அத்தியாயம் - 1

ங்கக் கடலில் உருவாகியுள்ள ‘********’ புயல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என தமிழக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்.. புயல் பாதிப்புக்குள்ளாகும் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.”

“புயலானது நாகை அருகே கரையைக் கடக்கையில் மணிக்கு 90கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் நாகை துறைமுகத்தில் அபாயத்தைக் குறிக்கும் 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அங்கே குடிநீர், உணவு, சுகாதார வசதிகள் குறித்தும் விளக்கினார். தாழ்வான பகுதிகளில் .. குறிப்பாக கூரை வீடுகள்,ஷீட் வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.”

“மிஸ்டர்.*****, நீங்க சொல்லுங்க. 10-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு என்றால் என்ன?, அது எதற்காக ஏற்றப்படுகிறது??”

“சிவலோசினி, பொதுவாக புயல் வீசும் போது பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவது கடலோரப் பகுதிகள் தான். துறைமுகங்கள், துறைமுகங்களை நோக்கி வரும் கப்பல்கள்,படகுகள், கடலில் இருந்து கரைக்கு வருபவர்களை,மீனவர்களை எச்சரிக்க விடப்படும் ‘சிக்னல்’ தான் இந்தக் கூண்டுகள். துறைமுகத்தில் ஒரு உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும்,இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால், காற்றில் கிழிந்து விட வாய்ப்புண்டு என்பதால் தான் இந்தக் கூண்டு. இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் உண்டு. நிலைமையின் தீவிரத்தைப் பொருத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது. துறைமுகம் மற்றும் அதனருகே கடந்து செல்லும் புயலினால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதைக் குறிக்கத் தான் இந்த 10-ம் எண் கூண்டு ஏற்றப்படும்.”

தொலைக்காட்சித் திரையில் விடாது ஒலித்துக் கொண்டிருந்த செய்தியைக் கேட்டபடி நடுங்கும் உள்ளங்கையை இறுகப் பற்றிய கேசவனுக்கு சுற்றியடித்தக் குளிர்க் காற்றையும் மீறி நெற்றி வியர்த்து வழிந்தது.

கடலோரத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் அனைவரும் கைக்கு அகப்பட்ட முக்கியப் பொருட்களுடன், பிள்ளைக் குட்டிகளைச் சுமந்தபடி வீட்டை விட்டு வெளியேறி, போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பு மையத்தில் சரண் புகத் தொடங்கியிருந்தனர். மீனவர்கள் எவரும் கடலுக்குள் செல்லக் கூடாது என ஒலிப்பெருக்கிகள் அறிவித்துக் கொண்டிருந்தது. ஆக்ரோஷ அலைகளுடன் பொங்கிக் கொண்டிருக்கும் கடலின் அருகே செல்வது ஆபத்து என விடாது செய்தி பரப்பப்பட்டது. விசைப்படகுகள் அத்தனையும் இக்காற்றுக்கும்,மழைக்கும் சேதமடைந்து விடக்கூடாதென்பதற்காக வேண்டிய பாதுகாப்பை செய்த வண்ணமிருந்தனர் மீனவர்கள்.

அடுத்து சில மணி நேரங்கள் தான்! பஞ்ச பூதங்களில் இருவர் தங்களுக்கு ஏன் பூதம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறதென்கிற காரணத்தை மிகவும் அபாயகரமான முறையில் உலகுக்குக் காட்டப் போகிறார்கள்! பலத்தக் காற்றும்,மழையும் ஒன்று கூடி சிவ தாண்டவத்துக்கு நிகரான ஆட்டத்தைப் போட்டு ஆக்ரோஷப்படப் போகிறது. ஆண்டாண்டு காலமாய் வளர்ந்து செழித்திருந்தாலும், அதிவேகத்துடன் தங்கள் கழுத்தை நெரிக்க வரும் காற்றை சமாளிக்கத் திராணியில்லாமல் எத்தனையோ மரங்கள் பேச்சு,மூச்சற்று வேரோடு சரிந்து விழுந்து பரிதாபமாய் உயிர் துறக்கப் போகின்றன. இயற்கையாய் வளர்ந்து நின்ற மரங்களே எக்ஸ்ப்ரஸ் வண்டியில் பரலோகம் செல்லும் போது, இந்த மின் கம்பங்கள் மட்டும் தப்பிக்குமா என்ன? அதுவும் மண்ணைக் கவ்வி ஊர் முழுவதுக்குமான மின்சாரத்தைப் பறித்து இருளைப் பொழியச் செய்யப் போகிறது. எத்தனை,எத்தனையோ வீடுகளின் கூரைகளுக்கு சிறகு முளைக்கப் போகிறது! பொருட்சேதமும்,உயிர்ச்சேதமும் எத்தனையென்பதை இந்தக் கோரப் புயலின் டப்பாங்குத்து முடிந்த பின்பு கணக்கெடுத்துப் பார்த்தாலொழிய எவரும் அறியப்போவதில்லை!

இவையனைத்தும் கேசவனின் மூளைக்குள் விடாது சுற்றி வந்தாலும், அவனது இதயம் மட்டும்.. கடலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் அவ்விருவரை எண்ணி பய ஹார்மோன்கள் சுமந்த ரத்தத்தை பம்ப் செய்து கொண்டிருந்தது.

என்னவானார்கள் இருவரும்?, உயிரோடு திரும்புவார்களா??

சூரியனிடமிருந்து வரும் வெப்பம் பூமியின் எல்லாப் பரப்பிலும் சீராகப் படுவதில்லை. இதனால் பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும், மறு பகுதி வெப்பம் குறைவானதாகவும் காணப்படும். இதற்கு பூமியின் அமைப்பே முக்கியக் காரணம். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீசத் துவங்குகிறது. அப்போது பூமியின் சுழற்சி காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு புயலாக மாறுகிறது.

- எப்போதோ சிறு வயதில் படித்த.. புயல் எப்படி உருவாகிறதென்பதற்கான விளக்கத்தை அநாவசியமாய் இப்போது நினைவு கூர்ந்து.. மூளை மனப்பாடமாய் ஒப்பிக்க.. பெருத்தக் கோபத்துடன் குட்டி சுனாமியாய் வெண் நுரைகளை க்ரீடமாய் சூடி.. முட்டி போட்டுக் கொண்டு முன்னே பாய்ந்து வந்தக் கருத்த கடலலைகளைத் தடதடக்கும் இதயத்துடன் பார்த்து விட்டு... அந்தக் குட்டித் தீவின் கரையில்.. கைகளைக் கட்டிக் கொண்டு கோபமும்,கண்ணீருமாய் வெற்றுக் கால் மணலில் புதைய... பயம் என்ற உணர்வைக் காதல் ஹார்மோனுக்குள் தொலைத்து விட்டு முழு முட்டாளாய்த் தன் கண் முன்னே நின்றவளை நோக்கினான் அவன். பெயர் இளவரசன்.

நொடிக்கொருதரம் கரையை சுவை பார்த்துக் கொண்டிருக்கும் ராட்சத அலைகள்.. அவர்களிருவரது கால்களை எட்டி விட சகுனம் பார்த்துக் கொண்டிருப்பதை நிமிடத்தில் புரிந்து கொண்டவன்.. சற்றுத் தொலைவில் கட்டப்பட்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டு விட்டு.. அவள் முன்னே சென்று நின்றான்.

“இதோ பாரு, தற்கொலை பண்ணிக்கிறது தான் உன்னோட நோக்கம்ன்னா.. ரெண்டு முழக் கயிறை வாங்கிட்டு வீட்டுக்குப் போய் உங்கப்பா முன்னாடி தூக்குல தொங்கு! இல்ல, பூச்சி மருந்தைக் குடிச்சிட்டு அக்கடான்னு படுத்துறு! இதையெல்லாம் விட்டுட்டு இப்படி புயல் வர்ற சமயம் நடுக்கடல்ல நின்னுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்” – முழு எரிச்சலுடன் கூறினான்.

- ‘பசிச்சா பன்னை வாங்கித் தின்னு,இல்ல 2 வடையை வாங்கித் தின்னு’ ரீதியில் அசட்டையாக அடிக்குரலில் அவன் சீறியது.. விர்,விர்ரென்ற அடித்தக் காற்றைக் கிழித்துக் கொண்டு அவள் செவிகளைச் சென்றடைந்தது. அவள் – இளங்கவி.

பல்லைக் கடித்தபடிக் கண்ணிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் நீரை ஆத்திரத்துடன் துடைத்தவள்..

“நான் என்னமோ செஞ்சுட்டுப் போறேன்! உங்களுக்கென்ன?, ஆமா,நீங்க எதுக்காக என்னைத் தேடி இங்க வந்திருக்கீங்க?, அக்கறையா? ம்?, எனக்கு எதுவும் தேவையில்ல! மரியாதையா.. போங்க இங்க இருந்து!” – படகை நோக்கிக் கரம் நீட்டியவளிடம் கோபத்துடன் கை ஓங்கியவன்.. பின் “ப்ச்” என்று விட்டு நெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொண்டான்.

“ஏய்ய்ய்.. நிலைமை புரியாம முரண்டு பிடிக்காத!, இங்க நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எமலோகத்து வாசல்ல நிக்கிறதுக்குச் சமம். இன்னும் தாமதிச்சா.. ரெண்டு பேரும் புயல்ல சிக்கி நாளைக்குப் பிணமாத் தான் கரைல ஒதுங்குவோம். உன் அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாரு.. இந்நேரம் உன்னைக் காணோம்ன்னு எவ்ளோ பதறிட்டிருக்கோ! அதை விட.. உன் அப்பா.. உன்னை எப்படியெல்லாம் செல்லம் குடுத்து வளர்க்குறார்?, அவங்களைப் பத்தியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம.. முட்டாள்த்தனமா முடிவெடுத்து இப்டி வந்து மாட்டிக்கிட்டியே!” – தாழ்ந்த குரலில் கவலையுடன் கூறினான் அவன்.

“முட்டாள்தனமா?, எது முட்டாள்தனம்? நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து உங்களையே நினைச்சுட்டிருக்கிறது முட்டாள்தனமா?, சரி, நான் முட்டாளாவே இருந்துட்டுப் போறேன். அம்மா,அப்பா,என்னை சுத்தியிருக்கிறவங்கன்னு.. அத்தனை பேரையும் தாண்டி என் உயிரைப் பத்திக் கொஞ்சமும் யோசிக்காம.. இப்பிடி வந்து நிற்கிறேன்னா.. அதுக்கு நான் உங்க மேல வைச்சிருக்கிறக் காதலும்,நீங்களும் தான் காரணம். அது உங்களுக்குப் புரியுதா இல்லையா?”

முழு எரிச்சலுடன் அவளை நோக்கியவன் “என்னடி காதல்?, நீ போய்ச் சேர்றது மட்டுமில்லாம, என்னையும் கூட்டிட்டுப் போறியே! இது பேரு காதலா?, வெறித்தனம்! நினைச்சது நடக்கனும்ன்ற வெறித்தனம்!
என்று கத்தியதும்.. உதடு பிதுங்கி.. உடல் குலுங்க வாய் விட்டு அழுதவள்..

“நீ..நீங்க என்னை ஏத்துக்காட்டியும் பரவாயில்ல! என் அன்பைக் கொச்சைப்படுத்தாதீங்க.ப்ளீஸ்..” – விம்மல்களுக்கிடையில் அவளது முகம் படு பாவமாய்த் தோன்ற.. மீண்டும் நெற்றியைப் பிடித்தான் அவன்.

பின் “கவி...” என்றபடி அவளருகே வர முயற்சித்தவனைக் கை நீட்டித் தடுத்து இரண்டடி பின்னே சென்றவள்..

“உங்களுக்கு என்னைப் பிடிக்கும்ன்றது எனக்குத் தெரியும். என்னைக் காதலிக்கிறீங்க தான?” – என்றாள்.

“உன் அப்பாக் கிட்டக் கை நீட்டி சம்பளம் வாங்குற சாதாரண வேலையாளோட மகன் நான்! என்னைக் காதலிக்கிறேன்னு பிணாத்துறதெல்லாம் ரொம்பத் தப்பு கவி!, இந்தக் காதல் என்னைக்குமே நிறைவேறப் போறதில்ல! சின்னப் பொண்ணு நீ! இதெல்லாம் புரிய நாளாகும். இப்போ என் கூட வா.. போகலாம்....” – மிகப் பொறுமையுடன் நிதானமாய் விளக்கினான் அவன்.

“நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல! காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன்! பதினெட்டு வயசு முடிஞ்சு போச்சு! எது தப்பு,எது சரின்னு யோசிச்சுப் பார்க்க.. சொந்தமா மூளையும் இருக்கு! உங்களை விட நான் பிளஸ் 2-ல 30 மார்க் கூட எடுத்தவ! மறந்துடாதீங்க. அத்தோட.. நான் உங்களை எங்கப்பாவுக்கு மருமகனா இருக்கச் சொல்லல! எனக்குக் காதலனா இருக்கத்தான் கேக்குறேன்”

கண்ணீர்க் கறை படிந்திருந்தக் கன்னங்களுடன் கோபமும்,ஆத்திரமும்.. அதை விட காதல் அதிகம் நிறைந்திருந்த விழிகளுடனும் சிறு பிள்ளைத் தனமாக வாதாடியவளைக் கண்டு அதுவரை உள்ளே தோன்றியிருந்தக் எரிச்சல் கடல்காற்றோடு கரைந்து போனது அவனுக்கு.

இடுப்பில் ஒரு கை வைத்தபடி மறு கையால் தலை முடியை அழுந்தக் கோதியவனிடம்....

“என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லுங்க” என்றாள் அவள் அவன் முகத்தையே பார்த்தபடி.

“நீ ப்ளாக்மெய்ல் பண்ற கவி” – அவளையே நோக்கியபடி அவனும்.

“ஆமா! அப்டியே வைச்சுக்கோங்க! ஒத்துக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?, இல்ல, உன்னை நான் காதலிக்கலன்னு இதுவரைக்கும் ஒரு தடவையாவது மறுத்துப் பேசியிருக்கீங்களா?”

“அது தான் நான் பண்ண பெரிய தப்பு போல”

“இப்போ சொல்லுங்க, உன்னைக் காதலிக்கலன்னு! மறு வார்த்தை பேசாம உங்க பின்னாடி வர்றேன்! ஆனா.. அதுக்கப்புறம் நான் உயிரோட இருந்தாலும் பொணமா தான் நடமாடுவேன்”

“மிரட்டாத. நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓங்கி அறைஞ்சு உன் ஒவ்வொரு பல்லையும் கழட்டனும் போல இருக்கு.”

“எனக்கும் தான்! ஏன் டா இவ்ளோ அழுத்தமா இருக்க-ன்னு கேட்டு உங்க செவுல்லயே நாலு விடனும் போல இருக்கு”

“நீ... நீ என்னை அடிப்பியா?, அவ்ளோ தைரியமா உனக்கு?” – அதட்டலாய் வினவியபடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவளருகே வந்தவனிடம்..

“ஏன் இல்ல?, எங்கப்பாக் கிட்டக் கை நீட்டி சம்பளம் வாங்குற சாதாரண வேலையாளோட மகன் தான நீங்க! அது போதாதா?” – என்றவள் அவன் தோளைப் பற்றி தள்ளி விட்டாள்.

சமாளித்துக் கொண்டு நின்றவன், “சரி, பேசுனது போதும்! கிளம்பு.. ப்ளீஸ்..” என்றான்.

“நான் வர மாட்டேன்! இன்னிக்கு ஒரு முடிவு தெரியாம.. நான் இந்த இடத்தை விட்டு நகர்றதா இல்ல!”

-சட்டமாய் அவள் சீறிய சமயம் பெரிதாய் வந்த அலையொன்று இருவரது கால்களுக்கும் நுரை அபிஷேகம் செய்து விட்டுச் சென்றது.

அவசரத்துடன் நிமிர்ந்து அவள் முகம் நோக்கியவன் “நேரமில்ல கவி, அலை இவ்ளோ தூரம் வர ஆரம்பிச்சிடுச்சு! இனியும் நின்னா... கண்டிப்பா காத்துலயும்,மழைலயும் சிக்கி உயிரை விட்ருவோம், வா என் கூட” என்று மொழிந்து விட்டு அவள் கையைப் பற்றியிழுத்தான்.

முழு பலத்துடன் அவன் கையிலிருந்துத் தன் கையை உதறியவள்..

“சாகப் போறேன்னு இப்டி ஒரு நிலைமைல நான் நின்னும் கூட மனசுல இருக்குறதை நீங்க வெளிப்படுத்தலேல?, எது நான் பண்ணத் தப்பு?, உங்க முதலாளிக்கு மகளாப் பொறந்ததா?, அப்போ எனக்கு ஒரே வழி தான் இருக்கு. இந்த ஜென்மத்துல நான் உயிரோட இருந்தாத் தான செழியன் மகளா இருப்பேன்?, செத்துட்டா??, செத்து மறு ஜென்மம் எடுத்து யாரோ ஒரு சாதாரணக் கூலி வேலை பார்க்குறவனுக்கு மகளாப் பொறந்துட்டா.. நான் விரும்புறவன் என் காதலை ஏத்துக்கத் தயக்கம் காட்ட மாட்டான் தான?” – பைத்தியமாக ஏதேதோப் பிதற்றியபடி அவனிடமிருந்து விலகி.. விறு,விறுவென ஓடியவள்.. கண்ணிமைக்கும் நேரத்தில்.. மேலும்,கீழும் இறங்கி,ஏறி சர்க்கஸ் காட்டிக் கொண்டிருந்தப் பெரியக் கடலலை ஒன்றுக்குள் பாய்ந்து விட்டாள்.

நிமிடத்தில் அவள் செய்து விட்ட கூறு கெட்டத்தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டவன்... பதறிய உள்ளத்துடன் அவளைத் தொடர்ந்து ஓடிக் குதித்து.. பெரும்பாடு பட்டு அவளைக் கரைக்கு இழுத்து வந்தான்.

முழுவதுமாக முங்கி எழுந்து.. நனைந்த உடைகளுடன்.. குளிரில் வெடவெடத்தப் பற்களை அழுத்தமாகக் கடித்துக் கொண்டு முகத்திலிருந்த நீரைத் துடைத்தவளை.. மூச்சு வாங்க நோக்கினான் அவன்.

காற்றின் வேகம் அநியாயத்திற்கு அதிகரித்திருக்க... தூறலாய்த் தொடங்கிய மழையை, பரப்பிக் கொண்டுப் படுத்திருந்த சமுத்திரத்தின் எங்கோ ஓர் மூலையில்... கடலும்,வானும் தொட்டுக் கொண்டிருந்த இடத்தில்.. கரும்புகையாய் ஏதோ ஒன்று மேகமாய்க் கலப்பதைக் கண்டவனுக்கு உறுதியாய் ஒன்று தெரிந்தது. இது அவனது வாழ்வின் கடைசி நிமிடங்கள் என்று!

பெரிதாக எதற்கும் இதுவரை அவன் பயம் கொண்டதில்லை! உயிர் பயம் இருக்கிறதாவென நேற்று அவனிடம் எவரேனும் கேட்டிருந்தால்.. ‘ஆறுலயும் சாவு,நூறுலயும் சாவு’ என அசட்டையாகக் கூறி விட்டுக் கடந்திருப்பான்!

ஆனால்.. அடுத்து என்ன நடக்கப் போகிறதென்பது புரிந்து.. செவிகள் தன்னாலேயே சாவு மேளத்தைக் கேட்கத் துவங்கிய அந்த நிமிடம்.. ஏளனமாய்ச் சிரிக்கும் சித்ரகுப்தனையும்,எகத்தாளமாய் நிற்கும் எமனையும் நேரில் காணப் போவதாய் மனது இடித்துரைத்த அந்த நொடி... இதுவரை இறப்பைப் பற்றிய அவனது அசால்ட்டுத்தனத்தைப் பொடிப்பொடியாகச் சிதைத்தது.

சாவு! அதிபயங்கரமான ஒன்று! கண் மூடிய மறு நிமிடம் உயிர் சென்று விடப் போவதில்லை! இதயம் எப்படி நிற்கும்... மூளை எப்படி செயலிழக்கும்.. சுவாசம் எப்படித் தடைபடும்?, இறப்பு தான் இருப்பதிலேயேக் கொடூரம்!

உள்ளத்திலிருந்த உறுதி மொத்தமாய்த் தரையில் சரிந்து.. தலை முதல் கால் வரை பய உணர்வை கிளப்பி விட.. வலது கையால் தன் நெஞ்சை ‘சத்,சத்’ எனக் குத்திக் கொண்டவன் ‘இன்னும் நீ துடிக்கிற! துடிக்கிற! கலங்காத!’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி விட்டுச் சிவந்து போன விழிகளுடன் அவள் புறம் திரும்பினான்.

அதுவரை லொக்,லொக் என இருமியபடி மூக்கைச் சீந்திக் கொண்டிருந்தவள்.. அவன் திரும்பிய நொடி.. விறைத்த முதுகுடன் நிமிர்ந்து அமர்ந்தபடி.. மூச்சு விட மறந்து.. அந்தக் கரும்புகையை முழுத்திகைப்புடன் கண்கள் விரிய நோக்கிக் கொண்டிருந்தாள்.

சட்டென அவளருகே சென்று அவள் தோளைப் பற்றி அவன் உலுக்கியதும் பதறித் திரும்பியவள்.. அவன் கை விரல்களைத் தன் இரு கரங்களாலும் அழுந்தப் பற்றி..

“நி...நி.... நிஜ...மா...வே... சாகப் போறோமா????” – கண்கள் முழுக்க பயத்துடன்.. பீதி நிறைந்த குரலில்.. உயிர் நடுங்க வினவியவளிடம்.. ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ தலையாட்டாமல் அவளையே பார்த்தபடி நின்றான் அவன்.

“தே...தே..வை..யில்லாம... எ..என்னால.. நீ..நீங்க சாகப் போறீங்க!, அவசரப்பட்டு.. முட்டாள்தனமா.. என்ன காரியம் பண்ணிட்டேன்! ராணி அத்தைக்கு என்ன பதில் சொல்லப் போறேன்... மகன் இல்லாம அதுக்கு ஒரு வேளைக் கஞ்சி கூட இறங்காதே! பா...பாவி! நான்.. நான் பாவி!” – தலையில் அடித்துக் கொண்டு அழுதவளைத் தூக்கி நிறுத்தினான் அவன்.

“ஏய்ய்.. ச்சி... அழாத”

தண்ணீரில் விழுந்து எழுந்ததில் முன்னுச்சி முடிகள் நெற்றியில் முகாமிட்டிருக்க.. அழுது கலங்கிய விழிகளும்,சிவந்திருந்த மூக்குமாய் அவனை நோக்கியவள்..

“ப..பய..மா இல்லையா உங்களுக்கு?, சா..சாகப் போறோம்ன்னு??, கோபம் வரலையா என் மேல?, என்னால.. என்னால தான எல்லாம்?” – நெஞ்சில் பள்ளம் தோண்டியக் குற்ற உணர்வுடன் முழு பயமும்,பதட்டமுமாய் அவனிடம் வினவினாள் கவி.

இறுக மூடியிருந்த உதட்டை லேசாக வளைத்துச் சிரித்தவன்.. தன் வலது கையை உயர்த்தி அவள் நெற்றியிலிருந்த முடிகளைக் காதோரமாய்ச் செருகி விட்டு...

“இவ்ளோ அழகான ஃபிகரோட செத்துப் போற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்குதுன்னு நினைச்சுக்கிட்டேன். தன்னாலேயே பயம் போயிடுச்சு” – எனக் கூற...

சட்டென அவன் கையை விலக்கி விட்டு வியப்பும்,திகைப்புமாய் அவன் விழிகளை நோக்கியவளுக்கு.. அவன் கண்களில் தெரிந்தக் காதலும், முகத்தில் குடி கொண்டிருந்த அமைதியும் ஏனோ... நெஞ்சைப் பிசைய.. விடைத்த மூக்குடன்.. உதட்டை மடக்கிக் கண்ணீரை அடக்க முயன்றவளுக்கு.. முடியாமல் பொங்கிக் கொண்டு அழுகை வர.. இரண்டு கைகளாலும் அவன் தோளைக் குத்தியவளைத் தடுத்து.. அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் இளவரசன்.

இருவரது உள்ளத்திலும் வேர் விடத் தொடங்கியிருந்த பயம்,நடுக்கம் என சகலத்தையும் அந்நொடியே அறுத்து எறிந்து விடத் தீர்மானித்து விட்டானோ என்னவோ.. அவளை மேலும்,மேலும் தன்னோடு அழுத்தி இறுகக் கட்டிக் கொண்டான்.

“நான் உன்னைக் காதலிக்கிறேன் கவி... இன்னைக்கு, நேத்து இல்ல! ஆறு வயசுல உன் அம்மாவை ரூம்க்குள்ள வைச்சுப் பூட்டிட்டு ‘கவி பாப்பா என் கூடத் தான் இருக்கனும்’-ன்னு உன்னை என் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தப்போ இருந்து! உன்னை எனக்கு சொந்தமானவளா மட்டும் தான் நினைச்சிருக்கேன்! ஆனா.. மனசுல இருக்கிறதை வெளிப்படுத்த எனக்கு விருப்பமில்ல! நம்பிக்கையில்ல! உன் உயரமும்,என் அதலபாதாளமும் என்னைக்கும் இணையப் போறதில்லன்னு தோணுச்சு! உன்னைப் பெத்தவங்களுக்கும், என்னைப் பெத்தவங்களுக்கும் துரோகம் பண்ண முடியும்ன்னு எனக்குத் தோணல! அதான் கடைசி வரை அமைதியா இருந்தேன்! நீ என்னை சுத்தி,சுத்தி வந்தது எனக்குப் பிடிச்சிருந்தது.. நான் ரசிச்சேன்.. பரிபூர்ணமா உன் அருகாமையை அனுபவிச்சேன்! மனசார உணர்ந்தேன்.. அதனாலயோ என்னவோ.. நான் உன்னைக் காதலிக்கல, என் பின்னாடி வராதன்னு உன் முகத்தைப் பார்த்து என்னால சொல்ல முடியல.. சாரி கவி.. ரொம்ப ரொம்ப சாரி.. உன்னை.. உன்னை அதிகமாக் காயப்படுத்திருக்கேன்.. சாரி கவி..”

-நொடிக்கொருதரம் அழுத்தத்தைக் கூட்டி அவளைத் தனக்குள் புதைத்துக் கொண்டிருந்தவன் கூறிய அத்தனையும்.... அவள் இதயத்தை பற்றியெரியச் செய்ய.. அவள் கண்களோ அந்த இதயத்தின் தகிப்பைப் போக்கி விடும் நோக்கத்துடன் விடாது கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தது.

அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்தவன்.. தனக்கு வெகு அருகே அவள் முகத்தை இழுத்து.. மூடியிருந்த அவள் கண்ணிமைகளை மெல்ல வருடி....

“இவ்ளோ பெரிய கண் இமை எதுக்காக இந்தக் கண்ல ஒட்டிட்டிருக்கு?, நான் பைத்தியமா உன் பின்னால அலையறதுக்குக் காரணமே இது தான்!” – லேசாய் முணுமுணுத்தவனைக் கண்டு... கன்னங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்க.. தன்னை மீறித் தலையைக் குனிந்தவளை நிமிர்த்தி.. அந்த இமைகளின் மீது முத்தமிட்டான் அவன்.

உள்ளே எழும் சிலிர்ப்பையும் மீறி.. மழைத் தூறல்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அவள் கண்களின் ஓரம் கண்ணீர் வடிய.. ஆவேசத்துடன் இரு கைகளால் அவளைப் பற்றி அவள் முகம் முழுக்கக் கண்,மண் தெரியாமல் முத்தமிட்டான்.

அவன் கண்களும்,கரங்களும்! அவன் இதயத்தின் ஓசையும்,நாடித் துடிப்பும்... அவள் மீது அவன் கொண்ட காதலை.. ஆசையை..! உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை என்று குற்றம் கூறி ஏசாமல்.. இது அவனது வாழ்வின் கடைசி நொடி என்பதைக் கூட அலட்சியம் செய்து விட்டு.. நெஞ்சு இன்னமும் துடித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தைப் பயன்படுத்தித் தன் காதலை அவளுக்கு எப்படியேனும் காட்டி விட வேண்டுமென்கிற முனைப்புடன் அவளை விடாது பற்றியிருந்தவனைக் கண்டு... மேலும்,மேலும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு.

இன்று அவளைக் கட்டியணைத்திருக்கும் கரங்கள் நாளை கட்டையாய் நீட்டி விடுமா... நீளமும்,அகலமுமாய் ஆஜானுபாகுவானத் தோற்றத்துடன் இருக்கும் இந்த உடல்.. நாளை பிணம் என்று அழைக்கப்படுமா?, கனவுகளும்,லட்சியங்களுமாய்.. பெற்றோருக்கு நல்ல மகனாக.. பொறுப்பானப் பையன் என்ற பெயருடன் அழகாய் வலம் வந்தவனின் வாழ்வை நொடியில் அழித்து விட்டாளே! செத்து நரகம் சென்றால் கூட இந்தக் குற்ற உணர்ச்சி போகுமா?

தன் கன்னத்தில் பதிந்திருந்த அவனது கரங்களை இறுகப் பற்றியவள்..

“என்....னால.. என்..னால தான் நீங்க சாகப் போறீங்க!, நான் உங்களைக் காதலிச்சதே தப்பு! பெருசா பாசம் வைச்சிருக்கிற மாதிரி.. உங்களை நான் சுத்தி,சுத்தி வந்ததெல்லாம் இப்படி உங்க உயிரை எடுக்கத் தானா?. ஏன் என் பின்னால வந்தீங்க??, எப்படியோ போய்த் தொலையட்டும்ன்னு விட்ருக்க வேண்டியது தான?” – அழுகையும்,குமுறலுமாய் நெஞ்சு விம்ம.. தான் மன்னிக்கவே முடியாதக் குற்றத்தைப் புரிந்து விட்டோம் என்கிறக் குறுகுறுப்புடன்.. அவன் கண்ணைப் பார்த்துப் பேசும் அறுகதையற்றுத் தன் கண்களை மூடிக் குலுங்கினாள் அவள்.

“ஷ்ஷ்ஷ்.. கவி... கவி என்னைப் பாரு......”

“...............”

“ஒரு நிமிஷம் கண்ணைத் திறந்து பாரு”

நில்லாமல் வழியும் கண்ணீருடன் அவனை நோக்கியவளின் அருகே வந்து.. அவள் முகம் பற்றி.. இதழ் நோக்கிக் குனிந்தவனைக் கண்டு விலகி.. மறுபுறம் திரும்பி நின்றவளிடம்..

“ஏன்?? வேண்டாமா?” என்றான் அவன்.

பதிலற்று அழுகையைத் தொடர்ந்தவளின் தோளைப் பற்றித் தன் புறம் திருப்பியவன்.. “சொல்லுடி” என்று அதட்டினான்.

கண்ணைத் துடைத்தபடியே நிமிர்ந்தவள் அவன் முகம் பாராமல் “வே..வேண்டாம்” என விம்மல்களுக்கிடையே கூற.. அவன் அசைவற்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எ...எ..என்ன?”

“என் முகத்தைப் பார்த்து பேச மாட்டியா?”

“................”

“நீ சொல்ற மாதிரி நானும் சொல்லலாமில்லையா?, நீ என்னைக் காதலிச்சிருக்காட்டி இந்த நிலைமை உனக்கு வந்திருக்காதுன்னு!”

“...................”

“கவி....... சாவே வராம இருக்க நீயும்,நானும் தெய்வப்பிறவிங்க இல்ல! என்னைக்குன்னாலும் சாகத் தான் போறோம்! இந்த நொடி.. நீ என் பக்கத்துல இருக்கிற திருப்தியோட சாகுறேன்றதே.. எனக்குப் பெரிய நிறைவா இருக்கு. தயவு செஞ்சு அழறதை நிறுத்து”

“...........................”

“இதுக்காகவெல்லாம் நீ நரகத்துக்குப் போக மாட்ட! அதனால சிரி.”

“.......................”

“கவி...................”

கண்களில் உறைந்து விட்டக் கண்ணீருடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தவளிடம்...

கைகளைக் கட்டிக் கொண்டு அலட்டிக் கொள்ளாமல் “ஐ லவ் யூ....” என்றான்.

சிரிப்பும்,அழுகையுமாய் அவனை ஒரு நொடி நோக்கி.. இரண்டடி தூரத்தில் முன்னே நின்றவனை ஓடிச் சென்று கட்டிக் கொண்டவளின் மனதில்.. அந்த நிமிடம் நிலைத்திருந்தது சந்தோஷம்,சந்தோஷம்,சந்தோஷம் மட்டுமே!

புன்னகை நிறைந்த முகத்துடன்.. அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவளின் நாடியைப் பற்றித் தன் முகம் காணச் செய்தவன்.. அவள் கன்னத்தைத் தன் ஐவிரல்கள் கொண்டு தாங்கி... குனிந்து முத்தமிட்டான்.

கண்களை இறுக மூடி... வெட்க ஹார்மோன்களை முகம் முழுதும் பரவ விட்டிருந்தவளின் இதழ்களில் படிந்திருந்த ஒற்றை மழைத்துளியை விரலால் துடைத்தவன்.. “உனக்கு வேணாம்ன்னாலும் பரவாயில்ல, எனக்கு வேணும்! அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்க!” என்று முணுமுணுத்தபடியே அவள் இதழ்களைச் சிறை செய்துத் தன் விழிகளை மெல்ல மூடிக் கொண்டான்.

வினாடிகள் யுகங்களாய்க் கடக்கும் அதிசயத்தை உணர்ந்த வண்ணம் அசையாது நின்றிருந்தவன், சடசடவெனப் பொழியும் மழையின் தீவிரம் மெல்ல முன்னேறி வருவதை உணர்ந்து.. அவளை விட்டு விலகி... அவள் கையைப் பற்றியிழுத்துக் கொண்டு படகின் அருகே சென்றான்.

“எ..எ...எங்க போறோம்??”

“லக் இருந்தா.. வீட்டுக்கு! இல்லேன்னா.. சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ”

அவன் பதிலில் மீண்டும் கசங்கத் தொடங்கிய அவள் முகத்தைக் கண்டவன்.. “பயப்படாத...” என்று விட்டு அவளை அந்த விசைப் படகில் ஏற்றி வேகமாகப் படகைச் செலுத்தினான்.

வீரியம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் மழையும்,காற்றும்.. இந்த ராட்சத அலைகளும் நிச்சயம் இந்தப் படகு சவாரியை அத்தனை அழகாக்கப் போவதில்லை! புயல் மையம் கொண்டுள்ள திசைக்கு எதிர்த்திசையில் தான் இவன் பயணிக்கிறான் என்றாலும்.. சேதமின்றி கரையைச் சேர்வார்களா இல்லையா என்பது கேள்விக்குறி தான்!

தான் நேரம் கடத்திய ஒவ்வொரு நிமிடமும் எத்தனை பொன்னானது என்பதை உணர்ந்த இளங்கவிக்குப் பேச்சே வரவில்லை! கோபத்திலும், பிடிவாதத்திலும் செய்த செயலின் விளைவு.. இரு உயிர்களைக் காவு வாங்கப் போகிறது!

பேச்சற்று அமர்ந்திருந்தவளைத் திரும்பி நோக்கினான் அவன்.

“எப்போ வேணாலும் படகு கவிழும்! பயத்துலயும்,பதட்டத்துலயும் மூளையில்லாதவ மாதிரி நடந்துக்காத! இந்தக் கடல்,காத்து,மழை எதுவும் உனக்குப் புதுசு இல்ல! பொறந்ததுல இருந்து இந்த உப்புக் காத்தை சுவாசிச்சு வளர்ந்தவங்க நாம! கடைசி வரை போராடனும்! புரியுதா?”

-ஒலித்துக் கொண்டிருந்த விசைப்படகின் சத்தமும்,காற்று,மழையும், தூரத்தில் தெரியும் கரும்புகையும் அவளைக் கொஞ்சம்,கொஞ்சமாக மயக்கத்திற்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

அரும்பாடு பட்டு முகம் மாறாமல் காத்து... அவனை நோக்கி முயன்று புன்னகை புரிந்துத் தலையாட்டியவள் எழுந்து சென்று... அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

அதுவரைத் தன் கலக்கத்தை மறைத்து அவளுக்குத் தெம்பூட்டிக் கொண்டிருந்தவனும்... ஒரு நொடி.. தைரியத்தை இழந்து.. நடுங்கிய கரங்களுடன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“அம்மா,அப்பாவை தமிழ் (அரசனின் தம்பி) நல்லாப் பார்த்துப்பான்ல?”

“..............”

“லட்சுமியத்தையும்,உன் அப்பாவும் கஷ்டப்படக் கூடாது. அதுக்காகவாவது நீ உயிரோட இருக்கனும். இருப்ப”

“நீங்களும்”

-பதில் கூறாது அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன்..

“இந்த ஜென்மம் மட்டுமில்ல! இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்... உன்னை மட்டும் தான் காதலிப்பேன்” – எனக் கூறி முடிக்கையில்.. தன் லட்சம்,கோடி கரங்களால்.. அந்தப் படகை வளைத்துப் பிடிக்க எண்ணிப் பேராசை கொண்ட ராட்சத அலையொன்றுத் தன் முயற்சியில் வெற்றி பெற்று.. ஒரே மூச்சில் படகைக் கவிழச் செய்து.. இருவரையும் கடல் நீருக்குள் தள்ளி.. தன் வயிற்றுக்குள் சுருட்டியிருந்தது.

விழுந்த வேகத்தில் உடனடியாய்ப் பிரிந்த இருவரும்.. ஒருவரையொருவர் தேடித் துழாவிக் கண்டுபிடிக்க எத்தனித்த சமயம்.. மற்றுமொரு அலை வந்து இளவரசனைத் தூக்கிச் செல்ல... அவன் கடைசியாய் நோக்கியது.. அவள் அணிந்திருந்த சிகப்பு நிற சுடிதாரின் துப்பட்டா தண்ணீரில் மிதப்பதைத் தான்!

அவனுக்குத் தெரியும்! என்ன தான் கை தேர்ந்த நீச்சல்காரனாக இருந்தாலும்.. கரையை அடைந்து விட்டுத் திரும்பும் அலைக்கும், கடலிலிருந்து கரையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அலைக்கும் இடையில் சிக்கி.. பதட்டத்தில் நீச்சலடித்து முன்னேற முயன்றுக் கடைசியில் கை,கால் முறிந்து... பிணமாய்த் தான் மிதப்பான் என்று! ஆனாலும்.. மனம் தளராமல்.. அடுத்தடுத்துப் படையெடுத்து வந்த அகோர அலைகளிடம் பெயருக்கேற்றார் போல்.. அரசனாய்.. தன்னால் முடிந்த வரை எதிர்த்துப் போராடியவன்... இறுதியில் மூர்ச்சையுற்று... சுயநினைவை இழந்த போது.. கவி-என்பவள் அவன் மனத்திரையில் அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள்.