக்கு”

“கொஞ்சம் கூட மெச்யூரிட்டி இல்லாத, சின்னப்புள்ளத்தனமான பேச்சு மக்கா இது”

“அதெல்லாம் அவன் பிரச்சனை”

“உன் பிரச்சனையும் தான்”

“எனக்கென்ன பிரச்சனை?”

“நாலு வருசத்துக்கப்புறம், இந்த மாதிரி பேச்சையெல்லாம் பெரியவங்க பொருட்படுத்துவாங்கன்னு நினைக்குறியா?, கல்யாணம் பண்ணி வைச்சா, எல்லாஆஆம் சரியாய்டும்ன்னு சொல்லி, உங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைக்கத் தான் பார்ப்பாங்க”

“என் விருப்பமில்லாமலா?, வாய்ப்பே இல்ல…”

“பிடிக்கல,விருப்பமில்லைன்னுலாம் அப்போ சொல்லிப் பாரு! நிதர்சனம் தெரிய வரும் உனக்கு!”

“சரி, என் விருப்பத்துக்குத் தான் மதிப்பில்லாம போயிடும்!, நீ….?, உன் விருப்பம் என்ன?”

“அதைத் தீர்மானிக்க எனக்கு இன்னும் வயசு வரலை மக்கா”

“சமாளிக்குற”

“ப்ச்”

“உனக்கு நான்-னா…. ரொம்ப இஷ்டம். எனக்குத் தெரியும்”

“……………….”

“உண்மையை ஒத்துக்கோ”

“உங்கம்மா, உன் மாமன், மாமன் மவன்னு உனக்கான வட்டத்தை மீறி நீ வெளிய வர்றது… அத்தனை சுலபம் கிடையாது ஜெபா..”

“எனக்காக…. அந்த வட்டத்தை உடைச்சிட்டு நீ உள்ள வர மாட்டியா?”

“மாட்டேன்!, உங்கப்பன் தோண்டி வைச்சிட்டுப் போன பள்ளத்தை நிறைக்க… அயராம முயற்சி செஞ்சிட்டிருக்க மனுஷியை, என்னால… நோகடிக்க முடியாது…!”

“……………” - பதிலற்றுப் பல்லைக் கடித்து, உள்ளே பொங்கிய துக்கத்தை அடக்கி, உடல் நடுங்க நின்றவளிடம்,

“அவனைக் கட்டிக்கிறது தான் உனக்கும், உன் குடும்பத்துக்கும் நிம்மதியையும், சந்தோசத்தையும் தரும் மக்கா” - மெல்லிய குரலில் கூறியவனிடம், ஆமோதித்துத் தலையசைத்து விட்டு… கட்டியிருந்தக் கைகளை இறுக்கினாள் அவள்.

–நொடியில் கலங்கி, கன்றிச் சிவந்து விட்ட முகத்துடன், அடங்கி,ஒடுங்கி தளர்ந்து, அழுகையைக் கட்டுப்படுத்தி, உதட்டைக் கடித்து நின்றவளின் நிலை பொறுக்காது, நெருங்கி,

“ஜெபா…..” – என்றவனின் அழைப்பில், சட்டெனத் திரும்பி அவன் தோளில் முகத்தை அழுத்தியவளின் செய்கை, அத்தனையையும் திருப்பிப் போட….

‘அறிவாவது… ம*****ராவது’ – என அதுவரைத் தெளிவாய் அவளுக்குப் புத்தி கூறிக் கொண்டிருந்த மூளையை முக்காடு போட வைத்து விட்டு, இதயம் எகிறிக் குதித்து… முன்னே வந்து.. தன் இருப்பை அறிவித்து, அவன் வயதோடு கை கோர்த்ததில்..

அதுவரையிருந்தத் தெளிவு மறைந்து, திணறலும், தடுமாற்றமும் குடி கொண்டதில்.. பிடரியை அழுந்தக் கோதியவன், சத்தமில்லாது சட்டையை நனைப்பவளைக் கண்டு பதறி..

“அழுகையை நிறுத்து மக்கா…. “ என்றான்.

அவன் கையை இறுகப்பற்றிக் கொண்டு மேலும், புதைந்தவளிடம்,

“என்னை…. என்ன தான் டி செய்ய சொல்ற?” என்று பல்லைக் கடிக்க..

உடல் உதற, விக்கி, விம்மியபடி, பதிலற்றுக் கண்ணீர் சொரிந்தவளின் கொண்டையை நோக்கி,

“இப்போ அழறதை நிறுத்தப் போறியா இல்லையா ஜெபா?” என்று அதட்டியவன், மூக்கை உறிஞ்சி, உதடு கடித்துக் கண்ணீரைக் கட்டுபடுத்த முயன்றவாறு நிமிர்ந்தவளின் முகத்தைக் காணச் சகிக்காது… வெந்து செத்த நெஞ்சத்தின் உந்துததில்..

“என்னடி வேணும் உனக்கு?” என கலங்கிப் போன குரலில் கேட்டான்.

‘ஒன்றுமில்லை’ என்பது போல் மறுத்துத் தலையசைத்தபடி, மறுபுறம் திரும்ப முயன்றவளைக் கைப்பற்றித் தடுத்துத் தன் முகம் பார்க்கச் செய்தவனை, பொங்கிக் கலங்கிக் குற்றம் சாட்டிய விழிகளோடுக் கோபமாய் நோக்கியவளின் பார்வையில்,

‘அறிவு,மனது,வயது’- என அனைத்தையும் கிடாசி விட்டுத் தழைந்துத் தரையில் இறங்கி,

“நான் தான் தப்பு! நான் பேசுனதெல்லாம் தப்பு! சாரி… ம்ம்??,”– என எப்படியேனும் அவள் அழுகையை நிறுத்தி, சமாதானம் செய்து விடும் நோக்கத்தோடு.. தன்னை ஒப்புக் கொடுத்தவன்… மேலும்,

“நீ கேட்ட மாதிரி…. கடைசி வரை… உனக்கே,உனக்குன்னு… உன்னையே நினைக்குறவனா இருக்கேன்.. போதுமா?” – என்றதில்,

உயிர் உருக… பொங்கிய அழுகையுடன், கண்களை இறுக மூடித் திறந்தவள்.. பக்கவாட்டில் நின்றவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டு.. அவன் கழுத்தில் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்டாள்.

அத்தனை நாட்களாக அவளைக் காணும் போதெல்லாம் ஆர்ப்பரிப்பும்,ஆரவாரமுமாய் அலறும் இதயம்.. அவள் அணைப்பில் அடங்கி.. ஆசுவாசமடைய… ஆச்சரியப்படும் விதமாக, அச்சூழலை எந்தவித முணுமுணுப்புமின்றி, ஏற்றுக் கொண்டு, அமைதியடைந்து விட்ட மூளை.. கொடுத்தத் திருப்தியில்.. பெருமூச்சை வெளியிட்டு.. கண் மூடி… அவள் கொண்டையில் கன்னத்தைச் சாய்த்தவனுக்கு அந்நொடி… வேறு சிந்தனைகளேயில்லை!

அதன் பின்பு, ஏனென்றே புரியாது, விடாது அழுது தீர்த்தவளைத் தட்டிக் கொடுத்து, சமாதானம் செய்து.. வீட்டில் விட்டு.. வேலையைத் தொடர்ந்தவனுக்கு… அன்று மாலை தங்களது தோட்டத்தில் பெர்சியாவைப் பார்க்கும் வரை வேறு சிந்தனைகளே இல்லை தான்!

ரவேற்று நலம் விசாரித்துக் குடிலில் ஒதுங்கி விட்டவன், ‘சூசை தன்னைத் தேடி வந்து மறுவாழ்வு தரும் படி கேட்டுக் கெஞ்சியதையும், ஜெபா தன் மகள், தான் அவளைக் காண எவரும் தடை சொல்லக் கூடாதென மிரட்டியதையும், அந்த நாள் வரை அவர்களது நில,புலன்களில் சம்பளமில்லாது வேலை பார்த்ததற்கு செட்டில் செய்யும் படி சுயநலமாய்க் கூறியதையும், அவரால் ஊராரின் முன்பு மேலும்,மேலும் அசிங்கப்பட விரும்பாமல், ஜெபா அறியாது அண்ணனும், தங்கையுமாக சேர்ந்து வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்து, விவாகரத்துப் பத்திரத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டு விரட்டியடித்ததையும், கண்ணீரும்,கம்பளையுமாக பெர்சியா கூறியதைக் கேட்டு, குற்ற உணர்ச்சி விஸ்வரூபமெடுத்ததில்… மறுபடி மூளைக்கும்,மனதிற்குமிடையே மாட்டிக் கொண்டுத் திணறத் தொடங்க,

இது தான் சாக்கென வெளி வந்த அறிவு, ‘நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம.. நிலைமையை மேலும்,மேலும் மோசமாக்கிருக்கியே!, நீயெல்லாம் மனுஷனா… த்தூஊஊஊ! பெர்சியா, curse பண்ணா…. நீ பரதேசியா திரிவியே தவிர, பரிசுத்த ஆவியாக மாட்ட!’ – என்று மேலும் அவனைத் தூண்டி விட்டதில்….

‘தப்பு,தப்பு… இதெல்லாம் ரொம்பத் தப்பு! அவ சின்னப் புள்ள! அப்பன் பண்ணுன துரோகத்தைத் தாங்கிக்க முடியாம, அவரு போன சோகத்தைக் கடக்க வழி தேடி… துக்கத்தைப் பகிர்ந்துக்க ஆள் தேடி, தனக்கென்ன தேவை, என்ன வேணும்ன்ற புரிதல் இல்லாம தடுமாறித் தவிக்குறா! ஆனா, தடிமாடு உனக்கென்ன டா கொள்ளை வந்துச்சு? நீ ஏன் தடம் மாறுன?, இதைத் தொடர்ந்தா…. உணர்ச்சி வசப்பட்ட நிலையில, உருக்குலைஞ்சு கிடக்குறவ நிலையை, நீ.. உபயோகிக்க நினைச்ச மாதிரி ஆகிடாதா? அவ்ளோ கேவலமானவனா நீ?’ – எனத் தன்னைத் தானே சாடிக் கொண்டான்.

பெர்சியாவின் அழுகை, ஜெபமலரின் கண்ணீரை பின்னோக்கித் தள்ளியதில், இதயமும்,மூளையோடு கை கோர்த்து.. அவனைக் கிழித்துக் கூறு போட.., கடைசியில் அறிவு, மனதை வென்றதில்… இரண்டு நாள் கழித்துத் தோட்டத்தில் அவனை சந்திக்க வந்தவளிடம், ‘இதைத் தொடர வேண்டாம்’ எனக் கூறி சரணடைந்து விட்டான்.

வன் கூறியதன் தாத்பரியம் புரியாமல், புருவம் சுருங்க, “என்ன சொல்ற?” எனக் கேட்டவளிடம்,

அவள் முகம் பாராது, “இதெல்லாம்…. ஒத்து வராது ஜெபா.. நாம இத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” என்றான்.

மலர்ந்த சிரிப்போடு, மகிழ்ச்சியும்,துள்ளலுமாய் அவனைக் காண விரைந்தோடி வந்தவளின் முகம், அவன் பேச்சிலும்,பாவனையிலும் வாடிக் கருத்து விட,

“எதை நாம தொடங்குனோம், இப்ப முடிச்சுக்கிறதுக்கு?” – என்று வெடுக்கெனக் கேட்டதில்… அரண்டு…

“கோபப்படாம நான் சொல்றதைக் கேளு மக்கா” – கெஞ்சலாய்க் கூறியவனை அழுத்தமாய் நோக்கியவாறு, அவள் அசையாது நிற்க,

அவள் பார்வை பீதியைக் கிளப்பியதில் பயந்து வந்தாலும்,

“இது… சாத்தியப்படாது ஜெபா…” – என்றான் மெல்ல.

“ரெண்டு நாள்ல தெரிஞ்சுடுச்சா?”

“முன்னாடியே தெரியும்! நீ தான் கேட்கல”

“நான் கேட்கல???”

“ப்ச், தப்பு என் மேல தான் மக்கா.. நீ அழுது கரைஞ்சதைப் பார்க்க முடியாம, மனசு மாறி, ஏதேதோ பேசி, முடிச்சு வைக்க வேண்டியதை, நீட்டிச்சுட்டேன்”

“இப்பவும் நான் அழுது,கரைஞ்சா… மறுபடி மனசு மாறிடுவியா?”

“இல்ல.. இந்த முறை நான் தெளிவா இருக்கேன்”

“அப்போ என் முகத்தைப் பார்த்து பேசு” – மூக்கை விடைத்தவளிடம்,

“நான் ரிஸ்க் எடுக்க விரும்பல” – விறைப்பாய்க் கூறினான் அவன்.

“தொடை நடுங்கியா டா நீ?, கோழையா நீ?, யாருக்குப் பயப்படுற?, எதுக்குப் பயப்படுற?, பொம்பளப்புள்ள நான்… வெட்கத்தை விட்டு என் மனசை உடைச்சு சொல்றேன்ல?, உன்னால ஏன் எதையும் வெளிப்படையா பேச முடியல?”

“ஏற்கனவே சிக்கலா இருக்குற வாழ்க்கையை, நீ மேலும்,மேலும் சிக்கலாக்குறதுக்கு நான் துணை போக முடியாது ஜெபா… உள்ள நிலைமை தெரிஞ்சும்,புரிஞ்சும்.. சுயநலமா நடந்துக்க… என்னை மனசாட்சியில்லாத ஆள்-ன்னு நினைச்சியா?, நம்ம வாழ்க்கை நம்மைச் சுற்றி மட்டும் இயங்குறதில்ல ஜெபா” – மேலும் ஏதோ கூற விழைந்தவனை,

“அட்வைஸ் பண்ணாத, பெரிய புடுங்கியாட்டம்….!பத்திக்கிட்டு வருது!” என சீறியவளிடம்…

“வாயை உடைச்சிடுவேன் மக்கா…. மரியாதை இல்லாம பேசுனேனா…” – எனத் தானும் எகிறினான் அவன்.

“ஓஓஓ! கோவம் வேற வருதா துரைக்கு…. எங்க, தைரியமிருந்தா… கை வைச்சுப் பாரு பார்ப்போம்”

“அதோ இருக்குப் பாரு.. தென்னை மட்டை… அதை வைச்சு என் முதுகைக் கூட பிரி..! ஆனா… இதை விட்ரு” – சலித்துக் கொண்டவனின் பாவனையில்… விழி கலங்கத் தொடங்க… வேகத்துடன் அவனை நெருங்கி, இரு கைகளாலும் அவன் சட்டைக் காலரைப் பற்றி,

“என்ன டா விட்ரு?, என்ன விட்ரு??, ம்ம்?, எதை விடச் சொல்ற?, எப்பிடி விடச் சொல்ற?, அப்பன் இல்லாம வாழ்றது அப்பிடியொன்னும் கஷ்டமில்லன்னு சொன்னியே, அது மாதிரி நீயில்லாம வாழ்றதும் சுலபம் தான்னு சொல்லப் போறியா..? இது மாதிரி எத்தனை உறவை.. இழந்து.. விலகி… நான் கஷ்டமில்லாம வாழனும்.. சொல்லு??” – என்று ஆத்திரமும், ஆதங்கமுமாய் சத்தமிட,

பரிதவிக்கும் அந்தப் பால் முகத்தைக் காணச் சகிக்காது… கம்மிய குரலில்.. “நான் உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன் ஜெபா.. இது ஒத்து வராதுடி” என்றான் அவன்.

“ஒத்து வராட்டியும் பரவாயில்ல… வா காதலிப்போம்..”

“ப்ச், ஜெபா…”

“நான் விலகிப் போனா… உனக்கு எந்தப் பாதிப்புமில்லையா?”

“இல்ல! நான் உன்னை அப்பிடியெல்லாம் யோசிச்சதே இல்ல ஜெபா…”

“…………….”

“ஈர்ப்பைத் தாண்டி எதையும் யோசிக்க என்னை, நான் அனுமதிச்சதே இல்ல டி”

“அப்புறம் ஏன் அன்னைக்கு ஒத்துக்கிட்ட?”

“தப்புத் தான் டி! நீ அழுததும் சமாதானப்படுத்த, யோசிக்காம உளறிட்டேன்!, போதுமா?”

அலட்சியமாய் அவன் கூறுவதைக் கேட்டு, ஆத்திரம் தலைக்கேறினாலும், நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, தத்தளிக்கும் மனது கொடுத்தத் தடுமாற்றத்தில், நெற்றியைப் பற்றிக் கொண்டு, தலை குனிந்து நின்றவள்,

பின் நிமிராமல், அழுந்த மூடிய விழிகளுடன்,

“நீ சொன்ன அத்தனை காரணத்தையும் நான் ஏத்துக்கிறேன். என் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” – என்றாள்.

“கேளு”

”என்னை நீ விரும்புறியா?, இல்லையா?” – அடர்த்தியாய் வெளிவந்த குரலில்,

குனிந்திருந்த அவள் சிகையைக் கண்டவாறு, ஆழ் மூச்சை வெளியிட்டு, விழி மூடித் திறந்தவன்,

“என் கிட்ட இதுக்கு.. பதில் இல்ல ஜெபா” என்று கூறியதில்,

பட்டெனத் திரும்பி, அவன் முகம் பாராது விறுவிறுவென நடக்கத் தொடங்கியவள், ஒரு கட்டத்தில் அவன் விழிகளிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் மறைந்தே விட்டாள்.

தன் பின்பு ஃபைனல் இயர் ப்ராஜக்ட் என்ற பெயரில் சென்னையில் தலை மறைவாகி விட்டவன், திரும்பி வந்த போது.. மனமாற்றத்திற்காக அவள் மதுரை சென்று, அங்கிருக்கும் கல்லூரியில் படிப்பைத் தொடர்வதாகக் கேள்விப்பட்டு, ‘இதுவும் நல்லதுக்குத் தான்’ என்று நினைத்துக் கொண்டான்.

வயது கூடுகையில், அனுபவம் பெருகுகையில், இவையனைத்தையும் சிறுபிள்ளைத்தனமென ஒதுக்கி,ஓரங்கட்டி விடுவாளெனத் தீவிரமாய் நம்பினான்.

பின் ஐடி, சாஃப்ட்வேர், ஆன்சைட் என வாழ்வு மாற்றம் பெற்று, மேரி மாதாவின் மசால் பொடி பிசினஸிற்கு மூடு விழா நடத்தி, நில,புலன்களைக் குத்தகைக்கு விட்டு அவரை ஃப்ரீ ஆக்கி விட்டு, சொந்த ஊருக்கு வருகை தருவதே வருடத்திற்கொரு முறை தான் என்றாகிய பிறகு, ஜெபமலர் குறித்த எண்ணங்களனைத்தும் மறந்து, மறைந்தே விட்டதாகத் தான் எண்ணினான், மறுபடி Alumni meet-ல் அவளைக் காணும் வரை!