8.1 சொட்டாங்கல்!

மூடிய இமை வழிக் கண்களுக்குள் ஊடுருவ முயன்ற காலைக்கதிரவனின் கதிர் பாய்ச்சல் கொடுத்த இம்சையை மீறி, காதுகளை சேதப்படுத்திய ஒரு காண்டாமிருகத்தின் கொடூரக் குரலில் கடுப்பு உச்சம் தொட, கவிழ்ந்திருந்தத் தலையணையைக் கொண்டே, செவிகளை அழுந்த அடைத்தவாறு, போர்வையை இழுத்து இறுக மூடி உறங்க முயன்றான் gangster.

அவன் படுத்திருப்பது அலெக்ஸின் படுக்கையறை!

போர்த்தியிருப்பது அலெக்ஸின் பச்சை நிறக் கட்டம் போட்ட போர்வை!

இவன் எதற்காக இங்கே பாய் விரித்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள நாம் சில நாட்கள் முன்னே செல்ல வேண்டியிருக்கிறது.

Coding க்ளாஸை இவன் ‘கட்’ அடித்த அன்று, பயமும், திகிலுமாக வீட்டிற்குச் சென்றவனை வெற்றுப் பார்வையுடன் வரவேற்றார் வசந்தா.

Dining table நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் எதிரே, பவ்யமாய் அதே நேரம் அழுத்தமான முகத்துடன் சென்று நின்றவனை நிமிர்ந்து பார்த்தவர், அவன் பிறந்த போதிருந்த அவர்களது வீட்டின் financial status பற்றியும், அவனுக்கு இரண்டு வயது நிறையும் முன்பே, குடும்பத்தின் செல்வநிலை செழிக்க வேண்டி அவனது தந்தை வெளிநாட்டு வேலைக்குச் சென்று விட்டதையும், அன்று தொடங்கி இன்று வரை ஒற்றை ஆளாய்.. மகனை வளர்க்கத் தான் அரும்பாடு பட்ட கதையையும் கண்ணீரும்,கோபமுமாய்ச் சொல்லி.. தாங்கள் படும் கஷ்டத்தையும், செய்யும் தியாகத்தையும், ஈடுகட்டுமளவிற்கு அவனது நடவடிக்கை அமையவில்லையென்றும்,

இப்படிக் கொஞ்சமும் பொறுப்பற்ற/புரிந்துணர்வில்லாத மகனாக அவன் வளர்ந்து, தனது வளர்ப்பை/முயற்சிகளை அர்த்தமற்றதாக்கி விட்டதாகவும், இவனைப் போன்ற பிள்ளையின் மீது time & energy-யை வீணடித்ததற்காகத் தான் வேதனையுறுவதாகவும், இவனைப் பெற்றதே பாவம் என்பது போலவும் மிகைப்படுத்திப் பேசி.. அவன் பக்க விளக்கத்திற்குக் கொஞ்சமும் செவி சாய்க்காது, அவனது குற்ற உணர்ச்சியைத் தூண்டி விட்டுக் கொழுவிலேற்ற,

இயலாமையில் நொந்து போன gangster, ஊனின்றி, உறக்கமின்றி, மறுநாள் காலை பள்ளி assembly-இல், மொட்டைவெயிலில் மைதானத்தில் நின்ற போது கிறங்கி, மயங்கி கீழே விழுந்து விட்டான்.

‘அம்மா பயந்து விடுவார்கள், வீட்டிற்குச் சொல்ல வேண்டாம்’ – என வகுப்பாசிரியரிடமும், நண்பர்களிடமும் வேண்டிக் கொண்டவன், ஐவி டிரிப்ஸ் முடிந்ததும், அலெக்ஸிற்கு call செய்து விட்டான்.

என்னவோ,ஏதோவெனப் பதறியடித்து ஓடி வந்தவனிடம், நடந்ததைக் கூற, பில்-ஐ செட்டில் செய்து அவனை அழைத்துக் கொண்டு நல்ல உணவகத்திற்குச் சென்று அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தவன், ‘என்ன பிரச்சனை’-எனக் கேட்க, அனைத்தையும் ஒன்று விடாது ஒப்பித்தான் gangster.

“இதுக்கு மேல எனக்குத் தாங்காதுண்ணே!” – கடைசி ஸ்பூன் ஐஸ்க்ரீமை வழித்துத் தின்றபடி கூறியவனிடம்,

“என்ன செய்யலாம்ன்னு இருக்க?” – எனக் கேட்டான் அலெக்ஸ்.

“ஸ்கூல் ஹாஸ்டல்ல சேரப் போறேன்-ண்ணே”

“அப்போ ஆடலும்,பாடலும்?”

“Mission aborted-ண்ணே” – சலிப்பாய்க் கூறினான் gangster.

“ப்ச்” என முறைத்த அலெக்ஸ் பின், “வசந்தா ஒத்துக்குமா?” – என்றான்.

“ஒத்துக்க வைக்கனும்! எங்கம்மாவுக்கு நான் டாக்டர் ஆகனும்ன்னு ஆசை! எங்க ஸ்கூல்ல தினம் சாயந்தரம் NEET foundation classes நடக்குதாம்! இதைக் காரணமா வைச்சு, எங்கம்மா கிட்ட என்னைய ஹாஸ்டல் சேர recommend பண்ணச் சொல்லி எங்க P.E sir-கிட்ட பேசியிருக்கேன்!,”

“இந்த மூளையை, அவங்க சொல்றதைச் செய்றதுல யூஸ் பண்ணலாம்ல டே?, எதுக்கு லைஃபை காம்ப்ளிகேட் பண்ணிக்கிற?”

-அவன் ஆதங்கத்துடன் கேட்டதும் சுள்ளென நிமிர்ந்து பார்த்த gangster,

“‘learn it, master it, prove it’ – இதான் எங்கம்மாவோட motto! எப்பவும் எதையாவது prove பண்ணிக்கிட்டே இருக்கிறது tired-ஆ இருக்குண்ணே!, இப்பிடியே என்னை compromise பண்ணிக்கிட்டே எத்தனை நாள் ஓட்டுறது?, ஸ்ட்ரெஸ் ஆகுது எனக்கு”

-teenage-க்கே உரிய ‘break the rules’ பிடிவாதத்துடன் துள்ள,

“பெரிதினும் பெரிது கேள்-ன்னு பாரதியார் சொன்ன மாதிரி உங்கம்மா, உன் விசயத்துல high ambition வைச்சிருக்காங்க போல டே!”

“அதே பாரதியார் தான் ‘தன்மை இழவேல்’-ன்னும் சொல்லியிருக்காரு”

“பார்றா!, BTS fan-க்கு பாரதியாரைப் பத்தியெல்லாம் தெரியுது”

-வெட்கமாய்ப் புன்னகைத்தவன்,

“அது.. ‘சூரரைப் போற்று’-ன்னா என்னன்னு google பண்ணும் போது, புதிய ஆத்திச்சூடியைப் படிச்ச ஞாபகம்” – என்று பிடரியைச் சொரிந்து கொண்டான்.

“ஹாஸ்டல்ல இருந்துடுவியா?, சாயந்தரம் ஆனா, சைக்கிளை எடுத்துக்கிட்டு ‘kingdom’ bakery-ல, பன்,பட்டர்,ஜாம் சாப்பிட ஜம்முன்னு கிளம்பிடுவியே! அதையெல்லாம் தியாகம் பண்ணிட முடியுமா உன்னால?”

-என அலெக்ஸ் கேட்டதும், உச்சுக் கொட்டியவனின் முகம் சோர்ந்து போக, காலியான ஐஸ்க்ரீம் கிண்ணத்தையே, எரிச்சலும்,கடுப்புமாக.. வெறித்து நோக்கினான்.

“பதில் சொல்லு டே”

“ப்ச், பன்,பட்டர்,ஜாம் மட்டுமா?, ப்ரௌனி, வாஃபில், அத்தோ, கொத்து பரோட்டா, மட்டன் சுக்கா, மோமோஸ், பூண்டுக் கார தோசை…… அண்ணே! எனக்கு அழுகையா வருது-ண்ணே!”

“தீனி மூட்டை!, இப்பிடித் தின்னா அகண்டுட்டுத் தான் போவியே தவிர, வளர மாட்ட டே”

“என் ஹைட்-ஐப் பத்தி பேசாத-ண்ணே! எனக்குக் கெட்ட கோவம் வரும்” – விரல் நீட்டி மிரட்டியவனின் தலையில் கொட்டி,

“வேலை,வெட்டியை விட்டுட்டு வந்து உனக்கு சோறு வாங்கிக் கொடுத்தா, மூக்கை விடைப்பியா லே நீயி?, மரியாதையா.. தின்ன சோத்துக்குக் காசைக் கொடு லே” – என்று சீற..

“500-ரூபா! சப்பக் காசு! இதை செலவழிச்சிட்டு ரொம்பத் தான் சவுண்டு வுடுறாரு!, இப்பவே gpay பண்றேன்!” – எனத் திட்டியவன், தன் ஃபோனை எடுத்து உடனடியாக பணத்தை அனுப்ப,

“என்ன லே instant-ஆ அனுப்புற?, அப்பிடி எம்புட்டு காசு லே அக்கௌண்ட்ல வைச்சிருக்க?”

“அதெல்லாம் எங்கப்பா மாச,மாசம் எங்கம்மாவுக்குத் தெரியாம, எனக்கே,எனக்குன்னு காசு போட்டு விட்ருவார்-ண்ணே” – பெருமையாகக் கூறியவனிடம்,

“காசு விசயத்துல உங்கப்பனோட இருக்குற டீலிங்கை, மத்த விசயத்துலயும் வைச்சுக்கலாம்ல டே?”

“அவரைப் பொறுத்தவரைக்கும், என்னைப் பத்தின முழுப் பொறுப்பையும் சுமந்துக்கிட்டிருக்கிற எங்கம்மா, எனக்கு என்ன செஞ்சாலும் சரியாகத் தான் இருக்கும்! என் விசயத்துல எங்கம்மாவோட decision-க்குத் தான் சப்போர்ட் பண்ணுவார், respect பண்ணுவாரே ஒழிய, என் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்! அப்பிடியே கேட்க முயற்சி பண்ணுனாலும், எங்கம்மா அவரை ஈஸியா கன்வின்ஸ் பண்ணிடுவாங்க!, end of the day, ‘அம்மாவை எதிர்த்துப் பேசாத! அவ சொல்றதைக் கேளு’-ன்னு தான் சொல்லுவாரு!,

ஏன்னா, அவரே அம்மா சொல்றதைத் தான் கேட்பாரு! அவங்க சொல்லித் தான் வெளிநாட்டு வேலை, அவங்களோட ஒத்துழைப்புல தான் காசு,பணம், வீடு, 4 பேர் மதிக்கிற வாழ்க்கைன்னு, அவர் பாதை மாறுனதா அடிக்கடி சொல்லுவாரு! எங்கம்மா தான் அவர் லைஃபோட ஏஞ்சல்!”

-இதைச் சொல்லுகையில் அலுத்துக் கொண்டாலும், அதில் லைட்-ஆக பெருமையும்,கர்வமும் ஒட்டியிருந்ததைக் கண்டு, வந்த சிரிப்பை அடக்கி,

“மனைவியை நெம்ம்ம்ப மதிக்கிறார் டே உங்கப்பா” – என்றான்.

“ஆமாமா!, அவர் எங்கம்மாவை மதிப்பார்! எங்கம்மா என்னைய மிதிப்பார்”

-சுழித்த முகத்துடன் கூறியவன், திடீரென “பேசாம நான் எங்கேயாவது காணாம போய், எங்கம்மாவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து prank பண்ணட்டுமா?” எனக் கேட்டான்.

“prank-ன்னு தெரிஞ்சதும் உங்கம்மா உன்னைய part,part-ஆ பிரிச்சுருமே! பரவாயில்லையா?”

“அதுக்கெல்லாம் பயப்பட்டா… காரியஞ் சாதிக்க முடியுமா-ண்ணே?”

“சரியான மொல்லமாரி-லே நீயி!, என்னவோ பண்ணித் தொலை!, ஒழுங்காத் தின்னு, தேறி, தெம்பானப்புறம் எதுனாலும் பண்ணு!”

“அப்டின்னா, நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணப் போறதில்லையா?”

“அதான் நீ கூப்பிட்டதும் ஓடி வந்து சோறு வாங்கித் தந்தேனே”

“தின்னக் காசைத் தான் நான் திருப்பிக் கொடுத்துட்டேனே”

“அதனால?”

“prank call பரட்டை – எங்கம்மாவை ஏன் ப்ராங்க் பண்ணக் கூடாது?, எப்பிடியும் நம்ம mission-ஓட targets லிஸ்ட்ல எங்கம்மா இருக்குது தான?”

“வசந்தா என்னைய வெளக்கமாத்தைக் கொண்டி சாத்துறதுக்கா டே?”

“ப்ச், ண்ணேஏஏஏ… என்ன்ன்ன்னண்ணே?, என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” – இடது கை நரம்பில் ஒட்டியிருந்த ப்ளாஸ்டரைக் காட்டிக் கேட்டவனை அவன் முறைக்கையில், Gangster-ன் செல்ஃபோன் திரை ‘Mominator’-என்று ஒளிரத் தொடங்கியது.

சடுதியில் முகம் மாற, ஆயாசத்துடன் அதையே வெறித்துப் பார்த்தவன், கண்டு கொள்ளாது விட, மீண்டும்,மீண்டும் ஒலித்ததும் எரிச்சலுற்று, attend செய்து, “ஹலோ” என்றான் உதட்டைச் சுழித்தபடி.

“எங்க இருக்க நீ?”

“ஸ்கூல்ல தான். வேற எங்க?” – அசால்ட்டாய் பொய் கூறினான்.

“பொய் சொல்றியா?”

“இல்லைன்னு சொன்னா, நம்பிடுவீங்களா?”

“சஞ்சய் கிட்ட ஃபோனைக் கொடு”

“அவன் டாய்லெட் போயிருக்கான்”

“அப்போ ஆத்விக் கிட்ட கொடு”

“அவன் Lab-க்கு போயிருக்கான்” – அடங்காது அளந்தவனைக் கேட்டு,

உஷ்ணப்பெருமூச்சை வெளியிட்டபடி ஒரு நொடி அமைதியானவர்,

“நீ ஸ்கூல்ல இல்ல. கரெக்டா?” எனக் கேட்டார்.

“தப்பு”

“நான் உன் க்ளாஸ் டீச்சர்க்கு கால் பண்ணிக் கேட்பேன் கணேஷ்.”

“கேளுங்க” – ‘எனக்கென்ன’- ரீதியில் சொன்னவனிடம்,

“கேட்கத் தான் போறேன்! இன்னிக்கு இதுக்கொரு முடிவு தெரிஞ்சாகனும்.” – என நெரித்தப் பற்களுடன் கூறியவர் பட்டென ஃபோனை கட் செய்து விட,

அனிச்சையாய் வெளி வந்த பெருமூச்சுடன், கண்களை அழுந்த மூடித் திறந்தவன், குனிந்து.. இமை இடுங்க, நடுங்கிய விரல்களை விரித்துப் பார்த்தான்.

அதுவரை அவன் தன் அன்னையிடம் காட்டிய ஆட்டிடியூடை ‘அடக் கேடி நாயே’ ரீதியில் பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸ், ஃபோனை வைத்ததும் அவன் முகம் காட்டும் உணர்வுகளைக் கண்டுப் பயந்து, “டேய்ய் கணேஷூ” – என்று அதட்டி அழைக்க,

சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து மலங்க,மலங்க விழித்தவனைக் கண்டு பாவமாகி, “என்ன டே?” எனக் கேட்டான் இரக்கக் குரலில்.

“ஒன்னுமில்லண்ணே” – என்றவாறு பிடரியைத் தேய்த்து முகத்தைச் சாதாரணமாக்கி எழுந்து நின்றவன், “போகலாமா?” என்றான்.

பின் பைக்கில் ஏறி அமர்ந்த இருவரிடையே அசாத்திய அமைதி நிலவ, யோசனையுடனே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த அலெக்ஸ், திடீரென ஒரு மர நிழலில் நிறுத்தி, மோசஸிற்கு அழைத்தான்.

“டேய்ய்ய் மோசஸூ, நாம அஞ்சாப்பு படிக்கும் போது, ஸ்கூல் நாடகத்துல, நீ டாக்டர் வேசம் போட்டது ஞாபகமிருக்கா லே உனக்கு?”

“யெஸ்ஸ்ஸ்!, நான் டாக்டர் மோசஸ் தான் பேசுறேன்! சொல்லுங்க, உங்க உடம்புக்கு என்ன பண்ணுது?”

-விஷயம் என்னவென்றே தெரியாமல், wanted ஆக வந்துத் தலையைக் கொடுத்தவனை, அப்படியே அமுக்கிப் போட்டு.. தனது எமர்ஜென்சித் திட்டத்திற்குள் சேர்த்துக் கொண்டான் அலெக்ஸ்.

அடுத்து அவன் விவரித்த விசயங்களைக் கேட்டு, அதிர்ச்சியில் மனம் அதிர, அலெக்ஸின் தோளை இறுகப் பற்றிய gangster, “அண்ணேஏஏ!! நிஜமாவா-ண்ணே?” – என மகிழ்ச்சியில் துள்ள, தோளைக் குலுக்கி அவன் கையை விலக்கி விட்ட அலெக்ஸ், அவனை முறைத்துப் பார்த்தபடி அலைபேசியில் தனது உரையாடலைத் தொடர்ந்தான்.

வர்களது பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனைப் படி, அடுத்த இரண்டு மணி நேரத்தில், நண்பனொருவனது ப்ரைவேட் க்ளினிக்கில் OP பிரிவின் ஓரத்திலிருந்த நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த gangster-ஐச் சுற்றி அலெக்ஸ்,ஜார்ஜ் மற்றும் கலை தீவிரமாக எதையோ விவாதித்தவாறு நின்றிருந்தனர்.

அதுவரையிருந்த ‘கூட்டாகச் சேர்ந்து அடி பம்பில் (pump) தண்ணீர் குடிக்கப் போகும்’ உற்சாக மனநிலை மாறி தன்னை மீறிக் கவ்விய பயத்தில், வியர்த்த நெற்றியும், வெளிறிய முகமுமாய் பேஸ்தடித்துப் போய் அமர்ந்திருந்த gangster,

“வசந்தா வருது டே!, மொகரையை வாடுன மேனிக்கயே வைச்சுக்க” – என்று அலெக்ஸ் முணுமுணுத்ததும், சிவந்த கண்களை மூடித் திறந்து முகத்தை இறுக்கிக் கொண்டான்.

பதட்டமும், பரபரப்புமாய், அரக்கப்பறக்க மருத்துவமனைக்குள் ஓடோடி வந்த வசந்தா அழுகை முகத்துடன் சுற்றிச் சுற்றி பார்த்துப் பின் மகனைக் கண்டு கொண்டு, கவலையுடன் “கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” – என்றழைத்தபடி அவசரமாய் அருகே நெருங்கினார்.

முட்டியிட்டுத் தன் முன்னமர்ந்து, “கணேஷ்ஷ்ஷ் எ..எ..ன்னடா ஆச்சு?” என்றவாறுத் தன் தலை கோதி, முகம் துடைத்து, தோளை அழுத்தி, ப்ளாஸ்டர் ஒட்டியிருந்தக் கையை நிமிர்த்திப் பார்த்து அழுகைக்குரலில், “காலையில நல்லாத் தானே டா இருந்த?, என்னடா ஆச்சு திடீர்ன்னு?, டாக்டர் என்ன சொன்னாங்க?” – என்று வினவினார்.

‘வசந்தாவிடம் நீ வாயே திறக்கக் கூடாது’ – என அலெக்ஸ் அறிவுறுத்தியிருந்தபடியால், தரையை வெறித்தபடி மௌனமாய் gangster அமர்ந்திருக்க,

“மேடம், உங்க பையன் excessive stress-னால ஒழுங்கா சாப்பிடாம, சரியான தூக்கமில்லாம restless-ஆ இருந்ததால, இன்னிக்கு ஸ்கூல் அசெம்ப்ளில மயக்கமாகிக் கீழ விழுந்துட்டார்.” – என்றான் அலெக்ஸ்.

அரண்டு,அதிர்ந்து போன முகத்துடன் மகனை நோக்கி விட்டு, சுருங்கிய புருவங்களினடியில் அலைபாய்ந்த விழிகளோடு அவர்களின் புறம் ஏறிட்டவரிடம்,

“நாங்க ஸ்கூலோட students welfare committee-யைச் சேர்ந்தவங்க. உங்க மகனை ஹாஸ்பிடலுக்குக் கூட்டி வந்தது எங்க டீம் தான்” என்று சகஜமாய்ப் புளுகினான் ஜார்ஜ்.

“டாக்டர்…. நான் டாக்டரை பார்க்க முடியுமா?” – காற்றாகிப் போன குரலில் உதடு நடுங்கக் கேட்டவரைக் கண்டு, gangster-ன் விழிகளில் நீர் கோர்த்துக் கொள்ள, குனிந்த தலையுடன், இருக்கையில் ஒடுங்கி அமர்ந்தவனை அவதானித்தவாறு,

“இதோ டாக்டரே வந்துட்டார்!” – என்று அலெக்ஸ் கூறியதும்,

கடன் வாங்கி மாட்டிக் கொண்ட டாக்டர் கோட்டுடன், கழுத்திலிருந்த ஸ்டெதஸ்கோப்பை அட்ஜஸ்ட் செய்தவாறு ஆஜர் ஆன மோசஸ், மூக்குக் கண்ணாடியை சரிசெய்தபடி,

“நீங்க தான் ரமேஷோட அம்மாவா?” எனக் கேட்டான்.

“ரமேஷ் இல்ல, கணேஷ்” – என்றவாறு எழுந்து நின்ற வசந்தா, உதட்டின் மீது பூத்த வியர்வையைத் துடைத்தவாறு பதைபதைப்புடன் அவன் முகத்தை நோக்க, உள்ளே ஜெர்க் ஆனாலும் சமாளித்து,

“கணேஷ் அம்மா, உங்க பேரு May Barra-வா?, இல்ல Jane Fraser-ஆ?” – எனக் கேட்டான் மோசஸ்.

(May Barra-CEO,General Motors. Jane Fraser-CEO,Citigroup)

“டாக்…டர்ர்ர்…” – திணறியவரிடம்,

“இல்ல, உங்க பையன் வானத்தை வளைச்சு விண்மீன் பறிக்கனும், பிறை நிலவுல ஊஞ்சல் கட்டி ஆடனும்ன்னு விபரீத ஆசையெல்லாம் வைச்சிருக்கீங்களே! அதையெல்லாம் எதிர்பார்க்குற அளவுக்கு, நீங்க பெரிய சாதனைப் பெண்மணியோன்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்” – என்றான் நக்கலுடன்.

ரோஷம் பெருக, “காலம்,சூழலோட ஒத்துழைப்பில்லாம, என்னால சாதிக்க முடியாம போனதால தான் டாக்டர், என் பையன் ஜெயிக்கனும்ன்னு நான் ஆசைப்படுறேன்” – தீர்க்கமாகக் கூறியவரிடம்,

“ஓ! ஒத்துழைச்சிருந்தா, May Barra-இடத்துல நீங்க இருந்திருப்பீங்க?” – மீண்டும் நக்கலடித்தான் மோசஸ்.

“நிச்சயம் வாய்ப்பிருந்திருக்கும் டாக்டர்”

அவரது கான்ஃபிடென்ஸில் கடுப்புற்று “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிக் கொண்ட மோசஸ்,

“உங்க லாஜிக் எப்பிடியிருக்குன்னா மேடம், ‘நான் ஆணாகப் பிறக்க ஆசைப்பட்டேன்! விதி! நடக்கவில்லை! அதனால, எனக்குப் பிறந்த பெண்குழந்தையை ஆணாக வளர்க்க நினைக்கிறேன்னு’ சொல்ற மாதிரி இருக்கு! சட்டில என்ன இருக்கோ, அது தான் மேடம் அகப்பைல வரும்” என்றவன் தொடர்ந்து,

“சாதனை பண்ணியே ஆகனும்ன்னு நீங்க கொடுத்த போதனையில, உங்க மவனோட cortisol level, அதாவது ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகி,அவனுக்கு frequent headaches, muscle tension, வயிற்று வலி, செரிமானக் கோளாறு, restless sleep, chronic fatigue-ன்னு ஏகப்பட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகியிருக்கு மேடம்” – என்று முடிப்பதற்குள்,

கோபம் சூழ்ந்த முகத்துடன் மகனைத் திரும்பிப் பார்த்து முறைத்த வசந்தா,

“தலைவலிக்கும், தூக்கமின்மைக்கும் காரணம் எக்ஸஸிவ் ஃபோன் யூசேஜ் தான் டாக்டர்! நைட் 2 மணி வரைக்கும் பெட்ஷீட்டை மூடிட்டு இருட்டுக்குள்ள ஃபோன் பார்க்குறான்! அப்புறம் செரிமானக் கோளாறு, அவனுக்கு ரொம்ப நாளா இருக்கு டாக்டர்! பரோட்டாவும்,பன்னுமா சாப்பிட்டா constipation ஆகி வயித்து வலி வரத் தானே செய்யும்! Badminton க்ளாஸ்க்கு ஒழுங்கா போடா, எக்ஸர்சைஸ் பண்ணுனா, உடல் சோர்வெல்லாம் குறைஞ்சிடும்ன்னு நான் நிறைய தடவை சொல்லிட்டேன் டாக்டர்!, கேட்கவே இல்ல” – எனக் கடித்தப் பற்களுடன் படபடவெனப் பொங்க,

‘சரிதானே’ என்றவாறு gangster-ஐப் பார்த்த மோசஸ்,

“பெத்தவ பேச்சைக் கேட்காத போக்கிரியா லே நீயி?, பெட்ஷீட்டை மூடிக்கிட்டு ராத்திரி நேரம் என்னா லே பார்க்குற?” – என்று கொடுத்த dialogue-ஐ மறந்து எகிறிக் கொண்டு வர,

அவன் கையை நறுக்கெனக் கிள்ளி, கலை கண் காட்டியதும், “ம்க்க்கும்” என மூக்குக் கண்ணாடியை சரிசெய்தவன், வசந்தாவை நோக்கி,

“மேடம்.. நீங்க context-ஐ விட்டு வெளிய போய் என்னைய confuse பண்றீங்க! இங்க, நீங்க டாக்டரா? நான் டாக்டரா?” என்று திட்டினான்.

“ஸாரி டாக்..டர்” – உள்ளே போன குரலில் கூறியவரிடம்,

“ஃபோன் பார்க்குறது, பரோட்டா சாப்பிடுறதெல்லாம் எல்லா டீனேஜர்ஸ்க்கும் இருக்குற பிரச்சனை தான் மேடம்! அதைத் தாண்டி உங்க மகன் anxiety and depression-னால பாதிக்கப் பட்டிருக்கிறாரு-ங்குறதை நீங்க புரிஞ்சுக்கனும்!”- என்றான்.

“10 க்ளாஸஸ்ல சேர்த்து விட்டு, பத்துலயும் நீ பெஸ்ட்-ஆ இருக்கனும்ன்னு.. தொடர்ந்து எதையாவது chase பண்ணச் சொல்லி அவனை நீங்க தூண்டிக்கிட்டே இருந்ததால, prove பண்ணிக் காட்டியே ஆகனும்ன்னு கட்டாயப்படுத்தியதால, brain-க்கு rest-ட்டே கொடுக்காம, அவதிப்பட்டு அதிக மனச் சோர்வுக்கு ஆளாகியிருக்கிறாரு.

தோல்வியை ஏத்துக்க முடியாத கவலை, விருப்பப்பட்டதை செய்ய முடியாத frustration, அது கொடுத்த நம்பிக்கையின்மைன்னு.. இப்போ, எதுலயுமே ஈடுபாடு காட்ட முடியாத அளவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கு அவருக்கு!

Emotionally exhaust-ஆகிட்டதால நீங்க எவ்ளோ அடிச்சாலும்,திட்டினாலும் அவருக்கு உரைக்காது! அவர் ரொம்பவும் அழுத்தமான,பற்றற்ற மனநிலைக்குப் போயிட்டிருக்கிறாரு! இது தொடர்ந்தா.. ஆக்ரோஷமான நடத்தை,போதைப் பழக்கம்ன்னு அவர் தப்பான வழியைத் தேடிப் போகவும் வாய்ப்பிருக்கு.

விளையாடுற வயசுல இருக்குற பையனை வைச்சு நீங்க விவகாரம் பண்ண நினைச்சது, இப்ப வினையில முடிஞ்சிடுச்சு மேடம்.” – என்று பயமுறுத்தினான் அலெக்ஸ்.

முற்றிலுமாய் மிரண்டு போன பாவனையுடன், நடுங்கிய உதட்டையும், விரல்களையும் கட்டுப்படுத்த முயன்றபடி, கண்ணீர் கோர்த்த விழிகளோடு, வாயடைத்துப் போய் நின்றவரிடம், கலை,

“IPC section 75, Juvenile justice Act 2015-படி படிப்பு,உழைப்பு-ன்ற பேர்ல குழந்தைகளை இப்படி Mentally abuse செய்கிற பெற்றோர்களுக்கு 3 வருஷம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கு மேடம்! இதை உங்களை மிரட்டுறதுக்காக சொன்னதா நினைக்க வேண்டாம்! ஆனா நீங்க ஆசையா பெத்தெடுத்து வளர்க்குற அன்பு மகன் தான் அவன்! கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க” – என்று கடுப்புடன் கூறியதில் அவமானம் தாங்காது, விழிநீரைத் துடைத்தெறிந்த வசந்தா,

“பெத்தப் பையனை disciplined-ஆ வளர்த்தா ஜெயில்ல போடுவீங்களா?, போடுங்களேன் முடிஞ்சா…! ஒத்த ஆளா நின்னு, புள்ளைய கண்ணும்,கருத்துமா பார்த்து,பார்த்து வளர்க்க நான் எத்தனை பாடுபட்டிருக்கேன் தெரியுமா? கடல் கடந்து போய் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிற மனுஷனைப் பெருமை படுத்துற மாதிரி இவனை வளர்த்திக் காட்டனும்ன்னு நான் நினைக்குறது தப்பா?, எங்களுக்குக் கிடைக்காத வாய்ப்பும், திறக்காத கதவுகளும் இவனுக்குக் கிடைக்கனும்ன்ற எண்ணம் குத்தமா?, இவனுக்காகத் தானே சின்ன,சின்ன சந்தோசங்களைக் கூட நாங்க ரெண்டு பேரும் தியாகம் பண்ணிட்டு ஆளுக்கொரு பக்கமா வாழ்ந்திட்டிருக்கோம்?,

இருக்க வீடில்லாம, கையில காசில்லாம, நினைச்சதை பண்ண முடியாம, கையாலாகாதத்தனமாய் வாழ்ற நிலையைப் பத்தியெல்லாம் இவனுக்குத் தெரியுமா?, அடிப்படை வசதிகளுக்காக என்னைக்காவது கஷ்டப்பட்டிருக்கானா?, இருக்கிற நிலையைத் தக்க வைச்சுக்க, தொடர்ந்து உழைக்கனும்ன்னு சொல்லித் தர்றது எப்படி abuse ஆகும்?

எம் மவனுக்கு சகலமும் கிடைச்சு அவன் சௌந்தர்யமா வாழனும்ன்னு நினைச்சதுக்கு என்னை ஜெயில்ல போடுவீங்களா?” -என்று கோபாவேசமாய் நெஞ்சைத் தட்டிக் கொண்டு பெருங்குரலெடுத்துக் கத்தத் துவங்கி விட,

சுற்றி அனைவரும் வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து பதறிப் போன நால்வரும், “மேடம், இமோஷனல் ஆகாதீங்க! ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்! Disciplined-ஆ வளர்க்குறதுக்கும், torture பண்றதுக்கும் 100 வித்தியாசம் இருக்கு!, உங்கப் பக்கம் இத்தனை விளக்கம் இருக்குறது போல, அவன் பக்கமும் சில நியாயங்கள் இருக்கலாம்! அதுக்கு செவி சாய்க்காம, உங்க கஷ்டத்தையும்,தியாகத்தையும் மட்டுமே நீங்க glorify பண்ணி பேசிட்டிருக்கிறது தப்பு! அப்பிடி பாடுபட்டுத் தன்னை வளர்க்கச் சொல்லி அவன் டிமாண்ட் பண்ணவே இல்லை! அதைப் புரிஞ்சுக்கப் பாருங்க” – என அலெக்ஸ் அடிக்குரலில் கூறியதும்,

அவனது வார்த்தைகளெதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அணிந்திருந்தத் துப்பட்டாவினால் முகத்தைத் துடைத்துக் கொண்ட வசந்தா, தெளிவற்ற விழிகளுடன், மகனருகே வந்து “வா டா கணேஷூ வீட்டுக்குப் போகலாம்” என்றார்.

நால்வரும் மூச்சுப் பிடித்து பேசிய எதற்கும் அன்னையிடம் எந்த மாறுதலுமில்லாது போனதை உணர்ந்து… வீட்டுக்குப் போன பின்பும் கூட.. இதே போன்று தன் பக்கத்து நியாயத்தை மட்டுமே பேசி மீண்டும்.. அழுது அரற்றினால்.. தாங்குவேனா என்பது போல், மிரண்டு அவன் அலெக்ஸை நோக்க,

“மேடம், இப்ப நீங்க அவனைக் கூட்டிப் போக முடியாது.” – என்றான் ஜார்ஜ் பட்டென.

“ஏ………ன்?” – விழி அகலக் கேட்டவரிடம்,

“அவரோட மெண்டல் ஸ்டேட் இப்போ சரியில்ல மேடம்! அவர் உங்களோட வீட்டுக்கு வர்றதை விட, வேற எங்கேயாவது டெம்பரரியா கொஞ்ச நாள் ஸ்டே பண்ணுனா, பெட்டரா ஃபீல் பண்ணுவார்.” – என்றான் மோசஸ்.

“டெம்பரரியா-ன்னா?” – புரியாது கேட்டவரிடம்,

“எங்கேயாவது! ஃப்ரண்ட்ஸ்,ரிலேடிவ்ஸ் வீடு மாதிரி..” என்ற ஜார்ஜ் “நீங்க இல்லாத இடமா..” – என முணுமுணுத்தான்.

அவன் கூறியதைக் கேட்டுத் தொண்டை அடைக்க, மகனின் கையைப் பற்றி, “எங்கே டா கணேஷ் கொண்டு போய் விட உன்னை?, யார் இருக்கா நமக்கு?, ம்ம்?, அ..அ..அம்மாவை விட்டுட்டு எப்பிடி டா இருப்ப நீ?” –என துக்கக் குரலில், குற்ற உணர்ச்சிக்கும், ‘இல்லை,இல்லை தானும் தன் வளர்ப்பு முறையும் சரியே’ – என்கிற பிடிவாதத்திற்கும், இவ்வனைத்தையும் தாண்டி, ஒரே மகன் மீதிருக்கும் பேரன்புக்குமிடையில் சிக்கிச் சிதறி, குழப்பத்துடன் காட்சியளித்தத் தன் அன்னையின் முகத்தைப் பார்க்க முடியாமல், திரும்பி.. அருகே நின்றிருந்த அலெக்ஸின் வயிற்றில் முகத்தை அழுத்திக் கொண்ட கணேஷின் விழிகள் கண்ணீரைச் சொரிய,

மிரட்டினாலும்,அடித்தாலும், எப்போதும் தூக்கிய காலருடன் திமிரோடே பதிலளிக்கும் மகன் இன்று அழுவது கண்டு பதறிப் போன வசந்தா,

“கணேஷ்…. கணேஷ்.. எ..என்னடா?, அம்மாவைப் பாரு! அம்மாவைப் பாரு டா” – என்று அவன் தோள் பற்றித் தன் புறம் இழுக்க முயற்சிக்க, வெடுக்கென அவர் கையைத் தட்டி விட்டு, இரு கைகளால் அலெக்ஸை இறுகக் கட்டிக் கொண்டவன், அவரது முகம் பாராமல் தழுதழுத்தக் குரலில் “நா….ன் உ..உன்னோட வர மாட்டேன்” என்றான்.

திடுக்கிட்டுத் தன் முயற்சியை நிறுத்தி, மகனை வெறித்து நோக்கியவரின் சிலையான தோற்றம் கண்டு, இரக்கம் கொண்ட அலெக்ஸ், மெல்ல வாய் திறந்து,

“அவன் ஃப்ரெண்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் மேடம்! கொஞ்ச நாள் க்ளாஸஸ் எல்லாத்தையும் கட் பண்ணுங்க! அவன் ரிலாக்ஸ் ஆகட்டும். நீங்களும் நார்மல் ஆகுங்க! அப்புறமா அவன் விருப்பம் என்னன்னு உட்கார்ந்து பேசி பொறுமையா என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்றான்.

அவன் பேசும் மொழி புரியாது மலங்க விழித்துப் பார்த்தவரை என்ன சொல்லி சமாதானப்படுத்துவதெனப் புரியாமல் அவன், “மேடம்ம்” என்றழைக்க,

இழுத்த மூச்சுடன் எழுந்து நின்றவரது விழியில் கண்ணீர் வற்றிப் போக, கடித்த உதடுகளும், சுழித்தப் புருவங்களுமாய் நெற்றியைப் பற்றியவாறு இங்குமங்கும் நடை போட்டுப் பின்,

“எ.எ…எந்த ஃப்ரெண்டு வீட்ல விடப் போறீங்க?, சஞ்சயா?, ஆத்விக்கா?” – எனக் கேட்டதும்,

இன்னமும் அலெக்ஸைப் பற்றியிருந்த gangster, எரிச்சலும்,கடுப்புமாய் பல்லைக் கடித்தபடி தன் நெற்றியை அவன் வயிற்றில் இடிக்க,

அவன் தோளைப் பற்றி சமாதானம் செய்தவாறு “நாங்க சொல்றோம் மேடம்! நீங்க இப்ப வீட்டுக்குக் கிளம்புங்க” என்றான் அலெக்ஸ்.

“அதெப்படிங்க தெரியாத ஆளுங்க கிட்ட என் பையனை விட்டுட்டுப் போக முடியும்?, அவன் எங்க,எப்படி இருக்கப் போறான்-ங்குற விவரத்தை நான் தெரிஞ்சுக்க வேணாமா?, நான் அவன் அம்மா-ங்க” – என்று ஆத்திரப்பட்டவர், தனக்கு முகம் காட்டாது மௌனமாய் கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் மகனை ஆதங்கத்துடன் நோக்கி,

“அவங்கப்பா கேட்டா, நான் என்னங்க பதில் சொல்றது?” – என்று ஓய்ந்து போன குரலில் கேட்க,

“மேடம், எங்க,யார் வீட்டுக்கு போகனும்ங்குறதை அவனே முடிவு பண்ணிக்கட்டும்!, 2,3 நாள் அவன் இஷ்டத்துக்கு விடுவோம்! நாங்க அவன் கிட்டப் பேசிட்டு கொஞ்ச நேரத்துல உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றோம்! அவங்கப்பா கிட்டயும் நாங்களே அவனை பேச வைக்கிறோம்! நீங்க கவலைப்படாம இருங்க! இந்தாங்க என்னோட நம்பர்” எனத் தனது ஃபோன் நம்பரைக் கூறினான் அலெக்ஸ்.

உடனடியாகத் தன் நம்பரிலிருந்து, அவன் ஃபோனுக்கு மிஸ்ட் கால் கொடுத்து, அவன் கொடுத்தது சரியான நம்பர் தானா என்பதை சரி பார்த்துக் கொண்டு, மகன் முகத்தைப் பார்த்தவாறு, வேரோடி விட்டக் கால்களை அசைக்க முடியாது நின்றவரைக் கண்டு கொள்ளாது,

“தண்ணி குடிக்குறியா டே கணேஷூ?” எனக் கேட்டான் அலெக்ஸ்.

“ஜூஸ் குடிக்கிறியா டா?” – கலை.

தன்னிடம் ஒட்டிக் கொண்டிருந்தவனைப் பிரித்து, முகத்தைத் துடைத்து, தலை முடியை ஒதுக்கி, கலை நீட்டிய ஜூஸைப் பருக வைத்தான் அலெக்ஸ்.

பள்ளிச் சீருடையில், வியர்வை வழிய, சிறுத்துக் கருத்துப் பொலிவிழந்த முகத்தோடு, ஒரே நாளில் பாதியாகி விட்ட மகனை நெருங்க முடியாது, யாரோ போல் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது நெஞ்சை அறுக்க, இயலாமையில் வெடித்தெழ முயன்ற அழுகையை அடக்கியவாறு கலங்கி நின்றவரது தோற்றம் கண்டு,

“நாங்க பார்த்துக்கிறோம் மேடம்! நீங்க கிளம்புங்க. அப்புறமா கால் பண்றோம்” – என்றான் ஜார்ஜ்.

தலையசைக்கக் கூடத் தோன்றாது, விட்டுச் செல்லவும் முடியாது, என்ன செய்வதென்றும் புரியாது, தெளிவற்ற நிலையில், கைப்பையை இறுகப்பற்றியபடி தொய்ந்த நடையுடன் விலகி நடப்பவரைக் கண்டு விட்டு,

“ஷ்ஷ்ஷ் ஹப்பா” என ஆசுவாசப்பட்டவாறு, “அந்த ஜூஸைக் கொடு லே” – என்று gangster-இடமிருந்துப் பிடுங்கிப் பருகிய டாக்டர்.மோசஸ், “நீ இதுவரை பண்ணுன ப்ராங்க்கெல்லாம் பாவக்கணக்குல தான் சேர்ந்திருக்குன்னாலும், இப்ப நீ செஞ்சதுக்கு, கண்டிப்பா நரகத்துக்குத் தான் லே போகப் போற! படிக்குறதுக்கு வலிக்குதுன்னு பொய் பேசிட்டுத் திரியுற இந்தப் போக்கேத்தவனுக்காக, ஒரு தாய் மனசை நோகடிச்சுப் போட்டியே லே?” – என்று அலெக்ஸை சாடியதும்,

கொதித்தெழுந்து விட்ட gangster, “யாருக்குப் படிக்க வலிக்குது?, எங்க ஸ்கூல் டாப்பர் நான். தெரியுமா?” என்று சீற,

“அப்போ hunter-u?” – கலை.

“அவளுக்கு அப்பப்ப, நானா பார்த்து விட்டுக் கொடுப்பேன்” – மீசையில் மண் ஒட்டாது சமாளித்தவனை நக்கலாகப் பார்த்து,

“ம்க்கும்” என்ற ஜார்ஜ், “ஆனா ஒன்னு டே, நம்ம காலத்துல ஆத்தாகாரிக கண்ணீர் விட்டா, நாம உருகிக் கரைஞ்சு, காலடில விழுந்து ‘உனக்காக எதுவும் செய்வேன்ம்மா, நீ கிணத்துல விழுந்து சாகச் சொன்னாக் கூட செத்துப் போவேன்ம்மா, அழுவாதம்மா-ன்னு’ சரணடைஞ்சிடுவோம்! இவனுங்க பரவாயில்ல டே, அந்த toxicity-க்கெல்லாம் அசைஞ்சே கொடுக்காம, gun மாதிரி நிற்குறானுங்க! சூப்பர் டே கணேஷூ” என்று தோள் தட்டிக் கொடுக்க,

அவன் பாஷையும், அவன் கூறும் விசயமும் புரியாது முழித்துக் கொண்டிருந்தவனின் அருகே வந்த அலெக்ஸ், “உங்கொப்பனுக்கு ஃபோனைப் போடு டே” என்றான் ஏகக் கடுப்புடன்.

தாமதிக்காது அப்போதே தந்தைக்கு அழைத்த gangster, தான் மருத்துவமனையில் இருப்பதைச் சொல்லி, அன்னைக்கும், தனக்குமிடையே நடக்கும் அத்தனையையும் விளக்கி, “நான் வீட்டுக்குப் போகலப்பா” என்றான் நைந்து போன குரலில்.

அதுவரை இடையிடாது சுருக்கியப் புருவங்களோடு மகன் கூறியதைக் கேட்ட தந்தை, பின் கடித்தப் பற்களுடன் கோபமாக,

“வீட்டுக்குப் போகாம?, அம்மாவைத் தனியா விட்டுட்டு என்ன பண்ணலாம்ன்னு இருக்க?,” – என்று சீறினார்.

அவரது ஆத்திரம் கண்டு ஆயாசத்துடன் மடிந்து விழுந்த மனது அழுகையை உற்பத்தி செய்யப் பார்க்க, தன் பார்வையை அலைபேசியிலிருந்து விலக்கிக் கொண்டவனிடம்,

“எவ்ளோ தைரியமிருந்தா அவ கூப்பிட்டும் போகாம, அவளைத் திருப்பி அனுப்பி அழ வைச்சிருப்ப?, என்ன நினைச்சிட்டிருக்க?, ஒரே பையன்னு நாங்க செல்லம் கொடுத்தா… எங்களுக்கெதிரா வளர்ந்து நிற்பியா நீ?, படிக்கிற வயசுல படிக்கச் சொல்றது குத்தமா டா?, தரமான படிப்பு கிடைக்காததால தான் டா இப்பிடி குடும்பத்தை விட்டுட்டு வெளிநாட்டுல பொழப்பு நடத்திட்டிருக்கேன்! நீங்க அங்க வசதியா வாழனும்ன்னு நான் இங்க பாடுபட்டா, அதைக் கொஞ்சமும் புரிஞ்சுக்காம, எம் பொண்டாட்டியை அழ விட்ருக்க நீ?”

-என அவர் மேலும் கத்த, தந்தையும் தன்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்காது, தன் பக்க வாதத்தைக் கேட்காது, குற்றம் சாட்டிக் குறுக வைப்பது, அயர்ச்சியைக் கொடுக்க, கன்னத்தில் வழிந்து விட்டக் கண்ணீருடன் மூக்கு விடைக்க, ரோஷம் கொண்டு “போ ப்பா! போ!, நீயும் என் கூட பேச வேணாம்! பேசாத! போ” – என்று கத்தியவன், சட்டையில் கண்ணைத் துடைத்தபடி எழுந்து ஓடிச் சென்று விட,

“லேய்ய், இந்தா டே புலாசுலாக்கி.. நில்லு டே” – என்று ஜார்ஜூம் அவன் பின்னோடு சென்றான்.

அவன் கீழே வைத்துச் சென்ற ஃபோனை எடுத்து, “வணக்கம் சார்! என் பேரு அலெக்ஸ். கணேஷோட ஃப்ரெண்டு. கலிலியோ காலனி 2ண்ட் ஸ்ட்ரீட்ல தான் குடியிருக்கேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அலெக்ஸ்,

Gangster-ன் mouth piece ஆக மாறி, அவன் கூற நினைத்த அத்தனையையும், அவனது தந்தையிடம் ஒப்பித்தான்.

“நீங்க பக்கத்துல இல்லாத insecurity & anxiety இருக்கு சார் உங்க wife-க்கு! நீங்க தூரமா இருக்கிறது குறை ஆகிடக் கூடாது, யாரும், எந்தத் தப்பும் சொல்லிட முடியாத அளவுக்குத் தன்னோட வளர்ப்பும், வாழ்க்கையும் இருக்கனும்ங்குற முனைப்புல, தானும் மெனக்கெட்டு, பையனையும் அதே ஈடுபாட்டோட மெனக்கெட வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு, அவங்களை அறியாமலேயே தள்ளி விடுறாங்க! உங்களுக்கு நினைவிருக்கா?, நம்ம காலத்திலெல்லாம், Parents ரெண்டு பேர்ல ஒருத்தர் குழந்தையைக் கோபமா சத்தம் போட்டுக் கண்டிக்கும் போது, இன்னொருத்தர் பொறுமையா, நிதானமா எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயற்சி பண்ணுவாங்க!

இங்க ரெண்டு role-ஐயும் தானே ப்ளே பண்ண வேண்டிய நிர்பந்தம் அவங்களை பல சூழ்நிலைகள்ல தடுமாற்றத்தைக் கொடுத்து, அவசரகதியோட, தவறாக யோசிக்க வைச்சிடுது போல!, அம்மாவா இருக்கிறது அவங்களுக்கும் இது தானே முதல் முறை?,

அதுபோக, புரிதல் நிறைஞ்ச, அந்நியோன்யமான தம்பதியா நீங்க இருந்தாலும் கூட, கணேஷூக்கு முழுமையான குடும்ப சூழ்நிலைங்குறது, அம்மா-அப்பான்னு நீங்க 2 பேரும் சேர்ந்து அமைச்சுக் கொடுக்கிறது தான் சார்!

அவனோட எதிர்காலத்துக்குத் தேவைன்னு நீங்க பணத்துக்குப் பின்னாடி ஓடுறீங்க! உங்க வைஃப், அவன் வளர்ந்தப்புறம் வாழப் போகிற வாழ்க்கையை ஸ்மூத் ஆக்குறேன்-ங்குற பேர்ல, அவங்க கண்ணுல படுகிற எல்லா கோர்ஸ்லயும் அவனை சேர்த்து விட்டு, ‘எல்லாமே உன் நல்லதுக்குத் தான்’-ங்குற பிம்பத்தை ஏற்படுத்தி தெளிவே இல்லாத vague-ஆன டார்கெட் பின்னாடி அவனை ஓட விடுறாங்க!

எதிர்காலத்தைப் பத்தித் திட்டமிட்டுக்கிட்டே நிகழ் காலத்தை ஓட்டுனா, எப்போ தான் சார் வாழ்றது?

இதெல்லாம் ஒத்த ஆளா புள்ளைய வளர்க்குற பயத்தால விளைஞ்சது தான் சார்! அளவுக்கு மீறிய கட்டுப்பாடு, ப்ரொடக்ஷன்!

புதுசா ரெக்கை முளைச்சப் பறவைக்கு, தான் முயற்சியிலேயே, தரையிலிருந்து மெல்ல மெல்ல வான் நோக்கிப் பறக்குறது தான் சார் சுவாரசியத்தைக் கொடுக்கும்! எல்லாத்துக்கும் ட்ரையினிங் கொடுத்து, ரெடிமேட் சொல்யூஷன்ஸை நீட்டி, வாழ்க்கையை சுவாரசியமே இல்லாம மாத்துறது தப்பு சார்! தவழ்கிற குழந்தை, யாரோட உதவியுமில்லாம தன்னாலேயே நடக்கப் பழகும்! இது இயற்கை! இயற்கைக்குப் புறம்பா நாம நடந்துக்க வேண்டாமே சார்!”

-என அலெக்ஸ் தானொரு ‘RJ’ என்பதை நிரூபிக்கும் விதமாகப் பக்கம்,பக்கமாக தத்துவம் பேச, அமைதியாய் அத்தனையையும் கேட்டுக் கொண்ட gangster-ன் தந்தை கோகுலன், கலங்கிப் போன குரலில்,

“அவனைக் கூப்பிடுங்க தம்பி” என்றார்.

“கூப்பிடுறேன் சார்! ஆனா இப்போ பேச வேண்டாம். கொஞ்சம் சமாதானம் ஆனதும் கூப்பிடுறேன்! ஆனா.. ஒன்னு…. அவன் உங்களை ரொம்ப மிஸ் பண்றான் சார்”

-என்றதும், அங்கே அவருக்குக் கண்ணீர் சேர்ந்து விட, அழுகையை அடக்கியவாறுத் தலை குனிந்தவரிடம்,

“காசு மட்டும் எவ்ளோ சம்பாதிச்சாலும் போதாது சார்!, அது ஒரு போதை மாதிரி!, நிறைய நிறைய சேரச் சேர, இன்னும் வேணும்,வேணும்-ங்குற தாகத்தைத் தூண்டிக்கிட்டே இருக்கும்! உங்களுக்குத் தெரியாததில்ல!,

ஆனா, டீனேஜ்ல அவனுக்கு வர்ற mood swings-ஐ சமாளிக்க நீங்க கண்டிப்பா கூட இருந்தே ஆகனும் சார்!, கிரிக்கெட் விளையாடுறது, பைக் ரைட் போறது,தோள்ல தட்டிக் கொடுக்குறது, பெண்ணைச் சார்ந்து தோணுகிற உணர்வுகளை handle பண்றது, ஏன், அங்கங்க புதுசா முளைக்குற மயிரை எப்பிடி shave பண்றதுன்னு கூட அப்பனா, நீங்க தான் சார் கூட இருந்து சொல்லித் தரனும்!

இந்த வயசு, major transition நடக்குற stage சார்! அவனோட மன மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் கவனிக்க, சமாளிக்க, நீங்க கண்டிப்பா உடனிருக்கனும்! அதனால, சீக்கிரமே இங்க வரப் பாருங்க” – என்றான் gangster-ன் மனதை அறிந்து கொண்ட புரிதலுடன்.

சமீபத்தில் அவன் அனுப்பியிருந்தப் புகைப்படத்தில், அவனது முகத்தில் முளைத்திருந்த மீசையை மீண்டும்,மீண்டும் பார்த்து, மனைவியிடம் சொல்லிச் சொல்லிப் பூரித்ததை எண்ணிப் புன்னகைத்த கோகுலன்,

“சீக்கிரமே வந்துடுவேன் தம்பி.” என்று விட்டுப் பின், முகம் வாட,

“இன்னும் அழறானா?” எனக் கேட்டார்.

தூரத்தில், தன் நண்பர்கள் மூவரும் அவனிடம் பேசிச் சிரிக்க வைக்கும் முயற்சியிலிருப்பதைக் கண்டு விட்டு,

“இப்போ அவன் ஓகே தான் சார்! நான் அவன் கிட்ட கேட்குறேன், ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போறானான்னு! கொஞ்சம் இந்த anxiety,கோபம் எல்லாம் குறைஞ்சிடுச்சுன்னா, தானாகவே அம்மாவைத் தேட ஆரம்பிச்சுடுவான் சார்! ரொம்பப் பாசக்காரன்! அதுவரை, அவனுக்கு டைம் கொடுக்கலாம்!, நீங்க கவலைப்படாம இருங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

அவனது பதில் அவருக்கு சங்கடத்தைக் கொடுத்தாலும் வேறு வழியின்றித் தலையாட்டியவர், “எனக்கு உங்களைத் தெரியும் தம்பி! ஏற்கனவே உங்களைப் பத்தி சொல்லியிருக்கான்! உங்க வீடியோ-லாம் பார்த்திருக்கேன் நான்! காலனி ஆடலும்,பாடலும் நிகழ்ச்சிக்கு நீங்க உதவி பண்ணப் போறீங்கன்னுலாம் சொல்லிட்டிருந்தான்” என்று சிரிப்புடன் பேச்சை மாற்ற, தானும் சிரித்துப் பதில் கூறியவன், அவனை சிறிது நேரத்தில் பேச வைக்கிறேன் என வாக்குறுதி அளித்து, முதலில் உங்கள் மனைவியைச் சமாதானப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி விட்டு call-ஐ கட் செய்தான்.

ங்கு gangster, தனது நண்பர்கள் யார் வீட்டிற்கும் செல்லத் தனக்கு விருப்பமில்லை எனவும், ECR beach resort ஒன்றின் பெயரைக் கூறி, தன் தந்தையிடம் காசு வாங்கி அங்கே தனக்கு ரூம் புக் செய்து தரும் படியும், அங்கு வைத்துத் தனது சூடேறிப் போன மூளையைத் தான் குளிர்வித்துக் கொள்வதாகவும் கூற, ஆத்திரத்தில் அவன் மண்டையைப் பிளக்கப் பாய்ந்து விட்டான் மோசஸ்.

“எலே, நான் சொன்னேன்ல?, இவன் ஒரு ப்ராடுப் பய-ன்னு! ஏதோ பெருசா ப்ளான் பண்றான் லே!, நாளைக்கே இவனைப் பெத்தவங்க ‘மிஸ்ஸிங்’ கேஸ்ல உம் மேல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தா, களி தான்லே தின்ப நீயி! லவ்வு வர்க் அவ்ட் ஆகி, கல்யாணக் கனவு கண்டுக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இவனை நம்பி இம்புட்டுப் பெரிய காரியம் பண்ணிருக்கியே லே!” – என்று திட்டித் தீர்க்க,

அலட்டிக் கொள்ளாது தூக்கியப் புருவங்களுடன் நின்ற gangster, “லவ்வு வர்க்-அவ்ட்டெல்லாம் ஆகல! அந்தக்கா கிட்டயிருந்து இன்னும் முழுசா க்ரீன் சிக்னல் வரல” என்று கூறியதும், மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்த அலெக்ஸ், அவன் பிடரியைப் பற்றி,

“இவ்ளோ நேரம் உத்தமன் மாதிரி ஊளு,ஊளு-ன்னு அழுதுட்டு, இப்ப திமிர் காட்டுறியா டே நாயே?, ஒழுங்கு மரியாதையா உங்கப்பன்,ஆத்தா கூட சமாதானமாகி வீடு போய்ச் சேரு லே” – என்று திட்ட,

“ம்ஹ்ம் வீட்டுக்குப் போக மாட்டேன்! எங்கம்மா அழுதே சாவடிக்கும்!” அவன் கைகளிலிருந்துத் தன்னை விடுவித்துக் கொண்டு கடுப்புடன் கூறினான் gangster.

“பின்ன எங்க போவ இப்போ?” – கலை.

“ECR resort?”

“****** செருப்புப் பிஞ்சிடும் லே” – மோசஸ்.

“டேய்ய்ய் சின்னப் பையன் கிட்ட என்னா டே பேசுற?” -ஜார்ஜ்.

“ஒழுங்கான பதிலைச் சொல்லு டே” – அலெக்ஸ் திட்டியதும்,

“…….” – பதிலற்று நின்றவன் முகத்தில் மீண்டும் விரக்தி சூழ, உச்சுக் கொட்டிய நால்வரில், அலெக்ஸ், “இப்போதைக்கு என் வீட்டுக்கு வா. மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று விட்டான்.

“மறுபடி காலனிக்கா?, நான் வரல! எங்கம்மா கண்டுபிடிச்சுடும்” என்று துள்ளியவனை அள்ளிக் கொண்டு வந்து அறையில் அடைத்திருந்தனர்.

ன்று தொடங்கி, இன்றோடு இரண்டு நாட்களாக அலெக்ஸின் வீட்டில் தான் உண்கிறான்,உறங்குகிறான்,குளிக்கிறான்,துவைக்கிறான்.

அவனது தந்தையிடம் அன்றே சமாதானமாகி விட்டதால், அவர் ஆர்டர் செய்து அனுப்பும் உணவுகளையும்,தீனிகளையும் தின்று தீர்த்தவாறு டிவி, ஃபோனுடன் நாட்களைக் கழிக்கிறான்.

புத்தகத்தைக் கண்ணால் கூடக் காணாமல், படிப்பை அறவே மறந்து வெறுமனே கழியும் நேரங்கள் ஒரு பக்கம் சந்தோசத்தையும், மறு பக்கம் பதட்டத்தையும் தருகிறது அவனுக்கு.

மகிழ்ச்சி – மனதுக்கு. பதட்டம் – மூளைக்கு! ரெண்டையும் அதட்டி, அடக்கி வைத்திருக்கிறான்.

தான் இங்கு தஞ்சமடைந்திருக்கும் விசயம், தந்தை மூலமாக அன்னையைச் சென்றடைந்திருக்கும்! இருந்தும், தன்னைத் தேடி வராத அவளது நடத்தை பயத்தையும், திகிலையும் கிளப்புகிறது அவ்வப்போது! தனக்கு ‘space’ கொடுக்கும் முயற்சியா?, அல்லது ‘கையில் சிக்கும் போது, கடைந்தெடுத்து விடலாம்’– என்கிற எண்ணமா? புரியவில்லை!

இருந்தாலும், காலை உணவாக அவள் அளிக்கும் pan cake, potato cutlet, பூரி, மதியம் கலர்,கலராய் டிபன் பாக்ஸில் வரும் வெரைட்டி ரைஸ்கள், இரவில் தட்டை நிரப்பும் விதவிதமான தோசைகள், வாரக் கடைசியில் மணக்க, மணக்கச் செய்யும் நான்-வெஜ்கள் என அனைத்தும் கண் முன்னே வந்து எச்சில் ஊறச் செய்கிறது அவனுக்கு.

எவ்வளவு ஏசினாலும்,கத்தினாலும், மென்மையாய் முன் நெற்றி முடியைக் கோதும் அவளது விரல்களுக்கும், எதிலேனும் முதல் பரிசு வாங்கி வெற்றி பெற்று விட்டால், தோளை வருடி, முழுச் சிரிப்புடன் அவள் கொடுக்கும் நெற்றி முத்தத்திற்கும் மனம் ஏங்கத் தான் செய்கிறது.

சிரிக்கும் போது அவள் அத்தனை அழகு! ஆனால், சிரித்தால் தானே?, எந்நேரமும் முழுத் தொண்டையில் கத்திக் கொண்டும், அறிவுரை செய்தபடியும், அழுது அரற்றியவாறுமிருந்தால்.. ஹ்ம்ம்ம்! எனப் பெருமூச்சை வெளியேற்றுபவனுக்கு, அன்னை நினைவு பெருகுகையில் மனம் சோர்ந்து விடும்!, ஆயிரம் குறைகள் கூறி, அவள் பக்கமிருக்கும் தவறுகளை அடுக்கினாலும், உள்ளே குறுகுறுக்கும் இந்த உணர்வை… எப்படி சமாளிப்பதென்று தான் தெரியவில்லை அவனுக்கு!

ஓடிச் சென்று அன்னையைக் கட்டிக் கொண்டு, ‘நீ கேட்குற மாதிரி நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்குறேன்ல ம்மா!, நீ நினைச்சபடி நான் டாக்டர் ஆகிடுவேன்ம்மா!, ஆனா.. இந்த எக்ஸ்ட்ரா க்ளாஸஸ்ல இருந்து மட்டும் என்னை ஃப்ரீ பண்ணி விடேன் ப்ளீஸ்!’ எனக் கெஞ்சி, கொஞ்சி சமாதான முயற்சியில் ஈடுபடலாமா?,

அதே கெஞ்சல்,கொஞ்சலுடன் வாழ்க்கைப் பாடம் நடத்தி, ‘அம்மா சொல்றதை செய்றது, உன் எதிர்காலத்துக்கு நல்லது டா கணேஷூ’ – என்று விட்டாளானால், மறுபடி நரக வாழ்வு தான்!

ம்ஹ்ம்! அவளாகவே வந்து.. இதற்கொரு தீர்வு சொல்லாதவரை இங்கிருந்து நகரக் கூடாது என்று தீர்மானமெடுத்துக் கொண்டான்.

எடுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவனுக்கு அத்தனை கடினமானதாக இல்லை தான்! Except, இந்தக் காலை நேரக் கூத்து! காரணம்..

தினம் காலை தவறாது உடற்பயிற்சி செய்யும் அலெக்ஸ், 7 மணிக்கெல்லாம் முழுச்சத்தத்தில் பாட்டைப் போட்டு, மொத்த வீட்டையும் ரெட் அலெர்ட்டில் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

முதல் நாள் அவன் எழுந்து கத்தியதற்கு, “அம்புட்டுக் கஷ்டமாயிருந்தா, உன் வூட்டுக்குப் போடா புலாசுலாக்கி” என்று விட்டான்.

கோபமும்,ரோஷமும் வந்தது தான்! ஆனாலும், வேறு வழியிருக்கவில்லை!

ஏதேனும் நல்ல பாட்டாக, அவனுக்குத் தெரிந்த ஒன்றாக இருந்தால் கூட… ரசித்திருப்பான், அல்லது சகித்துக் கொண்டிருப்பான்! ஆனால்.. நல்ல உறக்கத்திலிருக்கும் போது திடீரென…

‘ஹேஏஏஏஏ…. யுய்யாஆஆ…. ஹேஏஏஏஏ யுய்யாஆஆ யுய்யா,யுய்யா,யுய்ய்யய்ய,யுய்ய்யாஆ ஆட்டமா.. தேரோட்டமா…’ – எனக் காதைக் கிழிக்கும் சத்தத்தில் அடித்துப்பிடித்து எழுந்தமர்பவனுக்கு frustration-ல் அழுகையும்,ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வரும்.

இன்று கூட, தன் காண்டாமிருகக் குரலில்,

‘குறுக்குப் பாதையிலே.. மறிச்சு வழியில் நின்னு..

கூறாம.. போறவளே.. குருவம்மா…’ என்று உறுமிக் கொண்டிருக்கிறான் அலெக்ஸ்.

இரு கைகளால் தலையணையைக் கொண்டு செவிகளை அழுத்தி மூடியவன், கதவைத் திறந்தபடி உள்ளே வந்து, வார்ட் ரோபிலிருந்துத் தன் உடையை எடுத்தவாறு,

‘அடி மஞ்சக் கிழங்கே, சிறு இன்பக் கிடங்கே’ – என்று கத்திப் பாடிக் கொண்டே வெளியில் சென்றவனை, விடைத்த மூக்குடன் விழித்துப் பார்த்துப் பின் ஒரு முடிவுடன் தன் அலைபேசியைக் கையிலெடுத்தான்.

முதல் நாளிரவு படுக்கையறையை ஒட்டிய பால்கனியில் நின்றவாறு, எதிர் வீட்டு மொட்டைமாடியில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ஸ்லீவ்லெஸ் அக்காவிடம் ஃபோனில் முணுமுணுவென ம்யூட் மோடில் அவன் வறுத்தக் கடலையை, அவனறியாமல் ஃபோனில் வீடியோ எடுத்து வைத்திருந்தான், பின்னாளில் தேவைப்படுமெனக் கணித்து.

இப்போது வில்லன் சிரிப்புடன், நக்கலாக அந்த வீடியோவை ‘ப்ளே’ செய்து பார்த்தவன், படபடவென அதை எடிட் செய்து தனது Instagram public profile-ல் போஸ்ட் செய்து விட்டுக் குப்புறக் கவிழ்ந்தடித்து உறங்கி விட்டான்.

லுவலகத்தில் அமர்ந்திருந்த அலெக்ஸின் அலைபேசி, அலறியவாறு வைப்ரேஷன் மோடில் ஒளிர்ந்து,மறைய, சுருக்கிய புருவங்களுடன் அதைக் கையில் எடுத்தவன், Instagram-ல் வந்து குவிந்த மெசேஜ்களையும், அது காட்டிய வீடியோவையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கையில்,

“டேய்ய்ய் அலெக்ஸூ!! சங்….கீத ஸ்வரங்….கள்ன்னு… தினம் நைட் ஃபோன்ல குஜால் பண்ணிட்டிருக்க போல?, நீ தான லே இது?” – தன் கையிலிருந்த ஃபோனைக் காட்டியவாறு கூறிய மோசஸைக் கேட்டு அதிர்ந்து, அவசரமாக ஃபோன் சத்தத்தைக் கூட்டினான்.

Black and white ஆக இருந்த வீடியோவில், தோன்றிய இடமும், மனிதர்களும் மேலும் dark-ஆக, சுலபத்தில் கண்டறிய முடியாத Blur நிலையிலிருக்க.. அணிந்திருந்த ஷார்ட்ஸ் பாக்கெட்டுக்குள் கை நுழைத்தவாறு, தலையை ஆட்டி,கழுத்தை நீவி, பால்கனிக் கம்பியில் சாய்ந்து, பேசிச் சிரித்து, வழிந்து, மடிந்து,விழுந்து அங்குமிங்கும் நடை போட்டபடி, வெகு ஈடுபாட்டுடன் காதில் வைத்த ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ஆணும், அவனைத் தொடர்ந்து தூரத்தில்.. ஒரு மொட்டைமாடியில்… செடிகளின் மத்தியில், வாட்டரிங் கேனுடன், bob cut முடியும், நைட் கவுனுமாய், காதில் Airpods-உடன் இளிப்பும், இணக்குமுமாயிருந்த ஒரு பெண்ணின் உருவமும் தெரிய…

background-ல் ‘மொட்டை மாடி, மொட்டை மாடி, புது லவ் ஜோடி, லவ் ஜோடி! இலவசமா… ஒரு சினிமா…..’ என்ற பாடல் பாடிக் கொண்டிருந்தது.

கீழே caption-ல், #புரிஞ்சவன்_பிஸ்தா tag உடன்

Le Gurl: பையனுக்குப் ‘பரட்டை’ தலையா?

Le Boy: பொண்ணு போட்டிருக்கிறது ‘ஸ்லீவ்லெஸ்’ ஜாக்கெட்டா?

-என்கிற வசனத்துடன், போஸ்ட் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே 50K views-களுடன் trend ஆகி விட்டதை விழி தெறிக்க நோக்கிய அலெக்ஸ்,

“Gangster நாயே! உன்னைக் கண்டந்துண்டமா வெட்டிப் போடாம விட மாட்டேன் லே”- என்று கறுவிக் கொண்டிருக்கையில் ‘Jeba🌹’ என்று ஒளிர்ந்த அலைபேசித் திரையைக் கண்டு பதட்டத்துடன் காதில் வைத்தான்.

“என்ன லே இதெல்லாம்?, கேமரா வைச்சு ரிகார்ட் வேற பண்ணுறியா நீயி?, சல்லிப் பயலே” – காறித் துப்பியவளிடம் உண்மையைக் கூற முடியாமல், நெற்றியைப் பற்றிக் கொண்ட அலெக்ஸ்,

“ஜெபா..ஆஆ.. ஐயோ உன் கிட்ட எப்பிடி சொல்ல?, வீடியோ எடுத்தது நான் இல்ல மக்கா” – என்றான் அழாக் குறையாக.

“நீயில்லாம?, ம்ம்?, உன் வீட்டு பெட்ரூம்ல இருந்து எடுத்தது மாதிரி தான டே இருக்கு?, உனக்குத் தெரியாம யாரு லே எடுத்தா?” என்று அவள் மேலும் சீற,

“அ…து… gangster கணேஷ்! Hunter ஹாசினியோட எதிரி! அன்னைக்குக் கூட என் பைக்ல வந்தானே! அவன் தான்”

“அவன் என்னத்துக்கு அர்த்தராத்திரில உன் வீட்டுக்கு வந்தான்?, சின்னப்பையனை வைச்சு வீடியோ எடுக்க விட்டு விளையாடிட்டு இருக்கியே, வெட்கமா இல்லையா லே உனக்கு?,”

“ஏய்ய்ய் நான் எடுக்கச் சொல்லலடி!”

“இதை நம்பனுமா நான்?, 10 மணி நேரம் உழைச்சு detachable bead blouse ரெடி பண்ணி இன்னைக்கு வீடியோ போட்டேன்!, சட்டையைப் பத்திப் பேசாம, பரட்டை தான் உங்க brad pitt-ஆ-ன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு என் கமெண்ட் செக்ஷனை spam பண்ணி வைச்சிருக்காங்க லே!”

“அந்த ப்ளௌஸ்ல பத்து, இன்னிக்கே நான் ஆர்டர் போடுறேன் டி!, போதுமா?”

“என்னைக் கேட்காம என் வீடியோவை நீ எப்பிடி போஸ்ட் பண்ணலாம்?”

“நான் பண்ணல மக்கா!”

“பொய் பேசாத லே ஃப்ராடு நாயே”

“ஏய்ய் என்னடி ரொம்பப் பேசுற?, இப்போ என்ன பிரச்சனை உனக்கு?, கேட்குறவன் கிட்டப் போய் ஆமா-ன்னு தான் சொல்லேன்! என்னைத் தான கட்டிக்கப் போற?”

“ஓஓ!! அப்போ என்னை லாக் பண்ணத் தான் நீ இந்த சில்ற வேலையைப் பார்த்திருக்க?”

“ஏய்ய்ய் ஏய்ய்ய்ய்”

“உனக்குப் போன தடவை பார்த்த பொண்ணு கிருபா வீட்ல இருந்து திரும்ப வந்து கேட்குறாங்குளாமாம்!, நீங்க சீக்கிரம் பதில் சொன்னா ஜெபா, இல்லாட்டி என் மவனுக்குக் கிருபா-ன்னு உங்கொம்மா, என் மாமாவை மிரட்டுதாம்!, என்ன லே, என் கிட்டயே கேம் ஆடுறீங்களா?” – அடிக்குரலில் ஆடியவளைக் கேட்டுப் பயந்து, பின்,

‘மேரி மா…தாஆஆஆ..’ என்று பல்லைக் கடித்தவன்,

“ஜெபா… ஜெபா.. எங்காத்தா ஆடுற மங்காத்தாவுக்கெல்லாம் நான் எப்பிடி ஜெபா பொறுப்பாக முடியும்?, கிருபாவுக்குக் கல்யாணமாகி அது கலிஃபோர்னியாவுல செட்டில் ஆயிடுச்சு ஜெபா!”

“அதுல ரொம்ப வருத்தமோ உனக்கு?”

“என்ன்….னடி இப்பிடிப் பேசுற?”

“இனிமே ராக்கோழி கூவுற நேரம் எனக்கு ‘call’ பண்ணி, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ-ன்னு’ ஏதாவது கதையடிச்ச…. கந்தல்,கந்தலா பிரிச்சிருவேன் உன்னைய” – என்று மிரட்டியவள் படக்கென ஃபோனை வைத்து விட,

‘அலெக்ஸ் தான் என் ஆளு’-ன்னு open statement கொடுக்காம, ராங்கி!, என்னை அதட்டுறா!’-என எரிச்சலும்,புகைச்சலுமாய் புலம்பியவாறு, கடுங்கோபத்துடன் gangster-க்கு அழைத்தவன்,

“டேய்ய்ய் காவாலி கணேஷூஊஊ” – என்றழைத்துக் கத்தத் தொடங்குவதற்குள்,

“ண்ணேஏஏ!! நாம மாட்டிக்கிட்டோம் ண்ணேஏஏ!” என்று கதறிய gangster, “அண்டங்காக்கா உளுந்த வடையைக் கவ்வுற மாதிரி, அப்பு தாத்தா, என்னைய உங்க வீடு புகுந்து தூக்கிட்டு வந்துட்டாரு ண்ணே” – என்று அலறும் குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து நின்றான் அலெக்ஸ்.