7.3. விச்சுளிப் பாய்ச்சல்!
ஜெபமலரின் தாய் மாமனான ஆரோக்கியசாமியின் வீட்டு சோஃபாவில் அமர்ந்தபடி, எலுமிச்சை ஜூஸைப் பருகிக் கொண்டிருந்த அன்னமேரியின் மனதை மகிழ்ச்சி,கடுப்பு,எரிச்சல் என அத்தனை உணர்வுகளும் சரிவிகிதத்தில் ஆக்கிரமித்திருந்தது.
Arm rest-ல் கைகளைப் பதித்துத் தரையை நோக்கியவாறு, வலது கை விரல்களைப் பெருவிரலால் தேய்த்தபடி சுருக்கிய புருவங்களுடன் சிந்தனையிலிருந்த ஆரோக்கியம்,
“மறுக்குறதுக்கு எந்தக் காரணமுமில்லம்மா! உன்னைப் பத்தியும், தம்பியைப் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்! என்…ன…. த…ம்..பி வ…யசு தான்! கொஞ்சம் இடிக்குது! சொந்த,பந்தத்துக்கிட்ட விசயத்தைப் பகிர்ந்துக்கும் போது, ’35 வயசு வரை தம்பி ஏன் கல்யாணம் கட்டிக்காம இருந்தாகன்னு காரணம் கேட்பாங்க’ அதான்ன்ன்” என்று ‘திடீரென வீடேறி வந்து பெண் கேட்கிறாளே! மன வியாதியோ, உடல் குறையோ உள்ள மகனை தன் மருமகளிடம் ஒப்பேத்தப் பார்க்கிறாளோ எனப் பயந்து வினயமாக, விசயத்தைக் கூற,
“32-வயசு வரைக்கும் நம்ம பொண்ணுக்கு எப்பிடி எந்த இடமும் தகையலையோ, அப்படித்தான் அந்தப் பையனுக்கும் வாய்க்கலன்னு சொல்லிப்புடுங்க மாமா! ஊர் ஆயிரம் பேசும்! அதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்க முடியுமா?, என் மவன் வெளிநாடெல்லாம் போய் வந்து வேலை,வேலைன்னு அதையே பெருசா நினைச்சு, இத்தினி வருசத்தை ஒத்தைல ஓட்டிப்புட்டான்! நானும் தேடாத சீமையில்ல! போகாத ஊரில்லை! ஒரு பொண்ணும் அமையலையே!, ஒத்து வந்துடுச்சு, முடியப் போகுதுன்னு நினைக்குற கட்டத்துல.. திடீர்ன்னு காரணமே சொல்லாம ‘இது சரி வராதும்மா’-ன்னுடுவாங்க! அந்தத் தேவனுக்குத் தெரியும் மாமா என் மனக்கவலை! ஒத்த மகனை வைச்சுக்கிட்டு, அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க வக்கில்லாம நான் உட்கார்ந்து கிடக்குறது!, காசு,பணமும் குவிஞ்சிருந்து என்னா பிரயோசனம்?, ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதேன்னு நான் ஏங்காத நாள் இல்ல” – எனப் புலம்பித் தவித்த அன்னமேரியைக் கண்டபடி வேகமாக வாசலில் செருப்பைக் கழட்டி விட்டு வீட்டுக்குள் நுழைந்த அருளப்பன்,
‘இந்த நாளுக்காகத் தான காத்திருந்தேன்’ – ரீதியில், வெளிச்சமாக ஒளிர்ந்த முகத்துடன், “இனி நீங்க விசனப்படவே தேவையில்ல சின்னம்மா!, அலெக்ஸாண்டர் தான் எங்க வூட்டு மருமவன்! கவலையை விட்டுத் தள்ளுங்க” என்று உற்சாகத்துடன் கூற,
மகனது முகத்தைக் குழப்பத்துடன் அவதானித்தபடி, “நான் எதுக்கும் உறவுக்காரவுங்க கூடவும் ஒரு முறை கலந்து பேசிட்டு, உனக்கு சொல்லி அனுப்புறேன்ம்மா” – என்று மீண்டும் ஆரோக்கியம் நாசூக்காக பேசுவது புரிந்து, உள்ளே மண்டினாலும், வெளியே சிரித்தவாறு,
“பேசுங்க! பேசுங்க! என்ன தான் பொண்ணுக்குக் கல்யாண வயசு தாண்டிடுச்சுன்னாலும், அவசரப்பட்டு எப்பிடியோ போ-ன்னு எவன் கையிலயாவது பிடிச்சுக் கொடுத்துட முடியுமா? உங்களுக்கும் பையனைப் பத்தி 4 இடத்துல விசாரிச்சுத் தெரிஞ்சுக்கனும்ன்ற நினைப்பு இருக்குமே?” – என அக்கறை என்ற பெயரில் வன்மத்தைக் கக்கிப் பின், தன் கையில் வைத்திருந்தப் பைக்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டி,
“பையன் ஃபோட்டோ, வேலை பத்தின விவரமெல்லாம் இதுல இருக்கு. நீங்க ஆலோசிச்சு, சீக்கிரமே நல்ல முடிவா சொல்லி அனுப்புங்க!” என்றார்.
தந்தை அதை வாங்கிக் கொள்வதைக் கண்ட அருளப்பன் மீண்டும் முடிவு செய்து விட்டத் தொனியில், “இதுக்கெல்லாம் அவசியமே இல்ல சின்னம்மா! உம்மைப் பத்தி தெரியாதா எங்களுக்கு?,” என்று உரிமையாகக் கடிந்து கொள்ள,
“இருக்கட்டும் தம்பி! அப்பாரு திருப்திக்கு.. பார்க்கட்டுமே! என்ன இப்ப?” என்றதும்,
‘தன்னை மீறி… இதென்ன அதிகப்பிரசங்கித்தனம்’ என்ற பாவனையுடன் இறுக்கமாக அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை திரும்பி நோக்கி விட்டுப் பின் சங்கடமாக “அது… உங்களுக்கே தெரியுமே! அந்தப் புள்ளையோட அம்மை தவறிப் போச்சு, அப்பன் இருந்தும் இல்லாத நிலை! தான் முன்னெடுத்துப் பண்ணுற காரியம்ங்குறதால.. பின்னாடி யாரும் அநாவசியமா ஒரு சொல் சொல்லிடக் கூடாதுன்னு அப்பா கொஞ்சம் கவனமெடுத்துப் பார்க்குறாரு! நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க சின்னம்மா” என்று தன்மையான குரலில் சொல்லவும், சற்றுத் தெளிந்த அன்னமேரி,
“எனக்குப் புரியாதா தம்பி?, என்னத்துக்கு விளக்கமெல்லாம்?, இது தெரிஞ்சதால தான், நான் கையோட.. அவனைப் பத்தின விவரத்தையெல்லாம் காகிதத்துல போட்டு எடுத்துட்டு வந்தேன்! நீங்க பொறுமையா, ஆற,அமர விசாரிச்சுப் பார்த்துட்டு நல்ல முடிவா சொல்லுங்க! நான் காத்திருப்பேன்! என் மவன் ஆபிஸ்க்கே கூட நேராப் போய் பாருங்க! ஒன்னும் பிரச்சனையில்ல..“ எனக் கூறி விடைபெற்றுக் கொண்டார்.
வீடு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தபின் பையிலிருந்த ஃபோனை எடுத்து மகனுக்கு அழைத்தவருக்கு, முதல் நாள் காலை நடந்த அவனுடனான உரையாடல் நினைவுக்கு வந்தது.
“என்ன அன்னமேரி, காலைச் சாப்பாட்டை முழுங்கிட்டு, கயித்துக் கட்டில்ல கவுந்து கிடக்குற போல?”
-அலெக்ஸின் tone-ல் தெறிக்கும் tantrum புரியாது,
“எங்க டே நிம்மதியா உறங்க?, கொல்லையில கோதுமையைக் காயப் போட்டிருந்தேன்! இந்தப் புறாக் கழுதை வந்து, ஒரு படி கோதுமையை தின்னுப்புட்டுப் பறந்திடுச்சு! வயித்தெரிச்சலா இருக்கு டே!, எப்பிடிக் கொழுத்துப் போயிருக்குங்குற?, புடிச்சு,அடிச்சு வறுத்தா, ஒரு கிலோ கறி இருக்கும் போல டே” – என்று அன்னமேரி அங்கலாய்த்துக் கொள்ள,
“ம்ம்ம்ம்ம்ம், நீ நல்லாஆஆ வறுத்துத் திங்குறதுலயே குறியா இரு!, மகனுக்கு ஜோடிப்புறாவைத் தேடித் தருவோம்ங்குற நினைப்பு இல்லாம, கொல்லைல திரியுற புறாவை விரட்டி விளையாண்டுட்டு இருக்கியே! வெட்கமா இல்லையாம்மா உனக்கு?” – என்று சீறியவனிடம்,
“இதென்னா டா வெள்ளிக்கிழமை காலைல வாழ்க்கைத் துணையைப் பத்தி கவலை வந்திருக்கு உனக்கு?, பொண்ணு ஃபோட்டோ அனுப்பியிருக்கேன்னு சொன்னாலே சலிச்சுக்குவ?, இன்னிக்கு என்ன ஆட்டம் ஆடுற?”
“ஆனா.. எனக்கு ஒரு உண்மையை சொல்லும்மா! நானா பார்த்து சில பொண்ணுங்களை ரிஜெக்ட் பண்ணியிருக்கேன்! அதுங்களா.. நிறைய பொண்ணுங்க, என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்குங்க! ஆனா… இது ரெண்டையும் விட, நீ வேணாம்ன்னு ஒதுக்குன பொண்ணுங்க லிஸ்ட்டு பெருசா இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கும்மா” – ‘நீ அம்மா இல்ல அரக்கி’ ரீதியில்.. ஆதங்கமும், ஆத்திரமுமாக நா தழு,தழுக்கக் கூறினான் அவன்.
“ஆ….மா, வத்தலும்,தொத்தலுமா இருக்குறதுகளை உன் வரை எதுக்குக் கொண்டு வந்துட்டுன்னு, நானே சிலதை ஒதுக்கியிருக்கேன்! என்னாவாம் இப்ப?”
“உன் ரிஜெக்ஷன் லிஸ்ட்ல ஜெபமலர் இருக்கா தான?”
“ஜெபமலரா?”
“சாமுவேல் ஐயா பேத்திம்மா” – பல்லைக் கடித்தவனிடம்,
“மாந்தோப்புல மாட்டுனவன் மவளா?” – casual-ஆகக் கேட்டவரைக் கண்டு,
“எம்மாஆஆஆ” – என்று கடுப்புடன் கத்தியவன்,
“ஒழுங்கா பதிலைச் சொல்லு” என்று சீறினான்.
“ஆமாஆஆஆ டே, ஞாபகமிருக்கு! பெஞ்சமின் ஃபாதர் ஒரு முறை கேட்டாரு! அந்தப் புள்ள சென்னையில டெய்லர் கடை வைச்சிருக்குது, உங்களுக்கு ஒத்து வருமா-ன்னு” என்றார் அப்பாவியாக.
“அதுக்கு நீ என்ன சொன்ன?” – உக்கிர ‘mode’-லேயே கேட்டவனிடம்,
“நீ தான டே அப்ப, ‘வீடு திரும்பயில, வாச தொறக்கயில, மஞ்சள் முகம் சிரிக்கனும், ‘அவ சேலை நுனியில தலை துவட்டனும்’, ‘ஆட்டுக்காலை நசுக்கிப் போட்டு சூப்பு வைக்கத் தெரியனும்’, ‘ஊட்டி விடனும்’,’உறங்க வைக்கனும்’,’உச்சந்தலையில எண்ணெய் தேய்ச்சு விடனும்’-ன்னு ஃபோனுல பாட்டு வைச்சிக்கிட்டுத் திரிஞ்ச!
படிச்சு,நாகரீகமடைஞ்சு, அதிகாரத்துல இருக்குற எவ இப்பிடியெல்லாம் உனக்கு சேவகம் செய்யத் தயாரா இருக்கா?, அதான்.. வீட்டோட இருக்கிறவ தான் அவனுக்குத் தோதுப்படுவா, இந்த சம்மந்தம் ஒத்துவராதுன்னு சொல்லிட்டேன்!” – மிகச் சாதாரணமாகக் கூறியவரைக் கேட்டுக் கொதித்து,
“வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல உன்னை ‘ஹைட்’ பண்ணாம விட்டது என் தப்பு தான்” என்று தலையிலடித்துக் கொண்டவன், “ம்மாஆஆ… அதெல்லாம் விவரம் தெரியாத வயசுல.. விவகாரம் புரியாம.. வேடிக்கையா வைச்சதும்மா!, அதைப் பிடிச்சுக்கிட்டு, என் கிட்ட விஷயத்தைச் சொல்லாம, நீயாவே.. அந்தப் புள்ளையை வேணாம்ன்னு ஒதுக்குவியா? அறிவிருக்கா ம்மா உனக்கு?” என்று திட்டினான்.
மகனின் பேச்சில் கோபமுற்ற மேரியும்,
“பெஞ்சமின் ஃபாதர் சொல்லியே, அடுத்தடுத்து அவங்க ஊர்ப்பக்கமிருந்து 3 பொண்ணுங்களைப் பார்த்து போட்டோ அனுப்புனேன் டே உனக்கு! அத்தனையும் வேணாம்ன்னு சொல்லிப்புட்டு, இப்ப வந்து என்ன லே என் மேல பாயுற?” என்று பதிலுக்கு எகிற,
“ம்மா, ம்மாஆஆ… எனக்கு ஜெபமலரை படிக்குற காலத்துல இருந்தே பிடிக்கும்மா!, நான் அந்தப் புள்ளய விரும்புனேன்” – என்று நொந்து போன குரலில் கூறியவனைக் கேட்டு, அதிர்ந்து போன மேரி,
“என்னா டே சொல்ற?, விரும்புன புள்ளய மனசுல வைச்சுக்கிட்டா லே, இத்தனை நாளா என்னைய சுத்தல்ல விட்ட?, கோட்டிப்பயலே!, உனக்குப் பொண்ணு தேடி, ஒன்னும் அமையலன்னு நான் கொஞ்ச,நஞ்சப் பாடா-லே பட்டேன்?, முட்டாப் பயலே! விரும்புனவன், என்னத்துக்கு டே பொட்டச்சி மாதிரி விசயத்தை வெளியே சொல்லாம மூடி வைச்சிருந்த?, வெவரங்கெட்டவனே!” – என்று சகட்டுமேனிக்கு வசை பாட,
“ம்மா,ம்மாஆஆ” -அவரை நிறுத்த முடியாதுத் திணறி “ம்மாஆஆ! நான் சொல்றதைக் கேளும்மா முதல்ல” என்று அதட்டியவன்,
“அவ, மாமன் மகனுக்கு அவளைக் கட்டி வைக்க அவங்கம்மா ஆசைப்படுதுன்னு தான்ம்மா நான் ஒதுங்கிப் போனேன்! அவங்கப்பன் பிரச்சனை பண்ணுன சமயம் அது!, நான் வேற மேலும் தலைவலியைக் கொடுக்கக் கூடாதுன்னு.. லூசு மாதிரி யோசிச்சு… ப்ச், அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போன கதை! தப்பெல்லாம் என் மேல தான்!, என் முட்டாள்தனத்தால இத்தனை வருசம் தெண்டமா ஓடிடுச்சு! இனி நான் கொஞ்சம் கூட தாமதிக்க விரும்பல!, நீ நாளைக்கே ஜெபாவோட மாமா வீட்டுக்குப் போய்… அவளைப் பொண்ணு கேட்குற” எனக் கூறி மீண்டும் அவர் ‘எங்கெங்கு,எப்படியெல்லாம் பெண் பார்த்தார், அமையாத போது எத்தனை அழுது,புலம்பினார்’ என்பதையெல்லாம் பாட்டாகப் பாடி கிழித்துத் தொங்க விட்டதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டு… மறுநாள் அவரை உருட்டி,மிரட்டிக் கிளப்பி விட்டிருந்தான்.
ஆரோக்கியசாமியின் அலட்டலை அங்கலாய்ப்புடன் கூறி, வன்மமேரியாக மாறி வாய் பேசத் தொடங்கியவரை அடக்கி ‘நீ என் வாழ்க்கைல ஏற்கனவே வைச்ச சூனியத்தை எடுக்கவே நான் சூப்பர் மேன் வேலை பார்க்க வேண்டியதாயிருக்கு!, இதுல, நான் தான் மாமியார்ன்னு மண்டக்கனத்தோட எதையாச்சும் பண்ணி வை…ச்ச்ச்ச…. அன்னமேரியை வெறும், அன்னமாக்கி தாமிரபரணி ஆத்துல பறக்க விட்ருவேன் சொல்லிட்டேன்!’ – என்று மிரட்டி அடுத்து செய்ய வேண்டியதைக் கட்டளையிட்டான் அலெக்ஸ்.
அன்று மாலை பணி முடிந்து அலெக்ஸ் வீடு திரும்பும் போது, காலனியின் குட்டிச்சுவரருகேயிருந்த மரத்தடியில் குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு, கையிலிருந்த கல்லினால், மண்ணில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான் gangster.
“என்ன டே?, gangster லவ்ஸ் hunter-ன்னு heart போட்டுட்டிருக்கியா?” – நக்கலாகக் கேட்டபடி வண்டியை நிறுத்தி விட்டு அருகே வந்தவனை முறைத்து உச்சுக் கொட்டிய கணேஷ்,
“எதிரிக்கு எப்பிடிண்ணே இதயத்துல இடங்கொடுக்க முடியும்?, பைத்தியக்காரிக்குப் போய் பவளமல்லின்னு பட்டப் பேரு வைக்கச் சொல்ற?” – என்று அலுத்துக் கொள்ள,
“பார்றா!, உனக்கு ஏன் டே அந்தப் புள்ள மேல இவ்ளோ வன்மம்?” – சிரித்தபடி கேட்டவனிடம்,
“ப்ச்! அதெல்லாம் உனக்கு சொன்னாப் புரியாதுண்ணே!” – என்று சலித்துக் கொண்டான் அவன்.
“அதுசரி” – என அருகிலிருந்த பெரிய கல் ஒன்றில் அமர்ந்தவனின் பைக்கை நோக்கி, அதில் தொங்கிய பார்சலைக் கண்டு கொண்டு, ‘ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்’ என மூச்சிழுத்து மோப்பம் பிடித்த gangster,
“கவர்ல என்னண்ணே கொத்து பரோட்டாவா?” எனக் கேட்டான்.
“ஆமா டே!”
“எனக்குக் கொடேன்! ரொம்பப் பசிக்குது” – எச்சில் ஊற வினவியவனிடம்,
“ம்ம்ம்ம்ம், பசிக்குதுன்னா வீட்டுக்குப் போய் உங்கம்மா ஆக்கி வைச்சிருக்கிறதைத் தின்னு டே!, எஞ்சோத்துல பங்குக்கு வராத” – ஸ்ட்ரிக்ட்டாகக் கூறியவனைக் கேட்டு,
“சரியான பிசுனாரிண்ணே நீயி” – முகத்தைக் கோணிக் கொண்டு மீண்டும் தரையில் கிறுக்கத் தொடங்கினான் gangster.
“இந்நேரம் இங்க என்ன டே ஜோலி உனக்கு?, உன் சுள்ளான் க்ரூப்பைக் கூட காணோம்” – எனக் கேட்டவாறு கை நீட்டி சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டவனிடம்,
“ப்ச்! coding க்ளாஸை கட் அடிச்சுட்டேன்! எப்பிடியும் என் tutor எங்கம்மாகிட்ட போட்டுக் கொடுத்திருப்பாங்க! அதான், தப்பிக்க இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்”
“அடக்களவாணி நாயே! உனக்கெல்லாம் பணத்திமிரு டே! திறமையிருந்தும் exposure இல்லாம எத்தனை குழந்தைங்க அடிமட்டத்துல நிற்குதுங்க! நீ வாய்ப்பு கிடைச்சும், வெட்டி வியாக்யானம் பேசிட்டிருக்கியா?” – திட்டியவனிடம்,
“இதையே சொல்லாதீங்கண்ணே!, 24 மணி நேரத்துல தூங்குற நேரம் போக மிச்ச நேரமெல்லாம் க்ளாஸூ,க்ளாஸூன்னு இருக்க முடியுமா?, எல்லா சப்ஜெக்ட்ஸூக்கும் டியூஷன் போறேன்! இது போக piano,badminton, taekwondo, public speaking, creative writing, இப்ப coding.
கொஞ்ச நேரம் கூட ஃப்ரண்ட்ஸோட விளையாடவோ,டிவி பார்க்கவோ விட மாட்டேங்குது எங்கம்மா. நேரத்தை உபயோகமா செலவழிக்கனும், productive-ஆ இருக்கனும்ன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணுது!
சின்னதா இருக்கும் போது மிரட்டலுக்கும்,அடிக்கும் பயந்து அது சொன்ன எல்லாத்தையும் செஞ்சேன்! இப்பவும் அப்பிடியே இருக்க முடியுமா?, எனக்குன்னு சுயவிருப்பம்,opinion எல்லாம் இருக்கக் கூடாதா?” – ஆத்திரத்துடன் வெடித்தவனைக் கண்டு,
“டேய்ய் கணேஷூ” – என சிரிப்பைக் கைவிட்டு சமாதானமான குரலில் எதையோ சொல்ல வந்தவனைத் தடுத்து, எரிச்சல் சூழ்ந்த முகத்துடன்,
“எனக்கு கிட்டார் தான் பிடிக்கும்! கிரிக்கெட் தான் இஷ்டம்! Digital illustration, animation, photography-ன்னு எனக்கு விருப்பமுள்ள எதுலயும் எங்கம்மாவுக்கு interest இல்ல! என் க்ளாஸ்மேட் மனோகர் coding-ல புலியா இருக்கானாம்!, PTM அப்போ அவன் அம்மா சொல்லியிருக்குது! அவங்க பையனைப் பத்தி பெருமையா பேசனுமேன்னு அந்தம்மா 2,3 மீட்டர் எக்ஸ்ட்ராவா ஏத்திடுச்சு போல!
உடனே எங்கம்மா, அவனை விட நீ தான் கோடிங்ல பெஸ்ட்டுன்னு காட்டனும்ன்னு சொல்லி என்னையும் சேர்த்து விட்ருக்கு! நான் போயிட்டிருக்கிற எல்லா க்ளாஸூம் அப்பிடித் தான்! யாரோ ஒருத்தர் எதையாவது சொல்லி பயம் காட்டி, தூண்டி விட்டுடுறாங்க, இந்தம்மாவும் பதறியடிச்சுக்கிட்டு உடனே என்னை அங்க கொண்டு போய் தள்ளி விட்ருது” என்றான்.
“இதுக்குப் பேரு peer pressure-டா கணேஷூ!, வீட்டுக்குள்ள, உறவுகளுக்குள்ள, படிக்குற இடத்துல, பார்க்குற வேலையில-ன்னு எல்லாப் பக்கமும் இது இப்ப சகஜமாகிடுச்சு டே!”
“அதுக்காக இப்பிடியே போட்டி போட்டு… எல்லாரையும் விட நான் தான் பெஸ்ட்டுன்னு ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருந்தா… நான் எப்போ-ண்ணே ஜாலியா என் லைஃபை வாழ்றது?” – நியாயமாய்க் கேள்வி கேட்டவனிடம்,
“இதையெல்லாம் எடுத்துச் சொல்லு டே உங்கம்மா கிட்ட” – என்றான்.
“அதெல்லாம் பேசிட்டேன்!, முன்னேற்றத்தோட சேர்த்து வாழ்தலும் முக்கியம்ன்னு ரீல்ஸ் வீடியோ-எல்லாம் அனுப்பி வைச்சேன்! ஃபோனைப் பிடுங்கி வைச்சிடுச்சு! எனக்கு வாழ்க்கையோட தா… தா… அதென்ன வார்த்தை?, தாத்பரியம்! ம்ம், அது.. புரியாதாம்! ஏன்னா நான் சின்னப் பையனாம்!” – கடுப்புடன் கூறியபடி மண்ணைக் கீறியவனின் முகத்தில், வயதுக்கே உரிய விளையாட்டையும்,அறியாமையும் மீறி, டன்,டன்னாய் சோர்வும், இயலாமையும் நிறைந்திருந்தது கண்டு பாவமாய் இருந்தது அலெக்ஸிற்கு!
இதே பதினைந்து வயதில்.. அவன் தோப்பு,வயல்,ஆறு,ஏரி என கண்டமேனிக்கு சுற்றித் திரிவானே தவிர, ஒரு இடத்தில் இப்படி அடங்கி, ஒடுங்கி, அமர்ந்ததே கிடையாது! இது போன்ற மடிப்பு கலையாத உடையுடன், நேர்த்தியாய் சீவிய முடியுடன் அவனைப் பார்க்கவே முடியாது! வியர்வை வடிய, அழுக்கு உடையும், கழுவப்படாத முகமுமாய், வெயிலில் வாடிக் கருத்து, பசி,தாகமறியாது, காற்றாய்த் தெருவில் விளையாடித் திரிபவனை அன்னமேரி தான் அடித்து இழுத்துச் சென்று சோறூட்டி விடுவார்.
அது அவனிருந்த இடம், காலம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொருத்தமைந்த ஒன்று! சரி தான்!
ஆனால்.., கால மாற்றமும், பெற்ற நாகரீகமும், அடைந்த வளர்ச்சியும், சிந்தனை,செயல்பாடுகளில் வந்த திருத்தமும், அதன் விளைவால் திறந்த கதவுகளும், உருவான வாய்ப்புகளும், அனைவரும் சகலமும் பெற்று, சாகும் முன் ஜெகஜோதியாய் வாழ்ந்து விடச் சொல்லித் தூண்டுகிறது தான்!
அதற்காக, நிதானம், பொறுமை, நிர்மலம் என slow pace-லிருக்கும் divinity-ஐ அனுபவிக்காமல், அதன் அருமை புரியாமல், அவசரமாய் ஓடி என்ன பிரயோஜனம்?, பட்டியை அறுத்து,இழுத்துக் கொண்டு, முதலிடம் பிடித்த பின் என்ன மிச்சமிருக்கப் போகிறது?
இப்புவியில் வாழும் உயிர்களுக்கான கோட்பாடே survival-க்கான ஓட்டம் தான்! புரிகிறது! ஆனால், எதை நோக்கி,எப்போது ஓட வேண்டுமென்கிற அவசியத்தையும், தெளிவையும், ஓட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும், கைக்குள் வைத்துக் கொள்ளும் அதிகாரத்தையும் பெற்றிருக்க வேண்டியது முக்கியமில்லையா?
இறக்கத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்கும் சகிப்புத்தன்மையில்லாது, வளர்ச்சியோடு சேர்ந்து.. வன்மமும்,வக்கிரமும் பெருகி வாழ்தலின் தாத்பரியம் புரியாது.. அடுத்தவன் தட்டிலிருப்பதை அளவிட்டவாறே தன்னிறைவின்றி, அற்பத்தனமாய் வாழ்ந்து கழிப்பதில் என்ன லாபம்?
பெருமூச்சுடன் எழுந்து சென்று பரோட்டா பார்சலை எடுத்து வந்த அலெக்ஸ், அதைப் பிரித்து வைத்து அவன் முன்னமர்ந்து,
“சரி விடு!, நீ பசியில இருக்குற போல! அதான் கண்ணெல்லாம் சிவக்குது உனக்கு! முதல்ல சாப்பிடுவோம்! அப்புறமா பேசுவோம்!” எனக் கூற,
பளிச்சிட்ட முகத்துடன், அணிந்திருந்த ஷார்ட்ஸில், கையைத் தட்டித் துடைத்து விட்டு ஆர்வத்துடன் பரோட்டாவை அள்ளி விழுங்கினான் gangster.
அவனுடன் சேர்ந்து தானும் உண்டபடி,
“comparision-ன்னாலே கடுப்பா இருக்குங்குற?, அப்போ hunter கூட நீ அடிக்குற லூட்டிக்குப் பேர் என்ன டே?” – எனக் கேட்டவனிடம்,
“போட்டி மனப்பான்மை,பழிவெறியெல்லாம் எனக்கா.. உள்ளிருந்து வந்தா பரவாயில்லண்ணே!, அடுத்தவன் தூண்டி விட்டு வரக் கூடாது” – லாஜிக்காய் கூறியவனைக் கண்டு,
“உங்கம்மா பேர் என்ன?” என்றான்.
“வசந்தா”
“ம்ம்ம்ம்ம், நீ ஒரு male வசந்தா டா”
“ப்ச், அண்ணே!” – உண்பதை நிறுத்தி விட்டு கத்தியவனிடம்,
“உன் narcissistic அம்மாவுக்கு knot போட்ட உங்கப்பா நிலைமை எப்பிடி? கலக்கலா?, கவலைக்கிடமா?” – எனக் கேட்டான்.
“ப்ச், அவரு சவுதில வேலை பார்க்குறாருண்ணே! 2 வருசத்துக்கொரு தடவை தான் ஊருக்கு வருவாரு!, கண் முன்னாடி இருந்தாத் தான அவர் நிலைமையை கண்டுக்கிறதுக்கு!” – பரோட்டாவை உதிர்த்தபடி சோகமாய்க் கூறியவன் பின் விடைத்த மூக்குடன்,
“அவருக்கு என்னைப் பத்தின கவலையெல்லாம் கிடையாது!, அம்மா என்ன சொன்னாலும் என் நல்லதுக்குத் தானாம்! எப்பப் பாரு ‘அம்மா சொல்றதைக் கேளு தம்பி’ன்னு தான் சொல்லுவாரு! நான் பேசுறதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க மாட்டாரு! இப்போ-லாம் எனக்கு அவர் ஃபோன் பண்ணாக் கூட எடுக்குறதில்லை நான்” – என்று கூறியவனை அவதானித்தவாறு,
“விடு! சீக்கிரமே ரெண்டு பேருக்கும் பாயாசத்தைப் போட்ருவோம்” என்றான்.
அவன் கூறியதைக் கண்டுகொள்ளாது ஏதோ யோசனையிலிருந்த gangster, “ண்ணே… எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருக்குண்ணே” என்றான் மெல்ல.
“என்ன டே?”
“எங்கப்பாவுக்கு அங்க எதுவும் side chick இருக்குமோ! அதான் மனுஷன் ஊர் திரும்புற எண்ணமில்லாம இருக்குறாரோ?, இந்தா…. இருக்குது சவுதி! ஆனா, 2 வருஷத்துக்கொரு தடவை தான் வீட்டுப் பக்கம் தலை காட்டுறாரு” – கண்ணை உருட்டி ரகசியம் பேசியவன்,
“டேய் டேய்… வயசுக்கேத்த மாதிரி பேசு டே!” – என்று அவன் திட்டியதும்
“ப்ச் போ-ண்ணே!, எனக்கு எதுவுமே பிடிக்கல” – என்று சலிப்புடன் கூறி விட்டுப் பரோட்டாவில் ஆழ்ந்து போனான்.
“கண்டதைப் பேசாம, சாப்பிட்டு ஒழுங்கா வீட்டுக்குப் போற வழியைப் பாரு!, இதுக்கெல்லாம் சீக்கிரமே ஒரு முடிவு கட்டுவோம்” – என்றவனின் பேச்சைக் கேட்டபடி உண்டு முடித்து, பரோட்டா கட்டியிருந்த பேப்பரிலேயே கையைத் துடைத்துக் கொண்ட இருவரில் gangster,
“என் வீட்டு முன்னாடி என்னை இறக்கி விட்ருண்ணே” – என அலெக்ஸின் பைக்கில் தொற்றிக் கொண்டான்.
“வெறும் கொத்துப் பரோட்டா எப்பிடிண்ணே பத்தும் உனக்கு?, எனக்கெல்லாம் கூட, சுக்கா இல்லாட்டி இறங்காதுப்பா” -ஹெல்மெட்டைத் தாண்டி காதுக்குள் கத்திக் கொண்டிருந்தவனிடம்,
கடுப்புற்று “ம்ம், இப்ப வீட்டுக்குப் போ! வசந்தா போடும்.. சுக்கா..” – என்று அலெக்ஸ் திட்டிய வேளை,
“ண்ணே, ண்ணே வண்டியை நிறுத்துண்ணே, நிறுத்துண்ணே” – எனக் கத்தியவனின் குரலிலிருந்த பரபரப்பில் அதிர்ந்து, சட்டென அவன் இட்ட ப்ரேக்கில், சீட்டிலிருந்து ஒரு அடி எம்பிக் குதித்தமர்ந்தபடி, அலெக்ஸை இறுகப்பற்றிய gangster,
“சைடு, சைடு, சைடு போண்ணே” என்றான் மெல்லிய குரலில்.
“டேய்ய் என்னா டே உன் பிரச்சனை?”
“ப்ச், அங்க பாருண்ணே” – சன்னக்குரலில் கூறியவனைக் கேட்டு, பக்கவாட்டில் வண்டியை நிறுத்தியவன், நிமிர்ந்து நோக்குகையில்,
அங்கே.. இரு கை நிறைய பெரிய,பெரிய பிக் ஷாப்பர்களோடு 42,45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர், தெருமுனையில் நின்றிருந்தார்.
“யாரு டே இந்தக் கண்ணாடி?” – புருவம் சுருங்கக் கேட்டவனிடம்,
“hunter அப்பா-ண்ணே” என்ற gangster-ன் குரல் அலெக்ஸின் வலது தோளுக்குள் மறைந்தபடி வந்தது.
“நீ ஏன் டே அந்தாளைப் பார்த்து பயந்து ஒளியுற?”
“ப்ச், இது பயம் இல்லண்ணே!, மரியாதை! அவுரு கொஞ்சம் நல்லவருண்ணே!”
“யாரு இவுரா?, பார்க்க ‘நிறம் மாறாத பூக்கள்’ ‘விஜயன்’ மாதிரி இருக்குறாரு”
“அது யாருண்ணே?”
“அந்தக்காலத்து ஆக்டர் டா! உனக்குத் தெரியாது” – என்று அவன் விளக்கிக் கொண்டிருக்கையில்,
“அப்பாஆஆஆஆ” என்ற சத்தமான குரலும், ஆவலாய் ஓடி வரும் ஷூ கால்களின் ஒலியும் கேட்டு இருவரும் திரும்பி நோக்குகையில், baggy pants, tshirt சகிதம், நீண்ட கூந்தல் அலை,அலையாகக் காற்றில் பறக்க, தன் பெரிய கண்கள் மகிழ்ச்சியில் மிதக்க, விரிந்த புன்னகையுடன் விரைந்து ஓடி வந்து கொண்டிருந்தாள் hunter ஹாசினி.
அவளைக் கண்டதும் உச்சுக் கொட்டி விறைத்த gangster, தன் தோளை அழுந்தப் பற்றுவதை உணர்ந்து, திரும்பி அடிக்கண்ணில் முறைத்துப் பார்த்தான் அலெக்ஸ்.
“கொஞ்சம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து” – என்று அவன் அதட்டியதும் பம்மினாலும்,
“என்ன இருந்தாலும்.. எதிரி இல்லையாண்ணே!, அதான்.. பார்த்ததுமே ரத்தம் கொதிக்குது” – எனப் பல்லைக் கடித்தவனைக் கண்டு கொள்ளாது முன்னே நோக்கினான் அலெக்ஸ்.
மகளுக்குக் குறையாத வேகத்துடன் ஓடி வந்து தோளோடு அணைத்துக் கொண்ட தந்தையும், அவள் உச்சியில் முத்தமிட்டு, கையிலிருந்த பைகளை அவள் புறம் நீட்டி,
“தினம் க்ளாஸ் முடிய இவ்ளோ நேரம் ஆயிடுமா?, ஆளில்லாத ரோட்டுல உன்னைத் தனியா நடக்க விட்டுட்டு உங்கம்மா என்ன பண்ணுறா?” – கடிந்து கொண்டவரைக் கேட்டு gangster,
“ம்க்கும், பாம்புக்கு பாதுகாப்பா?” என்று முணுமுணுக்க,
“பச்சைப்புள்ள மாதிரி இருக்கு! இதுக்கு ஏன் டே பூலான் தேவின்னு பேரு வைச்சிருக்க?”
“உனக்கு அவளைப் பத்தி தெரியாதுண்ணே” என்று கறுவியவன்,
“அம்மா கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்னு சொன்னாங்கப்பா! எனக்கு பீரியட்ஸ். அதான் நான் போகல! நம்ம காலனிக்குள்ள என்ன பயம்ப்பா?, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்ல! நீங்க வாங்க வீட்டுக்குப் போகலாம்” – என்று கொஞ்சுவதை கடுப்புடன் பார்த்தான்.
“அப்புறம் ஏன் இன்னைக்கு டியூஷன் போன?, வீட்ல ரெஸ்ட் எடுக்காம?” – என்ற தந்தை அவள் கைப்பற்றி அங்கேயே நின்று கொள்ள,
தந்தை வீட்டிற்கு வரத் தவிர்ப்பதை தவிப்புடன் கண்டபடி, சுருங்கிப் போன முகத்துடன்,
“சும்மா 10 நிமிஷம் பார்த்துட்டுப் போகத் தான் வந்தீங்களாப்பா?, நான் இதெல்லாம் கேட்டேனா?” – என்று கையிலிருந்ததைத் தூக்கிக் காட்டி அழுகைக்குரலில் கேட்க,
“ஹாசினி! அழக்கூடாது” என்று திட்டியவர்,
“நான் அங்க வந்தா, உங்கம்மா தேவையில்லாம வாக்குவாதம் பண்ணுவா! உன்னைப் பார்த்த நல்ல மனநிலையை நான் கெடுத்துக்க விரும்பல. ஸ்கூலுக்கே வரலாம்ன்னு இருந்தேன், அப்பாவுக்கு அவசர வேலை வந்துடுச்சு! அதான் இப்ப வர வேண்டியதாயிடுச்சு! நீ கேட்ட துபாய் குனாஃபா சாக்லேட்டெல்லாம் உள்ள இருக்கு. எடுத்து சாப்பிடு. அப்பா இந்த வீக் எண்ட் உன்னை பாட்டி வீட்டுக்குக் கூட்டிப் போறேன்” என்றார்.
எரிச்சலுற்ற முகத்துடன், “ப்ச், பாட்டி வீட்டுக்கெல்லாம் நான் வரலப்பா! என்னைப் பார்த்தாலே பாட்டி இஷ்டத்துக்கு கரிச்சுக் கொட்டும்! அம்மாவைத் திட்ட முடியாத கோபத்தையெல்லாம் என் மேல காட்டும்! நான் எதிர்த்துப் பேசுனா உங்களுக்குப் பிடிக்காது!, அங்க வந்தா, எனக்குக் கோபமும்,அழுகையும் தான்ப்பா மிஞ்சும்.“ என்றவளின் பேச்சைக் கேட்டு உருகி,
அவள் தலையைப் பற்றித் தன் மார்பில் அழுத்திக் கொண்டவர்,
“சரி, வேறெங்க போகலாம் சொல்லு. அப்பா கூட்டிப் போறேன்” என்றார்.
“ம்ம், மகாபலிபுரம் ரிசார்ட் போகலாம்ப்பா. இல்லாட்டி பாண்டிச்சேரி?”
“உங்கம்மா விடுவாளா?”
“நோ சொன்னா, நான் சும்மா விட்ருவேனா?” – அவள் சொன்ன தொனியில் சிரித்து,
“எப்பிடியிருக்கா உங்கம்மா?” – எனக் கேட்டவரிடம்,
“ப்ச், நல்லாத் தான் இருக்காங்க. அவங்களுக்கென்ன?” என அசட்டையாய்க் கூறியவளின் ஆட்டிடியூடில்,
“ஹா….சினி” என அதட்டியவரிடம்,
“நீங்க வீட்டுக்கு வரலாம்லப்பா?, ப்ளீஸ்! இன்னிக்கு நைட் இங்க தங்குங்க! தாத்தா கிட்ட சொன்னா, அம்மாவை கன்வின்ஸ் பண்ணிடுவாங்கப்பா ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சத் தொடங்க,
அவளது முன் நெற்றி முடியை ஒதுக்கியவாறு,
“தங்குறதெல்லாம் ஒத்து வராதும்மா! அதான் வீக் எண்ட் வெளியே கூட்டிப் போறேன்னே?, அப்பா ஈகோவை ட்ரிகர் பண்ற மாதிரி அம்மா மோசமா பேசுவா. தேவையில்லாத சண்டை வரும்” என்று கூறியதும்,
“பாட்டி கூடத் தான் உங்களை ட்ரிகர் பண்றாங்க! அவங்ககிட்டலாம் கோபப்பட மாட்டேங்குறீங்க! அம்மா கிட்ட மட்டும் சண்டை போடுவீங்களா?” என்று பாயிண்ட்டாய் கேட்க,
“இப்பிடியெல்லாம் பேச உங்கம்மா சொல்லிக் கொடுத்தாளா?” – என்று கடுகடுத்தவரிடம்,
“இல்லாட்டியும் எனக்கே தெரியாதாப்பா?, ஊருக்குள்ள எத்தனையோ பாட்டிங்க.. டிக்கெட் வாங்கிட்டு பரலோகம் போயிடுச்சுங்க! நம்ம பாட்டி மட்டும் தான் நல்லா… தெம்பா உட்கார்ந்துகிட்டு, சொந்தப் பையனையே வாழ விடாம பண்ணிட்டிருக்கு” – என்று கடித்தப்பற்களுடன் ஆத்திரப்பட்டவளை,
“அப்பா அடிச்சுடுவேன் ஹாசினி! பெரியவங்களை இப்பிடித் தான் மரியாதையில்லாம பேசுவியா?, இப்பிடித் தான் என் குடும்பத்துக்கு எதிரா உன்னை ஏத்தி விட்டு வளர்க்குறாளா உங்கம்மா?” என்று குற்றம் சாட்ட,
நிராசையுடன் தந்தை முகத்தை நோக்கி,
“அதெப்பிடிப்பா கண்ணிருந்தும் குருடனா இருக்க முடியுது உங்களால?, உங்களுக்கு எப்பவும் எங்களை விட... உங்கம்மா தான்ப்பா முக்கியம்!, அந்த சூனியக்காரப் பாட்டியே உங்க கண்ணுக்கு நல்லவங்களா தெரியுறாங்கன்னா, எங்கம்மா…. எனக்கு நல்லவங்க தான்! அவங்க என்னை சரியாத் தான் வளர்க்குறாங்க” என்று கோபமும், அழுகையுமாய்க் கூறியவள் விருட்டென நகர்ந்து சென்று விட,
மகள் அழுகையுடன் விலகிச் செல்வதையும், “ஹா..சினி… அம்மு… ஐ ஆம் சாரிம்மா…. நில்லும்மா” என்று தவிப்புடன் கெஞ்சியபடித் தொடர முயல்பவரையும் கண்டவாறு வந்த ஹாசினியின் அம்மா, கணவனை வெறுப்புடன் நோக்கிக் கடந்து செல்ல,
அவரைக் கண்டதும் விறைப்பும்,இறுக்கமுமாய் நின்று விட்ட தந்தை, மனைவியின் முகத்தைக் காணாது விசுக்கென மறுபுறம் திரும்பிக் கொண்டார்.
இவர்களது ஒட்டுமொத்த நாடகத்தையும் ‘விட்னெஸ்’ செய்த இருவரில் gangster, அலெக்ஸிடம்,
“அது தான்-ண்ணே ஹாசினியோட அம்மா ஹம்சவர்தினி” என்று முணுமுணுத்தான்.
“அப்ப அவங்கப்பா பேரென்ன ஹாரிஸ் ஜெயராஜா?”
“ண்ணே!, அவரை உங்க கோஷ்டின்னு நினைச்சீங்களா?, அவ T.Hasini. அந்தாளு பேரு தங்கப்பாண்டியன்”
“நெளிஞ்ச தகர டப்பா மாதிரி இருக்குறவருக்குத் தங்கம்ன்னு பேரா டே?”
“அவங்கம்மா மட்டும் என்ன, உடைஞ்ச காஃபி கப் மாதிரி தான இருக்குது! இதுக்கு… அந்தாளு பொருத்தம் தான்”
“பொருந்துன மாதிரி தெரியலயே டே!, ஏய்ய் அந்தாளு இங்கிட்டு வர்றான் டே!, வண்டியை எடுத்துடவா?” – என்று முடிப்பதற்குள்,
“எடுண்ணே, எடு! சீக்கிரம்” என gangster தோளைத் தட்டி அவசரப்படுத்த,
தடுமாறி அலெக்ஸ், வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள் அருகில் வந்து விட்ட பாண்டியன்,
“கணேஷ் மாதிரி இருக்கே!, கணேஷூ.. நீ தானா? நல்லாயிருக்கியா டா?” எனக் கேட்டார்.
வேகமாய் வண்டியை விட்டிறங்கிப் பவ்யத்துடன், தோளை இறக்கி, சட்டையை நீவி, அடக்கமான பாவனையுடன் ஆடியவாறு நின்ற gangster, பிடரியைத் தேய்த்தபடி “ந..நல்லாயிருக்கேன் அங்கிள்” என்றான்.
“நீயும்,ஹாசினியும் சமாதானமாகிட்டீங்களா இல்லையா?, உன்னைப் பத்தி பேச்செடுத்தாளே முகத்தை சுருக்கிக்குறாளே டா?”
“எனக்கும் அப்பிடித் தான் அங்கிள்” என்று முனகியவன், “அ…அ..அதெல்லாம் இல்ல அங்கிள்” என்று மெல்லியகுரலில் கூறியவாறு தலை குனிந்து கொள்ள,
சிரித்து அவன் தோளைத் தட்டியவர், “எதுன்னாலும் எனக்கு சொல்லு டா! சரியா?, ஃபோன் நம்பர் இருக்குல்ல?” எனக் கேட்டுக் கொண்டு விடைபெற்றுச் சென்று விட்டார்.
அவர் சென்றதும் வண்டியிலேறி அமர்ந்தவனிடம், “என்னா டே அப்பிடி நாட்டியமாடுற?, அம்புட்டு மரியாதையா அந்தாளு மேல?” எனக் கேட்டபடி பைக்-ஐ ஸ்டார்ட் செய்தான் அலெக்ஸ்.
“சின்ன வயசுல, அவர் இங்க வரும் போதெல்லாம் என்னையும், அவளையும் கடைக்குக் கூட்டிப் போய் நிறைய ஸ்நாக்ஸ் வாங்கித் தருவார்ண்ணே!, ரொம்ப நல்லவரு! நல்லா சிரிக்க,சிரிக்கப் பேசுவாரு”
“பொண்டாட்டிட்ட மட்டும் முறைப்பாரு போல”
“அந்தம்மாட்ட சிரிச்சுப் பேசிட்…….டாலும்… பார்த்தீங்கள்ல, எப்பிடி கண்ணை உருட்டி புருசனை முறைச்சுச்சுன்னு”
“அந்தாளு பேசுன பேச்சுக்கு முறைச்சதோட விட்டுச்சே!, அவுரு ஒரு ‘mumma boy’ போல டே கணேஷூ! உனக்குக் குடும்ப அரசியல் புரியாது வேற”
“அவரு நல்லவர் தான்-ண்ணே! அவங்கம்மா தான் சரியில்ல” – புறணி கூறியவனிடம்,
“உனக்கு ஹாசினியை விட, ஹாசினி அம்மா மேல தான் நிறைய காண்டு இருக்கு போல டே” என்றான் அலெக்ஸ்.
“ஆமா பின்ன?, எப்பப் பாரு எங்கம்மாவை ஏத்தி விட்டு, சலங்கை கட்டி ஆட வைக்குறதே இந்த லேடி தான்” என்று முறைப்புடன் கூறியவன்,
பின்னால் அடித்த ஹார்னில் திரும்பிப் பார்த்து, “AJDesigns, AC car-ல வருதுண்ணே! வழி விடுங்க” என்றான்.
அவன் கூறியதும் சட்டென சைடு மிர்ரரை நோக்கிய அலெக்ஸ் instant குதூகலத்துடன், “உரண்டை இழுப்போமா?” எனக் கேட்டு, வண்டியை வேண்டுமென்றே zigzag-ஆக ஓட்ட,
தடுமாற்றத்துடன் அவன் தோளைப் பற்றிக் கொண்டு “அந்தக்கா வெறியாகப் போகுதுண்ணே” – என்று எச்சரித்தபடியேத் திரும்பி நோக்கிய gangster,
முறைப்புடன் இருவரையும் கண்டவாறு டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவளைக் கண்டு,
“நான் இல்லக்கா…! இவுரு தான்! A for Alex!” என்றான்.
பின் மெல்ல அவளுக்கு parallel ஆக அவளது சீட் அருகே வண்டியைச் செலுத்தியபடி, ஜன்னலைத் தட்டிக் கீழிறக்கச் செய்த அலெக்ஸ், சாலையைக் கவனிக்காது, அவளையே பார்த்தவாறு,
“கொத்து பரோட்டா சாப்பிடுறியா ஜெபா?” எனக் கேட்டான்.
“ஐய, உங்க night routine தெரியாது போலக்கா இவுருக்கு! ண்ணே, அந்தக்கா ப்ரோட்டீன் ரிச் ஃபுட் தான்-ண்ணே சாப்பிடுவாங்க! அவங்க வீடியோ பார்த்ததில்லையா நீங்க?” – குறுக்கால gangster.
இன்னமும் பார்வையை மாற்றாது அவளிடமே வைத்திருந்தவன், gangster-ன் ஆடியோவை அவாய்ட் செய்து விட்டு,
“tired-ஆ தெரியுறியே ஜெபா! ரொம்ப அலைச்சலோ?” – என வினவ,
அவனது அக்கறையை ஆஃப் செய்து விடும் நோக்கத்துடன்,
“க்கா,க்கா, ஒரே ஒரு செல்ஃபி எடுக்க பர்மிஷன் கொடு-க்கா” – gangster.
“லீவ்ல போன உன் குக் அக்கா வந்துடுச்சா இல்லையா?” – அலெக்ஸ்.
“க்கா, அட்லீஸ்ட்… ஆட்டோக்ராஃபாச்சும் போட்டுக் கொடுக்கா!”
அவள், அவனுக்குப் பதில் சொல்லும் முன், முந்திக் கொண்டு நொய்,நொய் என கேள்வி கேட்டபடிக் குறுக்கே புகுந்து இஷ்டத்திற்கு களேபரம் செய்பவனைக் கண்டு கடுப்புற்று, அவன் விலாவில் இடித்து,
“டேய் சும்மா இருக்க மாட்டியா நீயி?” – என்று சீறினான் அலெக்ஸ்.
“நீங்க சும்மா இருங்க முதல்ல”
“வண்டியை விட்டு இறங்கு டே நீயி”
“முடியாது”
-அடித்துக் கொண்டபடி ஸ்லோவாகி விட்டவர்களைக் கண்டுகொள்ளாது அவள் முந்திச் சென்று விட,
“எல்லாம் உன்னால தான் டா gangster நாயே!” என்ற அலெக்ஸ், வண்டியைச் சாய்த்து அவனைக் கீழே தள்ளி விட்டு, சர்ரென அவள் பின்னே பறந்து விட்டான்.
அன்றிரவு தன் வீட்டு படுக்கை அறைக்குள், wrap செய்யப்பட்டிருந்த பெரிய புகைப்பட சட்டத்தோடு நுழைந்தவன், wrapper-ஐப் பிரித்து, ஏற்கனவே சுவரில் மாட்டியிருந்தத் தன் நீளப்புகைப்படத்தினருகே இதையும் மாட்டிப் பின் இரண்டடி பின்னே சென்று, ஜோடியாக இருந்த இரண்டு புகைப்படங்களையும் ரசித்து, இரு கைகளால் நெட்டி முறித்தான்.
கோட்-சூட்டில் கட்டியக் கைகளுடன், ஒரு கண்ணடித்துக் குறும்புடன் நின்றவனது புகைப்படத்தினருகே, அணிந்திருந்த சேலையின் முன் கொசுவத்தைப் பிடித்தவாறு, எட்டிப் பார்க்கும் போஸில், லேசாக தலை சாய்த்து நின்றவளது புகைப்படத்தைக் கண்டு,
“தனித்தனியா இருக்குற ரெண்டு பேரையும், சீக்கிரமே ஒன்னா சேர்த்துக் காட்டுறேன்” என்று சபதமிட்டுக் கொண்டவன்,
இதழ் பிரித்துப் புன்னகைப்பவளின் நாடியிலிருந்த முடிச்சை வருடி, “உம்ம்மாஆஆஆ”- எனத் தன் விரல்கள் வழி முத்தத்தை அனுப்பி, பின் மொத்தமாய் அவளை விழிகளால் பருகி,
‘இடையொரு கொடி, இதழொரு கனி,
இன்ப லோகமே உன் கண்கள் தானடி’ – எனப் பாடியவாறு, அலைபேசியைக் கையிலெடுத்து அவளுக்கு அழைத்தபடி டொம்மெனப் படுக்கையில் விழுந்தான்.
“என் நம்பர் உனக்கெப்படி கிடைச்சது?” – எடுத்தவுடன் பாய்ந்தவளிடம்,
“இன்னுமா கண்டுபிடிக்காம இருப்பேன்?” –எகத்தாளமாய்க் கூறியவன்,
“உன் மாமா பேசுனாரா இல்லையா?” என நேரடியாக விஷயத்தில் இறங்கினான்.
“எதைப் பத்தி?”
“AJDesigns-ல ‘J’ கூட ‘A’ இருக்கலாமா, வேணாமாங்குறதைப் பத்தி”
“அந்த ‘A’ நீ கிடையாது! ஊருக்குள்ள இப்பிடிச் சொல்லி வதந்தியைப் பரப்பிட்டிருக்கியா லே நீயி?”
“என்னைத் தவிர யாராலயும் அந்த ‘A’-வா இருக்க முடியாதுடி”
“நினைப்புத் தான் உனக்கு”
“ஆமா! உன் நினைப்பு தான்! ஒழுங்கு மரியாதையா உண்மையை ஒத்துக்க”
“உங்கம்மா ஒத்துக்கிச்சா?”
“அதெல்லாம் ஒத்துக்க வைச்சாச்சு”
“32-வயசு வரைக்கும் ஏன் எனக்குக் கல்யாணமாகாம இருக்குன்னு காரணம் கேட்டுச்சாமே” – காட்டமாகக் கேட்டவளிடம்,
“அப்பிடிக் கேட்டது உன் மாமன்டி! எங்கம்மா இல்ல” – என்றான் அவன் ரோஷத்துடன்.
“ஓ! கோவம் வேற வருதா உனக்கு?”
“ச்ச,ச்ச! இதுக்கு நீ ஒத்துக்காட்டி, உன் மவனுக்கு கல்யாணமே நடக்காதும்மா!, அவன் ‘AJDesigns’ nameboard-ல மட்டும் தான் ஜோடியா இருப்பான்னு கட் அண்ட் ரைட்-ஆ சொல்லிட்டேன் நான்”
“அது நீ இல்…..ல” – மீண்டும் பல்லைக் கடித்தவளிடம்,
“சரி நான் இல்ல! உன் மாமன் கேட்டதுக்கு என்ன பதில் சொன்ன?” என வினவினான்.
“யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்”
“எத்தனை நாள் யோசிப்ப?”
“அது என் இஷ்டம்”
“சரி உன் இஷ்டம்.”
“வேற என்ன?”
“வேறஅஅஅஅஅ”
“ஒன்னுமில்லன்னா ஃபோனை வை”
“ஏ..ஏய்ய் ஏய்ய்ய்ய் ஜெபா ஜெபா… வந்து…. ஹாங்ங்ங்.. ஆஆஆங்! இ..இந்த ஏரியாவுல முருங்கைக்கீரை எங்க கிடைக்கும்ன்னு சொல்லு” – என வாய்க்கு வந்ததை உளறினான்.
“முருங்கைக்கீரையா?, ஏன் சமைக்கப் போறியா?, நீ தான் வெளிய சாப்பிடுற ஆளாச்சே”
“அதெல்லாம் இனி பழகிக்க வேண்டியது தான்! நீ எங்க கிடைக்கும்ன்னு மட்டும் சொல்லு”
“தினம் காலைல 11 மணிக்கு கீரைக்கார பாட்டி வருவாங்க! அவங்கக் கிட்ட வாங்கிக்க”
“அந்த நேரம் நான் ஆஃபிஸ்ல இருப்பேனே!”
“அதுக்கு?”
“உன் குக் அக்கா வாங்கும் போது, எனக்கும் சேர்த்து வாங்கி வைக்க சொல்லேன்! நீ ஈவ்னிங் வீட்டுக்கு வந்தப்புறம்.. நான் நேர்ல வந்து.. உன்னைப் பார்த்துப் பேசி.. சிரிச்சு… ரசிச்சு.. கொஞ்சி.. மொல்ல்ல்லமா…. வாங்கிட்டுப் போறேன்.” – அப்பட்டமாக வழிந்தவனிடம்,
“எவ்ளோ நேக்கா… என் வீட்டுக்குள்ள நுழையப் பார்க்குற டே?” என அவள் திட்ட,
“உன் மனசுக்குள்ளேயே நுழைஞ்சிட்டேன்! உன் வீட்டுக்குள்ள நுழைய அனுமதி கேட்கனுமா? போ….டி!” – எனப் பீற்றியவனை,
“அதுக்கு முன்ன உன் வீட்டுக்குள்ள எவனாவது நுழைஞ்சிடப் போறான்!, போய்… முதல்ல உன் பால்கனி கதவை சாத்து!” – என்றாள் அவள்.
“என் வீட்டு பால்கனி திறந்திருக்கிறது உனக்கெப்படித் தெரியும்?” என்றபடியே அவசரமாகத் திரையை விலக்கி பலகணியில் வந்து நின்றவன்,
எதிர்வீட்டு மொட்டை மாடியில்.. காதில் ஏர்பாட்ஸூடன்.. நிலா வெளிச்சத்தின் கீழ்.. பர்பிள் நிற நைட் கவுனில்.. தன் பாப்-கட்-ஐ ‘ஐயர் குடுமி’-யாக்கி, செடிகளுக்குத் தண்ணீர் இட்டபடி நின்றிருந்தவளைக் கண்டு கண்கள் ஒளிர,
“செடி வாடுறது பொறுக்காம தண்ணி விடுறவளுக்கு, நான் வாடிக் கிடக்குறது கண்ணு தெரியலையாடி?” என செல்ல சலிப்புடன் கேட்டான்.
“நீயெல்லாம் கருகிச் சாக வேண்டிய கேஸூ! வாடியே கிட! தப்பில்ல”
‘எப்பிடிப் பேசுனாலும் லாக் போடுறா’ – என்று கடுப்பாகிப் போனவன்,
“ரொம்பப் பேசுனேனா, வாயை உடைச்சிடுவேன்” என மிரட்டி விட்டு,
“ஒரு ரோசாவே, ரோசா வளர்க்கிறதே! அடடே!” – என்று டாபிக்-ஐ மாற்ற,
“மானங்கெட்டவன்” என்று முணுமுணுத்தாள் அவள்.
“நீயும் தான் டி! கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பிரண்டை-ன்னு வளர்க்க வேண்டிய வயசுல வெட்கமில்லாம ரோசாச்செடி வளர்த்துட்டிருக்க! நீ என்னை மானங்கெட்டவன்னு சொல்லுவியா!” – fact பேசியவனைக் கேட்டுக் காண்டாகி,
“நீயெல்லாம் துளிரவும், மலரவும் தகுதியே இல்லாத ஆளு லே!” – என்று சாபமிட,
“சரி,சரி கோச்சுக்காத! தினம் நைட் இந்த நேரத்துக்கு ஜெபமலர் மெச்சுல பூக்குமா என்ன?” எனக் கேட்டான்.
“ஆமா! இல்லாட்டி, வாடிடும்! இது ஒன்னு தான் என் ரிலாக்சேஷன்” – முணுமுணுப்பாய்க் கூறினாள் அவள்.
“உன் ஸ்ட்ரெஸையெல்லாம் துவம்சம் பண்ணத் தான், அலெக்ஸாண்டர் குதிரையேறி படையெடுத்து வரப் போறாரு ஜெபா! ரெடியா இரு” – பாசமாய்க் கூறியவனிடம்,
“நீ முதல்ல பைக்-ஐ ஒழுங்கா ஓட்டு! அப்புறம் குதிரை ஏறுவ” – என அவள் நக்கலாய்க் கூற,
“நீ வர்றியா.. என் கூட… பைக்…ல?” – என்றான் அவன் சட்டென.
“அன்னிக்கு….. ஏத்திக்க மாட்டேன்னு சொன்ன?” – குத்திக் காட்டியவளிடம்,
“நீ இடைவெளி விட்டு உட்கார்ந்ததால தான் அன்னிக்குக் கூசிடுச்சு.. இப்போ.. ஊசி கூட நுழைய முடியாத அளவுக்கு.. நெருக்கமாக் கட்டிக்கிட்டு உட்கார்ந்தன்னு வையேன், கூச்சமேயில்லாம…. காத்துல பறப்பேன்” – பிடரியைக் கோதியவாறு.. அவளையே நோக்கியபடி கூறியவனின் குரலிலிருந்த கரகரப்பில்… கைகள் நடுக்கமெடுக்க.. watering can-ஐ இறுகப் பற்றியவள் பதிலற்று மறுபுறம் திரும்பிக் கொள்ள..
“ஜெபா….” – சன்னக்குரலில் அழைத்தவனை..
“……….”-அவள் அலட்சியம் செய்ய,
“கட்டிக்குவியா?” – எனக்கேட்டான் அவன் விடாது.
“………”
“கட்டிக்கோயேன்… ப்ளீஸ்…”
“…….”
“ஜெபாஆஆஆ” – பொறுமையற்று சத்தமிட்டவனைக் கேட்டு சிரிப்பு வந்தது அவளுக்கு.
கெஞ்சலில் தொடங்கி மிஞ்சி எகிறுவது தான் வாடிக்கை இவனுக்கு!
“பதில் பேசுடி”
“சேலையோட பைக்ல உட்கார்றது கஷ்டம்! ஸோ ரிஜெக்டட்” – என அவள் நிராகரிக்கவும், வெறியாகிப் போனவன்,
“சீக்கிரமே ஏத்துறேன் டி!, ஒன்னு…. நீ என் பைக்ல ஏறனும்! இல்ல, என் பைக்-கு உன் மேல ஏறனும்” – என்றான்.
“சைக்கோ மூதேவி”
“எப்பவோ நடந்ததை மனசுல வைச்சுக்கிட்டு, தினம்,தினம் என்னை அலைய விட்டு, மெல்ல,மெல்லக் கொன்னுட்டிருக்கிற நீ தான் டி சைக்கோ!”
“சரி, அப்போ என் மாமன் கிட்ட ‘இந்த இடம் வேணாம்’-ன்னு சொல்லச் சொல்றேன்” – என்று பாயிண்ட்டாய் கல் எறிய,
“ஏ…ஏ…ஏய்ய்ய்…. ய்ய்ய்ய்ய் ஜெபா.. ஜெபா… அவசரப்பட்டு முடிவு பண்ணாத! இனிமே நான் வாயைக் குறைச்சு, அடக்கமா இருக்க ட்ரை பண்றேன்! அப்பிடியெல்லாம் பண்ணிடாதடி” – என சரணடைந்து விட,
அவன் புறம் திரும்பி… திமிராய் நாடியை உயர்த்தி.. கைகளைக் கட்டிக் கொண்டு “அ….து!!” – எனக் கூறியவளை முறைத்துப் பார்த்தவன்,
“தூக்குன மேனிக்க இருக்குற நாடியை, கடிச்சு வைச்சாத் தான் டி நீயெல்லாம் அடங்குவ” என்று எகிற,
“நீ ஏற்கனவே கடிச்சு வைச்சதே மார்க் மறையாமத் தான் இருக்கு” என்று கோபப்பட்டவள்,
“அன்னிக்கு உன்னைத் தப்பிக்கவிட்டதே தப்பு டே! என்ன தைரியம் உனக்கு?” எனத் திட்டியவளைக் கண்டுகொள்ளாது, அவளை உற்று நோக்கி தழும்பைக் கண்டறிய முயன்றவன்,
“நீ அனுமதி தந்தா, மாமா… பச்ச்சக்,பச்சக்ன்னு நூறு முத்தம் வைச்சு... ஒரு நைட்ல மார்க்-ஐ மறைய வைச்சிடுவேன் ஜெபா! வரட்டுமா?” என்றான்.
“ஒரு நைட்ல?” – மடித்த உதடுகளுடன், மனதை மறைக்க முயற்சிப்பவளைக் கண்டபடி,
“ஓராயிரம் நைட்-க்கு அனுமதி கொடுத்தாக் கூட ஓகே தான்”-என்றவனின் பேச்சில் விரிந்த சிரிப்பை அடக்க முடியாது, பட்டென கால்-ஐ கட் செய்தவளை, பாவனை மாறாது.. தலை சாய்த்து நோக்கியவன்,
“கடிச்ச இடத்தோட சேர்த்து, கன்னமும் சிவந்திடுச்சு போல” எனக் கத்தினான்.
அவன் போட்ட சத்தத்தில் பதறி, ‘வாயை மூடு டே குரங்கு’ என அவள் கைகளை உதற,
“ஜெபாஆஆஆ…. ஜெபமலர்….. என் எதிர் வீட்டுக் கட்டழகிகிகி!!” – என்று தொடர்ந்து கத்தியவனை அடக்க முடியாது, முஷ்டியை இறுக்கி, ‘மொகரையைப் பெயர்த்து விடுவேன்’ என சைகை காட்டியவள், கல்லை விட்டு எறியலாமா- என தரையை ராவத் தொடங்கி விட,
அவன் அடங்காமல்,
“ஜெபமலர்ர்ர்ர்ர்…… என்னைக் கட்டிக்குவியாஆஆஆ” – என இரு கைகளையும் குவித்து மீண்டும் சத்த்த்த்தமாய்க் கூவியதும், கீழ் வீட்டு விளக்கு ‘டக்கென’ எரிய, அடித்துப்பிடித்து செடிகளின் பின்னே மறைந்தவள், மெல்ல எட்டிப் பார்த்தாள்.
கீழ்வீட்டு மிலிட்டரி தாத்தா,
“தம்பி, பரலோகத்தை ஆளும் பரமபிதா உனக்கு உறக்கத்தைக் கொடுக்கலையா?, ஏன்-ப்பா இப்பிடிப் பதினோரு மணிக்குப் பைத்தியக்காரன் மாதிரி கத்தி ஊரை எழுப்பிட்டிருக்க?” எனக் கடிய,
“பல வருஷக் காத்திருப்புக்குப் பிறகு, கர்த்தர் இப்ப தான் என் வாழ்க்கையில கருணை காட்டியிருக்கிறாரு! அது உங்களுக்குப் பொறுக்கலையா ஆஃபிசர்?” – என்று வம்பு வளர்த்தவனிடம்,
“கருணையைக் காலையில காட்டச் சொல்லுப்பா! இது காக்கா,குருவியெல்லாம் கனவு காணுற நேரம்!” என்று அவர் கூற,
“சாரி ஆஃபிசர்” – இருகைகளையும் குவித்து அவன் மன்னிப்புக் கேட்டதும்,
“இம்சையைக் கூட்டாம, இம்மீடியட்-ஆ போய்த் தூங்கப் பாரு” என்றவர், “மேல் வீட்டுக்கு இனிமே ஆம்பளைங்களையே குடி வைக்கக் கூடாது! வர்றவன் எல்லாரும்.. அந்தப் புள்ள பின்னாடியே சுத்தி ரோதனையைக் கொடுக்குறானுங்க! இனி எங்க தூங்க” எனப் புலம்பியபடி சாய்வு நாற்காலியில் ஆடியவாறு, FM radio-வை on செய்தார்.
அவர் நகர்ந்ததும் மீண்டும் அவளுக்கு அழைப்பு விடுத்தவன், ஹஸ்கி வாய்சில், “ஜெ….பா” என்றழைக்க,
“வாண்டட்-ஆ வம்பு வளர்த்திட்டிருக்கியா?, கொன்னுடுவேன் லே உன்னைய!” எனத் திட்டியவளைப் பொருட்படுத்தாது, மீண்டும்,
“ஜெ..பாஆஆஆ” என்றவன் பால்கனிக் கம்பியில் சாய்ந்து, கண்களைச் சுருக்கி, மூடிய இதழ்கள் நீள, கெஞ்சலும்,கொஞ்சலுமாய் மென்புன்னகை புரிய,
அவன் முகம் காட்டும் பாவனையில்… விழி அகலாது…. அவனையே அவள் நோக்கிக் கொண்டிருந்த வேளை, மிலிட்டரி தாத்தாவின் ரேடியோ….
‘சங்கீதக்காரன் எந்தன் காதல் பார்வையில்..
உல்லாசப்பூங்குயில்கள்.. ராஜபார்வையில்…
பொன்மாங்குயில்… சிங்காரமாய்…’ – எனத் தன் பங்குக்கு எஸ்.பி.பியின் குரலில் கொஞ்சத் தொடங்கியது.
