அத்தியாயம் - 3

னிமூன் ஸ்பாட்டை இப்படி ஹோட்டல் மாதிரி யூஸ் பண்ணிட்டிருக்கிற ஒரே ஆள் நீ தான் பிரஜன்!, வாழத் தெரியாத ஆசாமி நீ”

-வீடியோ காலில் அலுத்துக் கொண்ட அன்னையை சலிப்பாய் நோக்கினான் பிரஜரஞ்சன்.

“துணையோடக் கழிக்க வேண்டிய நேரங்களை இப்படித் தனிமையில கடத்துறதும், ஒரு வகைல சாபம் தான்” என்று அவர் முகம் சுருக்கிக் கொண்டதும்,

கையை நீட்டி “அதான் கடலும்,ஆகாசமும் என் வசம் இருக்கே ம்மா, இப்போதைக்கு அதோட துணையே போதும் எனக்கு” என்றான் கல்கத்தாக்காரன், கவிதையாய்.

பால்கனியில் நின்றபடிக் கடற்காற்றில் முடி அசைய சிரிப்புடன் உரையாடிக் கொண்டிருந்தவனிடம், அவன் அன்னை,

“அப்போ பிராஞ்சல்?” எனக் கேட்டார்.

“அவளுக்கு வாய் சரியில்லையேம்மா?”

“உனக்குக் கூடத் தான் மூக்கு சரியில்ல?”

“அதை ப்ளாஸ்ட்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம் ம்மா”

“பிரஜன்ன்ன்ன்”

“தொமாக்கே மிஸ் கொரி அம்மா (ஐ மிஸ் யூ)”

“பேச்சை மாத்தாத”

“நீ என்னை மிஸ் பண்ணலயா?”

“பண்ணல”

“ப்ச், ம்மாஆ…”

“கிவ் மீ அ ப்ராப்பர் ரீசன் பாபா”

“பிராஞ்சல் ரொம்ப சைலண்ட் அண்ட் சென்சிடிவ். எனக்கு செட் ஆக மாட்டா”

“அமைதியான பொண்ணுங்குறது குவாலிகேஷன் தானே?”

“அழுத்தமானவங்குறது போதும், நான் டிஸ்குவாலிஃபை பண்றதுக்கு”

“ப்ச், உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு தான் வேணும் அப்போ?” – ஆயாசத்தோடுத் தொடங்கிய அன்னையை,

“அம்மா, ட்ரிப்ல இருக்கிறவன் கிட்டப் போய் ட்ராப்ல விழறதைப் பத்தி பேசிட்டிருக்க?, உனக்கு வேற நேரமே கிடைக்கலையா?” – எனக் கேட்டபடி கேமராவின் முன் வந்த பிரஜனின் அண்ணன், அவன் பின்னே எட்டி நோக்கி,

“யார் அந்த ராதிகா ஆப்தே?” என்று வினவியதும்,

சட்டெனத் திரும்பித் தன் பின்னே நோக்கிய பிரஜரஞ்சன், சுருட்டை முடி பால்கனியில் நிற்பதைக் கண்டு விட்டு,

“பக்கத்து அறைப் பொண்ணு” – என்றான் பங்க்ளாவில் (Bangla – வங்காளிகளின் பாஷை).

“பக்கத்து ரூம்ல பொண்ணா?, ப்ரஜன் பாபா” – எனக் குதூகலமாய் வினவிய அண்ணனைப் பார்வையால் அடக்கி, அவளை மீண்டும் திரும்பிப் பார்த்து விட்டுப் பின் அண்ணனிடம்,

“ப்ரோஓஓ” என்று அவன் அடிக்குரலில் பல்லைக் கடிக்க,

“என்ன?, இவளையும் பிடிக்கலையா?” – எனக் கேமராவை முறைத்த அன்னையிடம்,

குனிந்து பிடரியைக் கோதியபடியே “ம்ஹ்ம்” எனத் தலையசைத்தான்.

“ஏன்?”

“ப்ச், அவ கருப்பா இருக்காம்மா” என எரிச்சலாய்க் கூறியவன், சுருட்டை முடி சன்லவுஞ்சரை நோக்கி நகர்வது கண்டு, அவசரமாய்..

“நான் அப்புறம் பேசுறேன். பாலோ தேகோ. ஆஷி (stay well. bye)” என call-ஐ கட் செய்து விட்டு அவள் புறம் திரும்பினான்.

ந்த சன்லவுஞ்சர் சாகுற நிலைமைல இருக்கு”

-அலையோசையை மீறி ஆங்கிலத்தில் அலறியவனின் குரலில் திரும்பி அவன் புறம் நோக்கினாள் பல்லவி.

இரு அறைகளின் பால்கனிகளையும், ஒற்றைத் தடுப்பு இணைத்திருக்க, தடுப்பினருகே மறுபுறம் நின்றிருந்தான் அவன்.

அவள் தன் முகம் பார்த்ததும், மறுபடி அவன் அதையே கூற, கால் வளைந்து சரிந்த நிலையில் கிடந்த சன்லவுஞ்சரைப் பார்வையிட்டாள் அவள்.

“காசு கட்டி கப்பல்ல ஏறிட்டு, சொகுசா இருக்காம, ஏன் இங்க தூங்கனும்?”

“…….”

“OCD-ஆ உங்களுக்கு?, பெட்ல படுத்தா தூக்கம் வராதா?”

அவள் சன்லவுஞ்சரை ஆராய்ந்து முடிப்பதற்குள் அவன் கேள்விகளாக அடுக்கி விட, அவன் புறம் திரும்பியவள்,

“seasickness.” என்றாள் சுருக்கமாக.

கரடு,முரடான அவளது தோற்றத்திற்கு மாறாய் குரல் மெல்லிசை படித்தது.

“ஓ!” என்றவன் “எப்பவும் ஹெட்செட்டோட தானே இருப்பீங்க?, தூங்கும் போதும் அதையே தொடருங்க. Sick-ஆ feel பண்ண மாட்டீங்க” – என டிப்ஸ் கொடுத்தான்.

அவன் கூறியதைக் கேட்டதும், இவன் தன்னைக் கவனித்தானா என அவனைக் கேள்வியாய் நோக்கிய கண்கள், மறு நொடி, கவனித்தாலும் அக்கறையில்லை என்பது போல் அலட்டிக் கொள்ளாது பழைய நிலைக்குச் சென்று விட,

அவள் விழி மொழியைப் புரிந்து கொண்டவனும், அதை டீலில் விட்டுத் தன் கையை அவள் புறம் நீட்டி,

“பிரஜரஞ்சன் சக்ரபொர்த்தி” என்றான்.

அவன் நீட்டிய கையை ஒரு நொடி அசைவற்று நோக்கி விட்டுப் பின், அசையாது அதே இடத்தில் நின்றபடி அவன் விழிகளைப் பார்த்து,

“பல்லவி மைத்ரேயன்” என்றாள்.

அவள் கண்டு கொள்ளாது விட்டத் தன் கரத்தைக் கடுப்புடன் மடக்கி, தடுப்பில் ஒரு தட்டுத் தட்டியபடி,

“south Indian?”என்று வினவினான் அவன்.

‘மதராசி’ மருவி ‘சவுத் இண்டியன்’-ஆக மாறி விட்டாலும், தொன்று தொட்டக் காலத்திருந்து தொடரும் அந்தத் தொனி மட்டும்ம்ம்ம்ம்,

மறுபடி ஒரு நேர்ப்பார்வையுடன்,

“Anti Indian” என்றாள்.

அவள் பதிலில் புருவம் தூக்கித் தோள் குலுங்க மெலிதாய் நகைத்தவன்,

“ஹிந்தி தெரியாது போடாவா?” எனக் கேட்டுப் பின்,

“No offense” என்று விட்டு, “எனக்கும் கூட அவ்வளவாக ஹிந்தி வராது. ஐ அம் அ பெங்காலி” என்றான்.

“ஓ! பிரியாணில உருளைக் கிழங்கை சேர்த்து சாப்பிட்டா, பேச்சு இப்படித் தான் வரும் போல” (பொதுவாக கொல்கத்தா பிரியாணிகளில் வேக வைத்த இரண்டு முழு உ.கிழங்குகளைக் காணலாம்)

ரோபோ முகத்தை வைத்துக் கொண்டு ரவுசு பண்ணுபவளைக் கண்டு திகைப்பும்,சிரிப்பும் ஒரு சேர வந்தாலும்,

“Aloo is our saviour you know. நீங்க எங்க ஹிஸ்டரியைப் படிச்சாத் தான் புரியும்” என உருளைக் கிழங்கை விட்டுக் கொடுக்காது உருட்டியவன்,

“ஏன்… இப்படி?, தனிமைப் பயணம்?” எனப் பேச்சை வளர்க்க முயற்சித்தான்.

ஒத்துழைப்பாளோ அல்லது ஒதுங்கிச் செல்வாளோ எனத் தயக்கத்துடனே தான் தொடங்கினான்.

அவன் எண்ணியது போல், பதில் கூறாது அவனைத் தாண்டி அவன் அறைக்குள் பார்வையைச் செலுத்தினாள்.

அவள் கேள்வி புரிந்து பக்கவாட்டில் தன் அறையை நோக்கியவனும்,

“கடந்த வருஷம் முழுக்க வேலை,வேலைன்னு ஓடிட்டதால, நிறையத் தூக்கம், நிறைவான சாப்பாட்டோட, இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு ஒதுக்கம் தேவைப்பட்டுச்சு. அதனால தான்” என்றான், தன் ஒற்றைப் பயணத்தின் நோக்கத்தை.

அவன் பதிலைக் கேட்டுக் கொண்டதாக மெல்லத் தலையாட்டியவள்,

“எனக்கு அப்படியெந்தக் காரணமும் இல்ல” என்கிற அரைகுறை பதிலுடன் சம்பாஷணையை முடிக்கப் பார்த்தாள்.

அவள் கத்தரித்தப் பேச்சை ஒட்டு வைத்துத் தைக்கும் எண்ணத்துடன், “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமி,

“காரணம்…. இல்லையா?” எனத் தொடர்ந்தான் அவன்.

“………..”

“உங்களை இரண்டு நாளாக் கவனிக்கிற laundry attendant கூட நம்ப மாட்டான், காரணம் இல்லைன்னு நீங்க சொல்ற பொய்யை”

புருவம் சுருக்கியவளிடம், தன் காதில் கை வைத்துக் காட்டி,

“எப்பவும் காதுல ஹெட்செட், ஏதோ சிந்தனை, அரைகுறை சாப்பாடு, நிறைவில்லாதத் தூக்கம், நாள் முழுக்க சோகம்ன்னு தன்னை மறைந்த நிலையிலேயே தவிச்சபடித் திரியுறீங்க!,” எனக் கூறி,

அவள் முக பாவனைகளுக்காக ஒரு நொடிக் காத்திருந்து, எதுவும் கிட்டவில்லையென்றதும் பின்,

“தெரிஞ்சவங்க,பிடிச்சவங்க யாரையும் லாஸ் பண்ணிட்டீங்களா?” எனக் கேட்டான்.

“லாஸ்-ஆ?” – நெற்றி சுருக்கியவளின் மெல்லிய குரல், மேலும் மெலிந்து ஒலித்தது.

அவள் முகத்தை ஆராய்ந்தபடி “ம்” என்றவனைப் பதில் கூறாது பார்த்து விட்டுப் பின், கடல் நோக்கித் திரும்பி நின்று,

“லாஸ் தான்!” என்றவள்,

“Self loss” என முணுமுணுத்தாள்.

பற்பல அர்த்தங்கள் நிறைந்த அந்த ஒற்றை பதிலில், அனர்த்தமாய் ஒன்றை அவனது வில்லங்க மூளை பற்றிக் கொள்ள,

ஒற்றைப் புருவம் உயர்த்தி, உதட்டைச் சுழித்தவன், தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவளிடம்,

“லவ் ஃபெயிலியரா?” எனக் கேட்டான் ஒரு மாதிரி குரலில்.

மட்டம் தட்டிய அவனது தொனியை அவள் மதித்ததாகத் தெரியவில்லை.

கையைக் கட்டிக் கொண்டு, “லவ்-ஆ, இந்த வயசுலயா?” என்றாள் அவனது நக்கலைப் பிரதிபலித்து, நிதானமாக.

“அப்படியென்ன வயசு உங்களுக்கு?”

“முப்பத்தி மூனு”

“33?, ஹ்ம்ம்ம்ம்” – என ராகமிழுத்தபடிக் கை நீட்டி நெட்டி முறித்துக் கொட்டாவியை வெளியேற்றியவன்,

“லவ் ஃபெயிலியருக்கு ஏத்த வயசு தான்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

சைடாகத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவளிடம்,

“ஐ மீன்.. 33-க்கு என்ன குறை?, லவ் பண்ண, ப்ரேக் அப் பண்ண நல்ல வயசு தான்னு சொல்ல வந்தேன்” என்றவன் தொடர்ந்து,

“அதுக்குப் போய் கண்ணையெல்லாம் ஏன்…?” – எனக் கூறி,

“ஏற்கனவே பார்க்க சைத்தான் மாதிரி தான் இருக்கா!, இதுல சைடு லுக் வேற!” – என முணுமுணுத்தான்.

அவள் ரியாக்ஷன் எதுவுமின்றி ரிஜிட்-ஆக நிற்பதைக் கண்டு, அதற்கு மேல் எதையும் குடைய மனமின்றி,

“குழந்தைகளைக் கையில தூக்கிக் கொஞ்சியிருக்கீங்களா?” எனக் கேட்டான் சம்பந்தமேயில்லாமல்.

“ஆர்வம் இருந்ததில்ல” – ஒன் லைனரின் ஓனராக சுருட்டை முடி.

“அட்லீஸ்ட், சாப்பிட அடம்பிடிக்குற குழந்தை பக்கத்துலயாவது போயிருக்கீங்களா?”

பக்கவாட்டில் நின்றவனின் விழிகளை அவதானித்தாள்.

“இல்ல, பொதுவா சாப்பிட வம்பு பண்ற குழந்தைகளுக்குப் பேயைக் காட்டி பயமுறுத்தித் தான் சோறு ஊட்டுவாங்க. நீங்க பக்கத்துல இருந்தா, பேயைக் கூப்பிட வேண்டிய அவசியமே இருக்காது”

அவள் அதே பார்வையைத் தொடரவும்,

“பயப்பட வைக்குறக் கண்ணு உங்களுக்கு” என்றான் அமைதியாக.

“க்ளோஸ் அப்-ல பார்த்தா கேர்ர் ஆகுறது உறுதி” – அலட்டாது தொடர்ந்தவன்,

இமை சிமிட்டாது நின்றவள், மேலும் பயமுறுத்த முயல்வதற்கு முன், அவள் விழி பார்க்காமல் “குட் நைட்” என்று விட்டு நமுட்டுச் சிரிப்புடன் அறைக்குள் மறைந்தான்.

பெருமூச்சுடன் அண்ணார்ந்து ஆகாசத்தை நோக்கிக் கண் மூடி நின்றவள், அவனையோ, அவனது நக்கல்,நையாண்டிகளையோக் கருத்தில் ஏற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

வேளை தவறாது மூளை நிகழ்த்தும் முக்கோணத் தாக்குதலில் முட்டி மோதி, உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கும் இதயத்தின் இறைஞ்சல்களைத் தவிர, வேறு எதுவும் அவள் கருத்தில் நிற்கவில்லை.

கையிலிருந்த செல்ஃபோனில் மெசேஜ் வந்து விழுந்த ஒலியில், குனிந்தவள்,

“வீட்டை விற்க ப்ளான் பண்ணியிருக்கியா பல்லவி?, ஏன் இந்த லூசுத்தனமான முடிவு?, அந்த வீடு உன்னோட அச்சீவ்மெண்ட் பல்லவி! நீ பட்ட கஷ்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் கிடைச்ச பரிசு. உன் அத்தனை வருஷ உழைப்போட பலன். அதை உன்னால எப்படி இவ்ளோ ஈஸியா தூக்கி எறிய முடிஞ்சது?, எல்லாத்தையும் விட, அந்த வீடு அம்மாவோட கனவு பல்லவி! கொஞ்சமாவது அம்மாவைப் பத்தி யோசிச்சியா நீ?”

-என நாலு கால் பாய்ச்சலில் எகிறிய தோழியின் வார்த்தைகளில், விரக்தியாய்ப் புன்னகைத்தாள்.

‘நான் அம்மாவைப் பத்தி யோசிக்கலையா?’

“எனக்கு உன்னைப் புரியுது பல்லவி. நீ தப்பி ஓடல. ஒதுங்கிப் போகத் தான் நினைக்கிற. ஆனா, அதனால யாருக்கு என்ன பிரயோஜனம்?, ப்ச், காலம் எல்லாத்துக்கும் பதில் வைச்சிருக்கும் பல்லவி. எல்லாம் அதன் போக்குல போகட்டும்.”

“நீ கவலைப்படாதன்னு என்னால பேச்சுக்குக் கூட சொல்ல முடியல. ஆறுதலுக்கோ, சமாதானத்துக்கோ நீ தகுதியானவளே இல்ல! நீ கவலைப்பட்டே ஆகனும் பல்லவி. அது தான் உன் தப்புக்கான தண்டனை.”

“வீட்டை விற்கிறதைப் பத்தி யோசிக்க வேண்டாம். இப்போதைக்கு வாடகைக்கு விடலாம். மற்றதை அப்புறம் பார்க்கலாம்”

-அத்தோடு முடிந்தத் தகவலில், செல்ஃபோனை மேஜையில் வைத்து விட்டு பால்கனியைக் கம்பியைப் பற்றி நின்றாள் பல்லவி.

தப்புக்கான தண்டனையா?, அது…. தப்பா? இல்லை தவறா?

அறியாமல் செய்ததற்குப் பெயர் தவறு. அறிந்தே செய்வதன் பெயர் தப்பு.

அவள் அறிந்து செய்தாளா?, அறியாமல் செய்தாளா?

டுத்த நாள் காலை சுள்ளென முகத்திலடித்த வெயிலில் முகம் சுருக்கி எழுந்தமர்ந்தவளின் முன்னே,

“குட் மார்னிங் பல்லவி” எனப் புன்னகை முகமாக நின்றான் பிரஜரஞ்சன்.

“ஹெட்செட் டெக்னிக் வர்க் ஆகலையா?, நேத்தும் படுக்கை பால்கனில தான் போல?”

அவனது கேள்விக்கு லேசாய்த் தலையசைத்தபடிக் கண்களை அழுந்த மூடித் திறந்து தெளிய முயற்சித்துக் கொண்டிருந்தவளிடம், தன் கையிலிருந்த கோப்பையை நீட்டி,

“காஃபி?” எனக் கேட்டான் அவன்.

நிமிர்ந்து அவன் முகம் கண்டவள், தயக்கப் பார்வையைச் செலுத்த,

“இந்தக் காலையோட என் ரெண்டாவது காஃபி இது. டயர்டா தெரியுற உங்களுக்காக, இதைத் தியாகம் பண்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையுமில்ல” என்றவனிடம்,

அலட்டிக் கொள்ளாது எழுந்து வந்து கோப்பையை வாங்கினாள்.

எப்போதும் செத்த முகத்துடன் சீக்காளியைப் போலக் காட்சி தருபவள், வெடுக்கெனப் பேசி வெறுப்பை உமிழ்வாளோ, ஒதுங்கி நிற்கச் சொல்லி ஓட விடுவாளோ என்று அவன் எண்ணியிருந்ததற்க்கு மாறாக, நிதானத்துடன் அவள் காட்டும் ஒத்துழைப்பை ஆராய்ச்சியுடன் நோக்கினான்.

தூங்கி எழுந்ததால், அவளது சுருட்டை முடிப் பரட்டையாய் மாறி பெப்பரப்பேவென அவளது குட்டி முகத்தை விட்டு இரண்டு மீட்டர் தள்ளி நிற்க, சரியான உறக்கமில்லாது வீங்கிப் போனக் கண்களுடன், அகோரியாய்த் தெரிந்தாள்.

ஒரு ஆண் மகனின் முன்பு அவலட்சணமாய் நிற்கிறோம் என்கிற சிந்தனையின்றி, தன் போக்கில் உலவுபவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

அதை விட, அவளது உருளல்களுக்கும், புரலள்களுக்கும் அசராமல், கழுத்திலிருந்து ஒரு இன்ச் கூட விலகாது டீசண்ட் ஆன பொஷிசனில் நின்ற அவளது டீஷர்ட்டைக் கண்டு ஏமாற்றம் எழ, லேசாய் உதடு பிதுக்கினான்.

அறைக்குச் சென்று ரெஃப்ரெஷ் செய்து வெளி வந்தவள், அவன் தந்த காஃபியை ஒரு வாய் அருந்தி விட்டு “தேங்க்ஸ்” என்றாள்.

தலையசைத்து ஏற்றுக் கொண்டவன்,

“self loss ஆன உங்களை self repair செய்ய என் காஃபி உதவும் என்கிற நம்பிக்கையுடன்” என்றான்.

“self repair-ஆ?”

“ம்ம், உடைஞ்சதை ஒட்ட வைக்கும் முயற்சி! Life happens, coffee helps!”

“inspirational quote-ஆ?”

“ஏன், வேண்டாமா? அப்போ motivational quote சொல்லட்டுமா?”

முகத்திலடித்த வெயிலில் பொன்னிறமாய் ஜொலித்த பழுப்புக் கண்களை அவன் புறம் பதித்தபடி, அமைதியாய்க் காஃபியைப் பருகினாள் அவள்.

ஒளிக்கேற்ப நிறம் மாறும் அவள் விழிமணிகளைக் கண்டு, காட்டேரியா இவள்? என்றெண்ணியவாறு,

“The best view comes after the hardest climb” என்றான்.

இது போன்ற வரிகளை, ஊக்க மருந்துகளாக எண்ணிக் கொண்டு, உழைத்த காலங்கள் நினைவிற்கு வர, ஏளனமாய் உதடு வளைய, தோளைக் குலுக்கியவள், பதிலின்றிப் பார்வையைக் கடலின் மீது பதித்தாள்.

“மோட்டிவேஷனல் கோட்-க்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை நீங்க இப்படி அவமானப் படுத்தியிருக்க வேண்டாம்”

“………..”

“ஹ்ம்ம்??” – ஏதாவது பதில் சொல் எனப் புருவம் உயர்த்தியவனிடம்,

கப்பைக் கையில் பற்றிக் கொண்டு, ஆழ்ந்த மூச்சுடன், “what if I don’t wanna climb?, அந்த பெஸ்ட் வியூவைப் பார்க்க எனக்கு ஆர்வமில்லைன்னு நான் சொன்னா?” – எனக் கேட்ட அவளது வெயிட் லெஸ் குரல், அவனைக் குழப்ப,

“புரியல” – என்றான்.

“உச்சியை இலக்கா வைச்சு மழையையும்,வெயிலையும் பொருட்படுத்தாம, கடும் முயற்சியோட உடலையும், மனசையும் வருத்திக்கிட்டு, தோற்று விடக் கூடாதுங்குற பயத்துல எந்த சலனங்களுக்கும், சஞ்சலங்களுக்கும் இடம் கொடுக்காம, சின்ன சின்ன விருப்பங்களைக் கூடத் தியாகம் பண்ணி, எல்லாத்தையும்,எல்லாரையும் முந்தி முன்னேறிடனும்-ங்குற வெறியோட, மூச்சு வாங்க வேக,வேகமா ஏறி…. ஆசைப்பட்ட இடத்துல நின்னு, பார்க்க நினைச்ச அழகை கைவசப்படுத்தி.. சாதிச்சுட்டதா மார் தட்டின பிறகு.. என்ன மிஞ்சும்ன்னு நினைக்குறீங்க?”

“……..” – மூச்செடுக்காது தீவிரமாய்ப் பேசுபவளைப் பதிலின்றி புருவம் சுருக்கிப் பார்த்தான் அவன்.

“தனிமையும்,வெறுமையும் மட்டும் தான்” – விரக்தியாய் மொழிந்தாள் அவள்.

“……..”

“உச்சியில நிற்குற எல்லாருமே உற்சாகத்துல நிற்குறதில்லை! மண்ணுல இருந்தப்போ ரசிக்கச் சொல்லித் தூண்டுற வானம், மலை உச்சியில.. விரல் தொடும் தூரத்துல பக்கம் வரும் போது.. வியப்பைக் கொடுக்காது. சலிப்பைத் தான் கொடுக்கும்!”

“…………” – ஷ்ஷ், என்னவொரு அலட்டல்?, அப்படியென்னக் கஷ்டம் இந்தப் பெண்ணுக்கு?

“சோர்ந்த மூளையும், நொந்த கால்களும், அனுபவிக்காம இழந்து விட்ட நாட்களை நினைவு படுத்தி, சாதனையை வேதனையாத் தான் உணர வைக்கும்!”

அவளது லாஜிக் அவனுக்குக் கடுப்பைக் கிளப்பியது!

ப்ளைன் ஃபேஸை வைச்சுக்கிட்டு Para,Para-வா மொக்கை போடுறா! எரிச்சலானவன், விடைத்த மூக்குடன்,

“அப்டின்னா, சாதிக்கனும்ன்னு நினைக்குற ஆட்களெல்லாம், எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு சாத்திட்டுப் படுத்து விட்டத்தை பாருங்கன்னு சொல்ல வர்றீங்களா?” – என்றான் நக்கலாய்.

“………”

“ஹ்ம்ம்?” – பதில் சொல் எனப் புருவம் உயர்த்தினான்.

“மலை ஏற முடிவு பண்ணிட்டா, இலக்கை மட்டுமே குறியா வைச்சுக்கிட்டுக் கண்மூடித்தனமா தான் ஓடனுமா?, உச்சியில கிடைக்குற பெஸ்ட் வியூ மட்டும் தான் அழகுன்னா, நடக்குற பாதையில, துணையா வர்ற வண்ணத்துப் பூச்சியை எப்போ ரசிக்குறது?”

“புரியுது! இலக்கை விடப் பயணம் முக்கியம்ன்னு சொல்றீங்க! ஆனா, நீங்க சொல்ற தியரி, இந்த ஃபாஸ்ட் மூவிங் உலகத்துக்கு ஒத்து வருமான்னு தெரியல! பூச்சி,கீச்சியெல்லாம் மிதிச்சு நசுக்கிட்டு அடிச்சுப் பிடிச்சு ஓடனும்ங்குறது அகராதில எழுதப்படாத குறையா இங்க எல்லார் மூளைலயும் அச்சிடப்பட்டிருக்கு.” – அசட்டையாய்ப் பதில் கூறியவன்,

“…………” – பேச்சின்றி மௌனமாயிருந்தவளை மாற்றும் பொருட்டு,

“coffee accepted! Quote rejected! அப்பிடித் தானே?, இப்போ என் மோட்டிவேஷனல் கோட்-ஐ நான் என்ன செய்றது?” – எனக் கேட்டான்.

“இந்தக் கடல்ல தூக்கி எறிங்க! மூச்சு முட்டி சாகட்டும்” – வெறுப்பாய்க் கூறியபடி உள்ளே எழுந்து சென்றவளைக் கண்டு உதட்டை வளைத்துப் புருவம் தூக்கினான் அவன்.

‘33 வயசுல எதுக்கு இவ்ளோ விரக்தி!’ – மனம் எள்ளி நகையாடியது.

தன் பின்பு அவர்களது Deck-லிருந்த ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்து விட்டு அவன் வெளி வந்த போது, யோகா உடையில் கண் மூடி சோபாவில் தலை சாய்த்து, சுருங்கிப் போன முகத்துடன் அவள் சோர்ந்து அமர்ந்திருப்பது தெரிய, வேகமாய் அருகே வந்தமர்ந்தான்.

“என்ன செய்யுது?”

அவன் குரலை உணர்ந்தும் விழிகளைத் திறவாமல், ஒன்றுமில்லையென்பது போல் தலையாட்டினாள்.

“ஸீ சிக்நெஸ்-ஆ?”

“அப்பிடித் தான் போல” – தெம்பற்று வந்தது குரல்.

வியர்வை அரும்பிக் கிடந்த அவள் முகம் காரணமில்லா சங்கடத்தை உண்டாக்கியது அவனுக்கு.

“ப்ராப்பர் ஸ்லீப் அண்ட் ஃபுட் இல்லாம எக்ஸர்சைஸ் எல்லாம் ட்ரை பண்ணாதீங்க. சீரியஸ் இஷ்யூல கொண்டு போய் விட வாய்ப்பிருக்கு”

உடல்நலனின் மீது சற்றும் அக்கறையில்லாமல், எதற்கு தன்னைத் தானே இப்படி வருத்திக் கொள்கிறாள் இந்தப் பெண்?

“என்ன மாதிரியான சீரியஸ் இஷ்யூ?”

“எல்லா மாதிரியானதும் தான்! ஈவன் டெத்” – கடுப்பாய்க் கூறினான்.

விழி திறந்து அவன் முகம் பார்த்து, “ஓ!” – என யோசனைக்குச் சென்றவளின் முகத்தில் வந்து போன உணர்வுகள் கொஞ்சமும் புரியவில்லை அவனுக்கு.

ஆனாலும், ஏதோ உந்த, இன்னொரு முறை,

“இப்படிப் பண்ணாதீங்க” என்றான் சற்று ஓங்கி.

வழக்கம் போல் அவனது குரலை காற்றில் விட்டாள் அவள்.

தூக்கமின்மையால், பழுப்புக் கண்களில் லேசாக ஓடியிருந்த சிவப்பு வரிகளோடு, காட்டேரியிலிருந்து ரத்தக் காட்டேரியாக ப்ரமோஷன் வாங்கியிருந்தவளை, புரியாத பார்வை பார்த்தான்.

எரிச்சல்,சங்கடம்,கடுப்பு – எனக் கலவையான உணர்வுகளை உள்ளுக்குள் தோற்றுவித்தாள்.

அவள் முகத்தை ஆராய்ந்தபடி அவனும், ஏதோ சிந்தனையோடு அவளும், எங்கோ தொலைந்திருந்த வேளை, அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, வீடியோ காலில் தன் தோழியுடன் சத்தமாக பேசிக் கொண்டது அவர்களது காதுகளை எட்டியது.

“நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்க, உன்னைத் தவிர!, நான் உன்னை ரொம்பவும் மிஸ் செய்றேன்!” எனத் தொடங்கிய பெண்மணியிடம், எதிர்ப்புறம்,

“நானும் தான். ஆனா, என்ன செய்ய?, இந்த மாதிரி ஆடம்பரங்களை அனுபவிக்குற அளவுக்கு நான் வசதியான வாழ்க்கை வாழலயே!” – எனப் பதில் சொல்ல,

“வசதி இல்லாட்டி என்ன?, நீ கர்வமா ஒரு வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்க! சிங்கிள் பேரண்ட்டிங் ரொம்பவும் கஷ்டம்! அதை நீ சிறப்பா செய்திட்டிருக்க!, உன்னை நினைச்சா எனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா?, இங்க எங்களோட பேச்செல்லாம் உன்னைப் பத்தித் தான்” – எனத் தொடர்ந்தார் முதல் பெண்மணி.

“கஷ்டமாத் தான் இருக்கு! ஆனா, என் பிள்ளைங்க இந்த phase-ஐக் கடக்க உதவுவாங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு!”

“நிச்சயம்! பிள்ளைங்க தான நமக்கு எல்லாம்?”

“மூத்தவ கொஞ்சம் அரைவேக்காடு தான். ஆனா இளையவன் ரொம்ப சூட்டிகையா இருக்கான். என் நம்பிக்கை நட்சத்திரமே அவன் தான்! இப்பவே என் சூழ்நிலை புரிஞ்சு, என்னைக் கஷ்டப்பட வைக்கக் கூடாதுங்குற எண்ணத்தோட ரொம்ப நல்லா படிக்கிறான். சின்ன,சின்ன விஷயங்களைக் கூட விட்டுக் கொடுக்குறான்! பெருசா எதுக்கும் ஆசைப்பட மாட்டேங்குறான்! பெரியவனாகி, நிச்சயம் அவன் டாக்டராகனும். தினம் அவன் கிட்ட நான் சொல்றது இதை மட்டும் தான். என் பிள்ளைங்களை நல்ல நிலைக்கு வளர்த்து, என்னை மட்டமா பேசின உறவுகளுக்கு மத்தியில, நான் தலை நிமிர்ந்து வாழனும்.”

-எதிரிலிருந்தப் பெண்மணி உணர்ச்சிகரமாகப் பேசியது கேட்டு, அதுவரை சாய்ந்தமர்ந்திருந்த பல்லவி, விறைப்பாய் எழுந்தமர்ந்தாள்.

அவள் முகத்தை அவதானித்துக் கொண்டிருந்தவன், நெற்றி சுருக்கிய வேளை,

“நீ நிச்சயமா ஜெயிப்ப! உன் பையன் உன் கஷ்டத்தையெல்லாம் போக்குவான்! உன்னைப் பெருமைபடுத்துற மாதிரி நடந்துக்குவான். உன் போராட்டத்துக்கெல்லாம் பதிலா, உன்னைத் தங்கத்தட்டுல வைச்சுத் தாங்கப் போறான் பாரு” – என்று அப்பெண்மணி கூறியதும்,

விருட்டென எழுந்தவள் விறுவிறுவென முன்னே நடந்தாள்.

அதுவரை செத்த சுண்ணாம்பென சுருண்டு கிடந்தவள், திடீரென வீரம் பெற்று வேகமாய்ச் செல்வது கண்டு, ஒரு நொடி விழித்தவன், பின் அவசரமாய் எழுந்து அவள் பின்னே ஓடினான்.

அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தவளின் முன்னே தன் கையை ஸ்பீட் ப்ரேக்கராய் நீட்டி, அவளை நிறுத்தியவன், கேள்வியாய்ப் பார்த்தவளிடம், அருகிலிருந்த ‘Bionic Bar’-ஐக் கண் காட்டினான்.

மூச்சு வாங்க நின்றவள், நிமிர்ந்து, வட்டக் கூரை முழுக்கத் தொங்கிக் கொண்டிருந்த சரக்கு பாட்டில்களைக் கண்டு விட்டு,

“லிக்கர் எனக்குப் பழக்கமில்லை” – என்றாள்.

“எனக்கும் இல்ல! மாக்டெய்ல் ஆப்ஷன்ஸ் இருக்கு! குடிக்கலாம்”

குடிக்கிறியா எனக் கேட்காமல், குடிக்கலாம் என்றவனிடம்,

பதில் கூறாது, எதிரிலிருந்த நாற்காலிகளை நோக்கி நகர்ந்தவளைக் கண்டு, ஊஊஃப்ஃப்ஃப் என மூச்சை வெளியேற்றியவன், அங்கிருந்த டிஸ்ப்ளேயில் non-alcoholic drink ஒன்றை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்து விட்டு அவளருகே வந்தமர்ந்தான்.

தொண்டைக்குழி ஏறி இறங்கக் கையைக் கட்டிக் கொண்டு நேரே வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் பழுப்புக் கண்கள் சிவப்பேறி, அரக்கு நிறம் கொண்டிருப்பதைக் கவனித்தவன் குழம்பினான்.

ஏன் இத்தனைக் கோபமும்,வேகமும்?

என்ன நடந்ததென ஓட்டிப் பார்த்தவனுக்கு, அந்தப் பெண்மணிகளின் உரையாடலில் எதுவோ ஒன்று அவளை உசுப்பி விட்டிருப்பது புரிந்தது.

தோழிகளுக்கிடையேயான வெகு சாதாரண உரையாடல் அது! உறுத்தலான பேச்செதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

இவள் எதற்காக எகிறுகிறாள்?

நேரெதிரே பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள், அரக்கிலிருந்து பழுப்பாவதை உணர்ந்துத் தானும் ஆசுவாசம் கொண்டு சற்றுத் தளர்ந்தமர்ந்தவன், அவள் பார்வையைத் தொடர்ந்தான்.

எதிரிலிருந்த Bar-ல் Robotic Bartender ஒன்று, அவன் தேர்ந்தெடுத்த ட்ரிங்க்கை கூரையில் தொங்கிக் கொண்டிருந்த பாட்டில்களிலிருந்து எடுத்து, ஐஸ் இட்டுக் கலக்கி, குலுக்கி கப்பில் நிரப்பி serve செய்தது.

சர்ர்ர்ரென அது அனுப்பிய கப்களைக் கையிலெடுத்து வந்து அவள் முன்னே வைத்துத் தானும் பருகினான்.

இரண்டு சிப் அருந்தி விட்டுக் கப்பைக் கீழே வைத்தவன்,

“அந்தப் பையன் டாக்டர் ஆகிடுவான் இல்ல?” எனக் கேட்டான்.

க்ளாஸை இரு கைகளால் பற்றி அதன் குளிர்ச்சியை உள் வாங்கியபடி அமர்ந்திருந்தவள், அவனது கேள்வியில் இறுகி,

“டாக்டர் கனவு, அந்தப் பையனோடதா?, இல்ல அவன் அம்மாவோடதா?” – மெலிதாய் வினவியவளைக் கண்டு விழி விரித்தவன், என்ன பதில் கூறுவதெனத் தெரியாமல்,

“நான் சொல்லும் போது பாஸிடிவ்-ஆ ஒலிக்குற விஷயம், உங்க வாய்ல இருந்து வரும் போது நெகட்டிவ்-ஆ வடிவம் பெறுதே, எப்படி?” என்றான்.

“……..” – பதில் கூறாமல் ட்ரிங்க்கை உறிஞ்சினாள்.

“அவங்கம்மாவோட ஆசையாவே இருந்தாலும், என்ன தப்பு?” – அவளுக்குள் என்ன ஓடுகிறதெனத் தெரிந்து கொள்ள வேண்டித் தொடர்ந்தான் அவன்.

“அப்டின்னா அந்தம்மா தானே டாக்டருக்குப் படிக்கனும்?, ஏன் பையனைப் படிக்கச் சொல்றாங்க?”

“அவங்க கெட்டதா எதுவும் சொல்லலையே!, டாக்டர் ஆனா, அவனுக்கும் தான பெருமை?”

“அப்போ பெருமையா வாழ்ந்தா போதும். சந்தோஷமா, நிம்மதியா வாழனும்ன்னு அவசியமில்ல. அப்படித் தான?”

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க?”

“அந்தம்மாவோட நோக்கம், அந்தப் பசங்களோட சந்தோஷமான வாழ்க்கையா? இல்ல, தன்னை மட்டம் தட்டுன உறவுகளுக்கு மத்தியில தலை நிமிர்ந்து வாழனும்னுங்கிறதா?”

“வில்லங்கமான கேள்வி. ம்ம்ம்ம், ரெண்டுமே ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கிற மாதிரி தான் தெரியுது. அந்தப் பையன் நல்ல படியா டாக்டர் ஆகிட்டா, அவனுக்கும் வெற்றி. அவங்கம்மாவுக்கும் வெற்றி.”

“இல்ல?, ரொம்ப Intelligent act அது. அம்மாக்களால மட்டுமே முடிஞ்சது. பிள்ளைங்களோட விருப்பங்களுக்குச் செவி சாய்க்காம, நான் உனக்கு நல்லது தான் பண்றேன்-ங்குற போர்வையில, தான் காட்டுற பாதையில பிள்ளைங்களை நடக்க வைச்சு, அந்தப் பிள்ளைங்களும் வேற வழியில்லாம அதை ஏத்துக்கிட்டு, ஜெயிச்சுக் காட்டும் போது, பார்த்தீங்களா?, என் பிள்ளைகளை நான் எவ்ளோ நல்லா வளர்த்திருக்கேன், அப்டின்னு சமூகத்துக் கிட்டக் கை காட்டி இவங்க மார் தட்டிப்பாங்க!, மேலோட்டமா பார்த்தா, இரண்டு பேருமே ஜெயிச்சிட்டதாத் தான் தோணும். ஆனா, உண்மையில ஜெயிச்சது அந்தம்மா மட்டும் தான். பையன் இல்ல!”

“……….”

“யூ நோ ஒன் திங்”

“………”

“தாய்மை-ங்குற வார்த்தையே என்னைப் பொறுத்தவரைக்கும் ஓவர் ரேட்டட் தான்”

-குடித்துக் கொண்டிருந்த பானம் சட்டெனப் புரையேற, லொக் லொக் என இருமி, அவளை வியப்பாய்ப் பார்த்தவன், அருகிலிருந்த டிஷ்யூவை வைத்து மூக்கைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து,

“எவ்ளோ பெரிய controversial statement-ஐ casual-ஆ சொல்லியிருக்கீங்க தெரியுமா?” – என அவன் கூவ, அதைக் கண்டு கொள்ளாதுத் தொடர்ந்தாள் அவள்.

“நம்ம நாட்ல வாழ்ற சிங்கிள் அம்மாக்களோட சைக்காலஜி தெரியுமா உங்களுக்கு?”

“………..”

“இந்தச் சமூகம் அவங்களை போட்டியில சேர்த்துக்காமலே தோல்வியுற்றதா அறிவிச்சு ஒதுக்கி, மூலைல ஒடுங்கி நிற்க வைச்சுடுது. எல்லாரும் அனுபவிக்குற விஷயங்களைத் தானும் அனுபவிக்க முடியாதான்னு விரக்தில வாடுற இவங்க, இந்தச் சமூகத்தோட அட்டென்ஷனுக்காக ஏங்குறாங்க.

யாரை இந்த சமூகம் வியந்து பார்க்குதுன்னு ஆராயுறாங்க! வீடு,கார்ன்னு வசதியான வாழ்க்கை வாழ்றவங்க தானே சமூகத்தோட பார்வையில வெற்றி பெற்றவங்களா இருக்காங்க?, அப்போ அந்த வசதியை நான் அடைஞ்சுட்டா, என்னைத் தூற்றிய இந்தச் சமூகம், தூக்கி நிற்க வைச்சுக் கொண்டாடும்ன்னு ஒரு முடிவுக்கு வர்றாங்க!

படிப்பறிவும்,உடல் வலிமையும் இருக்கிறவங்க வேலைக்குப் போய் முன்னேறப் பார்க்குறாங்க. இல்லாதவங்க, யாரையாவது,எதையாவது சார்ந்தபடிப் பிள்ளைகளை வளர்க்குறாங்க.

தங்களோட இலக்குகளையும், விருப்பங்களையும் அடைய, தான் மறுக்கப்பட்ட ரேஸ்ல, தனக்குப் பதிலா தான் பெற்ற பிள்ளைகளை இறக்கி விட்றாங்க. மேலோட்டமா பார்த்தா, இது சரின்னு தான் தோணும். தான் படுற கஷ்டத்தைப் பின்னாடித் தான் பிள்ளைங்களும் படக் கூடாதுன்னு அந்தம்மா நினைக்குறதாத் தோணும்.

ஆனா, அந்தக் குழந்தையோட மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா?,

எப்போதும் கஷ்டம்,கஷ்டம்ன்னு அழுது புலம்புற அம்மா, தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினதும் சிரிக்கிறாளேன்னு ஆச்சரியப்பட்டு, தொடர்ந்து ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கப் போராடும்.

மற்றக் குழந்தைங்க, வெறும் குழந்தைகளா மட்டுமே வளர்ற பருவத்துல, இது extreme maturity-யுடன் அம்மா கை காட்டுன இலக்கை நோக்கி ஓட பெருசா முயற்சி பண்ணிட்டிருக்கும். ஆசைகளைக் கட்டுப்படுத்தி துறவி நிலைல அது ஓடிட்டிருக்கிற ஓட்டம், அப்பன் இல்லாத பிள்ளை, அதான் ஒழுக்க நெறியோட வளருதுன்னு சுற்றியிருக்கிறவங்களால சாயம் பூசப்படும்.

மட்டம் தட்டுன உறவுகளுக்கு மத்தியில நல்லா வாழ்ந்து காட்டனும், அவங்க முகத்துல கரியைப் பூசி நாம ஜெயிச்சுக் காட்டனும்ன்னு அம்மாவால ஓதப்பட்டு வளர்றதாலோ என்னவோ, சின்ன தோல்விக்குக் கூட அந்தக் குழந்தை அதிகமா பயப்படும்! தான் தோற்றா.. அம்மாவும் தோற்றதா ஆயிடுமே!, தன்னையே நம்பியிருப்பதாக அடிக்கடி சொல்றவளை எப்படி ஏமாற்ற முடியும்?

ரெண்டு,மூன்று பிள்ளைங்களை வைச்சிருக்கிற சிங்கிள் அம்மாக்கள், மூன்றுல ஒன்னைத் தேர்ந்தெடுத்து அதை மட்டும் இது போல உசுப்பி விட்டே வளர்க்குறாங்க, அந்த ஒன்னை வைச்சுத் தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் மாத்திக்குறாங்க!, தன் கஷ்டங்களையும்,கவலைகளையும் தீர்க்குற ஆளா அந்த ஒரு குழந்தையைப் பார்க்குறாங்க! தான் பார்க்க நினைச்ச உலகை, அந்தக் குழந்தை மூலமா உருவாக்குறாங்க.

இதற்கிடைல அந்தக் குழந்தை, தனக்குன்னு எதுவும் ஆசைப்பட்டாலோ,செய்துகிட்டாலோ, அது சுயநலமா பார்க்கப்படுது. ‘உங்கம்மா உன்னை வம்பாடு பட்டு வளர்த்ததுக்கு, அவளுக்குன்னு எதுவும் திருப்பிச் செய்யாம, நீ உன் ஆசையை மட்டும் பார்த்துக்கிட்டியே’-ன்னு குற்ற உணர்ச்சியை உருவாக்கும்.

அந்த உணர்வு, அப்போ நான் என் வாழ்க்கையை வாழக் கூடாதா-ன்னு அந்தக் குழந்தையை விரக்தில வேக வைக்கும்.

தன்னைப் பெத்துக்க சொல்லி அந்தக் குழந்தை கேட்கல. பெத்தது இவங்க. அதை வளர்ப்பது இவங்க கடமை.

ஆனா, அந்தக் குழந்தையை வளர்க்கத் தான் அந்தம்மா பிறப்பெடுத்தது போல, உன் அம்மா உன்னை வளர்க்க அவ வாழ்க்கையைத் தியாகம் பண்ணிக்கிட்ட மாதிரி, நீ உங்கம்மாவுக்காக உன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணுன்னு சொல்லி அன்பை வியாபாரமாக்குவாங்க.”

-நீண்ட பேச்சோடு மூச்சு வாங்க நிறுத்தியவளை மௌனமாய்ப் பார்த்திருந்தான் அவன்.

ஏதோ புரிந்தது.

இரண்டு நிமிடங்கள் நீண்ட அமைதியின் பின்,

“மிஸ்டர்.மைத்ரேயன்??” – என்று மெல்ல வினவினான்.

“நான் ஒன்றரை வயசுக் குழந்தையா இருந்தப்போ, ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டார்”

“ஓ… ஐ…ஐ ஆம் சாரி”

“………”

“அந்த self loss-க்கு பின்னால இருக்கிறக் காரணம்… இது தானா?”

“எப்பவோ போய்ச் சேர்ந்துட்டவருக்காக இப்ப ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்?” – என்றவளைக் கண்டு என்ன கூறுவதெனப் புரியாமல், பிடரியைக் கோதினான் அவன். பின் கண் மூடி ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு மெல்ல,

“தாய்மை ரொம்பவும் புனிதமானது பல்லவி! அது… உலகோட அடிப்படை. ஆதாரம்” – என அவன் எதற்கோ முயல,

“மனுஷன் மட்டும் தான் தாய்மை அடையுறானா?, நாயும்,பூனையும், பறவையும்,பூச்சியும் தாய் ஆகுறதில்லையா?, முட்டையிட்டுக் குஞ்சு பொரிச்சு, உணவு கொடுத்துப் பாந்தமாத் தன் குட்டியைப் பாதுகாக்குற தாய்ப் பறவை, குட்டிக்கு ரெக்கை முளைச்சதும் பறக்குறதை இயல்பாகத் தானே ஏத்துக்குது?, மனுஷங்க மட்டும் ஏன், பெத்தக் கடமை,வளர்த்த கடமையையெல்லாம் கட்டாயமாக்கனும்?, நான் உனக்கு ஒன்னு கொடுக்குறேன், நீ எனக்கு ஒன்னைத் திருப்பிக் கொடுன்னு டிமாண்ட் பண்ற உறவு ‘அன்பு’-ங்குற வார்த்தையை ஏன் பிரயோகிக்கனும்?, இது வெறும் வியாபாரம் தானே? இங்க அன்பு எங்க இருக்கு?,.”

அவளது லாஜிக் புரிந்தது அவனுக்கு.

ஆனால், ‘அ’ – அம்மா என அகராதி பயின்றவனுக்கு, அகர வரிசையின் ஆதியே அம்மா தான் என்றெண்ணுபவனுக்கு அவள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அம்மா – என்பது எத்தனை அற்புதமான உறவு!, அவள் இல்லையேல் தன்னால் பிறப்பெடுத்திருக்க முடியுமா?,

முகம் மாற, “அந்தம்மாவோட எண்ணங்கள்ல தப்பெதுவும் இருக்கிறதா எனக்குத் தோணல பல்லவி” – தீர்க்கமாய்க் கூறினான்.

“………..”

“நான் வாழ்ற சமூகமும்,கலாச்சாரமும் அதைத் தப்பா பார்க்கச் சொல்லித் தரல. எனக்கான வழி எது, எனக்கு நல்லது,கெட்டது எது-ன்னு தேர்ந்தெடுக்கிற உரிமை என் அம்மாவுக்கு இருக்கு. அவங்க என் மேல அன்பும்,பாசமும் காட்டி வளர்த்திருக்காங்க. அதே அன்பைப் பிரதிபலிச்சு அவங்களுக்கு நான் திருப்பி செய்ற எதுவும் வியாபாரமாகாது. நீ சொல்ற பறவைக் கதையெல்லாம் ஏற்புடையதாக இல்ல. ”

“உங்களையும்,என்னையும் வாழ்க்கை ஒரே தராசுல நிறுத்தல.”

“வாட் எவர், அம்மா,அம்மா தான்! எந்த அம்மாவும் தன் குழந்தைக்குக் கெடுதல் நினைக்க மாட்டா” - லேசாய்க் கோபம் வந்தது அவனுக்கு.

“ignorance! நீங்க கண்ணை மூடிக்கிட்டா, பூமியே இருண்டுடுமா என்ன?, உலகம் தெரியாத ஆசாமியா இருக்கீங்க”

தன்னை விட இரண்டு வயது சிறியவள், தன்னை ‘உலகம் தெரியாதவன்’ என்றதில், சுள்ளெனக் கோபம் வர வெடுக்கென எழுந்து நின்று,

“Being optimistic is the toughest thing in the world பல்லவி!, எல்லாரலயும் அது முடியறதில்ல. எல்லாருக்கும் அது சாத்தியப்படுறதுமில்ல. ஆனா” என்றவன்,

அவளது நாற்காலியின் இரு புறங்களையும் பற்றி, நெருங்கி அவள் முகம் நோக்கிக் குனிந்து,

“you are a source of negativity பல்லவி! You spread only negative vibes. உன் தோற்றம், பேச்சு, எண்ணங்கள், ஐடியாலஜி அத்தனைலயும் எதிர்மறை அலைகள் கடல் போல நீண்டிருக்கு. உன் கூடப் பத்து நிமிசம் பேசுனா, ஒன்னு உலக வாழ்க்கையைத் துறந்து காவியைக் கட்டிக்கிட்டு காசிக்குப் போகனும், இல்லை.. நாலடி குழி தோண்டி, நானே போய் படுத்துக்கனும்.. இந்த உலகமும், வாழ்க்கையும் கர்ணக் கொடூரமானதுங்குற மாதிரியான எண்ணங்களை எதிர்ல நிற்குறவங்க மனசுல அனாயசமா உருவாக்குற!, என்ன ஆளு நீ?, இது நல்லதில்ல பல்லவி”

-புருவம் சுருக்கி, முகத்தைச் சுழித்து வெறுப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்தபடி ஓரடி இடைவெளியில் நின்றவனின் கண்களை, சலனமற்று நோக்கினாள் பல்லவி.

“This is how I am. என்னால இந்த எதிர்மறை அலைகளிலிருந்து வெளி வர முடியாது. என் எண்ணங்களெல்லாம் ஒன்று கூடி கனமான இரும்பு சங்கிலியால என் கையையும்,காலையும் நகர முடியாத அளவிற்கு இறுக்கிக் கட்டி என்னைத் தணலுக்குள்ள நிற்க வைச்சிருக்கு. ஒவ்வொரு நிமிஷமும் எரிஞ்சு,கருகித் துடிச்சிட்டிருக்கிற எனக்கு, இதுல இருந்துத் தப்பிக்க வழியுமில்ல, வாய்ப்புமில்ல”

-மெல்லிய குரலில் முணுமுணுப்பாய்க் கூறியவளின் பழுப்புக் கண்களையும், அதில் எரிந்த சீற்றத்தையும் கண்டபடி அசையாது நின்றிருந்தான் பிரஜரஞ்சன்.