அத்தியாயம் -1
தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்..
சொல்லாமல் கொள்ளாமல்.. அவளிடம் நான் சென்றேன்..
அது கூடாதென்றாள்! மனம் தாளாதென்றாள்!
ஒன்று நானே தந்தேன்! அது போதாதென்றாள்!
அனுபவம் புதுமை... அவளிடம் கண்டேன்!!
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையென்றதும், நம்மில் பலருக்கு உடனே நினைவு வருகிற பாடகர்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா தான்! ஆனால்.. என்னுடைய ரசனை அடுக்கில் முதல் வரிசையில் முக்காலி மீது அமர்ந்திருப்பவர் மிஸ்டர்.பி.பி.ஸ்ரீநிவாஸ்!!
அந்தக் குரலின் மென்மையை எதனோடு ஒப்பிட??! பிஞ்சுக் குழந்தை தரும் பட்டு இதழ் முத்தத்தைப் போன்றது அந்த வெல்வெட் குரல்! கன்னத்தை நனைக்கும் ஈரத்தைத் தாண்டி.. அதன் இதழ் தரும் மென்மையை உடலும்,மனமும் ஒரு சேர உணரும் அனுபவம்.. தனி சுகம்!
அடிக்குரல்ல பொன்னேன்பேன்,சிறு பூவென்பேன்னு பாடுனதாகட்டும், உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமான்னு நக்கல் பண்ணதாகட்டும், கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேன்னு காதல் செய்யும் போதும், என்னை நீ காயாதே, என்னுயிரும் நீயல்லவோன்னு முழு மலர்ச்சியோட அத்திக்காய்,காய்,காய்ன்னு வெளி வந்த குரல் ஆகட்டும்! பி.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை நமக்கான ரசனையென்பது நீண்டு கொண்டே தான் போகிறது!
நியாயமா பார்த்தா.. ‘ஒரு பொழுதேனும் உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்’-அப்டின்னு நெஞ்சம் மறப்பதில்லை பாட்டைத் தான் எழுதியிருக்கனும்! அந்தப் பாட்டுல அவர் வெளிப்படுத்திய உணர்வு.. மொழி தெரியாதவனைக் கூட அழ வைக்குற சக்தி கொண்டது! இல்லையா?
ஆரம்பம் அசத்தலா இருக்கட்டுமேன்னு அனுபவம் புதுமையை தேர்ந்தெடுத்தேன்! முதன் முதலாக காதலை உணர்ந்த இதயங்களின் இளமைக் குரல் அது! அந்த அவஸ்தையை அச்சு பிசகாம பாட்டா பாடி.. அவர் கொடுத்த இந்த அனுபவம்.. நமக்கும் புதுமை தான்!!
வாக்வே ஓவர் த ஹட்சன்.
பொகிப்சி, நியூயார்க்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முக்கிய மாநிலங்களான நியூயார்க் மற்றும் ஜெர்சி சிட்டியை இரண்டாகப் பிளந்து கொண்டு சுமார் 315 மைல் தூரத்திற்கு வடக்கிலிருந்துத் தெற்காக சீறிப் பாய்ந்தபடி, அட்லாண்டிக் கடலில் கலக்கும் ஹட்சன் ஆறு அது.
ஹட்சன் பள்ளத்தாக்கு தனக்குள் பொத்தி வைத்திருக்கும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் ஒன்றான பொகிப்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இரும்புப் பாலம் தான் வாக்வே ஓவர் த ஹட்சன்.
காண்போர் கண்களிரெண்டிலும் அனுமதியில்லாமலேயே முழுதாய்க் குடியேறி விடும் மிக நீண்ட ஆற்றுப் பரப்பும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளின் வழி கசிந்த ஒளியில் சுற்றித் தென்பட்ட அந்நகரத்தின் அழகும்.. ஆற்று நீரின் குளுமையை உறிஞ்சியபடி உற்சாகமாய் ஊர்வலம் வந்து கொண்டிருந்தக் காற்றும்.. இருள் சூழ்ந்திருந்த அந்தப் பின் மாலை வேளையை ஏகாந்தமாக்கிக் கொண்டிருந்தது.
அந்தச் சூழ்நிலை கொடுத்த சுகத்தின் பாதிப்பு சிறிதுமின்றி.. உணர்வற்று உருண்டு,நீண்டிருந்தக் கயல்விழிகள் இரண்டு அந்த இருநூறு அடி உயர பாலத்தை இமைக்காது வெறித்தபடி கரையோரமாய்க் கை கட்டி நின்றிருந்தது.
மார்பின் குறுக்காகக் கட்டியிருந்த கைகள் இரண்டும் சீரான வேகத்துடன் மேலெழுந்து கீழிறங்கும் நிலையே உணர்த்தியது, நிற்பது கற்சிலையல்ல காரிகை என்பதை.
அவள் தீவிர சிந்தனையெதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் இயல்பாய் வளைந்திருந்த புருவங்கள் இரண்டும் சுளிப்பெதுவுமின்றி சாதாரணமாகத் தான் காட்சியளித்தது.
சீதோஷ்ண நிலையாலோ என்னவோ.. சற்றே சிவந்திருந்தது நாசி.
ஈரப்பதமின்றி இறுகிக் கிடந்த இதழ்களின் வறட்சி.. கையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவள் புறம் நீட்டச் சொல்கிறது நம்மை.
எத்தனை நேரமாக நிற்கிறாளோ தெரியவில்லை! குளிரில் உறைந்த கால்கள் தானாய் நகரும் சக்தியை இழந்து விட்டதோ என்னவோ! அவ்விடத்திலிருந்து அகலும் எண்ணமோ, அசையாது வெறிக்கும் கண்ணிமைகளை சிமிட்டும் எண்ணமோ சிறிதுமின்றி.. கல்லோடு கல்லாய் நின்றாள் அவள்.
சற்று நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த மிதிவண்டியொன்றின் மணியோசையில்.. ஒரு வழியாக உயிர் பெற்று.. கண் சிமிட்டி.. தலை சாய்த்து.. காற்றோடு உறவாடிக் கொண்டிருந்த முன் நெற்றி முடியைக் காதோரத்தில் ஒதுக்கி.. கால்களை நகற்றி.. சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தத் தன் காரை நோக்கி நடந்தாள் அவள்.
உள்ளங்கையில் ரத்தம் உறைந்துக் கட்டியாகி விட்டதன் விளைவு.. சில்லிட்டுப் போயிருந்தக் கரங்களை ஸ்டியரிங்கில் வைத்த போது.. ஸ்டியரிங் வீலுக்கும், உள்ளங்கை சதைக்குமிடையே ஏதோ அழுத்தும் உணர்வு.
உடனே ஹீட்டரில் இரு கைகளையும் நீட்டி.. கட்டியைக் கரைத்துப் பின் உள்ளங்கையை விரித்து,நீட்டி இயல்பாக்கிக் கொண்டவள்.. காரை ஸ்டார்ட் செய்தாள்.
சர்ச் ஸ்ட்ரீட்டில் சீரான வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தவள் வளைவு ஒன்றில் திரும்புவதற்காக கியரை அழுத்திய சமயம்.. சொத்தென ஏதோ ஒன்று அவளது காரின் பானெட்டை லேசாக இடித்து டமாலெனக் கீழே விழுந்தது.
வினாடிக்குள் விடைபெற்று விட்ட சம்பவத்தை உணர்ந்து அவள் விரைந்து கார் கதவைத் திறந்து இறங்கி வந்து பார்த்த போது.. இளைஞன் ஒருவன் வலியில் முனகியபடியே எழ முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“ஆர் யூ ஓகே?” – நடு நாக்கில் முழு உருளைக்கிழங்கை வைத்து அழுத்தியதைப் போல்.. தொண்டையிலிருந்து கிளம்பி.. பற்களைத் தாண்டி வெளி வந்த அவளது அமெரிக்க ஆங்கிலத்திற்குப் பதிலளிக்காமல்.. தள்ளாடி நின்ற அந்த இளைஞன்.. திரும்பி அவள் முகம் பார்த்துக் கோணலாய்ச் சிரித்து “நோ! ஐம் நாட்” என்றான்.
அவனிடமிருந்துக் குப்பென வீசிய ‘கப்பு’ அவன் மூளைக்குச் செல்லும் ஒவ்வொரு நரம்பிலும் ரத்தத்தோடு சேர்ந்து,மதுவும் நிறைந்திருப்பதை உணர்த்த, கையைக் கட்டியபடி நின்று அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
தலை முதல் கால் வரை கருப்பு உடை அணிந்திருந்தான். அதாவது ஹூடியுடன் கூடிய கருப்பு நிற ஜெர்சி அணிந்திருந்தான். பாதி கண்களை மறைத்தத் தொப்பி வேறு!
தொப்பியைச் சரி செய்தவாறே நிற்க மாட்டாமல் ஆடிக் கொண்டிருந்தவனை ஆராய்ந்துத் தன் காரில் மோதியதால் அவனுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லையென்பதை உறுதி படுத்திக் கொண்டு.. அப்படியே திரும்பித் தன் வாகனத்துக்கும் எந்தப் பாதிப்புமில்லை என்பதைப் பார்த்தறிந்து கொண்டுத் தன் காரை நோக்கி நடந்தாள் அவள்.
“ஹேய்... மிஸ்... ஹேய்ய்ய்ய்ய்” – சுழலில் சிக்கிக் கொண்ட நாக்குடன் குளறியபடித் தன்னருகே ஓடி வருபவனை அவள் திரும்பிப் பார்த்து.. முகம் சுழித்து என்னவென்று நோக்க..
“சாரி...” என்றபடி ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு,மறு கையால் கேப்-ஐ சரி செய்தபடி இரண்டடித் தள்ளி நின்றவன்..
“நா...நான்... வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகமாகக் குடித்து விட்டேன். அ..அதனால்.. அதனால் என்னை என் வீட்டில் டிராப் செய்ய முடியுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
“முடியாது” –அவன் தன் கேள்வியை முடிப்பதற்குள் பதிலைச் சொல்லி விட்டாள் அவள்.
“காஆஆஆட்ட்” என்றபடிப் பின் கழுத்தைத் தடவித் தலையைப் பின்னுக்குச் சாய்த்து தன்னை நிலைப்படுத்த முயன்றவன் மந்த நிலையிலேயே இருந்த மூளையை உலுக்கி எழுப்பி நிறுத்த முயற்சித்து.. முடியாமல்.. கண்களைக் கசக்கிக் கொண்டு எதிரே நிற்பவளை நோக்கினான்.
கார் கதவில் சாய்ந்து கைக்கட்டி நின்றிருந்த அவளது உருவம் அவன் கண்களுக்கு இரண்டிரெண்டாகத் தெரிந்தது.
“க்ரேசி” என்றபடி மீண்டும் கண்ணைக் கசக்கியவனுக்கு.. இதே போல் மூளையைக் கசக்கி நிலைப்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ற எண்ணம் எழ.. மீண்டும் அவளை நிமிர்ந்து நோக்கினான்.
“இதோ பார்! இனம்,மதம்,மொழி,நாடு அத்தனையையும் தாண்டி உன்னையும், என்னையும் இணைக்குற ஒரு விஷயம் இருக்கு இந்த உலகத்துல. அது என்ன தெரியுமா?” - அவன்
“என்ன?” – ஒற்றை வார்த்தையில் வெளிவந்த அவளது குரலின் பேதத்தை வைத்து அவளது எண்ணவோட்டங்களை அறிய முயன்றவனுக்கு... ம்ஹ்ம்! எதுவும் கிட்டவில்லை.
“அ..அது.. நீயும்,நானும் மனுஷ ஜென்மங்கள்ன்றது தான்! சக மனுஷனுக்கு உதவி செய்றதை விடப் பெரிய புண்ணியம் இந்த உலகத்துல எதுவுமே இல்ல.”
“அப்படியா?, உன்னை இடிச்சிட்டு அப்படியே ஓடிடாம.. இறங்கி நின்னு இவ்ளோ நேரம் நான் உன் கிட்டப் பேசிட்டிருக்கிறதே என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய புண்ணியம் தான்.”
“ப்ச், இப்போ நான் டிரைவ் பண்ண முடியாத ஸ்டேட்ல இருக்கேன். என்னால உதவிக்கும் யாரையும் கூப்பிட முடியாது”
“ஏன்?”
“நான் ஊருக்குப் புதுசு. உதவிக்குக் கூப்பிட யாருமில்ல”
“நம்புற மாதிரியா இருக்கு இது?”
“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” – என்றபடி மீண்டும் தலையைப் பின்னுக்கு சாய்த்துக் கழுத்தை நீவிக் கொண்டான் அவன்.
“chauffeur அரேஞ்ச் பண்ணிப் போ. இல்ல, டாக்ஸி பிடிச்சுப் போ”
“ரெண்டுமே என்னால முடியாது”
“ஏன்?, ஏன் முடியாது?”
“டாக்ஸி புக் பண்ண என் கிட்ட ஃபோன் இல்ல.”
“ஃபோன் இல்லையா?”
“ஆமா, ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி தான் அதைத் தூக்கிப் போட்டு உடைச்சேன்.”
அவள் அதற்கும் ஏன் எனக் கேள்வி எழுப்புவதற்குள் இடை புகுந்தவன் “மறுபடியும் ஏன்னு கேட்காத. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ற நிலைமைல நான் இல்ல” என்று எரிச்சலோடு பதில் அளித்தான்.
“அந்தப் பதிலை தெரிஞ்சுக்கிற ஆர்வம் எனக்கும் இல்ல” – அசால்ட்டாய்த் தோளைக் குலுக்கினாள் அவள்.
“இங்க இருந்து 8 கி.மீ தான்” - அவன்
“என்னது?”
“என் வீடு.”
“..............” – பதிலற்றுப் பார்வையிட்டாள் அவள்.
“ப்ளீஸ்.. ஹெல்ப் பண்ணு”
“சரி, நீ இவ்ளோ கேட்குறதால.....” –என்று முடிப்பதற்குள்.. அவளது காரைச் சுற்றிக் கொண்டு உள்ளே ஏறப் பார்த்தவனைத் தடுத்து நிறுத்தினாள் அவள்.
“என்ன?, ட்ராப் பண்ற தானே?” - அவன்
“அப்டின்னு நான் சொன்னேனா?”
“பின்ன?”
“உனக்காக நான் டாக்ஸி புக் பண்றேன். ஏறிப் போயிடு” – என்று கூறியபடியே அவள் தன் ஃபோனை நோண்டத் துவங்க.. பொத்தென ப்ளாட்ஃபார்மில் அமர்ந்தான் அவன்.
தொங்கி விழத் தொடங்கியத் தலையையும்,சொக்கிச் செருகும் விழிகளையும் நிறுத்த.. உலுக்கி,உலுக்கித் தன்னை நிலைப்படுத்த முயன்றவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி டாக்ஸிக்கு முயற்சித்தாள் அவள்.
“இது தான் ஃபர்ஸ்ட் டைம்-ஆ?” – அவள்.
“ஆமா. ஃபர்ஸ்ட் டைம் தான்! வெட்கத்தை விட்டு ஒரு பொண்ணுக் கிட்டக் காதலுக்காகக் கெஞ்சிக்கிட்டு நின்னது.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்”
தொண்டை அடைத்ததில் கரகரப்புடன் வெளி வந்த அவனது குரலில் நிமிர்ந்து அவனை நோக்கியவள்.. “வாட்ட்?” என்றாள்.
மீண்டும் தலையை உலுக்கியவன் “நீ என்ன கேட்ட?” என்றான்.
“குடிக்கிறது?”-என சைகைக் காட்டி “இது தான் ஃபர்ஸ்ட் டைம்-ஆ?” என்றாள்.
“ப்ச், நோ நோ! அளவுக்கு அதிகமாக் குடிச்சது இது தான் முதல் முறை”
“ஹ்ம்ம்ம்ம், நீ குடிச்ச பார்-லயே உனக்கு டாக்ஸி அரேஞ்ச் பண்ணியிருப்பாங்களே! நீ ஏன் இப்படி ரோட்ல அநாதையா சுத்திட்டிருக்க?”
“நான் பார்-ல குடிச்சேன்னு உன் கிட்ட சொன்னேனா?” – என்றவன் தொடர்ந்து இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு “கேள்வி கேட்டே என்னை டார்ச்சர் பண்ணாத! டாக்ஸி கிடைச்சதா இல்லையா?” என்று முழு எரிச்சலில் வினவினான்.
“எக்ஸ்க்யூஸ் மீ.... ஐம் ஹெல்பிங் யூ அவ்ட் ஹியர். ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்” – அவளும் எரிச்சல் பட.. தன் முட்டாள்தனத்தை எண்ணி நெற்றியைத் தேய்த்தபடி.. வலது கையை நீட்டி...
“சா....சாரி” என்றவன் மீண்டும் “டாக்ஸி கிடைச்சதா?” என்று வினவினான்.
இல்லையெனத் தலையாட்டி உதட்டைப் பிதுக்கியவள் “No taxi’s available மெசேஜ் தான் வருது” எனக் கூற..
அருகிலிருந்தக் கம்பத்தைப் பற்றி எழ முயற்சித்தவன்.. தள்ளாடி விழப் போவதைக் கண்டு.. ஓடிச் சென்று அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் அவள்.
அவளிடமிருந்து அலையாய்க் கிளம்பி.. மென்மையாய்.. அவன் நாசியை நிரப்பிய கல்வின் க்ளெய்ன் லாவண்டர் பர்ஃபியூமின் மணத்தை இழுத்து சுவாசித்து நுரையீரலில் நிரப்பியவன்.. பற்றுதலுக்காக.. அவள் தோளைத் தன் வலது கையால் இறுகப் பிடித்து... அவள் காதருகே “யூ ஸ்மெல் சோ குட்” என முணுமுணுக்க.. சட்டெனத் திரும்பி அவனை நோக்கியவள் பற்றியிருந்த அவன் கரத்தைப் பட்டென விலக்க.. தடுமாறி.. அந்தக் கம்பத்திலேயே தலையை இடித்துக் கொண்டுக் கீழே விழுந்தான் அவன்.
விழுந்த நிலையிலேயே நிமிர்ந்து அவன் அவளைக் காண முயல.. அவள் விறுவிறுவென அவளது காரை நோக்கி நடப்பது தெரிந்தது.
ஹீல்ஸ் அணிந்திருந்த அவள் கால்களில் ஒன்றைப் படுத்த வாக்கிலேயே இறுகப் பற்றிக் கொண்டவன்..
“போகாத” என்றான்.
“ஆர் யூ க்ரேசி??, காலை விடு. காலை விடு டா” என்று அவள் துள்ளி விலகப் பார்க்க..
“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அன்கான்ஸியஸ் ஆயிடுவேன்! அதுக்குள்ள நான் வீட்டுக்குப் போகனும். ப்ளீஸ்” –என்றான்.
“முதல்ல காலை விடு டா முட்டாள்”
“திரும்ப நான் கான்சியஸ் ஆகும் போது, நீ என்னை இப்படி ரோட்ல விட்டுட்டுப் போனது மட்டும் தெரிஞ்சது, நீ எங்க,எப்படியிருந்தாலும்.. தேடி வந்துப் பழி வாங்குவேன்” – மூச்சு வாங்கத் தெளிவின்றி உளறினான் அவன்.
“உன்னால ஸ்டெடியா ஒரு இடத்துல நிற்கக் கூட முடியல. நீ.. நீ என்னைப் பழி வாங்கப் போறியா?, உன்னை அதுவரைக்கும் நான் விட்டு வைப்பேன்னு நினைச்சியா?, அப்டியே கார் ஏத்தி உன்னைக் கொன்னுருக்கனும். உயிரோட விட்டேன் பாரு”
கோப மிகுதியில் குதித்தவளின் காலை அழுத்தமாகப் பற்றியபடி எழுந்து நின்றவன்.. இப்போது அவள் கையைப் பற்றியிருந்தான்.
“என் ஆப்ஷன்ஸ் எல்லாம் க்ளோஸ் ஆகிடுச்சு. இப்போ உன்னால மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்”
மறுபடி,மறுபடி சொன்னதையே சொல்பவனைக் கண்டு கடுப்பாகி..
“என்னவோ உனக்கும்,எனக்கும் பல வருஷப் பழக்கம் மாதிரி ரொம்ப உரிமையா ஹெல்ப் பண்ண சொல்ற?, உன்னை மாதிரி ஒரு குடிகாரனை நம்பி.. எப்படி நான் வண்டில ஏத்துவேன்?” என்று சிடுசிடுத்தாள் அவள்.
அவள் தோளைப் பற்றித் தன் புறம் திருப்பியவன்.. அருகே நெருங்கி அவளை ஆராய்ந்தான்.
“எ..என்ன பண்ற?” – பல்லைக் கடித்தாள் அவள்.
“விலை உயர்ந்த நகை எதுவும் போட்டிருக்கியான்னு பார்க்கிறேன்!! இல்ல, கார்ல பெட்டி,பெட்டியா பணம் வைச்சிருக்கியா?, ஆனாலும்.. என்னைப் பார்த்தா திருடன் மாதிரியா தெரியுது உனக்கு?”
“பணமும்,நகையும் தான் பெருசா?”
“பின்ன?”
“நான் ஒரு பொண்ணு. பணம்,காசைத் தாண்டி பொக்கிஷமா பாதுகாக்க என் கிட்ட நிறைய விஷயமிருக்கு”
“அப்டியா?, அந்தப் பொக்கிஷத்தைக் கொள்ளையடிக்கிற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்ல! கற்பு உனக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையா? ஏற்கனவே ஒரு தராதரம் கெட்டவ கிட்ட என் கற்பு பறி போயிடுச்சு! இதுல உன் கிட்ட வேற நான் மறுபடி இழக்கனுமா?”
அவன் கூறிய விதத்தைக் கண்டு முட்டிக் கொள்ளாதக் குறையாகப் பல்லைக் கடித்தாள் அவள். லவ் ஃபெயிலியர் கேஸ் போலவே இவன்! கடவுளே!
“ரொம்பப் பயப்படாத! நான் தப்பா நடந்துக்கிற அளவுக்கு.. நீ அவ்ளோ அழகா இருக்குற மாதிரி தெரியல! போதைல பார்க்கும் போதே இவ்ளோ மொக்கையா இருக்க!” – என்றவனைக் கண்டு ஆத்திரம் தலைக்கேற.. அவனது வயிற்றிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டாள் அவள்.
வயிற்றைப் பிடித்துக் கொண்டு மண்டியிட்டமர்ந்தவன்.. வலியில் துடித்து “ராட்சசி!” என்று கத்த... கண்டுகொள்ளாமல் தன் கார் கதவைத் திறந்தவள்.. அவன் குப்புற விழுந்தபடி வலது கையால் தரையை ஓங்கிக் குத்திக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு நொடி நின்று.. பின் கண்களை அழுந்த மூடித் திறந்து அவனருகே சென்றாள்.
அவன் அணிந்திருந்த ஹூடியைக் கொத்தாகப் பற்றித் தன் பலம் கொண்ட மட்டும் தூக்கி நிறுத்தியவள்.. நேராகக் காருக்கு இழுத்துச் சென்று உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினாள்.
மறுபுறம் வந்தமர்ந்து அவள் காரை ஸ்டார்ட் செய்ததும்.. வலியையும் மீறி.. லேசாகப் புன்னகைத்து “தாங்க்ஸ்” என்றான் அவன்.
எரிச்சலும்,கோபமும் அதிகமாய் நிறைந்திருந்த குரலுடன் “எங்க இருக்கு உன் வீடு?” என்று வினவியவளிடம் தன் வீட்டு முகவரியைக் கூறி விட்டு தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.
“சீட் பெல்ட்டைப் போடு” - அவள்
“ம்ம்??”
“சீட் பெல்ட்,சீட் பெல்ட்” – என்று கத்தியவளைக் கண்டு முகத்தைச் சுருக்கி.. முழுதாகப் பத்து நிமிடங்கள் சீட் பெல்ட்டைத் தேடிக் கண்டறிந்து ஒரு வழியாக அதன் தாங்கிக்குள் பொருத்தினான்.
நிமிடத்திற்கொரு முறை அவனைத் திரும்பி முறைத்துக் கொண்டு வண்டி ஓட்டியவளிடம்.. மூடிய கண்களுடன்..
“கொஞ்சம் வேகமா போறியா?” என்று வினவினான்.
அவளிடமிருந்துப் பதில் வராது போகவே..
“இல்ல, நீ அடிச்ச அடில.. என் ப்ளாடர் ப்ளாஸ்ட் ஆகிடுச்சு போல! அவசரமா போகனும்” என்றான்.
‘மானம் கெட்டவன்’ – என்று முணுமுணுத்தபடியே வண்டியை விரைவாகச் செலுத்தியவள்.. பேசிப் பேசியே உயிரை வாங்குபவனின் வாயைத் தற்காலிகமாக மூட வைத்து விடும் நோக்கத்துடன் பாட்டை அழுத்தினாள்.
‘என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே..
நான் வாரியணைத்தேன்.. ஆசையினாலே..
நீ தருவாயோ.. நான் தருவேனோ…
யார் தந்த போதும்.. நீயும்,நானும் வேறல்ல…!!’
வயிற்றை முட்டும் இயற்கை உந்துதலிலும், அவள் அடி கொடுத்த வலியிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி முகம் கசங்க விழி மூடியிருந்தவன் மெல்ல மெல்ல.. சுயநினைவை இழந்து கொண்டிருந்தான்.
ஒலித்த பாடலைக் கேட்டு மீண்டும் முகம் சுருக்கியவன்..
“ஏன், இதை விடப் பழைய பாட்டு கிடைக்கலையா?, என்ன டேஸ்ட்டோ?– எனத் தமிழில் முணுமுணுக்க.. திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு.. மீண்டும் சாலையில் கவனத்தைச் செலுத்தினாள்.
அவளிடம் பதிலெதுவும் வரவில்லையென்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை போலும்! தொடர்ந்து பேசினான். இல்லை, உளறினான்.
“எனக்கு யுவன் தான் ஃபேவரைட்!”
“.............”
“ரிவர் சைட்-ல உட்கார்ந்து.. ஒரு பக்கம் யுவன் சாங்ஸ்-ஐ கேட்டுக்கிட்டு.. மறுபக்கம் அந்தக் கருமம் பிடிச்சவளைக் கெட்ட வார்த்தைல திட்டிக்கிட்டு.. சரக்கடிக்கிற சுகம் இருக்கே..... வாவ்! வாவ்! வாவ்! ***-ல கூட அவ்ளோ சந்தோஷம் கிடைக்காது!”
அவன் முடிப்பதற்குள்.. எழுந்த அருவெறுப்பில்.. டாஷ்போர்டிலிருந்த டிஷ்யூ டப்பாவை எடுத்து அவன் முகத்தில் விட்டெறிந்துத் தன் கோபத்தைத் தணித்துக் கொண்டாள் அவள்.
வாயில் நுழைந்து விட்ட டிஷ்யூ பேப்பரைத் துப்பியபடி “ரொம்ப வயலண்ட் ஆன ஆள் போல நீ! பாவம் உன் பாய் ஃப்ரெண்ட்” என்றான் அவன்.
‘அடங்குறானா பாரேன்’
அவள் தன் கோபத்தை.. வேகத்தில் காட்டியதில்.. கார் கிட்டத்தட்டப் பறந்தது.
வண்டியின் வேகத்துக்குக் குலுக்கிப் போட்ட உடலுடன் ஆடியபடி வந்தவன்.. திடீரென..
“எவன் டி உன்னைப் பெத்தான்! பெத்தான் பெத்தான்..
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான்”
-என்று கையாலே கிட்டார் வாசித்தபடி உச்சாஸ்தாதியில் கத்த.. திடுக்கிட்டு அவனை நோக்கியவளுக்கு அழுகை வராத குறை தான்.
இதுவரை உச்சரித்திராத கெட்ட வார்த்தைகள் அனைத்தும் மூளைக்குள் வரிசை கட்ட.. வாயை அழுந்த மூடி.. ஸ்டியரிங்கில் கையை அழுத்தி.. தன் உச்சகட்டக் கோபத்தை உள்ளுக்குள் அடக்கினாள் அவள்.
அடுத்தடுத்த வரிகளைப் பாடியபடி கையையும்,காலையும் உதைத்துக் கொண்டு சீட்டில் அமர்ந்தபடியே ஆடியவன்.. ஒரு கட்டத்தில் ப்ரேக் மீதிருந்த அவளது காலில் அழுத்தி விட.. அடுத்த நொடி கார் அரைவட்டமடித்து நின்றது.
“எனக்கு மட்டும் ஏன் பூமி சுத்துது???” – என்றபடியே அவள் கையைப் பற்றியவனின் காலை ஓங்கி மிதித்து “ப்ரேக்ல இருந்து காலை எடுடா” எனக் கத்த.. சட்டெனக் காலைத் தூக்கியவன்.. “சா..சாரி” என்றபடி நகர்ந்து கொள்ள...
அவன் சட்டையைப் பிடித்துக் காரை விட்டுக் கீழே தள்ளத் துடித்தக் கரங்களை அடக்கி.. இருகைகளால் முடியை அழுந்தக் கோதிக் கொண்டுத் தன்னை சமன்படுத்தியவள்.. ஸ்டியரிங்கிலேயே தலையை சாய்த்துப் பெரிய பெரிய மூச்சுகளை வெளி விட..
“ஐம் சாரி... நா..நான் ரொம்ப ஃப்ரஸ்ட்ரேஷன்ல இருக்கேன். அ..அதான்.. கொ..கொஞ்சம் எக்ஸைட் ஆயிட்டேன்! சாரி” – எனக் கூற..
“இந்த நாயைக் கட்டி வைச்சாலொழிய நிச்சயம் அடங்கப் போறதில்ல” – என்று முடிவு செய்து.. காரைக் கிளப்பியவள் நேராகச் சென்று அவன் அபார்ட்மெண்ட்டின் முன்பு நிறுத்தினாள்.
வாயைப் பிளந்தபடி சீட்டில் சாய்ந்து கிடந்தவனை அவள் உலுக்கி எழுப்ப.. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என்றபடி இருபுறமும் கண்களைச் சுழற்றி.. அது என்ன இடம் எனக் கண்டறிய முயன்றவனை சீட்டிலிருந்து வெளியே இழுத்து நிறுத்தி..
“இது தான உன் வீடு?” என்று அவள் வினவுகையில்..
இதுவரையில் அமர்ந்து வந்த பொஷிஷன் மாறியதில்.. தலையைச் சுற்றிக் குமட்டிக் கொண்டு வர.. அருகிலிருந்தச் செடிகளின் புறம் திரும்பி ‘உவ்வேஏஏஏஏஏஏஏஏ’- என வாந்தி எடுத்தான் அவன்.
“ச்சைஐஐஐஐஐஐஐ” – என்றபடி பத்தடித் தள்ளி நின்றவள்.. தொடர்ந்து ஐந்து நிமிடங்களாக வாந்தி எடுத்தவனை அருவெறுப்புடன் நோக்கினாள்.
ஒருவழியாகத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டுத் திரும்பியவன் தூரமாய் நின்றிருந்தவளிடம் இரு கைகளையும் கூப்பி உயரத் தூக்கி “தே....தே...ங்க்.... உவ்வ்வ்வ்வேஏஏஏஏ” என்று நன்றி கூற முனைந்து மீண்டும் ஓங்கரிக்கத் துவங்க... அவள் திரும்பித் தன் காரருகே ஓடியே விட்டாள்.
தலையைப் பிடித்தபடி ஓங்கரித்துக் கொண்டே அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்வது தெரிந்தது.
லிஃப்ட் அருகே சென்றவன் அதற்கு மேல் முடியாமல் கீழே அமர்ந்து விட்டதைக் கண்டு இரண்டு நிமிடங்கள் நின்றாள், அபார்ட்மெண்ட் வாசிகள் எவரேனும் தென்பட்டால் அவனுக்கு உதவுவர் என்ற நம்பிக்கையுடன்.
தொடர்ந்த பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக எவரும் வருவதைப் போல் தெரியவில்லை. அவனும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகர்வதைப் போல் தெரியவில்லை.
எப்படியோ தொலையட்டும் எனத் திரும்பிச் செல்ல எத்தனித்துப் பின் சலித்துக் கொண்டே மீண்டும் அவனை நோக்கிச் சென்றாள்.
“ஹேய்.. ஹேய்...” என்று அவள், அவனை உலுக்கியதில் அரைக்கண்ணாக விழித்தவன் அவளது பர்ஃப்யூமின் மணத்தை நுகர்ந்து..
“நீ... நீ.. இன்னும் போகலயா?” என்று வினவினான்.
“நீ ஏன் வீட்டுக்குள்ள போகாம இருக்க?, இது தான உன் வீடு? இல்ல, பொய் சொன்னியா?”
“மு...முடியல...” – என்றபடிக் கையசைத்தவனைக் கண்டு எரிச்சலுற்று “ஃப்ளாட் நம்பர் சொல்லு” எனக் கேட்டு படாதபாடு பட்டு அவனை லிஃப்ட்டுக்குள் தள்ளி ஒரு வழியாக அவன் வீட்டை அடைந்தாள்.
“எ..எ..என் வீடு தான இது??” – அவன்.
“அடப்பாவி! உன்னை நம்பி நான் கதவைத் திறந்து உள்ளே வந்துட்டேனே டா?”
“ப்ச், சாவி வர்க் ஆச்சுல்ல?.. அப்டின்னா.. இது என் வீடு தான்!, எ..எனக்கு பா..பா...பாத்ரூம் போகனும்”
“எங்க இருக்கு?”
“ஸ்ட்ரைட் அண்ட் லெஃப்ட்”
அவன் சொன்ன திசையில் சென்று அவனறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டு பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளி விட்டு இடுப்பைப் பற்றிக் கொண்டு நின்றவளைக் கண்டு கொள்ளாமல்..
“இதுக்கு மேல ஹெல்ப் பண்ண மாட்டியா?” என்றபடி அதுவரை அடிவயிற்றை அழுத்திக் கொண்டிருந்த அணையைத் திறந்து விடும் பொருட்டு பேசினை நோக்கி அவன் திரும்புவதைக் கண்டு அதிர்ந்து “ச்சை” என அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவள்..
“உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” என்றுக் கத்தினாள்.
“எந்த ஊர்ல குடிகாரன் வெட்கம்,மானமெல்லாம் பார்க்குறான்!?” – எனப் பதில் கூறியவன்.. வாஷ்பேசின் குழாயைத் திறந்து முகத்தில் நீரை அடித்து மூளையைத் தெளிவாக்க முயன்றான்.
சிவந்த விழிகளிரெண்டும் தாழ் போட்டுக் கொள்வதிலேயே குறியாக இருக்க.. மங்கலாகிப் போன உலகத்தை எண்ணி நொந்தபடியே தட்டுத் தடுமாறி பாத்ரூமை விட்டு வெளியே வந்தவன்.. அணிந்திருந்த சட்டையைக் கழட்டித் தூர எறிந்து விட்டு அப்படியே தொப்பெனப் படுக்கையில் விழுந்தான்.
எரிச்சலுடன் வெளியே நின்றபடி அவனது வருகைக்காகக் காத்திருந்தவள்.. அவனிடமிருந்து சத்தமில்லாததை உணர்ந்து மெல்ல அவன் அறையை எட்டிப் பார்த்தாள்.
கட்டையாக நீட்டி விட்டவனைக் கண்டு எரிச்சலுற்று அருகே சென்று.. அவனது முகத்தின் முன்பு கையை ஆட்டினாள்.
“நீ இன்னும் போகலயா??” – முழு அமைதியுடனிருந்த அறைக்குள் அவனது குரல் அதிர்வாய் ஒலிக்கத் திடுக்கிட்டு அவனை நோக்கினாள் அவள்.
அவன் கண்களைத் திறக்கவில்லை.
“ஏன் கேட்க மாட்ட? குடிச்சிட்டு நடு ரோட்டுல ஆள் இல்லாம நின்ன உன்னைப் பாவம் பார்த்து.. இவ்ளோ தூரம் போராடிக் கூட்டி வந்து வீட்ல சேர்த்ததுக்கு... நீ இன்னும் போகலயான்னு கேட்பியா நீ! ஒரு தேங்க்ஸ் சொல்லனும்ன்னு தோணல உனக்கு?”
லேசாக நெளிந்த இதழ்களுடன்.. “தேங்க்ஸ் எல்லாம் எனக்கு செய்கைல சொல்லித் தான் பழக்கம்” என்றவனை சந்தேகமாக நோக்கி..
“அப்டின்னா?” என்று அவள் வினவ..
இப்போது முழுதாகச் சிரித்து.. “டர்ட்டியா யோசிக்காத! இன்னொரு நாள் வீட்டுக்கு வா! பார்ட்டி கொடுத்து என் நன்றியை வெளிப்படுத்துறேன்னு சொல்ல வந்தேன்” என்றான்.
பல்லைக் கடித்து நெற்றியைச் சொரிந்து கொண்டவள் “உன் கூடப் பேசிப் பேசி எனக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம்” என்று நொந்து கொண்டு..
“எப்படியோ, நீ கேட்டபடி உன்னை வீடு கொண்டு வந்து சேர்த்துட்டேன்! அதனால, தேடி வந்து பழி வாங்குவேன்னு சபதம் எடுத்ததையெல்லாம் வாபஸ் வாங்கிக்க” என்றாள்.
“தேடி வந்து நன்றி வேணா சொல்லட்டுமா?”
“வேண்டவே வேண்டாம் சாமி”
“ஹாஹாஹா” – க்வில்ட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டுத் திரும்பிப் படுத்தான் அவன்.
“நடையில நிதானமில்ல! பார்வைல தெளிவில்ல! ஆனா.. பேச்சு மட்டும் கொஞ்சம் கூடத் தடுமாற்றமில்லாம.. எவ்ளோ இயல்பா வருது உனக்கு”
“மூளைக்கும்,வாய்க்கும் மட்டும் தனி கனெக்ஷன் வைச்சிருக்கேன்! அது எப்பவும் நான் நினைக்கிறதைத் தான் பேசும்”
“அதுசரி. என்ன பிறவியோ நீ!”
“...............” – பதிலற்று உறைந்த புன்னகையுடனே அமைதியாகிப் போனவன்.. உறக்கத்தின் பிடிக்குச் செல்லத் தொடங்கியிருந்தான்.
எட்டி அவன் முகத்தை நோக்கி விட்டு வெளியே நடந்தவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. கூடவே தலைவலியும்!
‘இதெல்லாம் தேவையா எனக்கு’ என்று மனதுக்குள் புலம்பியபடி ஹாலுக்கு வந்தவளின் கண்களில் முழு செட்-அப்புடன் இருந்த சமையலைறை தென்பட்டது.
ஒரு நிமிடம் நகத்தைக் கடித்தபடி யோசித்தாள். ஆபத்துக்குப் பாவமில்லை!!
பின் விறுவிறுவென அவன் அறையை நோக்கி நடந்தாள்.
“ஹேய்ய்..”
அவள் அழைப்பிற்கு அவனிடம் பதிலில்லை.
“ப்ச்” என்றபடி நெற்றியைத் தேய்த்தவள் “எனக்கு ரொம்பப் பசிக்குது. ஒரு கப் காஃபியாவது குடிச்சா தான் என்னால இனி ஒரு அடியாவது எடுத்து வைக்க முடியும்!அ..அதனால நான்.. நான் உன் வீட்டுக் கிட்சனை யூஸ் பண்ணிக்கட்டுமா? நீ ஒன்னும் நினைச்சுக்க மாட்டியே?”
-அவன் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து விட்டான் போலும்!
‘அவன் என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை’ என்கிற முடிவுக்கு வந்து.. சமையலறையில் விளக்கை எரிய விட்டு காஃபி போட்டுக் கொண்டுக் கப்புடன் மீண்டும் அவனறைக்கு வந்தாள்.
கவிழ்ந்து கிடந்தவனின் மூக்கின் அருகே காஃபியை நீட்டினாள்.
இழுத்து சுவாசித்தபடித் திரும்பிப் படுத்தவன் “ப்....ளாக் கா...ஃபி” என்று முனகினான்.
“யெஸ்! ஏன்னா.. உன் வீட்டு ஃப்ரிஜ்ல பால் இல்ல!” – என்றவளுக்கு.. வெளியே வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தக் குளிருக்கு.. இதமாகக் கொதிக்கும் காஃபியினை தொண்டை வழியே உள்ளிறக்கியதில்.. ஏக சந்தோசம்!
இரண்டு மிடறு பருகி உதட்டை நனைத்தப் பின் தான் காதும்,கண்ணும் தெளிச்சி பெற்ற உணர்வு அவளுக்கு!
மெல்ல எழுந்து அவனது அறையைச் சுற்றிப் பார்த்தபடி நடந்தாள்.
ஹ்ம்! எவனோ ஒருத்தன் வீடு! கொஞ்சம் கூடப் பயமில்லாம.. கெத்தா காஃபி போட்டுக் குடிக்கிறேன்! கண்றாவி! என்ன நாள் இது! என்ன சம்பவம் இது! என்ன தலையெழுத்து இது!
காஃபி தன் வேலையைத் தொடங்கி விட்டது போலும்! மூளை கொஞ்சம்,கொஞ்சமாக இதயத்தை நோக்கிக் கேள்விக் கணைகளை எய்தது. அக்கேள்விகள் அனைத்தையும்.. ஒரு கோப்பில் போட்டு மூளை அடுக்கில் சேமித்து வைத்து விட்டு மீண்டும் வீட்டை நோட்டமிட்டாள் அவள்.
புத்தம் புதிய அழகான வீடு! முழு சுத்தத்துடன் கட்சிதமாகக் காட்சியளித்தது. ஆள் ஒண்டிக்கட்டை போலும்! வேறு எவரும் உடன் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை!
எதிர் சுவரில் மாட்டப்பட்டிருந்தப் புகைப்படங்களைப் பார்வையிட்டாள்.
குடும்பத்துடனான ஒரு புகைப்படம்! அம்மா,அப்பா,இவன் இன்னுமொரு இளைஞன் என சட்டத்திலிருந்தப் படத்தில் அனைவரும் புன்னகை முகமாகக் காட்சி தந்தனர்.
அடுத்தடுத்தப் படங்கள் முழுதிலும் குழந்தையொன்று ஆடி,சிரித்து,விளையாடிய படி ஒட்டு மொத்த சுவரையும் நிறைத்திருந்தது.
அருகே சென்று அப்புகைப்படத்தை வருடிச் சிரித்து.. “க்யூட் பேபி....” என்று முணுமுணுத்தவளிடம்...
“ஆமாம்.. சோ சோ க்யூட்” என்றான் அவன்.
உதட்டை வளைத்தபடித் திரும்பி அவனை நோக்குகையில் வழக்கம் போல் அவனது கண்ணுக்கான கனெக்ஷன் ஆஃப் ஆகியிருந்தது. வாய் மட்டும் பேசிக் கொண்டிருந்தது.
“யாரைச் சொல்ற?” – சந்தேகமாய் வினவினாள் அவள்.
“திஷா பேபி! என் ஸ்வீட் ஹார்ட்” – கன்னத்தைத் தலையணையில் அழுத்தியபடி அடிக்குரலில் கூறினான் அவன்.
“நீ இப்படி சரக்கடிச்சுக் கவிழக் காரணமான மகராசியா?”
“ச்சி,ச்சி தேவதையைப் பத்திப் பேசும் போது *******-பத்திப் பேசுற நீ?”
“வாயை மூடு”
“திஷா என் அண்ணன் பொண்ணு! அ...தோ அங்க இருக்கா” என்றவன் குத்துமதிப்பாகக் கை நீட்டியது இந்தச் சுவரைத் தான் என்று முடிவு செய்து கொண்டு.. மெல்ல முறுவலித்தவள் “நிஜமாவே தேவதை தான்” என்றாள்.
“சித்தா,சித்தா-ன்னு என் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்துவா. அவளை டே கேர்-ல சேர்த்தப்போ....” என ஏதோ சொல்லத் துவங்கியவன்.. ம்யூட் ஆகி.. ஆஃப் ஆகி.. ஆ-வென மீண்டும் உறங்கி விட.. சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
காலியான காஃபி கப்பை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு.. அருகிலிருந்த ஸ்டிக்கி நோட்டை எடுத்து “தாங்க்ஸ் ஃபார் த காஃபி” என்று எழுதிப் பின் ஃப்ரீ அட்வைஸ் என்ற குறிப்புடன்.. “இன்னொரு முறை இப்படி வாயைப் பொளக்குற அளவுக்குக் குடிச்சேனா.. வானுலகம் போறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு! எதுக்கும் இப்பவே உன் ஃபோட்டோக்கு மாலை போட்டு அழகு பார்த்துக்க” என்று எழுதி.. அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் அதை ஒட்ட வைத்து விட்டு வெளியே செல்ல எழுந்தாள்.
அவனைக் கடந்து வாசலை நோக்கிச் சென்றவளை “ஹேய்ய்ய்ய்” என்ற அவன் குரல் நிறுத்தியது.
“என்ன?” – என்றவளிடம் இங்கே வா என்பது போல் கையாட்டினான்.
அருகே சென்று என்னவென்று கேட்டவளின் கையைத் தேடித் தடவிப் பற்றி பிடித்து..
“நீ.... நீ.... என் வீட்ல இருந்து எதையும் திருடிட்டுப் போயிடலயே???” – என மெல்ல வினவியதும்.. மூக்கு சிவக்கக் கடுப்பாகிப் போனவள் தன் கையை அவனிடமிருந்து உறுவ முயற்சித்தபடி “ச்சி! என்ன மனுஷன் நீ?, தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்குற மாதிரி இருக்கு உன் பேச்சு! நா..நான்.... திருடுவேனா?, ச்சி! நீ இப்படிப்பட்டவன்னு தெரியாம.. உன் வீட்ல காஃபி வேற குடிச்சுத் தொலைஞ்சிருக்கேன்! இப்பவே போய் விரலை விட்டாவது வாந்தி எடுத்துட்றேன்!” – விடாது கத்திக் குவித்துத் திமிறியவளைக் கேட்டுப் பெரிதாக நகைத்து ஒரே இழுப்பில் அவளைத் தன் புறம் இழுத்தவன்..
மூடியே கிடந்தத் தன் கண்களை சிரமப்பட்டுத் திறந்து.. மங்கிய பார்வையில் தென்பட்ட.. அந்த ஆலிவ் நிற உடையை, நான்கடிக் கூந்தலை.. அதைத் தொடர்ந்து அவளது முகத்தைப் பார்க்க முயற்சித்துத் தோற்று... கண் பார்க்கும் எதுவும் மூளையில் பதியாததை எண்ணிக் கடுப்புற்று.. தீவிரமாய் ஏதேதோ விடாது பேசியபடி தன் முகத்தருகே வீற்றிருந்த அவளது தாமரை உதடுகளைக் கடந்து.. அவள் வலது கன்னத்தில் தன் இதழ்களை அழுந்தப் பதித்தான்.
பஞ்சுப் பொதிக்குள் சென்று வந்த உணர்வுடன்.... மந்தகாசப் புன்னகையோடு அவன் இதழ்கள் விரியத் தொடங்கிய சமயம்... கூரான அவளது நகங்கள் இரண்டு.. அவனது கீழுதட்டை அழுந்தக் கிள்ளியதில் அலறி.. ரத்தம் சொட்ட அவன் “ஆஆஆஆஆஆஆஆஆஆ”-வென அறையே அதிரும்படிக் கத்திய சமயம்.. அவனருகே அமர்ந்திருந்த அவள்.. விறுவிறுவென அறை வாசலைக் கடந்து ஓடிச் சென்றிருந்தாள்.
