அத்தியாயம் - 2

Nothing is better than you!

மௌண்ட் ரோடிலிருந்த சேனல் ரெட் அலுவலகக் கட்டிடத்தின் வாசலில் தனது பைக்கை நிறுத்திய அர்ஜூன், பின்னால் அமர்ந்திருந்த ரிஷியிடம் “நான் பார்க் பண்ணிட்டு வரேன். நீ உள்ளே போ” என்றான்.

“நான் சம்பத் சாரை பார்க்கப் போறேன்டா. நீ நேரா எடிட்டிங் ரூமுக்கு போயிடு. நான் ஜாயின் பண்ணிக்கிறேன்”

“சரி”என்றதுடன் அவன் சென்று விட களைந்திருந்த முடியை சரிசெய்தபடி முன்னே நடந்த ரிஷி காக்கி நிற கலர் பேண்ட்டும்,கருப்பு நிற சட்டையும் அணிந்திருந்தான். சற்று ஒல்லியாய் உயரமாய் இருந்தான். ஏற்றிச் சீவப்பட்டிருந்த முடியைத் தொடர்ந்திருந்த நெற்றி நீளமாயிருந்தது. வழக்கத்திற்கு அதிகமாய் அடர்ந்து வளர்ந்திருந்த புருவத்தின் கீழே பெரிதான கண்கள். அளவான நாசியை அடுத்து இதழ்கள் வடிவுடனிருந்தது. அவன் புன்னகைத்தால் இரண்டு கன்னங்களிலும் தென்படும் குழியும்,காது வரை நீண்டிருந்த கிருதாவும் அவனை மேலும் வசீகரமாய்க் காட்டியது.

தன்னைக் கடந்து நடந்து செல்லும் பலர் மீண்டும் ஒரு முறைத் தன்னைத் திரும்பிப் பார்ப்பதை அறியாது.. தன் தோற்றத்தைப் பற்றின கர்வமில்லாது.. நேரான பார்வையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.

ரிஷி… டேய்…. என்னடா ஷூட் முடிஞ்சதா?, ஆஃபிஸ் பக்கம் தலை காட்டுற?”- அவன் நண்பன் ராகவ் சிரிப்புடன் எதிர்கொண்டான்.

“என்னய்யா நியூஸ் ரீடர்?, ம்ம்,ஷூட் முடிஞ்சது. இனி ஃபைனல்ஸ் தான். லாஸ்ட் எபிசோட் எடிட்டிங் போயிட்டிருக்கு. அதான் ஆபிஸ் பக்கம்”-ரிஷி

“ஹ்ம்ம்,அது சரி.. உங்களுக்கென்னடா கேமராவுக்குப் பின்னாடி வேலை செய்றவனுக.. நாங்க அப்பிடியா?”

“ஹாஹா.. ஏன் டா அப்படி சலிச்சுக்கிற?”

“பின்ன என்னடா?, போன வாரம் ***** இறந்த நியூஸ் ரெகார்டிங் முடியுற சமயத்துல தான் எங்களுக்கு கிடைச்சது. கடைசியா ஷூட் பண்ணி அதை ஆட் பண்ணிக்கிட்டாங்க. ஆரம்பத்துல வணக்கம் சொல்லும் போது சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டேனாம். என் முகத்துல ****** இறந்ததுல சோகமே இல்லையாம். ஃபேஸ்புக்,வாட்ஸ் ஆப்-ன்னு என் ஃபோட்டோவைப் போட்டு மக்கள் மானத்தை வாங்குறாங்கடா”

“ஆமாமா,நான் கூட அந்த போஸ்ட்க்கு லைக் போட்டேன். நீ ஏன் யா வணக்கம் சொல்லும் போது சிரிச்ச?”

“டேய்… நீயுமா?”

“ஹாஹாஹா.. சரி,சரி, டென்ஷன் ஆகாத. இதெல்லாம் இருக்கிறது தான?, இனிமே எப்போ வணக்கம் சொன்னாலும் உம்முன்னு முகத்தை வைச்சுக்கோ. அதான் நல்லது.”

“எல்லாம் நேரம்” – எனத் தலையில் அடித்துக் கொண்டவனைக் கண்டு சிரித்துக் கொண்டே நகர்ந்த ரிஷியை செல்ஃபோன் அழைத்தது.

“ஹ்ம்,சம்பத் சார் எங்க இருக்கீங்க?, நான் ஆஃபிஸ் ரீச் ஆயிட்டேன்”

“டேய்.. தேர்ட் ஃப்ளோர் மீட்டிங் ரூம் 102-க்கு வாடா”

“ஓகே”-என்றவன் மூன்றாவது தள மீட்டிங் ரூமை அடைந்த போது, அந்நிறுவனத்தின் பெரிய தலையோடு உரையாடலில் இருந்தார் சம்பத்.

“ஹாய் ரிஷி… வா,வா.. வந்து உட்கார். சரியான நேரத்துக்குத் தான் எண்ட்ரி கொடுத்திருக்க.”-ஜேசன் கூறியதும் “என்னை எதுல மாட்டி விடப் பார்க்கிறீங்க?”-என சம்பத்தின் காதில் முணுமுணுத்தபடி அவரருகே அமர்ந்தான் ரிஷி.

“ஹௌ ஆர் யூ?, வர்க் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?”

“ஃபைன் சார். சூப்பர் சிங்கர் லாஸ்ட் எபிசோட் எடிட்டிங் போயிட்டிருக்கு.”

“ஓகே, டெல் மீ ஒன் திங் ரிஷி, ஹௌ கம்ஃபர்ட்டபிள் ஆர் யூ வர்கிங் வித் தி கபிள் ஃபேண்டஸீ ப்ரோக்ராம்?”

“கபிள் ஃபேண்டஸியா?”

“சார், இவனுக்கு அந்த ப்ரோக்ராம் பத்தி எந்த ஐடியாவும் இல்ல. லெட் மீ எக்ஸ்ப்ளைன் ஃபர்ஸ்ட்”

“கான்செப்ட் இது தான் டா. காதல் முதல் கல்யாணம் வரை ஒரு கபிள்க்கு இடையில நடக்குற விசயங்களை ஒவ்வொரு ஃபேஸையும்.. லைக்.. அவங்க 2 பேரோட மீட்டிங்,ப்ரண்ட்ஷிப்,டேட்டிங்,ரொமான்ஸ்,ப்ரபோசல்,கல்யாணம்னு அவங்க ரிலேஷன்ஷிப் வளர்ற விசயத்தை வரிசையா காட்டனும். வளர்ந்து வர்ற 2 செலிப்ரிடிஸை வைச்சுப் பண்ணலாம்ன்னு ப்ளான். அவங்க அன்மேரீட்-ஆ இருந்தாங்கன்னா நல்லாயிருக்கும்ன்னு சார் ஃபீல் பண்றார். அப்போ தான் ஃபீலிங்க்ஸ் எல்லாம் ரியலா இருக்கும். ஏன் சார் ரெட்டை வால் குருவி சீரியல் ஹீரோ அஸ்வினும்,தெய்வ மகள் சீரியல் ஹீரோயின் வாணியும் செட் ஆவாங்களா?”

“2 பேரும் பிஸி ஆக்டர்ஸ், 30 எபிசோட்க்கு ஒத்துப்பாங்களான்னு கேட்டுப் பார்க்கலாம்”

‘இந்தாளு டேஸ்ட்ல தீயை வைக்க!’ “ஏன் சார், இந்த ஐடியா யாரோடது?”-சம்பத்தின் காதில் மீண்டும் முணுமுணுத்தான் ரிஷி.

“ஏன், பேசுறதைப் பார்த்தா தெரியல? என்னோடது தான்.“

“எங்கிருந்து திருடுனீங்க?”

“ஏண்டா, ஹிந்தி சேனல்ல இருந்து களவாடி நீங்க மட்டும் பாட்டு,டான்ஸ்ன்னு டாலண்ட் ஷோ பண்ணலாம். நான் வெளிநாட்டுல இருந்து திருடுனா தப்பா?”

“அதுசரி, ப்ரொடக்ஷன் டீம் ஒத்துக்கிட்டாங்களா?”

“உனக்கு ஏன் டா அவ்வளவு சந்தேகம்?”

“இல்ல, பொதுவா நீங்க பேசுறதை யாரும் 10 நிமிஷத்துக்கு மேல கேட்க மாட்டாங்க. நீங்க சீஃப் கிட்ட மீட்டிங் போட்டு பேசுறீங்களே. அதான்”

“ஷட் அப்”

“ரிஷி, டெல் மீ டா. நீ டைரடக்ஷனுக்கு ஒத்துக்கிட்டா மேல பேசலாம்”-ஜேசன்

“ஹ்ம், அ…அது வந்து நான் ஏற்கனவே “என்னம்மா,இப்படி பண்றீங்களேம்மா” ஷோக்கு ஒத்துக்கிட்டேனே சார், ப்ரமோ கூட முடிஞ்சது. ஷூட் நெக்ஸ்ட் மண்டே ஸ்டார்ட் ஆகுது.”

“காமெடி ஷோ-லாம் உனக்கு ஒத்து வராதுன்னு சம்பத் சொல்றானே?”

மெல்லத் திரும்பி சம்பத்தை முறைத்துப் பார்த்தான் ரிஷி.

“அந்த ஷோ-க்கு நான் ஃபாத்திமாவை கேட்கலாம்ன்னு இருக்கேன். லவ்,ரொமான்ஸ், ஃபீலிங்க்ஸ் எல்லாம் உனக்குத்தான் செட் ஆகும். இதைப் பத்தி நாம நாளைக்கு டீடெயிலா பேசலாம். எனக்கு வேற ஒரு மீட்டிங் இருக்கு. ஐ நீட் டூ கோ. சீ யூ கைஸ்” – என்று அவர் எழுந்து சென்று விட.. “என்ன சார் இதெல்லாம்?, நெக்ஸ்ட் வீக் ஷூட் இருக்குன்றேன், இப்போ ஜம்ப் பண்ண சொல்றீங்க?” என்று பொறிந்தான் ரிஷி.

“டேய்… ரிஷி, என்னை என்னடா பண்ண சொல்லுற?, நம்ம டீம் நடத்துற காமெடி ஷோ,டாக் ஷோ ரெண்டுக்கும் மொக்கையான ரிவ்யூ வந்துட்டிருக்கு. ஏதோ உன் சூப்பர் சிங்கர் நல்லா போயிட்டிருக்கிறதால் நான் இந்த சேனல்ல கொஞ்சம் மதிப்பு,மரியாதையோட இருக்கேன். புதுசா ஏதாவது திங்க் பண்ணுங்க சம்பத்ன்னு இந்தாளு என்னைப் பார்க்கும் போதெல்லாம் டார்ச்சர் பண்றான். நான் ஒரு வழியா இந்த கபிள் ஃபேண்டஸி ஐடியாவை சொல்லி ஒத்துக்க வைச்சுருக்கேன். இந்த ஷோவை நீ தான் டா எப்படியாவது சக்ஸஸ்ஃபுல்லா கொண்டு போகனும். எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா சொல்லு”

“சரி கெஞ்சாதீங்க. எனக்கு ஓகே. ஸ்க்ரிப்ட்டை மெயில் பண்ணுங்க. நான் என் க்ரியூவோட டிஸ்கஸ் பண்ணனும்”

“ரிஷி, நீ என் தெய்வம் டா”

“அப்போ உங்க வொய்ஃப்?”

“அவ ஒரு சாத்தான் டா”

“ரெக்கார்ட் பண்ணிட்டேன். இருங்க, போட்டு விட்றேன். ஆமா, இதுக்குத் தான் என்னைக் கூப்பிட்டீங்களா?, அப்போ 20-ந்தேதி ஃபீரியான்னு எதுக்குக் கேட்டீங்க?”

“அது வேற விஷயம்டா. சொன்னா அடிப்பியா?”

“மாட்டேன். சொல்லுங்க”

“இந்த டெல்லி ரேப் கேஸ் இருக்கில்லையா?, அதை பேஸ் பண்ணி ஒரு ஹிட்டன் கேமரா ஷோ பண்ணனும்.”

“அதை பேஸ் பண்ணி என்ன ப்ராங்க் ஷோ?”

“அதாவது நைட் 9 மணிக்கு மேல அதிகமா ஆள்,அரவமில்லாத இடத்துல ஒரு காரை நிறுத்துறோம். உள்ளே ஒரு பொண்ணு பயங்கரமா கத்துற மாதிரி ஒரு ஆடியோ செட்-அப். அந்தக் காரைக் கடந்து போற மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுறாங்கன்னு கேப்சர் பண்ணனும். அப்புறம் கடைசியா சோஷியல் அவேர்னெஸ்ஸை தூண்டுற ஒரு மெசேஜ். 5 நிமிஷ வீடியோ. பண்ணுறியா?”

“ஹ்ம், நல்ல விஷயம் தான?, பண்ணலாமே!, என்ன, கேண்டிட் கேமரான்னு தெரிஞ்சப்புறம் மக்கள் உதைப்பாங்க, அதையும் வாங்கிக்கனும். அப்படித் தான?”

“நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா, நீ நாலு அடி வாங்கித் தான் டா ஆகனும்.”

“ஓகே!, எனக்கு டைம் ஆச்சு. அர்ஜூன் வெயிட் பண்ணிட்டிருப்பான். நான் கிளம்புறேன்” – விடைபெற்று வெளியே வந்தவனது முகம், யோசனையில் ஆழ்ந்திருந்தது.

ரேப்! பலாத்காரம்! ஒரு பெண் தனது விருப்பமின்றி ஆணொருவனால் உடல் ரீதியாக துன்பப்படுத்தப்பட்டால் அதன் பெயர் பலாத்காரம்! அன்று நடக்கவிருந்தது கூட பலாத்காரம் தானோ?, பயம் நிறைந்த அவளது விழிகள் அதைத் தான் அவனிடம் சொல்லியதோ?, அதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாமல்.. என்ன நிலையிலிருந்திருக்கிறான் அவன்? எரிச்சலுடன் தலையை அழுந்தப் பற்றினான் ரிஷி.

ரிஷி.. ரிஷி என்னடா ஆச்சு?” – தூரத்தில் அவனைக் கண்டு விட்ட அர்ஜூன் வேகமாய் அருகே ஓடி வந்தான்.

“என்னடா ஆச்சு?, ஆர் யூ ஓகே?”

“ஹ்ம், ஐம் ஓகே. ஒன்னுமில்லடா.”

கையைக் கட்டிக் கொண்டு அவனையே நோக்கினான் அர்ஜூன்.

“ஏன் அப்படிப்பார்க்குற?”

இவனை என்ன தான் செய்வது? தவறு செய்ததற்காகக் கோபம் கொள்வதா?, இல்லை, செய்த தவறை நினைத்துப் பத்து வருடங்களாகத் தினம்,தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுவதா?, “உனக்காகத் தான் வெயிட்டிங். உள்ளே போ”-என்று விட்டு அவனைப் பின் தொடர்ந்து நடந்தான்.

ரவு ஒன்பது மணி வாக்கில் எடிட்டிங் அறைக்குள்ளேயே உறங்கிப் போயிருந்த அர்ஜூனின் செல்ஃபோன் பலமாய் அதிர்ந்தது. அடித்துப் பிடித்து எழுந்தவன் தலையைச் சொறிந்தபடி நிமிர்ந்து பார்த்தான். கம்ப்யூட்டரில் தெரிந்த அனுவின் முகத்தை பெரிதாகக் காட்டி பின்னால் உன் குத்தமா,என் குத்தமா பாட்டை ஓடவிட்டு எடிட் செய்து கொண்டிருந்தான் வைபவ்.

“முடிஞ்சதாடா?”

“டைம் ஆகும். நீ இன்னும் கிளம்பல?, போகும் போது எனக்கு டின்னர் பார்சல் வாங்கிக் கொடுத்துட்டுப் போ”

“ஹ்ம்ம்ம்”-என்றவனின் செல்ஃபோன் மீண்டும் அதிர எடுத்து “ஹலோ..”என்றான்.

“அர்ஜூன் அண்ணா, இங்க செட்ல அனு-க்கு ஆக்ஸிடெண்ட். அராத்து பண்ணுறா. கொஞ்சம் வர முடியுமா ப்ளீஸ்?”

“ஆ..ஆக்ஸிடெண்ட்டா?, இப்போ எங்க இருக்கா அவ?”

“ப்ரசாத் ஸ்டுடியோ ஜோடி நம்பர் 1 செட் அண்ணா”-என்று எதிர் முனை முடிப்பதற்குள் எழுந்து ஓடியிருந்தான். “டேய்….டேய்.. என் டின்னர்”என்று வைபவ் கத்தியதை அவன் காதிலேயே வாங்கவில்லை.

ப்ரசாத் ஸ்டூடியோவில் ஜோடி நம்பர் 1 செட்டுக்குள் அவசரமாய் நுழைந்தான் அர்ஜூன். “அடியேய்… மனம் நில்லுன்னா… நிக்காதடி….” ஸ்டேஜில்.. பச்சை,சிகப்பில் ஆடை அணிந்த இருவர் உற்சாகமாய் ஆடிக் கொண்டிருந்தனர். ரெட்ரோ ரௌண்ட் போலும்! அய்யோ! இந்தப் பெண் அனு என்னவானாள்? என்று அவன் சுற்றும்,முற்றும் தேடிக் கொண்டிருக்கையில் சங்கர் எதிரே வந்தான்.

“அண்ணா… அண்ணா.. இந்தப் பக்கம் வாங்க” – என்றவன் அவனை இழுத்துக் கொண்டு போய் மேக்கப் அறையினுள் விட்டுச் சென்றான்.

குழப்பத்துடன் சுற்றும்,முற்றும் பார்த்தபடி உள்ளே நுழைந்தவனை “அர்ஜூன்……” என்கிற அழுகைக்குரல் சட்டெனத் திரும்ப வைத்தது.

“அர்ஜூன்ன்ன்ன்ன்….. அர்ஜூன்…. அர்ஜூன்….”

ஒரே பார்வையில் அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தவன் பின் நிம்மதிப் பெருமூச்சுடன் “ஏன்டி ஏலம் போடுற?” எனப் பல்லைக்கடித்தபடி அருகே சென்றான்.

காலை நீட்டி நிலைக் கண்ணாடியின் மேஜை மீது அமர்ந்திருந்தவள் வேகமாய் அவனைக் கட்டிக் கொண்டாள்.

“அர்ஜூன்… அர்ஜூன்… நான்.. நான் சாகப் போறேன் டா. சாகப் போறேன். இந்த வலியை என்னால சத்தியமா தாங்க முடியல. என்னைக் கருணைக் கொலை பண்ணிடச் சொல்லுடா. அய்யோ,என் அம்மா,அப்பாவைப் பார்க்காம சாகப் போறேனே!, நான் என்ன செய்வேன்?, அர்ஜூன்.. என்னைக் காப்பாத்துடா.. ப்ளீஸ்டா....”

கண்களை அழுந்த மூடித் திறந்து “சர்ரி…. சர்ர்ர்ரி….”என அவள் தோளைத்தட்டியவன் “என்னாச்சு?”என்று அருகிலிருப்போரிடம் சைகையில் வினவினான்.

“ஸ்டேஜ்ல இருந்து ஸ்கிட் ஆகி விழுந்துட்டாங்கண்ணா. லைட்டா கால் ஸ்ப்ரைன் ஆயிடுச்சு”

“லைட்?,இது லைட்டா?, லைட்டா டா?, இவ்ளோ பெரிய கட்டுப் போட்டிருக்கேன். இது லைட்டா? அர்ஜூன்… நா..நான் சாகப் போறேன் டா. நீ… என்னையே நினைச்சுட்டு இருக்காம.. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருடா”

“வேற யாரோ எதுக்கு? அதான் ரேகா இருக்கால்ல?”

“அந்த போண்டா மட்டும் வேண்டாம்டா”

“ஹ்ம், தெளிவாத்தான் இருக்க. அப்டின்னா சந்தோஷ் டீம்ல இருக்குற சங்கீதாவைக் கட்டிக்கட்டுமா?”-என்று பேச்சுக் கொடுத்தபடி அவளது காலை மெல்ல கீழே இறக்கி வைக்கப் பார்த்தான்.

அதற்குள் “ஆஆஆஆஆஆஆஆ”-என்று பெரிதாகக் கத்தியவளின் வாயை அழுத்தி மூடியவன் “கத்தாதேடி ராட்சசி…”என்று கடிந்தான்.

“ஏன் டா அந்த குண்டு பன்னு ரேகாவுக்காக என்னைக் கொலை பண்ணப் பார்க்கிறியா?, உனக்கு என் மேல பாசமே இல்ல. துரோகி… துரோகி…. பாரு, எனக்கு அடி பட்டிருக்கேன்னு உன் முகத்துல கொஞ்சமாவது கவலை இருக்கா?, அப்டின்னா நான் செத்துப் போனா கூட.. நீ ரேகா,சங்கீதான்னு எவளையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருப்ப. இல்ல?”

“அய்யோ ஆண்டவா!, இப்போ அதுவாடி பிரச்சனை?, சரிடி. நீ செத்துப் போனா கூட உன்னையே நினைச்சுக் கடைசி வரைக் கல்யாணம் பண்ணாமலே இருக்கேன். போதுமா? ஹாப்பி?” – என்றவனின் தோளை யாரோ பின்னிருந்து தட்டினர்.

லேசாய்த் திரும்பியவனின் முன்னே ரேகா நின்றிருந்தாள்.

திகைத்து “ரேகா டார்லிங்” என்றவனின் தலையில் நச்சென ஒரு குட்டு வைத்து “ச்சி வாயை மூடு. நேத்து நைட் ஃபோன்ல என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, இப்போ இவ கிட்ட மாத்திப் பேசுறியா? ராஸ்கல். சீட்டர்,சீட்டர். ஐம் ப்ரேக்கிங் அப் வித் யூ..” என்று திரும்பியவள் நின்று…. “அதென்ன?, பப்ளிக் ப்ளேஸ்ல அவளைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டு நிற்கிற?, விலகி நில்லுடா”என்றாள்.

“ஹ்ம்,அடேங்கப்பா!, நீ என்னடி சொல்வது!”-என்கிற ரீதியில் அனு அவனை வேண்டுமென்றே அழுந்தக் கட்டிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள… “ஹாங்! என வாயைப் பிளந்தான் அர்ஜூன்.

“ச்சி”என அவள் விறுவிறுவென வெளியேறி விட.. “ச்ச, இந்த செட்ல இவளும் இருப்பான்னு நான் எப்டி மறந்தேன்! ஓ காட்! என் தேர்ட் லவ்வும் புட்டுக்கிச்சே!”- எனக் கண்களை அழுந்த மூடித் திறந்தவன் உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கும் அனுவைக் குனிந்து நோக்கினான்.

“ஏய்…. அவ வர்றது தெரிஞ்சும் வேணும்னு தான நடிச்ச?”

“ஆமா. போன மாசம் என் லவர் மகேஷையும்,என்னையும் நீ பிரிச்சேல?,அதுக்குப் பழிக்குப் பழி.”என்று அவள் கூந்தலை ஸ்டைலாகப் பின்னுக்குத் தள்ள.. “உன்னை….”என்று அவள் கால் கட்டில் லேசாய் அடித்தான் அர்ஜூன்.

அதற்கும் “ஆஆஆஆஆஆஆ”எனத் திறந்தவளின் வாயை இறுக மூடித் தன்னோடு அழுத்திக் கொண்டான்.

“சரி, இறங்கி நடக்கிறியா?, இல்ல, தூக்கிட்டுப் போகட்டுமா?”

“இவ்ளோ வலியோட நான் எப்படிடா நடப்பேன்?, தூக்கிட்டுப் போ”

“அப்போ கண்ட,கண்ட இடத்துல தொடுவேன். பரவாயில்லையா?”

நிமிர்ந்து அவனை முறைத்தவள் “ஒரு பேஷண்ட் கிட்ட இப்படித் தான் நடந்துப்பியாடா?” என்றாள்

“ஆமாம், பின்ன? கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணுவேனா?,”-என்றவன் சட்டெனக் குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டான். வியப்புடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள் “என்னடா நிஜமாவே தூக்கிட்ட?”என்று விழி விரித்தாள். அவளைத் தூக்கியபடிப் பின்வாசல் வழியே வெளியே வந்தவன் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

“எப்போடி நீ இவ்ளோ குண்டான?, இப்படி கனக்குற?”

“ஏய்… நான் ஃபிஃப்டி கே.ஜி தாஜ்மகால்டா, டாக்”

“அனு….”

“ஹ்ம்ம்… என்ன?”

“உனக்கு இப்போ ஏதாவது ரொமாண்டிக்கா தோணுதா?”

“என்ன தோணனும்?”

“இல்ல. இரவு,இருட்டு, சிலுசிலுன்னு காத்து, யாருமேயில்லாத இடம்! ரொம்ம்ம்பபபபப் பக்கத்துல நான்.. உன்னைக் கட்ட்ட்ட்டிப்பிடிச்சிட்டு நடந்து வர்றேன்”

“அதனால?”

“அதனால என்ன அதனால?, எனக்கு உன்னைக் கிஸ் பண்ணனும்னு தோணுது. பண்ணிக்கட்டுமா?”

“ராஸ்கல்… கால் ஒடிஞ்ச பொண்ணைப் பரிதாபப்பட்டுத் தூக்கிட்டு வர்றான்னு பார்த்தா.. நீ கெட்ட எண்ணத்தோட இருக்க. ச்சி,ச்சி.. பொறுக்கி, என்னை இறக்கி விடுடா. நான் தவழ்ந்தே வீட்டுக்குப் போயிக்கிறேன். ஹ்ம்”

அவள் கத்தியதைக் காதில் வாங்காது ஆழ மூச்செடுத்தவன் “பர்ஃப்யூம் மாத்திட்டியா?, இந்த ஸ்மெல் நல்லாயிருக்கே!” என்றவன் மேலும் அவளைத் தன்னருகிலிழுக்க… “என்ன்னடாஆஆஆஆ அர்ஜூன்?” என்று கூச்சத்தில் நெளிந்தாள் அனு.

“வெட்கப்படுறியா?, அடப் பாரேன்.. இன்னிக்கு என்ன என் மேல கருணை? ஓ! ரேகா கூட ப்ரேக் அப் பண்ணிட்டதால தானா?”

“ச்சி,ச்சி, நீயும் அந்த குண்டு பன்னும் எப்படிப்போனா எனக்கென்ன வந்தது?, மகேஷ்… நேத்து எனக்குக் கால் பண்ணினாரே…”

“ஏய்… அவனைப் பத்தி பேசுனேனா… கீழே விட்ருவேன்டி. யோசிக்கவே மாட்டேன்”

“வேண்டாம்,வேண்டாம், அர்ஜூன் அர்ஜூன் ப்ளீஸ்டா”

“ஹ்ம்,அப்போ ஐ லவ் யூ சொல்லு”

“ப்ளடி……”

“அப்போ கீழே விட்ருவேன்…”எனக் கையைக் கீழே இறக்கினான்.

“என்னடா பண்ணுற?,டேய்.. கால் சரியானப்புறம் உன்னைக் கொன்னுடுவேன் டா”

“என்ன நீ?, கிஸ் பண்ணவும் விட மாட்டேங்கிற?,ஐ லவ்யூ சொல்லவும் மாட்டேங்கிற?”

“லூசாடா நீ?”

“இப்போ நீ சொல்லாட்டி நான் கிஸ் பண்ணுவேன். லிப் டூ லிப். டீப்பாஆஆஆ”

“சொல்ல முடியாதுடா”

“அப்போ நான் கிஸ் பண்றேன். பண்ணப் போறேன்…..”என்று அவன் அவளை நோக்கிக் குனிந்த வேளை சரியாக ஒரு கார் ஹார்ன் அடித்தபடி கடந்து சென்றது.

“அதான பார்த்தேன், இன்னும் யாரும் டிஸ்டர்ப் பண்ணாம இருக்குறாங்களேன்னு! ச்ச, இன்னிக்கு நீ தப்பிச்சுட்ட, என்னிக்காவது மாட்டுவேல?, அப்போ பார்த்துக்கிறேன்” – என்றவன் தனது டூவீலரில் அவளை ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பறந்தான்.