7.1. விச்சுளிப் பாய்ச்சல்!
கடும் வெயிலையும், சுடும் அனலையும், கடிபடும் நகங்களுடன் தங்களையே தொடரும் பதற்ற விழிகளையும் கொஞ்சமும் பொருட்படுத்தாது, அந்தக் குட்டிச் சுவரினருகே, பெருங்கோபத்துடனும், கொலைவெறியுடனும் ஒருவரையொருவர் இமை சிமிட்டாது நோக்கியபடி, நெற்றியிலிருந்து வழிந்தோடும் வியர்வையை அலட்சியம் செய்தவாறு.. ஆக்ரோஷ மூச்சுடன், அகட்டிய கால்களுடன், சற்றே முன் குனிந்து, குஸ்தி போடும் pose-ல், இறுக்கிய முஷ்டியை உதறியபடி எதிரெதிரே நின்றிருந்த அலெக்ஸ் மற்றும் சின்னப்ப தாஸின் உதடுகள்,
Ro…..ck……. Pa…..per….. Scis…….sors…… Shooooooooooooooot…… - எனத் தங்களைச் சூழ்ந்திருந்த gangster கணேஷ் மற்றும் அவனது gang சுள்ளான்களோடு சேர்ந்து சத்தமாக உச்சரித்துக் கொண்டிருந்தது.
இந்த மீட்டிங்கும், ஃபைட்டிங்கும் எப்படி சாத்தியமானதென்பதை அறிந்து கொள்ள நாம் சிறிது காலம் முன்னே செல்ல வேண்டியிருக்கிறது!
ஸ்லைடுகளை வாசித்து முடித்த மறுநாள் gangster-ஐச் சந்தித்தான் அலெக்ஸ். காலனியைத் தாண்டி பிரதான சாலையிலிருந்த பேக்கரியில் அவன் முட்டை பப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை,
“அலெக்ஸ் ப்ரோஓஓஓ” – என்றழைத்தபடி முகம் முழுக்க சிரிப்புடன் gen-z-க்கே உரிய உடல் மொழியோடு, wide leg jeans, round neck tshirt, clogs-சகிதம் k-pop பாணியைப் பிரதிபலித்தவாறு அருகே வந்தவனின் குறுகிய தோற்றத்தைக் கண்டு,
“வா டா காவாலி கணேஷூ!, ஏன் டா டேய்ய்ய், 4-அடில ‘புலாசுலாக்கி’ மாதிரி இருந்துக்கிட்டு, உனக்கு gangster-ன்னு பட்டப்பேரா டா?, இருக்குற உசரத்துக்கும், பார்க்குற வேலைக்கும் கொஞ்சமாவது சம்மந்தமிருக்கா பாரு! வெசம்,வெசம்,வெசம்” – என அவன் முன் நெற்றி முடியைப் பிடித்து ஆட்டியவாறு கூற,
அவன் கையைத் தட்டி விட்டு, முசுட்டு முகத்துடன்,
“முடியைக் கலைக்காதீங்க ப்ரோஓஓ” – என்று நீவிக் கொண்டவனைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கி,
“பப்ஸ் சாப்பிடுறியா டா?” – எனக் கேட்டான்.
“ம்..ஹ்..ம்.. பன் பட்டர் ஜாம் சொல்லுங்க” என்று விட்டு.. ஆர்டர் செய்யப் போன அலெக்ஸை, “ஒரு செல்ஃபி ப்ரோ” என நிறுத்தி, பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்து, உயரத் தூக்கி, வாயைச் சுழித்து, ஒரு புருவத்தை உயர்த்தி, ஒரு கண்ணைச் சுருக்கி, அவனோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
அதை உடனடியாக ‘அரட்டை வித் பரட்டை’ – என்ற caption-னுடன் தன் Instagram story-ல் பதிவேற்றி, அதற்குப் படபடவென வந்து விழுந்த லைக்குகளுக்கும், கமெண்ட்டுகளுக்கும் கர்வத்துடன் பதிலளித்தபடி ஃபோனுக்குள் தலையைக் கவிழ்த்திருந்தவனின் முன் பன்,பட்டர்,ஜாமை வைத்து விட்டு, எதிரே அமர்ந்த அலெக்ஸ்,
“சொல்லு டா புலாசுலாக்கி, AJ designs-க்கும், உனக்கும் என்ன சம்மந்தம்? எதுக்கு அவளை டார்கெட் பண்ற?” எனக் கேட்டான்.
“சம்மந்தம் எனக்கில்ல! தாஸ் அண்ணனுக்கும், அந்தக்காவுக்கும் தான்” - அலட்சியமாய்க் கூறியவனிடம்,
“தாஸா?,” – ‘ஆண்’ பெயரைக் கேட்டதும், சுறுசுறுவென தலைக்கேறிய கோபத்தோடு “எவன் டா அந்த நாய்?” – என அடிக்குரலில் வினவியவனின் கேள்விக்கு நீண்ட பதிலை சொல்லத் தொடங்கினான் gangster.
அதாகப்பட்டது, கலிலியோ காலனி மூன்றாவது தெருவில் வாடகைக்குக் குடியிருக்கும், சாஃப்ட்வேர் இஞ்சினியரான சின்னப்ப தாஸூக்கு, அதே தெருவில், எதிர்வரிசையில், இரண்டாவது வீட்டில் வசிக்கும் ஸ்லீவ்லெஸ் அக்காவின் மீது ஒரு ‘இது’.
அவள் ஒவ்வொரு முறையும் இன்ஸ்டாக்ராமில் புதிதாக வீடியோ அப்லோட் செய்யும் போது, முதல் ஆளாக லைக் செய்து, தானொரு ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமாரின் விசிறி என்பதை நிரூபிக்கும் வகையில் comment section-களை, ‘சோக்கு சுந்தரியே, ‘குமுதம் போல் வந்த குமரியே’, ‘நான் வானவில்லையே பார்த்தேன்’- போன்ற பாடல் வரிகளால் spam செய்யும் ஒரே ஃபேக் ஐடி, ‘MS_DOS’ எனும் இன்ஸ்டா ஹாண்டிலைக் கொண்டிருக்கும் சின்னப்பதாஸ் தானாம்!
சமுத்திரத்தில் விழுந்த ஒற்றை மழைத்துளி போல, கமெண்ட் செக்ஷனில் அவன் வடிக்கும் இன்பக் கவி invisible ஆகி விடுவதால், அவளது கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டி, அவன் பற்பல டகால்டி வேலைகளைச் செய்ய வேண்டியிருந்ததாம்!
ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமை, மாரியம்மன் கோவிலில் ஊற்றிய கூழை, ‘ஒன் பை டூ’-வாகப் போட்டு ஒரு பாகத்தைத் தனக்கும், மற்றொன்றை அவளுக்கும் ஒரு தூக்குபோசியில் நிரப்பிக் கொண்டு அவள் வீட்டுக்கதவைத் தட்டியிருக்கிறான்.
ஃபில்டர் இல்லாத முகம் பொன்னாய் ஜொலிக்க, மென் சிரிப்புடன் கதவைத் திறந்தவள், மஞ்சள் பூப் போட்ட நைட்டியிலிருந்ததை நல்ல சகுனமாக நினைத்துக் கொண்டு, தடக்,தடக் என ரயில் ஓட்டிய இதயத்தை இழுத்துப் பிடித்தபடி,
“நான்…. தாஸ்! இங்க தான்.. எதிர் வீட்ல குடியிருக்கிறேன்! என்னைப் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்” – என்றவனைக் கண்டுப் புருவம் சுருக்கினாலும், ‘ஆம்’ எனத் தலையாட்டியவள், கேள்வியாய் நோக்குவது புரிந்து, வேகமாகத் தன் கையிலிருந்த போசியைத் தூக்கிக் காட்டி,
“இன்னிக்கு மாரியம்மன் கோயில்ல ஒரு வேண்டுதல்! அதான்… கூழ் காய்ச்சி ஊத்தினோம்! எனக்கு… இதுல எல்லாம் பெருசா நம்பிக்கையில்லைன்னாலும், எங்கம்மாவோட கட்டாயம்! என் உடல் ஆரோக்கியம், உயர் பதவி, கல்யாணம்ன்னு… எங்கம்மாவுக்கு என்னைப் பத்தி ஏகப்பட்ட கவலை! அதெல்லாம் ஒவ்வொன்னா சீக்கிரம் நிறைவேறனும்ன்னு இப்பிடி வேண்டிக்கிட்டு… கோயில்,கோயிலா என்னைய அலைய விடுது” – கட்டை விரலால் கோலம் போடாத குறையாக, ‘கல்யாணம்’ எனும் வார்த்தையை ‘soft tone’-னிலும், ‘எங்கம்மாவுக்குக் கவலை’-யெனும் போது ‘என் தாயெனும் கோயில்’ ரீதியில் அன்பும், செல்ல அலுப்புமாகவும் கூறியவன்,
‘தன் marital status, single’ என்பதையும், தான் ‘tamil matrimony-ல் அக்கௌண்ட் வைத்திருப்பவனென்பதையும், தன் வாழ்வில் ‘தாய்க்கு அடுத்து தாரம் தான்’ என்பதையும், சிக்குக் கோலம் போட்டுச் சொல்லி விட்டான்.
காலிங் பெல்லை அடித்து விட்டுக் கதை பேசிக் கொண்டிருப்பவனின் நோக்கம் புரியாமல், இன்னும் சுருக்கிய புருவங்களுடன் நிற்பவள், காண்டாகுவதற்கு முன் அவசரமாக போசியை நீட்டி,
“கூழ்… உங்களுக்குத் தான்! நம்ம தெருவுல.. எல்லார் வீட்டுக்கும் கொடுத்துட்டேன்! அதான்…. உங்களுக்கும்..” என்று அவன் கூறியதும், அவளது சுருங்கிய புருவங்கள் இயல்பு நிலைக்குச் சென்று விட, ஆசுவாச மூச்சை வெளியிட்டவனிடம், அவள் தன், curtain bangs அசைய மறுப்பாகத் தலையசைத்தாள்.
“ஐம் சாரிங்க! நான் க்ரிஸ்டியன். ப்ரேயர் ஃபூட் எல்லாம் நான் சாப்பிட்றதில்ல!” – என்று அவள் முடிப்பதற்குள்,
“ஓ! ஜீஸஸ்” என்றவன், உள்ளே எழுந்த ஏமாற்றத்தை விழுங்கி விட்டு,
“நானும் சாரிங்க! எனக்கு இது தெரியாது. எனி வே, உங்க குக் குமுதாக்கா, சாப்பிடுவாங்க தானே?, அவங்களுக்குக் கொடுத்துட்றீங்களா?, சாமி பிரசாதம்! திருப்பி எடுத்துட்டுப் போ வேணாம்ன்னு தான்” – இழுத்தவனிடம், சரி எனக் கூறி வாங்கிக் கொண்டாள் அவள்.
“சு…சுடுது.. சுடுது.. பார்த்து” என்றவனின் விரல்கள் லேசாக அவளது விரல்களோடு உராய்ந்ததில், உள்ளம் துள்ள,
“பட், எனக்கு கிறிஸ்டியன்ஸ் வீட்ல பண்ற ப்ளம் கேக்-ன்னா ரொம்பப் இஷ்டம்ங்க! ஸ்கூல்ல என் கூடப் படிச்ச ஆரோக்கியராஜூ கிறிஸ்துமஸ் சமயத்துல எடுத்துட்டு வருவான்! அதே மாதிரி கேக், நீங்க கொடுத்தா கூட… சந்தோசமா… சாப்பிடுவேன்ங்க! அதோ.. அந்த மாடி வீட்ல தான் நான் தங்கியிருக்கேன்! இந்த வருசம் கேக் செஞ்சா மறக்காம கொடுங்க” – எனக் கடையில் கேக் வாங்கித் திங்க வக்கில்லாதவன் போல, வெட்கமில்லாமல் ‘அப்ளிகேஷன்’ போட்டுச் சென்றவனை அவள் புன்னகை மாறாத முகத்துடன் வழியனுப்பி வைத்திருக்கிறாள்.
இது போக, அவள் வீட்டை விட்டு வெளியே போகும் போதும், வரும் போதும், தெருவில் நடந்தவாறு செல்ஃபோனில் பேசிக் கொண்டும், மொட்டைமாடியில் காற்று வாங்கியபடி நோட்டம் விட்டுக் கொண்டும், காலனியிலிருந்துப் பிரதான சாலை வரை அவளது காருடன் parallel-ஆக வண்டியில் செல்வதுமாக.. அடிக்கடி அவள் கண்ணில் பட்டு,பட்டுக் கருத்தில் நிறைய பெரு முயற்சியெடுத்திருக்கிறான்.
அத்தோடு அவ்வப்போது ‘ஹாய்’, ‘குட்மார்னிங்’, ‘சாப்பாடு ஆச்சா’, ‘இன்னிக்கு ரொம்ப வெயில்’, என்பது போன்ற ‘casual talk’-களையும் அவளிடம் நேரடியாகத் தொடங்கியிருக்கிறான்.
அப்படியாக ஒரு நாள், தொள தொள ட்ரவுசரும், ஸ்லீவ்லெஸ் பனியனுமாய் பைக் துடைத்தபடி எதிர் வீட்டு வாசலையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தவன், தன் வீட்டிலிருந்து வெளிப்பட்டவள் அவனை நோக்கி சிறு புன்னகையைச் செலுத்தி விட்டு சற்றுத் தள்ளியிருந்தத் தன் காரை நோக்கி நடப்பது கண்டு, அவசரமாக,
“நானும் வாங்கிட்டேன்-ங்க” என்றான் சத்தமாய்.
என்னவென்பது போல் நின்று நோக்கியவளிடம்,
“Glycolic acid. 7%. Exfoliating toner” என்றான்.
முந்தைய நாள் அவள், தனது ‘AJdesigns’ இன்ஸ்டக்ராம் பக்கத்தில், பெருவாரியான followers-கள், பதிலளிக்கச் சொல்லிக் கேட்கும் ஒரே topic-ஆன ‘Underarms care’-குறித்த வீடியோவைப் பதிவேற்றம் செய்திருந்தாள். அதில், அவள் மேற்கூறிய ஆசிட்டை உபயோகிக்கும் படி பரிந்துரை செய்திருக்க, இன்று இவன் அதை சொல்லிக் காட்டியதும், ‘அடக் கிறுக்கு கம்னாட்டி’- என்று தோன்றினாலும், அசட்டுச் சிரிப்புடன் தலையாட்டி விட்டு நகரப் பார்த்தவளிடம்,
“உங்க வீடியோஸ் எல்லாத்தையும் நான் ஃபாலோ பண்றேன்-ங்க! நீங்க, போன வாரம் ஆம்பளைங்களுக்கு introduce பண்ணியிருக்கிற எத்னிக் ஜாக்கெட்டு! ஸ்லீவ்லெஸ்ஸூ… நான் தான்ங்க ஃபர்ஸ்ட் ஆர்டர் போட்டேன்! Mint green! ரொம்ப நல்லாயிருந்துச்சுங்க.. இந்தத் தீபாவளிக்கு அதைத் தான் போடலாம்ன்னு இருக்கேன்!” – என்று அவன் தொடர்ந்து உளற..
கஸ்டமரை ‘கம்னாட்டி’ எனத் திட்டியதற்கு வருந்தி விட்டு, முகம் மலர,
“இந்த வீக் இன்னும் நிறைய கலர் கலெக்ஷன்ஸ் வர இருக்கு! கண்டிப்பா செக் பண்ணுங்க! உங்க ஃப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்களுக்குக் கூட சொல்லுங்க! வெப்சைட்ல பல்க் ஆர்டர் போட்டீங்கன்னா, நிறைய ஆஃபர் இருக்கு. அது போக, டிரஸ் எப்படியிருந்ததுன்னு ரிவ்யூஸ் & feedbacks வெப்சைட்லயோ/இன்ஸ்டாலயோ கொடுக்கலாம்! நாங்க எங்க ப்ராடக்டோட தரத்தை மேலும் உயர்த்த ரொம்ப உதவியா இருக்கும் ” – என்று அவள் பிசினஸ் பேசத் தொடங்கியதும், பேய் முழி, முழித்து மண்டையை,மண்டையை ஆட்டியவன்,
“எல்லாமே ஓகே தான்-ங்க!, என்ன…. இந்த ஆசிட் மட்டும், தேய்ச்சதும்.. லைட்-ஆ எரியுது” – என்றதும் பதறிப் போனவள்,
“அது.. அது எ..எல்லாருக்கும் செட் ஆகாதுங்க! எதுக்கும் நீங்க dermatologist கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு யூஸ் பண்ணுங்க” எனக் கூற,
“அதெல்லாம் எதுக்குங்க?, எனக்கு டாக்டரு, ட்ரைனரு, ஸ்டைலிஸ்ட்டு, நியூட்ரிஷனிஸ்ட்டு, ட்ராவல் அட்வைசரு, கனவுக்கன்னி….. எல்ல்ல்ல்ல்ல்ல்லாமே நீங்க தான்ங்க” – இடைச்செருகலாக ‘கனவுக்கன்னியை’ மியூட் மோடில் போட்டு… இதுவரை அவள் வீடியோவைப் பார்த்து அவன் செய்து கொண்ட ஸ்கின் & ஹேர் கேர், எடுத்துக் கொண்ட டயட் & உடற்பயிற்சி,சென்று வந்த இடங்கள் என அத்தனையையும் லூசு போல ஒப்பித்திருக்கிறான்.
தனது ‘அதி தீவிர ஃபாலோயர்’ என்கிற பெருமையும், எங்கே தானளிக்கும் அரைகுறை இன்ஃபர்மேஷன்களை, குருட்டுத்தனமாய் பின்பற்றி, தன்னைக் கொலைக் கேசில் உள்ளே தள்ளி விடுவானோ என்கிற பீதியுமாய், அவள் மெல்லச் சிரித்து,
“அ…அ…அது வந்து… என்ன தான் நாங்க.. legitimate sources-கிட்டயிருந்து கிடைக்குற விஷயங்களைத் தான் ஃபாலோயர்ஸ்க்கு share பண்றோம்ன்னாலும், நீங்க.. எதுக்கும் இது சரியா, உங்களுக்கு ஒத்து வருமான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு.. அப்புறமா எதுனாலும்.. ட்ரை பண்ணுங்க” – என்று பொதுவாய் அறிவுறுத்தி விட்டு.. இனி ஒவ்வொரு வீடியோவிற்கும் டிஸ்க்ளைமர் போட வேண்டுமென எண்ணிக் கொண்டு அவசரமாய் விடைபெற்றுத் தப்பித்துச் சென்று விட்டாள்.
இப்படியாக, அவளது அழகிற்கும், வனப்பிற்கும், ஸ்டேட்டஸிற்கும் தன்னையெல்லாம் ஒரு ஆளாக மதித்து நின்று பேசவா போகிறாள் என்றும், ஒரு பார்வையில் தன் நோக்கம் புரிந்து தன்னை முறைத்தோ,திட்டியோ,அடித்தோ விரட்டி விடுவாள் என்றும் அவன் பயந்ததற்கு மாறாக, அவள், ‘avoid’ செய்யாது ‘eye contact’ வைப்பதும், அழகாய்ப் புன்னகைப்பதும், இனிப்பாய்ப் பேசுவதும், அவனது confidence-ஐத் தாறுமாறாக ஏற்றி விட்டதில்,
அவன், என்றேனும் ஒரு நாள் துணிந்து ரோஜாவை நீட்டும் போது அவள், ‘ரா…..ஜா..’ என ஓடி வந்து, தன்னைத் தாவி அணைத்துக் கொள்வாள் எனத் தினம்,தினம் கனவு கண்டு கொண்டிருக்கிறானாம்!
லாடு,லபக்கு தாஸின் லவ் ஸ்டோரியைக் கேட்டு காண்டாகிப் போன அலெக்ஸ், தன் எதிரே அமர்ந்திருந்த gangster-ரிடம்,
“தாஸ், கூடிய சீக்கிரமே தேவதாஸா மாறப் போறான். அவனை பெட் ஷாப்க்குக் கூட்டிப் போய், நல்ல நாயாகப் பார்த்து வாங்கிக் கொடு!,” – என்றான் எரிச்சலுடன்.
“ஏ…..ன்?” – அதுவரை அமர்ந்திருந்த இலகு நிலை மாறி, வெடுக்கென நிமிர்ந்தமர்ந்த கணேஷின் உடல் மொழியை அளவெடுத்தபடி,
“பார்ராஆஆஆ” – எனப் பல்லைக் கடித்தவன்,
“AJ designs-ல இருக்குற A, J-வோட abbreviation என்னன்னு தெரியுமா டா உனக்கு?” எனக் கேட்டான்.
“உங்களுக்குத் தெரியுமா?” – அலட்சிய பாவனையுடன் வினவியவனிடம்,
“J for Jebamalar, A for இந்த அலெக்ஸூ டா” – எனத் தன் நெஞ்சைத் தட்டிக் கூறியவனைக் கண்டு,
“ம்க்க்கும்” என்ற gangster, மீண்டும் சாய்ந்தமர்ந்தபடி,
“அருணு, அன்பு, அசோக்கு, அஸ்வினு-ன்னு, எங்க ஏரியாவுக்குள்ள மட்டும் 4 பேரு, அந்த ‘A’-க்கு சொந்தக்காரன் அவிங்க தான்-ன்னு சொல்லிட்டுத் திரியுறானுங்க!” – என்று கேவலமான டோனுடன் கூற,
“டேய், டேய்…” எனப் பல்லைக் கடித்துப் பொங்கியவன், அவசரமாய்த் தன் பாண்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து செல்ஃபோனைக் கையிலெடுத்து கல்லூரி காலம் தொடங்கி கடைசியாக ‘alumni meet’ வரை, என்ன தான் கூட்டத்தோடு கூட்டமாய், தூர,தூரமாய்த் தள்ளி நின்றிருந்தாலும், இருவருமாயிருந்த புகைப்படங்களைக் காட்டி,
“எஞ்சோட்டுக் கிளி டா அவ!, மத்தவனெல்லாம் இலவு காத்தக் கிளி டா” என்றான்.
அலைபேசியைத் தன் கையில் வாங்கி, “இது ஒரிஜினிலா?, ஏஐ-ஆ?” – என அதன் நம்பகத்தன்மையை சோதித்தவனின் தலை முடியைப் பிடித்து ஆட்டி,
“அண்ணனையே சந்தேகப்படுறியா டா?” – என்று கோபப்பட, “ண்ணாஆ, வலிக்குது ண்ணாஆ, விடுங்கண்ணா” எனப் போராடித் தன்னை விடுவித்துக் கொண்டவன்,
“அந்தக்கா ‘கமிடட்’-ன்னு இதுவரை எந்த ப்ளாட்ஃபார்ம்லயும் சொன்னதே இல்லையே?, நீங்களா அவங்க ஆளு?” – ‘அந்த சொப்பன சுந்தரிக்கு இப்படியொரு சொங்கி நாயா’ – ரீதியில் கோணிய வாயுடன் கேட்டதும்,
கண்களை அழுந்த மூடி ‘உண்மை கசக்கத் தானே செய்யும்’ – எனத் தேற்றிக் கொண்டு, டீஷர்ட்டின் காலரை இழுத்து விட்டவாறு “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியவன், “காதலுக்கு மனமும், குணமும் தான் டா கணேஷூ முக்கியம்! நீ சுள்ளான்! உனக்கு இதெல்லாம் புரியாது” என்றான்.
“ஓஹோஓஓஓ” – என இழுத்தவன், “சரி, இப்பவே அந்தக்காவுக்கு ஃபோனைப் போடுங்க! ‘இந்தப் பரட்டை தான் என் பார்ட்னருன்னு’ அந்தக்கா சொல்லட்டும்! நான் நம்புறேன்” என ட்விஸ்ட் வைத்தான்.
இதை எதிர்பாராத அதிர்ச்சியில், விழிகள் தடுமாற, அவனிடமிருந்துப் பார்வையை அகற்றி, விரல்களால் செல்ஃபோனைத் தட்டியபடி, கீழ் உதட்டின் பின்னே நாக்கை மடக்கிப் பின்.. கடித்தப் பற்களுடன், மூக்கை விடைத்துப் பெருமூச்சை வெளியிட்டவன்,
மெல்ல அவன் புறம் திரும்பி, பம்மிய குரலில்,
“ந..ந..நம்… நம்பர் இல்ல தம்பி” என்றான்.
கடுப்பில் கையிலிருந்த ‘பன்’-ஐ சொத்தெனத் தட்டில் எறிந்து விட்டு, தலை சாய்த்து அவனை முறைத்துப் பார்த்தவனை எதிர்கொள்ள முடியாது,
“அது வந்து.. அவ… அவ… இப்ப என் மேலக் கொஞ்சம் கோவமா….” – எனத் தொடங்கியவனைக் கையமர்த்தித் தடுத்து விட்டு,
“10 வருஷத்துப் பழைய ஃபோட்டோவை மார்ஃபிங் பண்ணிக் கொண்டு வந்து, ‘நான் தான் அந்தக்காவுக்கு மாமா-ங்குறியே?’, எதுக்குண்ணே உனக்கு இந்த மானங்கெட்டப் பொழப்பு?,” என்று அவன் மானாவாரியாய்க் கேட்க,
அவமானம் தாங்காமல், கொதித்துப் போய் அமர்ந்திருந்தவனை மேலும் வெறியேற்றும் பொருட்டு,
“மலையூரு_நாட்டாமை Insta handle தெரியுமா உங்களுக்கு?, அந்தக்காவோட வெறித்தனமான ரசிகன் அந்தாளு! அவனையும், அந்தக்காவையும் சேர்த்து.. மும்மத பாணியில கல்யாணம் பண்ணி, 10 புள்ள பெத்து, பத்தாவது புள்ளைக்கு பசுபதின்னு பேரு வைச்சு.. ரகரகமா எடிட் பண்ணி விதவிதமா ஃபோட்டோ போட்டுட்டிருப்பான்! நீ அவனையே மிஞ்சிட்டியேண்ணே??” – ‘புலாசுலாக்கி’ பிச்சு உதறியதும்,
பெருத்த அசிங்கத்திற்கு ஆளாகிவிட்டதை உணர்ந்து, என்ன சொல்லி தன்னை நிரூபிப்பதென்றும் புரியாமல், “டேய்ய் கணேஷூ, கந்தல்,கந்தலாப் பிரிச்சுருவேன் டா உன்னைய! ” – கத்தியவனிடம், கோடாய் இறுகிய இதழ்களோடு, முகத்தை ‘ஸ்ட்ரிக்டாய்’ வைத்துக் கொண்ட gangster,
“நெய்விளக்கு,எள்விளக்கு, அங்கப்ரதக்ஷனம், அடிப்ரதக்ஷனம், அமாவாசைக்கு அன்னதானம் போடுறது, பௌர்ணமிக்குப் படையல் போடுறதுன்னு… அந்தக்கா கிடைக்கனும்-ங்குறதுக்காகவே எங்க தாஸ் அண்ணேன் மாசக் கணக்கா, மாரியம்மன் கோயில்லயே தவமா கிடக்குறாரு! இது போதாதுன்னு, வர்ற திருவிழாவுல தீ மிதிக்க வேற தயாராகிட்டிருக்கிறாரு தெரியுமா உங்களுக்கு?” – ஆக்ரோஷமாய்க் கூறுகையில், இடைபுகுந்து,
“ப்ச், டேய் அவ கிறிஸ்டியன் டா” – ‘லூசுப் பயலுகளா’ ரீதியில் அலெக்ஸ்.
“அதெல்லாம் மாதா கோவில்லயும் மணி தீபம் ஏத்திக்கிட்டு தான் இருக்காரு”
“எல்லாஆஆஆம் வேஸ்ட்டாப் போகப் போகுது டா வெட்டிப் பயலுகளா!, ஐயோ! இவன் கிட்ட முழுசா எதையும் சொல்லவும் முடியல!, குறையா முடிக்கவும் முடியல” – எனப் புலம்பியவனிடம்,
“தாஸ் அண்ணேன் காதலை எப்பிடியாவது சேர்த்து வைப்பேன்னு நான் அவருக்கு வாக்கு கொடுத்திருக்கேன்! நீ இடையில வந்து குழப்படி பண்ணாம, சைலண்ட்-ஆ ஒதுங்கிக்கப் பாருண்ணே!, இல்ல, பூக்குழில உன்னையும் இறக்கிருவோம்” – 4-அடி உசரத்தை வைத்துக் கொண்டு நாக்கை மடக்கி மிரட்டினான் gangster.
அவனது ‘வார்னிங்கை’ கண்டுகொள்ளாது,
“அப்பிடி என்னா டே உனக்கு அவன் மேல பாசம்?” – எனக் கேட்டவனிடம்,
“பாசம் இல்லண்ணே! பழி……வெறி” – துளிர்க்கத் தொடங்கியிருந்த மீசை துடிக்கச் சொன்னான் அவன்.
“பழிவெறியா?”
“ஆமாண்ணே!, என் எதிரி hunter ஹாசினி, உங்க ஊரு ‘Nora Fatehi’ (ஜெபமலர்) கிட்டத் தான் வெஸ்டர்ன் டான்ஸ் கத்துக்கிறா!” – கடுப்பாய்க் கூறியவனிடம்,
“அவ டான்ஸ் க்ளாஸ் வேற நடத்துறாளா?” – என இவன் கூவ,
“ஆமா ஸ்பெஷல் க்ளாஸ்! Hunter-க்கு மட்டும்”
“ஏன் அப்பிடி?”
“ஏன்னா, அப்பா இல்லாத hunter மேல, அந்தக்காவுக்குத் தனிப் பாசம்”
“ஓஓ! ஹாசினி அப்பாவுக்கு என்னாச்சு?”
“அவுரு நல்லாத் தான் இருக்குறாரு! இவ அம்மாவுக்கும், அவருக்கும் ஒத்துப் போகாததால 2 பேரும் பிரிஞ்சு இருக்காங்க.” – என அசுவாரசியமாய்க் கூறியவன், பின் உதட்டைச் சுழித்துக் கொண்டு, “Don lady-கூட எப்பிடிண்ணே domestic life வாழ முடியும்?, அதான் டர்ராகி மனுஷன் decent-ஆ discharge ஆகிட்டாரு” – எனக் கூற, அவன் மண்டையில் குட்டி,
“வயசுக்கேத்த மாதிரி பேசு டா முண்டம்!” என்று விட்டு, “அவ டான்ஸ் ஆடுறதுக்கும், நீ வெறியாகுறதுக்கும் என்னா டா சம்மந்தம்?” எனக் கேட்டான்.
உடனே முகத்தை உர்ரென மாற்றிக் கொண்டவன், “அந்த சலங்கை கட்டுன சோபனா, இந்தக்காக் கூட சேர்ந்துக்கிட்டு, வெஸ்டர்ன்லயும் வேகமா வளர்ந்து வர்றது எனக்குப் பிடிக்கல!” என்றான்.
“அதனால?”
“என்னிக்காவது ஒரு நாள்…. எங்க காலனி மக்கள் ஒன்னு சேர்ந்து மறுபடி ‘ஆடலும்,பாடலும்’ நடத்தலாம்ன்ற முடிவுக்கு வரும் போது, நடக்குற போட்டி அத்தனைலயும் நான் மட்ட்ட்ட்ட்டும் தான்ண்ணே ஜெயிக்கனும்! இது என் கனவு! லட்சியம்! குறிக்கோள்…!,
இவ ஒருபக்கம், அந்தக்கா கூட சேர்ந்துக்கிட்டு வித்தை கத்துக்கிட்டு வந்து, என்னைத் தோற்கடிச்சுட்டா?, அதனால தான்… நான் தாஸ் அண்ணனுக்கு ஸ்லீவ்லெஸ் சொக்காவை மாட்டி விட்டு, hunter-ரோட டான்ஸ் ப்ராக்டிஸை, தரைமட்டமாக்கனும்ன்னு ப்ளான் பண்ணியிருக்கேன்”
“நெட்டையனை நம்புனாலும், குட்டையனை நம்பக் கூடாதுன்னு ஊர்ப்பக்கம் சரியாத் தான் டா சொல்லி வைச்சிருக்காங்க! நேர் வழியில யோசிக்க வராதா டா உனக்கு?”
“அதெல்லாம் நேர்மையானவங்களோட மோதும் போது தான்-ண்ணே!, hunter ஒரு hypocrite-ண்ணே!, அந்த சரத்குமாரும், இந்தத் தேவயானையும் ஒன்னு சேர்ந்து ‘நட்சத்திர ஜன்னலில்ன்னு’ பாடி, ஃபேமிலி மேக்கிங்-ல இறங்கிட்டா, hunter-ரால் தொடர்ந்து வித்தை கத்துக்க முடியாது! வெஸ்டர்ன்ல என்னை ஜெயிக்க இந்த ஏரியாவுக்குள்ள யாரும் உருவாகவும் முடியாது! எப்பிடி என் ஐடியா?” – என்றவனை அயர்ச்சியுடன் நோக்கி,
“டேய்… டேய்… நீ அவனுக்கு மாட்டி விட நினைக்குறது, என் வீட்டுக் கொடியில காய்ஞ்சிட்டிருக்கிற ‘சொக்கா’ டா” – என்று அவன் கடுப்பும்,எரிச்சலுமாய்க் கூற..
“ப்ச்,ப்ச்,ப்ச்… நீ.. சும்மா… என் காதுல பூ சுத்துறதை நிறுத்திட்டு.. ப்ரூஃப் பண்ணி காட்டுண்ணே” – என gangster சவால் விட்டதும் ரோஷம் பெருக, மறுநாள் தன் வீட்டு வாசலருகே ஜெபாவைச் சந்தித்தான் அலெக்ஸ்.
அன்று போலவே இன்றும் தன் முன்னே envelope-ஐ நீட்டியவனை உதடு வளையக் கேவலமான பார்வையுடன் நோக்கி விட்டு, காகிதத்தைப் பிரித்தாள் ஜெபா.
இம்முறைப் புகைப்படத்தில், வெள்ளை,வேட்டி சட்டையில்.. குங்குமப் பொட்டும், கட்டை மீசையுமாய், நாக்கை மடக்கி, கையில் அரிவாளுடன், புருவம் நெரிய ‘pose’ கொடுத்திருந்தான் அலெக்ஸ்.
“மாப்ள பேரு ‘அலெக்ஸ் அதிவீர பாண்டியன்’! சொந்த ஊரு திருநெல்வேலி. முட்டை வியாபாரம் பண்றாரு! காசு விசயத்துல கறாரா இருப்பாரு! காதல்ன்னு வந்தா சரண்டர் ஆகிடுவாரு! நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்னா, காலம் முழுக்க protein, free!! என்ன சொல்ற?” எனக் கேட்டான்.
புருவத்தை உயர்த்திப் பெருமூச்சை வெளியிட்டவாறு, என்வெலப்பைக் கைப்பைக்குள் போட்டுக் கொண்டவள், “எனக்கு வயலன்ஸ் பிடிக்காது! ஸோ, ரிஜெக்டட்” என்று விட்டு முன்னே நடக்க,
“ஜெபா,ஜெபா,ஜெபா” என அவளை மறித்து நின்றவன், அவள் கண்களைச் சந்திக்காது,
“உ…உன் ஃபோன்ல இருந்து எனக்கொரு மிஸ்ட் கால் கொடு, சீக்கிரம்,” என்றான் நேக்காக ஏதோ அவசரம் போல்.
“உனக்கெதுக்கு என் ஃபோன் நம்பரு?” – பாயிண்டாகக் கேட்டவளிடம்,
“என்னாடி இப்பிடிக் கேட்குற?, மா..மாப்ள திடீர்ன்னு பேசனும்ன்னு ஆசைப்பட்டார்ன்னா…?, அதுக்குத் தான்! கொடு.. கொடு.. சீக்கிரம்…” – என்றவனது ஓரக்கண் பார்வை, எதிர்வீட்டு பால்கனியில் மறைவாக நின்றிருந்த gangster+தாஸை அளந்து கொண்டது.
“மாப்ள ஆசைக்கு, பூசையைப் போட்டு மண்ணுக்குள்ள புதைச்சுடச் சொல்லு! ஃபோன் நம்பரெல்லாம் தர முடியாது” – கறாராகக் கூறியவளைக் கண்டு எழுந்த கடுப்பிலும், தூர இருந்து தங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பவர்களை நினைத்து அவமானத்திலும்,
“ஏய்ய்ய்ய்ய், செவுலப் பேத்துருவேன் டி! ம…..ரி…..யாதையா… நம்பரைக் கொடு மக்கா” – அடித்தொண்டையில் மிரட்டியவனை,
நின்று… நிமிர்ந்து… நேராகச் சந்தித்தவளின் பார்வையில்.. பயந்து, பம்மி,
“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் ஜெபா” எனக் கண்ணைச் சுருக்கி வாயசைத்தவனை முறைத்து, “உன் வாழ்க்கை வறண்ட பாலைவனமாகி, உனக்கு இத்…..தினி நடந்தும், நான் நடத்த்த்த்த்தியும்.. கொழுப்பு குறையலன்னா, உன்ன்ன்ன்ன்னையெல்லாம்…. இரு லே! வைச்ச்ச்சுக்கிறேன் லே!” – கடித்தப்பற்களுடன் அடிக்குரலில் சீறிச் சென்றவளைக் கண்டு, தானே தேவையில்லாமல் அவளை சொரிந்து விட்டதை உணர்ந்து,
“மக்கா, மக்க்க்க்கா…. இ…து வேற கணக்குடி! உனக்கு சொன்னாப் புரியாது! நான்… ஒரு ஸ்டாம்ப் பேப்பர்ல, ‘இது நம்ம ஆளு’-ன்னு எழுதி சைன் பண்ணியிருக்கேன்! நீயும் அந்த ஸ்டேட்மெண்ட்டை ஒத்துக்கிட்டு, ஒரு கை நாட்டு மட்டும் வைச்சுக் கொடேன் ப்ளீஸ்ஸ் ப்ளீஸ்” – என்று உளற,
“அட மண்டைக் கோளாறு புடிச்சவனே! அடிக்குற வெயிலுக்கு மூளை கலங்கிடுச்சா டே உனக்கு?, கோட்டிப்பயலே” – எனத் திட்டி விட்டு.. முன்னே நடந்தவளை,
“ஜெபா… ஜெபா நில்றி….” எனத் தொடர்ந்து வந்தவன், தன் வீட்டு வாசலருகே, இரு கைகளையும் பாண்ட் பாக்கெட்டுக்குள் பதித்தவாறு, ஸ்டைலாக நின்றிருந்த ‘தாஸ்’, ஜெபமலரிடம், மெல்லிய சிரிப்புடன்,
“குட்மார்னிங்” எனக் கூறுவதைக் கண்டதும், தகதகவென உள்ளே எரிந்ததில் அதே இடத்தில் நின்று விட்டான்.
அவசரமாய்ச் சென்று கொண்டிருந்தவள், நடந்தவாறே, பதிலுக்கு “குட்மார்னிங்” என்று விட்டுக் கார்க் கதவைத் திறக்க, விடாது “ஹேவ் அ நைஸ் டே” என்றான் அவன் சத்தமாய்.
பதிலற்றுச் சின்னப் புன்னகையோடு அவள் பறந்து விட,
“குட்மார்னிங், ஹேவ் அ நைஸ் டே-வா?, தேவாங்கு! யார்றா நீயி?, எந்தூரு டா உனக்கு?” எனக் எகிறிக் கொண்டு வந்த அலெக்ஸை அலட்சியமாய்ப் பார்த்த தாஸ்,
முந்தைய நாள் gangster, இவன் குறித்த அத்தனையையும் வத்தி வைத்த பின், ‘எங்கே இந்தப் பரட்டையால், தான் எடுத்தப் பால் காவடியும், பன்னீர் காவடியும் பணி செய்யாது போய் விடுவோமோ!’ எனப் பயந்து அவசரமாய் மேற்கொண்ட ‘background verification’, அலெக்ஸூக்கே சாதகமாய் இருந்ததில் திணறி,
பின் “தாஸ்ண்ணா, அலெக்ஸ் ப்ரோ கிட்ட, அந்தக்காவோட ஃபோன் நம்பர் கூட இல்ல! நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது! தெம்பா இருங்க” என gangster தேற்றியதில், சமன்பட்டு, இழந்தத் தன் கான்ஃபிடென்ஸை ஒருவாறாக மீட்டு, தக்க வைத்திருக்கிறான்.
“என்ன லே அப்பிடிப் பார்க்குற?, வெள்ளையா இருக்குற தைரியமா?, நீ எவ்ளோ ட்ரை பண்ணினாலும் அவ-லாம் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா” – குதித்த அலெக்ஸிடம்,
“உன்னையும் தான் பார்க்கலையே” – என இன்சல்ட் செய்தான் தாஸ்.
பதிலுக்கு ஏதோ சொல்லிச் சண்டையிட முயன்றவனை ஓடி வந்துத் தடுத்த gangster, “ப்ரோ!, என்ன இருந்தாலும் அவுரு சீனியரு!, அவரை நீங்க இப்பிடிலாம் பேசப்படாது” – என்று எச்சரிக்க,
“டேய்ய், 15 வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு அவளைத் தெரியும் டா! அப்பிடிப் பார்த்தா, நான் தான் டா சீனியரு” என்று அலெக்ஸ் திட்ட,
“ஆனா… காலனிக்கு நீ புதுசு தான?” – இடையில் வந்த தாஸை, நிறுத்தி விட்டு,
“சும்மா பேசிக்கிட்டே இருந்தா சரி வராது ண்ணே!, 2 பேரும் காலனிக்கு வெளியே.. ஒன் டூ ஒன்.. அடிச்சுக் காட்டுங்க” என்றான் gangster.
“சண்டையா?” – சந்தேகமாகக் கேட்ட அலெக்ஸைக் கண்டு, தாஸ் உச்சுக் கொட்ட,
“ம்ஹ்ம்!, சண்ண்ண்ண்டை மாதிரி! Rock,paper,scissors கேம்!! அதுல யாரு ஜெயிக்குறாங்களோ அவங்களுக்குத் தான் ஜெபா-க்காவை ஃபாலோ பண்ணுற உரிமையிருக்கு” என்று முடித்தான் gangster.
இன்னும் பாக்கெட்டிலிருந்துக் கையை எடுக்காமல், அதே ஸ்டைலிஷ் போஸிலேயே நின்ற தாஸை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“ஐடியா கொடுத்தது இந்த மலைக்குரங்கா?” எனக் கேட்டான் அலெக்ஸ்.
“ஆமா! இதுவரை.. எங்க ‘கில்லி’ தாஸ் அண்ணன் ‘Rock,paper,scissors’-ல தோத்ததே கிடையாது! இந்த காலனியில, ஏன் இந்த ஏரியாவுலயே.. எங்கண்ணனை ஜெயிக்க யாருமே இல்ல!” – அருமை,பெருமையாய்க் கூறியவனிடம்,
“ஸோ??” – இடையில் கை வைத்துக் கொண்டு நாடியை உயர்த்தி கெத்தாகக் கேட்ட அலெக்ஸை சந்தேகமாகப் பார்த்தபடி,
“நீங்க தோத்துட்டா… தாஸ் அண்ணனுக்கு அந்தக்காவை விட்டுக் கொடுத்துட்டு நீங்க விலகிக்கனும்” என்றான் gangster.
“ஒரு வேளை அவன் தோத்துட்டா?”
“………..” – gangster-ரும், தாஸூம் ஒருவரையொருவர் கலவரமாகப் பார்த்துக் கொள்ள,
Gangster-ரின் தோளில் கையைப் போட்டு இழுத்துக் கழுத்தை நெரித்தபடி, “சொல்றா டபரா மண்டையா” என்றவனிடம்,
“தோத்துட்டா…. அவுரு விலகிடுவாருண்ணே” – என்றான் gangster வலி தாங்காது விழி பிதுங்கியபடி.
இதன் விளைவாக, ஸ்கெட்யூல் போட்டு, காலனிக்குப் பின்னேயிருந்த குட்டிச்சுவரினருகே, கூடியவர்களிடம்,
“மொத்தம் 3 ரவுண்டு! யாரு அதிகமா ‘வின்’ பண்றாங்களோ, அவங்க தான் வின்னர்!, ஒரு வேளை ‘டை’ ஆயிட்டா, ‘டை பிரேக்கர்’ ரவுண்டு ஒன்னு உண்டு” – என்ற விதிமுறைகளுடன் விளையாடத் தொடங்கியவர்களில், முதல் ரவுண்டில் தாஸூம், இரண்டாவது ரவுண்டில் அலெக்ஸூம் ஜெயித்திருந்தனர்.
மூன்றாவது ரவுண்டைத் தான் நாம் முதல் காட்சியில் பார்த்தது.
“shooooooot” – எனக் கத்தியதும், இரு புறமும் நீட்டியிருந்த விரல்களைத் தொடர்ந்த சுள்ளான்களின் கண்கள்,
முதலில் இறுகிய முஷ்டியுடன் ‘Rock’-ஐக் காட்டிய தாஸையும்,
அடுத்து, விரித்த விரல்களுடன் ‘Paper’-ஐக் காட்டிய அலெக்ஸையும் கண்டதில், ‘ஹேஏஏஏஏஏ’-வென மகிழ்ச்சியில் சிலர் கத்தியும், “ஹோஓஓஓ’-வென gangster-உட்பட சிலர் ஏமாற்றத்தில் கடுப்புற்றுமிருக்க,
மார்பின் குறுக்காகக் கட்டியக் கைகளுடன் இருவரையும் திமிராய் நோக்கிய அலெக்ஸ்,
“ஏன் டா தம்மதுண்டு ஏரியாவுக்குள்ள, 10 பேரு கூட போட்டிப் போட்டு ஜெயிச்சா…. நீ பெரியாளா டா?, ஆளையும்,முழியையும் பாரு! திருட்டு ராஸ்கல்” – என்று திட்டியதும்,
வெறுப்பாய் முகத்தை வைத்துக் கொண்ட தாஸை நோக்கி விட்டு, gangster வேகமாக,“இல்ல,இல்ல,இல்ல" என மறுத்தவாறு, “ஆட்டையைக் கலைங்க! நாம… பூவா, தலையா போட்டுப் பார்ப்போம்!, பூ – நீங்க, தலை-நாங்க” – என்று கூறியபடி அவசரமாய் coin-க்காக பாக்கெட்டுக்குள் கையை விட்டான்.
‘எனக்கு இன்னொரு சான்ஸ் இருக்கா!’ – ரீதியில் ஆர்வத்துடன் முன்னே வந்த தாஸை ஒதுக்கி விட்டு,
Gangster-ன் கையை பாக்கெட்டோடு வளைத்துப் பிடித்த அலெக்ஸ்,
“ரூல்ஸ்ன்னா ரூல்ஸ் தான்! ஜெயிச்சது நான் தான்! ஒத்துக்க முடியாட்டி, உன் தாஸ் அண்ணனைப் போய், தண்டவாளத்துக்குள்ள தலையைக் கொடுக்கச் சொல்லு!” எனக் கடித்தப் பற்களுடன் கூறியதும்,
எரிச்சலுடன் அவனை முறைத்து விட்டு, பாவமாய்த் தன்னை நோக்கிய gangster-ஐக் கண்டு, தாஸ் விரக்தியில் முகத்தைக் கோணிக் கொள்ள,
நெட்டி முறித்தவாறு விலகி நடந்த அலெக்ஸ்,
“ஓகே!! உன் டார்கெட்ஸ் லிஸ்ட்ல் இருந்து தாஸைத் தலையைச் சுத்தி தூக்கி தூர எறிஞ்சாச்சு! அடுத்தது யா…………..ரு??, அப்பு தாத்…..தா-மர…..கதம் பாட்டியா டா?” – எனக் கேட்டதும்,
“ஆமா ஆமா…” என அங்கு நடந்த அத்தனையையும் instant-ஆக மறந்து, ஆர்வமாய்த் தலையாட்டியவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து, “ஃபாலோ மீ….” என்று விட்டு அலெக்ஸ் முன்னே நடக்க,
தாஸையும், அலெக்ஸையும் மாறி மாறிப் பார்த்த gangster, பின் மன்னிப்பாய் தாஸிடம் முகத்தைச் சுருக்கி விட்டு, “ப்ரோஓஓஓஓ…. அலெக்ஸ் ப்ரோஓஓஓஓ! நில்லுங்க ப்ரோ…” – என அவன் பின்னே ஓடி விட்டான்.
‘யாரை நம்புறதுன்னே தெரியல தாஸ்ண்ணா’
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து?
