அத்தியாயம் - 8

ழகன்! Early 90’s-ல வெளி வந்த படம்! ஹிட் மூவியும் கூட! வித்தியாசமான கதை! ரசிக்க வைக்குற முகங்கள்,வசனம்,ஸ்கீர்ன் ப்ளே எல்லாம்!! அதை விட மிஸ்டர்.கீரவாணி மியூசிக்ல இந்தப் படத்துல வர்ற எல்லாப் பாட்டும் செம்ம ஹிட்! என்னோட ஃபேவரைட் இது!

பானுப்ரியா டான்ஸ் ஆடிக்கிட்டேக் கோபத்தோட தன் மனசுல இருக்குறதைச் சொல்லி மம்முட்டிக்கிட்ட ப்ரபோஸ் பண்ணுவாங்க! பதிலுக்குக் கோபப்பட்டுக் கத்துற மம்முட்டியும் யெஸ் டாமிட்! ஐ ஸ்டார்டட் லவ்விங் யூ அண்ட் ஐ லவ் நோ ஒன் எல்ஸ்ன்னு கத்திட்டுப் படி இறங்கிடுவார்! நான் பொஸஸ்ஸிவா இருக்குறது தப்பான்னு கேட்டு தன்னோட பெரிய கண்ணை விரிச்சு.. முழிச்சிட்டு நிற்குற பானுப்ரியாவைப் பார்த்து.. அழகா.. ஒரு சிரிப்பு சிரிப்பார் அவர்! ச்ச, நிஜமாவே அவர் அழகன் தான்!

சடசடன்னு காதல் மழை நம்ம மனசுக்குள்ளப் பொழிய ஆரம்பிக்குற நேரம்.. அதே கலகல உணர்வை வெளிப்படுத்துற மாதிரி இசையும் தொடங்கும்! வைரமுத்து உயிர் கொடுத்த வரிகளுக்கு எஸ்.பி.பி உயிர்ப்பைக் கொடுக்க.. புதுசா காதலிக்கத் தொடங்குற ரெண்டு பேரோட மனநிலையை அத்தனை அழகா... அவர் குரல்ல வெளிப்படுத்திருப்பார்! ஒவ்வொரு முறைக் கேட்கும் போதும்.... சிலிர்ப்பு தான்! ஐ லவ் யூ எஸ்.பி.பி சார்!!

“ஏகாந்தம் இந்த ஆனந்தம்..

அதன் எல்லை யாரறிவார்..

ஏதேதோ சுகம் போதாதோ..

இந்த ஏக்கம் யாரறிவார்..

முதலாய்.. முடிவாய்...

இங்கு.. என்றும் வாழ்வது காதல் ஒன்று தான்!!”

துணுக்கு: படம் இடம் பெற்ற படம் அழகன்.

பாடல்: மழையும் நீயே!

ரு கைகளையும் அகல நீட்டி.. வாய் பிளந்து ‘ஆ’-வென உறங்கிக் கொண்டிருந்தான் வசந்த். அவன் காலடியில் தலை பதித்தபடி.. அமர்ந்த நிலையிலேயேத் தானும் தூங்கிப் போயிருந்தாள் சாருமதி.

கருவானம் இருள் கலைந்து.. நிறம் மாறி நீல வண்ணம் கொண்ட நேரம்.. விடியல் தொடங்கி.. கீச்,கீச் என அவர்கள் வீட்டுத் தோட்டத்துப் பறவைகள் சுறுசுறுப்பாய்க் குரல் கொடுக்கத் துவங்கியிருந்தன.

திறந்திருந்த ஜன்னல் வழி உள் நுழைந்த குருவியொன்று கொடுத்த சத்தத்தில் உறக்கம் கலைந்து.. கனத்தத் தலையைக் கையில் பற்றியபடி எழுந்தமர்ந்தான் வசந்த்.

தன் உள்ளங்காலில் கன்னம் பதித்து விழி மூடியிலிருந்தவளின் முகம் அவனது காலை வேளையை சொர்க்கமாக்க.. மெல்ல கால்களை உறுவிக் கொண்டு அவள் தலை கோதினான்.

அவன் தீண்டலில் உறக்கம் தொலைத்தவளும், விழி திறக்காமல்.. இதழ்களில் பரவிய புன்னைகையோடே சாய்ந்திருந்தாள்.

“ஏய்...”

“ம்ம்”

“ஐ லவ் யூ” – மெல்லிய குரலில் முணுமுணுத்தவனைக் கேட்டுப் புன்னகை சிரிப்பாக மாற.. எழுந்தமர்ந்தவள்..

“தினமும் காலைல இதைச் சொல்வீங்களா?” என்று வினவினாள்.

“ம்ஹ்ம் தோணும் போது தான் சொல்லுவேன்”

“ம்க்கும்”

“நேத்து நைட்ல இருந்து ஆயிரம் தடவை இதை நான் சொல்லிட்டேன்! ஆனா.. நீ இன்னும் ஒரு தடவை கூட என்னைப் பார்த்து சொல்லல!”

நமுட்டுச் சிரிப்புடன் எழுந்துத் தலைமுடியைக் கொண்டையாக்கியபடி “எனக்கு தோணும் போது தான் சொல்ல முடியும்” என்று கெத்தாகக் கூறியவளை அவன் முறைத்த நேரம்.. அன்னம்மாவின் குரல்..

“தம்பிஇஇஇஇ.. மதிக் கண்ணுணுணுணு” என்று முழுப் பதற்றத்துடன் ஒலிக்க.. அடித்துப் பிடித்துக் கொண்டு இருவரும் ஓடிச் சென்றனர்.

சாருகேசனின் அறையில் நின்றிருந்த அன்னம்மா.. தொங்கியத் தலையுடன் கட்டிலில் கிடந்தவரைக் கண்டுக் கதறி “தம்பி.. தம்பி” எனக் கத்த..

“மாமாஆஆஆ” என்றபடி ஓடி வந்து அவர் தலையைத் தாங்கிய மதிக்கு நெஞ்சு நடுங்கிப் போனது.

அவர் படுத்திருந்தக் கோலத்தைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டுப் போன வசந்த் வேகமாக அருகே சென்று நாடி பிடித்துப் பார்த்தான்.

“மயங்கியிருக்காரு!, அன்னம்மா டிரைவரை கார் எடுக்கச் சொல்லு” எனக் கூறி விட்டு அவசரமாக அவரைக் கையில் அள்ளிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தான் வசந்த்.

விடாது அழுது புலம்பியபடி வந்த சாருமதி “என்னால தான்.. எல்லாம் என்னால தான்” என்று தலையிலடித்துக் கொள்ள.. முகம் இறுக அமைதியாய் அமர்ந்திருந்தான் வசந்த்.

மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் உடனே அனுமதிக்கப்பட்டார் சாருகேசன். மூடிய ஐசியூவின் கதவருகே நின்று கொண்டு அழுகையில் கரைந்த சாருமதியை எப்படிச் சமாதானப்படுத்துவதென்றே புரியவில்லை அவனுக்கு.

“சாரு.. முதல்ல போய் உட்காரு” – பல்லைக் கடித்தபடி அடக்கப்பட்டக் கோபத்துடன் கூறினான் அவன்.

அவனை ஆத்திரத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் கொத்தாக அவன் சட்டையைப் பற்றி..

“எல்லாம் உங்களால தான்! ஏன் என்னைக் காதலிச்சீங்க?, நம்மளால தான் மாமா இன்னைக்கு இந்த நிலைமைல படுத்திருக்கார்! அவர் விருப்பத்துக்கு மாறா.. எந்த விசயத்துலயும் நான் நடந்துக்கிட்டது கிடையாது! அவர் தான் எனக்கு எல்லாம்ன்னு நினைச்சு அவர் பேச்சே வேத வாக்கா நினைச்சிருந்தேன்! நீங்க தான்.. நீங்க தான் என் மனசைக் கலைச்சு மாமாவை இப்படி ஆக்கிட்டீங்க! சந்தோஷமா?, இப்போ சந்தோஷமா உங்களுக்கு?” – என ஆவேசமாகக் கத்தினாள்.

தன் சட்டையிலிருந்த அவள் கைகளை விலக்கி “முட்டாள்தனமா பேசாத! உன் விருப்பம் என்னன்னு தெரிஞ்சும்.. எவனோ ஒருத்தனைக் கூட்டி வந்து கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்ச மனுஷன் அவரு! அவரோட சுயநலத்தால தான் இப்படி வந்து படுத்திருக்கிறாரே ஒழிய.. உன்னாலயோ.. என்னாலயோ இல்ல!” என்று அவனும் பதிலுக்கு சீறினான்.

“அவரா சுயநலவாதி?, அவர் இல்லேன்னா.. இன்னைக்கு நான் இல்ல! இந்த வீட்டுக்கு நான் வந்த நாள்லயிருந்து இப்போ வரை எனக்கு என் அப்பா,அம்மா நியாபகம் கூட வந்ததில்ல! அந்தளவுக்குப் பாசத்தைக் காட்டி வளர்த்த மனுஷன் அவரு! அவரைப் போய் வாய் கூசாம சுயநலவாதின்னு சொல்றீங்க?”

“ஏய்ய் என்னன்றடி இப்போ?, உள்ள படுத்திருக்கிற உன் மாமா இன்னும் உயிரோட தான் இருக்காரு. வாயை மூடிட்டுப் போய் அங்க உட்காரு”

“மனசாட்சியில்லாம எப்படி இப்படிப் பேசுறீங்க? அவர் மேலக் கொஞ்சம் கூடப் பாசமேயில்லையா உங்களுக்கு?”

“பாசமில்லாம தான் ஐசியூ வாசல்ல இப்படி நின்னு உன் கூடப் போராடிட்டு இருக்கேன்! ஏய்ய் பேசாம போடி”

“கண்ணு, நாம இருக்குறது ஹாஸ்பிடல்! கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் சண்டை போடாம அமைதியா இருங்க” என்று அன்னம்மா அதட்டியதும்..

“மனுஷனே இல்ல அன்னம்மா இவரு! சரியான மிருகம்! செத்துப் போன மாதிரி தலை தொங்கிக் கிடந்த மனுஷனைப் பார்த்தும் கூட கொஞ்சமும் ஈவு,இரக்கமில்லாம எப்படிப் பேசுறார் பார்த்தீங்களா?, அவர் செத்தாக் கூட இவரெல்லாம் கண்ணீர் விட மாட்டாரு” – அழுது கொண்டே அவரிடம் கூறியவளைக் கண்டுப் பல்லைக் கடித்தபடி..

“ஆமா அழ மாட்டேன்” என்றான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்த டாக்டர் அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்திருப்பதாகக் கூற ஆடிப் போய் விட்டான் வசந்த்.

முதல் முறை வந்த விசயத்தையே குடும்பத்தில் எவரும் அறியாதிருக்கையில் இப்போது இரண்டாம் முறை என்று மருத்துவர் கூறியதும்.. சாருமதி கால்கள் தொய்ந்து விழ.. அப்படியே மடங்கிச் சரிந்துக் கீழே அமர்ந்து விட்டாள்.

“நான் சொன்னேன்ல அன்னம்மா?, மாமாவுக்கு ஏதோ பிரச்சனைன்னு! என் கிட்ட வாய் விட்டு சொன்னார், இன்னும் எத்தனை நாளைக்கு என் உடம்பு ஒத்துழைக்கும்ன்னு தெரியலம்மான்னு! அப்பவே என்னன்னு விசாரிக்காம.. என் பிரச்சனையையே பெருசா நினைச்சு.. சுயநலமா நடந்துக்கிட்டேன்! இந்தப் பாவம் என்னைச் சும்மா விடாது” – மீண்டும் தலையிலடித்துக் கொண்டு அழுதவளை முழு எரிச்சலுடன் நோக்கினான் வசந்த்.

“ஏய்ய் இப்போ நீ வாயை மூடப் போறியா இல்லையா?, தப்பு உன் மேல இல்ல. என் மேல தான்! அதுக்காக உன்னை மாதிரி நான் உட்கார்ந்து அழுதுட்டேவா இருக்கேன்?, இப்போ இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிக்குறதுன்னு யோசிக்காம லூசுத்தனமா புலம்பிட்டிருக்க?”

“நீங்க பேசாதீங்க!, அவர் இப்படி ஆனதுக்குக் காரணமே நீங்க தான்”

“ஆமா நான் தான்! ஓப்பனா ஒத்துக்கிட்டேனே! இன்னும் என்ன?, தயவு செஞ்சு கொஞ்ச நேரம் அமைதியா இரு சாரு” – என்றவனும் செய்வதறியாதுத் தலையைப் பற்றிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவன் எதிர்பார்க்கவில்லை! தந்தை இத்தனை அழுத்தக்காரராக இருப்பாரென்று! அவர் குணாதியசத்திற்குத் தன் நோயைச் சொல்லிக் காட்டி மிரட்டியே சாருமதியிடம் அவர் நினைத்த காரியத்தைச் சாதித்திருக்கலாம்! ஆனால் கடைசி வரைத் தனக்கு நேர்ந்ததை அவர் வெளியே சொல்லவேயில்லை! யோசனையுடன் அமர்ந்திருந்தவனிடம் மீண்டும் வந்து நின்றார் டாக்டர்.

மூவரும் அவசரமாய் எழுந்து அவரைச் சூழ்ந்து கொள்ள, இப்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டாரென்றும் அடுத்த 24 மணி நேரம் அப்சர்வேஷனில் இருக்க வேண்டும் என்று கூற...

“மாரியாத்தா..” என்றபடி மருத்துவமனையின் கூரையை நோக்கிச் சாமி கும்பிட்ட அன்னம்மாவையும், கண்ணைத் துடைத்துக் கொண்டு “தேங்க்ஸ் டாக்டர்” என்று முறுவலித்த சாருமதியையும் கண்டு கொள்ளாமல் “டாக்டர் நான் அவரை இப்போப் பார்க்கனும்” என்றான் வசந்த்.

பிடிக்காத தந்தையானாலும், அவருடன் ஆயிரம் சண்டையிட்டாலும் அவர் இல்லாத வீட்டையோ, வாழ்க்கையையோ அவன் கற்பனை செய்ததில்லை!

மனிதர் எங்கே ஒரேடியாய் உயிரை விட்டுக் காலம் முழுதும் தன்னைக் குற்ற உணர்ச்சியில் நிற்க வைத்து விடுவாரோ என்று அஞ்சி உள்ளுக்குள் கலங்கிக் கொண்டிருந்தவனுக்கு டாக்டரின் வார்த்தைகள் ஆசுவாசத்தைக் கொடுக்க... அதுவரையிருந்த மனநிலை மாறி அவர் மீது மூட்டை,மூட்டையாய்க் கோபம் எழுந்தது அவனுக்கு.

இப்போ எப்படிப் பார்க்க முடியும் என்றுத் தயங்கிய டாக்டரிடம் ஒரேடியாகப் பிடிவாதம் பிடித்தான் வசந்த். அவர் மனதைக் கஷ்டப்படுத்தும் எதையும் பேசி வைக்கக் கூடாதென்கிற டாக்டரின் நிபந்தனையுடன் ஐசியூவுக்குச் சென்றான் வசந்த். அவன் என்ன செய்வானோ,ஏது செய்வானோ என்று பதறியபடி அவன் பின்னேயே நுழைந்தாள் சாருமதி.

மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் படுக்கையில் படுத்திருந்த சாருகேசன்.. கதவு திறக்கப்படும் சத்தத்தில் கண் விழித்தார்.

ஜோடியாக உள்ளே நுழைந்த இருவரையும்.. என்றுமில்லாத பார்வையுடன் புதிதாய் நோக்கியவரின் விழிகள் இருவருக்கான ஜோடிப் பொருத்தத்தை ஆராய்ந்தது.

கருப்பு நிற பேண்ட் நீல நிறச் சட்டையுமாய் அந்த அறைக்கதவின் நிலப்படியை கையால் தொட்டுவிடுமளவிற்கு உயரத்துடன் இருந்தவனையும், அவனருகே.. அழகே உருவமாய் அவன் தோளை உரசியபடி வந்து நின்ற சாருவையும் அளவெடுத்தது அவர் கண்கள்.

விழி உயர்த்தித் தன் முகம் பார்த்தவரைக் கண்டவனுக்கு என்னவென்றே சொல்ல முடியாத உணர்வு!

டைனிங் டேபிளில் அவனுடன் தினம் உற்சாகமாய் வாய்த் தகராறில் ஈடுபடும் தந்தை, பெல்ட்டால் அவனை விளாசித் தள்ளி விட்டு ‘குஸ்தி வீரன் டா’ என்று கூக்குரலிடும் தந்தையென தன்னோடு சண்டையிடும் அவர் முகத்தை மட்டுமே பார்த்து வந்தவனுக்கு.. படுத்த படுக்கையாக.. பேச்சற்றுக் கிடந்தவரைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

ரத்தப் பாசம் போலும்! கடுப்புடன் தலையைக் கோதிக் கொண்டான். ஆனாலும் பொறுக்க முடியாமல்..

“எவ்ளோ கொடுத்தீங்க அந்த டாக்டருக்கு?, நீங்க எழுதிக் கொடுத்த வசனத்தைக் கரெக்டா ஒப்பிச்சிட்டுப் போறாரு?” – ஐசியூவின் அமைதியைக் கலைக்கும் வண்ணம் குரல் உயர்த்தியவனைக் கண்டுப் பதறி அவன் கையை இறுகப் பற்றிய சாருமதி..

“வசந்த், வசந்த் என்ன பண்றீங்க நீங்க?, இப்படி சத்தம் போடத் தான் உள்ள வந்தீங்களா?” – என்று கோபமாய்ச் சீறத் தொடங்கினாள்.

மகனின் வார்த்தைகளை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியே விட்ட சாருகேசனின் கண்கள் முழுக்க.. முழுக்க.. இணைந்திருந்த இருவரது கைகளையேச் சுற்றி வந்தது.

“உங்க எண்ணம் நிறைவேறனும்ன்றதுக்காக எந்த எக்ஸ்டீரீம்க்கு வேணா போவீங்களா?, அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன் நான் உங்களுக்கு?, இத்தனை வருஷமா கூட வளர்ந்த என்னை விட யாருக்கு இவளைப் பத்தி நல்லாத் தெரியும்? யாரு என்னை விட இவளை நல்லாப் பார்த்துக்குவா?”

“.................”

“இத்தனை வயசாகியும் சம்பாதிக்குற காசு மேல இருக்குற மோகம் குறையலயா உங்களுக்கு?, அவ்ளோ சொத்து சேர்த்து வைச்சிருக்கீங்கள்ல, பின்ன என்னையும் ஏன் காசு பின்னாடி ஓடச் சொல்லி டார்ச்சர் பண்றீங்க?”

“.............”

“இப்போ என்ன இவளை விட்டு நான் விலகிடனும்! அவ்ளோ தான?, போயிட்றேன்! இவளை விட்டு.. இந்த வீட்டை விட்டு ஒரேடியா போயிட்றேன்.. நீங்க இவளுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சாலும் சரி, கருமாதி பண்ணி வைச்சாலும் சரி! இனி இதைப் பத்தி நான் கவலைப்பட்றதா இல்ல”

“வசந்த்....” – அவனைக் கட்டுப்படுத்த முடியாது அவன் கைகளை இறுக்கியவளிடம்..

“இந்த மனுஷன் இப்படி ஆனதுக்குக் காரணம் நான் தான்னு நீ தான சொன்ன?, நான் என்னவோ உன்னை வற்புறுத்திக் காதலிக்க வைச்ச மாதிரி.. உன் மனசைக் கலைச்சுட்டேன்னு கூசாம சொன்ன?, உனக்கு எப்பவும் என்னை விட அவர் தான் முக்கியம் சாருமதி! நேத்து நான் அவ்ளோ கெஞ்சியும்.. நீ அவர் கைல அடிச்சு சத்தியம் பண்ணப்பவே, நான் விலகிப் போயிருந்திருக்கனும்!”

“.................” – பதிலின்றி இறுகிப் போய் நின்றவளின் கையை உதறி.. தந்தையின் புறம் திரும்பியவன்..

“நான் இவ கூட இருக்குற வரைக்கும் நீங்க இந்த ஹாஸ்பிடல் பெட்-ஐ விட்டு எந்திரிச்சு வர மாட்டீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்! அவ்ளோ கஷ்டமெல்லாம் நான் உங்களுக்குக் கொடுக்குறதா இல்ல”

“.................”

“நான் செத்துட்டதா நினைச்சுத் தலை முழுகிட்டு.. உங்க வளர்ப்புப் பொண்ணோட கல்யாணத்துக்கு சீக்கிரம் தயாராகுங்க!” – என்று கூறி விட்டு வாசல் நோக்கிச் சென்றவன் ஒரு நொடி நின்று அவர் முகம் நோக்கி..

“கடைசி வரைக்கும் நீங்க எனக்கு அப்பாவா நடந்துக்கவே இல்லப்பா” – விழி சிவக்கக் கூறி விட்டு விறுவிறுவெனக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி விட்டான் வசந்த்.

பின்னோடு ஓடிச் சென்று அவனைச் சமாதானம் செய்ய விழைந்த கால்களைக் கஷ்டப்பட்டுத் தடுத்துத் தன் மாமன் அருகே அவசரமாய்ச் சென்ற சாருமதி அவர் கையைப் பற்றி..

“அ..அவர் ஏதோ கோபத்துல பேசுறார் மாமா! நீங்க இ..இதையெல்லாம் பெருசு படுத்திக்க வேண்டாம்!” என்று கூற.. சலனமற்ற விழிகளுடன் கலங்கிய அவள் கண்களை நோக்கியவர்.. மெல்ல உறங்கிப் போனார்.

தன் பிறகு அவன் அவரைக் காண முயலவில்லை. வீட்டுப் பக்கமும் செல்லவில்லை! அணிந்திருந்த உடையோடு ஹரி வீட்டில் தஞ்சம் புகுந்தவன், அங்கேயே தங்கி விட்டான்!

எந்நேரமும் உற்சாகமும்,துடிப்புமாய் இருக்கும் நண்பன், சோர்ந்த விழிகளும்,சிரிப்பற்ற முகமுமாய் நடமாடுவதைக் கண்டு ஹரி தான் அவ்வப்போது ஹாஸ்பிடல் சென்று பார்த்து அங்கிருந்த நிலைமையை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் கூறுவதைக் காதால் கேட்டுக் கொள்வான்! அவ்வளவே! மற்றபடி தந்தையைப் பற்றியும், சாருமதியைப் பற்றியும் எந்தக் கேள்வியும் வராது அவனிடமிருந்து.

அவன் அருகே இல்லாதது ஒரு புறம் மன உளைச்சலைக் கொடுத்தாலும்.. எங்கே இவன் முகம் பார்த்தால் மீண்டும் சாருகேசனின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுமோ என்கிறப் பயமும் இருந்தது சாருமதிக்கு. விதியை நொந்தபடி சாருகேசனின் அருகிலேயேத் தவமிருந்தாள் அவள்.

அவர் மருத்துவமனையிலிருந்த போதே விஷயம் கேள்விப் பட்டு அவரைக் காண வந்திருந்த மதிவாணன் அவரிடம் “நீ ஹாஸ்பிடலை விட்டு வீட்டுக்கு வந்ததும் நிச்சயதார்த்தத்தை வைச்சுக்கலாம்! கவலைப்படாம சீக்கிரம் எழுந்து வா டா” என்று ஆறுதல் கூற.. தணலின் மீது நிற்பதைப் போன்று.. அடக்கப்பட்ட உணர்வுடன் விறைத்துப் போய் நின்ற சாருமதியைக் கண்டபடியே... அவரிடம் பதிலின்றிப் புன்னகைத்து வைத்தார் கேசன்.

என்ன தான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மனிதர் தேறி வந்தாலும்.. புருவம் சுருக்கியபடி எந்நேரமும் யோசனையில் காணப்பட்டவரைக் கண்டு பீதி நிறைந்தது சாருமதி.

‘மகனை நினைச்சு வருத்தப்பட்றாரோ என்னவோ’ என்று அன்னம்மா வேறு அவளைக் குழப்ப.. இது தான் சாக்கென்று ஓடிச் சென்றாள் அவனைக் காண.

பீட்டர்ஸ் ரோட்டில் ஒரு சிறிய அரங்கமொன்றில் அபிமன்யு-சுந்தரி நாடகத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தவனை.. அரங்கத்தின் வாசலிலேயே சந்தித்தாள்.

அன்று மருத்துவமனையில் தந்தை கண் விழிக்கும் முன்பு வரைத் தன்னையொரு மனசாட்சியற்ற சிங்கம்,புலியாகக் கற்பனை செய்துத் தூற்றியவள்.. இன்று எதற்காகத் தன்னை நேரில் காண வந்திருக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு! போதாதற்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பற்றி வேறு அறிந்திருந்த படியால் விறைப்புடன் நின்றவனை அவள் வீட்டுக்கு அழைக்க.. திட்டி,மிரட்டி அவளைத் துரத்தியடித்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியிருந்தார் சாருகேசன். முற்றிலுமாக அவருக்குத் துணையிருந்துக் கண்ணும்,கருத்துமாய் அவரைப் பார்த்துக் கொண்டாள் சாருமதி.

ன்று காலை சாப்பாட்டை முடித்த சாருகேசன், உறங்கச் சொன்ன சாருமதியிடம் “கொஞ்ச நேரம் பேப்பர் படிக்கிறேன்ம்மா” எனக் கூறி விட்டு ஹால் ஷோபாவில் வந்தமர்ந்தார்.

அவர் வசதியாய் உட்கார வழி செய்து விட்டு மாடியறைக்குச் செல்ல வாசலுக்கு வந்த சாருமதி.. வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த மதிவாணனையும், அவர் மகனையும் கண்டுப் பேயறைந்தது போல் அப்படியே நின்று விட்டாள்.

அவளைக் கண்டுப் புன்னகைத்து “என்னம்மா மருமகளே, ஷாக் ஆகி நிற்கிற?” என்ற மதிவாணனுக்குப் பதில் சொல்லாமல் திடுதிடுவென உள்ளே ஓடி மறைந்தாள்.

அவசரமாய் ஓடுபவளைக் கண்டு புருவம் சுருக்கிய சாருகேசன் நிமிர்ந்து வாசலைப் பார்த்த போது.. மதிவாணன் உள்ளே நுழைந்தார்.

“வாடா.. வாப்பா குமார்” – என்று வரவேற்றபடி எழுந்தவரைத் தடுத்து அமர வைத்த மதிவாணன்..

“இப்போ எப்படியிருக்கு?” என்று விசாரித்தார்.

அவருக்குப் பதில் கூறி விட்டு.. இருவருக்கும் காஃபி கொடுத்த அன்னம்மாவிடம் “மதி எங்க?” என்று கேட்டார் சாருகேசன்.

சங்கடமாய் அவர் முகம் பார்த்த அன்னம் “பா...பாத்ரூம்ல இருக்கு” என்று சமாளிக்க..

“எங்களைப் பார்த்ததும் அடிச்சுப் பிடிச்சு மருமக ஓடுனது இந்த அவசரத்துக்குத் தானா?” என்று சிரித்தார் மதிவாணன்.

அவரது அட்டு காமெடிக்குப் புன்னகைக்க விரும்பாத சாருகேசன் “நான் போய்ப் பார்க்குறேன்” என்று எழுந்து சென்றார்.

உள்ளே அவரது அறை மூலையில் கால்களை மடித்துத் தரையில் அமர்ந்திருந்த சாருமதி நெற்றியை முட்டியின் மீது அழுத்தியபடிக் கண்களை இறுக மூடியிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்ட சாருகேசனுக்கு மனம் நெகிழ்ந்தது. கோபமோ,அழுகையோ வரும் போது இப்படி மூலையில் வந்து அமர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்த சின்ன வயது சாருமதியை நினைவு கூர்ந்தார் அவர்.

அருகே சென்று அவள் தோளைத் தொட்டு “என்னம்மா?” என்றவரிடம்.. பதில் சொல்லாமல் தலை குனிந்தாள் அவள்.

என்னவென்று சொல்லுவாள் அவள்! இத்திருமணத்தை நிறுத்தும் படி வசந்த் சண்டையிட்டதால் தான் இத்தனை நாட்கள் மருத்துவமனையில் கிடந்தார்! இப்போது அவளும் அதையே கூறினால்.. எப்படி ஏற்றுக் கொள்வார்! இனியொரு முறை அவர் கஷ்டப்படுவதைக் காண அவளால் நிச்சயம் முடியாது.

வாயை அழுந்த மூடிக் கொண்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தவளிடம்..

“மதிவாணனும்,குமரனும் வந்திருக்காங்கம்மா! ஒரு மரியாதைக்காவேனும் வாங்க-ன்னு சொல்லாம, இப்படி வந்து உட்கார்ந்துக்கிட்டா எப்படிம்மா?” என்று வினவினார்.

அவர் பேச்சை மீறும் எண்ணம் இல்லாவிடினும், அசைய மறுத்தக் கால்களை.. என்ன சொல்லி எழுப்பி நிறுத்தவென்றேப் புரியவில்லை அவளுக்கு.

பரிதாபமாய்த் தன் முகம் நோக்கியவளை அவர் கைப் பற்றித் தூக்கி நிறுத்த.. குனிந்தத் தலையுடனே நின்றவள்.. எப்படியேனும் வெளியே செல்வதைத் தவிர்த்து விடும் நோக்கத்தோடு..

“இ..இ..இன்னொரு நாள் அவங்களைப் பார்த்துக்கிறேனே மாமா” என்று தயங்கிய குரலில் கூற..

“இன்னொரு நாள் மட்டும் தைரியமா வந்து நின்னுடுவியா?” என்று வினவினார் அவர்.

பதில் சொல்லாமல் இமைகளை இறுக மூடியவளின் விழிகளிலிருந்து சொட்டியது ஒரு துளிக் கண்ணீர்.

“சாருமதி....”

“...........”

“அம்மா... டேய்...” – பாசமாய் அழைத்தவரின் முகம் பார்க்காமல் மறுபுறம் திரும்பி நின்று விசும்பியவள்..

“என்னால முடியாது மாமா ப்ளீஸ்” என்று கெஞ்ச.. எதுவும் சொல்லாமல்.. நகர்ந்து ஜன்னலருகே சென்று நின்றார் அவர்.

அடுத்த சில நிமிடங்கள் அழுகையுடன் நின்றவள் பின் மூக்கை உறிஞ்சியபடியே அவரருகே சென்றாள்.

“எனக்குக் கொஞ்ச நாள் டைம் கொடுங்க மாமா” – மனதை மறைத்துக் கூறியவளிடம்..

“வசந்தை மறக்குறதுக்கா?” – என்று நேரடியாக வினவினார் அவர்.

“நடப்பை ஏத்துக்கிறதுக்கு” – என உணர்ச்சியற்றக் குரலில் கூறினாள் அவள்.

“அவ்ளோ பெரிய வில்லனாம்மா நான்?, விருப்பமில்லாமக் கண்ணீரோட நிற்குற உன்னை, என் இஷ்டப்படி யாருக்கோக் கட்டிக் கொடுக்குறதுக்கு?”

“மாமா....” – அதிர்ச்சியுடன் அவர் முகம் நோக்கினாள் அவள்.

“நீ ஏன்-ம்மா என் கிட்ட முன்னமே சொல்லல?”

“சொல்ற சூழ்நிலை வரல மாமா! உங்க உடல்நிலையைப் பத்தியோ, அதனால வந்த உங்க எண்ண மாற்றத்தைப் பத்தியோ எனக்குத் தெரியாது! கல்யாணத்துக்கு இவ்ளோ சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல”

“அப்படி எத்தனை நாள் என் கிட்ட மறைக்கலாம்ன்னு நினைச்சிருந்தீங்க?”

“மறைக்கனும்ன்னு எல்லாம் இல்ல மாமா, ஒளிஞ்சு,மறைஞ்சு ஊர் சுத்தியெல்லாம் நாங்கக் காதலிக்கல! அப்டியே உங்களுக்குத் தெரிய வந்திருந்தாலும்.. அவர்... அவர் அப்போவும் உங்கக்கிட்ட சண்டை தான் போட்டிருப்பார்”

மெல்லிய குரலில் கூறியவளைக் கேட்டுத் தன் மகனை எண்ணி சிரிப்பு வந்தது அவருக்கு.

முன்னமே தெரிய வந்திருந்தாலும் “ஆமா காதலிக்கிறேன்.அதனால என்ன இப்போ?” –என்று தான் எகிறியிருப்பான் அவன்.

நகைப்பவரின் முகத்தையே ஒரு நொடி விழி அசையாது நோக்கியவள்..

“எனக்கு... எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும் மாமா” என்றாள்.

வியப்புடன் நிமிர்ந்தவரிடம்...

“அவரை மட்டும் தான் பிடிக்கும்” என்று அவள் அழுத்தமாகக் கூற.. கையைக் கட்டிக் கொண்டு அவள் பேசுவதை வேடிக்கை பார்த்தார் அவர்.

“உங்கக் கூட எவ்ளோ தான் சண்டை போட்டாலும், வாக்குவாதம் பண்ணாலும், ஏன் நீங்க அப்பாவே இல்ல எனக்குன்னு சொன்னாலும், அவர்.. நீங்க வேண்டாம்ன்னு ஒரு தடவை கூட நினைச்சதில்ல மாமா”

“.............”

“நான்.. நான் அவரைக் காதலிக்கிறேன் மாமா.. உங்க மேல எவ்ளோ பாசம் வைச்சிருக்கேனோ... அந்தளவுக்கு அவரையும் நேசிக்கிறேன். என்னால... யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது மாமா”

“............”

“உங்களுக்கு இது பிடிக்கலைன்னா.. நான் அவரை விட்டு ஒதுங்கியே இருக்கேன்! ஆனா.. ஆனா.. எனக்குக் கல்யாணம் மட்டும் வேண்டாம்! நான் கடைசி வரை உங்களோடவே இருந்துட்றேன்”

உயிராய் நேசிப்பவனை விட்டு விலகி.. வளர்த்த மாமனுக்காக யோசித்துத் தன் ஆசைகளை மறைத்துப் பாவமாய் கண் முன் நிற்பவளை நெஞ்சில் பொங்கி எழுந்தப் பாசத்துடன்.. சிறு புன்னகையோடு நோக்கினார் அவர்.

இந்தச் சில நாட்களாக எவ்வளவு கண்ணீர் வடித்து விட்டாள்! சொந்த மகளாக எண்ணி வளர்த்தது அவளை இத்தனைக் கஷ்டத்துக்குள்ளாக்கத் தானா? மன்னிப்பாளா அவர் தங்கை?

வசந்துக்கு என்ன குறை?, அவரது மகன் என்பதே அவனது பெரிய தகுதி (!?) தானே?, அதைத் தாண்டி என்ன எதிர்பார்த்து.. அவனை விடுத்து வேறு மாப்பிள்ளை தேடினார் அவர்?

பதிலை எதிர்பார்த்துத் தன் முகத்தையே பார்த்தவளின் கையைப் பற்றி..

“இனி எந்தக் காரணத்துக்காகவும் நீ வாழ்நாள்ல கண்ணீர் சிந்தக் கூடாதும்மா! இனி எல்லாம் உன் விருப்பப்படியே நடக்கும்! அழாத! நான் போய் அவங்களை அனுப்பிட்டு வர்றேன்” என்று வெளியே சென்றவர் என்ன சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாரோ.. மீண்டும் மருமகளின் அருகே வந்தமர்ந்தார்.

“சொல்லும்மா. நான் என்ன பண்ணனும்?”

மகனிடம் கூட இது போன்று அருகில் அமர்ந்துப் பொறுமையாய்க் கேள்வி கேட்டதில்லை அவர்! தனக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை எண்ணி எப்போதும் போல மனம் நெகிழ்ந்தது அவளுக்கு.

தான் ஒரு ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால் கூட தன்னையும் அவர் வசந்தைப் போலத் தான் நடத்தியிருப்பார்! அதில் எந்த சந்தேகமுமில்லை!

பெண் பிள்ளை என்பதாலேயே பொத்திப் பொத்திப் பாதுகாத்து.. பாசம் காட்டி வளர்த்து வருகிறார் போலும்!

அடைத்தத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து நோக்கியவள்..

“அ...அவரை வீட்டுக்கு வர வைக்கனும்”-என்றாள்.

“நான் கூப்பிட்டா வருவானா?” – கேள்வி கேட்டவரிடம்..

அவசரமாய் “வருவார் மாமா” என்றாள்.

“எனக்கு நம்பிக்கையில்ல!, நான் ஏன் வரனும் அப்டி,இப்டின்னு நிச்சயம் குதிப்பான்”

“அப்டின்னா.. அடிச்சு இழுத்துட்டு வாங்க”

“அதுசரி! சும்மாவே என் மேல கொள்ளை,கொள்ளையா வெறுப்பை சேர்த்து வைச்சிருக்கான்!இதுல அடிக்க வேற செய்யனுமா?,” – அலுத்துக் கொண்டவரிடம்..

“உ...உங்களுக்கு அவரைப் பிடிக்குமா மாமா?” என்றுத் தயக்கத்துடன் வினவினாள் அவள்.

“உன்னை எனக்குப் பிடிக்கும் தான?”

“பிடிக்கும்”

“அப்போ அவனையும் தானம்மா பிடிக்கும்?”

“ம்ஹ்ம்! நான் உங்களுக்கு தங்கை பொண்ணு தான்! ஆனா அவர் சொந்த மகனாச்சே! அப்டின்னா அவர் தானே என்னை விட உங்களுக்கு ஸ்பெஷலா இருக்கனும்?”

“ஸ்பெஷல் தான். ஒத்துக்கிறேன்”

“அப்போ ஏன் மாமா அவரை எப்பவும் திட்டுறீங்க”

“தெரியலம்மா! அவன் மேல நான் காட்டுற கோபம் தான் என் பாசத்தோட அளவு போல!”

“.............”

“எப்போ அவனை வீட்டுக்குக் கூப்பிடலாம்?”

“இப்பவே”

“சரி வா போகலாம்.”

“நி...நிஜமாவா மாமா?”

“ம்ம்” – என்றவரைக் கண்டு முகம் மலர்ந்துக் கடகடவெனத் தயாராகி அவர் முன்பு வந்து நின்றாள் சாரு.

இந்தச் சில நாட்களாக அவள் முகத்தில் அவர் காணாத உற்சாகமும், சந்தோசமும் இன்று டன் கணக்கில் வழிவதைக் கண்டுப் புன்னகையுடனே மருகளுடன் புறப்பட்டார், மகனைக் காண!

இருவரும் ஹரியின் வீட்டை அடைகையில்.. வெளியே செல்லத் தயாராகி வாசலுக்கு வந்த ஹரி தான் முதலில் அவர்களைக் கண்டான்.

அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடியவன் வசந்திடம் விசயத்தைச் சொல்ல.. அவனும் அவசரமாய் வெளியே வந்தான்.

வாசலருகே வந்து கொண்டிருந்தவர்களிடம் விரைந்து சென்றவன்.. தந்தையின் முகத்தைக் கண்டு..

“இந்த வெயில்ல இப்டி நடந்து வராட்டி தான் என்ன இப்போ?, ஏய்.. அறிவில்லையாடி உனக்கு?” – என்று சாருமதியிடம் பாய.. அவளோ.. வாய் பிளந்து அவனை நோக்கி விட்டுப் பின்.. அலட்டிக் கொள்ளாமல் அருகே நின்றிருந்த சாருகேசனையும் நோக்கினாள்.

“ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல! அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு, இப்படி வெளிய வர்ற அளவுக்கு?” – இப்போது நேராக அவரிடமே பாய்ந்தான் அவன்.

மறுபடி ஒரு சண்டைக்கு வழி வகுத்து விடுவானோ என்று பயந்துக் குறுக்கே புகுந்த சாருமதி..

“உங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகத் தான் மாமா வந்திருக்கிறாரு” என்று கூற...

“ஏன், இவர் வந்து அழைச்சாத் தான் நான் வருவேன்னு உன் கிட்ட சொன்னேனா?” – என அவளையே கேள்வி கேட்க.. அடப்பாவி என்று பார்ப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவளுக்கு.

“வராம எங்க போயிடப் போறேன்?, ஒரேடியா இங்கேயே இருந்துடுவேன்னு நினைச்சீங்களா?, அந்த வீட்ல எனக்கும் பங்கு இருக்கு”

தோளைக் குலுக்கிக் கொண்டு கூறியவனைக் கேட்டு.. “வசந்த்த்த்த்த்த்த்த்” என்று பல்லைக் கடித்தாள் சாரு.

அவளைக் கண்டு கொள்ளாமல் தந்தையிடம் திரும்பியவன்..

“இது ஹரி வீடு. இஷ்டமிருந்தா உள்ள வாங்க! இல்லேன்னா இப்டியே நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று கூற.. ஒரு மூலையில் இவர்களனைவரையும் பார்த்தபடிப் பம்மி நின்ற ஹரியைக் கண்டு விட்டு “இல்ல, இவ்ளோ தூரம் வந்துட்டேன்ல?, உள்ளே போய்ட்டு அப்புறமா வீட்டுக்குப் போகலாம்” என்றவர் வீட்டுக்குள் சென்றார்.

வசந்தைத் தவிர மற்ற இருவரும் வியப்பு குறையாமல் அவரைப் பின் தொடர்ந்தனர்.

ஹாலிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு வீட்டைச் சுற்றி நோட்டமிட்டார் சாருகேசன்.

“பரவாயில்ல! வீட்டைச் சுத்தமா வைச்சிருக்கான் உன் நண்பன்! உன்னை மாதிரி இல்ல போல”

“நீங்க என்னைக்கு என் ரூம்க்குள்ள வந்து பார்த்தீங்க?”

பட்டெனப் பதில் கூறிய வசந்தின் காலை மிதித்து அடக்கிய சாரு பார்வையாலே அவனை எரிக்க.. அவளை விட்டுத் தள்ளி நின்று கொண்டான் அவன்.

“சாரு...” – மெல்லிய குரலில் தன்னை அழைத்த ஹரியிடம் அவள் என்னவென்று வினவ..

“உன் மாமா என்ன சாப்பிடுவார்?, காஃபியா டீயா?” என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே..

“ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வா போதும்” என்றார் அவர்.

தன்னிடம் அவர் பேசியதைக் கண்டுத் திடுக்கிட்டு விழித்த ஹரி குடுகுடுவென ஓடிச் சென்று ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினான்.

“நானே இவரைப் பார்த்துப் பயப்பட மாட்டேன்! இவன் ஏன் இவ்ளோ நடுங்குறான்” என்று முணுமுணுத்தான் வசந்த்.

அதன் பின்பு சிறிது நேரம் அமர்ந்து ஹரியிடம் பேச்சுக் கொடுத்து அவனை மேலும் நடுங்க வைத்த மனிதர் பின் தான் கிளம்புவதாகக் கூறி எழுந்தார்.

“நீ வீட்டை வைச்சிருக்கிற விதமும், தனியா குடியிருக்கிற பாங்கும், உன் பொறுப்புணர்ச்சியைப் படம் போட்டுக் காட்டுது! இதைக் கொஞ்சம் உன் நண்பனுக்கும் சொல்லிக் கொடு”

வாசலில் நின்று கொண்டு தன்னிடம் கூறியவரைக் கேட்டு அசட்டுச் சிரிப்புடன் ஹரி, வசந்தை நோக்க.. அவனோ எதுவும் கூறாமல் ஜன்னல் வழி வெளியே வெறித்துக் கொண்டிருந்தான்.

“அப்ப நான் கிளம்புறேன்” என்று விட்டு மகனிடம் “வாடா” என்றார்.

“நீங்க கிளம்புங்க! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு! முடிச்சிட்டு நைட் வர்றேன்”

“பொல்லாத வேலை! பெரிய கலெக்டர் வேலை” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றவரைக் கண்டு நண்பனை முறைத்தான் ஹரி.

இங்கே வந்ததிலிருந்துத் தன் புறம் பார்வையைத் திருப்பாதிருந்தவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சாருவும் வெளியேறினாள்.

அவர் சென்றதும் “ஹப்பாஆஆஆ” என்றபடிப் பொத்தென நாற்காலியில் சாய்ந்த ஹரியைக் கண்டு சிரித்தான் வசந்த்.

“நீயெல்லாம் எப்படித் தான் அவர் முன்னாடி பயமில்லாம பேசுறியோ!”

“பயமா? எனக்கா?”

“உன் கோபமெல்லாம் போயிடுச்சா வசந்த்?”

“எனக்கென்ன கோபம்?”

“டேய்.. டேய்..”

“ப்ச், நான் என்னைக்கு அவர் மேலக் கோபப்படாம இருந்திருக்கேன்?, அவர் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தப்புறம் வீட்டுக்குப் போய்டலாம்ன்ற திட்டத்துல தான் இருந்தேன்”

“அடப்பாவி”

“ப்ச், என்னடா?, அவ்ளோ சொத்து சேர்த்து வைச்சிருக்கிறாரு மனுஷன்? அதையெல்லாம் யார் அனுபவிக்கிறது?, இந்த ராட்சசி அந்தாளோட வளர்ப்பு! ரெண்டு பேருக்கும் சேர்த்து வைக்கத் தான் தெரியுமே தவிர அனுபவிக்கத் தெரியாது! அந்த வீட்லயே யார் பேச்சையும் கேட்காம.. வாழ்க்கையை எனக்குப் பிடிச்ச மாதிரி அனுபவிச்சு வாழ்ற ஒரே மனுஷன் நான் மட்டும் தான்”

“நீ இந்த பூமில வசிக்க வேண்டிய ஆளே இல்லடா வசந்த்”

“நக்கலா?”

“சாரு விஷயம்???” – என்று இழுத்தவனிடம்..

“அவர் என்ன நினைக்கிறாரோ அதைப் பண்ணட்டும்! அவளுக்கு நான் வேணும்ன்னா அவ மாமாவை எதிர்த்து சண்டை போடட்டும்! இனி நான் இந்த விஷயத்துல எதுவும் பண்றதா இல்ல” – என்று தீர்மானமாகக் கூறியவனைக் கவலையுடன் நோக்கினான் ஹரி.

“மனுஷன் என்ன நோக்கத்துல இவனை வீட்டுக்குக் கூப்பிட்றாரோ தெரியலயே” – வாய் விட்டுப் புலம்பியவனின் தலையில் அடித்து..

“பசிக்குது! போய் சமை டா” என்று வசந்த் கூறவும் எழுந்து சமையலறைக்குச் சென்றான் ஹரி.

நண்பனை எண்ணிப் புன்னகைத்தபடியே ஜன்னலருகே சென்ற வசந்த் வாசலிலிருந்த மாமரத்தின் அருகே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த சாருமதியைக் கண்டுப் புருவம் சுருக்கினான்.

அவரை வீட்டில் விட்ட வேகத்தில் ஓடோடி வந்திருக்கிறாள் போலும்! நெற்றி முழுதும் வியர்வை பூத்துக் கிடந்தது. ஏதோ யோசனையுடன் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவளின் அருகே சென்று நின்றான்.

அவனைக் கண்டதும் முக பாவனையை அவசரமாக மாற்றிக் கொண்டு வேறு புறம் நோக்கினாள் அவள்.

அவள் செய்கைகளனைத்தும் சுருக்கிய புருவங்களுடன் நோக்கியபடி “என்ன?” என்றான் அவன்.

“..............”

“எதுக்கு இங்க நிக்குற?”

“............”

“ஏய்ய்ய்ய், உன் கிட்ட தான் கேட்குறேன்” – பொறுமையற்ற குரலில் கூறியவனின் புறம் பார்வையைத் திருப்பிப் பின்...

நான்காய் மடிக்கப் பட்டிருந்தக் காகிதமொன்றைத் தன் இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்தபடி.. தலையைக் குனிந்து கொண்டு.. அவன் முன்பு நீட்டினாள் அவள்.

காகிதத்தைப் பார்த்ததும் அவன் முகம் என்ன மாதிரியான பாவனையை வெளிப்படுத்துகிறதென்பதைப் பார்க்க ஆவல் உந்த.. குனிந்தபடியேத் தன் பெரிய கண்களை மட்டும் உயர்த்தி.. மெல்ல அவனை நோக்கினாள் அவள்.

அவள் பார்வையும், அவள் கையிலிருந்தக் காகிதமும்.. அவன் புருவச் சுருக்கத்தை நீக்கி.. இயல்பாக்க.. உள்ளே அடித்த சாரலில் நனைந்தபடியே.. அவள் கையிலிருந்தக் காகிதத்தை வெடுக்கெனப் பிடுங்கிப் பிரித்தான் அவன்.

ஐ லவ் யூ – சாரு.

கொட்டை எழுத்தில் அவள் காதல்.. அந்தக் காகிதம் முழுதையும் நிறைத்திருந்தது.

காகிதத்தைக் கையில் வைத்தபடியே மூக்கைச் சொரிந்தவனின் இதழோரத்தில் மோகனமாய் ஒரு புன்னகை.

“என்ன இது?” – அதட்டலாய் வினவினான்.

“லவ் லெட்டர்”

“யாருக்கு?”

“உங்களுக்கு”

“யார் எழுதினது?”

“ம்ம்ம், உங்கப்பா!

“ப்ச்” – என முறைத்தவனிடம்..

“சாருன்னு அதுலயே எழுதியிருக்கேனே! பின்ன என்ன கேள்வி?” என்று அவள் கடுகடுக்க..

“உன் மாமா கிட்ட இதைக் காட்டுனியா?” என்று வினவினான் அவன்.

“..........”

“அவர் பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு உறுதி மொழி எடுத்துக்கிட்ட ஆளாச்சே நீ!”

“.......”

“இதை நீ என் கிட்டக் கொடுத்தது தெரிஞ்சு, உன் மாமா பாட்டுக்க, மறுபடி ஆஸ்பத்திரில படுத்துடப் போறார், எதுக்கும் மனசைத் தேத்திக்க! இந்த முறை மனுஷன் பொட்டுன்னு போனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல”

“வசந்த்த்த்த்” – எரிச்சலுடன் கத்தியவளின் முகத்தில் காகிதத்தை எறிந்து..

“என் முன்னாடி என்னைக் காதலிக்குற மாதிரி மயங்கி, உருக வேண்டியது! அப்புறம் அந்தாளு ஐசியூல படுத்துக்கிட்டா.. மனசு மாறி.. அவர் கிட்ட உங்க விருப்பம் தான் என் விருப்பம்ன்னு பாசத்தைப் பொழிய வேண்டியது! என்னை என்ன பொம்மைன்னு நினைச்சியா?, நீ ஆட்டி வைக்குற படி ஆடுறதுக்கு?” – ஆத்திரத்தில் சீறியவனிடம்..

“நீங்க பொம்மையில்ல! மனசாட்சியில்லாத மிருகம்!” என்றுத் தானும் கத்திய சாருமதி..

“ஐசியூல இருக்குற மனுஷன் கிட்ட சண்டை போடுற அளவுக்கு நான் உங்கள மாதிரி தைரியசாலி கிடையாது! அந்த நேரத்துல அவரைச் சமாதானப்படுத்தத் தான் அப்படிச் சொன்னேனே தவிர.. எவனோ ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்துற நோக்கத்துல இல்ல! அப்படியே மாமா என்னைக் கம்பெல் பண்ணியிருந்தாலும்.. விஷம் குடிச்சுத் தற்கொலை பண்ணியிருப்பேனே ஒழிய.. நிச்சயம் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டேன்” – என்று கூற...

என்ன பேச்சுப் பேசுறா என்று கடுப்பாகிப் போன வசந்த் “வாயை மூடு” என்றான்.

“நியாயமா பார்த்தா.. என் மேல நம்பிக்கை வைக்காம போனதுக்கு.. நான் தான் உங்க மேலக் கோப்படனும்! வீட்டை விட்டு வெளிய போய் கஷ்டப்படுறீங்களேன்னு பாவம் பார்த்துத் தேடி வந்தேன்ல? என்னைச் சொல்லனும்” – என்று புலம்பியவள்...

காற்றில் பறந்தோடி விட்டக் காகிதத்தைத் தேடிச் சென்று எடுத்து வந்து..

“ஐ லவ் யூன்னு லெட்டர் எழுதிக் கொடுத்தா.. என் முகத்துல விட்டெறியுறீங்களா?, இனி ஜென்மத்துக்கும் இந்த வார்த்தை என் வாய்ல இருந்து வராது” என்று கர்ஜித்து விட்டு.. விறுவிறுவெனச் சென்று விட..

“சரி தான் போடி” என்றுத் தானும் கோபத்துடன் நகர்ந்து விட்டான் வசந்த்.

ன்றிரவு வீடு திரும்பியவன்.. தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தத் தந்தையைக் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்து “அன்னம்மா” என்று குரல் கொடுத்தபடியே டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

“ராசா... வந்துட்டீங்களாஆஆஆஆஆ?” – என்று வாய் நிறையக் கேட்டபடி அவனருகே வந்து அவன் முகத்தில் திருஷ்டி வழித்த அன்னம்மாவிடம்..

“ஆமா.. நான் போருக்குப் போய்ட்டு திரும்பி வந்திருக்கேன்! நீ திருஷ்டி கழி” என்று அவன் நக்கலடிக்க..

“நீங்க இல்லாம, வீடு வீடாவே இல்ல தம்பி! என்ன இருந்தாலும் இந்த வீட்டோட மகராஜன் நீங்க தான?” என்று பொங்கிய அன்னம்மாவைச் சமாதானப்படுத்தியவன்..

“பசிக்குது! சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை! ரெண்டு வாரத்துக்கும் மேல உன் கை மணத்தை ருசிக்காம என் நாக்கு செத்துப் போய்க் கிடக்கு” – என்று அவசரப்படுத்த..

வேக,வேகமாக அவன் முன்பு அவனுக்குப் பிடித்த ஐட்டங்கள் அத்தனையையும் கடை பரப்பினார் அன்னம்மா.

“இவ்வளவும் எனக்காக செஞ்சியா?” – என்று கண்ணை விரித்தான் வசந்த்.

“நீங்க ராவுக்கு வீட்டுக்கு வரப் போறதா மதிக் கண்ணு சொல்லுச்சு! அதான் எல்லாஆஆம் பண்ணி வைச்சுட்டேன்” என்றவரிடம் புன்னகைத்து உண்டபடியே...

“எங்க அவ?” என்று விசாரித்தான்.

“மேல அறையில தான்! என்னமோ தெரியல! அது முகமே சரியில்ல தம்பி. உம்முன்னே இருக்கு”

“ப்ச், அவ மூஞ்சியே அப்படித் தான் அன்னம்மா! அவளையெல்லாம் நீ கண்டுக்காத! ரெண்டு வாரமா வீட்டை விட்டு வெளியே போனது தான் நான் தான்! அதனால எனக்குத் தான் உன் ஸ்பெஷல் கவனிப்பெல்லாம்! புரிஞ்சதா?” என்று அவன் மிரட்ட விரிந்த சிரிப்புடன் வேகமாய்த் தலையாட்டினார் அன்னம்மா.

இருவரையும் கண்டபடியே ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தார் கேசன்.

உண்டு முடித்துப் பெரிய ஏப்பத்துடன் தந்தையைக் கடந்து சென்றவனை “நில்லு டா” என்று நிறுத்தினார் சாருகேசன்.

“என்னப்பா?”

“உன் கூடக் கொஞ்சம் பேசனும். உட்காரு” – என்றவரிடம் முகம் சுழித்து..

“வயிறு முட்ட சாப்பிட்டிருக்கேன்ப்பா! நல்லாத் தூக்கம் வரும். நான் தூங்கனும்! ஹரி வீட்ல ஏசி இல்ல. கொசுக்கடி வேற! இத்தனை நாளா நான் சரியாக் கூடத் தூங்கல! இன்னிக்கு நான் நல்லாத் தூங்கனும்” என்றான் அவன்.

“ஹ்ம்ம்! இந்த சொகுசெல்லாம் நான் சம்பாதிச்ச காசுல இருந்து தான வந்தது?, பெருசா தனக்குக் காசு,பணம் தேவையில்லன்னு பீத்திக்குவான்! ஆனா.. ஏசியில்லாம தூங்க மட்டும் முடியாதாம்! என்ன பிறவியோ” – உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்தவரிடம்..

“என்னப்பா?” என்றான் அவன்.

“உட்காரு டா”

“பரவாயில்ல! நான் நிக்குறேன்”

“என்ன மரியாதையா?”

அவர் கேள்வியில் கடுப்பாகி அருகிலிருந்த பியானோவின் முன்பு போடப்பட்டிருந்த நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.

“சொல்லுங்க”

“சாருமதிக்கும்,உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு இருக்கேன்”

“நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்போ சொன்னேன்?”

“டேய்ய்...” பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் சீறியவரிடம்...

“ப்ச், இப்போ என்ன கல்யாணத்துக்கு அவசரம் எங்களுக்கு?, அவ படிக்கட்டும்ப்பா! படிச்சு அவ நினைச்ச மாதிரி வேலைக்குப் போகட்டும்! கல்யாணமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்”என்றான்.

“அதுவரைக்கும் நான் உயிரோட இருக்கனுமே”

“அதெல்லாம் இருப்பீங்க”

“வசந்த்.....”

-நிமிர்ந்துத் தன் முகத்தை இயலாமையுடன் நோக்குபவரைக் கண்டுப் பெருமூச்சுடன் எழுந்து சென்று அவர் அமர்ந்திருந்த ஷோபாவில் சாய்ந்தபடி அவர் காலடியில் அமர்ந்தான். வியப்புடன் தன்னை நோக்குபவரிடம்..

“நான் கேட்டேன் டாக்டர் கிட்ட! முறையான சாப்பாடு, எக்ஸர்சைஸோட டென்ஷன் இல்லாத லைஃபை லீட் பண்ணினா, இனிக் குறைஞ்சது 15,20 வருஷத்துக்காவது நீங்க ஆரோக்கியமா இருப்பீங்களாம்” – என்றான்.

“டென்ஷன் இல்லாம வாழத் தான் டா உங்களைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்”

“உங்களுக்கு டென்ஷன் குறைஞ்சிடும்! எனக்கு ஏறிடுமே!”

“ப்ச், வசந்த்....”

“இன்னும் 2,3 வருஷம்ப்பா! நானும் பெரிய ஆள் ஆக வேணாமா?”

“நீ என்ன பெரிய ஆள் ஆகப் போற?”

“ஓரு ஆக்டிங் இன்ஸ்டிடியூட் வைக்கனும்! என்னை மாதிரி நடிப்பு,நாடகத்துல இண்ட்ரெஸ்ட் இருக்குறவங்களுக்கு முழு நேரப் பயிற்சி கொடுத்து.. நிறைய கலைஞர்களை உருவாக்கனும்! சினிமாவோட சேர்ந்து மேடை நாடகங்களும் மக்களை ரீச் ஆகுற மாதிரி ஏதாவது செய்யனும்!”

கண்ணில் மின்னும் கனவோடு கூறிக் கொண்டே சென்றவன்.. தந்தையின் முகம் போன போக்கைக் கண்டுப் பேச்சை நிறுத்தி...

“என்னப்பா?” என்றான்.

“அப்டின்னா என் தொழில்?, கஷ்டப்பட்டு ராப்பகலா நான் உழைச்சு முன்ன கொண்டு வந்தத் தொழிலை யார் எடுத்து நடத்துறது”

“நீங்க தான்”

“ப்ச், முன்ன மாதிரி என்னால அலைய முடியாது டா வசந்த்”

“அப்டின்னா உங்க மருமகளுக்குக் கத்துக் கொடுங்க! அவ எடுத்து நடத்தட்டும்”

“.........”

“பெண் பிள்ளையாச்சேன்னு யோசிக்குறீங்களா?, நாட்டை ஆண்ட இந்திராகாந்தியே பெண் தான்ப்பா”

“நான் அப்படி யோசிக்கல! அவ ரொம்பச் சின்னப் பொண்ணுடா”

“அந்தச் சின்னப் பொண்ணுக்குக் கல்யாணம் மட்டும் பண்ணி வைப்பீங்க! தொழில் கத்துக் கொடுக்க மாட்டீங்களா?, சொல்லிக் கொடுங்கப்பா! அவ உங்களை விட, என்னை விட நல்லாவே மேனேஜ் பண்ணுவா! அவளால முடியாதப்போ நான் வர்றேன்”

“நிஜமாவா டா?”

“ஆமாப்பா! எப்படியும் நான் திறக்கப் போற ஆக்டிங் இன்ஸ்டிடியூட்டுக்கு நீங்க தான் ஸ்பான்சர் பண்ணப் போறீங்க! உங்களுக்கு உதவாம இருப்பேனா?”

“ராஸ்கல்”

“சரி, பேசி முடிச்சுட்டீங்களா? நான் தூங்கப் போகட்டுமா?”

“............”

“இன்னும் என்னப்பா?” – என்றவனிடம் தயங்கி...

“வசந்த்...” என்றழைத்து அவன் முகம் பார்த்தவரிடமிருந்துப் பார்வையைத் திருப்பி நேராக நோக்கியவன்..

“மன்னிப்புக் கேட்டுத் தலையைக் கோதித் தோளைப் பிடிச்சுப் பாசம் காட்டுறேன்ற பேர்ல புதுசா எதுவும் பண்ணிடாதீங்க! நான் ஒன்னும் குழந்தை இல்ல!” என்று கூற.. அவனை முறைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை அவருக்கு.

கொட்டாவி விட்டபடி எழுந்தவன் அவர் முறைப்பை சட்டை செய்யாமல் நகர்ந்து விட்டான்.

மரணப்படுக்கை வரை சென்று வந்தவருக்கு இனியும் மகனைக் கஷ்டப்படுத்தி விடக் கூடாதென்கிற எண்ணம்! ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் படுக்கையில் தந்தையைக் கண்டு விட்டவனுக்கு இனியும் அவர் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்ளக் கூடாதென்கிற எண்ணம்! எப்படியோ! நன்றாக இருந்தால் சரி!

தந்தையுடன் பேசி விட்டு மாடியேறியவன் சாருமதியின் அறைக்கதவைத் தட்டினான்.

“ப்ச், எனக்குப் பசிக்கல! சாப்பாடு வேண்டாம்ன்னு சொன்னேன்ல அன்னம்மா?” – என்றுத் திட்டியபடிக் கதவைத் திறந்தவள்.. கையைக் கட்டிக் கொண்டு நிலப்படியில் சாய்ந்து நின்றவனைக் கண்டுக் கோபமுற்று மீண்டும் கதவைச் சாத்த முற்பட... “ஏய்ய்ய்ய்” எனத் தடுத்து அவளுடன் போராடி அறைக்குள் நுழைந்தவன்.. கதவைச் சாத்தி விட்டு நின்று அவளை முறைத்தான்.

“அப்டின்னா நீ இன்னும் சாப்பிடலயா?” – வசந்த்.

“நீங்க சாப்பிட்டீங்களா?”

“திருப்தியா!!!”

“அப்புறம் என்ன?, போய் இழுத்து போர்த்திட்டுத் தூங்குங்க”

“நீயும் வா”

“வாட்ட்ட்ட்ட்???”

“என்ன வாட்?, அன்னைக்கு நைட் ஃபுல்-ஆ என் ரூம்ல தான தூங்குன?”

“சத்தமாப் பேசாதீங்க. மாமாக்குக் கேட்டுடப் போகுது” – பதறிப் போனவளிடம்..

“கேட்டாலும் மனுஷன் கண்டுக்க மாட்டார்!”-என்றான் அவன்.

“என்ன சொல்றீங்க?”

“உனக்கும்,எனக்கும் கல்யாணம் பண்ண ப்ளான் பண்ணிட்டிருக்கார் அவர்”

“நிஜமாவா???” – விழி விரித்தாள் அவள்.

“ஆமா! ஆனா நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்” – தோளைக் குலுக்கிக் கொண்டு அசால்ட்டாகக் கூறியவனிடம் பல்லைக் கடித்து..

“ஏன்???????” – என்றாள்.

“நீ தான் என் மேலக் கோபமா இருக்கியே!”

“அதுக்காக? அதுக்காக வேண்டாம்ன்னு சொல்லிடுவீங்களா?”

“ஆமா! பின்ன! நான் எங்கப்பா மாதிரி கிடையாது! உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்குற ஆளு”

“கிழிச்சீங்க! ப்ச், உங்க கூட என்னப் பேச்சு?, நான் மாமாக்கிட்டயே பேசிக்கிறேன்” – நகரப் பார்த்தவளின் கையைப் பற்றி நிறுத்தியவன்.. “நீ முதல்ல என் கிட்ட சாரி கேளு” என்றான்.

“எதுக்கு சாரி கேக்கனும்?”

“என் கண்ணு முன்னாடியே உன் மாமா கைல சத்தியம் பண்ணி நான் வேண்டாம்ன்னு சொன்னதுக்கு! ஹாஸ்பிடல்ல வைச்சு.. நீங்க தான் என் மனசைக் கலைச்சீங்கன்னு சண்டை போட்டதுக்கு! அப்புறம் அடிக்கடி.. நீங்க மனுஷனே இல்ல, மிருகம்ன்னு வசனம் பேசுறதுக்கு”

“முதல் ரெண்டு ஸ்டேட்மெண்ட்க்கு வேணா சாரி கேட்குறேன்! ஆனா கடைசி வரிக்குக் கேட்க முடியாது”

“ஏன்?”

“ஏன்னா அது நூறு சதவீதம் உண்மை”

“நான் கோபத்துல இருந்தப்போ கொடுத்தக் கிஸ்ஸை வைச்சு என்னை மிருகம்ன்னு முடிவு பண்ணாதடி”

கொஞ்சம் கூட வெட்க மானமின்றி வெளிப்படையாகக் கூறியவனின் அருகே வந்து அவன் வாயை மூடி “என்ன பேசுறீங்க?,வாயை மூடுங்க” என்று மிரட்டினாள் அவள்.

முட்டைக் கண்ணை விரித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்தவளைக் கண்டவனின் இதழ்கள் சிரிப்பில் விரிய..

தன்னருகே நின்றிருந்தவளின் இடையைத் தன் இருகைகளால் பற்றித் தூக்கி அருகிலிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் அமர வைத்தான் அவன்.

“சாரி.. காலைல அப்படிப் பேசுனதுக்கு” – வசந்த்.

“ஒன்னும் தேவையில்ல”

“எங்க அந்த லெட்டர்?”

“ம்ம்ம், கிழிச்சுப் போட்டுட்டேன்”

“எங்க கிழிச்சுப் போட்டன்னு சொல்லு! தேடிக் கண்டுப்பிடிச்சு எடுத்து சேர்த்து வைக்கிறேன். உன்னை மாதிரி!”

“சொல்ல முடியாது”

“ப்ச், சாரு...” – பொறுமையற்றக் குரலில் அழைத்தவனிடமிருந்து விலகி..

எட்டிச் சற்றுத் தள்ளியிருந்த நோட்டுப் புத்தகத்தைக் கையிலெடுத்து அதனுள் இருந்த காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.

முகம் மலர அவள் கொடுத்ததை வாங்கி பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியவனை அவள் கேள்வியாக நோக்க...

“நாளைக்குக் காலைல அப்பா படிக்கிற பேப்பரோடு சேர்த்து இதையும் வைக்கிறேன்! என்னை மட்டும் நீ மாட்டி விட்டேல?, இதையும் அவர் பார்க்கட்டும்” என்றான்.

“பார்க்கட்டும்! நானும் உங்களை மாதிரி.. யெஸ்,ஐ லவ் ஹிம்ன்னு அவர் கிட்ட நேரடியாவே ஒத்துக்குவேன்”- திமிராகக் கூறியவளைக் கண்டு நகைத்து..

“பரவாயில்லயே! தேறிட்ட டி ரொம்ப! சரி, உனக்குப் பார்த்த ராஜகுமாரனை எப்படி சமாளிச்சார் மனுஷன்?” – என்று கேட்டவனிடம் அன்று காலை நடந்ததைக் கூறினாள் சாரு.

“மாமா அவங்கக்கிட்ட என்ன சொல்லி அனுப்பி வைச்சார்ன்னு எனக்குத் தெரியாது”

“ப்ச், அது அவர் பாடு! யாரைக் கேட்டு உனக்கு மாப்பிள்ளை பார்த்தாரு! அனுபவிக்கட்டும்”

“சரி விடுங்க! எப்போப் பார்த்தாலும் அவரைத் திட்டிக்கிட்டு...”

“என்ன இருந்தாலும் உனக்கு என்னை விட அவர் தான் முக்கியம். என்னடி?”

“ம்ஹ்ம் உங்க மேல இருக்குற பாசத்துக்குப் பேரு காதல். அவர் மேல இருக்குற பாசத்துக்குப் பேரு பக்தி.”

“ஓஹோ! விட்டா அவர் கழுத்துல மாலையை மாட்டி சூடம் காட்டிடுவ போல”

“ப்ச், வசந்த்...” – அவன் தோளைக் குத்தியவளின் கரத்தைப் பற்றி.. அவள் விரல்களில் முத்தமிட்டான் அவன்.

வெட்க முறுவலுடன் விலகப் பார்த்தவளைத் தடுத்து... அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி.. காதோர முடிகளை ஒதுக்கி.. அவள் கன்னம் வருடியவன்...

“நேத்து பர்மிஷன் கேட்காம முத்தம் கொடுத்ததுத் தப்புன்னு தோணுச்சு! இப்போ சொல்லு.. கிஸ் பண்ணட்டுமா?” என்று வினவினான்.

அவன் மூச்சுக் காற்று முகத்தில் மோதியதில்.. சுவாசிக்கத் திணறி.. சிலிர்த்து.. சிவந்து... அவள் அனுமதியின்றிக் கிறங்கத் தொடங்கிய இமைகளைப் பிடிவாதமாய்ப் பிடித்து நிறுத்தி... படபடக்கும் நெஞ்சோடுத் தன் கருமணிகளை வேறு புறம் நகர்த்தியவளின் கன்னம் பற்றித் தன் புறம் திருப்பினான் அவன்.

மெல்ல விழி உயர்த்தி அவனை நோக்கியவளின் பார்வையில்.. காதல்,காதல்,காதல் மட்டுமே நிறைந்திருக்க.. புருவம் உயர்த்தி அவள் சம்மதத்தை வினவியவன்.. அவள் அளித்த அனுமதியில் மயங்கி.. அவள் கண்ணோரத்தில் முத்தமிட்டுப் பின் இதழ் நோக்கிக் குனிந்தான்.

இத்தனை நாட்களாக மனதில் மலை போல் குவிந்து கிடந்தக் கோபம்,ஆத்திரம்,கவலை,அழுகை என அத்தனை உணர்வும் இன்று ஒரே நாளில்.. ஆரம்பித்தவராலேயே முடித்தும் வைக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ.. பாரம் குறைந்த அவர்களது இதயத்தின் மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஒலித்த முத்தச்சத்தமே உணர்த்தியது.

டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் சாய்ந்தபடிக் கண் மூடியிருந்தவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு போய்... ஷோபாவில் அமரச் செய்து.. அவளருகேத் தானும் அமர்ந்தான் வசந்த்.

“கல்யாணம் மட்டும் வேணாம்! ஆனா.. இது மட்டும் வேணுமா?” – என்று அவன் தோளில் சாய்ந்தபடி அவள் முணுமுணுக்க..

“அது வேற, இது வேற” என்றான் அவன்.

“எனக்கு எல்லாம் ஒன்னு தான்!” என்று அவள் முறைப்புடன் கூறிய வேளை... அன்னம்மா கதவைத் தட்ட..

“இதோ வர்றேன் அன்னம்மா” – என்றபடி அவன் எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

அவனை அவள் அறையில் எதிர்பார்க்காத அன்னம்மா கண்ணை விரிக்க...

“என்ன அன்னம்மா?” என்று வினவினான்.

“இதெல்லாம் ரொம்பத் தப்பு தம்பி”

“என்னத் தப்பு?, எதையும் பார்த்துட்டியா?” - சந்தேகமாய் வினவியவனைக் கேட்டு..

“வசந்த்த்த்த்” என்று சாரு பல்லைக் கடிக்க..

“ஒரே வீட்ல இருக்குறீங்க ரெண்டு பேரும்! கல்யாணம் முடியுற வரைக்கும் இந்த மாதிரி தனியா சந்திக்கிறது தப்பு ராசா”

“அதுசரி! என்ன, அந்த மனுஷன் வேலையை நீ பார்க்குறியா?, வில்லனா இருந்த அவரே பச்சை கொடி காட்டிட்டார்! இப்போ நீ என்ன தொடங்குற?”

“வசந்த்.. நீங்க முதல்ல கிளம்புங்க! இனிமே இப்படி நடக்காது அன்னம்மா” – குற்ற உணர்வுடன் இடையில் புகுந்த சாருமதி.

“இனிமே இது அடிக்கடி நடக்கும் அன்னம்மா. இதுக்கெல்லாம் நீ பழகிக்க” என்றவன் அவர் கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டை வாங்கிக் கொண்டான்.

இருவரையும் ஒரு மாதிரி நோக்கியபடி அன்னம்மா நகர்ந்து விட.. அவனைப் போகச் சொல்லி வற்புறுத்தியவளை சாப்பிட வைத்து அதன் பின்பே தன் அறைக்குச் சென்றான் அவன்.

வீடு பழையபடி சகஜநிலைக்குத் திரும்பியிருக்க... சாருமதி தனது முதுகலைப் படிப்பின் முதலாமாண்டில் அடியெடுத்து வைத்திருந்தாள். சாருகேசனும் தன் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளைக் கை விட்டு தொழிலைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்.

வசந்த் எண்ணப்படி மாமாவுடன் ஷோ ரூமிற்குச் சென்றுத் தொழிலைக் கற்கவும் துவங்கியிருந்தாள் சாரு.

வசந்த் வழக்கம் போல் நடிப்பு,நாடகம்,புத்தகம் என சுற்றிக் கொண்டிருந்தான். ஆக்டிங் இன்ஸ்ட்டிடியூட்டைப் பற்றிப் பேசிய தந்தையிடம் “அதுக்கெல்லாம் காலமிருக்குப்பா! நிறைய ப்ளானிங் வேணும்! நான் ஒரு ஆளாத் தனியா இறங்க முடியாது, பொறுமையா தான் பண்ணனும்” என்று விட்டான்.

மகன் என்ன செய்கிறான் என்று கேட்கும் ஆட்களிடம் கௌரவமாய்க் கூறிக் கொள்ளும் வேலை எதையேனும் அவன் பார்க்க வேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு! ஆனால் மகன் அவருக்கு நேர் எதிரானவனாயிற்றே! தன் இஷ்டப்படி அவனை ஆட்டி வைக்க முடியாது! அவன் விசயத்தில் கவலைப்படுவதும் வீண் என்றெண்ணிக் கொண்டார்!

அனைத்தும் அதன் போக்கில்.. தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருந்தது.

ந்நிலையில் அவன் நடிக்கும் நாடகமொன்றைக் காண அன்று மாமாவை அழைத்தாள் சாருமதி.

“எனக்கு நாடகம் பார்க்குற அளவுக்குப் பொறுமை கிடையாதும்மா மதி” – வெளிப்படையாக மறுத்தபடி சாருகேசன்.

“ப்ச், தினம் ஒரு பாகவதர் படம் பார்க்குறவர் பேசுற பேச்சா இது?, அவரோட நாடகம் கூட, நீங்க பார்க்குற பாகவதர் படம் மாதிரி தான் இருக்கும் மாமா”

“அப்படியா?”

“ஆமா மாமா! ஒரு தடவை வந்து பாருங்க! உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்! உங்க பையன் சிவாஜி கணேசன் ரேஞ்சுக்குப் பயங்கரமா நடிப்பார்”

“என்னம்மா பயமுறுத்துற?”

“அய்யோ! அவ்ளோ நல்லா நடிப்பார்ன்னு சொன்னேன் மாமா”

“இவ்ளோ பேசுறியே! நீ எப்போ அவன் நாடகத்தைப் பார்த்த?”

“அ..அ..அது.. ஒரு தடவை.. பொருட்காட்சில பார்த்தேன் மாமா”

“ஹ்ம்ம் ஹ்ம்ம்” – முறைத்துக் கொண்டவரைக் கண்டு எரிச்சலுற்றுப் பின் “வாங்க மாமா ப்ளீஸ்! நல்லாயிருக்கும்” என்று விடாமல் பேசி அவரைக் கிளப்பியிருந்தாள்.

அவர் சம்மதம் சொல்லி விட்டத் திருப்தியில் வசந்தைக் காண அவன் அறைக்கு ஓடோடிச் சென்றாள் சாரு.

இலங்கை வானொலி நிலையத்தில் கே.ஜே.யேசுதாஸ் உருகி உருகித் தன் காதலை பாட்டாகப் பாடிக் கொண்டிருக்க.. டிரெஸ்ஸிங் டேபிளின் முன்னே நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் வசந்த்.

அவன் பின்னே சென்று நின்று.. மலர்ந்த முகத்துடன்..

“மாமா இன்னிக்கு உங்க நாடகம் பார்க்க வர்றார்” என்று சந்தோஷமாகக் கூவியவளிடம்.. உதட்டை வளைத்துப் புருவம் உயர்த்தி ‘அடேங்கப்பா,அதிசயம் தான்’ என்பதைப் போல் ஒரு பாவனை செய்தான் அவன்.

“ப்ச், எவ்ளோ பெரிய காரியம் பண்ணியிருக்கேன்! இவ்ளோ தான் உங்க ரியாக்ஷனா?”

காட்டுக்கத்தலாகக் கத்தியவளைக் கண்டு கொள்ளாமல்.. கண்ணாடி காட்டிய அவள் முகத்தில் பார்வையைப் பதித்து...

“உன் பார்வையில் ஓராயிரம்..

கவிதை நான் எழுதுவேன்.. காற்றில் நானே..” – என்று யேசுதாஸோடு சேர்ந்து அவன் பாடத் துவங்க.. கையைக் கட்டிக் கொண்டு சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவள்.

“அவரோட சேர்ந்து நீயுமா வர்ற?” – வசந்த்.

“ஆமா, பின்ன நான் இல்லாமலா? இனி உங்களோட எல்லா நாடகத்துலயும் எனக்கு ஃபர்ஸ்ட் ரோ-ல இடம் வேணும்! நோட் பண்ணி வைச்சுக்கோங்க”

“ம்ஹ்ம்ம்????”

“நிஜமா தான் சொல்றேன்”

“சரி, அப்பா எப்படி ஒத்துக்கிட்டார்?, கூத்தாடுமிடத்திற்கு சான்றோர் எவரும் செல்லார்ன்னு வசனம் பேசுற மனுஷனாச்சே”

“அதெல்லாம் சும்மா! அவர் பாகவதர் ஃபேன்! உங்க நாடகம் அவர் படம் மாதிரி தான இருக்கு?, அதெல்லாம் பார்ப்பார்”

“ஏன் டி என்னைப் பார்த்தா பாகவதர் மாதிரியா இருக்கு?, யாரை யாரோட கம்பேர் பண்ற?”

“ஹிஹி! சாரி வசந்த்”

“நீ சொல்றதும் ஒரு வகைல சரி தான்! பாகவதர் நடிச்ச நாடகங்களைத் தான் நாங்களும் மேடைல நடிக்குறோம்”

“அப்டின்னா நான் கரெக்டா தான் சொல்லியிருக்கேன்! சரி, சீக்கிரம் கிளம்புங்க! எல்லாரும் சேர்ந்து கிளம்பலாம்” – எனக் கூறி செல்லப் பார்த்தவளின் கைப் பற்றித் தடுத்தவன் அவளிடம்..

“நீ இப்படியே வரப் போறியா?” – என்று அவள் அணிந்திருந்த மேக்ஸியைச் சுட்டிக் காட்டினான்.

“ஏன்? இந்த டிரெஸ்க்கு என்ன குறை?”

“ப்ச், மஞ்சள் கலர் தாவணி கட்டிட்டு வாயேன்! ப்ளீஸ்” – கெஞ்சலாகக் கூறியவனை முகம் சிவக்க நோக்கி..

“அப்டி அந்தத் தாவணில என்ன தான் இருக்கோ?” என்று தலையில் அடித்துக் கொண்டவளிடம்..

“அதெல்லாம் உனக்கு சொன்னாப் புரியாது. உன்னால மஞ்சள் தாவணி கட்ட முடியுமா முடியாதா?” – தகராறு செய்யும் நோக்கத்துடன் கேட்டவனிடம் “கட்டுறேன்” எனக் கூறி அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

கார் அருகே அப்பனும்,மகனும் நின்றிருக்க அவசரமாய் வாசலுக்கு ஓடி வந்தாள் சாரு.

மஞ்சள் தாவணியும், காதில் ஜிமிக்கும், தலை நிறையப் பூவுமாய்.. தன் நீண்ட பின்னலைப் பின்னால் போட்டபடி அவசரமாய் ஓடி வந்து நின்றவளைக் கண்டு மையலுடன் புன்னகைத்து.. அவளுக்காகக் கார் கதவைத் திறந்தவனை.. பார்க்கும் பார்க்காத பாவனையில் உள்ளே ஏறியவளுக்கு இதழோரம் சிரிப்பில் துடித்தது.

தானே காரை ஓட்டியவன் ரியர் வியூ மிர்ரரில் அடிக்கடி அவள் முகத்தைப் பார்க்க.. அருகில் அமர்ந்திருந்த மாமாவை நோக்கிக் கண்ணைக் காட்டிப் பல்லைக் கடித்தவளை மேலும் உசுப்பேற்றும் பொருட்டுத் தந்தையை அழைத்தான் வசந்த்.

“அப்பா..”

“ம்ம்”

“சாருவுக்கு இந்தத் தாவணி அழகாயிருக்குல்லப்பா?”

“அவளுக்கென்ன அம்சமா இருக்கா”

“பார்த்தியா அப்பாவுக்கும் இந்தத் தாவணி பிடிச்சிருக்கு” என்றவனை அவள் முறைத்த முறைப்பில்.. தன் 32 பற்களையும் காட்டி அழகாய்ப் புன்னகைத்தபடி சாலையில் பார்வையைப் பதித்தான் வசந்த்.

ஓரளவு கூட்டம் கூடியிருந்த அந்த அரங்கில் தந்தையையும்,காதலியையும் முதல் வரிசையில் அமரச் செய்து விட்டு.. ஒப்பன அறையை நோக்கி நகர்ந்து விட்டான் வசந்த்.

திரை தொங்க விடப்பட்டிருந்த மேடையில்..

திருச்செந்தூர் நொண்டி நாடகம்

மறுமலர்ச்சிக் குழு –என்று எழுதப்பட்டிருக்க.. சுற்றி,சுற்றிப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் மாமனும், மருமகளும்.

சிறிது நேரத்திலேயேத் தன்னருகே வந்து அமர்ந்த ஹரியை வியப்புடன் நோக்கிய சாரு “நீங்க நடிக்கலையா” என்று வினவ..

“ம்ஹ்ம் இன்னிக்கு உன் மாமா மகன் மட்டும் சோலோவா பெர்ஃபார்ம் பண்றான்” என்று கூறினான் அவன்.

அடுத்த சில நிமிடங்களில் மேடையில் தோன்றினான் வசந்த்.

பொன்னி நதியில் நீராடி, நெற்றியில் பட்டையாய் திருநீர் அணிந்து,மார்பில் முத்து மணிகள் ஒளி வீச.. சிவன் துதியைப் பாடியபடி ஒற்றைக்காலுடன் அவன் நொண்டியாக நின்றான்.

மக்களிடையே அறவொழுக்கத்தினை வலியுறுத்த வேண்டி 17-ஆம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த சிற்றிலக்கிய நாடகங்களில் ஒன்று தான் இந்த நொண்டி நாடகம்! ஒற்றைக்காலுடன் தோன்றும் கதையின் நாயகனை அடிப்படையாக வைத்தே இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.

ஒழுக்கமின்மை தன் வாழ்வை எத்தகைய பாதையில் இழுத்துச் சென்றதென்பதை நொண்டியானவன் எடுத்துக் கூறுவதே இந்நாடகத்தின் மையக்கரு. நொண்டியென்கிற தனி கதாபாத்திரம் மட்டுமே மேடையில் தோன்றி தன் வாழ்வில் நடந்த அத்தனை அனர்த்தங்களையும் சபையோருக்குக் கூறுவான். திருட்டு,ஏமாற்று,விபச்சாரம் போன்றவை அக்காலகட்டத்தில் தீஞ்செயலாகக் கருதப்பட்டதை இந்நொண்டி நாடகம் விளக்கிக் கூறும்.

Mono-acting-ஐத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த நாடகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது!

முதற்காட்சியில்..

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாகத் தோன்றும் நம் கதாநாயகன்.. தன் பெற்றோரின் அரவணைப்பில் பாராட்டி,சீராட்டி வளர்க்கப்படுகிறான்.

கல்வி,உத்தியோகம் என எதிலும் பற்றின்றி தான்தோன்றித்தனமாய் சுற்றித் திரிபவனை மண வாழ்வில் பிணைத்து வைக்கின்றனர் அவன் பெற்றோர்.

இளமையின் மோகத்தில், பருவ தாபத்தில் தன் மனைவியுடன் குடித்தனம் நடத்துபவனுக்கு.. நாட்கள் செல்லச் செல்ல அவளிடமும் பற்றற்றுப் போய் விடுகிறது.

அந்தி வானமும், செடியும்,கொடியும்... நிலவும்,மலரும்.. ஏன் தன் கண்ணுக்கு மட்டும் அழகாய்த் தெரியவில்லை என சபையோரிடம் கேட்டுப் பாட்டாகப் படிக்கிறான். உண்ணும் உணவிலும், உறங்கும் படுக்கையிலும் தனது திருப்தியற்றத் தன்மையை,மகிழ்ச்சியின்மையை நகைச்சுவையோடு விளக்குகிறான்.

அடுத்த காட்சியில்.. வீட்டில் எவரிடமும் சொல்லாமல்.. பொன்னையும்,பொருளையும் எடுத்துக் கொண்டு நிம்மதியைத் தேடி ஓடி விடுகிறான்.

நாடு நாடாகப் பயணப்படுபவன் வழியில் சிலரை நண்பர்களாக்கிக் கொள்கிறான். கொலை கொள்ளையெனக் காமுகர்களாகத் திகழ்பவர்களின் வலையில் வீழ்ந்துத் தீயவனாகி விடுகிறான்.

பாறையொன்றில் படுத்துக் கொண்டுக் கால் மேல் கால் போட்டபடி வாயில் சுருட்டுடன்.. “காலமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்தப் பையடா” என உற்சாகமாய்ப் பாடுபவனைக் கண்டுக் கை தட்டுகிறது கூட்டம்.

அடுத்த காட்சியில் கள்வனாய் உருமாறி மேடையில் நிற்கிறான்.

வீட்டிலிருந்துக் கொண்டு வந்தப் பொன்னும்,பொருளும் முழுதாய்த் தீர்ந்து போன நிலையில்.. பசியைப் போக்கத் திருடத் துவங்குகிறான் நொண்டி.

தலையில் கட்டியத் துண்டுடன்,கன்னங்களில் பரவிக் கிடந்தத் தாடியும், சிவந்த கண்களுமாய்.. கொலைப் பட்டினியின் விளைவால்.. கொலைவெறியுடன் காட்சி தந்தவன்.. தன் கருமணிகளை இங்குமங்கும் உருட்டியபடி மதில் ஏறிக் குதிக்கிறான்.

அப்பட்டினி வேளையிலும் சுறுசுறுப்பாய் செயல்பட்ட மூளையுடன் வெற்றிகரமாக.. ஒரு மூடைப் பொன் திருடுபவன்.. தன் நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டு மதுவுக்கும்,மாதுவுக்கும் அடிமை ஆகிறான்.

தாசி வீட்டில் அடிமையாகக் கிடப்பவன் கடைசியில் திருடிய பொருள் அத்தனையையும் இழந்துத் துன்பத்துக்குள்ளாகிறான்.

அவன் குடியும்,கூத்துமாயிருந்த பொழுதில் அவனோடு கூடிக் களித்தப் பரத்தையானவள்.. அவன் பொருள் இழந்து நிற்கையில்.. அவனைத் துரத்தியடிக்கிறாள்.

கலைந்து போன பரட்டைத் தலையும், வெற்று மார்புமாய்.. வாசலில் வந்து விழும் நொண்டியின் முகத்தில் கோபமும்,ரௌத்திரமும் தாண்டவமாடுகிறது.

அடுத்த காட்சி: தண்டனைக்குள்ளாதல்.

பரத்தையரும் துரத்த நேர்ந்தத் தன் அவலநிலையை எண்ணிக் கோபம் கொள்ளும் நொண்டி, மேலும் பொருள் ஈட்ட நினைத்து மறுபடி திருடுகிறான்.

அரசனின் குதிரையென்று அறியாமல்.. காட்டு வழியே நின்றிருந்தக் குதிரையொன்றை அவன் திருட முயல.. பிடிபடுகிறான் காவலாளிகளிடம்.

“நாட்டை ஆளும் மன்னனின் புரவியையே திருட நினைத்தாயா?” எனக் கேட்டு அவனை அடித்துத் துன்புறுத்தும் காவலாளிகள், மாறுகால் மாறுகை வாங்கியதில்.. தன் கால்களையும்,கைகளையும் இழந்து வலியால் துடி,துடிக்கிறான்.

கைகளைப் பின்னேக் கட்டியபடி.. மண்டியிட்டுத் தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் கைகள் துண்டிக்கப்பட்ட நொடி, ஆஆஆஆஆஆ-வெனக் கத்திக் கொண்டுக் கீழே விழுபவனின் கால்களும் தொடர்ந்து வெட்டப்பட.. வலியில் கதறுபவனைக் கண்டு அவையோரின் கண்களில் நீர் சேர்கிறது.

அடுத்த காட்சியில்..

மருந்துகளின் சாறு முகத்தில் தெறிக்க மெல்லக் கண் விழிக்கிறான் நொண்டி. நல்லவர் ஒருவரால் தான் காப்பாற்றப்பட்டு இன்று உயிருடன் இருப்பதையும் எண்ணிக் கண்ணீர் சிந்துகிறான்.

அவருடைய வழிகாட்டுதலின் பேரில்.. திருச்செந்தூர் முருகனின் இறைதலத்தை அடைகிறான்.

கடவுள் அமைத்துக் கொடுத்த நல்வாழ்வின் பயனை அனுபவிக்காமல்.. புத்தியிழந்து போய்... ஏமாற்றிப் பொன் திருடி, பரத்தை தேடி, அற வழி தவறித் தான் அனுபவித்த அத்தனை வேதனைகளையும் பாட்டாகப் பாடி.. அந்த ஆறுமுகத்தானிடம் மோட்சம் வேண்டி சரணடைகிறான்.

தன் தவறை உணர்ந்தவனின் கண் முன் தோன்றும் காங்கேயன்.. அவன் இழந்த கை,கால்களைத் திரும்பக் கொடுக்க.. நெகிழ்ச்சியும்,மகிழ்ச்சியுமாய்.. அவரைப் போற்றிப் பாடுபவன்.. கடைசி வரை ஒழுக்க சீலனாக வாழ்கிறான் என்பதோடு நாடகம் முடிகிறது.

ஒற்றை ஆளாய் மேடையில் நின்று.. கதையில் வந்த அத்தனை கதாப்பாத்திரத்தின் வசனத்தையும் தானே பேசி.. ஒவ்வொருக்கான பாவனையையும் தனித்தனியாய் அடுத்தடுத்து வெளிப்படுத்தி.. அம்மேடையையே ஆண்டவனை வியப்பு கூறாமல்.. பிளந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்த சாருகேசன், கடகடவென ஒலித்த கரகோஷத்தின் சத்தத்தில் தன்னிலை அடைந்து சாருமதியை நோக்கினார்.

ஹரி எழுந்து நின்று விசில் அடித்துக் கொண்டிருக்க.. அவனுக்கு அருகில் நின்று உற்சாகமாய் கை தட்டிக் கொண்டிருந்தாள் அவள்.

நாடகம் முடிவுற்று.. அனைவரும் வீடு திரும்புகையில்.. சாருமதி அவனது நடிப்புத் திறமையைப் பற்றி வாய் ஓயாமல் பேசிக் கொண்டு வர.. வசந்தும், கேசனும் அமைதியாய் வந்தனர்.

வீட்டிற்கு வந்திறங்கியதும் நேராகத் தன்னறைக்குச் சென்ற கேசன், எதையோ கையில் எடுத்துக் கொண்டு சாருமதியிடம் வந்தார்.

“அம்மா.. மதி” – கேசன்

“சொல்லுங்க மாமா?” – என்றவளிடம் ஒரு ப்ளாங்க் செக்கை (blank cheque) நீட்டினார்.

வியப்புடன் அவரை நோக்கி என்னவென்று விசாரித்தவளிடம்..

“இதைக் கொண்டு போய் அவன் கைல கொடும்மா. ஏதோ ஆக்டிங் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கனும்ன்னு சொல்லிட்டிருந்தானே! எவ்ளோ வேணாலும் பணம் எடுத்துக்கச் சொல்லு” என்று அவர் கூற..

திகைத்து விழி விரித்து அவரையே ஆச்சரியமாக நோக்கினாள் சாரு.

அவள் விழித்துக் கொண்டு நிற்கையிலேயே டெலிஃபோன் மணியடிக்க... சென்று அதை எடுத்துக் காதில் வைத்தவர்..

“ம்ம் மணி சொல்லுய்யா, நல்லாயிருக்கியா?” எனக் கேட்டு.. “எங்க போயிருந்தேன்னு கேட்குறியா?, என் மகன் நடிக்கிற நாடகத்தைப் பார்க்கப் போயிருந்தேன்! சும்மா சொல்லக் கூடாது. டிகேஎஸ் தோத்துப் போயிருவாருய்யா! அருமையா நடிக்கிறான் பையன்” என்று முழு உற்சாகத்துடன் ஃபோனில் பேச.. நடப்பதையெல்லாம் வியப்பு குறையாமல் பார்த்தபடியே வசந்தைத் தேடிச் சென்றாள் அவள்.

தந்தை ப்ளாங்க் செக் கொடுத்ததையும், ஃபோனில் பேசுவதையும் தன் அறையிலிருந்தேக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தின் முகம் புன்னகையில் மலர்ந்து போயிருந்தது.

சிரிப்பு மாறாமல் சட்டை பட்டனை கழட்டிக் கொண்டிருந்தவனின் அருகே சென்று நின்றாள் சாரு.

“இது என்ன தெரியுமா?”-சாரு

“என்ன?”

“ப்ளாங்க் செக். மாமா கொடுத்தார். இதுல நீங்க எவ்ளோ வேணா பணம் எடுத்துக்கலாமாம்!” – முகத்தை சுழித்தபடி கூறியவளின் கன்னத்தைக் கிள்ளி..

“அதுக்கு ஏன் உன் முகம் இப்படிப் போகுது” என்று வம்பு செய்தான் அவன்.

“என்னையும்,மாமாவையும் பார்த்தா.. பொறாமையா இருக்குன்னு நீங்க அடிக்கடி சொல்வீங்களே.. இப்போ உங்களையும்,அவரையும் பார்க்க எனக்குத் தான் பொறாமையா இருக்கு”

“ஹாஹாஹா”-வென நகைத்தவனிடம் “இதை என்ன செய்ய?” என்று செக்கை காட்டி அவள் கேட்க..

புன்னகை குறையாமல் “நீயே வைச்சுக்கோ” எனக் கூறி அவள் தலையில் தட்டி விட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தான் அவன்.

மகிழ்ச்சியும்,நிம்மதியும் குடிகொண்டிருந்த வீட்டில் கலகலப்புக்குப் பஞ்சமில்லாதிருக்க.. அந்த உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்த அனைவரின் முகங்களிலும் புன்னகைக்குக் குறையில்லை.

இரவு சாப்பாட்டை அனைவரும் சேர்ந்தமர்ந்து உண்டதில் திருப்தி கொண்டு நிம்மதியாய் உறங்கிப் போயிருந்தாள் சாரு.

நள்ளிரவில் யாரோ தன்னை உலுக்கி எழுப்புவதை உணர்ந்து அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தவளின் முன்னே கையைக் கட்டிக் கொண்டு முறைப்புடன் நின்றிருந்தான் வசந்த்.

“என்ன?” – தூக்கம் பறிபோன எரிச்சலில் சுருக்கியப் புருவங்களுடன் வினவியவளிடம்..

“தூக்கம் வராம நான் இங்கக் கடுப்புல இருக்கேன்! நீ மட்டும் நிம்மதியா தூங்குற” – என்று அவன் காய..

வாயைப் பிளந்து ஒரு நொடி அவனை நோக்கியவள் மறு நொடி..

“உங்களுக்குத் தூக்கம் வரலேன்னா.. தூங்கிட்டிருக்கிற என்னை எழுப்புவீங்களா?” என்று பாய்ந்தாள்.

“ப்ச், கோபப்படாத சாரு”

“உங்களுக்கு ஏன் தூக்கம் வரல?”

“தெரியல”

“இப்போ என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

“வெளிய போகலாமா?”

“எங்க?”

“ஏரிக்கு”

“விளையாட்றீங்களா?, மணி 1. பேய்,பூதம் எல்லாம் அங்க தான் சுத்திட்டிருக்கும்”

“பரவாயில்ல. நாமளும் அதுங்களோட சேர்ந்து சுத்தலாம்” – அவள் கையைப் பற்றிப் படுக்கையிலிருந்து எழுப்பியவனைக் கண்டு பதறி..

“வேணாம் வசந்த்! சொன்னாக் கேளுங்க! ஏற்கனவே அன்னம்மா நம்ம 2 பேரும் சிரிச்சுப் பேசுனாலே முறைச்சுப் பார்க்குது. நீங்க இப்படியெல்லாம் பண்றது தெரிஞ்சா.. என்னைத் தான் திட்டும்”

“பரவாயில்ல வாங்கிக்க”

“வசந்த்த்த்த்” – கத்த முற்பட்டவளை அடக்கித் தன் கைகளில் அள்ளிக் கொண்டான் அவன்.

இருவரையும் கண்டு அதிர்வுடன் கதவைத் திறந்த கூர்காவைக் கண்டு கொள்ளாமல் வாசலில் அவளை இறக்கி விட்டுக் கையைப் பற்றியபடி ஏரியை நோக்கி நடந்தான்.

சுற்றி சுற்றிப் பார்த்தபடி பதை,பதைப்புடன் நடந்தவளின் தோளைச் சுற்றிக் கைகளை போட்டுக் கொண்டவனை நிமிர்ந்து முறைத்தாள் அவள்.

பௌர்ணமி நிலவு வானில் ரோந்து சென்று கொண்டிருக்க.. நீரின் ஓசையும்,காற்றிலாடும் மரங்களின் ஒலியையும் தவிர சர்வ நிசப்தம் அங்கே.

அதே அரசமரத்தடி அருகே புல் தரையில் அமர்ந்து அவள் கைப்பற்றி இழுத்துத் தன்னருகே அமரச் செய்தான் வசந்த்.

“இப்படி இருட்டுல வந்து உட்கார்ந்தே ஆகனுமா உங்களுக்கு?, பூச்சி,பொட்டுக் கடிச்சாக் கூட கத்த முடியாது” – புலம்ப ஆரம்பித்தவளின் வாயில் விரல் வைத்துத் தடுத்து.. புன்னகையுடன் அவள் தோளில் சாய்ந்தான்.

சட்டென விறைத்துப் போனவளின் கண்களிலும் மையல் ஏற.. படபடத்த மனதுடன் வான்மதியை நோக்கினாள் அவள்.

“சாரு....”

“ம்ம்ம்”

“ஐ லவ் யூ”

“தெரியும்”

“சந்தோசம், நிம்மதியைத் தாண்டி.. இப்போ மனசு ரொம்ப திருப்தியா இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன்”

“இருக்காதா பின்ன?, ப்ளாங்க் செக் வேற கைல கிடைச்சிருக்கு!”-நக்கலடித்தவளின் தலையில் நறுக்கெனக் குட்டி வைத்தான் அவன்.

“ஆஆஆஆஆ” எனக் கத்தியவள் அவனைத் தள்ளி விட்டு.. எழப் பார்க்க.. அவளைப் பிடித்திழுத்துத் தன் மார்பில் போட்டுக் கொண்டவன்.. அப்படியேப் பின்னால் சாய்ந்து படுத்தான்.

“பஞ்சு மெத்தைல சொகுசா படுக்குறதை விட்டுட்டு.. இப்படிக் கட்டாந்தரைல அட்டகாசம் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க”

“தெரியல! இப்போ இந்த நிமிஷம்.. உன் கூட இங்க இருக்கனும்ன்னு தோணுச்சு”

“வேற என்ன தோணுது?”

“நீ இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா சொல்லுவேன்”

“ப்ச், வசந்த்த்த்”

“நீ இப்படி சிணுங்கிக்கிட்டே என் பேரைச் சொல்றது எனக்கு எவ்ளோ பிடிச்சிருக்குத் தெரியுமா?”

“எவ்ளோ பிடிச்சிருக்கு?”

கேள்வி கேட்டவளிடம்.. தலையை மட்டும் தூக்கி.. தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் பட்டென இதழ் பதித்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.

“ஆரம்பிச்சுட்டீங்களா?”

“ம்ம், இப்படியே கண்டினியூ ஆகும். நீ கோபப்படக் கூடாது”

கேலியாகக் கூறியவனை முறைக்க முயன்று தோற்றுப் பின் அவன் மார்பில் நாடியைப் பதித்து.. அந்தப் பௌர்ணமி நிலவொளியோடு போட்டி போட்டுக் கொண்டுப் பளபளத்த அவன் முகத்தை இமைக்காது நோக்கியவளிடம் “என்ன?” என்று அவன் வினவ.. கூறினாள் அவள்.

“ஐ லவ் யூ வசந்த்...”

                                                            ********************************முற்றும்*************************