9.2. செண்டுமல்லி!
போட்டி 1:
காலை முதல் மாலை வரை நடைபெறவிருக்கும் பல்வேறு போட்டிகளுக்கேற்றவாறு குழந்தைகள்,பெரியவர்கள் என காலனி ஆட்கள் பலர் ஆர்வத்துடன் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்க, சேர்ந்து விட்ட பெருங்கூட்டத்தை ‘Red’ House & ‘Green’ House என இரண்டு பிரிவுகளாகப் பிரித்திருந்தனர் விழா கமிட்டியினர். ‘Red’ House captain ஆக அலெக்ஸூம், ‘Green’ House captain ஆக தாஸூம் நியமிக்கப்பட்டிருந்தனர்.
காலை வேளையில் இரண்டு போட்டிகளும், மதிய இடைவேளைக்குப் பிறகு இரண்டு போட்டிகளும், மாலை ‘டான்ஸ் பர்ஃபார்மன்ஸ்’-களுக்கு முன் கடைசிப் போட்டியும் நடத்தப்பட்டு, இரவு உணவு விருந்தின் போது முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது விழா கமிட்டி.
இந்த முறை நடனப் போட்டி தேவையில்லை என்று விட்டனர் gangster-ரும்,hunter-ரும்! பாட்டு,நடனமெல்லாம் காண்போர் மற்றும் பங்கேற்போரின் கவலைகளை மறக்கச் செய்து கொண்டாட்ட மனநிலையையும், உற்சாகத்தையும் மட்டுமே உருவாக்குவதாக இருக்க வேண்டுமென்கிற தெளிவு வந்திருந்தது இருவருக்கும். பரிசும், பாராட்டும் புகைச்சலையும்,பொறாமையையும் விளைவித்து, வெறியுடன் வெற்றியை நோக்கி ஓடவும்,தோல்வியைக் கண்டுத் துவளவும் தூண்டி விடக் கூடாதென்கிற புரிதலையும் பெற்றிருந்தனர். அதனால் வந்த முதிர்ச்சி இருவரையும் இம்முடிவை நோக்கித் தள்ளியிருந்தது.
அது போக, குதூகலமும், கும்மாளமுமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரப் பயிற்சி செய்திருந்த இருவரும் சேர்ந்தே நடனமாடவும் திட்டமிட்டிருந்தனர்.
தனது புஜத்தை எடுத்துக் காட்டும் படியான half sleeves வைத்த சாம்பல் நிற டீஷர்ட்டில் களத்திற்கு வருகை தந்திருந்த அலெக்ஸ், ‘House’ குறித்த தகவலறிந்ததும் gangster-ரிடம்,
“உன் வேலையா டே இது?, அவன் மட்டும் ‘green forest’, நான் ‘red flag’-ஆ??, மருவாதையா எனக்குப் பச்சைக் கலரை மாத்தி விடு லே” என்று பாய,
“சின்னப்புள்ளத்தனமா பேசாத-ண்ணே!, கலர் முக்கியமா?, கப் அடிக்கிறது முக்கியமா? உன்னோட Intense,Rebellious நேச்சரைக் காட்டத் தான் உனக்கு சிகப்பு கலர் கொடுத்திருக்காங்க! நீ ஒரு சிகப்பு மனிதன்-ண்ணே!” – என அவன் ஏகத்துக்கும் பாராட்டியதும், அரைகுறையாகச் சமாதானமாகியவன்,பின் gangster-green house-ஐச் சேர்ந்தவன் என்கிற சேதி தெரிந்து, வெறியாகி,
“ஓஹோஓஓஓ!!! நீ அந்தக் கோட்டிப்பய கைக்கூலியா?, இருக்க்க்க்கட்டும்லே” – என்று கறுவியபடி பல்லைக் கடிக்க,
“ப்ச், ஹவுஸ் பிரிச்சது நான் இல்லண்ணே! கமிட்டி பண்றதையெல்லாம் நீ என் கணக்குல எழுதிட்டிருக்க” எனச் சலித்துக் கொண்டவனைக் கண்டவாறு அருகே வந்த hunter,
“என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள்.
ஒரு பார்வையில் அவளை அளந்து, “கொண்டையைத் தவிர வேற ஹேர் ஸ்டைலே தெரியாதா உனக்கு?, ஆமா, நீ எந்த ஹவுஸூ?” – என வினவினான் அலெக்ஸ்.
“ரெட் ஹவுஸ்! ஏன்?”
“பார்த்தீங்களா?, நான் இல்லாட்டியும் என் பெஸ்ட்டி இருக்கா உங்க டீம்ல!, கண்டிப்பா உங்களுக்குக் கப் வாங்கிக் கொடுப்பா” – என்று நம்பிக்கையாகக் கூறிய gangster-ரை முடிக்க விடாது,
“இந்தண்ணனா red house captain?, ப்ச்ச்ச்ச்ச்” – என முகம் சுழித்துப் பெரிதாய் உச்சுக் கொட்டிய ஹாசினியை முறைத்துப் பார்த்த அலெக்ஸ்,
“வாசல்ல மாட்டி விட திருஷ்டி பொம்மையைத் தேடிட்டு இருக்காங்களாம்!, hunter காதைப் பிடிச்சு இழுத்துட்டுப் போய் கொண்டையோட hang பண்ணி விட்ருவேன் சொல்லிட்டேன்” என்று மிரட்டியதும்,
அவள் காண்டாகி, மூக்கை விடைத்து, “நான் இப்பவே போய், green house-க்கு என்னை மாத்தி விடச் சொல்லி கேட்கப் போறேன்!” என ஆத்திரத்துடன் கூற,
“ஆஆஅன்,ஆஆன் போ போ போ! அவன் தோத்துப் போய் மண்ணைக் கவ்வும் போது, நீயும் கூடச் சேர்ந்து தூர் வாரு” – எனப் பொங்கியவனைக் கண்டு ஹாசினியின் முகம் கோபத்தில் சிவப்பதை உணர்ந்து,
“ண்ணேஏஏஏஏ!” என அலெக்ஸின் கையைப் பற்றி அடக்கிய gangster, “உனக்கு வாயடக்கம் வர்ற வரைக்கும், உன் வாழ்க்கைல வசந்தம் வீச வாய்ப்பே இல்லண்ணே!” – என்று கடித்தப் பற்களுடன் முணுமுணுத்து,
“பேசுற பொண்ணுங்க எல்லார்கிட்டயும் இப்பிடி எகிறிகிட்டே இருந்தேனா, எவ-ண்ணே உன் கூட டூயட் ஆட வருவா! அப்பு தாத்தாவைப் பார்த்தும், உனக்குப் புத்தி வரலையா?, பாட்டி கிட்ட விட்டுக் கொடுத்து,இணங்கி அவரு எவ்ளோ இதமா,பதமா,பக்குவமா நடந்துக்கிறாரு! உலகத்துல இருக்குற எல்லா species-லயும் பெண் இனம் அலட்டலும்,drama-வுமாத் தாண்ணே இருக்கு! ஆண் தான் இறங்கி, மடங்கி,வளைஞ்சு,இழைஞ்சு பெண் பின்னாலேயே திரியுறான்!, இது கூடப் புரியாம நீயெல்லாம் என்னான்னு தான் வளர்ந்து நிற்குறியோ போ!” – என்று சத்தமின்றித் திட்டியவனைப் பெரிதாக விரிந்த கண்களுடன் நோக்கிய அலெக்ஸ்,
“என்னா லே தத்துவமெல்லாம் பேசுற?, எங்க இருந்துலே உனக்கு இம்பூட்டு ஞானம் வந்துச்சு?, புளியமரத்துக்குக் கீழ கஞ்சா விற்குறாங்கன்னு சொன்னியே! வாங்கி ரெண்டு இழு,இழுத்துட்டியா?”- எனக் கேட்கவும்,
“ப்ச்! ண்ணே! பொறுப்பாப் பேசு! I’m a teenager! நீ உங்க ரேடியோ ஷோ-ல indirect-ஆ போட்டுக் கொடுத்ததுல, அவனுங்க எப்பவோ கடையைக் காலி பண்ணிட்டானுங்க” என்று தகவல் தெரிவித்தவன், “அதை வுடு! நான் போய் இப்ப அவளை சரிகட்டிக் கூட்டி வர்றேன்! நீ, உரண்டை இழுக்காம அவ கூட ஒழுங்கா பேசப் பாரு!” என்று மிரட்டிச் சென்றவனைக் கண்டு,
“இங்க நீ பெரியவனா, நான் பெரியவனா லே?” என்று முதுகுக்குப் பின் கத்தியவனைப் பொருட்படுத்தாது,
கொண்டை கலைந்து, முடி முதுகைப் பரப்பி விழுமளவிற்கு, கோபத்தில் விஸ்க்,விஸ்க்கென முன்னே சென்று கொண்டிருந்த ஹாசினியின் கையைப் பற்றி நிறுத்தி, அவள் திரும்பும் திசையெல்லாம் தானும் நகர்ந்து, ஏதேதோ சொல்லி அவளைச் சமாதானம் செய்தவனைக் கண்ட அலெக்ஸிற்கு, ‘எம்ஜிஆர்-ரும், நம்பியாருமாய்’ இருந்த இருவரும் ‘தேவா-சூர்யா’-வாக மாறிப் போனதை எண்ணி சிரிப்பு வர, கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருந்தவனினருகே உர்ரென்ற முகத்துடன் வந்து நின்றாள் ஹாசினி.
தூக்கியப் புருவங்களுடன் அவளை அசட்டையாக நோக்கியவன், “என்ன??, திரும்பி வந்துட்ட?, அவன் தேற மாட்டான்னு தெரிஞ்சிடுச்சா?” – என்று மீண்டும் வம்பு செய்வதைக் கண்டு, gangster நெற்றியில் அறைந்து கொள்ள, ரோஷம் கொண்ட hunter,
“உங்களுக்கு தாஸ் அண்ணேன் history தெரியுமா?, போட்டின்னு வந்துட்டா அவரு கில்லி” என்று எகிற,
“அவன் கில்லி இல்லை பல்லின்னு நிரூபிக்கத் தான் இந்தப் பரட்டை இங்க வந்திருக்கான்” – என்றான் கெத்தாக.
“ஆ…..மாஆஆ! இவுரு பெரிய Pro-Athlete-ட்டு!” – என முணுமுணுத்தவளிடம்,
“உனக்கெதுக்கு எம் மேல இவ்ளோ காண்டு?” – எனக் கேட்டான் அவன்.
“ஏன்னா, எனக்கு உங்களைப் பிடிக்க்க்காது” – ஒற்றை விரல் நீட்டி, முகத்திற்கு நேரேயே சொன்னவளைக் கண்டு, உதட்டை வளைத்து,
“ஹே ஹேய்ய்ய்ய்ய், ஏன், ஏன், ஏன்வாம்??” – என்றான் அலெக்ஸ்.
“ஏன்னா, ஜெபாக்காவுக்கு உங்களைப் பிடிக்காது! அதனால எனக்கும் பிடிக்காது” – தோளைக் குலுக்கி அசால்ட்டாகக் கூறியவளைக் கேட்டு, சட்டென அலெர்ட்டாகி, அருகே வந்தவன், விவரம் கேட்கும் தொனியில்,
“என்னைப் பிடிக்காதுன்னா சொல்லி வைச்சிருக்கா?” – என மெல்லிய குரலில் கேட்டான்.
“ஆ…மா” – கையைக் கட்டிக் கொண்டு, தோரணையாகப் பதில் சொன்னவளிடம்,
“ஏன் பிடிக்காதாம்?” – என்றான் அவன்.
“அது எனக்குத் தெரியாது”
“காரணம் தெரியாமலே உனக்கும் என்னைப் பிடிக்காம போயிடுச்சாக்கும்?”
“யெஸ்ஸ்ஸ்”
“வேற என்ன-லாம் சொல்லுவா என்னைப் பத்தி”
“Fraud, liar, cheap fake, scammer!” – ஸ்டைலாகச் சொன்னவளை நிறுத்தி,
“இங்கிலிஷ்லயா திட்டுவா?” – என ஆச்சரியமாகக் கேட்டவனிடம்,
“ப்ச்,ப்ச்! ஏமாத்துக்காரன்,எமகாதகன்,செத்தப் பய,நாறப் பய-ன்னு நெல்லை ஸ்லாங்ல திட்டுவாங்க” – என்று விளக்கமளித்தாள் hunter.
“அதான பார்த்தேன்! ஆனா, hunter-ரு, அதெல்லாம் உண்மையில்ல!, அண்ணேன் அப்படியானவன் கிடையாது! அது அவளுக்கும் தெரியும்! இப்ப எங்க ரெண்டு பேருக்கிடையில சும்மா… சின்னதா.. ஒரு லடாய்! நீயும்,gangster-ரும் சண்டை தீர்ந்து சமாதானமாகிட்ட மாதிரி, நானும், அவளும் கூட சீக்கிரமே சரியாய்டுவோம்! நீ… அண்ணனை இப்பிடியெல்லாம் பேசப்படாது சரியா?” – என நைச்சியமாகப் பேச முயல,
“ம்க்கும்” என நொடித்துக் கொண்டவளை, எப்படி வழிக்குக் கொண்டு வருவதென யோசித்துப் பின் நினைவு வந்தவனாக,
“hunter-ரு!, நீ எக்ஸாம் முடிஞ்சதும் ஹாலிடேஸ்க்கு ‘azerbaijan’ கூட்டிப் போகச் சொல்லி உங்கப்பா கிட்ட கேட்டிருந்தியா?” – எனக் கேட்டான்.
அவன் கேள்வியில் ஆச்சரியம் கொண்டு, கட்டியிருந்தக் கைகளைப் பிரித்து, விழிகளை விரித்து, “ஆஆஆமாஆஆ! உங்களுக்கு எப்பிடித் தெரியும்??” என்றவளிடம் காலரைத் தூக்கி அலட்டி விட்டு,
“உன் ஆசைப்படி உங்கப்பா டிக்கெட் புக் பண்ணிட்ட விவரம் உனக்குத் தெரியுமா?” என்றான்.
“என்ன்ன்ன்ன?, நிஜ…மா…..வாஆஆஆஆ?” – வாயைப் பிளந்து, உற்சாகத்தில் அவன் கையைப் பற்றிக் கொண்டு துள்ளிக் குதித்தவாறு கேட்டவளின் ஆட்டத்திற்கேற்ப, மெல்லிய சிரிப்புடன் தலையை ஆட்டியவன்,
“என் நண்பனோட ட்ராவல் ஏஜென்ஸி வழியாத் தான் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறாரு! உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு சொல்லாம வைச்சிருக்கிறாரு போல!, எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் reveal பண்ணுவார்” – எனக் கூறியதும்,
“ப்ச்!, அப்புறம் ஏன்-ண்ணே நீ இப்ப சொன்ன?” என்று சலித்துக் கொண்டவள், பின் “இல்ல,இல்ல! இப்ப தெரிஞ்சதும் நல்லதுக்குத் தான்! Instagram spots எல்லாத்தையும் நான் பொறுமையா லிஸ்ட் பண்ணி வைக்கக் கரெக்டா இருக்கும்! இன்னும் ஷாப்பிங், க்ரூமிங்… ஓ மை காட்!!” என விரல்களை உதறியவாறு அடுக்கிக் கொண்டே சென்றவளைக் கண்டுப் பயந்து,
“ஏய்ய்ய் ஏய்ய்ய்…. அதெல்லாம் எக்ஸாம்ஸ் முடிஞ்சப்புறம் தான்! நீ பாட்டுக்க கனவு கண்டு, படிக்காம விட்டு, பெயிலாப் போய்டாத! உங்கப்பா என்னைய நொறுக்கிடுவார் அப்புறம்” என்றான் அலெக்ஸ் அவசரமாய்.
“எங்கப்பாவை உங்களுக்குத் தெரியுமா?” – வியப்புடன் வினவியவளிடம்,
“தெரியாம என்ன! கண்ணாடியைத் துடைங்க சார்!, அப்பத் தான் vision, clear-ஆ இருக்கும்ன்னு அட்வைஸ் பண்ணி, Foggy glasses-ஓட சுத்துனவருக்கு HD quality-ஐக் காமிச்சு விட்டதே நான் தான்!” – அவன், அலட்டாது கூறவும்,
அவனது பிரத்தியேக பாஷை புரிந்த புத்திசாலியான gangster, அதுவரை இருவரும் மல்லுக்கட்டியதைக் கண்டு கொள்ளாது நின்று விட்டு, இப்போது “ண்ணே!!! இவுங்க வாழ்க்கைலயும் BGM வாசிச்சிருக்க போல” – என உச்சஸ்தாதியில் கூவ,
“என்ன சொல்றீங்க ரெண்டு பேரும்?” –புரியாமல் கேட்ட ஹாசினியிடம்,
“ப்ச்! அதை வுடு! இப்ப நீ ஹாப்பியா இல்லையா?” எனக் கேட்டான் அலெக்ஸ்.
“ரொம்ம்ம்ம்ம்ம்ப ஹாப்பி!!!” -இரு கைகளையும் குவித்துக் கன்னத்தடியில் வைத்து, தோளைத் தூக்கிக் குதூகலமாய்க் கூறியவளிடம்,
“hunter-ஐ இன்ன்ன்ன்ன்னும் கொஞ்சம் ஹாப்பியாக்கிக் காட்டவா???” – பாண்ட் பாக்கெட்டுக்குள் இரு கைகளையும் நுழைத்து,அவள் புறம் சாய்ந்து தலையாட்டிக் கேட்டவனிடம்,
“எப்ப்ப்பிடி?” – என ராகம் பாடியவளுக்குப் பதிலாக,
“இப்ப்ப்ப்ப்ப்பிடி…” எனத் தன் இடது உள்ளங்கையை விரித்துக் காட்டினான் அலெக்ஸ்.
அதில், அவள் தோற்றத்தைப் போலவே கொண்டையுடன்,Baggy ஜீன்ஸ்,டீஷர்ட் அணிந்திருந்த சிறிய பொம்மை வடிவ ghibli Anime Phone charm-ஐக் கண்டு, ‘வாஆஆஆவ்வ்வ்’ என முழுப் பற்களையும் காட்டி அழகாய்ச் சிரித்த hunter, வேகமாய் அதைப் பறிக்க முயல,
பட்டெனக் கையைத் தன் புறம் இழுத்துக் கொண்டவன், கண்கள் சிரிக்கச் செல்லமாக முறைத்தவாறு, தன் வலது கையை நீட்டி,
“Partners???” – எனக் கேட்டான்.
தானும் தாடையை உயர்த்தி மெலிதாய் முறைத்தவள், அவனது நட்பழைப்பை ஏற்றுக் கொண்டு, அவன் கையில் தட்ட, உள்ளங்கையை விடுத்து, நான்கு விரல்களை மட்டும் கோர்த்துக் குலுக்கிக் கொண்ட இருவரும்,
“Day or Night-ட்டு! Red house wins the fight-ட்டு!!” – எனக் கத்தித் தங்களது house-சின் anthem-ஐப் பதிவு செய்து அந்நாளுக்கான ஆர்ப்பாட்டத்தை ஜெகஜோதியாகத் தொடங்கி வைத்தனர்.
அதன் பின் கொஞ்சம்,கொஞ்சமாகக் கூட்டம் சேரத் தொடங்கி விட, கமிட்டியினர் மைக்கில் “முதல் போட்டியான ‘Snatch the Cup’-க்குப் பெயர் கொடுத்திருந்த ஜூனியர்ஸ்,சீனியர்ஸ் அனைவரும் மேடைக்கருகே வருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்” என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
தாங்களாகவே முன்னே வந்து நின்று விட்டவர்களையும், பெயர் கொடுத்ததையே மறந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தவர்களையும், ‘ஐயோ, இவ்ளோ நேரம் இங்க தான் திரிஞ்சான்! இப்பத் தான் அர்ஜெண்ட்-ஆ ஆய் வருதுன்னு வீட்டுக்கு ஓடுனான்! இருங்க ஃபோன் பண்ணி வரச் சொல்றேன்’ – என்று சிலரும், ‘ஆசைக்குப் பேர் கொடுத்துட்டேன், இப்பக் கலந்துக்கிறதா வேணாவா’-என்று தயக்கம் காட்டிய பலரும்- என சுமார் இருபது,முப்பது நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தக் குழப்பம், குளறுபடிகளுக்கு மத்தியில், பெயரளித்த 32 பேரையும் ஒன்று திரட்டுவதற்குள் கமிட்டியினருக்கும், ஹவுஸ் கேப்டன்களுக்கும் நாக்கு தள்ளி விட்டது.
“அடுத்தடுத்தப் போட்டிக்குப் பெயர் கொடுத்தவங்கள்லாம் முன்னாடியே வந்து உட்காரப் பாருங்கப்பா!, இத்தினி நாற்காலி போட்டிருக்கிறது எதுக்கு, சும்மா காத்து வாங்கவா?, காசுக்குப் பிடிச்ச கேடு!, ‘விழா எடுங்க! போட்டி நடத்துங்க! பொழுதுபோக்கு வேணும், பொரிஉருண்டை வேணும்ன்னு’ உருண்டு,புரண்டு அழுதா ஆச்சா?, கொஞ்சமாவது கோ-ஆப்பரேட் பண்ண வேணாமா?” – கமிட்டியைச் சேர்ந்தப் பெரியவர் ஒருவர்,விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வெறியாகி கத்தத் துவங்கி விட,
“ஐயா ஐயா! டென்ஷன் ஆகாதீங்கய்யா!,இதெல்லாம் இருக்கிறது தான?, ஆரம்பிக்கும் போது குழப்பம் வர்றது சகஜம் தான்!, போகப் போக, எல்லாரும் ஆர்வத்துல ஒன்னு கூடிருவாங்க! சத்தம் போடாதீங்க நீங்க!” – என்று பல பெருசுகள் சேர்ந்து அவரைச் சமாதானப்படுத்தி ஒரு வழியாக, பச்சைக் கொடியைக் காட்டி போட்டியைத் துவக்கி வைத்தனர்.
அதன் படித் தொடங்கிய ‘Snatch the Cup’ -போட்டியின் விதிமுறைகள் கீழ்கண்டவாறு பங்கேற்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தமாகப் போட்டியில் பங்கேற்ற 32 பேரில், 16 பேர் Red house -ஐச் சேர்ந்தவர்கள். மீதி 16 பேர் Green house-க்கானவர்கள்!
அனைவரும் மேடைக்குக் கீழே பெரும்பரப்பை ஆக்கிரமித்து, ஜோடி,ஜோடியாக (16 vs 16) நேரெதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ஜோடியின் நடுவிலும் ஒரு பேப்பர் கப் இருந்தது.
கமிட்டியினர் மைக்கில், ‘Head, shoulders, knees, toes’ – என்று பாடத் தொடங்குகையில், பாட்டில் வரும் வார்த்தைக்கேற்றவாறு தங்கள் உடல் பாகத்தை, அதாவது Head என்றால் தலையையும், Knees என்றால் முட்டியையும் அவர்கள் பாடும் வேகத்துக்குத் தொட வேண்டும். திடீரென இடையில் ‘Cup’ என்பார்கள். அப்போது… இருவருக்கும் நடுவில் இருக்கும் cup-ஐ, இருவரில் எவர் கைப்பற்றுகிறாரோ அவரே ‘winner’ ஆவார்.
ஆக, மைக்கில் வரும் வார்த்தைகளை கூர்மையாகக் கேட்டு, cup-ப்பின் மீதே கண்ணாக இருந்து.. சரியான தருணத்தில், மின்னல் வேகத்தோடு விரைவாகச் செயல்பட்டு எதிராளியை முந்திக் கொண்டு cup-ஐக் கைப்பற்ற வேண்டும்! இது தான் போட்டி விதி!
இப்படி, 4 சுற்றாக நடக்கும் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்களோ, அதற்கேற்றவாறு ‘House Points’ add செய்யப்படும். ஜெயிக்கும் ஒவ்வொரு நபருக்கும் 10 points. கடைசியாக நடக்கும் சுற்று House Captains-களுக்கானது! அந்தச் சுற்றில் ஜெயிப்பவருக்கு சுளையாக ’50 points’ தரப்படும்! அந்தச் சுற்றின் முடிவில் சேரும் மதிப்பெண்களே இப்போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.
முதல் சுற்றில், பெரியவர்கள்,குழந்தைகள் எனக் கலவையாக இருந்த பங்கேற்பாளர்களில் அவரவருக்கேற்றவாறான எதிரணியினரை நிறுத்தி, 16 red vs 16 green challenge-ஐத் தொடங்கினர் கமிட்டியினர்.
பங்கேற்பாளர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் அவர்களைச் சுற்றி நின்று ஆளுக்கொரு ‘house’-ஐ ஆதரித்துக் கோஷம் போடத் துவங்கி விட,
மைக்கில் மாற்றி மாற்றி வந்த ‘Head,shoulder,knees,toes’-க்கு ஏற்றவாறு உடலை அசைத்து பங்கேற்பாளர்கள் அனைவரும் கூச்சமும்,சிரிப்புமாகக் குனிந்து,எழுந்து கொண்டிருந்தனர்.
திடீரென மைக் ‘Cupppppp’-என்று விட, ஜெட் வேகத்தில் அடித்துப் பிடித்து, தலையை இடித்து, விழுந்து, உருண்டு, முழு முயற்சியுடன் எதிரியிடமிருந்து, ஆளாளுக்குக் கப்பைப் பறித்து விட்டிருந்தனர்.
முதல் சுற்றின் இறுதியில், Red house-ல் ஏழு பேர் ஜெயித்து 70 points-ஸூம், Green house-ல் 9 பேர் ஜெயித்து 90 points-ஸூம் ஸ்கோர் செய்திருந்தனர்.
ஸ்கோரைக் கண்டு கையைத்தட்டி தாஸூம்,gangster-ரும் high-five செய்து கட்டி அணைத்துக் கொள்வதைக் காண்டுடன் நோக்கிய அலெக்ஸ், தனது ஹவுஸ் ஆட்களை cheer செய்து, தோள் தட்டிக் கொடுத்து ‘Red டா! fire டா!’ என்று அதீதமாகக் கூவி ஸ்ருதி ஏற்றி அடுத்த சுற்றுக்குத் தயார் செய்தான்.
இரண்டாவது சுற்று, 8 Red vs 8 Green-ல் தொடங்கியது. அதில் Red house 50 points-சும், Green house, 30 points-சும் பெற்றதில், இப்போது இரண்டு ஹவுஸ்களும் ஆளுக்கு 120 பாய்ண்ட்ஸ்கள் பெற்று tie-ல் இருந்தனர்.
மூன்றாவது சுற்று 4 Red vs 4 Green-quick elimination. இதன் பிறகு 1 to 1 சுற்று மட்டுமே! அதனால் இரண்டு டீம்களும் அதிக மதிப்பெண்களை ஸ்கோர் செய்தாக வேண்டியக் கட்டாயத்திலிருந்தனர்.
பங்கேற்பாளர்களோடு இரு டீம் கேப்டன்களும், வட்டம் போட்டு ஆலோசனை செய்து, பலமான ஆட்களை இறக்கியதில், இம்முறை Red house-ல் ஒருவரும், Green house-ல் மூவரும் ஜெயித்து விட, அதனால் ஸ்கோர் போர்ட் Green-வசம் சென்றதில், அவர்கள் 150 பாய்ன்ட்ஸ்களுடன் முதல் இடத்திலும், Red house 130 பாய்ன்ட்ஸ்களுடன் இரண்டாம் இடத்திலுமிருந்தது.
இப்போது இறுதிச் சுற்றான ‘Captains Face off’-ல் Red house ஜெயித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது.
‘இந்தத்தடவை உன்னை தோற்கடிக்காம விட மாட்டேன் டா’-என முதலிடத்திலிருக்கும் தைரியத்தில் நக்கலாக உதட்டை வளைத்தபடித் தாஸூம், ‘வா லே வா! கில்லியைக் கிள்ளிப் போட்டு கடைஞ்செடுத்து சாறு குடிக்கிறேன்’– எனக் கறுவியபடி அலெக்ஸூம் நின்றிருக்க,
“ண்ணே!, வுட்றாதண்ணே” – என்று gangster அந்தப் பக்கம் தாஸின் காதைக் கடித்தானென்றால்,
“ண்ணே!, knees-ன்னா முட்டி, toes-ன்னா காலு!, மாத்தித் தொட்டு மானத்தை வாங்கிடாத!” – என்று இங்கு அலெக்ஸின் காதில் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் hunter.
“முதல் போட்டியில ஜெயிக்கப் போறது Red-ஆ?, Green-ஆ?, க்யூட்டான் vs காட்டான்! கப் யார் கைல சிக்குதுன்னு பார்த்துடலாமா?” – என மைக்கில் நக்கலடித்த தொகுப்பாளர், ‘Game, starts!’ என்றதும்,
பொறுமையாக ‘Head,shoulder,knees,toes’ – எனப் பாட்டு போய்க் கொண்டிருக்க, கப்பின் மீதும், எதிராளியின் மீதும் பார்வையை வைத்தவாறு, மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என சென்று கொண்டிருந்த இருவரும், ‘Cu…..’ என மைக் தொடங்கியதும், அவசரமாகக் குனிந்து கப்பை எடுக்க எத்தனிக்கையில், தொகுப்பாளர் ‘cupcake’ என்று விட, எரிச்சலுடன் பல்லைக் கடித்தபடி நிமிர்ந்தனர்.
இப்படியாக ‘கப்-சிப், கப்சா, cupboard’ என மேலும் பல முறை வெறியேற்றி, இருவரையும் பெண்டு நிமிர்த்தி, கட்டக் கடைசிஇஇஇஇஇயாக ‘Cu….ppppp’ என்கையில், பட்டெனக் குனிந்த அலெக்ஸ், தாஸின் தலை, தன் தோளை இடித்துப் பின்னே தள்ளியதில், உட்கார்ந்தவாக்கில் கீழே விழச் சென்று… கடைஐஐஐஐசி நொடியில், நுனி விரலில் கப்பைக் கைப்பற்றி, பல்ட்டி அடித்து எழுந்து நின்று, இறுகப் பிடித்திருந்த கப்பைத் தூக்கிக் காட்டி, உற்சாகத்தில் எகிறிக் குதிக்க….
அதுவரை இருவரையும் மூச்சு விடாது பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் பெரிதான கரகோஷத்தை எழுப்பி ‘Red house, Red house’ என chant செய்யத் துவங்கவும், house ஆட்கள் அனைவரும் அலெக்ஸை சுற்றிக் குதித்து, பூரிப்புடன் ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டனர்.
Gangster-ருக்கு உள்ளே குதூகலமாயிருந்தாலும் மறைத்து, கடுப்பும், வெறுப்புமாக நின்ற தாஸிடம், சமாதானக் குரலில் ‘வுடுண்ணே, வுடுண்ணே நமக்கு இன்னும் 4 சான்ஸ் இருக்கு! மனசைத் தளர வுடாத” எனத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.
போட்டி -2:
இடைவேளைக்கு இடம் கொடுத்தால், கூடியிருந்த அனைவரையும் மீண்டும் இழுத்துப் பிடிப்பது இம்சையான வேலை என்பதால், அடுத்தப் போட்டியையும் உடனே தொடங்கியது விழாக் கமிட்டி.
தண்ணீர்,டீ,ஜூஸ் பாட்டில்களென அங்கு கிடைத்தவற்றைப் பருகி விட்டு, முந்தைய போட்டியில் பங்கு பெற்றப் பல சிறுவர்,சிறுமிகள் இதிலும் சேர்ந்து கொண்டனர்.
மடக்,மடக்கெனத் தன் கையிலிருந்த மேங்கோ ஜூஸில் பாதியைக் குடித்த hunter, அருகேயிருந்த அலெக்ஸிடம் மீதியை நீட்டி விட்டு, இடையில் கை வைத்தவாறு முன்னே நின்றிருந்த பங்கேற்பாளர்களை நோட்டமிட்டாள்.
“இந்தத் தடவை நான் இறங்குறேன்-ண்ணே!” – கூட்டத்தைப் பார்த்தபடி கூறியவளிடம்,
“அந்தப் பக்கம் gangster-ரும் இறங்குறான்” – என்றான் அலெக்ஸ்.
“அதனால??” – புருவம் சுழித்தவளிடம்,
“நீ பாட்டுக்க, உன் நண்பனுக்கு விட்டுக் கொடுக்குறேன்னு, என் பொழப்புல மண்ணள்ளிப் போட்றாத!” – என்று அவன் கூற,
“ப்ச்,ப்ச்,ப்ச்! போட்டின்னு வந்துட்டா.. நான் செண்டிமெண்ட்ஸே பார்க்க மாட்டேன்-ண்ணே” – இரும்புக்குரலில் கூறியவளைக் கேட்டு,
“அதுசரி!,அப்ப நம்ம பய தான் ஏமாளி போல” – என முணுமுணுத்தவனிடம்,
“என்னாது?” – என்று அவள் குரல் உயர்த்த,
“உனக்காக அவன் விட்டுக் கொடுத்துட்டான்னா?” –கொக்கி போட்டவனைக் கண்டுத் தோள்களைக் குலுக்கி,
“மாட்டான்!, நான் கடைசி வரை tough fight கொடுப்பேன்னு அவனுக்கு நல்லாஆஆஆத் தெரியும்” – பெருமையாகக் கூறியவளிடம் உதட்டைப் பிதுக்கியவன், “இதுங்க பெரிய Naruto and Sasuke! ஆளைப் பாரு” என்று வம்பு செய்யும் நேரம், தொகுப்பாளர் தன் அறிவிப்பைத் தொடங்க, குடித்த பாட்டிலைக் குப்பையில் எறிந்து விட்டு இருவரும் களத்திற்கு விரைந்தனர்.
Straw-Sip Express – என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் போட்டி ஒரு Relay Race. பங்கேற்கவிருந்த 16 போட்டியாளர்களில் Red house-ச் சேர்ந்த 8 பேர் ஒருபுறமும், Green house-ஐச் சேர்ந்த 8 பேர் மறுபுறமும் ஒருவரின் பின்னே ஒருவராக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இரு அணிகளுக்கும் முன்னே, 3 மீட்டர் தூரத்தில் இரண்டு மேசைகள் போடப்பட்டு அதன் மீது காலியான கண்ணாடி பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
Red house-ச் சேர்ந்தவர்களின் கையில் சிகப்பு நிற straw-க்களும், Green house-ஐச் சேர்ந்தவர்களின் கையில் பச்சை நிற straw-க்களும் கொடுக்கப்பட்டிருந்தன.
போட்டி ஆரம்பித்ததும் அணியினர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட straw-வை மூக்கிற்கும், மேலுதட்டிற்கும் இடையே balance செய்து, கீழே விழுந்து விடாமல் lock செய்து, விறுவிறுவென முன்னே நடந்து சென்று, மேசை மீதிருக்கும் பாட்டிலினுள் இட வேண்டும்! முக்கியமாகக் கைகளை உபயோகிக்கக் கூடாது. கைகளிரெண்டும் பின்னே கட்டப்பட்டிருக்கும்.
முதலாமவர் வெற்றிகரமாக straw-வை பாட்டிலினுள் இட்டதும், வேகமாக ஓடி வந்து, அடுத்து நிற்பவரின் தோள் தட்டி tag செய்ய வேண்டும். அதன் பின் தான் tag செய்யப்பட்ட நபர் தன்னுடைய straw-வை பாட்டிலில் இட முடியும்! எந்த அணி குறைந்த நேரத்தில் straw-க்கள் அனைத்தையும் பாட்டிலினுள் இடுகிறதோ, அந்த அணியே வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவர்.
தப்பித் தவறி, இடையில் எவருடைய straw-வேனும் கீழே விழுந்து விட்டால், அவர் ஆரம்பித்த இடத்திற்கே வந்து மீண்டும் தொடங்க வேண்டும்.
போட்டி விதிகள் கூறப்பட்டுக் கொண்டிருந்த போதே, கையிலிருந்த straw-வைத் தங்களது மூக்கிற்கும்,உதட்டுக்கும் இடையில் பொருத்தி, வாயைக் குவித்து balance செய்ய முயன்ற பலருக்கு, ‘கெக்கே,பெக்கே’-வென சிரிப்பு வந்ததில், அடுத்தடுத்துக் கீழே விழுந்த ஸ்ட்ராக்களைப் பார்த்து, பங்கேற்பாளர்களாக இருந்த பல அக்கா-மார்கள், ஒருவரையொருவர் கேலி செய்து விழுந்து,விழுந்து சிரித்தபடி முழுப்பற்களையும் காட்டியவாறு நின்றிருந்தனர்.
இந்த chaotic situation-ஐக் கண்டு பதறி அருகே ஓடி வந்த அலெக்ஸ், “க்காஆஆ,க்காஆ… நீ களுக்-ன்னு சிரிச்சேனா, கிளுக்கு-ன்னு straw கீழ விழுந்துரும்! அப்புறம் நாம எல்லாரும் கேம்க்கு முழுக்கு போட்டுட்டு வீட்டுக்குப் போக வேண்டியது தான்!, கொஞ்சம் சின்சியாரிட்டி காட்டுக்கா ப்ளீஸ்” – என்று கெஞ்ச,
“நாங்க எங்க சின்சியாரிட்டியை ஏற்கனவே சமையலறையில காட்டிட்டுத் தான் வந்திருக்கோம் captain! இது ஜஸ்ட் விளையாட்டு தானேப்பா?” – என பதிலுக்குக் கலாய்த்தார் அக்கா.
“கொட்டைக்குள்ள பருப்பு இருக்கிற மாதிரி, விளையாட்டுக்குள்ளயும் வினை இருக்கே-க்கா?”
“என்னா வினை?”
“ம்ம்ம்ம், செயப்பாட்டு வினை” – ஆண்ட்டிகளின் அலப்பறையைக் கண்டு அப்செட்டாகியிருந்த hunter.
“அப்டின்னா?” – பின்னேயிருந்து வந்த குரலுக்கு,
“அதாவது, நான் Straw-Sip Express விளையாட்டு விளையாடினேன்! இது செய்வினை! Straw-Sip Express விளையாட்டு, என்னால் விளையாடப்பட்டது – இது செயப்பாட்டு வினை” – பொறுமையாக விளக்கம் அளித்தவனைக் கேட்டு அணியினர்,
“ஏஏஏஏ சூப்பர் -ப்பா!” – எனப் பாராட்ட,
“பரவாயில்ல! கேப்டன் பார்க்க, மாக்கான் மாதிரி இருந்தாலும், மண்டையுள்ளவராத் தான் இருக்குறாரு” – மோவாயில் கைவைத்துக் கேலி செய்தவர்களிடம்,
“க்கோவ் நக்கலா?, நான் தமிழ் 2nd paper-ல 93 மார்க் தெரியுமா?” – என ரோஷமாகக் கூறியவனைக் கேட்டு,
“சும்மா அடிச்சி விட வேண்டியது தான்!, நாங்க என்ன செக் பண்ணி பார்க்கவா போறோம்!” – என்ற hunter-ரை அவன் முறைத்த வேளை போட்டி துவங்குவதாக அறிவித்தது விழாக் குழு.
இரு அணிகளிலும் முதலில் நின்றிருந்த நபர், straw-வை பாலன்ஸ் செய்து, வந்த சிரிப்பை அடக்க முடியாது, உதடு நெளிய, கண்ணை மூடிக் கொண்டு விறுவிறுவென முன்னே நடந்து சென்று, மொல்லமாகத் தலையைச் சாய்த்து, கையை உபயோகிக்காமல் பாட்டிலுக்குள் நுழைக்க முயற்சித்தனர்.
ஒவ்வொரு அணியிலும் அடுத்தடுத்து நின்றிருந்த 8 பேரில், சிலர் கலகலவெனச் சிரித்து straw-வைக் கீழே விட்டு, இடறி விழுந்து மறுபடி முதலிலிருந்துத் தொடங்கி என அக்கப்போர் செய்து கொண்டிருக்க, ஆடியன்ஸோடு நின்றிருந்தத் தாஸூம்,அலெக்ஸூம் தங்களது டீம் ஆட்களின் சேட்டைகளைக் கண்டு ‘அவ்ளோ தான் அவ்ளோ தான்!’, ‘ஓடு,ஓடு சீக்கிரம்’, ‘மெதுவா தலையைச் சாய்ங்க’, ‘விழப் போகுது, விழப் போகுது’, ‘ஐயோஓஓ’ – என்று விதவிதமான எக்ஸ்ப்ரஷன்களுடன் துள்ளி,குதித்து, கத்திக் குவித்துக் கொண்டிருந்தனர்.
இது போதாதென்று, green house-க்காக இறங்கிய gangster, straw-வை நுழைக்கிறேன் என்ற பெயரில், பதற்றத்தில் தலையைப் பலமாக அசைத்து, பாட்டிலைத் தட்டி விட்டு, உள்ளிருந்த ஸ்ட்ராக்கள் அத்தனையையும், தரையில் தள்ளியிருந்தான்.
‘ஓஓஓஓஓஓ’ – எனக் கடுப்பில் பிடரி முடியை இறுகப்பற்றி கண்களை அழுந்த மூடித் திறந்த தாஸ், ‘டேய்ய்ய்ய் நீ நல்லவனா, கெட்டவனா டா’ எனப் பல்லைக் கடித்தவாறு, gangster-ரின் காலரைப் பற்ற,
எதிரணி சொதப்பியதில் இங்கு, ‘ஹாஹாஹோஹோ’-வென சிரித்து உற்சாகம் கொண்ட hunter-ரும்,அலெக்ஸூம் ஹை-ஃபைவ் அடித்துக் கொண்டாடித் தீர்த்தனர்.
மீண்டும் அனைவரும் முதலிலிருந்துத் தொடங்குமாறு green house-சிடம் தொகுப்பாளர் கூறுகையில், 4 straw-க்களுடன் முன்னணியிலிருந்தது red house.
உச்சுக் கொட்டி அலுத்துக் கொண்டாலும், விளையாட்டில் இதெல்லாம் சகஜமென்பதால்,முன்பை விடத் தீவிரமாக முழு வேகத்துடன் விளையாடியது green house.
5-க்குப் பிறகு அடுத்தடுத்து அக்காமார்களோடு red house மெல்லத் திணறத் தொடங்குகையில் அவர்கள் அதி வேகத்துடன் 4-வது ஸ்ட்ராவை பாட்டிலில் இட்டுக் கொண்டிருந்தனர்.
அடுத்து red house-6, green house-5 என்ற நிலை வந்த போது, இறுதியாக நின்றிருந்த சிறுவனுக்கும்,hunter-ருக்கும் ப்ரஷர் அதிகமாகியது.
பதட்டத்தில் வியர்வை பூக்க, பரபரப்புடன் “சீக்கிரம்,சீக்கிரம் ஓடி வாங்க ஆன்ட்டி” என்று கத்திய hunter, “கவின் நான் சொன்ன மாதிரி ஓடும் போது breath-ஐ hold பண்ணிக்கோ! பாட்டிலுக்கு முன்னாடி நின்னதும் தலையைக் குனிஞ்சிடாத! முதல்ல Body-ஐ கீழ கொண்டு போய்ட்டு, அப்புறமா ஸ்ட்ராவை பாட்டிலுக்குள்ள போடு” என்று அறிவுறுத்த, தலையாட்டிய சிறுவனும், அவள் சொன்னவாறு விரைவாக ஓடிச் சென்று பாட்டிலினுள் இட்டு விட்டான்.
கடைசியாக hunter தொடங்குகையில், எதிரணி 7-வது ஸ்ட்ராவை பாட்டிலில் போட்டுக் கொண்டிருந்தது.
Hunter வேகமாக இரண்டு எட்டு எடுத்து வைத்ததும் ஸ்ட்ரா கீழே விழுந்து விட, ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ என டென்ஷன் ஆன கூட்டத்தை உணர்ந்தும் தடுமாறாமல், மீண்டும் நின்ற இடத்திலிருந்து நிதானமாகத் தொடங்கியவள், இம்முறை கடகடவென விரைந்து சென்று, மெல்ல உடலைக் கீழே இறக்கி, பாட்டிலின் வாய்க்கு நேராக ஸ்ட்ராவின் ஒரு நுனியை நிறுத்துகையில், திடீரென எதிர்ப்புறக் கூட்டத்தில் விசில் பறக்க, அங்கு gangster, ‘ஜி பூம் பா’ போட்டது போல பாட்டிலின் முன் நின்றிருந்தான்.
கண்களை அழுந்த மூடித் திறந்தவள், தன்னை ஒரு நிலைப்படுத்தி, மெதுவாக, ஸ்ட்ரா நுனியை பாட்டிலினுள் செலுத்த, கீழே விழப் போவது போல லேசாக ஆடி,அசைந்து பயமுறுத்திய ஸ்ட்ரா, கடைசியில் பட்டென உள்ளே விழுந்து நின்றது.
இவளது ஸ்ட்ரா உள்ளே விழுகையில், எதிர்ப்புறம் gangster-ரின் ஸ்ட்ரா நுனி, பாட்டிலின் முகப்பைத் தொட்டுக் கொண்டிருந்த படியால், red house- winner என்று அறிவிக்கப்பட, அதிவேகத்தில் ஓடி வந்துத் தன் இரு கைகளையும் பற்றிய அலெக்ஸைப் பிடித்தவாறு ‘ஹேஏஏஏஏஏ’-வெனக் ஆர்ப்பரித்துத் தன் பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் ஹாசினி.
தாஸை நோக்கி ‘சாரிண்ணே’ என உதட்டைப் பிதுக்கிய gangster, இவர்களது அலும்பைக் கண்டு சிரிப்புடன் கையைத் தட்டி, Red house-ற்கு வாழ்த்து கூற, அவன் பொடனியில் அடித்து ‘நடிக்குறியா லே, நாறப்பயலே’ என்று திட்டிய அலெக்ஸிடம், “ண்ணேஏஏஏ!!!! நிஜமாவே நீ ஜெயிக்குறதுல எனக்கு சந்தோசம் தான்-ண்ணே!” என்று விளக்கமளிப்பவனை மூக்கு விடைக்க, சுருங்கிய கண்களுடன் சந்தேகமாக நோக்கிய தாஸ், அவனைத் தனியே அழைத்து,
“அவன் ஜெயிக்கனும்ங்குறதுக்காக வேணும்ன்னு தான பாட்டிலைத் தட்டி விட்ட?” என விசாரித்தான்.
“ண்ணே!! என்னாண்ணே இப்பிடிக் கேட்குற?, நான் போய் அப்பிடிப் பண்ணுவேனா?, ஆப்போசிட் டீம் ஜெயிக்குறதுல எனக்கு என்னா-ண்ணே லாபம்?, இவ்ளோ தான் என் மேல உனக்கு நம்பிக்கையா?, ப்போ-ண்ணே” – எனக் கோபித்துக் கொண்டவனை நம்ப முடியாது தாடையைத் தடவியவன்,
“இல்லாட்டி, Day 1 As a Spy-ன்னு ரீல்ஸ் எதுவும் shoot பண்ணிட்டிருக்கியா டா?” என மீண்டும் கேட்டான்.
“ண்ணேஏஏ!” – என முகத்தைச் சுருக்கி எரிச்சல்பட்டவனிடம்,
“உண்மையைச் சொல்லு டா!, நீ அவன் பக்கமா?, என் பக்கமா?” – என பொசசிவ் நெஸ்ஸில் தழுதழுத்த நாக்குடன், பாவமாகக் கேட்டவனது விரலைத் தட்டி விட்டு,
“நான் வெற்றியின் பக்கம்-ண்ணே” – என சாய் பாபாவின் அபய முத்திரையைப் போலக் கையை உயர்த்திக் காட்டி சாந்தமான முகத்துடன் கூறியவனிடம்,
“அப்ப Red house-க்குப் போடா” – என்று தாஸ் சீறவும்,
“ப்ச், வெற்றியே நம்ம பக்கம் தான்-ண்ணே” என்று குழப்பினான் gangster.
“என்னா டா சொல்ற?” – வெறியாகி,கோபப்பட்டவனிடம்,
“5-கேம்ல, ஒன்னுல நீ ஜெயிச்சாலும், அவரு தோத்ததாத் தானே கணக்காகும்! இது கூடப் புரியாம, என்னா-ண்ணே நீயி?” -என லாஜிக் பேசினான் gangster.
“அப்பிடி வர்றியா நீயி?”
“பின்ன?”
குழப்பத்துடன் புருவங்களை நெரித்தபடி மௌனமாகி விட்டவனிடம்,
“இன்னும் என்ன யோசனை?, வா-ண்ணே! நான் தான் இருக்கேன்ல! எல்லாஆஆஆத்தையும் நான் பார்த்துக்கிறேன்!” என்று சமாளித்தவனை நோக்கி,
“ஜெபாஆஆஆ…” என்று தயங்கி இழுத்த தாஸைக் கண்டு,
“ப்ச்! அக்கா…. உங்களுக்குத் தான்-ண்ணே!” – ரீகன்ஃபார்ம் செய்தவனிடம் முகம் மலர,
“நிஜமாவா டா?” – ஆர்வம் பொங்கக் கேட்டவனது கையைப் பற்றி,
“ஆமாமா! வா வா! ஜெயிச்சு நீ ஜெபாக்காவோட ஜாலி பண்றதைப் பார்க்காம, இன்னிக்கு எனக்குத் தூக்கம் கிடையாது” எனச் சரிக்கட்டி, முன்னே தள்ளிக் கொண்டு சென்றான் gangster.
உங்கள் கருத்துகளைப் பகிர...
