9.3. செண்டுமல்லி!
போட்டி 3:
முழங்கையோடு கைகளைக் கோர்த்தவாறு, வட்ட வடிவ வானவில்லாக ஒன்று கூடியிருந்த அறுவர், வாயில் ப்ளாஸ்டிக் கப்-களைக் கவ்விக் கொண்டு மென் நடை போட்டு, 10 மீட்டர் தூரத்திலிருந்தக் கூடையை நோக்கி ரிதமாக நடந்து கொண்டிருந்தனர்.
“ஆஹாஆஆ மெல்ல நட, மெல்ல நட மேனி என்னாகும்???” – Red house-லிருந்த தாவணிப் பெண்ணை நோக்கி தொகுப்பாளர் பாடியதில், கடுப்பான பெண் நின்று, உஷ்ணப் பெருமூச்சை வெளியிடுகையில், அவள் பின்னே ரிவர்ஸில் நடந்து கொண்டிருந்த சிறுவன், அவளது பாவாடை தட்டியதில், தடுமாறி, வாயிலிருந்தக் கப்பைக் கீழே விட்டு, தொபுகடீர் என விழுந்து மண்ணைக் கவ்வியிருந்தான்.
“உங்களை யாருக்கா பாவாடை போட்டுட்டு வரச் சொன்னது?” – hunter தூரத்திலிருந்துத் திட்டியதும், அசடு வழிந்த பெண், கீழே விழுந்த சிறுவனை எழுப்பி மன்னிப்புக் கேட்டு, பின் குழுவாக ஆறு பேரும் முணுமுணுப்புடன், மீண்டும் தொடங்கிய இடத்துக்கே சென்று நின்றனர்.
‘Circle of Trust’ – என்கிற இந்த விளையாட்டில் இரு அணியிலிருந்தும் தலா ஆறு பேர் பங்கேற்றிருந்தனர்.
போட்டி விதியின் படி, அறுவரும், ஒருவரையொருவர் முழங்கையோடு கோர்த்துக் கொண்டு வெளிப்புறம் பார்த்தவாறு (outward-facing) வட்ட வடிவ அமைப்பை உருவாக்க வேண்டும். வட்டத்தினுள் அனைவரது முதுகும், வட்டத்தின் வெளிப்புறம் முகங்களும் இருக்குமாறு form செய்ய வேண்டும்.
பின், முன்னேயிருக்கும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த, சிறிய பந்துடன் கூடிய ப்ளாஸ்டிக் கப்களை, ஒவ்வொருவராக circular motion-ல் நகர்ந்து,குனிந்து வாயில் கவ்விக் கொண்டு, வட்டம் குலையாது, குழுவாக 10 மீட்டரையும் நடந்து,கடந்து.. எதிரே வைக்கப்பட்டிருக்கும் கூடைக்குள் அதே circular motion-ஐப் பின்பற்றி ஒவ்வொருவரின் வாயில் கவ்வப்பட்டிருக்கும் ப்ளாஸ்ட்டிக் கப்பிலுள்ளப் பந்துகளைச் சேர்க்க வேண்டும்.
குறைந்த நேரத்தில், அனைத்துப் பந்துகளையும் எந்த அணி, கூடைக்குள் சேர்க்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும்.
“வேகத்துலயும், வேணும் விவேகம்! நிதானமே பிரதானம்! நீலா புருசன் சந்தானம்!, ஜெயிச்சா வைப்போம் வந்தனம்!” – என அலெக்ஸ் கையைத் தட்டிக் கூட்டத்தை உற்சாகமாக எசப்பாட்டு பாட வைக்கையில், பின்னிருந்து, “கூடவே நீட் தேர்வையும் ரத்து செய்யோனும்” எனப் பாடிய அங்கிளைக் கேட்டு அனைவரும் கொல்லென சிரிக்க, இறுக்கமாகக் கண்ணையும்,வாயையும் மூடி ‘emoji’-ஐ பிரதிபலித்துக் காட்டிய அலெக்ஸ், திரும்பித் தன் அணியினரை நோக்கி “கமான் கமான் கைஸ்” என ‘cheer’ செய்தான்.
இவ்வனைத்தையும் கவனித்த green கம்னாட்டி, தீவிரக் குரலில் தொண்டைக் கிழிய, “விவேகமெல்லாம் விவகாரம் புடிச்சவிங்களுக்குத் தான்! நமக்கு வேகம் தான் முக்கியம்! இந்த கேம்ல நாம ஜெயிச்சே ஆகனும்! நான் வாங்கித் தந்த பிரியாணி வேலை செய்யுதா இல்லையா?, ஃபாஸ்டர் ஃபாஸ்டர் கைஸ்ஸ்ஸ்” -எனத் தனது அணியை மோட்டிவேஷன் என்கிற பெயரில், மோசம் செய்து கொண்டிருந்த வேளை,
மொக்கிய பிரியாணி முட்டிக் கொண்டு மேலே வந்ததில், அடக்க முடியாது “ப்ப்ப்ப்ப்ப்” என ஏப்பம் விட்ட அங்கிள் ஒருவரது ப்ளாஸ்டிக் கப்புக்குள்ளிருந்த பந்து, அவர் வெளி விட்ட காற்றின் வேகம் தாங்காது, மேலெழுந்து கப்பின் நுனி வரை வந்து பின் உள் விழுந்தது.
கூட்டம், “ஏய்ய்ய்ய் ஏஏஏஏஏஏய்ய்ய்ய்” எனப் பதறுகையில், பந்து மீண்டும் கப்புக்குள் செட்டில் ஆகி விட, பீதியடைந்து போன அங்கிள், நிம்மதியுற்ற விழிகளுடன் தாஸை நோக்கிக் கண் சிமிட்டி, ஆசுவாசப்படுத்தி விட்டுத் தொடர்ந்து நடந்தார்.
இப்படியாக, விழுந்து,எழுந்து,அலும்பும்,குறும்புமாக இரு அணிகளும் ஒரே நேரத்தில் கூடையை எட்டியிருந்தாலும், circular motion-ல் பந்துகளை கூடைக்குள் ஒவ்வொருவராக இடத் தொடங்குகையில், துரதிர்ஷ்டவசமாக, green house-ல் ஒருவர் இட்டப் பந்து, ‘pop’ ஆகி கீழே விழுந்து விட்டதால், அவர்களால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல் போனது.
எதிரணி மீண்டும் தொடங்குவதற்கும் வாய்ப்பின்றி, Red house அனைத்துப் பந்துகளையும் சரியாகக் கூடைக்குள் இட்டு, தனது தொடர் வெற்றியைத் தக்க வைத்திருந்தது.
போட்டி 4:
“அப்பு தாத்தா!, வாங்க வாங்க! எல்லாப் போட்டிலயும் எம் பேரைச் சேர்த்துடுங்கன்னு நேத்து அதிகாரமாச் சொன்னவரு, எங்க காலையிலிருந்து ஆளைக் காணோம்?”
-எதிர்ப்பட்டவர்களிடம் உரையாடியவாறு மடித்துக் கட்டிய வேட்டியுடன் களத்துக்குள் வந்த அப்பு தாத்தாவிடம், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வம்பு செய்ய,
“ஆர்வமாச் சொன்னதை, அதிகாரம்ன்னு திரிச்சு சொல்றியா நீயி?” – என நாக்கை மடித்தவரைக் கண்டுப் பம்மி,
“வெயில் உங்களை ரொம்ப வெறியேத்துதுன்னு நினைக்கிறேன்! கலர் குடிக்குறீங்களா தாத்தா?” – எனப் பேச்சை மாற்றித் தன் கையிலிருந்த ஜூஸ் பாட்டிலை நீட்டியவனிடம்,
“இந்தக் கருமத்தெல்லாம் எவன் குடிப்பான்?, இப்புடி பாட்டில்ல அடைச்சு விற்குற பானத்தையெல்லாம் உள்ள கொண்டு வராம, பானகம்,நீர் மோர்ன்னு சத்துள்ள நீராகாரங்களைக் கொடுக்கச் சொல்லி கமிட்டி கிட்ட பேசனும்! என்னா சொல்றீக??” – என்று தாத்தா அருகிலிருந்தவர்களிடம் suggestion கேட்பதையும், அதற்கு அவர்கள் பதில் கூறுவதையும் தூரத்திலிருந்து பார்த்த gangster, அலெக்ஸிடம்,
“அப்பு தாத்தா Red house ஆமா-ண்ணே” என்றான்.
வாட்டர் பாட்டிலிலிருந்தத் தண்ணீரால் முகம் அலம்பிக் கொண்டிருந்த அலெக்ஸ், நீர் வழிந்த முகத்துடன் நிமிர்ந்து முறைத்து, கையில் மீதமிருந்தத் தண்ணீரை அவன் மீது தெறிக்க விட்டு,
“எப்பிடிக் கோர்த்து விட்ருக்கான் பாரு வெங்காயம்! சரியாஆஆன விஷ ஜந்து லே நீயி” – என்று திட்டியதும்,
“ண்ணேஏஏ!, கொஞ்சமாவது அறிவா யோசி-ண்ணே!, கர்லா கட்டை கணக்கா, கட்டுமஸ்தா இருக்குற தாத்தா, கேம்க்குள்ள enter ஆனா.. green house, கண்ணு,மண்ணு தெரியாம விழுந்தடிச்சு ஓடிடாது?, தாத்தா பவர்ஃபுல் ப்ளேயர்ண்ணே!, ப்ச்!, tactics தெரியாத உனக்கெல்லாம் யாருண்ணே தலைமைப் பொறுப்பு கொடுத்தது?, ச்சை!” – என gangster கடுப்படிக்க,
விட்டால் சீலிங்கைத் தொட்டு விடுவார் போன்று ஏழடியில், நீள,அகலமாயிருந்த தாத்தாவைத் திரும்பி நோக்கிய அலெக்ஸ்,
“அப்பு, cup அடிப்பாரா?, இல்ல, எம் மேல இருக்குற காண்டுல ஆப்படிப்பாரா?” – என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கையில்,
“அப்பு தாத்தா ஆப்படிப்பாரான்னு தெரியல! ஆனா.. பின்னால வர்றவங்க அடிக்க நிறைஐஐஐய சான்ஸ் இருக்குண்ணே” என்ற gangster-ஐக் கேட்டுப் புருவம் சுருக்கி, தலை சாய்த்து, தாத்தாவின் பின்னே நோக்கிய அலெக்ஸூக்கு, active wear-உடன் பந்தலுக்குள் வந்து கொண்டிருந்த ஜெபாவைக் கண்டதும், காற்றில் அதுவரையிருந்த வெம்மை மறைந்து, சில்ல்ல்லெனக் குளிர் பரவ, தன்னாலேயே நீண்டு விட்டப் புன்னகையோடு, அவளை நோக்கி நடக்க எத்தனித்தவன்,
அவனை முந்திக் கொண்டு எதிர்ப்புறமிருந்து அடித்துப் பிடித்து ஓடி, அவளை எட்டியிருந்தத் தாஸ், பவ்யத்தோடு, அடுத்தப் போட்டி நடக்கவிருந்த இடத்தைக் காட்டித் தீவிரமாக அவளிடம் ஏதோ கூறுவதைக் கண்டுத் திரும்பி gangster-ரை நோக்க, அவன் விழிகளைச் சந்திக்காது மெல்லப் பின்னே அடியெடுத்து வைத்தவாறு,
“ஜெபாக்காஆஆஆ…green ஹவுஸ்ஸ்ஸ்-ண்ணே” என்று gangster மொழிந்ததும், ஆத்திரத்தில் முகம் மாற, கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தவனிடமிருந்துத் தப்பித்து மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று விட்டான் gangster.
“விஷக்கிருமி! திருட்டுப்பய! சில்வண்டு மாதிரி இருந்துக்கிட்டு, பார்க்குறதெல்லாம் சில்ற வேலை! சிக்கட்டும், சில்,சில்லா சிதற விடுறேன்” எனக் கறுவிய அலெக்ஸ், விறுவிறுவென நடந்து ஜெபாவிடம் சென்றான்.
“கண்ணை மூடிட்டு சுத்துனீங்கன்னா தான் tough-ஆ இருக்கும்!,அதனால, நீங்க கண்ணைத் திறந்தே வைச்சுக்கோங்க! அது தான் ட்ரிக்” – என ஜெபாவிடம் போட்டிக் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்த தாஸைக் கண்டு கொள்ளாது, ஒரு விரல் கொண்டு அவள் புஜத்தைத் தட்டி,
“மக்காஆஆ” எனத் தொடங்கியவனைத் தொடர விடாது,
“Sir-ரு, எதிரணி கேப்டன்!, இவுரு கூட பேச்சு வைச்சுக்கிட்டா, கமிட்டி நமக்கு penalty போட வாய்ப்பிருக்கு! வாங்க, நாம அந்தாண்ட போயிடுவோம்” என அவளைத் தள்ளிக் கொண்டு செல்லப் பார்த்தவனை முறைத்து,
“ப்ச், ஜெபா.. நீ இப்பவே கமிட்டி கிட்டப் போய், உன்னை red house-க்கு மாத்தி விடச் சொல்லிக் கேளு!” என்றான் அலெக்ஸ்.
“எதுக்கு?” – புருவம் சுருக்கியவளிடம்,
“எதுக்…. எதுக்க்குன்னா??” என மூக்கை விடைத்தவன், “நாஆஆஆன் red house-ல இருக்கேன் டி” எனத் தன் நெஞ்சைத் தட்டிக் கூறியவனிடம், உதட்டை வளைத்து, கைகளைக் கட்டிக் கொண்டு அவள்,
“அதனால?” எனக் கேட்க, அவளது அலட்சிய பாவனையைக் கண்டு உதட்டை மடித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தத் தாஸினால், அலெக்ஸின் ரோஷ மீட்டர் சுறுசுறுவென ஏறியதில், வெடுக்கென அவள் புஜத்தைப் பற்றித் தன் புறம் இழுத்து,
“அவன் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தாத மக்கா!, இது என் ஈகோ பிரச்சனை டி!, மரியாதையா என் டீம்க்கு வந்துடு” என்று முணுமுணுக்க,
“பார்த்தியா லே?, நீயே உண்மையை ஒத்துக்கிட்ட!,ஆக மொத்தம், நாஞ் சொன்னாப்ல, உன் நோக்கமே இவன் கூட, ஈகோ சண்டையில ஜெயிக்குறது தான்!, என் இதயத்தை ஈர்க்குறது இல்ல!, எல்லாஆஆம் ‘fun’-டி-ன்னு நீ சமாளிச்சது பச்ச்ச்ச்சைப் பொய். என்ன?” என்று அவளும் பதிலுக்கு எகிற,
“ப்ச்ச்ச்ச்ச்ச் ஷ்ஷ்ஷ்” – என எரிச்சலில் முகத்தைப் பரபரவென தேய்த்துக் கொண்டவன்,
“அது வேற டி ஜெபா!,ப்ச்!, விளக்கிச் சொல்ல இப்ப எனக்கு நேரமில்ல! உன்னால என் டீம்க்கு வர முடியுமா முடியாதா?” என முடிவாகக் கேட்டான்.
“முடியாது” எனப் பட்டெனக் கூறியவள், “பசுமை தான் அருமை!, மற்றதெல்லாம் எருமை!, என் டீம்-க்காக உழைச்சு உன்னைத் தோற்கடிச்சு… தோலுரிச்சு, தொங்க விடுறது தான் இன்னைக்கு என் ஒரே நோக்கம்” என்று விட்டுத் திரும்பி, “தாஸ்ஸ்ஸ்” என அழைக்க,
அதற்காகவேக் காத்திருந்தவன் போன்று, “இந்தப் பக்கம் மேடம்” என்று முன்னே வழி காமித்து, இவனிடம், நாக்கை நீட்டி வக்கணை காட்டி விட்டு ஜெபாவுடன் இணைந்து நடந்தான் தாஸ்.
கொலைவெறியுடன் அவனை மூச்சு வாங்க நோக்கிய அலெக்ஸின் தோளைத் தட்டி, “என்ன தம்பி நீங்க தான் எங்க அணித் தலைவனாம்ல?, வரிசையா 3 போட்டில ஜெயிச்சுட்டீகளாம்!, இன்னிக்கு அதிர்ஷ்டக் காத்து உங்கப் பக்கம் வீசுது போல! அடுத்தடுத்தப் போட்டிகள்லயும் நல்லா பண்ணுங்க தம்பி” – என்ற அப்பு தாத்தாவின் கையைப் பற்றி கண்ணில் ஒத்திக் கொண்டவன்,
“அது இப்போ உங்க கைல தான் இருக்குங்கய்யா” என்றான்.
அந்நாளின் நான்காவது போட்டியான Trunk 'N' Balance-ஸின் விதிமுறைகள் குறித்து கமிட்டியினர் மைக்கில் தெரிவிப்பதைக் கவனமாகக் கேட்டவாறு நின்றிருந்தனர் இரு அணியினரும்.
Red house-லிருந்து நால்வரும், Green house-லிருந்து நால்வரும் பங்கேற்றப் போட்டியில், வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தப் போட்டியாளர்களின் முன்பு.. 5 மீட்டர் தூரத்தில், செவ்வக வடிவப் பேப்பர் தரையில் வைக்கப்பட்டிருந்தது.
‘ஸ்டார்ட்’ சொல்லப்பட்டதும், போட்டியாளர்கள் அனைவரும் யானைத் தும்பிக்கையைப் போல , குனிந்த வாக்கில், வலது கையால் மூக்கைப் பிடித்து, மறுகையை மூக்குக்கும்,வலது கைக்கும் இடையிலிருக்கும் கேப்பில் நுழைத்து, குனிந்த நிலையிலேயே, நின்ற இடத்தில் சுற்றத் தொடங்க வேண்டும். தொகுப்பாளர், ‘ஸ்டாப்’ சொன்னதும், உடனடியாக ஓடி, 5 மீட்டர் தூரத்திலிருக்கும் பேப்பர் மீது சென்று இரு கால்களையும் வைத்து ஒரு நொடி அசையாமல் நிற்க வேண்டும். தடுமாறி கால் வெளியே வந்தாலோ, ஓடுகையில் தவறி கீழே விழுந்தாலோ, ‘அவுட்’ என்று அறிவிக்கப்படுவார்கள்.
வலது கையால் மூக்கு நுனியைப் பிடித்து, இடது கையை எதற்குள் விடுவதெனத் தெரியாமல் நின்ற ஜெபாவிடம், “இப்பிடி, இப்பிடிங்க..” என செயல்முறை விளக்கமளித்தத் தாஸைக் காண்டுடன் நோக்கியவாறு தன் அணியினருக்கு உதவினான் அலெக்ஸ்.
முதல் சுற்று தொடங்கியதும், கூட்டம் கோரஸாக ‘1…… 2….. 3……” எனத் தொகுப்பாளரோடு சேர்ந்து உற்சாகத்துடன் எண்ணத் துவங்க, இங்கு போட்டியாளர்கள், குனிந்த வாக்கில் சுற்றத் தொடங்கினர். 5 சுற்றுக்கள் முடிந்ததும், தொகுப்பாளர் ‘ஸ்டாப்’ என்று விட, நிற்கும் திசை புரியாது, தலையைச் சுற்றிக் கொண்டு வந்ததில் சிலர், குடிகாரனைப் போலத் தடுமாறி, ‘சைடு’ வாக்கில் நடந்துக் கூட்டத்தின் மீது சென்று விழ, பலர் பேப்பரை நோக்கி ஓட முயன்று, முடியாமல் மல்லாக்க விழுந்தனர்.
சிலர், பேப்பரை எட்டி, கட்டத்துக்குள் நிற்க முடியாமல், ‘ரம்பம்பம்’ ரிதத்திற்கு Hip Shimmy ஆடுவது போல, ஆடி, கடைசி நொடியில், குப்புறடித்து மண்ணைக் கவ்வியிருந்தனர்.
கடைசியில், Red house-லிருந்து இருவரும், Green house-லிருந்து இருவரும் அடுத்த சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர், அதில் ஜெபமலரும், தாத்தாவும் அடக்கம்.
இரண்டாவது சுற்றில், சுற்றுக்களின் எண்ணிக்கையை உயர்த்தி எட்டாக்கியிருந்தனர். பேப்பரும் கூடப் பாதியாக மடிக்கப்பட்டிருந்தது.
“பெரியவரே!, சுத்திடுவீங்களா?” – கூட்டத்திலிருந்து வந்த குரலுக்கு அலெக்ஸ் பதில் கூறும் முன், ‘யார்றா அவன்’ என்பது போல் திரும்பிய தாத்தா தனது வெண் மீசையை முறுக்கி,பக்கவாட்டாகப் பார்த்த பார்வையில் பம்மி, கூட்டத்துக்குள் பதுங்கி விட்டது குரல்.
நமுட்டுச் சிரிப்புடன் தாத்தாவைப் பெருமையாகப் பார்த்த அலெக்ஸ், ‘டேக் இட் ச்சில்-ங்க!, ஜெயிக்கலேன்னாலும் ஒன்னும் பிரச்சனையில்ல! கஷ்டமா இருந்தா விட்ருங்க” என தாஸ் அன்பாக ஜெபாவிடம் கூறுவது கேட்டுப் பல்லைக் கடித்தான்.
இரண்டாம் சுற்றின் முடிவில், எட்டு சுற்று சுற்றி, எட்டு வைத்து நடக்க முடியாமல், நடந்தும் மடிக்கப்பட்டப் பேப்பர் மீது நிற்க இயலாமல், தாத்தா,ஜெபா தவிர மீதமிருந்த இருவரும் ‘அவுட்’ ஆகி விட, இறுதிச் சுற்று அப்பு தாத்தா vs ஜெபா என்றானது.
“மக்களே, Old vs Bold!!, பெருசு vs மவுசு!!! ஜெயிக்கப் போறது கர்லா கட்டையா?, லவங்கப்பட்டையா?, பார்த்துடுவோமா?” – என்ற தொகுப்பாளரின் ஆர்ப்பரிப்பைக் கேட்டு ஜெபா சங்கடத்துடன் தாத்தாவைப் பார்த்து சிரிக்க,
“அவனுக்கு வம்பு செய்றது தான்-ம்மா வேலை!, நீ தைரியமா விளையாடு” – என்று ஊக்குவித்தார் தாத்தா.
இந்த முறை ‘12’ சுற்றுக்கள் சுற்றி, ஒரு கால் மட்டுமே கொள்ளுமளவிற்குச் சிறிதாக மடிக்கப்பட்டிருந்தப் பேப்பரின் மீது சென்று நிற்க வேண்டும்.
முகத்தைத் தீவிரமாக்கி, அணிந்திருந்த டீஷர்ட்டின் கைகளைத் தோள் நோக்கி இழுத்து விட்டவாறு நெரித்த புருவங்களுடன் ஜெபா நிற்க, இந்தப்புறம் தாத்தா, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, தயார் நிலையில் நின்றார்.
‘கேம் ஸ்டார்ட்’ என்றதும், 12 முறை நின்ற இடத்திலேயே சுற்றி, கிறுகிறுத்தத் தலையோடு, தடுமாறிய உடலோடு, விழும் நிலை வரைச் சென்று, சமாளித்து நடந்த ஜெபா, தொடர்ந்து முன்னேற,
பக்கவாட்டை நோக்கி நகரச் சொன்ன உடலின் தள்ளாட்டத்தைத் தவிர்க்க முடியாது, தலை சுற்றி மங்கிய பார்வையோடு, zig zag zoo-வாக நகர்ந்து, குத்துமதிப்பாக தாத்தாவும், பேப்பரை எட்டியிருந்தார்.
மிகச் சிறிதாக மடிக்கப்பட்டிருந்தப் பேப்பரின் மீதேறி நிற்க முடியாது காலை மாற்றி, மாற்றி முயன்று தத்தளித்த இருவரும், இறுதியில் ஒரே நேரத்தில் ஒரு காலால் நின்று, மறு காலை மடக்கி, இரு கைகளையும் நீட்டி kung fu போஸில் முழுதாக ஒரு நொடி நீடித்துப் பட்டெனக் கால்களை இறக்க,
கீழே விழப் பார்த்த ஜெபாவின் அருகே விரைந்துத் தாங்கிப் பிடித்த gangster, “க்காஆஆ! சூப்பர்க்கா!! கலக்கிட்டீங்க” என்று உற்சாகத்தில் துள்ளினான்.
இங்கே தடுமாறிய மலையை, பற்றி நிறுத்திய அலெக்ஸூம், குழுவினரும், தாத்தாவை அலேக்காகத் தூக்கி,
“தாத்தா, தாத்தா த்தை….
தாத்தாவோட செய்கை..
மோதிப் பாரு ஓய்!!!” – எனக் கத்திப் பாடி கும்மாளமிட,
எப்போதும் சண்டையும்,சச்சரவுமாய் காலனி ஆட்களுடன் வம்பு செய்து திரியும் அப்பு தாத்தாவின் hidden talent-ஐக் கண்டு கூடியிருந்தோர் அனைவரும் ஆச்சரியமும், பெருமையாகப் பார்ப்பதைக் கண்டு, சங்கடம் கொண்டத் தாத்தா மூச்சு வாங்கப் புன்னகைத்தபடி,
“போதுமப்பா சாமிகளா!, இறக்கி விடுங்க! தலை கிறுகிறுன்னு வருது” எனக் கூறி இறங்கி, தன் முன் நீண்ட தண்ணீர் பாட்டிலைத் திறந்துக் கடகடவென வாயில் சரித்தார்.
இருவருமே கடைசி வரை போராடி, ஒரே நேரத்தில் போட்டியை முடித்திருந்ததாலும், காலனியின் முக்கிய பிரபலங்கள் பட்டியலில் இருவரும் இடம் பிடித்திருந்த சலுகையிலும், இருவரையுமே வெற்றியாளர்களாக அறிவித்தது விழா கமிட்டி.
“நீங்க ரொம்ப ஸ்ட்ராங் தாத்தா” என்று பாராட்டிய ஜெபாவிடம், “நீயும் நல்லா விளையாடின-ம்மா! நாளைக்குக் கல்யாணம், புள்ள,குட்டின்னு ஆனாக் கூட, ஆரோக்கியத்தைப் பேணி இதே ஆக்ருதியோட இருக்கனும்” என்று ஜெபாவை மோடிவேட் செய்தார் தாத்தா.
இரு அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், இந்தப் போட்டியில் சண்டை,சச்சரவுகளின்றி அனைவரது முகங்களிலும் புன்னகை தெரிந்தது.
போட்டி 5:
“அதான் ஆளாளுக்கு வீடியோ எடுக்குறீங்களே!, அதுல பார்த்தாத் தெரிஞ்சுடப் போகுது?, இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு!, இவ்வளவு நேரமா நல்லாப் போயிட்டிருக்கிற விழாவுல , என்னத்துக்கு இப்ப சடவு?”
-வேடிக்கைப் பார்த்திருந்தக் கூட்டத்தில் சிலர், தொகுப்பாளருடன் வாதாடிக் கொண்டிருந்த இரு அணி ஆட்களையும் நோக்கித் திட்ட,
“கரெக்ட்டு!, ‘தேர்ட் அம்பயர் டிசிஷன் தான் ஃபைனல்’. வீடியோ பார்த்தா யார் வின்னர்ன்னு தெரிஞ்சுடும்” – என green team எகிறிக் கொண்டிருக்கையில்,
“அதெல்லாம் டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் முடிஞ்சப்புறம் பார்த்துக்கலாம்ப்பா!, நேரமாகலையா?, ஆடப் போற புள்ளைகளெல்லாத்தையும் வீட்டுக்குத் துரத்தி விடுங்க! போய் மேக்கப் போட்டு ரெடி ஆகட்டும்! விளையாண்டதெல்லாம் போதும்” – என்ற கமிட்டி பெரியவர், மைக்கைத் தன் கையில் வாங்கி,
“சரியா ஆறு மணிக்கு ஆடலும்,பாடலும் தொடங்கிடும்! டான்ஸ்,பாட்டு,நாடகத்துக்குப் பேர் கொடுத்தவங்களெல்லாம் சீக்கிரமா தயாராகி வாங்க!, நாளைக்கு காலைல எந்திரிச்சு மனுச,மக்களெல்லாம் வேலைக்குப் போக வேணாமா? நேரத்தை இழுத்துக்கிட்டு!, கிளம்புங்க! போய் அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாராகி வாங்க!” எனக் கறாராகப் பேச,
“ப்ரோ! ஒரு நிமிசம் நின்னு, வீடியோ பார்க்குறதுல என்ன ப்ரோ இருக்கு?, இருங்க ப்ரோ” – எனத் தொகுப்பாளரிடம் வாதிட்டுக் கொண்டிருந்த தாஸை நோக்கிப் பெரியவர்,
“இப்ப என்ன, நீ தான் ஜெயிச்சன்னு வைச்சுக்க! என்னவோ கோடி ரூபா பரிசு கிடைக்கப் போற மாதிரி! அடுத்தடுத்த நிகழ்ச்சிகளெல்லாம் நடக்க வேணாமா?, யோவ் செந்தாமரை, கேட்டரிங் ஆளுங்க எப்போ வருவாங்கன்னு கேட்டியா?, அடுத்து டின்னர் தான்ய்யா பெரிய தலைவலி” – என்று தொடர்ந்து மைக்கில் கத்தியதில், green team முணுமுணுப்புடன் விலகிச் சென்றது.
நடந்தது இது தான்.
அன்றைய நாளின் கடைசிப் போட்டியாக நடத்தப்பட்ட, ‘Flamingo Challenge’-ல், அலெக்ஸ் ஜெயித்ததாக red team-மும், ‘இல்லை,இல்லை தாஸ் தான் ஜெயிச்சான்’ என்று green team-மும் தொகுப்பாளரைக் குழப்பி, அவர் காதில் கத்தி, மாற்றி,மாற்றி வாதிட்டு கலவர சூழ்நிலையை உருவாக்கி விட்டிருந்தனர்.
போட்டி விதியின் படி, பச்சைக் கொடி காட்டப்பட்டதும், பங்கேற்பாளர்கள், ஒரு காலைத் தூக்கி ஆடாது, சமநிலையில் நிற்க வேண்டும். பின் தொகுப்பாளர், participants-சின் தொடையில் ஒரு 10 ரூபாய் நாணயத்தை வைப்பார். எந்தப் போட்டியாளர் அதிக நேரம் நாணயத்தை ‘balance’ செய்கிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.
இது கடைசிப் போட்டி என்பதால், இரு அணிகளிலிருந்தும் பெரியவர்,சிறியவர் என அலெக்ஸ்,தாஸ் உட்படப் பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
‘வெயில் தாள பந்தலுக்குப் போய்க்கலாம்’ – என்றிருந்த பாட்டி,ஆண்ட்டிமார்கள் பலர், நாற்காலிகளை ஆக்கிரமித்து சுவாரசியமாகப் போட்டியை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி விட,
மேடையின் கீழிருந்த இடத்தில் நீள் வரிசையாக நின்றிருந்த போட்டியாளர்கள், தொகுப்பாளர் ஸ்டார்ட் என்றதும், ஒற்றைக்காலில் flamingo பறவையைப் போல நின்று, தொடையில் வைக்கப்பட்ட நாணயத்தை ‘hold’ செய்ய முயன்றனர்.
விளையாட்டை,விளையாட்டாக மட்டுமே பார்த்த பலர், கெக்கே,பெக்கே-வெனச் சிரித்து அடுத்தடுத்து கால் தடுமாறி, பொத்,பொத்தென தூக்கியக் காலை இறக்கி விட, இரு ‘வினை புடிச்ச’ தெண்டங்கள் மட்டும், நடுங்கிய தொடையைத் தம் கட்டி, நிறுத்தி மரம் போல நின்றிருந்தனர்.
“க்யூட்டானும், காட்டானும் அவ்ளோ சீக்கிரம் ‘கிவ் அப்’ பண்ண மாட்டாங்க போலயே!, க்யூட்டான் என்னவோ முணுமுணுக்கிறாரே! என்னவா இருக்கும்?” – என தாஸின் அருகே சென்று அவன் வாயருகே காதை வைத்தத் தொகுப்பாளர் மைக்கில்,
“மாரியம்மாஆஆ.. மாரியம்மாஆஆ… திரிசூலியம்மா… நீலியம்மாஆ” என்கிற ‘கரகாட்டக்காரன்’ பாடலைப் பாடுகிறார் க்யூட்டான்!, இவரை ‘RM’-ன்னு நினைச்சவங்களுக்கெல்லாம், இவுரு ஒரு ‘ராமராஜன்’ என்பது புதிய தகவல்” – என்று விட்டு, அலெக்ஸின் புறம் நகர்ந்தார்.
(RM – BTS Kpop குழுவின் leader).
“prank பரட்டை!!! RJ!!, உங்க ரேடியோ நிகழ்ச்சிக்கு இடைல பாட்டு போடுவீங்களே!, அந்த மாதிரி, நீங்க இப்ப ஒரு பாட்டு பாடுங்களேன் ப்ளீஸ்” – என distract செய்யப் பார்க்க, உடனடியாக அவன்,
“ஒரு காலைத் தூஊஊஊக்கித் தவம் செய்யும் வாசாஆஆ” என இளையராஜாவின் குரலில் தொடங்குவதைக் கேட்டு, தாஸ் மந்திரம் சொல்வதை நிறுத்தி விட்டு இவனை முறைக்க, கூட்டம்,
“தாஸ்,தாஸ், சின்னப்ப தாஸ் தாஸ்! பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்” – எனக் கத்தியதில், அலெக்ஸூக்கு சிரிப்பும், தாஸூக்குக் கோபமும் வந்து… இருவருமே “ஏஏஏஏஏ ஏஏஏஏ”-வென ஆடி, மறு காலைக் கீழே வைத்திருந்தனர்.
அனைவரும் பாட்டு பாடிக் குதூகலித்துக் கொண்டிருந்ததில், யார் முதலில் தடுமாறி coin-ஐ கீழே விட்டதெனத் தெரியாமல், “தாஸ் தான் வின்னர்” என்று சிலரும், “அலெக்ஸ் தான் வின்னர்” என்று சிலரும் தர்க்கம் புரியத் தொடங்கியிருக்க, கமிட்டி பெரியவர் தான் அனைவரையும் துண்டை வைத்து விரட்டாத குறையாக துரத்தியடித்திருந்தார்.
கடைசி வரை அலெக்ஸ் “நான் தான் ஜெயிச்சேன்” என்று எகிறாததைக் கண்டு, அவனை சந்தேகமாக நோக்கிய gangster, “அவுரா-ண்ணே முதல்ல coin-ஐ விட்டாரு?” எனக் கேட்டான்.
“தெரியல டே! நான் பார்க்கல” என்று அசட்டையாகக் கூறியவனை,
“வீடியோ வெளி வந்தா எல்லாம் தெரிஞ்சுடும் ண்ணே!, மரியாதையா உண்மையைச் சொல்லு” – என மிரட்ட, தலையைச் சாய்த்து, அவனை நின்று முறைத்த அலெக்ஸ், அவனது பிடரியில் இடியை இறக்கி,
“இன்னிக்கு நீ பண்ணுன அலும்புக்கு, உன்னை நான் அரைடவுசரோட ஓட வுடனும் லே!, செஞ்சது பூரா வில்லத்தனம்! இதுல அண்ணன் பறிச்ச வெற்றிக் கனியில, கொட்டையிருக்கா, கொட்டையில்லையான்னு சந்தேகம் வேற படுவியா நீயி?, வா லே இங்க! ஒழுங்கு மரியாதையா வா லே!” – என்று மிரட்டியவனை முகம் சுருங்க முறைத்து விட்டு, அவன் கையில் சிக்காது ஓடி விட்டான் gangster.
சுற்றியிருந்தவர்களிடம், அவர்கள் எடுத்த வீடியோக்களை வாட்ஸ் ஆப் செய்யுமாறு கூறி விட்டு, ‘தாண்டியா’-வுக்கு ரெடியாக வேண்டி நகர்ந்த தாஸூக்கு அப்போதே முடிவை அறிந்து கொள்ளும் வேகம் தான்! அவன் இதுவரை பார்த்த வீடியோக்களில், பாட்டு ஆரம்பித்த வேளை, ஃபோகஸ் ஆடியன்ஸின் புறம் திரும்பி, முடிவு record ஆகாது போயிருந்தது.
“இருக்கட்டும்!, முழு வீடியோ வெளிய வந்ததும் இருக்கு அவனுக்கு” என்று கறுவியபடி வீடு நோக்கிச் சென்றான் தாஸ்.
உங்கள் கருத்துகளைப் பகிர...
