பாழி

கொஞ்சமும் பயமின்றி.. ரொம்பவும் அசட்டையாக.. எத்தனை பெரிய வாக்கியத்தை உச்சரித்து சென்று விட்டாள்?, ராட்சசி! தூரமாய் நிற்பவளை எங்கோ ஓர் மூலையிலிருந்து ரசிக்கும் போதே.. அநியாயத்திற்கு நொந்து போவான் அவன்! இப்போது.. அந்தப் பெரிய இமைகளை அசால்ட்டாக அசைத்து.. நேர்ப்பார்வையால் காதல் சொல்லி.. அவன் இதயத்தை பெல்ட் கட்டாத நாயாக பாவித்துத் தரதரவெனத் தன்னோடு இழுத்துச் சென்றாளானால்.. என்ன ஆவான்?, உயிர் இருந்தும் கூட.. அவன் ஆன்மா மட்டும் அவனிடமிருந்து விலகி எட்டி நிற்கும் உணர்வு அவனுக்கு! தன் ஆறடி உயர உடலையும், உள்ளங்கை அகல இதயத்தையும் அவளிடம் கொடுத்து பத்திரப்படுத்தி விட்டு கிறுக்கு பிடித்துப் போய் இவன் திரிய... அவன் ஆன்மா மட்டுமே இருக்கும் சூழ்நிலையை அவனுக்கு எடுத்துக் கூறி.. இந்த போதை தெளிய வழிவகுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் அதன் முயற்சி அனைத்தையும் தவிடுபொடியாக்குவதைப் போல் அவ்வப்போது அவள் கூறிய அந்த இரண்டு வாக்கியங்களையும் ரீபீட் மோட்-இல் ஒலிக்கச் செய்யும் மனது, அவனைத் தெளிய வைத்து தெளிய வைத்து போதை ஏற்றிக் கொண்டிருந்தது.கிறுகிறுத்துப் போயிருக்கும் தலை, நேராக நிற்கிறதா அல்லது இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறதா என்றே புரியவில்லை அவனுக்கு.. கை,கால்கள் அத்தனையும் விரல்களை இழந்து லேசாகிப் போய் விட்ட உணர்வு.. கல்லீரல்,கணையம்,இரைப்பை போன்ற அத்தனை பாகங்களையும் நோகாமல் கழட்டித் தூர எறிந்து விட்டு.. இதயம் மட்டுமே உடல் முழுதையும் ஆக்கிரமித்துக் கொண்டதைப் போல் உணர்ந்தான். தலை முதல் கால் வரை ஒட்டு மொத்த உடலிலும் லப்-டப் சத்தம். பின்கழுத்தை அழுந்தப் பற்றித் தலையைப் பின்னுக்குச் சாய்த்துக் கண்களை அழுந்த மூடியவனுக்கு.. ஓடிச் சென்று.. நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருப்பவளை உலுக்கி எழுப்பி.. இறுகக் கட்டிக் கொண்டு.. அவளோடே சயனித்து விடும் வேகம் எழுந்து.. மூச்சடைக்க வைத்தது. பெரிய பெரிய மூச்சுக்களை வெளி விட்டுத் தன்னை சமன் செய்ய முயன்றவன் முடியாமல்..,, “ம்மாஆஆ” என்றான்.

அவன் குரல் கேட்டு அடித்துப்பிடித்து எழுந்த ராணி நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டுப் பதறி “என்னய்யா தம்பி?, என்ன பண்ணுது?” எனக் கேட்டபடி அருகே வர.... சுருக்கிய முகத்துடன் “என்னமோ பண்ணுதும்மா இங்க” என்றான்.

“என்னப்பா, என்ன பண்ணுது?” என்றபடியே அவனது நெஞ்சை நீவினார் ராணி.

“நெஞ்சு நிறையா... ஏ...ஏதோ.. அடைச்சிட்டு நிக்கிற மாதிரி இருக்கும்மா”

“நைட் பரோட்டா திங்காதன்னு சொன்னா கேக்குறியா நீ?” – என அதட்டிய ராணியைக் கண்டு எரிச்சலுற்று அவர் கையைத் தட்டி விட்டு “ம்மாஆஆ” என்று கத்தினான் அவன். “இரு, சுடு தண்ணில சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைச்சுக் கொண்டாரேன்” – என்று எழப் பார்த்தவரைத் தடுத்து “ஒன்னும் வேண்டாம். பேசாம படு” என்றவன் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

தொடர்ந்து வாசிக்க.... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்...........!