8.4 சொட்டாங்கல்!

க்ரேஸ் மருத்துவமனை காத்திருப்புப் பிரிவின் கடைசி வரிசை இருக்கையொன்றில், மடியிலிருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை நடுங்கிய விரல்களால் இறுகப்பற்றியவாறு, இருண்ட முகத்துடனும், வறண்ட உதட்டுடனும், சுயபச்சாதாபத்தில் அலைபாய்ந்த விழிகளினுள் நிரந்தரமாகக் கோர்த்துக் கிடந்த கண்ணீருமாய் சோர்ந்து, தொய்ந்தமர்ந்திருந்தார் ஹம்சவர்தினி.

அக்குள் அருகே சிறிதாகத் தோன்றியிருந்தக் கட்டியொன்றை டாக்டரிடம் காட்டி மருந்து வாங்கிச் செல்லலாமென்கிற எண்ணத்தில் வந்தவளை, பரிசோதித்த மருத்துவர் Biopsy-க்கு எழுதிக் கொடுத்த போதே கலவரமுற்றிருந்தார். வலியேதுமில்லாத, அசைவில்லாத கட்டியென்பதால் பெரிதான பாதிப்பெதுவுமிருக்காது என நம்பியிருந்தவளை, அது கேன்சர் கட்டியென டாக்டர் உறுதிசெய்ததும், மொத்தமாக இடிந்து,ஒடிந்து போய் விட்டார்.

யார் துணையுமின்றி தன்னந்தனியாக வருகை தந்திருந்த பெண்ணிடம், நம்பிக்கையூட்டும் வகையில், ‘சர்ஜரி’ செய்து கட்டியை நீக்கி விடலாமென்றும், பிறகு தொடர்ந்து 3,4 மாதங்களுக்கு chemotherapy, அடுத்ததாக radiation therapy செய்து, அதன் பின் சில வருடங்களுக்கு Hormone therapy மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், நோய் பாதிப்பிலிருந்து முற்றிலுமாகக் குணமாகி விடலாம் எனவும் கூறி, இதற்கு ஆகப் போகும் செலவு குறித்தும் டாக்டர் தெரிவித்திருந்தார் தான்!

பணம் ஒரு பொருட்டில்லையென்றாலும், வயதான தந்தையையும், பள்ளி செல்லும் பிள்ளையையும் வைத்துக் கொண்டு தன்னால் இவ்வனைத்தையும் கடந்து விட முடியுமா?, சிக்கலிலிருக்கும் தன் வாழ்க்கை குறித்து ஏற்கனவே பெருங்கவலையிலிருக்கும் தந்தை இதையெல்லாம் தாங்குவாரா?

ஹாசினியைச் சிறிது நாட்கள் அவள் தந்தையிடம் அனுப்பி வைக்கலாமா?, பேத்தியை மருமகளின் Mini version ஆகக் கருதி வெறுப்பைக் கக்கும் மாமியார், கொஞ்சமேனும் இரக்கம் கொண்டு அவளை உடன் வைத்துப் பார்ப்பாரா?,

ஹாசினிக்கு அடுத்துக் குழந்தை உருவான சமயம், நடந்த மாமியார்-மருமகள் சண்டையின் போது, அந்த அம்மாள் வழக்கம் போல் ‘அது என் மாத்திரை’ ரீதியில் ‘அவன் என் மவன் டி’ என ஆடிய நடனத்திற்குப் பதிலாக, இவள் ‘இப்ப அவன் என் புருசன் டி’ என நாட்டியமாட முயன்ற வேகத்தில், ஸ்ட்ரெஸ் மிகுந்து கடைசியில் குழந்தை கலைந்து போகும் நிலை வரை சென்றது! அப்போதும் அவர், கொஞ்சமும் மனிதநேயமின்றி, ‘நீ எனக்கு செய்யும் பாவத்திற்குத் தான் உன் குழந்தை கலைந்து விட்டதெனக்’ கூறி, மேலும் சில,பல சாபங்களை வழங்கியிருந்தார்.

நம் நாட்டின் பெரும்பாலான ‘நான் பையனைப் பெத்தவ’ -state-ஐ status-ஆகக் கருதும் மாமி-மார்களின் பொதுவான சிந்தனையான, ‘மகன் காசு,பணத்திற்கும்,வளத்திற்கும் குறைவின்றி, நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும்; ஆனால்… பொண்டாட்டியுடன் மட்டும் இணக்கமாகவோ,இளக்கமாகவோ, இதயப்பூர்வமாகவோ ஒன்றி வாழ்ந்து விடக் கூடாது’ – என்பதில் மிகக் கவனமாக இருப்பவர் கமலாப் பாட்டி!

அதனால் அவரிடம் உதவி எதிர்பார்ப்பது வீண்! அன்னையை மீறி மகனால் விரலைக் கூட அசைக்க முடியாது! அவர் மூலையில் அமர்ந்து, ‘எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு,கருமாயப்பட்டு,துக்கப்பட்டு, வேதனைப்பட்டு இவனை வளர்த்தேன்’ என ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாரானால், மகன் உருகி,மருகி, ‘உன்னை மீறி என் வாழ்க்கைல எதுவுமே நடக்காதும்மா! யாராயிருந்தாலும், உனக்கப்புறம் தான்ம்மா!’ என வாக்குறுதி கொடுத்து விட்டுத் தான் ஓய்வான்!

‘மாடும்,பன்னியும் கூடத் தான் குட்டி போடுகிறது!, ஆனால், குட்டி போட முடிந்ததற்காகத் தன்னைக் கடவுளாக பாவித்துக் கொள்பவன் மனிதன் மட்டும் தான்’ – என எங்கோ கவிதை வாசித்த நினைவு அவருக்கு!

ப்ச்! அவரைப் பற்றி யோசித்து கால் காசிற்குப் பிரயோசனமில்லை! ஹாசினியை அவரிடம் விடுவது சரிப்படாது! ஆபரேஷன் சமயம் இங்கு வந்து தங்கியிருந்து, பிள்ளையைப் பார்த்துக் கொள் எனப் பாண்டியனிடம் பேசச் சொல்லி தந்தையிடம் கூற வேண்டும்.

அப்பா,ஹாசினி இருவரையும் கலவரப்படுத்தாமல், விசயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்! இது முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய வியாதி என்பதைப் புரிய வைக்க வேண்டும்! போதுமான அளவு பணம் கையிருப்பில் உள்ளது! அப்பாவிடம் அதுபற்றி விவரம் கூற வேண்டும்!

அடுத்தடுத்துத் தான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளையும்,சவால்களையும் மூளை வரிசைப்படுத்த, ஒவ்வொன்றுக்கும் பதிலைப் பொருத்திப் பார்த்துத் திணறிக் கொண்டிருந்தவரின் அடிமனது, அன்று கணவன் வாங்கித் தந்த பைக்குள் வெளிப்பட்ட பாதுஷாவின் இனிப்பை நினைவூட்டியது! வர்தினியின் ஃபேவரைட் ஸ்வீட் அது!

பாண்டியன்….. – விஷயம் கேள்வியுற்று, பயப்படுவாரா? வருத்தம் கொள்வாரா?, ப்ச்!, இருக்காது! ஒத்து வாழாத மனைவி தானே?, எப்படியோ ஒழியட்டும் என்று கூட நினைப்பானாக இருக்கும்!

ஆனால்… இன்று இந்த நொடி, அவன் தன் கையைப் பற்றிக் கொண்டு அருகிலிருந்தானானால் சற்று பலமாக இருக்குமோ?, ஹாசினியையும், தந்தையையும் மீறி ஏன் அவனைத் தேடுகிறது மனது?

ஹாசினி வயிற்றிலிருந்த போது தாங்கினானே! பிரசவத்தின் போதும்,பின்பும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டானே?, அவன் அன்னை முகத்தைத் தூக்கி வைத்தபடி, ‘இதெல்லாம் பொம்பளைங்க விசயம்!, நர்ஸ் பார்த்துக்குவாங்க!, நீ கிளம்பு’ என்று வீம்பு பிடித்த போதும், செவிசாய்க்காமல் அவளுடனே நேரம் கழித்தானே!

மனதளவில் அவனை விட்டு நீண்ட நெடு தூரம் தள்ளி வந்து விட்ட இந்நாளில், இனி ஒருமுறையேனும் அப்படியொரு ஆத்மார்த்தமான அன்பை, அக்கறையை அவனிடமிருந்துப் பெற முடியுமா?,

விழிகளில் நீர் பெருக, இமைகளை இறுக மூடி, துடித்த உதடுகளைக் கடித்து, விம்மிய நெஞ்சை அடக்க முயன்றவரின் அருகே யாரோ நெருங்கி வரும் அரவம் உணர்ந்து, சுருக்கியப் புருவங்களுடன் கண் திறந்தவரின் முன்னே, கோபமும்,ஆதங்கமுமாய் தீர்க்கமான பார்வையுடன் நின்றிருந்த தங்கப்பாண்டியன், அவரது மடியிலிருந்த ஃபைலை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறுகையால், மனைவியின் இடது கரத்தை இறுக்கமாய்ப் பற்றியெழுப்பி, “ரொம்ப நேரமா கூப்பிட்றாங்க! காதுல விழலையா?” – எனக் கேட்டவாறு டாக்டரின் அறையை நோக்கி நடக்க, நம்ப முடியா வியப்பில் விழிகளை விரித்தவாறு கணவனைப் பின் தொடர்ந்த வர்தினிக்கு, உலகமே உறைந்து போன நிலை!

ஹாசினி, உன் கவனம் எங்க இருக்கு?, நோட்ஸ் எழுதச் சொன்னா, படம் வரைஞ்சு வைச்சிருக்க?, கம்ப்யூட்டர் லேப் பீரியட்ல, கெமிஸ்ட்ரி லேப்ல நிற்குற?, க்ளாஸை கவனிக்காம தூங்கிட்டிருக்கன்னு திட்டுன தமிழ் வாத்தியாரை, எதிர்த்துப் பேசி பிரச்சனை பண்ணியிருக்க! நானும் 2,3 நாளா உன்னைக் கவனிச்சிட்டு தான் இருக்கேன்!சரியில்ல நீ!, என்னாச்சு உனக்கு?, வீட்ல ஏதாவது பிரச்சனையா?”

-staff room-மில் வைத்துத் தன்னிடம் பொறுமையாக விசாரித்தக் கணித ஆசிரியையிடம் பதிலேதும் கூறாமல், மேசையிலிருந்த சாக்பீஸை சுரண்டிக் கொண்டிருந்தாள் ஹாசினி.

அணிந்திருந்த ரெட்டைப் பின்னலின் ஒரு புறம் ரிப்பன் கழண்டிருக்க, கலைந்த முடியும், வெற்று நெற்றியும், சோர்ந்த முகமுமாய், மங்கித் தெரிந்தவளைக் கண்டபடி, கை நிறைய ரிகார்ட் நோட்டுகளைச் சுமந்து கொண்டு வந்த gangster, physics teacher-ரின் மேசை மீது வைத்து விட்டு, இவர்களைக் கடந்து செல்லப் பார்க்க,

“உனக்கு ஏதாவது தெரியுமா டா கணேஷ்?, உன் ஃப்ரெண்ட் தான?, என்னவாம் இவளுக்கு?” எனக் கேட்டார் இவனிடம்.

நின்று, தயங்கி, உள்ளங்கையைத் தேய்த்தவாறு, மெல்லத் தன் முகம் பார்த்தவனை அவள் கண்டு கொள்ளாது, திமிராய்ப் புருவம் தூக்கி, மூக்கு விடைக்க நிற்க, கடுப்பில் தானும் இறுகியவன், “இப்போ நாங்க பேசிக்கிறதில்ல மேம்” எனக் கூறித் தலையசைத்து நகர்ந்து விட்டான்.

“க்ளாஸ் டெஸ்ட்ல 9/30 வாங்கியிருக்க ஹாசினி!, ஹோம்வர்க் எதுவும் சரியா பண்றதில்ல! க்ளாஸ்லயும் அட்டென்ஷன் இல்ல உனக்கு?, திடீர்ன்னு ஏன் இந்த downfall?, என் கிட்ட share பண்ணு! நான் என்னால முடிஞ்ச விதத்துல உதவி பண்ணப் பார்க்குறேன்! ம்?” – எனத் தொடர்ந்து மேத்ஸ் மிஸ் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி,

எரிச்சலும்,அதைத் தாண்டி உள்ளே தோன்றிய நமைச்சலுமாய் விறுவிறுவென வெளியே வந்தவன், வாசலருகேயிருந்த ஜன்னலில் எட்டி,எட்டி உள்ளே நடப்பதை ஒட்டுக் கேட்க முயன்று கொண்டிருந்த தன் வகுப்பு மாணவன் ராகேஷையும், அவன் நண்பன் லோகேஷையும் கண்டு, ‘ப்ச்’ எனப் பிடரியை நீவியவாறு, இடதுபுறமிருந்த ‘water dispenser’-ரின் அருகே சென்றான்.

தண்ணீர் குடிக்கும் சாக்கில் இருவரையும் நோட்டமிட, உள்ளே ஹாசினி பேச்சு வாங்குவதைக் கேட்டு மகிழ்வுடன் குதித்தபடி ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்போடு நிற்பதைக் கண்டு, ‘ம்க்கும்,இவ உரண்டை இழுக்காத ஆளு உலகத்துல இருந்தாத் தான?, சரியான அராத்து’ என்று வெறுப்புடன் எண்ணிக் கொண்டாலும் நகராது அங்கேயே நின்றிருந்தான் gangster.

சற்று நேரத்தில் வெளி வந்த ஹாசினியிடம், “ஏன் டா லோகேஷூ, நீயெல்லாம் தூங்குறதுக்கா டா ஸ்கூலுக்கு வர்ற?, உங்கப்பா,அம்மா கஷ்டப்பட்டு காசு கட்டி உன்னைப் படிக்க அனுப்புறது, நீ க்ளாஸ் ரூம்ல சொகுசா தூங்கி எந்திரிக்கிறதுக்காகத் தானா?” – என ஜாடை பேச, கண்களை அழுந்த மூடித் திறந்து,கடித்தப் பற்களுடன் நின்று வெடுக்கெனத் திரும்பினாள் hunter.

‘செத்தான் டா சேகரு’

“என்ன டா ரிவெஞ்ஜா?” -அடிக்குரலில் கேட்டவாறு அருகே வந்தவளிடம்,

பயப்படாமல், “ஆமா” எனத் தோளைக் குலுக்கிய ராகேஷ், “நான் ப்ரோபோஸ் பண்ணுன புள்ளையே எதுவும் பேசாம கம்முன்னு இருக்கும் போது, நீ எதுக்குப் பெரிய கயாடு லோகர் மாதிரி குதிச்சிக்கிட்டு வந்த?, இதுல அட்வைஸ் வேற” என்று பல்லைக் கடிக்க,

அசராது அவனை எதிர்கொண்ட hunter, “ஹ்ம்ம்!, சரி ஓகே!, நீ தினம் ஒரு ஃபேக் ஐடில இருந்து அவ Instagram-க்கு அனுப்புற லவ் ஸ்டேட்டஸைப் பத்தியெல்லாம் மேத்ஸ் மேம் கிட்ட சொல்ல வேணாம்ன்னு நினைச்சிருந்தேன்! ஆனா, உனக்கு வாங்குனதெல்லாம் பத்தாது போல!, இப்பவே போய் எவிடென்ஸைக் காட்டி உன்னை எகிறி ஓட வைக்கிறேன்?, பேரண்ட்ஸைக் கூட்டி வைச்சு பஞ்சாயத்துப் பண்ணாத் தான் உன்னை மாதிரி பரதேசிகளுக்கெல்லாம் பயம் வரும்” என மிரட்டி, விறுவிறுவென மீண்டும் staff room-க்குள் செல்லப் பார்க்க,

செய்வதறியாது அதிர்ந்து மரம் போல நின்ற ராகேஷைக் கண்டு தலையிலடித்துக் கொண்ட லோகேஷ், அவசரமாக ஓடிச் சென்று அவளை வழி மறித்து, “ஹாசினி,ஹாசினி ப்ளீஸ்ஸ்ஸ்! அப்பிடியெல்லாம் பண்ணிடாத! அவங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்! பெல்ட்டைக் கழட்டி உரிச்சுடுவாரு அவனை! ப்ளீஸ் மேம் கிட்ட சொல்லாத” என்று கெஞ்சுவதைக் கண்டு திரும்பி, மிரட்சியுடன் நின்றிருந்த ராகேஷைப் பார்த்தவள்,

“நான் ஏற்கனவே ஏகப்பட்ட ஸ்ட்ரெஸ்ல சுத்திட்டிருக்கேன்! தேவையில்லாம நீங்களா… வாண்டட்-ஆ வந்து சிக்காதீங்க! சிதைச்சிருவேன்” – என அடிக்குரலில் அவனை மிரள விட்டு, இருவரையும் விடைத்த மூக்குடன் முறைத்து நகர்ந்து சென்றாள்.

“ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாஆஆ”-என ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டு தப்பித்ததை எண்ணி மகிழ்ந்தாலும், இவளைச் சும்மா விடக்கூடாதென்கிற முடிவுடன், இருவரும் அன்று மாலை, யாருமறியாமல், அவளது சைக்கிள் டயரில் காற்றைப் பிடுங்கி விட்டுப் பறந்திருந்தனர்.

பள்ளி முடிந்ததும் நூலகத்தில் தனது வேலையை முடித்துக் கொண்டு சைக்கிள் ஸ்டாண்டை நோக்கி வந்த gangster, இவர்களது சில்லறைத்தனத்தை கண்டு எரிச்சலாகி அருகே வருவதற்குள், இருவரும் எஸ்கேப் ஆகியிருந்தனர்.

‘ப்ச்!’ என அவளது சைக்கிளைச் சுற்றி வந்து பரிசோதித்தவன் பின், ‘நமக்கென்ன போகுது’ என்றெண்ணிக் கொண்டு, ‘நடந்தே வீடு போய்ச் சேரட்டும்!, அப்போவாவது கொழுப்பு குறையுதான்னு பார்ப்போம்’ என முணுமுணுத்தவாறு, தன் சைக்கிளை எடுத்து, மூன்றடி பெடல் செய்திருப்பான்.

பின் கடுப்புடன் நின்று அவள் சைக்கிளைத் திரும்பிப் பார்த்து, நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன், அருகிலிருந்த மரத்தடியில் ஸ்டாண்ட் போட்டு விட்டு, அவளது வருகையை எதிர்பார்த்து அங்கேயே காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் வந்தவள், மரத்தடியில் நின்றவனைக் கண்டு கொள்ளாது, தன் சைக்கிளருகே சென்றாள். டயர் ஃப்ளாட் ஆக இருப்பது புரிந்து, சுருக்கிய புருவங்களுடன் உதடு கடித்தவளிடம்,

“ராகேஷூம்,லோகேஷூம் சேர்ந்து உன் சைக்கிள்ல காத்தைப் பிடுங்கி விட்டுட்டானுங்க” என்றான் gangster.

நிமிர்ந்து அவனை சந்தேகமாக நோக்கியவள், “அவனுங்களா? இல்லை நீயா?” எனக் கேட்டதும், சுறுசுறுவென ஏற,

“ஆமா நான் தான்! அதை சொல்லிட்டுப் போகத் தான் 15 நிமிசமா இங்க காவல் காத்திட்டிருந்தேன்! உனக்கெல்லாம் பாவம் பார்த்தேன் பாரு… ப்போடி..” என்றவன், வெடுக்கெனத் தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு முன்னே நடக்க, கன்றிய முகத்துடன் பையைத் தோளில் மாட்டியவள், சோர்ந்து வடிந்த விழிகளோடு, சைக்கிளைப் பார்த்தவாறு சிலையாகி விட,

முன்னே சென்றவன் நின்று திரும்பி, இவள் புறம் நோக்கினான்.

“எப்பிடிப் போவ?” – ஈகோ ஈஃபிள் டவர் உயரத்திற்குப் பெருகி நின்றும் கூட, மனம் கேளாது, கேள்வி கேட்டான்.

“ப்ச்” – என்றவளுக்கு, ‘இவனுக்கென்ன திடீர் அக்கறை’ என்ற கோபமும்,வெறுப்பும்.

மூக்கை சொரிந்துக் கடுப்பை அடக்கியவன், யாருமற்றப் பள்ளியைச் சுற்றி நோக்கி விட்டு,

“வாட்ச் மேன் தாத்தாக்கிட்ட பம்ப் இருக்கான்னு கேட்போமா?” என்றான்.

அவனை சட்டை செய்யாது, சண்டித்தனம் செய்யச் சொல்லி உள்ளே கூவினாலும், இப்போதிருக்கும் மனநிலையில், மூளை இயங்க மறுத்ததால், வேறு வழியின்றி “ம்ம்” என முணுமுணுத்து ‘gate’ நோக்கி நடந்தாள் அவள்.

வண்டியைத் தள்ளிக் கொண்டு பின்னே நடந்தவன், வாட்ச் மேன் தாத்தாவிடம் விசாரித்தான்.

“பம்ப்பெல்லாம் இல்லியே தம்பி! ஒன்னு வைச்சிருந்தேன்! எந்த நாயோ தூக்கிட்டு ஓடிருச்சு” எனப் புலம்பியவர்,

“இங்கேயே சைக்கிளை வைச்சிட்டுப் போம்மா! நாளைக்கு எடுத்துக்குவ! வீடு தூரமா?, அப்பாவுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லிப் போயேன்” என்று அட்வைஸ் செய்ய,

“இல்ல தாத்தா! வீடு பக்கத்துல தான். நான் நடந்தே போய்க்குவேன்! சைக்கிளை இங்க நிறுத்திட்டுப் போறேன்” என்றாள் அவள்.

பின் இருவரும் சென்று அவளது சைக்கிளைக் கொண்டு வந்து தாத்தாவிடம் கொடுத்து விட்டு, பள்ளியை விட்டு வெளியே நடந்தனர்.

அவன் உடன் வரும் பிரக்ஞையின்றி, எங்கோ பார்த்தபடி அமைதியாக நடந்து வந்தவளைத் திரும்பி,திரும்பிக் கண்டவாறு சைக்கிளை உருட்டியவன், பின் எரிச்சலுற்று,

“இப்ப எதுக்குக் கப்பல் கவுந்த மாதிரி இருக்க?, அதான் குணப்படுத்திடலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்களே?, அப்புறம் என்ன கவலை உனக்கு?” என்றான்.

ஹம்சவர்தினிக்கு கேன்சர் என்ற செய்தி காலனி முழுதையும் ஒரே நாளில் எட்டியிருந்தது. எப்பவும் அவரைப் பார்த்தாலே, நெஞ்செரிச்சல் வந்தவர் போல சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொள்ளும், gangster-ரின் அம்மா கூட வீட்டிற்கே சென்று விசாரித்து, ஆறுதல் கூறியிருந்தார்.

அவன் கேள்வியில் நின்று முகம் நோக்கியவள், பின் கண்ணீர் கோர்த்து விட்ட விழிகளுடன் தொடர்ந்து நடக்க,

“ப்ச், நில்லு!” என்றவன், “இப்பிடியே 2 கிலோமீட்டர் கேட் வாக் பண்ணப் போறியா?” எனத் திட்ட,

வெடுக்கெனத் திரும்பியவள், “உன்னைக் கூட வரச் சொல்லிக் கேட்டேனா?, உன் வேலையைப் பார்த்துட்டுப் போயேன்! நான் என்னவோ பண்ணிட்டுப் போறேன்” என்று பாய, தானும் கோபம் கொண்டவன், வேகமாக சைக்கிளில் ஏறி அமர்ந்து, ஓட்டிச் சென்று விட்டான்.

அவன் உடனிருந்த போது தெரியாத தனிமை, அவன் சென்றதும் வாட்ட, விழிகளைக் கடந்து கன்னத்தில் இறங்கிய கண்ணீரை, ரோஷம் பெருகத் துடைத்தெறிந்தவாறு, ‘எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!, ஸ்ட்ரெஸ்ஸால தான் கேன்சர் வந்திருக்கும்!, அம்மாவுக்கு நிறைய ஸ்ட்ரெஸ் கொடுக்குறதே நான் தான்! அதிகமா பேசி, திட்டி, சண்டை போட்டு… அவங்க நிம்மதியில்லாம இருக்கிறது என்னால தான்!’ – என்று விசயம் கேள்வியுற்ற போது உண்டான அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாது, புரிந்துணர்வில்லாது, உணர்ச்சிப்பெருக்குடன், வயதிற்கே உரிய சிறுபிள்ளைத்தனமான சிந்தனைக் கோர்வைகளோடுத் தனக்குள் புலம்பியபடி, பையை இறுகப் பற்றிக் கொண்டு கால் போன போக்கில் நடந்தவளின் முன்னே சர்ர்ர்ரென சைக்கிளை நிறுத்தினான் gangster.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளைக் கண்டவாறு, அமர்ந்திருந்த இடத்திலிருந்துப் பின்னால் நகர்ந்து, பில்லியனில் அமர்ந்தவன், ஹாண்டில் பாரைப் பற்றியபடி,

“பையைக் கொடுத்துட்டு, நீயே ஓட்டு” என்றான் அக்கறை வெளிப்படாத முரட்டுக்குரலில்.

வழிந்த கண்ணீர் மேலும் பெருகி வர, அடக்கமுடியாது இமைகளை இறுக மூடிக் கொண்டுத் தேம்பித் தேம்பி அழுதவளை, பார்க்கத் தோன்றாமல் சங்கடம் கொண்டு, பிசைந்த மனதுடன் செய்வதறியாது தலை திருப்பிக் கொண்டவன், அவள் அழுது முடிக்கும் வரைக் காத்திருந்து.. பின், அவளை ஏறச் சொல்லிக் கைக் காட்ட,

கண்களைத் துடைத்துப், பையை அவனிடம் கொடுத்தவள் அமைதியாக ஏறியமர்ந்து பெடலை அழுத்தினாள்.

சிறு வயதிலிருந்து அவனை விட அவள் தான் அதிக உயரம். அதனால், காலனிக்குள் சைக்கிள் ஓட்டுகையில் அவ்வப்போது அவனைப் பின்னே வைத்துக் கொண்டு, அவள் தான் அழுத்திச் செல்வாள். இப்போது அவன், கிட்டத்தட்ட அவள் உயரத்தை எட்டி விட்டாலும், பழைய நினைவில் அவளிடமே ஓட்டச் சொல்லிக் கொடுத்து அவன் பின்னே அமர்ந்து விட்டான்.

மெல்ல ஊர்ந்து செல்பவளின், மூக்குறிஞ்சும் சத்தத்தைக் கேட்டு, திடீரெனத் தோன்றிய உந்துதலில்,

“எதை நினைச்சுப் பயப்படுற நீ?, உங்கம்மா ஆஸ்பத்திரில போய் படுத்துக்கிட்டா, உன்னைக் கொண்டு போய் உங்க ஆயா கிட்ட விட்ருவாங்களோ-ன்னா?” – எனக் கேட்டான்.

“………” – அமைதியைக் கடைபிடித்தவளிடம்,

“பயப்படாத! அப்பிடியெல்லாம் விட மாட்டாங்க!” – என்றான் சமாதானமாய்.

“…………..”

“பேசாம நீ ஜெபாக்கா வீட்டுக்குப் போய் இரேன்! கண்டிப்பா அந்தக்கா ஹெல்ப் பண்ணுவாங்க”

“……………” – அவளிடம் பதிலில்லையென்றதும் ஒரு நொடி மௌனம் காத்தவன் பின்,

“நோய் பாதிப்பை விட, உன்னை நினைச்சுத் தான் உங்கம்மா நிறைய கவலையிலயும், பயத்துலயும் இருப்பாங்கன்னு தோணுது! அவங்க கிட்டப் போய் ‘அதெல்லாம் தேவையில்லை! தைரியமா இருங்கன்னு’ ஆறுதல் சொல்றதை விட்டுட்டு, இப்பிடி அழுது,வடிஞ்சு half mind-ஆ திரிஞ்சா ஆச்சா?, சும்மா.. எல்லாத்தையும் போட்டு காம்ப்ளிகேட் பண்ணிட்டிருக்காத! அப்பிடியே ஃப்ரீயா விடு! தன்னால எல்லாம் சரி ஆயிடும். அது போக, விஷயம் கேள்விபட்டதுல இருந்து உங்கப்பா, உங்கம்மாவோட தான இருக்குறாரு?, இந்தப் பிரச்சனை, அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்கனவே இருந்த பிரச்சனையை overshadow பண்ணி, dissolve ஆக்கியிருந்தா??” – யோசித்து யோசித்துத் தன் மூளைக்கு எட்டியவற்றை வரிசைப்படுத்திப் பேசியவனைக் கேட்டு சட்டென ப்ரேக் பிடித்து வண்டியை நிறுத்தியவள், வியப்புடன் திரும்பி அவனை நோக்கினாள்.

லேசாக மீசை முளைக்கத் தொடங்கியிருந்த உதட்டை மடித்தவாறு, இரு புருவங்களையும் தூக்கி, கண்ணைச் சிமிட்டி “ம்??”-எனக் கேட்டவனைக் கண்டு,

“வாய்ப்பிருக்குமோ?” எனக் கேட்டாள் அவள்.

“100% இருக்கு” என்றவன், அவள் தோளைத் தட்டிச் செல்லுமாறு கூற, தொடர்ந்து வண்டியை அழுத்தியவள், இரு நாட்களாகத் தங்களோடு தங்கியிருக்கும் தந்தை, அன்னையிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை recall செய்து பார்க்க முயன்றாள்.

தாத்தா இப்படியென விசயம் சொன்ன போது, அன்னையைக் கட்டிக் கொண்டு அழுது,தீர்த்துப் பின் அனைவரும் சமாதானப்படுத்தியும், ஏன், அன்னை திட்டியும் கூட, குற்ற உணர்வில் சரியாக உண்ணாமல்,உறங்காமல் zombie ஆகத் திரிந்தவளுக்கு, வீட்டில் வந்த மாற்றம் பெரிதாய் கவனத்தை ஈர்க்காது போயிருந்தது.

லேசாக சாற்றப்பட்டிருந்த அம்மாவின் அறையில், அவருடன் ஒரே கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா, மெல்லிய குரலில் அவர் புறம் குனிந்து மன்றாடும் பாவனையுடன் பேசுவதைப் போன்ற தோற்றம் கண் முன்னே தோன்றி மறைந்ததில் பரபரப்புற்று, ‘அப்படியானால் அம்மாவும்,அப்பாவும் ராசியாகி விட்டார்களா?, இதை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டேன்?’ – என்றெண்ணியவளுக்கு உடனடியாகச் சென்று இருவரையும் காண வேண்டுமென மூளை உந்த, அவசர,அவசரமாக வண்டியை அழுத்தினாள்.

“ஏய்ய் ஏய்ய்ய் மெதுவா.. மெதுவா போ..” – பின்னால் அமர்ந்திருந்த gangster கதறியதும்,

“எருமைமாடு! எதுக்கு டா இவ்ளோ வெயிட்டா இருக்க?, கேன்டீன்ல பன்,பட்டர்,ஜாம் சாப்பிட்டு வந்தியா?, ஒரே சமயத்துல 4 தின்னுருப்பப் போல?, பன்னி மாதிரி கனக்குற!” – எனத் திட்ட,

அசந்து போய், பக்கவாட்டில் சாய்ந்து அவள் முகத்தை நோக்கியவன், அதிலிருந்த திடீர் மலர்ச்சியைக் கண்டு, எதற்கென்று புரியாவிடினும் தானும் புன்னகை கொண்டு, லேசாய் இதழ் விரிக்க, சைடாய்த் திரும்பி நோக்கியவள், நமுட்டுச் சிரிப்புடன், முழங்கையால் அவன் முகத்தில் இடித்து,

“நேரா உட்காரு டா! வண்டி சாயப் போகுது” எனப் பொரிந்தபடி மூச்சு வாங்க வேகத்தைக் கூட்ட, அவள் சொற்படி நிமிர்ந்தமர்ந்து கொண்டவனின் மனம், அதுவரையிருந்த இம்சை உணர்வு மாறி, இளகலை உணர்ந்தது.

வீடு வந்ததும், அவசரமாய் சைக்கிளை விட்டிறங்கி, அவனிடமிருந்துப் பையைப் பறித்துக் கொண்டுத் தாவி உள்ளே ஓடியவளிடம் “தாங்க்ஸ் சொல்லத் தோணுதா பாரு! பிசாசு” எனக் கத்தியவனை “உன்னை உட்கார வைச்சு ஓட்டிட்டு வந்தது நான்! உனக்குத் தாங்க்ஸ் சொல்லனுமா?, ப்போடா,போடா! “ எனக் கூவியபடி அவள் மறைந்ததும், ‘ம்க்கும்’ என முனகியபடி வண்டியை வீடு நோக்கி ஓட்டினான் gangster.

ன்னை,தந்தை வீட்டில் இல்லாததை உணர்ந்து, எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்த தாத்தாவிடம் அவள் ‘எங்கே’ எனக் கேட்க,

“இன்னிக்கு அம்மாவை அட்மிட் பண்றாங்கம்மா! அதான் ரெண்டு பேரும் முன்னாடியே போயிட்டாங்க! தாத்தா, இப்ப கிளம்பிட்டிருக்கேன். நாளைக்குக் காலைல 4 மணிக்கு சர்ஜரி. முடிஞ்சதும், அம்மா ஓகே-ன்னா நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. உனக்கு நைட் டின்னர் இருக்கு. டியூஷன் முடிச்சுட்டு சாப்பிடு. தாத்தா, 10 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்” என்றார்.

“5 மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க தாத்தா. நானும் வரேன். எனக்கும் அம்மாவைப் பார்க்கனும்” – ரிப்பன் வைத்தப் பின்னலை அவிழ்த்தபடித் தன் அறையை நோக்கி அவசரமாக நடந்து கொண்டே அவள் கூற,

“எதுக்குடாம்மா?, இது சிம்பிள் ப்ரோசிஜர் தான் டா! ஹாஸ்பிடல் தூரமா இருக்கிறதால, இன்னிக்கே அட்மிட் ஆகிடலாம்ன்னு அப்பா சொன்னாரு! இல்லாட்டி ஆபரேஷனுக்கு 3 அவர்ஸ் முன்னாடி அட்மிட் ஆனா போதுமானதா இருந்திருக்கும்! நீ நாளைக்கு ஸ்கூல் விட்டு வரும் போது அம்மாவும்,அப்பாவும் வீட்ல இருப்பாங்க டா குட்டி. நீ வரத் தேவையில்ல” – என சமாதானப்படுத்தப் பார்த்தவரிடம் அடம் பிடித்துத் தானும் மருத்துவமனைக்குக் கிளம்பினாள் ஹாசினி.

அங்கு மருத்துவமனை அறையில், விழி மூடிய நிலையில் வர்தினி படுக்கையில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்திருக்க, கொண்டு வந்தப் பொருட்களை பக்கவாட்டு மேசையில் வைத்தபடி, மனைவியிடம் “இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ளட் டெஸ்ட்க்கு சாம்பிள் எடுக்க வருவாங்களாம்” எனக் கூறிக் கொண்டிருந்தத் தந்தையின் பேச்சைக் கேட்டவாறு கதவைத் திறந்தாள் ஹாசினி.

மகளைக் கண்டதும் நொடியில் முகம் மலர, “ஹா…சினி… நீ ஏன் டா வந்த?, டியூஷன் அட்டெண்ட் பண்ணலையா?” எனக் கேட்டவாறு, நிமிர்ந்தமர்ந்த அன்னையிடம் பதில் கூறாது, நேராகச் சென்று படுக்கையில் அமர்ந்து, குனிந்து அவரை இறுகக் கட்டிக் கொண்டு, மார்பில் அழுந்த முகம் புதைத்துக் கொள்ள,

தன்னிச்சையாய் தலை வருடிக் கொடுத்தவாறு, “என்ன டா அம்மு?, பயந்துட்டியா?” – என மெல்லக் கேட்டவரை மீறி, பதறிய குரலில்,

“அம்மாவுக்கு வலிக்கப் போகுது ஹாசினி! எழுந்து உட்காரு” என அவசரமாய்க் கூறி அதட்டிய தந்தையை, அன்னையின் மார்பிலேயே ஒரு கன்னத்தைப் பதித்தவாறு, சாவகாசமாய்த் திரும்பி நோக்கியவள்,

“அம்மாவுக்கு வலிக்குதுன்னு இப்ப தான் உங்களுக்குத் தெரிஞ்சதாப்பா?” எனக் கேட்டாள்.

மகளின் கேள்வியில் முகம் கன்றினாலும், “வலிக்குறதா உங்கம்மா காட்டிக்கவே இல்ல! பாதிப்பே இல்லாத மாதிரி, கடைசி வரை என்னை விரட்டி விடத் தான் பார்த்தா!” என்று ரோஷமாய்ப் பதில் பேச,

“பாதிப்பை ஏற்படுத்தனும்ங்குறது தான் உங்க நோக்கம். என்னப்பா?” என்றாள் மீண்டும்.

“ஹாசினி…” – தாத்தா இடையில் கண்டிப்புடன் அழைக்கவும்,

“விடுங்க மாமா!, அவ என்னென்னாலும் பேசட்டும்! அவளுக்கில்லாத உரிமையா?” என்ற பாண்டியன்,

“உண்மை தான்-ம்மா!, என்னை நோகடிச்ச அத்தனை உணர்வுகளும், உங்கம்மாவையும் பாதிச்சதான்னு தெரிஞ்சுக்குற எதிர்பார்ப்பு, இல்ல, தாக்கத்தை ஏற்படுத்தனும்ங்குற நினைப்பு எனக்கிருந்தது உண்மை தான்!, சண்டை போடும் போது, ஜல்லிக்கட்டுக் காளையாட்டம் எகிறிட்டு வர்ற உன் அம்மா, சாந்தியடைஞ்சதும் சைலன்ஸை choose பண்ணி, வாய்க்குப் பெருசா பூட்டைப் போட்டுக்கிட்டா.” என்றார்.

“அப்போ அம்மா தான் தீயசக்தி! நீங்களும், உங்க மதர் மேரியும் தூயசக்தி”

“இங்க இல்லாதவங்களைப் பத்தி எதுக்குப் பேச்சு அம்மு?” – கெஞ்சலாய்க் கேட்டவரை நக்கலாய்ப் பார்த்து,

“அதான, நீங்க திருந்திட்டாலும்ம்ம்ம்!, இதெல்லாம் சும்மா… அம்மா மேல உள்ள பரிதாபத்தால வந்த டெம்ப்ரரி இளக்கம்! என்னப்பா?, இல்ல, பொண்டாட்டி ஹாஸ்பிடல்ல ஆபரேஷன்னு படுத்தும் கூட, இந்தப் பாண்டியன் அம்மாவைத் தாண்டி போகாம, அடமா நின்னுட்டானே-ன்னு ஊர் உங்களைக் காறித் துப்பும்! அதனால. என்ன?” எனக் கடுப்பும்,வெறுப்புமாய் வார்த்தைகளைத் துப்ப,

நிதானமாய் நிமிர்ந்து மகளின் முகம் பார்த்துத் தலை வருடிய தந்தை, “நீ,நான்,அம்மா 3 பேரும் இருக்கிறதுக்கு அப்பா, உன் ஸ்கூல் பக்கமா வீடு பார்த்திருக்கேன் அம்மு! அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியானதும் அங்க ஷிஃப்ட் ஆயிடலாம்” என்றார் நேரடி பதிலாக.

ஆச்சரியத்தில் விழி விரிய, சட்டெனத் திரும்பி அன்னையை நோக்கியவள், அவர் முகத்திலிருந்த இணக்கத்தில் அதிர்வாய் மலர்ந்து, தந்தையை வியப்பு குறையாது நோக்க, மெலிதாய்ப் புன்னகைத்த பாண்டியன், ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த,

யோசனையாக இங்குமிங்கும் நகர்ந்த கருமணிகளுடன் தரையை வெறித்தவள், “அப்போ பா..ட்….டி?” என மெல்லிய குரலில் இழுக்க,

“பாட்டிக்கென்ன?, அவங்களோட வீட்ல நிம்மதியா இருப்பாங்க” என்றார் அவர் பட்டும் படாமல்.

“தனியாவா?” – அதிர்ச்சியோடு கேட்டவளிடம்,

“தாத்தாவும் தனியா தான இருக்காரு?” எனக் கேட்டு, மகளை மிரள விட்டார் மங்குனி பாண்டியன்.

ஆச்சரியம் தாங்காது எழுந்து, தந்தையின் மடியிலமர்ந்து, அவர் தோளைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டு, “பாட்டி எப்பிடிப்பா ஒத்துக்கிட்டாங்க?, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணல?” என விசாரிக்க,

மகளின் கூந்தல் சுருளை காதோரம் ஒதுக்கியபடி, “ப்ச்” எனத் தோளைக் குலுக்கினார் தந்தை.

பிளந்த வாயோடு அவரை ஆஆஆ-வெனப் பார்த்தவள், “உங்களை கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, சிரமப்பட்டு,பாடுபட்டு, அடிபட்டு, மிதிபட்டு வளர்த்தாங்கப்பா பாட்டி ” – என அப்பாவியான முகத்துடன் கமலத்தின் குரலில் கூற, மகளின் நக்கல் கண்டு சிரிப்பு வந்தாலும் அடக்கி,

“அதெல்லாத்தையும் ‘பட்டு’ நானும் உங்களை வளர்க்கனுமே ஹாசினி மேடம்?” எனக் கேட்டதும், திகைப்புடனே அவரின் இரு கன்னங்களையும் இழுத்துப் பிடித்து,

“எப்பிடிப்பா???, இவ்ளோஓஓஓ சேஞ்ச்??, நிஜமாவே நீங்க கமலா மவன் தங்கப்பாண்டியன் தானா?” என வினவ,

இருபுறமும் ஆட்டி, மறுத்துத் தலையசைத்துத் தானும் மகளின் கன்னங்களை இழுத்துப் பிடித்தவர், “இல்ல்ல்ல்ல!, நான் ஹாசினியோட அப்ப்ப்ப்பா” என அழுத்திக் கூற,

சிரிப்பும்,மகிழ்ச்சியுமாய் பெரிதாய் இதழ் விரித்தவள், “அப்போ ஹம்சவர்தினிக்கு??” எனக் கேட்டாள்.

மகளின் கைகளிலிருந்துக் கன்னத்தை விடுவிக்காமல், திரும்பி படபடப்புடன் தலைகுனிந்தவாறு, அணிந்திருந்த ஆடையின் நூலைப் பிரித்துக் கொண்டிருந்த மனைவியை நோக்கி விட்டு,

“அதை ஹம்சவர்தினி தான் சொல்லனும்” எனக் கூறவும்,

தானும் திரும்பி அன்னையைப் பார்த்தவள், “ஹம்சவர்தினிக்கு ரோஷம் ஜாஸ்ஸ்ஸ்ஸ்தி! சமாளிக்குறது ரொம்ம்ம்ம்பக் கஷ்டம்ப்பா” என்றாள்.

“அதெல்லாம் அவ ஹஸ்பண்ட்க்கு பழக்கம் தான்! பார்த்துப்பாரு! ஏன்னா, அவரு ஒரு இடிதாங்கி”

“ஆமாமா! கமலாப் பாட்டி இடிக்குற இடிக்கே, ‘Gun’ மாதிரி நிற்குறவருக்கு, ஹம்சவர்தினியோட கோபமெல்லாம் ஒரு பொருட்டா?” எனக் கேலி செய்ய,

“கிண்டலாப் போச்சா உனக்கு?, அப்பாவையே mock பண்ணுவியா” – என அவள் கழுத்தில் கிச்சு,கிச்சு மூட்டியவரிடம், கூச்சத்தில் சுருங்கி,சிணுங்கி, கிளுக்கிச் சிரித்தவள், தந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு,

“இந்த மாற்றம் பர்மனண்ட் தானப்பா?, திரும்பப் பாட்டி drama பண்ணுனாலும், எங்களை விட்டுட மாட்டீங்க தான?” என மெல்லிய குரலில் கேட்க, மனம் வெதும்பி, உயிர் உருகினாலும், சிரிப்புடனே,

“இதுக்கு முன்னாடி எப்போ டா விட்டேன்?, நீங்க எப்பவும் என் கண்ணெதிர்ல, கைக்குள்ள தான டா இருந்திருக்கீங்க? ம்ம்?, நீ உணர்ந்ததில்லையா?” எனக் கேட்க,

“ம்ஹ்ம்ம்ம்! நீங்க உணர வைக்க முயற்சிக்கவே இல்லப்பா!, கூடவே இருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்ன்ற ஆசையும்,கனவும் மட்டும் தான்ப்பா நிறைய,நிறைய இருந்துச்சு! இனியொரு தடவை நீங்க ஏமாத்துனீங்கன்னா, என்னால தாங்கமுடியும்ன்னு தோணலப்பா” எனவும்,

மகளிடமிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், தான் வாழ்வில் கேவலமாய்த் தோற்று விட்ட உணர்வை, அதிகமாய்த் தோற்றுவிக்க, முகம் மாறி, விழி கலங்க,

“அ..அப்பாவாலயும் இனித் தாங்க முடியாது போல டா அம்மு!” எனக் கரகரத்தக்குரலில் கூறியதும், அவர் கலங்குவது பொறுக்காமல்,

“அம்மா இப்பிடி வந்து உட்கார்ந்துட்டு, நம்மளை ரொம்ப வீக் ஆக்கிட்டாங்கப்பா” – என்று அன்னையையும் பேச்சில் உடனிழுத்தவளை,

“அவ எப்பவும் அப்பிடித் தான்! என்னை வீக் ஆக்கி பார்க்குறதுல தான் சந்தோசம் அவளுக்கு” – என்று மகளின் போக்கில் சென்றவரிடம்,

“இல்லேன்னா நீங்க அவ்வளவு சீக்கிரம் இறங்கி வந்துடுவீங்களா?”

“அவ கிட்டக் கேளு! நான் இதுக்கு முன்னாடி இறங்கி வந்ததில்லையான்னு”

“ம்மாஆஆ” – புகார் கொடுக்கும் குரலில் ஹாசினி நீட்டி அழைக்கவும்,.

தந்தை,மகள் உரையாடல் மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை, நிறைவைக் கொடுத்ததில், பதில் சொல்லத் தோன்றாது, கீழிறங்கிச் சாய்ந்து, புன்னகையுடனே விழிகளை மூடிக் கொண்ட வர்தினியைக் கண்டு,

“சிரிக்குறாங்கப்பா” என்றாள் ஹாசினி மெல்ல.

“ம்ம்! இனி சிரிச்சுட்டே தான் இருக்கப் போறா”

“நிஜமாவாப்பா?”

“அம்மா மட்டுமில்ல! ஹாசினியும் தான்!”

“நீங்க?”

“நானும் தான்”

“பாட்டி???”

“டவுட் தான்”

“ஹேய்ய்ய்ய்ய் டூட்!!! பரவாயில்லையே! உண்மையை ஏத்துக்க ஆரம்பிச்சிட்டீங்கப்பா! What an improvement!” எனப் பெரிதாய்க் கூவிச் சிரித்தவள், தந்தையின் விரிந்த புன்னகையைக் கண்டு, உவகை பெருக, அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு, தோள் சாய்ந்து, “வீ மிஸ்ட் யூ-ப்பா” என அடிக்குரலில் கூறி, கலங்கிய விழிகளை அவரது சட்டையில் துடைத்துக் கொள்ள,

பலமாய் அடித்துத் தவித்த இதயத்துடன், தொண்டைக்குழி அவஸ்தையாய் ஏறி இறங்கியதில், மகளின் தலையில் கன்னத்தைச் சாய்த்து விழிகளை மூடித் திறந்தவரின் பார்வை, மனைவியை அடைய,

ஹாசினியின் வார்த்தைகளைத் தானும் முகத்தில் பிரதிபலித்தபடி கண் மூடியிருந்த வர்தினியின் இமையோரம் வழிந்த ஒற்றை நீர்த்துளியைக் கை நீட்டிப் பெருவிரலால் துடைத்தத் தங்கப்பாண்டியனுக்கு 2,3 நாட்களுக்கு முன் அலெக்ஸோடு நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

உங்கள் கருத்துகளைப் பகிர...