அத்தியாயம் - 2
புயலுக்கு முன்...........
அலை – 1
கோடியக்கரை.
எங்கோ கேள்விபட்டதைப் போல் இருக்கிறதா?, கல்கியின் பொன்னியின் செல்வனோடு உண்டு,உறங்கி.. அவரது எழுத்து நடையின் உபயத்தால் சோழர் காலத்துக்கே நேரில் சென்று.. வாழ்நாளின் சில,பல நாட்களைக் கழித்த நம் அனைவருக்கும் பரிட்சயமான அதே கடற்கரைக் கிராமம் தான்! இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கும் பாக்ஜலசந்தியைப் பெற்றிருக்கும் இக்கோடியக்கரையிலிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தான்!
பழமை மாறாத பல விசயங்களைத் தன் கருவில் தாங்கி நிற்கும் மிகச் சொற்பமான நம் நாட்டுக் கிராமங்களில் இதுவும் ஒன்று! சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம்,ராமர் பாதம், அமிர்தகடேசுவரர் ஆலயம், வனவிலங்கு, பறவைகள் சரணாலயம் என சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் இவ்வூரில் தான் நம் நாயகனும்,நாயகனும் வசிக்கிறார்கள்.
உப்புக் காற்றும்,மீன் வாசமும் ஒரு புறம் ஆளைத் துளைத்தாலும் வரிசை கட்டி நிற்கும் படகுகளுடனும், பரபரப்புடன் அங்குமிங்கும் சென்று,வந்து கொண்டிருந்த ஆட்களுடனும் சுறுசுறுப்பாகக் காட்சியளித்தது கோடியக்கரை மீன்பிடி துறைமுகம்.
பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கோடியக்கரைப் பகுதியில் மீன்பிடி தொழில் நடப்பது வழக்கமாதலால் இக்காலகட்டத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடிப்பர்.
தன் தந்தையோடு சேர்ந்து கொண்டு.. பெட்டி,பெட்டியாக நிரம்பி வழிந்த மீன்களை எடுத்து வைத்தபடி வியர்வை வழிய நின்றிருந்தான் இளவரசன்.
“காலா (ஒரு வகையான மீன் வகை) தான்-ப்பா அதிகமா சிக்கியிருக்கு! 10- டன்-க்கும் மேல இருக்கும்ன்றது தான் பேச்சா இருக்குது”
“காலா மீனுங்க எல்லாம், குஞ்சு பொறிக்கிறதுக்காக ஆழ்கடல் பகுதிலயிருந்து நம்ம சேத்துக் கடல் பகுதிக்கு வர்றது தான் இதுக்குக் காரணம்!பிடிபட்ட மீனெல்லாம் சினையோடயே இருக்குறதை பார்த்தேல?”
-கடந்து சென்ற இருவர் பேசிச் சென்றதைக் கண்டவன் “ம்க்கும், அப்ப காலா மீன் விலை இறங்கிரும்! இதைக் கொள்முதல் பண்ணி.. வியாபாரம் பண்றதுக்குள்ள.....! சிரமம் தான்!” என்றெண்ணிக் கொண்டு வேலையைத் தொடர.. சற்று நேரத்தில் கடலோரத்தில் பரபரப்புத் தோன்றியது.
மீனவர்கள் அனைவரும் கடலருகே சென்று எதையோ வேடிக்கை பார்ப்பதைக் கண்டு “என்னாவாம்ப்பா?” என்றுத் தந்தையிடம் விசாரித்தான் இளவரசன்.
“ஏதோ ஆமை கரை ஒதுங்கியிருக்காம்ப்பா”
“ஆமையா?”
“ஆமா.. நீயும் போய்ப் பாரு. பார்த்துட்டு வீட்டுக்குக் கிளம்பு. அப்டியே இந்தக் கணக்கு நோட்டை செழியன் ஐயா வீட்ல கொடுத்துடு”
“இல்ல நீங்களே......” என்றபடித் தொடங்கியவன் பின் நிறுத்தித் தலையைக் கோதிக் கொண்டு பெருத்தத் தயக்கத்துடன் தந்தை நீட்டியதை வாங்கிக் கொண்டான்.
“என்னடா தம்பி?” – என்றவரிடம் ஒன்றுமில்லையென்று தலையாட்டியவன் கூட்டத்தை நோக்கி நடந்தான்.
கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே எட்டிப் பார்த்து 4 அடி நீளமும், 3 அடி அகலமுமாய் பரந்து,படர்ந்து கிடந்த ஆமையைக் கண்டு “ப்பாஆஆஆ” என்றவன்.. “100-கிலோவுக்கு மேல இருக்கும் போல! உயிரோட இருக்கா?” – என்று கேட்க.. “செத்துத் தான் கரை ஒதுங்கியிருக்கு அரசு” என்றார் கூட்டத்தில் ஒருவர்.
அதற்குள் செய்தியாளர்கள் சிலர் ஆமையைப் புகைப்படம் எடுத்தபடி “அரிய வகை ஆமை-ய்யா இது! ஆர்க்டிக்,அண்டார்டிகா, ஆஸ்திரேலியான்னு ஆழ் கடல் பகுதில தான் உயிர் வாழும். முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கத் தான் இந்தக் கடலுக்கு வந்திருக்கும்” – என்று கூற.. அதைக் கேட்டபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
தந்தை கொடுத்தனுப்பியக் கணக்கு நோட்டுடன் செழியன் ஐயாவின் வீடு நோக்கிச் சென்றவனின் கால்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கித் தன் போக்கில் நடந்தாலும், மனம் மட்டும் அவனுக்கு முன்பாகவே ஓடிச் சென்று செழியன் ஐயாவின் வீட்டை அடைந்து விட்டது.
அவள் வீட்டில் தானிருப்பாள். நிச்சயம்! அவனைக் கண்டதும் கோடான கோடி நட்சத்திரங்களின் ஒளியைத் தற்காலிகமாகக் கடன் வாங்கித் தன் முகத்தில் அப்பிக் கொண்டு பளீரென ஒரு பார்வையை வீசி அவனது கண்,காது,மூளை,இதயம் என அத்தனையையும் கூசச் செய்வாள்!
ஒவ்வொரு முறையும் அவள் பார்வையில் ஃபீனிக்ஸ் பறவையாய் துடித்து எரிந்து உயிர் துறக்கும் அவன் மனதைப் பற்றிய கவலை அவளுக்குக் கொஞ்சமும் கிடையாது! ராட்சசி! அழகான இம்சை!
அவளைச் சொல்லிக் குற்றமில்லை! தவிர்க்க நினைத்தாலும் முடியாமல் முரண்டு செய்யும் அவன் மனதிடம் எதைக் காட்டி அவன் சமரசம் பேச? இப்போதோ,அப்போதோவென பொங்கி வழியக் காத்திருக்கும் பால் பாத்திரமாய் மனது அவளைக் காணும் போதெல்லாம் கொதி நிலையிலேயே இருப்பது யார் தவறு?
இரண்டு புறமும் திண்ணைகளுடன், முற்புறம் ஓடு வேயப்பட்டிருந்த அந்தப் பெரிய வீட்டின் வாசல் கதவு திறந்தே தானிருந்தது.
அணிந்திருந்த டீசர்ட் காலரைத் தாண்டிப் பின் கழுத்தைத் தேய்த்துக் கொண்டவன் தயக்கத்துடன் வாசலில் நிற்கையில், அவன் எண்ணங்களின் நாயகி தன் சிறுத்த குரலில் அவள் அன்னையைக் கிழித்துத் தோரணம் கட்டிக் கொண்டிருந்தாள்.
“ஆனா சரியான ஆளும்மா நீ!, குழம்பு வைக்குற ஈசியான வேலைய மட்டும் நீ பார்ப்ப! ஆனா, மீன் உரசுறது மட்டும் நானா?, அப்டியேன்னாலும், நீ வைக்குற குழம்பு வாய்க்கு ஒப்புற மாதிரியாவது இருக்கா?, உப்பு,காரம்,புளிப்பு இதுக்கெல்லாம் விளக்கம் உன் அகராதில இல்ல போலயேத்தா!, ராணி அத்தை வைக்குற மீன் குழம்பை வாங்கி ஒரு ஸ்பூன் குடிச்சுப் பாரு! சும்மா ஜிவ்வுன்னு போதை தலைக்கு ஏறும்! அது குழம்பு...! உனக்கெல்லாம் அந்தக் கைமணம் இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் வரவே வராது”
“அடியேய்.. உங்க ராணி அத்தைக்குக் குழம்பு கூட்ட சொல்லிக் கொடுத்தவளே நான் தான் டி!”
“ஹாஹாஹோஹோஹேஹே!, சோக்கு??, என் அப்பாரு முன்னாடி இந்த வார்த்தையைச் சொல்லிராதம்மா! சிரிச்சு,சிரிச்சே அவருக்கு வயிறு புண்ணாப் போயிடும்”
“இந்தாடி... நீ மீன் கழுவுன வரைக்கும் போதும்! வைச்சிட்டு எந்திரி! கால் காசுக்குப் பிரயோஜனமில்லாட்டியும்,வாய் மட்டும் எட்டூருக்குப் போய் வரும்! எந்திரிச்சுப் போடி முதல்ல”
“இன்னிக்கு ராணி அத்தை வீட்ல இருந்து மசால் பொடி வாங்கிட்டு வந்து நானே குழம்பு கூட்டிக்கிறேன்! கிட்சன் பக்கம் வந்த, முதல் டெட்பாடி நீ தான்”
-நான்கு புறமும் தூண்களைக் கொண்டிருந்த அந்தப் பழைய காலத்து வீட்டின் முற்றத்தில் முக்காலியின் மீது ஊதாப் பூவாய்.. ஊதா நிறச் சுடிதாரில் அமர்ந்திருந்தவளின் கைகள் ‘வரக்,வரக்’ எனத் தன்னிடம் அகப்பட்டிருந்த மீனின் உடலில் செதில் நீக்கியவண்ணமிருந்தது.
ஆங்காங்கு வெளி வந்து படர்ந்து பறந்தத் தலை முடியையும், சுருக்கிய நெற்றியையும், ஓயாமல் பேசிக் கொண்டிருந்த இதழ்களையும் தாண்டி அவன் பார்வை முழுதும் மையம் கொண்டிருந்தது அந்த நீண்ட இமைகளின் மீது தான்!
இது நாள் வரை பாப்பாய்-தி செய்லர் மேன்-இல் வரும் ஆலிவ்-ற்கு மட்டும் தான் உலகத்திலேயே நீண்ட இமைகளிருப்பதாக அவன் நினைத்திருந்தான். ஆலிவ்ற்குப் போட்டியாக ஒருத்தி அவன் கண் முன்னே நடமாடுவது அவனுக்கு எப்போதும் ஆச்சரியம் தான்! அவள் இமைக்கும் போதெல்லாம்.. ஸ்லோ மோஷனில் மூவ் ஆகும் அந்தக் கண்ணிமைகள்.. ஒவ்வொரு முறையும் அவன் இதயத்தை சிறகால் வருடிச் செல்லும்.
தன் போக்கில் புலம்பியபடி மீன் கழுவிக் கொண்டிருந்தவள் “வாப்பா அரசு..” என்ற அன்னையின் குரலில் அவசரமாய் நிமிர்ந்து வாசலை நோக்கினாள்.
அதுவரைத் தயக்கத்தோடு கூடிய ரசனையான பார்வையை அவள் மீது செலுத்திக் கொண்டிருந்தவனின் கண்கள் பட்டென உணர்வற்றுப் போக.. முகத்தை இறுக்கமாக்கி லட்சுமியை நோக்கினான்.
“அப்பா இந்த நோட்டைப் பெரியவர் கிட்டக் கொடுக்கச் சொன்னாரு” - அரசன்
“அதான?, காரணமில்லாம நீ இந்தப் பக்கமெல்லாம் வருவியா?” - லட்சுமி
“அப்டில்லாம் இல்லங்கத்தை” – தயங்கியபடிக் கழுத்தைத் தேய்த்துக் கொண்டான் அவன்.
“ப்ச், உன்னைச் சொல்லித் தப்பில்ல! உங்கப்பாரோட வேலைக்கும் உதவிக்கிட்டு,படிப்பையும் பார்த்துக்கிட்டு! இந்த வயசுல உனக்கிருக்கிற பொறுப்பும்,பொறுமையும் ஊர்ல எவனுக்கு இருக்கு!”
“ம்க்க்க்க்க்க்க்க்க்க்கும்” –நன்றாக இருந்தத் தொண்டையைச் செருமித் தன் இருப்பை உணர்த்தினாள் இளங்கவி.
“இதோ, இதுவும் தான் இருக்கே! தெண்டம்! ஒன்னுத்துக்கும் பிரயோஜனமில்ல!”
“எம்மா.... ரொம்பப் பேசாத! உன் பொறுப்பு பருப்பை விட நான் ப்ளஸ் 2-ல 30 மார்க் கூட! அதை மறந்துடாத”
“இதையே எத்தனை நாள் சொல்லிட்டுத் திரியிவ-ன்னு நானும் பார்க்குறேன் டி!” என்ற லட்சுமி தொடர்ந்து அரசனிடம் “காலேஜ் சேர்ந்ததுல இருந்து இவ படிக்கிறதே கிடையாதுப்பு!, பூரா பாடமும் பெயிலு!” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கியதும்..
“அம்மாஆஆஆஆஆஆஆ” என்று பெருங்குரலெடுத்து அவள் கத்த..
“நான் கிளம்புறேன்ங்கத்தை” என்று அவசரமாய் இடைபுகுந்தான் இளவரசன்.
“இரு இரு தம்பி!, இந்த மீனைக் உரசிக் கொடுத்துட்டுப் போய்யா! ஒன்றரை மணி நேரமா ஒரே இடத்துல உட்கார்ந்துக்கிட்டு வாயாடிக்கிட்டிருக்காளே ஒழிய சட்டுபுட்டுன்னு வேலையை முடிக்க மாட்டேங்குறா!, அத்தைக்கு இடுப்பு வலின்னு அதிகம் நான் கீழ உட்கார்றதில்ல!” – என்று லட்சுமி கூறியதும்.. ஒரு நிமிடம் தயங்கிப் பின் விறுவிறுவென அவளருகே சென்றான்.
முக்காலியொன்றைக் கொடுத்து விட்டு லட்சுமி நகர்ந்ததும்.. தன்னருகே இரண்டடி இடைவெளியில் வந்தமர்ந்தவனை ஓரப் பார்வையில் கண்டு விட்டு அருகிலிருந்தச் சட்டிக்குள் மீனை எடுப்பதற்காகக் கை வைத்தாள் அவள்.
அவள் கை வைத்த சமயம்... அவனும் சட்டிக்குள் கை விட்டிருக்க.. அவள் கையைத் தொட்ட மறுநொடி.. அவசரத்துடன் தன் கையை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியுடன் அவள் முகம் நோக்கினான் அவன்.
“இப்போ எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி?, உங்களுக்கே இதெல்லாம் ரொம்ப ஓவர்-ஆ தெரியலயா?” - கவி
“என்ன?” - அரசன்
“தீயைத் தொட்ட மாதிரி கையை வெடுக்குன்னு எடுக்குறீங்க?, என்ன இன்சல்ட் பண்றீங்களா?, என்னமோ உங்கக் கையத் தொட நான் தவம் கிடக்குற மாதிரி!”
“எடுக்காம?? கைய எடுக்காம என்ன பண்ணனும்?”
“அடேங்கப்பா! நீங்க எதுவுமே பண்ண மாட்டீங்கன்னு தான் எனக்கு நல்லாஆஆஆஆத் தெரியுமே!”
“ஏய்ய்ய்”
“ஹலோ! ஓவர் டைம் பார்க்குற உங்க மூளையை வைச்சுத் தப்பு,தப்பா யோசிக்காதீங்க!”
“யாரு நான்?, நான் தப்பு,தப்பா யோசிக்கிறேனா?” என்றவன் தொடர்ந்து...
“அந்தப் பாத்திரத்தைக் குடுத்தேனா... வேலையை முடிச்சுட்டுக் கிளம்புவேன்” என்று பொறுமையற்றக் குரலில் சீறினான்.
அடுத்த இரண்டு நிமிடம் கருமமே கண்ணாக விறுவிறுவென மீன் உரசியவனை ஆசையும்,காதலுமாய் நோக்கியவள்..
“ஆமா, நீங்க ரொம்ப நல்லா மீன் குழம்பு வைப்பீங்கன்னு உங்கம்மா சொல்லுச்சே! உண்மையா?” - என்றாள்
“ப்ச்” என்றபடிக் கையிலிருந்த மீனை சட்டிக்குள் எறிந்தவன் “அமைதியா இருக்கியா இல்ல உங்கம்மாவைக் கூப்பிடவா?” என்றான்.
“என்னைப் பார்த்தா அம்மா-அப்பாவுக்குப் பயப்பட்ற பொண்ணு மாதிரியா தெரியுது?” – அசால்ட்டாய் உதடு பிதுக்கியவளைக் கண்டுத் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக எரிச்சலுற்றவன்..
“சான்ஸ் கிடைச்சா போதுமே! லூசு மாதிரி ஏதாவது உளற ஆரம்பிச்சிட வேண்டியது.” – என முணுமுணுத்தான்.
“என்ன?, என்ன சான்ஸ் கொடுத்துட்டீங்களாமாம் சார் இப்போ எனக்கு?, அப்பிடி என்ன லூசு மாதிரி பேசிட்டேன்?, உங்களுக்கு மீன் குழம்பு வைக்கத் தெரியுமான்னு கேட்டது தப்பா?”
“அதைத் தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ணப் போற?”
“வேற என்ன?, உங்களைக் கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்தப்புறம், எனக்குக் குழம்பு வைக்குற வேலை மிச்சம்ன்ற திருப்தி கிடைக்கும்ல?, அதான்” – நேர் எதிரே விழிகளைப் பதித்துப் பொறுமையாக் கூறி விட்டு ஓரப் பார்வையால் அவனை நோக்கியவளை வெளிப்படையாய் முறைத்தவன்.. கையிலிருந்தக் கடைசி மீனையும் பட்டெனப் பாத்திரத்தில் எறிந்து விட்டு.. விறுவிறுவென எழுந்து சென்று விட்டான்.
“போடா டேய்.. போடா” என்று முணுமுணுத்தவள் ‘இதெல்லாம் எனக்கு அசால்ட்டு’ என்பது போல் தோளைக் குலுக்கிக் கொண்டாலும் ‘ரொம்பத் தான் அசிங்கப்படுத்துறான்’ என உள்ளே சிணுங்கும் மனதை எப்படிச் சமாதானப்படுத்துவதென்று சத்தியமாய் அவளுக்குப் புரியவில்லை.
அடுத்த சில மணி நேரம் ரோஷ,மானத்திற்குப் பெரிதாக மதிப்பு கொடுத்து அவன் மீது கோபம் கொண்டு உம்மென்ற முகத்துடன் வலம் வந்தவள், அதற்கு மேல் முடியாமல் கையில் கிண்ணத்துடன் அவன் வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டாள்.
ஒரே தெருவில் தான் இரு குடும்பங்களும் வசிக்கிறார்கள். இளங்கவியின் தந்தையும்,செந்தாமரையின் முதலாளியுமான செழியன், சிறிய அளவில் மீன் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். இந்தியா முழுதுக்கும்,அண்டை நாடுகளுக்கும் மீன்களை எக்ஸ்போர்ட் செய்வது தான் அவரது தொழில். இது போக உப்பளம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
ஒரே இனத்தைச் சேர்ந்தவரும்,தூரத்து சொந்தமுமான செந்தாமரையை (அரசனின் தந்தை) சிறு வயது தொட்டே பழக்கம் என்பதால் அவரையும் தனக்குக் கீழே வேலைக்குச் சேர்த்திருந்தார் செழியன். பரம்பரை,பரம்பரையாய் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இவர்கள்.
“என்னப்பு? நீ பார்க்குற வேலைக்கெல்லாம் கூலி வாங்குறியா இல்லையா?”
- அன்று விடுமுறை நாளென்பதால் தந்தையுடன் தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டிருந்தவனைக் கண்டு கேள்வி கேட்டார் செழியன்.
“இல்ல! அப்பாவுக்கு உதவத் தான் வர்றேன்! நானா.. பெருசா எந்த வேலையையும் எடுத்துச் செய்யல. அதனால கூலியெல்லாம் தேவப்படாது” – அமைதியான குரலில் அரசன்.
“ம்ம், பாப்பா படிக்கிற காலேஜ்ல தான படிக்கிற நீ?”
“எந்தப் பாப்பா?”
“அவரு மகளைச் சொல்றாரு தம்பி” என்று அவன் காதைக் கடித்த செந்தாமரை “ஆமாங்கய்யா! அந்த காலேஜ்ல தான் தம்பியும் படிக்குது” என்றார்.
“ஹ்ம்ம், என்ன படிப்பு?”
“பி.எ. தமிழ்”
“அதைப் படிச்சு என்ன வேலைக்குப் போறது?”
“இல்ல, முடிச்சதும் சட்டப்படிப்பு படிக்கலாம்ன்னு இருக்கேன்.”
“பரவாயில்லயேப்பா! நம்ம இனத்தவனும் கருப்புக் கோட்டைப் போட்டுக்கிட்டு கோர்ட்ல வாதாடுறதைப் பார்க்கும் போது நல்லாத் தான் இருக்கும்! எத்தனை நாளைக்கு மீனுலயும்,உப்புலயும் காலத்தை ஓட்டுறது”
“நம்ம தொழிலும் அவ்ளோ சாதாரணமானது இல்ல”
“அதுசரி! ஆனாலும்.. உன்னை மாதிரி படிச்சவங்களைப் பார்க்கும் போது பெருமையா தான்ப்பு இருக்கு”
“.............”
“எங்க பாப்பாவும் நல்லாத் தான் படிக்குது! அதுக்கும் இந்த மாதிரி சட்டம் படிக்கச் சொல்லித் தரலாமில்லையா?”
“எ..எ..எல்லாம்.. அவங்கவங்க விருப்பம் தான்” – என்று அவன் வாய் கூறினாலும் மனமோ “அவளுக்கு இருக்குற வாய்க்கு அவள்-லாம் சட்டம் படிச்சா.. வாதாடியே ஜட்ஜ்-ஐ ரோட்ல ஓட விட்ருவா!” என்று முணுமுணுத்துக் கொண்டது.
“பெரிய,பெரிய படிப்பெல்லாம் படிச்சு என்னப்பு பிரயோஜனம்! ‘ஐயா’ன்னு வாய் நிறைய மரியாதையா அவரைப் பார்த்துக் கூப்பிட மனசு வர மாட்டேங்குது உனக்கு!, அப்பாலயிருந்து மொட்ட,மொட்டயா நீ சொல்ற பதில் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத் தான் இருக்குறோம்”
-செழியனின் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெரும்பாலானோர் ஒரே இனத்தைச் சேர்ந்தவர் தான்! அதில் ஒருவர் துடுக்குத்தனமாய் அவனிடம் கேள்வி கேட்கவும்.. அரசன் அமைதியாய் நின்றிருந்தாலும், செந்தாமரை தான் பதறிப் போனார்.
“அவருக்குக் கீழ வேலை பார்த்து.. அவர் கையால கூலி வாங்கிக் கஞ்சி குடிக்கிற ஆளுங்க நாங்க! அவரை எப்படி மரியாதையில்லாம நடத்துவோம்?” – மெல்லிய குரலில் செந்தாமரை.
“நீ தான் பதறுற?, உன் மவன் வாய்ல இருந்து ஒரு நாள் ஐயான்ற வார்த்தை வந்ததில்லையே?”
“விடு முருகேசா!, படிக்கிறப் பையனுக்குக் கர்வம் இருக்குறது இயல்பு தான?” – எனக் கூறிச் சிரித்த செழியன் “என்னப்பு?” என்றார் அரசனை நோக்கி.
“ம்க்கும்” என்றபடித் தொண்டையைச் செருமிக் கொண்டு நிமிர்ந்த இளவரசன் “படிப்பு தன்னம்பிக்கையைத் தான் கொடுக்கும் பெரியவரே!, கர்வத்தையில்ல! அதுமட்டுமில்ல,நான் படிக்கிற படிப்பு, அது சொல்லித் தர்ற நாகரீகம் இது எல்லாம் இந்த உலகத்துல பொறந்த மனுஷங்க எல்லாரும் சமம் தான்னு சொல்லுது! ஏன்னா எல்லாருமே வாய் வழியாத் தான் சோறு திங்குறோம்! முதலாளி,தொழிலாளின்ற பாகுபாடு உலகத்துல இருக்கக் கூடாதுன்னு நினைக்குற ஆசாமிகள்ல நானும் ஒருத்தன்! தொழிலாளி இல்லாம எந்த முதலாளியும் உருவாகிட முடியாது. நீங்க இவங்களுக்கெல்லாம் இனாமா ஒன்னும் காசு கொடுக்கலையே! உங்கக் கிட்ட பார்க்குற வேலைக்குத் தான சம்பளம் கொடுக்கிறீங்க?. அப்டின்னா தேவைகள்ன்றது ரெண்டுப் பக்கமும் சரியாத் தான இருக்கு?, இப்படியிருக்கிற பட்சத்துல எங்க இருந்து இந்த வித்தியாசம் வருது?, கைக் கட்டி வாய்ப் பொத்தி, கடவுளா முதலாளியை வணங்க வேண்டிய அவசியம் என்ன?” – கடகடவெனத் தன் மனதில் தோன்றியதை பேச.. அங்கிருந்தோர் அனைவரும் அவனை ஆ-வென நோக்கினர்.
“தம்பி, ஏன்ப்பா பெரிய,பெரிய வார்த்தையெல்லாம் பேசுற?” என்று அவனை அடக்க முற்பட்ட செந்தாமரையைக் கை நீட்டித் தடுத்த செழியன்.. தானும் “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிக் கொண்டார்.
“நீ சொல்றதெல்லாம் நியாயம் தான்ப்பு! ஆனா.. நாங்க இப்படியே பழக்கப்பட்டுட்டோம்! எங்க தலைமுறை அப்பிடி! முதலாளியும்,தொழிலாளியும் சமம் தான்னு சொல்லி, உங்கப்பனோட என்னால சரிக்கு,சரியா உட்கார்ந்து இலை போட்டுச் சோறு திங்க முடியாது.! அதுக்கு என் ஈகோ இடம் கொடுக்காது! அதுக்காக நான் வில்லனும் இல்ல! நாங்க இப்பிடியே வளர்ந்துட்டோம்! திடீர்ன்னுல்லாம் பெருந்தன்மையா மாறிக்க முடியாது! என் தலைமுறையைச் சேர்ந்தவங்க இப்படியே இருந்துட்டுப் போறோம்! உங்களால முடிஞ்சா உங்க தலைமுறைல.. முதலாளியும்,தொழிலாளியும் சமம், ஆணும்,பெண்ணும் சமம்ன்ற கொள்கைகளையெல்லாம் நிறைவேத்துங்க! நாங்க தடை சொல்லாம.. உங்களுக்கு வழி விட்றோம்! ஆனா.. எங்கக்கிட்ட நீங்க நினைக்குற மாற்றத்தை திணிக்க முடியாதுப்பு!” – செழியன்.
“4 எழுத்து படிச்சுப் போட்டா என்னன்னாலும் பேசலாம்ன்ற தைரியம் வந்துரும்ன்னு தான் என் மவனை நான் எட்டாவதோட நிறுத்திப் போட்டேனுங்க ஐயா” – முருகேசன் தொடர்ந்து பேச.. அமைதியாய்க் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் இளவரசன்.
“தம்பி பேசுனதுல தப்பு எதுவுமில்ல முருகேசா”
“அதெப்படிங்கய்யா?, நாங்க உங்க முன்னாடி இதுவரைக்கும் கோர்வையா 4 வார்த்தை தொடர்ந்து பேசுனது கிடையாது! இன்னிக்கு வந்த பொடுசு, இப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசுனா, எப்படிங்கய்யா எம்புள்ளைங்களை நம்பி படிக்க வைக்குறது?”
தன் போக்கில் புலம்பிய முருகேசனைக் கண்டுச் சிரித்து அரசனிடம் திரும்பிய செழியன் “இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் மாத்திட முடியும்ன்னு உனக்குத் தோணுதாப்பு?” என்று வினவினார்.
“கொஞ்சம்... கஷ்டம் தான்” - அரசன்
“நீ இவனை ஒதுக்கித் தள்ளிட்டு.. இவன் மவன் கிட்டப் போய் புத்தி சொல்லி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு! உன்னை மாதிரி படிச்ச,உலகம் தெரிஞ்சவங்க பண்ண வேண்டிய வேலை அது தானே ஒழிய, இவனுங்களோட தர்க்கம் பண்றதில்ல! புரிஞ்சதா?”
“புரிஞ்சதுங்க பெரியவரே” – தானும் சிரிப்புடன் தலையாட்டினான் அவன்.
“யோவ் செந்தாமரை, உன் மவன் பெரிய ஆளா வருவான்! நான் சொல்றேன் கேட்டுக்க”
“உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்ங்கய்யா” – பரவசத்துடன் கையெடுத்துக் கும்பிட்டார் செந்தாமரை.
ம்ஹ்ம்! இவங்க யாரையும் மாத்தவே முடியாது!
தொழிற்சாலையிலிருந்துத் தன் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்திருந்த இளவரசன் வாசலில் இளங்கவியின் குரல் தன் அன்னையுடன் வாதம் செய்து கொண்டிருப்பதைக் கேட்டுத் தன் அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான்.
“இந்தா அயித்த!, தினம் மீனை வாங்கித் திங்கிறதுக்கு, ஒரு நாள் கறி,கோழின்னு சமைச்சாக் குறைஞ்சா போயிடுவ?” - கவி
“நீ ‘ம்’ன்னு சொல்லு! இன்னிக்கே உன் மாமாரைக் கோழியடிக்கச் சொல்றேன்! சட்டி நிறையா குழம்பு வைச்சுத் தாரேன்! நீ சாப்பிடு”
“அய்ய... நான் ஒன்னும் எனக்காக கேக்கல!”
“பின்ன?”
“எல்லாம் உன் மவனுங்களுக்காகத் தான்!”
“அவனுங்க மேல உனக்கென்னாடியாத்தா அவ்ளோ அக்கறை?”
“அதைத் தின்னாவாவது வயசுக்குரிய ஃபீலிங்க்ஸ் வருதான்னு பார்க்கலாம்ன்னு தான்” – என்று அவள் முணுமுணுத்ததைக் கேட்டவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
“என்னாத்தா சொன்ன?”
“ஒன்னுமில்ல! நீ கோழியடிக்கிறதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு 2 கரண்டி மசால்பொடி குடு. இன்னிக்கு நான் தான் என் வீட்ல குழம்பு வைக்கப் போறேன்”
“வையி வையி! உன் குழம்பு வாசனைக்கே உனக்கு மாப்பிள்ளைங்க வரிசை கட்டி நிக்கனும்ன்னு இந்த அத்த வாழ்த்துறேன்”
“ஆமா, ஒன்னுக்கே நாக்கு தள்ளிட்டிருக்கு! இதுல வரிசை கட்டி வேற நிற்பாங்களாமாம்!,ப்ச், அநாவசியமா பேசாம, மசால் பொடி எங்க இருக்குன்னு மட்டும் சொல்லு”
“மூணாவது செல்ப்பு மூலைல ரெண்டாவது சம்படம்! போன தடவை மாதிரி மல்லிப்பொடியைத் தூக்கிட்டுப் போய் குழம்பு வைக்காம, குழம்புப் பொடியை எடுத்துட்டுப் போ-த்தா”
“உனக்கும்,எங்கம்மாவுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லத்த” என்று புலம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தவள் செல்ஃபில் இருந்தப் பொடியை எடுத்துக் கொண்டு சமையல் மேடையில் பார்வை பதித்தாள்.
“மகன் வீட்ல இருக்குறான்னதும், ஸ்பெஷலா சமைச்சிருக்குமே!” என்றபடிப் பாத்திரங்களைத் திறந்து பார்த்தவள் “புட்டும்,கிழங்கும்” என்று விட்டு “புட்டு செஞ்சிருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லல நீ?” எனக் குரல் கொடுத்தபடியே ஒரு தட்டில் புட்டை இட்டுக் கொண்டாள்.
“ஹ்ம்ம், இந்த அத்தையும் உப்பும்,காரமுமா நல்லாத் தான் சமைக்குது! இப்டித் தின்னும் ஒரு மனுஷன் எந்த ஃபீலிங்கும் இல்லாம இருப்பானா?, இந்தத் தமிழ் பையனாவது அண்ணன் மாதிரி இல்லாம.. 4 பொண்ணுங்களை விகல்பமில்லாம சைட் அடிக்குற சுத்த ஆம்பளையா வருவானா?” – தன் போக்கில் புலம்பியபடித் தின்றவள் அடுக்களை வாசலில் வந்து நின்ற இளவரசனைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்துப் பின் முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டாள்.
அவளொருத்தி அங்கு நிற்பதையேக் கண்டு கொள்ளாமல் அடுக்களைக்குள் நுழைந்தவன், வெங்காயம்,தக்காளியை நறுக்கி விறுவிறுவெனக் குழம்பு வைக்கத் துவங்க.. விரிந்த வாயுடன் அவனை ஆ-வென பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நிஜமாவே உங்களுக்குக் குழம்பு வைக்கத் தெரியுமா?” - கவி
“...............”
“எனக்கும் சொல்லித் தர்றீங்களா?”
“கத்துக்கிட்டு என்ன செய்யப் போற?”
“ம், இது என்ன கேள்வி?, என் மனசுக்கு புடிச்சவனுக்குச் சமைச்சுப் போட்டு சந்தோஷப்பட்டுக்குவேன்! என்ன?, ம்? என்ன அப்படிப் பார்க்குறீங்க?, நான் உங்களை சொல்லல. சரியா?”
“நீ நல்லா படிக்கிற, உன்னை மேல் படிப்பெல்லாம் படிக்க வைக்கனும்ன்னு உங்கப்பா பேசிட்டிருக்காரு. நீ என்னடான்னா குழம்பு,கறின்னு சமையல் பண்ணிட்டு சுத்திட்டிருக்கிற?”
“சமையல் கத்துக்கிறது அவ்ளோ பெரியக் குத்தமா?, நீங்க சமைக்கவும் செய்றீங்க! நல்லாவும் படிக்கிறீங்க! நான் உங்களை மாதிரி இருக்கக் கூடாதா?”
“இது ரெண்டையுமே நான் என் தேவைக்காகப் பண்றேன்! எங்கம்மா,அப்பா ரெண்டு பேரும் பணத் தேவைக்காக வேலைக்குப் போறதைத் தெரிஞ்சுக்கிட்டு 12 வயசுலயே நான் சமைக்கக் கத்துக்கிட்டேன்! உனக்கு என்ன தேவையிருக்கு?”
“தேவையில்ல தான். ஆனா ஆர்வம் இருக்கு. அதனால கத்துக்குறேன்”
“எல்லாத்துலயும் வீண் பிடிவாதம் தான்”
“எல்லாத்துலயும்ன்னா?”
“எல்லாத்துலயும் தான்”
“உங்களைக் காதலிக்கிறதையும் சேர்த்துச் சொல்றீங்களா?”
“வாயை மூடு. சத்தமா பேசாத”
“ஏன், எனக்கென்ன பயம்?”
“அதான, உனக்கு ஏன் பயம் இருக்கப் போகுது?, பொண்ணா நீ?, ராட்சசி!”
“நான் பொண்ணோ! இல்லையோ!, நீ கண்டிப்பா ஆம்பள இல்லய்யா! இவ்ளோ அழகான பொண்ணு உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி சுத்தி வந்தாலும், காலேஜ் வாசல்ல நிக்குற செக்யூரிட்டி மாதிரி விறைச்சுப் போய் உணர்ச்சியே இல்லாம ஜடம் மாதிரி நடந்துக்கிட்டு”
“...................”
“இப்பவும் பாரு! நல்லா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சிய உர்ருன்னு வைச்சுக்கிட்டு பதிலே சொல்லாம நிற்குறத!”
“ரொம்பப் பேசுனேனா, வாயைத் தைச்சிருவேன்”
“யாரு நீங்க?, ரெண்டு சட்டைக்கு பட்டன் வேணா தைப்பீங்க”
“நக்கலா?, உன்னைச் சொல்லிக் குத்தமில்ல!, பொறந்ததுல இருந்து மூணு வேளையும் மூக்குப் பிடிக்க நல்ல சோறு தின்னு வளர்ந்திருக்க! காசு,பணத்துக்குப் பஞ்சமில்ல! நல்லா செழித்து வளர்ந்த ஆல மரத்து நிழல்ல ஹாய்-ஆ படுத்துக்கிட்டுக் காலாட்டுற வாழ்க்கை! எனக்கு அப்டி இல்ல! கனவு,லட்சியம்ன்னு நிறைய இருக்கு. குடும்பம்,குடும்பத்துல இருக்கிறவங்க நலன்ல அக்கறையிருக்கு. அவங்க வாழ்க்கைத் தரத்தை மாத்தனும்ங்கிற ஆர்வம் இருக்கு! இதையெல்லாம் விட்டுட்டு என்னைப் பத்தி மட்டுமே சுயநலமா யோசிச்சு.. உன் பின்னாடி திரிய என்னால முடியாது.”
“எதுக்கு இப்ப வாய்லயே கம்பு சுத்துறீங்க?”
மூச்சு வாங்க அவன் பேசியதற்குப் பதிலாய் அவள் கூறியதைக் கேட்டுப் பல்லைக் கடித்தபடிப் பின் கழுத்தைத் தேய்த்துக் கொண்டான் அவன்.
“ஆமா! மூணு வேளை மூக்குப் பிடிக்க சோறு திங்குறது தான் என் கனவு,லட்சியமெல்லாம்! இருந்துட்டுப் போகட்டுமே! அதனால என்ன இப்ப?, நானா கேட்டேன்?, பணக்கார செழியனுக்கு மகளாப் பொறக்கனும்ன்னு?, இதெல்லாம் விதி பாஸ்! இப்டியெல்லாம் நீங்க யோசிக்கிறதுக்கான.. செயல்படுறதுக்கான சூழ்நிலையை ஆண்டவன் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கான். ஒரு வேளை நானும் இப்டி ஒரு சூழ்நிலைல இருந்திருந்தா.. உங்களை விடத் தெளிவா யோசிச்சு, ஒரு படி மேலயே இருந்திருந்திருக்கலாம்! எதை வைச்சு என்னை நீங்க இவ்ளோ மட்டமா நினைக்குறீங்க?, ஒரு வேளை நீங்க ஒரு பணக்காரனுக்கு மகனாப் பொறந்திருந்தா.. ரொம்ப மோசமான பையனாக் கூட வளர்ந்திருந்திருப்பீங்க! யாருக்குத் தெரியும்!”
“......................”
“நாங்க ஒன்னும் பரம்பரை பணக்காரங்க இல்ல! எங்கப்பா சின்னதா ரெண்டு தொழில் பண்றார். 4 பேருக்கு வேலை கொடுக்குறார். கை நிறையா காசு புலங்காட்டியும், தின்னது போக மிஞ்சுற அளவுக்குக் காசு சம்பாதிக்கிறார். இதெல்லாம் ஒரு தலைமுறைல வந்த முன்னேற்றம் தான்! இன்னும் பத்து வருசத்துல நீங்களும் நிச்சயம் இந்த நிலைமைல இருப்பீங்க”
“அதனால?”
நான் மூத்தவனா?, இவ மூத்தவளா?, ரொம்பத் தெளிவாப் பேசி என் மூக்கை உடைக்கப் பார்க்குறா?, ஆளையும்,கண்ணையும் பாரு! கண்ணிமைக்கு மட்டும் தனியா சோறு போட்டு வளர்க்குறா போல! எவ்ளோ அடர்த்தி,எவ்ளோ நீளம்! உச்சகட்டக் கோபத்தில் எரிச்சலுடன் வினவினான் அவன்.
தட்டைக் கீழே வைத்து விட்டு அருகிலிருந்தத் துணியில் கையைத் துடைத்தவள்..
“அதனால................. இப்போ நீ என்னைக் காதலிக்கிறதுல எந்தத் தப்புமில்லப்பா அரசு” – அவன் அன்னை ராணியைப் போல் இமிட்டேட் செய்து காட்டியவளைக் கண்டுச் சிரிப்பு வர.. முகத்தைத் திருப்பிக் கொதித்துக் கொண்டிருந்தக் குழம்பின் மீது பார்வையைப் பதித்தான்.
“சிரிக்கிறீங்க தான?”
“இல்லயே”
“பொய்! உங்களுக்கு சிரிப்பு வருது! ஆனாலும், மூஞ்சியை உர்ருன்னு வைச்சுக்கிறீங்க, இப்போ நான் உங்களை சிரிக்க வைக்கட்டுமா?”
“என்ன பண்ணப் போற?”
-எச்சரிக்கையுடன் வினவியவனின் கழுத்தில் இரு விரல்களால் கிச்,கிச் மூட்டியவளைக் கண்டுப் பதறி.. பின் துள்ளி விலகியவன்..
“ஏய்ய்ய்ய் என்னடி பண்ற?, கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?, உங்கப்பா பாப்பா,பாப்பான்னு கூப்பிட்றதால, நீ பாப்பா ஆய்ட முடியாது” என்று கத்தியதைப் பொருட்படுத்தாமல்.. அவள் மீண்டும் கிச்சு,கிச்சு மூட்ட.. அவள் கையைப் பற்றி வளைத்து முறுக்கியவன்... “தேவையில்லாம என்னைத் தூண்டி விடாத! அப்புறம் நீ தான் வருத்தப்படுவ!” என்று கூறி நிறுத்திப் பின் “எல்லா விசயத்துலயும்” என்றான்.
