அத்தியாயம் - 7

அலை – 6

து ஒரு ஞாயிற்றுக் கிழமை. குடும்பமாய் அமர்ந்து மதிய உணவு உண்டு கொண்டிருந்தார் செழியன். கை என்னவோ சோற்றைப் பிசைந்து வாய்க்குள் அனுப்பிக் கொண்டிருந்தாலும், கண்கள் மட்டும் மகளையே சுத்தி வந்தது.

அவளைச் சுற்றிப் பரப்பி வைக்கப்பட்டிருந்த மீன் வறுவல்களையோ, நண்டு குழம்பையோ, இறால் தொக்கையோ தொட்டு கூடப் பார்க்காமல்.. வெறும் ரசம் சோற்றை ஊறுகாயுடன் உண்டு கொண்டிருந்தவளை ஓரப் பார்வையால் நோக்கினார்.

“ஏய்... இன்னிக்கும் ரசம் சோத்தைத் தான் திங்குறியா?, ராணி கொடுத்த மீன் குழம்பு தான் டி! எடுத்து ஊத்தித் தின்னு” – அதட்டியபடியே அருகே அமர்ந்த லட்சுமியை நிமிர்ந்து பார்த்து முறைத்த கவி..

“இந்த ராணி அத்தைக்கெல்லாம் மகன் மேலப் பாசமே கிடையாது! அவர் என்ன சாப்பிட்றாரோ,ஏது சாப்பிட்றாரோன்ற கவலைக் கொஞ்சமும் இல்லாம, மீன்,இறால்,நண்டுன்னு யாருக்காக இவ்ளோ வக்கணையா சமைச்சு வைக்குது?” என்று எரிச்சலுடன் வினவினாள்.

“இது என்னடி வம்பாப் போச்சு?, அவன் மட்டும் தான் ஆளா அவளுக்கு?, செந்தாமரை அண்ணன்,தமிழ் பய-ன்னு அந்த வீட்ல சாப்பிட்றதுக்கு ஆளா இல்ல?, கூறுகெட்டவ மாதிரி பேசுற?, எடுத்துப் போட்டு தின்னுடி”

“எனக்கு வேணாம். இதெல்லாம் ஒரு சமையலா?, அவர் வைக்குற குழம்புக் கிட்ட கூட வர முடியாது” என்று முணுமுணுத்தபடிக் கையைக் கழுவிக் கொண்டு எழுந்து விட்டாள்.

அவள் நகர்ந்ததும் மனைவியிடம் திரும்பிய செழியன்..

“ஏன் டி பெத்த புள்ளையோட சிரிச்சுப் பாசமா பேச வரவே வராதா உனக்கு?” என்று புகைந்தார்.

“ம்ம்ம்ம், இப்ப என்ன நான் பாசமா பேசாததைப் பார்த்தீரு?”

“சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கிற புள்ளைக் கிட்ட அன்பு,பாசமா பேசி ஊட்டி விடாம இப்படி சண்டைக்குப் போற?”

“ஏன் நீங்க ஊட்டுங்களேன்! நான் மட்டுமா அவளைப் பெத்தேன்?”

“...............”

“இதுக்கு மட்டும் பதில் வராது!, அப்டி என்ன பண்ணிட்டா அவ-ன்னு வருஷக்கணக்குல அவ கூட பேசாம இருக்கீங்க?, அவ என்ன குடிகாரனையோ,பொம்பளப் பொறுக்கியவோவா மனசுல நினைச்சா?, அரசு மாதிரிப் பையன் தேடுனாலும் கிடைப்பானா உங்களுக்கு?”

“சரி, ரொம்பப் பேசாத”

“படிக்கப் போய் ஒரு வருஷமாகியும் அந்தப் பையன் வீட்டுப் பக்கம் கூட எட்டிப் பார்க்கல! உங்க யாரையும் பயப்படுத்த விரும்பல, ஒரேடியா படிப்பை முடிச்சிட்டு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி அனுப்பியிருக்கானாம்! அதுங்க அறிவுக்கும்,அனுபவத்துக்கும் இருக்கிற பொறுப்புக் கூட உங்களுக்கு இல்ல”

“ஏய்... எதுக்குடி இப்ப நை,நை-ன்ற?, என்ன பண்ணனும் இப்ப அதுக்கு?”

“நீங்க என்னமோ பண்ணிட்டுப் போங்க! முதல்ல என் மக கூடப் பேசுங்க”

“அதென்ன உன் மக?, அவ.. எனக்கும் மக தான்”

“பின்ன எதுக்கு ஒதுக்கி வைச்சிருக்கீங்க?”

“நானா ஒதுக்குனேன்?, அவ தான் பெத்து,வளர்த்த இந்த அப்பனெல்லாம் ஒரு ஆளே இல்ல எனக்குன்னு அந்தப் பயலுக்காக செத்துப் போகப் பார்த்தாளே!” –எனக் கூறி முடிப்பதற்குள் உள்ளே இருந்துக் கடகடவென வெளியே வந்த கவி..

“நீங்க பார்த்தீங்களா?, நான் செத்துப் போகப் பார்த்தேன்னு?” – என்று கத்தவும்.. திடுக்கிட்டு நோக்கியவர்.. பின் அமைதியாகிப் போனார்.

பொறுமையாய் சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தவரை கோபத்துடன் நோக்கி “மகளாம் மக! ஓங்கி அறைஞ்சப்போ மக-ன்னு தெரியலயோ?” என்று முணுமுணுத்து விட்டு “ஆமா, அன்னிக்கு எதுக்கு அடிச்சீங்க என்னை?” என்று மீண்டும் கத்தினாள்.

“ம்ம்ம், நீ பண்ணி வைச்சக் காரியத்துக்கு உன்னை அடிக்காம, கொஞ்சுவாங்களா?” – மகள் தன் புருஷனை மிரட்டியதும், தன்னாலே பொத்துக் கொண்டு வந்து விட்டது லட்சுமிக்கு.

“என்ன காரியம் பண்ணிட்டேன் நான்?, காதலிக்கிறது தப்பா?, என்னமோ நான் வயித்துல புள்ளயோட வந்து உங்க முன்னாடி நின்ன மாதிரி எதுக்கு இவ்ளோ கோபம்,பேச்சு?”

“என்ன பேச்சு பேசுற டி?, அப்டியே அறைஞ்சேன்னு வை”

“அடிப்பீங்க அடிப்பீங்க! ஏன் அடிக்க மாட்டீங்க! இன்னொரு தடவை கை வைச்சுப் பாருங்க! நேரா போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல போய் நிப்பேன்!”

பெரிதாக மிரட்டியவளைக் கண்டு லட்சுமி வாயைப் பிளக்க.. செழியனுக்கோ சிரிப்பு வந்தது.

“நான்-லாம் அவர் மாதிரி கிடையாது. உங்களையெல்லாம் பெருசா மதிச்சு.. ஒவ்வொருத்தருக்கும் வலிக்குதா,வலிக்கலையான்னு கேட்டுத் தடவிப் பார்த்து சமாதானம் பண்றதுக்கு!”

“அடிச் சிறுக்கி”

“எந்தத் தப்பும் பண்ணாதப்பவே இவ்ளோ பேச்சு! யார் இருக்கிறா உலகத்துல எங்களை மாதிரி?, யாரோட வளர்ப்பு எங்களை இந்த மாதிரி நடந்துக்க வைக்குது?, எங்களைப் பார்த்துப் பெருமைப் பட வேண்டாம் நீங்கள்-லாம்?”

“பெருமைப்படனுமாமே!” என வாயில் கை வைத்த லட்சுமிக்கு அதன் பின்பு பேச்சே வரவில்லை.

செழியன் தான் மனமிறங்கி “இப்போ நான் என்னம்மா பண்ணனும்?” என்றார்.

“அடிச்சதுக்கு மன்னிப்பு கேளுங்க”

சட்டமாய்க் கூறியவளைக் கேட்டு லட்சுமி பல்லைக் கடிக்க.. செழியன் அநியாயத்திற்குக் கீழிறங்கி..

“உன்னை அடிச்சது தப்பு தான்ம்மா! மன்னிச்சுக்க” என்றார்.

“செத்துப் போகப் போறேனோன்னு பயந்தப்ப.. நான் உங்களைத் தான் மனசுல நினைச்சேன்! அதனால.. என் மவளுக்கு என் மேல பாசமில்ல,அது,இதுன்னு சொல்லிட்டுத் திரியாதீங்க. சரியா?” – என்று அவரிடம் சமாதானம் பேசி விட்டு.. லட்சுமியை முறைத்தபடி மீண்டும் உள்ளே சென்று கொண்டாள் கவி.

மகளை எண்ணிச் சிரித்துக் கொண்டிருந்த செழியனிடம் “என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு?, அவளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்தது நீங்க தான்! கட்டிக்கப் போறவன் உங்களை விட இருப்பான் போல!, இவ-லாம் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டா” – என்று லட்சுமி கத்த..

“கட்டிக்கப் போறவனா?, நீயே முடிவு பண்ணிட்டியாடி?”-என்றார்.

“ஏன்?”

“நான் முடிவு பண்ணனும்டி!”

“பண்ணுங்க! பொறுமையா பண்ணுங்க! உங்க பொண்ணுக்குத் தலை நரைக்குறதுக்கு முன்னாடி சீக்கிரம் பண்ணிடுங்க” என்று நொடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார் அவர்.

மனைவியை முறைத்தாலும் செழியன், அடுத்த சில நாட்களில் செந்தாமரையிடமிருந்து இளவரசனின் விடுதி எண்ணை வாங்கி அவனுக்கு அலை பேசினார்.

ஒரு வேகத்தில் அழைத்து விட்டாரானாலும்.. அவருக்கு எப்படித் தொடங்குவது, அவனிடம் என்ன பேசுவதென்று புரியவில்லை.

“நான் செழியன் பேசுறேன் தம்பி” – என்று அவர் கூறியதும் ஒரு நொடி அமைதியான இளவரசன்...

“சொல்லுங்க பெரியவரே! எப்படியிருக்கீங்க?, அத்தை சௌக்கியமா?” என்று விசாரித்தான்.

“எல்லாரும் நல்லாத் தான் இருக்கோம் தம்பி, நீங்க நல்லாயிருக்கீங்களா?”

“நல்லாயிருக்கேன்.”

“படிப்பெல்லாம் எப்படிப் போகுது?”

“நல்லாப் போயிட்டிருக்குப் பெரியவரே”

“இன்னும் ரெண்டு வருஷப் படிப்பிருக்கோ?”

“ஆமாம்..”

“ம்ம்ம்..”என்றவர் “ஊ..ஊர்ப்பக்கம் வர்றதில்லீங்களா?” என்று கேட்டார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றுப் புரியாமல் ஒரு நொடி தாமதித்தவன் “இல்லங்க பெரியவரே! ஒரேடியா படிப்பை முடிச்சிட்டு அப்புறம் வரலாம்ன்னு...” என்று இழுத்ததும்..

“அப்டின்னா.. நீங்க வர்ற வரைக்கும் என் மக கறி,மீனைத் தொடாம ரசம் சோத்தைத் தான் தின்பாளா?” என்றார் அவர்.

“என்ன சொல்றீங்க?” – புரியாமல் வினவினான் அவன்.

“நீங்க பேசுறது இல்லீங்களா?”

“யாரோட?”

“இளங்கவியோட தான்”

“இ...இல்லீங்க பெரியவரே”

“ஹ்ம்ம், அதான்.. சோறு,தண்ணியில்லாம பாதியாளாப் போய்க் கிடக்குதா?” – தன்னைத் தானே வினவுபவர் போன்று பேசியவரிடம் தயங்கி..

“ரொ...ரொம்ப மெலிஞ்சுடுச்சுங்களா?” என்று விசாரித்தவனுக்கு அப்போதே அவளைக் காண வேண்டுமென்கிற பரபரப்பு.

“இந்தக் காலத்துப் புள்ளைங்க.. மனசுல என்ன நினைப்பு வைச்சிருக்குங்கன்னே தெரிய மாட்டேங்குது தம்பி! அதுலயும் என் மக.. தனக்கு என்ன வேணும்ங்கறத வாய் தொறந்து கூட கேட்க மாட்டா! என்னிக்காவது வாயைத் தொறக்கும் போது.. நம்ம தலையை ஆய்ஞ்சு விட்ருவா”

“.............”

“வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசுங்க! என் சம்சாரமும் சந்தோஷப்படுவா” – என்று ஒரே வார்த்தையில் தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்தி விட்டுத் திருப்தியுடன் ஃபோனை வைத்தார் செழியன்.

மறுபுறம் தலை,கால் புரியாமல் ஒரு நிமிடம் திகைத்த இளவரசன்.. அவர் வார்த்தைகளில் ஒளிந்திருந்த பொருளைப் புரிந்து கொண்ட.. மறு நொடி மீண்டும் செழியனுக்கு அழைத்தான்.

“யாருங்க?..” – செழியன்

“நா..நான் தான். இளவரசன் பேசுறேன் பெரியவரே”

“சொல்லுங்க தம்பி..”

“வ...வந்து...”

“ம்ம்”

“ரொ...ரொம்ப.. நன்றி!” – தட்டுத்தடுமாறிய குரலுடன் தயங்கித் தெரிவித்தவனிடம் பதிலின்றிப் புன்னகைத்து விட்டு..

“சீக்கிரமே ஊரு வந்து சேருங்க தம்பி” என்றார் அவர்.

ன்று மாலையே கவியின் வீட்டுத் தொலைபேசி இளவரசனின் அழைப்பில் உற்சாகமாய் அலறியது.

முதலில் எடுத்துப் பேசிய லட்சுமி “தம்பி..”எனக் கூவி மகிழ்ச்சியுடன் உரையாடி விட்டு “வ...வந்து... கவி...” என்று இழுத்த இளவரசனிடம் சிரித்துத் தன் மகளை அழைத்தார்.

“யாரு” என்றபடியே.. ரிசீவரை வாங்கிய கவி “ஹலோ..” என்கையில் “கவி...” என்ற அவனது அழைப்பு அவள் செவியை நிறைத்தது.

ஒரு நிமிடம் ரத்த ஓட்டமின்றித் துடிப்பை நிறுத்திய இதயத்தை “ம்க்கும்,ம்க்க்கும்” எனத் தொண்டையைச் செருமி சமாளித்துக் கொண்டவள்..

“ம்ம்ம்” என்றாள்.

“எப்படியிருக்க?”

“ம்ம், இருக்கேன்”

“கறி,மீனெல்லாம் சாப்பிட மாட்டேங்குறியாம். ஏன்?”

“வேண்டுதல் தான்”

“ஏய்...”

“.............”

“ஒழுங்கா பேசு டி! எவ்ளோ நாள் கழிச்சு பேசுறேன்?”

“நானா சொன்னேன்?, என்னைப் பார்க்காம, என் கூடப் பேசாம இருங்கன்னு?”

“உன் அப்பா காலைல என் கிட்ட ஃபோன் பண்ணிப் பேசுனார்” என்றவன் அவர் பேசியதைக் கூற..

“ஹ்ம்ம், எங்கப்பா அனுமதிச்சதால தான் என் கூட இப்ப ஃபோன் பேசிட்டிருக்கீங்க. அப்டித் தான?”-என்று கோபம் கொண்டாள் அவள்.

“சண்டை போடாதடி ப்ளீஸ்...”

“ஆமா, தெரியாம தான் கேட்குறேன்! எங்கப்பா பர்மிஷன் கொடுத்துத் தான் என்னைக் காதலிக்குறேன்னு சொன்னீங்களாக்கும்?”

“இல்ல தான்! ஆனா.. அதுக்கடுத்து நடக்கப் போற எல்லாத்துக்கும் அவர் பர்மிஷன் வேணுமே!, உங்கப்பாவை,எங்கப்பாவையெல்லாம் எப்டி கரெக்ட் பண்றதுன்னு நான் யோசிச்சு யோசிச்சு ஒவ்வொன்னும் பண்ணிட்டிருக்கேன்! நீ நல்லா வாய் பேசி சண்டை மட்டும் போடு என் கூட” – என்று எரிச்சலுற்றவனிடம்..

“நான்-லாம் உங்களை மாதிரி இல்ல. வர்றியா ஓடிப் போகலாம்ன்னு கேட்டீங்கன்னாலே.. கையைப் பிடிச்சுக்கிட்டு பின்னாடியே வந்துடுவேன்” – என்று அவள் கூற..

“ஹாஹாஹாஹா..”-வென நகைத்தவன் “ஏற்கனவே உங்கப்பா, என்னை விட அவளுக்கு நீ தான் முக்கியமான்னு என் கூட உரிமைப் போராட்டம் நடத்திட்டிருக்காரு. நீ இப்டிப் பேசுறதையெல்லாம் கேட்டார்ன்னா.. நெஞ்சைப் பிடிச்சிக்கிட்டு சிவாஜி கணேசன் மாதிரி பாட்டு பாட ஆரம்பிச்சுடுவார்” – என்றான்.

“ம்க்கும்” – உதட்டைச் சுழித்துக் கொண்டவளிடம்..

“ஒழுங்கா சாப்பிட்றதில்லையா நீ?” என்று விசாரித்தான்.

“..........”

“ரொம்ப மெலிஞ்சு போயிட்டன்னு உங்கப்பா சொன்னாரு”

“..............”

“எங்கம்மா வைக்குற மீன் குழம்பையெல்லாம் ரௌண்ட் கட்டி அடிப்பியே!, அப்புறம் என்ன?”

“எனக்கு நீங்க வைக்குறக் குழம்பு தான் வேண்டும்” – மெல்ல முணுமுணுத்தவளின் முகம் எப்படி மாறியிருக்கும் என்பதை மனதுக்குள் கற்பனை செய்து பார்த்துச் சிரித்து...

“அப்போ நான் வேண்டாமா?” – என்றான் அவன்.

“.......”

“கவி....”

“எப்போ வருவீங்க?”

“சீக்கிரமே”

“எங்கப்பா தான் பர்மிஷன் கொடுத்துட்டாரே! இன்னும் என்ன?”

“அவர் சொன்னதுக்காக அட்வாண்டேஜ் எடுத்துக்க முடியாது கவி”

“நீங்க அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க”

“உங்கப்பா அளவுக்கு இல்லன்னாலும் கொஞ்சம் நல்லவன் தான்”

“பார்றா!, சரி, பேசவாவது செய்வீங்களா?”

“பேசுறேன்.. கண்டிப்பா” – என்றவன் வாக்கு தவறாமல் அடிக்கடி அவளோடு அலைபேச... ஒரு வழியாக இருவரும் எல்லாக் காதலர்களையும் போலக் காதலிக்கத் தொடங்கியிருந்தனர்.

டிப்பை முடித்து.. மதுரையிலேயே பிரபல வக்கீல் ஒருவரிடம் ஜூனியராகவும் சேர்ந்து... மூன்று வருடங்கள் என்பதை நீட்டித்து.. மூன்றரை வருடங்களுக்கும் மேலாகி.. ஒரு வழியாக ஊர் திரும்பினான் அவன்.

கொண்ட காதலுக்காக இத்தனை வருடங்களை பிறந்து,வளர்ந்த ஊரில் தலை காட்டாமல் கடத்தியிருக்கிறான். முழு நீள மூன்றரை வருடங்களுக்குப் பிறகு.. சொந்த மண்ணில் கால் வைப்பது அவனுக்கு மகிழ்ச்சி,சந்தோஷத்தைத் தாண்டிய ஓர் உணர்வைக் கொடுத்தது. திருப்தி,நிறைவு போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தையெல்லாம் முழுதாக உணர்ந்து கொண்டிருந்தான் அவன்.

நீண்டு படர்ந்திருந்த சமுத்திரம்,அலையோசை,உப்புக் காற்றின் குளுமை, மீன் வாசம் என அனைத்தையும் ஒருசேர அனுபவித்தபடி பேருந்தை விட்டு இறங்கியவனைப் பெரிதாக வரவேற்றனர் அவனது அன்னையும்,தந்தையும்.

“நீங்க ஏன் அலையுறீங்க?, நானே வர மாட்டேனா?” என்று கடிந்து கொண்டவனின் முகத்தை வழித்துச் சொடுக்கிட்டுத் திருஷ்டி கழித்த ராணி “என் ராசா” என்று முத்தமிட..

“ஏன்ம்மா என் மானத்தை வாங்குற?, படிப்பை முடிச்சிட்டு தான வந்திருக்கேன்?, என்னமோ வெளிநாடு போய் பெட்டி,பெட்டியா சம்பாதிச்சுட்டு திரும்பி வர்ற மாதிரி எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்?” என்று புலம்பினான் அவன்.

“என் பரம்பரைல உதிச்ச முதல் வக்கீலு நீயி! பொட்டி,பொட்டியா சம்பாதிக்கிற பணம் யாருக்கு வேணும்?, என் இனமும் படிச்சு,முன்னுக்கு வர்றதே எனக்குக் கிடைச்சப் பெரிய மரியாதை தான்!” – கண்ணைக் கசக்கியவரை ஒருவழியாகச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான்.

தெருவில் நுழைகையிலேயே.. அவன் பார்வை அவனுக்கு முன்பே... அவளது வீடு நோக்கி அவன் அனுமதியில்லாமலே பறந்து.. பாய்ந்து.. முன்னே சென்று விட்டது.

அன்னை,தந்தை,தம்பி.. ஏன் லட்சுமி அத்தை உட்பட அனைவரும் அவனை மதுரைக்கு வந்து அடிக்கடி சந்தித்திருக்கிறார்கள். அதனால்.. வாய் மூடாது பேசிக் கொண்டு வந்த அன்னையையும்,பூரிப்புடன் மகனருகே நடந்து வந்தத் தந்தையையும்,தம்பியையும் தாண்டி அவன் பார்வையே அவளையே தேடியது.

லட்சுமி அத்தையிலிருந்துத் தொடங்கி அந்தத் தெருவில் வசிக்கும் உற்றார்,உறவினர் அனைவரும் அவன் வீடு தேடி வந்து.. நலம் விசாரித்துச் சென்றனர். அவளைத் தவிர!

மீன்,இறால்,நண்டு,சுறா என அனைத்து வகைக் கடல் வாழ் உயிரனங்களும் அன்று அவனுக்கு மதிய உணவாகியிருக்க.. அவளது வீடு நோக்கிச் செல்லத் துடித்தக் கால்களை சிரமப்பட்டு அடக்கி சாப்பிட அமர்ந்தான் அவன்.

“மீன் குழம்பு ஊத்திக்கப்பா. கவி சமைச்சது” – என்றபடியே அன்னை ஊற்றியக் குழம்பை ஆச்சரியத்துடன் நோக்கி.. அவசரமாய்ச் சுவை பார்த்தான்.

‘ஒரு வழியா சூத்திரத்தைத் தெரிஞ்சுக்கிட்டா போல’ என்று புன்னகைத்துக் கொண்டவன் ஆசை,ஆசையாய் அள்ளி உண்பதைக் கண்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டார் ராணி.

அதன் பின்பு அவள் வீடு சென்று செழியனைச் சந்தித்த போதும் கூட அவளைப் பார்க்க முடியவில்லை. எங்கே தொலைந்தாள் எனக் கடுப்புடன் அலைந்தவனைக் கேசவன் காண வர.. இருவருமாய்ச் சேர்ந்துத் துறைமுகத்துக்குச் சென்றனர்.

பின் ஃபேக்டரிக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் ஒரு அட்டெண்டன்ஸைப் போட்டு விட்டு.. அவன் வீடு திரும்புகையில் மணி ஏழாகியிருந்தது.

வீட்டிற்கு வந்துக் குளியலை முடித்து விட்டு அவன் அறையிலிருந்து வெளி வருகையில் ஆளரவமற்றிருந்த வீட்டில்.. அடுக்களையிலிருந்து ஒலித்த சத்தத்தில் என்னவென்று எட்டிப் பார்க்கச் சென்றவன்..

விடாது எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்த உதடுகளுடன் சமையல் மேடையிலிருந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் திறந்து பார்த்துக் கொண்டிருந்த இளங்கவியைக் கண்டு ஒரு நிமிடம் உறைந்து போன மூளையுடன்.. சிலையாகி நின்றான்.

பொறுமையற்று.. அவசர,அவசரமாய்த் தலை முதல் கால் வரை அவளை அளவெடுத்து... இரு கண்களிலும் முழுதாய் நிரப்பிக் கொள்ளத் துடித்த மனதின் தலையைத் தட்டிப் படுக்கப் போட்டு விட்டு.. ஒவ்வொரு முறையும் அவன் விழி மூடுகையில்.. மனக்கண்ணில் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் அந்த நீண்ட இமைகளின் இருப்பை,நலனை முதலில் ஆராய்ந்தான் அவன்.

மகரந்தத் தூளைச் சுற்றி வரும் பொன் வண்டாய் அவன் கண்கள் அந்த இமைகளையேச் சுற்றி,சுற்றி வர.. மெல்ல நடந்து அவளருகே சென்றான் அவன்.

“சமைச்சு வைச்சா மட்டும் போதுமா?, பரிமாறுற பழக்கமெல்லாம் கிடையாதா?”

திடீரென ஒலித்த அவன் குரலில் திடுக்கிட்டு அறை வாசலை நோக்கியவள்.. மேடையை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு அசைவற்று நின்று விட.. நிலப்படியில் தலை சாய்த்தபடி.. அவளையே பார்த்துக் கொண்டு அடுக்களை வாயிலிலேயே நின்றான் அவனும்.

தன்னாலேயே கவிழத் துவங்கியத் தலையைக் கஷ்டப்பட்டு நிறுத்தி... படபடக்கும் இமைகளைக் கட்டுப்படுத்த முடியாமல்.. எங்கோ நோக்கினாள் அவள். காரணமின்றியே குளம் கட்டத் தொடங்கின அந்த விழிகள்.

“ரொம்ப ஒல்லி ஆய்ட்ட” – கரகரத்தக் குரலுடன் அரசன்.

“உங்களைப் பார்க்காததால தான்” - கவி

“கன்னமெல்லாம் காணாம போச்சு”

“இங்கயே இருந்தீங்கன்னா.. சீக்கிரமே கண்டுபிடிச்சுடுவேன்”

“ஆனா.. கண் இமை மட்டும் மாறவேயில்லை!, இப்பவும் ஆளை மயக்குது..”

“.............” – அதுவரை அவன் முகம் பார்க்காமல்.. பதிலுக்குப் பதில் விடாது பேசிக் கொண்டிருந்தவள்.. நிறுத்தி.. மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்க்க..

ஒரே எட்டில் அவளருகே வந்து.. ஏக்கமும்,காதலுமாய் தயங்கித் தடுமாறி.. தன்னையே நோக்கிக் கொண்டிருந்தவளின் கன்னங்களைத் தன் உள்ளங்கைகளுக்குள் இறுக்கமாய்ப் பொதித்து.. பார்வை மாற.. முகம் முழுதையும் கருமணியாலே வருடி.. கடைசியில்... அந்தச் சின்ன இதழ்களுக்குள் தன் ஆறடி உயரத்தையும் மொத்தமாய்த் தொலைத்துக் கொண்டான்.

அவளைக் காணாது கழித்த அத்தனை இரவுகளின் ஏக்கத்தையும், ஒரே மூச்சில் தீர்த்துக் கொள்ள முயல்பவன் போன்று... 60-க்கும் மேற்பட்ட வினாடிகளைப் பெற்றிருந்த அந்த நீண்ட நிமிடத்துக்குள் சிக்கிச் சுழன்று கொண்டிருந்தவனைப் பட்டென விலக்கி.. நான்கடித் தள்ளி நின்ற இளங்கவிக்கு.. தொண்டைக் குழிக்குள் அதிர்வாய் ஒரு நடுக்கம்!

பின்னந்தலை முடியை அழுந்தக் கோதிக் கொண்டு.. இறுக கண் மூடித் தன்னை நிலைப்படுத்தியவன்.. முதுகு காட்டி நின்றவளிடம்..

“சாரி....” என்றான்.

நடுங்கிய குரலைக் கஷ்டப்பட்டு சீர் செய்து.. “வெளியூருக்குப் போய் பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு வந்த லட்சணம் இது தானா?” என்று முணுமுணுத்தாள்.

“முன்னாடியிருந்தே இப்டித் தான்! உன் கிட்ட மட்டும். அது உனக்கும் தெரியும்”

அலட்டிக் கொள்ளாமல் கூறியவனைக் கண்டு மீண்டும் படபடத்த இமைகளை உணர்ந்து.. அவசரமாய்த் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

“பார்த்ததும்.. முத்தம் கொடுக்கனும்ன்னு தோணுச்சு!” என்றவன் மீண்டும் “சாரி!” என்றதும்.. மெல்ல அவன் புறம் திரும்பி நின்றாள்.

“...........”

“அதான் சாரி சொல்லிட்டேன்ல” – என்றபடி மீண்டும் அருகே வரப் பார்த்தவனை அவசரமாய்த் தடுத்து..

“அங்கயே நிற்கனும். கிட்ட வந்தீங்கன்னா.. நான் போயிடுவேன்” என்றாள்.

“சரி, வர மாட்டேன். நீ போகாத” – என்றவன் சமையல் மேடையிலேயே சாய்ந்து நின்று கொண்டான்.

அணிந்திருந்தத் துப்பட்டாவின் நுனியைக் கசக்கியபடி பேச்சற்று நின்றவளிடம்..

“மீன் குழம்புக்காகத் தான் என்னைக் காதலிக்குறேன்னு சொன்ன! இப்போ நீயே சமைச்சுப் பழகிட்ட போல!” என்றான்.

“என்ன இருந்தாலும் நீங்க வைக்குறது மாதிரி வராது”

“நிமிர்ந்து என்னைப் பார்த்துத் தான் பேசேன்..”

“வர மாட்டேங்குது.”

“ஏய்ய்”

“திடீர்ன்னு ரொம்ப அழகாய்ட்டீங்க! அதான்.. முகத்தைப் பார்த்துப் பேசத் தயக்கமா இருக்கு”

“அழகா-ன்னா?”

“முன்னாடியெல்லாம் காலேஜ் பையன் மாதிரி இருப்பீங்க”

“இப்போ?”

“இ...இப்போ... கல்யாண மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க” – நாக்கைக் கடித்துச் சிரிப்பை அடக்கியவளிடம்..

“இப்டிலாம் பேசுனா கிட்ட வரத் தான் தோணும்” என்றான்.

“............”

“நான் வரல... நீ வா.. என் கிட்ட”

“.......”

“கவி.....”

உதட்டைக் கடித்து வேகமாய்த் துப்பட்டாவைக் கசக்கியவள், பின் மெல்ல நடந்து வந்து அவன் அருகே நின்றாள்.

“கட்டிக்க மாட்டியா?”

“........”

“எனக்கு மட்டும் தோணுச்சு, பார்த்ததும் கட்டிக்கனும்ன்னு?”

“எங்களுக்கும் தான் தோணுது” – வாய்க்குள்ளேயே முணுமுணுத்தவளைக் கண்டு சிரித்து.. அவள் இடையில் கை பதித்துத் தன்னருகே இழுத்தான் அவன்.

முன்னே வந்து முட்டி நின்றவள்.. கண்களை இறுக மூடியபடி அவன் மார்பில் தன் முகத்தை அழுத்திக் கொண்டாள்.

இரு கைகளால் அவளைச் சுற்றி வளைத்தவனும், முழுதாய்த் தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“மறுபடி போயிடுவீங்களா?”

“மாட்டேன்”

“அப்புறம்?”

“நாகை-லயே வேலை கிடைச்சிருக்கு. இனிமே இங்க தான்”

சட்டெனத் தலை நிமிர்த்தி “நிஜமாவா?” என்று ஆர்வமாய்க் கேட்டவளின் நெற்றியில் முட்டி..

“இப்போ மட்டும் கண்ணைப் பார்த்துப் பேசுற?” என்றான்.

“அ..அது... அப்போ.. கூச்சமா இருந்தது”

ம்ஹ்ம்??”

“மதியம் சாப்ட்டீங்களா?, குழம்பு நல்லாயிருந்துச்சா?, அத்தை நீங்க சரியாவே சாப்பிடலன்னு சொல்லுச்சு”

“ஆமா, நீ வந்து பரிமாறு! நல்லா சாப்பிட்றேன்”

“ஹிஹிஹி! ஆசை தான்! உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேன்னு தான் சமைச்சேன்! மத்தபடி சமையல் எல்லாம் உங்க டிபார்ட்மெண்ட்! எமர்ஜென்சின்னா மட்டும் தான் நான் கிட்சனுக்கு என்ட்ரி கொடுப்பேன்”

“சரி, அப்போ மேடம் என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?”

“என்ன பண்ணனும்?, அதான் உங்க பேச்சைக் கேட்டு எம்.பி.எ முடிக்கப் போறேனே! இன்னும் என்ன?”

“வேலைக்குப் போக வேண்டாமா?”

“போகனும் தான்! ஆனா.. வெளியூருக்கெல்லாம் போ மாட்டேன்”

“நானே விட மாட்டேன்”

“அய்யோடா”

“கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உங்கப்பாக் கேட்டா என்ன சொல்லுவ?”

“இப்போ தான் நேர்ல பார்த்துப் பேசிக் காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். கல்யாணமெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுத் தான்”

“கொஞ்ச நாள்ன்னா?, 1 வருஷம் கழிச்சு ஓகே வா?”

“அது என்ன 1 வருஷம்?”

“கொஞ்சமே.. கொஞ்சம் சம்பாதிச்சுட்டுக் கட்டிக்கலாம்ன்னு நினைச்சேன்”

“சம்பாதிக்கிறதைக் காரணம் காட்டிக் கல்யாணத்தை ஒத்திப் போடனும்ன்னா.. அதுக்கு அவசியமே இல்ல! ஏன்னா.. எவ்ளோ சம்பாதிச்சாலும்.. யாரும்.. திருப்தி படப் போறதில்ல! வாழ்நாள் முழுக்க இருக்குக் காசு சம்பாதிக்க! அதையெல்லாம் காரணமா சொல்லாதீங்க”

“பின்ன?”

“எனக்கு லவ் பண்ணனும்.”

“பண்ணிட்டுத் தான இருக்கேன்?”

“இதே மாதிரி.. இன்னும் கொஞ்ச நாள்..”

“இதே மாதிரியா?”

தன் கைகளுக்குள் நின்று... அண்ணாந்துத் தன் முகம் நோக்கிப் பேசிக் கொண்டிருந்தவளிடம் சிரிப்புடன் வினவியவனை முறைத்து விலகியவள்..

“பேசுறதுக்கு மட்டும் தான் எங்கப்பா கிட்ட பர்மிஷன் வாங்குவீங்களா?, இதுக்கெல்லாம் இல்லையா?” – என்று வினவினாள்.

“ம்ஹ்ம்.. இது.. எனக்கு மட்டுமேயான உரிமை. அதனால.. அவர் பர்மிஷனெல்லாம் தேவையில்ல”

“அடேங்கப்பா”

“நக்கல் டி உனக்கு! ஒரு பெரிய மனுஷனை மதிச்சு நடந்ததுக்கு இவ்ளோ கேலி பேசுவியா நீ?” – என்றவனிடம் சிரித்துப் பின் முகம் மாற..

“நிஜமாவே போ மாட்டீங்கள்ல?” என்று வினவினாள்.

இல்லையென்பது போல் தலையாட்டியவன் “கிட்ட வா சத்தியம் பண்றேன்” என்று முன்னே வருகையில் அவன் கைக்கு சிக்காமல் ஓடியே விட்டாள்.

ழைய கலகலப்பு மகளிடம் திரும்பியதில் செழியனுக்கு மிகவும் சந்தோஷம். மீண்டும் இளவரசனின் மீன் குழம்பை ருசிக்கத் துவங்கிவிட்டதாலோ என்னவோ.. கொஞ்சமே கொஞ்சம் உடம்பு பெருத்திருந்தாள். அவன் மீது அவளுக்கு இத்தனை அன்பா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.

மறுபடி அன்னையுடன் மீன் கடை,தந்தையுடன் ஃபேக்டரி, தனது வேலையெனப் பொறுப்பான ஆண் மகனாய்.. நல்ல மகனாய்.. கண்ணியமான காதலனாய் வலம் வந்த இளவரசனை இன்னும் பிடித்தது அவருக்கு. அந்தப் பிடித்தத்தை செயலில் காட்டவும் களமிறங்கினார் அவர்.

வழக்கம் போல் அன்று ஃபேக்டரியில் அவனைச் சந்தித்தவர் அவனை அழைத்துப் பேச.. “சொல்லுங்க பெரியவரே” என்றபடி வந்து நின்றான் அவன்.

“மாமா-ன்னு கூப்பிடு தம்பி” எனச் சொல்ல வாய் முனைந்தாலும்.. அதைச் செயல்படுத்த முடியாமல் அடைத்து நின்றத் தொண்டையைச் செருமிக் கொண்டு..

“நீங்க பெரியவரே-ன்னு கூப்பிட்றது என்னைக்குமில்லாம இன்னைக்குக் கொஞ்சம் வித்தியாசமா தெரியுது தம்பி” என்றார்.

“ஏன்?” என்றுக் கேட்டுக் குழம்பியவனும் அவர் எண்ணப் போக்கை நொடியில் புரிந்து கொண்டு..

“மாமான்னு கூப்பிட ஆசை தான்! ஆனா.. வித்தியாசமாப் படுமோ உங்களுக்குன்னு.....” என்று இழுத்தான்.

“எப்படியும் என் மவளைக் கட்டுனப்புறம் மாமா-ன்னு கூப்பிடத் தான போறீங்க! சும்மா கூப்பிடுங்க, ஒன்னும் நினைக்க மாட்டேன்” – என்று பெருந்தன்மையாகக் கூறுவது போல் ஆக்ட் விட்டவரைக் கண்டு உள்ளுக்குள் சிரித்து..

“சரிங்க மாமா” என்றான் அவன்.

திருப்தியாய்ப் புன்னகைத்துக் கொண்டவர்.. “கவி என்ன சொல்லுது?” என்றார்.

“வேலைக்குப் போக ஆசைப்பட்றதா சொல்லுச்சு”

முகம் சுருக்கித் தன் விருப்பமின்மையைக் காட்டியவர் “4 பேருக்கு வேலை கொடுக்கிற அப்பனை வைச்சுக்கிட்டு இவ என்ன வேலைக்குப் போறாளாம்?” என்றார்.

“படிச்ச படிப்புக்குப் பிரயோஜனமா ஏதாவது செய்யனும்ன்னு நினைக்குது போல”

“நீங்களும் ஒத்துக்கிட்டீங்களோ”

“அவ யார்க்கிட்டயும் அனுமதியெல்லாம் கேட்க மாட்டா! அவ என்ன விருப்பப்பட்டாலும், நான் தலையாட்டித் தான் ஆகனும்”

அவன் பதிலில் தோள் குலுங்க நகைத்தவர் “நல்லா புரிஞ்சு வைச்சிருக்கீங்க” என்றார்.

“............”

“எனக்கு ஒரு யோசனை இருக்கு தம்பி. அதைப் பத்திப் பேசத் தான் கூப்பிட்டேன்”

“சொல்லுங்க”

“நீங்க... நீங்க ஏன் என் தொழிலையெல்லாம் எடுத்து நடத்தக் கூடாது?”

“புரியல”

“எனக்கப்புறம் என் தொழிலைப் பார்க்குறதுக்கு எனக்கு எந்த ஆண் வாரிசும் இல்ல. அதான்.. நீங்க எடுத்து நடத்துனா நல்லாயிருக்கும்ன்னு எனக்குத் தோணுச்சு”

“வக்கீல் தொழில்ல என்ன பெருசா சம்பாதிச்சுடப் போறேன்னு நினைச்சு நீங்க இந்த முடிவுக்கு வந்திருக்கீங்கன்னா.. அதை மாத்திக்கோங்க! ஏன்னா.. இன்னும் 4,5 வருஷத்துல டிஸ்ட்ரிக் ஜட்ஜ் பதவிக்குப் பரீட்சை எழுதலாம்ன்னு இருக்கேன்!, அது மட்டுமில்லாம.. ஆண் வாரிசு இல்லன்னு நீங்க வருத்தப்படுறது கூட எனக்கு சரியாப் படல! தொழிலைப் பார்த்துக்கிறதுக்குத் தான் கவி இருக்காளே! படிச்சிருக்கா. திறமையிருக்கு. பக்க பலமா நின்னு உதவுறதுக்கு நீங்களும், நானும் இருக்கோம். அப்புறம் ஏன் கவலைப்பட்றீங்க?”

“உங்க திறமையையோ,தொழிலையோ நான் குறைச்சு எடை போடல தம்பி! நிறைவா தெரியுறதால தான்.. எனக்குக் கை கொடுத்துத் தூக்கி விட்டத் தொழிலை உங்களைப் பார்த்துக்க சொல்றேன்”

“உங்க நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி மாமா! ஆனா.. கவிக்கு தான் அந்த உரிமையிருக்கு. அவளுக்குத் தொழில் சொல்லிக் கொடுங்க. நான் அவ கூட நிற்கிறேன்”

-முடிவாய்க் கூறியவன் மீண்டும்,மீண்டும் அவர் மனதில் பெரிய இடம் பிடித்து சட்டமாய் அமர்ந்து கொண்டான். மகிழ்ச்சியுடன் புன்னகைத்தவர்..

“நீங்க சொன்னா சரி தான் மாப்ள” என்றார்.

அதன் பின்பு இருவருமாய்ச் சேர்ந்துக் கவிக்குத் தொழில் கற்றுக் கொடுக்க.. செந்தாமரையும் இவர்களோடு இணைந்து கொண்டார்.

ரியாக ஒரு வருடத்தில் இருவரது கல்யாணத்தையும் நடத்தி விட இரு பெற்றோரும் முடிவு செய்திருக்க.. எதைப் பற்றியும் கவலைப்படாமல்.. வீடு,ஃபேக்டரியெனப் பார்க்கும் இடத்திலெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

ன்று புதிதாய் இரு சக்கர வாகனமொன்றை வாங்கியிருந்தான் இளவரசன். தன் தம்பியுடன் கடைக்குச் சென்று சாவியைப் பெற்றுக் கொண்டவன்.. அவனையே ஓட்டச் சொல்ல.. குஷியாய் ஓட்டி வந்தத் தமிழ்.. தங்கள் வீட்டின் அருகே வருகையில்.. “நேரா கவி வீட்ல போய் நிறுத்து டா” என்று அரசன் அவசரமாய்க் கூற... “கவியக்காவை வைச்சு டபுள்ஸ் ஓட்டப் போறியா?” என்று கேலி செய்தான் தமிழ்.

“இன்னும் என்ன அக்கா?, அண்ணின்னு கூப்பிடு” என்றுத் தம்பியை அவன் அதட்டிக் கொண்டிருக்கையிலேயே..

“ஹேஏஏஏஏஏஏ வண்டி வந்துடுச்சு” என்று கூவியபடியே வீட்டினுள்ளிருந்து ஓடி வந்தாள் கவி.

“டேய் மாங்கா.. நீ எதுக்குடா ஓட்டிட்டு வந்த?, நான் தான் முதல்ல ஓட்டுவேன்னு உன் கிட்ட சொல்லியிருந்தேன்ல?” – என்றுத் தமிழிடம் பாய்ந்தவளிடம்..

“நீ பெரிய வண்டியெல்லாம் ஓட்டுவியா?” என்றான் இளவரசன்.

“கத்துக்க வேண்டியது தான்! நீங்க எதுக்கு இருக்கீங்க?, சொல்லிக் கொடுங்க”

“அதுக்கு உங்கப்பா ஒத்துக்கனுமே!, வந்துட்டாருய்யா மனுஷன்” என்றவன் வீட்டிலிருந்து வெளியே வந்த செழியனிடம்..

“புது வண்டி மாமா” என்றான்.

பவ்யமாய் அவன் தந்தையுடன் உரையாடுவதை நமுட்டுச் சிரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள் கவி.

ஏனெனில் இப்போதெல்லாம் இருவரும் ஃபேக்ட்ரியிலோ,வீட்டிலோ தனித்திருந்தாலே... மனிதருக்கு மூக்கு வேர்த்து.. நந்தியாய் இருவருக்கு நடுவே வந்து விடுகிறார். அதிலும் மாப்ள,மாப்ள என்று இளவரசனிடம் பாசப் பிணைப்பு வேறு!

‘என்னை விட எங்கப்பா தான் உங்களை அதிகமா லவ் பண்றார்’ என்று கவி வேறு வெறுப்பேற்றியதில் அவர் மீது ஒரு எரிச்சலிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

“பூஜை போட்டாச்சா மாப்ள?” – வண்டியைச் சுற்றி சுற்றிப் பார்த்து வினவினார் செழியன்.

“ஹ்ம்ம்,ஆச்சு மாமா” என்று பதில் கூறியவனின் தோளை இடித்தாள் கவி.

“என்ன?”

“என்னையெல்லாம் பைக்ல பின்னாடி உட்கார வைச்சுக் கூட்டிப் போ மாட்டீங்களா?”

“இப்போவா?”

“பின்ன?”

“உங்கப்பா இருக்காரேடி”

“பர்மிஷன் கேக்குறது தான் உங்களுக்கு அல்வா சாப்பிட்ற மாதிரியாச்சே! கேளுங்க” – என்றவளை முறைத்தவன்.. அவள் விடாது நச்சரித்ததில் வேறு வழியின்றி.. “மாமா” என்கையில் அவரும் “மாப்ள” என்றார்.

“சொல்லுங்க மாமா”

“பைக்-ல நானும் ஒரு ரைட் போலாம்ங்களா?”

“ஓ! தாராளாமா ஓட்டுங்க மாமா” என்றவன் சாவியை நீட்ட.. அதைப் பெற்றுக் கொண்டவர்..

“லட்சுமி.....” என்று குரல் கொடுத்தபடியே வண்டியில் ஏறினார்.

“மாப்ள புதுசா வண்டி வாங்கியிருக்காப்ல! வாரியா?, ஒரு ரௌண்ட் போவோம்” என மனைவியை நோக்கிக் கேட்டவரை.. அவன் திறந்த வாயுடன் ஆ-வென நோக்க..

அடக்க முயன்றும் முடியாமல் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது கவிக்கு.

“என்ன சிரிப்பு?, உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு நான் வண்டில போ கூடாதா?” என்று சண்டைக்கு நின்ற தந்தையிடம்.. “போகலாமே!” என்ற கவி “நான் லாம் ஏற மாட்டேன்” என்றபடிப் பதறி நின்ற அன்னையை அதட்டி உருட்டி ஏற்றி விட்டாள்.

மெதுவாக வண்டியை நகர்த்திய செழியன்.. வழியில் நடந்து வந்து கொண்டிருந்த செந்தாமரையிடம் “யோவ் தாமரை அடுத்து நீ ஒரு ரைட் போ என் தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு” என்று கூற.. “ஆகட்டும்ங்கய்யா” என்று அவர் பதில் கூறுவதைக் கேட்டுக் கொண்டே சிரிப்புடன் பறந்தார்.

இன்னமும் வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தக் கவியை முறைத்த அரசன்..

“உங்கப்பா உன்னை மாதிரி! ஒவ்வொரு தடவையும் என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டே இருக்காரு. சான்ஸ்-ஏ இல்ல” என்றான்.

திட்டமிட்டபடி அந்த வருட முடிவிலேயே இருவரது கல்யாணத் தேதியும் குறிக்கப்பட.. இளங்கவி கனவில் மிதந்தாள். அவர்களது வழக்கப்படி, நாகையிலிருந்தக் குலதெய்வக் கோயிலில் திருமணம் என்று முடிவு செய்யப்பட.. இரு குடும்பங்களும் திருமண வேலையில் பிஸியாகினர்.

இளவரசன் படித்த படிப்பும்,பார்க்கும் வேலையும்.. பொருளாதார ரீதியாக இருவருக்குமிடையே இருந்த ஏற்றத்தாழ்வைக் குறித்த கேள்விகளுக்கு ஒருவாராக முற்றுப் புள்ளி வைத்தது.

‘பையன் தான் படிச்சிருக்கானே’ என்றும் ‘பிறந்ததிலிருந்து அவனைப் பார்க்குறோம், ரொம்பப் பொறுப்பானவன்’ என்றும் சுற்றத்தாரிடமிருந்து வந்த ‘கமெண்ட்டு’கள் செழியனின் மிச்ச,சொச்ச உறுத்தல்களையும் மொத்தமாய் நீக்கியிருந்தது.

திருமணத்திற்கு ஒரு வாரமிருக்கையில்.. ஒரு நாள் மாலை.. அடம்பிடித்து அவனுடன் கடற்கரைக்கு வந்திருந்தாள் இளங்கவி.

“எங்க போகனும்ன்னு இவ்ளோ பிடிவாதம் பிடிக்குற?” – எரிச்சலுடன் வினவியவனிடம்..

“போட்-ல போகனும்” என்றாள் அவள்.

“எங்க?”

“அந்தத் தீவுக்கு”

“அடிப்பாவி! பயமில்லையா உனக்கு?”

“ம்ஹ்ம்! அந்தச் சம்பவம் மட்டும் நடக்கலேன்னா.. நீங்க என்னைக் காதலிச்சிருக்க மாட்டீங்க தான?,”

“அதுசரி”

“ப்ளீஸ்.. போலாம்” – என்று கெஞ்சி அவனுடன் மறுபடி நடுக்கடலுக்கு போட்டில் பயணமானாள் கவி.

தீவை அடைந்ததும் படகிலிருந்துக் குதித்து இறங்கியவள்.. மணலில் நின்று கொண்டு சுற்றும்,முற்றும் நோக்கினாள்.

மேற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தக் கதிரவன் மஞ்சள் நிறக் கதிர்களை.. நீலக் கடல் முழுதிலும் பரப்பி வைத்திருக்க.. அந்தக் கதிர்களிடமிருந்துத் தப்பித்து.. வெண் நுரைகளைக் கையில் ஏந்தியபடி.. முன்னே ஓடி வந்த அலைகளைப் பார்த்துக் கொண்டே.. பாதங்கள் புதைய மணலில் நடந்தாள் அவள்.

மாலை வெயிலை மீறி.. குளிர்ந்த கடற்காற்று உடலைத் தாக்க.. இருகைகளையும் மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டவளைக் கண்டபடியே... அவள் பின்னே நடந்தான் அவன்.

“ஒரு வேளை செத்துப் போயிருந்தா என்னாயிருக்கும்?” – அவள் நின்றதும்.. தானும் நின்றவன்..

“இங்க பாடுற டூயட்டை சொர்க்கத்துலயோ, நரகத்துலயோ பாடிருப்போம்” – என அலட்டிக் கொள்ளாமல் பதில் கூறினான்.

“அவ்ளோ ஈசியா என்ன?”

“கஷ்டம் தான்! சாகலேல? சாகவும் வேண்டாம்! குறைஞ்சபட்சம் அடுத்த இருபது வருஷத்துக்காவது”

“ம்ஹ்ம் எனக்கு நூறு வருஷம் உங்களோட வாழனும்”

“உங்க ஆசை பலிக்கட்டும் மேடம்”

தூரத்தில் தெரிந்த சூரியனைக் கண்டபடி அடுத்த சில நிமிடங்களை அமைதியாய்க் கடத்தியவள்..

“இங்க வந்ததும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது?” என்று வினவினாள்.

“உனக்கு?”

“நீங்க ஐ லவ் யூ-ன்னு சொன்னது. உங்களுக்கு?”

“நான் சொன்னதும் நீ ஓடி வந்து கட்டிப்பிடிச்சிக்கிட்டது”

அவன் புறம் திரும்பி அழகாய்ச் சிரித்தபடிக் கண்ணைச் சுருக்கியவளிடம்.. “அதுக்கப்புறம் நடந்தது கூட ஞாபத்துக்கு வருது” என்றபடி அவளைத் தன் புறம் இழுக்க முயல.. அவன் கைகளுக்குச் சிக்காமல்.. விலகி ஓடியவளைத் துரத்திக் கடைசியில்.. அவன் எட்டிப் பிடிக்கையில்.. இருவரும் தடாலென மணலில் விழுந்திருந்தனர்.

மூச்சு வாங்கத் தன்னருகே கிடந்தவளைத் திரும்பி நோக்கியவன்.. எழுந்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விட்டு மீண்டும் மணலில் தலை சாய்த்து வானத்தை நோக்கினான்.

“உண்மையைச் சொல்லப் போனா.. என் வாழ்க்கைலயே அது ரொம்பக் கொடூரமான நிமிஷம்! உள்ளுக்குள்ள அவ்ளோ காதலை வைச்சுக்கிட்டு.. அதை மறைச்சு.. உன்னையும் ஒதுக்கி.. முட்டாள்தனமா விலகி நின்ன நாட்கள் அத்தனையும் கண்ணு முன்னாடி வந்து வேதனைப்படுத்துச்சு! என் மேல பாசம் காட்டுன அம்மா,அப்பாவுக்கு நான் பதிலுக்கு பாசம் காட்டிட்டேன்! ஆனா.. எந்த எதிர்பார்ப்புமில்லாம.. காதலைக் காட்டுன உன் கிட்ட.. பதிலுக்கு நான் என் அன்பை வெளிப்படுத்தலையேன்ற குற்ற உணர்ச்சி மட்டும் தான் அந்த நிமிஷம் இருந்துச்சு!, தப்பு பண்ணிட்டேனோன்னு கூடத் தோணுச்சு”

“ஹ்ம்ம், இதுக்குத் தான் நான் ப்ரபோஸ் பண்ணப்பவே நீங்களும் என்னைக் காதலிக்கிறதா ஒத்துட்டிருந்துருக்கனும்”

“நிஜமாவே அப்டித் தான் நினைச்சேன்”

“............”

“ஆனா.. அதுவும் நல்லதுக்குத் தான்! இப்போ.. இந்த நிமிஷம்.. நான் அனுபவிச்சிட்டிருக்கிற திருப்தி.. அந்த சம்பவத்தால தான எனக்குக் கிடைச்சது?”

“...........”

“வாழ்க்கைல நிறைய விசயங்களை நாம அநாவசியமான பயத்துனாலேயே இழந்துட்றோம்! உங்கப்பாவை ஒரு கொடூரமான ஆசாமியா நானே கற்பனை பண்ணிக்கிட்டு.. எங்க உன்னைக் காதலிச்சா.. என்னையும்,என் குடும்பத்தையும் ஒன்னுமில்லாம பண்ணிடுவாரோன்னு நினைச்சு பயந்ததெல்லாம் எவ்ளோ முட்டாள்தனம்?, மக-ன்ற விசயத்துல உங்கப்பா ஒரு குழந்தை மாதிரி! உன் விருப்பம் என்னவா இருந்தாலும்.. மறுப்பு சொல்லாம தலையாட்டுறார். அன்னிக்குக் கோபப்பட்டு அவர் உன்னை அறைஞ்சது கூட தற்கொலை-ன்ற வார்த்தையை நீ யூஸ் பண்ணுனதுக்குத் தானே தவிர.. நீ காதலிச்சதுக்காக இல்ல.”

“...........”

“நீயும்,நானும் தீவிரமா இருக்கோம்ன்றதைத் தெரிஞ்சுக்கிட்டு, தெளிவா இருக்கோம்ன்றதைப் புரிஞ்சுக்கிட்டு.. நமக்காக.. இறங்கி வந்து... இவ்ளோ தூரம் சப்போர்ட்டிவ்-ஆ இருக்குற மனுஷனைப் போய்.. எப்டியெல்லாம் கற்பனை பண்ணேன்னு நினைச்சாலே.. சிரிப்பு வருது!”

“ப்ச், ஆரம்பிச்சுட்டீங்களா?, நீங்க என்னைக் காதலிக்குறதுக்குப் பதிலா எங்கப்பாவைக் காதலிங்க ப்ளீஸ்!”

“ப்ச்” என்றபடி முறைத்தவன் பின் “எல்லா விதத்துலயும் நான் ரொம்ப லக்கி-ன்னு தோணுது தெரியுமா?” என்றான்.

“ம்ஹ்ம்??”

நக்கல் குரலில் கூறியவளைக் கண்டு.. அவள் புறம் திரும்பிப் படுத்து.. அவளது நீண்டக் கண்ணிமைகளை ஒற்றை விரலால் வருடியவன்..

“இதெல்லாம்.. உன் ஒருத்தியால மட்டும் தான் சாத்தியமாச்சு” எனக் கூறி.. “தேங்க் யூ.. என்னைக் காதலிச்சதுக்கு” என்றான்.

டன் கணக்கில் காதல் வழியும் அவன் கண்களை ஒரு நொடி.. இமைக்காது நோக்கியவள்..

“நீங்க வள,வளன்னு நிறைய பேசுற அளவுக்கு நான் பேச முடியாது. ஏன்னா.. உங்களை ஏன் காதலிச்சேன்ற கேள்விக்கு, என் கிட்ட காரணம் எதுவுமில்ல” எனக் கூறி ஒரு நொடி.. வானத்தை நோக்கி விட்டுப் பின்..

“தெரியல.. விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து உங்களைத் தான் காதலிச்சேன். இப்பவும் உங்களைத் தான் காதலிக்குறேன். இனியும் உங்களை மட்டும் தான் காதலிப்பேன்னு தோணுது” என்றாள்.

எதிர்பார்ப்பில்லாத அன்பை அள்ளி,அள்ளிக் கொட்ட.. எத்தனை பேரால் முடிகிறது?, உன்னை,உனக்காக மட்டுமே காதலிக்கிறேன் என்பதை அசால்ட்டாக உணர்த்திக் கொண்டிருப்பவளைத் தீராக் காதலுடன் நோக்கி.. தன் புறம் தலை திருப்பியிருந்தவளின் முகம் நோக்கி நகர்ந்து.. அவள் இதழ்களுடன் தன்னைக் கலந்தான் அவன்.

ஒரு காலத்தில் ஆக்ரோஷமாய் அவர்களை அள்ளிக் கொண்ட அந்தப் பாழி.. இன்று... இருவரது மகிழ்ச்சியையும் கண்டுத் தானும் அவர்களுடன் பங்கு கொள்ள ஆசைப்பட்டு.. ஆர்ப்பரிப்புடன் தன் அலைகளைக் கரங்களாக நீட்டி.. இருவரையும் அணைத்து.. நனைத்து.. ஈரமாக்கி விட்டுச் சென்றது.

அவனும்..! அவளும்..!

அவர்களது காதலும்! அந்தப் பாழியும்!

                                                            ****************************முற்றும்**************************