அத்தியாயம் - 1

கே.ஜே.யேசுதாஸின் கூர்மையான கணீர்க் குரலை மிகச் சரியாக உபயோகித்துக் கொண்ட பெருமை இளையராஜவை மட்டுமே சாரும்! அவர் இயற்றிய பாடல்களைக் கேட்டு மகிழும் நம் காதுகளுக்கே இத்தனை ரசனை என்கையில்.. இயற்றிய மனிதன் எப்பேர்ப்பட்ட உயர் ரசனை கொண்டவனாக இருப்பான்! இளையராஜா கர்வி தான்! இருக்கட்டுமே! இளையராஜாவின் உச்சந்தலையில் ஏறியமர்ந்த பின்பு தான் கர்வம் என்ற சொல் கௌரவம் பெற்று விட்டதாய் நான் எண்ணுகிறேன்! மாற்றுக் கருத்து இருப்பின்.. இதோ.. என் காது துவாரத்தின் வழி நுழைந்து.. என் இதயத்தை நனைத்துக் கொண்டிருக்கும்.. இசையையும்,குரலையும் கேளுங்கள்!

மாவிலைப் பாதமோ.. மங்கை நீ வேதமோ..

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே!!

அழகில் அழகு தேவதை!ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்!

தமிழ் மொழிக்குப் பூவும்,பொட்டும் வைத்து அலங்கரித்துப் பார்க்க வேண்டுமெனில்.. கண்ணதாசனிடம் பேப்பரையும், பேனாவையும் நீட்டினால் போதும் (பாதத்தை மாமர இலையோட ஒப்பிட்டதே பெரிய சாட்சி)! அவரது தேர்வில் வடிவம் கொண்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் யேசுதாஸின் குரலில் உருவம் பெற்று நிற்கும் வித்தையை.. இப்பாடலில் கண் கூடக் காணலாம்! Ofcourse ஆட்டுவிப்பவன் ராஜாதிராஜாவாயிற்றே!!

துணுக்கு: பாடல் இடம் பெற்ற படம் ராஜபார்வை!

‘அது ஒரு அழகிய கனா காலம்’ – என்கிற வாக்கியத்துக்கான மிகச் சிறந்த உதாரணம் 1980-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட வருடங்களாகும்! தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆக்டோபஸ் கரங்கள் நம் நாட்டுப் பட்டி,தொட்டிகளை அள்ளிச் சுருட்டியிராத.. அப்பாவி காலகட்டம் அது! அல்லக்கை அலைபேசிகளும், கர்ணகொடூரக் கணிணிகளும் இல்லாது.. வாயும்,கையும் படைக்கப்பட்டதற்கானக் காரணத்தை முழுமையாய் அனுபவித்து.. மனிதன்,மனிதனாய் வாழ்ந்த பொற்காலம்!

டிவியும்,டெலிஃபோனும் அதிகம் ஆக்கிரமித்திராத வீடூகளுக்கு மத்தியில், சைக்கிளும், டிரான்சிஸ்டரும் வைத்திருப்பதே மிகப் பெரிய கௌரவம் தான்! டேப் ரெக்கார்டர்,வாக்மேன்,ஸ்கூட்டர், புல்லட்,அம்பாசிடர்,ஏசி,ஃப்ரிட்ஜ் எல்லாம் நம் வரிசையில் அடுத்தடுத்து வருபவை.

தலைமுறை தாண்டியும் குறையாத கவர்ச்சியை இந்தப் பத்தாண்டுகளும் பெற்றிருப்பதற்கான முக்கியக் காரணம்.. இளையராஜா என்னும் மாயாவி! 80ஸ்-என்றாலே நம்மில் அநேக பேருக்குத் தெரிந்த ஒரே பெயர் இளையராஜா தான்!

தன் ஒவ்வொரு பாடலின் வழியாகயும் அந்தக் கால கட்டத்தின் இயல்பை,அழகை கற்பனையில் உணர வைத்து.. ஒரு ஏகாந்தத்தை ஏற்படுத்தி.. ஏங்கச் செய்து விடும் வித்தை தெரிந்த ஒரே மனிதன்!

அவர் கொடுத்தத் தாக்கத்துடனே இக்கதையோடு நாம் நகர்வோம்! ஏனெனில்..

நீயும், நானும் போவது... காதல் என்ற பாதையில்!!! :P

1985, பீட்டர்ஸ் ரோடு, மெட்ராஸ்.

1996-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் தலைநகரம்! இந்தியாவின் பெரிய நகரங்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்ற மாநகரம்!

அப்பேர்ப்பட்டத் தலைநகரத்தின் பிரதான சாலையொன்றின் காலை நேரம்! சாதாரண காலை நேரம் தான்! ஆனால்.. அதில் ஆச்சரியம் ஒன்றுள்ளது! கடும் வெயிலும்,அனல் காற்றும் வாட்டியெடுக்கும் இப்போதைய சென்னையைப் போலல்லாது, மோதிச் செல்லும் காற்று முழுதிலும் குளிர்ச்சி நிரம்பியிருக்கிறது.! எஸ்! மரங்கள் நிறைந்திருந்த மெட்ராஸ் அது!

அத்தகைய மெட்ராஸின் தலைமுடியைச் சுத்தமாய் மழித்து மொட்டை அடித்துத் தான் சென்னை எனப் பெயர் வைத்திருக்கிறோம் நாம்! மரங்களற்றக் கட்டிடப் பேழைக்குள் எந்திரமாய் ஒரு வாழ்க்கை! மூச்சுக்குத் தவிக்கப் போகும் நாள் தொலைவில் இல்லை!

ந்தக் காலை நேரத்தின் பரபரப்பை ஏந்திக் கொண்டு.. பெருத்துப் பிதுங்கிப் போய்.. மூச்சு வாங்க முன்னே வந்து நிற்கும் பல்லவன் தான் நம்மை முதலில் வரவேற்கிறான்! சென்னை மாநகரப் பேருந்து அது! ஒற்றை ஜடையுடன் க்ளோஸ்ட்-நெக் ப்ளவுஸூமாகப் பெண்களும், பெல் பாட்டம்,ஸ்டெப்-கட்டுடன் ஆண்களுமாய் வண்ணமயத்துடனிருந்தது!

அம்பாசிடர்களும்,’ப்ளஷர் கார்’ என்றழைக்கப்படும் காண்டஸாக்களுக்கும், ப்ரிமியர் பத்மினியும் சாலையில் ஒரு புறம் பவனி வர.. பஜாஜ் செடக், கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களும், புல்லட்களும் மறுபுறம் நிறைந்திருந்தது.

இதில் ஆச்சரியம் என்னவெனில்.. மேற்கூரிய இரு சக்கர வாகனங்கள் ஹெல்மெட் அணிந்த மனிதர்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பின்னால் அமர்ந்து செல்பவர் உட்பட! (நம்மூர்ல ஹெல்மெட் போட்றது எவ்ளோ பெரிய விசயம்!)

அந்த ஸ்கூட்டர்களுக்கு நம்பர் ப்ளேட் எனத் தனியாக எதுவும் இல்லை! ஸ்கூட்டரின் முன்புறம் வலது பக்கத்தில் கருப்பு பேக்-க்ரவுண்டில் வெள்ளை எழுத்துக்களுடன் எண்கள் மின்னியது! ஹாஹா!

இதையெல்லாம் விட மிகப் பெரிய அதிசயம்.. சிக்னலில் காத்திருந்த இந்த மோட்டார் வண்டிகளோடு சேர்ந்து.. சரிசமமாக நின்று கொண்டிருந்த சைக்கிள்கள் தான்! பெரும்பான்மை மக்கள் சைக்கிள் உபயோகிப்பவர்களாகத் தானிருந்தார்கள்!

கேஸ் சிலிண்டர்களுடன் ட்ரை-சைக்கிள், அரிசி மூட்டைகளுடன் கடக்கும் மாட்டு-வண்டி, ஏகப்பட்ட ரிக்ஷாக்கள், ஆட்டோக்கள் என ஜனக் கூட்டத்துக்குப் பஞ்சமில்லாதிருந்தது!

சாலையின் இடது புற சுவற்றில் அப்போது வெளிவந்த திரைப்படமான இதயகோயிலின் பேனர் ஒட்டப்பட்டிருந்தது. கோவில் பின்புறத்தில் அம்பிகாவும்,மோகனும் சிரித்துக் கொண்டிருக்க.. மறுபுறம் புன்னகையுடன் ராதா!

அருகிலேயே மற்றுமொரு பேனர்! மதன மஞ்சரி! பிட்டு படம் போலும்! கடந்து செல்லும் ஆண்களைக் கவரும் நோக்கத்துடன் ஒளிவு மறைவு ஏதுமின்றி வெட்ட வெளிச்சத்தில் பகிரங்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவை ஒருபுறமிருக்க.. சாலையின் வலது புற வளைவில் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தியின் புகைப்படங்களுடன் பெரிதாய் ஒரு பேனர்! சுவர்களில் அறிஞர் அண்ணாவின் வாசகங்களும், எம்.ஜி.ஆர்-இன் புகைப்படமும்! அரசியலும்,சினிமாவும் இன்றி தமிழகமா??

புரட்சிகளற்றத் தலைநகரமேது என்று நிரூபிக்கும் வகையில் கையில் ஆரஞ்சு நிறப் பதாதைகளைத் தாங்கியபடி சாலைமறியலில் ஈடுபட்டிருந்தக் கூட்டம் ஒருபுறம், அதைத் தடுத்து தடுக்கில் இட, படபடவெனக் குவிந்தப் காக்கிச் சட்டைகள் மறுபுறம்!

சுவாரஸ்யம் நிறைந்த அந்தச் சாலையின் விறுவிறுப்பும்,பரபரப்பும் கொஞ்சமும் பாதிக்காது, ஆளரவமற்று அமைதியாகத் தெரிந்த அந்தக் கிளைச் சாலையின் சிறிய அரங்கமொன்று.. அன்று காலை நடக்கவிருக்கும் மேடை நாடகத்துக்கான டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டிருந்தது.

பெரிதாக வியாபார நோக்கமெதுவும் கிடையாது! அந்த நோக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு அவர்களுக்குப் பார்வையாளர்களும் கிடையாது!

முத்தமிழ் வரிசையில் கடைசி இடத்தைப் பெற்றிருப்பதாலோ என்னவோ.. நாடகக் கலையை வளர்க்கவும்,போற்றவும் பெரிதாகக் கூட்டம் கிடையாது இங்கே!

பள்ளி,கல்லூரியிலிருந்துத் தொடங்கி அத்தனை மேடையிலும் பாட்டுக்கும்,நடனத்துக்கும் ஆர்வம் காட்டும் நாம், நாடகம் என்றாலே.. எழுந்து சென்று விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்! அவ்வளவு தான் நாடகக்கலைக்கு நாம் அளிக்கும் மரியாதை!

போதாததற்குத் தொலைகாட்சி,சினிமா போன்றவை உண்டாக்கிய கவர்ச்சியும்,மோகமும் இண்டு,இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல் நிறைந்து வழியத் தொடங்கிய பின்பு.. கண் முன்னே நிகழ்த்தப்படும் இந்த அரியகலையானதுத் தன் வீரியத்தை முற்றிலுமாக இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கீழ்நிலைக்குச் சென்று விட்ட இக்கலையைக் காக்கவெனத் தோன்றிய சான்றோர்கள் பலர் உள்ளனர்! 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் பம்மல் சம்மந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் மேடை நாடகச் செயல்பாடுகளால் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மொழித் தொண்டு செய்வதற்காகவே துறவறம் பூண்ட சங்கரதாஸ் சுவாமிகள் இன்று வரை மேடை நாடகக் கலையின் தந்தை என்றே அழைக்கப்படுகிறார்.

நம் நாட்டைப் பொறுத்தவரை சமூகம் சார்ந்த பிரச்சனைகளை, விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதற்கானக் கருவியாகவே இந்நாடகங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் நாடகம் என்றாலே பிரிட்டிசார் பயப்படுமளவிற்கு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய கலை இது.

ஆனால்.. அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பெரும்பாலான நாடகங்களும்,நாடகக் குறிப்புகளும் எழுத்து நடையாகவோ, இன்ன பிற வடிவமாகவோ பேணிப் பாதுகாக்கப் படாமல் போனது தான் நம் துர்பாக்கியம்!

திராவிட இயக்கங்கள் தலையெடுத்த பிறகு அரிசியல் சார்ந்த நையாண்டிகளுடனான நாடகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

அதன் பின்பு நம் தலைமுறையினரிடம் பிரபலமாகத் திகழ்ந்தவர்கள் சோ.ராமசாமி,விசு, மௌலி, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன் போன்றோர்!

அண்மைக்காலமாக நா.முத்துசாமி என்பவர் கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முறையான பயிற்சியுடன் முழு நேர நடிகர்களை உருவாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. (vijaysethupathy is from koothu patarai I guess).

பெரிதாகப் பெயர் பெற்றிராத சாதாரண நாடகக் குழு அது. பொருள் ஈட்டும் நோக்கத்தைத் தாண்டி இக்கலையின் மீது ஆர்வமும்,மோகமும் கொண்ட இளைஞர் பட்டாளம்! ஒவ்வொரு முறையும் அவர்கள் மேடையேறுவது மிகப் பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் தான்!

சொற்பப் பார்வையாளர்களை மட்டுமே பெற்றிருந்த அந்தச் சிறிய அரங்கத்தின்.. மேடையில் தொங்க விடப்பட்டிருந்தத் திரையில் அன்றைய நாடகத்திற்கானத் தலைப்பு எழுதப்பட்டிருந்தது.

அபுமன்யு – சுந்தரி கல்யாணம்,

குழு – மறுமலர்ச்சி.

நாடகக்கலையின் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளை அனுசரிக்கும் பொருட்டு அவரது நாடகங்களில் ஒன்றான அபிமன்யு-சுந்தரி கல்யாணம் அன்று மேடை நாடகமாக நடைபெறவிருந்தது.

திருமண வயதைத் தொட்டு வளர்ந்து நிற்கும் தன் மகன் இலக்குமண குமாரனுக்குத் திருமணம் செய்ய முனைகிறான் அஸ்தினாபுரி அரசனாகிய துரியோதனன்!

அவன் எண்ணம் புரிந்த உடன் தனக்குள் மனக்கணக்கு போடும் சகுனி, மங்கையோடு சேர்த்து இம்மண்ணை ஆளும் நாராயணனையும் கௌரவர்களின் புறம் இழுத்துக் கொண்டுப் பாண்டவர்களை வெல்லும் நோக்கத்தோடு துவாரகபுரி மன்னனும், உலகை ஆளும் வைகுந்தனமாகிய வாசுதேவகிருஷ்ணனின் அருமைப் புதல்வியும், பேரழகியுமான அதிரூபசுந்தரியைப் பெண் கேட்டுச் செல்லுமாறு யோசனை கூறுகிறான்.

தன் மாமனின் யோசனையில் பூரித்துப் போன துரியோதனனும் துவாரகையில் யாதவகண்ணனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி.. கையோடு ஒப்புத் தாம்பூலம் மாற்றி விட்டுச் சென்று விடுகிறான்.

வில்வித்தை வீரன் காண்டீபனுக்கும், சுபத்திரைக்கும் பிறந்த வீர அபிமன்யுவை பால்ய வயது தொட்டே மணாளனாய் எண்ணி வைத்திருந்த சுந்தரி, தந்தையின் முடிவைக் கண்டு கோபமுற்று.. தன் மனம் தொட்ட மன்னவனை மட்டுமே மணாளனாக மணமுடிப்பேன் என்று சபதமெடுக்கிறாள்.

இச்சூழ்நிலையை ஓலையில் வடித்து அபிமன்யுவிடம் ஒப்படைக்கச் சொல்லி வாயுதேவனிடம் கொடுத்தனுப்புகிறாள் சுந்தரி.

செய்தி எட்டிய பின் எப்படியெல்லாம் போராடி அபிமன்யு என்பவன், தன் உள்ளங்கவர்க் கள்ளியான சுந்தரி தேவியை மணம் முடிக்கிறான் என்பதே நாடகத்தின் சாரம்சம்!

எடுத்ததும் முதல் காட்சி.. துச்சாதனன்,சகுனி மற்றும் கர்ணன் புடை சூழ அஸ்தினாபுர அரியணையில் கம்பீரமாய் அமர்ந்திருந்த துரியோதனனுடன் தொடங்கியது.

அஸ்தினாபுரத்து செல்வ வளங்களைப் பற்றியும், துரியோதனின் அருமை,பெருமைகளையும் எடுத்துச் சொல்லும் பாடல்கள் சிலவற்றைத் தூய தமிழில் கணீர்க்குரலில் பாடினான் ஒருவன்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த சிலர் ‘ஆஹா’ போட்டபடி நாடகத்தைக் கவனித்தனர்.

துரியோதனனின் ஆசையையும், சகுனியின் யோசனையையும் கேட்ட பின்பு காட்சி மாறுகிறது.

மாயக்கண்ணனாய்,நீல வர்ணனாய் மேடையில் தோன்றியவன் நடிகர் சிவக்குமாரின் சாயலில் இருந்தான்.

தான் வந்த நோக்கத்தைப் புட்டு புட்டு வைக்கும் துரியோதனன், ‘உன் பெண்ணை என் மருமகளாக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் தருவேன்’ என ஆர்ப்பரிக்க...

அந்த சூத்திரதாரி கிருஷ்ணனோ, ‘அப்படியென்ன தந்து விடுவாய்’ எனக் கேட்க..

‘ஏழு லட்சம் ஒட்டகங்களின் மீது மூட்டை,மூட்டையாகப் பொன்னும்,பொருளும் கொண்டு வந்துள்ளேன்! அவ்வத்தனையையும் பெற்றுக் கொண்டு உன் பெண்ணை என் மகனுக்குக் கல்யாணம் செய்து கொடு’ என்கிறான்.

நமுட்டுச் சிரிப்புடன் மறுக்கும் வைகுந்தன் ‘அவ்வளவு பொன்னெல்லாம் தேவையில்லை! இந்த கோபாலப் பெட்டியை நிரப்பினால் மட்டும் போதும்’ என்கிறான்.

ஒரு கை நீளமும்,ஒரு கை அகலமும் கொண்ட அந்தச் சிறிய பெட்டியை இகழ்ச்சியுடன் நோக்கி விட்டு அதில் பொன்னை நிரப்புகிறான் துரியோதனன்.

என்னவொரு ஆச்சரியம்! ஏழு லட்சம் ஒட்டகங்களில் அவன் ஏந்தி வந்தப் பொன்னும்,பொருளும் அந்தப் பெட்டியின் பாதியைக் கூட எட்டவில்லை!

அவமானத்தில் முகம் கறுக்க அசையாது நின்றவனைக் கண்டு ‘என்னப்பா இது?’ ரீதியில் மோவாயில் கை வைத்தக் கிருஷ்ணனின் முக பாவனையைக் கண்டு அவையோரும் நகைத்தனர்.

கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் கிருஷ்ணலீலாவையும், மருமகனின் முகத்தையும் கண்ட சகுனி விரைந்து சென்று, ஒட்டு மொத்த அஸ்தினாபுரத்துப் பொன்னையும் அள்ளிக் கொண்டு வந்து பெட்டியில் இட்டான்.

அப்படியும் கால்வாசிப் பெட்டிக் காலியாய் இருந்தது.

உடனே சமயோசிதமாக செயல்பட்டு மீதிப் பெட்டியைத் திருமணத்தின் போது நிரப்புவதாக வாக்குக் கொடுத்து ஒப்புத் தாம்பூலத்தை மாற்றிக் கொண்டு துரியோதனனுடன் அஸ்தினாபுரம் திரும்புகிறான்.

அடுத்த காட்சி தந்தைக்கும்,மகளுக்குமானது!

சுந்தரியாக வேடமிட்டிருந்த ஒருவன் உள் நுழைந்ததும் அரங்கம் முழுதும் கரகோஷம்!

அவன் ஆண் எனக் கூறிவிட முடியாதபடி அத்தனை திருத்தமான முகமும், பாவனையும்!

அடுத்து நடந்ததெல்லாம் காரசாரமான விவாதம் தான்!

‘துரியோதனனைப் போன்ற பணக்காரனை உலகில் காண முடியாதென்றும், அவன் மகனைக் கலியாணம் செய்து கொண்டால் சொகுசாக வாழலாம்’- என்றும் கூறி மகளை இலக்குமணனுடனானத் திருமணத்திற்கு வற்புறுத்துகிறான் கார்மேக வர்ணன்.

‘மனதில் ஒருவனை மணாளனாக வடித்து வைத்திருக்க, வேறு ஒருவனை ஏற்பதா’ என்று கோபம் கொள்ளும் அதிரூபசுந்தரி ‘வில்லாளனின் மகன் அபிமன்யுவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்ய மாட்டேன்’ எனத் தன் தந்தையிடம் சபதமிடுகிறாள்!

கண்ணீரும்,கோபமுமாய் பெண் குரலில் ‘சுந்தரி’ வேடமிட்டவன் பேசிய வசனங்கள் சபையோரை ‘சபாஷ்’ போட வைத்தது.

தன் தந்தை தனக்குத் திருமணம் செய்யவிருக்கும் செய்தியை ஓலையில் வடித்து வாயு பகவானிடம் சமர்ப்பிக்கிறாள் சுந்தரி! அபிமன்யுவிடம் சேர்த்து விடச் சொல்லி!

அடுத்து காட்சி மாறுகிறது!

காட்டு வெளியைக் கொண்டப் பிண்ணனியில்... தன் கரங்களில் வில்லையும்,அம்பையும் ஏந்தியபடி.. தூரத்தே தெரியும் மான் ஒன்றைக் குறி வைத்து பூனை போல் பம்மி வருகிறான் தனஞ்செயனின் வாரிசு வீர அபிமன்யு.

சந்திரனின் அம்சத்துடன் இவ்வையகத்தின் சகல சர்வ லட்சணத்தையும் முக வடிவாய்ப் பெற்றிருக்கும் பார்த்திபனின் மகன்.. அழகனாய் இல்லாதிருந்தால் தான் ஆச்சரியம் கொள்ள வேண்டும்!

திண்ணிய மார்பும்,திரண்ட தோள்களுமாய் காளையை ஒத்திருந்த அவனது தோற்றம்.. காண்போர் அனைவரையும் நிச்சயம் மயங்கச் செய்யும்!

அவன் வைத்த குறிக்குத் தப்பாது.. மான் மரித்துப் போக.. ஆர்ப்பாட்டமான சிரிப்புடன் வீரர்களாகியத் தன் நண்பர்கள் புடை சூழ.. காட்டை வலம் வந்தவனிடம் ஓலையை நீட்டுகிறார் வாயு பகவான்!

ஓலை சொன்ன செய்தியில் ஆக்ரோஷமடைபவன்.. விழி சிவக்கத் தன் அன்னையைத் நாடிச் செல்கிறான்.

பல்குனனின் மனைவியும்,அபிமன்யுவின் அன்னையுமாகிய சுபத்திரை மகன் கூறிய செய்து கேட்டுக் கொதித்துப் போய் வடமதுரை நோக்கிச் செல்கிறாள் தன் அண்ணனாகிய நாராயணனைத் தேடி!

தங்கையின் காலடி கேட்டு பொய்த் தூக்கத்தோடு கண்களை மூடிக் கொள்ளும் வாசுதேவன் கடைசி வரை அவள் புறம் திரும்பவேயில்லை!

வந்த காரியம் முடியாமலே வீடு திரும்பிய சுபத்திரை நடந்ததை புதல்வனிடம் கூற.. மாமனின் கபட நாடகத்தைப் புரிந்து கொண்டவன்.. அநியாயத்திற்குக் கோபம் கொண்டு உடனே புறப்படுகிறான்.. துவாரகபுரியை நோக்கி!

‘சென்று வருவேன்! வென்று வருவேன்’ – தன் இரும்புக் கரங்களைத் தூக்கிக் காட்டிக் கூச்சலிட்டவனைக் கண்டு கீழே அமர்ந்திருந்தோர் விசில் அடிக்கத் தொடங்கினர்.

தடைகளின்றிக் காதல் கை கூடி விடுமா என்ன?

அடுத்த காட்சி ஆற்றங்கரையும், அந்தணரும்!

தன் மங்கையைத் தேடி துவாரகைக்குச் செல்லும் வழியில் ஓர் ஆற்றங்கரையையும், அதில் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கும் அந்தணரையும் காண்கிறான் அபிமன்யு!

பதறியடித்துக் கொண்டு.. அவரைக் காப்பாற்ற வேண்டி ஆற்றில் குதிப்பவன்.. பாதியிலேயே மறைந்து விட்ட அந்தணரைக் கண்டு வியந்து.. அவரைத் தொலைத்து விட்டதாக எண்ணித் தவிக்கிறான்!

வந்தவன்.. அந்தணன் உருவம் கொண்ட நந்த கோபாலன்! மருமகனை திசைத் திருப்பும் நோக்கத்தில் வெற்றி கண்டவன்! பின்பு போகிறதெனத் தன் வழி செல்கிறான் அபிமன்யு!

அடுத்ததாக வருகிறான்.. வல்லரக்கன்! முட்டிக் கொள்கிறது இருவருக்கும்!

வல்லரக்கனை வெல்ல முடியாமல் தவிக்கும் அபிமன்யு காளிகாதேவியைத் துணைக்கழைக்கிறான்.

அவள் அளிக்கும் மந்திர வாள் வல்லரக்கனின் தலையை வாங்கி விட.. வெற்றிக் களிப்பில் மூச்சு வாங்க.. இடுப்பில் கை வைத்துக் கொண்டு இறுமாப்புடன் நிற்கிறான்.

அவையோர் ஒரு நிலையிலேயே இல்லை! உயரமும்,அகலமுமாய் அங்கவஸ்திரத்தில் வெற்று மார்புடன் நிற்கும் அழகனின் மீது மையல் கொண்டு விட்டார்கள் போலும்!

அடுத்ததாக வருகிறான் கட கட கட கடோத்கஜன்! பீமன் பெற்ற பராக்கிரமன்! அவன் தாய்மாமனான வல்லரக்கனுக்குக் கஞ்சி எடுத்துக் கொண்டு!

மாய்ந்து விட்ட மாமனைக் கண்டு வெகுண்டு ‘யாரடா அது என் மாமனைக் கொன்றது’ என அபிமன்யுவிடம் கேள்வி கேட்கிறான்.

‘அவன் வடக்கே போய் விட்டான்’ – என்ற அபிமன்யுவின் பதிலைக் கேட்டு வடதிசையை நோக்குகிறான். மீண்டும் ‘அவன் தெற்கே போய் விட்டான்’ என்றவனை முறைத்து தென் திசையில் நோக்குகிறான்.

நான்கு திசைகளிலும் எவனையும் காணாது குழம்பி நிற்பவனிடம்.. தோள் குலுங்கச் சிரித்து..

‘கொன்றவன் நான் தானடா’ – எனக் கர்வமாய்க் கொக்கரிக்கிறான் அபிமன்யு.

அதன் பின்பு அடித்துக் கொள்கிறார்கள் கடோத்கஜனும்,அபிமன்யுவும்!

வெற்றி,தோல்வி காணாது சரிசமமாகச் சண்டையிட்டுக் கொண்ட இருவரும் ஒருவரைப் பற்றியொருவர் அறிந்து கொள்ள முயலும் போது தான் தெரிகிறது.. இருவரும் அண்ணன்,தம்பியென்பது! பிறகென்ன! துணை கிடைத்த மகிழ்ச்சியுடன் செல்கிறான் சுந்தரியைத் தூக்க!

அடுத்தபடியாக வருகிறான் அரவான்!

வழி விடாது நின்றபடி.. மலை மீது ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு.. ‘வல்லமை இருந்தால் சண்டைக்கு வா.. இல்லையெனில் காலுக்கடியில் செல்’ என்கிறான்.

அவனுடனும் சண்டையிட்டுக் கடைசியில் அவனும் தமையன் என்றறிந்து கொண்டு அவனையும் கூட்டிச் செல்கிறான்!

அடுத்ததாக தொந்திசட்டி!

‘என் எடைக்கு எடைப் பொருள் கொடுத்து விட்டு முன்னே செல்’ என்றவனிடமும் சண்டையிட்டு.. அவனும் தன் தமையன் என்று தெரிந்து கொண்டு.. அவனையும் இழுத்துச் செல்கிறான்.

கடைசியில்.. துவாரகையை அடைந்து அஸ்தினாபுரத்து வீரர்களுடனும்,துரியோதனுடனும் சண்டையிட்டு.. பந்தக் காலிலேயே அனைவரையும் கட்டி வைத்து விட்டு.. தானும் கட்டுண்டது போல் நடித்த கமலக் கண்ணனை கண்டு கொள்ளாது.. மணமேடையில் வெற்றி கரமாக சுந்தரியுடன் அமர்கிறான் அபிமன்யு!

பால்ய பருவத்தில்.. பாட சாலையில்.. ஆற்றுக்குள் தவறி விழுந்தத் தன் கணையாழியைக் கண்டுபிடித்துக் கொடுத்து.. அதைத் தன் விரலில் இட்டு.. ‘இன்று முதல் நீயே என் மனைவி’ எனக் கந்தர்வ மணம் புரிந்த அழகன்.. இன்றுத் தடைகள் பல தாண்டி.. ஊர் மக்கள் முன்பு மீண்டுமொரு முறைத் தன் கரம் பற்ற வந்ததை எண்ணிக் கர்வம் கொண்டு.. விழி கொள்ளாக் காதலுடன்.. அவன் புறம் தன் சிரம் தாழ்த்துகிறாள் சுந்தரி.. தன் கழுத்தில் மாலையிடப் போகும் அவன் கைகளுக்காக!

மங்கல வாக்கியம் முழங்க.. அபிமன்யு தன் பொற் கரங்களால் சுந்தரியின் கழுத்தில் மாலையிட.. அவன் புகழ் பாடும் பாடலோடு முடிகிறது நாடகம்!

கொடுத்த காசுக்கு அதிகமாகவே உண்டு விட்டதை போல்.. அந்த நாடகம் கொடுத்தத் திருப்தியில்.. உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அனைவரும் எழுந்து நின்று கைத் தட்டினர்.

பத்து பேர் கொண்ட ‘மறுமலர்ச்சி’ குழுவைச் சேர்ந்த அனைவரும் மேடையில் நின்று சபையோரிடம் நன்றி தெரிவித்து விட்டு.. இனி வரும் காலத்தில் இந்தக் கலையை வளர்க்கவிருக்கும் தங்களைப் போன்றோரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் சபை காலியானது.

அபிமன்யு வேடத்தில் அச்சுபிசகாமல் மேடையில் நடித்த ‘அவன்’ மேடைக்குப் பின்புறமிருந்த அறையில்.. கண்ணாடி முன்பு அமர்ந்தபடி தன் முகத்திலிருந்த மேக்கப்பைக் கலைத்துக் கொண்டிருந்தான்.

சிரித்த முகம் தான் ஆனாலும்.. தற்போது அதீத இறுக்கத்தைச் சுமந்து கொண்டிருந்தது.

“டேய் வசந்த்..” – என்ற நண்பனின் குரலுக்குத் திரும்பியவனிடம்..

“சாருமதி உன்னைப் பார்க்க வந்திருக்காங்க” என்றான் அவன்.

ஏற்கனவே இறுக்கத்துடன் இருந்த அவனது முகம்.. மேலும் கற்பாறையாய் மாறி விட ஒரு நொடி செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு யோசித்தவன்.. அடுத்த நொடி.. கடகடவென முகம் துடைத்து, உடை மாற்றி விட்டு அவளைத் தேடிச் சென்றான்.

அரங்கத்தின் வாசலிலிருந்த மரத்தடியில் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தவளின் அருகே சென்று நின்றான்.

அவன் வந்ததும்.. தானாகவே ஒரு அடி பின்னால் நகர்ந்தவள்.. அருகே நின்றிருந்தத் தன் சைக்கிளின் ஹாண்டில் பார்-ஐப் பற்றிக் கொண்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

மஸ்டர்ட் நிறத்தில், சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களிட்ட சுடிதார் அணிந்திருந்தாள். வெள்ளை நிறத் துப்பட்டா! ரெட்டை ஜடையுடனிருந்தவளின் காதுகளில் அதே நிற ப்ளாஸ்டிக் தோடுகள்! கேட்டால்.. ஃபேஷன் என்பாள்! வட்டமாய் மரூன் நிறப் பொட்டு! இருபுருவ மத்தியில் அல்லாது.. சற்று மேல் ஏறியிருந்தது. மூக்கின் இடது புறத்தில் ஒரு மூக்குத்தி! அது மட்டும் வைரமென்று அவனுக்குத் தெரியும்!

அடர்த்தியாய்த் தீட்டப்பட்டிருந்த மைவிழிகள் இரண்டும் அவன் முகம் காண முயலாமல்.. அலைபாய்ந்த வண்ணமிருப்பதை அவனால் உணர முடிந்தது.

தன் கூரிய கண்களால் அவளைக் கூறு போட நினைத்து... அழுத்தமாய் நோக்கியவன்.. அடுக்கடுக்காய் வரிசை கட்டி நின்ற எண்ண ஓட்டங்களை அணை போட்டுத் தடுத்து..

“என்ன?” என்றான் அவளிடம்.

பதிலின்றி உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றவளை எரிச்சலுடன் நோக்கி..

“ஹாண்டில் பார்-ஐ பிடிச்சுக்கிட்டு ஹாய்-ஆ நிக்கத் தான் என்னைத் தேடி வந்தியா?” – பாயத் தொடங்கியவனிடம் அவசரமாக..

“மாமாவைப் பார்க்க ஒரு தடவை நீங்க ஹாஸ்பிடலுக்கு வாங்க ப்ளீஸ்” – என்றாள் அவள்.

“எதுக்கு?”

“என்ன தான் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாலும், மாமா முகம் தெளிவாவே இல்ல! ஒரு வேளை.. உங்களை நினைச்சு....” - அவள் முடிப்பதற்குள் குறுக்கே புகுந்தவன்..

“அவர் என்னை நினைச்சுக் கவலை பட்ற ஆளெல்லாம் கிடையாது! அவரோட அன்பு,அக்கறைக்குப் பாத்திரமான ஒரே ஜீவன்.. இந்த உலகத்துல நீ மட்டும் தான்! உன் முகத்தை நீ தெளிவா வை! தன்னாலயே அவரும் தெளிஞ்சிடுவார்” – அசால்ட்டாகப் பதில் கூற.. இப்போது அவள் எரிச்சலுற்றாள்.

“உங்களுக்கு அப்படியென்ன கோபம் அவர் மேல?, பெத்தத் தகப்பனை எதிர்த்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளிய வர்ற அளவுக்கு?, அத்தையில்லாம, உங்களை சின்ன வயசுல இருந்து எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தார்?, இது தான் நீங்க அவருக்கு செய்யுற கைம்மாறா?”

“ஏய்.. மனசாட்சியைத் தொட்டு சொல்லு! கஷ்டப்பட்டு அவர் வளர்த்தது என்னையா இல்ல உன்னையா?”

“அப்டின்னா.. அப்டின்னா.. நான் தான் பிரச்சனையா உங்களுக்கு?, அப்போ வீட்டை விட்டு வெளிய போக வேண்டியது நான் தான். நீங்க இல்ல”

“ஆமா! நீ தான் என் பெரிய பிரச்சனை! விடாம துரத்தியடிக்கிற ஏழரைச் சனியைக் கூட ஈசியா சமாளிச்சுடுவேன், ஆனா.. உன் விஷயத்துல.. ஒன்னும்.. முடியல”

-காலர் பட்டனைத் தொடர்ந்த அடுத்த பட்டனை இடது கையால் பட்டெனக் கழட்டியபடி.. எங்கோ பார்வையை பதித்துக் கொண்டு கோபமும்,எரிச்சலுமாய் கூறியவனை மூச்சு வாங்க மிதமிஞ்சிய ஆத்திரத்துடன் நோக்கினாள் அவள்.

நேர்ப்பார்வையாய் தன்னை நோக்கியவளின் அருகே நெருங்கி.. ஹாண்டில் பார்-இன் மீதிருந்த அவள் கையின் மீது தன் கரத்தை வைத்தான்.

“வந்தப்போ கண்ணாலயே மண்ணைத் தோண்டிட்டு இருந்த?, இப்போ மட்டும் ஏன் நிமிர்ந்து பார்க்குற?” – காதருகே அடிக்குரலில் சீறியவனிடம்..

“மாமாவைக் கஷ்டப்படுத்தாம மரியாதையா... திரும்ப வீட்டுக்கே வந்துடுங்க” – குரல் நடுங்க அவள்.

“உன் கையைத் தொட்டிருக்கேன். நீ ஒன்னுமே சொல்லல?”

“பேச்சை மாத்தாதீங்க”

“துப்பட்டாவை இப்படி குறுக்கால கட்டாதன்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”

“என்ன?? சம்மந்தமில்லாம பேசி என்னைக் கோபப்படுத்தி பார்க்குறீங்களா?”

“கோபப் படு! அப்போ தான் எனக்கு உன்னை ரொம்ப சைட் அடிக்கத் தோணும்”

“...............”

“எதுக்குடி கண்ணுல தண்ணி தேங்குது?, யாருக்காக அழற?, உன் மாமனுக்காகவா?, எனக்காகவா? இல்ல.. உன் மாமன் பார்த்து வைச்சிருக்கிற அருமை மாப்பிள்ளைக்காகவா?”

“இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு?”

“தேவையில்லாத பேச்சா?, ஹ்ம்ம்ம்! இப்போதைக்கு என்னோடப் பெரிய தேவையே நீ தான்! அது தெரியுமா உனக்கு? ராத்தூக்கம் பறி போய் நான் ராட்சசன் மாதிரி சுத்திட்டிருக்கக் காரணமே நீ தான்!

“.............”

“வீட்டுக்குத் தான?, வர்றேன்! கண்டிப்பா வர்றேன்! அதுக்கு முன்னாடி உன் மாமன் கிட்ட சொல்லி உன் கல்யாண ஏற்பாட்டை நிறுத்து. அப்புறம் வர்றேன்”

“............”

“முடியாது! உன்னால நிச்சயம் முடியாது! சொந்தப் பொண்ணா நினைச்சு வளர்த்தத் தாய் மாமன் மனசு கோணுற விசயத்தை உன்னால என்னைக்கும் செய்ய முடியாது! போதாததுக்கு மனுஷன் ஹார்ட்-அட்டாக் வந்து படுக்கைல விழுந்துட்டார்! இனி அவர் கௌரவத்தைக் காப்பாத்தி.. அவரை சந்தோசப்படுத்துறதைத் தான் முதல் வேலையா வைச்சிருப்ப! ஆனா.. நான் அப்டியில்ல! மனசாட்சியைக் கொன்னுட்டு.. எந்திரமா வாழ என்னால முடியாது”

“..............”

“மறுபடி மறுபடி எதுக்கு அழற? வளர்த்த பாசம் கண்ணீரா மாறி.. கன்னத்துல அருவியா கொட்டுதா?”

“............”

“இப்பவும் ஒன்னும் பிரச்சனையில்ல! இப்டியே என் கையைப் பிடிச்சுக்கிட்டு.. என் கூட வந்துடு! எங்கயாவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்! மாமனாவது மண்ணாங்கட்டியாவதுன்னு” – தன் பிடியை இறுக்கித் தீவிரமான குரலில் புருவம் சுருங்கக் கூறியவனிடம்..

“என்னாலயும் மனசாட்சியைக் கொன்னுட்டு வாழ முடியாது” – என்றாள் அவள்.

“அப்போ என்னைத் தேடி வராத! உன் முகத்தை என் கிட்டக் காட்டாத! என்னை ஏங்க வைக்காத! உயிரோட நிற்க வைச்சு எரிக்கிற மாதிரி.... தகதகன்னு தலையிலிருந்து கால் வரைக்கும் மொத்தமா எரியுது எனக்கு... ஒவ்வொரு தடவையும் உன்னைப் பார்க்கும் போது”

“...................”

“என் கண்ணு முன்னாடியே வேற ஒருத்தன் பக்கத்துல உன்னை நிக்க வைச்சு அழகு பார்க்குறார் அந்த மனுஷன்! சொந்த மகன் மேல இவ்ளோ வெறுப்பா?, அப்டி என்னடி பெரிய ஆளு நீ?, என்னைத் தவிர உன்னைக் கட்டிக்க எவனுக்குத் தகுதியிருக்கு?”

“இப்போ வந்து பெருசா குதிக்கிறீங்களே! நிச்சயதார்த்த ஏற்பாடெல்லாம் நடக்கும் போது.. வேடிக்கை தான பார்த்தீங்க?, இதையெல்லாம் அப்ப சொல்ல வேண்டியது தான?” – பொறுக்கமாட்டாமல் வார்த்தைகள் வெளி வந்து விட்டது அவளுக்கு.

“ஓஓ!! நான் சொன்னாத் தான் தெரியனுமா?, ஏன், என்னைப் பார்த்தா ஆம்பளையாத் தெரியலயா உனக்கும், உன் மாமனுக்கும்?, ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், உங்களோட எலிஜிபிள் மாப்பிள்ளைங்க லிஸ்ட்ல என் பேர் இல்லவே இல்ல! போட்டியில கலந்துக்கிட்டா தான ஜெயிக்கிறதும், தோற்கிறதும்! உங்களுக்குத் தான் நான் ஒரு ஆளே கிடையாதே!”

“முட்டாள்த்தனமா வாக்குவாதம் பண்றீங்க நீங்க?”

“வேற என்ன செய்யனும்?, ‘ஷேமமா இரு’-ன்னு உன் தலையில அச்சதையைத் தூவனுமா?”

“முடிவா என்ன தான் சொல்றீங்க?, வீட்டுக்கு வருவீங்களா, மாட்டீங்களா?”

“இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது”

“மாமா பேச்சை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்”

“உனக்கும்,எனக்கும் இடைல அந்தாளு ஏன் டி வர்றான்?”

“அவன்,இவன்னு சொல்லாதீங்க! எனக்கு ரொம்பக் கோபம் வரும்”

“சரி அவர்”

“..........”

“இப்போ சொல்லு! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”

“மாமாவோட விருப்பம் தான் என் விருப்பமும்”

“அவரை நான் காதலிக்கும் போது, அவர் விருப்பத்தைக் கேட்டுக்கிறேன்! இப்போ நீ சொல்லு..”

அவன் வார்த்தைகளினால் களுக்கெனத் தோன்றிய சிரிப்பை அடக்கி.. வேறு புறம் நோக்கியவளைக் கண்டுத் தானும் புன்னகை கொண்டு.. மேலும் அவளை நெருங்கி நின்று...

“அன்னிக்கு உன்னைக் கட்டிப் பிடிச்சிருக்கேன்! முத்தம் கொடுத்திருக்கேன்! இப்போ கைப் பிடிச்சுப் பக்கத்துல நிக்குறேன்! இது... எல்லாத்துக்கும் என் இஷ்டப்படி தான் நான் அர்த்தம் பண்ணிப்பேன்” – அடிக்குரலில் கூறியவனைக் கண்டு..

உடல் முழுதும் கன்றிச் சிவக்க.. நிமிடத்தில் சுருங்கிச் சுண்டிப் போன முகத்தை அவனிடம் காட்டாது.. மறுபுறம் திரும்ப முயன்றவளைத் தடுத்து...

“இந்தக் கையை நான் கடைசி வரை விடப் போறதில்ல! அதனால.. எங்கப்பன் கிட்டயும், அந்த மாப்பிள்ளைக் கிட்டயும் போய்ச் சொல்லு! என் மாமன் மகனுக்குத் தான் என் மேல முதல் உரிமைன்னு” – எனக் கூறி விட்டு... அவளை அணைத்தவாறு நின்று சைக்கிளின் ஸ்டாண்டை நீக்கி விட்டு.. விக்கித்துப் போய் நின்றவளைப் பார்த்தபடியே நகர்ந்து விட்டான்.