அத்தியாயம் - 1
தி நேஷனல் யுனிவர்சிடி, டார்ஜிலிங்.
ஜூலை,2005.
மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற மலை வாசஸ்தலங்களில் ஒன்றான டார்ஜிலிங் அவ்வருடத்தின் கடுமையான மழைப்பொழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது! வருடம் தவறாமல் ஜூலை மாதத்தில் அதிகப்படி மழையைப் பார்த்து விடும் ஊர் தான் அதுவென்றாலும், இப்போது கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் கனமழை இந்த நூற்றாண்டுக்கு முற்றிலும் புதிது! சதை வழியே உள் நுழைந்து ரத்தத்தில் இலகுவாய் நீந்தி எலும்புகளைத் துளைக்கும் பிரத்தியேகக் குளிரைப் பெற்றிருந்த அவ்வூரின் தட்பவெப்பநிலையானது, பெரும் இடி,மின்னல்களுடனும் இடைவெளி விடாமல் ஷிஃப்ட் போட்டுக் கொண்டுப் பெய்யும் மழையோடும் சேர்ந்து கொண்டு ஃபீரீசருக்குள் அமர்ந்திருக்கும் ஃபீலைக் கொடுக்க, மனித முகங்கள் ஒன்று கூட கண்ணில் படவில்லை.
ஆனால் இவ்வனைத்திற்கும் பாதிப்படையாமல்! ஒரே பாட்டிற்கு நான்-ஸ்டாப்பாய் ரீபீட் மோடில் ஆடிக் கொண்டிருக்கும் மழை ராட்சதனின் அகோரமான ஆட்டத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல்! அவ்வப்போது வானத்தில் எவரோ சரவெடி வைத்து விட்டதைப் போன்று டமால்,டமாலென பெருஞ்சத்தத்துடன் பளிச்சிட்ட இடி,மின்னல்களைக் கண்டு கொள்ளாமல்.. அந்த யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் அனைவரும் அந்தப் பெரிய மைதானத்தின் மத்தியில் ஒன்று கூடியிருந்தனர்.
மழைச் சத்தத்துடன் போட்டிப் போட்டபடி ஆண்களும்,பெண்களுமாய் சல,சலவெனப் பேசிக் கொண்டிருந்த முகங்கள் அனைத்திலும் அத்தனைத் தீவிரம். கல்லூரி வாழ்க்கையை வண்ண,வண்ணப் பட்டாம்பூச்சிகளோடு ஒப்பிடும் மனப்பாங்கைப் பெற்றிருப்போர் எவராலும் இந்த முகங்களைச் சகித்துக் கொள்ள முடியாது! ஏனெனில் அவ்வயதினருக்கே உரிய கேலி,கிண்டலோ, அனுபவமின்மையோ, அறியாமையோ.. எதுவுமின்றி, கவலை,பயம் அதை மீறிய ஒரு தைரியம் போன்ற பாவனைகளை வெளிக்காட்டியபடி நின்றிருந்தனர் அம்மாணவர்கள்.
அந்தப் பெருங்கூட்டத்தின் மத்தியில், பத்து பேர் புடை சூழக் கருப்புக் குடையின் கீழ் அசாத்திய உயரத்துடனும்,ஏற்றி சீவப்பட்டிருந்த நெற்றியுடனும், இரண்டு கன்னங்கள் முழுக்கத் தாடியுடனும், ‘கோபம்,ஆத்திரம்,ரௌத்திரம்’ என அத்தனையையும் தன் சிவந்த கண்களின் வழியே வெளிப்படுத்திய படி இறுகிய தோற்றத்துடன் நின்றிருந்த அவன்…. மதம் கொண்ட யானையை நினைவு படுத்தினான்.
சுற்றியடித்தக் காற்றில் குடி கொண்டிருந்த அதிகப்படி ஈரம் அவனது நெஞ்சை நனைக்கவில்லை போலும்!, கொதிகலனாய்க் கொதித்துக் கொண்டிருந்த அவன் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவும் அவனது மூளையை நோக்கி மட்டுமே பாய்ந்து… அதன் செயல்பாட்டை இரண்டு மடங்காக்கி..` ஓவர்டைம் வேலை பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.
இறுக்கமாய் மூடியிருந்த வலது கை விரல் நகங்கள், உள்ளங்கையை அழுத்தியதில் மொத்தமாய்ச் சிவந்து, இப்போது வெளி வந்து விடுவேன் என்கிற ரீதியில் ரத்தம் அங்கே அணைக் கட்டி நிற்க, அவனது மூளைக்கோ,இதயத்திற்கோ இந்த வலியெதுவும் பெரிதாய்த் தெரியவில்லை! கொட்டும் மழையை வெறித்தபடி கண்மணிகளை அசைக்காது நின்றிருந்தான் அவன்.
திடீரென அவன் அருகே நின்றிருந்த ஒருவன் அவன் தோளைப் பற்ற.. அவன் கைக்காட்டியத் திசையில் நிமிர்ந்து எதிரே வந்தவனை நோக்கினான்.
கருப்பு நிற ரெயின் கோட்டுடன் அவனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தவன், அவனது உயிர் நண்பன் பரத். அவனைக் கண்டதும் கண்களில் ஒரு ஒளி தோன்ற.. வேகமாக அவனருகே சென்றவன் “என்னாச்சு?” என்று வினவினான்.
தன்னைக் கண்டதும் அவன் கண்களில் தோன்றிய ஒளியைக் கண்டு கொண்டதாலோ என்னவோ, பரத்தின் முகம் அதிகப்படி வேதனையை வெளிப்படுத்த “சரண்யாவைப் பத்தி எந்த இன்ஃபர்மேஷனும் கிடைக்கலடா விஜய்.” என்றான்.
“அதிகப்ரசங்கி” என்று முணுமுணுத்தபடி அடக்கப்பட்டக் கோபத்துடன் நெற்றி முடியை ஐவிரல்களால் கோதியவனைச் செய்வதறியாது பரத் நோக்க.. இவர்களிருவரின் அருகே வந்த மற்றொருவன்.. “மச்சான், துஷர் வீட்லயிருந்து ஃபோன் வந்திருக்குடா. ஃப்யூனரெலுக்கு நாம போகப் போறதில்லையா?” என்று வினவினான்.
பார்வை எங்கோ பதிந்திருக்க, அடித்துப் பெய்து கொண்டிருந்த மழைத் துளிகளின் நடுவே, அல்பாயுசில் போய்ச் சேர்ந்து விட்ட நண்பன் துஷரின் முகத்தைத் தேடியபடி அகன்ற தோள் சுருங்க, மூக்கு விடைக்க நின்றிருந்தவன் “இல்லை” என்பது போல் தலையசைத்தான்.
அதுவரை அவனருகே, அவன் தோளைப் பற்றியபடி நின்றிருந்த பரத் சட்டெனத் திரும்பி நின்றுத் தன் கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள.. விறைத்த உடல், மேலும் இறுக.. சிவந்த கண்களில் கோர்த்து விட்டக் கண்ணீருடன், அசையாது நின்றான் விஜய்.
“விஜய் ஏன் டா?, ஏன் போக வேண்டாம்ன்னு சொல்ற?, கடைசியா அவனை பார்க்கக் கூட முடியாதா?, அவனை விட இந்த எலக்ஷன் தான் நமக்கு முக்கியமா?” – ஆற்றாமையுடன் அசோக்.
“அவனை இந்த நிலைக்கு ஆளாக்குனதே இந்த எலக்ஷன் தான டா?,?” – பரத்.
“என்ன சொன்ன?, கடைசியா அவனைப் பார்க்குறதா?, அவன் நம்மை விட்டு எங்கயும் போகல டா! இங்க தான் இருக்கான்! என் மனசுல,மூளைல.. என்னோடவே இருக்கான்! காலம் முழுக்க நான் அவனைப் பார்த்துட்டு தானிருப்பேன்!, இந்த எலக்ஷன்ல நாம ஜெயிக்காட்டி, துஷர் உயிர் விட்டதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நான் போக மாட்டேன்.. ஜெயிக்கிறதுக்கு முன்னாடி இந்த யுனிவர்சிட்டிய விட்டு எங்கயும் என் கால் நகராது! விலகிடலாம்ன்னு நினைச்சப்பல்லாம், அவன் என்னைப் போக விடல! இப்போ… பின்வாங்குறதா?, நோ சான்ஸ்! அவனுக்காக.. அவனுக்காக மட்டுமே ஜெயிச்சே ஆகனும்” – கோவைப்பழக் கண்கள் வழியே அவன் வெளிப்படுத்திய ரௌத்திரம் எதிரிலிருப்போரைப் பயம் கொள்ளச் செய்ய.. அமைதியுற்று அவனை வெறித்தனர் அனைவரும்.
திடீரென எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன்.. பதட்டத்துடன்..
“விஜய், மெய்ன் கேட் ஃபுல்லா ஒரே கலாட்டாவா இருக்குடா, வெளிய இருந்து ஆளைக் கூட்டி வந்திருக்கானுங்கடா! பார்க்குறவங்களலெல்லாம் போட்டு அடிக்கிறானுங்க மச்சி!, அவங்க யாருமே ஸ்டூடன்ஸ் மாதிரி தெரியலடா. கத்தி,ஹாக்கி ஸ்டிக்ன்னு நிறைய வெபன்ஸ் வைச்சிருக்கானுங்கடா! என்ன செய்யப் போறனுங்கன்னு தெரியல..” – என்றான்.
“விஜய், பக்கத்து யுனிவர்சிட்டி பசங்களோட அவனுங்க உள்ள வந்திருக்கிறதாத் தகவல் வந்திருக்கு” - ராகேஷ்
“தோற்கப்போறோம்ன்னு அவனுங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு டா, அதான் எலக்ஷனை நடக்க விடாம பண்ண இந்த வேலையெல்லாம் பார்க்குறானுங்க” - ரேயன்ஷ்
“விஜய், இந்த எலக்ஷன் கண்டிப்பா நடந்தாகனும்டா! அப்புறம் துஷர் இறந்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்” – பரத்.
“மச்சி, சேர்மேன் கிட்ட ஹெல்ப் கேட்கலாம் டா! போலீஸ் ப்ரொடக்ஷன் கேப்போம்” - அஹமத்
“ஏய்ய்.. இவனுங்களுக்குப் பின்னாடி நிற்குறது ஆளுங்கட்சி எம்.பிஸ்ஸூம், எம்.எல்.ஏஸ்ஸூம், அவனுங்களை எதிர்த்து சேர்மேனால என்ன பண்ணிட முடியும்ன்னு நினைக்கிற?, போதாததுக்கு அந்த ஆளோட சொந்த மகன் கமல்நாத் அந்த க்ரூப் பக்கம் நிக்கிறான்” – விஹான்.
“எல்லாத்துக்கும் அந்த நாய் தான் காரணம் மச்சி!, அவன் இன்னும் கண்ணுலயே சிக்க மாட்டேங்குறான் பாரேன்” – ராகுல்.
அத்தனை பேரின் அடுத்தடுத்தப் புலம்பல்களைப் பொருட்படுத்தாமல், தனது ஒரு தொண்டைச் செறுமலில் அனைவரையும் அடக்கியவன் “அகத்தியன் அண்ணனை இம்மிடியேட்டா காண்டாக்ட் பண்ணுங்க!, ப்ரஃபசர் நரேஷ் கிட்ட அவர் பேசினா, நமக்குப் போலீஸ் ப்ரொடக்ஷன் கிடைக்கும். சீனியர்ஸ் எல்லாரையும் ஒன்னு திரட்டுங்க! ஹாஸ்டல்ல ஒருத்தரும் இருக்கக் கூடாது! எல்லாரையும் வெளிய வரச் சொல்லுங்க! இந்தப் பிரச்சனைய மெயின் கேட்டோட முடிக்கனும்! அவனுங்க உள்ள வந்தா.. கண்டிப்பா இதை வைச்சே எலக்ஷனை நிறுத்துவாங்க. அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது!, பிரஸ்க்குக் கால் பண்ணுங்க!, விசயம் என்னன்னு அவங்களுக்குத் தெரியனும். ஈவ்னிங் நியூஸ்ல, எலக்ஷனை நடத்த விடாம நேஷனல் யுனிவர்சிடில ****-பார்ட்டி பிரச்சனை பண்றாங்கன்னு ஹெட்லைன்ஸ்ல வரனும். நமக்கு நிறைய நேரமில்ல!, க்விக்”
-சிவப்பேறிப் போயிருந்த அவனது விழிகள் நிமிடத்தில் தன் நிறத்தை மாற்றிக் கொள்ள, சுருக்கியப் புருவங்களுடன் அடுத்தடுத்துக் கட்டளைகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் விவரித்தவன் “கிர்ர்ர்ர்ர்,கிர்ர்ர்ர்ரரெனத்” தன் முன்னே சீறியபடி வந்து நின்றத் தன் நண்பனின் பைக்கில் ஏறியமர்ந்தான். அவன் கையில் ஒருவன் ஹாக்கி ஸ்டிக்கை வீச, அதை லாவகமாகப் பற்றியபடி மெயின் கேட்டை நோக்கிப் பறந்தான் விஜய்.
அடுத்தடுத்து ஒலித்த பைக்குகளின் சத்தங்கள் தெப்பமாய்த் தேங்கி நின்ற மழை நீரைப் பொருட்படுத்தாமல் இரு பக்கமும், அந்நீரை வாரி அள்ளித் தெளித்தபடி சர்,சர்ரென சீறிப் பாய.. எங்கிருந்தோ வந்து குவிந்த ஹாக்கி ஸ்டிக்கள், கிரிக்கெட் மட்டைகள், இன்னும் ஏதேதோ ஆயுதங்களுடன் மாணவர்கள் பிரச்சனை நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.
மெயின் கேட் செக்யூரிட்டிகளை மீறி, கேட்டின் மீது ஏறிக் குதித்து பெருங்கூச்சலுடன் உள் நுழைந்து கொண்டிருந்தத் தடிமாடுகளை மேலும் முன்னேற விடாமல் தடுக்க ஒன்று கூடினர் விஜயின் கூட்டத்தைச் சேர்ந்தோர்.
சீனியர் மாணவர்கள், ஹாஸ்டல்வாசிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து, கைகளைப் பற்றிக் கொண்டு சங்கிலித் தொடர் போல் மெயின் பில்டிங்கைச் சுற்றி முற்றுகையிட.. மீத மாணவர்கள், தங்களைத் தாக்க வந்தவர்களின் மண்டையைப் பிளப்பதில் முனைப்புக் காட்டிக் கொண்டிருந்தனர்.
இன்றிருப்பதைப் போல் அக்காலகட்டத்தில் செல்ஃபோன்களின் உபயோகம் அதிகமிருந்திருந்தால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தக் கூட்டத்தின் கைகள் அத்தனையிலும் செல்ஃபோன் கேமராக்கள் பளிச்சிட்டிருக்கும்!
விஜயின் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த பிரஸ் ஆட்கள் நடப்பதைப் படம் பிடிக்க.. அதைத் தடுக்க முயன்றவர்களையும் சேர்த்து நொறுக்கிக் கொண்டிருந்தனர் மாணவர்கள்.
சில,பல உயிர்ப்பலிகளையேனும் கண்டு, நடக்கவிருக்கும் மாணவத் தேர்தலை நிறுத்தி விடும் நோக்குடன் எதிரணி செயல்பட்டுக் கொண்டிருப்பதுத் தெளிவாகத் தெரிந்தபடியால், அதைத் தடுத்துத் துரத்துவதில் தீவிரம் காட்டினர் விஜய் பிரிவினர்.
நம் நாட்டைப் பொறுத்தவரை மாணவத் தேர்தல் நடத்தும் உரிமையை சில குறிப்பிட்டக் கல்லூரிகளுக்கு மட்டுமே அரசு அனுமதித்துள்ளது. காஷ்மீர் முதல் குமரி வரை அனைத்து இந்தியரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் இவ்வகையான மாணவத் தேர்தல்களுக்கு, அம்மாணவ அமைப்புகளுக்கு அரசியல் பின்னணியுண்டு. இந்தியாவின் எதிர்கால அரசியல்வாதிகள் இங்கிருந்தே முளைக்கத் தொடங்கி விடுவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மாணவ அமைப்பைக் கொண்டிருக்கும்.
ஆளுங்கட்சியின் பலப் பின்னணியோடு, குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பிரிவினர் ஒருபுறம்! மதச்சார்பற்ற கொள்கைகளோடு, பகுத்தறிவு சிந்தனை கொண்ட பிரிவினர் மறுபுறம்! இவர்களுக்கிடையே நடக்கும் மோதலே இந்தத் தேர்தல்!
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆளுங்கட்சிக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நடக்கும் போட்டி!
இதில் ஜெயிப்பவரையும்,தோற்பவரையும் ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்ப்பதால், இங்கு நடக்கும் தேர்தல் அரசியல்வாதிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கும்.
பல சமயங்களில் இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் தகுதியுள்ள மூத்த மாணாக்கர்களுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டு சட்ட சபையில் அமரும் உரிமை தருவது கூட வழக்கம் தான்!
அப்பேர்ப்பட்டத் தேர்தல் இந்த முறை ஏகப்பட்டக் குளறுபடிகளைச் சந்தித்து, ஒட்டுமொத்தக் கல்லூரியும் ரத்தபூமியாக மாறிப் போனதுக்கு இரண்டு பேர் காரணமாயிருந்தனர்.
ஒருவன், எப்படியேனும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடவேண்டுமென்றுத் தீர்மானித்து தொடக்கத்திலிருந்துப் பல சேட்டைகளைப் புரிந்து கொண்டிருந்த சேர்மேனின் மகன் கமல்நாத்! இவன் ஆளுங்கட்சியின் சார்பில் போட்டியிடும் மாணவ அமைப்பைச் சேர்ந்தவன்! மற்றொருவன், துஷர். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவன்!
பெரும்புகழ் பெற்ற இது போன்ற அரசுக் கல்லூரிகளில் ஒரு வழக்கமுண்டு. பழங்குடியினருக்கென்று ஒதுக்கப்படும் இடங்களில் வந்து சேரும் ஏழை மாணவர்களை ராகிங் என்கிற பெயரில் மனரீதியாகத் துன்புறுத்தித் தொல்லைக் கொடுத்து அவர்களை வெளியேத் துரத்தி, அக்காலியிடங்களுக்குப் பணக்கார மாணவர்களை நியமிப்பது.
பல சமயங்களில் அத்துன்பங்களுக்கு ஆளாகி விடும் மாணவர்கள், கல்லூரியிலேயேத் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவதுண்டு. வருடா,வருடம் நாம் செய்தித்தாளில் வாசிக்கும் செய்தி தான்!
அப்படியொருத் துன்பத்துக்கு ஆளாகித் தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் தான் துஷர். அவனைச் சுற்றி அரணாக அவனை எப்போதும் பாதுகாக்கும் நண்பர்,நண்பிகள் உடனிருந்தாலும், அரசியல் நோக்கத்தோடு, பழங்குடியினரை மட்டுமேக் குறி வைத்து நடத்தப்படும் இந்த வன்முறையிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.
குறைந்த மார்க்குகளே எடுத்திருந்தாலும், தங்களுக்கான கோட்டாவில் உள்ளே நுழைந்து விடும் இம்மாணவர்களின் மீது, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கூட பெரிய கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் திண்டாடும் மாணவர்களுக்கு எப்போதும் ஒரு காழ்ப்புணர்ச்சியுண்டு. அது எல்லை மீறும் போது இப்பேர்ப்பட்ட சம்பவங்கள் நடந்தேறி விடுகின்றன.
தாழ்த்தப்பட்டப் பழங்குடி இனத்தில் பிறந்து தங்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றத்தைக் காண வேண்டிப் பெரும் கனவோடு இது போன்றக் கல்லூரிகளில் நுழையும் பெரும்பாலான மாணவர்கள், மற்ற மாணவர்களால் ஒதுக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாதியிலேயே விலகி விடுவதுண்டு. இத்தனைத் தடைகளையும் தாண்டி கெத்தாகப் படிப்பை முடித்து வெளியே வரும் மாணாக்கரின் எண்ணிக்கையும் அதிகமென்பதை மறுக்க முடியாது.
ஆனால் இன்று வரை இது போன்ற அரசுக் கல்லூரிகளில் நடந்தேறிக் கொண்டிருக்கும் இத்தகையக் கொடூரத்தைத் தடுப்போர் எவருமில்லை, கல்லூரி நிர்வாகம் உட்பட!
கமல்நாத்தின் கூட்டத்தைச் சேர்ந்தோர் ராகிங் என்ற பெயரில் அரங்கேற்றிய வன்முறையில் துஷர் பலியானது போதாதென்று, மாணவத் தேர்தலிலும் அவனது அட்டகாசம் தொடர, எதிரணியைச் சேர்ந்தவர்கள் அவன் மீது கொலைவெறியே கொண்டனர்.
துஷரின் இறப்பு, மாணவர்களிடையே பரவிய விதம், கமல்நாத்தின் தோல்வியை உறுதி செய்ய, அவன் அமைப்பினரோ, இத்தேர்தலை எப்படியேனும் நடக்க விடாமல் செய்து விட வேண்டுமென்று சூளுரைத்துக் கொண்டனர். கல்லூரியளவில், மாணவர்கள் மத்தியில் ஆளுங்கட்சியினர் தோற்றுப் போனால், அது நாளை இந்த அமைப்பினரின் அரசியல் பயணத்தைப் பாதிக்குமென்பதால், தேர்தலை நிறுத்தி விட முனைப்புக் காட்டினர்.
வெளியாட்களுடன் கல்லூரிக்குள் நுழைந்துக் கலவரத்தை ஏற்படுத்த முயன்றோரை கம்யூனிஸ்ட் பிரிவினர் தடுத்து நிறுத்துவது தான் இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
கல்லூரி நிர்வாகத்திடமிருந்து இவர்களுக்கு எவ்வித ஆதரவும் இல்லாவிடினும், ப்ரஃபசர் நரேஷ் என்பவர் இவர்கள் புறம் நின்றார். அவருடைய நெருங்கிய போலீஸ் நண்பர் ஒருவராலும்,கம்யூனிஸ்ட் பார்ட்டிகளின் ஆதரவாலும், அவ்வூரின் பொதுமக்களாலும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.
கூட்டம்,கூட்டமாக போலீஸ் வண்டியில் ஏற்றப்படும் மாணவர்களை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்த விஜயின் அருகே வந்த நண்பன் ஒருவன் அவன் காதுக்குள் ஏதோ கூற.. அடுத்த நொடி, விறுவிறுவென மைதானத்தை நோக்கி ஓடினான் அவன்.
ஓய்வின்றி ஊற்றிக் கொண்டிருந்த மழையை வான்மகள் சற்று நிறுத்தி வைத்திருக்க, மைதானம் முழுதும் தண்ணீர் தெப்பமாய்த் தேங்கியிருந்தது. அவனது ஓட்டத்திற்கு அந்தத் தண்ணீர் விதித்தத் தடையையெல்லாம் அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
“சரண்யா வந்துட்டா மச்சி”-என்ற நண்பனின் குரல் மட்டுமேக் காதில் ஒலிக்க… பெரிய பெரிய எட்டுக்களுடன் தண்ணீரைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தவன் பாஸ்கட் பால் கோர்ட் அருகே புல்தரையில் நின்றிருந்தவளின் புறம் மூச்சு வாங்க நின்றான்.
புஸ்,புஸ்ஸென மூச்சை வெளியிட்டபடித் தன்னையே நோக்கிக் கொண்டிருந்தவனின் பார்வையை உணர்ந்து, அவள் அவன் புறம் நிமிர்ந்து நோக்குகையில், சற்றும் யோசிக்காமல் அவள் கரத்தைப் பற்றியிழுத்து, அவளைத் தன் மீது சாய்த்து இறுக அணைத்திருந்தான் அவன்.
ஒரு நொடி எதையும் உணராமல் அவன் மீது சாய்ந்தவள், எகிறித் துடித்த அவனது இதயத்தின் ஓசையைத் தன் செவிகளில் உணர்ந்து அவன் தோளைப் பற்றித் தள்ளினாள்.
அவள் தள்ளியதில் இரண்டடிப் பின்னே சென்று தடுமாறி நின்றவன், இன்னமும் பெரிய பெரிய மூச்சுகளை வெளியிட்டவண்ணமிருக்க, பல்லைக் கடித்துக் கொண்டு அவனை நோக்கியவளின் பார்வையும்,செய்கையும் அவனது கோபத்தைக் கிளறியது.
மூளை,மூளை என்ற பாகத்தை அவசரத்துக்குக் கூட உபயோகிக்கும் பழக்கமின்றி, புத்தி பிரண்டப் பிச்சியாய் ஒரு காரியத்தைச் செய்து வைத்து விட்டு, அதன் வீரியத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல்.. அதனால் விளையப் போகும் பெருந்துன்பத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எங்கோ ஒளிந்து கொண்டு முழுதாய் 24-மணி நேரம் அவனைக் கதி கலங்கச் செய்து விட்டாள்! சண்டாளி!
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்?, என்னவானாளோ! எவன் கையில் மாட்டினாளோ! அவள் மானத்திற்குப் பங்கம் ஏற்படுமளவிற்கு ஏதேனும் நடந்து தொலைத்திருந்தால்.. அடுத்து என்ன செய்திருக்க முடியும்?, ஏதேதோ எண்ணி.. ஒவ்வொரு நிமிடத்தையும் நரகமாய் அவன் கழித்திருக்க.. ஏதுமறியாச் சிறுமி போல், பாவமாய் அவன் கண் முன்னே நிற்கிறாள்! ராட்சசி!
தொட்டால்.. தள்ளி வேறு விடுகிறாள்! ஏன்? அவன் தொடக்கூடாதாமா?, அவனுக்கு நினைவு தெரிந்து இந்த 20 வருட வாழ்க்கையில் அவன் இது போன்று ஒரு முறை கூடப் பயம் கொண்டது கிடையாது! செய்வதையெல்லாம் செய்து விட்டு ஒதுங்கி வேறு நிற்கிறாள்! பிசாசு!
கோபமாய் அவன் மீண்டும் அவளது கை பற்ற முயல்கையில்.. அவன் கையில் சிக்காமல்.. அவள் இரண்டடி பின் நகர.. ஆவேசத்துடன் அவள் முகம் பற்றி அவள் இதழ்களை முற்றுகையிட்டான் அவன்.
ஒரு நொடி மூச்சு விட மறந்து உறைந்து போனவள், அடுத்த நொடி அவனை விலக்கும் முயற்சியில் திமிறித் தன் இதழ்களை அவனிமிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள்.
அவள் முயற்சிகளை இலகுவாக முறியடித்தவன் அந்த ஒற்றை இதழ் முத்தத்தில், தன் கோபத்தை,ஆதங்கத்தை,தவிப்பைத் தீர்த்துக் கொள்ள முயன்று, விடாது முன்னும்,பின்னும் நகர்ந்தபடித் திமிறிக் கொண்டிருந்தவளை மேலும் அழுந்த முத்தமிட்டான்.
ஒன்றையொன்று முட்டித் தள்ளியபடிச் சண்டையிட்டுக் கொள்ளும் காளைகளைப் போல, விடாதுத் திமிறியபடி அவளும், அவளுக்கானத் தன் தவிப்பைப் புரிய வைத்து விடும் நோக்கத்துடன் அவனும் அடுத்த சில நொடிகளை இந்நிலையிலேயேக் கடத்த… ஒரே மூச்சோடுப் போராடி அவனிடமிருந்துத் திமிறி விலகியவள்.. ஆத்திரமாய் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.
ஏற்கனவே நடந்தேறியிருந்த சண்டையினால் காயமடைந்திருந்தவனின் உதட்டில், அவள் அறைந்ததும் மேலும் ரத்தம் பெருக.. குத,குதவென எச்சிலோடு சேர்ந்து வாய் முழுதும் ஊறிய ரத்தத்தைக் காறித் துப்பியவன், அவள் அறைந்ததைக் கண்டு கொள்ளாமல், உதட்டைத் துடைத்தபடியே, நிமிர்ந்து நின்று அவளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.
நைட்-பேண்ட் டீ-ஷர்ட் சகிதம் தூக்கிக் கட்டப்பட்டிருந்தக் கொண்டையுடன், நெற்றியிலும்,உதட்டிலும் லேசான ரத்தக்காயங்களுடன், இரண்டு நாட்களாகத் தூக்கமின்றி அழுததில் முகம் வீங்கிப் போய் ஓய்ந்து போனத் தோற்றத்துடன் நின்றிருந்தாள் அவள். லேசாக நீட்டி வைத்திருந்த அவளது வலது கரத்தை நோக்கியவன் பதறிப் போய்..
“என்னடி இது??” – ஆத்திரமிகுதியில் குரல் கம்ம அவளிடம் கேள்விக் கேட்டான்.
“…………….”
“கேக்குறேன்ல?, பதில் சொல்லு. என்ன பண்ணித் தொலைச்சிருக்க?”
“…………….”
“சரண்யா பதில் சொல்லு” – அவளருகே வந்துத் தோளை உலுக்கியவனின் கைகளைத் தட்டி விட்டவள்.. கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தக் கண்ணீரைத் துடைத்தபடி..
“என் ஃப்ரண்டைக் கொன்னவன் முகத்துல ஆசிட் அடிச்சிடலாம்ன்னு போனேன்!, அப்போ பட்டக் காயம் இது” என்றாள்.
முகம் மிதமிஞ்சிய வேதனையையும், தீராத ஆத்திரத்தையும் பிரதிபலிக்கத் திமிரான குரலில்.. பிசிறின்றி வார்த்தைகளை உச்சரித்தவளைக் கண்டுத் திகைத்துப் போனான் விஜய்.
“எ…..எ…என்ன சொல்ற?” – தலையை உலுக்கிக் கொண்டு அவன் மறுபடிக் கேள்வி கேட்க..
“முதல்ல ஒரேடியாக் கொன்னுடலாம்ன்னு தான் நினைச்சேன்! ஆனா, என் ஃப்ரண்ட் ஒவ்வொரு நாளும் அவனால அனுபவிச்ச வேதனையை இவனும் அனுபவிக்காம, ஒரே தடவைல பட்டுன்னு உயிரை எடுத்துட்றதுத் தப்புன்னு தோணுச்சு!, அதான்.. வாழ்நாளுக்குமான வேதனையை அவன் அனுபவிக்கனும்ன்னு நினைச்சு அவன் முகத்துல ஆசிட் அடிக்கப் போனேன்..” – மீண்டும் பிசிறற்றக் குரலில் பதில் கூறியவளிடம் என்ன சொல்வதென்று புரியாமல், செய்கையற்று நின்றிருந்தான் அவன்.
மீண்டும் வலுப்பெறத் துவங்கிய மழையின் சத்தத்தைத் தவிர, அங்கு எதுவும் கேட்கவில்லை. குளிரின் தாக்கத்தைக் கூட உணராமல், ஜடம் போல் நின்றிருந்த இருவரையும் கண்டு பதறி, அருகே ஓடி வந்தனர் நண்பர்கள்.
“சரண்யா… எங்க போன?”
“சரண், ஆர் யூ ஓகே?”
“கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?, என்ன பண்ணித் தொலைச்சிருக்க?”
“பெரிய வீராங்கனையா நீ?, உனக்கு மட்டுமா துஷர் ஃப்ரண்ட்?, எங்களுக்கும் தானடி?, நாங்க பொறுமையா விசயத்தை ஹாண்டில் பண்ணிட்டிருக்கிறப்ப, அவசரக்குடுக்கை மாதிரி நீ இப்படிப் பண்ணி வைச்சிருக்க?, இருக்கிற கஷ்டம் போதாதுன்னு நீ வேற ஏன் படுத்துற?”
“இவ எல்லா விசயத்திலயும் முந்திரிக் கொட்டை தான்! அதிகப் பிரசங்கி!”
-24 மணி நேரமாகக் காணாமல் போய் விட்டவளுக்கு என்னானதோ, ஏதானதோவெனப் பயந்து போயிருந்த நண்பர் கூட்டம் அவளை விடாது சாடிக் கொண்டிருந்தது. ஏற்கனவே துஷரின் மரணம், அவர்களை உலுக்கியெடுத்திருக்க, நண்பனின் சாவுக்குப் பழி வாங்கப் போகிறேன் என கமல்நாத்தைத் தாக்க சோலோவாகக் கிளம்பி விட்டவளை எண்ணிக் கதிகலங்கிப் போயினர்.
அதிலும் லேப்பிலிருந்து வீரியமான ஆசிட் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் புறப்பட்டு விட்டச் செய்தியறிந்து மொத்தமாய்ப் பயந்து போயினர்.
அவளைச் சொல்லியும் குற்றமில்லை! துஷரின் நெருங்கிய தோழி அவள். நண்பனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உணர்ச்சி மிகுதியில் ஆசிட் பாட்டிலைத் தூக்கிக் கொண்டுக் கிளம்பி விட்டாள்! பாவம்!
சுற்றி நின்றபடி அவளை விடாது திட்டித் தீர்த்தவர்களை விலக்கி அவளருகே வந்த விஜய் “என்ன நடந்தது? சொல்லு” என்றான்.
“நிஜமாவே அவன் முகத்துல ஆசிட் அடிச்சுட்டியா?, சரண்யா, இது எவ்ளோ பெரிய க்ரைம் தெரியுமா?” – பரத்
“இல்ல, கண்டிப்பா அடிச்சிருக்க மாட்டா” – விஜய்
“பின்ன?” - தன்வீர்.
“நான் சொல்றேன் டா விஜய்”-என்ற அகத்தியன் (சீனியர் மாணவன்) “அவன் வலது உள்ளங்கை முழுக்க ஆசிட்ல எரிஞ்சிடுச்சுடா!, அவன் கைல ஊத்திருக்கா இவ!” என்றான்.
“ஊஃப்ஃப்ஃப்ஃப்”-என ஆசுவாசப்பட்ட அனைவரும் மீண்டும் அவளைக் கலவர முகத்துடன் நோக்கி “எப்படியும் சேர்மேன் இவளைச் சும்மா விட மாட்டார்டா” என்றனர்.
“இல்ல, இவ தான் ஊத்தினா-ன்னு யாரும் இன்னும் கண்டுபிடிக்கல!, மேடம், முகத்தை மூடிட்டுப் போயிருக்காங்க.” – அகத்தியன்
“இப்போ கமல் எப்படியிருக்கான்?”
“ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கான்”
“இப்போ என்ன மச்சி பண்றது?” – அனைவரின் பார்வையும், அவளையே விடாது நோக்கிக் கொண்டிருந்த விஜய்யின் மீது படிந்தது.
“இப்படியே விட்ரலாம். இவ தான் பண்ணினா-ன்னு வெளிய சந்தேகம் வராம பார்த்துக்குவோம்!, இவ காணாம போனது நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. இப்போ நடந்துட்டிருக்குற பிரச்சனைல, அவனுக்குப் பிடிக்காத யாரோ தான் இதைச் செய்துட்டதா அவங்க நம்பிட்டிருப்பாங்க. அப்டியே நினைக்கட்டும்!, நம்பட்டும், இவ மேல சந்தேகம் வர்றதுக்கு முன்னாடி இவளை பேக் பண்ணிடலாம்!” – அவன் முடித்ததும் சரி தான் என்பது போல் அனைவரும் அமைதி காக்க..
வேக மூச்சுடன் அவள் புறம் திரும்பியவன்… மிதமிஞ்சியக் கோபத்துடன்…..
“எண்ணி நாலே நாள்!, எலக்ஷன் முடிஞ்சப்புறம் நீ இந்த ஊரை விட்டே ஓடிடனும். நீ படிச்சுக் கிழிச்ச வரைக்கும் போதும்! நாலு நாளுக்கப்புறம் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்கக் கூடாது! புத்தி கெட்டுப் போய் நீ எப்போ என்ன பண்ணுவியோ, உனக்கு என்னாகுமோன்னு பயந்து பயந்து என்னால காலத்தை ஓட்ட முடியாது! மொத்தமா தொலைஞ்சு போயிடு! இனி இந்த ஜென்மத்துல நான் உன் முகத்தைப் பார்க்கவே கூடாது” என்று கூறியவன்… கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது விறுவிறுவென நடந்து சென்று விட்டான்.
இன்று………..
சென்னையிலிருந்துக் காஞ்சிபுரத்தை நோக்கி டயோட்டா கார் ஒன்று சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது. உள்ளே ஒலித்துக் கொண்டிருந்த இளையராஜாவின் இசையை ரசிக்கும் எண்ணம் அந்தக் காரில் அமர்ந்திருந்த ஒருவருக்குக் கூட இல்லை போலும்! ஆளாளுக்கு ஒரு திசையை வெறித்தபடி உர்ரென்ற முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
டிரைவர் சீட்டிலிருந்தத் தன் தந்தை ராகவேந்திரனைத் திரும்பி நோக்கிய விஜய் எரிச்சல் மிகுந்த குரலில் “அப்பா….” என்றழைத்தான்.
“ம்” - ராகவேந்திரன்
“வண்டியைத் திருப்புங்கப்பா, வீட்டுக்குப் போகலாம், ப்ளீஸ்”
“ச்சு, என்னடா விஜய் இது?, கிளம்புனதுல இருந்து இப்படியே சொல்லிட்டிருக்க?, ஏன் அங்க போக வேண்டாம்ன்னு நினைக்குற?, காரணத்தைச் சொல்லு” – பின் சீட்டில் அமர்ந்திருந்த அவனது அன்னை சுப்புலட்சுமி.
“நான் சொன்னாலும் உனக்குப் புரியாதும்மா”
“என்ன பதில் இது?” – ராகவேந்திரன்.
“அப்பா, அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்காதுப்பா, இந்தப் பொண்ணுப் பார்க்குற ஃபங்க்ஷனே வேஸ்ட், நீங்க எல்லாரும் தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டிருக்கீங்க.”
“ஏன் அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்காது?” – அப்பா
“இவன் படிச்சக் காலேஜ்ல அந்தப் பொண்ணு ஒரு வருஷம் படிச்சிருக்கா. ஏதோ காரணத்துக்காக, பாதிலயே படிப்பை நிறுத்திட்டு சொந்த ஊருக்கே வந்திருக்கா. உனக்கு முன்னமே அந்தப் பொண்ணைத் தெரியும். அப்டித் தானேடா?” – சரியாகப் பாயிண்ட்டைப் பிடித்தார் லட்சுமி.
“அப்படியா விஜய்?,” – அப்பா
“ஆமாம். எனக்கு அவளை முன்னாடியே தெரியும். அதனால என்ன இப்போ?”
“தெளிவானக் காரணத்தைச் சொல்லுடா விஜய். ஏன் இந்தப் பொண்ணு வேணாம்?”
“அந்தப் பொண்ணுக்கு என்னை அப்பவே பிடிக்காதுப்பா”
“பிடிக்காம போற அளவுக்கு நீ என்ன பண்ணுன?” – லட்சுமி
“ப்ச், ம்மா! நான் எதுவும் பண்ணல”
“எதுவுமே பண்ணலேன்னா, அவளுக்கு எதுக்குடா உன்னைப் பிடிக்காமப் போச்சு?”
என்ன கூறுவதென்று புரியாமல் தலை முடியைக் கோதியபடி ஜன்னல் புறம் நோக்கியவனை ஒருமுறைத் திரும்பிப் பார்த்த ராகவேந்திரன்..
“தம்பி, சரண்யாவோட அப்பா பார்த்தசாரதி என் ஃப்ரண்ட். என் பொண்ணுக்கு உன் பையனைக் கட்டித் தர்றியான்னு அவன் வாய் விட்டுக் கேட்டுட்டான். என்னால மறுக்க முடியல. நானும் சரின்னுட்டேன்! உங்க 2 பேருக்குப் பிடிச்சிருந்தாத் தான் கல்யாணம். இல்லன்னு நான் சொன்னல. ஆனா.. காரணம் சொல்லாம, நீ இந்தப் பொண்ணு பார்க்குற ஃபங்க்ஷனை அவாய்ட் பண்றது, எனக்கு சரியாப் படல. அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்காதுன்னு சொல்ற. ஆனா.. உனக்கு அவளைப் பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறியே?” –என்றார்.
புருவத்தைச் சுருக்கிக் கொண்டு முகம் இறுக ஜன்னலை வெறித்தவன் அவருக்குப் பதில் கூறவேயில்லை.
காஞ்சிபுரத்திலிருந்த சரண்யாவுடையத் தாத்தாவின் வீட்டில் வைத்து விஜய்-சரண்யாவின் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்திருந்தனர் சரண்யாவின் வீட்டினர்.
இவர்கள் மூவரும் வந்திறங்கியதும், வாசலுக்கே வந்து வரவேற்ற முகங்களுக்கு மத்தியில் சரண்யாவின் முகமும் தெரிந்தது. அவளை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஆச்சர்யமோ,ஆர்வமோ இன்றி, தன்னைக் கண்டதும் மலர்ந்த அவள் முகத்தை ஆராயும் நோக்கத்துடன் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.
“ஃபார்மலா எதுவும் இருக்க வேண்டாம்ன்னு தான் சரண்யாவை வாசலுக்கே அழைச்சிட்டு வந்தேன் டா ராகவ்” – சரண்யாவின் தந்தை சிரிப்புடன் நண்பனின் தோளைத் தழுவ… “அப்போ பஜ்ஜி,சொஜ்ஜி எதுவும் தர மாட்டியா?” என்றுக் கேலி செய்தபடி அவரோடு நடந்தார் ராகவேந்திரன்.
ஒவ்வொருவராக உள்ளே நுழைவதை உதட்டைக் கடித்துக் கொண்டு டென்ஷனுடன் நோக்கிக் கொண்டிருந்த சரண்யா, அனைவரது கவனத்தையும் கவரா வண்ணம், மெல்ல அவனருகே வந்தாள்.
அவன் காதருகே வந்து.. அடிக்குரலில் “சீனியர், நான் உங்க கிட்ட தனியாப் பேசனும், ப்ளீஸ் ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறி விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் முன்னே நடந்து விட்டாள்.
இவன் ஏற்பாடு செய்வதற்கு அவசியமில்லாமல் பெரியவர்கள் இருவரும் “பொண்ணும்,பையனும் தனியா பேசட்டுமே” என்று எடுத்துக் கொடுக்க.. அந்த வீட்டின் மாடியறை ஒன்றில் அவனைத் தனியாகச் சந்தித்தாள் சரண்யா.
நகம் கடித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவள் அவன் உள்ளே நுழைந்ததும் வேகமாக அவனருகே வந்து, அவன் கையைப் பற்றிக் கொண்டு…
“இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துங்க சீனியர்” என்றாள்.
இவளிடம் வேறு என்ன எதிர்பார்த்து விட முடியும்!
பதிலேதும் கூறாமல்.. தன் கரத்தைச் சுற்றிப் பதிந்திருந்த அவள் விரல்களை நோக்கினான் அவன்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட, இவ்விரல்களின் ஸ்பரிசம் தன்னுள் ஏற்படுத்தும் மாற்றத்தை உணர்ந்தபடி உறைந்த நிலையிலிருந்தவன் பின் தொண்டையைச் செறுமிக் கொண்டு, அவள் விரல்களை விலக்கி.. அறையைச் சுற்றிப் பார்வையிட்டபடி நிமிடத்தில் தன்னைச் சமன் செய்து கொண்டான்.
பின் புன்னகையுடன் அவள் புறம் திரும்பி…
“பத்து வருஷத்துக்கும் மேல இருக்கும் நீயும்,நானும் பார்த்து!, எப்படியிருக்கேன், என்ன பண்றேன்னு எதுவும் கேட்க மாட்டியா?”
எச்சில் விழுங்கியபடி அவனை நோக்கியவள்… உள்ளே சென்று விட்டக் குரலுடன் “எ..எப்படியிருக்கீங்க?” என்று விசாரித்தாள்.
ஒரு ஏளன முறுவலுடன் அவளை நோக்கியவன் “ஏன்?” என்று வினவினான்.
புரியாமல் பார்த்தவளிடம் “இல்ல, கல்யாணத்தை நிறுத்தனும்ன்னு சொன்னியே! அதான் ஏன்னு கேட்டேன்?” என்றான்.
“என்ன ஏன்?, நீங்க இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடலாம்ன்னு நினைப்பு வைச்சிருந்தீங்களா என்ன?”
“நான் அப்படி சொல்லவே இல்லையே!”
“பின்ன ஏன் கேள்வி கேட்குறீங்க?”
“இன்னிக்கு பெட்ரோல் விற்குற விலைக்கு, அவ்ளோ காசு செலவு பண்ணி சென்னை டூ காஞ்சிபுரம் கார்ல வந்திருக்கோம்!, மணி வேஸ்ட்! டைம் வேஸ்ட்! உனக்கு இஷ்டமில்லாட்டி, நீ இந்தப் பொண்ணு பார்க்குற ஃபங்க்ஷனை நடக்க விடாமத் தடுத்து நிறுத்திருக்கனும்! அதை விட்டுட்டு குடும்பமாக் கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்துவீங்களா?”
முகம் கன்ற “சாரி” என்றவள் தொடர்ந்து “எங்கப்பான்னா எனக்கு ரொம்பப் பயம் சீனியர். உங்களுக்கும் தெரியும் தான?, என்னால அவரை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாது” என்றாள்.
“அதுசரி, அதுக்கு நானும்,என் குடும்பமும் தான் பலியா?”
“சீனியர் ப்ளீஸ்….” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் அவள்.
“சரி, நீ காரணத்தைச் சொல்லு”
“…………………..”
“அட்லீஸ்ட், எங்கம்மா,அப்பாக்கிட்ட இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு சொல்ல, எனக்கு ரீசன் வேணுமே! அதுக்காகவாவது சொல்லு”
நியாயம் தான் என்று மனதில் பட்டதாலோ என்னவோ, அவனை நிமிர்ந்து நோக்கி.. “வ..வந்து…” என்று இழுத்தாள் அவள்.
“வந்து??”
“நா..நான்.. நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்” என்றாள்.
அதுவரை முகத்திலிருந்தப் புன்னகை உதட்டோடு உறைந்து விட.. தீவிர முக பாவத்துடன் அவளையே நோக்கினான் விஜய்.
