அத்தியாயம் - 5
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்ங்குறது பிராஞ்சலோட ஆசையா? இல்ல அவ அப்பாவோட ஆசையா?”
- அடுப்பங்கரையில் நின்றபடி ரசகுலாவிற்காக சென்னாவை (chenna) உருட்டியவாறு மொபைல் கேமரா வழியேத் தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அன்னையிடம் நக்கலாய் வினவினான் பிரஜரஞ்சன்.
அந்தக் கேள்வியைக் கேட்கும் போதே, ‘என்ன, டோன் அந்த daiquiri (ஒரு வகையான காக்டெய்ல்) மாதிரி வருது ?’ என இதழ் முணுமுணுக்க, அவன் மனசாட்சி ‘டே அண்ட் நைட் சுருட்டை முடியையே சுத்தி வந்தா, பேச்சு கூட வீச்சாத் தான் வரும்’ எனப் பதலளித்ததும், பிடரியை கோதிக் கொண்டு சிரிப்புடன் நிமிர்ந்தவன், அன்னை ஒரு மாதிரி பார்ப்பது கண்டு, சட்டென முகத்தை மாற்றி,
“ப்ச், துமி க்கி தேக்ச்சோ? ஜபாப் தீன் (என்ன பார்க்கிறாய், பதில் சொல்)” – என அதட்டினான்.
“ரெண்டு பேரோட ஆசையுமில்ல. அமர் இச்சா. துமி உத்தர் தாவ்(என்னோட ஆசை. நீ இப்போ பதில் சொல்)” – கோபமாய்க் கேட்டவரிடம்,
“உன்னோட ஆசைன்னா, நீ தான் அவளைக் கட்டிக்கனும். என்னை ஏன்ம்மா டார்ச்சர் பண்ற?” – என்று சலித்தான் அவன்.
“35 வயசாச்சு உனக்கு. தேடி வர்ற பொண்ணை ரிஜெக்ட் பண்ணுற ப்ரிவிலெஜ் எல்லாம் உனக்கு இருக்குன்னு நினைக்கிறயா?”
“Do I look old?”
“இல்ல. 29 வயசு பையன் மாதிரி இருக்க.”
“பின்ன என்ன?”
“அதுக்காக உன் வயசு 35 இல்லன்னு ஆகிடாது”
“ப்ச், அம்மாஆஆ”
“நீ என்னைக் கஷ்டப்படுத்துற பாபா! உன் அண்ணன் மாதிரி நீயும் கல்யாணம்,குழந்தைன்னு செட்டில் ஆகிட்டா, நான் உன் அப்பாவோட நிம்மதியா பாரிஸ் டூர் போவேன்ல?”
“அடேங்கப்பா!, லாஸ்ட் இயர் ஜப்பான், அதுக்கு முன்னாடி அமெரிக்கா! இப்போ பாரிஸா?,அம்மா, நீ ராக் பண்ற!”
“இது ரொம்ப லேட் பாபா!, நாள் பூரா சுத்த முடியல. நிறைய இடங்களைப் பார்க்க முடியுறதில்ல. டிரெக்கிங் ஏற முடியறதில்ல, கால் வலி வந்துடுது. எங்க போனாலும் வண்டி தேவைப்படுது.”
“உனக்குத் தான் லைஃப்ல எவ்ளோ கஷ்டம், த்சு,த்சு” – வேண்டுமென்றே உச்சுக் கொட்டினான் மகன்.
“வயசு இருக்கும் போதே எல்லாத்தையும் அனுபவிக்கனும் பிரஜன். கட்டை ஊன்றி நடக்குற காலத்துல கடல்ல நீந்தனும்ன்னு ஆசைப்பட்டா, நிறைவேறுறது கஷ்டம்! அப்பிடிப் பார்க்கும் போது, இந்த ஜெனரேஷன் ரொம்பத் தெளிவா இருக்காங்கன்னு தோணுது. எங்க காலத்துல, குழந்தை வளர்ப்புக்காகத் தங்களோட வாழ்க்கையைத் தியாகம் பண்ணிக்கிறதைத் தான் பெத்தவங்க பெருமையா நினைச்சாங்க! இப்போ அப்பிடி இல்ல. தங்களுக்கும் இது ஒரு வாழ்க்கை தான், தானும் வாழனும், பிள்ளைங்களையும் வாழ வைக்கனும்ங்குற தெளிவு இந்த காலத்துப் பசங்கக்கிட்ட இருக்கு! அதுவே ரொம்ப நல்ல விஷயம்”
“சரியா சொன்ன அம்மா. நாங்களே எதையும் அனுபவிக்கல, நீங்க மட்டும் அனுபவிப்பீங்களான்னு கொந்தளிக்காம, நாகரீக மாற்றத்தை ஏத்துக்கிட்டுத் தெளிவா யோசிக்கிற பார்த்தியா?, This is why I love you a lot”
“என் கிட்ட இதை சொன்ன வரை போதும். வேற யார் கிட்டயாவது சொல்ல வழி பாரு பிரஜன்” – சுற்றி,சுற்றி ஒரே பாயிண்ட்டில் நிற்பவரிடம்,
“ப்ச், எனக்கு love-ஐ விட love making-ல தான்ம்மா அதிக ஆர்வம்” – என வேண்டுமென்றே அவன் வம்பு செய்ய,
“பி…ர…ஜ…ன்” – பல்லைக் கடித்தார் அவர்.
“ஹாஹாஹா, ஏன் lust கெட்ட வார்த்தையா?, பின்ன என்னை எப்படி நீங்க பெத்துக்கிட்டீங்களாம்?”
“அது.. காதலோடு கூடிய கலவி. கவிதை!”
“wahhh! எனக்குக் கவிதை மாதிரியிருக்குற கள்ளியோடு கூடிய கலவி தான் வேணும். ”
“ப்ச், பிராஞ்சலைக் கல்யாணம் கட்டிக்கிட்டு நீ கலவி செய்வியோ, காதல் செய்வியோ! எனக்குத் தெரியாது” – முகத்தைச் சுருக்கிக் கொண்டவரிடம்,
“ம்மா, நான் கள்ளியைக் கேட்டா, நீ காண்டாமிருகத்தைக் கை காட்டுற?” என்று பயந்தது போல் நடித்தவன், அலைபேசியைக் கையில் எடுத்து,
“அம்மா” என்றான் அவர் முகம் பார்த்து.
“ம்ம்?”
“கருப்பா இருக்கிற பொண்ணுங்களைப் பத்தி நீ என்ன நினைக்குற?” – மெல்ல அவன் வினவியதும்,
“பிரஜன்ன்ன்ன்” – அதுவரை அன்னையும்,தம்பியும் பேசிக் கொள்வதைக் கேட்டு சிரித்தபடி அமர்ந்திருந்த அண்ணன்காரன், பாய்ந்து வந்து அலைபேசியைப் பற்றினான்.
“அந்த ராதிகா ஆப்தே தான?, எங்க எங்க?” – அவன் ஆர்ப்பரித்ததும், முகத்தைச் சுழித்த பிரஜன்,
“இது என்ன கேள்வி? அவ, அவளோட ரூம்ல இருப்பா”
“அந்தக் கள்ளி, கலவி.. அவ தானா?”
“கட்டையைக் கொண்டி அடிப்பா”
“நீ அதையெல்லாம் கண்டுக்கப் போறியா என்ன! அந்தக் க,க எல்லாம்.. காதல்,கல்யாணத்தோட தொடர வாய்ப்பிருக்கா?”
“தா….தாஆஆ, கலவியெல்லாம் கல்யாணத்துல முடியனும்ன்னா, 18 வயசுல நான் காதலிச்ச தேவ்ஜனி கூடவே எனக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கும்”
“நல்ல வேளை அவ தப்பிச்சுட்டா”
“தாதாஆஆ”
“அந்த ராதிகா ஆப்தே என்ன லாங்குவேஜ் பேசுறா?”
“தமிழ்”
“ஹேய்ய் என்னடா ராஸ்கலா, ஷிவாஜி கணேஷன், ஜெமினி கணேஷன், ஐ நோ டமில்”
“ஹாஹாஹா”
“சரி, அவளுக்கு சான்ஸ் இருக்கா இல்லையா, அதைச் சொல்லு முதல்ல”
“அவ என் சாய்ஸ்ல கூட இல்ல”
“ஏன், ஏன், ஏன்?”
“இருட்டுல அவ கண்ணைப் பார்த்தா பயமா இருக்கு ப்ரோ! பாய்ந்து பிராண்டிடுவேன்னு மிரட்டுற மாதிரி பழுப்புக் கலர்ல பளபளக்குற கண்ணு அவளுக்கு. சரியான கருநாகம்!”
“ஆஹான்! நீ ரொம்பப் பயந்தவன் தான்! இவ்ளோ யோசிக்கிறவன், ஏன் அம்மாக் கிட்ட அவளைப் பத்தி சொல்ல வந்தியாம்?” –பாயிண்ட்டைப் பிடித்தபடி ப்ரதர்.
“………..”
“பிரஜன்”- விளையாட்டைக் கை விட்டு அவன் அழைக்கவும்,
அண்ணனது முகம் பாராமல் சுருக்கிய புருவங்களுடன் பிடரியைக் கோதியவனின் முகம் மாறியிருக்க, பின் ஆழ்ந்த மூச்சுடன் கேமராவை நோக்கியவன்,
“ஆல்வேஸ் கள்ளியோடு கலவி தான் என் சாய்ஸ். என்ன, கள்ளி கருப்பா இருந்தா பரவாயில்லன்னு இப்போதைக்கு மனசு இறங்கி வந்துருக்கு. அவ்ளோ தான்” என்றான் மெல்ல.
“ரெண்டு பேரையும் கொல்லப் போறேன் இப்போ” – எனப் பின்னால் கத்திய அன்னையைக் கேட்டுச் சிரித்து,
“பாய் மம்மா, ரசகுலா முடிஞ்சதும் ஃபோட்டோ அனுப்பு” என்று விட்டு அலைபேசியை அணைத்தான் பிரஜரஞ்சன்.
வெளியே அடித்துப் பெய்து கொண்டிருந்த மழையைக் கண்டவாறு, கையில் ஜூஸ் பாட்டிலுடன் கப்பலின் மேல் தளத்திலிருந்த இன் டோர் ஸ்விம்மிங் பூல்-ஐ நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவன்.
காற்றையும், மழையையும் கண்டு கடல் குதூகலித்ததில் அலைகள் ஆர்ப்பரித்து கப்பலை ஆடச் செய்து கொண்டிருந்தது.
அந்த இரவு நேரத்தை அணைத்திருந்தக் குளிரைப் பொருட்படுத்தாது ஆங்காங்கு சிலர் நீந்திக் கொண்டிருக்க, அணிந்திருந்த டீ-ஷர்ட்டைக் கழட்டி வைத்து விட்டுத் திரும்பியவன், தண்ணீருக்குள் கால்களை நனைய விட்டபடி ஹெட்செட்டுடன் ஓரமாய் அமர்ந்திருந்த கருப்பு ரோஜாவைக் கண்டான்.
சோகச் சித்திரத்தின் விழிகள் எதையோ வெறித்தபடி ஆழ்ந்த யோசனையிலிருந்தது. நல்ல நித்திரையால் முகம் தெளிவடைந்திருந்தாலும், அலைபாயும் அகத்தின் பரிதவிப்பால், நெற்றி சுருங்கியேயிருந்தது.
இன்னும் என்ன கவலை அவளுக்கு?,
அவளது சிந்தனையை சிதறச் செய்து விடும் நோக்கத்துடன், அவள் பின்னால் சென்றவன் டபாலெனத் தண்ணீருக்குள் பாய்ந்ததன் எதிர்வினையாய், உடல் முழுக்க வந்து சிதறிய நீர்த்துளிகளில், திடுக்கிட்டு ஒரு நொடி மூச்சு திணறிப் பின் முகத்தைத் துடைத்துக் கொண்டு புருவம் சுருக்கி அவனைப் பார்த்தாள் பல்லவி.
மிதந்தபடியே முகத்திலிருந்தத் தண்ணீரை வழித்துக் கொண்டு, மூச்சு வாங்க அவளை நோக்கி,
“2+2 எவ்ளோ?” எனக் கேட்டான்.
“4”
“இந்தியாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைச்சது?”
“ஆகஸ்ட் 15, 1947.” – பொறுப்பாய்ப் பதில் கூறியவளைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அடக்கி,
“வெர்ரி குட்! விழிப்பா தான் இருக்க!” – எனச் சொல்லியபடித் தாவி அவளருகே அமர்ந்தான் பிரஜரஞ்சன்.
“டின்னர் சாப்பிட்டியா?” – பக்கவாட்டில் அமர்ந்திருந்தவளின் முகம் பார்த்துக் கேட்டான்.
ஆம் என்பது போல் தலையாட்டினாள்.
“தூக்கம் வரலையா?”
இல்லையென ஆடியது தலை.
“ஸ்விம் பண்றியா?, நல்லாத் தூக்கம் வரும்”
விழி சுருங்க யோசித்துப் பின் “ப்ச்” எனத் தோளைக் குலுக்கினாள்.
“ப்ச்??, அப்டின்னா?” – என முணுமுணுத்தவாறு அவளது இடப்புறத் தோற்றத்தை அளந்தவனின் விழிகள், அவள் பதிலை எதிர்பார்த்தது போலத் தெரியவில்லை.
சுருட்டை முடியை சுருட்டி, அவள் தூக்கிக் கட்டியிருந்த கொண்டை, மேல் மாடியில் அமர்ந்திருந்தது. Airpods-உடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தக் காதோரக் கூந்தல், விடைத்த நாசி, அழுந்த மூடியிருந்த கருப்பு இதழ்கள், வெற்றுக் கழுத்தென இறங்கிய அவன் பார்வை, முட்டி வரை அவள் அணிந்திருந்த ட்ரவுசருடன் தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தக் கால்களைக் கண்டது.
கள்ளி,கலவி எனப் பேசியதாலோ, இரவோ, இருளோ, மழையோ, குளிரோ ஏதோ ஒன்றின் தாக்கத்தில் உள்ளம் தடுமாறியிருக்க, வெப்பமேறி விட்ட உடல் கொடுத்தத் தகிப்பில், அந்தக் கருப்புக் கால்களை வருடத் துடித்தக் கரத்தை அடக்கி, அமர்ந்திருந்த நீச்சல் குளத்தின் திட்டை இறுகப் பற்றியவன், கண்களை அழுந்த மூடித் திறந்தான்.
அவள் மீதானத் தனது எண்ணங்களை சரி,தவறு என எவ்வித ஆராய்தல்களுக்குள்ளும் அவன் நிறுத்தி வைத்துப் பார்க்கவில்லை. அது அவனது குணமுமில்லை.
35 வயதில் முக்குணங்களை வகுத்துப் பார்த்து ஆசை கொள்ளுமளவிற்கு அவனிடம் பொறுமையிருப்பதாகத் தோன்றவில்லை.
அவன் ஆண். சராசரி ஆண். அவள் பெண். அழகான பெண்.
காதல் பார்வையுடன் பெண்ணை நோக்கும் காலங்களையெல்லாம் அவன் கடந்து விட்டான். இப்போதைக்கு அவன் அகராதியில் மோகம் என்கிற வார்த்தைக்கு மட்டும் தான் விதவிதமான விளக்கம் உண்டு.
அந்த மோகம், அவனது ரசனையின் துனியில் நின்று கொண்டு, ரசவாதம் புரிபவளை போதையுடன் பார்க்கச் சொன்னது, ரசிப்பில் எல்லை மீறச் சொன்னது.
இங்கே ஒருவன் toll கட்டாது travel செய்து கொண்டிருப்பது புரியாது (அல்லது புரிந்து), சலனமில்லாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டு “ப்ச்” என சலிப்பாய் உச்சு கொட்டியவன், தொப்பென நீச்சல் குளத்திற்குள் குதித்தான்.
மறுபடிக் கண்ணை மூடி முகத்தைச் சுருக்கியவளின் அருகே வந்து.. திட்டில் கைகளை வைத்துக் கொண்டு குளத்துக்குள் நின்றவன்,
“ஹெட்செட்டுக்குள்ள ஏதோ பாட்டு ஓடுது போல?” என்றான்.
ஆம் என்றாள் அவள்.
“என்ன பாட்டு?”
“இட்ஸ் அ தமிழ் சாங்”
“கொடு கேட்போம்”
அவன் வினவியதும், ஒரு காதிலிருந்ததைக் கழட்டி அவனிடம் அவள் நீட்ட, வாங்கிக் காதில் மாட்டியவன்,
“தும்ச்சு…. தும்ச்சாக்…. மாசி மாசம் ஆளான பொண்ணு” எனத் தொடங்கியதும், உதட்டைப் பிதுக்கி,
“erotic & sexual தான் உன் இசை ரசனையா?” எனக் கேட்டான்.
ஆம் என்றோ இல்லையென்றோ கூறாமல்,
“இந்த மாதிரி பாடல்களைக் கேட்டுக்கிட்டே, சுற்றியிருக்கிற சம்மந்தமில்லாத சூழ்நிலைகளை அப்சர்வ் பண்ணினா, ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்” என்றாள் உப்பு,சப்பில்லாத குரலில்.
“ம்ஹ்ம்ம்ம், ஆடியோ காதுல. வீடியோ கண்ணுலயா?” – என்றவாறு சுற்றி நோக்கினான் அவன்.
‘காமலீலா விநோதம்…’
லாஞ்சரில் சாய்ந்தமர்ந்திருந்த சைனீஸ் ஆன்ட்டி மூக்கை நோண்டி ‘ஹச்ச்ச்ச்ச்’ எனத் தும்மிக் கொண்டிருந்தது.
‘காதல் கவிதா விலாசம்..’
நீச்சல் குளத்திலிருந்து மேலேறிய ஆணொருவன், பீரோவுக்குள் மாட்டிக் கொண்ட தனது ட்ரவுசரை சரி செய்து கொண்டிருந்தான்.
‘படித்துப் படித்து எடுக்க எடுக்க’-வில் சிரிப்பு வந்து விட, Airpod-ஐக் கையில் எடுத்து அவளிடம் நீட்டியபடி,
“you are a weirdo” – என்று விட்டு, நீந்தத் துவங்கினான் அவன்.
ஒவ்வொரு முறை கடக்கும் போதும், அவள் மீதே பதியும் கண்களுக்கு அணை போட முயலாமல் அவளைக் கவனித்தபடி நீந்தியவன், அவள் பார்வை தன் மீது இல்லை என்றதும், மீண்டும் அவளருகே வந்து, இரு கை முட்டிகளையும் திட்டில் ஊன்றி, நீச்சல் குளத்தைப் பார்த்தவாறு நின்றான்.
அவள் பார்வை சென்ற திக்கைக் கவனித்தவனின் கண்களில், ஒரு தந்தையும், அவரது மகளும் தென்பட்டனர்.
வெகு நேர்த்தியாய், பொறுமையாய்த் தன் குழந்தைக்கு நீச்சல் பழக்கிக் கொண்டிருக்கும் தகப்பனைக் கண்டு, இயல்பாய் அவனுக்குத் தன் தந்தையின் நினைவு எழ, லேசாய் விரிந்த அவன் இதழ்கள், பக்கவாட்டில் பல்லவியின் புறம் திரும்புகையில் மெல்லச் சுருங்கியது.
அவளையும், அவ்விருவரையும் மாறி,மாறிப் பார்த்தவன், வெளுத்த அவள் முகத்தைக் கண்டு, ஒரு வேளை இவளும் தன்னைப் போல அவள் தந்தையை எண்ணுகிறாளோ, அவருக்காக ஏங்குகிறாளோ, அந்தச் சிறுபெண்ணுக்குக் கிடைக்கும் அரவணைப்புத் தனக்குக் கிட்டாமல் போனதை எண்ணி வருந்துகிறாளோ எனத் தோன்றிய உணர்வில், மெல்ல மூச்சை இழுத்து விட்டவன்,
அவளை மாற்றும் நோக்கத்துடன்,
“25 வயசுக்குப் பிறகு இத்தனை வருஷத்துல உனக்கு வேற யார் மேலயும் காதல் வரலையா பல்லவி?” எனக் கேட்டான்.
“………………” – பதிலில்லை அவளிடம்.
“5 வருஷம் உங்கம்மாவால, உங்கம்மாவுக்காக வேலை,வேலைன்னு திரிஞ்சு வீட்டை வாங்கினதுல ஓடிப் போச்சு. அவங்க போய் 3 வருஷம் ஆகிட்டதா சொன்ன. இப்போ.. இங்க.. உன் கூட எந்தத் துணையும் இல்ல. அப்டின்னா நீ இன்னும் சிங்கிளா பல்லவி?” – லேசாய் ஆர்வம் துளிர்த்திருந்தது அவன் குரலில்.
“…………..”
“என் கேள்விக்கு யெஸ் தான் பதில்ன்னா, ஏன்?, என்ன காரணம்?”
“……….”
“உன்னோட முன்னாள் காதலை மறக்க முடியலையா?” – அவன் மெல்ல வினவியதும்,
விரக்திச் சிரிப்புடன் உதடு வளைந்தது அவளுக்கு.
“இந்த சிரிப்புக்கு இல்லைன்னு தான அர்த்தம்? நீ அவனைக் கடந்து வந்துட்ட-ங்குறது என்னோட புரிதல். சரியா?”
“………”
“பின்ன ஏன் தனியா இருக்க பல்லவி?, இத்தனை வருசத்துல, உனக்குப் பிடிச்ச யாரையும் நீ சந்திக்கலையா?”
“நான், என் பிடித்தத்தை முன்னிறுத்துகிற ஆளா இருந்திருந்தா, காதலிச்சவனையேக் கை பிடிச்சிருப்பேனே”
“பின்ன?”
“……….”
“காதலிக்கத் தோணலையா?”
“காதலா?”
“ஹ்ம்ம்”
“மறுபடி அதே வார்த்தையை உபயோகிக்கிற தைரியம் எனக்கு இருக்கல”
“ஏன்?, அதுல என்ன தப்பிருக்கு?, ஒரே நேரத்துல ரெண்டு பேர்க்கிட்ட அதே வார்த்தையை யூஸ் பண்ற ஆட்கள் இருக்குற உலகம் பல்லவி இது! நீ பச்சபுள்ளயா இருக்க!”
“…………”
“சரி, காதல்ன்ற பு….னி…தமான வார்த்தையை உபயோகிக்க வேண்டாம். அழுக,சிரிக்க,ஆறுதல் சொல்ல,தோள் சாய, ஒன்னா உண்டு,உறங்க, பரஸ்பரம் அன்பைப் பரிமாற, துணையா ஒருத்தனைத் தேடவேயில்லையா உன் மனசு?”
“தேடல் மட்டுமா? ஏக்கமே இருந்தது” – மியூட் மோடில் அவள் குரல்.
“ம்ஹ்ம்???, அப்பிடி ஒருத்தன்…. கிடைச்சானா?”
“………”
“சொல்லு பல்லவி” – அவன் மறுபடி கேட்டதும்,
Indoor Pool-ன் கண்ணாடிகளினூடே வெளியே தெரிந்த மழையை இமை சிமிட்டாது வெறித்தவாறு, ரத்தப்பசையின்றி சிறுத்துக் கருத்துப் போன முகத்துடன் ஆம் என்பது போல் மெலிதாய்.. மிக மெலிதாய் அசைந்து கொடுத்தாள் அவள்.
இதை எதிர்பாராது ஆச்சரியப் பார்வையுடன்,
“க்ரேட் பல்லவி!, எங்க அந்த வீணாப் போனவனை நினைச்சு வருத்தப்பட்டு உன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டிருக்கியோன்னு நினைச்சேன். Good that you found someone.”
“………”
“உன் அரு…மைக் காதலனை வீணாப் போனவன்னு சொன்னதால கோச்சுக்காத பல்லவி! உன் அம்மா தான் இங்க வில்லன்னு தெரிஞ்சும், உன்னை அவங்கக் கிட்ட சிக்க வைச்சுட்டுப் போனான் பாரு!, எனக்கு அவன் மேல செம்ம கோபமிருக்கு பல்லவி!”
“………”
“ஓகே! அவன் உன்னை கன்வின்ஸ் பண்ணப் போராடுனான் தான்! ஆனா உங்கம்மாக் கிட்ட போராட்டமெல்லாம் செல்லுபடியாகாது பல்லவி. யுத்தம் தான் சரி வரும்! நானா இருந்திருந்தா, வீடு புகுந்து உன் அம்மா முன்னாடியே உன்னைத் தூக்கியிருப்பேன். உன் சம்மதத்தை எதிர்பார்க்காம கட்டாயமா உன்னைக் கட்டியிருந்தா, உன் அம்மாவால என்ன செய்திருக்க முடியும்?”
‘அதானே என்ன செய்திருக்க முடியும்?’ – வீராவேசமாய் அவன் பேசுவது சிரிப்பைக் கொடுத்தது அவளுக்கு.
மூடிய உதடுகள், இரு புறமும் வளைந்து பிறைநிலவாய் அவள் முகத்தில் மங்கிய ஒளி எழுப்பியது.
அந்நிலவை நினைவில் கேப்ச்சர் செய்து கொண்டவன்,
“சரி, அவனைப் பத்தி பேச வேண்டாம். அவன் சாப்டர் எப்பவோ க்ளோஸ் ஆகிடுச்சு” – என்று விட்டு,
“இந்தத் துணையெழுத்து எப்படிப்பட்டவன்?, வீரனா, கோழையா?” – எனக் கேட்டான்.
“………..” – பிறை நிலா மறைந்து, இருள் சூழ்ந்து முகம் கன்றிக் கூம்பியது அவளுக்கு.
“என்னாச்சு பல்லவி?” – அவளைக் கூர்ந்து நோக்கினான் அவன்.
“……”
“ஏதோ உறுத்தல் தெரியுது உன் முகத்துல?”
-அவள் கண்களில் தேங்கியிருந்த நீரினால் பழுப்பு விழிகள் நிறமிழந்து சாம்பலாய் மாறுவதையும், விடைத்த நாசி மேலும் விறைத்து நீண்டு நிற்பதையும், பற்கள் அழுந்த கைப் பேசியைப் பற்றியிருந்தவளின் விரல்கள் தவிப்பில் நடுங்குவதையும் கண்டு புருவம் சுருக்கினான் பிரஜரஞ்சன்.
அவனது டர்ட்டி மூளை டகால்ட்டியாய் யோசித்து பற்பல காம்பினேஷன் தியரியைக் கடகடவென எழுதியது.
Beauty + sexy + 33 வயசு + முதிர் கன்னி + பணம் வைத்திருப்பவள் + சோகம்,விரக்தியுடன் உலகை வெறுத்த மனநிலையிருப்பவள் = ??
“ம்க்கும்” – என்றபடி அவளை விட்டு நீங்கி.. நீந்தி.. சிறிது தூரம் சென்று விட்டு, மீண்டும் வந்தான்.
“உன்னை விட வயசு கம்மியா அவனுக்கு?” – தண்ணீருக்குள் மிதந்தபடி வினவினான்.
“………..” அவள் மழையையே முறைத்திருந்தாள்.
உதட்டைப் பிதுக்கி விட்டு மறுபடி நீந்தினான் அவன். பின்,
“இல்ல, குடுகுடுக் கிழவனா?, உன்னை விட அதிக வயசுல உள்ளவனா?”
மௌனம் சாதித்தாள்.
காண்டானது அவனுக்கு.
பின் எதையோ யோசித்து மறுத்துத் தலையசைத்துக் கொண்டுப் புருவம் சுருக்கியவாறு மீண்டும் நீந்தியவன், திரும்பி வந்து,
மீதமிருக்கும் ஆப்ஷனையும் கக்கச் சொல்லி தொல்லை கொடுத்தத் தொண்டையோடு,
“பின்ன யாரு பல்லவி?, கல்யாணமாகிக் குழந்தை, குடும்பம்ன்னு செட்டில் ஆனவனா? – என்று நீரைக் கைகளால் அளைந்தவாறு அவன் நக்கலாய் வினவ,
மழையை வெறித்துக் கொண்டிருந்த விழிகள் தள்ளாட, அங்குமிங்கும் அலைந்தக் கருமணிகளுடன் தொண்டைக்குழி ஏறி,இறங்க, தண்ணீருக்குள் தடுமாறிய கால்களைக் கட்டுப்படுத்த விரல்களை மடக்கி இறுகி, நடுங்கி, விறைத்தாள் பல்லவி.
அதுவரை லேசான சிரிப்போடு நக்கல் தொனியில் அவள் முகம் பார்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவன், அந்த விழிகள் உமிழ்ந்த உண்மையில் திடுக்கிட்டுத் திகைத்து, இதழ் விரிய அவளை அசையாது நோக்கினான்.
என்ன கூறுகிறது அந்தப் பழுப்பு விழிகள்?, அவன் தனது கேள்வியை ரீவைண்ட் செய்து பார்த்து, அவள் உடல்மொழி அளித்த பதிலை அதனுடன் பொருத்தி, விளங்கிக் கொண்ட விஷயத்தில் விறைத்து நின்றான்.
பல்லவி!! பல்லவி! பல்லவி? பல்லவியா இப்படி?
கடந்த மூன்று நாட்களாக அவளுடன் நடந்த உரையாடல்கள், உணர்ச்சிப் பரிமாறல்கள் அனைத்தும் அவன் ஆழ் மனதில் அவள் பெயருக்கெதிரே எண்ணிலடங்கா ஆச்சரியக்குறிகளை கன்னாபின்னாவென இட்டு வைத்திருக்க, ஒரு சிறு மௌனத்தில் அவை அத்தனையையும் அழித்துக் கேள்விக் குறியாக மாற்றி எழுதி விட்டவளைப் பார்த்தபடியே அசைவற்று நின்று விட்டான் அவன்.
மூச்சு விட மறந்து போனவனுக்குத் தண்ணீருக்குள் கால்கள் உறைவது போல் தோன்ற, நீந்தி அவளருகே வந்து, ஏறித் திட்டில் அமர்ந்தான்.
தலையிலிருந்து சொட்டிய நீருடன் குனிந்து அமர்ந்திருந்தவன், மூச்சு வாங்க, விடைத்த மூக்குடனும், அழுந்த மூடிய இதழ்களுடனும், புருவம் நெரித்துத் தீவிரமாய் எதையோ யோசித்து,
“அவன்….. உன்னை…. ஏமாத்தினானா?” எனக் கேட்டான் மிகப் பொறுமையாய் அவள் முகம் பாராமல்.
நீருக்குள் அவள் கால்கள் மரத்துப் போயிருந்தது, கூடவே அவளது மனமும். இந்த நொடி இதழ்களும்!
பொறுமை சற்றே பறி போக, “ப்ச், தனக்குக் கல்யாணமாகலன்னு சொல்லி ஏமாத்தி, உன் கூடப் பழகினானா?” –அவன் குரல் அவனறியாது உயர்ந்திருந்தது.
அவளது கொண்டை வரை அவன் உசத்திய குரல், அவள் மண்டையைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை.
தொடர் மௌனம் சாதித்தாள் அவள்.
கடித்தப் பற்களுடன் தலையைச் சிலுப்பியவன், பரபரவெனக் கோதி முடியைப் பின்னுக்குத் தள்ளினான்.
தோள்கள் விரிந்து, நெஞ்சு விடைக்க…. அர்த்தமற்றக் கோபமொன்று, ஆத்திரமாய் அவனுள்ளே உருவெடுத்து ஆவேசப்பட அவகாசமெடுத்துக் கொண்டிருக்க, அவள் புறம் திரும்பி,
“இந்த அமைதிக்கு அர்த்தம் என்ன பல்லவி?” – எனக் கேட்டான்.
“……..”
“அவன் கல்யாணமானவன்னு உனக்குத் தெரியுமா?”
“………”
பொறுமை பொறுப்பிழந்து விட, “அப்போ கல்யாணமானவன்னு தெரிஞ்சே பழகியிருக்க?, ரைட்?” – அடிக்குரலில் அனல் அடிக்க வினவியவனின் மூச்சிலிருந்த வெப்பம் அவளை சுட்டிருக்க வேண்டும்.
குறுகி வழிந்தத் தோள்களை வெகு சிரமத்துடன் நிமிர்த்த முயன்று, முடியாமல், கூனி, ஒடுங்கி, காற்றோடுக் கரைந்து விடும் நோக்கத்துடன், கண்களைச் சிமிட்டாது, கல்லாய் அமர்ந்திருந்தவள், மெல்லத் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
சற்று முன் ரசித்த அந்த பக்கவாட்டுத் தோற்றம், இப்போது ரத்தம் கொதிக்க பக்கம்,பக்கமாய்க் கெட்ட வார்த்தைகளை உதிர்க்கச் சொல்லித் தூண்ட, காரணமின்றிக் கண்டமேனிக்கு எகிறிய கோபத்துடன் உள்ளங்கையைத் தரையில் தட்டியவன், அவள் தன் முகம் பார்த்ததும், அதுவரைக் கடினப்பட்டு அடக்கி வைத்திருத்த அணை உடைய,
“don’t you dare look at me, bloody bitch” – என சிவந்த விழிகளுடன் அதீத கோபத்தில் நறநறத்தப் பற்களின் வழி முணுமுணுப்பாய் எகிறியவன், வேகத்துடன் எழுந்து, மழையைப் பொருட்படுத்தாது வெற்றுக் கால்களுடன் விறுவிறுவென வெளியேறி விட்டான்.
அவன் செல்லும் திசையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் விழிகள், உணர்ச்சிகள் எதையும் பிரதிபலிக்கவில்லை.
மீண்டும் மழையில் மதியைச் செலுத்தினாள்.
‘bloody bitch’
-அவன் எறிந்து சென்ற வார்த்தை அவளைப் பொங்கி எழச் செய்யவில்லை. அல்லும்,பகலுமாய் ஆயிரம் முறை அவள், தன்னைத் தானே கூறிக் கொள்ளும், கொல்லும் வார்த்தையை ஒரு முறை அவன் உச்சரித்து விட்டான். அவ்வளவு தானே?,
காறி உமிழப்படுகையில் கல்லுச் சிலை போல் நின்ற போது, அந்த எச்சிலின் ஈரத்தை இன்னமும் கன்னத்தில் உணர்ந்து கொண்டிருக்கும் போது, வராத ஆத்திரமா இப்போது வந்து விடப் போகிறது?
ஏற்கனவே வெந்து,கருகி,உயிர் விட நாள் பார்த்துக் கொண்டிருக்கும் இதயத்தில், இவனது கோபம் தாக்கிப் புதுக் காயம் பட இடமிருக்கிறதா என்ன?
மரத்தக் கால்களை மறந்து… மனதோடு பேசியபடி சூன்யத்தைச் சுமந்து கொண்டிருந்தாள் பல்லவி.
