அத்தியாயம் - 6

அலை – 5

புயலுக்குப் பின்....

ள்ளுண்டக் குடிகாரன் போல் நிதானத்தை இழந்து.. வெறியாட்டம் போட்டுத் தன் கோரதாண்டவத்தால் வரலாறு காணாத பெரும் அழிவை உண்டாக்கி விட்டுச் சென்ற அந்தக் கடும்புயல் ஒரு வழியாக ஓய்ந்து.. காற்றுக்கும்,மழைக்கும் போதை தெளிந்து புத்தி வந்த போது.. ஒட்டுமொத்த ஊரின் நிலைமையும் தலைகீழாக மாறிப் போயிருந்தது.

சூறைக் காற்றுக்குப் பலியாகாத ஓட்டு வீடுகளே இல்லையென்றாகி.. ஏனோதானோவென அரைகுறை நிதானத்துடன் ஆட்டம் கண்டபடி நின்று கொண்டிருந்தக் கட்டிடங்கள் பலவற்றின் சுவர் இடிந்து விழுந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருந்தது.

ஒரு வாரத்திற்கும் மேலாக ஊரின் பல பகுதிகள் மின்சார வசதியற்றுப் போய் முழு இருளில் மூழ்கிக் கிடக்க... உணவு,குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் புகும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நிவாரணப் பணிகள் முழுமூச்சில் ஒரு புறம் நடந்தாலும், பிய்த்துப் போட்டப் பரோட்டாவாய் சாலையில் சிதறிக் கிடந்தத் தென்னை மரங்கள், மின் கம்பங்கள், அதில் சிக்கி உயிர் விட்ட அப்பாவி ஜனங்கள், இப்படியொரு சூழ்நிலைக்காகக் காத்துக் கிடந்ததைப் போல்.. சமயம் பார்த்து மனித உடலைத் தாக்கத் துவங்கியிருக்கும் தொற்று நோய்கள் என அந்த இயற்கைச் சீரழிவு ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைச் சொல்லித் தீர்க்க முடியாது.

நூற்றுக் கணக்கானப் படகுகள் அசுரக் காற்றின் விளைவால் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப் பட்டிருந்தமையால், அதை மீட்கச் சென்ற மீனவர்கள், கோடியக்கரை சரணாலயத்தில் சுதந்திரமாய்த் திரிந்தப் பல வன விலங்குகள் நடுக்கடலில் செத்து மிதப்பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

60-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கி, அப்பாவி விலங்கினங்களுக்கும் அழிவை ஏற்படுத்திக் கோரமாய்த் தாக்கிச் சென்ற இந்தப் புயல் கோடியக்கரை வரலாற்றில் தனக்கென ஓர் இடம் பிடித்தது.

காற்றோடு ஒரு கரத்தையும்,கடலோடு ஒரு கரத்தையும் இணைத்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக் கருத்தக் கடலலைகளின்.. பெருத்த ஓசையைத் தவிர... வேறு எந்த வித ஒலியும் செவிகளைத் தீண்டாதிருக்க... காது,மூக்கு,வாய் என உடலின் துவாரமுள்ள பகுதிகள் அத்தனையிலும் உப்பு நீர் நுழைந்ததில்.. காற்று புகுந்த பலூனாய் திடீரென ஊதிப் போன உணர்வு இளவரசனுக்கு!

கும்மிருட்டைத் தவிர எதுவும் புலப்படாதக் கண்களுக்குள் மின்னலாய் அவ்வப்போது பளிச்சிட்டது அவள் அணிந்திருந்த சிவப்பு நிறத் துப்பட்டா! அவள்... அவனுடைய இளங்கவி!

உப்புக் கரித்த நீரில் ஊறிப் போயிருந்த மூளையை சக்கையாய்ப் பிழிந்தெடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு... கலங்கலாய்த் தெரிந்த நினைவுகள் சிலவற்றைத் தெளிவாய் உற்று நோக்க பெருமுயற்சி செய்தான் அவன்.

வெள்ளைக் கன்னங்களுடன் மூக்கு,வாயற்றுத் தோன்றிய அந்த முகத்தில்.. நீண்ட இமைகளைப் பெற்றிருந்த ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் பளிச்சென மின்னி.. அவன் மூளையில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்த உப்பு நீரை உறைய வைத்துக் கொண்டிருந்தது.

அந்த இமைகள்.. அவனது ஈர உதடுகள் தொட்டுத் தீண்டிய அந்த நீண்ட இமைகள்.. அவனது இரவுகளைப் பகலாக்கி உறக்கமின்றித் தவிக்கச் செய்த.. அவனது கவிக்குச் சொந்தமான அந்தக் கரு இமைகள்! அந்த இமைகளைக் கண்ட மறு நொடி, அவனது உள்ளுறுப்புகள் உலுக்கிப் போட்டதில்.. படுத்திருந்தப் பாயிலிருந்து நான்கடிக் குதித்து விழுந்தான் அவன்.

ஆல மரத்து வேராய் தன் உடல் முழுதும் நீண்டு வளர்ந்திருந்தப் பச்சை நரம்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலியால்.. சுருண்டு போய் ஒய்ந்து கிடக்க... கட்டையாய்ச் சாய்ந்து கிடந்தக் கை,கால்களைக் கஷ்டப்பட்டு அசைத்து எழ முயற்சித்தான்.

ம்ஹ்ம்... தோள்ப்பட்டைக்குக் கீழ் இருந்தக் கைகளும்,இடுப்புக்குக் கீழிருந்தக் கால்களும் அவன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணர்வே இல்லை அவனுக்கு.

தன் உடல் குறித்த ஆராய்ச்சியில் முழுதாய் ஈடுபட்டிருந்தவனின் விரல்களிலிருந்து.. மென்மையான கரமொன்று திடீரென நழுவிச் செல்வதைப் போல் தோன்ற.. கண்கள் இரண்டையும் ஆக்கிரமித்துக் கொண்டு நின்ற... அந்த நீண்ட இமைகளையும், விரல்களிலிருந்து நழுவி விழுந்த அந்தக் கரத்தையும் தன்னுடனே பிடித்து வைத்துக் கொள்ளும் வேகத்துடன்..

அசையாது கிடந்தத் தோள்களை ஒரே மூச்சில் தூக்கி நிறுத்தி.. “கவிஇஇஇஇஇஇஇஇ” என்று கூவியபடி தன் உயிர்பலம் திரட்டி எழுந்தமர்ந்தான் இளவரசன்.

“அய்யா... அய்யா.. அரசு... நான் பெத்த என் ராசா...” – என்றபடி வேகமாய் அவனை நோக்கி வந்த அன்னை அவனது இரு தோள்களையும் பற்றித் தன் மீது சாய்த்துக் கொள்வதை உணர்ந்தவனுக்குத் தான் உயிருடன் இருப்பதே அப்போது தான் புரிந்தது.

இடது கை நரம்பில் செருகிக் கொண்டு நின்ற ஊசி சுருக்கென வலி ஏற்படுத்தியதைப் பொருட்படுத்தாமல் தன் அன்னையின் கை விரல்களை அழுந்தப் பற்றி “கவி.... கவி....” என்றவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தையே வரவில்லை.

உலர்ந்து போன உதடும்,நாக்கும்.. உப்புத் தண்ணீரின் விளைவால் புண்ணாகிப் போயிருந்தத் தொண்டையும் அவனது முயற்சிக்கு ஒத்துழைக்காமல் போக மீண்டும் மீண்டும் “கவி,கவி” என உதடசைத்தான்.

“படுத்துக்க, படுத்துக்கய்யா!, உப்புத் தண்ணீல ஊறிப் போய்க் கிடந்த உடம்பு, வலி போக நாளாகும்ய்யா!, நீ உசுரோடத் திரும்பி வந்ததே.. நான் கும்புட்ற கருப்ப சாமி அருளால தான்! படுத்துக்க தம்பி” – எனப் புலம்பியபடியே அவனைப் படுக்க வைக்க முயன்ற ராணியை பெரு முயற்சி செய்துத் தடுத்துப் பின் படுக்கையிலிருந்து எழுந்து நின்றான் அவன்.

தள்ளாடிய கால்களைச் சிரமப்பட்டு நிற்கச் செய்து.. “என்னய்யா, என்ன செய்து?, என்ன வேணும்?” என்று பதறியபடியேத் தன்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அன்னையைப் பொருட்படுத்தாது விறுவிறுவென இளங்கவியின் வீடு நோக்கி நடந்தான் அவன்.

சுற்றியத் தலையையும், இருட்டிக் கொண்டு வந்தக் கண்களையும் அவன் பொருட்படுத்தவேயில்லை! புவியீர்ப்பு விசைக்கேற்ப சரியப் பார்த்த உடலிடம் ஐந்து நிமிடம் பொறுக்கச் சொன்னான். அவள் என்னவானால் என்பதைத் தெரிந்து கொண்ட நொடி.. மண்ணில் விழுந்தாலும் சரி, கல்லில் விழுந்தாலும் சரி! அதுவரை பலம் வேண்டும்!

ஐந்து நிமிட நடைக்கே.. வியர்த்து வழிந்து கண்ணைக் கட்ட.. கவி வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த செழியனின் முன்பு சென்று நின்றான்.

கலைந்தத் தலையும்,சட்டையணியாத மார்புமாய், செத்துப் பிழைத்து வந்தத் தோற்றத்துடன் பரிதாப நிலையில் நின்றவனை அவர் வாய் பிளந்து நோக்குகையில் “க......கவி.......” என்ற வார்த்தையை முழுதாக உச்சரிக்க முடியாமல் தோற்று.. ஒத்துழைக்காதத் தொண்டையினால் எரிச்சலுற்று சுற்றி,முற்றிப் பார்வையால் அவளைத் தேடினான்.

எதிரேயிருந்த அறைக்குள்ளிருந்து களையிழந்த முகத்துடன் வெளியே வந்த லட்சுமியைக் கண்டு விறுவிறுவென அந்த அறைக்குள் நுழைந்தான். அறை வாயிலை எட்டுகையிலேயே அவனது கால்கள் தன்னாலேயே.. நிதானத்துக்கு வந்தது.

ன் கைகளில் கம்பீரமாய் கடலைச் சுற்றி வந்தப் படகொன்று.. காற்றிலும்,மழையிலும் சிக்கிக் கவிழ்ந்து.. துடுப்பிழந்து, களையிழந்து.. முழுதாய்ச் சேதமுற்று.. கேட்பாரற்றுப் போய் அலையோடு,அலையாய் சமுத்திரத்தில் மிதப்பதைக் காண்கையில் ஒரு மீனவன் என்ன வலியை உணர்வானோ.. அந்த வலியை.. அந்த நிமிடம் உணர்ந்தான் அவன்.

இடப்புறமாய்ச் சாய்ந்திருந்த தலையுடன்... பிளந்த வாயும்,மூடிய கண்களுமாய்.. நீட்டிய கை,கால்களுடன் படுத்துக் கிடந்தவளைக் காண்கையில் நெஞ்சு பதறிப் போனது அவனுக்கு.

சோர்வு,சோர்வைத் தாண்டிய பெரும் வலியை உடல் முழுதும் உணர்கிறாள் போலும்.. உயிரற்ற முகத்துடன்.. இதழ் உதிர்ந்த பூவாய்.. பாவமான தோற்றத்துடன் காட்சியளித்தாள் இளங்கவி.

திடீரென அவனது ஒட்டு மொத்த உடலிலும் வலியற்றுப் போக.. அதுவரைப் பாறையாய்க் கனத்த மனது.. பாரமிறங்கி.. லேசாகி விட.. கை,கால்களில் தோன்றியத் திடீர் பலத்துடன்.. அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

உலர்ந்த உதடுகள் லேசாய் வளைந்துப் புன்னகை சிந்தத் தொடங்கியிருக்க.. அவள் கன்னத்தில் மெல்லத் தன் கரம் பதித்தான்.

அசைவின்றிக் கிடந்தவளின் இரு கன்னங்களையும் பற்றி.. அவள் முகத்தை நிமிர்த்தி.. “க......வி” என்றான்.

கண் விழிக்காதிருப்பவளைக் கண்டுக் கலக்கம் தோன்ற.. அவள் தோள் பற்றி.. “கவி.. கவி...” என முழு பலத்துடன் அவன் உலுக்கியதில்.. இரண்டு நிமிடம் தொடர்ந்து சாமியாடியவள்.. பெரும் சிரமத்திற்கிடையில் இமை பிரித்தாள்.

கண் முன்னே தெரிந்த.. அவன் முகத்தில்.. சிவப்பேறிப் போய் சோர்ந்திருந்த அந்தக் கண்களில் கண்ணீரைக் கண்டு ஆச்சரியமுற்று.. மெல்ல மெல்ல சுரணை பெற்று.. தன் கன்னங்களில் பதிந்திருந்த அவன் கரத்தின் சூட்டை உணர்ந்து.. நம்ப முடியாத பார்வையுடன்.. பளிச்சிடும் விழிகளால் அவனை நோக்கியவளைக் கண்டுப் பற்கள் தெரியப் புன்னகை கொண்டு.. அவள் நெற்றியில்.. தன் நெற்றியை அழுத்தி.. இறுக இமை மூடியவனின் விழியோரம் துளியாய் சிறு கண்ணீர்.

“நீ என் கண்ணு முன்னாடி இருக்க..”

“நான் உன்னைப் பார்க்குறேன்..”

“என்னால உன்னைத் தொட முடியுது..”

“நாம இன்னும் உயிரோட இருக்கோம்...”

இன்னும் இன்னும் ஏகப்பட்ட வாக்கியங்களை உச்சரிக்கத் துடித்த அவன் இதழ்கள்.. அதை செயல்படுத்த முயற்சிக்காமல்.. அவள் உருவத்தை மனம் முழுதும் நிரப்பிக் கொள்ளத் துடித்தக் கண்களுக்கு வழி விட்டு.. அமைதியாய் ஒதுங்கிக் கொண்டது.

சோர்வை மீறிப் பளிச்சிட்டப் புன்னகையுடன் அவனையே விடாது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.. நடந்து முடிந்த எதையும்,நடக்கப் போகும் எதையும் நினைத்துப் பார்க்கக் கூட விருப்பமில்லை.

இருவரும் உயிரோடிருக்கிறார்கள்! அத்தனை பெரிய பேராபத்தில் சிக்கியும்.. செத்து மடியாமல்.. உயிர் பிழைத்திருக்கிறார்கள்! அதிசயமோ.. ஆச்சரியமோ.. என்ன எழவோ.. இந்த நிமிடம்.. இந்த நிமிடம்.. அவள் கண் முன்னே நிற்பவனை முழுதாய் மனதுக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறம் மறந்து.. ஒருவரையொருவர் பார்த்தபடி உணர்ச்சிக் கொந்தளிப்பில் அமர்ந்திருந்த இருவரில்.. முதலில் பார்வையை விலக்கியது இளங்கவி தான்.

றை வாயிலில் நின்றபடி இருவரையும் திகைத்துப் போய் நோக்கிய லட்சுமி... அவசரமாய் செழியனைத் திரும்பிப் பார்க்க.. கையைப் பின்னே கட்டிக் கொண்டு எங்கோ பார்த்தபடி இறுகிப் போய் நின்றவரின் முகத்தில் கோபம்,ஆத்திரம்,ஏமாற்றம் போன்ற அத்தனை உணர்வுகளும் போட்டி போட்டு பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அவன் கைகளிலிருந்துத் தன் கைகளை விடுவித்தவளைக் கேள்வியுடன் நோக்கிய இளவரசன்.. அவள் பார்வை சென்ற திக்கைத் தானும் நோக்கி விட்டுப் பின் மெல்ல எழுந்து நின்றான்.

அறையின் எதிரே தூணருகே நின்றிருந்த செழியனின் பார்வை தன்னைக் கூறு போடுவதை உணர்ந்தபடி இறுகிய முகத்துடன் அவன் வெளி வருகையில் ராணியும்,செந்தாமரையும் முற்றத்தில் அவருடன் நின்றிருந்தனர்.

மகனைத் தொடர்ந்து வந்திருந்த ராணி, அவன் செய்த செயலில் பதறி.. வீட்டுக்கு ஓடி செந்தாமரையையும் கையோடு அழைத்து வந்திருந்தார்.

சூழ்நிலையின் இறுக்கம் ஏற்படுத்திய பயத்தை,படபடப்பைத் தாங்க இயலாது படபடவெனக் கண்ணீர் சொரிந்த ராணி.. செழியன் என்ன சொல்வாரோ.. செய்வாரோ.. எனப் பதறி..

“எ..என்னய்யா தம்பி நடக்குது இங்க?, உனக்கு ஏன்ய்யா புத்தி இப்டிப் போகுது?, நமக்கு சோறு போடுற சாமி அவரு! அவருக்குத் துரோகம் பண்ண உனக்கு எப்பிடிய்யா மனசு வந்துச்சு?” – எனக் கேட்டபடி மகனின் தோளைப் பற்றித் தள்ளித் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

செந்தாமரை எந்தப் பேச்சுமின்றி தலை குனிந்து நிற்பதைக் கண்டு.. ஒரு நொடி கண்களை இறுக மூடித் தன்னை நிதானப்படுத்தினான் இளவரசன்.

“ராணி.. ராணி நீ கொஞ்சம் சும்மா இரு” என்ற லட்சுமி தொடர்ந்துக் கணவனிடம் திரும்பி “எதுவாயிருந்தாலும் புள்ளைங்க ரெண்டுக்கும் உடம்பு தேறுனப்புறம் பேசிக்கலாம்” என அவசரமாய்க் கூற.. ராணியின் புறம் திரும்பினார் செழியன்.

“தம்பிக்கு என்ன சாப்பிடக் குடுத்தீக?”

“இ..இ..இன்னும் எதுவும் குடுக்கலண்ணே”

“சாப்பிடவிட்டு சட்டை,கிட்டையெல்லாம் மாட்டிக் கூட்டி வாங்க” – அலட்டிக் கொள்ளாமல் கூறி விட்டு “எனக்கும் சோத்தைப் போட்றி” என்று மனைவியை அதட்டியபடி நகர்ந்து விட்டார் அவர்.

இப்போதைக்கு விட்டால் போதும் என்ற மனநிலையுடன் மகனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டுத் தன் வீட்டை நோக்கிச் சென்றார் ராணி.

இருவரின் வீடும் அடுத்த சில மணி நேரங்களுக்கு மயானமாய்க் காட்சியளிக்க... இறுதியில் கவி வீட்டு முற்றத்தில்.. செழியனின் எதிரே இரும்பு நாற்காலியொன்றில் குனிந்த தலையும்,இறுகிய உடலுமாய் அமர்ந்திருந்தான் இளவரசன்.

சற்றுத் தள்ளித் தன் அன்னையின் அருகேயிருந்த நாற்காலியில் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்த இளங்கவியின் கண்களில் கொஞ்சமும் பயமில்லை. லேசான கலக்கம் மட்டுமே! அதுவும் அரசனைக் குறித்துத் தான்!

இப்படியொரு சங்கடமான சூழ்நிலைத் தங்களது பெற்றோர்களுக்கிடையே உருவாகி விடக் கூடாதென்கிற ஒரே காரணத்திற்காக அவளைத் தவிர்த்தவன் அவன். சிக்க வைத்து விட்டாள் அவனை! மறுபடியும்!

“சொல்லுங்க தம்பி”

அமைதியாயிருந்த வீட்டில் செழியனின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது.

தரையை வெறித்தபடி பாறை முகத்துடன் அமர்ந்திருந்தவன், என்ன கூறப் போகிறானோ என்று பயந்தபடி ராணி மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“நான் கவியைக் காதலிக்குறேன்”

அமைதியான குரலில் அழுத்தமாய்க் கூறியவனை அனைவரும் பதற்றத்துடன் நோக்கினர்.

“இந்த வாக்கியத்தை உச்சரிச்சதுக்காகவே உன்னை உயிரோட விடக் கூடாதுன்னு என் மனசு பதறுது தம்பி! அரை உசுரோட தெம்பில்லாம உட்கார்ந்திருக்கியேன்னு தான் பாவம் பார்க்குறேன்”

“கொன்னு போடுங்க! தப்பில்ல! ஏற்கனவே ஒரு தடவை செத்துப் பிழைச்சு தான் வந்திருக்கேன்.அதனால எனக்கு இப்ப உயிர் பயமெல்லாம் இல்ல. அப்பிடியே என்னோடு சேர்த்து உங்க பொண்ணையும் கொன்றுங்க. ஏன்னா.. நான் இல்லேன்னா.. அவளும் உயிர் வாழ மாட்டா”

“அப்படியா?, செத்தா சாகட்டும் தம்பி! பெத்த அம்மாவை, வளர்த்தத் தகப்பனை மறந்து.. உன் ஒருத்தனுக்காக அது சாகும்ன்னா.. செத்துத் தொலையட்டும்”

“அப்பா....” – கோபமாய் இடையிட்டாள் கவி.

“லட்சுமி, உன் மவளை கூட்டிட்டு உள்ள போ!” – அடக்கப்பட்டக் கோபத்துடன் அடிக்குரலில் உறுமினார் அவர்.

தன் கையைப் பற்றிய அன்னையைக் கண்டு கொள்ளாது.. அவர் முன்னே சென்று நின்றாள் கவி.

“உங்க கோபம்,காட்டாத்து வேகத்தையெல்லாம் நீங்கக் காட்ட வேண்டியது என் கிட்ட தான்! ஏன்னா.. காதலிக்கிறதா சொல்லி அவரை சுத்தி,சுத்தி வந்தது நான்! உன் அம்மா,அப்பா,என் அம்மா,அப்பா, நீ பணக்காரி,நான் ஏழை, நீ இட்லி தின்ப, நான் பழைய சோறு தின்பேன்னு ஏகப்பட்டக் காரணம் சொல்லி என் விருப்பத்துக்குத் தலையாட்டாம அவர் ஒதுங்கியே தான் இருந்தாரு. நான் தான் நீங்க என்னைக் காதலிக்காட்டித் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டி... புயல் வரப் போறதைக் கூட அலட்சியம் பண்ணி அவரை நடுக்கடலுக்கு வர வைச்சேன்”

-கொஞ்சமும் பயமின்றி அசால்ட்டாக பேசிக் கொண்டு வந்தவள் தன் கடைசி வாக்கியத்தை முடிப்பதற்குள் அவளை ஓங்கி அறைந்த செழியன்.. விழிகள் சிவக்க ரௌத்ரமாய் நிற்க.. அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்துப் பதறி எழுந்த இளவரசன், அதிர்ந்து விழப் போனவளைத் தாங்கிப் பிடித்து நிறுத்தினான்.

“உங்களுக்கு அவளை அடிக்கனும்ன்னா தனியா கூட்டிட்டுப் போய் வைச்சு அடிங்க. என் முன்னாடி வேணாம்.... என்னால கைக் கட்டி வேடிக்கை பார்த்துட்டு சும்மா நிற்க முடியாது” – உணர்ச்சியற்றப் பார்வையுடன் அழுத்தமாய்க் கூறியவனைக் கண்டு வாயடைத்துப் போனார் செழியன்.

“அவ சொல்றதெல்லாம் நான் செத்துப் பிழைக்கிறதுக்கு முன்னாடி இருந்த நிலைமை! ஆசை,பாசம்,காதல்,நேசம்ன்னு அத்தனையையும் மனசுக்குள்ளப் பூட்டி வைச்சுக்கிட்டு.. எப்போ அந்த எண்ணமெல்லாம் பூட்டை உடைச்சுக்கிட்டு வெளிய வருமோன்னு பயந்து சுத்துன நாட்கள்ல.. அவளை விலக்கி நிறுத்த நான் சொன்னது!, ஆனா இப்போ அப்டி இல்ல... எனக்கு அவ வேணும். வாழ்நாள் முழுசுக்கும்!, என் அம்மா,அப்பா,தம்பியோடு சேர்ந்து.. என்னோட குடும்பமா.. என் கூட வேணும்..”

ஒற்றை மகளென ஆசையாய் வளர்த்தத் தந்தை.. விளையாட்டுக்குக் கூடக் கை ஓங்கியிராதத் தந்தைத் தன்னை அடித்து விட்டதில் திகைத்து.. பின் கோபம் கொண்டு.. அவரது கைத்தடத்தால் சிவந்து போயிருந்தக் கன்னங்களுடன் செழியனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இளங்கவி ஒரு புறம்...

நீ என்னைக் கொன்று வீசினாலும் பரவாயில்லை!, எனக்குக் கொஞ்சமும் பயமில்லை எனக் கூறி நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டு அவரையே மிரட்டல் பார்வையுடன் பார்க்கும் இளவரசன் ஒரு புறம்..

இருவரையும் கண்டு அடங்காத ஆத்திரத்துடன் தலையைக் கோதிக் கொண்ட செழியன்.. மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார்.

அடுத்த சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய.. அந்தப் பேரமைதியுடன் போட்டி போட்டுக் கொண்டு அரசனின் அமைதியான குரல் அறையை நிறைத்தது.

“எப்போவாவது செத்துப் போக முயற்சி செஞ்சிருக்கீங்களா?” – தன்னை நோக்கிக் கேள்வி கேட்டவனை நிமிர்ந்து நோக்கினார் செழியன்.

“குறைஞ்சபட்சம் சாவு எப்படியிருக்கும்ன்னு கற்பனையாவது பண்ணியிருக்கீங்களா?” – அரசன்.

“..............”

“மாட்டீங்க! ஏன்னா.. நமக்கெல்லாம் சாவே வராதுன்னு தான் நாம எல்லாரும் நம்பி வாழ்ந்திட்டிருக்கோம்! இறப்பு எந்த நொடியிலும் வரலாம்ன்ற பயமிருந்தா.. வாழ்ற நொடிய அனுபவிச்சு வாழனும்ன்ற எண்ணம் தன்னால வந்துடுமே”

“.............”

“அடுத்த நொடி சாகப் போறேன்றது நிச்சயமாத் தெரிஞ்சதும்.. நான் அவளை விலக்கி நிறுத்தச் சொன்னக் காரணங்கள் எதுவும் என் கண்ணு முன்னால வரல! என்னைப் பெத்த அம்மா, அப்பா, என் தம்பி.. அத்தனை பேரையும் தாண்டி அவ மட்டுமே நெஞ்சு முழுக்க நின்னா! ஏதோ ஒரு வகைல என்னைப் பெத்தவங்களுக்கு நான் நல்ல மகனாவும், என் தம்பிக்கு நல்ல அண்ணனாவும் நடந்துக்கிட்டேன்ற திருப்தி என் மனசுல இருந்தது. அதான் இவங்களை நினைக்கத் தோணல.. ஆனா.. கவி... பணக்காரப் பையன் வேணும், படோபகரமா வாழனும்ன்ற ஆசையில்லாம.. என்னை,எனக்காகவே நேசிச்சவளுக்கு.. நான் குறைஞ்சபட்ச அன்பைக் கூடக் காட்டலன்ற குற்ற உணர்ச்சி அந்தக் கடைசி நிமிஷத்துலயும் என்னை வேதனைப்படுத்துச்சு! இப்போ.. செத்துப் பிழைச்சு.. மறுபடி உயிரோட வந்தும் கூட.. என் மனசை மறைச்சு.. உங்க எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து.. அவளை ஒதுக்கி வைச்சு.. ஒரு வாழ்க்கை வாழ முடியும்ன்னு எனக்குத் தோணல. என் காதலை அவளுக்கு வெளிப்படுத்தக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிற ரெண்டாவது வாய்ப்பு இது.. நான் நிச்சயம் யாருக்காகவும்.. எதுக்காகவும்.. அவளை விட்டு ஒதுங்கிப் போக மாட்டேன்..”

“...............”

“உங்க பொண்ணுக்கு நான் தகுதியில்லாதவன்னு தோணுதா உங்களுக்கு?, பணம்,காசுன்ற விசயம் தான் உங்களுக்குப் பெரிய குறையாத் தெரியுதா?, அப்டின்னா எனக்கு வாய்ப்புக் கொடுங்க! கவி என் கிட்ட அடிக்கடி சொல்லும், இந்தக் காசு,பணமெல்லாம் ஒரு தலைமுறைல வந்த முன்னேற்றம் தான்னு!, நீங்க வாழ்க்கையைத் தொடங்குன முதல் 10 வருஷத்துல பொருளாதார ரீதியா என்ன முன்னேற்றத்தைக் கண்டீங்களோ.. அதே முன்னேற்றத்தை அடுத்த 10 வருஷத்துல நானும் காட்டுறேன்!”

“.................”

“இல்ல, என் கிட்டக் கை நீட்டிக் காசு வாங்கிப் பொழப்பு நடத்துற சாதாரண செந்தாமரை மகனுக்கு என் மவளைக் கொடுக்கிறதான்ற ஈகோ தான் உங்களுக்கு நிறைய இருக்கு அப்டின்னா.. அதைத் திரி போட்டுத் தூண்டி விட நான் விரும்பல. அமைதியா ஒதுங்கிக்கிறேன். ஆனா.. உங்க மக, கடைசி வரையும் உங்க மகளா மட்டுமே தான் இருப்பாளே ஒழிய.. என்னை மறந்துட்டு உங்க பேச்சைக் கேட்டு எவனுக்கும் வாக்கப்பட மாட்டா!”

-அவ்வளவு தான்! நான் பேசி முடித்து விட்டேன் என்பது போல் கையைக் கட்டிக் கொண்டு அமைதியாய் நின்றான் அவன்.

ராணியும்,செந்தாமரையும் மகன் பேசிய பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் செய்வதறியாது நிற்க.. லட்சுமிக்கோ ஏகக் குஷி. தன் கண் முன்னால்.. பொறுப்பும்,ஒழுக்கமுமாய் வளர்ந்த பையனே தனக்கு மருமகனாய் வரப் போகிறான் என்பதை நினைத்து! ஆனாலும் செழியனை நினைத்துப் பதறி.. தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தினார்.

அடுத்த சில நிமிடங்கள் அமைதியாய்க் கழிய.. தன் தோளிலிருந்தத் துண்டை உதறியபடி எழுந்து நின்ற செழியன்.. “உன் மவனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ-ம்மா” என்றார் ராணியிடம்.

அசையாது நின்ற கவியையும்,அரசனையும் ஒரு பார்வை பார்த்து விட்டுப் பெரும் தயக்கத்துடன் தன் முதலாளியின் அருகே சென்ற செந்தாமரை அவர் கையைப் பற்றிக் கொண்டு.. “அவன் தெரியாம பேசிப்புட்டான் ஐயா!, நீங்க... நீங்க.. எதையும் மனசுல வைச்சுக்காதீங்க! தகுதிக்கு மீறி ஆசைப்பட என் புள்ளைங்களுக்கு நான் கத்துக் கொடுக்கவேயில்ல! ஆனா... எங்க தப்பு நடந்துச்சுன்னு தெரியல!, நான்.. நான் அவனுக்குப் புத்தி சொல்றேன்ய்யா” எனக் கூற..

“நீ.... அவனுக்குப் புத்தி சொல்லப் போறியா?” – என நக்கலாய்க் கேட்ட செழியன் ‘போ,போ’ என்பது போல் கையை ஆட்டி விட்டு விறுவிறுவென வீட்டுக்குள் மறைந்தார்.

“தம்பி... வாய்யா போகலாம்.. தம்பி...” – மெதுவாய் அவன் கையைப் பற்றிய ராணியின் கையை விலக்கி விட்டு “அத்தை” என்று லட்சுமியை அழைத்தான் இளவரசன்.

“கன்னம் வீங்குறதுக்கு முன்னாடி, அவளுக்கு ஏதாவது மருந்து போடுங்க” – எனக் கூறி விட்டு விறுவிறுவென வெளியே சென்று விட்டான்.

ழுக்கம் தவறாத ஆண் மகனாக,தந்தை தாய்க்குப் பொறுப்புள்ள மகனாக வலம் வந்தவன், இன்று ஏதோ செய்யக் கூடாதப் பெரும் தவறைப் புரிந்து விட்டதாகக் கருதி.. குற்றம் சாட்டும் பார்வையுடன் தன்னைத் தொடரும் அன்னை,தந்தையின் விழிகளை அவன் உணர்ந்தே இருந்தான்.

ஆனால் ஏனோ.. பெரிதாக அலட்டிக் கொள்ளத் தோன்றவில்லை. இத்தனை வருடங்களாக சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருந்த மனதின் உணர்வுகளை தன் உற்றோரிடம் கொட்டி விட்ட நிறைவு அவனுக்கு! கொஞ்சமும் உறுத்தல் இல்லை! சொல்லப் போனால் நிம்மதி தான்! இனி அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி! அதைப் பற்றி அவனுக்குச் சிறிதும் கவலையில்லை!

அவர்களைப் பொறுத்தவரை காதல் என்பது சிவப்பு நிற இண்ட் மார்க் இடப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தகாத உணர்வு!

இவர்களுக்குப் புரிய வைத்து திருப்தி படுத்த அவன் முனைந்தானானால் பாதித் தலை முடி கொட்டிப் போய் சொட்டையாகத் தான் வலம் வருவான்!

மூளைக்கும்,மனதுக்கும் இடையே ஏற்பட்டப் போரில் வெகுவாகப் போராடி ஒரு வழியாக வென்று.. உள்ளத்து ஆசைகளை வெளிப்படையாகத் தன்னவளிடமும், தன்னைச் சேர்ந்தவர்களிடமும் தைரியமாய் ஒப்புக் கொண்டிருக்கிறான்!

மீண்டும் இவர்களுடன் ஒரு போரா? நிச்சயமாகத் தெம்பில்லை! மனம் இன்று உணர்ந்து கொண்டிருக்கும் இந்த நிச்சலனத்தை அவன் சிறிது காலமேனும் அனுபவிக்க வேண்டும்!

அதனாலேயோ என்னவோ “ஏன்ய்யா இப்டிப் பண்ண?” என்று கண்ணைக் கசக்கும் அன்னையையும், அவனிருக்கும் திசைப் பக்கம் கூட எட்டிப் பார்க்காதத் தந்தையையும் அவன் கண்டு கொள்ளவேயில்லை!

நிம்மதியாய் உறங்கி எழுந்து.. உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாது.. மறுநாளே கடற்கரைக்குப் புறப்பட்டு விட்டான். அவனுக்கு அவர்களிருவரும் விட்டுச் சென்றப் படகுகள் என்னவானதென்றுத் தெரிய வேண்டும்!

அவன் சென்ற வேளை.. அடித்துச் சென்றப் படகுகளை மீட்க கடலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தக் கூட்டத்தோடுத் தானும் சேர்ந்து கொண்டான்.

அவனைக் காண வேண்டி வீடு தேடி வந்தக் கேசவனும் அவனோடு இருக்க.. “இப்போ தான் தப்பிப் பிழைச்சு வந்திருக்க, மறுபடி கடலுக்குள்ள இறங்கனுமா?” எனக் கேள்வி கேட்டவர்களை அவன் கண்டு கொள்ளவில்லை!

கடலலைகளின் சிறப்பே.. தன் மீது கட்டையாய் மிதப்பவர்களை அலையோடு அலையாக அள்ளிக் கொண்டு வந்துக் கரை சேர்த்து விடுவது தான்! முடிந்த வரை எதிர்த்துப் போராடி.. ஒரு கட்டத்தில் மயங்கிப் போன இருவரும்.. தன்னாலேயே நீச்சலடிப்பதை நிறுத்தி விட்டு மிதக்கத் தொடங்கியிருந்தனர். நீண்ட நெடும் பயணமாக புயல் காற்றோடு கூடிய உப்பு நீரில் ஊறி.. சுயநினைவின்றிக் கரையில் கிடந்தவர்களை.. புயல் ஓய்ந்த சில மணி நேரங்களிலேயே செழியனின் ஆட்கள்.. உயிருடன் மீட்டெடுத்தது அதிசயமோ.. ஆச்சரியமோ.. விதியோ.. தெரியவில்லை!

செழியனின் படகுளை மீட்டு.. ஏற்பட்ட சேதாரங்களுக்கு வழி செய்து விட்டு.. ஃபேக்டரிக்குச் சென்று வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தான்.

ஒரு மாதிரி அவனை நோக்கினாலும் செழியனோ,செந்தாமரையோ அவனுடன் உரையாட முயலவில்லை.

இளங்கவியை அன்று கண்டதோடு சரி, அதன் பிறகு அவளைக் காண அவன் முயலவில்லை! அவளும்! நாட்கள் மாதங்களாகி உருண்டோடின.

இந்நிலையில் ஒரு நாள் ஃபேக்டரியிலிருந்தவனிடம் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் செழியன்.

மடியில் கனமில்லை! அதனால் மனதில் பயமில்லை ரீதியில்.. எந்தவிதத் தயக்கமுமின்றி... எதிர்பார்ப்புமின்றி அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான் இளவரசன்.

“உட்காருங்க தம்பி”

அவனைக் கண்டதும் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டது எதிரிலிருந்த இருக்கையைக் கைக் காட்டியவரிடம்..

“பரவாயில்ல. நான் நிற்கிறேன்” என்றான்.

அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் சில நிமிடங்களைக் கடத்தியவர் பின் பெருமூச்சுடன் நிமிர்ந்து...

“இப்போ நான் என்ன தம்பி செய்யனும்?” – என்றார்.

கைகளிரெண்டையும் பின்னே கட்டிக் கொண்டு அதுவரைத் தரையை வெறித்துக் கொண்டிருந்தவன் சட்டென நிமிர்ந்து ஆச்சரியத்துடன் அவரை நோக்கினான்.

பதிலற்றுத் தன்னைப் பார்ப்பவனிடம்..

“என் மக விசயத்துல நான் என்ன தம்பி செய்யனும்?” என்றார் மீண்டும்.

மார்பின் குறுக்காகக் கையைக் கட்டிக் கொண்டு மீண்டும் தரையை வெறித்தவன்..

“நீங்க என்ன பண்ணனும்ன்னு சொல்ற அளவுக்கு, எனக்கு வயசோ,அனுபவமோ கிடையாதுங்க பெரியவரே! ஆனா.. நான் என்ன பண்ணனும்ன்றதுல எனக்குத் தெளிவு இருக்கு”

“.................”

“ரெண்டு மாசத்துல பரீட்சை வருது. இதோட என் பட்டப்படிப்பு முடியுது. ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி சட்டம் படிக்கப் போறேன். படிப்பு,ப்ராக்டிஸ்ன்னு 3,4 வருஷம் ஓடிடும்”

“அதுவரைக்கும் என் மக?”

“காத்திட்டிருப்பா.. எனக்காக..”

எரிச்சலுடன் மூக்கு விடைக்க எங்கோ நோக்கியவரைக் கண்டுச் சிரிப்பு வந்தது அவனுக்கு.

“சினிமால வர்ற மாதிரி பையனுக்கும்,பொண்ணுக்கும் இடைல தப்பு நடந்துடுமோன்னு தேவையில்லாம பயப்பட்றதைத் தயவு செஞ்சு விடுங்க!, உங்க காலத்துல.. இந்த வயசுல.. உங்களுக்கு இல்லாத தெளிவும்,புரிதலும் எங்க தலைமுறைக்கு இருக்கு”

“..............”

“அப்படி என்ன தெளிவுன்றீங்களா?, வெறும் காதலை மட்டும் நெஞ்சுல சுமந்துக்கிட்டு கனவு கண்டு சுத்துனா.. காக்கா,குருவி கூட மதிக்காதுன்ற புரிதல் இருக்கு! மூணு வேளை சோறு திங்குறதுக்குப் படிப்பும்,வேலையும் கைல இல்லாட்டிக் காதல்,கீதல் எல்லாம் காத்தோட போய்டும்ன்ற தெளிவு இருக்கு.”

“.................”

“அதனால.. காதலிக்குறோம்ன்னு நாங்கக் கண்ணைக் கசக்கிட்டு வந்து நின்னதும், உடனே கல்யாணம் பண்ணி வைச்சு ஒதுக்கி விடுறதும்.. எங்களைத் துண்டு,துண்டா வெட்டிப் போட்டுக் கொலை பண்றதும் ஒன்னு தான்”

“.................”

“உண்மையைச் சொல்லப் போனா.. நாங்க ரெண்டு பேரும் இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கல!, ஆமா.. நீ என் மனசுல இருக்கன்னு அவ கிட்ட ஒத்துக்கிட்டப்புறம், இன்னிக்கு வரைக்கும் அவளை நான் சந்திக்கக் கூட முயற்சி பண்ணல”

“....................”

“நீங்க என்னை நம்பனும்ன்னு அவசியமில்ல. ஆனா.. உங்க பொண்ணை நம்புங்க”

“நம்புனதுக்குத் தான்... நாங்கல்லாம் தேவையில்லன்னு முடிவு பண்ணி.. உன்னை மட்டும் பெருசா நினைச்சு.. செத்துப் போற அளவுக்குத் துணிஞ்சுட்டாளே தம்பி” – வேதனையுடன் கூறியவரை அவசரமாய்த் தடுத்து..

“அவ துடுக்குத்தனத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?, என்னை மிரட்டத் தான் அன்னிக்கு அவ கடலுக்குப் போனா. மத்தபடி, அப்டி ஒரு சூழ்நிலைல சிக்குவோம்ன்னு அவளுக்கேத் தெரியாது”

“ஆனாலும்.. மனசு ஆறல தம்பி”

“எங்க தலைமுறை பழமைக்குப் பழக்கப்பட்டது!, எங்களையெல்லாம் மாத்த முயற்சிக்காத-ன்னு நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க! ஆனாலும்.. சொல்றேன்.. காதல்.. கெட்ட வார்த்தை இல்ல! ஆணும்,பெண்ணும் ஈர்க்கப்பட்றது அடிப்படை விதி. ஜாதி,மதம்,ஏழை,பணக்காரன்னு வித்தியாசம் பார்த்து.. இந்த அடிப்படையை அழிக்க நினைக்கிறது முழு முட்டாள்தனம்! நடக்காத காரியமும் கூட! காதலிக்கிறவங்களைக் கொன்னு போட்டாலும் சரி, தெரிஞ்சே பிரிச்சு விட்டாலும் சரி! உலகத்துல எவனும் காதலிக்காம இருக்கப் போறதில்ல”

“............”

வெறித்த பார்வையுடன் அமைதியாய் அமர்ந்திருந்தவரிடம்..

“நான் வயசுக்கு மீறி அதிகமா பேசியிருந்தா.. என்னை மன்னிச்சுடுங்க. கவிக்கு படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷமிருக்கு. படிச்சு முடிச்சுட்டு என்ன செய்ய விரும்புதுன்னு அதுகிட்டக் கேளுங்க. மேற்படிப்பு படிக்கவும்,வேலைக்குப் போகவும் எங்கரேஜ் பண்ணுங்க! எங்க தலைமுறையோட வளர்ச்சிக்கும்,மாற்றத்துக்கும் முட்டுக்கட்டையா இருக்க மாட்டேன்னு வாக்குக் கொடுத்திருக்கீங்க.. அதை மீற மாட்டீங்கன்னு நம்புறேன்” – என்றான்.

என்ன கூறுவதென்று தெரியவில்லை அவருக்கு! தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் வாக்கியத்தை நிரப்பி.. அழகாய் பேசித் தொலைப்பவனை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை! ஆனாலும்.. தனக்கும் சேர்த்து யோசிப்பவனைக் கண்டு எரிச்சல் வந்தது.

ஆசையாய்ப் பெற்று வளர்த்த மகளுக்குத் தன்னை விட இவன் பெரிதாகத் தெரிகிறானா என்கிற ஈகோ வேறு ஒருபுறம் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும்.. உள்ளே ஒரு குரல் இவன விட எந்த நல்ல மாப்பிள்ளை உன் மவளுக்குக் கிடைச்சுடப் போறான் என்று வேறு நொடித்துக் கொண்டது.

இப்போதே எதையும் முடிவு செய்யப் பிடிக்கவில்லை அவருக்கு. ஆனால் நிச்சயம் இவனை.. இவன் செயல்களை கண்காணிப்பார்! பேச்சிலிருக்கும் தெளிவு செயலிலும் இருக்கிறதாவென்று அறிந்து கொள்ள முயற்சிப்பார்..

அவர் பேச்சற்று அமர்ந்திருப்பதைக் கண்டு..

“நான் கிளம்பட்டும்ங்களா?” என்று வினவினான்.

சரியெனத் தலையாட்டியவரிடம் பதிலுக்குத் தலையாட்டி விட்டு இரண்டடி நடந்தவன்.. பின் நின்று...

“வாழ்க்கைத் துணை-ன்றதுக்கான விளக்கத்தை எங்கம்மா-அப்பாக் கிட்டயிருந்து நானும், லட்சுமி அத்தை-உங்ககிட்டயிருந்து கவியும் பார்த்துத் தான் வளர்ந்திருக்கோம். அதனால.. நிச்சயம்.. நாங்களும் உங்களை மாதிரி தான் இருப்போம்” – எனக் கூறி விட்டு சிறு தலையசைப்புடன் சென்று விட்டான்.

அதன் பின்பு கல்லூரிப் படிப்பை முடித்ததும் மதுரை சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்தது அவனுக்கு.

இடைப்பட்ட நாட்களில் இருவரும் பெரிதாகப் பார்க்கவோ,பேசிக் கொள்ளவோ முயலவில்லை. கல்லூரியிலும்,தெருவிலும் கடந்து செல்கையில்.. பார்த்துக் கொள்வதோடு சரி.

தன்னைக் கண்டாலே ஒதுங்கிச் செல்பவன்.. நெஞ்சு முழுக்க நேசமிருந்தாலும்.. நேர் பார்வையால்.. விழி நோக்கத் தயங்கி.. எப்போதும் ஒரு படி விலகியே நிற்பவன்.. இன்று மொத்தமாய் உருமாறிப் போய்..

இழந்த நிமிடங்கள் ஒவ்வொன்றையும்.. அப்போதே ஈடுகட்டி விடும் நோக்கத்துடன்.. கண்ணாலே அவள் கரம் பற்றி.. பார்வையாலே பாசம் காட்டி.. நெஞ்சின் நேசம் அத்தனையையும் ஒரே மூச்சில் கொட்டி.. அவள் அவனைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் விழியாலே கவிதை எழுதியவனிடம்.. ஆயிரம்,லட்சம்,கோடி முறை மீண்டும்,மீண்டும் காதலில் விழுந்தாள் அவள்.

அந்தப் பார்வை பேசும் பாஷைக்கான அர்த்தத்தையே இன்னமும் அவள் தன் மன அகராதியில் தேடிக் கொண்டிருக்கையில்.. எங்கே வாய் திறந்து பேசிக் கொள்வது?, விழி தந்த போதையே போதுமென இருவரும்.. ஒவ்வொரு நாளையும் மயக்கத்திலேயே கழித்தனர். அதைத் தாண்டி முன்னேறிச் செல்ல.. ஏனோ தோன்றவில்லை. இந்நிலையில் கவி தன் பட்டப்படிப்பில் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

ன்று மாலை கல்லூரியிலிருந்துத் திரும்பி வந்த கவி, முற்றத்தில் அமர்ந்திருந்த ராணியைக் கண்டு..

“என்ன அயித்த?, சேலைக் கட்டெல்லாம் பலமா இருக்கு?, எங்கக் கிளம்பிட்ட?” என்று விசாரித்தபடியேத் தன் வீட்டினுள் நுழைந்தாள்.

“சும்மாவா?, வக்கீலைப் பெத்த அம்மா.. இன்னும் மீன்காரித் தோற்றத்துலயே இருக்க முடியுமா?” – என்று லட்சுமி கேலி செய்ய.. “சும்மா இருங்க மதினி” என்ற ராணி “வா ஆத்தா.. இந்தா.. கேசரி எடுத்துக்க” எனக் கூறி அவளிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினார்.

“என்ன?, இனிப்பெல்லாம் பண்ணியிருக்க?, என்ன விசேஷம்?” – என்றவளைக் கண்டு இருவரும் ஒரு முறை பார்வை பரிமாறிக் கொண்டனர்.

“என்ன ரெண்டு பேரும் லுக்கு விட்டுக்குறீங்க?”

“உனக்கு சேதி தெரியாதா ஆத்தா?” – பம்மிய குரலில் ராணி.

“என்ன?”

“நம்ம அரசு-க்கு மதுரை சட்டக் கல்லூரில இடம் கிடைச்சிருக்கு. அவன் நினைச்ச மாதிரி வக்கீலுக்குப் படிக்கப் போறான்ம்மா” – என்று அவர் சிரித்தபடி கூறியதும்.. ஒரு நொடி விழி மலர மகிழ்ச்சியடைந்தவள்.. அடுத்த நொடி..

“ஏன், இதை உன் மவன் என் கிட்ட நேர்ல சொல்ல மாட்டாராமா?” – என்று சீறினாள்.

மறுபடி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள..

“என்ன?, சும்மா சும்மா லுக்கு விட்டுக்கிறீங்க?, என்னைக் காதலிக்கிறதா உன் மவன் அன்னிக்கு சொன்னது உங்க எல்லார் காதுலயும் நல்லா விழுந்துச்சு தான?” என்று கத்தியதும்..

“கவி....” என்று அதட்டினார் லட்சுமி.

“என்ன? ம்? எதுக்குக் கத்துற? எங்கப்பாரு உன் கிட்ட சொல்லாம ஏதாவது காரியம் பண்ணினா.. நீ பார்த்துட்டு அமைதியா இருப்பியா?, சண்டைக்குப் போ மாட்ட?, அந்த மாதிரி தான் இதுவும்”

“அவன் ஆசைப்பட்ட மாதிரி படிக்கப் போறான்! வாழ்த்து சொல்றதை விட்டுட்டு வம்புக்கு நிக்குற?, நீயெல்லாம் என்னைக்குடி திருந்துவ?”

“சரி, நீங்க எல்லாரும் வாழ்த்து சொல்லி, அவர் வாய்ல இந்தக் கேசரியை வைங்க, என்னை விட்ருங்க” – என்றுக் கத்தி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டாள்.

இப்படி வெளிப்படையாக அவள் இவர்களிருவரின் முன்பும் தங்களது காதலைப் பற்றிப் பேசுவது இதுவே முதன் முறை. சங்கடமாய் அமர்ந்திருந்த ராணியிடம் வேறு பேசி சமாளித்து அனுப்பி வைத்தார் லட்சுமி.

நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் ராணி, மகனிடம் ஒப்பித்தத்தின் விளைவு.. மறுநாள் மாலை அவள் கம்ப்யூட்டர் வகுப்பிலிருந்து வீடு திரும்புகையில்.. சென்டர் வாசல் முன்பு அவளுக்காகக் காத்திருந்தான் அவன்.

பிடரி முடியைக் கோதியபடி.. இடப்புறம் திரும்பியிருந்தத் தலையுடன்.. எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை.. மாடிப் படியிலிருந்து இறங்கி வருகையிலேயே பார்த்து விட்டாள் கவி.

ஏன் இங்க நிற்கிறான்?, என்னைப் பார்க்கவா? யோசித்தபடியே வெளியே வந்தவளை.. அவனும் பார்த்து விட.. அவளை நோக்கி.. அவளருகே நடந்து வந்தான் அவன்.

கிட்டத்தட்டப் பல மாதங்களாகியிருந்தது இருவரும் ஒருவருக்கொருவரிடமும் பேசி! பேசத் தான் வருகிறானோ என்ற நினைப்பே படபடக்கச் செய்ய.. கையிலிருந்த நோட்டை இறுகப் பற்றியபடி அவனைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றாள் அவள்.

புன்னகை மாறாமல் அவள் பின்னே நடந்து வந்தவனுக்கு.. அவளது கோபம் சிரிப்பைத் தந்தது.

பஸ் ஸ்டாப்பில் அவளருகே.. அவளையே பார்த்தபடியே நின்றவனைக் கண்டு எரிச்சலுற்று.. அவன் புறம் நேராகத் திரும்பி..

“என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள்.

“பேசனும்...” – அதே புன்னகையுடன் பதில் கூறினான் அவன்.

“யார் கூட?”

“உன் கூடத் தான்”

“ஓஓ... நான் யாரு உங்களுக்கு?, என் கூட என்ன பேசனும்?” – எரிச்சல் மாறாத குரலுடன் வினவியவளைக் கண்டு.. பிடரியைக் கோதியவன்.. “கொஞ்சம் கஷ்டம் தான் போல” என்று முணுமுணுத்தான்.

அதற்குள் பஸ் வந்து விட.. அவனைக் கண்டு கொள்ளாமல் பஸ் ஏறியவளைத் தொடர்ந்துத் தானும் ஏறியவன்.. தைரியமாய்.. அவள் அமர்ந்திருந்த இருக்கையில்.. அவளருகே சென்றுத் தானும் அமர்ந்து கொண்டான்.

ஒரு நொடி ஆச்சரியமாய் அவனை நோக்கினாலும்.. மறுநொடி தோளைக் குலுக்கியபடி ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள் அவள்.

கண்டக்டரிடம் கடற்கரைக்குச் செல்ல டிக்கெட் வாங்கியவனை மீண்டும் எரிச்சலுடன் நோக்கி..

“நான் வீட்டுக்குப் போகனும்” என்றாள்.

“நானும் தான்! பேசி முடிச்சப்புறம் ரெண்டு பேருமே போகலாம்” – என்றவன் அவள் பல்லைக் கடிப்பதைப் பொருட்படுத்தாமல்.. ஸ்டாப் வந்ததும் எழுந்து கொண்டான்.

மஞ்சள் வெயில் மறையத் துவங்கியிருந்த மாலை நேரத்தில்.. கடற்கரையோரமாய் தன் கவியோடு கவிதை பேசத் தயாராய் வந்திருந்தான் அவன்.

அவன் முகம் பாராமல் மணலை வெறித்தபடிக் கையிலிருந்த நோட்டை இறுகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தவளை.. சிரிப்பும்,காதலுமாய் நோக்கியவன்.. அவள் கையிலிருந்த நோட்டைப் பட்டெனப் பறித்து திறந்து பார்த்து.. இளங்கவி, செகண்ட் இயர், பி.எஸ்.சி மேத்ஸ் என்றிருந்த அவள் கையெழுத்தை ஒரு விரலால் வருடிப் பின்.. நிமிர்ந்து அவளை நோக்கினான்.

“ஓய்...”

“...........”

அப்போதும் தரையைப் பார்த்தபடி அமைதியாய் நின்றவளின் தலையில்.. கையிலிருந்த நோட்டை வைத்து லேசாக அடித்து..

“பேச மாட்டியா?” – என்றான்.

“உங்களுக்கு இந்தக் கேள்வியைக் கேட்க 6 மாசம் ஆச்சா?”

அவளது கேள்வியைக் கண்டு கொள்ளாமல் “எனக்கு மதுரை லா காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு” என்றான்.

“வாழ்த்துக்கள்” – கோபத்துடனே கூறினாள் அவள்.

“அவ்ளோ தானா?”

“வேற என்ன சொல்லனும்?”

“3 வருஷம் வெளியூர்ல படிக்கப் போறேன். உன்னைப் பார்க்க முடியாது. அதைப் பத்தின கவலையெதுவும் இல்லையா?”

“ப்ச்,ஏன் தீபாவளி,பொங்கல்,அமாவாசை,பௌர்ணமிக்கெல்லாம் வீட்டுக்கு வர மாட்டீங்களா?, இங்க இருக்குற மதுரைக்குத் தான படிக்கப் போறீங்க! என்னவோ பெருசா ஆப்பிரிக்காவுக்குப் போற மாதிரி..” என்று பேசிக் கொண்டே சென்றவள்.. அவன் சலனமின்றி நோக்குவதைக் கண்டு ஒரு நிமிடம்.. நின்று அவன் முகம் பார்த்து.. அந்தப் பார்வையின் அர்த்தத்தைக் கண்டு கொண்டு.. இன்ஸ்டண்டாக உற்பத்தியானக் கண்ணீரை அடக்க முயன்றுத் தோற்று...

“இ..இ..இதெல்லாம் முட்டாள்தனம்?, 3 வருஷம் என்னைப் பார்க்காம இருக்கப் போறீங்களா?, மறுபடி ஓடி ஓளியப் போறீங்களா?, யாருக்காக இப்டிப் பண்றீங்க?, இதுக்கு அன்னிக்கே செத்துப் போயிருக்கலாமே! எதுக்கு உயிர் பிழைச்சு வரனும்?, மறுபடி.. மறுபடி.. நீங்க என்னைக் காயப்படுத்துறீங்க” – என்று படபடவெனப் பொறிய.. அவள் கரத்தைத் தன் ஐவிரல்களால் இறுகப் பற்றி ஆசுவாசப்படுத்த முயன்றான் அவன்.

அவன் கையை உதற முயன்று தோற்று.. சட்டென மறுபுறம் திரும்பி நின்றவளுக்குக் கோபமும்,இயலாமையும் ஒருங்கே எழுந்தது.

“உங்கப்பா என் கிட்டப் பேசுனாரு”

விம்மலும்,கண்ணீருமாய் திரும்பி அவனை நோக்கினாள் அவள்.

“கண்ணைத் துடை”

“ப்ச், எங்கப்பா என்ன பேசுனாருன்னு சொல்லுங்க முதல்ல”

“நீ அழுகுறதை நிறுத்து. நான் சொல்றேன்”

அவன் மிரட்டியதும் கடகடவெனக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளிடம்..

“யோசிக்காம இப்டில்லாம் பட்,பட்டுன்னு அழாத. பார்க்க எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்றான்.

“யாரால அழறேன்?”

“என்னால தான்! அதான் கஷ்டமா இருக்கு”

“அப்டி எதுக்கு அழ விடனும்?”

“கவி.. எல்லா நேரமும் நம்மைப் பத்தி மட்டுமே யோசிக்க முடியாது. நம்ம உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகி நிக்குற நம்ம பெத்தவங்களைப் பத்தி யோசிக்க வேணாமா?”

“எங்கப்பா உங்களை மிரட்டுனாரா?”

“அவர் அப்டிப்பட்ட ஆளா?”

“அடேங்கப்பா!, விசயம் தெரிஞ்சா வெட்டித் தூக்கிப் போட்டுடுவார்ன்னு நம்பிட்டிருந்த மனுஷன் பேசுற பேச்சா இது?”

“அவர் நான் நினைச்ச மாதிரி இல்ல. ஒத்துக்கிறேன். உன் அப்பா ரொம்ப நல்லவர் தான்”

“ப்ச், அவர் என்ன சொன்னார்ன்னு சொல்லுங்க. பக்,பக்ன்னு இருக்கு எனக்கு”

“அவர் பெருசா எதுவும் சொல்லல. ஆனா.. நான் அவர் கிட்ட நிறைய சொன்னேன்”

“என்ன சொன்னீங்க?” – என்று கேட்டவளிடம் அன்று அவருடன் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.

“பொதுவா பெத்தவங்களுக்கு இருக்குற பயம் தான்! காதலிக்கிறோம்ன்னு சொல்லிட்டு நாம, அங்க,இங்க ஊர் சுத்திக்கிட்டு அவங்க மானத்தை வாங்குற மாதிரி நடந்துக்குவோமோன்னு”

“நாம என்ன அப்டியா நடந்துட்டிருக்கோம்?”

“இல்ல தான்! நாம அப்டி இல்லன்ற நம்பிக்கையை அவங்களுக்குக் கொடுக்க வேண்டியது நம்ம கடமை தான?”

“அதனால?”

“அடிக்கடி நான் ஊருக்கு வந்தா.. நாம ரெண்டு பேரும் பார்த்துக்குறோமோ.. பேசிக்கிறோமோ.. என்ன பண்றோமோன்ற பயம் ரெண்டு அம்மா-அப்பாவுக்குமே இருக்கும். அதான் ஒரேடியா படிப்பை முடிச்சப்புறம் பார்த்துக்கலாம்ன்னு...”

“நீங்க வராம இருந்தா.. நாம நல்ல லவர்ஸ்ன்னு இதுங்க சர்டிஃபிகேட் கொடுத்துரும்ங்களா?”

“லவர்ஸ்-ஆ?, நாமளா?” – சிரித்துக் கொண்டே கேட்டவனை முறைத்து..

“பேச்சை மாத்தாதீங்க” என்று மிரட்டினாள் அவள்.

“தெரியல எனக்கு. அவங்களுக்கு நம்ம மேல இருக்குற கோபம்,ஏமாற்றமெல்லாம் குறைய ஒரு வாய்ப்பு கொடுக்கிறது நல்லதுன்னு பட்டுச்சு. அதனால் தான் இப்டி முடிவு பண்ணுனேன்”

“என்னைக் கேட்கனும் நீங்க. உங்க இஷ்டத்துக்கு என்னன்னாலும் முடிவு பண்ணிப்பீங்களா?”

“சரி, நீ சொல்லு. என்ன பண்ணனும் நான் இப்போ?”

“..................”

“கவி......”

“நி...நிஜமாவே 3 வருஷம் என்னைப் பார்க்க மாட்டீங்களா?” – முட்டிக் கொண்டு நின்ற கண்ணீருடன் ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்தவளை.. அநியாயத்திற்குக் காதல் வழிய.. பதிலுக்கு நோக்கியவன்..

பற்றியிருந்த அவள் கையை ஒரே இழுப்பில் தன் புறம் இழுத்து அவளைத் தன்னருகே வரச் செய்தான்.

இடது கையைத் தூக்கி அவள் காதோரமாய்க் கரம் பதித்தவன்..

“இவ்ளோ பெரிய கண்ணிமையை வைச்சுக்கிட்டு.. இப்டிப் பார்த்தா.. நான் என்ன தான் பண்ணட்டும்?” என்று முணுமுணுத்தான்.

“என்னால பார்க்காம-லாம் இருக்க முடியாது” – தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் முகத்தை அண்ணாந்து நோக்கி மெல்லிய குரலில் கூறினாள் அவள்.

“என்னாலயும் தான்”

“அப்போ வருவீங்களா?”

“............” – பதில் கூறாமல்.. அவள் காதோரமிருந்தக் கரத்தை விலக்கிப் பின் தலையில் கைக் கொடுத்து.. அவள் முகத்தைத் தன் மார்பில் அழுத்திக் கொண்டான்.

“மனசுல இருக்கிறதை வெளிய சொல்லி.. அதை நிறைவேத்திக்கிறத் தைரியமில்லாம, தெளிவில்லாம சுத்திட்டிருந்தப் பழைய இளவரசன் இல்லடி நான்! இப்போ உன்னைக் கை பிடிக்க.. என்னன்னாலும் பண்ணுவேன்ற நிலைமைல இருக்கேன்!”

“..............”

“பெருசா வசனம் பேசியிருக்கேன் உங்கப்பாக் கிட்ட! உங்களை மாதிரி நல்லா வருவேன், நீங்க லட்சுமி அத்தையோட வாழ்ற மாதிரி நானும் கவியோட வாழ்வேன் அப்டி,இப்டின்னு! சும்மா உன் பின்னாடி, உன் துப்பட்டாவைப் பிடிச்சிட்டு சுத்திட்டிருந்தேன்னா.. உன் அப்பா.. என் மண்டையைப் பொளந்து.. மறுபடி கடல்ல தள்ளிட மாட்டாரா!”

“..............”

“இப்போ மட்டும், நான் உன்னைக் கட்டிப்பிடிச்சிட்டு நிற்கிறதை அவர் பார்த்தார்ன்னு வை! நேரா... பரலோகம் தான்”

“ப்ச், இவங்களையெல்லாம் மறந்துட்டு எப்போ தான் நீங்க என்னைப் பத்தி மட்டும் யோசிக்கப் போறீங்க?” – என்றபடியே அவனிடமிருந்து விலகி நின்றவளின் கரத்தை விடாது பற்றினான் அவன்.

“இனி அழ மாட்டேல?”

“அழுவேன். உங்க ஞாபகம் வரும் போதெல்லாம்”

“கவி.........”

“நீங்க என்னை நினைச்சுப்பீங்களா?”

“ஏய்ய்”

“ஹ்ம், என்னோட சேர்த்து.. கூடவே எங்கப்பாவையும் நினைச்சுப்பீங்க! அப்டித் தான?, நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா, அவரைக் காதலிக்கிறீங்களான்னே இப்போ-லாம் புரியவே மாட்டேங்குது எனக்கு”

“ஹாஹாஹாஹா”

“சிரிக்காதீங்க. கோபமா வருது” – புருவம் சுருக்கிச் சிணுங்கியவளைப் பார்வை மாற நோக்கியவன்..

“கவி...” – என்றான்.

“என்ன?”

“ஐ லவ் யூ....”

அதுவரை துப்பட்டாவின் நுனியைக் கசக்கியபடிக் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தவள்.. அவன் கூறியதைக் கேட்டுப் பார்வையைத் திருப்பி.. எங்கோ நோக்கி.. விழியில் ஊறத் தொடங்கியக் கண்ணீரை.. எச்சில் விழுங்கித் தொண்டைக்குள் அடக்கினாள்.

“என்னைப் பாரு...”

“.............”

“பப்ளிக் ப்ளேஸ்ல நிற்கிறோம். என்னால.. முத்தம் கொடுக்க முடியாது. என்னைத் தூண்டி விட முயற்சி பண்ணாத”

நிமிர்ந்து அவனை முறைத்து “அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க” என்று திட்டியபடியே முன்னே நடந்தவளிடம்..

“ஏன்?, கொடுக்கக் கூடாதா?, அன்னிக்கு மட்டும் ஒத்துக்கிட்ட?” – என்று வம்பு செய்தபடியே அவளுடன் இணைந்து நடந்தான் இளவரசன்.