அத்தியாயம் - 7
சத்யா!! கமலஹாசனைத் தவிர யாருக்கு இந்தப் பெயர் பொருத்தமா இருந்துட முடியும்? அவர் பெரிய நடிகனா.. உலக நாயகனா இருந்துட்டுப் போகட்டும்! ஆனா.. எனக்கு.. கமல்ஹாசன் என்கிறக் காதலன் மேல தான் ஆசை,மோகம் எல்லாமே! தடித்தக் கீழிமைகளைக் கொண்டப் பெரிய கண்கள் முழுக்க அவர் கொண்டு வர்ற பாவனைகள் எல்லாமே கவர்ச்சியானது தான்! அதிலும் சத்யா! கொஞ்சமாத் தலை முடி,கழுத்துல கருப்புக் கயிறு, முகம் முழுக்கத் தாடியுமா ஆக்ராஷோத்தோட வலம் வர்ற மனுஷனை எப்படிக் காதலிக்காமல் இருக்க முடியும்?
“அந்த முட்டாள்க் கிட்ட சொல்லுங்க! நான் அவளை ரொம்ப....”-அப்டின்னு நிறுத்திட்டு அவர் கொடுக்குற எக்ஸ்பிரஷன் கொள்ளை அழகு! அந்த இடத்துல இளையராஜாவோட பிண்ணனி இசை வேறு!
கமலஹாசனுக்கு ரொம்பப் பொருத்தமான ஆளு இளையராஜா தான்! ரெண்டு பேர் காம்போ-ல வெளி வந்தப் பெரும்பாலான பாடல்கள் ஹிட்! இந்தப் பாட்டு வழக்கம் போல எஸ்.பி.பியோடது! கமல்ஹாசன் காதலை முகத்துல கொண்டு வர்றதுல கில்லாடின்னா, எஸ்,பி,பி குரல்ல கொண்டு வர்றதுல கில்லாடி! பாடல் ஆரம்பிக்குற இடத்துலயே... நம்மள ஏதோ பண்ணிடுவார் ராஜா! இவங்க 3 பேரோட.. லதா மங்கேஷ்கர் இணைந்து வாலியின் வரிகளை உச்சரித்த போது......
“சிந்தாமல் நின்றாடும் செந்தேனே!
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்...!
வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளுத் தென்றல் காற்றும் வீசுது..”
பெரும்பாலான நம் நாட்டுத் தந்தைகளைப் போல் சாருகேசனும் மகன் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாத மனிதராவார்! மனைவியை இழந்த நிலையில் ஒற்றைப் பிள்ளையுடன் தனித்து நின்றவருக்கு எதிர்காலம் குறித்த பயம் நிறையவே இருந்தது.
அந்த எதிர்காலம் என்பது முழுக்க முழுக்க வசந்தைச் சார்ந்தது தான்! அன்னையற்று அநாதையாய் நிற்பவனை எப்படி வளர்க்கப் போகிறோமென்கிறப் பயம் அதிகம் அவருக்கு! மறுமணம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தி சொந்தங்களிடம் பிடிவாதமாக மறுத்து விட்டார். வருபவள், பிள்ளையைக் கொடுமைப்படுத்தினால் என்ன செய்வதென்கிற எண்ணம்!
தொழில் வேறு அப்போது தான் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மகனின் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் ஒரு சராசரித் தந்தையாய் தன் மகனுக்கு சொத்து சேர்த்து வைத்து விட வேண்டுமென்கிற எண்ணம் இவையிரண்டும் சேர்ந்து அவரைத் தொழிலின் பின்னே ஓட வைத்தது.
அன்னம்மாவின் பராமரிப்பில் அவன் பண்பும்,ஆரோக்கியமுமாய் வளர்வது கண்டு அவருக்கு ஏகத் திருப்தி. மகனைப் பார்த்துக் கொள்ளத் தான் அன்னம்மா இருக்கிறாளே என்கிற நினைப்பில் பல நாட்கள் வீட்டுப் பக்கம் செல்லாமல் ஷோரூமிலேயேக் குடியிருந்திருக்கிறார்.
தொழிலில் நன்றாகக் கால் ஊன்றிய பின் ஹப்பாடா-வெனத் திரும்பிப் பார்த்த போது.. மகன் அவரை விட்டு வெகு தூரம் சென்றிருந்தான்.
அன்னையென்று வந்தவள் தான், அவளுக்கானக் கடமையைச் செய்து முடிக்காமல், பாதியிலேயே சொர்க்கம் போய் விட்டாள்! இவரும் கூட அவரது கடமையான காசு சேர்ப்பதைச் சரியாகச் செய்யாமல்.. அவனோடு நேரம் செலவழித்திருந்தால்.. தொழிலில் எப்படி முன்னேறியிருக்க முடியும் என்பது அவரது எண்ணம்! அவனுக்காகத் தானே உழைக்கிறோம்! இதில் அவன் கோபப்பட என்னயிருக்கிறது என்கிற நியாயம் வேறு!
மகனின் ஒட்டாத தன்மை கொடுத்தக் கவலையில் அவர் ஆழ்ந்திருந்த வேளை வந்து சேர்ந்தாள் தங்கை மகளான சாருமதி.
பண்பும்,பணிவுமாய்.. அவர் மீது பாசத்தைத் தாண்டிய பக்தி கொண்டவளை அரவணைத்துக் கொண்டவர்.. மகன் மீது காட்டாத பாசத்தையெல்லாம் இவள் மீது காட்டினார்.
பாவம்! இதுவும் அவருக்கு எதிராய்ப் போய் விட்டது! போதாததற்கு.. தாய்,தந்தையற்று அநாதையாய் நிற்கும் பிள்ளைக்குப் பெற்றோரை நினைத்து ஏக்கம் வந்து விடக் கூடாதென்கிற நல்ல எண்ணத்தில் இவர் மகனைத் தவிர்க்க.. அவன் மொத்தமாய் இவரிடமிருந்து விலகிப் போனான்.
வளர,வளர படிப்பில் கவனமின்றி பொறுப்பற்றுத் திரிந்தவனை எண்ணி மேலும் கலங்கியவருக்கு அவனிடம் பொறுமையாய் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்கிற புரிதல் கொஞ்சமும் இல்லை! அதனால்.. அவர் அதிகம் எதிர்பார்த்த சுமூகநிலைக்கு வாய்ப்பேயில்லை என்றாகித் தினம் வாக்குவாதமும்,சண்டையுமாகச் செல்லத் தொடங்கியது இருவருக்கும்.
அடுத்தத் தலைமுறை உட்கார்ந்து உண்ணுமளவிற்கு ஓடி,ஓடி சொத்து சேர்த்து வைத்து விட்டார். ஆனால்.. அதைக் கட்டிக் காக்கும் பொறுப்பு அவரது மகனைச் சேர்ந்ததல்லவா! படிப்பு முடிந்ததும் அவனை எப்படியேனும் தொழிலில் ஈடுபடுத்தி விட வேண்டுமென்று நினைத்தவருக்கு ஆப்பு வைத்து.. நடிப்பு, நாடகமென இறங்கி விட்டவனைக் கண்டு ஆத்திரம் எல்லை மீறியது அவருக்கு.
அதிலும் தன் தொழில்முறை நண்பன் ராமலிங்கம் அவரிடம் வந்து வசந்த் அவரைச் சந்தித்ததைப் பற்றிச் சொல்லி மகனைப் பொறுப்புடன் வளர்ப்பது எப்படியென்று அறிவுரை வேறு கூறவும் முழுதாய்க் கொதித்துப் போய் விட்டார். போதாதற்கு அந்த ஹரி வேறு! ஒட்டு மொத்த கோபத்தையும் மனதில் அடைத்தபடி வீடு வந்தவருக்கு, மகனைக் கண்டதும் அனைத்தும் பொங்கிக் கொண்டு வெளியே வந்து விட்டது.
அவனுடன் திட்டி சண்டையிட்டுப் போராடிக் கடைசியில் ஓய்ந்து போய் அறையில் அமர்ந்தவருக்கு.. நெஞ்சை அழுத்திப் பிசைவது போல் தொடங்கிய வலியொன்று முதுகு, கழுத்து என அத்தனை இடங்களிலும் பரவ.. மூச்சு விட சிரமமாகிப் போனது. வழக்கமாகப் போடும் மாத்திரையை அள்ளி அவசரமாய் வாயிலிட்டுக் கொண்டவர்.. பின் தாமதிக்காமல் டிரைவரின் உதவியுடன் மருத்துவமனையைச் சென்றடைந்தார்.
அவரது நல்ல காலம்! மருத்துவமனையை அடைந்ததும் வலி அதிகமாக.. உடனடியாக அவரை அனுமதித்த மருத்தவர், பரிசோதனை முடிவில் அவருக்கு வந்திருப்பது மாரடைப்பு எனக் கூறினார். முதல் முறை என்பதால் சேதாரமின்றித் தப்பித்தார் கேசன்.
பணி நிமித்தம் வெளியூர் சென்றிருப்பதாக வீட்டில் கூறி விட்டு டிரைவரின் உதவியுடன் இரண்டு நாட்களை மருத்துவமனையிலேயே கழித்தார்.
அங்கிருந்த இரண்டு நாட்களும் முழுக்க முழுக்க வசந்த் மற்றும் சாருவைப் பற்றிய சிந்தனை தான் அவருக்கு. இயல்பில் அவர் ஆரோக்கியமானவர் என்பதால் இத்தனை நாட்கள் பெரிதாக மருத்துவமனைக்குச் சென்றதில்லை! காய்ச்சல்,தலைவலியையெல்ல்லாம் அவர் பெரிது படுத்தியதுமில்லை.
ஏறிக் கொண்டே போகும் வயதின் காரணமாக சாப்பாட்டில் கட்டுப்பாடு விதித்தது கூட அன்னம்மா தான்! ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்துக் கொள்வார்! அவ்வளவே! அதைத் தாண்டிப் பெரிதாக உடல்நிலையில் அக்கறை எடுத்துக் கொண்டது கிடையாது.
ஆனால்.. இப்போது அவருக்கு தன் ஆரோக்கியத்தைப் பற்றிய பயம் வந்தது. இன்று போல் திடீரெனத் தனக்கு ஏதேனும் ஆகி விட்டால்.. பிள்ளைகளின் நிலை என்னவாகும் என்று அஞ்சினார்.
அப்போதும் கூட அவர் வசந்தைப் பற்றிப் பெரிதாக கவலை கொள்ளவில்லை! ஆண் பிள்ளை! மலை போல் சொத்து இருக்கிறது! எப்படியேனும் பிழைத்துக் கொள்வான்!
ஆனால்.. சாருமதி.. தன்னை நம்பித் தங்கை விட்டுச் சென்ற பொக்கிஷம் அவள்! அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காது சென்றால்.. நிச்சயம் அவர் ஆத்மா சாந்தியடையாது!
அவள் பெயரிலும் சொத்து,பத்துக்கள் உண்டு! அவளது தாய்,தந்தை வழி வந்தது, பின் இவர் வாங்கிப் போட்டது என! ஆனால்.. பணம்,காசு மட்டும் போதுமா ஒரு பெண்ணிற்கு! அதைத் தாண்டிய பாதுகாப்பு வேண்டுமே! வாழ்க்கைத் துணையையன்றி எவரால் அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து விட முடியும்?
நினைப்பதையெல்லாம் படி! திருமணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்று அவளிடம் சொன்னவர் தான்! ஆனால்.. நிலைமை இப்படி மாறுமென்று அவர் கனவா கண்டார்?
படிக்கட்டும்! நினைத்தையெல்லாம் படிக்கட்டும்! திருமணம் செய்து கொண்டு படிக்கட்டும்! அழகான ஆண்மகனாக.. நல்ல தொழில் செய்பவனாக.. பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்க்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும்.. அவர் செய்த முதல் காரியம் மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபட்டது தான்! தன் உற்றார், உறவினர் அனைவரிடமும் அவர் இது குறித்துக் கூறி வைத்திருந்த நிலையில்.. அவரிடம் வந்துத் தன் மகனுக்காகப் பெண் கேட்டார் அவரது உற்ற தோழனான மதிவாணன்.
தனது பட்டப்படிப்பின் இறுதியாண்டிலிருந்த சாருமதிக்கு.. கல்லூரிப் படிப்பு முடியும் தருவாயில் இருந்தபடியால்.. பெரிதாகக் கல்லூரி செல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை. மேற்படிப்புக் குறித்த பரீட்சைகளில் முழுதாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வீட்டிலேயே பெரும்பாலான நாட்களைக் கழித்தாள்.
ஏனோ தெரியவில்லை! அன்றொரு நாள் வசந்த்துடன் அத்தனை பெரிய சண்டையிட்ட கேசன், இப்போதெல்லாம் அவனுடனான சாதாரணப் பேச்சு வார்த்தைகளைக் கூட முற்றிலுமாகத் தவிர்த்து விட்டார். தொழில் கற்றுக் கொள்ள வரும்படித் தன் மகனிடம் வற்புறுத்துவதில்லை அவர்.
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவரைக் காண்கையில் வசந்த்துக்கு சந்தேகம் தான்! ஏதோ ஒரு பெரிய சம்பவத்திற்கு அடித்தளமிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது வரை புரிந்தது. அதனால் பம்மிப் பதுங்கிக் கொண்டிருக்கும் புலி பாயப் போகும் நாளை எதிர்பார்த்திருந்தான்.
ஒரு வெள்ளியன்று மாலை வீட்டுக்குள் நுழைந்தவன் தடதடவென அடித்துப் பிடித்துக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வந்த சாருமதியைக் கண்டு “ஏய்..ஏய்.. மெதுவா” எனக் கத்தியபடியே உள்ளே வந்தான்.
அவசரமாக ஓடிச் சென்றுத் தொலைக்காட்சிப் பெட்டியை அவள் உயிர்ப்பித்த வேளை தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் தொடங்கியிருந்தது.
அதுவரை என்னவோ,ஏதோவென அதிர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் டிவி அருகே செல்லவும், தலையில் அடித்துக் கொண்டான்.
“அப்படி என்ன அவசரம்?, ஒரு நாள் ஒலியும்,ஒளியும் பார்க்காட்டி என்னக் கெட்டுப் போயிடும்” - வசந்த்
“ப்ச், லைஃப்ல சில விஷயங்களை மிஸ் பண்ணவே கூடாது. அதுல இதுவும் ஒன்னு”
-தத்துவம் பேசியவளைக் கண்டு அவன் பல்லைக் கடித்த வேளை..
“விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்..” –எனத் தொடங்கியிருந்தார் எஸ்.பி.பி. (இந்தப் பாட்டோட கன்னடா வெர்ஷன் ‘ஜோதேயலி’ கேட்டுப் பாருங்க!)
கருப்பு நிறத்தில் ஸ்கர்ட்டும், ஆகாய நீல வண்ணத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தவள், அவனைக் கண்டு கொள்ளாது ஓடிச் சென்று ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“காலேஜ்க்கு மட்டம் போட்டுட்டு வீட்ல உட்கார்ந்து என்ன பண்ற நீ?”
“ம்ம்ம், நான் என்ன உங்கள மாதிரியா?, படிப்புக்கு பை,பை சொல்லிட்டு சும்மா ஊர் சுத்துறதுக்கு! நான் ****** எக்ஸாம்க்கு சின்சியரா ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்!”
“பண்ணு பண்ணு!, படிப்பு வாழ்க்கைல ரொம்ப முக்கியம்”
“நக்கலா?”
“படிக்கிறதைத் தவிர ஒரு மண்ணும் வராது! ஆனா பேச்சுக்கு மட்டும் பஞ்சமில்லை! அப்டியே எங்கப்பனை மாதிரிடி நீ!”
“ரொம்பப் பேசாதீங்க”
“ப்ச், அன்னம்மா எங்க?”
“அன்னம்மா காய்,கறி வாங்கப் போயிருக்கு”
“நீயும் கூடப் போக வேண்டியது தான?”
“எதுக்கு?”
“எதுக்கா?, படிப்பு,பாட்டு,டிவின்னு சுத்துனா மட்டும் போதாது! கொஞ்சம் சமையல்கட்டுப் பக்கமும் போகனும்”
“ப்ச், அது என்ன?, பொண்ணுங்க மட்டும் தான் சமையல் கத்துக்கனுமா? ஆம்பளைங்க வாய் குறையாமப் பேசி வக்கணையா சாப்பிட மட்டும் செய்வீங்களா?, பெருசா சமூக சிந்தனை இருக்குற மாதிரி மைக்கே பிடிக்காம பக்கம்,பக்கமா பேசுவீங்களே! பெண் சுதந்திரம், பெண்ணுரிமை இதைப் பத்தியெல்லாம் மூச்சே விட மாட்டேங்கிறீங்க?” – நிறுத்தாமல் பேசியவளிடம்..
“ஷ்ஷ்ஷ்ஷ்!! போச்சு! அப்டின்னா என் எதிர்காலம் ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலவே!” – என்றான் அவன்.
“உங்க எதிர்காலம் ஏன் கஷ்டமா இருக்கனும்?”
“அதான, உனக்கு சமைக்கத் தெரியலேன்னா.. எனக்கென்னக் கஷ்டம்? உன் மாமா கூட்டிட்டு வரப் போற மிஸ்டர்.ராஜகுமாரனுக்குத் தான கஷ்ட,நஷ்டமெல்லாம்?”
-வழக்கமாக வம்பிழுப்பது போல் அவன் கேலி செய்ய.. சாருமதிக்குத் தான் நிமிடத்தில் கண்ணில் நீர் சேர்ந்து விட்டது.
மூக்கு விடைக்கக் குளம் கட்டி நின்றக் கண்ணீருடன் அவனை உறுத்து விழித்தவளைக் கண்டுப் பதறி..
“ஏய்.. ஏய்.. நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்!” என்று அவன் கூற.. வெடுக்கென எழுந்து விறுவிறுவெனத் தன் அறைக்குச் செல்லப் படியேறினாள் அவள்.
“சாரு.. ஏய்.. நில்லு.. நில்லுன்னு சொல்றேன்ல?” – என்றபடி அவளைத் தொடர்ந்து படியேறியவன்.. அறைக்குள் நுழையப் பார்த்தவளின் கையைப் பற்றித் தடுத்தான்.
நிலப்படியருகே அவன் நிற்க.. அறைக்குள்ளே அவள் திரும்பி நின்றிருந்தாள்.
“கையை விடுங்க”
“இப்போ என்னடி உனக்குக் கோபம்?, அன்னைக்கு உன் மாமா வாய் நிறைய இதைச் சொன்னப்போ நீ அமைதியாத் தான கேட்டுட்டிருந்த?” – எரிச்சலுடன் சீறியவனிடம்..
“அமைதியா இல்லாம என்ன பண்ணியிருக்கனும்?” – என்றுத் திமிராய் வினவினாள் அவள்.
“சொல்லியிருக்கனும்! என்னைப் பற்றி... நம்மைப் பற்றி!” – முன்னே திரும்பி நின்றவளின்.. காதோர முடிகளைக் கண்டபடிப் பேசினான் அவன்.
“உங்களைப் பத்தி,நம்மளப் பத்தி சொல்ல என்ன இருக்கு?” – மறுபடி அசட்டையாய் வினவியவளை..
“ஏய்ய்ய்” – எனத் தோள் பற்றித் தன் புறம் திருப்பியவனிடம்..
“ஆமா!, நீங்க இதுவரைக்கும் என் கிட்ட ஏதாவது சொல்லியிருக்கீங்களா?, உங்களைப் பத்தி.. நம்மைப் பத்தி” – என்றாள் அவள் நிதானமாக.
“அதான்.. கொட்டை எழுத்துல எழுதி லெட்டரா கொடுத்தேனே”
“கொடுத்துட்டு.. காதலிக்கத் தோணுதுன்னு சொன்னீங்க! அப்புறம், ஏதோ பேட்டரி லைஃப்-அ டெஸ்ட் பண்ற மாதிரி, இந்த ஃபீலிங்க்ஸ் லாங் லாஸ்டிங்கான்னு தெரிஞ்சுக்கனும்!, நீயும் என்னைக் காதலிக்கனும்ன்னு தோணுதுன்னு சொன்னீங்க! எல்ல்லாஆஆஆஆமே உங்களுக்குத் தோண மட்டும் தானே செஞ்சது? வெளிப்படையா.. சொல்லியிருக்கீங்களா?”
“வெளிப்படையா-ன்னா எப்படி சொல்லனும்?, நீ என்னைக் கட்டிப்பிடிச்ச மாதிரி நானும் உன்னைக் கட்டிப்பிடிச்சு சொல்லட்டுமா?” – அடக்கப்பட்டச் சிரிப்புடன் இதழ் நெளியக் கூறியவனிடம்..
சங்கடத்தில் நாக்கைக் கடித்தபடி வேறு புறம் பார்த்து “அதையே சொல்லிக் காட்டாதீங்க” – என்று முகம் சுருக்கிக் கொண்டாள் அவள்.
“எனக்கு ஹக்கிங்-ல எல்லாம் இன்ட்ரெஸ்ட் கிடையாது. ஒன்லி கிஸ்ஸிங். முத்தம் கொடுக்க எனக்குப் பர்மிஷன் கொடு. நான் எல்லாத்தையும் வெளிப்படையா சொல்றேன்”
தீவிரமாய் அவள் முகம் பார்த்து.. அசால்ட்டாகக் கூறியவனை முறைத்துத் தன் தோளிலிருந்த அவன் கையை விலக்க முற்பட்டவளைத் தடுத்து.. பற்றியிருந்த கரத்தில் அழுத்தத்தைக் கூட்டி.. அவளை நிலப்படியின் மீது சாய்த்தான் அவன்.
அருகே நெருங்கி.. வட்டமாய் விரிந்திருந்தக் கண்கள் வழி அவள் இதயத்தைக் காண முயற்சித்து.. “என்னைத் தாண்டி எந்த ராஜகுமாரனும் உன்னை நெருங்கிட முடியாது! புரிஞ்சதா?” – என்றான்.
பார்வை மாற அவன் முகத்தையே இமைக்காது நோக்கி மெல்லத் தலையாட்டியவளிடம்..
“இப்போ பர்மிஷன் கொடுப்பியா?” என்றான் அவன்.
அவனது கேள்விக்குப் பதிலளிக்காமல் தன் தோளிலிருந்த அவன் கரத்தை அரும்பாடுபட்டு விலக்கி..
“அப்டின்னா நீங்க வாயைத் திறந்து சொல்ல மாட்டீங்க?” என்று மறு கேள்வி கேட்டாள் அவள்.
“எதை?”
“லெட்டர்-ல இருந்ததை” – கன்றிச் சிவந்த முகத்துடன் தயக்கமாய்க் கூறியவளைக் கண்டு உள்ளுக்குள் சிரித்து.. நின்றிருந்த நிலப்படியில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டவன்..
“ம்ஹ்ம் மாட்டேன்” –என்றான்.
“ஏன்-வாம்?” – கோபத்துடன் சிணுங்கியவளிடம்..
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆண்,பெண்ன்னு பெருசா உரிமைப் போராட்டம் நடத்துன?, ஏன் நாங்க மட்டும் தான் இதையெல்லாம் வாய் விட்டு சொல்லனுமா?, நீங்க சொல்ல மாட்டீங்களோ” – என்று அவன் நக்கலாகக் கூற..
“லெட்டர் கொடுத்தது நீங்க. அப்டின்னா நீங்க தான் சொல்லனும்” என்று பாய்ந்தாள் அவள்.
“சொல்ல முடியாது டி! உன்னால முடிஞ்சதைப் பாரு!, கிஸ் பண்ண பர்மிஷன் கேட்டு நிற்கிறவனைக் கொஞ்சமும் மதிக்காம.. கையைப் பிடிச்சு விலக்கி விட்ற! உனக்கு எதுக்குடி நான் சொல்லனும்! சொல்ல மாட்டேன் போ”
-பெரிதாக முறுக்கிக் கொண்டவனை மூச்சு வாங்க முறைத்து விட்டுப் பின் அவன் தோளைப் பற்றி வெளியே தள்ளி அறைக்கதவைச் சாற்றிக் கொண்டாள் அவள்.
“ஏதோ இன்னிக்கு நல்ல மூட்ல இருந்ததால பர்மிஷன் கேட்டேன். அடுத்த தடவை அனுமதியெல்லாம் கேட்க மாட்டேன்! நல்லாத் தெரிஞ்சுக்கோ” – என்று அவன் தொடர்ந்து கத்தியதைக் கேட்டு பற்கள் தெரிய அழகாய்ப் புன்னகைத்துக் கொண்டாள்.
அன்று ஹரியைக் காண அவன் வேலை செய்யும் பத்திரிக்கை ஆபிஸூக்கு வருகை தந்திருந்தான் வசந்த்.
ஆம்! நாடகம் போடுவதிலிருந்துப் பெரிதாக வருமானம் ஈட்ட முடிவதில்லை ஹரியினால்! எப்போதும் போல் தந்தையிடம் சென்று நிற்கவும்.. தன்மானம் இடம் கொடுக்கவில்லை. படிப்பு முடிந்தாயிற்று! வளர்ந்து முழு மனிதனாய் மாறிய பின்பு இன்னமும் கைச் செலவுக்குப் பெற்றோரிடம் நிற்பதா? ஆனாலும் வயிற்றை நிரப்பியாக வேண்டுமே! அதற்காக தினசரி பத்திரிக்கையொன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தான் அவன்.
ஆனால் வசந்த் இந்த விசயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவேயில்லை. ஒரு தந்தையாக சாருகேசன் செய்த ஒரே கடமைப் பணம் சேர்த்தது மட்டும் தான்! அதையும் கூட அனுபவிக்காமல்.. அவன் விலகி நிற்க வேண்டுமா?, கழுதை வயசாச்சு, இன்னும் தகப்பன் காசுல உட்கார்ந்து தின்கிறான் என்ற தந்தையின் பேச்சையெல்லாம் அவன் கண்டு கொள்ளவேயில்லை! சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கு!
இப்போது நடிப்பு,நாடகம் போன்றவற்றில் அடுத்த நிலைக்கு செல்லத் தொடங்கி விட்டான். நாடகக் கலை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியவன் பெரும்பாலான நேரத்தை.. அதைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கப்பதிலேயே கழித்தான்.
கிராமப்புறத் திருவிழாக்களில் நடக்கும் கூத்துக்கள், சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்க்கப் போடப் பட்ட நாடகங்கள், சரித்திரக் கதைகள்,அரசியல்,சமூகம், குடும்பம் சார்ந்த நாடகங்கள் என அத்தனையையும் பற்றி ஊர்,ஊராகச் சென்று ஆராயத் தொடங்கினான்.
அவன் அறிந்த வரையில்.. வழிவழியாக இத்துறையில் ஈடுபட்டிருந்தக் கலைஞர்கள் அனைவரும்.. தொழில் பக்தியைத் தாண்டிய ஒரு பேரார்வத்தை இக்கலையின் மீது கொண்டிருந்தனர். அவர்களது அனுபவங்கள்,வாழ்வியல், நடிக்கும் முறை என அனைத்தையும் பதிவு செய்து புத்தகமாக எழுதத் தொடங்கினான்.
அவன் பதிவு செய்த விசயங்களை பத்திரிக்கையில் பிரசுரம் செய்ய விரும்பினான் ஹரி. இப்படியேனும் மறந்து போன இக்கலை மக்களிடம் சென்று சேர வேண்டுமென்பதற்காக.
அவனது மேலிடமும் இதற்கு ஒத்துக் கொள்ள.. அவர்களது வாராந்திரப் பத்திரிக்கையில் இவனது பதிவுகளைத் தொடராக வெளியிடத் தீர்மானித்திருந்தனர்.
கையில் ஃபைலுடன் உள்ளே வந்தவனை வரவேற்ற ஹரி “இப்பவே ப்ரூஃப் பார்க்க அனுப்புறேன் டா” என்று கூறி அவனிடமிருந்துக் கட்டுரையை வாங்கிச் சென்றான்.
அதன் பின்பு இருவரும் அலுவலகத்திற்கு அருகேயிருந்த டீக்கடையில் தஞ்சமடைந்தனர்.
“வேற ஏதாவது சாப்பிட்றியா டா?” – கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கி நண்பனின் கையில் வைத்தபடி வினவினான் வசந்த்.
“இல்ல வேண்டாம்!” என்ற ஹரி தொடர்ந்து “நீ தம் அடிக்க மாட்டியா டா?” என்று வினவினான்.
“ம்ஹ்ம் ஸ்மெல் பிடிக்காது! ஒரே ஒரு தடவை சும்மா வாய்ல வைச்சு ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணதுக்கே எங்கப்பாப் பல வருஷம் சொல்லிக் காட்டி வெளுத்தெடுத்தார்”
“ஹாஹாஹா, இப்போ எப்படியிருக்கார் மனுஷன்?”
“பேசுறதையே விட்டுட்டார் டா! தெரியல, ஏதோ பெருசா ப்ளான் பண்றார்ன்னு மட்டும் தோணுது”
“உன்னை விட்டுப் பிடிக்கலாம்ன்னு நினைச்சிருப்பார்”
“அவர் என்னை விட்டுப் பல வருஷமாச்சு டா”
“எனக்கென்னவோ அப்டித் தோணல! அவர் உன் மேல ரொம்பப் பாசம் வைச்சிருப்பார்ன்னு நினைக்கிறேன்”
“............”
“வேற எதுவும் நாடக வாய்ப்பு கிடைக்கலையா டா?”
“ஹ்ம், சொல்லனும்ன்னு நினைச்சேன்! இந்த வாரம் சனிக்கிழமை ஒரு ஆசிரமத்துல ஆண்டு விழா நடக்குதுடா! அங்க பெர்ஃபார்ம் பண்ணக் கூப்பிட்டிருக்காங்க!”
“ஓ!! சரி டா”
“பார்ப்போம்! இந்த ஆர்ட்டிகிள் வார,வாரம் வெளி வரத் தொடங்கினப்புறம் எதுவும் மாற்றம் இருக்கான்னு”
“கண்டிப்பா இருக்கும்!”
“நம்புவோம்”
“அப்புறம், என்ன சொல்றா உன் சாரு?”
சிரித்துக் கொண்டே கேட்டவனிடம் முறுவலித்து..
“எப்போ வாயைத் திறந்து ஐ லவ் யூ சொல்லுவன்னு கேட்குறா” என்றான்.
“ஏன்? நீ இன்னும் சொல்லலியா?”
“ம்ஹ்ம்”
“ஏன்?”
“ப்ச், சொல்லத் தோணும் போது தான் டா சொல்ல முடியும்”
“எப்போ தோணும்?”
“தெரியல”
“டேய்... இதெல்லாம் ரொம்ப ஓவர் டா! எத்தனை வருஷமா காதலிக்குற?, லெட்டர்ல-லாம் சொல்ற? நேர்ல சொல்ல மாட்டியா?”
“சொல்றேன்.. சீக்கிரமே” – என்று அவன் கூறுகையிலேயே.. அவன் காதலியானவள் அவனெதிரே வந்து கொண்டிருந்தாள்.
மார்புக்குக் குறுக்காகத் துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்தவளும் இவனைக் கண்டுப் பெரிதாய் புன்னகைத்துப் பின்.. ஹரியைக் கண்டுத் தயக்கத்துடன் வண்டியின் வேகத்தைக் குறைத்தாள்.
வசந்த்தின் பார்வையைத் தொடர்ந்து அவளை நோக்கிய ஹரி அவசரமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டான்.
டீ க்ளாஸை வைத்து விட்டு அவளருகே சென்று, வசந்த் வழி மறித்ததும் இறங்கி நின்றாள் அவள்.
“துப்பட்டாவை இப்படிக் குறுக்காலக் கட்டாத! பார்க்க சகிக்கல” – சிடுசிடுத்தக் குரலில் கூறியவனை முறைத்து..
“அப்டின்னா துப்பட்டா போடாம தான் சைக்கிள் ஓட்டனும்!”- என்றாள் அவள்.
“என்னடி திமிரா?”
“பார்த்ததும் சிரிச்சு ஹாய்,ஹலோன்னு ஏதாவது சொல்லனும். அதை விட்டுட்டு இப்படித் திட்டக் கூடாது.
“ஹாய், ஹலோ தான, இவன் சொல்லுவான்” – என்று அவன் ஹரியைக் கைக் காட்ட.. அவனோ.. இருவரும் பேசிக் கொள்ளும் விதத்தைக் கண்டு சிரித்தபடி.. அருகிலிருந்த வைதேகி காத்திருந்தாள் படத்தின் நூறாவது நாள் போஸ்டரைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் ஹரி....”
“ம்ம்”
“சாரு டா”
“............”
“கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பிப் பாரு” – அவன் தோளைப் பற்றித் திருப்பியவனிடம்..
“வசந்த், எனக்கு வேலையிருக்கு. நான் போறேன் டா” – என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தான் ஹரி.
“உன்னைப் பார்த்து தான் இவன் இவ்ளோ பயப்பட்றான்” – சாருவை நோக்கி வசந்த்.
“நான் என்ன பண்ணேன்” – முணுமுணுத்தபடி சாரு.
“அய்யோ.. அப்டியெல்லாம் ஒன்னுமில்ல. வசந்த்த்த்த்த் நான் போறேன், நீங்க ரெண்டு பேரும் பேசுங்க” – பல்லைக் கடித்துக் கொண்டு கூறிய ஹரி நகர எத்தனிக்க..
“ஒரு நிமிஷம்..” என்று அவனைத் தடுத்தாள் சாரு.
அதிர்ந்து அவள் முகம் நோக்கியவனிடம் “வ..வந்து..” என்று இழுத்துக் கொண்டே வசந்தைப் பார்க்க.. அவனும் என்ன சொல்ல முயல்கிறாள் என்பது போல் அவளை நோக்கினான்.
“அ..அ..அன்னைக்கு நான் அப்படி பிஹேவ் பண்ணியிருக்கக் கூடாது. ரொம்ப சாரி”
தயக்கமாய் மன்னிப்புக் கேட்டவளைக் கண்டுப் பேந்த பேந்த விழித்தான் ஹரி.
“அந்த சம்பவத்துக்கு அப்புறம் நான் ஆலிவ் க்ரீன் கலர்ல டிரெஸ் வாங்கும் போதெல்லாம் உங்களுக்கும் ஒரு செட் வாங்கிடுவேன்”
மெல்லிய குரலில் அவள் கூறியதைக் கேட்டு இருவரும் வாயைப் பிளக்க.. அவள் மேலும் தொடர்ந்தாள்.
“இவர் கிட்ட கொடுக்கலாம்ன்னு நினைப்பேன்! ஆனா.. உங்களுக்குத் தெரியுமே, இவர் ரொம்பப் பேசுவார்ன்னு”
“ஹாஹாஹா” – சத்தமாகச் சிரித்த ஹரியைக் கண்டு இலகுவாகி.. ஒரு பெருமூச்சை வெளியிட்டவள்..
“வெரி சாரி! படிக்காதக் காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிட்டதா ஃபீல் பண்ணினேன் நான்! மாறிட்டு வர்ற காலகட்டத்துல ஏதேதோ விஷயங்கள் எல்லாம் தப்பு இல்லைன்ற லிஸ்ட்ல சேர்ந்துடுச்சு! இது.. இது.. இயற்கையான ஒன்னு தான?, நீங்க என்ன வேணும்ன்னா இப்படி ஆனீங்க?, அதனால.. உங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு தோணிடுச்சு எனக்கு” – என்று கூறவும்.. வாயில் கை வைத்தான் வசந்த்.
“நிஜமா என் கண்ணு முன்னாடி நிற்குறது எங்கப்பன் வளர்த்த சாருமதி தானா?” – வியந்த குரலில் கேட்ட வசந்தை.. அவள் அநியாயத்துக்கு முறைத்து வைக்க..
“டேய்ய் வசந்த்” என்று அதட்டினான் ஹரி.
“நீ.. நீங்க.. ஒன்னுமே சொல்லலையே” – என்றபடி மீண்டும் ஹரியை நோக்கியவளிடம் லேசாய்ச் சிரித்து..
“அந்த டிரெஸ்ஸையெல்லாம் எப்போ எனக்குக் கொடுப்பீங்க?” என்று வினவினான் ஹரி.
முகம் மலரப் புன்னகை கொண்டு உற்சாகத்துடன் “இன்னிக்கே.. இன்னிக்கே இவர் கிட்டக் கொடுக்குறேன்” என்று கூறியவளிடம்..
“ம்ஹ்ம் நீங்க கொடுத்தாத் தான் வாங்கிப்பேன்” என்று ஹரி சொல்ல..
பெரிதாய்ச் சிரித்து “ஓகே! நானே எடுத்துட்டு வர்றேன் ஒரு நாள்” என்று தலையாட்டினாள் சாரு.
“ஹரி என்னை ஒரு தடவை ஓங்கி அடி டா!, நடக்கிறதெல்லாம் கனவு மாதிரி இருக்கு எனக்கு” – சாருவைக் கண்டபடி நண்பன் முன்பு கை நீட்டினான் வசந்த்.
எரிச்சலுடன் ஹரியின் புறம் திரும்பிய சாரு “நான் கிளம்புறேன்ங்க” என்று முறுக்கிக் கொள்ள..
“வசந்த் கொஞ்சம் சும்மா இரேன் டா” என்று மீண்டும் நண்பனை அதட்டி விட்டு..
“டீ குடிக்கிறீங்களா?” என்று கேட்டுப் பின் கடையைத் திரும்பிப் பார்த்து...
“இங்கேயெல்லாம் குடிப்பீங்களா?” என்று வினவினான் ஹரி.
அவன் பார்வையைத் தொடர்ந்து தானும் கடையை நோக்கியவள்..
“குடிக்கிறேன். இல்லேன்னா.. இங்க குடிக்கிறவங்க எல்லாம் உன் கண்ணுக்கு மனுஷங்களாத் தெரியலயான்னு கேட்டு இவர் லெக்சர் கொடுப்பார்” என்று புருவத்தைச் சுளிக்க.. அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான் வசந்த். இருவரையும் கண்டு சிரித்தபடி ஹரி நகர்ந்தான் கடையை நோக்கி.
“என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்..
நீ வந்து கேளாமல்.. ஏங்கும் தமிழ்ச்சங்கம்..
பாடவா.. உன் பாடலை...”
டீக்கடை வானொலியில் எஸ்.ஜானகி ஏங்கிக் கொண்டிருந்தார்.
வேறு புறம் பார்த்தபடி நின்றிருந்த வசந்தின் தோளை மெல்லச் சுரண்டினாள் சாரு.
“என்ன?” – வசந்த்.
“கோபமா இருக்கீங்களா?”
“ஆமா, நான் ஏதோ உன்னை எல்லா விஷயத்துலயும் கம்பெல் பண்ற மாதிரி பேசுற?”
“பின்ன இல்லையா?, காதலிக்கிறியான்னு கேட்காம, காதலிக்கலாமான்னு தான கேட்டீங்க?”
“நான் கேட்டதும் நீ உடனே ஆமான்னு சொல்லிட்ட மாதிரி, பேச்சுக்கு மட்டும் பஞ்சமில்ல டி உன் கிட்ட”
“இப்போ என்ன? முறைச்சிட்டே தான் இருப்பீங்களா? எனக்கு டீயே வேணாம். நான் போறேன்”
“சரி தான் போடி”
அவள் பதிலுக்கு ஏதோ சொல்ல வாய் திறந்த வேளை கையில் டீயுடன் வந்தான் ஹரி.
“இங்க டீ ரொம்ப நல்லாயிருக்கும். தயக்கப்படாம் நீங்க குடிக்கலாம்” – ஹரி
“சும்மா சீன் போடுறா டா ஹரி! குடு. அதெல்லாம் குடிப்பா”
“இன்னும் ஏதாவது பேசுனீங்கன்னா.. டீயை மூஞ்சில ஊத்திடுவேன்” – மிரட்டியபடிக் குடித்தவளின் முகத்தையே நோக்கிய ஹரியிடம்..
“நிஜமாவே டீ ரொம்ப நல்லாயிருக்கு” என்று அவள் கூறியதும் ஹப்பாடாவெனப் புன்னகைத்தான் ஹரி.
“இந்தப் பக்கமா எங்க போற நீ?, அப்பா ஷோ-ரூம்க்கா?”
“ஆமாம்! மாமா இப்போ-ல்லாம் ரொம்ப டல்லாத் தெரியுறார், அவர் பெத்த மகன் தான் அவரைக் கண்டுக்கிறதில்லன்னா.. நானும் அவரைச் சும்மா விட்டுட முடியுமா?”
“அப்டியே தொழிலைக் கத்துக்கிட்டு நீயே கடையை உன் பேர்ல எழுதி வாங்கிக்க! மனுஷன் என்னைத் தொந்தரவு பண்ணாம இருப்பார்”
“அப்போ நீங்க என்ன தான் பண்ணப் போறீங்க”
“எனக்கு என் கலையிருக்கு! போற்றிப் பாடிக் கொண்டாட”
“ஓஹோ! கலை வந்து சோறு போடுமா?”
“அதுக்குத் தான் உன்னைத் தொழில் கத்துக்க சொல்றேன் டி! நீ சம்பாதிப்பியாம்! நான் கலையை வளர்ப்பேனாம்”
“பரவாயில்ல! கொஞ்சம் கூட வெட்கமே படாம, ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்குறீங்க! வெர்ரி குட்”
“ஏய்.. நீ வேணா பாரு, அடுத்த 50 வருஷத்துல.. ஆம்பளைங்க எல்லாம் ஹோம் மேக்கரா மாறிடுவாங்க! பொம்பளைங்க வேலைக்குப் போய் சம்பாதிப்பாங்க!, அந்த மாற்றத்துக்கு அஸ்திவாரத்தை இன்னிக்கு நான் போட்றேன்”
“அடப்பாவி...” – என்றபடி ஹரியும், தலையிலடித்துக் கொண்டபடி சாருவும் அவன் பேச்சைக் கேட்டு கடுப்பாகி நின்றனர்.
இந்திய அரசியலில் பெரும் மாற்றம் உண்டாகிய 1984-ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள் அவை! உடல் நலக் குறைவினால் படுத்த படுக்கையாகி விட்ட மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்றது இந்த காலகட்டத்தில் தான்! அதே போல் மத்தியில்.. இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டு நாடே ஸ்தம்பித்து நின்ற போது.. அவரது மகனான ராஜீவ்காந்தி பிரதமரானதும் இந்த வருட இறுதியில் தான்!
ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் எம்.ஜி.ஆர் உடல்நலம் தேறி எழுந்து வரப் பிரார்த்திக் கொண்டிருந்தது. வானொலி,தொலைக்காட்சி,தினசரி நாளிதழ்கள் என அத்தனையிலும் அவரைப் பற்றிய செய்திகளும்,வதந்திகளும் விடாது பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
இது ஒருபுறமிருக்க, இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டப் பிறகு ஆட்சியேற்ற ராஜீவ்காந்தி மத்தியில் ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலுக்கு வழி செய்து வைத்தார். தேர்தல் கொண்டாட்டம் நாடு முழுதும் ஜரூராய்த் துவங்க இந்திராகாந்தி இறந்ததையும், எம்.ஜி.ஆர் படுக்கையில் கிடப்பதையும் காட்டியே பிரச்சாரம் செய்தனர் கட்சியினர். இறுதியில் ஆஸ்பத்திரியிலிருந்த படியே அமோக வெற்றி பெற்று.. குணமாகி எழுந்து வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் செத்துப் போய் விட்டதாக ஊடகங்கள் பரப்பிய எம்.ஜி.ஆர்.
1985-ன் தொடக்கம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியிருக்க.. ஹரி வேலை செய்த பத்திரிக்கையில் வசந்த் எழுதிய நாடகக்கலை பற்றிய கட்டுரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மறுமலர்ச்சி குழுவினருக்கு ஓரளவு பெரிய மேடைகளில் நாடகம் போடும் வாய்ப்புகளும் வந்த வண்ணமிருந்தன.
இங்கே சாருகேசனோ.. ஓராண்டுக்கும் மேலாக மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபட்டுச் சோர்ந்திருந்த நேரம் அவரைத் தேடி வந்து சந்தித்தார் அவரது நண்பர் மதிவாணன்.
தன் மகன் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டுத் திரும்புவதாகவும், வந்ததும் தனது டெக்ஸ்டைல் தொழிலை எடுத்து நடத்தப் போவதாகவும் சொல்லி, சாருமதியைப் பெண் கேட்டார். தோழனைப் பற்றியும்,அவன் குடும்பத்தைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் உடனே தலையாட்டி விட்டார் சாருகேசன்.
இந்த யோசனைத் தனக்குத் தோன்றாமல் போனதேயெனத் தன்னையே திட்டிக் கொண்டவரிடம்.. இன்னும் மூன்றே மாதங்களில் மகன் வந்து விடுவானென்றும் வந்ததும் நிச்சயத்தை வைத்துக் கொண்டு உடனே திருமணத்தை முடித்து விடலாமென்றும் கூறிச் சென்றார். சொன்னபடி மூன்றே மாதத்தில் மனிதர் திரும்பி வர, உடனே செயலில் இறங்கினார் கேசன்.
அன்று காலை சாப்பாட்டிற்குத் தன்னறையிலிருந்து வெளியே வந்த வசந்த், டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த தந்தை முழு உற்சாகத்துடன் “வதனமே சந்திரபிம்பமோ” என்று பாடியபடி காலை உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருப்பதைக் கண்டு விழி விரித்தான்.
கடந்த ஓராண்டுகளாகவே சிந்தனைச் சிற்பியைப் போல் எந்நேரமும் யோசனையுடனே முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிய மனிதர், இன்று மறுபிறவி எடுத்ததைப் போன்று உற்சாகமும்,துடிப்புமாய் குரல் கொடுக்கவும், புருவத்தைச் சுருக்கிக் கொண்டு அவரைப் பார்த்தபடியே டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
அவன் வந்தமர்ந்ததும் விழி உயர்த்தி அவனைப் பார்த்தவர்..
“அன்னம்மா... உன் வளர்ப்புப் புள்ள டைனிங் டேபிளுக்கு வந்துட்டான்! என்னப்பா வேணும்? முட்டை ஆம்லெட்டா?, சிக்கன் 65-ஆ?” - பழையபடி வம்பு செய்ய..
அவரை ஏற இறங்கப் பார்த்தவன்..
“நான் பொதுவா ஃப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு நான்-வெஜ் எடுத்துக்கிறதில்ல” – என்றான்.
“ஓஹோ! முட்டை நான்-வெஜ்ல சேர்த்தியில்லயோ”
“அதெல்லாம் பாகவதர் காலத்துலேயே வெஜ் ஆயிடுச்சு”
பதில் பேசாமல் முறைப்புடன் சாப்பாட்டை அள்ளி வாயில் ஒதுக்கினார் அவர்.
அன்னம்மா தன் தட்டில் வைத்த இடியாப்பத்தைப் பார்க்காமல் தன் தந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வசந்த்.
“என்ன டா?” – கேசன்.
“இல்ல, இத்தனை நாளா வீட்டுக்குள்ள வரும் போது வாயை வெளியே கழட்டி வைச்சிட்டு வந்தீங்களோ?”
“டேய்..”
“பாண்டிச்சேரி ஆஸ்ரமத்துல தியானத்தை முடிச்சிட்டு ஸ்ட்ரைட்டா வீட்டுக்குள்ள அடியெடுத்து வைச்ச மாதிரி.. அமைதியான முகத்தோட நடமாடிட்டு இருந்தீங்களே! இப்போ என்ன திடீர்ன்னு?”
“ஹாஹாஹா! பரவாயில்ல! அப்பனைப் பிடிக்காட்டியும் என் வேறுபாடு,மாறுபாட்டையெல்லாம் கவனிக்குற நீ”
“அவ்ளோ-லாம் சந்தோஷப் பட்டுக்காதீங்கப்பா!, இவ்ளோ நாள் நிம்மதியா இருந்தேன்! இனி உங்களோட வாக்குவாதம் பண்ணியே வாழ்க்கையை ஓட்டனுமேன்னு தான் கேள்வி கேட்குறேன்”
“எனக்கு மகனாப் பிறந்து நீ ஏகப்பட்டக் கஷ்டத்தை அனுபவிச்சுட்ட! என்ன டா?”
“இல்லைன்னு சொல்லி உங்க மனசைக் குளிர்விக்கிற எண்ணம் எனக்குக் கிடையாதுப்பா! உங்க மனசு குளிரனும்ன்னா.. ரெண்டு செம்பு தண்ணியை எடுத்து நீங்களே நெஞ்சுல ஊத்திக்கங்க! அதை விட்டுட்டு என்னைப் பொய் சொல்ல வைக்காதீங்க”
“அடி.. படவா! நான் உயிரோட இருக்குற வரைக்கும் என் அருமை உனக்குத் தெரியாது டா”
“ப்ச், சும்மா வசனம் பேசாம விஷயத்துக்கு வாங்கப்பா”
அவன் கூறியதும் அத்தனை நேரமிருந்த சிடுசிடுப்பு மாறி முகம் முழுதும் பல்லாக மகனை நோக்கியவர்..
“இந்த வீட்ல சுபகாரியம் நடக்கப் போகுதுடா” எனக் கூறினார்.
“சுபகாரியம்ன்னா?”
“கல்யாணம் டா! என் மருமகளுக்கு! என் மருமக குணத்துக்கும்,அழகுக்கும் ஏத்த ஒரு உத்தமபுருஷனை ஒரு வழியா தேடிக் கண்டுபிடிச்சுட்டேன்! என் சிநேகிதன் மதிவாணனை உனக்குத் தெரியும்ல..?” – என்றவர் தொடர்ந்து ஏதோ கூறிக் கொண்டே செல்ல..
‘என் மருமகளுக்குக் கல்யாணம்’ என்றதிலேயே உறைந்து போனவனுக்கு அடுத்து அவர் கூறிய எதுவும் காதிலேயே விழவில்லை. கோப நரம்புகள் புடைத்தெழுந்ததில் ஒரு நொடி விறைத்துப் போனவன்.. மறு நொடி சட்டென இருக்கையை விட்டு எழுந்து.. விறுவிறுவென மாடிப்படி ஏறிச் சென்று நேராக சாருமதியின் அறையில் நின்றான்.
அவளிடம் ஏற்கனவே சாருகேசன் விசயத்தைக் கூறி விட்டார் போலும்! அழுது அழுது வீங்கிப் போனக் கண்களுடன் சோர்வாய்க் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவனைக் கண்டதும் எழுந்து நின்றவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க முயலவில்லை.
கோபத்திலும்,ஆத்திரத்திலும் மூச்சு வாங்கப் பிடரி முடியைக் கோதியவன்... அவள் புறம் திரும்பி..
“அழுதியா?” என்றான்.
“...........”
“சாரு.. நிமிர்ந்து என்னைப் பாரு..”
பதிலற்று நின்றவளின் கையைப் பற்ற எண்ணி அவன் அவளருகே செல்ல, வேகமாகக் கையை விலக்கிக் கொண்டு இரண்டடிப் பின்னே நகர்ந்தவளிடம்..
“வெளிய போகனும். வா” என்றான்.
எங்கே என்பது போல் நிமிர்ந்து பார்த்தவளிடம்..
“நான் பேசனும். உன் கூட” என்றவன் தொடர்ந்து.. “வா” என்றான்.
பதிலற்று நின்றவளைக் கண்டு விட்டு வெளியே செல்ல அடியெடுத்து வைத்தவன் “என்னால மாமாவைக் கஷ்டப்படுத்த முடியாது” என்று கூறியவளின் குரலைக் கேட்டு அப்படியே நின்று விட்டான்.
ரௌத்திரத்துடன் அவளருகே நெருங்கியவன்...
“கஷ்டப்படுத்த முடியாதுன்னா என்ன அர்த்தம்?, அவர் பார்த்து வைச்சிருக்கிற மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு அர்த்தமா?” – அடிக்குரலில் சீற...
“வசந்த்.....” என்றபடி அதிர்ந்து அவன் முகம் நோக்கியவளுக்கு வார்த்தைகள் உறைந்து... கண்ணில் நீர் இறங்கியது.
பதில் பேசாமல் விறுவிறுவெனக் கீழே இறங்கியவன் வாசலைக் கடந்து வீட்டை விட்டு வெளியே செல்ல... அவனைத் தொடர்ந்து செல்லவிருந்தவளை “மதி” என அழைத்து நிறுத்தினார் கேசன்.
அவர் புறம் திரும்பாமலே நின்றவளிடம் “எங்கே-ம்மா போற?” என்று வினவ.. “சு..சும்மா தான் மாமா.. லேக் வரைக்கும்! காத்து வாங்க” என்று உளறிக் கொட்டியவள்.. அதற்கு மேலும் நிற்காது விறுவிறுவென நகர்ந்து விட்டாள்.
வீட்டிற்கு அருகிலிருந்த ஏரியில்.. ஒரு அரசமரத்தின் கீழ் நின்றிருந்தான் வசந்த்.
குனிந்தத் தலையுடனே வந்து நின்றவளை ஒரு நொடி விடாது நோக்கியவன்.. பின் அவள் கையைப் பற்றித் தன்னருகே இழுத்து நிறுத்தினான்.
“கையைப் பிடிக்க வந்தா.. தள்ளிப் போற?, என்னடி நினைச்சிட்டிருக்க உன் மனசுல?”
பதிலற்று உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி வேறு புறம் பார்த்தாள் அவள்.
“என்னைத் தவிர வேற யாருக்கும் உன் கையைப் பிடிக்கிற உரிமை கிடையாது.” – அடிக்குரலில் அழுத்தமாய்க் கூறியவனைக் கேட்டும், அவன் முகம் பார்க்காதிருந்தவளைக் கண்டுப் பற்றியிருந்த அவள் கையை மேலும் அழுத்தினான் அவன்.
“சாரு... பதில் பேசு...”
அடக்கி வைத்திருந்த அழுகை மெல்ல அவள் கன்னத்தில் இறங்க, தன் இரு கரங்களாலும் அவள் முகம் பற்றித் தன் முகம் நோக்கச் செய்தான் அவன்.
தன் பெரிய கண்கள் முழுக்க அவன் பிம்பத்தை ஏந்திக் கொண்டுக் கண்ணீருடன் நிமிர்ந்து.... கொள்ளை,கொள்ளையானக் காதலை முகம் முழுக்க காட்டியபடி.. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பவனின் விழிகளைச் சந்திக்க முடியாமல்.. பட்டென இமை மூடிக் கொண்டவளிடம்...
“என்னடி?” என்றான் அவன். ஒலித்த குரலில் உரிமையுணர்வு ஓங்கியிருந்தது.
“............”
“சாரு....”
“...........”
“பர்மிஷன் கேட்காம முத்தம் கொடுக்கச் சொல்லி என் மனசு நச்சரிக்க ஆரம்பிச்சிடுச்சு! நீ இப்போ கண்ணைத் திறந்து பார்க்கலேன்னா... என்ன வேணாலும் நடக்கலாம்”
அடிக்குரலில் எச்சரித்தவனைக் கேட்டும் அவள் விழிகளைத் திறக்கவில்லை.
மெல்லிய ஓசையுடன் சலசலத்துக் கொண்டிருந்த ஏரி நீரின் அருகே.. காலை வெயில் முகத்தில் பட விழி மூடி சிலையாய் நின்றவளைக் கண்டவனுக்கு இமைக்கத் தோன்றவில்லை.
அவள் கன்னத்தைப் பற்றியிருந்தக் கையின் பெருவிரலால் அவள் கண்களையும்,கன்னத்தையும் வருடியவன்...
“இப்போ எனக்கு உன் கிட்ட இதைச் சொல்லனும்ன்னு தோணுது. சொல்லட்டுமா?” – என்றான்.
என்ன சொல்லப் போகிறான் என்று புரிந்தது. ஆனாலும் விழி திறக்கவில்லை! எப்போது சொல்லப் போகிறான் என்று ஏங்கிய காலங்களை மூளை கணக்கெடுத்தது. செவி, அவன் கூறப் போகும் வார்த்தைகளைக் கேட்க.. ஆர்வமாய்த் தயாராகியது. லப்டப் இதயம் அவன் குரலுக்காக படபடப்புடன் காத்திருந்தது. நிமிடத்தில் சுறுசுறுப்பாகி விட்ட உடலுறுப்புகளை உணர்ந்து.. உறைந்து போய் நின்றவளின் கன்னத்தை அழுத்தினான் அவன்.
“கண்ணைத் திறந்து என்னைப் பார் சாரு...” – மெல்லிய குரலில் முணுமுணுத்தவனைக் கேட்டு உள்ளம் சிலிர்க்க.. மெல்ல விழி திறந்தவளின் முகத்தை... அடி முதல் நுனி வரைப் பொங்கி எழுந்த காதலுடன்.. பார்வையால் வருடியவன்..
“ஐ லவ் யூ” என்றான்.
இதயத்தில் ஏற்பட்ட நடுக்கம் வெப்பத்தைப் பரப்பியதில்.. உடல் முழுதும் சூடாகிப் போய் விட.. கன்னங்களின் வெம்மையால் படபடக்கத் தொடங்கிய இமைகளை அவசரமாய்க் கீழிறக்கியவளைக் கண்டு... அதற்கு மேல் தாங்காது அவள் முகம் நோக்கிக் குனிந்தான் அவன்.
அவன் முயற்சி புரிந்து.. அவன் கைகளிலிருந்துத் தன் முகத்தை விலக்கி.. அவன் மார்புக்குள் மறைந்து கொண்டாள் அவள்.
“இதுக்குப் பேரு தான் எஸ்கேப்பிஸமா?, சட்டு,சட்டுன்னு இங்க சாய்ஞ்சுக்கிற?, ஆனா.. நான் என் கொள்கைல இருந்துக் கீழிறங்க மாட்டேன்! நோ ஹக்கிங் ஒன்லி கிஸ்ஸிங்” – என்றபடித் தன் இரு கைகளையும் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டவனைக் கண்டு சிரித்தாள் அவள்.
“சாரு...”
“ம்ம்”
“ஐ லவ் யூ...!”
ஒரே வார்த்தைகள் தான்! ஆனால்.. ஒவ்வொரு முறை அவன் கூறுகையிலும் ஒவ்வொரு விதமாக ஒலித்துத் தன்னை சிலிர்க்கச் செய்யும் அதிசயத்தை எண்ணி வியந்து கொண்டிருந்தவளை தொந்தரவு செய்யும் பொருட்டு அவன் மேலும் பேசினான்.
“ஏதாவது பதில் பேசு சாரு, அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
“நான் கேட்டப்போ ஏன் நீங்க சொல்லல?”
“இப்போ சொல்லலாம்ன்னு தான் அப்போ சொல்லல”
“.............”
“மஞ்சள் கலர் தாவணில உன்னைப் பார்த்து.. ஐ லவ் யூன்னு லெட்டர் கொடுத்தப்பவே எனக்குத் தெரியும், இனி வாழ்நாள் முழுசுக்கும் எனக்கு நீ தான்-ன்னு!
“..................”
“நியாயமாப் பார்த்தா.. எங்கப்பா என்னை விட்டுட்டு உன் மேல மட்டும் பொழியுற பாசத்துக்கு.. எனக்கு உன் மேல வெறுப்பு தான் வரனும்! ஆனா.. அந்த மனுஷனோட ரத்தம் எனக்குள்ளயும் ஓட்றதாலயோ என்னவோ.. நானும் உன் மேல அதிகமான அன்பை வைச்சுட்டேன்”
“..............”
“ஊரெல்லாம் தேடி உன் மாமா கூட்டிட்டு வர்ற மாப்பிள்ளை அவரை மாதிரி தத்தியாத் தான் இருப்பானே தவிர ராஜகுமாரனா இருக்க மாட்டான்!, அதனால.. ஒழுங்கா என்னையேக் கட்டிக்க”
“நாம கல்யாணமெல்லாம் பண்ணிப்போமா?” – அவன் தோளிலிருந்துத் தலையை உயர்த்தாமல் கேட்டவளிடம்..
“ஏன், கல்யாணம் பண்ணிக்காமலே வாழலாமா?, எனக்கொன்னும் பிரச்சனையில்ல! எதுக்கும் உன் மாமா கிட்ட ஒரு தடவை கன்சல்ட் பண்ணிக்க”
“ப்ச், விளையாடாதீங்க வசந்த்”
“கல்யாணம் பண்ணிக்காம எப்படிடி குடும்பம் நடத்த முடியும்?, பிள்ளை,குட்டியெல்லாம் பெத்துக்க முடியும்?”
புருவம் சுருக்கி யோசித்தவளின்.. கன்னத்தில் தட்டி..
“நான் ஏற்கனவே சொன்னது தான்! நீ வேலைக்குப் போற! நான் கலையை வளர்க்குறேன்”
“எப்படி வளர்ப்பீங்க?”
“நிறைய ஐடியா வைச்சிருக்கேன்! அதையெல்லாம் இப்போ நான் சொல்ற மூட்ல இல்ல! இப்போ என் மூட்-ஏ வேற! நீ கொஞ்சம் நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தேனா.. என் எண்ணத்தை நிறைவேத்திக்குவேன்!”
அவனது கேலிகளுக்குப் பதிலளிக்காமல்.. தூரத்தில் தெரிந்த ஏரி நீரை வெறித்தவள்.. “வசந்த்...” என்றழைத்தாள்.
“ம்ம்”
“மாமா முன்ன மாதிரி இல்ல வசந்த். ரொம்பத் தளர்ந்து போயிட்டார்”
“எதை வைச்சு சொல்ற?”
“பி.பி மாத்திரையைத் தவிர, இன்னும் வேற ஏதோ மாத்திரைகளும் சாப்பிட்றார்! கேள்வி கேட்டா சரியா பதில் சொல்ல மாட்டேங்குறார்! இந்தக் கொஞ்ச நாளா.. ஆளே மாறிப் போய்.. ரொம்ப அமைதியா இருந்தார். தொழில்ல எதுவும் பிரச்சனையோன்னு நினைச்சு.. அவரோட ஷோ-ரூம்க்குப் போறதை வழக்கமாக்கிக்கிட்டேன்! ஆனா.. அங்கே எல்லாம் ஸ்மூத்தா தான் போயிட்டிருக்கு!” – மேலும் தொடரப் போனவளைத் தடுத்து...
“ப்ச், ஏன் டி என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டியா நீ?, ஐ லவ் யூ சொல்லியிருக்கேன்! பதிலுக்கு நீயும் சொல்லனும். ஆனா சொல்லல! அதைத் தாண்டி வேற ஒன்னு கேட்டேன்! அதுக்கும் பதில் இல்ல! என்ன தான் நினைச்சிட்டிருக்க நீ?” என்றான்.
“வசந்த் நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்”
“சொல்லு”-எரிச்சலுடன் முகத்தைச் சுருக்கினான் அவன்.
“நினைச்சதெல்லாம் படி, கல்யாணத்தைப் பத்திக் கடைசியா யோசிக்கலாம்ன்னு சொன்னவர், ஏன் திடீர்ன்னு கல்யாணப் பேச்சை எடுக்குறார்ன்னு தெரியல” என்று கூறித் தொடர்ந்து “மாமாவை என்னால எப்பவும் கஷ்டப்படுத்த முடியாது. அவர் தான் எனக்கு அம்மா,அப்பா எல்லாம்! அவருக்கு ஏதாவதுன்னா.. நிச்சயம் நான் தாங்கிக்க மாட்டேன்” – என்றாள் அவள்.
“ஏய்ய்.. காலைல கூட அவரைப் பார்த்தேன்! 4 இடியாப்பம்.. தேங்காய்ப் பாலோட ரசிச்சு,ருசிச்சு சாப்பிட்டார்! அவருக்கா எதுவும் ஆகிடப் போகுது?, அவரெல்லாம் இரும்பு மனிதர்! நூறு வருஷத்துக்கு நல்லாயிருப்பார்!”
“அப்பா-ன்ற பாசமே இல்லையா உங்களுக்கு? ஏன் இப்படிப் பேசுறீங்க?”
“ப்ச், இத்தனை வருசமா இல்லாம திடீர்ன்னு எப்படிடி பாசம் வரும்! ஒரு வகையில எனக்கு உன்னைப் பார்த்துப் பொறாமையா கூட இருக்கு. இந்த மாதிரி நான் யார் மேலயாவது பாசம் வைக்கனும்ன்னு தோணுது. அது நிச்சயம் எங்கப்பாவா இருக்க முடியாது சாரு. அந்த ஸ்டேஜை அவரும்,நானும் எப்பவோ தாண்டிட்டோம்!”
“இப்படியே பேசிட்டிருக்காதீங்க ப்ளீஸ்! மாமா ரொம்பப் பாவம்"
“சரி பாவமாவே இருக்கட்டும்! இப்போ என்னன்ற அதுக்கு?”
“நீங்க இந்தக் கல்யாண விசயத்தை எப்படி ஹாண்டில் பண்ணினாலும் சரி, மாமாவை ரொம்ப வருத்தப்பட வைக்காதீங்க”
“சரி டி! நீ சொல்றபடியே கேட்குறேன்.. இப்போ என்னை முத்தம் கொடுக்க விடு..” என்றபடி அருகே வந்தவனை விலக்கித் தள்ளி ஓடியே போய் விட்டாள் அவள்.
வசந்துடன் பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தவளை அன்று மாலை அவள் அறையில் சந்தித்த கேசன்.. அவள் சற்றும் எதிர்பாராத செய்தியைக் கூறினார்.
பரபரப்புடன் மாடியேறி வந்தவரை குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள் சாரு. நேற்றிரவு அவர் திருமண விஷயத்தைப் பற்றிப் பேசிச் சென்றதிலிருந்து மனிதரைக் கண்டாலே மனது அடித்துக் கொள்கிறது அவளுக்கு.
“என்னாச்சு மாமா?, ஏன் இப்படி மூச்சு வாங்க மேலே ஏறி வர்றீங்க?, ஒரு குரல் கொடுத்திருந்தா நானே வந்திருப்பேன்”
“பரவாயில்லம்மா! இன்னும் எத்தனை நாள் நீ இந்த வீட்ல இருக்கப் போற?, உனக்காக மாடியேறி வர்றதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லம்மா”
பாசமாய்க் கூறியவரைக் கேட்டு வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது அவளுக்கு.
“எ...எ..என்ன மாமா சொல்றீங்க?” – தயங்கித் தடுமாறி வினவியளிடம் தன் கையிலிருந்தப் புடவையையும், நகையையும் நீட்டியவர்..
“உடனே இதைக் கட்டிக்கிட்டுத் தயாராகும்மா! இன்னும் அரை மணி நேரத்துல மதிவாணன் குடும்பம் உன்னைப் பார்க்க வர்றாங்க. குமார் தம்பியும் வருது. அதனால அழகா சிங்காரிச்சுக்கோ” – என்று முழுச் சிரிப்புடன் கூற.. ஆடிப்போய் விட்டாள் சாருமதி.
மூளை மரத்துப் போய் செயலற்று நின்றவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரிபடவில்லை. வசந்த் வேறு வீட்டில் இல்லை. இப்படி முன்னெச்சரிக்கை எதுவுமின்றி கேசன் தடாலடியாகக் காரியத்தில் இறங்குவார் என அவள் எதிர்பார்க்கவில்லை.
நிமிடத்தில் நெற்றி முழுவதும் வியர்த்துப் படபடத்துப் போய் செய்வதறியாது விழித்தவளின் கண்களில் நீர் சேரத் தயாராகிக் கொண்டிருந்தது.
“என்னடா அம்மா?” – வாஞ்சையுடன் அவள் தலை கோதியவரின் மீது தோன்றிய நம்பிக்கையில்.. சட்டென நிமிர்ந்து அவர் முகம் நோக்கியவள்..
“எனக்கு.. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் மாமா.. நா..நான்.. உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்” – என்று அழுகைக் குரலில் கூற.. தானும் கலங்கியபடி அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டார் கேசன்.
“எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு இருக்கிறது சந்தோசத்தைக் கொடுக்கும்ன்னாம்மா நினைக்குறா?, சந்திரா கல்யாணத்தப்போ என்ன மாதிரி மனநிலைல இருந்தேனோ.. அதே மனநிலை தான்ம்மா இப்பவும். சந்தோஷம்,துக்கம்ன்னு எல்லா உணர்வும் ஒன்னு கூடி நிற்குது. நீ பெண் பிள்ளைம்மா! என்னைக்கா இருந்தாலும்... வேற ஒரு வீட்ல காலடி எடுத்து வைச்சுத் தான் ஆகனும்.. உன் வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டாமா?, நீ கல்யாணமாகிக் குழந்தைகளோட திருப்தியா வாழ்றதை இந்த மாமன் பார்க்க வேண்டாமா?”
மெல்லிய குரலில் கூறியவரின் அன்பில் நெகிழ்ந்து மேலும் கண்ணீர் சிந்தினாள் அவள்.
“நீ படிப்பை முடிச்சு நினைச்ச மாதிரி லெக்சரர் உத்தியோகத்துல சேர்ந்தப்புறம் பொறுமையா கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு தான்ம்மா நினைச்சிருந்தேன். ஆனா.. ஆனா.. காலம்.. நமக்காகக் காத்திட்டிருக்காது போல”
வருத்தத்துடன் கூறியவரைக் கேட்டு அதிர்ந்து அவர் தோளிலிருந்துத் தலையை நிமிர்த்தி அவர் முகம் நோக்கியவள்..
“மாமா.. எங்கக்கிட்டயிருந்து நீங்க ஏதோ மறைக்கிறீங்க தான?, என்னாச்சு உங்களுக்கு?, ஏதேதோ மாத்திரை எடுத்துக்கிறீங்க! கேட்டா.. சரியா பதில் சொல்ல மாட்டேங்குறீங்க” – என்று கூறவும்.. கண்ணாடியைக் கழட்டிக் கண்ணைத் துடைத்துக் கொண்டவர்.. ஒரு பெருமூச்சுடன்..
“எனக்கு ஒன்னுமில்லம்மா! ஆனா.. என் உடம்பு இன்னும் எத்தனை காலத்துக்கு என் சொல் பேச்சும் கேட்கும்ன்னு தெரியல. அதுக்குள்ள உனக்கு ஒரு நல்லது பண்ண ஆசைப்பட்றேன்” – என்று கூற...
அவரிடம் என்ன சொல்லி மறுக்கவென்று புரியாமல்.. கண்ணீர் விட்டபடி நின்றவளிடம்.. “அதை,இதை யோசிக்காம.. சீக்கிரம் ரெடியாகு டா அம்மா! இந்தக் கல்யாணம் தான் நீ எனக்குக் கொடுக்கப் போற மிகப் பெரிய சந்தோஷம். அதை அனுபவிக்க இந்த நிமிஷத்துல இருந்துத் தயாராகுறான் இந்த சாருகேசன்” எனக் கூறிப் புன்னகைத்து விட்டு படியிறங்கிச் சென்று விட்டார்.
அவர் தன் கையில் திணித்தப் புடவையுடன் சிலையாய் அமர்ந்திருந்தவளைக் கண்டபடி அவள் அறைக்குள் நுழைந்த அன்னம்மா.. பதறிப் போய்..
“என்ன கண்ணு நல்ல காரியம் நடக்கப் போறப்ப இப்படி அழுகுற?,” என்று அவள் கண்ணீரைத் துடைத்தார்.
அப்படியும் விடாது வழிந்த நீருடன் “அவர் எங்க அன்னம்மா?” என்று வினவினாள்.
“யாரு கண்ணு?”
“வசந்த்?”
“தம்பி காலைல வெளிய போனது! ராவுக்குத் தான கண்ணு வீட்டுக்கு வரும்.”
“ப்ச்” – என்றபடி நெற்றியைப் பற்றிக் கொண்டு அமர்ந்தவளிடம்.. “என்ன கண்ணு?” என்று வினவினார் அன்னம்மா.
“எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் அன்னம்மா!”
சாருகேசனிடம் கூற முடியாததை அன்னம்மாவிடமேனும் கொட்டி விடும் நோக்கத்தோடு அவள் வாய் திறந்த வேளை.. கீழே பேச்சுக்குரல்களும் அதைத் தொடர்ந்து மாடியை நோக்கி “அன்னம்மா... சீக்கிரம் மதியைத் தயார் பண்ணிக் கூப்பிட்டு வா” என்று சாருகேசன் கொடுத்த சத்தமும் கேட்டது.
“சரிங்கய்யா” என்று பதில் குரல் கொடுத்த அன்னம்மாவிற்குச் சத்தியமாக சாருமதியின் அழுகைக்கானக் காரணம் புரிபடவில்லை.
“அவங்க எல்லாம் வந்துட்டாங்க கண்ணு! இப்போ போய் இப்படி அழுதா என்ன அர்த்தம்?”
“என்னால முடியாது அன்னம்மா! எனக்குக் கல்யாணம் வேண்டாம்”
“அய்யய்ய.. உன் வயசுப் பொண்ணுங்களுக்குக் கல்யாணத்தை நினைச்சு வர்ற சாதாரண பயம் தான் கண்ணு இது! போகப் போக சரியாப் போயிடும்! கிளம்பு.. மாமா சத்தம் போடப் போறாரு”
அசையாது நிற்பவளைப் பொருட்படுத்தாமல் கட்டிலிலிருந்த சேலையைக் கையில் எடுத்தவர் அதைப் பிரித்தபடி..
“மாப்பிள்ளை கூட பேசிப் பழக ஆரம்பிச்சுப்புறம் இந்தப் பயமெல்லாம் தன்னால ஓடிடும். நீ போ.. முகத்தை கழுவிட்டு வா” என்றார்.
“முடியாது அன்னம்மா”
“கண்ணு.....”
“நான்... நான் அவரைக் காதலிக்குறேன் அன்னம்மா! என்னால.. அவரைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.”
அவள் கூறியதைக் கேட்டுக் கையிலிருந்து சேலையை நழுவ விட்ட அன்னம்மா “என்ன கண்ணு சொல்ற?, யாரைச் சொல்ற” என்று பதற..
“வசந்த்” – என்றாள்.
“நம்ம தம்பியா?” என்று வாய் பிளந்த அன்னம்மா பின் முகம் மலர்ந்து..
“இதை உன் மாமாரு கிட்டச் சொல்ல வேண்டியது தான?, ஆசையா வளர்த்த உன்னை சொந்த மகனுக்கேக் கட்டிக் கொடுக்க அவர் என்ன யோசிக்கவா போறாரு?, நீ ஏன் கண்ணு அவர் கிட்ட சொல்லல?” என்று வினவினார்.
“மாமா இப்படி அவசரமா ஏற்பாடு பண்ணுவார்ன்னு நான் நினைக்கவே இல்ல அன்னம்மா.”
“இப்போ என்ன கண்ணு பண்றது?”
“தெரியல. அவர் வேற வீட்ல இல்ல”
“அன்னம்மா... மதி ரெடியாய்ட்டான்னா கீழ கூப்பிட்டு வா” – மீண்டும் மாடியை நோக்கிக் குரல் கொடுத்தவரைக் கண்டு கையைப் பிசைந்தார் அன்னம்மா.
“கண்ணு, இப்போ போய் உன் மாமாரு கிட்ட எதையும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. உன் மாமாருக்காக நீ இதை உடுத்திக்கிட்டுப் போய் அவங்க முன்னாடி நில்லு. மத்ததைப் பொறவு பேசிக்கலாம்”
“அன்னம்மா......” – கலங்கிய முகத்துடன் நின்றவளைச் சமாதானப்படுத்தி உடை மாற்ற வைத்துக் கீழே அழைத்துச் சென்றார்.
பெண் பார்க்கும் படலத்தைப் போல் பூ,பழத் தட்டுடன் வந்து அவளைச் சங்கடப்படுத்த வேண்டாமென்கிற நோக்குடன் சாதாரணமாக வருகை தந்திருந்தனர் மதிவாணன் குடும்பத்தினர்.
சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்குப் பின்.. பெரியவர்கள் திருமணத்தைப் பற்றிப் பேசத் துவங்க.. தன் மருமகளை நோக்கிய சாருகேசன்..
“இவன் தான்-ம்மா குமரன். நான் உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை! நீ இவனை ஏற்கனவே பார்த்திருக்கேல?” என்று வினவ.. பதில் பேசாமல்.. தலை குனிந்தபடி அமைதியாக நின்றிருந்தாள் சாரு.
“வெட்கப்பட்றா போல இருக்கு! தம்பி, உங்களுக்கு மதிக்கிட்ட எதுவும் பேசனுமா?” – கேசன்
“பரவாயில்ல அங்கிள். அவ ஏற்கனவே ரொம்ப டென்ஷனா இருக்குற மாதிரியிருக்கு”
“ஹாஹாஹா.. நல்ல பையன்ப்பா நீ” – என்றவர் தொடர்ந்து “மதி, அந்தக் காஃபி தட்டை எடுத்து தம்பிக் கிட்ட கொடும்மா” என்று ஏவ.. எந்திரமாய் நடந்து சென்று அவன் முன்பு காஃபியை நீட்டி விட்டுப் பின் மீண்டும் அன்னம்மாவின் அருகே நின்று கொண்டாள்.
அதன் பின் அனைவரும் பொதுவான பேச்சுக்களோடு அமர்ந்திருந்த சமயம் சரியாய் உள்ளே நுழைந்தான் வசந்த். வந்ததும் அவன் கண்டது மதிவாணனையும்,அவர் மகனையும் தான்.
“வாங்க அங்கிள், எப்படியிருக்கீங்க?” என்று முகம் மலர விசாரித்தவன் “ஹே குமார், ஹவ் ஆர் யூ மேன்?” என்று குமரனிடம் கை குலுக்கினான்.
“எங்களை நலம் விசாரிக்கிறது இருக்கட்டும்! உன் ஆர்ட்டிகிளை வாரம் தவறாம ஃபாலோ பண்ணிட்டு வர்றேன் நான்! ரொம்ப நல்லாயிருக்கு வசந்த். அடுத்த முறை நீ நாடகம் நடிக்கும் போது.. எனக்கு முதல் சீட்ல டிக்கெட் வாங்கிக் கொடு. நான் பார்க்கனும்”
பாராட்டிய மதிவாணனிடம் சிரித்து சரியெனத் தலையாட்டியவன் தந்தையின் முகம் போகும் போக்கைக் காண வேண்டி அவர் புறம் திரும்ப.... அவர் அருகே.. புதுச்சேலை, நகை மற்றும் தலை நிறைய பூவுடன்.. குனிந்தத் தலையோடுக் கோபமும், அழுகையுமாய் நின்றிருந்தவளைக் கண்டுத் திடுக்கிட்டு.. ஒரு நொடி உறைந்துப் பின் அங்கிருந்த சூழ்நிலையை ஆராய்ந்தான்.
பெண் பார்க்கும் படலத்திற்கான சம்பிரதாயம் எதுவும் பின்பற்றப்படவில்லையென்றாலும் அச்சூழ்நிலைக் கொடுத்த சுப காரிய வாடை.. அவனால் சுவாசிக்கவே முடியாத அளவிற்குத் திணறலைக் கொடுத்தது.
அனைவரையும் சுற்றி வந்த அவன் பார்வை கடைசியாகத் தந்தையிடம் நின்று “எ...என்ன??” என்று கேட்டவனுக்கு அடுத்து வார்த்தைகள் எதுவும் தொண்டைக்குழிக்குள் கிளம்பாது போக.. முயற்சியை நிறுத்தித் தந்தையின் முகத்தையே நோக்கினான்.
“என்னடா அப்படிப் பார்க்குற?, காலையிலயே சொன்னேனே! மதிவாணன் மகனைத் தான் மதிக்குப் பார்த்திருக்கேன்னு! நான் சொன்னதை நீ எங்க முழுசா கேட்ட?, இவன் என்ன பேசுறது, நான் என்னக் கேட்குறதுன்னு எழுந்துல்ல போய்ட்ட?”
தன் போக்கில் புலம்பிச் சென்றவரைக் கண்டு கொள்ளாமல்.. முதன் முறையாகச் சேலை உடுத்தித் தன் கண் முன்னே நிற்பவளைத் தலை முதல் கால் வரை நோக்கினான் அவன்.
பார்க்கப் பார்க்கக் கண்ணில் வெறி ஏற.. சட்டெனத் திரும்பி குமரனை நோக்கினான். வெகு உரிமையாக.. அவ்வப்போது அவளைத் தீண்டிச் சென்ற அவன் பார்வையில் கை முஷ்டியை இறுக்கிக் கொதித்துப் போனவனுக்கு “உள்ள போடி..” என்று அவளை நோக்கிக் கத்த வேண்டும் போலிருந்தது.
பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் மனநிலை புரியாது.. சாருகேசன் வேறு, தாங்கள் கிளம்புவதாகச் சொன்னவர்களிடம்.. “வந்ததுக்கு அவ தலைல ஒரு முழப் பூவை வைச்சு இந்த சம்மந்தத்தை உறுதி படுத்திட்டுப் போனீங்கன்னா.. நான் ரொம்ப சந்தோசப்படுவேன்” எனக் கூறி.. வசந்தின் ரத்த அழுத்தத்தை அநியாயத்துக்கு எகிற வைத்தார்.
விருட்டெனத் தன் இருக்கையிலிருந்து எழுந்தவனின் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அன்னம்மா அவசரமாக இடையிட்டு..
“ஐயா.. நல்ல நேரம் பார்த்துத் தான்ய்யா பூ வைக்கனும்! வீட்ல முதல்,முதலா நடக்குற சுபகாரியமாச்சே! இன்னைக்குச் சும்மா பொண்ணைப் பார்த்துட்டு போகலாம்ன்னு தான வந்திருக்காங்க?, இன்னொரு நல்ல நாளாப் பார்த்து மத்த சம்பிரதாயமெல்லாம் வைச்சுக்கலாம்.” என்று கூற..
“அதுவும் சரி தான்” எனத் தலையாட்டிய கேசனைக் கண்டு “அது பரவாயில்ல அன்னம்! ரெண்டு பேரும் தம்பதி சகிதமா ஜோடியா நின்னு உன் மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கட்டும்! மனுஷன் சந்தோசப்படுவார்” என்று மதிவாணன் கூற.. மறுக்க முடியாமல் மலங்க விழித்தார் அன்னம்மா.
“போடா குமார், நீயும் வாம்மா” – என்று மதிவாணனின் மனைவி அழைத்தும்.. அசையாமல் நின்றவளைக் கஷ்டப்பட்டு நகர்த்திக் கொண்டு போய் குமரனின் அருகே நிற்க வைத்தார் அன்னம்மா.
ஜோடியாகக் காலில் விழுந்தவர்களைக் கண்டு உள்ளம் பூரிக்கப் புன்னகையுடன் நிமிர்த்தியவர் “நூறு வருஷம் சீரும்,சிறப்புமா நல்ல படியா வாழனும் ரெண்டு பேரும்” என வாழ்த்தித் தன் வளர்ப்பு மகளின் உச்சியில் இதழ் பதித்து.. உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் வடித்தார் சாருகேசன்.
மூன்றாம் மனிதர்களின் முன்பு தந்தையின் மானத்தை ஏலம் போட விரும்பாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நடப்பதைச் சகித்துக் கொண்டிருந்த வசந்த், இந்த நிகழ்வால் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டான்.
எவனோ ஒருவனின் அருகில் ஜோடியாக நிற்பவளைக் கண்டவனுக்குக் காலை அவள் தலை சாய்த்தத் தன் நெஞ்சம் பற்றியெரிவதைப் போன்றொரு உணர்வு! ஓடிச் சென்று அவள் கையைப் பற்றித் தன்னோடே இழுத்துக் கொண்டு செல்லும் வேகம் பிறக்க.. கட்டுப்படுத்த முடியாமல்.. பின்னந்தலையைக் கோதியவனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறை!
நேரம் பார்த்துப் பொங்கியெழக் காத்திருக்கும் சுனாமியாய் மூச்சு வாங்க உச்சகட்ட சீற்றத்துடன் இறுகிப் போய் நின்றிருந்தான்.
“அப்டின்னா நாங்க கிளம்புறோம் சம்மந்தி” என்ற மதிவாணனின் மனைவி வாசலை நோக்கிச் செல்ல.. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியே சென்றனர். கடைசி வரைத் தன் முகத்தை நிமிர்ந்து பார்க்காத சாருமதியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்து சென்ற குமரனின் தலையை வெட்டிப் போட்டு விடும் வெறி வசந்துக்கு.
அவர்களது கார் தங்கள் வீட்டைத் தாண்டும் வரை அமைதியாக நின்றவன், பொறுத்தது போதுமெனப் பொங்கியெழுந்து.. டீபாய் மீதிருந்த டீ-கப்புகளை விளாசித் தள்ளியதில் பெரும் சத்தத்தோடு கப்புகள் அனைத்தும் வாசலுக்குப் பறந்தன.
“என்னடா பண்ற நீ?” – தான் இருக்கும் மனநிலையைக் கெடுக்கும் நோக்குத்தோடு நடந்து கொள்ளும் மகனைக் கண்டுக் கொதித்துப் போய் கேட்டவரிடம்..
“நீங்க யாரைக் கேட்டு இதையெல்லாம் பண்றீங்க?” – என்று முழுக்குரலில் கத்தினான்.
“தம்பி,தம்பி மெல்லப் பேசுங்க தம்பி” – அவனை அடக்கும் முயற்சியில் அன்னம்மா.
மாமன் தன் உடல்நிலையைப் பற்றிக் கூறியதிலிருந்துக் கலக்கத்துடனிருந்த சாருமதி அவசரமாக அவனருகே ஓடிச் சென்று “வசந்த், பொறுமையா.. பொறுமையாப் பேசுங்க வசந்த் ப்ளீஸ்” என்று கெஞ்ச..
“பொறுமையாப் பேச எனக்கு வாய்ப்புக் கொடுத்தாரா இவரு?, அவர் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுவார்! நான் கைக் கட்டி வேடிக்கை பார்க்கனுமா?” – என்று மீண்டும் கத்தினான் அவன்.
“உனக்கு எதுக்கு டா நான் வாய்ப்பு கொடுக்கனும்! என் மருமகளுக்குக் கல்யாணம் பண்ண.. நான் யாரை டா கேட்கனும்?” – தானும் பதிலுக்குக் கத்தத் துவங்கியவரிடம்..
“என்னைக் கேட்கனும்! அவளை உயிரா நேசிக்கிற என்னைக் கேட்கனும்..” – என்று அவன் அடிக்குரலில் கூற..
ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டார் சாருகேசன்.
“என்னடா சொல்ற?”
“ஆமா, நான் சாருமதியைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு ஆசைப் பட்றேன். எனக்கு அவளைக் கட்டிக் கொடுங்க”
அடக்கப்பட்டக் கோபத்துடன் தன் தந்தை முகம் பார்த்து அழுத்தமாகக் கூறினான் அவன்.
திடீரென உடல் முழுதும் உண்டானத் தளர்ச்சியில் கண்ணாடியைக் கழட்டி நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டவரிடம்..
“என்னைத் தவிர அவளைக் கட்டிக்க எவனுக்கு உரிமை இருக்குன்னு இந்த வேலையெல்லாம் பார்க்குறீங்க நீங்க? ஏன் உங்கக் கண்ணுக்கு நான் ஆம்பளையாத் தெரியலயா? ஓ!! சார் ராஜகுமாரனைல தேடிட்டு இருந்தீங்க?, இந்த ராப்பிச்சைக்காரனையெல்லாம் ஒரு ஆளா நினைப்பீங்களா?”
“வசந்த்....” – அழுகையுடன் அவனை அடக்க முற்பட்டாள் சாருமதி.
“நீ பேசாதடி! நீ பேசாத! இவர் சொன்னா.. இவர் சொன்னா... எவன் முன்னாடி வேணாலும் சீவி,சிங்காரிச்சுட்டு நிற்பியா நீ? இதுக்குப் பேரு என்ன தெரியுமா?” – அவன் தொடர்வதற்குள்..
“டேய்ய்ய்ய்ய்” என்றபடி அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றினார் சாருகேசன்.
“இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசுன, பெத்தப் புள்ள-ன்னு கூட பார்க்க மாட்டேன்! அடிச்சே கொன்னுடுவேன்”
“நீங்க அடிக்கிற வரைக்கும் வேடிக்கைப் பார்த்துட்டு சும்மா நிற்பேன்னு நினைச்சீங்களா?, அப்பான்ற மரியாதைக்காக நீங்க அடிச்சப்பல்லாம் கைக்கட்டி நின்ன என் பொறுமையை இன்னைக்கு நீங்க ரொம்பவே சோதிச்சிட்டீங்க! இப்போ கை வைச்சுப் பாருங்க.. என்ன நடக்குதுன்னு?”
“என்ன டா பண்ணுவ? அடிப்பியா? அடி டா! அடி டா பார்ப்போம்! வளர்த்தவனைக் கடவுளாப் பார்க்குற பாசமான பொண்ணு டா அவ! அவளைப் பத்தி ஒரு வார்த்தை நீ பேசுனாலும்.. நாக்கை இழுத்து வைச்சு அறுத்துடுவேன்! பெத்த அப்பன் மேல அன்பு,அக்கறையில்லாம, அவன் பேச்சையும் மதிக்காம.. தான்தோன்றித்தனமா சுத்துற உனக்கு.. அவளுக்கும் எனக்குமான அன்பைப் பத்தி எப்படிடா புரியும்?”
“அன்பைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியனும்ன்னா.. நீங்க அதை முதல்ல எனக்குக் காட்டியிருக்கனும்”
“என்னடா காட்டாம இருந்தேன்?, பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைன்னுவாங்களே! நான் அந்த மாதிரி எவளையும் கட்டிக்கிட்டுக் கூட்டி வந்து உன்னைக் கொடுமைப் படுத்திட்டேனா?, இல்ல மூணு வேளை சோத்துக்கு வழியில்லாம தெருவுல விட்டுட்டேனா?”
“ஓ! அப்டின்னா.. பெத்தப் புள்ளையோட வயிறு வாடாம பார்த்துக்கிறதே பெரிய பாசம் தான்னு சொல்றீங்களா?”
“இல்லையா பின்ன?, பாசம் இருக்குறதால தான் டா இன்னைக்கு வரைக்கும் உனக்கு சோறு போட்றேன்”
“அநாதை ஆசிரமத்துல... ஒரு பிள்ளை இல்ல, நூறு பிள்ளைங்களுக்கு சோறு போட்டு வளர்க்குறாங்க! இருந்தும்.. அங்க வளர்ற பிள்ளைங்களை ஏன் நாம அநாதைங்கன்னு சொல்றோம்?, அம்மா,அப்பா இல்லாததால.. அவங்க அன்பு இல்லாததால..”
“பார்த்தியா அன்னம்மா?, பெத்த அப்பன் குத்துக் கல்லாட்டம் உயிரோட இருந்தும், அநாதையோட அவனை ஒப்பிட்டுப் பார்க்குறான்”
“உண்மை தானப்பா?, சோறு போட்டுத் துணி வாங்கிக் கொடுத்து படிக்க வைச்சதைத் தவிர நீங்க என்ன பண்ணியிருக்கீங்க? சாதாரணமா அப்பாவும்,மகனும் பேசிக்கிற மாதிரி என்னைக்காவது நீங்களும்,நானும் பேசியிருக்கோமா?, நீங்க என் கூட விளையாட்ற மாதிரி, சிரிச்சுப் பேசுற மாதிரி.. ஒரு ஃபோட்டோவாவது இருக்கா நம்ம வீட்ல?, தாலி கட்டிட்டோமேன்னு கடமைக்காக என்னைப் பெத்துக்கிட்டீங்க போல! அதனால தான் எங்கம்மா இப்படிப் பாதிலயே செத்துப் போயிருக்காங்க”
“என்ன வார்த்தை பேசுறீங்க தம்பி.....” – வரம்பு மீறிப் பேசுபவனைக் கோபமாய் இடை வெட்டினார் அன்னம்மா.
“கடமைக்காக வாழ்ந்தவன் ஏன் டா வேற எவளையும் கல்யாணம் பண்ணிக்காம.. காலம் முழுக்க ஒத்தையா நிற்கனும்?”
“................”
“நானும் என் பொண்டாட்டியும் எப்படி வாழ்ந்தோம்ன்றதைப் பத்தி உன் கிட்டப் படம் போட்டுக் காட்டனும்ன்னு எனக்கு எந்த அவசியமுமில்ல”
“.................”
“பொண்டாட்டியை இழந்து நின்னவனுக்குப் பிள்ளையை சரியா வளர்க்கத் தெரியாம போச்சு போல! அதனால் தான்.. என்னைக்காவது ஒரு நாள் உனக்கும்,எனக்கும் இடைல எல்லாம் சரியாய்டும்ன்னு நான் நினைச்சது நடக்காமலே போயிடுச்சு! உன் விசயத்துல நான் தப்பு பண்ணதாகவே இருக்கட்டும்! ஆனா.. என்னை நம்பி என் தங்கை விட்டுட்டுப் போன சாருமதியை அவளுக்கேத்தவன் கைலப் பிடிச்சுக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை”
“அப்டின்னா?”
“நான் பார்த்த மாப்பிள்ளையோட தான் மதிக்குக் கல்யாணம் நடக்கும்”
தீர்மானமாய்க் கூறியவரைக் கண்டு சாருமதி அதிர்ச்சியுடன் மாமனின் முகத்தை நோக்க.. வசந்த் என்பவனோ உணர்ச்சியற்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஐயா....” – இடையிட்ட அன்னம்மாவிடம்..
“உன் வளர்ப்புப் பிள்ளைக்கிட்ட சொல்லி வை! அவனால இந்தக் கல்யாணத்துல ஏதும் பிரச்சனை வந்தா தொலைச்சுக் கட்டிடுவேன்னு” என்று அவர் சீற..
“ஓஓ!! பார்ப்போம்! என்னை மீறி எவன் அவ கழுத்துல தாலி கட்டுறான்னு! என்னைத் தவிர எவனுக்கு அவ மேல உரிமை இருக்குன்னு” – தானும் தீர்மானமாக அவர் முகத்தைப் பார்த்துக் கூறினான் வசந்த்.
“உரிமையாம்! உரிமை! உரிமையைப் பத்தி பேச உனக்குத் தகுதியிருக்கனும் டா”
“என்ன தகுதியை நீங்க எதிர்பார்க்குறீங்க?”
“காசு,பணம் வைச்சிருக்கியா?, நல்ல உத்தியோகத்துல இருக்கியா?, அந்தஸ்தும்,உத்தியோகமும் தான் டா புருஷ லட்சணம்! இது ரெண்டுமே இல்லாதவனுக்குத் தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கத் தகுதியே இல்ல!”
“நான் ஆம்பளையா இல்லையான்றதை, எனக்கும், அவளுக்கும் கல்யாணமாகிப் பிள்ளை,குட்டி பிறக்கும் போது பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க! அப்புறம், என்ன சொன்னீங்க?, காசு,பணம்,உத்தியோகம்! இதெல்லாம் அளவுக்கு அதிகமா சேர்த்து வைச்ச நீங்கப் பெருசா என்ன சாதிச்சீங்க?, பெத்த ஒரு பிள்ளை மேலப் பாசம் காட்டி வளர்க்கத் தெரியாம.. தள்ளாடுற வயசுல தலைல அடிச்சுட்டு நிற்குறீங்க”
“வசந்த்.....” – மீண்டும் உச்சஸ்தாதியில் கத்தியவரை அசட்டை செய்து..
“நீ சொல்லுடி! காசு,பணமெல்லாம் இருந்தாத் தான் நீ என்னைக் கட்டிப்பியா?” – என சாருமதியிடம் பாய்ந்தவனிடம்..
“அவக் கிட்ட உனக்கென்ன பேச்சு?, அவ பதில் சொல்ல மாட்டா! அவ நான் வளர்த்த பிள்ளை டா! என் பேச்சை மட்டும் தான் கேட்பா! மதிம்மா.. இந்த முரட்டு ராஸ்கல் உனக்கு வேண்டாம்! இவனால உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க முடியாது. இவனை உன் தலைல கட்டி உன் வாழ்க்கையை நானே கெடுத்தா.. என் தங்கச்சி ஆத்மா என்னைச் சும்மா விடாதும்மா” – என்று சாருமதியின் கையைப் பற்றிக் கொண்டுப் பேசியவரை வெறுப்புடன் நோக்கினான் வசந்த்.
“சொந்தப் பையன் மேல எவ்வளவு நல்ல எண்ணம்” – அடிக்குரலில் விரக்தியுடன் கூறியவனிடம்..
“சொந்தப் பையன்-னா, நீ கேட்டதும் நான் இவளை உனக்குக் கட்டிக் கொடுத்துடனுமா?, நடிப்பு,நாடகம்ன்னு நீ கூத்தடிச்சுக்கிட்டுப் பொறுப்பில்லாம சுத்துறதை ஊரே வேடிக்கைப் பார்க்குதே டா! தெரிஞ்சே நான் இவளை உனக்குக் கொடுத்தேன்னா.. வளர்த்த பிள்ளை வாழ்க்கையைத் தன் சுயநலத்துக்காக வீணாக்கிட்டான் சாருகேசன்னு ஊரே என் முகத்துல காறித் துப்பும்” – என்று மேலும் பொங்கினார் சாருகேசன்.
மனம் விட்டுப் போனது வசந்துக்கு.
“பாசம் காட்டி என்னை ஒரு நாள் கூட சீராட்டினது கிடையாது! படிப்பு,வேலை, காசு,பணம் அத்தனைலயும் உங்களால தான் எனக்கு வெறுப்பு உண்டாச்சுன்றதை புரிஞ்சுக்கிட்டது கிடையாது. பக்கத்துல உட்கார்ந்துப் பொறுமையா என் பிரச்சனை என்னன்னு கேட்டது கிடையாது. என் திறமையை ஊக்குவிச்சது கிடையாது! என் விருப்பத்துக்கும்,ஆசைக்கும் மதிப்பு கொடுத்தது கிடையாது. நடுத்தெருவுல நின்னு இதையெல்லாம் நான் மைக் போட்டு சொன்னா.. நிச்சயம் நீங்க சொன்ன அதே ஊர் உங்க மூஞ்சில காறித் துப்பத் தான்ப்பா செய்யும்” – தளர்வான குரலில் கூறியவன்.. சாருமதியிடம் திரும்பினான்.
“ப்ச், எதுக்கு அழற? அழறதை நிறுத்து. இவரால நம்மள ஒன்னும் பண்ணிட முடியாது”
திமிரான குரலில் கூறியவனைக் கேட்டுக் கொதித்துப் போன கேசன் மருமகளின் முன்பு தன் கையை நீட்டினார்.
“என் உயிரா நான் உன்னைப் பாசம் காட்டி வளர்த்தது உண்மைன்னா.. இந்தப் பயலை மனசுல இருந்துத் தூக்கிப் போட்டுடுவேன்னு இப்போவே எனக்குச் சத்தியம் பண்ணு”
“மா..மா...” எனக் கூவி அதிர்ந்து.. நடுங்கிப் போனாள் சாருமதி.
“இந்தாளு உன்னை மிரட்டிப் பார்க்குறாரு! சாரு.. சத்தியம் பண்ணாத” - வசந்த்
இன்னமும் தன் முன்னே கை நீட்டிக் கொண்டு நின்றவரைக் கண்டு குலுங்கி அழுதபடி செய்வதறியாது விழித்தவளிடம்..
“நீயாவது என் பக்கம் இரு சாரு! என்னை ஏமாத்தாத! என்னால நிச்சயம் தாங்க முடியாது” - கலங்கிய குரலில் கூறியவனைக் கேட்டு மேலும் அழுகை பெருகியது அவளுக்கு.
இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி வைக்கத் தான் தாயும்,தந்தையும் தன்னை உயிரோடு விட்டுச் சென்றார்களா?, ஒரு புறம் சொந்த மகளைப் போல வளர்த்த மாமன்! மறுபுறம் அவருக்கு ஈடான பாசத்துடன் தன்னை உயிராய் நேசிக்கும் மாமன் மகன்! இருவருமே வேண்டும் எனக் கதறிய அவள் மனதின் ஓசை அங்கு நின்றிருந்த இருவரையுமே சென்றடையவில்லை.
“மாமா.. நான்...” என்று ஆரம்பித்தவளைத் தடுத்து..
“இப்போ நீ சத்தியம் பண்ணலேன்னா.. அவனோடு சேர்ந்து.. நீயும் எனக்கில்லைன்னு நினைச்சுக்கிட்டு.. எல்லாத்தையும் தலை முழுகிட்டு.. ஒரேடியா போய்டுவேன் நான்! உங்கம்மா மாதிரி!” – என்றவரைக் கண்டு கதறியவள்... அப்போதும் கூட.. அசையாது நிற்க.. தொப்பென சோபாவில் அமர்ந்தார் சாருகேசன்.
மூச்சிரைக்க.. வியர்த்துப் போய்.. கண்ணாடியைக் கழட்டியவரைக் கண்டுப் பதறி அவர் காலடியில் அமர்ந்த சாரு, அவர் நெஞ்சை நீவியபடியே “மாமா.. மாமா.. என்னாச்சு?, என்னாச்சு மாமா?” என்று கேட்டு விட்டு.. மரம் போல் நின்ற வசந்திடம் “பார்த்துக்கிட்டே நிற்குறீங்க?” என்று சீறும் வேளை.. அவர் வழக்கமாய்ப் போடும் மாத்திரையோடு அவசரமாய் அருகே வந்தார் அன்னம்மா.
அவர் நீட்டிய மாத்திரையைத் தள்ளி விட்டபடி “இனி நான் உயிரோட இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்?, பெத்தது, வளர்த்தது ரெண்டுமே என் பேச்சைக் கேட்காம.. தான் இஷ்டத்துக்குப் போயிடுச்சே” என்று கூற..
“இல்ல,இல்ல மாமா.. நான்.. நீங்க சொல்றபடியெல்லாம் கேட்குறேன். தயவு செஞ்சு மாத்திரையைப் போட்டுக்கோங்க.. வசந்த்.. வசந்த்.. சொல்லுங்க” – அவனை நோக்கிக் கத்தியவளிடம்...
“அவர் நடிக்கிறார் சாரு! உன்னை ப்ளாக் மெய்ல் பண்றார்! சொன்னாக் கேளு! அவர் சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டாத!, பெத்த மகனோட விருப்பத்தையே புரிஞ்சுக்காத மனுஷன், உன் ஆசைக்கா சம்மதம் சொல்லுவார்?”-என்றான் அவன்.
“அதுக்காக.. அதுக்காக அவர் அவஸ்தைப் பட்றதைப் பார்த்துட்டு உங்களை மாதிரி கண்டுக்காம நிற்கச் சொல்றீங்களா? எனக்கு மாமா வேணும்!” என்றவள் தொடர்ந்து “ப்ளீஸ் மாமா.. மாத்திரையைப் போடுங்க” என்றவளிடம் அவர் மீண்டும் கையை நீட்டினார்.
“சத்தியம் பண்ணு”
“சாரு...” – முழுக்குரலில் கத்தினான் அவன்.
தலையைப் பிடித்துக் கொண்டு ஒரு நொடி விழி மூடியவள் பின் அவர் கையில் தன் கையை அழுத்தி “உங்க விருப்பம் தான் மாமா என் விருப்பமும்! எல்லா விசயத்துலயும்” எனக் கூறி ஓடிச் சென்று அவர் தூர எறிந்த மாத்திரையை பொருக்கிக் கொண்டு வந்து அவர் வாயில் திணித்தாள்.
நடிப்பில் தன் தந்தை தன்னையே மிஞ்சி விட்டார் என்கிற எண்ணம் தான் வசந்துக்கு! ஆத்திரத்தையும், கோபத்தையும் தாண்டிய இயலாமையுடன் தன் காதலியை நோக்கியவன்.. விருட்டென வெளியேறி விட்டான்.
வீடே நிசப்தமாகியிருக்க.. மாத்திரையின் உதவியால் உறங்கத் தொடங்கியிருந்தார் சாருகேசன். இருள் கவிழ்ந்து.. இரவு துவங்கியிருந்தது.
உண்ணாமல்,கொள்ளாமல் பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து விட்டு அன்னம்மா அமைதியாக நகர்ந்து விட்டார். நேரம் கடந்து நள்ளிரவாகியது. ஆனால் வீட்டை விட்டுச் சென்றவன் வந்த பாடில்லை!
தான் செய்த செயலின் விளைவால் காயப்பட்டு நிராசையுடன் வெளியேறியவனின் முகம் நெஞ்சுக்குள் நின்று.. இரண்டு கண்களையும் வற்றாத ஜீவ நதியாக்கியது. உயிரோடிருப்பதே வீண் எனத் தோன்றியது. செத்துப் போன தாய்,தந்தையை துணைக்கழைத்துப் பார்த்தாள். ம்ஹ்ம்! பிரயோஜனமில்லை! அவர்களிருவரது முகம் கூட மனக்கண்ணில் நிற்கவில்லை! முழுதாய் மனதை மாமனும்,அவன் மகனுமே நிறைத்திருந்தனர். நிமிடத்தில் சூனியமாகி விட்ட வாழ்க்கையை நினைத்த படி.. அப்படியே ஷோபாவில் தலை சாய்த்து விட்டாள் அவள்.
நள்ளிரவைக் கடந்த வேளையில்.. டொக்,டொக் என வாசலில் சத்தம் கேட்டது.
ஒலி வந்தத் திசையில் ஓடிச் சென்று பார்த்தவள் கண்டது, கையில் மண்வெட்டியுடன் ஏதோ ஒரு செடியைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த வசந்தைத் தான்! அச்செடியைத் தன் தந்தையாக உருவகப்படுத்திக் கொண்டான் போலும்! கொலைவெறியுடன் கொத்திக் கொண்டிருந்தான்.
“வசந்த்...” – அவன் செயலில் அதிர்ந்து மெல்லிய குரலில் அழைத்தாள் அவள். குரல் ஙஞணநமன-வென மூக்கிலிருந்து வந்தது.
நிமிர்ந்து அவளை நோக்கியவன் நிதானத்தில் இல்லை.
சட்டெனக் குனிந்து அவனருகே அமர்ந்து அவன் கையிலிருந்த மண்வெட்டியைப் பறித்துத் தூர எறிந்தவள் “குடிச்சிருக்கீங்களா?” என்று அழுகைக் குரலில் வினவினாள்.
பதிலற்றுத் தலை முடியைக் கோதிக் கொண்டான் அவன்.
“வசந்த்....” எனக் கைப்பற்ற வந்தவளிடமிருந்து வெடுக்கென எழுந்து கொண்டவன் நான்கடித் தள்ளி நின்றான்.
‘என்னைத் தொடாத’ – என எச்சரித்தது அவன் பார்வை.
அவன் பார்வையை அசட்டை செய்து மீண்டும் அருகே நெருங்கியவளிடம்.. இந்த முறை வாய் திறந்தான் அவன்.
“பக்கத்துல வராத! ஒரே அறை-ல மூச்சை நிறுத்திடுவேன்”
“நிறுத்திடுங்க! எனக்கும் உயிர் வாழ்றதுல இஷ்டமில்ல!”
“என்னடி வசனம் பேசுறியா?”
“கத்தாதீங்க. மாமா தூங்கிட்டிருக்கார்” – பதறிய படி அவள்.
“ஓ! தூங்குறாரா மனுஷன்?, என் சந்தோசத்தைக் கெடுத்து, என்னை நடை பிணமாக்கிட்டு.. அவர் மட்டும் நிம்மதியா தூங்குறாரா?”
“வசந்த்.. ப்ளீஸ்.. வீட்டுக்குள்ள போகலாம்... வாங்க..”
“மாட்டேன் டி! வர முடியாது என்னால! எனக்குப் பிடிக்கல! இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்க எனக்குப் பிடிக்கல”
“அப்டில்லாம் சொல்லாதீங்க வசந்த்! ப்ளீஸ் உள்ள வாங்க” – அவன் கையைப் பற்றி உள்ளே இழுத்தவளை உதறி..
“என்னைத் தொட்டுப் பேசாத! எவனோ ஒருத்தன் பக்கத்துல உரசிட்டு நின்னவளுக்கு என்னைத் தொடத் தகுதியே இல்ல” என்று சீறினான் அவன்.
இயலாமையோடுப் பதிலின்றி அவன் முகம் நோக்கியவளிடம்...
“நீ தானடி இங்க சாய்ஞ்ச?” – என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி.. “ஐ லவ் யூன்னு நான் சொன்னப்போ வெட்கப்பட்டு நீ தான இங்க சாய்ஞ்ச?, இப்போ இஷ்டத்துக்கு அந்தாளு போட்ற வெத்து நாடகத்துக்குத் தலையாட்டி நான் வேண்டாம்ன்னு என் முன்னாடியே அந்தாளு கையைப் புடிச்சு சத்தியம் பண்ற?” முழுக் குரலில் கத்தியவனின் வாயை அவசரமாக மூடினாள்.
அவள் கையை உதறித் தடுமாறி நின்றவனை இழுத்துக் கொண்டு வீட்டினுள்ளே சென்றாள்.
திமிறியபடி அவள் இழுப்புக்கு உடன் நடந்தவனை அறையில் தள்ளித் தாழிட்டு கதவின் மீதே சாய்ந்து நின்றவளை மூச்சு வாங்க நோக்கினான் அவன்.
“கதவைத் திற. நான் வெளியே போகனும்”
“முடியாது! தயவு செஞ்சு மேலும்,மேலும் பிரச்சனை பண்ணாம படுத்துத் தூங்குங்க! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்”
“யார் நான்? நான் பிரச்சனை பண்றேனா?”
“....................”
“நான் என்ன செய்யனும்ன்னு எதிர்பார்க்குற நீ?, நீயும்,அந்தாளும் நடத்துற பாசப் போராட்டத்தைப் பாராட்டி.. மனசு பூரிச்சுப் போய்.. அப்படியே உன்னை விட்டுக் கொடுத்துடனும்ன்னா?”
“...............”
“எவனோ ஒருத்தன் என் கண்ணு முன்னாடி உன்னை உரிமையாப் பார்க்குறதையே என்னாலப் பொறுத்துக்க முடியல. இதுல.. உன் கையப் பிடிச்சு.. கழுத்தைத் தொட்டுத் தாலி கட்டுறதை எப்படி அமைதியா பார்த்துட்டு நிற்பேன்னு நினைக்குற?”
பதில் சொல்ல முடியாமல் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் கண்ணும்,கன்னங்களும் அழுது ஓய்ந்ததில் கன்றிச் சிவந்து போயிருந்தன. பெரிய கண்களிரெண்டும் சுருங்கிப் போய் முகமே பரிதாபமாய்க் காட்சி தர.. மேலும் வார்த்தைகளால் வதைக்கத் தோன்றாமல் அவளைப் பார்த்தபடியே அவளுக்கு எதிரேக் கட்டிலில் அமர்ந்தான் அவன்.
கதவில் சாய்ந்தபடி அப்படியேக் கீழே அமர்ந்தவளும் காலைக் கட்டிக் கொண்டு அவன் முகத்தையே நோக்கினாள்.
இதயம் முழுதும் நிறைந்திருந்த அத்தனை உணர்வுகளையும் கண்கள் வழியே வெளிக் காட்டியபடி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு செயலற்று அமர்ந்திருந்தனர்.
அவுட்-ஏ ஆகாமல் நின்று விளையாடும் விதியையும், ஆட்டுவிக்கும் தந்தையையும், அவர் தாளத்திற்கேற்ப ஆடத் தயாராய் இருக்கும் அவளையும் எண்ணிப் பல்லைக் கடித்தபடிக் கண்களை மூடியவனுக்குக் கோபம் மட்டுமே பிரதானமாயிருந்தது. தந்தை மீது! அவள் மீது! ஏன், இந்தச் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு கையாலாகாதவனாய் நிற்கும் தன் மீதும்!
மூடிய விழிகளுடன் முகம் கசங்க அமர்ந்திருந்தவனைக் கண்டு.. மனம் வெம்பி “வசந்த்...” என்றழைத்தாள் அவள்.
“வெளிய போ!”
“.............”
“என் கண்ணு முன்னாடி வராத”
“வசந்த்....” – மீண்டும் கலங்கத் தொடங்கியவள்.. அழுதபடி அவன் முகம் பார்க்க.. தன் பார்வையை இப்போது வேறு புறம் திருப்பிக் கொண்டான் அவன்.
அடுத்த சில நிமிடங்கள் அவள் அழுகைச் சத்தம் மட்டுமே அந்த அறையில் ஒலித்தது.
பின் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவள்.. வெளியே செல்ல எண்ணிக் கதவில் கை வைத்தாள்.
அவளது அழுகைச் சத்தத்தை சகித்துக் கொண்டவனால்.. அவளது விலகலைப் பொறுத்துக் கொள்ள முடியாது போக.. சட்டென எழுந்து வந்து.. வெளியே செல்லவிருந்தவளின் கையைப் பற்றித் தடுத்தான்.
பற்றியிருந்த அவன் கையை வெறித்தபடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றவள்..
“நான் ஒன்னும் அவன் பக்கத்துல உரசிட்டு நிற்கல” என்றாள்.
“..........”
“ஏதோ ஆசைப்பட்டு நான் அலங்காரம் பண்ணி நின்ன மாதிரி, அப்படிப் பேசுறீங்க?”
“..............”
“சாரி கேளுங்க” – அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் நிமிர்ந்து பார்த்துக் கூறினாள் அவள்.
“சாரி” – சட்டெனக் கேட்டு விட்டான் அவன்.
மூக்கு விடைக்க.. அழுகையை அடக்கி வேறு புறம் பார்த்தவளை.. அதற்கு மேல் பொறுக்காமல் அருகிலிழுத்து.. அவள் கன்னத்தில்.. தன் கன்னத்தை அழுத்தினான் அவன்.
மூச்சடக்கி நின்றவளின் கண்கள் தாமாகவே மூடிக் கொள்ள.. இரு கைகளாலும் அவள் பின்னந்தலையைப் பற்றி.. அவள் கன்னத்துக்குள், தன் கன்னத்தைப் புதைத்துக் கொண்டான்.
முழுதாக இரண்டு நிமிடங்கள் அவளை அணைத்தபடி நின்றவன்.. பின் விலகி.. அவளைக் கண்டபடியே பின்னால் நகர்ந்துக் கட்டிலில் அமர்ந்தான்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்களை இறுக மூடி நின்றவளை அள்ளிக் கொள்ளும் ஆவல்.. பிரவாகமாகக் கிளம்ப.. ஒரு சத்தியத்தில் தன் ஒட்டுமொத்த ஆசையிலும் மண்ணைப் போட்டு விட்டவளை எண்ணிக் கோபமுற்று.. இயலாமையுடன் தன்னருகேயிருந்தத் தலையணைகளை அவள் மீது விட்டெறிந்தான் அவன்.
ஒன்று.. இரண்டு.. மூன்று..
வரிசையாகத் தன் மீது வந்து விழுந்த தலையணைகளை உணர்ந்தும் விழி திறக்காதிருந்தவளைக் கண்டு.. அப்படியேத் தலையைப் பின்னுக்கு சாய்த்துக் கட்டிலில் விழுந்தவன்.. டங்,டங்கெனப் பின்னந்தலையைப் படுக்கையில் முட்டிக் கொள்ளும் சத்தம் காதில் விழுந்தது.
கை முஷ்டியை இறுக்கிப் படுக்கையில் குத்தியவனைக் கண்டு விழி திறந்த சாருமதிக்கும்.. அதே இயலாமை உணர்வு!
செய்கையற்று அவனை வெறித்தவள் மெல்ல நடந்து சென்று அவன் காலடியில் அமர்ந்தாள்.
“வசந்த்....”
“போடி இங்கேயிருந்து... இன்னும் என்ன?, நான் ரத்தக் கண்ணீர் வடிக்கிறதை வேடிக்கைப் பார்க்கனுமா?”
“வசந்த்....”
“எந்திரிச்சுப் போடி! பர்மிஷன் கேட்காம முத்தம் கொடுத்துடுவேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்! இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தா.. கண்டிப்பா கிஸ் பண்ணுவேன்”
“.................” – பதிலற்றுத் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
திடீரெனக் காற்றில் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சு விட சிரமமாகிப் போன உணர்வு அவனுக்கு! எழுந்து.. அவள் முகம் பார்க்காமல் ஜன்னலருகே செல்ல.. தானும் எழுந்தவள்.. அவன் செய்கையைக் கண்டபடி அசையாது நின்றாள்.
ஜன்னல் கம்பியை இறுகப் பற்றியவன்.. என்ன நினைத்தானோ.. திரும்பி அவள் முகம் பார்த்தான்.
மஞ்சள் மாலையில் ஜொலித்த அவள் கண்கள்! ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவனை முழுதாய் உள்ளிழுத்து மூழ்கடிக்கும் அந்தக் கண்கள்! காதலும்,ஆசையுமாய் வெட்கத்துடன் அவள், அவன் மார்பில் சாயும் வேளை கிறங்கிக் கதவடைத்துக் கொள்ளும் அதே கண்கள்.. இன்று தவிப்பில் திணறி.. நிராசையுடன் அவனை நோக்குவதைக் கண்டு ஒரு நொடி நின்றவன்..
மறு நொடி அவளருகே நெருங்கி.. இருகைகளால் அவள் முகம் பற்றி.. அவள் இதழ்களுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.
அவன் தன் கையைப் பற்றினால் கூடத் திமிறி விலகி ஓடுபவள்.. இன்று விழி மூடி மயங்கி நின்றாள்.
நிமிர்ந்து அவள் முகம் பார்த்து.. மூடிய இமைகளில் இதழ் பதித்து.. மூக்குத்தியில் முத்தமிட்டு.. மீண்டும் அவள் இதழ்களில் தொலைந்தான் அவன்.
பூமி சுற்றுவது நின்று.. உலகம் உறைந்து போன உணர்வுடன்... ஆகாசத்தில் அழகாய்ப் பறந்தவர்களுக்கு ஒத்துழைக்கும் வண்ணம் அசையாது நின்ற கடிகார முள்.. அவன் அவளிடமிருந்து விலகி நிமிர்ந்த வேளை.. மீண்டும் தன் செயலைத் தொடர்ந்தது.
கண்களைத் திறவாதிருந்தவளைக் கண்டு இதழ் விரிய... அவள் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து... அவள் தோளில் முகம் புதைத்தான் அவன்.
“சாரு...”
“.......”
“கிஸ் பண்ணி முடிச்சுப் பல மணி நேரமாச்சு. இப்போ நீ தைரியமா கண்ணைத் திறக்கலாம்”
சிரித்தபடி கூறியவனைக் கேட்டு சிணுங்கலுடன் விழி திறந்துத் தலை குனிந்து கொண்டவளின் முகம் பற்றி நிமிர்த்தினான் அவன்.
ஆசையுடன் பார்வையால் அவள் முகம் வருடி.. மீண்டும் இதழ் பதித்தவன்.. “உன் சத்தியத்தோட லட்சணம் இது தானா?” என்று கேலி செய்ய..
அதுவரை உலகம் மறந்திருந்தவள் மீண்டும் கலங்கிய முகத்துடன்.. அவன் மார்பில் சாய்ந்தாள்.
“இப்போ என்ன பண்றது வசந்த்?”
“இந்தக் கிஸ்ஸை இப்படியேக் கண்டினியூ பண்ணினா.. இந்தப் பிரச்சனைக்கு சொல்யூஷன் கிடைச்சிடும்”
“ப்ச், வசந்த்”
“சத்தியமெல்லாம் எனக்கு சக்கரைப் பொங்கல் மாதிரி! அள்ளி சாப்பிட்டுப் போய்ட்டே இருப்பேன்! உன் மாமா இல்ல, எந்தக் கொம்பனாலும் உன்னை என் கிட்டயிருந்து அவ்ளோ சீக்கிரம் பிரிச்சுட முடியாது” – என்றுக் கொக்கரித்தவன் அறிந்திருக்கவில்லை, மறுநாள் காலை சாருகேசன் அவனுக்கு வைத்திருந்த ட்விஸ்ட்டைப் பற்றி!
