அத்தியாயம் - 1
I’ missing you like crazy!
“நாம ஒவ்வொருத்தரும் அதிகமா சந்தோசப்படும் போதும், அதிகமா துக்கப்படும் போதும் வாழ்க்கைன்ற வார்த்தைக்கு விதவிதமான விளக்கம் கொடுக்கிறோம் இல்லையா?, “லைஃப் இஸ் கலர்ஃபுல்” “லைஃப் சக்ஸ்” அப்டின்னு ஃபேஸ்புக்ல தினம் தினம் எத்தனை ஸ்டேட்டஸ் பார்க்கிறோம்?, ஹ்ம்ம்….. வெளியே.. விடாம பெய்துட்டு இருக்கிற இந்தக் கனமழையும்,என் கையில் இருக்கிற இந்த சூடான காஃபியும், காதுல ஒலிக்கிற இளையராஜா பாட்டும்.. வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு குரூரமானது இல்லன்னு சொல்லுது. ஒத்துப்பீங்களா? இப்போ என் மனநிலையை வைத்து நான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கட்டுமா??, ஹ்ம்ம்ம்ம்…… வாழ்க்கை அழகான நினைவுகளை சேகரிக்கிறதும்.. அதை மனசுக்குள்ள பத்திரமா பாதுகாத்து வைச்சுக்கிறதும் மட்டும் தான்!! இந்த நொடி,நிமிஷம் எனக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும், துக்கத்தைக் கொடுத்தாலும்.. நான் அதை மனசுக்குள்ள சேமிச்சு வைச்சுக்கிறேன்.. என்னிக்காவது ஒரு நாள் “அவ்வளவு தான்,நமக்கு சங்கு ஊதப் போற நேரம் வந்துடுச்சு”-ன்னு தோணும் போது நான் என் வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்துக்கொள்ள எனக்கு இந்த நினைவுகள் எல்லாம் வேணும். அதனால நான் தொடர்ந்து என் நிமிஷங்களை நினைவுகளா சேகரிக்கப் போறேன். நீங்க???”
-“இளையராஜாவின் இனியராகங்கள் நிகழ்ச்சியில் உங்க கூட பேசிட்டிருக்கிறது உங்க திவ்யா. நீங்க கேட்டுட்டு இருக்கிறது ரெட் எஃப்.எம் 94.6, இது செம ஹாட் மச்சி…”
“கிட்டத்தட்ட அவளுடைய குரலும் இந்த எஃப்.எம் பெண்ணின் குரலைப் போலத் தானிருக்கும்! தேவையான இடத்தில் ஏற்ற,இறக்கத்துடன்..!, வார்த்தைகளின் அர்த்தத்திற்கேற்ப அழுத்தத்துடன்..! மெல்லிய.. இனிமையான குரல்!”
க்ரீரீரீரீரீச்…… என்கிற ஓசையுடன் அந்த சிகப்பு நிறக் கார் ஏவிஎம் ஸ்டூடியோவின் வாசலில் நின்றது. உள்ளே ஒலித்துக் கொண்டிருந்த ரேடியோவை நிறுத்தி விட்டு அவன் செக்யூரிட்டியிடம் தனது ஐடி கார்டை நீட்டினான். தொடர்ந்து அந்தக் கார் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தது.
என் பெயர் ரிஷி. ரிஷிகார்த்திகேயன். யூனிட்டில் அனைவரும் ஆர்.கே என்றழைப்பார்கள். வயது 29. சொந்த ஊர் ஊட்டி. சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு சேனல் ரெட்-என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைரக்டராக பணிபுரிகிறேன். தொழிலில் நான் புலி என்றும், நான் நடத்துகிற டிவி ஷோவிற்கு மக்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்குமென்றும் சேனல் என்னை முழுதாக நம்புமளவிற்கு நான் ஒரு உழைப்பாளி. படிப்பு முடிந்ததிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட கமர்ஷியல் அட்வர்டைஸ்மெண்ட்ஸ், ஷாட் ஃபிலிம்ஸ்,டிவி ஷோஸ் என இரவு,பகல் பாராமல் விடாது வேலை செய்திருக்கிறேன். பலசமயம் நான்கைந்து நாட்கள் தூங்காமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்திருக்கிறேன். நான் பெற்றிருக்கும் வெற்றிகள் அனைத்தும் எனது விடா முயற்சியானாலும்,உழைப்பினாலும் தான் என என் நண்பர்கள் கூறுவார்கள். ஆனால் அது வெறும் ஐம்பது சதவீத உண்மை தான்! ஆம்! என்னை இப்படி நிம்மதியாகக் கண் மூடித் தூங்க விடாமல் ஆட்டி வைத்துக் கொண்டிருப்பது அவள் தான்!, அவளது நினைவுகளைத் துரத்துவதற்காகத் தான் இப்படி வெறித்தனமாக வேலையில் மூழ்கி என்னை நானே சித்ரவதை செய்து கொண்டிருக்கிறேன்!
அந்த எஃப்.எம் பெண் கூறினாளே! வாழ்க்கை அழகான நினைவுகளை சேகரிப்பது மட்டும் தான் என்று! ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவா இருக்கிறது? என்னைப் போன்ற சிலருக்கு வாழ்க்கையே அந்த நினைவுகளைத் தேடி ஓடுவது தான் என்றாகி விட்டது! என்றோ ஒரு நாள் கடந்து போன அந்த அழகான நினைவுகளை பொக்கிஷமாக மனதில் சேமித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது நினைத்து மட்டுமே பார்த்துக் கொள்ள முடிகிறதா?, இல்லையே! நினைவுகள்,நினைவுகளாக மட்டுமே நின்று போய் விடக் கூடாதென்றும்.. நிஜத்திலும் வேண்டுமென்றும் தினம்,தினம் சண்டித்தனம் செய்யும் மனதை சாக்லேட் கொடுத்தா சமாதானம் செய்ய முடியும்! எளிதாக வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறாள்! அவளுக்கென்ன தெரியும்?
ப்ச்,இது தான்! என் பிரச்சனை இது தான்! காரணமில்லாத கோபம்,வெறுப்பு! அந்த எஃப்.எம் பெண்ணின் குரலைக் கேட்கத் தான் தினம் இரவு 11 மணியாகி விட்டால்.. இடைவேளை எடுத்துக் கொண்டு நான் ஓடுவதே! இப்போது அவள் மீதே கோபப்படுகிறேன்!
“ஹேய்.. ரிஷி எங்கே போன?, அர்ஜூன் உன்னை ரொம்ப நேரமா தேடுறான். அது என்ன? டெய்லி நைட் 11 டூ 12 காணாம போயிட்ற?, என்ன டைரக்டர், தண்ணியா?, இல்ல தம்மா? ம்?, ஹேய்.. ஏன் அப்படிப் பார்க்குற?, ஹலோ… ஹலோ…”-என் முகத்தின் முன்பு கையாட்டியவளிடம்….
“உன் லிப்ஸ்டிக் கலர் ரொம்ப டார்க்கா இருக்கு.” என்றேன்.
நான் பதில் பேசியதும் “பே”-என விழித்துக் கொண்டு நிற்பவளைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது எனக்கு. இது….. அனு… அனுப்ரியா. நான் நடத்தும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி. என் காலேஜ்மேட். ரொம்பவும் திறமையான பெண். இரண்டு வருடத்திற்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் சிறந்த தொகுப்பாளினி விருதைத் தட்டிச் சென்றவள்! மேக்கப்பையும்,மைக்கையும் தாண்டி டெக்னிக்கலாக நிறைய விசயங்களை ஆர்வமாகக் கற்றுக் கொள்பவள்! பெரிய வாயாடி! ஹ்ம்,அவள் பார்க்கும் வேலை அப்படி!
‘அவளைத்’ தவிர எனக்குப் பெரிதாக பெண்களிடம் பழக்கமில்லை. என் தேவைகள்,எண்ணங்களனைத்தையும் அவள் ஒருத்தியே பூர்த்தி செய்பவளாக இருந்ததாலோ என்னவோ, நான் யாரிடமும் ஒன்றியதில்லை. ஆனால்.. அனு… அனுவிடம் எனக்கு ஒரு ஈடுபாடு உண்டு! ஈடுபாடென்றால்….. வேறுவிதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. ஹ்ம்ம்,எப்படிச் சொல்வது..
நான் இப்போது என் கண்களை மூடினால் சட்டென ஒரு முகம் முன்னே வருகிறது. நான் சற்று ஆழ யோசித்தால் அந்த முகத்திலிருக்கும் கண்களும்,இதழ்களும் தெளிவாய்த் தெரிகிறது. அந்த ஜோடிக் கண்களை இவள்… இந்த அனுவும் பெற்றிருக்கிறாள். விலகிச் செல்ல முடியாத அளவிற்கு அந்தக் கண்கள் என்னைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறது.
அனுவுடன் பேசுவதும்,சிரிப்பதும் எனக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருக்கிறது. அவ்வப்போது ‘அவள்’ நினைவுகள் என்னைப் பாடாய்ப்படுத்தும் போது, மொத்தமாக வீழ்த்தி விடும் போது.. நானே.. என்னையறியாது அனுவைத் தேடிச் செல்கிறேன். சிறுபிள்ளைத் தனமாய் அவள் ஏதேனும் தன் போக்கில் உளறும் போது.. அவள் கண்களைப் பார்த்துக் கொண்டிருப்பது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
“ரிஷி டேய்.. அல்மோஸ்ட் ரெடி. இன்னும் பத்து நிமிஷத்துல ப்ரி-செக்”-என்ற அர்ஜூன் “வினோத், அந்த மல்ட்டி லைட்ஸைக் கொஞ்சம் செக் பண்ணு”-என்றபடி கடந்து சென்றான்.
அர்ஜூன்.. எனது நீண்டகால நண்பன். பள்ளியிலிருந்து தொடங்கி இப்போது வரை! சாப்பாடு,தண்ணீர் போன்று அர்ஜூன் எனக்கு ஒரு இன்றியமையாத தேவை! அவன் இல்லையென்றால்.. நானில்லை!
18 வயதில்.. நான் அவளைப் பிரிந்த நாட்களில்.. சிறுபிள்ளைத்தனமாக கை,காலை உதறிக் கொண்டு “எனக்கு அவ வேணும்டா”-என்றழுத போது உடனிருந்திருக்கிறான். அதற்கு முன்பும் கூட… பல நேரங்களில்.. அதாவது.. நான் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத சில கடந்த காலத் துன்பங்களில் அவன் என்னுடனே இருந்து என்னை அதிலிருந்து மீட்டிருக்கிறான்.
எனக்கும்,’அவளுக்குமிருந்த’ உறவைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவன் அவன் மட்டும் தான்! இப்போது கூட இந்த பதினோறு மணி ரேடியோ நிகழ்ச்சிக்காகத் தான் நான் வெளியே சென்று விட்டேன் என்பது வரை அவனுக்குத் தெரியும்!
ஆனால்.. ஒரு முறை கூட அவள் எனக்குத் தேவையில்லையென்றோ, அவளை மறந்து விடச் சொல்லியோ அவன் வற்புறுத்தியதேயில்லை. அவள் எனக்குள் ஏற்படுத்தி விட்டுச் சென்றத் தாக்கத்தை சரியாய் அறிந்து வைத்திருப்பவன்! ஹ்ம்ம்ம்….
ஆரம்பித்ததிலிருந்து ‘அவள்’ ‘அவள்’ என்கிறேனில்லையா? பெயரை மறைத்து வைக்கவேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை. சொல்லி விடுகிறேன். அவள் பெயர் ஹரிணி.
நான் கூறுவதையெல்லாம் கேட்டு ‘இவன் ஒரு லவ் ஃபெயிலியர் கேஸ்’ என்று முடிவு செய்து விட்டீர்களா?, ப்ச், அப்படியிருந்திருந்தால் கூட.. இந்நேரம் நான் என் மனதை லைசால்.. இல்லை, ஹார்பிக் இட்டுத் துடைத்து விட்டு இன்னொருத்தியைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை,குட்டியுடன் குடும்பமாய் உங்களுக்கு ஹாய் சொல்லியிருப்பேன்.
லவ்… ஹ்ம்ம், அப்போது அவள் மீதிருந்த என் எண்ணங்களில் காதல் கலந்திருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவளுக்கு என் மீது காதல் இருந்திருக்கலாம். அதனால் தானோ என்னவோ.. அன்றைய சம்பவத்திற்குப் பிறகு மொத்தமாய்த் தொலைந்து போய் விட்டாள்.
இது.. முழுக்க… முழுக்க என் தவறு தான்! அவள்.. அவள் வெகுளி! புனிதமானவள்! கரந்த பாலையும், துளசிச் செடியையும் விட! என்னைக் கடைசி நிமிடம் வரை முழுதாக நம்பினாள். நான் தான் முட்டாள்தனமாக… வேறு யார் மீதோ இருந்த கோபத்தை.. அவளிடம் காட்டி… அவளை நோகடித்து விட்டேன். ச்ச. இடியட்,இடியட்…! இதோடு ஒரு லட்சம் முறையேனும் என்னை,நானே கன்னத்தில் அறைந்திருப்பேன்.
“ரிஷி….. பார்த்து….” – யோசித்தபடி வயரில் காலை வைத்துக் கீழே விழத்தெரிந்த என்னைப் பிடித்து நிறுத்தும் நோக்கத்துடன் என் கையைப் பற்ற வந்த அனுவின் கரங்களை உதறி விட்டு விலகி நின்றேன் நான்.
“ஓகே! ஓகே! சாரி! எந்தப் பொண்ணும் உன்னைத் தொட்டா உனக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும் தான். அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவர். கீழ விழப் பார்த்தியே.. பாவமேன்னு பிடிக்க வந்தா…. தள்ளி விடுற?”
“என்ன, என்ன? என்ன பிரச்சனை இங்க?,”-என்றபடி அருகே வந்த அர்ஜூன்.. அனுவைப் பார்த்து..
“ஏய்… என்ன காஸ்ட்யூம் இது?, தாவணி ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்டா இருக்கு? உன் சாண்டல் கலர் ப்ளவுஸ்க்குள்ள நீ போட்டிருக்கிற இன்னொரு சாண்டல் கலரையும் சேர்த்துக் காட்டுது. இதெல்லாம் நான் மட்டும் தனியா பார்க்க வேண்டிய விசயம். இப்படி லைட் மேன் வரைக்கும் ‘ஆ’-ன்னு பார்க்குற அளவுக்கு ஊருக்கேக் காட்டுற?”-அவளை நான் பார்த்து விடக் கூடாதென எங்களிருவருக்கும் இடையே வந்து நின்று கொண்டு எரிச்சலுடன் நோக்கினான்.
அவள் கண்களைத் தவிர கீழிருக்கும் எதையும் நான் காண முயல மாட்டேன் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும்… எதையேனும் சாக்காக வைத்துக் கொண்டு அனுவை வம்புக்கு இழுக்க வேண்டும். அது தான் அவனுடைய நோக்கம்.
“நீ… நீ மட்டும் பார்க்கிற விஷயமா?, ராஸ்கல்.. உனக்கு.. உனக்கு எவ்ளோ திமிர்டா?, எல்லாரும் வேடிக்கைப் பார்க்குற இடத்துல நின்னுக்கிட்டு இப்படி பேசிட்டிருக்க?, என் ரெபுடேஷன் என்ன ஆகுறது?, நான் தமிழ்நாட்டோட லீடிங் காம்பியரர். நியாபகம் வைச்சிக்கோ. இடியட்”
“நீ தமிழ்நாட்டோட சி.எம்-ஆ கூட இருந்துட்டுப் போ. ஆனா.. நான் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் இதைச் சொல்வேன்”
“என்னன்னு? ப்ளவுஸ்-க்குள்ள போட்டிருக்கிறது தெரியுதுன்னா?”
“ச்சி,ச்சி இல்ல”
பின்ன?”
“ஐ லவ் யூ”
“ப்ளடி…”- பொறுமையின்றி பல்லைக் கடித்தாள் அவள். “நான் உன் ப்ரபோசலை ரிஜெக்ட் பண்ணி பல வருஷம் ஆயிடுச்சு”
“சோ வாட்?, ஐ ஸ்டில் லவ் யூ”
“எனக்கு பாய் ப்ரண்ட் இருக்கான்.”
“எனக்கும் தான் கேர்ள் ப்ர்ண்ட் இருக்கா. இதெல்லாம் என்ன பெருமையா?, கடமை!! ஏய்.. ஏன் முறைக்கிற?, எங்க?, என் கண்ணைப் பார்த்து இனிமே என் முகத்திலேயே முழிக்காதடான்னு சொல்லிப் பாரு நான் அந்த குண்டு பன்னு ரேகாவை கன்னாலம் கட்டிக்கிறேன்”-கண்ணடித்தவனை முறைத்து விட்டு பதில் கூறாமல் கோபமாய் அவள் சென்றிருந்தாலும்.. சிறிது நேரத்தில் அவளது தாவணி மாறித் தான் போயிருந்தது.
இது தினம் நடப்பது தான்! ஆனால்.. அவர்களிருவருக்கிடையே இருப்பது என்ன மாதிரி உறவென்று எனக்கு இது வரை புரிந்ததேயில்லை. ஏனென்றால்.. அந்த குண்டு பன் ரேகா தான் அர்ஜூனின் காதலி. அப்படியானால் அனு என்கிறீர்களா?, அதே கேள்வியைத் தான் நானும் கேட்டேன். “ரேகா தினம் எனக்கு முட்டை பப்ஸ் வாங்கித் தர்றா மச்சி. அவளை ரிஜெக்ட் பண்ணி நான் ஏன் முட்டை பப்ஸை இழக்கனும். சொல்லு.”-என்கிறான். அதன் பின்பு நான் அவனது காதலிகளைப் (சாரிடா அர்ஜூன்) பற்றிப் பேசுவதேயில்லை.
“ரிஷி ஆல் செட். வீ கேன் ஸ்டார்ட்”-அர்ஜூனிடமிருந்துக் குரல் வந்து விட்டது. நான் எனது வேலையைத் தொடர வேண்டும். விடாது என்னை வீழ்த்தி விடத் துடிக்கும் அவள் நினைவுகளிலிருந்து என்னைக் காக்கும் ஒரே விசயம் என் வேலை மட்டும் தான்!
ரிஷி தன் இரண்டு கைகளால் கண்களை அழுந்தத் துடைத்து விட்டு தான் நின்று கொண்டிருந்த இடத்தை சுற்றி நோக்கினான்.
சூப்பர் சிங்கர் என்கிற ரியாலிட்டி ஷோவிற்கான செட் அது. அன்று தான் கடைசி ப்ரீ-ஃபைனல்ஸ். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அந்த இடம் பரபரப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தது. நிகழ்ச்சி மேடையின் அலங்காரங்கள் முடிந்து ஏ.டி என்றழைக்கப்படும் அசிஸ்டெண்ட் டைரக்டர் அர்ஜூன் தனது கடைசிகட்ட சோதனையில் ஈடுபட்டிருந்தான்.
கையிலிருந்த ஸ்கிரிப்ட்டைக் காட்டி அனுவிடமும்,அவளது துணை காம்பியரர் திலீப்பிடமும் அன்று அவர்கள் பேச வேண்டிய வசனங்களையெல்லாம் விவரித்துக் கொண்டிருந்தனர் இருவர். இடையிடையே காம்பியரர்ஸ் இருவரின் முகங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் டச்சப்பில் ஈடுபட்டிருந்தார்.
க்ரேன் கேமராக்களை சோதித்தபடி சிலரும், தன் கையிலிருந்தக் கேமராவை ஆராய்ந்தபடி கேமராமேனும், ஆடியன்ஸிடம் உரையாடியபடி சிலரும், நிகழ்ச்சியின் ஜட்ஜஸை சீட்டில் அமர வைத்தபடி சிலரும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிள்ளைகளிடம் அடுத்தடுத்து யார் பாடவரவேண்டும் என்கிற வரிசையை விவரித்தபடி சிலரும் ஆங்காங்கு தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தன் கையிலிருந்த மைக்கை இருமுறைத் தட்டி சோதித்த ரிஷி “ரெடி…” என்று குரல் கொடுத்ததும் அந்த செட் முழுதும் பரபரவெனத் தயாரானது.
தனது முழுக்குரலில் “லைட்ஸ்…” என்று சத்தமிட்டான் ரிஷி.
“ரெடி..”
“சிங்கர்ஸ் & ஜட்ஜஸ்”
“ரெடி”
“கேமரா செக்”
“டன்”
“ஃப்ரேம் செக்”
“டன்”
“ஐம் ஸ்டில் கெட்டிங் சம் நாய்ஸ் கைஸ்”
“சார்,மேடம் செல்ஃபோன்ஸ் எல்லாம் ஆஃப் பண்ணிடுங்க. சைலன்ஸ், சைலன்ஸ் ப்ளீஸ்”-ஆடியன்ஸை நோக்கி சத்தமிட்டான் அர்ஜூன்.
“சௌண்ட்…”
“ரெடி..”
“அனு, உன் லிப்ஸ்டிக் இன்னும் டார்க்கா தான் இருக்கு. திலீப் கோட் காலரை சரி பண்ணு”
கடகடவென அவர்கள் தங்களை சரிபடுத்திக் கொண்டதும், “கோ…” என்று விட்டுத் தன்னருகே இருந்த மானிட்டரின் முன்னே அமர்ந்தான் ரிஷி.
க்ரேனிலிருந்த கேமரா ஒன்று மேலிருந்து அந்த செட் முழுதையும் படம் பிடித்தபடிக் கீழே வந்து நேராக அனு,திலீப்பின் முன்பு நின்றது.
“எத்திசைக்கும் ஒலிக்கும் எங்கள் இசை. எங்கள் இசைக்கு ஈடு,இணையில்லை. வெல்கம் டூ ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 4.”-அனு தனது இனிமையான குரலில் புன்னகையுடன் கேமராவின் முன்பு பேச ஆரம்பித்தாள்.
இது தான். இது தான் இவர்களது வாழ்க்கை. லைட்ஸ்,கேமரா,ஸ்க்ரிப்ட்,ப்ரொடக்ஷன், டைரக்டக்ஷன் என திரைக்கு முன்னும்,பின்னுமாய் ஏகப்பட்ட விஷயங்களை மறைத்து வைத்திருக்கும் சாகச உலகம்!
இரண்டு பேர் பாடி முடித்து ஜட்ஜஸ் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதும் ப்ரேக் விடப்பட்டது. கையில் காஃபியுடன் செட்டை விட்டு வெளியே வந்த ரிஷி அங்கிருந்த மரத்தின் கீழிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போகிற,வருகிறவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவன் செல்ஃபோன் அழைத்தது.
“ஹலோ…”
“ரிஷி.. நான் சம்பத் பேசுறேன் டா”
“ஹ்ம்ம்,சொல்லுங்க சார். நடுராத்திரில தூங்காம எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணுறீங்க?, ஏற்கனவே உங்க வொய்ஃப் என் மேல செம காண்டுல இருக்காங்க”
“அவ பக்கத்துல இருந்திருந்தா நான் ஏன் டா உனக்கு ஃபோன் பண்ணப் போறேன்?”
“ஹ்ம்ம்,இந்த பயம் தான் புருஷ லட்சணம்-ன்றது!, வெரிகுட் சார்.”
“அதெல்லாம் இருக்கட்டும். 20-ந்தேதி உனக்கு ஷூட் இருக்காடா?”
“என்ன சார், என் ஸ்கெட்யூல் பத்தி உங்களுக்குத் தெரியாததா?, 27-ந்தேதி தான் ஃபைனல்ஸ். சொல்லுங்க என்ன விசயம்?”
“அன்னிக்கு நீ எனக்காக ஒரு ஷூட் டைரக்ட் பண்ணனும்டா. விவரமெல்லாம் நாளைக்கு நான் ஆஃபிஸ்ல சொல்றேன். உனக்கு ஓகே தான?”
இது அவ்வப்போது நடப்பது தான்!, ஆரம்பத்தில் உடன் வேலை பார்ப்பவர்களிடம் வழிய சென்று அவர்களது வேலையைத் தானே செய்ய ஆரம்பித்தான். இப்போது அவர்களே ரிஷி,இதை முடித்துத் தருகிறாயா?,என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
“ஹ்ம்ம்,கண்டிப்பா சார். நாளைக்கு ஆஃபிஸில் பார்க்கலாம்”
“தேங்க்ஸ்டா”-அவர் வைத்ததும் அர்ஜூன் வந்தழைத்தான். ஒரே மூச்சில் காஃபியை வாயில் ஊற்றிக் கொண்டு மீண்டும் செட்டுக்குள் நுழைந்தான் ரிஷி.
ஷூட்டிங் முடிந்து இருவரும் சாலிகிராமத்திலிருக்கும் தங்களது ஃப்ளாட்டை அடைந்தபோது காலை ஏழு மணியாகியிருந்தது. கொட்டாவியை வெளியிட்டபடி கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அர்ஜூன் ஹால் சோஃபாவில் கை,கால்களை முடக்கியபடி ஆழ்ந்த நித்திரையிலிருந்த அனுவைக் கண்டு “வாவ்..” என்றான்.
தனது தோள்ப்பையைக் கழட்டி அனுவின் மீது எறிந்த ரிஷி “12 மணிக்கு சம்பத் சாரை பார்க்கனும்டா. நியாபகப்படுத்து” என்று விட்டுத் தன் போக்கில் அறையை நோக்கிச் சென்றான். “டேய்.. பாவி….”என்று திட்டியபடி வேகமாய் பையை அவள் மீதிருந்து அர்ஜூன் எடுக்கையில் விழித்தெழுந்தாள் அனு.
“டார்லிங், எழுந்திட்டியாடா?, நீ ஏன் இந்த சின்ன சோஃபால முடக்கி படுத்திருக்க?, நேரா மாமா ரூம்ல போய் நல்லா கை,காலை நீட்டி வசதியா படுக்கலாமில்லையா?”
“கையை விடுடா”
“ஏன் டா செல்லம்?”
“பன்னாட, விட்றா கையை.”என்று அவனை உதைத்துத் தள்ளி விட்டு ஷோஃபாவை விட்டு எழுந்தவள் “நேத்து நான் உன் வீட்டு ஃபிரிட்ஜ்ல வைச்சிட்டுப் போன பீட்சா டப்பா எங்கடா?,அதைத் தேடி தான் வந்தேன் நான். அப்படியே தூங்கிட்டேன் போல.” – கை மறைவில் கொட்டாவியை வெளியிட்ட அவள் கண்கள் சோர்ந்து போயிருந்தது.
“அது நீ எனக்காக தான வைச்சிட்டுப் போன?, நான் நேத்தே காலி பண்ணிட்டேனே?, இந்த ரிஷி பயலுக்கு ஒரு பீஸ் கூட கொடுக்காம எல்லாத்தையும் நானே சாப்பிட்டேன். சந்தோஷமாடா?”-ஈஈஈஈஈ என்றவனை மீண்டும் முறைத்து “உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா..”என்றாள்.
“நான் திருந்தி, நல்லொழுக்க விருதா வாங்கப் போறேன்?, ஒரு நிமிஷம் இரு. ஃபோன் அடிக்குது”-என்றவன் தனது பாக்கெட்டிலிருந்தக் கைப்பேசியை எடுத்து “ரேகா டார்லிங்… சொல்லுமா..”என்றான்.
கண்களை விரித்து வியப்புடன் அவனை நோக்கியவளுக்கு பல்லைக் கடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
“என்ன,என்ன என்னடா செல்லம்?, கிஸ் வேணுமா?, ச்ச,ச்ச உனக்கு என்னைப் பத்தி தெரியாதா?, நான் அனுவைத் தவிர வேற யாரையும் கிஸ் பண்றதில்லைன்னு”
“டேய்… டேய்.. டேய்…” - அனு
“என்னமா?, ஆமாமா, இப்போ கூட நான் அனு கூட தான் இருக்கேன். நீ கிஸ் பண்றியா, இல்ல நான் பண்ணட்டுமான்னு கேட்டுட்டிருக்கேன்”
வெடுக்கென அவன் கையிலிருந்த ஃபோனைப் பறித்து கீழே போட்டு தங்க்,தங்கென ஏறி மிதித்தாள் அனு.
“நல்ல வேளை, கேமரா ஃபோன் உள்ளேயிருக்கு. அடிக்கடி உம்மா வைச்சுக்கிட்டா இப்படிச் சும்மா சும்மா கோபம் வராதுன்னு சொன்னா.. எங்க கேக்குற?”
“நீ எப்டியோ போடா, பன்னி”
“ஏய்.. இரு,இரு.. எங்கே போற?, ப்ரெட் ஆம்லெட் போட்றேன். சாப்பிட்டுப் போ”
“ஹ்ம்ம்,சரி. நான் டீ போடுறேன்”
இருவரது பேச்சையும் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த ரிஷிக்கு சிரிப்பாக வந்தது. பார்க்கும் போதெல்லாம் அடித்துக் கொண்டாலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்ததேயில்லை. கல்லூரி படிக்கும் போது அர்ஜூன் அவளைக் காதலிப்பதாகச் சொன்னதும், அனு அதை ஏற்றுக் கொள்ளாததும் அவனுக்குத் தெரிந்த விசயம் தான். ஆனால்.. அதன் பிறகு இந்த நாள் வரை அர்ஜூன் அவள் மீது காட்டும் அக்கறை, அனு அவன் மீது கோபப்படும் விதம் இவையெல்லாம் பார்ப்பவர்களை வேறு விதமாக எண்ண வைக்கிறது.
“டீ சார்…..” – கையில் டீ கப்புடன் ரிஷியின் அறைக்குள் வந்தாள் அனு.
“குடிச்சிட்டு தூங்குடா.”
“ஹ்ம்ம்ம்… அனு….”
“என்ன?”
“இங்கே உட்காரேன்… ஒரு ஐந்து நிமிஷம்.”
“ஹ்ம்ம்ம்” – என்ற அனு அவனருகே அமர்ந்து தனது டீ கோப்பையைக் காலி செய்யத் தொடங்கினாள்.
அவள் இதழசையும் விதமும், தாழ்ந்திருந்த விழிகளும் அவனுக்கு வழக்கம் போல் ஹரிணியை நினைவூட்டியது.
“ஏன் டா அப்பப்போ என்னை இப்படிப் பார்க்குற?”
“காரணமாத் தான்”
“என்ன காரணம்?, என்னை சைட் அடிக்கிறியா?”
“ப்ச்” – தோளைக் குலுக்கினான் ரிஷி.
“பின்ன?, என்னை லவ் பண்றியா?”
நக்கலாய் சிரித்தான்.
“சிரிப்பைப் பாரேன், காலேஜ் சேர்ந்ததிலிருந்து இப்போ வரை.. அதாவது கடந்த பத்து வருஷமா நீ என்னை இப்படித் தான் பார்க்குற?, அர்ஜூன் கூட என்னை இப்படிப் பார்த்ததில்லை. தெரியுமா?”
“ஆமாமா, அவன் இப்படிப் பார்க்க மாட்டான். வேற எப்படி,எப்படியோ தான் பார்ப்பான்”
“ஏய்…. ச்சி…”
“சரி,கிளம்பு. எனக்குத் தூக்கம் வருது.”
“இரண்டு பேரும் என்னை நல்லா இர்ரிடேட் பண்ணுங்கடா”-என்று கோபமாய் வெளியேறியவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டேத் தன் கண்களை மூடினான் ரிஷி.
