அத்தியாயம் - 3

தழும்பிற்கு முன்:

சம்பவம்-1:

கீ…..கீர்…த்…த்தி….”

“என்ன?”

“கீ….ர்…த்….தீ”

“ப்ச்,என்னடி? எதுக்கு பல்ஸ் மோட்ல சுத்துற மிக்ஸி மாதிரி திக்கிட்டிருக்க?”

“மிக்ஸி தான் டி மிக்ஸி தான்! கொஞ்ச நேரத்துல அவன் அரைக்கப் போறான்! நீ அரைபடப் போற”

“என்ன சொல்ற நீ?”

“ஷ்ஷ், அந்த முட்டுச் சந்துல முட்டு கொடுத்து நிற்குற ஆளு யாருன்னு கொஞ்சம் பாரு”

-தோழியின் பேச்சில் நிமிர்ந்த கீர்த்தி, பிடரியைக் கோதியபடி அண்ணார்ந்து வானத்தை நோக்கி.. வட்ட நிலாவில் வடை சுடும் பாட்டியைத் தேடிக் கொண்டிருந்த அசோக்கைக் கண்டாள்.

“ப்ச்” என நெற்றியைத் தேய்த்தபடி ஒரு நொடி குனிந்தவள் “இவன் வேற குல்ஃபி வண்டிக்காரன் மாதிரி ராத்திரியானா, டான்னு வந்துட்றான்” எனப் புலம்பி விட்டு.. “ஏன் டி பஸ்ல அடிபட்ட பல்லி மாதிரி இருக்குறான்! இவனுக்கெல்லாம் பயப்பட்ற?, எனக் கேட்க..

“எனக்குப் பயம் அவனைப் பார்த்து இல்லடி! அவன் வாயைப் பார்த்து! ஓட்டை விழுந்த வாட்டர் டேங்க் மாதிரி லொட,லொடன்னு திறந்த வாய் மூடாம அவன் பேசுறதை நினைச்சாலே பதறுது! நீயே அவனை சமாளி! என்னை ஆளை விடு! நான் கிளம்புறேன்”

“ஏய்.. எங்கடி போற?, ஒழுங்கா என் கூட வா”

“ஆத்தி, ரைட்ல போறவள என்னத்துக்குடி ராக்கெட் விடக் கூப்பிட்ற?, நீயாச்சு அந்தப் பல்லி பயலாச்சு!” - தோழி தெறித்து விட..

‘இந்தக் கீரிப்பிள்ளையை சமாளிக்க இந்த கீர்த்தி ஒருத்தி போதாது” - என நினைத்துக் கொண்டு அவனையே மூக்கு விடைக்கப் பார்த்தபடி முன்னே நடந்தாள் அவள்.

வழக்கம் போல் ‘த ர ரி ந…..’ எனப் பாடிக் கொண்டே திரும்பியவன், அவளைக் கண்டதும்.. பரபரப்பாகி.. அவசரமாக பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு ‘ஐட்டத்தை’ எடுத்துக் கொண்டு படாரென அவள் முகத்தின் முன்னே நீட்டினான்.

தன் மூக்கருகே நின்றக் குப்பியை அடிக்கண்ணால் நோக்கிய கீர்த்தி, தலை சாய்த்து அவனை முறைத்தாள்.

“இது என்ன தெரியுமா?” – அசோக்.

“என்ன?”

“விஷ பாட்டில்”

“ஓஹோ”

“நீ மட்டும் என் காதலுக்கு ஓகே சொல்லலேன்னா, இதை கப்புன்னு குடிச்சுப் பட்டுன்னு உயிரை விட்ருவேன்”

“ப்ச்” என்று விட்டு அவனைத் தாண்டிச் செல்லப் பார்த்தவளை அணை கட்டி நின்று..

“அரை வயிறோட அரை அவர்-ஆ நிற்கிறேன்! நீ பாட்டுக்க, ச்சுன்னுட்டு திரும்பிப் போற?, லவ் பண்றேன்னு சொல்லிட்டுப் போடி” – என்றான்.

“சொல்ல முடியாது. போடா”

“அப்டின்னா.. இந்த இடத்தை விட்டு உன்னால நகர முடியாதுடி”

“மேத்ஸ் நோட்டை வைச்சு மண்டையை உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்! நவுர்றா அந்தாண்ட”

“ஏய்ய், இந்த பாட்ஷா டயலாக் எல்லாம் பள்ளிக்கூடத்தோட வைச்சுக்க! இங்க நான் மாமன்! நீ என் முறைப்பொண்ணு!”

“மண்டை ஓட்டுக்கு ‘விக்’ வைச்ச மாதிரி இருக்குறான்! இவன் மாமனாம்! பேசாம போடா பொறம்போக்கு”

“அப்டின்னா விஷத்தை வயித்துல இறக்கிட வேண்டியது தான்”

“இறக்கு! இறக்கி எம லோகத்துக்குப் போய்ச் சேரு!”

“என்னடி சொன்ன?”

“செத்து ஒழி டா நாயே-ன்றேன்” – எரிச்சலுடன் நகரப் பார்த்தவளை மீண்டும் மறித்து நின்றவன்.. கடகடவென விஷ பாட்டிலைத் திறந்தான்.

“இவன் செத்தா நமக்கென்னன்னு தான தவுலத்தா நிற்குற?, லெட்டர் எழுதி வைச்சிருக்கேன் டி, என் சாவுக்கு கீர்த்திங்குற கீச்சுக் குரல்காரி தான் காரணம்ன்னு! நான் எமலோகத்துக்குப் போறதுக்கு முன்னாடி, நீ எக்மோர் போலீஸ் ஸ்டேஷன்ல ஏட்டு கூட உட்கார்ந்திருப்படி!”

“அடப்பாவி! எங்கடா அந்த லெட்டரு?”

“இன்னருக்குள்ள இம்சையில்லாம உட்கார்ந்திருக்கு!”

“அடச்சீ”

“ஆமா, நான் நாக்குத் தள்ளி கிடக்கும் போது, நீ நைஸா லவட்டிட்டுப் போயிட்டேனா?? அதான் உஷாரா உள்ளாடைக்குள்ள ஒளிச்சு வைச்சிருக்கேன்”

“அய்யோ! டிசைன்,டிசைனா உயிரை வாங்குறானே!”

“சும்மா இருந்தவனை சொரிஞ்சு விட்டதே நீ தானடி?”

“யாரு நானா?”

“ஆமா அன்னிக்கு அந்த ஈக்வேஷனை சொல்லியிருந்தேனா.. இன்னிக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்குமா?”

‘அப்டின்னா.. இத்தினி பிரச்சனைக்கும் அந்த ஈக்வேஷனா டா காரணம்????’ – பிளந்த வாயோடு அவனை நோக்கியவள்.. தலையில் அடித்துக் கொண்டு..

“போற இடத்துலலாம் பின்னாடி வந்து இம்சை பண்றானே! ஏன் டா உனக்குப் படிக்கிற வேலையெல்லாம் கிடையாதா?”

“ம்ஹ்ம் பன்னிரெண்டாங் க்ளாஸ் பாஸ் பண்றதை விட, உனக்குப் பால் ஊத்தி பாடைல ஏத்துறது தான் என்னோட ஒரே குறிக்கோள்”

-விஷ பாட்டிலை ஏந்தியபடி வசனம் பேசியவனின் ஃபேசியல் எக்ஸ்ப்ரஷனை ஃபேஸ் செய்ய முடியாமல்.. பட்டெனப் பாட்டிலைப் பிடுங்கியவள்.. அதிலிருந்ததைத் தன் வாயில் ஊற்றி விட்டு..

“உன்னைக் காதலிக்குறதுக்கு, நான் கண்ணம்மா பேட்டைல பொணமாவே படுத்துக்கிறேன்” எனக் கூற..

விரிந்த விழிகளோடு வாயில் கை வைத்து நின்றான் அசோக்.

திரவம் தொண்டையை அடையும் முன், நாக்கு உணர்ந்த சுவையில் முகத்தைச் சுழித்தவள்,

“தேன்ல சீனியைக் கலந்தியா?” எனக் கேட்டாள்.

“சீனி மட்டுமில்ல! கொஞ்சமா பேதி மாத்திரையும் கலந்திருக்கேன்”

“என்னா டா சொல்ற?”

- பதற்றத்தில் வயிற்றைப் பற்றியபடிக் கேள்வி கேட்டவளைக் கண்டு “ஹாஹாஹா”-வென வில்லன் சிரிப்பு சிரித்தவன், கைகளை பின்னே கட்டிக் கொண்டு..

“எப்பிடியும் எனக்கு ஐ லவ் யூ சொல்றதை விட, நீ ஐஸ் பொட்டில போகத் தான் விருப்பப்படுவன்னு எனக்கு நல்லாத் தெரியும்! அதான் முன் ஏற்பாடா சீனில சீதபேதி மாத்திரையைக் கலந்து விட்டேன்” எனக் கூற..

லைட் ஆக சவுண்டு கொடுக்கத் தொடங்கிய வயிற்றை சமாதானப்படுத்தத் தெரியாமல், அவன் கூறியதை நம்பவும் முடியாமல் பல்லைக் கடித்தபடி நின்றவளின் அருகே நெருங்கி நின்று..

“லேசா வேர்க்குதா?, படபடன்னு வருதா?, அடிவயித்துல ஆட்டோபாம் வைச்ச மாதிரி இருக்குதா?” – எனக் கேட்க..

“டே….ய்ய்ய்.. சை..சைக்கோ!!” – என்றவளுக்கு நிஜமாகவே வயிறு வலிக்கத் தொடங்க.. அருகே நின்றிருந்த அவனது வண்டியைப் பற்றிக் கொண்டு.. வயிற்றைப் பிடித்தவளைக் கண்டு..

“என்னாடி ஆஸ்கர் அவார்டு வாங்கப் போறவ மாதிரி இப்பிடி நடிக்குற?”

“என்னத்த டா நாயே கலந்த?”

“மலைத் தேனோட மளிகைக் கடை சுகரைக் கலந்தேன்! அவ்ளோ தான்! நீ ஆக்டிங்கைக் குறை”

“அப்புறம் ஏன் டா எனக்கு வயிறு வலிக்குது”

“வயசுக்கு வந்துட்ட போலடி”

“பரதேசி நாயே! நான் வயசுக்கு வந்து 3 வருஷமாச்சு டா”

“நைஸ் இன்ஃபர்மேஷன் யா”

“தள்ளித் தொலை! நான் வீட்டுக்குப் போறேன்” – என்றவள் தள்ளாடியபடி நடக்கத் துவங்க..

யோசனையோடு நெற்றியைச் சொரிந்தவன் “நிஜமாவே வலிக்குதா! இல்ல நடிக்குறாளா!” என முணுமுணுத்துப் பின் அவள் பின்னோடு ஓடிச் சென்றான்.

“ஏய் நில்லு”

“என்ன?”

“இப்ப என்னாத்துக்கு குவாட்டர் அடிச்ச கோயிந்தசாமி மாதிரி நடக்குற?”

“பேசாம போயிடு டா! வலி தாங்க முடியாம, உன் வாயை உடைச்சிடப் போறேன்”

“நிஜமாவே வலிக்குதா என்ன?”

“………….”

“ஏய்ய்..”

“போடா…”

“வ..வ..வண்டில ஏறுறியா? உன் வீட்ல இறக்கி விட்றேன்” – கையிலிருந்த சாவியால் நெற்றியைச் சொரிந்தபடி முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டுக் கேட்டவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.

இம்மாதிரி இனிமையான வார்த்தைகளையெல்லாம் இவளிடம் உச்சரிக்க வேண்டியுள்ளதே என்கிற உணர்வை முகத்தில் வைத்துக் கொண்டு, தயக்கமாய் கேள்வி கேட்டவனைக் கண்டு..

“ஒன்னும் தேவையில்ல” என்று விட்டு அவள் முன்னே நடந்து சென்று விட..

“சரி தான் போடி” என்றபடித் தன் வண்டியை ஸ்டார்ட் செய்தவன், ஒரு நொடி நின்று அவள் புறம் பார்த்து விட்டுத் தோளைக் குலுக்கித் தன் வீடு நோக்கி வண்டியைத் திருப்பினான்.

பின் மீண்டும் நின்று அவளை திரும்பிப் பார்த்தவன் “ப்ச்” என்று விட்டு அவள் பின்னே சென்றான்.

மெல்ல நடந்து கொண்டிருந்தவளை மறித்தபடி வண்டியை நிறுத்தியவனை அவள் சுருக்கிய புருவங்களுடன் நோக்க..

பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து பில்லியனைத் துடைத்தவன் டொக்,டொக் எனத் தட்டித் தூசி பறக்க விட்டு, அவளை நோக்கினான்.

“இப்ப என்ன, நான் அங்க உட்காரனுமா?”

“வேணும்ன்னா நீ ஓட்டு! நான் உட்கார்றேன்”

“நீ நல்லவனெல்லாம் கிடையாதே?”

“எப்போ சொன்னேன் நான் நல்லவன்னு?, நீ பாட்டுக்க எங்கேயாவது விழுந்து,செத்து வைச்சு.. நாளைக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல சுகர் தான் காரணம்ன்னு தெரிஞ்சு, இதனால.. மாயாண்டி மளிகைக் கடைக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாது பாரு! அதான் சொல்றேன்”

“உன் பேச்சைக் கேட்குறதுக்கு, நான் வண்டிலயே ஏறலாம்” – என்றவள் பட்டென ஏறி அமர்ந்து விட.. உதட்டை வளைத்தவன்.. அவள் வீடு நோக்கி வண்டியை விட்டான்.

பெரிதாக தூரமில்லை! ஐந்தே நிமிடப் பயணம் தான்.

“இங்கேயே நிறுத்து” – என்றவள் இறங்கி நின்று வண்டியில் அமர்ந்திருந்தவனை நோக்கினாள்.

உதடு வெளுத்து, தலை கலைந்து, சிவந்த கண்களோடு நின்றவளைக் கண்டு ஒரு மாதிரியாகி விட.. என்ன கூறுவதெனத் தெரியாமல், ஓரக்கண்ணால் அவளை நோட்டம் விட்டவனைப் பார்த்தபடிப் பொறுமையாக அவனது பைக் சாவியைக் கையிலெடுத்தாள்.

அவளது முகம் காட்டிய மாற்றத்தில் அவனது மூளை சற்று மந்தமடைந்திருக்க, விகல்பமில்லாமல் அவளது செய்கையை அவன் பார்த்துக் கொண்டிருந்த வேளை, கையிலிருந்த சாவியைத் தூரஅஅஅஅஅமாக, எதிர் வீட்டு மாடியை நோக்கி விட்டெறிந்தாள்.

அவன் அவளது கையைப் பற்றித் தடுக்கும் முன் நான்கடி பின்னே நகர்ந்து விட்டவள்,

“வடபழனி வரைக்கும் வண்டியை உருட்டிட்டுப் போடா சாவுகிராக்கி” எனக் கூறி விட்டு.. அவன் கோபமாய் வண்டியை விட்டு இறங்கும் முன் தன் வீட்டை நோக்கி ஓடி விட்டாள்.

சம்பவம்-2:

ண்ணனின் தோளைப் பற்றியபடி வண்டியில் அமர்ந்திருந்த கீர்த்தி, அன்று நடக்கவிருக்கும் க்ளாஸ் டெஸ்ட்டுக்காகப் படித்திருந்த ஃபிஸிக்ஸ் 3rd யூனிட்டை மனதுக்குள் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வழக்கம் போல், அந்த முட்டுச் சந்தில் முட்டுக் கொடுத்தபடி, அவளுக்காகத் தன் வாகனத்துடன் காத்திருந்த அசோக், கீர்த்தி தன் அண்ணனோடு போவதைக் கண்டு ஜெர்க் ஆகி…

‘சுகர் குடிச்சு சுண்டிப் போனதால.. அவ அண்ணனைக் கூட்டி வந்திருக்காளோ! இப்போ இவ பின்னாடி போறதா,வேணாமா என யோசித்துப் பின் “ஹா! உப்பு தூவுன மாங்கா மாதிரி இருக்கான்! இவனுக்கெல்லாம் எதுக்கு பயந்துக்கிட்டு!” என்று தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டு, அவசரமாக வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னே சென்றான்.

டிராஃபிக்கில் நின்றிருந்த அவர்களது வண்டியினருகே சென்று நின்றவன், “ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப்” என விசிலடித்து அவளை அழைக்க..

‘எந்த நாய் என்னைப் பார்த்து பிகில் வாசிக்கிறது’ எனத் திட்டியபடியே திரும்பிய கீர்த்தி, இவனைக் கண்டதும் முறைத்து முன்னே திரும்பி விட.. சூயிங்கம்மை வாயில் மென்றபடி அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான் அவன்.

“ரத்தக்காவு வாங்காம போ மாட்டான் போலயே இவன்! ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுடா ரோக்” – சத்தம் வராமல் அவனை நோக்கி முணுமுணுத்தவளைக் கண்டு..

“அம்பூஊட்டு அக்கறை மாமன் மேல!, என் ராசாத்தி” – என்றவன் ஒற்றைக் கையால் அவளுக்குத் திருஷ்டி எடுக்க.. தலையிலடித்துக் கொண்டு திரும்பியவளிடம்..

“என்ன கீர்த்தி சொன்ன?” – எனக் கேட்டான் அவள் அண்ணன்.

“ஒன்னுமில்லண்ணா” என்றவள் அதன் பின்பு பொருமியபடி அமர்ந்திருக்க..

அவளோடு வம்பு செய்தபடியே வந்தவனை ஒரு கட்டத்தில்.. ரியர்வியூ மிர்ரரில் கண்டு விட்ட அண்ணன்காரன், வண்டியை ஸ்லோ செய்தான்.

“ஜோசஃப் ஸ்டாலின் எதுக்கு இப்ப ஸ்லோ பண்றாப்பிடி” – என முணுமுணுத்துத் தானும் வண்டியை மெதுவாகச் செலுத்தினான் அசோக்.

இதே போல் இரு முறை ஸ்லோ செய்து பின்னே வருபவனின் நடவடிக்கையை நோட்டம் விட்ட அண்ணன்காரன், தங்கையை அழைத்தான்.

“கீர்த்தி”

“என்னண்ணா?”

“பின்னாடி நம்மள ஃபாலோ பண்றவன் யாரு?”

“யாரைச் சொல்ற?”

“உன் ஸ்கூல் யூனிஃபார்மோட ஹோண்டால வர்றானே ஒருத்தன்”

அவன் அசோக்கைப் பற்றிக் கேட்பதைக் கண்டு திடுக்கிட்டவள் பின்,

“எனக்குத் தெரியாது” என்று விட்டாள்.

“ஹ்ம்ம்” – என்றவன் அதன் பின்பு எதுவும் கூறாமல் அவளை ஸ்கூல் வாசலில் இறக்கி விட்டுச் சென்று விட்டான்.

ன்றிரவு வழக்கமான டியூட்டியாக, டியூஷன் வகுப்பு முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த கீர்த்தியோடு உடன் நடந்து வந்த அசோக்,

“ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்குப் போய் பவுடரு,கிவுடரைப் போட்டுக்கிட்டுக் கலர் ட்ரெஸ்ல டியூஷனுக்குப் போ மாட்டியா?, எப்பப் பாரு.. சாயம் போன சீருடைலயே காட்சி தர்ற?” என்றான்.

“ஹ்ம்! கன்னி வெடில கால் வைச்ச மாதிரி இருக்குற கரடியெல்லாம் கலர் ட்ரெஸ்ஸைப் பத்தி பேசுது!”

“என்ன முணுமுணுக்குற?”

“…………..”

“ஓ! மேடம் பேச மாட்டீங்க! சுகரு கொடுத்த சுறுசுறுப்பு தாங்காம, பாத்ரூம்ல உட்கார்ந்து பாகவதர் பாட்டு பாடிட்டு இருந்தியாம்?”

“ஆமா எட்டுக் கட்டைல உன் எலும்பை எப்பிடி எண்ணுறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன்”

“வயிறு வெடிச்சும் கூட உன் வாய் குறையலேயேடி”

“நான் குறைச்சா, நீ ஜெயிச்சா மாதிரி ஆயிடுமேடா”

“இங்க யாரு இப்ப உனக்கும்,எனக்கும் போட்டி நடத்துறா?”

“அப்புறம் என்ன எழவுக்கு டா என் பின்னாடியே வர்ற?”

“ரெண்டே மணி நேரம்! ரெண்டு கன்னம்,ரெண்டு காது அத்தனையும் டேமேஜ் ஆச்சு உன் ஃபிஸிக்ஸ் மிஸ்ஸால!”

“அதுக்கு நீ அவங்க பின்னாடி தான டா சுத்தனும்?”

“அந்தக் குதிரைக்குக் கடிவாளம் கட்டி விட்டதே நீ தானடி?

“நீ எதுவுமே பண்ணலையா?”

“நீ நட்டு வைச்ச! நான் தண்ணீ ஊத்துறேன்! அவ்ளோ தான்”

“நீ என்னவோ பண்ணித் தொல!”

“அப்டிலாம் நீ ஜகா வாங்குனா, எனக்கு இன்ட்ரெஸ்ட்டு போயிடும்டி”

“அதுக்காக?”

“வழக்கம் போல நீ பாடு, நான் எசப்பாட்டு பாட்றேன்”

“பசில பறந்திட்டிருக்க பட்சி கிட்ட வந்து பாட்டு பாடச் சொல்லிக் கேட்குறானே!” என்று முணுமுணுத்தவள் விறுவிறுவென முன்னே நடக்க..

“இப்போ எதுக்கு ஃபார்வர்ட்ல சுத்துற கேசட் மாதிரி கடகடன்னு நடந்திட்டிருக்க?, கொஞ்சம் ஸ்லோ பண்ணு!” – புலம்பியபடியே அவளது வேகத்துக்கு ஈடாக கிட்டத்தட்ட ஓடி வந்தவனைக் கண்டபடியேத் தன் வண்டியை தங்கையின் முன்னே நிறுத்தினான் அண்ணன்.

திடீரென முன்னே வந்து நின்ற வண்டியைக் கண்டு கீர்த்தி ஒரு நொடி அதிர்ந்தாலும் பின் ‘ஹப்பாடா’ என ஆசுவாசப்பட்டுக் கொண்டு.. வேகமாக ஏறி அமர்ந்தாள்.

அண்ணனைக் கண்டதும் ஜெர்க் ஆகிப் போன அசோக், இருவரையும் கண்டு கொள்ளாதது போல் ஆக்ட் கொடுத்து ‘த ர ரி ந…” என வாசித்தபடி, பிடரியைக் கோதிக் கொண்டு மூன் வாக் செய்து ரிவர்ஸில் சென்று கொண்டிருந்தான்.

“காலைல இவன் யாருன்னு கேட்டப்போ தெரியாதுன்னு சொன்ன?”

தங்கையிடம் கண்டிப்புடன் கேட்டவனைக் கண்டு எரிச்சலாகிப் போனவள்,

“என்னோட எந்த சம்மந்தமும் இல்லாதவனை ‘தெரியாது’ லிஸ்ட்ல தான் வைக்க முடியும்”

“ஆனா, அவன் அப்பிடி நினைக்கல போலயே”

“அதுக்கு நான் பொறுப்பாக முடியாது”

“கீர்த்தி…”

“இப்பிடி நீ என்னைக் கேள்வி கேட்குறதா இருந்தா, நான் நடந்தே வீட்டுக்குப் போய்க்கிறேன்” எனக் கூறி விட்டுக் கோபமாய் இறங்கிச் சென்றவளைத் தடுக்காமல்.. மூன் வாக் செய்தபடியே முட்டுச் சந்து வரை சென்று விட்ட அசோக்கின் அருகே சென்று வண்டியை நிறுத்தினான் அண்ணன்.

‘நீ மட்டுமா பைக் வைச்சிருக்க?, நானும் தான் வைச்சிருக்கேன்’ – என்றெண்ணியபடி ஸ்டைலாகக் காலைத் தூக்கிப் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்த அசோக்கை விடைத்த மூக்குடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இப்ப எதுக்கு இவன், கக்கூஸ் போகாத கருங்குரங்காட்டம் மூக்கு வழியா கேஸ் விட்டு-ன்னு இருக்குறான்?, லைட்-ஆ முறைக்க வேற செய்றானே! என்ன சொல்லி விரட்டுறது இந்த எருமை மாட்டை?’

ஓரக்கண்ணால் அவனை நோட்டம் விட்டபடி சிந்தித்தவன், வண்டியை டர்ர்,புர்ர் என முறுக்கியபடியே, அவன் புறம் நன்றாகத் திரும்பி அகலமாய் சிரித்து..

“மூக்கை வைச்சே கண்டுபிடிச்சிடலாம், நீ அந்த மூத்த குடிமகளுக்கு அண்ணன்னு! என்னாஆஆ ஒற்றுமை” – எனக் கூற..

கண்களை அழுந்த மூடித் திறந்தபடி, உதட்டை ஈரப்படுத்திய அண்ணன்காரன்,

“என்ன டா?? லவ்-ஆ?” என்றான்.

புருவத்தைப் பெரிதாக உயர்த்தி, கண்ணைச் சுருக்கி, நெஞ்சு குலுங்க சிரித்த அசோக்..

“எனக்கா?, உன் தங்கச்சி மேலயா? ஹ்ம்ம்ம்ம்” என யோசித்து.. “வைச்சுக்கலாம்” என்றான்.

சுர்ரென்று தலைக்கேறிய கோபத்துடன், ஹேண்ட்பாரை இறுகப் பற்றியபடி எழுந்து நின்ற அண்ணன்,

“என்ன டா திமிரா?, அடுத்த தடவை நக்கல் பண்ண நாக்கு இருக்காது சொல்லிட்டேன்” என்று எகிற..

“ஏஹேய்ய்… மிரட்டுறாருப்பா சாரு! பயந்துடனுமா நாங்க?, இந்த தகதிமித டான்ஸையெல்லாம் உன் தங்கச்சி கிட்டப் போய் ஆட்றா டேய்!” என இவனும் சத்தமிட..

“******* வைச்சுக்கிறேன் டா உன்னை!” என்று கெட்டக் கோபத்தில் கெட்ட வார்த்தை உதிர்த்த அண்ணன், வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து புகை பறக்க சென்று விட்டான்.

ஒரு வேகத்தில் அவனை எதிர்த்துப் பேசி விட்டாலும், அல்லு கழண்டு விட்டது, அசோக்கிற்கு! நெற்றியின் ஓரத்தில் அருவியாகக் கொட்டிய வியர்வைத் துடைத்தவன்,

“ச்சை! என்னை விட என் பாடி ரொம்ப பயப்படுது!” – என்று புலம்பி விட்டு..

‘டேய் அசோக்கு! இவனுக்குப் பயந்து நீ ‘பேக்’ அடிச்சா, அந்தக் குருவிக்கு ரொம்ப குதூகலமாயிடும்! குறுக்கு உடைஞ்சாலும் பரவாயில்ல! குறிக்கோளை விட்டுத் தரக் கூடாது’ – எனத் தனக்குத் தானே கூறிக் கொண்டு..

‘பஞ்சே இல்லாத தலகாணி மாதிரி இருக்குறான், இவனுக்கெல்லாம் பஞ்ச் டயலாக் வேற’ – எனத் திட்டியபடியே வீடு சென்று விட்டான்.

றுநாள் இரவு, டியூஷன் முடிந்து திரும்பி வரும் கீர்த்தியிடம் வம்பு செய்ய வேண்டி முட்டுச் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் வண்டியில்.. தொங்கிய நிலையில் வவ்வாலு.

“இன்னிக்கு அக்கா வீட்ல ஆட்டுக் குடல் குழம்பு மாப்ள! நைட் டின்னருக்குப் போகனும் டா” – கதறியபடி வவ்வாலு.

“இங்க ஒருத்தன் என் குடலை உருவ குறி பார்த்து சுத்திட்டிருக்கான்! உனக்கு ஆட்டுக்குடல் கேட்குதா டா பரதேசி?”

“நீ அவன் தங்கச்சிக்கு குறி வைச்ச, அவன் உன் குடலுக்குக் குறி வைச்சுட்டான்! Hence proved LHS=RHS மாப்ள! இத்தோட விட்டுட்றா”

“அப்டின்னா, என்னை பயந்து ஓடச் சொல்றியா?”

“அது நமக்கு புதுசா மாப்ள?”

“டேய்ய்ய்… பேசாம வாயை மூடிட்டு வா டா”

“ஆனா.. அவன் கிட்ட நெஞ்சை நிமிர்த்தி மஞ்சாசோத்தை காட்டனும்ன்னு முடிவு பண்ணுன நீ, துணைக்கு என்னை ஏன் டா கூட்டிப் போற?”

“உன்னை விட்டா எனக்கு யாரு மாமா இருக்கா?”

“அதனால?”

“எனக்காக உசுரக் கூடத் தருவேன்னு சொன்னியே டா”

“அய்யோ! ரெண்டு உளுந்த வடைக்காக சொன்ன டயலாக்கை எல்லாம் ஞாபகம் வைச்சுக் கொல்றானே”

“மாமா.. உன்னால வாய் விட்டுக் கதற முடியுது! என்னால முடியல. அவ்ளோ தான் டா வித்தியாசம்” – நெற்றி வியர்வையை வழித்த வண்ணம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனைக் கேவலமாக நோக்கினான் வவ்வாலு.

இந்நொடி பயமும்,ரோஷமும் சரிவிகிதமாக அவனது ரத்தத்தில் ஓடிக் கொண்டிருப்பதற்கான பின்னணி இது தான்.

அன்று காலை வழக்கம் போல் காலை ஆட்டிக் கொண்டு அவன் முட்டுச் சந்தில் கீர்த்திக்காக காத்திருந்த போது, அவளுக்குப் பதிலாக அவனது அண்ணன் வந்து சேர்ந்தான், கூடவே இரண்டு தடியனுங்களோடு!

மூவரைக் கண்டதும் மூச்சு முட்டி விட முட்டுச் சந்துக்குள் வண்டியோடு பம்மி விட்டவன், அவர்கள் கடையைக் காலி செய்த பின்னர் தான், சந்தை விட்டே வெளியில் வந்தான்.

நேற்று அவனோடு வாயைக் கொடுத்ததன் விளைவு, அவன் தன் மீது கொலை காண்டில் சுற்றுவதைப் புரிந்து கொண்டவன், ‘நீ ஒரு ஆண்’ எனக் கத்திய ஈகோவுக்கும் ‘ஆப்ஸ்கண்ட் ஆயிட்றா அசோக்கு’ எனக் கதறிய பயத்துக்கும் நடுவே அல்லாடிய வேளை.. கீர்த்தி ‘க்ராஸ்’ செய்ய.. கிளம்பி விட்டான் ஆள் பலத்தைத் திரட்டிக் கொண்டு!

முட்டுச் சந்தில் வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் இறங்கி நின்றனர்.

“மாப்ள, சொன்னாக் கேளுடா, இப்போ கூட ஒன்னும் பிரச்சனையில்ல! இப்பிடியே ஓடிடலாம் டா”

“ப்ச், பேசாம நில்லு” – என்றவன் நகத்தைக் கடித்தபடி பரபரப்புடன் நின்றான்.

“உனக்கும் பயமாத் தான இருக்கு?, அப்புறம் எதுக்கு டா இதெல்லாம்?”

“வர்றாய்ங்க,வர்றாய்ங்க டா மாமா” – என்றவன் கெத்தாக முகத்தை வைத்தபடி வவ்வாலின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு நின்றான்.

வழக்கம் போல் ‘த ர ரி ந…’ என முணுமுணுத்தவன் அண்ணன்+2-வைக் கண்டு அகலமாய் இளித்து வைத்தான்.

வவ்வாலின் தோள் மீதிருந்த அவனது கையை ஒருவனும், அவனது காலரைக் கொத்தாகப் பற்றிய இன்னொருவனும், அவனை ஒரே இழுவையில் தரையில் தள்ளினர்.

இது எதிர்பார்த்தது தான் என்பதால் கை முட்டியை ஊன்றி அண்ணனை முறைத்துப் பார்த்த அசோக்,

“ஆளைக் கூட்டி வந்து அடிக்கிற?, இதெல்லாம் ஆம்பளைக்கு அழகா டா?” என்று விட்டு அந்த +2-க்களிடம் திரும்பி..

“அவன் எவ்ளோ கொடுக்கிறதா சொன்னானோ, அதை விட ஜாஸ்தியா நான் கொடுக்கிறேன்! பேசாம ஓடிருங்க” எனக் கூற..

“ஷ்ஷ்ஷ்ஷ்.. மச்சான்.. அவன் குரவளைல ஒரு மிதி,மிதிடா” – என்று அண்ணன் கூவியதில்.. ஒருவன் ஷூ காலைக் கொண்டு அவன் முகத்தில் மிதிக்க வர.. ஊன்றியிருந்த கைகளில் மண்ணை அள்ளி, தனக்கு இரு புறமும் நின்றிருந்தவர்களின் மீது தெறிக்க விட்டான் அசோக்.

“டேய்ய் மச்சான், கண்ணு எறியுது டா”

“கண்ணு ஃபுல்-ஆ மண்ணு மச்சான்” – என இருவரும் மாற்றி மாற்றிப் புலம்ப.. தலையில் கை வைத்த அண்ணன் காரன், இருபுறமும் ஓடி, இருவரையும் நோக்கிப் பதறி.. “மச்சான் ஏதாவது செய் டா” என்று கத்தியவர்களைக் கண்டு செய்வதறியாது விழித்துக் கொண்டு நிற்க..

பொறுமையாகத் தரையிலிருந்து எழுந்த அசோக், கையை தூசி தட்டி விட்டு, அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி ஆ-வென்ற வாயுடன் நின்ற வவ்வாலை அருகில் அழைத்து.. அவன் தோள் மீது கை போட்டு ஒற்றைக் காலில் நின்று கொண்டு.. “த ர ரி ந…” என வாசிக்கத் தொடங்கினான்.

தன் நண்பர்கள் இருவரது கண்களிலும் ஊதி,ஊதி மண்ணை எடுக்க முயன்று கொண்டிருந்த அண்ணன்காரனைக் கண்டு..

“டேய் மாமா வவ்வாலு…” என்ற அசோக்..

“இதே சிச்சுவேஷன்ல நானும்,இவன் தங்கச்சியும் நின்றிருந்தா.. எவ்ளோ நல்லாயிருந்துக்கும்?” எனக் கேட்க.. பல்லைக் கடித்து ஸ்லோ மோஷனில் இவர்களின் புறம் திரும்பிய அண்ணனைக் கண்டு.. ஆடிப் போன வவ்வாலு..

“வாயை மூட்றா கொரங்கு” – என முணுமுணுக்க.. அப்படியும் அடங்காமல்..

“நான் ஊத.. அவ சிணுங்க…. அட அட அட அட! அமோகமா இருந்திருக்கும்” – என அசோக் நக்கலடிக்க…

ஊதுவதை நிறுத்தி விட்டு கண் சிவக்க அவனை நோக்கிய அண்ணன்காரன், விறுவிறுவென நடந்து வந்து.. அசோக்கின் பின்னந்தலையை அழுந்தப் பற்றி அவன் நெற்றியை அங்கிருந்த கரண்ட் கம்பத்தோடு நச்சென அழுத்தி விட்டான்.

கண்ணை மூடி வலியை உள் வாங்கிய அசோக்கின் தோள்ப்பகுதியில் ரத்தம் சொட்டத் தொடங்க… நிமிர்ந்து.. அரைக்கண்ணில் அண்ணனை நோக்கியவன்..

“ஊதுறேன்னு சொன்னதுக்கே மண்டையை உடைச்சிட்டியே!, நான் உன் தங்கச்சிக்கு உம்மா கொடுத்தா.. என்ன மச்…சான் செய்வ??” – எனக் கேட்டபடி மயங்கி விழுந்தான்.

தழும்பிற்குப் பின்:

சம்பவம் -1:

துக்குடி என்னை இங்க கூட்டி வந்திருக்க?, என்ன இடம் இது?”

இருளுக்கு நடுவே லேசாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த ரைஸ் மில்லைக் கண்டு, தன்னை அங்கே அழைத்து வந்த தோழியிடம் கேள்வி கேட்டாள் கீர்த்தி.

“கீ…ர்…த்..தி…”

“ப்ச், பல்ஸ் மோட்ல பேசாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”

“சாரி டி கீர்த்தி! நான் உன்னை பொய் சொல்லி இங்க கூட்டி வந்துட்டேன்!” – கண்ணீர் விட்டபடி தோழி.

“என்ன சொல்ற?”

“என் கெமிஸ்ட்ரி ரெகார்டு நோட்டு காணாம போச்சுன்னு புலம்பிட்டிருந்தேனே ஞாபகம் இருக்கா?”

“அதை இங்க வந்து எவன் டி ஒளிச்சு வைச்சான்?”

“அய்யோ! அதை எடுத்து வைச்சிருக்கிறது உன் ஆளு அசோக் டி”

“என் ஆளா?, ஒரு அப்பு விட்டேன்னா.. பல்லு பரங்கிமலைல போய் விழும் சொல்லிட்டேன். மேல சொல்லு”

“ப்ச், உன்னை இங்கக் கூட்டி வந்தாத் தான் ரெகார்டு நோட்டைத் திருப்பிக் கொடுப்பேன்னு என்னை மிரட்டுனான் டி”

“மிரட்டுனா, மிஸ் கிட்ட சொல்ல வேண்டியது தான?”

“மிஸ் கிட்ட சொன்னா, நோட்டை எரிச்சிடுவேன்னு சொன்னான் டி”

“நீயும் பயந்துட்டியாக்கும்?”

“ஆமாடி”

“ஷ்ஷ், அழாத! நான் அவனை நொங்கெடுத்து உன் நோட்டை வாங்கித் தர்றேன். இப்ப கிளம்பு போகலாம்” – என்று அவள் கூறிக் கொண்டிருக்கையிலேயே.. தோழி நேரே பார்க்க, தானும் அவள் பார்வையைத் தொடர்ந்தவள்..

அங்கிருந்த நாற்காலியின் மீது.. நெற்றியில் ப்ளாஸ்டரோடு பச்சை சட்டையில் அமர்ந்திருந்த அசோக்கைக் கண்டு ஒரு நொடி வியந்து, பின் கண்ணைச் சுருக்கி அவனை நோக்கினாள்.

அசோக்கின் பார்வை மேஜை மீதிருந்த நோட்டின் மீது பதிந்திருக்க, அவசரமாக அருகே சென்றுத் தன் நோட்டை எடுத்துக் கொண்ட தோழி..

“என்னை மன்னிச்சிடுடி கீ…ர்…த்..தி” எனக் கதறி விட்டு வெளியே பாய்ந்தோடி விட.. அவனுடன் தனித்து நிற்கும் சூழ்நிலையிலும் துளியும் பயமில்லாது… அவனை பொறுமையாக அளவிட்டாள் கீர்த்தி.

அவள் பார்வையில் மெல்லச் சிரித்தவன்..

“யாருமே இல்லாத இடத்துல ஒரு ஆம்பளப் பையனோட தனியா இருக்க! கொஞ்சம் கூட பயம் வரலையா உனக்கு?” என்றான்.

“ஆம்பளப் பையனா?, அது யாரு?”

அவள் கேள்வியில் பல்லைக் கடித்தவன் வேகமாக எழுந்து நிற்க முயன்று, முடியாமல்.. நெற்றியைப் பற்றியபடி வலியில் முகத்தை சுழித்து.. மெல்ல அமர்ந்தான்.

“நெத்தில என்ன சிலுவை?, பாத்ரூம்ல பாச்சா அடிச்சியா?” – கீர்த்தி.

“இல்ல, இது என் மச்சான், மல வாழைத்தோப்புல வைச்சுப் பாசமா கொடுத்த அன்புச் சிலுவை”

“மச்சானா?” என்றவள் அவனை ஒரு நொடி கூர்ந்து நோக்கி விட்டுப் பின் கண்கள் அகல.. அவனருகே நெருங்கி..

“எங்கண்ணன் கூட வம்பிழுத்தியா?” எனக் கேட்டாள்.

“ஏன் என்னைப் பார்த்தா ஹோமோ-செக்ஷூவல் மாதிரி தெரியுதா உனக்கு?”

“ஏய் ச்சீ..”

“பின்ன என்னடி?, உன் கூட நான் பண்றதுக்குப் பேரு தான் வம்பு! உங்கண்ணன் என் கூடப் பண்றதுக்குப் பேரு வயலன்ஸ்”

-வலித்த நெற்றியைப் பற்றியபடி கடுங்கோபத்தில் பேசியவனைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டவள்..

“நீ பேசியே அவனை பேஸ்தடிக்க வைச்சிருப்ப, அதான்.. மண்டைல மெகந்தி வரைஞ்சிருக்கான்” எனக் கூற..

“ரொம்ப கெத்து காட்டாதடி! நான் அசந்த நேரம் பார்த்து அம்மி அரைச்சுட்டான் உன் நொண்ணன்! நான் மட்டும்… அலெர்ட்டா இருந்திருந்தா… அவன் ஆர்ம்ஸ்ல ஆணியடிச்சிருப்பேன்” என்றான்.

“யாரு நீ?, ஆனி மாசம் பொறந்த ஆப்பிரிக்க யானை மாதிரி இருக்கான்! இவன் ஆணியடிப்பானாம்!”

“அவனுக்கு ஆணி அடிக்கிறேனோ இல்லையோ, இப்ப உனக்கு கிஸ்ஸடிக்கப் போறேன் டி”

“அடிச்சுப் பாரு பார்ப்போம்” – என ஃப்ளோவில் கூறி விட்டவள், பின் அதிர்ந்து..

“என்னது?” என்றாள் பிளந்த வாயுடன்.

“வாயை அவ்ளோ திறந்தா எப்பிட்றி கிஸ்ஸடிக்கிறது?, நீ இங்க்லீஷ் படமெல்லாம் பார்த்ததில்ல?”

“கந்த சஷ்டி விரதம் இருக்கிறவ கிட்டக் கண்டமேனிக்கு பேசுறானே! ஆண்டவா!”

“சாகத் துணிஞ்சவன், சாத்திரம் பார்ப்பானா?, இன்னிக்கு உன் லிப்ஸ்ல லஸ்ஸி குடிக்காம விட மாட்டேன் டி நான்!”

“ஆல்ரெடி கள்ளு குடிச்ச களவாணிப்பய மாதிரி தள்ளாடிக்கிட்டு நிற்குற! உனக்கெதுக்குடா லஸ்ஸி?”

“கிஸ்ஸூன்னு சொன்னதுமே காயம் மாயமாயிடுச்சுடி! மிச்ச எனர்ஜியை நான் உன்னை வைச்சு ஏத்திக்கிறேன்” – என்றவன் எகிறிக் குதித்து அவள் முன்னே வந்து நின்றான்.

“வெட்கப்பட்டு சொக்கி நிற்ப-ன்னு பார்த்தா.. வெறுப்பா பார்க்குற?” - என்றபடி தோளைப் பற்ற வந்தவனிடமிருந்து அவசரமாக ஒதுங்கி..

“தொட்டேனா வெட்டிருவேன் சொல்லிட்டேன்! விளையாட்டாத் தான பேசுறன்னு விட்டு வைச்சா, விவகாரம் பண்றியா டா பேமானி?” – என்று கத்தியவளிடம்..

“விளையாட்டா நினைச்சு நான் பண்ணத, வினையாக்கி நெத்தில வெட்டு போட்டதே உன் நொண்ணன் தான் டி”

“அதனால?”

“அவனுக்கு வலிக்கனும்! அதுக்கு அவன் உடம்புல ரத்தம் வர வைச்சாப் போதாது! நெஞ்சுல வர வைக்கனும்! அதுக்கு நான் உன்னைக் கிஸ் அடிக்கனும்”

“தெலுங்குப் பட வில்லன் மாதிரி திக்காம வசனம் பேசுறானே! டேய்.. கஸ்மாலம்! நீ கம்பி எண்ணத் தான் டா போற!” – என்றவள் ஓடப் பார்க்க.. வேகமாக அவள் கையைப் பற்றியவன்..

“வந்த வேலை முடிஞ்சதும் ஜோடியா ஜாகிங் போலாம்! இப்ப ஓடாத” – எனக் கூறியதும்..

“ஏற்கனவே அடிபட்ட இடத்துல அழகு குத்த வேணாமேன்னு தான் இவ்ளோ நேரம் பொறுமையா இருந்தேன்! மவனே.. வாங்கிக்கோடா” என அவனது நெற்றியை நோக்கிச் சென்றவளின் விரல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன்..

“ஏன் டி நான் என்ன sand bag-ஆ? அண்ணனும்,தங்கச்சியும் மாத்தி,மாத்தி கும்முறதுக்கு?, ஒரே ஒரு கிஸ்ஸூ தான்! உனக்குப் பிடிக்கலேன்னா, நீ வாங்குனதைத் திருப்பிக் கொடுத்துடலாம்”

“அடப் பரதேசி! கையை வுடு டா”

இரண்டு கைகளையும் அழுத்தமாகப் பிடித்து வைத்திருந்தவனிடமிருந்து, சுழித்த முகத்துடன் எரிச்சலும்,கோபமுமாய் அவள் விடுபடப் போராட.. அத்தனை அருகில் அவளது முகம் பார்த்தவனுக்கு.. அதுவரையிருந்த நிலை மாறி.. Background, Blur ஆக ஆரம்பித்தது.

மஞ்சள் வெளிச்சத்தில் ஒளிர்ந்த ஒற்றைக் கல் மூக்குத்தி அந்தக் கருப்பழகியின் கன்னத்தை மின்னச் செய்ய.. அகண்ட புருவத்துடன் நீண்டிருந்த இமைகளின் கீழ், குடையாய் விரிந்திருந்த கண்கள் அவனைக் கொஞ்சமாய் களவாடிச் செல்ல.. ஏகத்துக்கும் எகிறிக் குதித்த டீனேஜ் ஹார்மோன்களின் கொதிப்பை உணர்ந்து.. அவன் அடுப்பில் வைத்த அண்டாவாய் மாறிய வேளை.. சட்டென அவன் முட்டியை நோக்கி ஒரு ‘எத்து’ விட்டாள் கீர்த்தி.

லேசாக ஆடினாலும் சமாளித்து நின்றவன், பற்றியிருந்த அவளது கைகளை அவள் முதுகின் பின்னே வளைத்து, கையின் போக்கிற்குக் குனிந்தவளோடுத் தானும் குனிந்தான்.

“நான் திருப்பி மிதிச்சா தாங்குவியா டி நீ?

“மூஞ்சியை எதுக்கு டா இப்பப் பக்கத்துல கொண்டு வர்ற?, ஒரே மருந்து வாடை ச்சை!”

“அப்பிடியா என்ன? நான் போய் செண்ட் அடிச்சுட்டு வர்றேன்! நீ வெய்ட் பண்றியா?”

“டேய்ய்”

–தன் முகத்தை நோக்கி முன்னேறி வந்தவனின் முகம் பார்க்காது அவள் பக்கவாட்டில் திரும்பிக் கொள்ள..

பதட்டத்தில் நெற்றியோரம் வியர்வை வழிய, விடுபடப் போராடியபடி நின்றவளை அவன் விடாது நோக்க..

அவனிடமிருந்து சத்தமில்லாது போனதை உணர்ந்து அவள் அவன் முகத்தை நோக்கித் திரும்பிய வேளை.. மெல்ல வளைந்த இதழ்களுடன் அவள் விழிகளை நோக்கினான் அவன்.

அதிசமாய்,ஆர்வமாய்,இனிமையாய் இமை தட்டாது தன்னையே நோக்குபவனைக் கண்டு கண்களை அகல விரித்தாள் கீர்த்தி.

எப்போதும் தூக்கிய புருவத்துடன் கெத்து காட்டியபடி, அசால்ட்டாய் அவளைக் கடந்து போகும் அவன் பார்வை, இப்போது ஆசையாய்த் தன் மீது பதிந்திருப்பதைக் கண்டு உள்ளம் அதிர்ந்து விட..

“என்ன அது கண்ணுல?” எனக் கேட்டாள் உள்ளே சென்று விட்ட குரலில்.

“உன் முகம் தான்”

அவசரமாய் அவன் விழியிலிருந்துத் தன் பிம்பத்தை அவள் விலக்கப் பார்க்க, அழுத்தமாய் அவள் கைகளைப் பற்றியவன்..

“நீ விலகுனாலும், என் கண்ணுல உன் முகம் மட்டும் தான் தெரியும்” என்றான்.

“இப்போ எதுக்கு நீ வசனம் பேசுற?”

“உன்னை வசியம் பண்ணத் தான். மயங்கிட்டியா?”

“சத்தியமா இல்ல”

“எப்போ மயங்குவ?”

“சான்ஸே இல்ல! ஆனா, நீ ஏன் இப்பிடி மாறிட்ட?”

“தெரியல! காரணத்தை உன் மூக்குத்திக் கிட்டத் தான் கேட்கனும்”

“உன் மூஞ்சிக்கு ரொமான்ஸ் வேறயா டா!”

“ஏன்? உனக்குப் பிடிக்கலையா?”

“ஆமா”

“பொய் சொல்ற!”

“ப்ச்”

“எதுகை,மோனையில்லாம முதன் முறையா மூணு நிமிஷம் பேசியிருக்க!, மூளைல ரயில் ஓட்றதால தான் ரைமிங் வர மாட்டேங்குது உனக்கு”

“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்ல! நீ கையை விடு, எனக்கு வலிக்குது! ரெயின்போ போஸ்ல எவ்ளோ நேரம் நிற்கிறது!”

முகம் சுழித்து நிமிரப் பார்த்தவளை அடக்கி, இரு கைகளால் அவள் கன்னம் பற்றியவன்..

“ரெண்டே நிமிஷம் தான்! பசக், பசக்கோட முடிச்சுக்கலாம்” எனக் கூற..

அவன் இருகைகளைத் தன் இரு கைகளால் பற்றியவள்..

“திகிலடிக்க வைக்காம தள்ளிப் போடா நீ முதல்ல” – எனப் போராடிய வேளை..

தூரத்தில் “கீர்..த்தீதீதீதீ” – என்கிற சத்தத்தைத் தொடர்ந்து.. அகண்ட எட்டுக்களுடன் அண்ணன்காரன் அலறியடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது.

“அய்யோ அண்ணன்”

“எனக்குத் தான் அய்யோ! உனக்கு அண்ணன் மட்டும் தான்”

“விளையாடாத! கையை எடு!” - அண்ணன் மீது ஒரு பார்வையை வைத்தபடி தன் கன்னத்திலிருந்த அவனது கைகளை அகற்ற, விடாது போராடியபடி கீர்த்தி.

“அந்த அர்னால்டை விட்டுட்டு இந்த அழகனைக் கொஞ்சம் பாரேன்”

“யாரு நீ அழகனா?, பார்த்த வரைக்கும் போதும்! டேய் உனக்குக் கொஞ்சம் கூட பயமே இல்லையா டா?, கையை எடுத்துட்டு நவுந்து நில்றா”

“முடியாது! உன்னை நான் அபேஸ் பண்றதை உன் அண்ணன் பார்க்கட்டும்”

“என்னது?” எனப் பல்லைக் கடித்தவள்..

“அய்யோ! அண்ணன் பக்கத்துல வந்துட்டான்” எனக் கூறி முழு பலத்துடன் அவனது கையை உதற முயன்ற நிமிடம்..

அதே பலத்துடன் அழுத்தமாய் அவள் முகம் பற்றித் தன்னருகே இழுத்த அசோக், அவள் நெற்றியில் தன் உதடுகளை பசக்கெனப் பதித்திருந்தான்.

ஜிவ்வெனத் தலை முதல் கால் வரை அலைபாய்ந்தோடிய பய ஹார்மோன்களினால் உடல் வியர்த்து விட, மூச்சடக்கி நின்றதன் விளைவால் அடித்துக் கொண்ட இதயத்திற்கு உயிர் கொடுக்கும் பொருட்டு, அனிச்சை செயலாய்.. அவன் உதட்டில் பட்டென ஒரு அடியைப் போட்டு… அவன் மார்பில் கை வைத்து ஒரே தள்ளாய் கீழே தள்ளினாள் கீர்த்தி.

அவள் தள்ளக் காத்திருந்தவன் போல் படாரெனக் கீழே விழுந்தவனுக்கு உலகம் தன் உதட்டோடு உறைந்து போய் விட்ட உணர்வு.

பார்வை வட்டத்துக்குள் நின்றவளை பாய்ந்து சென்று அணைத்துக் கொள்ளத் தூண்டிய ஹார்மோன்கள் அவஸ்தையைக் கொடுக்க, அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல், குனிந்த தலையோடு மறுபுறம் திரும்பியவனின் இதயம் அலறலாய்த் துடித்தது.

மூச்சு வாங்க அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அழுகை வரும் போலிருக்க.. உதட்டை ஈரப்படுத்தி, அணிந்திருந்தத் துப்பட்டாவை இறுகப் பற்றியவள், அருகே வந்து விட்ட அண்ணனிடம் ஓடிச் சென்றாள்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்தபடி அருகே நெருங்கியிருந்த அண்ணன், இடையே வந்த தங்கையை விலக்கி விட்டு முழு வேகத்தில் உள்ளே நுழைந்து, அமர்ந்திருந்தவனின் முதுகில் ஓங்கி மிதித்தான்.

அவன் மிதித்ததில் குப்புற விழுந்த அசோக், அவசரமாய்த் திரும்பி.. அடுத்த மிதிக்காக தூக்கியவனின் கால்களைப் பற்றிக் கீழே இழுத்து விட்டான்.

விழுந்து,புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரையும் கண்டுத் தலையில் அடித்துக் கொண்ட கீர்த்தி.. இடையில் சென்று.. முழுக் குரலில்..

“அய்யோ விடுங்க ரெண்டு பேரும்! அண்ணா.. அவனை விடுண்ணா.. டேய்.. விடு டா” – என்று கத்த..

ஒருவரையொருவரின் சட்டைக்காலரைப் பற்றிக் கொண்டு மூச்சு வாங்க நின்ற இருவரையும் நோக்கிப் பின்.. அவசரமாய் அண்ணனது கைகளை அவனிடமிருந்து விலக்கியவள்..

“அறிவே இல்லையா உங்களுக்கு?” – என்று கோபமாய்த் திட்டினாள்.

“எவ்ளோ தைரியம் இருக்கனும் இந்த நாதாரிக்கு! இவன் வாயை உடைச்சு உப்புக் கண்டம் போட்டாத் தான் என் மனசு ஆறும்! ஆமா! நீ என்ன அமைதியா நிற்குற?, இவனை செருப்பைக் கழட்டி அடிக்காம?” – எனத் தங்கை மீது பாய..

“இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான்” – என்று அண்ணனைக் குற்றம் சாட்டினாள் தங்கை.

“நானா?”

“ஆமா!, அவன் நெத்தில தூர் வாரி அவனைத் தூண்டி விட்டது நீ தான?”

“அவன் என் தங்கச்சி பின்னாடி சுத்துவான்! நான் அதைப் பார்த்துட்டு அமைதியா இருக்கனுமா?”

“எனக்குப் பாதுகாப்பு கொடுன்னு நான் உன் கிட்டக் கேட்டேனா?”

“ஹாஹாஹாஹாஹா” – அவள் தன் அண்ணனையும் விட்டு வைக்கவில்லை என்பதில் அலாதி மகிழ்ச்சியடைந்து கடகடவென சிரித்தபடி, ப்ளாஸ்திரியிலிருந்து பீச்சியடித்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்த அசோக்.

அவன் சிரித்ததில் கடுப்பான அண்ணன், வேகமாய் ஓடிச் சென்று, மீண்டும் அவன் தோளில் ஓங்கி ஒரு மிதி,மிதித்தான்.

“ஏ..ஏ..ஏய்ய்ய்…” என்றபடி அவசரமாய் அண்ணனின் தோளைப் பற்றிப் பிடித்து நிறுத்திய கீர்த்தி..

“மறுபடி முதல்ல இருந்து தொடங்குனீங்கன்னா, நான் செம்ம காண்டாயிடுவேன் சொல்லிட்டேன்” என்று சத்தமிட.. தன் தோளிலிருந்த அவளது கைகளை உதறியவன்..

“நான் அவனை அடிச்சா உனக்கென்ன?” என்று சீறினான்.

“ம்ம்ம், அவனுக்கு ஏதாவது ஆகி வாயைப் பொளந்துட்டான்னா, ஸ்கூல்ல என் மானம் தான் காத்துல பறக்கும்! முதல்ல நீ எதுக்கு இதுல தலையிடுற?, என் விஷயத்தை என்னால ஹாண்டில் பண்ணிக்க முடியாதா?”

“நீ ஹாண்டில் பண்ணிக் கிழிச்சதைத் தான் பார்த்தேனே!” என்றவன் தங்கைக்குக் கேட்காத வண்ணம் “அவன் முத்தம் கொடுக்கிறான்! இவ முழிச்சிட்டு நிற்குறா” என்று முணுமுணுத்தபடி அசோக்கைப் பார்க்க.. அவன் அகலமாய்ச் சிரித்து லேசாய்க் கண்ணடித்தான்.

தங்கையின் கோபமும், அசோக்கின் செய்கையும் அண்ணனை வெறுப்பாக்கி விட.. கையை இறுக்கி அங்கிருந்த மேஜையைக் குத்தியவன்…

“இவன் அடங்க மாட்டான்! நீ இங்கிருந்து கிளம்பு! நான் இவனை செட்டில் பண்ணிட்டு வர்றேன்” என்றான்.

“பண்ணு! பண்ணு! நான் இப்பவே போய் விஷயத்தை வீட்ல சொல்றேன்! பிரச்சனை பெருசாகி, நாளைக்கு தினமலர்ல தலைப்புச் செய்தியா வரட்டும்”

“அதுக்காக இவனை இப்பிடியே விடச் சொல்றியா?”

“இப்பிடியே என்ன இப்பிடியே? அவன் நெத்தில நெல்லு குத்தியிருக்க! தோளைத் தோண்டி வைச்சிருக்க! போதாதுக்கு நானும்.. அவன் வாய்ல வெளுத்து விட்ருக்கேன்! இந்த வெளிக்காயத்துக்கே அவன் வெனிஸ்ல செட்டில் ஆகனும்! அதனால, இனி என் கிட்ட எந்த வம்பும் பண்ண மாட்டான்” என்று அவனை முறைத்துப் பார்த்தவள் “பண்ணவும் கூடாது” என்று பல்லைக் கடித்தபடி சொல்ல..

அவன், அவளது முகத்தை ஏறெடுத்தும் பார்க்காது.. நக்கலாய் உதட்டை வளைத்தபடி இன்னமும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

அவனது ஆட்டிடியூடில் மேலும் ஆத்திரமடைந்த அண்ணன்காரனின் கையைப் பற்றியிழுத்துக் கொண்டு நடந்தவள், அசோக்கை முறைத்த வண்ணமே முன்னே செல்ல.. தங்கையின் கையை உதறி விட்டு ஆக்ரோஷமாய் அவனை நெருங்கிய அண்ணன், கடைசியாய் முகத்தில் விட்டக் குத்தில்.. வாய் ஒருபுறமாக வாங்கிக் கொண்டது அசோக்கிற்கு!

சம்பவம் -2:

கெமிஸ்ட்ரி லேப்பில் பிப்பெட்டுகளுக்கும், பியூரெட்டுகளுக்கும் நடுவே.. தீவிர முகத்துடன் நின்று கொண்டிருந்த அசோக், அறை வாசலில் அரவம் உணர்ந்து நிமிர்ந்து நோக்கினான்.

ரெட்டை ஜடையின் ஒருபுறம் மல்லிப் பூ தொங்க, அணிந்திருந்த ஐடி கார்டைப் பற்றியவண்ணம் ஒரு கையில் ரெகார்டு நோட்டைப் பிடித்தபடி உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

அவனைப் பார்க்கத் தான் வந்திருக்கிறாள் போலும்!

கருமணிகளை உருட்டியபடித் தேடியவளின் கண்கள் தன்னை வந்தடைகையில் பார்வையைப் பியூரெட்டில் நிறுத்தினான் அசோக்.

உள்ளே லேசாகப் படபடத்தது அவனுக்கு!

அடி வாங்கி,மிதி வாங்கி, வாய் ஒரு பக்கமாக வாங்கிக் கொண்ட சம்பவம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது.

அவள் தன் முன்னே வந்து நின்று, தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தும், அவள் முகம் பார்க்காமல் பியூரெட்டின் மீதே கவனமாயிருந்தவனைக் கண்டு “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமினாள் அவள்.

நிமிர்ந்து பார்க்க முடியாது. போடி!

“காயமெல்லாம் காணாம போய்டுச்சு போல”

அதுவரை அவனை அளவெடுத்திருந்தவளின் ஆராய்ச்சி முடிவு!

“……………”

“உதட்டோரம் மட்டும் இன்னும் ரத்தம் உறைஞ்சு போயிருக்கு??”

‘அடிச்சது நீயாச்சே’ – கூறிக் கொண்டான் மனதுக்குள்.

“உளுந்து வடையை வாய்ல வைச்சுக்கிட்டு, உஜாலா விளம்பரத்துக்கு உல்லாசமா ஆடிட்டிருந்த உனக்கு இதெல்லாம் தேவையா?”

“………….”

“இத்தோட எல்லாத்தையும் விட்ரு” – என்ற அவளது குரலில் அவன் அசைவை நிறுத்த..

“இப்போ எந்த வம்பும் நீ பண்றதில்ல தான்! ஒத்துக்கிறேன்! ஆனாலும்.. பதுங்குன புலியாட்டம் சமயம் பார்த்துப் பாய நினைச்சன்னு வை…” என்றவளைக் கேட்டு..

அவனுக்கு மூக்கு புடைக்க.. அப்போதும் அவள் முகம் பாராமல்… பாக்கெட்டுக்குள் கை விட்டபடிப் பார்வையைப் பிப்பெட்டின் மீது பதித்தவனின் செய்கையே கேட்டது ‘என்னடி பண்ணிடுவ?’ என்று!

“சின்னப்புள்ளத்தனமா அப்பா,அம்மாவையெல்லாம் கூட்டி வந்து பஞ்சாயத்து பண்ணுவேன்னு நினைக்காத! பொட்டி,படுக்கையோட உன் வீட்டு வாசல் முன்னாடி வந்து உட்கார்ந்துடுவேன்!”

-அவள் கூறியதைக் கேட்டு சிரிப்பு வர… அழகாய் விரிந்த இதழ்களுடன் நிமிர்ந்து அவளை நோக்கினான், கடந்த பத்து நிமிடத்தில்… முதல்முறையாக!

அன்று பார்த்த.. அதே பார்வை!

உள்ளே அடித்தக் குளிரில்.. கலங்கி.. விறைத்த மூக்குடன்.. அவனை முறைத்து..

“எதுக்கு இப்பிடிப் பார்க்குற?” எனக் கேட்டாள் கீர்த்தி.

கையைக் கட்டிக் கொண்டு பின்னிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவனின் விழிகள்.. பார்வை மாறாது.. அவள் மீது பதிந்திருக்க… ஒரு நொடி.. “இல்ல…” என்று இழுத்து…

“நெத்தில இன்னும் என் எச்சில் ஈரமிருக்கான்னு பார்த்தேன்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு விழிகள் வியப்புற, இழுத்த மூச்சுடன் இமை தட்டி விழித்தவள்.. முகம் கன்ற.. “ச்ச” என்று விட்டு விறுவிறுவெனத் திரும்பி நடந்து விட்டாள்.

கீர்த்தியறியாத சம்பவம் ஒன்று:

நெற்றியில் கட்டுப் பிரிக்கப்பட்டிருக்க, எஞ்சிய காயத்தில் பாண்ட்-எய்டுடன், அந்த ஹோட்டலின் கார்னர் இருக்கையில் அமர்ந்திருந்த அசோக்கின் பார்வை முழுதும்.. எதிரிலிருந்தவனை சுற்றி வந்து கொண்டிருந்தது.

இவனைக் கண்டதும் முகத்தில் எள்ளும்,கொள்ளும் வெடிக்க முழு எரிச்சலிலிருந்த அண்ணன் காரனுக்கு அவனது மூஞ்சியை உடைக்கக் கைகள் பரபரத்தாலும், தங்கையின் கோப முகத்திற்குப் பயந்து தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

காதலியைக் கண் கொட்டாமல் வெறிக்கும் காதலன் போல், காலாட்டிக் கொண்டு உல்லாசமாகத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு எரிச்சல் மிக,

“என்ன டா இங்க பார்வை?, ம்??, வாங்குனது பத்தலையா??” என்று எகிறினான் அண்ணன்காரன்.

அவனது ஆத்திரத்தை அசால்ட்டாகப் புறந்தள்ளிய அசோக்..

“வாங்குனதெல்லாம் ஓகே தான்! கொடுத்தது தான் பத்தல! நான் எதைச் சொல்றேன்னு புரியுதா?” எனக் கேட்க..

ஆத்திரத்தில் கையை மடக்கி டேபிளைக் குத்தியவனைக் கண்டு சிரித்து..

“இப்டிலாம் கோபப்படாத! ஃபியூச்சர்ல உன் வீட்டு மாப்பிள்ளையா நான் வந்து உட்காரும் போது.. நீயும்,நானும் இப்பிடி அடிச்சிட்டிருந்தா நல்லாவா இருக்கும்?” எனக் கூற..

“டேய்ய்ய்ய்ய்ய்” எனக் கூவியபடி எழுந்து நின்றவனைக் கண்டு.. அலட்டிக் கொள்ளாம்ல.. கிண்ணத்திலிருந்த ஜாமூனை வாய்க்குள் அடைத்துப் பொறுமையாக.. மென்று விழுங்கிய அசோக்.. கையிலிருந்து ஸ்பூனை அவனை நோக்கி நீட்டி..

“என்னைக்கா இருந்தாலும்…. நீ தான் டா…. எனக்கு மச்..சான்!” என்றான்.