8.5 சொட்டாங்கல்!
“கங்க்ராஜூலேஷன்ஸ் மிஸ்டர்.பாண்டியன்! சீக்கிரமே உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கப் போகுது. யெஸ்ஸ்ஸ்! பொண்டாட்டி பரலோகம் போயிட்டா, ‘புதுப் புருஷன்’ டைட்டில் தன்னாலேயே உங்களைத் தேடி வந்துடும்! அப்புறம் என்ன, ஒரே மஜா தான்! நியூ லைஃப்! நியூ வைஃப்! நியூ வைப்ஸ்ன்னு குஜாலா இருக்கலாம்”
-அதீத உற்சாகத்துடன் அளவுக்கதிகமாகக் கூவியவனைக் கேட்டு எதிர்ப்புறம் கோபத்தில் கொதித்துப் போன பாண்டியன்,
“யார்றா நீயி? எழவெடுத்தவனே! எதெதுல கலாய்க்குறதுன்னு விவஸ்தை இல்லையா டா? பரதேசி! என்ன பேச்சு பேசுற?, ****** நீ யாருன்னு கண்டுபிடிச்சேன்! குரவளையை நசுக்கிக் கொன்னுருவேன் சொல்லிட்டேன்”
-கெட்ட,கெட்ட வார்த்தையில் கண்டபடி பேசியதில் சுறுசுறுவெனக் கோபம் ஏற,
“பார்றாஆஆ! அம்மா முந்தானைக்குள்ள முடங்கிக் கிடக்குற முதுகெலும்பில்லாத முண்டத்துக்குள்ளேயும் ஒரு முரட்டு அந்நியன் ஒழிஞ்சிருக்குறதை!, யோவ்வ் கண்ணாடி, கலாய்க்குறதுக்கு நீ என்ன என் கள்ளக்காதலியா?, பரதேசம் போக வேண்டிய பன்னாடை, உனக்கெல்லாம் எதுக்குய்யா சம்சார சங்கீதம்?, உங்கம்மாளோட காசி,ராமேஸ்வரம்ன்னு எங்கேயாவது ஆன்மீகச் சுற்றுலாவுக்குப் போய்ட்டு, இந்த அற்ப வாழ்க்கையை ஆத்தாளுக்கே அர்ப்பணிச்சிருக்க வேண்டி தான?, கோழைக் கூமுட்டை! கெட்ட வார்த்தை பேசுற நீயி??” – என்று அலெக்ஸ் பாய,
அவன் பேசியப் பேச்சில் கைகளை உதறியவாறு அவனைச் சுற்றி வந்து தடுக்க முயன்ற ஜெபா, இறுதியில் தோற்று, ஸ்ட்ரெஸ் மிகுந்துத் தலையில் கை வைத்தபடி மரபெஞ்சில் ஓய்ந்தமர்ந்து விட்டாள்.
“இதோ பாரு, அநாவசியமா பேசாத! யார் நீ?, எதுக்காக எனக்கு அப்பிடி மெசேஜ் அனுப்புன?, யார் உன்னை அனுப்ப சொன்னது?, நீ சொன்ன விசயம் பொ….பொய் தானே?” – என ஒரு நொடி தடுமாறிய பாண்டியன் பின், முற்றிலும் இறங்கிய குரலில், “நீங்க யாராயிருந்தாலும் பரவாயில்ல, விளையாடாம உண்மையைச் சொல்லுங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச,
“ஹ்ம்ம்ம்ம், இப்பிடி மரியாதையா பேசுனா, நானும் மதிச்சு பதில் சொல்லுவேன்! அதை விட்டுட்டு கோவப்பட்டு கெட்ட வார்த்தை பேசுனா எப்பிடி?, தப்பு ப்ரோ!, அது போக, அம்மாக் கோண்டுவான உமக்கு, ஆத்திரமெல்லாம் எதற்கு? ம்ம்?” – என அலெக்ஸ் தன் கலாயைத் தொடரவும், ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பாண்டியன்,
“வாயைக் குறைச்சிட்டு, விசயத்தைச் சொல்லு” – எனச் சீறினார்.
“’வாயைக் குறை’ -ஹ்ம்ம்!, இந்த வார்த்தையை கமலாம்மா கிட்டயும் யூஸ் பண்ணியிருந்தீங்கன்னா, உங்க வாழ்க்கையில நிறைய பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம் பாண்டியன் ப்ரோ” – என்று மீண்டும் அவரை சுற்றலில் விட்டான் அலெக்ஸ்.
அவன் பேச்சைக் கேட்டு, நறநறவெனக் கடித்தப் பற்களுடன் கண்களை இறுக மூடித் திறந்த பாண்டியன்,
“உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” எனக் கேட்டார்.
“இனி தான் பண்ணிக்கப் போறேன்! ஏன்?”
“கல்யாணம் பண்ணிப் பாரு தெரியும்!, இந்தப் பக்கம் ஏத்துக்கிட்டுப் பேசுறதா, அந்தப் பக்கத்தைத் தாங்கிக்கிட்டு நிற்கிறதான்னு புரியாம தவிச்சுக்கிடக்குற என் நிலைமை”
“இந்தப் பக்கத்தை ஏத்துக்குவீங்க, அந்தப் பக்கத்தைத் தாங்குவீங்கன்னு ஏன் ப்ரோ அதுங்க-கிட்ட expectation செட் பண்ணுனீங்க?, உங்க தப்பு தானே அது?”
“ப்ச்! சொல்றது ஈசி! அனுபவிக்கும் போது தான் இந்தச் சிக்கல் புரியும்” – சலித்த குரலில் கூறியவரிடம்,
“கமலாம்மா,வர்தினி அக்கா,ஹாசினி இவங்க எல்லாரையும் தாண்டி, உங்களுக்கு, நீங்க ரொம்ப முக்கியம் ப்ரோ!, உங்க மனநிம்மதி முக்கியம்!, அதைத் தக்க வைச்சுக்க இதுவரை என்ன முயற்சி பண்ணுனீங்க?, அம்மா தான் முக்கியம்ன்னு இத்தனை வருசமா பொண்டாட்டியை ஒதுக்கி வைச்சிட்டீங்க சரி!, இதனால உங்களுக்கு நிம்மதி,சந்தோசம்,திருப்தி இது மூனுல ஒன்னாவது கிடைச்சதா ப்ரோ?, ஆனா கமலாம்மாவுக்கு இது மூனுமே கிடைச்சிருக்கும்! அது வேற விசயம்!” – என அவன் சீண்ட, எதிர்பார்த்தவாறு,
“எங்கம்மாவைப் பத்தி பேசாத! அவங்களை என்னால, எதுக்காகவும், யாருக்காகவும் விட்டே கொடுக்க முடியாது! அவங்க நிம்மதியும், சந்தோசமும் தான் எனக்கு ரொம்ப முக்கியம்” – என்று கொதித்தார் பாண்டியன்.
“அதுக்கு நீங்க, உங்களைத் தான் பலி கொடுக்கனும்! யாரோ ஒரு குணசீலனுக்குப் பிறந்த ஹம்சவர்தினியை கழுவேத்தக் (கழுவேற்ற) கூடாது! ஹம்சவர்தினி பிறந்தப்ப, யாருமே அது கிட்டப் போய், ‘இந்தாரும்மா எதிர்காலத்துல கமலான்னு உனக்கொரு மாமியார் வரும்!, அது சாகந்தட்டிக்கும், அது காலைக் கழுவி விட்டுக்கிட்டே நீ உன் வாழ்க்கையை ஓட்டனும்! இடையில உனக்கு சாவு வந்துட்டா, பொத்துனாப்புல போய்ச் சேர்ந்திரனும்! ஆக மொத்தம் நீ இப்ப பொறப்பெடுத்திருக்கிறதே கமலாவோட வன்மத்தையும், வக்கிரத்தையும் பொறுத்துக்கத் தான்னு’ சொல்லிக் கொடுக்கவே இல்ல! கமலாம்மாவைக் கண்ணுக்குள்ள வைச்சுப் பொத்திப் பாதுகாத்துப் பூஜை பண்ணுறதெல்லாம், அது பெத்த மகனான உங்க கடமை ப்ரோ!, உங்க பொண்டாட்டிக்கும், அவங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல”
“அப்போ என்னைச் சேர்ந்து வர்றவளுக்கு, என்னைச் சார்ந்த கடமையில்லையா?” – ரோஷமாகக் குறுக்கிட்டவரிடம்,
“வர்றவ உங்களைச் சேர்ந்தவ-ன்ற நினைப்பு கமலாம்மாவுக்கு இல்லையே ப்ரோ! அவங்களைப் பொறுத்தவரை நீங்க வேற, அவங்க வேற! இது புரியலைன்னா கூடப் பரவாயில்ல! அறிஞ்சும்,புரிஞ்சும் கண்டுக்காத மாதிரியே இருக்குறது தான் ஆண்மைத் தனம். இல்லை ப்ரோ?”
“ரொம்பப் பேசாத” – அதுவரையிருந்த சீற்றம் குறைந்து, குரல் மங்கியது பாண்டியனுக்கு.
“என்னான்னு சொல்லி கமலாம்மா ஏத்தி விடும்?, பொண்டாட்டி கூட இணக்கமா வாழ்றவனெல்லாம் பொண்டாட்டி தாசேன்!, புள்ள பெத்துக் கொடுக்குறதுக்கும்,பொங்கிப் போடுறதுக்கும் மட்டும் பொண்டாட்டியை யூஸ் பண்ணிக்கிட்டு, எதிர்த்தெதுவும் பேசுனா அவளை தூக்கிப் போட்டு மிதிச்சு, வீட்டை விட்டு எவன் வெளியே துரத்துறானோ, அவன் தான் ஆம்ம்ம்ம்ம்பளைன்னு சொல்லி வளர்த்துச்சா?”
“அவங்க அப்பிடிப்பட்ட ஆள் கிடையாது!” – மியூட் மோடில் கூறியவரிடம்,
“ஆமா, வாயைத் திறந்து சொல்ல மாட்டாங்க! ஆனா, அந்த நினைப்பு உங்களுக்குள்ள உருவாகுற அளவுக்கு காரியம் பண்ணி விட்ருவாங்க. அதான?” – என வம்பு செய்தான் அலெக்ஸ்.
“இதோ பாரு, வர்தினியும் ரொம்ப அப்பாவி கிடையாது! எங்கம்மாவோட சரிக்குச் சரியா மல்லுக்கு நின்னு, எல்லாப் பிரச்சனையையும் பெருசாக்கி, எங்க வாழ்க்கையில நிம்மதி பறி போனதுக்கான பெரிய பங்கு அவளோடதும் தான்!”
“இதென்ன வம்பா இருக்கு?, இவுரு அடிக்கிறவனைத் தடுக்கவும் மாட்டாராம்! அடி வாங்குறவனைக் காப்பாத்தவும் முயற்சி பண்ண மாட்டாராம்! வலியில துடிக்குறவன் வாயை மூடிட்டு இருக்கனும்ன்னு நினைக்குறது என்னாய்யா லாஜிக்கு?”
“…………..” – அவனது லாஜிக் ஆன கேள்வியில் பதிலற்று ஊமையாகிப் போனவரிடம்,
“அவங்க பொறுத்த்த்த்துப் போய் வாழனும்ங்குற அளவுக்கு நீயென்ன பெரிய பருப்பா ப்ரோ?, உத்தியோகமும்,காசு,பணமும் தான் புருசலட்சணம்ங்குறாய்ங்க! நீயென்னா அப்பிடி உத்தியோகத்துலயும், காசு,பணத்துலயும் பல்கிப் பெருகி வளர்ந்து,செழிச்சு நிற்குற?, உன் வூட்டு வாசல்ல 2 BMW, 3 Benz, 4 lamborghini-யை நிறுத்தி வைச்சுக்கிட்டு ‘எனக்குப் பொண்டாட்டியா வர்றவ கமலாம்மாவைப் பொறுத்துப் போகனும்! யோ-யோ-ன்னு’ கெத்து காட்டுனா பரவாயில்ல!, இடுப்புக்குக் கீழே எக்ஸ்ட்ராவா இருக்குற ரெண்டு இஞ்ச்சைத் தவிர நான் ஆம்பளைன்னு காலரைத் தூக்கி விட ஒரு ம*ரும் இல்ல நம்ம கிட்ட! அப்பிடியிருக்கையில இம்பூட்ட்ட்டு expectation வைச்சுக்கிறதெல்லாம் தேவையா ப்ரோ!,
ஆணாக இருக்குறதாலயே நீங்க இந்த உலகத்தை அடக்கி ஆளனும்ன்னு நினைக்குறீங்கன்னா, போய் புயல் காத்தை புறங்கையால நிறுத்துங்க! வெள்ளம் வர்றப்ப…. வெறுங்காலால அணை கட்டுங்க! ஜிபூம்பா போட்டு நாட்டுல பஞ்சத்தைத் தீர்த்து வைங்க! அதை விட்டுப் போட்டு பொண்டாட்டியை மட்டும் காலுக்குக் கீழ வைச்சுக்கனும்ன்னு நினைச்சா எப்பிடி ப்ரோ?
இந்த மாதிரியான superpower-எல்லாம் உங்களுக்கு இல்லங்குறப்போ, நீங்க afterall ஒரு மனித உயிர்தான்-ங்குற புரிதலோட, ஆணவத்தையெல்லாம் விட்டொழிச்சுட்டு, தயவு செஞ்சு இறங்கி வாங்க ப்ரோ” – என நக்கலும்,கிண்டலுமாய் அலெக்ஸ் அவரது தவறைச் சுட்டிக் காட்டி, குத்திப் பேச,
“………….” – அமைதியைத் தொடர்ந்தவரிடம்,
“எங்கம்மாவை மீறி எப்பிடி வர்றது-ங்குறீங்களா?” – எனக் கேட்டவன்,
“ப்ச்” – என உச்சுக் கொட்டிப் பெருமூச்சை வெளியிட்டவரைக் கண்டு, நிதானமான குரலில்,
“மனுசனை விடக் கஷ்டப்பட்டுத் தான் காக்கா,குருவியெல்லாம் புள்ள வளர்க்குது ப்ரோ! ரெக்கை முளைக்குற வரை அழகா ட்ரைன் பண்ணுது! குட்டி பறக்கத் தொடங்குனதும் கடமை முடிஞ்சிடுச்சு டா ஐயா-ன்னு அடுத்த ஜோலியைப் பார்க்கக் கிளம்பிடுது!
மனுசப்பய மட்டும் தான், ரெக்கை முளைச்சு சுயமா பறக்குறதை சுயநலமா, குற்றமா பார்க்குறது! ‘உனக்கு ரெக்கை முளைக்கனும்! ஏன்னா, அது தான் என் வளர்ப்போட வெற்றி! அதே நேரம், நீ என்னைத் தாண்டி, என்னை விட்டு, பறக்கவும் கூடாது. முளைச்ச ரெக்கையை மூனா மடிச்சு உள்ள செருகிக்கிட்டு, மூலையிலேயே முடங்கிக் கிட’ – அப்பிடிங்குற மனநிலை இயற்கைக்குப் புறம்பானது இல்லையா ப்ரோ?,
பூமியில பிறந்த எல்லா உயிரினமும் துணை தேடுறதும்,இனப்பெருக்கம் பண்ணுறதும் ரொம்பச் சாதாரண விசயம், without any preconditions & complications! நாம கல்யாணம்ன்ற பேர்ல இந்த process-ஐ எக்கச்சக்க முடி போட்டு சிக்கலாக்கி வைச்சதுமில்லாம, பொம்பளைங்களால மட்டும் தான் இந்த சிக்கலை அவிழ்க்க முடியும்ங்குற மாதிரியான எண்ணத்தை உண்டாக்கி, எல்லாத்தையும் அவங்க தலையில கட்டிட்டு, நாங்க சும்மா, கயித்தைக் கையில வைச்சுக்கிட்டு மாட்டை ஓட்டுறதாட்டம் உங்களை மானிட்டர் மட்டும் தான் பண்ணுவோம்ங்குறது தப்பு ப்ரோ!
நீங்க இறங்கி வந்து, நிதர்சனத்துக்குள்ள நின்னு, துணையோட கை கோர்த்து இதுக்குத் தீர்வு கண்டுபிடிக்கனும்! அதை விட்டுட்டு ‘இந்தக் கல்யாண வாழ்க்கையை சரியா எடுத்துட்டுப் போறதுக்கான முழுப்பொறுப்பும் உன்னோடது தான்! நீ அனுசரிச்சு,அடங்கிப் போய், வளைஞ்சு கொடுத்து, இதமா, பதமா, இன்முகமா எல்லாத்தையும் வழி நடத்திக் கொண்டு போயிருன்னு’ பொண்ணை மட்டும் பலி கொடுக்குறது நியாயமே இல்ல ப்ரோ”
-என்று அலெக்ஸ் கூறியதும், விரக்தியும்,வெறுப்புமாக வெறுமையுடன் செல்லும் தன் வாழ்வு தந்த பற்றற்ற நிலையோடு, அவர் கலங்கிய குரலில்,
“இந்த உலகத்துலயே என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச,புரிஞ்ச ஒரே ஆளு தம்பி அவ!, இணைஞ்சு,இழைஞ்சு ரெண்டு பேரும் அருமையா ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கோம்! என் அன்பு,ஆசாபாசம், விருப்பு,வெறுப்புன்னு அத்தனையும் அறிஞ்சு வைச்சிருக்கிறவ!, அவளோடான பிரிவு என்னை செயலற்ற நிலையில நிறுத்தி வைக்கும்ங்குறதும் அவளுக்கு நல்லாவேத் தெரியும்! மூனாவது மனுஷிக்காக.. நாம வாழ்ற நாட்களை இழக்குறதான்னு எனக்கிருக்கிற விரக்தியும் அவளுக்குப் புரியும்!,
இப்படிப்பட்டவ, என்னை நம்பி, எனக்காக.. என் அன்புக்காக.. எங்க நிம்மதிக்காக கொஞ்சமே கொஞ்சம் இளகி,விட்டுக் கொடுத்து, இறங்கி வரக் கூடாதா?, எங்கம்மாவை consider பண்ணாம, காதுலயே வாங்காம, எனக்காக என் கூட வாழக் கூடாதா?,
எங்கம்மாவை என்னால என்ன பண்ணிட முடியும்?, அவங்க மனநிலையும், செய்யுற வில்லத்தனமும் எனக்குப் புரியாதுன்னா நினைக்குறீங்க?, ஆனா என்ன பண்ணுறது? இந்த ஜென்மத்துல அவங்க தான் எனக்கு அம்மா! என் வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருக்காங்கன்றதுக்காக நான் அவங்களைக் கழுத்தை நெரிச்சுக் கொன்னுட முடியுமா?, இல்ல, விலக்கியோ,ஒதுக்கியோ வைக்கத் தான் முடியுமா?, அவங்க வாயை அடைக்கிறதுக் கஷ்டம் தம்பி! அவங்களை மாத்துறது அசாத்தியமான காரியம்!,” என்றவர் இடை விட்டு,
நெகிழ்ந்த மனது உண்மையைக் கக்கி விட்டதில் சுதாரித்து, “அதுக்காக அவங்களுக்கு என் மேல பாசமில்லன்னு அர்த்தமில்ல.” – என்று கம்பி கட்டுகையிலேயே, இடைபுகுந்து,
“ப்ரோ ப்ரோ” என எரிச்சலில் நெற்றியைத் தேய்த்துக் கொண்ட அலெக்ஸ் பின், “நீங்க உங்க வீட்ல பாசமா ஒரு நாய் வளர்க்குறீங்கன்னு வைச்சுக்கோங்க! உங்களைப் பார்த்தாலே வாலாட்டிக்கிட்டு பாய்ஞ்சு வந்து, ஆக்ரோஷமான அன்பை வெளிப்படுத்தி, நாக்கால எச்சில் பண்ணிக் கொஞ்சிக் குலாவி உங்களையே உலகமா நினைச்சு சுத்தி சுத்தி வர்ற செல்ல்ல்ல நாய் அதுன்னு வைங்க!,
ஒரு நாள் நீங்க, புதுசா ஒருத்தரை உங்க வீட்டுக்குக் கூட்டி வர்றீங்க! பழக்கமில்லாத ஆளைப் பார்த்ததால அந்த நாய் வெறித்தனமா குரைச்சு, வந்தவங்க மேல பாய்ஞ்சு கொடூரமா கடிச்சுக் குதறிடுதுன்னு வைங்க! என்ன செய்வீங்க?
இது பாசமான நாய் தான், என் மேல ரொம்ப அன்பா இருக்கும், உன் மேலயும் கூட எதிர்காலத்துல அன்பு காட்ட வாய்ப்பிருக்கு! அதனால, அது உன்னை ஏத்துக்கிற வரை, எனக்காக… அது எவ்ளோ குரைச்சாலும், கடிச்சாலும் பொறுத்துக்கிட்டு நீ இந்த வீட்ல என்னோட இரு அப்டின்னு இரக்கமோ,மனசாட்சியோ இல்லாம.. கேட்க முடியுமா உங்களால?, இல்ல, பொறுத்துக்கிட்டாத் தான் நீ என் கூட இருக்க முடியும்ன்னு கட்டாயப்படுத்த முடியுமா?,
நாய் மேல காட்டுற எம்பதியை, கடி வாங்குனவன் மேலக் காட்ட வேணாமா?, உங்க கிட்ட பாசமா பழகுற நாய், நீங்கக் கூட்டி வர்றவங்களையும் அதே அன்போட பார்க்கும்ன்னு நினைக்குறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்?, கடிக்கும்ன்னு தெரிஞ்சும் அந்த நாயோட குடியிருக்க, அவங்க என்ன முட்டாளா?, அப்பிடி என்ன உங்க அன்பு உசத்தி?
கமலாம்மாவை நாயோட கம்பேர் பண்றேனோன்னு தப்பா நினைக்காதீங்க! கொடூரமான மன அலட்டலுக்கு ஆளாகியிருக்கிறதால தான் வர்தினி அக்கா இவ்ளோ தூரம் பிடிவாதமா விலகி இருக்காங்களோன்னு தோணுது! சந்தோசத்தை விட நிம்மதியை prefer பண்ணுற ஆள் போல அவங்க! அதனால தான் ஒதுங்கிட்டாங்க!
இப்ப வந்திருக்கிற நோய்த்தாக்கம் வேற, அவங்களுக்கு மனசளவுல என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்ன்னு சொல்ல முடியாது! இப்பவும் நீங்க, உங்கம்மா பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு இதை அவங்களைத் தனியா ஹாண்டில் பண்ண விட்டீங்கன்னா, மொத்தமா உங்களைத் தலை முழுகவும் வாய்ப்பிருக்கு!” – எனவும் பதறி நடுங்கிப் போன கண்ணாடி,
“எ..எ..என்ன சொல்றீங்க?, வ.வ…வர்தினிக்கு என்ன?, ப்ளீஸ்! இப்போவாவது உண்மையைச் சொல்லுங்க” – என்று துடித்தவரிடம் பயப்படும் படியான நிலை இல்லையென்பதை எடுத்துக் கூறி, மருத்துவமனையின் பெயரைச் சொல்லி முழு விவரத்தையும் கேட்டறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினான் அலெக்ஸ்.
ஏதோ அவன் தான் டாக்டர் என்பது போல நான்கைந்து முறை “நிஜமா குணப்படுத்திடலாம் தான?” எனப் பதட்டமும்,பயமுமாய்க் கேள்வி கேட்டு, உறுதிபடுத்திக் கொண்டவரைக் கண்டு பாவமாய் இருந்தாலும், வாய் அடங்காமல்,
“உங்களை மாதிரி ஒரு புருஷன் ஹாசினிக்கு வாய்ச்சா என்ன ப்ரோ பண்ணுவீங்க?” – எனக் கேட்டான்.
கன்றலும்,குன்றலுமாய் முகம் மாற எச்சில் விழுங்கியவரிடம்,
“அம்மா ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்! அவாய்ட் பண்ணவே முடியாத உறவு! சரி! அப்போ பொண்ணு??, அது அநாதையாக் கிடந்து எக்கேடோ கெட்டா பரவாயில்லையா?, ஒத்தை ஆளா புள்ளையை வளர்க்க கமலாம்மா கஷ்டப்பட்டுச்சு! அதுக்காக,அதே கஷ்டத்தை ஹம்சவர்தினியும் அனுபவிக்கனுமா?, நமக்கு நடந்தது இன்னொருத்தனுக்கு நடக்கக் கூடாதுன்னு நினைக்குறது தான் அறம்! நானே வாழல, அதனால எவனுமே வாழக் கூடாதுன்னு நினைக்குறது சைக்கோத்தனம்! கமலாம்மாவோட வைராக்கியக் குணத்துக்கு சல்யூட் பண்ணுங்க! அதே நேரம், அவங்க வக்கிரத்துக்கெல்லாம் தீனி போடாதீங்க.” என்றவன் அவரது பதிலை எதிர்பாராது call-ஐ கட் செய்து விட,
அதுவரை அவன் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்த ஜெபா, பெருமூச்சை வெளியிட்டவாறு எழுந்து அலெக்ஸினருகே வந்தாள்.
தன் கையிலிருந்த செல்ஃபோனை அவளிடம் நீட்டியவன்,
“உனக்கென்ன hunter மேல அவ்ளோ அக்கறை?, அவங்கப்பனுக்கு மொட்டைக் கடுதாசி அனுப்புற அளவுக்கு?” எனக் கேட்டான்.
நொடியில் இறுகிய முகத்துடன் பார்வையைத் திருப்பியவள், கட்டிய கைகளோடு, புருவம் சுருங்க தூரமாய் வெறித்து,
“அப்பனாகப்பட்டவன் கேடு கெட்டவனா இருந்தா, அழிஞ்சு போடா அயோக்கிய ராஸ்கல்ன்னு அடிச்சுத் துரத்தி, தலை முழுகிடலாம்! அன்பும்,அக்கறையுமா இருக்கிறவனை, சல்லித்தனமான காரணங்களுக்காக ஒதுக்கி வைச்சுட்டு எதுக்கு நாதியில்லாம வாழனும்?, அந்தக்காவுக்குப் புருசன் தேவையோ இல்லையோ, ஹாசினிக்கு அப்பன் வேணும்” என்றவளை.. விடாது நோக்கியவனை உணர்ந்துத் திரும்பியவள், அவன் புறம் பார்த்து,
“என்ன?” என்றாள்.
பெருமூச்சை வெளியிட்டு ஒன்றுமில்லையென்பது போல் மறுத்துத் தலையசைத்தவன், இரண்டடித் தள்ளி நின்றவளின் கழுத்தை வளைத்து,அருகே இழுத்துத் தன் முகத்திற்கு நேரே நிறுத்தி, விலக எத்தவனித்தவளுக்கு இடங்கொடாது, தன் விழி நோக்கச் செய்து, நெரித்தப் புருவங்களுடன் தீவிரமாய் அவள் முகம் பார்த்து,
“என்ன உன்னைப் போட்டு அழுத்துது மக்கா?” எனக் கேட்டான்.
“எதுவுமில்லையே” – பிடிவாதமாய்ப் பதில் கூற மறுத்தவளுக்கு, அவனது தொடர் பார்வை கடுப்பைத் தர, முகம் சுழித்து, “கழுத்தை விடு, வலிக்குது” என்றவாறு அவன் தோளைப் பற்றித் தள்ளினாள்.
அவளை நகர விடாதுத் தடுத்தபடி, “அந்தாளு மேல உள்ள கோபத்துக்கு, என்னை எதுக்குடி பழி வாங்குற?” என அவன் கேட்டதும், வெடுக்கென அவன் பிடியை விட்டு விலகியவள், ஆத்திரத்துடன் அவனை முறைத்து விட்டு விறுவிறுவெனப் படி இறங்கிச் செல்ல, பிடரியைத் தேய்த்தவாறு விழி மூடித் திறந்தவனுக்கு, அவள் மனம் புரிந்தும்,புரியாத நிலை.
அலெக்ஸ் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதில் உடனடியாகச் சென்று மனைவியை மருத்துவமனையில் சந்தித்திருந்தார் தங்கப்பாண்டியன். மற்ற நேரமெனில், கணவனது இன்ஸ்டண்ட் மாற்றத்திற்குக் காரணம் கேட்டு வர்தினி குடைச்சலைக் கொடுத்திருப்பாரோ என்னவோ, நோயும்,சூழ்நிலையும் மனதைப் பலவீனப்படுத்தி, துணையின் அருமையையும்,தேவையையும் குறித்து மூளைக்கு அறிவுறுத்தியதில் திணறித் தவித்திருந்தவருக்கு, கணவனது செய்கை பலத்தையும், வாழ்வு குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியதில், பெரிதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தாவிடினும், அவரது அண்மையை அமைதியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
மனைவியின் அமைதியான போக்கு பீதியைக் கிளப்பினாலும், அவர் வாய் மூடியிருக்கும் இந்த அரிதான வாய்ப்பை நழுவ விடாது, அவரது நோய் குறித்துக் கேள்வியுற்றதும் தான் பட்ட பாட்டை,பயத்தை வெளிப்படையாகச் சொல்லி, பிரிந்திருந்த வரை, நாட்கள் கரைவது குறித்துக் கவலை கொள்ளாது,பெற்ற பிள்ளைக்காகக் கூட இறங்கி வர முயலாது பெரிதாகத் தெரிந்த ஈகோ, மனைவி மொத்தமாக இல்லாது போகும் நிலை வந்தால்.. என்னாகுமோ என்ற நடுக்கத்தில், அடியோடு அழிந்து,மறைந்து போனதாகக் கூறி,
இனியேனும் எதைப்பற்றியும்,யாரைப் பற்றியும் கவலைப்படாமல், கருத்தில் கொள்ளாமல், நம் மூவரையும் முன்னிருத்தி நாம் வாழ வேண்டுமென ஆசைப்படுவதாகச் சொல்லி, சற்று உடல் தேறியதும் தனி வீடு பார்த்துச் சென்று விடுவோமா என அனுமதி கேட்டு, தாமதிக்காமல் வீடும் பார்க்க முடிவு செய்து விட்டார் பாண்டியன்.
கேன்சர் கட்டி வந்த நாள் தொடங்கி, அடுத்தடுத்து நடந்த டெஸ்ட்கள், ட்ரீட்மெண்ட்டுகள், மருந்துகள்,மாத்திரைகள், மருத்துவமனை வருகைகள் என அத்தனையும் புரிந்த மன மாற்றத்தில், முழு நேரமும் மாமியாரையும்,அவரது வார்த்தைகளையும் மட்டுமே யோசித்து,யோசித்துப் பலவிதமாக அதற்கு மனதுக்குள்ளேயே பதில் சொல்லி, சண்டையிட்டு,வாக்குவாதம் புரிந்து அந்தம்மாவைக் குறித்து எரிச்சலும்,வெறுப்புமாய்ப் புலம்பி,மருகியே காலத்தைக் கழித்த நிலை மாறி, மாமியாரை முற்றிலுமாய்ப் பின்னுக்குத் தள்ளி, தன் கணவனை, பிள்ளையை, தங்கள் மூவரது எதிர்கால வாழ்வு பற்றி சிந்தனையை முன்னிலைப் படுத்தத் தொடங்கியதில் சற்றுத் தெளிவு வந்திருக்க, வர்தினியும் கணவனது முடிவுக்கு மௌனமாக இசைந்திருந்தார்.
இரவு வீடு தங்காதிருக்கும் மகனது நடவடிக்கை சந்தேகத்தைக் கிளப்பியதில், உடனடியாக மருமகளைத் தேடி வந்த கமலா பாட்டிக்கு, அவரது நிலையறிந்து லே…..சாகத் தோன்றிய இரக்கமும், மகன் தனி வீடு பார்த்து செல்லப் போகிறான் என்ற செய்தியில் முற்றிலுமாக மறைந்து போக, குணசீலனிடம் நியாயம் கேட்டு வாக்குவாதம் செய்து, அவர், ‘இனியேனும் மூவரையும் வாழ விடுங்கள்’ என சலிப்புடன் கூறிய பதிலில் பொங்கி, மூச்சு வாங்க, வழிந்த வியர்வையுடன் “என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்ச உங்க மக, விளங்க மாட்டா!, விளங்கவே மாட்டா” என சாபமிடவும்,
“சரிம்மா! என்னைக் கட்டுன பாவத்துக்கு, அவ விளங்காம போகட்டும்!, கூடச் சேர்ந்து நானும் விளங்காம போய்க்கிறேன்! நோய் குணமாகி ஹாஸ்பிடல்ல இருந்து வர இருக்கிறவளை, மறுபடி ஹாஸ்பிடலுக்கேத் திருப்பி அனுப்பி வைச்சுடாத! எனக்கு என் பொண்டாட்டி வேணும்மா!, என் மகளுக்கு அம்மா வேணும்! நீ தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பு” என பாண்டியன் கையெடுத்துக் கும்பிட்டு scene-ஐப் போட்டதில், “என் மவனைப் பிரிச்சுட்டா!, எனக்கெதிராத் திருப்பிட்டா! சண்டாளி!” என மேலும் பற்பல சாபங்களைத் தெரு முழுக்க உதிர்த்தவாறு திரும்பிச் சென்று விட்டார் கமலாப்பாட்டி.
விவரமாக, இவ்வனைத்தும் தன் மனைவியையும்,மகளையும் எட்டாதவாறு பார்த்துக் கொண்டதில் தொடங்கி, பொண்டாட்டியையும், பெற்றவளையும் சரியான விதத்தில் சமாளிக்கும் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ளவும்,ஏற்றுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார் தங்கப்பாண்டியன்.
கறுவிச் சென்ற கமலாப்பாட்டியை அப்படியே விடாமல், பின்னேயே சென்று, ‘காலம் பொன் போன்றது!, கடமை கண் போன்றது’ என டயலாக் பேசி, அந்தக் கடமைக்குக் கீழ் அம்மா,மனைவி,தன் குழந்தையென மூவருமே வருவதாக எடுத்துச் சொல்ல முயன்று, ‘நீயும்,அவளும் ஒரு வீட்டில் வாழ்வதென்பது ஒத்தே வராதென்றும், இருவரது மனநிம்மதியையும் அது கெடுக்குமென்றும்’ புரிய வைக்க முயற்சி செய்து, ‘தனி வீட்டில் வாழ்ந்தாலும், நான் தினமும் உன்னைக் காண வருவேன், உன் தேவையை கவனித்துக் கொள்வேன், முழு நேரமும் உன்னுடனிருக்க ஆள் ஏற்பாடு செய்திருக்கிறேன், நீ விரலைக் கூட அசைக்கத் தேவையில்லை! உன்னை சொகுசாக,பவுசாக நான் பார்த்துக் கொள்கிறேன்’- எனப் பற்பல வாக்குறுதிகளைக் கொடுத்து சமாதானம் செய்ய விழைந்து, இறுதியில் தோற்று, எரிச்சலுடனே அன்று மனைவியிடம் திரும்பியிருந்தாலும், நாள்தவறாது அன்னையைச் காணச் சென்று, தானொரு கடமை வீரன் என்பதை நிரூபிக்க விடாது முயற்சித்துக் கொண்டிருக்கிறார் பாண்டியன்.
ஒற்றை மகன் மீதிருக்கும் obsession குறைந்து, பழையபடி மகனைத் தன் இஷ்டத்திற்கு வளைக்க முடியாதென்கிற உண்மை புரிந்து, மருமகளுடன் வாய்ப்போரிட்டு ஜெயிப்பதை entertainment-ஆகக் கொண்டிருக்கும் நிலை மாறி, தன் மன அமைதியை, உடல் ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தி, மீதி வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து முடிக்க வேண்டுமென்பதை கமலாப்பாட்டி போகப் போகப் புரிந்து கொள்வாராயிருக்கும்!
ஒன்றாக வாழத் தொடங்கிய பின்னும், அவ்வப்போது முட்டிக் கொள்ளும் சமயங்களில், பழைய நிகழ்வுகளை இழுத்துப் பேசி, காயப்படுத்தும் மனைவியை ‘off’ செய்யும் வேலையை ஹாசினி செவ்வனே செய்கிறாள். மாமியாரிடம் வரிந்து கட்டிக் கொண்டு பதில் சண்டைக்குச் செல்லும் வர்தினி, மகளிடம் அடங்கி,ஒடுங்கி அமைதியாகப் போய் விடுகிறாள்.
அதன் பின்பு சத்தமில்லாது தன்னிடம் கோபத்தைக் காட்டும் மனைவியைப் பார்க்கையில், அதிசயத்தக்க வகையில் அவருக்கு சிரிப்பு வந்து விடுகிறது. இப்போதெல்லாம் வீட்டில் அவர் அதிகப் பொறுமையையும், பெரும் நிதானத்தையும் கடைபிடிக்கிறார். அது புரிவதாலோ என்னவோ, வர்தினியும் பெரிதாகக் கோப,தாபங்களை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை. தனிமை கற்றுத் தந்த பாடம் போலும்!
முக்கியமாக, மாமியாருடன் அவளுக்கு எவ்விதத் தொடர்புமில்லை!
இந்தக் குடும்ப அரசியல் அனைத்தையும் அறிந்தும்,புரிந்தும் வைத்திருக்கும் ஹாசினிக்கு.. அன்னையும்,தந்தையும் உடனிருப்பதில் கிடைக்கும் அலாதி சந்தோசத்தின் முன்பு, மற்ற அனைத்தும் தூசு தான்! தன் முகம் மாறினால் பதறிப் போகும் இருவரும், தன்னை முன்னிட்டு, தன் பொருட்டு, ஒருவரையொருவர் அனுசரித்துக் கொள்ளும் விதம், ஈகோ பாராது தவறுகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு, விட்டுக்கொடுத்துப் போக செய்யும் முயற்சி என… அன்னை,தந்தையின் செயல்பாடுகளில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பது ஹாசினி தான்! அந்த privilege-ஐ உபயோகிப்படுத்தி, வீடு மாறும் திட்டத்தை சிறிது நாட்கள் தள்ளி வைத்திருக்கிறாள். அந்த வருட ஆடலும்,பாடலும் முடிந்த பிறகு மாறிக் கொள்ளலாம் என்று இருவரையும் convince செய்திருக்கிறாள்.
அலெக்ஸூம்,gangster-ரும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் படி, மரகதம் பாட்டியின் தொடர் அனத்தலின் படி, அப்பு தாத்தா விழாக் கமிட்டியைச் சந்தித்து தன் மன்னிப்பைத் தெரிவித்து, அந்த வருடம் காலனியில், ஆடலும்,பாடலும் நிகழ்ச்சி நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.
காலனியில் குடியிருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சனையேதுமின்றி நிகழ்ச்சியை நடத்தி முடிக்க ஒத்துழைப்புத் தருவோம் என உறுதி கூறினால் மட்டுமே, எங்களால் முன்னின்று இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும் எனக் கமிட்டி கூறி விட்டதால், gangster-ரும் hunter-ரும் சேர்ந்து பெட்டிஷன் ஒன்றைத் தயாரித்து, காலனி முழுதிலும் வீடு, வீடாகச் சென்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கி, கமிட்டியிடம் சமர்ப்பித்திருந்தனர்.
என்ன, சின்னப்ப தாஸை சம்மதிக்க வைப்பது தான் பெரும்பாடாகிப் போனது gangster-ருக்கு. ‘நம்ப வைச்சு என் கழுத்தறுத்த உனக்கு, என் கைநாட்டு எதற்கு?’ எனக் கேட்டுக் குதித்தவனிடம், “ஜெபாக்கா இன்னும் அலெக்ஸ் அண்ணனுக்கு ஓகே சொல்லலண்ணே!, உங்களுக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு! ஆடலும்,பாடலும் ப்ரோக்ராம்ல அந்தக்காவை இம்ப்ரஸ் பண்ற மாதிரி ஏதாவது பர்ஃபார்மென்ஸைப் போட்டு, வஞ்சியை வசமாக்க வழியைப் பாருங்கண்ணே” என அவனை உற்சாகத்துடன் ஏற்றி விட்டு, கையெழுத்து வாங்கியிருக்கிறான் இந்த fraud பய gangster. இது மட்டும் அலெக்ஸிற்குத் தெரிந்தால், பீஸ்,பீஸாகப் பிரித்து சுக்கா போட்டு விடுவான்! – என அவ்வப்போது மிரட்டுகிறாள் hunter.
அவள் போட்டுக் கொடுக்கப் போவதில்லை! ஏனெனில் இப்போது இருவரும் பழையபடி ‘திக் ஃப்ரண்ட்ஸாக’ மாறி விட்டார்கள். தங்களது வீட்டுச் சூழ்நிலைகளால், முரட்டுக் குணத்தோடு முரண்பட்டுத் திரிந்த இருவரும், நிலைமை சீராகி விட்ட ஜோரில், முன் போல கலகலப்புக் கூடி, ஒரே சைக்கிளில் பள்ளிக்குப் போவது, குரூப் ஸ்டடி செய்வது, ஜெபா வீட்டு மாடியில் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்வது, அவன் ‘சிக்கன் சுக்கா’ share செய்தால், இவள், வெளிமாநிலங்களுக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் தந்தை வாங்கி வரும் விதவிதமான ஸ்நாக்ஸ்களை share செய்வது என, பெரும் எதிரியிலிருந்து, உயிர் நண்பர்களாக இருவரும் transform ஆகியிருந்தனர்.
ஜெபா வீட்டு மாடியில் இருவரும் போடும் ஆட்டத்தைத் தன் வீட்டு பால்கனியிலிருந்து பார்க்கும் அலெக்ஸ், “உங்களுக்கெல்லாம் வூடு கிடையாதா?,ஏன் டே இங்கேயே கிடக்குறீங்க?, என்னை மட்டும் எதுக்கு லே வூட்டுக்குள்ள வுட மாட்டேங்குறா அவ?, இந்தா hunter, உன் கொண்டையைக் கழட்டி, முடியைப் பிரிச்சு இங்கிட்டுத் தூக்கிப் போடேன்!, அதையே கயிறாக்கி, நான் அந்தப்பக்கம் தாவிக்குறேன்!” என்று வம்பு செய்வான்.
எரிச்சலுடன் முறைத்து, “ஜெபாக்காஆஆஆ” எனக் கத்தியழைக்கும் ஹாசினியின் கூக்குரலுக்கு மேலேறி வரும் ஜெபா, அவனைக் கண்டுகொள்ளாது இவர்களிருவருடன் சேர்ந்துத் தானும் ஆட்டம் போடுவாள்.
“லேய்ய் கணேஷூ, பொம்பளைப் புள்ளைகளோட உனக்கென்னா டே சகவாசம்! பூரா இங்கிலிஷ் பாட்டா ஆடுதுங்க!, இங்க வா டே நீயி! நாம குச்சிப்புடியையும்,கதகலியையும் கலந்து குச்சிக்கலி ஆடுவோம்” என்று gangster-ஐத் தன் பக்கம் இழுத்து தனியாக ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறான் அலெக்ஸ்.
அடுத்த ஓரிரண்டு மாதங்களில் வரவிருக்கும் ஆடலும்,பாடலும் நிகழ்ச்சிக்காக ஆளாளுக்கு ஆர்ப்பாட்டமாகத் தயாராகிய வண்ணமிருக்கிறார்கள்.
அப்பு தாத்தா கூட ‘எலந்த பழத்தை’ விட்டு விட்டு, மரகதம் பாட்டியை முதல் வரிசையில் அமர வைத்து, ‘நாஆஆன் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை’, ‘மெல்ல நட,மெல்ல நட மேனி என்னாகும்’ என சிவாஜிகணேசனின் சிறந்த பத்துப் பாடல்களுக்கு, பாண்ட்-சட்டையில் பர்ஃபார்மன்ஸ் தர இருக்கிறாராம்!
தாஸ், தனியாக, மார்வாடி காஸ்டியூமுடன் ‘தாண்டியா ஆட்டம்’ ஆடக் காத்திருக்கிறானாம். நடிகர் குணாலின் ஹேர்ஸ்டைல்க்காக முடி வளர்த்துக் கொண்டிருப்பதாகப் பேச்சு! Curtain cut vs Bob cut! – என ஜெபாவின் ஹேர்ஸ்டைலோடு இணைத்துப் பேசி அவனைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிறான் gangster.
Gangster மற்றும் hunter-ரின் பெட்டிஷனை ஏற்றுக் கொண்ட கமிட்டி, விழா பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, காலை முதல் இரவு வரை நடைபெறவிருக்கும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தப் பட்டியலையும் தெரியப்படுத்த, முழுதாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஏரியாவில் நடைபெறவிருக்கும் விழாவாதலால், காலனி முழுதிலும் உற்சாக அலை, ஆரவாரமாகக் கலை கட்டியதில், சிறியவர் முதல் பெரியவர் வரை அங்கு குடியிருக்கும் அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பெயர்ப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
ஒரு வழியாக, gangster-ரின் Mission, accomplished ஆகி, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த, கலிலியோ காலனி ‘ஆடலும்,பாடலும்’ நிகழ்ச்சி அன்று காலை இனிதே துவங்கியது.
உங்கள் கருத்துகளைப் பகிர...
