அத்தியாயம் - 4
“ஒவ்வொரு நிமிஷமும் எரிஞ்சு,கருகித் துடிச்சிட்டிருக்கிற எனக்கு, இதுல இருந்துத் தப்பிக்க வழியுமில்ல, வாய்ப்புமில்ல”
-தன்னைச் சூழ்ந்திருந்த பவளப் பாறைகளையும், வண்ண மீன் கூட்டங்களையும் அணிந்திருந்த காகிள்ஸின் வழியே கண்டவாறு, கடல் மட்டத்திலிருந்து நூறு அடி ஆழத்தில் diving tank-உடன் wet suit-ல் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டிருந்த பிரஜரஞ்சனுக்கு, அவளது வார்த்தைகளே மறுபடி,மறுபடி ஒலித்துக் கொண்டிருந்தது.
Certified scuba diver அவன்.
விரும்பி கற்றுக் கொண்ட கலை. கிடைக்கும் விடுமுறை நாட்களைக் கடற்புறம் அவன் செலவழிப்பதற்கான முக்கியக் காரணம் இது.
சலனமற்ற அந்த நீர்ப்பரப்பு எப்போதும் அவனைத் தனி உலகில் சஞ்சரிக்கச் செய்து, அடிமனதை சாந்தப்படுத்தும் வல்லமை கொண்டது.
ஆனால் இன்று….
தன் கண் முன்னே, வெகு அருகே வாலை ஆட்டிக் கொண்டு ஒய்யார நடை போட்ட பொன்னிற மீனானது, அந்த நீள்விழியாளையும், அவள் வார்த்தைகளையும் நினைவுபடுத்த, Snorkel-ன் வழியே அவன் வெளியிட்ட உஷ்ணமான மூச்சு, குமிழ் குமிழாய்க் கடலில் கலந்தது.
அவன் எப்போதும் சிலாகிக்கும் ஆழ் கடலின் அமைதியும்,அழகும் இன்று அவளை பிரதிபலிப்பது போல் ஓர் தோற்றம்.
அவளும் இந்த ஆழ்கடலைப் போலத் தானோ?
வெளியே ஆர்ப்பரிக்கும் அலைகளோடு, அலைபாய்ந்துத் தவிப்பவள், உள்ளே ஆழ்கடலைப் போல பிள்ளை அழகையும், கொள்ளை அமைதியையும் கொண்டிருப்பாளோ?
சிந்தனையில் தொலைந்தவன், தன்னை சுதாரித்து, டைவிங்கை முடித்துக் கொண்டு, மேல் நோக்கி நீந்தத் தொடங்கினான்.
அன்று அவர்களது கப்பல், தெற்கு ஆஸ்திரேலியாவின் அடலெய்ட் எனப்படும் கடற்கரை நகரில் நின்றிருந்தது.
அன்றைய நாள் முழுதும் அந்தத் துறைமுகத்தில் கப்பல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளை, பயணிகள் அடலெய்ட் நகரத்தை சுற்றிப் பார்க்கலாம்.
மறுபடி அன்றிரவே அங்கிருந்து புறப்படும் கப்பல், அடுத்த டெஸ்டினேஷனை நோக்கி நகர ஆரம்பித்து விடும்.
அன்று அவளுடனான வாக்குவாதத்தில், கடைசியாக மியூட் மோடில் அவள் கூறிய வாக்கியங்களும், அந்த விழிகளின் சீற்றமும் கொடுத்த நமைச்சலில், சரியான உறக்கமின்றி எரிச்சலுடனே அந்த இரவைக் கழித்தவன், விடியலில் கப்பல், துறைமுகத்தில் நின்றதும், வெளியே புறப்பட்டு விட்டான்.
பகலில் அடலெய்ட் நகரைச் சுற்றி விட்டு, மாலை ஸ்கூபா டைவிங்கையும் முடித்து அறைக்குத் திரும்பியவனின் விழிகள், தன்னாலேயே பக்கத்து அறைக்குச் சென்றது.
இருள் சூழ்ந்திருந்த அறைக்குள், அவள் இருப்பது போலத் தெரியவில்லை. ‘எனக்கென்ன’ என்பது போல் தோளைக் குலுக்கிக் கொண்டவன், கோஸ்டல் கிட்சனை நோக்கிச் சென்றான்.
அந்த இரவு வேளை, கடற்காற்றில் சிறகாய்ப் படபடத்தபடி, ஏகாந்தத்தை ஏந்திக் கொண்டு எட்டு வைத்து, மெல்லப் பறந்து திரிவதை ரசித்தவாறு ஓய்வாய் அந்தக் கப்பலில் உலவித் திரிந்தனர் மக்கள்.
ஆட்களோடு ஆட்களாய் ஹெட்செட் காதும் அமர்ந்திருந்தது.
அந்த சுருட்டை முடியும், மங்கிய நிறமும் இரவோடும் இருளோடும் மறைந்து போவதற்குப் பதிலாக, கருப்பு வைரமாய் ஜொலித்து அவன் கண்களைக் கூசச் செய்து கொண்டிருந்தது.
ஊதிக் கொண்டிருக்கும் சிகரெட்டின் நுனியிலமர்ந்திருந்த கங்கை (கங்கு), அடிக் கண்ணில் நோக்கியவனுக்கு, தினம் தினம் எரிந்து,கருகுவதாக அவள் கூறியது மீண்டும் ஒலிக்க, கங்கிலிருந்து தொடங்கி, மெல்ல மெல்ல நிமிர்ந்து… தள்ளி அமர்ந்திருந்தவளை நோக்கினான்.
இரக்கம்,எரிச்சல்,ஆதங்கம் என ஏதேதோ எண்ணங்கள் எக்கச்சக்கமாய் எழுந்தாலும், சலனமின்றி அவளை வெறித்தபடி அவன் அமைதியாய் சிகரெட்டை இழுத்து ஊத, அதே அமைதியைப் பிரதிபலித்தவாறு அவளும் அவனைப் பார்த்திருந்தாள்.
யாருடைய கண்கள் முதலில் சிமிட்டுகிறதென இருவரும் போட்டியில் ஈடுபட்டிருந்த வேளை, அங்கே சற்றுத் தள்ளியிருந்த Rock bar-ல் சலசலப்பு கேட்டது.
‘A rush, A glance, A touch, A dance
To look in somebody's eyes, To light up the skies
To open the world and send them reeling
A voice that says, I'll be here, And you'll be alright
I don't care if I know Just where I will go
'Cause all that I need's this crazy feeling
A rat-tat-tat on my heart…
Think I want it to stay…..’
அதுவரைக் காலாற நடை போட்டுக் கொண்டிருந்த ஜோடி ஒன்றில், ஆணானவன் திடீரென Rock bar-ல் மைக் முன்னே நின்று, தனது கேர்ள் ஃப்ரெண்டை பார்த்தபடி பாடத் துவங்க, அருகேயிருந்த music band-ம் இசைக்கருவிகளுடன் அவனுக்குத் தாளமிடுவதைக் கண்டு, வாயில் கை வைத்தபடிக் கண்ணை விரித்து ஆச்சரியத்துடன் நின்று விட்டாள் அந்தப் பெண்.
காற்றாட அமர்ந்திருந்த கூட்டம், இவர்களது காதல் நாடகத்தைக் கண்டு, புன்னகையும்,உற்சாகமுமாய் அவர்களைச் சூழ்ந்து கொள்ள, இவையெதையும் கண்டுகொள்ளாதுத் தன் போக்கில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த black panther-ன் அருகே, காலியாகக் கிடந்த இருக்கையொன்றில், சிகரெட்டை எறிந்து விட்டு வந்தமர்ந்தான் பிரஜரஞ்சன்.
பாடி முடித்தப் பின் அந்த இளைஞன், பாக்கெட்டிலிருந்து மோதிரத்தை எடுத்து அப்பெண்ணிடம் நீட்டியவாறு அவள் முன்னே மண்டியிட்டமர, மேலும் ஆச்சரியத்தில் திளைத்துத் துள்ளிக் குதித்துக் கண்ணீர் விட்டு அப்பெண் ‘யெஸ்ஸ்’ எனத் தலையாட்டியதும், அவன் அவளை அணைத்து முத்தமிட, கூட்டம் கைத்தட்டி, விசில் எழுப்பி மகிழ்ச்சி கொண்டு ஆர்ப்பரித்தது.
அங்கிருந்த அனைவரும் ஜாலி ஜோடியை சுற்றி நின்றிருக்க, இவர்களிருவர் மட்டும் அநாதையாகக் கிடந்த நாற்காலிகளை ஆக்கிரமித்திருந்தனர்.
இரு கைகளையும் கோர்த்து முன்னே சாய்ந்தமர்ந்திருந்தவன், கலையத் தொடங்கிய கூட்டத்தின் நடுவே மகிழ்ச்சியே முகவரியாக நின்றிருந்த ஜோடியின் மீது பார்வையைப் பதித்தபடி,
“நீ எப்போதாவது, யாரையாவது காதலிச்சிருக்கியா பல்லவி?” எனக் கேட்டான்.
“பதினேழு வயசுல! என் கூடப் படிச்ச பையனை”
–தன் முயற்சிக்கு ஒத்துழைப்பவளை, இம்முறை அவன் ஆராயவில்லை. பட்டெனப் பதில் வருமென்று எதிர்பார்த்தே இருந்தான். அன்று தன் பேச்சிலிருந்தக் கடுமையை, அவள் கடுகளவு கூட மதித்திருக்க மாட்டாள். புரிந்திருந்தது அவனுக்கு.
“ஓ! ஆள் எப்படி?, ஹாண்ட்சம்-ஆ இருப்பானா?”
“……..”
“ஹ்ம்ம்?” – ‘பதில் சொல்’ என வழக்கம் போல் அவனது ஐ ப்ரோ அப்-ல் சென்றது.
“நான் அழகி இல்லையே, ஹாண்ட்சம் ஆன பையனை எதிர்பார்க்க?”
“வாஸ்தவம் தான் ”
“………….”
“புறத்தோற்றம் காரணம் இல்லேன்னா, பின்ன ஏன்?”
“ஏன்னா.. அவனுக்கும் அப்பா கிடையாது. அம்மா மட்டும் தான். அவனும் என்னைப் போல ஒரு சூழ்நிலையில வளர்கிறவனா இருந்தான்”
-திரும்பி அவள் முகம் பார்த்தான் பிரஜரஞ்சன்.
காற்றோடு அவளது ஸ்பிரிங் முடி சால்சா ஆடிக் கொண்டிருக்க, காதைத் தொடும் முயற்சியில் நீண்டிருந்த கண்கள், வரைந்து வைத்ததைப் போல் வளைந்திருந்த இதழ்கள் எனக் கடற்கன்னியாக அமர்ந்திருந்தவளை, ஒரு நொடி புரியாத பார்வையுடன் அவதானித்து விட்டு,
“இப்படியொரு காரணத்தோட காதலிச்சவங்களை நான் கேள்விபட்டதேயில்ல” என்றான்.
“அதுல என்னோட சுயநலமும் இருந்தது”
“என்ன சுயநலம்?”
“என் அம்மா.”
“ம்ம்??”
“என் படிப்பு தான் எனக்கும், அம்மாவுக்கும் ஆதாரமா இருந்தது. எங்களுக்குப் பெருசா சொத்துபத்துகளோ, வருமானமோ கிடையாது. நான் தான் அவங்களைக் கடைசி வரை ஆதரிச்சாக வேண்டிய கட்டாயம். அதனால, என்னைப் போல ஒரு சூழலில் வளர்ந்த அவன், அம்மாவைப் பார்த்துக்கனும்ங்குற என் எண்ணத்துல இருந்த நியாயத்தைப் புரிஞ்சுப்பான்னு நினைச்சேன்”
“பெத்தவங்களை சப்போர்ட் பண்றது பிள்ளைங்களோடக் கடமை. அதைப் பெருமையாவோ, சிறுமைப் படுத்தியோ சொல்றது சில்றத்தனம்” – மறுபடி சீறினான் அவன்.
“…………..” – அவள் மௌனமானதும், கண்ணை அழுந்த மூடித் திறந்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்,
“அப்புறம், அவன் என்ன ஆனான்?, அந்தக் காதல் என்னாச்சு?” எனக் கேட்டான்.
“17 வயசுல தொடங்குன காதல், நீடித்து, 25 வயசுல கல்யாணம்ங்குற ஸ்டேஜ் வரை எட்டி, அப்புறம் என் அம்மாவால உடைக்கப்பட்ருச்சு”
“ஏன்?”
“சொன்னேனே, எனக்குப் பிறகு என் அம்மாவை ஆதரிக்க யாரும் கிடையாது. நான் தான் அவங்களோட ஒரே source of income. காதல்,கல்யாணம்ன்னு நான் என் வழியைப் பார்த்துப் போயிட்டா, தன்னோட கதி என்னாகுமோ, தான் கை விடப் பட்டுடுவோமோன்னு அவங்களுக்குப் பயம் வந்திருக்கலாம்” – வெகு சாதாரணமாகக் கூறினாள் அவள்.
“எத்தனை நாள் அவங்களால அப்படி உன்னைப் பிடிச்சு வைச்சுக்க முடியும்?, என்னைக்கா இருந்தாலும் நீ கல்யாணம்,குழந்தைன்னு இயல்பு வாழ்க்கை வாழத் தானே வேணும்?”
“அவங்களுக்குன்னு சில தேவைகள் இருந்தது. எனக்குக் கல்யாணமாகிட்டா, அது நிறைவேற வாய்ப்பு குறைவுன்னு நினைச்சிருக்கலாம்”
“என்ன தேவைகள்?”
“சொந்தமா ஒரு வீடு. போதுமான அளவு கையிருப்பில் பணம்”
“ஹ்ம்ம்ம்ம்” – எனத் தலையாட்டியபடி, சுருக்கியப் புருவங்களுடன் யோசித்தவன்,
“மிஸஸ்.மைத்ரேயன் எப்படிப்பட்டவங்க?” எனக் கேட்டான்.
“ரொம்பப் பாசமானவங்க, ஃபோட்டோல மட்டுமே எனக்கு அறிமுகமாகியிருந்த என் அப்பாவோட அன்பையும் சேர்த்து அள்ளிக் கொடுத்தாங்க.”
“உன் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையா?”
“ஒரு சிஸ்டர் உண்டு”
“பெத்தக் கடமையைத் தீர்க்குற பொறுப்பு சிஸ்டருக்கு இல்லையா?, மிஸஸ்.மைத்ரேயன் அவங்களை எப்படி சும்மா விட்டாங்க?”
“அவளுக்குப் படிப்பு வரல. பெருசா காசு சம்பாதிக்குற திறமையும் இல்ல. அதனால கல்யாணம் பண்ணிக் கொடுத்தா போதும்ன்னு நினைச்சிருக்கலாம்”
“உன் சிஸ்டர் விஷயத்துல மிஸஸ்.மைத்ரேயன் மேல குற்றம் சொல்ல முடியாது. அவங்கக் கடமையை சரியாத் தான் செய்திருக்காங்க. ஆனா.. உன் சிஸ்டர்… ஒன்னும் சொல்றதுக்கில்லை”
“அவளுக்குன்னுத் தனி வருமானம் கிடையாது. சாதாரண ஹவுஸ் வைஃப். அவளால எப்படி என் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிட முடியும்?”
“cheap reason”
“நம்ம நாட்டுல முக்கால்வாசிப் பெண்களோட நிலைமை இது தான். அம்மா வீடு வறுமையில இருக்குன்னு தெரிஞ்சும், பெருசா ஆதரவு கொடுக்க முடியாம தவிக்கிறது. கணவனோட காசுல இருந்து எடுத்துப் பெத்தவங்களுக்குக் கொடுக்க சுயமரியாதை இடம் தர்றதில்ல”
“என்ன கணவனோட காசு?, இவங்க அவனுக்கு 3 வேளை ஆக்கிப் போட்டு, அவன் பிள்ளைகளை,பெத்தவங்களைப் பார்த்துக்கிறதால தான அவனால நிம்மதியா காசு சம்பாதிக்க முடியுது. அப்பிடிப் பார்த்தா, கணவன் சம்பாதிக்குற காசுல, மனைவிக்கும் பங்கு உண்டு”
“நியாயம் தான்! ஆனா இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்பட, இன்னும் காலமாகும்”
“உன் சிஸ்டர் கல்யாணம், உன் படிப்பெல்லாம் எப்படி?, உன் அம்மா வேலைக்குப் போனாங்களா?”
“இல்ல! என் அப்பா எங்களுக்காக விட்டுட்டுப் போன பணம் அவ கல்யாணம், என் படிப்பு வரை உபயோகமாச்சு”
“ஓ….”
“…………”
“பொதுவாகவே நம்ம நாட்ல லவ்-ன்னா பேரண்ட்ஸ் எதிர்க்குறது இயல்பு தான். அதுக்காகவா 8 வருஷக் காதலை ப்ரேக் அப் பண்ணின நீ?”
“………” – முகம் விகாரமாய் மாற, மௌனம் காத்தாள் அவள்.
“என்ன பல்லவி?”
“இஞ்சினியரிங் முடிச்சு ஆன்-கேம்பஸ்ல பெரிய சாஃப்ட்வேர் கம்பெனில 5 இலக்க சம்பளத்தோட பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்குச்சு என் கரியர். என் வேலை தான் அன்னைக்கு எங்களோட மூலதனம்.
என் சிஸ்டர் கல்யாணத்துக்கு வாங்கின கடன், அடுத்தடுத்த அவளுக்கான கடமை, என் அம்மாவோட மாத செலவு, என் சாப்பாடு செலவுன்னு A to Z அத்தனையும் நான் பொறுப்பெடுத்துக்க ஆரம்பிச்சேன். பல நாட்கள் மாசக் கடைசில ஒரு ‘டீ’-க்கு கூட காசு இல்லாம சுத்தியிருக்கேன்.
உடனிருந்த எல்லாரும் சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரிக்கே உரிய வண்ணமயமான, don’t care வாழ்க்கையை ஜாலியா கழிச்சிட்டிருந்த போது, நான் பட்ஜெட் போட்டு செலவழிச்சிட்டிருந்தேன்.
சம்பளம் வர்ற அன்னைக்கு, மெகா சைஸ் 50 ரூபா லேஸ் பாக்கெட் ஒன்னு வாங்கி சாப்பிடுவேன். அது தான் எனக்கு நான் பெரிய செலவுல செய்துகிட்ட luxurious thing.
உடன் பழகின ஃப்ரெண்ட்ஸ் வாழ்ந்த வாழ்க்கை மேல எனக்குப் பெருசா ஏக்கமிருந்ததில்ல. என் வாழ்க்கை இப்படியிருக்கேன்னு வெறுப்போ,சலிப்போ உண்டானதில்ல.
எப்படியாவது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடனும்ங்குற நோக்கத்தோட என்னைப் போல லட்சியம், குறிக்கோளுடன் ஓடுறவங்க ரொம்பக் கம்மிங்குறப் புரிதல் இருந்தது எனக்கு. I knew that I was unique.
எனக்கு என் அம்மாவைப் பெருமைப் படுத்தியாகனும். அவங்கப் பட்டக் கஷ்டங்களைப் போக்கி, அவங்களை நல்ல நிலைமைல நிறுத்தனும். எங்களைக் குறை பேசினவங்க மத்தியில நாங்க நல்லா வந்துட்டோம்ன்னு வாழ்ந்து காட்டனும். இதெல்லாம் எனக்கு என் அம்மா போதிச்ச வார்த்தைகள் and I was completely influenced by her thoughts.”
“…….” – இரக்கமாய், இறுக்கமாய் அவளையே பார்த்திருந்தான் அவன்.
“இது அத்தனைக்கும் மத்தியில ‘அவன்’ என்னோட ஹாப்பி ப்ளேஸா இருந்தான். ரெண்டு பேருக்குமே ஒரே குறிக்கோள் தான். வறுமையைப் போக்கனும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தனும். வாழ்ந்து காட்டனும்.
அவன் கையைப் பிடிச்சுக்கிட்டு, என் கனவை நோக்கி நான் ஓடிட்டு இருக்கிறதா நினைச்சேன். எல்லாமே சரியாத் தான் போயிட்டிருந்தது”
“……..” – விகார நிலையிலிருந்த முகம், ஆதங்கமாய் விறைத்தது.
“எனக்கு ஆன்சைட் கிடைச்சு அப்போ நான் அமெரிக்காவுல இருந்தேன். கை மேல காசு. கடனெல்லாம் தீர்ந்து வறுமை நிலை நீங்கியது. டிவி,ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்னு வீட்டையே மாத்தி அமைச்சேன். தேவைக்கு அதிகமாகவே அம்மாவுக்குக் காசு கொடுத்தேன்.
அவனும் முன்னேற்றப் பாதைல பயணப்பட்டுக் கொண்டிருந்தான். கஷ்டமெல்லாம் நிறையவே தீர்ந்துட்டதால, ஆன்சைட்டிலிருந்துத் திரும்புனதும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ப்ளான் பண்ணோம்.”
“நல்ல முடிவு”
“இதுக்கிடையில எப்படியோ எங்கக் காதல் விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சுடுச்சு. அவனைப் பற்றி அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும். அதனால நாங்க ரெண்டு பேரும் மனம் விட்டு அவங்கக்கிட்ட எங்கக் காதலைப் பத்தி பேசுனோம். நியாயமான எண்ணங்களோட இருக்கோம். அதனால, நிச்சயம் ஒத்துப்பாங்கன்னு நம்புனோம்”
“அப்புறம்?” – அவள் நிறுத்தியதும், அவசரமாய் வினவினான் அவன்.
“அவங்க எந்த பதிலும் சொல்லல. ஒரு வாரம் கழிச்சு, அவன் கிட்டப் பேசியிருக்காங்க”
“என்னன்னு?”
“என் ஜாதகத்துல எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறதாகவும், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவனுக்கு மரணம் நிச்சயம்ன்னும். அப்பிடி நடக்கக் கூடாதுன்னா தோஷநிவர்த்தி செய்யனும்னு சொல்லி, எனக்குத் தெரியாம ஏதோ கோவிலுக்கு, அவனை வர முடியுமானு கேட்டிருக்காங்க,!”
அவள் கூறியதைக் கேட்டு வாயடைத்துப் போனவன்,
“Brilliant trick” என்று விட்டு, “அவன் அதை நம்பினானா?” எனக் கேட்டான்.
“நம்பல. என் அம்மாவோட எண்ணம் சரியில்லைன்னு சொல்லி, அவங்களை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டான்”
“நீ ஒத்துக்கிட்டியா?”
“இல்ல”
“ஏன்?”
“என் அம்மாவோட நோக்கம் அவனை விரட்டி அடிக்கிறதா மட்டும் இருந்திருந்தா, வேற ஏதாவது காரணம் சொல்லி, வேற ட்ராமா ஏதாவது பண்ணி காரியம் சாதிச்சிருப்பாங்க. ஆனா, அவங்க, என்னை யார் கல்யாணம் பண்ணினாலும் செத்துடுவான்னு சொன்னாங்க. Which means, நான் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுங்குறது தான் அவங்க எதிர்பார்ப்பு! இப்ப இவன் ஓடிட்டா, அடுத்து மாப்பிள்ளைன்னு வர்ற ஆட்களையும் கூட தோஷத்தைக் காட்டியே ஓட வைச்சுடலாம்” – அடிக்குரலில் கூறியவளைக் கண்டு உள்ளே ஏதோ செய்ய,
“பல்லவி…….” என்றான் மெல்ல.
ஆழ மூச்செடுத்தவள், “அந்த ஜாதக விஷயம் பொய்யா,மெய்யான்னு எனக்குத் தெரியல. அதை நான் ஆராயவும் விரும்பல. ஆனா.. ஆனா…” என்றவளுக்குக் குரல் மெலிய,
“எ..எ..எனக்கு… எனக்கு ஒரு ஆணோட முழுமையான அன்புங்குறது…. வாழ் நாளைய ஏக்கம்… கனவு….
நான் என் அப்பாவை ஃபோட்டோல மட்டும் தான் பார்த்திருக்கேன். அவரோட பாசம்,வாசம்,ஸ்பரிசம், குரல் இதெல்லாம் எப்படியிருக்கும்ன்னே எனக்குத் தெரியாது.
காலேஜ் படிக்கையில, மழை நாள் மாலையில பஸ் விட்டு இறங்கும் போது, உடன் படிக்குற தோழிகளோட அப்பாக்கள், குடையோடக் காத்துட்டு நிற்பாங்க. ஆனா எனக்கு யாரும் அப்படி நின்னதில்ல.
நான் எப்பவும் மழையில நனைஞ்சுட்டு தான் வீட்டுக்குப் போயிருக்கேன்.
ஒரு ஆணோட அன்புக்கான என் ஏக்கம், அறியாத வயசுல இருந்து அடி மனசுல புதைக்கப்பட்டு, துளிர் விட்டு, வளர்ந்து விருட்சமா நிற்குற ஒன்னு!
அண்ணன்,தம்பின்னு பாசத்தைக் கொடுக்கவும் உடன் பிறந்த ஆண்கள் யாரும் இல்ல.
ஆக, வரப் போகிற கணவன் மூலமா பரிட்சயமாகப் போகிற அந்த அன்பின் மேல எனக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புண்டு. கனவுண்டு”
“……….”
“அதை அவங்க சிதைக்க நினைச்சப்போ, எனக்கு வாழ்க்கை வெறுத்துடுச்சு. நான் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுங்குறது தானே, அவங்க எதிர்பார்ப்பு?, அதை நிறைவேத்திடலாம்ன்னு ரொம்ப உறுதியா ஒரு நினைப்பை உள்ளுக்குள்ள உருவாக்கிக்கிட்டேன்”
“முட்டாள்தனம் பல்லவி” – ஆதங்கமாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான் பிரஜரஞ்சன்.
“அவன் என்னோட நிறைய போராடினான். அழுதான். கெஞ்சுனான். கதறினான். நான் அசையல. ஒரு ஸ்டேஜ்ல அவன் போயிட்டான்”
“I feel bad for him. ப்ச்” – எழுந்து நின்று பிடரியைக் கோதினான் அவன்.
இத்தனை அழுத்தமா இந்தப் பெண்ணுக்கு?, சொந்த வாழ்க்கையில் சூனியம் வைத்துக் கொள்ளுமளவிற்கு.
எரிச்சலாய் வந்தது.
“மிஸஸ்.மைத்ரேயன்ன்ன்ன்” – என்றவனுக்கு என்ன கூறுவதெனப் புலப்படவில்லை. ஆனால் அவள் தொடர்ந்தாள்.
“எனக்கு 6,7 வயசா இருக்கையில, என் அம்மா அடிக்கடி, ‘நான் செத்துடட்டுமா பாப்பா?’-ன்னு என் கிட்டக் கேட்பாங்க. ‘வேண்டாம்மா, நானும் உன் கூட சேர்ந்து செத்துடுவேன்’- அப்டின்னு அழுதுட்டே சொல்லுவேன். உடனே அவங்க, என்னைக் கட்டிப்பிடிச்சுக் கண்ணீர் விடுவாங்க. அப்போ எனக்குத் தெரியல, அவங்க உண்மையிலேயே என்னை அவங்களோட உடன் கட்டை ஏறத் தான் தயார்படுத்த நினைச்சிருக்காங்கன்னு.”
“பல்லவி… ப்ளீஸ்.. நீ பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற. நிச்சயம் அவங்க நினைப்பு அதுவா இருந்திருக்காது”
“I was ready to give everything she longed for. ஏன்னா, அவங்களை உறவுகளும்,சமூகமும் எவ்ளோ ஒதுக்குச்சுன்னு கூட இருந்து பார்த்தவ நான். ஒரு நல்ல புடவை கூட அவங்கக் கட்டிக்கிட்டதில்ல. பொட்டு,பூ,நகைகள்ன்னு சராசரி பெண்கள் அனுபவிக்கிற எந்த சந்தோஷத்தையும் அவங்க அனுபவிச்சதில்ல.
அவங்களுக்குப் பிடிச்ச மாதிரியான ஒரு வாழ்க்கையைக் கொடுக்கனும்ன்னு நான் ஆசைப்பட்டேன். கனவு கண்டேன். லட்சியமாகவே வைச்சிருந்தேன். ஆனா, அதே நேரம் நான் என் வாழ்க்கையையும், விருப்பங்களையும் தியாகம் பண்ணனும்ன்னு நினைக்கல. நானும் வாழ்வேன், என் அம்மாவையும் வாழ வைப்பேன்னு தான் நினைச்சிருந்தேன்”
“அவன் போன பிறகு என்ன ஆச்சு?”
“ஆன்சைட்டிலிருந்த நாட்களை நீடிச்சேன். நிறைய,நிறைய சம்பாதிச்சேன். அவங்களுக்கு அள்ளி,அள்ளிக் கொடுத்தேன். வளமா வாழ ஆரம்பிச்சாங்க. அதுவரை போகாத விசேஷங்களுக்குப் போனாங்க, பேசாத உறவுகளோடு வழிஞ்சு பேசுனாங்க. நல்ல சேலைகள் உடுத்திக்கிட்டாங்க. உற்றார்கள் மத்தியில செல்வாக்கை உருவாக்கிக்கிட்டாங்க.
பிறகு இந்தியா திரும்பினேன். நிறைய சம்பளத்தோட மறுபடி ஒரு ஓட்டம், எந்த சலனமுமில்லாம. 30 வயசுல லோன் போட்டு சொந்தமா வீடு வாங்கி அம்மாவை உட்கார வைச்சேன். அவங்களுக்குப் பெருமை பிடிபடல.
நாங்க உயரத்தை எட்டிட்டதாக மார் தட்டிக்கிட்டு நின்ன நேரத்துல, சோகம் என்னன்னா, இவங்கவங்க முகத்துல கரியைப் பூசனும்ன்னு ஆவேசமா அம்மா என்னை உசுப்பேத்தி வளர்த்த ஆட்கள்ல பாதி பேர் செத்துட்டாங்க. மீதி பேர் பிள்ளை,குட்டியோட அவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டுப் போயிட்டாங்க.
உங்கக் கிட்ட வாழ்ந்து காட்டனும்ன்னு தானேடா நான் இத்தனை காலமா ஓடுனேன், ஏன் டா அதுக்குள்ள செத்தீங்கன்னு கேட்கத் தோணுச்சு எனக்கு.
நாங்க நல்லா வந்துட்டோம்-அப்டிங்குறது வெறும் செய்தியா மட்டுமே பார்க்கப்பட்டது. அவனவன் வாழ்க்கையை வாழவே போராடி, நிற்காம ஓடிட்டிருக்கும் போது, நான் 20 வருஷம் கழிச்சு வளர்ந்து வந்ததைப் பார்க்க யாரு காத்திட்டிருக்கப் போறா?
என் அம்மா எனக்கு சொல்லி,சொல்லி வளர்த்த வார்த்தைகளெல்லாம் எத்தனை அர்த்தமற்றதுன்னு தெளிவா புரிஞ்சது.”
“………”
“வீடு வாங்கி ஒரு மாதம் கூட இருக்காது. ஒரு நாள் நைட் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிடல் போற வழியிலேயே இறந்துட்டாங்க” – ரோபோ முகத்துடன் கூறியவளைக் கேட்டு அதிர்ந்து,
“வாட்ட்ட்ட்?” – பட்டென எழுந்து நின்றான் பிரஜரஞ்சன்.
“3 வருஷமாச்சு அவங்க போய்”
கோபத்திலும், ஆதங்கத்திலும் உள்ளம் வெடவெடத்ததில், உடல் நடுங்க அமர்ந்திருந்தவள், கடித்தப் பற்களுடன் கண்களை அழுந்த மூடி, கைகளை மடக்கி, உடலை இறுக்கி, மனதோடு கட்டினாள்.
நடுக்கம் கண்டு ஒடுங்கி அமர்ந்திருந்தவளை, அதற்கு மேல் பார்க்க முடியாமல், விழிகளைத் திருப்பிக் கொண்டான் பிரஜரஞ்சன்.
உள்ளம் வெதும்பியது. இந்தச் சமூகத்தை, உலகை, , காற்றை, கடலை, அண்டத்தை, அகிலத்தை அத்தனையையும் அந்த நொடி சபிக்கத் தோன்றியது.
பொறுக்காது அவன் “பல்லவி…” என்றதும் விழிகளைத் திறந்தவள், தொடர்ந்தாள்.
“ஆம்புலன்ஸ்ல என் கையை இறுகப் பிடிச்சுக்கிட்டு, மன்னிப்பா ஒரு பார்வை பார்த்தாங்க. எனக்கு… எனக்கு ரொம்ப அழுகை வந்தது. ‘நீ தான் இந்த உலகத்துல பெஸ்ட் அம்மா, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கே மகளாப் பிறக்கனும்ன்னு சொன்னேன்’, கண்ணீர் விட்டபடியே கண்ணை இறுக்கி மூடிக்கிட்டாங்க. அப்புறம் என்னை….. அவங்க பார்க்கவேயில்ல… After all, she is my mother. எனக்குப் பிறப்பு கொடுத்தவள். அந்த நன்றி எப்போதும் எனக்குள்ள இருந்திருக்கு போல”
கண்களில் நீர் தேங்கி விட்டது பிரஜரஞ்சனுக்கு.
ஊஃப்ஃப்ஃப்,ஊஃப்ஃப்ஃப் என மூச்செடுத்துத் தன்னை திடப்படுத்தினான்.
“அவங்க தூண்டுதல்ல நான் சம்பாதித்த காசு,பணம்,பேரு, சொத்து, செல்வாக்கு அத்தனையும் மிஞ்சியது, அவங்களைத் தவிர! துக்கத்தைப் பகிர்ந்துக்கக் கூட ஆளில்லாம, தன்னந்தனியா அந்தப் பெரிய வீட்ல அநாதையானேன். இதுக்கா, என் சந்தோஷங்கள் அத்தனையும் பறிச்சு, என்னை வாழ விடாம அவ்ளோ தூரம் ஓட வைச்சாங்க?ப்ச்”
-சலிப்பாய் உச்சுக் கொட்டியவள் தளர்வாய் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.
அந்த இரவு அடலெய்ட் நகரிலிருந்து நகரத் தொடங்கியிருந்த கப்பலில் சப்தம் அடங்கியிருந்தது. உப்புக் காற்றின் பச்சை வாசத்தை சுவாசித்தபடித் தன் அறை பால்கனிக்கு வந்த பிரஜரஞ்சன், தடுப்பினருகே நின்று பக்கத்து அறையை நோக்கி, “பல்லவி…..” எனக் குரல் கொடுத்தான்.
சத்தம் கேட்டு வெளியே வந்தவளின் கையில், தன்னிடமிருந்த cup-ஐ நீட்டினான்.
“warm milk from a warm heart”
வழக்கம் போல் அலட்டாமல் வாங்கிக் கொண்டவள் ஒரு வாய் பருகி விட்டு,
“என்ன கலந்திருக்கு?” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.
“தூக்க மாத்திரை.”
“…………..”
“it will help you to have a good sleep, which you need the most rightnow”
“……….” – வாயில் வைத்த கப்புடன் அவன் விழி பார்த்தாள் அவள்.
“வெறும் தூக்க மாத்திரை தான். அன்பு,அக்கறை எதுவுமில்லாத தூக்க மாத்திரை”
“பாலையும்,மாத்திரையையும் தவிர வேற எதையும் செரிக்கிற சக்தி எனக்கில்ல”
“good then” – தோளைக் குலுக்கினான் அவன்.
மறுநாள் காலை ஏதோ யோசனையுடனே gym-ஐ முடித்துக் குளித்து உடை மாற்றியவன், பல்லவி அறையின் முன் நின்று பெல்லை அழுத்தினான்.
கதவு திறந்தவளின் முகம், மாத்திரையின் உதவியால் ஆழ்ந்து உறங்கி எழுந்திருந்ததால், நன்றாகவே தெளிந்திருப்பதைக் கவனித்தபடி, “குட் மார்னிங்” என்றவன், “ப்ரேக் ஃபாஸ்ட்??” எனக் கேட்டான்.
“இனிமே தான்”
“வா.. போகலாம்”
“………..”
“இதுவும் அன்பு,அக்கறை எதுவுமில்லாத அழைப்பு தான்”
பதிலின்றி வெளியே வந்தவளை “ஹேய்ய்ய்” என அவசரமாய்க் கை நீட்டித் தடுத்து,
“துணி மாத்திட்டு, முகம் திருத்திட்டு வா” எனக் கூறியதும் உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் வெளி வந்தாள்.
அதன்பின் அமைதியாய்க் காலை உணவை முடித்தனர் இருவரும். தான் உண்ணும் அனைத்தையும் அவள் புறமும் நீட்டியவனிடம், பாவனைகளேதுமின்றி வாங்கி உண்பவளைக் கண்டபடியே அமர்ந்திருந்தான்.
பிறகு இருவரும் காலாற நடை போட்டுக் கீழிருந்த deck-ஐ வந்தடைந்தனர்.
கண்ணாடியோரமாய் ஒற்றை சோபாவில் கடலைப் பார்த்தபடி அமர்ந்தவளின் அருகே, வலதுபுறமிருந்த chaise lounge-ல் காலை நீட்டி சாய்ந்தமர்ந்தான் பிரஜரஞ்சன்.
“பல்லவி, நான்…. ஒன்னு.. சொல்லட்டுமா?”
திரும்பி அவள் தன் முகம் காண்பதை அனுமதியாக எடுத்துக் கொண்டு, அவள் விழி பார்க்காது பேசினான் அவன்.
“யார் மேலயும் நீண்ட காலத்துக்கு வன்மமோ,வெறுப்போ வளர்த்துக்கிறது நல்லதில்ல பல்லவி. அது… நிம்மதியைக் கெடுக்கும்… மன உளைச்சலை உண்டாக்கும்.”
பதில் கூறாது அவள் கடல் நோக்கித் திரும்புவது தெரிந்தது.
“உனக்கு அவங்க மேல வெறுப்பைத் தாண்டி பாசம் அதிகம்ன்னு புரியுது. அதனால, அவங்களுடனான நல்ல நினைவுகளை மட்டும் ஃபில்டர் பண்ணி வை பல்லவி… மற்றதெல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணு.”
“…………”
“இந்தப் பிறப்பு, நீ சுவாசிக்குற காத்து, ருசிக்குற உணவு, ரசிக்குற இசை, இன்னைக்கு உன் கையில இருக்குற படிப்பு,வேலை, அது கொடுத்த luxury… இதெல்லாமே அவங்களால தானே சாத்தியமாச்சு?”
“………..”
“உன் மேலயும் தப்பிருக்கு பல்லவி. நீ நினைச்சிருந்தா எல்லாத்தையும் மாத்தியிருக்கலாம். விரும்பினவனைப் பிடிவாதமா கல்யாணம் பண்ணியிருக்கலாம். கல்யாணத்துக்குப் பிறகு உன் அம்மாவோடத் தேவைகளை கவனிச்சு, உன் எண்ணங்கள் எத்தனை நிலையானது,சுத்தமானதுன்னு ப்ரூவ் பண்ணியிருக்கலாம். உன் வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கலாம். அவங்க வாழ்க்கைக்கும் வழி செய்திருக்கலாம்.
ஓகே!, இதெல்லாம் வேற மாதிரி போகவும் வாய்ப்பிருந்திருக்கு. எனக்குப் புரியுது.”
“………”
“ஆனா, ஒன்னு மட்டும் நிச்சயம் பல்லவி. அவங்க ஆசைகள் நிறைவேறினப்புறம், நிச்சயம் உன்னைக் கடைசி வரைத் தன்னோட பிடிச்சு வைச்சுக்கனும்ன்னு நினைச்சிருக்க மாட்டாங்க. அவங்க உயிரோட இருந்திருந்தா.. கண்டிப்பா உனக்கு முழு மனசோட கல்யாணம் பண்ணி வைச்சிருந்திருப்பாங்க. After all, she is your mother. அவங்க மீதான இந்த விரக்தியும், வேதனையும் வேண்டாம் பல்லவி. Let it pass.”
-விறைத்த உடலுடன் கடலை வெறித்தபடி விழி சிமிட்டாது அவளும், அவள் வலது கையருகே தன் முழங்கால்களின் மீது இரு கரங்களையும் பதித்துக் கோர்த்துக் கொண்டு, நேர் வெறித்தபடி அவனும் இரு நொடி அமைதியாய் அமர்ந்திருந்தனர்.
அருகிலிருந்த DJ hall-ல் ஏதோ பாடல் ஒலித்தது. திரள்,திரளாய் மக்கள் கூட்டம் ஹாலை நோக்கிச் செல்வது கண்டு, திரும்பி அவள் புறம் பார்த்தான்.
“நீ என்னவா ஆகனும்ன்னு ஆசைப்பட்ட பல்லவி?”
வெகு அருகேயிருந்த அவன் விழிகளை நோக்கி, அவள் புருவம் சுருக்க,
“இஞ்சினியரிங் படிச்சிருக்காட்டி, என்னவாகியிருப்ப?” – மறுபடி கேட்டான்.
சுருக்கியப் புருவங்கள் தளர, அருகிலிருந்த DJ hall-ல் ஆட்டத்திலிருந்த ஆட்களை ஆர்வமாய்க் கண்டபடியே,
“டான்சர்” என்றாள் தயங்கிய குரலில்.
“டான்சரா?” – புன்னகையாய் விழி விரித்தான்.
“ம்ம், யு.எஸ்ல இருந்தப்போ free style dancing கோர்ஸ் முடிச்சு certificate எல்லாம் வாங்கினேன். ஸ்டேஜ் டான்சர் ஆகனும், டான்ஸ் ஸ்கூல் வைக்கனும், இப்படியெல்லாம் ஆசை இருந்தது”
ஹாலைப் பார்த்தபடியே அவள் பதில் கூறுவதைக் கண்டு தானும் திரும்பி நோக்கியவன், பின் சட்டென எழுந்து நின்று, அவள் புறம் கை நீட்டி, “என்னோட ஆட வர்றியா?” எனக் கேட்டான்.
நீள் விழிகள், உருண்டையாய் மாற விழித்தவளிடம்,
“கம் ஆன் பல்லவி…. லெட்ஸ் டான்ஸ்” – எனக் கூறி மடியிலிருந்த அவள் இடக் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு டான்ஸ் ஹாலை நோக்கி ஓடினான்.
ஓடியதில் மூச்சு வாங்க நின்றவளின் முதுகைப் பற்றி சுழற்றி விட்டு, ஒலித்த பாடலுக்கேற்ப அவன் ஆடத் துவங்க, முதலில் பதறித் தயங்கியவளும், சிறிது நேரத்தில் முகம் விகசிக்க, ஒன்றி மற்றது மறந்துத் தானும் ஆடினாள்.
“நைஸ் மூவ்ஸ் பல்லவி”
அழகாய் வளைந்து, நெளிந்து நளினமாய் ஆடியவளைக் கண்டு வியந்து அவளைப் பாராட்டியவன்,
தன் தோளைப் பற்றிக் கொண்டு, தன் மார்பளவு நின்றவளைக் குனிந்து நோக்கி,
“நீ ஆச்சரியமானவள் பல்லவி” என்றான்.
அதுவரையிருந்த மலர்ச்சி மாறி முகம் கசங்க, “இல்ல. அற்பமானவள்” என்றாள்.
“அதுவும் தான்” – என்றபடி அவளைச் சுழற்றியவன், அந்த அரை இருளில் நளினமாய் சுழன்று செல்பவளின் நிழலைக் கண்டவாறு ஆட மறந்து நின்றான்.
