7.2. விச்சுளிப் பாய்ச்சல்!
“அ..லோ….. யா….ரு?”
“Am I speaking to Mrs.Maragatham?”
“எ..தே?, ஐ…யோ… சா..மி!, எனக்கு இங்கிலிஸெல்லாம் வராதே!, என் வூட்டுக்காரரு வேற எங்க போனாருன்னு தெரியலயே! அவரு வந்ததுக்கப்புறம் பேசுறீகளா தம்பி?”
“நோ!, இப்ப, அப்பு வந்தா நெம்ம்ம்பத் தப்பாயிடும் மரகதம்”
“என்..ன??, அ…லோ…. எதுவும் கேக்கலையே”
“Captain America shield மாதிரி அத்தாத்தண்டி தோடு போட்டிருந்தா எப்பிடி மரகதம் கேட்கும்?”
“என்…னாஆ சொல்றீக?, ஒரு மண்ணும் புரியல”
“மை டியர் மரகதம்… நான் உன் கிட்ட த….னி..யா பேசனும்”
“தனியா பேசனுமா?”
“ஆமா!”
“என்னாஆ பேசனும்?”
“நேத்து மாங்காயை வெட்டிப் போட்டு சாம்பார் வைச்சியே மரகதம்?, அதுல உப்பு போட்டியா?”
“ஐயையோ மறந்து போனேனா?, இந்த ரத்தக்கொதிப்பு வந்ததுல இருந்தே எனக்கு நிதானம் தப்பிப் போச்சு தம்பி! எல்லா விசயத்திலயும் மறதி! ருசியும் தெரியல, ஒன்னும் தெரியல!, அதுசரி, என் வூட்டு சாம்பார்ல உப்பில்லன்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“நேத்து அமாவாசைன்னு காக்காய்க்கு சோறு வைச்சியே?”
“ஆ….மாஆஆ”
“அந்தச் சோத்தைக் கொத்தித் தின்ன காக்காவே.. நான் தான் மரகதம்!”
“கா..க்காவா?”
“ஆமா மரகதம்! கருப்ப்ப்ப்பு கலர்ல, க்கா.. க்கா-ன்னு கத்துமே.. அந்தக் காக்கா!”
“என்னா விளக்கம் இது?, ஆமா, மரகதம்…. மரகதம்ம்ம்ன்னு, நீங்க பெத்துப் பேரு வைச்ச மாதிரி, வாய் நிறைய கூப்பிடுறீகளே! யாருங்க தம்பி பேசுறது?”
“நான் தம்பி இல்ல மரகதம்! உன் மாமன் மவன் தனசேகரு”
“தன….சேகரா?, அவன் பத்து வருசத்துக்கு முன்னமே பக்கவாதம் வந்து செத்துப் போனானே!”
“ஆமா! இப்ப பேசிக்கிட்டிருக்கிறது, காக்கா உருவத்துல வந்து உன் உப்பில்லாத சாம்பாரைத் தின்ன, அவுரு ஆவி!”
“ஆவியா?, ஆவிக்கு ஏது செல்போனு?”
“ஆவின்னா… ஆவியே-வா கையில ஃபோன் பிடிச்சுப் பேசும்?, மக்கு மரகதம்!, எனக்கு medium இருக்கு! அதாவது, நான் புகுந்திருக்கிற உடம்புல இருந்து பேசுறேன்!”
“உண்மை…யாவா சொல்றீக?, ஐயோ மாரியாத்தா! எனக்குக் கை,காலெல்லாம் நடுங்குதே!”
“பயப்படாத மரகதம்!, நீ அழறதைப் பார்க்கவா.. அயித்தான்.. ஆவி ரூபத்துல வந்திருக்கேன்?, மரிக்கொழுந்துல மல்லிப் பூவை சேர்த்துக் கட்டுன மாதிரி…. பச்சையும்,வெள்ளையுமா பளீச்சுன்னு சிரிப்பியே மரகதம்ம்ம்?, உனக்கா இந்த நிலைமை வரனும்?”
“என் நிலைமையில என்ன குறையைக் கண்டீக?”
“உன் புருஷன் அப்பு-வுக்கு, சப்பு-ன்னு ஒரு அறையைக் கொடுத்து, கப்பு-ன்னு புடிச்சு, வீட்ல அடக்கி உட்கார வைக்காம, இப்பிடி சுகவாசியா ஊரைச் சுத்த விட்ருக்கியே மரகதம்?, அவுரு காலனிக்குள்ள பண்ணிட்டிருக்கிற அராஜகத்தைப் பத்தித் தெரியுமா உனக்கு?”
“கள்ளச்சாராய பாக்கெட்டைக் கையில பிடிச்ச மேனிக்க, பக்கவாதம் வந்து பாடையில விழுந்த நாயி, நீ என் புருசனைப் பத்தி பேசுறியா?, அவுரு குணத்துக்கும், கம்பீரத்துக்கும் ஈடாவியா டா நீயி?”
“அடேயப்பா! விட்டுக்கொடுக்காம பேசுறதைப் பாரேன்!, புருஷன் மேல அம்ம்ம்ம்புட்ட்டு லவ்வு! ம்ம்ம்?”
“ஆமா, லவ்வு தான்! என்னா இப்ப?, ஒரு கெட்டப் பழக்கம் கிடையாது அவருக்கு! கொஞ்…..சம் கோவம் வரும்! அவ்ளோ தான்!, நீதி,நேர்மையோட வாழ்றவனுக்குக் கோப,தாபமெல்லாம் இருக்கப்படாதா?,பெத்த 2 மகன்களையும் பொறுப்பா படிக்க வைச்சு, வெளிநாட்டுல செட்டில் பண்ணி, கல்யாணம் கட்டிக் கொடுத்து, சொத்து,பத்தெல்லாம் சரி பகுதியா பிரிச்செழுதி வைச்சு.. யார் கையையும் எதிர்பார்க்காம தனக்கும்,தன் பொஞ்சாதிக்கும் கடைசி காலத்துக்கும் வழி பண்ணி வைச்சிருக்கிற மானஸ்தன், நியாயஸ்தன் டா என் புருசன்”
“ஷ்ஷ்ஷ்ஷ் மரகதம், ‘Define அப்பு சாமி’-ன்னு கேட்ட மாதிரி, லொட,லொடன்னு உன் புருசன் பெருமையைப் பாடாத”
“உனக்கென்னா டா தெரியும்?, இனி ஒரு வார்த்தை அவரைப் பத்தி தப்பா உன் வாய்ல வந்தா, பரலோகத்துக்கு வந்து உன் பல்லை உடைப்பேன் சொல்லிட்டேன்!”
“மர…..கத…..ம்!! காம் டவுன்!! என்னைப் பேசவே வுடாம, வூடு கட்டி அடிக்கிறதெல்லாம் மிகத் தவறு மரகதம்!”
“என்னா டா பேசனும் உனக்கு?, உன் தாத்தன், காட்டை வித்து, எங்கப்பனுக்குக் கொடுத்த பத்தாயிரத்தைப் பத்தி கேட்கனும். அதான?”
“ம…ர…கதம்! நீ மக்கு மரகதம் இல்ல! மண்டையுள்ள மரகதம் தான்! பக்கவாதத்துல செத்தவன் கிட்ட பத்தாயிரத்தை லவட்டியிருக்கியே! சரியான ஆளு தான் நீயி”
“அ..அ..அதெல்லாம் இல்ல! அ..அப்..அப்போ ஏதோ குடும்ப கஷ்டம்! அதுக்கெல்லாம் சேர்த்து,ஒன்னுக்கு ரெண்டா, நீ வுட்டுட்டுப் போன உன் பொஞ்சாதி,புள்ளைகளுக்கு செஞ்சுட்டாரு என் வூட்டுக்காரரு!,”
“பார்றா”
“ஆமா, நியாயமா பார்த்தா, ஆவியான நீ, உன் குடும்பத்துக் கிட்ட தான பேசனும்?, ஏன் எனக்கு ஃபோனைப் போட்டிருக்க?”
“ஃபோனைப் போட்டதால தான, நீ ஆட்டையப் போட்டக் கதையெல்லாம் வெளியே வந்திருக்கு?”
“இங்க பாரு, இப்புடிப் பேச்செல்லாம் என் கிட்ட வைச்சுக்காத!”
“அதை வுடு மரகதம்! நான் ஏன், என் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ணாம, உன் கிட்ட பேசுறேன்னு தெரியுமா?”
“தெரியாது! என்னத்துக்கு எங்கிட்டப் பேசுற?”
“ஏன்னா.. என்ன இருந்தாலும் நீ என் அயித்தை மவ மரகதம்! உன் மேல எனக்கு அக்கறை,பாசம்.. எல்லாம் உண்டு”
“ம்ம்ம்ம்ம், என் மேல உனக்குக் கொள்ளை ஆசை-ன்னு எங்கப்பன் சொன்னது உண்மை தான் போல இருக்கு!,”
“ஆம்ம்ம்…..மா!!, அந்த அக்கறைல ஒன்னு சொல்றேன் கேளு! நீ வாரந்தவறாம எல்லா செவ்வாய்,வெள்ளியும் விரதம் இருக்கியே?, யாருக்காக?”
“வேற யாருக்கு!, என் புருசனுக்காகத் தான்! அந்த மவராசன் நீண்ட ஆயுளோட, நோய் நொடியில்லாம வாழ்ந்தா தான, நான் மாங்கல்ய பாக்கியத்தோட சாக முடியும்?”
“ம்ம்ம்ம்! நீ மாங்கல்ய பாக்கியம் வேணும்ன்னு மாங்கு,மாங்குன்னு விரதம் இருந்துக்கிட்டிருக்க?, அங்க உன் புருசன், மாரியம்மன் கோயில் மரத்தடியில, மாஜி காதலியோட மஜா பண்ணிட்டிருக்காரு”
“எ….ன்……ன டா சொன்ன?”
“பல்லைக் கடிச்சுக்கிட்டு என் மேல பாயுறதுக்கு முன்னாடி, நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு மரகதம்”
“என்ன?”
“உன் புருசனுக்குப் பிடிச்ச பாட்டு எது?”
“பாட்….ட்டாஆஆ?, ம்ம்ம்ம், பழைய பாட்டு ஒன்னு இருக்கு.. எல்.ஆர்.ஈஸ்வரி பாடினது.. எலந்தப் பழம்,எலந்தப்பழம்..”
“யாஆஆஆங்!, கலிலியோ காலனி எட்டாவது தெருவுல, எலந்தப் பழம் விற்குற எலிசபெத்து தான் உன் புருசனோட எக்ஸ்!, ‘கைக்கு அடக்கமா, கடிக்க வாட்டமா’-இருக்குற அந்தப் பழத்தைத் தான், உன் புருசன் அரசமரத்துக்குப் பின்னாடி ஊற வைச்சுத் துன்னுட்டிருக்கிறாரு!, கடைசியா ‘ஆடலும்,பாடலும்’ நிகழ்ச்சியில காலனி ஆட்களோட அவுரு சண்டை கட்டுனதே எலிசபெத்துக்கு பாட்டு போட சொல்லிக் கேட்டுத் தான்”
“என் புருசனைப் பத்தி பேசுனீனா… உ….உன் நா…க்கு அழுகிப் போயிரும் சொல்லிப்புட்டேன்”
“அதைச் சொல்லும் போது, உன் நாக்கு ஏன் தழு,தழுக்குது!, It’s the season of side chicks மரகதம்! அருக்காணியா இருக்கிறதால அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனமில்ல”
“ம்…ஹ்…ம்..! நான் நம்ப மாட்டேன்! நம்ப மாட்டேன் டா! என் மாமனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்! என்னை மட்டுமே சுத்தி,சுத்தி வர்ற அப்புராணி அவுரு! எனக்கும்,அவுருக்குமிருக்கிறது பூர்வ ஜென்ம பந்தம்!, எனக்காகவே வாழ்றவரு! எனக்கொன்னுன்னா துடிச்சுப் போவாரு!, அப்படிப்பட்டவரு எனக்கு நிச்சயம் துரோகம் பண்ண மாட்டாரு!, நீ சொல்றதெல்லாம் பொய்! பச்சைப் பொய்!”
“உன் கான்ஃபிடென்ஸ் எனக்குப் பிடிச்சிருக்கு மரகதம்!, பட், நீ எதுக்கும் fact check பண்ணிக்கிறது நல்லது! ஏன்னாஆஆ…” – எனத் தொடர்ந்த குரலை முடிக்க விடாமல்,
“எம் புருசனைப் பேசுன உன், கை,கால் வெளங்காம போக, உன் குடும்பம் அழிஞ்சு போக! உன் புள்ள,குட்டியெல்லாம் உருப்படாம போக….” – எனக் கத்திக் குவித்த மரகதத்தைக் கேட்டு காது சூடாகிப் போய்,
“ரத்தம் கொதிச்சு, இதயம் வெடிக்குறதுக்கு முன்னாடி, இதே vibe-ல போய் உன் புருசனை வைச்சு செய் மரக….தம்! பாய்ய்ய்! சீ யூ!!!”
Mission ‘ஆடலும்,பாடலுமுடைய’ Main target-ஆன அப்புத் தாத்தா, மலை போன்ற அகலத்தையும், மரம் போன்ற நீளத்தையும் கொண்ட ‘gigantic figure’ என்றாலும், அந்த ‘beast’ சரணடையும் ஒரே இடம், தன் ‘beauty’ ஆன மரகதத்திடம் தான்!
எத்தனை கோபம்,ஆத்திரமென்றாலும், எத்தகைய மன அலட்டல்களுக்கு உள்ளானாலும், மரகதம் முன் தோன்றினால், மந்திரம் போட்டது போல அனைத்தையும் பின் தள்ளி விட்டு, மனைவிக்கும்,தனக்குமான மாய உலகத்துக்குள் நுழைந்து கொள்வார் அப்புத் தாத்தா. அங்கு, அவரைப் போன்ற சாதுவான, அனுசரணையான, முரண்களற்ற மென்மையான துணையைக் காண முடியாது!
இத்தனைக்கும் மரகதம், ‘சம்சாரம் ஒரு மின்சாரம்’ category தான்!
‘பாசிப்பயறு கேட்டா, பாசிப்பருப்பை வாங்கிட்டு வந்திருக்கீக?, இத்தனை வயசாகியும் கூறு இருக்கா?’, ‘பேப்பர் படிச்சா, மடிச்சுப் போடத் தெரியாது! என்ன மனுசனோ?’, ‘பெரியவனோட என்ன தகராறு உமக்கு?, தூரமா இருக்குற புள்ளைகக்கிட்ட கோபத்தைக் காட்டுவீகளா?’,’எப்பப்பாரு செய்தியே பார்க்காம, நாடகத்தைப் போடுங்க மாமா, விளம்பரம் முடிஞ்சிருக்கும்!, என்னமோ இவருக்கு மட்டும் தான் கண்ணு இருக்குற மாதிரி…. ஹ்ம்ம்’ – என ‘standard’ சம்சாரத்தைப் போல் கணவனைக் காணும் நேரமெல்லாம் சிடு,சிடுவென முகத்தை வைத்துக் கொண்டு படபடவென திட்டித் தீர்ப்பார்.
இருந்தும், எப்போதேனும் மரகதம், உடல் சோர்வில் படுத்துக் கொண்டாலோ, அதீத கோபத்தில்.. இரண்டு துளி கண்ணீர் விட்டு விட்டாலோ, தாத்தாவினால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! மனைவியின் முகச் சிணுக்கத்திற்கும், வாட்டத்திற்கும்.. இந்த வயதிலும் பயம் கொள்ளும் ‘தொடை நடுங்கி’ மனிதர் அவர்!
“சன் ரைஸ் விளம்பரத்துல வர்ற மாதிரி ‘made for each other’ couple-ண்ணே ரெண்டு பேரும்! இல்லற வாழ்க்கை ஸ்மூத்-ஆ இருக்கிறதால தான், மனுஷன், அவர் இஷ்டத்துக்கு எல்லாப் பக்கமும் வம்பு வளர்த்துட்டு சுத்துறாரு!,
அப்பு தாத்தாவை off பண்ண ஒரே வழி, மரகதம் பாட்டியைத் தூண்டி விட்டு, அவங்க ரெண்டு பேருக்குமிருக்கிற golden bond-ஐ கட் பண்ணி, தாத்தாவை எதைப்பத்தியும் யோசிக்க முடியாத.. அரைக்கிறுக்காத் திரிய விடுறது தான்!, பாட்டி கோச்சுக்கிட்டு, ‘Boston’-ல இருக்குற பையன் வீட்டுக்குப் போயிடுச்சுன்னா, சமாதானம் பண்ண அப்பு தாத்தாவும் பின்னாடியே போயிடுவாரு! ரெண்டு பேரும் reconcile ஆகி, ரிட்டர்ன் வர்றதுக்குள்ள, நாம இங்க, கச்சேரியைக் கச்சிதமா முடிச்சிடலாம்! எப்புடி?” – என்று gangster ‘ஐடியா’ கொடுத்ததன் விளைவாக, மரகதம் பாட்டிக்கு செய்த ‘ப்ராங்க் கால்’-ஐ முடித்து விட்டு,
இப்படி அடுத்தவன் குடும்பத்தில் கும்மியடித்து விட்டக் குற்றவுணர்ச்சி கொஞ்சமுமில்லாது, அந்தக் குளிர் இரவில் விறைத்தபடி ஜெபமலரின் வீட்டு வாசலில் காத்திருந்தான் அலெக்ஸ்.
அந்தத் தனி வீட்டில், ‘கார் பார்க்கிங்’ வசதி இல்லாத காரணத்தினால், சற்றுத் தள்ளியிருந்த காலி நிலத்தினருகே காரை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தவள், பார்க் செய்து விட்டு, அலைபேசியில் யாருடனோ உரையாடியபடித் தன் வீடு நோக்கி வருவதைக் கண்டவாறு ‘gate’ அருகே நின்றிருந்தான் அவன்.
தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தினூடே, லேசாகப் பெய்யத் தொடங்கிய மழையை உணராது, சுழித்த முகத்துடன் வேக நடை போட்டு வருபவளைக் கண்டவன், அவனருகே நெருங்குகையில்,
“நீ சும்மா நொய்,நொய்ங்காம, ஆரிக்- குட்டி கிட்ட ஃபோனைக் கொடு அத்தான்!, நான் அனுப்புன oil pastels வந்துடுச்சான்னு கேட்கனும்” – என்று சிடுசிடுத்தவளைக் கேட்டு, அவள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை நொடியில் யூகித்து, பட்டென அவள் கையிலிருந்த ஃபோனைப் பறித்துத் தன் காதில் வைத்தவன்,
“அடேஏஏஏ அருளப்பா, நீ மட்டும் என் கைக்கு கிடைச்சேனா, அரிவாளைக் கொண்டு அரிஞ்சு போடுவேன் டே உன்னைய” என்று பாய,
எதிர்ப்புறம் அமைதியாகி விட்டதை உணர்ந்து,
“வாயைத் திறந்து பேசு லே” – என்று மீண்டும் காய்ந்த வேளை,
“ப்ச், அறிவிருக்கா உனக்கு?, உன் இஷ்டத்துக்கு ஃபோனைப் பிடுங்கி பேசிட்டிருக்க?, கொடு லே.. இங்க.. ஃபோனைக் கொடு டே” – என, கேட்டைத் திறந்து உள் நடந்தவாறு, ஃபோனைத் தராது கடுப்பேற்றியவனின் பின்னே கத்தியபடி வந்த ஜெபமலரின் கைக்கு சிக்காமல் தொடர்ந்து திமிறியபடி,
“என்ன சத்தமே இல்ல?, அயித்தை மவ மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா டே உனக்கு?, நீ மட்டும் புள்ள,குட்டின்னு குடும்பமா செட்டில் ஆகிட்டு, அவளைத் தனி மரமா நிற்க விட்டிருக்க?, இவ்ளோ தான் உன் பாசமா டே?” – ஏகத்திற்கும் எகிறியவனைக் கடித்தப் பற்களுடன் நோக்கி,
“அவனைக் கேள்வி கேட்க நீ யாரு லே?, இதான் உன் லிமிட்டு! இப்ப நீ ஃபோனைக் கொடுக்கல…..” – எனத் திட்டியபடிப் பாய்ந்து அலைபேசியைப் பறிக்கப் பார்த்தவளின் வலது கையை முதுகோடு வளைத்துத் தன்னருகே இழுத்துக் கொண்டவன்,
“கமுக்கமா.. கம்ம்முன்னு இருக்காம, வாயைத் திற லே களவாணிப்பயலே” – என்று கத்தியவனிடம்,
“யாரு களவாணி?, நீயா? நானா டே? தெள்ளவாரி நாயே” – ஆப்போசிட்டில் அருளப்பனுக்கு, அருள் வந்து விட, அடிக்குரலில் கர்ஜித்தவனைக் கேட்டு, அள்ளு கழண்டதில், தன்னாலேயே தளர்ந்து விட்டக் கைகளுடன், இருளடர்ந்த முகத்தோடு நின்றவனைக் கேவலமாக நோக்கி, வீட்டினுள் விரைந்து விட்டாள் ஜெபமலர்.
“என்ன லே சத்தத்தைக் காணோம்?, அன்னிக்கு மாந்தோப்புல நீ என் கைக்கு சிக்குனப்பவே உன்னை ரெண்டா வகுந்திருந்தா… இன்னிக்கு எங்க வீட்டுப் புள்ள இப்பிடி ஒத்தைல நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்காது டே!”
“நா..நான்.. யாருன்னு தெரியுதா?”
“ஏன் தெரியாம?, பூந்தோட்டத்து அன்னமேரி மவன் அலெக்ஸாண்டர் தான நீயி?”
“எ..எ..என்னை.. ஜெபா… வந்து.. எங்களை… பத்தி.. எல்லாம் தெரியுமா உனக்கு?” – தயக்கமாகக் கேட்டவனிடம்,
“தெரியும்! அத்தை இறந்த 6 மாசத்துல, ஜெபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து, கட்டாயப்படுத்தி கட்டி வைக்க முயற்சி பண்ணுனாரு எங்கப்பா!, பிஸினஸைப் பெருக்கப் போறேன்னு உறுதியா நின்னு மறுத்தவ கிட்ட, விடாம நான் காரணத்தைக் கேட்டதால, உண்மையெல்லாம் சொன்னா” – என்றான் அவன் ரோபோ குரலில்.
“நீயும் கேட்டுக்கிட்டு… அமைதியா இருந்துட்ட?” – மூக்கை விடைத்தவனுக்குப் பதிலாய்,
“செருப்புப் பிஞ்சு போகும் லே உனக்கு!” – என ஆத்திரப்பட்டான் அருளப்பன்.
“பின்ன?, அவ சொன்னாளாம்! இவன் கேட்டானாம்!, ஒரு ஊருக்குள்ள… மறு கோடில இருக்குறவனைத் தேடி வர வக்கில்லையா லே உனக்கு?”
“நாங்க தேடி வந்து.. நொட்டுற அளவுக்கு, நீ என்னா பெரிய மன்மதக் குஞ்சா டே?, ஆளும், முழியும்! உன் மொகரை ம*றுல என்னத்தப் பார்த்து.. நீ தான் வேணும்ன்னு இத்தனை வருஷமா ஒத்தைல கிடக்குறாளோ இவ! அப்பிடி என்னா டே வசியம் பண்ணி வைச்ச அவளை?”
“எனக்கே தெரியாது டே அருளப்பா” – சோர்வாகக் கூறியபடி ஆதங்கமும், ஆயாசமுமாகப் பரபரவென முகத்தைத் தேய்த்துக் கொண்டவனிடம்,
“எனக்கா டே அவ மேல அக்கறை இல்ல?,ம்ம்?, எங்க 2 பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு எங்கப்பனும்,அத்தையும் மும்முரமாகத் திரிஞ்ச காலத்துல, தைரியமா என் காதலைப் பத்தி வீட்ல சொல்லி, நானும், எம் பொண்டாட்டியும் ஒன்னு சேரக் காரணமானவ ஜெபா! அவ மேல எனக்கா அக்கறை இல்ல?”
“அப்புறம் என்ன வெங்காயத்துக்கு டே என்னைத் தேடி வராம போன?”
“தேடி வந்திருக்கனும்! உன் மூக்கை உடைச்சு, முதுகை வளைச்சு, ஒரு முழக் கயிறுல தொங்க விட்ருக்கனும்”
“ப்ச்!, ஆகாத கதை பேசாத”
“நீயா வராத வரைக்கும், உன்னைத் தேடி போகக் கூடாதுன்னு அவளுக்குள்ள ஒரு வைராக்கியமிருக்கு! அந்தளவுக்கு அவளை நோகடிச்சிருக்க நீயி!, என் பக்கமிருந்து நான் எந்த முயற்சியும் எடுக்கக் கூடாதுன்னு என் கிட்ட அவ சத்தியம் வாங்கிட்டா”
“சத்தியமாவது! சக்கரைப் பொங்கலாவது!”
“அப்பிடி நினைச்சுத் தான் நான், இயல்பா நடக்குற மாதிரி.. பெஞ்சமின் ஃபாதர் மூலமா, உங்கம்மா கிட்ட, உனக்கு ஜெபாவை பேசி முடிக்கலாமான்னு கேட்க வைச்சேன்”
அதுவரையிருந்த எரிச்சல் மறைய, “அ…அப்புறம்?” – எனப் பதைத்து,பரபரப்புற்று, அடக்கிய மூச்சுடன் கேட்டவனிடம்,
“துரைக்கு, வீட்டோட இருக்குற பொண்ணு தான் செட் ஆகுமாமே!, வேலை பார்க்குற பொண்ணெல்லாம் தோதுப்படாதுன்னு உங்கம்மா ரிஜெக்ட் பண்ணிடுச்சு” – கடுப்புடன் கூறினான் அருளப்பன்.
சுர்ர்ர்ர்ர்ர்ரெனக் கோபம் உச்சிக்கு ஏறியதில், கண்களை அழுந்த மூடி, தலையில் கை வைத்து, முடியை பிய்த்துப் போடாத குறையாக, அழுந்தக் கோதியவன், கடித்தப் பற்களுடன் கடுங்கோபத்தோடு, “அன்னமேரி…. நீ மா…..தா இல்ல.. சாத்….தான்!” என்று வசை பாடி விட்டு,
“இதெல்லாம் நடந்ததே எனக்குத் தெரியாது அருளப்பா” என்றான் தன்னைத் தானே நிந்தித்தபடி, நைந்து போன குரலில்.
“உனக்கு என்னா தான் டே தெரியும்?, ம்ம்?, parallel universe-ல பராக்கு பார்த்த மேனிக்க, நீ ஒரு ரகமா சுத்திட்டிருக்கியே லே?, அதெப்பிடி லே ஒரு ஆம்பளையால 35 வரை கல்யாணம் கட்டாமத் திரிய முடியும்?, எனக்கு… எனக்கு உன் மேல ரொம்ம்ம்ம்ம்ப டவுட்-ஆ இருக்கு லே!, ஒன்னு, நீ தேறாத கேஸா இருக்கனும்! இல்ல, தெருப் பொறுக்கியா இருக்கனும். உண்மையைச் சொல்லு லே”
- விடாது போட்டு இறக்கிய அருளப்பனின் ஆங்காரத்தில், ‘எல்லாம் என் நேரம்’ என நெற்றியைப் பிடித்தவாறு, நொந்து,வெம்பிப் போன அலெக்ஸ், உள்ளிறங்கிய குரலில்,
“கோட்டிப்பய மாதிரி பேசாத டே” – எனக் கூற, பதிலின்றி சற்று நேரம் அமைதி காத்த அருள்,
“அத்தை இருந்த வரைக்கும், அது கவலையெல்லாம் ஜெபாவோட கல்யாணத்தைப் பத்தி தான்! அவ அப்பன் செஞ்சுட்டுப் போனதை சொல்லிக் காட்டியே, இந்த இடம் வேணாம்ன்னு ஒதுங்கிப் போன மாப்பிள்ளை வீட்டாளுங்க.. நிறைய!, சரின்னு ஏத்துக்கிட்டு வந்தவனுங்க, பெரும்பாலும் சொத்து,பத்தத் தான் பெருசா பார்த்தானுங்களே தவிர, பொண்ணைப் பத்தி யோசிக்கலயேன்னு அதுக்கு விசனம்! தன்னைப் போல உருப்படாதவன் கையில சிக்கிடக் கூடாதுன்னு கவனம்! ரொம்பவும் தன்னை அலட்டிக்கிச்சு! இவளும், உன்னை மனசுல வைச்சுக்கிட்டு, கல்யாணம்,மாப்பிள்ளைன்னு பேச்செடுத்தாலே, பிடி கொடுக்காம.. சென்னைல உட்கார்ந்துக்கிட்டு அதுக்கு மேலும் குடைச்சலைக் கொடுத்தா! அம்மாவும்,மகளுக்குமிடையில எந்நேரமும் சண்டையும்,சச்சரவும் தான்! என் கிட்ட சத்தியம் வாங்கி, என்னையும் முடக்கிப் போட்டுட்டா!, பாவம், அத்தைக்கு இப்பிடி ஆகும்ன்னு அவளுமே எதிர்பார்க்கல!, திடகாத்திரமா இருந்த மனுஷி, இப்பிடி பொட்டுன்னு போகும்ன்னு யாருமே நினைக்கல” என்றான்.
“அவ அப்…பன்?”
“நல்லாத் தெம்பாஆ இருக்கான்.. கூத்தியாளுகளோட!, ஆடுன பாதம் சும்மாவே லே நிற்கும்?, அத்தை செத்ததுக்கு வந்தான்! விரட்டி அடிச்சுட்டோம்! இதுவரை அந்தாளை ஜெபா முகத்துல விழிக்க விட்டதில்ல நாங்க”
“………..”
“என்ன லே அமைதியாயிட்ட?”
“இல்ல” எனத் தொடங்கி பின், அடைத்தத் தொண்டையைச் செருமி சீர் செய்து கொண்டவன்,
“எனக்கே தெரியாம, சொந்த வாழ்க்கையை இப்பிடி சொதப்பி வைச்சிருக்கேனே!, இதையெல்லாம்……. நான் என்ன செஞ்சு சரிப்படுத்த?, ஒன்னுமே புரியல அருளப்பா….” – என்றான் பற்றற்றுப் போன மனதுடன்.
“ஹ்ம்ம்ம்ம்ம்” எனப் பெருமூச்சை வெளியிட்ட அருளப்பன், “அத்தை போன சோகம் கூட, உன் மேல கோபமா திரும்ப நிறைய வாய்ப்பிருக்கு. உன் மேல எந்தத் தப்புமில்லன்னாலும்..” என்று நிறுத்தினான்.
“………..”
பின், “ஆனா, அவங்கம்மா கண்ணீர் விட்டப்பவும், கலவரம் பண்ணப்பவும், ஏன், காடேறுன பிறகும் கூட…. அவ தன் எண்ணத்தை மாத்திக்கவே இல்ல!” – அமைதியான குரலில் கூறியவனைக் கேட்டு, நெகிழ்ந்து உருகிய மனது… கண்களைக் கலங்கச் செய்ய..
“இப்ப வரை… நீ மட்டும் தான் அவளுக்குங்குற பிடிவாதத்தோட தான் இருக்கா!, அது போதாதா…?, அதைப் புடிச்சுக்கிட்டு.. அவளை உன் பக்கம் இழுக்கப் பாரு” – என்று கூறியதில்,
மூக்கை உறிஞ்சியவாறு, “ஆயி-ய நினைச்சா வருத்தமா இருக்கு லே!, சொந்த மண்ணை விட்டு இப்பிடி ஒதுங்கி வந்து, ஊர் நடப்பைப் பத்தி கொஞ்சமும் தெரிஞ்சுக்காம, எனக்கென்னன்னு இருந்தது எவ்ளோ பெரிய தப்பு! நான் சரியா இருந்திருந்தா… எத்தனையோ விசயங்கள் தவறிருக்காதுல்ல?, என்னை, என்னால மன்னிக்கவே முடியல டே! ஜெபா வாழ்க்கைல நடந்த அத்தனை கெடுதலுக்கும் நான் தான் காரணம்-ங்குற மாதிரி குற்ற உணர்வா இருக்கு லே” – எனத் தவறனைத்தையும் தன் மீது போட்டுக் கொண்டவனை,
“கோட்டிப்பயலா டே நீயி?, நீ எப்படிக் காரணமாவ?, அவங்கப்பன் கூத்தடிச்சுத் திரிஞ்சதுக்கும், மனசை மறைச்சு இவ ஆடுன கண்ணாமூச்சி ஆட்டத்துக்கும், அத்தை திடீர்ன்னு செத்ததுக்கும் நீயா காரணம்?, எல்லாமே தன்னியல்புல நடந்த விஷயம் டே! நீ ஏன் பொறுப்பேத்துக்கிற?, இப்படித் தான் நடக்கனும்ன்னு இருந்திருக்கு! நடக்குது! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, அத்தையோட இறப்பு எங்க எல்லாருக்குமே அதிர்ச்சி தான்!, கொஞ்ச நாள் போயிருந்தா, அவளே அத்தை கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருப்பாளா இருந்திருக்கும், அதுவே முன்ன நின்னு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து கூட வைச்சிருந்திருக்கும்! எல்லாம் தடம் மாறிப் போனதால, விதி மாறிடுச்சு!” – என்று சமாதானம் செய்த அருளப்பன்,
“இனி நடக்கப் போறதையாவது உன் கைக்குள்ள வைச்சுக்கப் பாரு” – எனத் தொடர்ந்து கூற,
வேக மூச்சை வெளியிட்டவாறு, “என் முதல் ஜோலியே, எங்காத்தா மண்டையைப் பொளக்குறது தான்” என்று கறுவியவனிடம் புன்னகைத்த அருள்,
“உங்க கல்யாணம் வரைக்குமாவது விட்டு வை லே” எனக் கேலி செய்து விட்டு கால்-ஐ கட் செய்ய,
இன்னமும் சமாதானமடையாத மனது, அவளது அலைபேசித் திரையில் ஜெபாவுடன் நின்றிருந்த பெர்சியாவைக் கண்டு, அவருடனான பேச்சு வார்த்தைகளை எடுத்துக் காட்டி, மேலும் அவனை வருந்தச் செய்ய,
மகள் வாழ்க்கை குறித்த கவலையுடன் அரற்றித் திரிந்தவரிடம், ‘அன்னமேரி மகனை நல்லாத் தான் வளர்த்திருக்கான்னு சொன்னியே ஆயி, அந்த நல்லவனோட தான் உன் மவளுக்கு வாழ்க்கை அமையப் போகுது, சும்மா கண்ணைக் கசக்காம, சிரிச்சு,சந்தோசமா இரு ஆயி’-என நம்பிக்கை கொடுத்து, உரிமையாக அதட்டியிருக்கலாமே!,
நிலைமை, சீரழிவதற்கு முன் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாமே!, இத்தனை வருட அலட்டல்களையும் தவிர்த்திருக்கலாமே!’
நடந்த எதையும் மாற்றியெழுத முடியாத கையாலாகாதத் தனத்தை எண்ணி, அவஸ்தையாய் ஏறி,இறங்கியத் தொண்டையுடன், சிவந்து,கலங்கி விட்டக் கண்களோடு மழையை வெறித்தவன், திறந்திருந்த வீட்டினுள் கேட்ட சத்தத்தில் சட்டெனத் திரும்பினான்.
பின் கையிலிருந்த அலைபேசியை இறுகப் பற்றியவாறு, கடித்த உதடுகளுடன், தயக்கமாய் வீட்டுக்குள் நுழைந்தவன்,
இடப்புறமிருந்த வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தவளைக் கண்டவாறு, “ஃபோன்..” என சின்னக் குரலில் கூறியபடி, அவளை நோக்கி அலைபேசியை நீட்டினான்.
“அங்க வை” – என டேபிளைக் காட்டியவள், மேக்கப்பை வழித்தெடுத்து, முகம் கழுவி, மேலும்,சில பல க்ரீம்களை பூசுவதைப் பார்த்தபடி,
“குக் அக்காவைக் காணோம்?” எனக் கேட்டான். குரல் இன்னும் வெளிவரவில்லை.
“காலைல தான் வருவாங்க”
“அப்போ நைட்-க்கு?”
“புரியல?”
“நைட்… நீ மட்டும் தனியா படுத்துப்பியா?”
-அவன் கேட்டதும், க்ரீமினால் பளபளத்த முகத்தோடு திரும்பி ஒரு பார்வை பார்த்தவளின் தொனியைக் கருத்தில் கொள்ளாது,
“இன்னிக்கு மட்டுமா இல்ல தினமும் அந்தக்கா நைட் வீட்டுக்குப் போயிருவாங்களா?” – என்றான் சீரியசான முகத்துடன்.
“இன்னிக்கு மட்டும் தான்”
“ஓ” - என்றவனின் சோபை இழந்த முகத்தை அவதானித்தபடி, லிப் பாமை பூசியவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
“எனக்கும் கொஞ்சம் கொடேன்!, காலைல பனிக்காத்துல வெளியே வர்றதால, உதடெல்லாம் வறண்டு கிடக்கு” – என்று கை நீட்ட, எரிச்சலுடன் அவன் கையில் நொட்டென வைத்து விட்டு நகர்ந்தவளின் பின்னே லிப் பாமை உதட்டில் தேய்த்தவாறு தானும் சென்றவன்,
அவள் சமையலறையினுள் நுழைந்ததும்,
“சாப்பாடு இருக்கா?, சமைச்சு வைச்சுட்டுப் போயிருக்காங்களா?” எனக் கேட்டான்.
“ம்ம்” என்றபடி மூடியிருந்தக் கண்ணாடி bowl-ஐத் திறந்து, அதற்குள் ஸ்பூனை இட்டுத் திரும்பியவள்,
‘கேசரி சாப்பிட்டு, வாய் துடைக்காமல் விட்டது போல’, ஜொலித்த அவன் உதடுகளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கி, கிண்ணத்தை நோக்கிக் குனிந்து கொள்ள,
அதிலிருந்ததை எட்டிப் பார்த்தவன், கோணிய முகத்துடன், “என்ன இது?” என்றான்.
“ஸ்வீட் பொட்டேட்டோ-எக் சாலட்” – என்று பதில் கூறியவள் ஃபோர்க்கினால் அதைக் குத்தியெடுத்து வாய்க்குள் திணித்துக் கொள்ள, அருவெறுப்பில் உதட்டைச் சுழித்து,
“தோசை,இட்லியெல்லாம் திங்க மாட்டியா?” எனக் கேட்டான்.
“அது வெறும் carb!, இதுல carb-ஓட சேர்த்து protein,fibre எல்லாம் இருக்கு. ஹெல்தியர் சாய்ஸ்” – பொறுமையாக மென்றபடிப் பதிலளித்தாள்.
நாசூக்காக அவள் மெல்லும் அழகு, சாப்பிடத் தூண்ட,
“எனக்கும் ஒரு வாய் கொடு! ருசி பார்க்க” என்றான் ஆர்வத்துடன்.
மூக்கு விடைக்க முறைத்தாலும், தன் வாய்க்குச் செல்லவிருந்த ஸ்பூனை, அவனை நோக்கி அவள் நீட்ட.. ஆஆ-வெனத் திறந்து வாங்கிக் கொண்டவன், அதன் கேவலங்கெட்ட ருசியில் திணறி, மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது, அஷ்டகோணலான முகத்துடன் அவஸ்தைப்படுவது கண்டு, சிரிப்பை அடக்கிப் பார்த்தும் முடியாமல், இதழோரம் நீண்டு… பின் கலகலவென அவள் புன்னகைத்து விட,
வெள்ளை நிற நைட் கவுனும், காதோர செருகலை மீறி வெளி வரத் துடித்த, ஒரு பக்க ‘பாப்-கட்’ முடியும், மேக்-அப் இல்லாத, ஸ்ட்ரெஸ் இல்லாத, இயல்பான முகமும், நாடியோரம் விழுந்த முடிச்சுமாய்.., மலர்ந்து, விரிந்து கொள்ளை அழகாக சிரிப்பவளைக் கண்டு,
குற்ற உணர்ச்சி, இதயம் தொடங்கித் தொண்டை வரை நின்று அழுத்தியதில், சுருங்கி,சிறுத்துக் கலங்கிப் போன முகத்துடன், கரகரத்தக்குரலில்,
“ஆயி-க்கிட்ட என்னைப் பத்தி.. கடைசி வரை நீ தெரியப்படுத்தவே இல்லையா ஜெபா?” எனக் கேட்டான்.
மலர்ந்த முகம் மெல்ல வாட, ஸ்பூனை இறுகப்பற்றிய விரல்களால் கிண்ணத்திலிருந்தவற்றை அலைந்தவாறு,
“சொன்னேன்! அது இறக்குறதுக்கு முதல் நாள் நைட்” என்றாள்.
உடல் அதிர நிமிர்ந்தவனின் கண்கள் சிவந்து விட, மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் ஒரு சேரத் தாக்கியதில் திணறியபடி, அவசரமாய் அவளருகே நெருங்கி, கிண்ணத்தோடு அவள் கையைப் பற்றி,
“நி…நிஜமாவா ஜெபா?, நிஜமாவா?” எனக் கேட்டான ஆர்ப்பரித்த குரலை அடக்க முடியாது!
அவன் கையை விலக்கி, கிண்ணத்தை டேபிள் மீது வைத்தவள், அதன் மீதே சாய்ந்தபடி அவன் முகம் பாராமல்,
“அன்னைக்கு ரெண்டுல ஒன்னு சொல்லியே ஆகனும்ன்னு என்னோட சண்டை கட்டுச்சு!, நான் பார்க்குறவனைக் கல்யாணம் கட்டு, இல்ல, என் பாடைல விழுந்து அழுவுடி-ன்னு சத்தம் போட்டுச்சு! வாக்குவாதம் பெருகி, வாய்ச்சண்டையாகி… கடைசியில.. நான், என் மனசுல இருந்ததை சொல்ல வேண்டியதாப் போச்சு” என்றாள்.
“என்ன சொல்லுச்சு?, நீ என்னைப் பத்தி சொன்னதும்?” – அவள் ஏற்படுத்திய இடைவெளியைக் கடந்து, அவள் விலக முடியா தூரத்தில், நெருங்கி நின்று வினவினான் அவன்.
விழிகள் அந்நினைவில் தளர, விரக்தியாய் விரிந்த இதழ்களுடன், “சந்தோசத்துல அதுக்கு வாயடைச்சுப் போச்சு!, இதைச் சொல்லவாடி இத்தனை நாளா யோசிச்ச, கூறு கெட்டக் கோட்டிக் கழுதைன்னு திட்டுச்சு!, நாளைக்கே உங்கம்மா-கிட்ட பேசி, உன்னை மருமவனாக்கிக் காட்டுறேன்னு குதியாட்டம் போட்டுச்சு! நான் சொல்ல வந்த எதையுமே கேட்கல! என்னைப் பேச விடாம.. ஃபோனை வைச்சிருச்சு. அப்புறம் மறுநாள் காலையில… தூக்கத்துல.. உயிர் போயிட்டதா சேதி தான் வந்துச்சு” – தரையை நோக்கியபடி இறுகிய குரலில் கூறியவளிடம்.. என்ன சொல்வதெனப் புரியாமல்.. திகைத்த நிலையில் சமைந்து விட்டான் அலெக்ஸ்.
அருள் சொன்னது போல, தான் இதுவரை, parallel universe-ல் வாழ்ந்து வந்ததாகவே உணர்ந்தான். தன்னை எண்ணி, தனக்காகவே துடித்து, தன் வரவுக்காகக் காத்துக் கிடந்த உறவுகளின் தடயம் அறியாது, ஏக்கம் புரியாது, தற்குறியாய் காலம் கடத்தியது, அவமானத்தைக் கொடுத்தது அவனுக்கு.
இவையனைத்தையும் நொடியில்.. மாற்றியிருக்கலாம், இவள் நினைத்திருந்தால்!
கொதிப்பும்,குமுறலும் அகத்தை அழுத்தியதில் ஆங்காரத்துடன், அவள் நாடியைப் பற்றித் தூக்கித் தன் முகம் காணச் செய்து, சிவந்த விழி வழி கோபத்தைக் கக்கியபடி, நெரித்தப் பற்களோடு,
“அப்பிடி என்ன மக்கா ரோஷம் உனக்கு?, ஏதோ புரிதல் இல்லாம, ஒரு தடவை.. உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டேன்! அதை மாற்ற முயற்சிக்காம, கடந்தும் போகாம, மனசுலயே வைச்சிருந்து, இத்தனை காலமா.. வன்மம் வளர்த்து, உன்னையும் தண்டிச்சு, உன்னை சுத்தியிருக்கிறவங்களுக்கும் அநியாயம் பண்ணுவியா நீயி?
வயசும் மாறும் போது, மனசும் மாறிடும்ன்னு சொன்ன உன் நினைப்பு தப்பு டே!, உன்னைப் பத்தின என் எண்ணம் இன்னைக்கு வர மாறல, இனி என்னைக்கும் மாறாதுன்னு நீ குறிப்பு காட்ட வழியா இல்ல?, இத்தனை வருஷம் காக்க வைச்சு,பழி வாங்கி, என்னத்தடி சாதிச்சுட்ட?,”
“………..”
“என்னைத் தேடி வர எது மக்கா உன்னைத் தடுத்துச்சு?, ‘என்னை வேணாம்ன்னு தூக்கி எறிஞ்சவன் பின்னாடி நான் எதுக்கு போகனும்ங்குற’ - ஈகோவா?, அத்தனை ஈகோ பார்க்குறவ என்னத்துக்குடி காதலிச்ச?, பதில் சொல்லு மக்காஆ” – சினத்துடன் சீறியவனிடம்,
“ஏன்னா… என் எண்ணம் ஒரு தலைபட்சமானது!, நேசமென்ன, நேசம்.. என்னைப் பத்தின நினைப்பாவது… உன் மனசுல.. எந்த மூலையிலயாவது இருந்துச்சா?, என்னை நேர்ல பார்த்தும் கூட… அடையாளம் தெரியல உனக்கு?” – வெற்றுக்குரலில் கூறியவளைக் கேட்டு அவன் வாயடைத்துப் போய் நின்று விட,
தன் நாடியிலிருந்த அவன் விரல்களைப் பற்றிக் கீழிறக்கி, அவன் விழிகளை உணர்ச்சியற்று நோக்கியவாறு,
“உன் கிட்ட என்னைக்குமே… என் அன்புக்கான பிரதிபலிப்பே இருந்ததில்ல! அன்னைக்கு நீ காட்டுன உணர்வெல்லாம் வெறும் இரக்கமும், வயசுக்கோளாறுல விளைஞ்ச ஆர்வமும் தான்!, எந்த நம்பிக்கைல உன்னைத் தேடி வரச் சொல்ற?” – என அடக்கப்பட்ட கோபத்துடன் வினவியவள்,
“அன்போ,ஆசையோ இல்லாம… யாரோ ஒரு வேத்து (வேற்று) ஆளை, பார்க்குற மாதிரி நீ என்னைப் பார்த்தா…. என்னால தாங்கிக்க முடியுமா?” – கண்ணீர் தேங்கி விட்ட விழிகளுடன் கேட்க, அதைக் காணச் சகிக்காது,
“ஜெபாஆ….” – எனக் கெஞ்சலாய்த் தொடங்கியவனிடம்,
“உண்மை தான?” – எனக் கேட்டாள் அவள் கொஞ்சமும் இரக்கமின்றி.
“………” – அழுந்த மூடிய இதழ்களோடு நின்றவனிடம்,
“பதில் சொல்லு” – என்றாள்.
வலித்த நெற்றியைப் பற்றியவாறு, இருபுருவ மத்தியில் விரல்களைத் தேய்த்தவன், எச்சில் விழுங்கி, மெல்ல அவள் முகம் பார்த்தபடி,
“இப்ப அப்படியெதுவும் நடக்கல தானே மக்கா?” என்றான் இறங்கிய குரலில்.
“அதுவும் என் முயற்சியால”
“எது?, எங்கம்மா எனக்குப் பார்த்த பொண்ணையெல்லாம் கலைச்சு விட்டதா?”
“ஆமா, இல்லேன்னா, ஆணொன்னும், பெண்ணொன்னுமா இந்நேரம் 2 பிள்ளைகளுக்கு அப்பாவாகியிருப்ப” – கடுப்புடன் கூறியவளைக் கண்டு சிரித்தபடி,
“அதுங்க ரெண்டுத்துக்கும் நீ தான் அம்மாவா இருக்கனும்ன்னு விதி இருந்தா என்னாடி பண்றது?” – என இலகுவான குரலில் கூறியவனைக் கேட்டு இறுகிய முகத்துடன் எங்கோ வெறித்தவளை… விடாது நோக்கி..
பின் அவள் மீது மொத்தமாய் சாய்ந்து,
அழுத்தமில்லாது கழுத்தைப் பற்றி அடிக்குரலில், “இப்ப என்னடி பண்ணனும்ன்ற என்னைய?, ஆசையில்ல,நேசமில்ல,பாசமில்லன்னு நீ பக்கம்,பக்கமா வைக்குற விளக்கத்தைக் கேட்டு, எம் பொழப்பைப் பார்த்துட்டு திரும்பிட்டுப் போறதா நான்?, ம்?,
இத்தனை வருசமா.. கடுப்பாகவோ, காதலாகவோ.. என்னையே நினைச்சுக்கிட்டு ஒருத்தி..! எப்பவோ அறியாத வயசுல பகிர்ந்துகிட்ட எண்ணங்களை மனசுல தேக்கிக்கிட்டு! அது தெரிய வந்தும், தவிர்த்துட்டுப் போற அளவுக்கு நான் என்ன பெரிய இவனா?, என்னையெல்லாம் உன்னை மாதிரி பொண்ணுங்க பார்க்குறதே பெரிய விசயம்டி!, இதுல இத்தனை நேசத்தோட.. உருகிக் கரைய வைக்குறவளை எப்பிடிடி விட முடியும்?, நீ என்னை எவ்ளோ வேணும்னாலும், ஆசை தீர அலைய விடு!, ஆனா… எல்லாம் என் பொறுமை கரையுற வரை தான்! அப்புறம்” எனப் பற்றியிருந்த கையில் அழுத்தம் கூட்டித் தன்னருகே அவளை இழுத்துக் கொண்டவன், “உன் காலடியில கிடந்து, கதறி அழுது, கரைச்சல் பண்ணியாச்சும், கட்டித் தூக்கிட்டுப் போயிடுவேன்” – எனக் கூற,
பெரிதாக எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாது அழுத்தமாகவே தன் கண்களைச் சந்தித்தவளிடம்,
“என்ன சொன்ன?, வயசுக்கோளாறுல விளைஞ்ச ஆர்வமா?, அன்னைக்கு.. எனக்கு இருந்த வயசு தான் கோளாறு பண்ண சொல்லுச்சா?, நீயென்ன நூத்துக் கிழவியாகவா இருந்த?,” எனக் கேட்டவன்,
நிதானத்துடன், “அப்போ இருந்ததும் நேசம் தான் ஜெபா.. என்ன,அதை பொறுப்புணர்ச்சி தோற்கடிச்சிடுச்சு!, இப்போ… அதே பொறுப்புணர்ச்சி தான் அளவுக்கதிகமா உன்னை நேசிக்கச் சொல்லுது ஜெபா…” – என்றவனை முடிக்க விடாது,
“கட்டாயப்படுத்தி?” – ஏறி இறங்கியத் தொண்டை வழி, வெளி வராத குரலில் கேட்டவளது அகம் அறிந்த புரிதலுடன்,
“ஆமா… இந்தக் கட்டழகியை!” என்றான் அவன்.
“ப்ச்” – வெறுப்பாக அவன் கையை விலக்கி முகம் திருப்பிக் கொண்டவளைக் கண்டு புன்னகைத்து, “உன் நேசம் அரிதா, என் நேசம் பெரிதா-ன்னு சண்டை கட்டியே தெரிஞ்சுக்கலாம் ஜெபா…! எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!” என மெல்லிய குரலில் அவள் காதோரம் முணுமுணுத்தவன், தகித்த அவளது கன்னங்களை உணர்ந்து, தளர்ந்த மூச்சுடன், அவள் கழுத்தோரம் முகம் சாய்க்க எத்தனிக்க,
அவன் முயற்சி புரிந்து, தோளைத்தூக்கி, தலையைச் சாய்த்து, கழுத்தைச் சுருக்கி அவள் அனுமதி மறுத்ததில், கிறங்கிய விழிகளுடன் உச்சுக் கொட்டி முறைத்தவன், அவள் பிடரியை இறுகப்பற்றி தன் முகத்தருகே நெருக்கி, மூச்சுக்காற்று உரசும் தூரத்தில்..
“தினம் காலைல இந்தக் கழுத்தோரத்துல நான் கண்ணு முழிக்குற நிலைமையும் வரத் தான் டி போகுது! அப்போ என்ன செஞ்சு என்னைத் தடுக்குறன்னு பார்ப்போம்” என்றவன், குனிந்து, அவள் இடது கன்னமும், தாடையும் இணையுமிடத்தில் அழுத்தமாய்ப் பற்களைப் பதித்து விட்டு, சட்டென விலகி வாசலை நோக்கி நடந்து விட்டான்.
நின்றால்.. கன்னச்சதையை பெயர்த்தெடுத்து விடுவாள்! ரத்தக் காட்டேரி!
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து?
