9.1. செண்டுமல்லி!
அந்த பிரம்மாண்டப் பந்தலுக்கடியில், காதைக் கிழித்த பாட்டுச் சத்தத்தின் மத்தியில் ஆங்காங்கு பரபரப்புடன் திரிந்த மனிதத் தலைகளோடு சுறுசுறுப்புடன் காணப்பட்டது கலிலியோ காலனியின் ஆடலும்,பாடலும் களம்! நீளமும்,அகலுமுமாய் பெரும்பரப்பை ஆக்கிரமித்திருந்தக் களத்தின் ஒரு பக்க மையத்தில் கண்ணைக் கவரும் அலங்காரங்களுடன் மேடை அமைக்கப்பட்டிருக்க, அதன் கீழே இடது புற ஓரத்திலிருந்த DJ station கொடுத்த இரைச்சலில், இரு காதுகளையும் பொத்தியவாறு, முழுப்பற்களையும் காட்டிக் கிளுக்கிச் சிரித்து, அதனமைப்பை ஆராய்ந்தபடிச் சுற்றி வந்து குதூகலமாய்க் கூத்தாடிக் கொண்டிருந்தது சிறுவர்-சிறுமியர் கூட்டம்!
மேடையின் கீழிருந்துத் தொடங்கி, பந்தல் முடியுமிடம் வரை கல்யாண மண்டபத்தைப் போல இருபுறமும் அணிவகுத்து நின்ற சிகப்பு நிற ப்ளாஸ்டிக் ‘chair’-களில், ஆட்கள் நிரம்பிய வண்ணமிருக்க, விழா கமிட்டியினரும், போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கும் பிள்ளைகளும்,அதன் பெற்றோரும் நேர்த்தியான உடையுடன் இங்குமங்கும் நடமாடியபடியும், காலனி தாத்தாக்களும்,அங்கிள்களும் ‘ஜாலி வைப்ஸ்’-உடன் தங்களுக்குள் கூட்டம் போட்டு கதையடித்தபடியுமாக, அச்சூழ்நிலையே அன்றைய நாளுக்குரிய ஆர்ப்பாட்டத்தைச் சுமந்தவாறு முழு உற்சாகத்துடன் காணப்பட்டது.
‘சௌண்ட் சிஸ்டத்தில்’ ஒலித்த ‘தத்தை,தத்தை,தத்தை பல அத்தை பெத்தத் தத்தை’ பாடலுக்கு ஒத்திசைப்பது போல, இங்கு பந்தலை விட்டு வெளியே, ‘காதலர் தின குணால்’ ஹேர்ஸ்டைலுடன் கருப்பு நிற டீஷர்ட்டும்,பாண்ட்டுமாய்,clean shave-ல் kpop star-ஐப் போன்ற தோற்றத்துடன் ஷோக்காக நின்றிருந்த தாஸ், ஈக்களைப் போல தன்னைச் சுற்றி,சூழ்ந்திருந்த காலனிப் பெண்களிடம் வெட்கமின்றி பல்லிளித்துக் கொண்டிருந்தான்.
அவர்களது ஆர்வப் பார்வையை உணர்ந்து, வேண்டுமென்றே ஒரு கையால் முன் நெற்றி முடியைக் கோதி, அது அலை,அலையாகப் பிரிந்து,விரிந்து பின்னே வழிகையில், லேசாகத் தாடை உயர்த்தி, தலையை shake,shake செய்துத் தன் தெற்றுப்பல் சிரிப்பை அவன் showcase செய்ய, அவனது mass-ல் மயங்கி, மையலுடன் சிரித்து, ‘ஊஊஊஊ’ என கோஷம் போட்டவாறு துள்ளலோடு நின்ற மங்கையரிடம், அவன் மேலும், தன் டீஷர்ட்டின் கையைத் தூக்கி ஆர்ம்ஸைக் காட்டி, ‘எப்புடி’ என்று புருவத்தை ஏற்றி,இறக்கி, அதற்கும் அவர்கள் கைகளைத் தட்டிக் கூவிய ‘ஊஊஊஊ’ மழையில் சுகமாக நனைந்து கொண்டிருந்தான்.
சற்றுத் தள்ளியிருந்த காம்பவுண்ட் சுவரில் சாய்ந்தவாறு, பேப்பர் கப்பில் டீ பருகியபடி, சுருக்கியக் கண்களுடன் இவ்வனைத்தையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த அலெக்ஸின் முகம் அநியாயத்திற்கு அஷ்டகோணலாகியிருக்க, கட்டியக் கைகளோடு அவனருகே வந்து பக்கவாட்டில் இடித்து நின்ற gangster,
“என்னண்ணே பொறாமையா இருக்கா?” என அடிக்குரலில் வினவினான்.
“ஹ்ம்!” எனத் தோளைக் குலுக்கி, “பால் வடியுற முகத்தை வைச்சுக்கிட்டுப் பன்னாட, பார்க்குறதெல்லாம் பாம்பாட்டி வேலை” – தன் இடது கன்னத்தைப் பற்றி ‘ஜூஜூஜூஜூஜூ’ செய்து கொண்டிருந்த அண்டை வீட்டு அமலா ஆண்ட்டியிடம் ‘laughing buddha’-வைப் போல கள்ளமற்ற சிரிப்பை உதிர்த்த தாஸை கடுப்புடன் கண்டபடிப் பற்களைக் கடித்தவனிடம்,
“விடுண்ணே!, அவுரு மகுடி ஊதுனா, மாணிக்கத்தைத் துப்ப ஒரு கூட்டமே இருக்கு! ஆனா, உங்களை.. காறித் துப்பக் கூட ஒரு காரிகையில்லையேண்ணே” –என நக்கலாகக் கூறிய gangster-ஐத் திரும்பி முறைத்தவன்,
“காரிகை என்ன லே காரிகை?, காதலியே இருக்கா டே எனக்கு!” – என கர்வமாகப் பீற்றியதும், உதட்டைச் சுழித்த gangster,
“நீங்க போட்ட அப்ளிகேஷன் இன்னும் ‘under processing’-ல தான் இருக்குங்குற உண்மையை, உங்க இளகிய நெஞ்சை ஏத்துக்க சொல்லுங்கண்ணே” – என்று சலித்துக் கொள்ள,
சாய்ந்த நிலையிலிருந்து வெடுக்கென நிமிர்ந்து, கோபமும்,ரோஷமுமாய் விடைத்த மூக்குடன் gangster-ரை நோக்கியவன்,
“எங்க இரவு நேர இனிய பேச்சுக்கு, இன்ஸ்டாக்ராம்ல இன்பராகம் சேர்த்ததே நீ தான லே?, லவ்ஜோடின்னு கேப்ஷனெல்லாம் கொடுத்தியே டே! ராஸ்கோலூ”-என்று சீற,
“அப்ப மேரேஜ் இன்விடேஷன் அடிங்க! எதுக்கு இன்னும் மொட்டைமாடிலயே Manifest பண்ணிட்டிருக்கீங்க?” – என்று பதிலுக்குப் பாய்ந்தான் gangster.
“அது… அடிப்போம்! கொஞ்ச நாள் ஆசை தீர லவ் பண்ணிட்டு அப்புறமா அடிப்போம்! உனக்கென்னாடே?” – அவன் முகம் பாராது பதில் சொன்னபடி பேப்பர் கப்பை ‘bin’-ல் எறிந்தவனைக் கண்டு, உதட்டை வளைத்த gangster,
“சொட்டை வெளிய தெரியுற வரை நீங்க சொப்பனம் மட்டும் தான்-ண்ணே காணப் போறீங்க! தாஸ் அண்ணே front hair-ஐப் பார்த்தீங்களா?, ‘head & shoulders’ விளம்பர மாடல் மாதிரி, scalp தெரியாத அளவுக்கு, செழிப்பா வளர்த்து வைச்சிருக்கிறாரு. சீப்புல சீவுனா, முடி கொட்டுதுன்னு, நீங்க கையால மட்டுமே கோதி விடுற ரகசியம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா?” – எனத் தன் weakness-களை வெட்ட வெளிச்சமாக்கியவனைக் கண்டு அதிர்ந்து, தடுமாற்றத்தை மறைக்க முயன்று,
“லேய்ய்.. என்ன? என்ன? என்ன இப்ப?, அப்ப்ப்ப்பிடியே சொட்டை வுழுந்தாத் தான் என்ன?, ஹேர் இம்ப்ளாண்ட்டேஷன் ரீல்ஸ் எத்தனை சேவ் பண்ணி வைச்சிருக்கேன் தெரியுமா?, அட அது நடக்காட்டியும், wig வைச்சாவது அண்ணேன் வெற்றிகரமா விவாகத்தை முடிப்பேன்! உனக்கென்ன இன்விடேஷன் தான?, இன்னைக்கே அவ கிட்டப் பேசி இதுக்கொரு முடிவைக் கட்டுறேன் பாரு டே” – என்று படபடவெனப் பேசியவனிடம்,
“அதுக்கு முன்னாடி தாஸ் அண்ணனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க” – என நேரடியாக விசயத்துக்கு வந்தவனை, இடுப்பில் கை வைத்து, உயர்த்திய தாடையுடன் சந்தேகமாக நோக்கியவன், கண்களைச் சுருக்கி,
“என்னா சான்ஸூ?” எனத் திமிராகக் கேட்க,
“ஜெபாக்கா கிட்ட அவுரு ‘சத்தியமும்,ஜீவனுமாய்’ இருப்பேன்னு சொல்லி, அற வழியில அன்பைக் காட்ட ஆசைப்படுறாரு” – என்று பம்மியபடிக் கூறியவனைக் கடித்தப் பற்களுடன் நோக்கியவன், இடப்புறம் திரும்பி தாஸை நோட்டமிட்டவாறு,
“இந்த ஜோக்கர் இன்னும் ‘சோக்கு சுந்தரி,சோக்கு சுந்தரி’-ன்னு ஜொள்ளு வடிக்கிறதை நிறுத்தலையா?, இவனைஐஐ” – எனத் தொடர்வதற்குள் இடைபுகுந்து,
“அவுரு ஜோக்கரா, கிங் மேக்கரா-ங்குறதை ஜெபாக்கா சொல்லட்டும்” – என்று வேகமாகக் கூறியவனை நோக்கி வெறியுடன் ஓரெட்டு வைத்து,
“எடு செருப்பை! நாயே!, கப்பக்கிழங்காட்டம் இருக்கிறவன் கிங்மேக்கரா?, த்தூஊஊ!!, அவனைத் தான் ராக்,பேப்பர்,சிஸர்ஸ்ல, rock bottom போட்டு ராத்திரியோட ராத்திரியா ரயிலேத்தி விட்டாச்சே! இன்னும் என்னா லே, இவன் கூட உனக்கு விட்ட குறை,தொட்ட குறை வேண்டிக்கிடக்கு?“ – என்று பாய்ந்தவனைக் கண்டு அவசரமாய் நான்கடி பின் நகர்ந்து சென்ற gangster,
“என்ன இருந்தாலும், என் கஷ்ட காலத்துல கை கொடுத்த காமராசர்-ண்ணே அவுரு!, நான், இன்னொரு சான்ஸ் வாங்கித் தர்றேன்னு சொன்னதை நம்பி hairstyle-ஐ மாத்தி groom-ஆகி வந்து நிற்குறாரு.” – என்று அடங்காது வாயை விட,
“hairstyle-ஐ மாத்துனா, hero-வாகிட முடியுமா?, தாவாங்கட்டை திரும்பிடும் சொல்லிட்டேன்! ஓடு லே அங்குட்டு” – என நாக்கை மடித்து மிரட்டியவனை முகம் சுருங்க முறைத்து,
“இருக்கு,இல்லை-ன்னு அந்தக்காக்கிட்டயிருந்து solid-ஆ ஒரு பதில் வராம தத்தளிக்கிற இந்த நிலைமைலயும் உனக்கிருக்கிற தன்னம்பிக்கையை நான் பாராட்டுறேன்-ண்ணே!, ஆனா, எங்க தாஸ் அண்ணே, இன்னிக்கு ‘நூறு வார்த்தை அல்ல,அல்ல ஒரு வார்த்தை! புரியாதா”-ன்னு ஜெபாக்காவைப் பார்த்து தாண்டியா ஆடத் தான் போறாரு! தடுக்க முடியாம நீ திணறத் தான் போற” – என்று gangster குரல் உயர்த்தி சவால் விட, காதைக் குடைந்த அலெக்ஸ்,
“ஆண்டியாகப் போறவனுக்கு எதுக்கு லே தாண்டியா?, AJ designs என்னிக்குமே DJ designs-ஆகாது டே!, ஜெபமலரை மாலையா கோர்த்து, மார் மேல போட்டு அழகு பார்க்கப் போற ஒரே மாமேன், முறை மாமேன் நான் ஒருத்தன் தான் லே! ” – என்றுத் தன் நெஞ்சில் அடித்து அகந்தையுடன் கூறியவன்,
“அதென்ன டே DJ designs-சு?” – என திடீரெனக் கேட்டப் பெண் குரலில் சட்டெனத் திரும்பிப் பார்க்க,
காம்பவுண்டு சுவரின் மறுபுறம், தனது bob cut-ஐ ஐயர் குடுமியாக்கி, active wear-ருடன், நெற்றியில் வியர்வை வழிய, இடுப்பில் கை வைத்தவாறு, இருவரையும் சந்தேகமாக நோக்கியபடி புருவம் சுருங்க நின்றிருந்தாள் ஜெபா.
“அதொன்னுமில்ல மக்கா” என அவளை நோக்கி நடக்க முற்பட்டவனை முந்திக் கொண்டு,
“D for Das-ங்கக்கா!, ‘confess பண்ணாத லவ்க்கு climax இல்ல’-ன்னு புரியாம, கன்னிச்சாமியா சுத்திட்டிருந்த தாஸ் அண்ணனை, இந்தப் பரட்டை ராக்,பேப்பர்,சிசர்ஸ்ல தோற்கடிச்சு, அவுரு தன் லவ்வை உங்க கிட்ட express பண்றதுக்கு முன்னாடியே end card போட வைச்சு ஓட வுட்டுட்டாரு!, இவுரு.. காலனிக்குப் புதுசா குடி வந்தப்போ…. “ என ஆரம்பித்து அலெக்ஸ் தின்ற முட்டைப் பப்ஸிலிருந்து, முட்டுச்சந்தில் சுள்ளான்களோடு ஆடிய end game வரை அனைத்தையும் gangster புட்டு,புட்டு வைக்க,வைக்க… புஸூ,புஸூவெனக் கோப மூச்சை வெளியிட்டவாறு, தன்னைக் கொலைவெறியுடன் நோக்கிய ஜெபாவின் பார்வையில், பொசுங்கி, பீஸ்,பீஸாகச் சிதறிக் கொண்டிருந்தான் அலெக்ஸ்.
“ச்செத்த மூதி!, என்னைப் பகடைக் காயாக்கி உருட்டி விளையாண்டுட்டு திரியுறியா லே நீயி?, இந்தச் சில்ற வேலை பார்க்கத் தென்பாண்டிச் சீமையில இருந்து இந்தத் தெருவுக்குக் குடி வந்தியோ?, அந்தக் கோட்டிப்பயலோட போட்டி போட்டு ஜெவுச்சா, நான் உனக்குச் சொந்தமா லே?, நீ என்ன டே என்னைய மாலையா கோர்த்து மார் மேல மாட்டிக்கிறது!, அதுக்கு முன்ன உன்னைப் பஸ்பமாக்கி, பல்லு விளக்கித் துப்புறேன் பாரு லே!”
-இருவருக்குமிடையிலிருக்கும் மதில் சுவரை வார்த்தைகளாலேயே இடித்து,நொறுக்கி விடுபவள் போன்று, கண்ணை விரித்து, மூக்கை விடைத்து, கையை நீட்டி, வூடு கட்டி அடித்தவளைக் கண்டு விதிர்த்து,
“ஜெபா,ஜெபா,ஜெபா…. என்னைப் பேச வுடு மக்கா” என்று இடையில் புகுந்தவனைக் கண்டு கொள்ளாது அவள், ‘5 மணி பஸ்ஸூ, 5 மணிக்கு வந்துச்சாம்!, 6 மணி பஸ்ஸூ, 6 மணிக்கு வந்துச்சாம்!, கேட்டீகளாடி இந்தப் பகுமானத்தை’- ரீதியில், மூச்செடுக்காமல்,
“ஆக மொத்தம், இப்ப நீ என் பொறத்தால திரியுறது, பத்து வருசத்துக்கு முன்ன உன்னால மறிச்சுப் போன என் மனசை மீட்டெடுக்க இல்ல! அந்த மண்ணாந்தையோட போட்டி போட்டு நீ பெரிய இசுக்கு-ன்னு நிரூபிக்கத் தான்! என்ன?, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா லே! ஆக்கங்கெட்ட கூவை” – என ‘சைதை தமிழரசியாக’ மாறி இஷ்டத்திற்கு ஏச, எரிச்சல் கொண்டவன், ஒரே பாய்ச்சலில் மதிலின் மறுபுறம் தாவி,
“ஏய்ய்ய் ஏய்ய்ய்ய் ஏய்ய்ய்ய் லூசு மாதிரி பேசாத டி!, அவனுக்கும், நமக்கும் என்னாடி சம்மந்தம்?, இது.. சும்மா சுள்ளான்களுக்காக பண்ணுன ‘ஃபன்ன்ன்ன்’(fun) மக்கா” – என எகிறி,எக்ஸ்ப்ளைன் செய்ய முயன்றவனைக் கேட்டு,
“யாரு சுள்ளான்???, யோவ் பரட்டைஐஐ….”- என்று கோபப்பட்டவாறு மதிலுக்கு இந்தப்புறம் gangster.
“ஃபன்ன்ன்னு?, ம்ம்? ஃபன்ன்னு!,” என நறநறவெனப் பற்களைக் கடித்தவள், சொடுக்கிட்டு, “இனி, மிச்ச ஃபன்னை உன்னை வைச்சு நான் பண்றேன் டே! தடிப்பயலே, உன்னைத் தலை கீழா கட்டித் தொங்க விட்டாத் தான் லே என் வெறி அடங்கும்!” – என்று சவால் விட,
“இந்த ப்ராடு பய பேச்சைக் கேட்டு நீ தேவையில்லாம, என் மேல பகை வளர்த்துட்டிருக்க மக்கா!, என் நினைப்பு புரியாதாடி உனக்கு?” – கடுப்புடன் திட்டியவனிடம்,
“நல்லாவே புரியுது! போட்டியில தோத்திருந்தா, என்ன லே பண்ணியிருப்ப?, என்ன டே உன் கணக்கு?, என் மாமன் மவனுக்கு ஏத்துக்கிட்டு, பத்து வருசத்துக்கு முன்ன என் கூட விவாதம் பண்ணுன மாதிரி, இவனுக்கு சப்போர்ட் பண்ணி, ஏதும் பேசியிருப்பியோ?, நான்,என் மனசு எதுவுமே முக்கியமில்லேல உனக்கு?” – என்று அவள் அடிக்குரலில் சீற,
“எதையும்,எதையும் முடிச்சுப் போடுற மக்கா?, இது சும்மா விளையாட்டுக்கு பண்ணுனதுடி” – சலித்துக் கொண்டவனைக் கண்டு, வெற்றுச் சிரிப்பை உதிர்த்தவள்,
“நான்-னாலே விளையாட்டுத் தான் உனக்கு?, இப்ப வரை என்னை வைச்சு விளையாடிட்டு தான இருக்க?” – என்று முணுமுணுப்பதையும்,
தன்னைப் புரிந்தும், வேண்டுமென்றே வம்பு வளர்ப்பவளைத் தளர்வுடன் நோக்கி, “ரொம்பப் பேசுற மக்கா நீயி” – என முணுமுணுப்பவனையும் கண்டு, gangster,
“அக்கா, நான் இதுக்கொரு சொல்யூஷன் வைச்சிருக்கேன்” – என்றான்.
“என்ன்ன்ன?” – ஒரு சேரக் கேட்ட இருவரையும் மாறி,மாறி நோக்கியவன்,
“இன்னைக்கு நடக்கப் போற 5 கேம்ஸ்லயும் இவுரு, தாஸ் அண்ணனை தோற்கடிச்சு ‘கப்’ வாங்கிட்டார்ன்னா, நீங்க இவரை மன்னிச்சு, ஏத்துக்கிட்டு, இவரு சொல்றதையெல்லாம் கேட்கனும்!, ஒரு வேளை இவுரு ஜெயிக்கலேன்னா.. அப்புறம், உங்க இஷ்டப்படி நொங்கெடுத்து, கயித்தைக் கட்டி, இந்த மரத்துலயே கூட தொங்க விட்டுக்கலாம்! என்ன சொல்றீங்க?” எனக் கேட்டான் சகஜமான குரலில்.
அவனது முதல் பாதிப் பேச்சில், பளிச்சிட்ட அலெக்ஸின் பற்கள், உர்ரென்ற முகத்துடனே நின்ற ஜெபாவைக் கண்டு அடங்கி விட, gangster முடித்ததும் அவசரமாக,
“என் வாழ்க்கை உனக்கு விளையாட்டாப் போச்சா லே gangster நாயே!, அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது! நான்.. நானே அவளை மொல்லமா சமாதானப்படுத்தி, சம்சாரி ஆகிக்கிறேன்! நீ போ லே அங்குட்டு!, சீக்கிரமா வர்றவங்களுக்கு ஸ்னாக்ஸ் பாக்கெட் கொடுக்குறாங்களாம்! போய் வாங்கித் தின்னு போ! சின்னப் பய!, அவன் சொல்றதெல்லாம் நீ கேட்காத மக்கா” – என்று அவளிடம் வழிந்த குரலில் மொழிய,
“கேட்பேன்” என்றாள் அவள் வேண்டுமென்றே.
“ம்ம்?”
“அவஞ்சொன்ன மாதிரி, இன்னைக்கு நடக்குற எல்லா கேம்ஸூலயும் நீ ஜெவுச்சுக் காட்டு பார்ப்போம்” – இடுப்பில் கை வைத்தபடி சவாலாகக் கூறியவளைக் கண்டு உள்ளே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கினாலும் காட்டிக் கொள்ளாது,
“அப்புறம் உன்னைப் பகடைக் காயாக்கிட்டேன், அவரைக் காயாக்கிட்டேன்னுலாம் சொல்லக் கூடாது” – என்றவனை கடித்தப் பற்களுடனே நோக்கி, ‘மாட்டேன்’ என்பது போல் தலையசைத்தவளிடம்,
வேகமூச்சுடன் நிமிர்ந்து, தாடையை உயர்த்தி, அவளை விழிகள் சுருங்க நோக்கி,
“ஜெவுச்சுட்டா, நாஞ்சொல்றதெல்லாம் கேட்பியா?” எனக் கேட்டான்.
உதட்டைப் பிதுக்கித் தலையைத் திருப்பி வேறு புறம் பார்த்தவளின், கன்னத்தை ஒற்றை விரலால் பற்றித் தன் முகம் காணச் செய்தவன்,
“ம்ம்? ம்ம்?” – என மீண்டும் வினவினான்.
“ஜெவுச்சுக் காட்டு பார்ப்போம்”
“ப்ச், ஜெவுச்சுட்ட்ட்ட்ட்டாஆ??” – அழுத்திக் கேட்டவனை, உதட்டில் வெடிக்கத் தொடங்கிய சிரிப்பை மறைத்தபடி நெற்றி சுருங்க நோக்கியவள், பின்,
“கேட்பேன் லே!, நீ சொல்றதெல்லாம் கேட்பேன்” என்று வாக்களித்தாள்.
அவள் கூறியதைக் கேட்டு முழுதாய் விரிந்து,மலர்ந்த சிரிப்புடன் அவள் கன்னத்திலிருந்த ஒற்றை விரலைப் பிரித்து, ஐவிரல்களால் அவள் கன்னச்சதையைப் பிடித்திழுத்து, அவளை நெருங்கி நின்றவன், அவள் மேலுதட்டில் படிந்திருந்த வியர்வைத் துளிகளைக் கண்டவாறு,
“பார்க்குறேன்டி!, இன்னிக்கு இந்த உதடு எப்பிடி எனக்கு ஒத்துழைக்காம போகுதுன்னு!” என்று கரகரத்தக் குரலில் முணுமுணுக்க, நீண்டு விட்ட இதழ்களுடன், கண்களை அழுந்த மூடி, பற்கள் தெரிய புன்னகைத்தவள், அவன் கரத்தை விலக்கி, நெஞ்சில் தன் வலது கை கொண்டுத் தட்டி, காலரைப் பற்றியிழுத்து, தன்னை நோக்கி குனியச் செய்து,
“தோத்துட்டேனா…. கடைசி வரை.. எதுக்குமே உனக்கு லைசென்ஸ் கிடைக்காது! பார்ப்போமா?” – என சிரிப்பும்,சீண்டலுமாய் வினவ,
தன் காலரிலிருந்த அவள் கரத்தை இறுகப் பற்றி, அவளை மையலுடன் நோக்கி, “பார்ப்போம்டி” என்றவனிடம், அவளும் புருவம் உயர்த்தி, தலையசைத்து சவால் விட, இருவரது private talk-ஐக் கண்டு உதட்டைச் சுழித்த gangster , “ம்க்க்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்து,
“டீல் ஓகே தானேக்கா?” என சத்தமாகக் கேட்டான்.
இரு பெரு விரல்களையும் தூக்கிக் காட்டி ‘ஓகே’ என்றவளிடம்,
“பரட்டை… வெறும் பாமரனா… பாராள்பவனா?, தெரிந்து கொள்ள… stay tuned…” – என விளம்பர பாணியில் கூறியவனைக் கேட்டு, அலெக்ஸ் கர்வமாய் முகத்தை மாற்றிக் கொள்ள, ஜெபா தோளைக் குலுக்கி விட்டு jog செய்தபடியேத் தன் வீட்டை நோக்கிச் சென்று விட்டாள்.
அவள் நகர்ந்ததும், தன் கையை மடக்கி,முறுக்கி, விறைப்பாக்கிக் கொண்ட அலெக்ஸ், “அண்ணனும் வூட்டுக்குப் போய் push-up-ஐப் போட்டு ரெடி ஆகிட்டு வர்றேன் டே!” – எனக் கூற,
“ஆன்,ஆஆஆன்! ரைட்டு ரைட்டு! நவுருங்க! நவுருங்க” எனத் துரத்தியடித்த gangster-ஐக் கண்டுகொள்ளாது, ஓரடி எட்டு வைத்தவன் பின் நின்று, திரும்பிப் பார்த்து, புருவம் சுருங்க அவனைச் சந்தேகமாக நோக்கினான்.
பதற்றத்தில் திருட்டுமுழி முழித்தபடி, “என்னாண்ணே?” – என்று புரியாமல் கேட்டவனை, தாடையை இறக்கி, முறைத்துப் பார்த்து, ஓரெட்டில் அருகே வந்து, நாக்கை மடித்தவாறு, அவன் கையைப் பின்னே வளைத்தவன்,
“கெரகம் புடிச்சவனே, என் கிட்டயே கலகம் பண்ணப் பார்க்குறியா லே?, என்னா டே உன் hidden agenda?” எனக் கேட்க,
வலியில் துடித்தபடி “விடுண்ணே, விடுண்ணே!, ப்ளீஸ்ஸ்ஸ்” எனக் கதறியவன்,
“agenda வைச்சு அக்கப்போர் பண்ற அளவுக்கு, நீ என்ன பெரிய ஆப்பிரிக்காக் காட்டுப்புலியாண்ணே?, 35 முடியுறதுக்குள்ள உனக்கு முந்தானை முடிச்சு விழுந்துடனும்ங்குற நல்ல எண்ணத்துல, அந்தக்காக் கிட்ட challenge பண்ணேன் பார்த்தியா?, என்னைச் சொல்லனும்! நீயெல்லாம் முக்தி கிடைக்குற வரை முரட்டு சிங்கிளாத் தான்-ண்ணே திரியப் போற!,” – என்று எரிச்சலும்,புகைச்சலுமாய் சாபமிட,
“ஓஓஓஓஹோஓஓஓ!!” என்றவாறு அவனது கையை ரிலீஸ் செய்தவன், “அண்ணேன் மேல உனக்கு அம்பூட்டுப் பாசமா லே?” எனக் கேட்டான்.
வலித்தத் தோளைத் தடவியபடி, “பின்ன இல்லையா?, நீ எனக்கு செஞ்ச நல்லதுக்கெல்லாம் நான் கைம்மாறு செய்ய வேணாவா?” – எனக் கடுப்புடன் கேட்டவனின், முன் நெற்றி முடியைக் கலைத்து,
“சரி சரி கோச்சுக்காத லே” என்றவன் பின், “கைம்மாறு கை தவறி, கண்டவன் பக்கம் திரும்புச்சு! மவனே! வெளக்கமாறு பிஞ்சு போகும் சொல்லிட்டேன்” என்று மிரட்டி விட்டு அவன் வீடு நோக்கிச் சென்றதும்,
ஊஊஊஊஃப்ஃப்ஃப் என ஆசுவாச மூச்சை வெளியிட்ட gangster, அவசரமாக ஓடிச் சென்று, தாஸைத் தனியே தள்ளிக் கொண்டு வந்து,
“ண்ணே!, எப்பிடியாச்சும் இன்னைக்கு நீ 5 கேம்ஸ்லயும் ஜெயிச்சுட்டேன்னு வை… ஜெபாக்கா உனக்குத் தான்!” என்றான்.
கண்களில் ஆர்வம் மின்ன, “நிஜமாவா டா?” எனக் கேட்ட தாஸ் பின், “உன்னை நம்ப முடியாதே” என்று தாடையைத் தடவ, “ப்ச்!, பரட்டை தோத்துட்டா, அந்தக்கா வீட்டுப்பக்கம் கூடத் தலை வைச்சுப் படுக்க மாட்டேன்னு இப்பத் தான்-ண்ணே என் கிட்ட சத்தியம் பண்ணிட்டுப் போறாரு” என அடிக்குரலில் படபடவெனப் பேச, “என்னா டா சொல்ற?” என்ற வியந்த தாஸிடம், “அவுரு புஷ்-அப் எடுத்து புஷ்டியாகி வரப் போறாராம்!, நீ இந்த ‘அத்தை பெத்தத் தத்தைங்களை’ விட்டுட்டு… போய் abs-ஐ ரெடி பண்ணிட்டு வா-ண்ணே” என்று தூண்டி, துரத்தி விட்டான்.
ஆளுக்கொரு புறம் அனைவரும் நகர்ந்ததும் ‘சாதிச்சுட்ட டா கணேஷூ!!, இருக்கு!! இன்னிக்கு entertainment இருக்கு!’- என்று முணுமுணுத்தவாறு குஷியுடன், உடலை ஆட்டிச் சிலிர்த்து, தன்னையே சிலாகித்துக் கொண்டவன், தானும் தயாராக வீடு நோக்கிச் சென்றான்.
உங்கள் கருத்துகளைப் பகிர...
