8.2 சொட்டாங்கல்!
“அப்பு தாத்தா கேக்குறது வேணா, ‘எலந்தப்பழம்,எலந்தப்பழம்ன்னு’ பழைய்ய்ய்ய்ய பாட்டா இருக்கலாம்! ஆனா டெக்னாலஜில அவரு ஒரு டெர்மினேட்டர்-ண்ணே!, 2G-லிருந்து AI வரைக்கும் எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கிற fully updated ஆளு! அது தெரியாம மரகதம் பாட்டிக்கு பர்சனல் நம்பர்ல இருந்து prank call பண்ணி வைச்சிருக்கியே!, நீஈஈஈஈ பரட்டை இல்லைண்ணே! வெத்துத் தேங்காய் செரட்டை!
தாத்தா, உன் நம்பரை ட்ரேஸ் பண்ணி, லொகேஷனைக் கண்டுபிடிச்சு, தொக்காஆஆ தூக்கிட்டாருண்ணே என்னைய!, அலெக்ஸூ நேர்ல வந்தாத் தான் உன் ஐஃபோனை தருவேன்னு பிடுங்கி வைச்சிருக்கார்! இப்போ நான் பேசிட்டிருக்கிறது மரகதம் பாட்டியோட ‘Motorola’ ஃபோன்!”
-அடிக்குரலில் முணுமுணுவென அழுது,புலம்பியவனைக் கேட்டு அங்கு ‘ஐயோ’-வெனத் தன் முட்டாள்தனத்தை எண்ணி நெற்றியில் அறைந்து கொண்ட அலெக்ஸ், சமயோஜிதமாக யோசித்து,
“அண்ணனுக்கு அவசரமா ரிகார்டிங் இருக்கு டே! முடிச்சிட்டு வரட்டுமா?” என்று பம்மிய குரலில் கூறித் தப்பிக்கப் பார்க்க,
“காலைல நான் ரிலீஸ் பண்ணுன வீடியோவோட unblurred original version with audio என் கிட்ட தான்ண்ணே இருக்கு! இன்ன்ன்னொரு தடவை internet-ஐ தெறிக்க விடவா?” – நேக்காக அவன் கம்பி நீட்ட நினைப்பது புரிந்து, வன்மத்துடன் gangster மிரட்ட,
“டேய்ய்ய் டேய்ய்ய்ய்ய்” – எனப் பல்லைக் கடித்துப் பொங்கியவனிடம்,
“அரை மணி நேரத்துல நீங்க இங்க இருக்கீங்க!, இல்ல, அப்பு தாத்தா உங்க ஆஃபிஸ் வாசல்ல நிற்பாரு!” என்று திட்டி விட்டு ஃபோனைக் கட் செய்தான்.
அலுவலகத்தில் ‘எமர்ஜென்சி லீவ்’ சொல்லி விட்டு அடித்துப்பிடித்து, அரக்கப்பறக்க பைக்கை விரட்டிய அலெக்ஸ், கலிலியோ காலனி முதல் தெருவிலிருக்கும் அந்தத் தனி வீட்டின் முன்பு வந்து நின்ற போது, வியர்த்து வழிந்திருந்தது.
அடித்த வெயிலில் அதிரிபுதிரியாகி, மூளை குழம்பி, மங்கி இருண்ட கண்களுடன் கேட்-ஐ திறந்தவனின் பார்வையில் வீட்டினுள் நின்றிருந்த மரகதம் பாட்டி பட, மூளையில் பட்டென எரிந்த விளக்கொளியில்,
“ம….ர….க…த…ம்……! எத்தினி வருஷமாச்சு உன்னைப் பார்த்து! சவுக்கியமாயிருக்கியா?” எனத் தேனொழுகக் கேட்டவாறு நேராகச் சென்று பாட்டியின் கையைப் பற்றப் பார்த்தவனை இடையில் புகுந்து தடுத்து நிறுத்தினார் ஏழடி உசரத்திலிருக்கும் அப்பு தாத்தா.
நெற்றி உரசிய அவரது இரும்பையொத்த நெஞ்சின் வலுவை நொடியில் உணர்ந்து வலியில் முகத்தைச் சுருக்கிப் பின் அண்ணார்ந்து பார்த்து, பரிதவித்த குரலில்,
“பங்ங்ங்ங்ங்ங்காளி….” எனத் தொடங்கியவனின் இரு காலரையும் ஒரு கையில் பற்றி அரையடிக்குத் தூக்கி விட்ட அப்புத் தாத்தா,
“யாருக்கு யார்றா பங்காளி?” – என்று கட்டைக் குரலில் கர்ஜிக்க,
மிரண்டு விழித்தவன், அவரது கையைத் தன் கழுத்திலிருந்து விடுவிக்க முயன்றபடி பிதுங்கிய விழிகளுடன்,
“என்னைத் தெரியல?, நான் தான் பங்காளி, பத்து வருஷத்துக்கு முன்ன பக்கவாதத்துல செத்துப் போன தனசேகரு!, உம் சம்சாரம் மரகதத்தோட மாமன் மவன்” – என்றான், தாத்தா தன் தொண்டைக்குழிக்குள் வண்டல் மண் அள்ள முயற்சிப்பதை அறிந்தும், அடங்காமல்!
அதுவரை குழப்பத்தில் சுருங்கிய புருவங்களுடன் அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மரகதம், நொடியில் அரண்டு, அரவமின்றி மொல்ல்ல்ல்ல்ல நகர்ந்து, பக்கவாட்டுச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சாமி மாடத்தின் அருகே சென்று, ஊதுபத்தி,திருநீற்றின் மணம் கமழ்ந்த மேடையில் சூடத்தட்டின் அருகிலிருந்த எலுமிச்சம்பழத்தையும்,வேப்பிலை இணுக்கையும், நைசாக எடுத்து, நடுங்கிய கையின் நடுவே இறுக்கிக் கொண்டு,
மிரட்சியுடன் இவன் புறம் பார்த்து, ‘அகில உலக நாயகியே! அங்காள பரமேஸ்வரி! காளி! திரிசூலி! மாரியம்மா!’ -என்று முணுமுணுக்கத் தொடங்கி விட,
பொங்கிய சிரிப்பை அடக்க முடியாது, வாயில் கை வைத்து சுவரை நோக்கித் திரும்பிய gangster-ரை முதுகின் பின் உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாது, இன்னமும் அப்பு தாத்தாவின் அகோரப் பிடியிலிருந்து land ஆகாமல், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் அலெக்ஸ்.
அலெக்ஸ் prank call என்கிற பெயரில் பிராணனை வாங்கிய தினத்தன்று, என்ன தான் தன் கணவன், ‘உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ வகையறா என்றும், ‘இருவாச்சிக்கு அடுத்து இவ்வுலகில் இணை பிரியாது வாழும் உயிரினங்கள்’ தாங்கள் தான் என்றும் மரகதம் பாட்டி அவனிடம் பீற்றியிருந்தாலும், மூப்பிற்கே உரிய mood swing-கினால் மனம் தத்தளித்துத் தடுமாறியதில், தவிப்புற்று, மூளை மங்கிப் போய், கடைசியில் தன் lifetime product-ஐ ‘quality assessment’ செய்ய எண்ணி நேராக மாரியம்மன் கோவில் பூக்காரியிடம் சென்று நின்றார்.
புறணியில் PhD பெற்ற பெருமாட்டியான பூக்காரி, ‘வாங்குன ரெண்டு கன்னி பூவுக்கு, ரெண்டு வாரம் இழுத்தடிச்சுக் காசை நீட்டுது பாரு கஞ்சப் பிசுனாரி கெய்வி!, படி அளக்குற தெய்வத்துக்குப் பந்து, பந்தா பூ வாங்கிப் போட்டாத் தான் என்ன’ – என்று வியாபார ரீதியாக மரகத்தின் மீதிருக்கும் கடுப்பைக் காட்டும் பொருட்டு,
“என்னாம்மே நீ!, செவ்வாய்,வெள்ளியானா தான் கோயிலாண்ட காலடி எடுத்து வைக்குற!, இதே, எங்க ஐயாவைப் பார்த்தியா?, நாள் தவறாம காலையும்,மாலையும் அம்மன் திருவடியே சரணம்ன்னு கதியா கிடக்குறாரு!” – என்று நொடித்துக் கொள்ள,
கணவரின் மீது எரிச்சலிலிருந்த மரகதம், “ம்ம்ம், அவுருக்கென்ன?, கூட்டுறது,கழுவுறது,துவைக்கிறதுன்னு எந்த வேலையும் கிடையாது!, ஆக்கி வைக்கிறதைத் தின்னுப்புட்டு வெள்ளையும்,சொள்ளையுமா வீதியில திரிவாரு! நான் அப்பிடியா?” என்று விட்டு, ‘ஆகாவலி மனுசன்’ என்று பொருமிக் கொள்ள, அதை உற்று,ஒட்டுக் கேட்டு விட்ட பூக்காரி குதூகலமாகி,
“அதின்னாமே அப்பிடி சொல்லிட்ட?, ஐயாவுக்கு இன்னாமே குறை?, ‘கங்கைக்கரைத் தோட்டத்துல, கன்னிப் பெண்கள் கூட்டத்து நடுவுல ஷோக்கா குந்தீனுக்கிற கண்ணன்ம்மே அவுரு’. எங்க ஐயா, அரசமரத்தடியில சீட்டைப் போட்டாருன்னா, இனிப்பைச் சுத்துற ஈயாட்டம், இந்த ஏரியா கெய்விங்க பூரா அவுரை ரவுண்டு கட்டிரும்ங்க!, இனிக்க,இனிக்க அவுரு பேசப் பேச ஒவ்வொன்னும் பூசனம் புடிச்சப் பல்லைக் காட்டிக்கினு புரையேறுகிற அளவுக்கு சிரிக்குற அழகைப் பார்க்கனும்!, உனக்கு அவுரு அருமை தெர்லம்மே!, ஆனா ஒன்னு, அவுரு உசரத்துக்கும், கம்பீரத்துக்கும்… அவுரு முன்னாடி நீ கொஞ்சம் டம்மி தான்ம்மே!” – என்று ஏகத்துக்கும் ஏற்றி விட,
ஏற்கனவே கணவரை எண்ணிக் குழப்பத்திலிருந்த மரகதம், ‘immense insecurity’-ல் முற்றிலும் நிலைகுலைந்து போய் கோபமும், ரோஷமுமாக பூவை அவள் முகத்திலேயே விட்டெறிந்து விட்டு, விஸ்க்,விஸ்க்கென நடந்து, வீடு வந்து சேர்ந்திருந்தார்.
அன்றிலிருந்து காரணமேயில்லாமல், மூலையில் அமர்ந்து கொண்டு முணுமுணுவெனத் தனக்குள் புலம்பியபடி மூக்கைச் சீந்தியவாறு கண்ணீரும், கம்பளையுமாய்த் திரிந்தவரைப் பார்த்து அதிர்ந்து,குழம்பிப் போன அப்பு தாத்தா,
“ராசாத்தி, அதான் நீ சொன்னா மாதிரியே தோட்டத்தைக் களையெடுத்து சுத்தம் பண்ணி, பாத்தி கட்டி வுட்டுட்டேனே!, கொல்லை லைட்டோட சுட்ச்சு பாக்ஸைக் கூட எலெக்ட்ரிசியனைக் கூட்டியாந்து மாத்திட்டேனே! சிகப்பு வாளியிலிருந்த மொளகாயைக் கொண்டோயி அரவை மில்லுல வைக்கச் சொன்ன!, வாளியைத் திருப்பிக் கொண்டாரனுமா, வேணாவான்னு நீ சொல்லவே இல்ல! ஃபோன் போட்டேன், நீ எடுக்கல! ‘வைச்சிட்டுப் போங்க ஐயா, மாவு முடிஞ்சப்புறம் தான் மொளகா அரைப்பேன்!சாயந்தரமா வந்து எடுத்துக்கிடுங்கன்னு’- மில்-காரன் சொன்னான்! அதான் வந்துட்டேன்! வாளியைக் கொண்டாரலன்னா அழுதுட்டுக் கிடக்குற?” – என யோசித்து,யோசித்து மொல்ல்ல்லமாகக் கேட்க,
கோபமாய்க் கணவனை ஒரு பார்வை பார்த்தவர், வெடுக்கெனக் கழுத்தை ஒடித்துத் திரும்பிக் கொண்டதும்,
“அட என்னான்னு சொன்னாத் தான தெரியும்?, என்னத்துக்கு மூலைல கிடந்து மூக்கை உறிஞ்சிட்டிருக்குற?, இம்புட்டு அழுகை அழுதா, தடுமம் புடிச்சிக்கிடப் போகுது!, அப்புறம் உம் சின்ன மவன், ‘என்ன கவனிச்சுக்குறீங்க அம்மாவை?, இப்பவே அமெரிக்காவுக்கு அனுப்பி வைங்கன்னு’ என் கூட மல்லுக்கு நிற்பான்” – என்றவர் குனிந்து மனைவியின் கன்னத்தைத் துடைத்து விட முயன்றார்.
வேகமாய் அவர் கையைத் தட்டி விட்டு, “போமய்யா அந்தப்பக்கட்டு!, மகன் கேட்பான்னு தான் கவலை மனுசனுக்கு?, தனக்கா அக்கறையோ, ஆசா,பாசமோ இல்ல! அதான், தலை நரைச்சுக் கிழவியாய்ப் போனேனே, காடு வா,வாங்குற வயசுல இருக்குறவ மேல என்னத்துக்கு அக்கறை, சக்கரையெல்லாம்?” – என்று எகிற,
“என்னாடி அர்த்தமில்லாம உளறிட்டுக் கிடக்குற?, பைத்தியக்காரி” என்று தாத்தாவும் கோபப்பட்டுத் திட்டியதும்,
“ஆமாஞ்சாமி, நான் பைத்தியக்காரி தான்!, என்னை மட்டுமே சுத்தி வர்ற மனுசன், எனக்கு துரோகம் பண்ண மாட்டாருன்னு, நீர் பிறத்தியாளுகளோட பல்லைக் காட்டிட்டுத் திரிஞ்சப்பவும், நம்பிக்கையும்,நல்லெண்ணமும் வைச்சிருந்தேன்ல, நான் பைத்தியம் தான்!, போங்க, மாரியம்மன் கோயில்ல உம்ம மச்சினிகளெல்லாம் மரத்தடியில உமக்காக தவங்கிடக்குறாளுகளாம்! போயி, மடில போட்டுக் கொஞ்சிக் குலாவுங்க!”- என்ற பாட்டி பட்டென இடப்பக்கம் திரும்பியமர்ந்து, சுவரில் தலையைச் சாய்த்தவாறு,
“எங்கப்பாரு பர்மாவுல இருந்து கொண்டாந்த பணக்கார மாப்பிள்ளையை விட்டுப்போட்டு, நெடு,நெடுன்னு பனைமரமாட்டம் வளர்ந்து நிற்கிறாரேன்னு இந்தாளு கிட்ட மயங்குனேன்ல! என்னைச் சொல்லனும்! அந்தக் காலத்துலயே என்னைய ப்ளசர் காருல வந்து பொண்ணு கேட்டவுக அவுக! என் தாய்,தகப்பன் அம்புட்டு கெஞ்சியும், ம்ஹ்ம்ம்ம்ம் ஒரேடியா நின்னு வேணாம்ம்ம்ம்ன்னு சாதிச்சேனே!, இந்த ஆகாவலி மனுசனோட இப்பிடி ஆக்கங்கெட்டப் பொழப்பு நடத்துறதுக்கா! ச்சீசீசீசீசீ” – என மேலும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது புலம்ப, அரண்டு,அலண்டு போன தாத்தா,
“இந்தா ராசாத்தி, கண்ணு ரப்பை சுருங்கிப் போன காலத்துல என்னத்துக்கு அந்த ரங்கூன் ராஸ்கோலைப் பத்தியெல்லாம் பேசுற?, கட்டையா,குட்டையா அஞ்சலிதேவியாட்டமிருந்த உன்னைய அந்நியன் அவன் கிட்டயிருந்து காபந்து பண்ணுறதுக்குள்ள, நானும் உன் அண்ணனும் எப்பிடி தவிச்சுப் போனோம் தெரியுமா?, பழசெல்லாம் எதுக்கு பேசிக்கிட்டு?,
இப்ப என்ன பிரச்சனை உனக்கு? என்னத்துக்கு ஆகாத கதையெல்லாம் நினைவுக்கு வருது?, உம் பேரனை பார்க்கனும் போல இருக்கா?, ஃபோன் போட்டுத் தரவா?, அதான் அடுத்த வருசம் நேர்லயே பார்க்கப் போறோமே! என்னத்துக்கு கரைச்சல் பண்ற?” – என்று சமாதானக் குரலில் கூறியவாறு, அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மனைவியின் தலை வருட, அதில் நெகிழ்ந்து,
சேலைத் தலைப்பில் மூக்கைத் துடைத்துக் கொண்ட பாட்டி, “ஏம் மாமா நான் உமக்கு சலிச்சுப் போனேனா?” என்று பரிதவிக்கும் விழிகளுடன் பாவமாய்க் கேட்க,
அவரது குமட்டில் இடித்த தாத்தா, “சலிச்சுப் போறதுக்கு நீ என்ன பருப்பு சாம்பாரா?, என் சாவித்திரிடி நீயி!“ – என்று கன்னம் கிள்ளிக் கொஞ்ச,
அவர் பதில் கொடுத்த ஒவ்வாமையில் உதடு பிதுங்கி கண்களில் கண்ணீர் கொட்ட,
“அப்டின்னா நீர் ஜெமினி கணேசனா?, போற ஊரெல்லாம் பொண்டாட்டி கட்டுனவன் அந்தாளு! நீர் அந்தாளைப் போலத் தானா?, ஏமய்யா?” – என்றார் வெறுப்பும்,விரக்தியுமாய்.
அவரது context புரியாததில் காண்டேறிப் போன தாத்தா, “நான் சத்தியவான் சாவித்திரியை சொன்னேன்டி! நான் எந்தூருக்குப் போய் பொண்டாட்டி கட்டிட்டு வந்து உன் முன்னால நின்னேன்?, அல்வாத்துண்டாட்டம் நீ இருக்கையில எனக்கு என்னத்துக்குடி அசலூர்க்காரிக சகவாசம்?, அதை விடு! போட்டிருக்கிற தோட்டுல (தோடு) ரெண்டு கல்லு உதிர்ந்திருச்சுன்னு சொன்னியே! நகைக்கடைக்கு போய் மாத்திட்டு வருவோமா?” – என்று நைசாக பாட்டியை வசியம் செய்யப் பார்க்க,
“நாண்டுக்கிட்டு சாக முடியாம கிடக்குறவளுக்கு, நகை ஒன்னு தான் குறை” என்று அவரது முயற்சியை முறியடித்தவரை, என்ன சொல்லி சமாதானம் செய்வதென்றும் புரியாமல், முதலில் தான் என்ன தவறு செய்தோமென்றும் தெரியாமல் தத்தளித்துப் போன தாத்தா,
“ராசா….த்தி! உனக்கு எம் மேல ஏதோ கோவம்ன்னு புரியுது!, இப்பிடி முகம் திருப்பிக்கிறதும், எடுத்தெறிஞ்சு பேசுறதும் சரி தான்!, ஆனா.. நான் என்னா தப்பு பண்ணேன்னு மட்டும் சொல்லிட்டுத் திட்டேன்! உனக்குப் புண்ணியமா போகும்! மண்டை காயுதுடி எனக்கு! என்னான்னு சொன்னாத் தான நானும் என் பக்கத்து விளக்கத்தைக் கொடுக்க முடியும்?, ம்ம்?, என்னான்னு சொல்லு ராசாத்தி…..” – என்று நாற்காலியிலிருந்து அவர் புறம் குனிந்து கம்மிய குரலில் நைச்சியமாய்க் கேட்டவரின் கரடுமுரடான தோற்றமும், அதற்கு நேர்மாறாக மென்மையும்,தவிப்பும் சரிவிகிதத்தில் தேங்கியிருந்த முகத்தையும் கண்டு உள் மனம் தவிக்க,
“எட்டாவது தெருவுல எலந்தப்பழம் விக்குறவ உம்ம சிநேகிதியா?” என உம்மென்ற முகத்துடன், கணவனின் விழி நோக்காது கேள்வி கேட்டார்.
“ஆமா, சிநேகிதம் தான்! எலிசபெத்து பேரன் எட்வினுக்கு நான் தான் கர்லாகட்டை சுத்த பயிற்சி கொடுத்துக்கிட்டிருக்கேன்! என்னாவாம்?”
“சிநேகிதம்ன்னா?, எந்த அளவுக்கு சிநேகிதம்” – துடித்த நாசியுடன் தழுதழுத்தக் குரலில் கேட்டவரைக் கண்டு எரிச்சலுற்றவர்,
“ம்ம்ம்ம்ம், அடுத்த முறை உழக்கெடுத்துட்டுப் போய் அளந்துட்டு வந்து சொல்றேன்” என்று கடுகடுக்க,
வாயில் முந்தானையை அடைத்துக் கொண்டு, தோள் குலுங்க அழுதவாறு, கண்களை இறுக மூடிக் கொண்டவரைக் கண்டு,
“இந்த வயசுல என்னாடி அளவுக்கு மீறிய சிநேகிதமிருந்திடப் போவுது?, கிறுக்கி!,” என்று சீறிய தாத்தா, “போன வருசம் நாம குலசாமிக்கு நேர்ந்து விட்டக் கிடாவை வளர்த்துக்கொடுத்ததே அவ புருசன் அந்தோணி தான் டி!” என்று பொறுமையாக விளக்கியதும்,
இம்மீடியட்டாக முகத்தைச் சுழித்த மரகதம், “கி****துவன் வளர்த்துக் கொடுத்ததையா கருப்பசாமிக்கு அறுத்துப் படைச்சிருக்கோம்?” – என்று மதயானையாக மாற,
“என்னா இப்ப?, அங்கிட்டு சிலுவை, இங்கிட்டு அருவா!, ரெண்டும் காக்கும் தெய்வங்கள் தான டி?, அவுரு ‘சத்தியமும்,ஜீவனுமா’ இருக்குறாரு!, ‘இவுரு சத்தியவாக்கு கொடுத்தா தவறாது’! ரெண்டும் ஒன்னு தான் டி” – என்று தாத்தா அசால்ட்டாகக் கூறியதும்,
“பகுத்தறிவுலயும் குறைச்சல் இல்ல! பல்லிளிக்கிறதுலயும் குறைச்சல் இல்ல” – என்று மரகதம் முணுமுணுப்பதைக் கண்டு,
“வேற எதுல டி குறைச்சலைக் கண்ட?, நாலடியில இருக்குற உன்னைய, இந்த வயசுலயும் மார்ல தூக்கி சுமக்க முடிஞ்ச நெஞ்சுரம் கொண்டவன் டி நான்! என்ன, தூக்கிக் காட்டவா?” – என்றவாறு பட்டென எழுந்து நின்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்ட மனிதர், முறைப்புடன் அமர்ந்திருந்த மனைவியை, இரு கைகளால் அலேக்காகத் தூக்கி விட,
இதை எதிர்பாராது பதறிப் போன மரகதம், அவசரமாய் அவர் சட்டையைப் பற்றிக் கொண்டு, அசையாது விறைத்து,
“ஐயோ! இறக்கி விடுங்க! இறக்க்க்கி விடுமய்ய்ய்யா!, எங்கேயும் பிடிச்சுக்கப் போகுது உமக்கு!,” என்று நொடியில் வியர்த்து, கூச்சமும்,கலக்கமுமாய்க் கத்திக் குவித்ததும்,
வெகு நாட்களுக்குப் பின் வம்பு செய்து, மனைவியைத் துள்ள விடுவது குஷியைத் தர, மேலும் மிஞ்சி, அவளைக் கெஞ்ச விட எண்ணி, தூக்கியவாறே வராண்டாவை வலம் வந்தவரைக் கண்டு அலறித் துடித்த மரகதம்,
“ஐயோ! உமக்குப் புண்ணியமாப் போகும்! இறக்க்க்கி விடுமய்யா!” – என்று பதறிய குரலில் கூற, தன் தோளை இறுகப் பற்றியிருந்த மனைவியின் வளைக்கரத்தில் அழுந்த முத்தம் பதித்து ஒரு வழியாகக் கீழிறக்கினார், நாள் தவறாது கர்லாகட்டை சுற்றும் அப்பு தாத்தா.
தலை கிறுகிறுத்துப் போய் தள்ளாடி நின்ற மரகதம், அருகிலிருந்த நாற்காலியைப் பற்றியவாறு, “இளமை திரும்புதா உமக்கு?, காலம் போன காலத்துல… பண்ணுற காரியத்தைப் பாரு! துப்புகெட்ட மனுசன்!” என்று திட்டத் தொடங்க,
“இன்னும் வாயை மூடலயா நீயி?, தலைக்கு மேல தூக்கி சுத்துனாத் தான் அடங்குவ போலயே!” – என்று தாத்தா மிரட்டியதும்,
‘ஆத்திதிதி’ என நெஞ்சில் வைத்து அரண்டு போய், அவசர,அவசரமாக இடத்தைக் காலி செய்திருந்தார்.
என்ன தான் அன்று, விளையாட்டுத்தனம் செய்து மனைவியை சமாதானப்படுத்தியிருந்தாலும், மனைவியின் வார்த்தைகளில் வெளிப்பட்ட விரக்தியை உணர்ந்து கவலை கொண்ட அப்புத் தாத்தா என்ன நடந்ததென அறிந்து கொள்ள நினைத்தார்.
அதன் பின், சாமான் கழுவும் போதும், சாம்பார் சமைக்கும் போதும், சாமி கும்பிடும் போதும் முணுமுணுவென, தனக்குள்ளேயே முனகித் திரிந்த பாட்டி, அவரைக் காணும் நேரம், ‘நங்ங்ங்ங்ங்கென தட்டை டேபிளில் வைப்பது, எண்ணெய்க்குளியல் நாட்களில் மனைவியிடம் தலையைக் கொடுத்து விட்டு அமர்பவரின் சொட்டையில் ‘சொத்த்த்,சொத்த்தென’ தட்டித் தபேலா வாசிப்பது, சாய்வு நாற்காலியில் நீட்டிக் கிடப்பவரின் காலை நறுக்கென மிதித்து விட்டு கண்டு கொள்ளாமல் செல்வது’ – என பாட்டி மிகவும் ‘வயலண்ட்’ ஆக turn ஆகிக் கொண்டிருப்பதில் பயந்து அவரருகில் உஷார் நிலையில் இருக்க வேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டார் அப்பு தாத்தா.
தன் மீது பாட்டி, கோபத்தைத் தாண்டிய கொலைவெறியில் இருப்பதை புரிந்து கொண்டவர், பூனை வெளி வரப் போகும் நாளுக்காகக் காத்திருந்தார்.
அந்த வார ஞாயிறன்று காலை எலிசபெத்தின் மகன் எட்வின் கர்லாகட்டைப் பயிற்சிக்காக அப்பு தாத்தாவின் வீட்டிற்கு வருகை தர, வாசல் தெளித்துக் கொண்டிருந்த பாட்டி, அவன் யாரெனத் தெரிந்து அங்கேயே நிற்குமாறு கூறி விட்டு, விடு,விடுவென வீட்டினுள் நுழைந்து, கொல்லையிலிருந்து வெளி வந்தக் கணவனிடம்,
“இனி நீங்க அவ மவனுக்கு பயிற்சியும் குடுக்க வேணாம், ஒரு மண்ணும் குடுக்க வேணாம்” என்று சீற,
“யாரு மவனுக்கு?, என்ன சொல்லுற ராசாத்தி?” – புரியாமல் கேட்டவரிடம்,
“எலந்தப்பழம் விற்குறவ மவன், நம்ம வூட்டு வாசல்ல நிற்குறான்!, நீங்க அவனுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாதுன்னு நான் சொல்றேன்”- என்று அடமாய்க் கூற,
“சின்னப்பையனை வாசல்ல நிற்க வைச்சுட்டாடி வருவ? கூறுகெட்டவளே!” என்றவாறு வெளியே விரையப் பார்த்தவரின் கையைப் பற்றிக் கொண்ட பாட்டி,
“நீங்க போகக் கூடாதுன்னா, போகக் கூடாது” என்று காரணமின்றி கோபப்பட்டுக் கத்த, மனைவியின் பிடிவாதத்தை ஒரு நொடி நின்று நோக்கிய தாத்தா, “சரி இன்னிக்கு அவனுக்குப் பயிற்சி இல்லன்னு சொல்லிட்டு வந்துர்றேன்” என்று சமாதானமாய்க் கூறி விட்டு நகரப் பார்க்க, “இன்னிக்கு மட்டுமில்ல! என்னிக்குமே கிடையாதுன்னு சொல்லிட்டு வாங்க” என்று கட்டளையிட,
கடுப்பில் பற்கள் அரைபட்டாலும், தலையை ஆட்டி விட்டு வெளியே சென்ற அப்பு தாத்தா சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.
தன்னிடம் காபியை நீட்டிய மரகதத்தின் கையைப் பற்றி முற்றத்துத் தூணருகேயிருந்த திண்ணையில் அமர வைத்தவர், காபியை அவர் வாயருகே வைத்து, “நீ குடி முதல்ல” என்றார்.
கணவனின் செய்கை சாந்தப்படுத்தியதில் மனமிறங்கிய பாட்டியும், “எனக்கு உள்ள இருக்கு” என்று முணுமுணுக்க, அதைத் தனக்கு எடுத்து வந்தவர், வாசலை வேடிக்கை பார்த்தபடி அவர் குடித்து முடிக்கும் வரை அமைதி காத்து பின்,
“இப்ப சொல்லு ராசாத்தி! எலிசபெத்து கூட உனக்கென்னாப் பிரச்சனை?, சொத்தைப் பழத்தைக் கொடுத்து உன்னை ஏமாத்திப் போட்டாளா?” எனக் கேட்டார்.
“……………” – பதிலின்றி தரையைப் பார்த்தமர்ந்திருந்தவரிடம்,
“அவ கிட்ட இலந்தை வடை வாங்கித் தின்னு நாக்கு பொத்துப் போச்சுன்னியே!, அந்தக் கோவமா?” – என்று விசாரித்தார்.
இல்லையெனத் தலையாட்டியபடி அமைதியாய் இருந்தவரிடம்,
“என்னான்னு சொன்னாத் தான ராசாத்தி தெரியும்?,இன்னும் எத்தனை நாளைக்கு என் மேல கோவத்தைத் தூக்கி சுமப்ப?” – பொறுமையற்று சத்தம் கூட்டி வினவியதில்,
மனதை கல்லாக்கிக் கொண்டு கண்ணீர் தேங்கிய விழிகளுடன், “உங்களுக்கும்,அவளுக்கும் சகவாசம் சரியில்லன்னு ஒரு பேச்சு” என்றார் அடைத்தத் தொண்டையோடு காற்றாய் வந்த குரலில்.
அதுவரையிருந்த கெஞ்சல் தொனி மாறி, நொடியில் தாத்தாவின் புருவங்கள் நெரிபட, “அப்டின்னு யாரு சொன்னா உன் கிட்ட?” என்று கடுமையான குரலில் வினவினார்.
மூக்கை உறிஞ்சி, முந்தானையில் கன்னத்தைத் துடைத்துக் கொண்ட மரகதம், “தனசேகரு” என்றார்.
“அது யாரு?”
“எம் மாமன் மவன்”
“அவன் செத்து பத்து வருசமாச்சே!”
“அவன்-னா, அவன் இல்ல! அவனோட ஆவி”
-பாட்டியின் அப்பாவித்தனமான பதிலைக் கேட்டு, வெறியாகி, பக்கவாட்டில் அமர்ந்திருந்தவரை தலை சாய்த்து நேராய் முகம் நோக்கிய தாத்தா, “மறை கழண்டு போச்சா டி உனக்கு?, ஆவி வந்து சொல்லுச்சாமா ஆவி! பைத்தியக்காரக் கிறுக்கி” எனச் சாட, ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததில் கிழவி,
“மொத நாள் அமாவாசை அன்னிக்கு நான் காக்காய்க்கு வைச்ச சாம்பார் சோத்தைத் தின்னுட்டு, அந்த ஆவி தான் ஆள் ரூபத்துல எனக்கு ஃபோன் போட்டு சொல்லுச்சு! முதல்ல நானும் நம்பல! ஆனா அந்த ஆவி, அவன் தாத்தன் காட்டை வித்து எங்கப்பனுக்குக் கொடுத்த பத்தாயிரத்தைப் பத்தியெல்லாம் சொல்லுச்சு!அதனால தான் நம்புனேன்! அது தனசேகரு ஆவியே தான்! நான் அடிச்சு சொல்லுவேன்” எனக் கூற,
“சரி தனசேகரு ஆவி, என்னா சொல்லுச்சு என்னைப் பத்தி?” என்று நக்கலாகக் கேட்டவரிடம், குனிந்த தலையுடன்,
“எலிசபெத்துக்காகத் தான் நீங்க காலனி நிகழ்ச்சியில எலந்தப்பழம், எலந்தப்பழம்ன்னு பாட்டு போடச் சொல்லி ஆட்களோட மல்லுக்கு நின்னீகளாம்!” என்று கூறியதும், பட்டென நடந்ததைக் கணித்து விட்ட அப்பு தாத்தா,
“போய் உன் ஃபோனை எடுத்துட்டு வா” என்றார் இறுகிய முகத்துடன்.
கணவரின் குரல் கலக்கத்தைக் கொடுக்க, ஓடிச் சென்று அலைபேசியை எடுத்து நீட்டியவரிடம், ஆவி சேதி சொல்லிய தேதியைக் கேட்டறிந்து கொண்டு, அதை வைத்து நம்பரை அறிந்து, தாமதிக்காமல் உடனே telecom-ல் வேலை செய்யும் தன் நண்பன் பரந்தாமனை அழைத்து விசயத்தைக் கூறி, அந்த நம்பரின் whereabouts-களைக் கண்டறிந்து சொல்லுமாறு பணித்து விட்டு மனைவியின் முகம் பார்த்தார் அப்பு தாத்தா.
பதற்றமும், மதியிழந்து தவறிழைத்து விட்டக் குற்ற உணர்ச்சியுமாய், கைகளைப் பிசைந்தபடி நின்றவரின் அருகே வந்தவர், நாலடியில் நின்றவரை நோக்கிக் குனிந்து,
“யாரு என்னைப் பத்தி என்ன சொன்னாலும் அப்பிடியே நம்பிருவியா ராசாத்தி?” எனக் கேட்டார்.
கணவனின் கேள்வி சுருக்கெனத் தைத்தாலும், இறுகிய முகத்துடன், “நம்பியிருந்தா, இந்நேரம் உத்திரத்துல தொங்கியிருக்க மாட்டேன்?” என்று கூற,
கோபத்தில் துடித்தக் கன்னங்களுடன் “ஒரு அறை ஓங்கி விட்டேன்னா, இருக்குற பல்லும் கொட்டிப் போகும் சொல்லிப் போட்டேன்!” –என சீறியவரை அசட்டை செய்து,
“ஊர் கண்டதை பேசுற அளவுக்கா என் மனுசன் போக்கிருக்கு?, இத்தினி நாளா இதைக் கவனிக்காம, சோத்தை ஆக்குறதும், தூங்கி எந்திரிக்கிறதுமா திரிஞ்சிருக்கேனேன்னு என் மேல தான் கோபம் எனக்கு!” என்றவரிடம்,
“கண்டதைப் பேசுறாங்கன்னா, குறை என் போக்குல இல்லடி! பார்க்குறவன் பார்வையில!, எவனோ ஒருத்தன் என்னத்தையோ ஃபோனைப் போட்டு உளறுனா, நேரடியா வந்து என் கிட்ட சொல்றதை விட்டுப் போட்டு, உன் மண்டைக்குள்ள போட்டு உழப்பிட்டுக் கிடப்பியா?, நீ ஆளும் வளரல! அறிவும் வளரலடி!, ஆவி பேசுச்சாம்! இவளும் ஆஆஆஆன்னு கேட்டாளாம்!, முட்டாக்கழுதை” – சரமாரியாகக் கிழித்துத் தொங்கவிட்டவரைக் கண்டு பொங்கிய அழுகையுடன்,
“அந்தப் பூக்காரி கூடத் தான், ‘கண்ணன் வருவான், கதை சொல்லுவான்னு’ இந்த ஏரியாக் கிழவிமாருக பூரா அரசமரத்தடியில உமக்காக ஆர்வமா காத்துக்கிடக்குறாளுகன்னு சொன்னா!” – என்று கூற,
அவர் தலையில் தட்டிய தாத்தா, “உபன்யாசம் கேட்குற வயசுல இருக்குறதுங்களைப் போய் உல்லாசிகள்-ங்குறியேடி!, நீ அந்த பூக்கார சிறுக்கிக் கிட்ட திருப்பிச் சொல்ல வேண்டி தான?, ‘அவளுகளுக்கெல்லாம் கதை தான் சொல்லுவாரு, என் கூட காவியமே படைப்பாருன்னு!” – என மனைவியின் அழுகை பொறுக்காது தோளணைத்துக் கொண்டார்.
கூச்சத்தோடு ஒன்றியபடி, “யாரு கூட-ன்னாலும் அளவாவே வைச்சுக்கங்க மாமா! முகத்துக்கு முன்னால ஒன்னும், முதுகுக்குப் பின்னால ஒன்னும் பேசுற கூட்டமிது!, எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ! நமக்கெதுக்கு வீண் வம்பு?, நீங்க விகல்பமில்லாம பண்ணுற உதவியைக் கூட விவகாரமாக்கிப் பேசுறாக பார்த்தீகளா?” என்று அண்ணார்ந்து கணவரின் முகம் பார்த்துக் கூறியவரிடம்,
“நானெல்லாம் வம்பை வைச்சு கம்பு சுத்துற ஆளு! என் கிட்ட தகராறு பண்ண நினைக்குறவங்க தப்பிக்கவே முடியாது ராசாத்தி!,” – எனத் தாடியை நீவியவரைக் கலவரமாய் நோக்கி, சின்னக்குரலில்,
“அதாரு மாமா, உம்மைப் பத்தி இப்பிடிப் புரளியைக் கிளப்பி விடுறது?” எனக் கேட்டார்.
காலனியிலிருக்கும் பெண்களிடம் கலகலவென சிரித்து,மகிழ்ந்து உரையாடும் தாத்தாவிற்கு, ஆண்களிடம் அவப்பெயர் மட்டும் தான்! அதில் எவனோ ஒருவன் தான், இந்த வேலையைப் பார்த்திருப்பான் என்றெண்ணியபடி, வில்லத்தனமாய் தலையாட்டியவாறு, “சீக்கிரமே கண்டுபிடிப்போம்” என்றவர், திடீரெனக் கோபமுற்று,
“இந்தக் கருமத்துக்காடி இத்தினி நாளா மூஞ்சியைத் தூக்கிக்கிட்டு என்னை கிறுக்கா திரிய விட்ட?” என்று சத்தமிட,
“அ….அ…அது” என்று பம்மிய பாட்டி, “சாம்பாருக்குப் பருப்பு வேகப் போடனும்! இந்தா வர்றேன்..” என்று அடுக்களைக்கு ஓடுவது கண்டு, இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தத் தாத்தா,
“ஆலமர விழுதாட்டம், என் அன்பை ஆண்டாண்டு காலமா உன்னைச் சுத்திப் பரப்பி,படர விட்டு வைச்சிருக்கேன்டி!, அது புரியாம, என்னையே தரப் பரிசோதனை செஞ்சு பார்க்க நினைக்குறியே! பொம்பளை புத்திடி! திருத்தவே முடியாதுடி” என்று சாடியதும்,
வெடுக்கென உள்ளிருந்து எட்டிப் பார்த்த மரகதம், “பரிசோதனை பண்ண நினைக்கல! கோளாறு பேச்சு வராம, பக்குவமா பார்த்துக்கிடத் தான் பாடுபட்டேன்!, கருவறை சாமியா நான் நெஞ்சுக்குள்ளப் பொத்தி வைச்சு பூஜிக்கிற மனுசன், கண்ட பேச்செல்லாம் கேட்க வேண்டியிருக்கியேன்னு கலக்கத்துல வந்த கோபம் அது!, நீர் கொள்ளை,கொள்ளையா கொட்டிக் கொடுக்குற அன்பை அம்பது (ஐம்பது) வருசமா பரிபூர்ணமா அனுபவிச்சிட்டிருக்கிற பாக்கியசாலி நான்! உம்மை தரத்தை சோதிக்குறது, என் தலையில நானே தணல் அள்ளிக் கொட்டிக்கிறதுக்குச் சமம்!” என ஆங்காரத்துடன் கூறித் தொடர்ந்து,
“பதினாறு வயசுல உம்மைக் கையைப் பிடிச்சு இந்த மணவாழ்க்கைக்குள்ள நுழைஞ்சதிலிருந்து ஒரு முறையாவது உம்மைப் பிரிஞ்சிருப்பேனா?, விசேஷம்னாலும்,துக்க வீட்டுக்குப் போனாலும், எம் புருசன் காத்துக்கிடப்பாருன்னு பொழுதோட உம்மைத் தேடி ஓடோடி வர்றவய்யா நானு!, நொடி நேரம் பிரியாம உம்ம ஒட்டிக்கிட்டே நகமும்,சதையுமா வாழ்ந்திருக்கேன்! உம்ம புருவம் நெரியிறதுக்கும், மூக்கு சுருங்குறதுக்கும், வாய் சுழிக்குறதுக்கும் முழுசா அர்த்தம் தெரிஞ்சு வைச்சிருக்கிறவ, உம்மை பரிசோதனை செய்ய நினைப்பேனா?” – என்று மறுபடி மூக்கைச் சீந்தத் தொடங்கி விட, ‘மறுபடியும் முதலிலிருந்தா’ என்று அரண்டு போன தாத்தா, உடனடியாகக் கையைத் தூக்கி சரணடைந்து,
“ராசாத்தி, நீ இப்பிடி ராப்பகல் பாராம அழுதுகிட்டே கிடந்தேனா, எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப்புட்டேன்! கோவத்துல ஏதோ விளையாட்டா பேசுனதுக்கு இப்பிடியா?, உன் அழுகையும், கண்ணீரும் என்னை பலவீனப்படுத்தும்ன்னு தெரியாதாடி உனக்கு? அழுகையை நிறுத்து ராசாத்தி” – என்று அக்கறையோடு அதட்டல் போட, உள்ளம் பூரிக்க, சிணுங்கலோடு முகத்தைத் துடைத்துக் கொண்ட மரகதத்தைக் கண்டு,
“அப்பிடியே இதே சிணுக்கத்தோடயே போய் மஞ்ச தேய்ச்சுக் குளிச்சுட்டு, புதுப்புடவையா உடுத்திக்கிட்டு, சீவி,சிங்காரிச்சு அழகா தயாராவியாம்! மாமா போய்… ஒரு பந்து மல்லிப்பூ வாங்கிட்டு வந்து உன் கொண்டையில சுத்தி விடுவேனாம்!, நீ அந்தப் பூ மாதிரியே மலர்ந்து, விரிஞ்சு, சிரிச்ச முகமா என்னையே சுத்தி,சுத்தி வருவியாம்” -என்று கொஞ்சி விட்டு, அவர் வெட்கமாய் தலை குனிவதை வேடிக்கை பார்த்துப் புன்னகைத்துப் பின் சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த அப்புத் தாத்தாவின் முகத்தில் அநியாயத்திற்குக் கடுமை குடியேறியிருந்தது.
‘எந்த ராஸ்கோலு டா என் குடும்பத்துல கும்மியடிக்க நினைச்சது’
-எரிச்சலும்,கோபமுமாய்த் திரிந்தவர், அன்றிரவே ‘அந்த ஃபோன் நம்பர்’ குறித்து நண்பன் பரந்தாமன் கொடுத்தத் தகவல்களைக் கேட்டுக் கொதி நிலைக்கே சென்று விட்டார்.
தாமதமின்றி மறுநாள் காலையே அலெக்ஸின் வீட்டுக் கதவை தட்டியவரின் கையில் gangster சிக்க, ‘நீ என்னா டா இந்த வூட்டுக்குள்ள இருந்து வர்ற?, இந்த வூட்டுக்காரன் எங்க டா?, தலை கலைஞ்சிருக்கு! ஜொள்ளு வழிஞ்சிருக்கு! நீ இங்கேயா தங்கியிருக்கிற?, முதல்ல வெளியே வா” எனக் கூறி, தரதரவெனக் கையோடு அவனைத் தன் வீட்டுக்கு இழுத்து வந்து, அவர் செய்த விசாரணையில்,விடுத்த மிரட்டலில் பயந்து,அரண்டு உண்மையைக் கக்கியிருந்தான் gangster.
“எனக்க்க்கு எல்லாஆஆம் தெரியும் டா!, நீ ஆடலும்,பாடலும்ன்னு ஜாலி பண்றதுக்கு, என் வூட்டுக்குள்ள கச்சேரி வைப்பியா?, எவ்வளவு தைரியமிருந்தா எம் பொண்டாட்டிக்கு ஃபோனைப் போட்டு என்னைப் பத்தியே தப்பு,தப்பா சொல்லியிருப்ப?” – எனக் கேட்டவாறு கழுத்தை இறுக்கியவரின் கைகளில் கதறித் துடித்த அலெக்ஸ்,
“ஐயா,ஐயாஆஆஆ வலிக்குதுங்கய்யா!, தெரியாம பண்ணிட்டேங்கய்யா! மன்னிச்சுடுங்கய்யா” – பிதுங்கிய விழிகளுடன், கெஞ்சிக் கூத்தாடியதில், பதறிப் போய்,
“விடுங்க மாமா! ஐயோ விடுங்க! எதுனாச்சும் ஆகிடப் போகுது அந்தப் பையனுக்கு!” என்று தன் கணவரின் கையைப் பற்றியிழுத்து அலெக்ஸை ரிலீஸ் செய்த மரகதம், இன்னமும் எலுமிச்சையை இறுக்கியபடி அவனை சந்தேகமாய்ப் பார்த்து,
“தனசேகருஊஊஊஊ” என மொல்லமாய்க் கூப்பிட,
“சொல்லு மரகதம்” – கிழவன் தொண்டை நரம்பைத் துண்டிக்கப் பார்த்தும் அடங்காது, ஆர்வமாய்த் தன் மனைவியருகே சென்றவனின் பிடரியில் அடித்து, காலரைப் பற்றிப் பின்னே இழுத்து விட்டு தாத்தா,
“அடியேய்ய் கூறு கெட்டக் கிறுக்கி! அவன் உம் மாமன் மவன் பேரைச் சொல்லி உன்னைய ஏமாத்தியிருக்கான் டி!” என்று திட்ட,
நம்பாத பாவனையுடன் முகத்தைச் சுருக்கிக் கொண்ட மரகதம்,”எம் மாமன் மவனைப் பத்தி இவனுக்கு எப்பிடித் தெரியுமாம்?” எனக் கேள்வி கேட்டார்.
“பதில் சொல்லு டா” – மீண்டும் காலரைப் பற்றப் பார்த்தவரின் கரங்களிலிருந்துத் தப்பித்து பாட்டியருகே சென்று நின்ற அலெக்ஸ்,
“அதுக்குக் காரணம் இந்த சுள்ளான் தான் மரகதம்! Background verification பண்றேன்னு உன்னைச் சுத்தி,சுத்தி வந்து எல்லா டீடெய்ல்ஸையும் சேகரிச்சு சொன்னவன் இவன் தான்!” என்று ஓரமாய்ப் பம்மி நின்ற gangster-ஐக் கை காட்டியவன், பின் ஆழ மூச்சிழுத்து, அவர் புறம் குனிந்து,
“இன்னைக்கு என்ன சமையல்?, சாம்பாரா?, தினம் சாம்பார் தானா மரகதம்? அதைத் தின்னு தான் தாத்தா சல்மான் கான் மாதிரி கின்னுன்னு இருக்குறாரா?, சாயந்தரம் சாமக்கோழி ரெண்டை அடிச்சுக் கொண்டாரேன்! சுருக்குன்னு காரம் உச்சிக்கு ஏறுற மாதிரி குழம்பு வைச்சுக் கொடுக்குறியா?” என்று வாயடிக்க,
“ஐய சஷ்டி அன்னிக்கு அசைவமா?” என்று முகம் சுழித்த பாட்டியை இடித்துத் தள்ளி, அலெக்ஸின் அருகே சென்ற தாத்தா, ஆத்திரத்துடன்,
“நானே எம்பொண்டாட்டி பேரைச் சொல்லிக் கூப்பிட்டதில்ல!, நீ என்னா டா வார்த்தைக்கு வார்த்தை மரகதம்,மரகதம்ங்குற?” என நாக்கை மடித்துச் சண்டைக்குச் செல்லப் பார்க்க,
அவரைத் தடுத்து நிறுத்தி, “சும்மான்னு இருங்க மாமா! தெனம்ம்ம் கர்லா கட்டையைத் தூக்கி முறுக்கேறிப் போயிருக்கிற உடம்பு எவன் கூடயாவது மல்லுக் கட்டச் சொல்லி தீனி கேட்குது போல?, போங்க அந்தப்பக்கட்டு!” என்று திட்டியவர்,
“அவனுங்க தான் சின்னப்பசங்க, விவரம் புரியாம, விளையாட்டுத்தனமா, ஏதோ விவகாரம் பண்ணிப் போட்டாங்க! உங்க வயசுக்கு, நீங்க அவனுங்களோட சண்டை கட்டுறதா?, விடுங்க மாமா” என்று கணவனைச் சமாதானம் செய்யப் பார்க்க,
மனைவியை முறைத்தவர், “இத்தினி நாளா, காரணத்தைச் சொல்லாம, அழுது கரைஞ்சு, என்னை அலைபாய வைச்சுட்டு, இப்ப அசட்டையா.. விட்டுத் தள்ளு-ங்குறியா?, இவனுங்க ரெண்டு பேரையும் மரத்துல கட்டி வைச்சு,அடிச்சுத் தோலை உரிச்சாத் தான் என் கோவம் அடங்கும்” என வேஷ்டியை மடித்துக் கட்டியவரைக் கண்டு அலெக்ஸூம்,gangster-ரும் எச்சில் விழுங்க,
“ப்ச்,போதும் மாமா! நான் ஒரு கிறுக்கி! ஆவி,பூதம்ன்னு மூடநம்பிக்கையால இவன் சொன்னதை நம்பி, முட்டாள்தனமா அலட்டி, உம்மை கிட்ட முறுக்கிட்டுத் திரிஞ்சிருக்கேன்! சின்னப்புள்ளைக கிட்ட இப்பிடி ஏமாந்ததை நினைச்சு வெட்கக்கேடா இருக்கு” – என்றுத் தன் வளைக்கரத்தால் தலையில் அடித்துக் கொண்டு, கவலையகன்று முழுதாய் சிரிக்க,
தடிமனான தங்க வளையலும்,அதைத் தொடர்ந்து பச்சை நிற கண்ணாடி வளையல்கள் இரண்டும் சேர்ந்தெழுப்பிய ஒலியோடு, மஞ்சள் முகத்திலிட்டிருந்தப் பெரிய குங்குமப்பொட்டு மிளிர, காதை அலங்கரித்த வைரத் தோடோடு போட்டி போட்டுக் கொண்டு, ஜொலித்த பற்களுடன் சிரிப்பவரின் தோற்றம், மனதை நிறைத்து, அமைதியைக் கொடுத்ததில் அந்நியனிலிருந்து அம்பியாய் மாறிய தாத்தா,
“வெகுளியாவே இருக்கிறதால தான, இந்த முரட்டு மனுசனோட தாக்குப்பிடிக்க முடியுது உன்னால! விவரமிருக்கிறவ எவ இத்தினி வருசம் என் கூட பொழப்பு நடத்துவா?, நீயி…. இப்பிடியே இரு ராசாத்தி” – என்று கனிந்த கண்களுடன் கதை பேச,
அகண்டு நீண்ட அசுரத்தோற்றத்துடன் ஆஜானுபாகுவாயிருக்கும் அப்பு தாத்தா, வயதை மறந்து, ஈகோவைத் துறந்து, சகலமும் நீயெனப் பணிந்து, மண்டியிடாத குறையாக, நாலடியிலிருக்கும் தன் கண்ணான கண்மணியின் முன்பு தன் உயரத்தைக் குறுக்கி வளைந்து,குனிந்து, மென்மையும்,அன்பும் சொட்டிய முகத்துடன், கனிவாய்க் கேலி பேசுவது ஆச்சரியத்தைக் கொடுக்க, ஆஆஆ-வென இருவரையும் பார்த்திருந்தனர் அலெக்ஸூம், gangster-ரும்!
கணவனின் பேச்சில் கூச்சம் கொண்டு, அடக்க முடியாது குழைந்த முகத்தை மறைக்க முயன்று, இவர்களின் புறம் திரும்பிய பாட்டி,
“அவுக கிடக்காக! ரெண்டு பேரும் செத்த உட்காருங்க! நான் காபி போட்டுக் கொண்டாரேன்! இனி இது போலெல்லாம் விவகாரம் பண்ணப் படாது! ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது! விளையாட்டு வினையாகிப் போகும். என்ன?” – என்று விட்டு உள்ளே செல்ல,
இருவரும் தலையாட்ட மறந்து, அப்பு தாத்தாவின் அரியவகை சிரிப்பை வெறித்துக் கொண்டிருப்பது கண்டு, உதட்டைச் சுருக்கிய தாத்தா, gangster-ஐ முறைத்து, மடித்துக் கட்டிய வேட்டியை அவிழ்த்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு,
“காப்படி உசரத்துல இருந்துக்கிட்டு என் வூட்ல கலவரம் பண்ணப் பார்த்திருக்கியே!, சின்னப்பையன் உனக்கெதுக்கு டா இந்த சில்ற வேலை?” என்று திட்டியதும்,
பிடரியைச் சொரிந்தபடி சங்கடமாய்ப் பல்லைக் காட்டிய gangster, “அ…து, காலனியில ஆடலும்,பாடலும் நடத்த முடியலயேன்னு ஒரு ஆதங்கத்துல…” என்று இழுக்க, சட்டென இடைபுகுந்த அலெக்ஸ்,
“கமிட்டி கிட்ட பேசுங்க ஐயா! இந்த வருஷம் எந்தப் பிரச்சனையுமில்லாம ஆடலும்,பாடலும் நடத்திடலாம்ன்னு! முன்ன நின்னு நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டா, இந்த நிகழ்ச்சி நடக்க முட்டுக்கட்டையா இருக்குறது நீங்க தான்ங்குற பேர் மாறிடும்! ஏரியாவுக்குள்ள இருக்குற சின்னப் பசங்களுக்கு இதொன்னு தான ஐயா பொழுதுபோக்கு?, பக்கத்து அபார்ட்மெண்ட்லயெல்லாம் கூட விழா எடுக்குறாங்கன்னு பசங்க ரொம்ப விரக்தில இருக்குறாங்க! நீங்க தான் இதுக்கு வழி பண்ணனும்!” என்று பம்மிய குரலில் வேண்டிக் கொண்டதும்,
அவனது அடக்கத்தை ஆராய்ச்சியுடன் நோக்கியவரைக் காண்டேற்றும் பொருட்டு,
“மரகதத்துக்கிட்ட ஆலோசனை பண்ணுங்கய்யா! கண்டிப்பா மங்கலகரமான முடிவைச் சொல்லுவீங்க” என்று கூற,
“இனியொரு தடவை எம்பொண்டாட்டி பேரு உன் வாய்ல இருந்து வந்துச்சு, சங்கைக் கடிச்சுத் துப்பிருவேன்” – என தாத்தா எகிறியதைக் கேட்டபடி அடுக்களையிலிருந்து வந்த பாட்டி, தட்டை நீட்டி,
“இன்னும் உம்ம அக்கப்போர் தீரலயா?, காபியைக் குடிச்சுப்போட்டு போய், ஆகுற வேலையைப் பாருங்க மாமா! சின்னப்பையன் கிட்ட சரிக்கு,சரி நின்னுக்கிட்டு” – என்று பொருமியவாறு இவர்களருகே வர,
“நீ மரகதமணி இல்ல! மாசிலாமணி! ஐயா மனசு வைச்சு, இந்த விழாவை நல்ல படியா நடத்தித் தர நீ தான் வழி செஞ்சு கொடுக்கனும் மரகதம்” – என்ற அலெக்ஸ் “ஐயாவுக்கெல்லாம் இத்துனூண்டு டம்ளர் எப்பிடிப் பத்தும்?, அந்தப் பித்தளைச் சொம்புல நிரப்பித் தர வேண்டி தான?” என வாயாடியபடி குடித்து முடித்தான்.
தாத்தாவின் நோக்கு வர்மத்தினால், காலி டம்ளரை முற்றத்திலிருந்தத் தண்ணீரில் அலசி வைத்து விட்டு, ‘அப்புறம் நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம் சாமி’ என அப்பீட் ஆகப் பார்த்தவனைக் கையைப் பற்றி நிறுத்திய gangster, பிதுங்கிய உதட்டுடன் தாத்தாவை நோக்கிக் கண் காட்ட, கடுப்புடன் திரும்பி,
“அ….அது வந்து.. சும்மாஆஆ விளையாட்டுக்குப் பண்ணுன ஃபோன் கால் தான்! நீங்க எதுவும்…..” என இழுத்து விட்டு,
“ஆ…டலும்,பாடலும் பத்திக் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கய்யா! நீங்க ம்ம்-ன்னு சொன்னா, நாளைக்கே கமிட்டியை வீட்டுக்குக் கூட்டியாரோம்! கொஞ்சம், தயவு பண்ணுங்க” என்று கெஞ்சியதும்,
“அதெல்லாம் ஜோரா பண்ணிப்புடலாம் தம்பி! இந்த மனுசன் எந்தத் தகராறும் பண்ணாம, நான் பார்த்துக்கிடுறேன்! நீங்க ஏற்பாட்டைக் கவனிங்க! இவுகளை சரிகட்ட வேண்டியது எம் பொறுப்பு” – பாட்டி வாக்குக் கொடுத்ததும் குஷியாகி,
“ம…ர…கதம், நீ இன்றிலிருந்து மாணிக்கம் என்றழைக்கப்படுவாய்” – என அலெக்ஸ் வாயை விட,
“டேய்ய்ய்” – என நெஞ்சை விடைத்துக் கொண்டு வந்த தாத்தாவின் தோளைப் பற்றி அமுக்கிய மரகதம்,
அடித்துப்பிடித்து தப்பித்து ஓடிய இருவரையும் கண்டு கலகலவென சிரித்து, “நீங்க தூக்கி சுத்துற கர்லாகட்டையாட்டம் எந்நேரமும் கடுமையா இருக்காதீக மாமா!, கொஞ்சமாவது கருணையோட நடந்துக்கங்க! பாவம் அந்தப் பயலுக, தெருவுல எல்லாரும் ஒன்னு கூடி, சந்தோசமா நடத்துற விழா அதொன்னு தான்! அதுக்குப் போய் தடை போட்டுக்கிட்டு! நாளைக்கே போய் யார் கிட்ட பேசனுமோ பேசி, சம்மதம் வாங்குங்க!” என்று கட்டளையிட,
முறுக்கலுடன் வேட்டியை மடித்துக்கட்டிய தாத்தா, “எல்லாருக்கும் பயம் விட்டுப் போச்சு” என்று முணுமுணுப்பதையும், “என்னா சொல்றீக?” என்ற மனைவியின் கேள்விக்கு, “உன் சுருச்ச மூஞ்சியைக் கண்டதுல இருந்து, சரியாவே சோறு இறங்கல எனக்கு! அதனால இப்ப சுடச்சுட களி கிண்டி, கோழிச்சாறு வைச்சுத் தர்றியா ராசாத்தி?” என்றவரிடம், “ஐயோ இன்னிக்கு சஷ்டி மாமா”-என்று மரகதம் வாயில் அடித்துக் கொள்வதும், “புஷ்டியா இருக்கனும்ன்னா சஷ்டியெல்லாம் பார்க்கக் கூடாது ராசாத்தி” என்று அவர் பதில் கூறுவதும், அதற்கு, “நல்லா தான் பேசுறீக” என்று மரகதம் சிரிப்பதும், “ஆமா நீ மயங்கிக் கிறங்குன அதே பேச்சுத் தான்” என தாத்தா பிட்டைப் போடுவதும், “நினைப்புத் தான்” எனப் பாட்டி நொடித்துக் கொள்வதும், “இல்லைன்னு சொல்லிப் பாரேன்டி!” என்று அவர் தொடர்ந்து வம்பிழுப்பதையும் கேட்டவாறு வீட்டை விட்டு வெளியே வந்து வண்டியிலேறிய இருவரின் முகத்திலும் பற்பல யோசனைகள்.
வண்டியிலேறி வீடு நோக்கி சென்ற இருவரில் gangster,
“தாத்தாவுக்கும்,பாட்டிக்கும் கல்யாணமாகி 50 வருசமாயிடுச்சாம்-ண்ணே” என்றான்.
“இதுக்கெல்லாம் அளவில்லாத பொறுமையும், அசாத்தியமான சகிப்புத்தன்மையும் வேணும் டே”
“உங்களுக்கு அதெல்லாம் இல்லண்ணே!”
“உனக்கும் தான் லே”
“ஏன்,ஏன்,ஏன்வாம்?”
“ஏன்னா, இந்த ஃபார்முலா புருசன்-பொண்டாட்டிக்கு மட்டுமில்ல டே!, எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். உங்கப்பா-அம்மா, hunter-ன்னு உன்னைச் சேர்ந்த உறவுகள் கிட்ட நீ காட்டுனதெல்லாம் அவசரமும், வெத்து ஈகோவும் தான்!”
“சும்மா என்னையே குறை சொல்லாதீங்க! ஹாசினி பண்ணுனது மட்டும் கரெக்டா?” என்று முணுமுணுத்தவன் அன்னை விசயத்தில் குழப்பமிருந்ததில் ஒரு நொடி அமைதி காத்துப் பின்,
“நீங்க மட்டும் என்ன யோக்கியமா?, ஜெபாக்கா கத்துனா, நீங்க ஈகோ பெருகி, பதிலுக்கு எகிறுறீங்க! தாத்தாவைப் பார்த்தீங்களா?, பாட்டி கையில களிமண்ணாட்டம் குழையுறாரு” என்று வாயாடிக் கொண்டு வந்தவன், எதிரில் கட்டைப்பையோடு நடந்து வந்த வசந்தாவைப் பார்த்து அலெக்ஸின் தோளைப் பற்ற,
வண்டியை நிறுத்தியவன், சிநேக பாவனையுடன் முறுவலித்து விட்டுப் பின் திரும்பி gangster-ஐ நோக்கினான்.
சில நாட்களே ஆனாலும், அன்னையைப் பிரிந்திருந்தது ஏற்கனவே வாட்டத்தைக் கொடுத்திருக்க, இன்று நேரில் கண்டதும், பிசைந்த மனது தொண்டையை அடைக்கச் செய்ததில், மெல்ல நிமிர்ந்து அவர் முகம் பார்க்க,
அவனையே பார்த்தவாறு மூக்கு சிவந்து, அடக்கப்பட்ட அழுகையுடன், எச்சில் விழுங்கியபடி, உதடு கடித்து நின்றவரைக் கண்டு, அதற்கு மேல் தாங்காது, ஓடிச் சென்று கட்டிக் கொண்டு, தோளில் இடது கன்னத்தைப் பதித்துக் கொண்டவன், “சாரிம்மா” என்கையில் கண்ணீர் தெறித்தது விட,
அவன் தலையை வருடி, முதுகைத் தடவி, உச்சியில் முத்தமிட்டவரும், சன்னக்குரலில் மன்னிப்பு வேண்டி “அம்மா இனி அப்பிடி நடந்துக்க மாட்டேன் டா கணேஷூ” என்று கூற, அதற்குப் பதில் சொல்லாமல், அவரது துப்பட்டாவிலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டவன் விலகி நின்று,
“அப்பா ஜாப் ரிசைன் பண்ணிட்டாராம்! இன்னும் 3,4 மாசத்துல இங்க வரப் போறாராம்! இனி இங்கேயே, நம்ம கூடவே இருக்கப் போறாராம்! தெரியுமா-ம்மா?” எனக் குதூகலமாய்க் குதித்தபடிக் கேட்க,
தானும் புன்னகைத்தவர் ஆம் என்று தலையாட்டியதும், “உனக்கும் சந்தோசம் தானே?” எனக் கேட்டுக் கொண்டவன் தொடர்ந்து,
“கட்டைப்பைக்குள்ள என்ன?, நான்-வெஜ்ஜா?, சிக்கன் சுக்கா பண்ணுறியாம்மா?, எனக்கு சாப்பிடனும் போல இருக்கு” என்று கூறியபடி, அன்னையை நகர்த்தி, கூட நடக்கப் பார்க்க, பின்னிருந்து கொத்தாய் அவன் காலரைப் பற்றி நிறுத்திய அலெக்ஸ்,
“நீங்க வீட்டுக்குப் போயிட்டே இருங்கக்கா! எனக்கு இவனோட கொஞ்சம் முக்க்க்க்க்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு, நானே வந்து ட்ராப் பண்றேன்”எனப் பல்லைக் கடித்தபடி சத்தமாகக் கூறி, பின் இவன் காதில்,
“வீடியோ போட்டதுக்கு, அவ கிட்ட யாரு விளக்கம் கொடுக்குறது?, எஸ்கேப் ஆகப் பார்க்குறியா டே எஸ்கிமோ படவா”- என்று முணுமுணுத்ததில், கடுப்பும்,எரிச்சலுமாய் அவனோடு இழுபட்டான் gangster.
