அத்தியாயம் - 2
மறுபடி ஒரு கண்ணதாசன் பாடல்! ஆனா இந்த முறை இளையராஜா இல்ல! எம்.எஸ்.வி! இந்தப் பாட்டைத் தேர்ந்தேடுக்க இரண்டே காரணங்கள் தான்! ஒன்று எஸ்.பி.பி மற்றொன்று கமலஹாசன்! இளையராஜாவின் மீது எத்தனை மோகமோ.. அதே அளவு மயக்கம் எனக்கு எஸ்.பி.பியிடமும் உண்டு! ஒரு நாள் இல்ல, ஒரு நாள் நிச்சயம் எஸ்.பி.பியைக் கடத்திட்டு வந்து.. நாள் முழுக்கப் பாட வைச்சு.. பக்கத்துலயே உட்கார்ந்து கேட்கப் போறேன்!!
எடுத்ததும் எஸ்.பி.பி சொல்ற ‘ஓஹோ’-விலேயே நாம ஃப்ளாட்! பல்லவியில்... ‘come on say it once again..’ –ன்னு தொடங்குற மனுஷன் குரல்ல வர்ற அடுத்தடுத்த வாக்கியங்கள் ஒவ்வொன்னும்... கொடுக்குற பாவனைக்காகவே... ஏழேழு ஜென்மங்களுக்கும் மனுஷப்பிறவியெடுக்கலாம்!
அத்தோட நிறுத்த முடியுமா?, தாடியும்,மீசையுமாக அடர்ந்தத் தலைமுடியும்,காதல் கொட்டும் காந்தக் கண்களுமாய்.. எஸ்.பி.பியின் குரலைத் தனதாக்கிக் கொண்டு.. சந்தம் பாடும் கமலஹாசனை வர்ணிக்க.. பத்து விரல்கள் போதாது!
‘கவிதை உலகம் கெஞ்சும்..
உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்..
கொடுத்த சந்தங்களில்.. என் மனதை நீ அறிய..
நான் உரைத்தேன்...’
கை தேர்ந்த கவிஞனாகவே உருமாறி.. தான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் உள் வாங்கி.. அதை விழி வழி வெளிக் கொணர்ந்து.. திரையில் தெரியும் தன் பிம்பத்தோடு நம்மைக் காதல் கொள்ள வைக்கும் கமல்ஹாசனுக்கு.. ஒரு கூடை முத்தங்களையும் உடனடியாகப் பொட்டலம் கட்டுகிறேன்!
1981, கோபாலபுரம்,மெட்ராஸ்.
தெருவோரமாய் அமைந்திருந்த அந்த டீக்கடையில் நான்கு பேர் அமருமளவிற்கு நீளமாய் பெஞ்சு ஒன்று போடப்பட்டிருந்தாலும்... அவ்விருக்கையை அமரிக்கையுடன் மறுத்து விட்டு.. அருகிலிருந்த குட்டிச் சுவரில் ஆர்ப்பாட்டமாய் ஐக்கியமாயிருந்தனர் அந்த ஐந்து இளைஞர்களும்.
கட்டவிழ்ந்தக் காளைகளெனப் பெயர் வாங்கி.. தங்களது வீட்டாரினால் தண்ணீர் தெளித்து விடப்பட்டிருந்த ஐந்தறிவு ஜீவிகள் ஐவரும்!
ஒரே தட்டில் உண்டு, ஒரு படுக்கையில் உருண்டு, ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டுப் பறவைகள்! மூன்றாமாண்டு பட்டப்படிப்பில் இருப்பவர்கள்! ஆனால் படிக்கும் படிப்புக்கும், நடந்து கொள்ளும் விதத்துக்கும் சற்றும் சம்பந்தமிருக்காது.
‘டீசண்ஸி’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அந்த டீக்கடை வாசலைக் கூட்டிப் பெருக்கும் ரத்தினத்திடம் கூடக் காணலாம்! ஆனால் பட்டறிவு பெற்று வளர்ந்து நிற்கும் இந்த சிற்றறிவு ஜீவிகளிடம்.. நாகரீகம்,பண்பாடு என்பதெல்லாம் மருந்துக்கும் கூடக் கிடையாது!
சிரிப்பும்,கும்மாளமுமாய் அத்தெருவையே கதிகலங்கச் செய்து கொண்டிருந்த ஐவரையும் கண்டு.. டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த பெருசுகள் சிலர் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.
“என்ன பெருசு??, வாய்லயே டைப் அடிச்சிட்டிருக்க?” – கூட்டத்தில் ஒருவனனான ஜெயந்தன்.. அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரை நோக்கிச் சத்தமிட்டான்.
“அதான?, உன் மக லலிதா கிட்ட சொன்னேனா.. பக்கம்,பக்கமா டைப் அடிச்சுத் தருவாளே!” – அசோகன்.
“புரியலயா பெருசு?, டெய்லி சாயந்தரம் 4 மணிக்கு டைப் ரைட்டிங் க்ளாஸ்க்குப் போற உன் மக லலிதாவுக்கு சார் தான் பாடி-கார்ட் வேலை பார்க்குறாரு”
விளக்கமாய் சொன்ன வசந்தின் பதிலைக் கேட்டு ஐவரும் ஹாஹா,ஹோஹோவென ஒருவரையொருவரின் தோளைத் தட்டிச் சத்தமாய்ச் சிரிக்க...
“சண்டாளப் பாவிங்களா! உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் டா” – கோபமாய்க் கூறியபடிப் பேப்பரை பெஞ்சில் எறிந்து விட்டு நகர்ந்தவரிடம்..
“அதுக்கு முன்னாடி நான் உன் மக லலிதாவை ஒரு வழி பண்ணிடுவேன்ய்யா தொங்கு மீச” – எனக் கொக்கரித்த அசோகனைக் கண்டு மறுபடி ஒரு சிரிப்பலை ஐவரிடமும்.
கண்டும் காணாமல் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டீக்கடைக்காரர் இவர்களது வாய்ச்சவடாலைத் தற்காலிமாக நிறுத்தும் பொருட்டுத் திருகுகிறார் தன் வானொலிப் பெட்டியை.
‘வணக்கம் நேயர்களே.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், தமிழ் சேவை 2, நேரம் 8 மணி 1 நிமிடம்”
ஓங்கி ஒலிக்கிறது மதுரக் குரல் மன்னன் கே.எஸ்.ராஜாவின் குரல்! இலங்கை இழந்த மிகப் பெரிய பொக்கிஷம்! இவர் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் விதமும், அதில் ஒலித்த பாடல்களும் மக்கள் மனதில் என்றும் நீங்காதவை! விரலால் இடது காதை அடைத்துக் கொண்டு பேசுவது இவரது ஸ்டைல் எனவும் இவர் பணியாற்றிய காலத்தில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்ததாகவும் கூறப்படுகிறது! இவர் மட்டுமல்ல ராஜேஸ்வரி ஷண்முகம்,பி.ஹெச்.அப்துல்ஹமீது போன்றவர்களின் தமிழ் உச்சரிப்பைத் திரும்பப் பெற நாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ!
‘டண்டைன்! அழைக்கிறது வெள்ளவத்தை ஆராதனா கோல்டுஹவுஸ்,
வாங்கோண்ணா... அட வாங்கோண்ணா..
22 கேரட் தங்கத்தில் அன்னக்கிளி வளையல்களுக்கும், பல்வேறு டிசைன் தங்க நகைகளுக்கும் ஆராதனா கோல்டுஹவுஸ்... 32, டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை, வெள்ளவத்தை. தொலைபேசி 87045.’
விளம்பரத்திலும் தொடர்கிறது அவர் குரல்.
‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், தமிழ் சேவை 2.
பொங்கும் பூம்புனல்......
முத்தையன் கட்டு ராகினி,சதானந்தம், ஜமுனா, இந்து, குமாரி சுபா இவர்களுக்காக நாம் தருவது...’
-என்று அவர் முடித்ததும்... ஒலிக்கிறது டி.ராஜேந்திரின் இசையும், மலேசியா வாசுதேவன் குரலும்!
“கூடையில கருவாடு... கூந்தலில பூக்காடு....”
போதுமே நம் கழிசடைகளுக்கு! ‘ஓஓஓஓஓஓ’ என்று கூவிக் குட்டிச்சுவரிலிருந்துக் குதித்துக் கீழிறங்கி.. தங்கள் போக்கில் பாடியபடி ஆடத் துவங்கி விட்டனர். தலையில் அடித்துக் கொண்ட டீக்கடைக்காரரும் “ஹூம்” என மறுபுறம் திரும்பிக் கொண்டார்.
“என்னுயிர் ரோசா.. எங்கடி போற..
மாமலர் வண்டு.. வாடுது இங்கு..
அம்மாளே... அம்மாளே...”
கையிலிருந்த நோட்டில் தாளம் போட்டபடி பாடிய வசந்தின் குரல் முன்னே ஒலித்ததும், அவனைத் தொடர்ந்து நால்வரும் நடுவே நின்றவனைச் சுற்றி வந்தபடி..
“பொழுதோட கோழி கூவுற வேளை...
ராசாதி ராசன்.. வாரான் டி முன்னே..” – பாடவும், அந்த இடமே அவர்களின் தயவால் களைகட்டத் துவங்கியது.
“ரொம்பப் புலம்பாதடா வசந்த்!, அதோ வர்றா பாரு.. உன் ஆச ரோசா” – ஆட்டத்தோடு ஆட்டமாக விஜயன் என்பவன் கைக் காட்டிய திசையைத் தானும் நோக்கினான் வசந்த்.
அதுவரை முழுச் சிரிப்புடன் நண்பர்களோடு கொட்டமடித்துக் கொண்டிருந்தவனுக்கு.. பத்தடி தூரத்தில் பள்ளிச் சீருடையில் குனிந்தத் தலை நிமிராமல் வியர்த்து வழிய நடந்து வந்தவளைக் கண்டு.. விரிந்த சிரிப்பு உதட்டோடு உறைய.. இதழோடு சேர்த்து முகத்தையும் சுருக்கிக் கொண்டு.. “ம்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்தபடி சட்டையை நீவி விட்டுக் கொண்டான்.
“என்னடா?, ரோஜாவைப் பார்த்த ராஜாவா நெஞ்சை நிமிர்த்திட்டு நிற்ப-ன்னு பார்த்தா.. பம்முற?”
“ப்ச், அது என்ன ரோஜா?. எனக்கு ரோஜா-லாம் பிடிக்காது! மல்லிப்பூ தான் இஷ்டம்”
“ஓஓஓஓஓஓஓஓஓஓ.. நீ அப்பிடி வர்றியா??????” – ஒருவிதமாய்க் கூறிக் கண்ணடித்த அசோக்கின் தலையில் ஒரு இடியை இறக்கி விட்டு மீண்டும் சுவர் மீது ஏறி அமர்ந்தான் வசந்த்.
“உன் சிட்டு தலைல இருக்கிற மல்லிப்பூவோட அளவைப் பாரு! வழியை மறிச்சு.. வாசம் பிடிக்கிறதை விட்டுட்டு.. அமைதியா உட்கார்ந்துட்ட! போடா!”
‘ம்க்கும்! வாசம் பிடிச்சதுக்குத் தான் வாங்குனேனே கன்னத்துலயே! என் அப்பன் கையால!’ – மனதுக்குள் எண்ணிக் கொண்டவன் அப்போதும் கூட எரிவதாய்த் தோன்றிய கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.
எரிச்சலும்,கோபமாய் பல்லைக் கடித்துக் கொண்டு அவளை நோக்கியவனுக்கு.. ஓரக்கண்ணால் தன்னை அளந்தபடி பம்மிக் கொண்டு வந்தவளைக் கண்டு ஆத்திரம் அளவு தாண்டியது.
அல்ட்ரா-மாடர்ன் முகத்துலயும் அப்பாவித்தனத்தைக் கொண்டு வர இவளால மட்டும் தான் முடியும்!
ஆம்! அல்ட்ரா-மாடர்ன் முகம் தான்! நேர்வகிடுடனான.. கற்றை முடிகள் இரண்டு வில்லாய் வளைந்து.. நெற்றியைத் தழுவி.. அவளது கண்களின் ஓரத்தைத் தொட்டு நின்றது. நீளமான மூக்கு! வடிவான இதழ்கள் என.. இளமையின் உச்சமான பதினேழுகளின் இறுதியில் இருந்தவள்.. அதற்கே உண்டான செழுமையைத் தன் கன்னங்கள் இரண்டிலும் பருக்களாய்ப் பெற்றிருந்தாள். ஒல்லியாய்,உயரமாயிருந்தவள்.. நடிகை மாதவியின் சாயலை ஒத்திருந்தாள்! அதே பெரிய கண்களுடன்! இப்போது அந்தக் கண்கள் முழுதையும் நிறைத்திருந்தது பீதி!
‘எல்லாம் நடிப்பு! ஏய்.. இரு டி இரு! எங்கப்பனோட சேர்ந்து ஆட்டமா ஆடுற?, இன்னிக்கு உன்னைக் கண் கலங்க வைக்கல, என் பேரு வசந்த் இல்லடி!’
இத்தனை ஆங்காரத்துடன் அவன் ஆக்கிரோஷமாய் சிந்திக்கக் காரணம் ஒரு வாரத்திற்கு முன்பு அவன் செய்து வைத்த காரியமும்.. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவமும் தான்!
குட்டிச் சுவரில் அமர்ந்திருப்பவனைத் தூரத்தில் வரும் போதே கண்டு கொண்டாள் சாருமதி. தினமும் வேறு வழியில் பள்ளி செல்பவள், இன்று விரைவாகப் பள்ளியை அடையும் நோக்கத்துடன் இந்தத் தெருவைத் தேந்தெடுத்திருந்தாள். உண்மையில்.. அவனைக் காணும் வரை அவளது கவலையே வேறு!
அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்காக அவளும்,அவள் தோழிகளும் இயற்றிய பாடலொன்றை இன்று பள்ளியில் அனைவரின் முன்பும் அவள் பாடியாக வேண்டும்.
பொதுவாகவே அவளுக்கு மேடை என்றாலே அலர்ஜி! பயம்! பேச்சு,பாட்டு,நடனப் போட்டிகள் எதிலும் இதுவரை அவள் கலந்து கொண்டதேயில்லை! வசந்துக்கு நேர் எதிர்! அவன் மேடை தான் தனது காதலியெனப் பெருமை பீற்றுபவன்!
அவனைப் போலத் தான் இருந்திருக்கக் கூடாதா என்று புலம்பியபடி வந்தவளுக்கு அவனை இங்கு கண்டது அதிர்ச்சி தான்!
அதிலும் போன வாரம் நடந்த அந்த அகோர (?!) சம்பவத்துக்குப் பிறகு வசந்தை இன்று தான் காண்கிறாள். ஆம்! அகோர சம்பவம் தான்! சாந்தமே உருவான மாமாவின் மறு முகத்தை முதன்முதலாக அவள் நேரில் கண்டது அன்று தான்!
வசந்த்தின் வலது கன்னத்தில் விட்டாரே ஒரு அறை! அவனது செவிப்பறையில் பூகம்பம் வந்து.. காது ஜவ்வு உயிரை விட்டிருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை! அப்படியொரு அடி!
அந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் அவள் மீது தவறென்பது ஒரு சதவீதம் கூடக் கிடையாது! ஆனால்.. ஏனோ அதன் பின்பு அவன்.. அவளைப் பார்க்கும் பார்வையில் ஆத்திரம் தான் அதிகமிருக்கிறது!
இப்போது வானொலியில் வைரமுத்துவின் வார்த்தைகளை உச்சரித்த வண்ணம் கே.ஜே.யேசுதாஸ் தோன்ற.. அவருக்கு பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார் ஜென்சி.
தன்னைக் கடந்து செல்பவளை அழுத்தமாக நோக்கியவன்.. நண்பர்களின் தோளில் தட்டி.. அவளை நோக்கிக் கை காட்டி விட்டு.. விறுவிறுவென அவளருகே ஓடிச் சென்றான்.
“ஏய்.. என்னடா.. பொண்ணை வட்டம் கட்டப் போறானா?” – என்ற ஜெயந்தனிடம் “நம்ம வேலையே அது தான?” என்ற அசோகனும் நண்பனை நெருங்கி விட..
சரியாக அப்போது.. யேசுதாஸ் வேறு.. எக்குத்தப்பான வரிகளுடன் தன் வாயைத் திறக்க... எப்போதும் போல் கூடச் சேர்ந்து பாடத் தொடங்கிய வசந்த், சத்தியமாக அதன் அர்த்தம் உணர்ந்து பாடவில்லை! ஆனால்.. வார்த்தைகளுக்கான பாவனைகளைக் கொடுக்க மட்டும் தவறவில்லை!
‘படுக்கையில் பாம்பு நெளியுது....
தலையணை நூறு கிழியுது..
நீ அணிகிற ஆடையிலொரு நூலென தினம் நான் இருந்திட.. சநிதபமபதநி....
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே...
ஐ லவ் யூ... ஐ லவ் யூ.. ஐ லவ் யூ’
திடீரென அவன் நடுத்தெருவில் வழிமறிப்பான் என்று எதிர்பார்த்திராத சாருமதி அதிர்ந்து போய் தன் பெரிய கண்ணை விரித்து பேந்தப் பேந்த விழித்தபடி நிற்க.. அவளைச் சூழ்ந்து கொண்ட ஐவரும் ஸ்லோ மோஷனில் சுற்றி வர.. கூடுதலாக பாட்டு பாடியபடி வசந்தன்!
இவர்களனைவரையும் வேடிக்கை பார்த்தபடி டீக்கடையில் அமர்ந்திருந்த கூட்டத்தைக் கண்ட சாரு, அங்கிருந்து எவரும் நிச்சயம் உதவிக்கு வரப் போவதில்லை என்றுணர்ந்து.. வசந்த்தை நோக்கிய சமயம், அவனும் நின்று.. கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
பயம் நிரம்பி வழிந்தாலும்.. அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை!
ம்ஹ்ம்! பெர்ஃபாமன்ஸ் இன்னும் கொஞ்சம் இண்டென்சிவ்-ஆ இருக்கனும் போல!
“பாட்டுல லேடீஸ் வாய்ஸ் வர்றது தெரியல??, நீ பாடாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” – அமர்த்தலாய் வசந்த்.
“நா....நா..நான் பாட்றதா..?” – திக்கித் திணறி வெளி வந்தது அவள் குரல்.
“ஹ்ம்!, ஏன் நான் பாடுறேன்ல?, கூடச் சேர்ந்து நீயும் பாடு”
“அ...அ..அது..” – என்றபடிச் சுற்றி நோக்கியவளிடம்..
“நடுத்தெருவா இருக்கேன்னு பார்க்குறியா?, நாங்கல்லாம் தூங்கி எந்திரிக்கிறதே இந்தக் குட்டிச் சுவத்துல தான்! இதுவும் நம்ம வீடு மாதிரி தான்.. அதனால கூச்சப்படாம பாடு”
“..................” – தயங்கித் தவித்துப் போய் நின்றவளிடம்..
“பாடு டி” – என்றவனின் குரல் இப்போது மிரட்டலைத் தேர்ந்தெடுத்திருந்தது.
“.................”
“ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ-ன்னு நான் 3 தடவை பாடுனேன்ல?, நீயும் அதே மாதிரி 3 தடவை பாடு”
“இந்தப் பாட்டுல லேடீஸ் வாய்ஸ் தான் ஐ லவ் யூ சொல்லவே இல்லையே?” – எரிச்சலுடன் முகத்தை வைத்துக் கொண்டு கேள்வி கேட்டவளிடம்..
“அடுத்த தடவை ஜென்சியைப் பார்க்கும் போது ஏன் ஐ லவ் யூ சொல்லலன்னு கேட்டுக்குறேன்! இப்போ.. நீ பாடு..” – அழுத்தமாய்க் கூறினான் அவன்.
ஒரு நொடித் தலையைக் குனிந்து யோசித்து விட்டுப் பின்..
“இல்ல,இல்ல.. என்னால அப்டில்லாம் பாட முடியாது” – எனத் திடமாய் மறுத்து விட்டாள் அவள்.
“ஹேய்ய்... என்னவோ உன்னை நான் ஆசையாப் பாட சொல்லிக் கேட்ட மாதிரி வேகமா முடியாதுன்னு தலையாட்டுற?, இது ரெக்வஸ்ட் இல்ல. ஆர்டர்! பாட்டு பாடுனா தான் நீ இங்க இருந்து நகர முடியும். இல்ல... உன்னைத் தூக்கிட்டுப் போய் அந்தக் குட்டிச்சுவர்ல உட்கார வைச்சு.. நானும் பக்கத்துலயே உட்கார்ந்துப்பேன்! போற,வர்ற எல்லாரும் நம்ம ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்துப் பொறாமை படட்டும்”
“எப்படி இப்படியெல்லாம் பேசுறீங்க?, மாமாக் கிட்ட நல்லா வாங்கிக் கட்டியும் பயமே இல்லாம?, ச்ச, நான் போறேன்”
அதுவரை விளையாட்டுப் போக்கில் அவளுடன் வம்பளந்து கொண்டிருந்தவனை, அவள் தன் வார்த்தைகளால் சொரிந்து விட.. ஆத்திரத்தை அடக்க முடியாமல்.. அவள் கையை இறுகப் பற்றினான் அவன்.
“என்னடி திமிரா?, நான் சொன்னதைச் செய்யாம உன்னால இங்க இருந்து ஒரு அடி கூட நகர முடியாது”
-அவன் தன் கையைப் பற்றியதும், நடுங்கிப் போனவள்..
“கையை விடுங்க, ப்ளீஸ்” – என்று கெஞ்சத் துவங்கிய வேளையில்.. தன் செவியோரம் பதிந்த இரும்புக் கரத்தின் வல்லமையைத் தாங்க இயலாது.. நான்கடி நகர்ந்துத் தடுமாறி நின்றான் வசந்த்.
எவன் டா அவன் ரீதியில் நிமிர்ந்து நோக்கிய ஐவரும் கண்டது.. ருத்ர மூர்த்தியாய் சிவந்த கண்களுடன் நின்ற சாருகேசனைத் தான்.
மாமனைக் கண்டதும் பதறி சாருமதித் தன் கையை வசந்திடமிருந்துப் பறிப்பதற்குள்.. இருவரையும் நோக்கி விட்ட சாருகேசன்.. வந்த கோபத்தில் மகனின் காது ஜவ்வை மீண்டுமொருமுறை கிழித்து வைத்தார்.
அவர் கொடுத்த அடி ஒலித்த சத்தத்தில் டீக்கடைக்காரர் உட்பட அனைவரும் முன்னே வந்து நிற்க.. பெஞ்சில் அமர்ந்திருந்த பெருசுகளுக்கோ ஏகக் குஷி.
அவமானத்தில் முகம் சுண்ட கோபத்துடன் தந்தையை நோக்கியவன்...
“என்ன சும்மா, சும்மா கை நீட்டுறீங்க?, இன்னொரு முறை நான் பார்த்துட்டு நிக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று எகிற..
அணிந்திருந்த ஜிப்பாவைத் தூக்கித் தன் பேண்ட் பெல்ட்டைக் கழட்டியபடி அவனருகே வந்து “என்ன?, என்ன டா பண்ணிடுவ நீ?” – என்று கர்ஜித்தவரிடம்..
பல்லைக் கடித்துக் கொண்டு “திருப்பி அடிப்பேன்” – என்றான் வசந்த்.
“அதுக்கு உனக்குக் கை இருந்தாத் தான டா?” என்றவர்.. தன் கையிலிருந்த பெல்ட்டினால் அவனை விளாசித் தள்ளி விட்டார்.
“எப்டியெப்டி படுக்கைல பாம்பு நெளியுதா, நான் அடிக்கிற அடில உன் உடம்புல என்னல்லாம்.. நெளியப் போகுதுன்னு பாரு டா”
‘மனுஷன் சீன் தொடங்குனதுமே வந்துட்டார் போல!’
வெலவெலத்துப் போய் நின்ற அவன் நண்பர்கள் நால்வரையும் கூட அவர் வெளுக்கத் துவங்க.. அடித்துப் பிடித்துத் தப்பியோடிவர்களை விரட்டியடித்து விட்டு மகன் புறம் திரும்பினார் அவர்.
வாங்கிய அடியில்.. கழுத்தருகே தோல் கிழிந்து ரத்தம் சொட்ட.. அப்போதும் அடங்காமல்.. கொலைவெறியுடன் தன்னை நோக்குபவனைக் கண்டு மீண்டும் பெல்ட்டை ஓங்கியவரை அவசரமாகத் தடுத்தாள் சாருமதி.
“மாமா.. வேண்டாம் மாமா.. வேண்டாம் மாமா” – கெஞ்சிக் கொண்டே அவர் கையைப் பற்றியவரைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற வசந்த்..
“ஏய்ய்ய்ய்ய்ய்.... நீ வராத டி! எனக்கும்,இவருக்கும் இடைல நீ வராத” என்று கர்ஜிக்க..
அவனைக் கண்டு கொள்ளாமல்.. மருமகளிடம் “நீ கிளம்பு டா அம்மா, நான் இவன் கதையை முடிச்சுட்டு வீட்டுக்கு போய்க்கிறேன்” என்றார் சாருகேசன்.
“என்ன என்ன பண்ணுவீங்க?, கொன்னு போட்டுடுவீங்களா?, ஆமா.. உங்களுக்கென்ன மனசுல பெரிய புரூஸ்லின்னு நினைப்பா?, காலம் போன காலத்துல உங்களுக்கு எதுக்கு ஃபைட் சீன் எல்லாம்?” – சட்டை காலரைக் கொண்டு கழுத்தை மறைத்தபடி வசந்த்.
“டேய்... டேய்... டேய்...”
“இந்த பெல்ட்டைப் பிடிச்சு இழுத்து உங்களைக் கீழ தள்ள எனக்கு எவ்ளோ நேரம் ஆயிடும்?”
“முயற்சி பண்ணிப் பாரேன்! நான் வைரம் பாய்ஞ்ச கட்டை டா. அவ்ளோ சீக்கிரம் என்னை சாய்க்க முடியாது”
“அப்ப வாங்க, ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம்”
“வாடா வாடா, குஸ்தி வீரன் டா! உன்னை மாதிரி லுச்சா பசங்க நிறைய பேர் முதுகெலும்பை உடைச்சி வளர்ந்தவன்!” – கையைத் தட்டிக் கொண்டு முன்னே வந்தவரைக் கண்டு முகத்தைச் சுழித்து..
“25 வருஷத்துக்கு முன்னாடி போட்ட குஸ்தியை இன்னும் சொல்லிக் காட்டுறாரு மனுஷன்!, அப்பா... நான் கராத்தேல ப்ளாக் பெல்ட்ப்பா” – என்றான் அவன் மிதமிஞ்சிய எரிச்சலில்.
“மாமா... வீட்டுக்குப் போகலாம் மாமா..” – எங்கே மீண்டும் சண்டையிடுவார்களோ என்ற பயத்தில் இடை புகுந்து விட்ட சாரு!
“ஏய்... நீ இன்னும் போகல?” – எரிச்சலுடன் வசந்த்.
“அவ ஏன் டா போகனும்?”
“சரி, ரெண்டு பேரும் இருங்க! நான் கிளம்புறேன்!”
“ஒத்தைக்கு ஒத்தைப் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டு ஓடிப் போறியாடா?”
“நடுத்தெருன்னு கூட பார்க்காம பெத்தப் பையனை பெல்ட்டால அடிச்சுத் தள்ளிட்டு, சண்டைக்கு வேற கூப்பிட்றீங்களா?, கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா உங்களுக்கு?”
“நடுத்தெருன்னு கூடப் பார்க்காம சொந்த அத்தப் பொண்ணை கையைப் புடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டிருக்கியே?, உனக்கு அசிங்கமா இல்ல?, 3 வேளை சோறும்,பாக்கெட் நிறைய பணமும் இருக்குற திமிரா?, நீ பண்ணதுக்குப் பேரு என்ன தெரியுமா, ஹராஸ்மெண்ட்! தெருப்பொருக்கிங்க பண்ற வேலை!” – ஹை-டெசிபலில் தகப்பன்.
“நீங்க என்னை ரொம்ப இழிவா ட்ரீட் பண்றீங்கப்பா” – பொங்கியெழுந்தபடி மகன்.
“நீ தான் என்னை இப்படிப் பேச வைக்குற”
“அப்டியா?, அப்போ நானும் சொல்லுவேன்!, நீங்க தான் என்னை இப்படியெல்லாம் பண்ண வைக்குறீங்கன்னு”
“டேய்ய்”
“போங்கப்பா! போய்... இவளுக்கு சேவகம் பண்ணுங்க! நான் அவ கையைப் பிடிச்ச இடத்தை ஆராய்ச்சி பண்ணி, காயமே இல்லாத கைக்கு மருந்து போடூவீங்களே! அதைச் செய்ங்க!, ஏன்னா.... நீங்க பிறவி எடுத்ததே இவளுக்காகத் தான?”
-எரிச்சலுடன் கூறியவன் மேலும் அங்கே நிற்காது விறுவிறுவென நகர்ந்து விட்டான்.
இரவு எட்டு மணி வரை வீட்டிற்குச் செல்லாமல்.. நண்பர்களுடன் சுற்றியவன் கடைசியாக வீடு திரும்பிய போது.. அவனுக்காகவே வாசலில் காத்திருந்தார் அன்னம்மா.
அவன் அன்னை இறந்த தினத்திலிருந்து இன்று வரை உடனிருப்பவர்! அன்பு காட்டுவதில் அன்னையை மிஞ்சியவர்! எச்சூழ்நிலையிலும் அவனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு சாருகேசனுடன் சண்டைக்குப் போகும் ஒரே ஜீவன்! ஒவ்வொரு முறையும் தந்தையின் செயலால்.. எங்கேனும் ஓடி விட வேண்டுமென்கிற நோக்கத்துடன் சுற்றி அலைபவனின் எண்ணத்தை மாற்றி.. அந்த வீட்டுக்குள் அவன் தினம் காலடி எடுத்து வைப்பதற்கான ஒரே காரணகர்த்தா!
“ப்ச், நம்ம வீட்டுக்குத் தான் ஏற்கனவே ஒரு கூர்க்கா இருக்காரே! நீ வேற ஏன் அந்த வேலையைப் பார்க்குற?” – திட்டியபடியே வீட்டுக்குள் நுழைந்தவனுக்குப் பதில் சொல்லாமல்.. தலை முதல் கால் வரை அவனை ஆராய்ந்து கொண்டிருந்தவரைக் கண்டுச் சிரித்து..
“என்ன அன்னம்மா?” என்றான்.
வன்மை மிகுந்த வசந்தின் மென்மை வெளிப்படும் ஒரே இடம் அன்னம்மா மட்டும் தான்!
“ரோட்ல வைச்சு ஐயா உங்களை பெல்ட்டால அடிச்சுப் போட்டாருன்னு மதி பாப்பா சொல்லுச்சு கண்ணு!, காயத்துக்கு உடனே மருந்து போடாம விட்டா.. அடி பட்ட இடமெல்லாம் கன்னிப் போய் வலியெடுக்கும் ராசா”
“ப்ச், நான் மதியமே ஆண்டி-பயாட்டிக் எடுத்துக்கிட்டேன் அன்னம்மா”
“அது என்ன கண்றாவி?, நான் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்குறேன், நீங்க இப்படி உட்காருங்க”
“அதெல்லாம் வேண்டாம்!”
“ஷ்,ஷ், நான் ஒரு கூறு கெட்டவ!, நீங்க சாப்பிட்டீங்களா, என்னன்னு கூட கேட்காம.. நசநசன்னு பேசிட்டு நிக்குறேன்”
“ம்ம், ஹோட்டல்ல சாப்பிட்டுத் தான் வர்றேன்”
“வெளிய சாப்பிட்றதெல்லாம் உடம்புக்குக் கெடுதி கண்ணு, இனியொரு முறை இப்பிடி பண்ணாதீங்க”
“பார்த்தியா?, நீயும் என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்ட” – எனக் கூறிச் சிரித்தபடி கழுத்தைத் தடவியவன்.. காயம் கொடுத்த எரிச்சலில் “ஷ்ஷ்” என்று விடப் பதறிப் போனார் அன்னம்.
“இருங்க ராசா, நான் போய் மருந்து கொண்டு வாரேன்”
இருவரது சம்பாஷணையையும் கேட்டபடி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த சாருமதி, வேகமாக ஒரு ட்ரேயில் மருந்தையும்,ஐஸ் கட்டியையும் கொண்டு சென்று நீட்டினாள்.
அவளைக் கண்டதும் முகம் கடுக்க வேறு புறம் நோக்கியவன் “இவளை முதல்ல போகச் சொல்லு அன்னம்மா” என்று பொங்கவும்.. சுணங்கிய முகத்துடன் வாசல் புறம் நகர்ந்து விட்டாள் சாரு.
அப்படியும் பொறுக்காமல்.. “பண்றதையும் பண்ணிட்டு என்ன அக்கறை வேண்டிக் கிடக்குது?” என்று அவன் காய..
வெளி வாசலின் அருகே.. மாடியறைகளுக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்தவள்..
“இதுல என் தப்பு என்ன இருக்குன்னு எனக்கு இப்பவும் தெரியல அன்னம்மா” என்று தானும் பதில் கூறினாள்.
பேச்சோடு பேச்சாக அன்னம்மா ஐஸ் கட்டிகளைக் கையில் எடுத்திருக்க..
“அவ கொண்டு வந்தது எனக்கு வேணாம் அன்னம்மா” என்று பெரிதாக முறுக்கிக் கொண்டான் அவன்.
“வாதாடாம சட்டையைக் கழட்டுங்க ராசா, வேதனைப்பட போறது நீங்க தான?” என்று சமாதானம் செய்து மேல் சட்டையை நீக்கி முதுகில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கத் தொடங்கினார்.
“பெத்த மகன்னு பார்க்காம இப்டி போட்டு அடிச்சிருக்காரே மனுஷன்!” - அன்னம்மா
“எல்லாம் வெளிய உட்கார்ந்திருக்கிற அவரு கண்ணு மணிக்காகத் தான்!”
“எனக்காக இல்ல! உங்களுக்காகத் தான்! நடு ரோட்ல ஒரு பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்தா.. எந்த அப்பா தான் பார்த்துட்டு சும்மாயிருப்பாரு” - சாருமதி
“ஏய்.. என்ன?, என்னவோ நான் போற,வர்ற பொண்ணுங்க கையையெல்லாம் பிடிச்சி இழுக்குற பொருக்கி மாதிரி பேசிட்டிருக்க?”
“அப்போ உங்க மேல தப்பே இல்லன்றீங்களா?”
“தைரியம் இருந்தா.. என் முன்னாடி வந்து பேசுடி, முகத்தைக் காட்டாம வாசல்ல உட்கார்ந்துக்கிட்டு.. வக்கணையா பேசிட்டிருக்க?”
“என்னால உங்களுக்கும்,மாமாவுக்கும் சண்டை வரக் கூடாதுன்னு தான் நான் பேசிட்டிருக்கேன்”
“ரொம்ம்ம்ம்ம்ம்ப லேட்!, நீ பத்து வயசுல இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கும் போதே, இந்த யுத்தத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுட்ட”
“நான் என்னவோ வேணும்ன்னே உங்க ரெண்டு பேருக்கும் இடைல வந்த மாதிரி பேசுறீங்க?, அப்பா-அம்மா செத்துப் போய் கதியில்லாம நின்னவளை கூப்பிட்டு வந்து கூட வைச்சுக்கிட்டது மாமா தான்! இப்படி நான் எல்லாருக்கும் பாரமாவேன்னு தெரிஞ்சிருந்தா.. என்னை பெத்தவங்க போனப்பவே, நானும் போய்ச் சேர்ந்திருப்பேன்”
-வெற்றுக் குரலில் விரக்தியாய்க் கூறியவளைக் கேட்டு புசு,புசுவெனக் கோபம் பிறக்க.. விறுவிறுவென வாசலருகே சென்றவன்..
“இது என்னடி பேச்சு?, பாரம்,அது,இதுன்னு?, எனக்கு உன்னை சுத்தமாப் பிடிக்காது தான்! அதுக்காக.. நீ இந்த வீட்ல இருக்கக் கூடாதுன்னுலாம் நான் யோசிச்சதே கிடையாது! சின்ன வயசுல இருந்து சண்டை போட்டுட்டுத் தான இருக்கோம்?, இப்ப என்ன பெரிய மனுஷி மாதிரி டயலாக் பேசுற?, அடிச்சுப் பல்லைக் கழட்டிடுவேன்!” – என்று உச்சஸ்தாதியில் கத்த...
வெற்று மார்புடன் தன் கண் முன்னே நிற்பவனின் முகத்தை அசையாது நோக்கி..
“பிடிக்கவே பிடிக்காத பொண்ணுக்கு எதுக்காக லவ் லெட்டர் கொடுத்தீங்க?” என்று பிசிர் தட்டாத குரலில் அமைதியாய் வினவினாள் அவள்.
பின் கழுத்தைத் தேய்த்தபடி.. முகம் இறுக.. மறுபுறம் திரும்பியவன் “தெரியாது” என்றான்.
“இது என்ன பதில்?”
“குடுத்த லெட்டரைத் தான் நேராப் போய் எங்கப்பாக் கிட்ட நீட்டி அடி வாங்கியும் கொடுத்திட்டியே?, பின்ன என்ன?”
“நான் ஒன்னும் மாமா கிட்ட கொடுக்கல”
“பின்ன எப்படி அவர் கைக்குப் போச்சு?, நடிக்காதடி நடிக்காத!”
“நான் ஒன்னும் நடிக்கல!, மேத்ஸ் புக்குக்குள்ள நீங்க லெட்டர் வைச்சதே எனக்குத் தெரியாது. மாமா தான் அதைக் கவனிச்சு எடுத்தார்.”
“சரி, அவர் எடுக்காம நீ மட்டும் அதைப் பார்த்திருந்தா.. என்ன நடந்திருக்கும்?”
“இப்படிக் கேட்டா என்ன பதில் சொல்றது?”
“பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு நேரா சொல்லு”
“இப்போ தான, என்னைச் சுத்தமா பிடிக்காதுன்னு நீங்க சொன்னீங்க”
“...................”
“முதல்ல, உங்க மனசுல என்ன இருக்குன்னு நீங்க ஒரு முடிவுக்கு வாங்க! அப்புறம் வந்து.. என்னைக் கேளுங்க”
-தனக்கே அறிவுரை கூறியவளை எரிச்சலுடன் பார்த்து.. படியேறப் போனவளை “ஏய்,நில்லு” எனக் கூறி நிறுத்தியவன்.. தொண்டையைக் கனைத்தபடி...
“எனக்கு உன்னை சுத்தமாப் பிடிக்காது தான்! ஆனா.. வேற யாரையும் பிடிக்கும்ன்னும் தோண மாட்டேங்குதே” – என்றான்.
புருவம் சுருக்கி அவனை நோக்கியவள் “புரியல” என்றாள்.
“எனக்கும் தான்” என்றவன்.. ஒரு நொடி அமைதியாகிப் பின்..
“ப்ச், போ” – என்று விட்டு.. கழுத்தைத் தேய்த்தபடி அங்கிருந்த ஜன்னல் வழித் தோட்டத்தை நோக்கினான்.
எரியத் துவங்கிய காயத்தை உணர்ந்து “ஷ்ஷ்” என்றவன் மீண்டும் திரும்புகையில்.. அவள் அங்கேயே நிற்பதைக் கண்டு “என்ன?” என்றான்.
ஓடிச் சென்று ஹாலில் இருந்த மருந்தை எடுத்து வந்தவள் அவனிடம் நீட்ட.. புருவம் உயர்த்தியவன்.. கண்ணைச் சுருக்கியபடி..
“உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் போலவே” எனக் கூற.. வந்த சிரிப்பை உதட்டில் அடக்கியவள் “ம்ம்” எனத் தலையாட்டினாள்.
“ம்ம்ம்ம்??” – பெரிதாய்க் கண்களை விரித்து அப்படியா எனப் பாவனை செய்தவனிடம்..
“நீங்க லெட்டர் கொடுத்த மாதிரியான பிடித்தம் இல்ல!, எனக்கு இந்த வீட்ல இருக்குற எல்லாரையும் ரொம்பப் பிடிக்கும்! மாமாவை,அன்னம்மாவை,உங்களை..”
“கூர்க்காவை,பால்காரனை,பேப்பர்காரனை எல்லாரையும் சொல்லேன்! ஏன் விட்டுட்ட?” என்றவன் தொடர்ந்து “போடி” என்று சலித்துக் கொண்டான்.
மறுபடி அவனைக் கோபப்படுத்தி விட்டதை உணர்ந்து வேகமாய் அவனிடமிருந்து மருந்தைப் பறித்தவள்..
“திரும்புங்க நானே போட்டு விட்றேன்” என்றாள்.
அலட்டிக் கொள்ளாமல் திரும்பி நின்றவனின் வலது புற கழுத்தில் மருந்தை இட்டவளிடம்..
“நான் உன் கையைப் பிடிச்சதுக்கே பெல்ட்டால அடிச்சார் மிஸ்டர்.கேசன்! இதையெல்லாம் பார்த்தார்ன்னா அவ்ளோ தான்.. நான் தான் உன்னை வற்புறுத்தி மருந்து போட வைச்சிட்டிருக்கேன்னு சொல்லி.. ஜெயில்ல போட்டாலும் போடுவார்! ஆனா.. ஏன் டி உன் மாமா இப்படி இருக்காரு?”
“அவருக்கு உங்க மேல ரொம்பப் பாசம்! அதனால தான்”
“அடேங்கப்பா” – என்றவனைக் கண்டு சிரித்து அவள் மேலும் ஏதேதோ பேச.. அந்த நேரத்தில் இருவரையும் அந்த டீக்கடைக்காரர் மட்டும் பார்த்தாரேயானால்.. வாயில் விரல் வைத்திருப்பார்!
‘சாருசந்திரா’ ஃபேன் ஹவுஸ் என்னும் ஃபர்னிச்சர் ஷோரூமை நிறுவி நடத்தி வரும் சாருகேசனின் மனைவி சகுந்தலா, வசந்தனின் மூன்றாவது வயதிலேயே மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்.
ஒற்றை ஆளாய் மகனுடன் தனித்துப் போன கேசன், மறுமணம் செய்து கொள்ளாமல் அன்னம்மாவின் உதவியுடன் பிள்ளை வளர்க்கத் தொடங்கினார்.
மனைவியின் நினைவுகளைத் தவிர்க்கத் தொழிலில் முழு மூச்சாக ஈடுபட்ட மனிதன் அடுத்தப் பத்தாண்டுகளில் இன்னுமொரு ஷோரூமையும் திறந்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த வேளை.. தனது பிரியத்திற்குரியத் தங்கையாகிய சந்திரா, தன் கணவனுடன் சாலை விபத்தொன்றில் இறந்து விட்ட செய்தி கிட்டுகிறது.
தாய்-தந்தையற்ற அநாதையாய் சுற்றி நடக்கும் எதையும் புரிந்து கொள்ள முடியாதப் பதினோறு வயது சிறுமியாய் நின்ற சாருமதியைத் தன்னோடு அழைத்து வந்து விட்டார் கேசன்.
தங்கையின் மீதிருந்த அதீத அன்பினால் தனது கடைக்கு சாருசந்திரா எனப் பெயர் வைத்தவர் அவர்! சந்திராவும் கூட அண்ணனுக்குச் சளைத்தவர் இல்லை! அண்ணன் மீதானத் தன் பாசத்தின் வெளிப்பாடாகவேத் தன் குழந்தைக்குச் சாருமதி எனப் பெயரிட்டார்!
உயிராய் எண்ணிய தங்கை உயிர் விட்ட துக்கத்தில் ஆழ்ந்திருந்தவரை மீட்டெடுத்தது சாருமதி தான்! உருவத்தில் தன் அன்னையை அவள் நினைவு படுத்துவதாலோ என்னவோ.. ‘அம்மா’ என்று தான் அழைப்பார் அவளை!
சாருமதியும் தன் மாமனின் மீது மரியாதை,பாசம் அனைத்தையும் தாண்டி.. ஒரு பக்தியுடனே வளர்ந்தாள்.
தொழில்,தொழில் எனப் பத்தாண்டுகளாய் பெற்ற மகன் மீது பார்வையைக் கூட செலுத்தியிராத மனிதன்.. இன்று தங்கை மகளின் பின்னே அன்பும்,பாசமுமாய் சுற்றுவதைக் கண்டு.. வசந்த்திற்கு அந்த வயதிலேயே ஆத்திரம் தான்!
அவனது அன்பிற்குரிய அத்தை தான் சந்திரா! ஏன், அவர் மகள் மீது கூட அவனுக்குப் பாசம் அதிகம் தான்!, ஆனால் ஏனோ.. அவனது தந்தைக்கும்,அவளுக்குமான உறவு அவனுக்கு ஏதோ ஒருவகையில் பிடித்தமின்மையைக் கொடுத்தது.
இருவரையும் அவர் சரிசமமாய் நடத்தியிருந்தால் கூட இந்தளவிற்கு வித்தியாசத்தை அவன் உணர்ந்திருக்க மாட்டான்!
பதினைந்து வயதை எட்டி மீசை முளைக்கத் துவங்கிய வயதில்.. தோள் வரை நிற்பவனை.. அவர் ஒரு வளர்ந்த இளைஞனாகவே கருதத் தொடங்கினார்.
இதைச் செய்யாதே,அதைச் செய்யாதேவென ஏகப்பட்டக் கெடுபிடிகள்! படிப்பில் அவர் கொடுக்கும் அழுத்தம்!
ஏன் என்று கேள்வி கேட்ட அன்னம்மாவிடம், ‘எனக்கப்புறம் தொழிலை எடுத்து நடத்தப் போறது அவன் தான்! அதை நிர்வகிக்கவும், விரிவு படுத்தவும் அவன் பொறுப்பா வளர வேண்டியது அவசியம் அன்னம்’ என்று விட்டார் அவர். இதுவே அவர் மீது ஒரு வெறுப்பை உண்டு பண்ணி விட்டது வசந்துக்கு!
“யாருக்கு வேணும் இவர் பார்க்குற தொழில்?, இந்தத் தொழிலுக்காகத் தான என்னை ஒதுக்குனார்?, நான் அதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டேன் அன்னம்மா” – என்று பாய்ந்தவனிடம்..
“வேற என்னடா செய்யப் போற?, பிச்சையெடுத்து வயித்துப் பாட்டைப் பார்க்கப் போறியா?” – என்றார் அவர்.
“ஓ! உலகத்துலயே நீங்க மட்டும் தான் சம்பாதிச்சு வயித்தை நிரப்புறீங்களா?, மத்த எல்லாரும் பிச்சையெடுத்துத் தான் பிழைக்கிறாங்களோ?
“நீ படிக்கிற லட்சணத்துக்கு உனக்குக் கலெக்டர் உத்தியோகம் தான் கொடுப்பாங்க”
விடாது அடித்துக் கொண்ட இருவரின் இடையில் பாய்ந்தார் அன்னம்.
“ஐயா.. பையன் இன்னும் பத்தாவது கூட எழுதல, அதுக்குள்ள என்ன தொழிலைப் பத்தி பேச்சு?, அவன் தான் இளங்குருத்து! பொசுக்கு,பொசுக்குன்னு கோபப்பட்டுக் கத்துறான்னா.. நீங்களும் கூட,கூடப் பேசுறீங்களேய்யா?”
“என்னை அவன் ரொம்பக் கஷ்டப்படுத்தி பார்க்குறான் அன்னம்மா!, இவன் என்ன ஆகப் போறான்னு நினைச்சு,நினைச்சே எனக்கு இப்போல்லாம் ராத்திரி தூக்கம் வர மாட்டேங்குது!”
“என்னை ஏன் நினைக்குறீங்க?, உங்க தங்கை மகளை நினைச்சுக்கங்க! நல்லாத் தூக்கம் வரும்”
“அவளைத் தான் டா நினைப்பேன்! நான் நினைச்ச மாதிரி பொறுப்பும்,அறிவுமா அவளை வளர்ப்பேன்”
சூளுரைத்தவரிடம் “பெஸ்ட் ஆஃப் லக்” என்று விட்டான்.
அவனுக்குப் படிப்பின் மீது ஈடுபாடில்லை என்று கிடையாது. படி,படி என்று அவனைத் தொல்லை செய்தே அவனது ஈடுபாட்டைக் கெடுத்து விட்டார் கேசன்.
ரொம்பவும் சூப்பராகவும் இல்லாமல், அதே சமயம் சுமாராகவும் இல்லாமல்.. மத்தியில் நின்று பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்து விட்டான்!
அதன் பின்பு படிப்பென்பது மொத்தமாய் பின்னுக்குப் போய் விட்டது அவனைப் பொறுத்தவரை! எப்படிப் படிக்கிறான், என்ன மார்க் வாங்குகிறான் என்பதெல்லாம் அவன் தந்தையை எட்டுவதேயில்லை!
கூட்டமாய் நண்பர்கள் பட்டாளமும் அமைந்து விட, வீடும்,தகப்பனும் கொடுக்கும் டென்ஷன் அனைத்திற்கும் வடிகாலாய் கல்லூரியை எண்ணிக் கொண்டான்.
அவன் முதலாமாண்டு பட்டப்படிப்பில் இருந்த சமயம், சாருமதி பூப்பெய்தி விட.. ‘வயசுப் பொண்ணு இருக்குற வீட்ல பையனையும் வைச்சிருக்கிறது தப்பு கேசன், அண்ணன்,தங்கச்சியா இருந்தாப் பரவாயில்ல! ரெண்டு பேருக்கும் முறைப் பிள்ளைங்க, ஊர் தப்பாப் பேசும்’ என சொந்தங்கள் சிலர் விசேஷத்தின் போது அளந்து விட்டுச் செல்ல.. முதல் வேலையாக மகனை ஹாஸ்டலில் சேர்த்தார் கேசன்.
மகன் அதில் மொத்தமாய் நொறுங்கிப் போய் விட்டான். அப்படி என்ன தங்கை மகள் மீது பாசம்?, உள்ளூரில் படிப்பவனை விடுதியில் சேர்க்குமளவிற்கு?, பெற்ற மகனை விட அவள் பெரிதாகப் போய் விட்டாளா?,
அன்னம்மாவின் ஆப்பமும்,அடையுமில்லாமல் அவனால் எப்படி உயிர் வாழ முடியும்?
போக மாட்டேன் என்று அடம் பிடித்தவனைத் திட்டி,மிரட்டி விடுதியில் தள்ளினார் கேசன்.
