4. மோசம் போன மோசஸ்!

டையில் பாக்ஸரும், மேலே மஞ்சள் நிறத்தில் angel sleeve வைத்தக் கருப்பு சொக்காயும், தோளளவு தொங்கும் சுருள் முடிகளோடு தலையில் விக்கும்(wig), காலில் ஆரஞ்சு வண்ண சாக்ஸூடன் ஹை-ஹீல்ஸூம், முகத்தில் அழுத்தி வரையப்பட்டப் புருவமும், அரும்பு மீசையுமாய், சிகப்பு சாயம் பூசியிருந்த உதட்டில் நகத்தைக் கடித்தபடி, பெண் வேடத்தில், பரபரப்புடன் நின்றிருந்தான் 21 வயது மோசஸ். ‘Frill’ வைத்த மஞ்சள் நிற ‘bodycon’ பென்சில் ஸ்கர்ட் ஒன்று, discomfort-ஐக் கொடுத்ததால் கீழே distance-ல் கிடந்தது.

சற்று முன்பு தான் ‘ஆல் டே.. ஜாலி டே… கவலைக்கெல்லாம் ஹாலி டே’- வென காலேஜ் கல்ச்சுரல்ஸில் ‘வடிவேல்’ கெட் அப்பில் அலெக்ஸூடன் ஆட்டம் போட்டிருந்தான்.

கவனம் முழுக்க நடனத்தில் சிக்கியிருந்தாலும், முன் வரிசையில் அமர்ந்திருந்த முதலாமாண்டு மாணவிகளில், உப்பிக் குவிந்தக் கன்னங்களோடு, சின்னக் கண்கள் மின்ன கலகலவெனப் புன்னகைத்திருந்தவளின் புறம், அகம் சிதறியதில், அலட்டலான தன் பெண் வேடத்தை சற்று ஆடம்பரமாகவே காட்சிப்படுத்தி விட்டு மேடை இறங்கியிருந்தான்.

பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில், குறையாத புன்னகையுடன் தன்னையே நோக்கியவாறு கைத்தட்டிக் கொண்டிருந்தவளை வெட்கமாகப் பார்த்து, சுருள் முடியால் மீசையை மறைக்க முயன்று தோற்று, பின் மெல்லத் தலை ஆட்டி அவளது பாராட்டை ஏற்று, ஆங்கிலேயே பாணியில் இடை வரை குனிந்து நன்றி கூறி விட்டுத் துள்ளிக் குதித்து உள்ளே ஓடி வந்திருந்தான்.

அவனைக் ‘கோமாளி’-யாக எண்ணிப் புன்னகைத்தவளை ‘காதலி’-யாக வரித்துக் கொண்டவன், இன்று அவளிடம் தன் மனதைக் கூறியே ஆக வேண்டுமென அடம் பிடித்த மூளையைக் கட்டுப்படுத்த முடியாமல், நகத்தைக் கடித்துத் துப்பியபடி படபடப்புடன் நின்றிருந்தான்.

அப்போது, ‘life is a life is a game show…’-எனப் பாடியபடி அந்த வகுப்பறையினுள் நுழைந்த ஜார்ஜ், முதுகு காட்டி நின்றிருந்த மோசஸின் பாக்ஸரில் அடியைப் போட்டு, “என்ன பேக் தூக்கலா இருக்கு?” – எனக் கேட்டவாறு, மேஜை மீதமர்ந்து, இரு விரல்களால் அவனது இதழைப் பற்றி “உன் உதட்டோர சிவப்பே….” எனப் பாட்டை மாற்ற, எரிச்சலுடன் அவன் கையை விலக்கியவன்,

“மாப்ள, இன்னைக்கு எப்பிடியாவது என் லவ்வை அவக்கிட்ட சொல்லியே ஆகனும் டே” என்றான் அழாக்குறையாக.

“நீ தான் ஏற்கனவே 2 தடவை சொல்லி செருப்படி வாங்கிட்டியே?”

“ப்ச், டேய்ய்”

“தடவை 1: குருத்தோலை ஞாயிறு அன்னைக்கு ‘ஓசன்னா, ஓசன்னா’-ன்னு பாடிட்டு, தான் பாட்டுக்குப் போயிட்டிருந்தவ, குறுக்கால போய் உன் குறுகிய மனசைத் திறந்து காட்டி, குருத்தோலையாலேயே குறுக்குல அடி வாங்கிட்டு வந்த”

“………”

“தடவை 2: கிறிஸ்துமஸ் தாத்தா வேசம் கட்டி, வீட்டுக்கே போய் லவ் லெட்டர் கொடுத்ததுல, கோபப்பட்டு அவ விரட்டின வேகத்துக்கு, அவ வீட்டுக் கிணத்து மேல நின்னு ‘தகிடததிமி, தகிடததிமி’-ன்னு ஆடி, அவளுக்குப் பயந்து உள்ள குதிச்சு, மூச்சடக்கி, அவ போனதுக்குப்புறம் உயிர் பிழைச்சு, தப்பிச்சு வந்த”

“………” – நகம் கடிப்பதை நிறுத்தி விட்டு உச்சுக் கொட்டி, தன் சிகப்பு உதட்டைப் பாவமாகப் பிதுக்கினான் மோசஸ்.

“அப்பிடி என்னா டே அவக்கிட்ட இருக்கு?, ஈர்க்குச்சிக்கு சுரிதார் மாட்டி விட்ட மாதிரி ஈஞ்சு,தீஞ்சு போய் இருக்கா”

-அலுத்துக் கொண்டவனிடம் “என்னாவாம் டே” எனக் கேட்டவாறு நெற்றியிலும்,கழுத்திலும் வழிந்த வியர்வையைத் துண்டால் துடைத்தபடி உள்ளே வந்தான் அலெக்ஸ்.

“முகம் டா ஜார்ஜூ! முகம் டா! முகத்தைப் பார்றா” – அலெக்ஸின் கேள்வியை அலட்சியம் செய்து நண்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் மோசஸ்.

“அந்த முகத்துல என்னத்த டே கண்ட? 50 பைசா coin மாதிரி இருக்குது!”

“அந்த coin-க்குள்ள கணக்கா அமைஞ்சிருக்கிற கலைநயத்தைப் பாரு டே!”

“என்னா கலைநயம்?” – இப்போது அலெக்ஸூம் வம்பு செய்யத் துவங்க, ரோஷம் கொண்டவன், கூந்தலைப் பின்னே ஒதுக்கி விட்டு, நண்பர்களை நோக்கித் தீவிர பாவனையுடன்,

“அழுத்தம்,திருத்தமான புருவம், சின்னக் கண்ணு”

“மாறு கண்ணாட்டம் இருக்குன்னு சொன்னியே டே அலெக்ஸூ?”

“அது அவனுக்கு. அவளுக்கில்ல” – மோசஸ்.

“செருப்புப் பிஞ்சிடும் டே” – அலெக்ஸ்

“ப்ச், முழுசா சொல்ல விடுங்க டே பீக்காளிகளா!, அளவான மூக்கு, அழகான உதடு, அந்த சிரிப்பு இருக்கே!! சொர்க்கம் டே!”

“அதை ஒத்துக்கிறேன் டே! சிரிக்கும் போது நாடியோரமா முடிச்சு விழுந்தா மாதிரி ரெண்டு புள்ளி தெரியுது! அதுமட்டுமில்லாம, கன்னம் ரெண்டும் உப்பி, கண்ணு உள்ள போயிடுது! இப்பிடி,இப்பிடித் தான் சிரிக்குறா” -எனக் கண்ணைச் சுருக்கிக் காட்டி உதட்டை விரித்த அலெக்ஸைக் கண்டு காண்டாகி, தலையிலிருந்த wig-ஐக் கழட்டி, சுரீர்,சுரீரென முதுகிலேயே அடித்தான் மோசஸ்.

“ஏய்ய்ய், எரியுது!, எரியுது டே எருமை” – என அங்குமிங்கும் ஓடியவன்,

“உன் ஆளு அழகி தான் டே! ஆனா, எப்பப் பாரு டீயா குடிச்சுத் தள்ளுறதை நிறுத்திட்டு சோத்தைத் திங்கச் சொல்லு, கொஞ்சமாவது உடம்பு வைக்கட்டும்! பார்க்குற நேரமெல்லாம் கேன்டீன்ல டீ குடிச்ச மயமாத் தான் இருக்குறா!, மட்ட மத்தியானம் 12 மணிக்கு, மொட்டை வெயில்ல, வியர்க்க,விறுவிறுக்க டீ குடிக்குறா மாப்ள!” என்றான்.

“உனக்கென்ன டா?, உங்கொப்பன் வீட்டுக் காசா?” – எகிறியபடி மோசஸ்.

“அதுவும் உருளைக் கிழங்கு பஜ்ஜி போடுற அன்னைக்கு ஒரே நேரம் 2 டீ குடிக்குறா டே!, 4 பஜ்ஜியை சாம்பார்,சட்னில ஊற வைச்சு, லபக்கு,லபக்குன்னு வாய்ல போட்டு, சுடச்சுட டீயை சர்ர்ர்ர்ருன்னு உறிஞ்சுவா பார்க்கனும்…”

“டேய்… நீ அவ வாய் பார்க்கத் தான் கேன்டீன் போறியா?, அவ என் ஆளு டே” – கத்திய மோசஸின் வார்த்தைகள் காதில் விழாதவாறு,

“மத்தியானம் டிபன் டப்பாவுல வெள்ளை சோத்தைப் பார்த்தா, மூஞ்சியைக் கோணிக்குறா!, தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம்ன்னு கலரா இருந்தா, சாந்தமா சாப்பிட்டுக்கிறா”- தொடர்ந்தான் அலெக்ஸ்.

“எனக்குக் கூட இதெல்லாம் தெரியாதே டே! நீ என்னத்துக்கு டே அவளை இப்பிடி நோட் பண்ணியிருக்க?, நண்பனுக்குத் துரோகம் பண்றியா டே?” – அழத் துவங்கி விட்டான் மோசஸ்.

“ஏய்ய் ச்சீ ப்பே அந்தப் பக்கம்” -என அவனைத் துரத்தி விட்ட ஜார்ஜ்,

“நீ மேல சொல்றா அலெக்ஸூ” என்றான்.

“அவ போட்டு வர்ற சுடிதார்ல ‘neck design’ எல்லாம் பார்த்தியா?, variety-ஆ இருக்கும்! அவளே தைப்பாளாம் டே” -என புறணி பண்டிட் ஆக மாறி விட்ட அலெக்ஸிடம்,

“ஆமா, இந்த slit-ல கூட, பார்டர் போட்ட டிசைன் வைச்சு..” –என எழுந்து நின்று, தொடைப்பகுதியைக் காட்டி சிலாகித்துக் கூறிய ஜார்ஜைக் கோபமாக நோக்கிய மோசஸ், ‘நீயுமா டே’ – என வார்த்தைகளற்று நிற்க,

“அவளுக்கு மட்டுமில்ல, அவ தெருவுல குடியிருக்கிறவங்க, அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்கன்னு அத்தனை பேருக்கும், படிக்குற நேரம் போக, மீதி நேரமெல்லாம் சுடிதாரு, ஜாக்கெட், பாவாடை,சட்டைன்னு தைச்சுக் கொடுப்பாளாம் டே” என்றான் அலெக்ஸ்.

“பரவாயில்லையேப்பா!, படிக்குற வயசுலயே சம்பாதிக்கவும் செய்யுது! மோசஸூ, உஷாரா இருந்துக்க டே!, அடுத்த முறை கத்திரிக்கோலால உன்னை கட் பண்ணி, ஊசி,நூலால தைச்சுடப் போறா” – என்று ஜார்ஜ் கூறிக் கொண்டிருக்கையில்,

“எப்பிடி டே அவளைப் பத்தி இவ்ளோ டீடெயில்ஸ் தெரிஞ்சு வைச்சிருக்க?” – நண்பனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியபடி மோசஸ்.

“ப்ச், துணைக்கு வா-ன்னு அவளை நோட்டம் விட, எந்நேரமும் என்னை கூட இழுத்துட்டு சுத்துனதே நீ தான டே வென்று?, நீ அவ முகத்தையே வெறிச்சிட்டிருப்ப!, நான் பொழுது போகாம, அவ என்னா செய்றான்னு வேடிக்கை பார்த்திட்டிருப்பேன்”

“இனி பார்க்காத” – கடுப்புடன் காய்ந்தவனிடம்,

“ஹ்ம்” – பதில் சொல்லாது தோளைக் குலுக்கினான் அலெக்ஸ்.

“பார்க்க மாட்டேன்னு சொல்லு டே! எ..எ..எப்பிடி டே நெக் டிசைன் வரைக்கும் பார்த்திருக்க?, நெஞ்சு எரியுது டே எனக்கு!, நண்பனா டே நீ?, neck-ஐ மட்டும் தான் பார்த்தியா? இல்ல………”

“ம்க்கும், அங்க பார்க்க என்ன இருக்கு?” – முணுமுணுத்தபடி ஜார்ஜ்

“டேய்ய்ய்ய்ய்ய்ய்”

“ப்ச், ஷால் போட்டு மறைச்சிருக்கா டா” – அலெக்ஸ்.

“அதுல ரொம்ப வருத்தமோ உனக்கு?”

“ஏன், உனக்கில்லையா?”

“நண்பர்களா டே நீங்கல்லாம்?, அவ உங்களுக்குத் தங்கச்சி மாதிரி டே”

“அவளுக்குப் பயந்து கிணத்துல குதிச்சும், உன் கான்ஃபிடன்ஸ் குறையலயே டே மோசஸூ?” – ஜார்ஜ்.

“நான் ஒன்னும் அவளுக்குப் பயந்து குதிக்கல”

“ஆமா, அவ மாமன் மவனுக்குப் பயந்து தான் குதிச்சான்” – அலெக்ஸ்.

“ஓஓஓ!! இந்தக் காதல் கதைக்கு வில்லன் வேறயா?”

“நீ நிறுத்து!, அவனுக்கு ஏற்கனவே குறிஞ்சி நகர்ல ஆள் இருக்கு. நான் விசாரிச்சுட்டேன்”

“அப்ப உன் ஆளு ஃப்ரீ-ஆ தான் இருக்கா?” – வில்லத்தனமாகக் கேட்டவனின் தோளில் குத்தி,

“உதவி பண்ணச் சொன்னா, உபத்திரவம் பண்றீங்களே டே!, நான் இன்னைக்கு அவளை நேர்ல சந்திச்சு, தைரியமா முன்ன நின்னு, கண்ணைப் பார்த்து, எப்பிடியெல்லாம் அவளைக் காதலிக்குறேன்னு, கவிதையா சொல்லனும் டே! ஹெல்ப் பண்ணுங்க டே” என்று கதறினான் மோசஸ்.

“சரி, அழுகாத! பஸ் ஸ்டாப்ல வைச்சு, படபடன்னு உன் மனசைக் கொட்டிடு”

“எதுக்கு, அவ ப்ரின்சிபல் கிட்ட போட்டுக் கொடுக்குறதுக்கா?” – அலெக்ஸ்.

“செஞ்சாலும் செய்வா!, வேற லொகேஷன் சொல்லு டே”

“அவங்க வீட்டு ஏரியா?” – ஜார்ஜ்.

“மாமன் மவன், மடிச்சுக் கட்டுன வேட்டியோட மல்யுத்தம் பண்ண வருவான்” – அலெக்ஸ்.

“அந்த ம******டி என்னா டே குத்த வைச்சக் குமரி மாதிரி, எந்நேரமும் வீட்டுக்குள்ளயே உட்கார்ந்து கிடக்குறான்?, அவன் ரொம்ப dangerous guy டே ஜார்ஜூ!, வேற,வேற?”

“இன்னிக்கு ஹாஃப் டே லீவ்ன்றதால, மத்தியானம் அவ மாந்தோப்புக்கு போறதுக்கு வாய்ப்பிருக்கு” – அலட்டிக் கொள்ளாது அலெக்ஸ்.

‘அதெப்பிடி உனக்குத் தெரியும்’ என்ற கேள்வியை முகத்தில் காட்டியபடி முசுட்டு முகத்துடன் மூக்கை விடைத்து நின்ற மோசஸிடம்,

“இரு இரு விளக்கம் வைச்சிருக்கேன்! அவசரப்பட்டு சந்தேகப்படாத!” என்றவன் தொடர்ந்து, “ஒரு நாள், காலேஜ் ஹாஃப் டே தானன்னு நான் என் பெரியப்பா மவனோட படத்துக்குப் போயிட்டு மத்தியான நேரம், ரிங் ரோடு வழியா வீட்டுக்கு வந்திட்டிருந்தேன். டீ குடிக்கலாம்ன்னு வண்டியை நிறுத்துனா, டீக்கடையில இவன் ஆளு, அவ அப்பனோட நிற்குறா! வயர் கூடை ஃபுல்-ஆ வடை டே!, வாய்ல வெங்காய வடை, கையில கீரை வடை! தூக்கு நிறைய டீ வேற! டீயும்,வடையும் தான் அவ முழு நேர உணவு போல டே! அப்புறம், அவங்கப்பனோட வண்டியில தோப்புக்குள்ள இறங்கிட்டா! அது அவங்க தாத்தன் தோப்பாம்! இவங்கப்பன், அவ மாமனோட சேர்ந்து பார்த்துக்கிட்டிருக்கான் போல! அதனால இவ வார,வாரம் வெள்ளிக்கிழமை தோப்புல தான் இருப்பாளாம்!” – எனப் பதில் கூறினான்.

“அவ அப்பன் எப்பிடி டே அலெக்ஸூ?” – கேள்வியின் நாயகனாக ஜார்ஜ்.

நண்பனிடம் கடைக்கண் பார்வை சென்று வர,

“அதெல்லாம் எனக்கு எப்பிடித் தெரியும்?” எனத் தோளைக் குலுக்கினான் அலெக்ஸ்.

நெஞ்சு குலுங்க, விரக்தியாய்ச் சிரித்தபடி, “அவ திங்குற தக்காளி சாதத்துல இருந்து, தயிர் வடை வரை அத்தனையும் தெரிஞ்சு வைச்சுருக்கிறவனுக்கு, தகப்பனைப் பத்தி மட்டும் தெரியாமலா இருக்கப் போகுது!, பரவாயில்ல சொல்லு டே” என்றான் மோசஸ்.

“சொல்லு டா, நண்பன் காதலிக்குறேன்னு போய் நின்னா, கை குலுக்குவாரா இல்லை கையை உடைப்பாரான்னு தெரிஞ்சுக்குவோம்” – ஜார்ஜ் ஏற்றி விட்டதும்,

“ம்க்கும்” – எனத் தொண்டையைச் செருமியவன்,

“சூசை சோக்கா மீசை வைச்சிருந்தாலும், அப்பன் ரோலுக்கான வெயிட்டேஜ் கம்மி தான் அவுருக்கு!”

“ஏன்?”

“அந்தாளுக்குன்னு சொந்தமா எந்தத் தொழிலும் கிடையாது. மாமனார் வீட்டு சொத்தை, மச்சான் கூட சேர்ந்து கட்டியாண்டுக்கிட்டு, மனம் போன போக்குல ஜாலியா வாழ்றாரு! இவ மாமன் தான் முழு சப்போர்ட் போல, அவ குடும்பத்துக்கு!, அண்ணன் மகனை, மகளுக்கேக் கட்டி வைச்சு, அவங்க கூடவே காலத்தை ஓட்டிடனும்ன்னு அவ அம்மாவுக்கு ஒரு நினைப்பிருக்காம்”

“இதெல்லாம் உனக்கெப்பிடித் தெரியும்?” – ஜார்ஜ்.

“பெஞ்சமின் ஃபாதருக்கு, இவன் ஆளு தூரத்து சொந்தமாம். எங்கம்மா கூட சர்ச்சுக்குப் போகும் போது, அவர் பேசுறதைக் கேட்டிருக்கேன்”

“ஆக மொத்தம், நீ வாரம் தவறாம சர்ச்சுக்குப் போறது, இவளைப் பத்தி இன்ஃபர்மேசன் சேகரிக்கத் தான்?” -ஜார்ஜ்

உஷ்ண மூச்சுடன், உக்கிரமாய்ப் பார்த்த நண்பனைக் கண்டு,

“எல்லாம் என் உயிர் நண்பன்… உனக்காகத் தான் டா மோசஸூ” என்றான் அலெக்ஸ்.

“டேய் டேய் டேய்ய்ய்”

“ப்ச், ஒடிஞ்சு விழுகுறா மாதிரி இருக்காளே, என்ன பிறவி இவ-ன்னு பாவமாத் தான் டா பார்த்தேன்!, இதெல்லாம் போகுற போக்குல காதுலயும்,கண்ணுலயும் விழுந்தது! மத்தபடி, என் உடலும்,உயிரும் நம்ம க்ளாஸ், மிடில் பெஞ்ச் மாலதிக்குத் தான் டே!”

“உண்மையாவா?”

“மாலதி மேல சத்தியமா டே!”

“சரி, அப்ப வா! இப்பவே தோப்புக்குப் போவோம்”

“எதுக்கு??”

“நாலா மடிச்ச இந்தக் காகிதம், என் நினைப்பை உடைச்சு சொல்லும் டா!, இந்த லவ் லெட்டரை எப்பிடியாவது அவக்கிட்ட சேர்த்துடலாம்! வா டா.. ப்ளீஸ்..”

“அவ தான் உன்னைக் கண்டாலே,விரட்டி விடுறாளே டே”

“இல்ல, இன்னைக்கு என்னைப் பார்த்து.. கனகாம்பரப் பூ மாதிரி கலகலன்னு சிரிச்சா!, அதனால நம்பி லெட்டரை நீட்டலாம். விரட்ட மாட்டா!”

“அவ மட்டுமா சிரிச்சா?, மூதேவி! ஒட்டு மொத்த காலேஜூம் சிரிச்சுச்சு டே”,

“இல்ல! அவ சிரிப்பு மட்டும் ஸ்பெஷலா இருந்துச்சு”

“ஸ்பெஷல் தான்! ஏன்னா, அவ சிரிச்சா கண்ணு தெரியாது”

“டேய்ய்ய்”

“ஒல்லிப் பீச்சான் மாதிரி இருக்குறா! ஆனா, கன்னம் மட்டும் எப்பிடி டே இட்லி மாதிரி இருக்குது?”

“திங்குற வடை பூரா அங்க போய் டெபாசிட் ஆயிடுது போல டே ஜார்ஜூ”

வளவளவெனப் பேசிய அலெக்ஸை இழுத்துக் கொண்டு, ஓசி பைக்கில் தோப்பு நோக்கிப் பறந்தான் மோசஸ்.

தோப்பின் முன் வழி சென்றால், அனாவசிய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாக வாய்ப்பிருப்பதால், பின் வழியே வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நடக்கத் தொடங்கினர் இருவரும்.

“அந்த லிப்ஸ்டிக்கையும், கண்ணு மையையும் நல்லா அழி டே மோசஸூ! பார்க்க ****** மாதிரி இருக்க டா!”

“இருக்கட்டும்! இந்த கெட் அப்-ல போனாத் தான் அவளுக்குக் கோபம் வந்தாலும், சிரிப்பாள்!”

“கருமம்,கருமம்!”

“டேய்ய் நல்லாத் தெரியுமா?, இந்நேரத்துக்கு இங்க தான் இருப்பாளா?”

“அதெல்லாம் இருப்பா டே! நீ சட்டை பாக்கெட்டுக்குள்ள லெட்டர் இருக்கான்னு பாரு முதல்ல” – என்றவன்,

அடர்ந்து, செழித்திருந்த மாமரங்களைத் தலை நிமிர்த்திப் பார்த்தவாறு,

‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்!, அவன் மாம்பழம் வேண்டுமென்றான்’ – என்று முணுமுணுத்தபடி முன்னே நடந்து செல்ல, பெயரிடாமல் தான் எழுதி வைத்திருந்த மொட்டைக் கடுதாசியைக் காதலாய் நோக்கிக் கடுப்பேற்றி விட்டுப் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி நண்பனைத் தொடர்ந்தான் மோசஸ்.

“அலெக்ஸூ”

“ம்ம்”

“உண்மையிலேயே உனக்கு அவ மேல எந்த சாஃப்ட் கார்னரும் இல்லேல்ல?”

“ப்ச்,ப்ச்,ப்ச், ஓட்டலுக்கு சாப்பிடப் போனா, நான் என்னா டே ஆர்டர் பண்ணுவேன்?”

“மசால் தோசை”

“ஹ்ம்ம்ம், உன் ஆளு ப்ளைஐஐஐஐன் தோசை டே!, மாலதி தான் டே மசால் தோசை” – வேண்டுமென்றே அழுத்தி உச்சரித்தவனைக் கண்டு கோபம் கொண்டு,

“அடப் பீக்காளி நாயேஏஏஏஏஏ” – எனப் பல்லைக் கடித்துக் கீழிருந்த கல்லைப் பொறுக்கியெடுத்தவன், தப்பித்து ஓடிய நண்பனை நோக்கித் தூஊஊஊஊக்கி எறிய, அது சொய்ய்ய்ய்ய்ய்ங் எனப் பறந்து பலகிளைகளுடன் செழித்து,வளர்ந்து,அடர்ந்து நின்றிருந்த மாமரமொன்றின் இலைகளை ஊடுருவிச் சென்று, மறுபுறம் டொக்கென விழுந்தது.

கல் விழுந்த மறுநொடி, “எவன் டே அது?” – என உரக்கக் கேட்டக் குரலில், அடித்துப் பிடித்து ஓடிய நண்பர்களிருவரும், கண்ணுக்கெட்டிய மரத்தின் பின்னே ஒண்டி, ஒளிந்து, மூச்சு விடாது நின்று பின், மெல்ல எட்டிப் பார்த்தனர்.

கெடா மீசை வைத்த சூசை, வெற்று மார்போடு, அவிழ்ந்திருந்த வேட்டியை இழுத்துக் கட்டியபடி, மடித்த நாக்குடன் கோபமாய் மரத்திலிருந்து வெளிப்பட்டார்.

“அவ அப்பன் டே” – முனகிய அலெக்ஸின் வாயை அவசரமாய்க் கை கொண்டு அடைத்த மோசஸ், கொத்துக் கொத்தாய்க் கண் முன்னே தொங்கிக் கொண்டிருந்த மாங்காய்களினூடே, எதிர்ப்புறத்தை நோட்டமிட்டான்.

“மரத்துல இருந்து விழுந்திருக்கும் மாமோய்ய்” – என சன்னமாய்ப் பின்னிருந்து கேட்டப் பெண் குரலிடம், பதிலுக்கு மொல்ல்ல்லமாய்,

“எந்த மரத்துல இருந்துடி கல்லு விழுகும்?, எந்த எடுபட்டபயலோ எறிஞ்சிருக்கான்டி” என அவர் முணுமுணுப்பதும் கேட்டு, இருவரது விழிகளும் அகல விரிய,

“சூசை எவ கூடயோ பூசையைப் போட்டுட்டிருக்கான் டே” – என முணுமுணுத்த அலெக்ஸ், எட்டி மறுபுறமிருந்தப் பெண்ணைக் காண முற்பட்டான்.

“ஐயையோ!, இப்ப என்ன பண்றது மாமோய்?” – சன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் சன்னக்குரல், பிரசன்னமாக,

“யாரும் பார்க்குறதுக்கு முன்ன, பொத்துனாப்ல அந்தப் பக்கமாவே நடந்து… கிணத்து வழியா.. ஓடிரு” – பதற்றமாய்க் கூறியவரின் சீரியஸ்னெஸ் புரியாது,

அவிழ்ந்து,வழிந்த கொசுவத்தை சாவகாசமாக இழுத்து செருகியபடி, “மறுபடி எப்போ மாமோய்ய்?” என சிணுங்கியவளிடம்,

“கள்ள்ள்ள்ளி” -எனப் பயத்தில் கை நடுங்கினாலும், கட்டுப்படுத்த முடியாது அதன், கன்னத்தைக் கிள்ளிய சூசை, “மாமேன் மேல அவ்வ்வ்வ்வளவு ஆசை” -என்று கொஞ்ச வேறு செய்ய, பார்த்துக் கொண்டிருந்த இருவரது வயிறும் வெந்து,அவிந்து, புகைந்ததில், மற்றுமொரு கல்லைப் பொறுக்கி எடுத்து, வாட்டமாய் நின்றிருந்த சூசையின் ********-யிலேயே விட்டெறிந்தான் அலெக்ஸ்.

வாய் விட்டுக் கதற முடியாது, கால்களை ஒடுக்கித் தரை நோக்கிக் குனிந்த சூசையைத் தாங்கிப் பிடித்தவாறு, “ஐயையோ மாமோய்.. என் ஆசை, நிராசையாப் போயிரும் போலயே!, மாமோய்ய்ய்,…. உமக்கு ஒன்னுமில்லையே” – எனப் பதட்டத்தில் தொண்டையைத் திறந்த பெண்ணைக் கண்டுத் தன் வலியை மறந்து, அவள் வாயைப் பொத்தியவர்,

“வாயை மூட்றி கிறுக்கு சிறுக்கி!, யார் கண்ணுலயும் சிக்குறதுக்கு முன்னாடி ஓட்றி முதல்ல” என்று உச்சகட்டக் கோபத்தில் அதட்ட,

“ம்க்கும்! மாங்கா திருட வந்த சின்னப்பயலுகளுக்குப் பயந்து, இந்த மான்குட்டியை துரத்துறீங்க மாமோய்ய்ய்! உம்மை…. பிறகு வைச்சுக்குறேன்” என மீசை நிறைந்த சூசையின் கன்னத்தை புஜூக்,புஜூக் செய்து விட்டு சிட்டாய்ப் பறந்தது சின்ன வீடு!

தனது உச்சிகாலப் பூஜையில், அத்துமீறி உள் நுழைந்து விட்ட கயவர்களைத் தேடி கோபமும்,பயமுமாய் அங்குமிங்கும் நோக்கிய சூசை, “யாரு டே?, யாரு டே அது? மட்ட மத்தியானம், செத்த நேரம் சாய விடாம, கல்லை விட்டெறிஞ்சி விளையாடிட்டிருக்கிறவன்?” – எனப் பதட்டத்தில் கூச்சலிட,

“****** பண்றது பீக்காளித்தனம்! இதுல அமெரிக்க பிரசிடெண்ட் மாதிரி சௌண்டு வேற! சாவு டே களவாணி நாயே” – என்று முனகிய அலெக்ஸ், மோசஸ் தடுத்தும் கேட்காமல், முன்னே தொங்கிக் கொண்டிருந்த மாங்காய்களுள் ஒன்றை மின்னல் வேகத்தில் பறித்து, கையில் குச்சியுடன் முதுகு காட்டி நின்று மூச்சு விடாது வசை பாடிக் கொண்டிருந்த சூசையின் பிடரியில் பொடீரென விட்டெறிந்தான்.

சூசையின் பின் மண்டையில் பட்டு மாங்காய் சிதறுவது, “யாரோட வண்டி மாமா அது?, தோப்புக்கு வெளியே நிக்குது?” எனக் கேட்டபடி தூரத்தில் நடந்து வந்த ஜெபமலரின் மாமன் மகன் அருளப்பசாமியின் கண்களில் பட்டுவிட,

“டேய்ய்ய்ய்ய் எவன் டே அது….?” – என வேட்டியை மடித்துக் கட்டியபடி ஓடி வந்து மரத்தின் பின் நின்றிருந்த இருவரின் மீதும் பாய, காட்டெருமை போலிருந்தவனைத் தாக்க முயன்று, முடியாமல், தப்பி ஓட எண்ணி… கடைசியில், அவனது இருகைகளிலும் ஆளுக்கொருவராய் சிக்கி, தங்களது முதுகுச் சட்டையை மூர்க்கமாய்ப் பற்றியிருந்தவனின் பிடியிலிருந்து, நழுவ எத்தனித்துத் தரையை ராவிக் கொண்டிருந்தனர் அலெக்ஸூம்,மோசஸூம்.

“திருட்டு நாய்களா! யாரு டே நீங்க ரெண்டு பேரும்?, மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு என்ன களவாணித்தனம் டே பண்றீங்க?”

-எனக் கோபமாய்க் கேட்டவன், “பொன்ராஜ் அண்ணே, ரெண்டு பேரையும் மரத்துல கட்டி வைச்சு, விசாரிச்சு, 4 சவுக்கடி கொடுத்து அனுப்புங்கண்ணே” என்று உத்தரவிட, பயமும்,ஆத்திரமும் தலைக்கேறியதில் வெடுக்கென அவன் பிடியிலிருந்து வெளி வந்த அலெக்ஸ்,

“கட்டி வைச்சு அடிக்க வேண்டியது எங்களை இல்ல டே! உன் மாமனை டே, முட்டாப் பயலே” என்று எகிறினான்.

அவன் தன்னை இழுத்ததும் அரண்டு போன சூசை, “தம்பி,தம்பி 4 மாங்கா திருட வந்தவனுங்கக் கிட்டப் போய் என்னத்துக்குத் தம்பி மாரடிச்சிக்கிட்டு?, டே… ஓடுங்க டே இங்கயிருந்து! இனியொரு தடவை தோப்புக்குள்ள வந்தீங்க…. நடக்குறதே வேற! போங்க டே!” என்று விரட்டப் பார்க்க,

அவரைக் கேவலமாய் நோக்கிய மோசஸ், “நாங்க ஒன்னும் மாங்கா திருட வரல” என்றான் ரோஷமாக.

“பின்ன என்னத்துக்கு டே தோப்புக்குள்ள நுழைஞ்சீங்க?” – காட்டெருமை.

“நுழைஞ்சனால தான பல உண்மைகளைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது!” – அப்பிடியெல்லாம் உன்னை விட்ருவேனா-ரீதியில், சூசையை, அசூசையுடன் நோக்கி நக்கலாகக் கூறினான் அலெக்ஸ்.

பட்டென நண்பனின் புறம் திரும்பி ‘இவிங்க குடும்ப பஞ்சாயத்து நமக்குத் தேவையா டே அலெக்ஸூ’ என்ற ரீதியில் பார்த்த மோசஸ், காட்டெருமையின் கைகளில் கட்டெறும்பாக நசுங்கிய போதே, தனது காதலை கண்டந்துண்டமாக வெட்டி, கடுதாசிக்குள்ளேயேப் புதைத்திருந்தான்.

அலெக்ஸ் பார்த்த பார்வையில், சூசையின் சொட்டை முழுதிலும் பொட்டு,பொட்டாக நொடியில் வியர்த்து விட, மீசையை நீவி முகம் மாறாமல் காத்து, படபடப்பில் ஏறி,இறங்கிய தொப்பையுடன், அவர்களது முகம் பாராமல்,

“பொ…பொன்ராஜூ, அடிக்க-லாம் வேணாம்டே! பார்க்க, சின்னப் பசங்களா இருக்கானுங்க! என்னான்னு பேசி ரெண்டு பேரையும் விரட்டி விட்டுட்டு வந்து சேரு!, மாப்ள, மோட்டர் 5 நிமிசத்துக்கொரு தடவை நின்னு போயிருதுன்னு காலையிலேயே சொன்னேனே! வா.. நீ வந்து என்னான்னு பாரு!, தலைக்கு மேல வேலை கிடக்கு!” – என ஆளுக்கொரு கட்டளையை இட்டுவிட்டு கேஸ்வலாக, எஸ்கேப் ஆகப் பார்த்தவரை,

“நில்லு மாமா! என்னான்னு கேட்டுட்டுப் போவோம்” என நிறுத்திய அருள்,

“என்னா உண்மையை டே தெரிஞ்சுக்கிட்ட?”என்றான் அலெக்ஸிடம் நேராக.

“மத்தியான வேளை ஆளிருக்க மாட்டாங்கன்னு நினைச்சு, ப..ப..பம்பு செட்டுல குளிக்க வந்தீங்களா டே?” – அவசரமாய் இடையிட்ட சூசை, தன் குறுகிய கண்களால் அலெக்ஸை ‘சொல்லிடாத தம்பி’ எனக் கெஞ்சலாய்ப் பார்க்க, அவரது ‘half-boil’ முக வடிவும், சின்னக் கண்களும் ஜெபமலரை நினைவுபடுத்தியதில் கோபம் கொண்டவன், கொஞ்சமும் இளகாமல்,

“இந்த மீசையும், கிணத்துப் பின்னாடி ஒளிஞ்சு நிற்குற சிகப்பு சேலையும், அந்த மாமரத்துக்குக் கீழ கசமுசா பண்ணிட்டிருந்ததை நாங்க எங்க கண்ணால பார்த்தோம்” என்றான் பட்டென.

அதுவரைத் திமிராய் நின்றிருந்த காட்டெருமை, இதை எதிர்பாராது விழிகள் அகல திரும்பி மாமனைப் பார்க்க,

“எ…எ…என்னா.. என்னா டே உளர்ற?, யா..யா..யாரு மேல டே பழி போடுற?, முதல்ல யாருடே நீங்க?, எங்க தோப்புக்குள்ள நுழைஞ்சு எங்களையே தப்பா பேசுறீங்க?, ******** சங்கைக் கிழிச்சிருவேன் சொல்லிட்டேன்!, எந்தத் தெருவு டே உனக்கு?, எந்த ஊர்க்காரங்க டே நீங்க?” – நடுங்கிய கரங்களால் தன் கழுத்தைப் பற்றி எகிறிக் கொண்டு வந்த சூசையை அருவெறுப்புடன் ஒரு கையால் தள்ளி நிறுத்திய அலெக்ஸ்,

“மரம் மாறி நிற்காம, போய்க் கிணத்து பின்னால பாரு டே மண்ணாந்தை!” – என அருளை நோக்கி சீறினான்.

அவன் கண் காட்டியதும் பொன்ராஜ் என்பவன் ஓடிச் சென்று, கிணற்றுக்குப் பின்னே மறைந்திருந்த பெண்ணை இழுத்து வந்த நேரம், அருளப்பனின் தந்தை, அதாவது ஜெபமலரின் மாமா, ஆரோக்கிய சாமி தனது ஆட்களோடு உள்ளே நுழைய, நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்து நெஞ்சு உலர்ந்து போன சூசை,

“மா..மா..ப்ள… இந்தச் சிறுக்கி யாருன்னே எனக்குத் தெரியாது டே!, இவனுங்க கூத்தடிக்க எவளையோ கூட்டி வந்துட்டு, என்னைய கை காட்டுறானுங்க டே!” என்று பல்ட்டி அடிக்க,

அவரது கேவலமானக் குற்றச்சாட்டில் வெகுண்ட அலெக்ஸ், அவரை அடிக்கப் பாயும் முன் தடுத்த ஆரோக்கியம், நிலைமையை நொடியில் யூகித்து, பயத்தில் முந்தானையைத் திருகியபடி திருதிருவென முழித்து நின்றிருந்த பெண்ணிடம்,

“மயில்சாமி மருமவ தான லே நீயி?, எங்க தோப்புல உனக்கு என்னா லே சோலி?” என்று தனது கட்டைக் குரலால் காட்டமாக விசாரித்தார்.

“சொல்லு லே சிறுக்கி மவளே!, இவனுங்க ரெண்டு பேரும் தான உன்னைக் கூட்டி வந்தது?” – என சூசை பாயிண்ட் எடுத்துக் கொடுத்து, சூழ்நிலையை ஸ்மூத் ஆக்க முற்பட,

“யோவ்வ்வ் அடங்க மாட்டேல்ல நீயி” – என ஆத்திரத்துடன் அவர் மீது பாய்ந்த அலெக்ஸைத் தடுக்காது அருளப்பன், அனைவரையும் மருள,மருளப் பார்த்தவாறு திருட்டு முழியோடு நின்றிருந்த பெண்ணின் கன்னத்தில் பொளீரென விட்ட அறையில், சூசை திடுக்கிட்டுத் தள்ளாடி நிற்க,

உதடு கிழிந்து ரத்தம் வழிந்ததில் ஆத்திரம் கொண்ட பெண், கொண்டையை அள்ளி முடிந்து கொண்டு, “எலே தொடை நடுங்கித் *******! மருமவனை அடிக்க விட்டு வேடிக்கை பார்க்குறியா டே?, ஆம்பளையா டே நீயி?, சிக்குனதும், சின்னப் பயலுகளோட என்னையக் கோர்த்து விட்டு சிதறி ஓட நினைக்குற?? உனக்கெல்லாம் என்னத்துக்கு டே பொம்பள சோக்கு?, த்தூஊஊஊ!, எலே, எடுபட்ட பயலே!, உன் மாமனை அடிக்கத் துப்பில்லாம, என் மேல கை வைக்குறியா?, எங்கப்பனைக் கூட்டி வந்து கவனிச்சுக்கிறேன் டே உன்னைய! இன்னிக்கு நீயா,நானான்னு பார்த்துருவோம்” – என்றவள் சேலையை இழுத்து செருகிக் கொண்டு வசைபாடியபடியே தோப்பை விட்டு விறுவிறுவென வெளியே நடக்கத் தொடங்கி விட,

அவள் உச்சஸ்தாதியில் ஆடத் துவங்கியதும், உண்மை புரிந்து, அருளப்பன்,அலெக்ஸ், மோசஸ், ஆரோக்கியசாமி என அனைவரும் பாய்ந்து பிராண்டியதில், சூசையின் மீசை, பீஸ்,பீஸாய் நிலத்தில் சிதறியிருந்தது.

சிகப்பு சேலை ஊருக்குள் சென்று தன் தரப்பு ஆட்களை சேர்த்துக் கொண்டு ஜெபமலரின் வீட்டைச் சூழ்ந்து விட, தோப்பிலிருந்து அருளப்பனால் அள்ளி வரப்பட்ட சூசையோடு, பொன்ராஜின் பொற்கரங்களில், வேறு வழியின்றி இழுபட்டிருந்தனர் அலெக்ஸூம்,மோசஸூம்.

‘வீட்டிற்குத் தெரிந்தால் வெட்டிப் பொலி போட்டு விடுவார்களே’ – என்ற பீதியில் மோசஸூம், ‘பொம்பளைப் பிள்ளைக்கு தகப்பனா இருந்துக்கிட்டு என்னா வேலை பார்த்திருக்கான் பாரு சல்லித்****” எனத் திட்டியபடி இறுக்கத்துடன் அலெக்ஸூம், சுற்றிலும் மரம்,செடி,கொடிகளென செழிப்போடிருந்த அந்தத் திண்ணை வைத்தத் தனி வீட்டின் வாசல் தொடங்கி தெரு வரை முற்றுகையிட்டிருந்த ஊர் மக்களின் நடுவே ‘odd man out’ ஆக, அமைதியாக நின்றிருந்தனர்.

வீட்டினுள்ளே ஜெபமலரின் அன்னை பெர்சியாவின் கனத்த அழுகையும், பெருத்த அரற்றல்களும், அவரைச் சமாதானப்படுத்தியவாறு உள்ளேயும்,வெளியேயுமாய்த் திரியும் உறவுக் கூட்டத்தின் கோபமும், ஆதங்கமும் என துக்க வீட்டின் கோலம் பூண்டிருந்தது அவ்வாசல்.

‘இவன் என் தங்கச்சியோட நல்லபடியா பிழைப்பான்னு நம்பித் தான் மாமா, மொண்ணையன் இவனுக்கு வேண்டியது அத்தனையும் செஞ்சு கொடுத்து, தொழில்லயும் கூட வைச்சுக்கிட்டேன்! இப்பிடி என் மண்ணுலேயே எத்துவாளித்தனம் பண்ணிக்கிட்டு எகத்தாளமாத் திரிஞ்சிருக்கானே, களவாணி நாயி!, இனி என் தங்கச்சி முகத்துல எப்பிடி முழிப்பேன்?, என் மருமவளை என்னான்னு சமாதானப்படுத்துவேன்! வளர்ந்து நிற்குற பொண்ணைப் பத்தின நினைப்பே இல்லாம… இந்த வயசுல.. இப்பிடியொரு காரியம் பண்ணிட்டு வந்து நிற்கிறானே! தரங்கெட்ட ******!” – என ஒருபுறம் ஆரோக்கியசாமி, உறவுக்கார ஆண்களிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க,

பெர்சியாவின் பெண் உறவுகள், வரிந்து கட்டிய சேலையும், அள்ளி முடிந்த கொண்டையுமாய், “இந்தாடி சீமை சிறுக்கி, உன் ******, எங்க வீட்டு ஆம்பளைங்க தான் கிடைச்சாங்களா?, புருசனை சாகக் கொடுத்துப் போட்டு, புள்ளை,குட்டியுமில்லாம ஒத்தையா இருக்காளேன்னு பாவப்பட்டு வீட்டுக்குள்ள விட்டதுக்கு, இப்பிடிக் குடியைக் கெடுத்துப் போட்டியேடி! இந்த மாதிரி மானங்கெட்டப் பொழப்பு, பொழைக்கிறதுக்கு நீயெல்லாம் கிணத்துல விழுந்து சாகலாம்டி!” என்று ‘டிடிடிடி’ என ஏறிக் கொண்டு செல்ல,

பதிலுக்கு சிகப்பு சேலையின் சித்ராங்கிகள், “ஆமாமாமா, இல்லாட்டியும் அந்தாளு ஒழுக்க சீலன், உத்தம புருசன்!, வந்துட்டாளுங்க பேச! வயசுல இவனிருந்த வகுசி தெரியாது?, கம்மாய்க்குப் போற ஒருத்தியை விட்டு வைக்க மாட்டான்!, பீடி குடிச்ச மேனிக்க, கரையில உட்கார்ந்துக்கிட்டு, குளிக்குற பொம்பளகளைப் பூரா வெறிச்சு,வெறிச்சுப் பார்த்துட்டுத் திரிவான்! கல்யாணம் கட்டி, புள்ளையைப் பெத்தெடுத்தப்புறம் திருந்திட்டான்னு பார்த்தா, தனியா இருக்குற பொம்பளைக் கிட்ட ஆசை வார்த்தைப் பேசி மயக்கி, சரசம் பண்ணி , சல்லாபத்துக்குத் தூண்டியிருக்கான் பாரு!, எச்சப் பொறுக்கி” – என்று சீற,

-‘ஆம்பள அப்பிடி,இப்பிடித் தான் இருப்பான்!, பொம்பளை நீ தான் டி ஒழுக்கக் கட்டுப்பாட்டோட இருந்திருக்கனும், தப்பெல்லாம் உன் மேல தான் என்று ‘சேலை’-யைக் கிழித்தபடி ஒரு தரப்பும், ‘நல்ல பொண்டாட்டி,பிள்ளை, வாழ்வாதாரத்துக்கு வழி செஞ்சு கொடுத்து, எல்லாத்துக்கும் துணை நின்னு அனுசரிச்சுப் போற மச்சான், மாமனார் வீட்டு சொத்து,பத்துன்னு சுக,போகமா வாழ்ந்துட்டிருக்கிறவன், என்ன ம*றுக்கு ******பெடுத்துப் போய், இன்னொருத்தியைத் தேடிப் போறான்?’ என்று ‘மீசை’-யை மழித்தபடி மறுதரப்பும் வாதம்,விவாதமென மணிக்கணக்கில் தங்களது பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து கொண்டிருக்க, கால் மாற்றி நின்றபடி வேடிக்கை பார்த்திருந்த மோசஸூக்குப் பொறுமை பறி போகும் நிலையிலிருந்தது.

“மாப்ள, ஒன்னுக்கு வருது டே” – மோசஸ்.

“போய் பொன்ராஜ் அண்ணேன்-ட்ட பர்மிஷன் கேளு”

“என்னா டே நக்கலா?”

“அதான் நகர விட மாட்டானுங்கன்னு தெரியுதுல?, சும்மா நில்லு டே”

“நாம ஏன் டே நிக்கனும்?, இந்தாளு எவளை வைச்சிருந்தா, நமக்கு என்ன டே?, முதல்ல, அவங்க குடும்ப விவகாரத்துல உனக்கு என்ன அக்கறை?, தேவையில்லாம வாயை விட்டு இங்க வந்து நிறுத்தி வைச்சிருக்க! இன்னும் 2 மணி நேரத்துல நான் வீட்டுக்குப் போகாட்டி, எங்கம்மா, எனக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு நினைச்சு ஜெபம் பண்ணத் தொடங்கிடும் டே”

“அம்மாவுக்குப் பயப்படுறவனெல்லாம் எதுக்கு டே ‘அவளுக்கென்ன அழகிய முகம்’-ன்னு பாட ஆசைப்படுறீங்க?”

“என் ஆசைக்குத் தான் அவ அப்பன் சூசை, பூசையைப் போட்டுட்டானே”

“உனக்கு இன்னும் சான்ஸ் இருக்கு டே மோசஸூ”

“தேவையே இல்ல!, நான் என் காதலுக்குக் கருமாதி பண்ணி கால் நூற்றாண்டு காலமாச்சு”

“என்னா டே இப்பிடிப் பேசுற?”

“அவ மாமன் மவன் காட்டெருமை, கழுத்தோட சேர்த்துப் பிடிச்ச பிடியில, என் மூளைக்குப் போற நரம்புக்கெல்லாம் மாவுக்கட்டு போட வேண்டியிருக்கும் போல டே அலெக்ஸூ. எனக்கு இவனுங்க குடும்ப சங்காத்தமே வேணாம் டே” – அரண்ட குரலில் கூறியவனைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், தன் கழுத்தையும் ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டவனிடம்,

“நகம் பதிஞ்சு கிடக்கு டே அலெக்ஸூ! அவன் அருளப்பன் இல்ல டே, இருளப்பன்” என்று வலியில் உளறி விட்டு, “நான் பொறத்தால இருக்கிற தென்னை மரத்துக் கிட்ட சுச்சா போயிட்டு வர்றேன்” – எனக் கூறி நகர்ந்தான்.

மோசஸ், ரீசஸூக்குச் சென்ற வேளை, இங்கு கூட்டத்தில் பாதிப் பிய்ந்த மீசையுடன் தலை குனிந்து அமர்ந்திருந்த culprit-டிடம்,

“சூசை, பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப தலையைத் தொங்கப் போட்டு தரையைப் பார்த்து உட்கார்ந்து கிடக்குறதுல ஒரு பிரயோசனமுமில்ல! உன் மனுஷி,மக்களுக்கு என்ன டே பதில் வைச்சிருக்க?, ரெண்டு பேர் முகத்தையும் பார்க்க முடியல டே!, உலகமே அழிஞ்ச மாதிரி உடைஞ்சு போய் இருக்குதுங்க! அதுங்களுக்கு துரோகம் பண்ண எப்பிடி டே உனக்கு மனசு வந்துச்சு?, உன் அற்ப சந்தோசத்துக்காக அதுங்க வாழ்க்கையை வீணடிச்சுட்டியே! ஒரு நேரம் கூடவா உன் மவ முகம் கண்ணு முன்ன வரல உனக்கு?” – என்று உறவுக்காரர் ஒருவர், பஞ்சாயத்தைத் தொடங்கி வைக்க,

தலையிலடித்துக் கொண்டு அழுது ஆக்டிங்கை போட்ட சூசை, “மோசம் போயிட்டேன்ய்யா! அநியாயமா மோசம் போயிட்டேன்ய்யா! அந்த சிறுக்கி மவளோட ஆசைப் பேச்சுக்கு மயங்கி, நிலை தடுமாறி கண்ணிருந்தும் குருடனா இருந்துட்டேன்ங்கய்யா! இனி அவ இருக்கிற திசைக்கே போக மாட்டேன்ங்கய்யா!, தங்கத்தை விட்டுத் தகரத்தைத் தேடிப் போனதுக்கு என் மவளும்,பொண்டாட்டியும் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன்ங்க! நான் ஒரு பாவிங்க! பாவி” என நாதாரித்தனத்தை normalize செய்யும் standard dialogue-களை எடுத்து விட,

அதுவரை வீட்டினுள்ளே அழுது புரண்டு கொண்டிருந்த பெர்சியா, கணவனின் பேச்சில் வெகுண்டு, ,அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்து, வேகமாக எழுந்து, முடியை அள்ளி முடிந்தவாறு, “அடியேய் ரோசா, மேல இருக்கிற அந்த ட்ரங்க் பொட்டியை கீழே இறக்குடி” என்று விட்டுக் கடகடவென சூசையின் 4 துணிகளை அடைத்து எடுத்துக் கொண்டு, தங்,தங்கென நடந்து வெளியே வந்தவர், பொட்டியை சூசையின் காலடியில் விட்டெறிந்து,

“இந்தா.. உன் ஒரே சொத்தான அழுக்கு வேட்டியும், ஓட்டை விழுந்த அண்ட்ராயரும்! எடுத்துக்கிட்டு ஊரே விட்டே ஓடிரு! இனி என் கண்ணுல பட்ட, ***** கண்டந்துண்டமா வெட்டிருவேன் சொல்லிட்டேன்!, தண்டனை தரனுமாம் தண்டனை! அண்ணே!, இனி இவனை நான் ஊருக்குள்ளப் பார்க்கவே கூடாது!, நீ அவன் தலையை வெட்டி கிணத்துக்குள்ள வீசுனாலும் சரி, கையை,காலை உடைச்சுக் கம்மாய்க்குள்ள எறிஞ்சாலும் சரி! இவன் மூச்சுக் காத்துக் கூட என் மேலயோ,என் மவ மேலயோ படவே கூடாது!, ” – என்று ஆங்காரமாய் மொழிய,

அமர்ந்திருந்த இடத்திலிருந்து பாய்ந்து,விழுந்து அவர் காலடியைக் கட்டிக் கொண்ட shameless சூசை, “ஐயோ அப்பிடி சொல்லாத செல்வி.. அப்பிடி சொல்லாதம்மா! உன்னையும்,பாப்பாவையும் விட்டு நான் எங்கம்மா போவேன்?, யாரை-ம்மா தெரியும் எனக்கு?, என்னான்னு பொழைப்பு நடத்துவேன்?, அறிவிழந்து நான் பண்ணக் காரியத்துக்கு…. நீ செருப்பால அடிச்சாக் கூட வாங்கிக்கிறேன்ம்மா! என்னைப் போகச் சொல்லாத.. போகச் சொல்லாத” – எனக் கண்ணீரால் அவருக்குப் பாதபூஜை செய்ய,

‘Then what about the side chick?’ – என சிகப்பு சீலையின் தரப்பு தங்களது பெண்ணுக்கான நியாயத்தை வேண்டி முன்னே வரவும், தன் காலைப் பிடித்திருந்தக் கணவனை அருவெறுப்புடன் நோக்கி, பின் வெடுக்கென உருவிக் கொண்டவர்,

“இந்த ஈன நாய்க்கும், இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! உன் மவளுக்கு நியாயம் வேணும்ன்னா, இவனை அள்ளிட்டுப் போய்த் தெருவுல வைச்சுக் கேளு! இல்ல, மாமரத்துக்குக் கீழ மல்லாக்கப் படுத்துக்கிட்டு சோடியா, சௌகரியமா ரெண்டு பேரும் நியாயம் பேசுங்க! இனி ஒரு நிமிசம் என் வீட்டுல எந்த ******** தலையாவது தெரிஞ்சது, சங்கைக் கடிச்சுத் துப்பிருவேன் சொல்லிட்டேன்” என்று சீற,

“துப்புவடி துப்புவ! நீ கடிச்சுத் துப்புறதுக்கு நான் என்ன நல்லி எலும்பா?, உன் கூட வாழ ஆசையிருந்திருந்தா, அவன் என்னத்துக்குடி இத்தனை வயசுக்குப் பிறகும், என்னைத் தேடி வரப் போறான்?, இதுலயே தெரியல நீ அவன் கூடப் பிழைச்ச பிழைப்பு?, பெருசா பேச வந்துட்டா!” – என காலம்,காலமாக Main chick-களை நோக்கி side chick-கள் பேசும் ஒரே பாயிண்ட்டை, பாம் போல வீசிச் செல்ல, அது சரியாக பெர்சியாவின் மூளைக்குள் விழுந்து, வெடித்துச் சிதறுவது, சிவந்த விழிகளுடன், இமையசையாது அவர் இறுகி நிற்பதிலேயே தெரிந்தது.

தன் அத்தை அவமானப்படுவது பொறுக்காமல், அருளப்ப சாமி, சிகப்பு சீலையின் கன்னத்தில் மீண்டும் ஒரு அறையை விட்டு எகிறிக் குதிக்க, ‘உன்னால தான் டே என் தங்கச்சி கண்ட ******கிட்டயெல்லாம் பேச்சு வாங்குறா! பீக்காளி நாயே!, உன்னை வெட்டிப் போடல! என் பேரு ஆரோக்கியசாமி இல்ல டே!’- என ஆரோக்கியம் ஒருபுறம் ஆக்ரோஷமாய் சூசையின் மீது பாய சற்று நேரத்தில் இரு தரப்பினருக்கிடையே பெரும் கைக்கலப்பாகியது.

ஊர்ப்பெருந்தலைகள் சிலர் ஒன்று கூடி, சண்டையிட்டவர்களைப் பிரித்து வைத்து, கலைந்து, களைத்துக் கிடந்த சூசையின் பாக்கெட்டுக்குள் பணத்தைத் திணித்து, ட்ரங்க் பொட்டியையும் கையில் கொடுத்து, ‘கொஞ்ச நாளைக்கு யார் கண்ணுலயும் படாம எங்கேயாவது போயிரு சூசை! உன் பொண்டாட்டிக்கும்,மச்சானுக்கும் கோபம் தணிஞ்சப்புறம் திரும்பி வா!, பேசிக்கலாம்! உன் குடும்பம் தான?, அப்பிடியெல்லாம் உன்னைக் கை விட்டுடாது’ – என ‘Gem’ ஒருவர் செய்த ‘gentle advice’-ஐ நம்பி ஓடும் பஸ் ஒன்றில் ஏறிக் கொண்டார் சூசை.

அவர் அந்தப் புறம் ஓடி விட்டது புரிந்து, இந்தப்புறம் side chick தரப்பு, ‘நல்லாயிருந்தக் குடும்பத்தை இப்பிடி நாசம் பண்ணிட்டியேடி! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?, அப்பிடி என்னாடி உனக்கு ஆம்பளை சோக்கு கேக்குது?’ – எ டபாலென அவளுக்கெதிராக மாறி அவளை வார்த்தைகளால் வதைத்து, சித்ரவதை புரிந்து, ஒதுக்கி, ஒடுங்கச் செய்ய, அவமானம் தாங்காது, சூசையைப் போல எங்கும் ஓடி,ஒளியவும் முடியாது, கடைசியில் பெண் என்பதால் ‘victim card’-ஐக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணைக் கசக்கத் தொடங்கியது மாஞ்சோலைக் கிளி.

கூட்டத்திலிருந்த ஆண்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்க, பெண்கள் புடை சூழ திண்ணையில் அமர்ந்திருந்த பெர்சியா, ‘இனி நான் என்ன செய்வேன்?, என்று புள்ளையை எப்பிடிக் கரை சேர்ப்பேன்?, இந்தப் பரதேசி நாயால என் புள்ள வாழ்க்கை பாழாப் போச்சே’ என நெஞ்சிலும்,நெற்றியிலும் அறைந்து கொண்டு அழுது அரற்றுவதைப் பாவமாகப் பார்த்தபடி சற்றுத் தள்ளி நின்றிருந்தான் அலெக்ஸ்.

“உன் புள்ள வாழ்க்கைக்கு என்னாடி கேடு வந்துச்சு?, ராசா மாதிரி மாமன் மவன் இருக்கான், அவளைக் காலம் பூரா கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்கிறதுக்கு! உனக்காக உசுரையேக் கொடுக்க, உங்கண்ணங்காரன் இருக்கான்! உழைச்சு சம்பாதிக்க உடம்புல தெம்பிருக்கு உனக்கு! இப்ப என்னா குறைஞ்சு போச்சுன்னு இப்பிடி அழுகை,அழுகுற?, பிள்ளையை பலவீனமாக்காம கண்ணைத் துடைடி முதல்ல” – சீனியர் லேடி ஒருவர் கொடுத்த அறிவுரையை வழிமொழிந்தபடி,

“எத்தனை களவாணித்தனம் பண்ணாலும், எண்ணி ரெண்டே நாள்ல அவன், ‘நான் ஆம்பளைடி-ன்னு மீசையைத் திருத்திக்கிட்டு,வேட்டி,துண்டோட வீதியில நடக்க ஆரம்பிச்சிருவான்! நீ இப்பிடியே அழுது,கரைஞ்சு உடம்பை வீணடிக்கப் போறியா?, உன் பிள்ளைக்குன்னு நீயொருத்தி தான் இருக்க! அவளுக்காகவாவது உன்னைத் தேத்திக்கப் பாரு” – என மற்றொருத்திக் கூற,

தன் மகள் குறித்தப் பேச்சில் மேலும் பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாது, “அவ அப்பன்-னா உசுருடி அவளுக்கு!, குட்டிப் போட்ட பூனையாட்டம் அவன் காலையே சுத்தி வந்தவளுக்கு இந்தக் கருமாந்திரமெல்லாம் என்னான்னுடி புரியும்?, எப்பிடித் தாங்கும் என் புள்ள?, காலம் முழுசுக்கும் அழியாத காயத்தைக் கொடுத்துட்டுப் போயிட்டானே *****! என் புள்ள எப்பிடித் தாங்கப் போகுதோ?, ஐயோ.. ஜெபா…. என் மவளே..” – எனக் கதறத் தொடங்கி விட,

“ஆமா, புள்ள எங்க லே?, ரொம்ப நேரமாக் காண்கல?, ஜெபா எங்கடி?, ஜெபா..” – எனக் கூட்டம் அவளைத் தேடத் துவங்க, அதுவரை ஆதங்கமும்,வருத்தமுமாய் அவர் கூறியதைக் கேட்டவாறு நின்றிருந்த அலெக்ஸூம், நடந்த இத்தனை சம்பவத்திலும் தலை காட்டாத ஜெபமலரை எண்ணி கவலை கொண்டு, அனிச்சையாய் சுற்றும்,முற்றும் நோக்கினான்.

கப்பன் அளித்த மரணக் காயத்தில் விரக்தி கொண்டு கிணற்றடியைச் சரணடைந்திருந்த ஜெபமலர், அதிர்ச்சி,அருவெறுப்பு, ஆதங்கம்,வருத்தம்,கோபம், அதைத் தொடர்ந்த சீற்றமென.. உலகையே வெறுத்த மனநிலையில்.. பித்துப் பிடித்துப் போய்.. வெந்து,எரிந்த நெஞ்சுடன் சிலையாய் அமர்ந்திருந்தாள்.

இறுகிப் போன உடல் மொழியும், வெறித்தப் பார்வையுமாய், கண்ணீர்,அழுகை ஏதுமின்றி உணர்வுகளை அடக்கிக் கொண்டு, உன்மத்த நிலையிலிருந்தவளிடம், உறவுக்காரியொருத்தி, “அப்பனா அவன்?, பொம்பளப் பொறுக்கி!, மனசு விட்றாத ஜெபா! உங்கம்மையை நினைச்சுப் பாரு லே!, இத்தனை வருசம் அந்தாளை நம்பிப் பொழப்பு நடத்துன ஆளுக்கு எத்தனை ஏமாற்றமும்,வருத்தமுமா இருக்கும்?,!, உங்கம்மைக்காகவாவது உடைஞ்சு போயிடாம, திடமா இருக்கப் பாரு லே” என அறிவுரை செய்து சென்றிருக்க,

அந்த ‘பொம்பளப் பொறுக்கி’ – என்ற வார்த்தை கொடுத்த அசௌகரிய உணர்வில் அசூயையுடன் முகத்தைச் சுழித்தவள், ‘உங்கப்பனும்,அந்தப் பொம்பளையும்,மாந்தோப்புல, மாமரத்துக்குக் கீழ………..’ – எனத் தொடர்ந்து உள்ளே ஒலித்த குரல்களில், அனிச்சையாய்க் காதை மூடி, தன்னை சுருக்கி,ஒடுக்கிக் கொண்டு கிணற்றுச் சுவரோடு ஒன்றினாள்.

நினைப்பே அருவெறுப்பைத் தூண்ட, அடிவயிற்றிலிருந்து ஓங்கரித்துக் கொண்டு வந்ததில், அவசரமாய் ஓடிச் சென்று, பிதாஜி-யின் இத்தனை வருட நேசம்,பாசம்,அன்பு,அக்கறை, லொட்டு,லொசுக்கென அத்தனையையும் பித்தவாந்தியாய் எடுத்துத் தீர்த்து விட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு மூச்சு வாங்க நிமிர்ந்து நின்றாள்.

ப்போது பார்த்துப் பக்கவாட்டிலிருந்த தென்னை மரத்தின் பின்னிருந்துத் தனது சோலியை முடித்துக் கொண்டு மோசஸ் வெளிப்பட, புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவளுக்கு, ‘உன் காலேஜ் பசங்க ரெண்டு பேரு தான் உங்கப்பனோட காமலீலையைக் கண்டுபிடிச்சாங்களாம்’ – என்று உறவுகள் பேசிக் கொண்டது நினைவு வர, ‘இவனுங்களுக்கு நம்ம தோப்புல அந்த நேரம் என்ன சோலி?’ – என அனிச்சையாய் மூளைக்குள் ஓடிய கேள்வியோடு அவனையே பார்த்திருந்தாள்.

சிவந்து,தடித்திருந்தச் சின்னக் கண்களோடு, முகம் முழுக்க சினத்தைச் சுமந்தபடி, இறுக்கமானத் தோற்றத்துடனிருந்தவளைக் கண்டு மோசஸிற்குப் பற்கள் தந்தியடிக்கத் தொடங்கி விட, வெளிப்படையாய் நடுங்கியவாறு,

“அ…அ..அர்ஜெண்ட்டா வந்துச்சு,அ..அ..அதான்” என்று தன் உளறலைத் தொடங்கி வைக்க,

கையிலிருந்தக் குவளையைத் தண்ணீரில் எறிந்து விட்டு, அவனை நோக்கி நடந்து வந்தாள் ஜெபா.

‘எவனாயிருந்தாலும் வெட்டுவேன்’ – உடல் மொழியோடு, பெரிதான எட்டுக்களுடன் தன்னருகே வருபவளைக் கண்டு அனிச்சையாய்ப் பின் நகர்ந்த மோசஸிற்கு நெற்றியோரம் வியர்வை பூத்தது.

“எங்க தோப்புல உனக்கென்னா டே சோலி?” – ஜூனியர் அதட்ட,

“அ…அ..அது…” – சீனியர் மிரள,

“நீ எதுக்கு அந்த நேரம் அங்க வந்த?” எனத் தொடர்ந்து கேட்டாள் அவள்.

“அ..அ..அது வந்து…” – என்ன கூறுவதெனப் புரியாமல் திக்கித் திணறியவன், எரிச்சலில் அவள் பற்கள் நெரிபடத் துவங்குவது கண்டு, பட்டெனப் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கடிதத்தை வெளியிலெடுத்து,

தன் காதலுக்கு மாலை போட்டு, காரியம் பண்ணி விட்டதை மறந்து, “இ..இதை உன் கிட்டக் கொடுக்குறதுக்காகத் தான் வந்தோம்” என்று சரணடைந்து விட்டான்.

சுழித்த முகத்துடன் அவன் கையிலிருந்ததை வெறித்தவள் ‘என்ன இது’ என்பது போல் பார்க்க,

“கா..காதல் கடுதாசி” என்று அவள் சூழ்நிலை புரியாது அவன், பயத்தில் மேலும் உளற,

புருவம் விரிய ஒரு நொடி அவனையே பார்த்தவள், மறு நொடி ஆத்திரமும், ஆங்காரமுமாய் மூச்சை இழுத்து விட்டு, இடுப்பில் கை வைத்துத் தோள் குலுங்க வில்லத்தனமான சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

அவள் செய்கையில் அரண்டு, தான் செய்ததை உணர்ந்து அவசரமாய்க் கடிதத்தை மடித்து மீண்டும் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு,

“இ..இல்ல,இல்ல.. அ..அப்போ கொண்டு வந்தேன்! இப்போ மனசு மாறிட்டேன்! இனி… க..கர்த்தர் மேல சத்தியமா உனக்கு லவ் லெட்டர் கொடுக்க மாட்டேன்” – என்று கூறியவன், அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

என்ன தோன்றியதோ!, ‘ஹ்ம்ம்ம்’ எனத் தலையை ஆட்டியவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளிடம், சும்மா இராமல்,

“உங்கப்பா அப்பிடி பண்ணிட்டாரேன்னு நினைச்சு வருத்தப்படாத ஜெபா!, பார்த்தவுடனே எனக்கும் பயங்கரக் கோபம் வந்துச்சு!, ஆனா.. என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா…! ஒரு தடவை சூடு கண்ட பூனை, இன்னொரு தடவை கொதிக்குற பால் கிட்டப் போகாது..! அதனால… “ எனத் தான் யார் முன்பு நிற்கிறோம்! யாருக்கு அட்வைஸ் செய்கிறோம்! என்பதையே மறந்து, பெரிய லாடு லபக்கு தாஸ் போன்று, அவள் முகம் பாராது பேசிக் கொண்டே சென்றவன்,

‘சரக்க்க்க்க்’ எனக் கேட்ட சத்தத்தில் சட்டெனத் திரும்பி ஜெபமலரை நோக்கினான்.

அதுவரை யாரிடம்,யார் மீது தனது வன்மத்தையும்,ஆத்திரத்தையும், இறக்குவதெனப் புரியாமல் தகித்து,தவித்திருந்த ஜெபமலரின் ஆழ்மனது, அவனது வார்தைகளில் ஆவேசம் கொண்டதன் விளைவு,

தென்னை மரத்தின் கீழே, ஆளுயரத்தில் கீற்றோடு நீண்டு கிடந்தத் தென்னை மட்டையைக் கையிலெடுத்தவள், காளி ரூபத்தில் நிற்பது கண்டு, அதிர்ச்சியில் புத்தி மழுங்கி, அவளை ஆஆஆ-வெனப் பார்த்தவாறு அசையாது நின்றான் மோசஸ்.

மட்டையைத் தன் தலைக்கு மேல் உயர்த்தி, மரம் போல் நின்றவனின் தோள் மீது, முழு வேகத்தில் அவள் இறக்கிய இடியில், வலி பொறுக்காது, ஆஆஆஆ-வெனக் கத்தித் துள்ளிக் குதித்து எகிறியவன், அடித்துப் பிடித்து, விழுந்தெழுந்து ஓடத் துவங்கினான்.

ங்கே ஜெபாவைத் தேடியபடி சுற்றும்,முற்றும் நோக்கிக் கொண்டிருந்த அலெக்ஸ், ரீசஸூக்குச் சென்ற மோசஸ், ரீங்காரமிட்டவாறு, கொல்லையிலிருந்து கொடூர வேகத்தில் ஓடி வருவது கண்டுத் திகைத்துத் அனிச்சையாய் நகரத் தொடங்கியக் கால்களோடு முன்னே வந்தவன்,

பி.டி,உஷாவைத் தோற்கடித்து விடும் நோக்கத்துடன், பெரிது,பெரிதான எட்டுக்களோடு ஓடுகிறாளா,பறக்கிறாளா என்றே புரியாத அளவிற்கு, அசுர பலத்துடன், தரையிலிருந்துப் பல அடிகள் எம்பிக் குதித்து, மட்டையை வீசி அவன் முதுகை முறித்தபடி மூர்க்கமாய் அவன் பின்னே ஓடிக் கொண்டிருந்த ஜெபமலரைக் கண்டு ஆடிப் போய் நின்று விட,

“அடியேய்.. ஜெபா… நில்லு டி.. ஜெபா… ஐயையோ…அடியேய்…” – என்று அவளைத் தொடர முயன்ற பெண்கள், மணிக்கு 30 கி.மீ வேகத்தில், மின்னலாய் ஓடியவளை நிறுத்த முடியாது, பிளந்த வாயுடன் சிலையாய் நின்று விட்டவனின் தோளில் இடித்து, “போய் புடி டே தம்பி.. போ டே!” என்று திட்டியதில் சுயம் பெற்று, அவசரமாய்ப் பின்னே ஓடிச் சென்றான்.

அவளது ஆத்திரத்திற்குப் பலியான தென்னங்கீற்றனைத்தும் பிரிந்து சிதற, மட்டை உடைந்து,உரிந்து, தொங்கி மரித்த பின்னும் கூட ஆவேசம் அடங்காதுத் தொடருபவளைக் கண்டு மரணபீதியில் தன் வேகத்தைக் கூட்டிய மோசஸ், கடைசியில் தாமிரபரணியில் குதித்து, மன்னார் வளைகுடா வழியாக இந்தியப் பெருங்கடலையே சென்றடைந்து விட்டான்.

அவன் தன் கண்ணிலிருந்து மறைந்து விட்டதை உணர்ந்து, ஓட்டத்தை நிறுத்திய ஜெபமலர், மட்டையை வீசி எறிந்து, தொப்பலாய் வியர்வையில் நனைந்த உடலோடு, மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்க, முட்டியைப் பற்றியவாறுக் குனிந்து நின்றாள்.

ஓடியதால் வரண்ட தொண்டை, தாகம் தாங்காது இருமலைத் தோற்றுவித்ததில் திணறிக் கண்ணில் நீர் வர லொக்,லொக் என இருமியபடி மெல்லத் திரும்பினாள்.

அவர்களின் பின்னேயே ஓடி வந்த அலெக்ஸ், நண்பன் அவளிடமிருந்துத் தப்பி விட்டதைக் கண்டு ஆசுவாசப் பெருமூச்சுடன் ‘எப்பாஆஆஆ, என்னாஆஆஆ ஓட்டம்! மனுஷியா? பேயா இவ? சரியான ராங்கிக்காரியா இருக்கா!’ என்றெண்ணியவாறு, இருமிக் கொண்டிருப்பவளுக்குப் பாவம் பார்த்த மனதையும், அவளிடம் சிக்காது ஓடி விடச் சொல்லித் தூண்டிய மூளையையும் சமாளிக்க முடியாமல் அவளைப் பார்த்தபடி பம்மி நின்றான்.

முகத்தில் வழிந்த வியர்வையைத் துப்பட்டாவில் துடைத்தவாறு இருமியபடி வீடு நோக்கி நடக்கத் துவங்கியவள், தென்னை மரத்தின் கீழ் நின்றிருந்தவனைக் கண்டு கொண்டு, இறங்கிய ஆத்திரம் மீண்டும் தலைக்கேறியதில் மூக்கை விடைத்து, சுற்றும்,முற்றும் பார்த்துத் தான் தூக்கியெறிந்த மட்டையைத் தேடியெடுத்து, விறுவிறுவென தன்னை நோக்கி வருவது கண்டு,

அதிர்ந்து, பதறி, ஓட எத்தனித்துப் பின் நினைவு வந்தவனாகப் பரபரவென மரத்தின் மீது ஏறியவன், நான்கே அடி உயரத்தில் கை வழுக்கி, சொய்ய்ய்ய்ங்கென ரிவர்ஸில் வந்து கீழே விழுந்து, மீண்டும் ஏற முயன்று முடியாமல், மரத்தின் வேரைப் பற்றிப் பின்னே நகர்ந்தபடி அவளைப் பீதியுடன் நோக்கினான்.

‘இவங்கப்பன் எவ கூடயோ குஜாலா இருந்ததுக்கு, எங்களை என்னத்துக்கு இப்பிடி உரிக்கிறா??, அவ மட்டையைக் கொண்டி சாத்துறதுக்கு முன்னாடி, அசிங்கம் பார்க்காம, கையெடுத்துக் கும்பிட்டு பாவமன்னிப்பு கேட்டுடு டா அலெக்ஸூ! நீ வலி தாங்க மாட்ட டா! உனக்குப் பிஞ்சு உடம்பு டா!!’ என்று அலறிய மனதிற்கு செவி மடித்து அவன் தன்னிரு கைகளையும் தூக்கிக் கூப்பச் சென்ற வேளை, அவள் பார்வை எங்கோ நிலைத்திருப்பது கண்டுத் திரும்பி நோக்கினான்.

TVS XL100. அவளது தந்தையின் வண்டி model.

பல நாட்கள் பின்னே அமர்ந்து அவர் முதுகில் சாய்ந்து வளவளத்தபடி அவளும், சில நாட்கள் தான் பின்னே அமர்ந்து, மகள் வண்டி ஓட்டுவதை ரசித்தபடி அவரும் என பற்பல தந்தை-மகள் அதிகாரங்களை வகுத்திருந்த வாகனம் அது!

இன்று, வகுத்தவரே வாய்க்கரிசி போட்டு விட்டத் துக்கத்தில், கண் முன்னே உறவும்,உணர்வும் கேலிக்கூத்தாகிக் கலைந்து போன துயரத்தில், மூச்சடைத்த உணர்வோடு, மட்டையை விட்டெறிந்து விட்டு, வண்டியின் முன்பு மண்டியிட்டமர்ந்தாள்.

மோசஸை விளாசி ஓய்ந்ததால் ஆத்திரம் இறங்கி அழுகை மேலெழுந்து வர, தோள் குலுங்கத் தலை குனிந்து, பெருகிய கண்ணீரை நிலத்தில் கொட்டியவாறு, ரத்தம் வடிந்த நெஞ்சைக் கசக்கியும், செய்வதறியாதுத் திணறியத் தலையை இறுகப் பற்றியும், இயலாமையில் முஷ்டியால் மண்ணைக் குத்தியும் சத்தமே செய்யாது அவள் அழுத அழுகை, இதயத்தைக் கீறியதில், இமைக்க மறந்து அவளையே பார்த்தபடி நகரத் தோன்றாது, அப்படியே அமர்ந்திருந்தான் அலெக்ஸ்.