அத்தியாயம் - 2
அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு..
அதில் அழகிய மேனியின் நடிப்பு..
படபடவென வரும் துடிப்பு..
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு..
ஆஹா.. மெல்ல நட மெல்ல நட..
மேனி என்னாகும்..!!!
செவாலியருக்குக் கவியெழுதும் போது மட்டும் கண்ணதாசன் தன் ஐம்புலன்களையும் மூளையாக்கி விடுவார் போலும்! ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அந்த முகம் காட்டுகிற பாவங்களைக் கற்பனையில் கண்டாலே.. பா-க்கள் பாலாகக் கொட்டி விடும் என்பதை மனிதர் உணர்ந்து வைத்திருக்கிறார்.
தான் கரம் பற்றவிருக்கும் காதலியைக் கேலி செய்யும் நோக்கத்துடன் குறும்புப் பார்வையோடு காதலன் (சீ-த்ரூ ஷர்ட்ல சிவாஜி :P) .அவன் உச்சரிக்கும் வார்த்தைகளுக்குக் கோபத்தைப் பிரதிபலிக்காமல்.. போதையில் நிற்கும் பேதை (ஜிகு,ஜிகுன்னு சரோஜா தேவி)!
மெல்லிசை மன்னர் தான் இசைத்தக் கருவி ஒவ்வொன்றிலும் நக்கலையும்,கிண்டலையும் தெறிக்க விட... அத்தனையையும் அள்ளித் தொண்டையில் நிரப்பிக் கொண்டு முழுப் பாட்டையும் ஆக்கிரமிப்பவர் டி.எம்.எஸ் மட்டுமே! ஒவ்வொரு பத்தி முடிவிலும் அவர் போடும் ‘ஆஹா.. மெல்ல நட’ நம்மையும் ஆஹா போட வைக்கிறது!
இந்தக் கூட்டணிக்குண்டான நம் ரசனை அத்தனை எளிதில் அழிந்து விடாது!
விடாது கேட்ட இண்டர்காம் ஒலியில் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தான் அவன். விறகுக் கட்டையாய் எரிந்த கண்களையும், அதற்கு நெய் ஊற்றிக் கொண்டிருந்தத் தலைவலியையும் ஒரு சேர உணர்ந்தவனுக்கு அந்த விடியல் ‘இன்னிக்கு நாள் விளங்குன மாதிரி தான்’ என்ற நினைப்பைக் கொடுக்க.. முழு எரிச்சலுடன் படுக்கையை விட்டுக் கீழிறங்கினான்.
பொறுமையற்றுப் பொருமிக் கொண்டிருந்த இண்டர்காமை டொக்கென அழுத்தியவனுக்குப் பதிலாய் “டேய் கௌதம்.. எத்தனை தடவை கூப்பிட்றது?, உன் ஹேண்ட் ஃபோனுக்கு என்னாச்சு?,ப்ச், கதவைத் திற முதல்ல” என்ற பெண் குரல் உச்சஸ்தாதியில் கூவ.. “இ..இதோ திறக்குறேன்” என்றவன் தலை வாசல் திறப்பதற்கான பொத்தானை அழுத்தி விட்டுத் தன் வீட்டுக் கதவைக் கொட்டாவி விட்ட படியே திறந்து வைத்தான்.
அனுமதியின்றி உள்ளே நுழைந்தக் குளிர் காற்று மேலாடையின்றி நின்றவனை விறைக்கச் செய்ய ஆடை தேடி அவசரமாய் அவன் அறைக்குள் புகுவதற்குள் “சித்தாஆஆ” என்றபடி ஓடி வந்த சிறுமியொருத்தி ஒரே தாவலில் அவன் தோள் மீது ஏறிக் கொண்டாள்.
அடர்ந்த தாடியுடனான புதர் முகத்துக்குள் அதுவரை அப்பிக் கிடந்த சோர்வு பறந்தே போய் விட.. விரிந்த சிரிப்புடன் “செல்லக்குட்டி” – என்றபடி அவள் கன்னத்தில் இதழைப் புதைத்தவனுக்கு.. அந்த மென்மை.. நேராய்ச் சென்று.. மூளையின் மூலைக்குள் முடங்கிக் கிடந்த நினைவுகளை முன்னிருத்த முனைந்ததன் விளைவு.. புண்ணாகிப் போயிருந்த கீழுதட்டைப் பொறுமையாய் ஈரமாக்கினான்.
சுர்ரென எழுந்த வலி கோபத்தை உண்டாக்க.. “ச்சீ, உன் மேல நாத்தம்” என மூக்கை மூடிக் கொண்ட சிறுமியைக் கண்டு மீண்டும் பல்லைக் காட்டிச் சிரித்து.. “குளிக்காம செண்ட் அடிச்சுக்கிற குடும்பத்தைச் சேர்ந்த ஆளு நீ! நீ என் மேல நாத்தம்ன்னு சொல்றியா?” எனக் கேட்டு கிச்சு,கிச்சு மூட்டி அவளைச் சிரிக்க வைத்துக் கீழே இறக்கி விட்டான்.
“ஏன் டா இன்னிக்குப் புது கம்பெனில ஜாயின் பண்றேன், சீக்கிரமே கிளம்பிடுவேன்.நீங்க வரத் தேவையில்ல. அப்டி,இப்டின்னு குதிச்ச. இன்னும் பல்லு கூட விளக்காம சுத்திட்டிருக்க?” – என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தத் தன் தமையன் விக்ரமைக் கண்டு..
“அதான், வராதன்னு சொல்லியும் வந்துட்டீங்கள்ல?, பின்ன என்ன?, என் ப்ரைவசியைக் கெடுக்குறதை ஃபுல் டைம் வேலையா பார்த்துட்டிருக்கீங்க நீங்களும்,உங்க பொண்டாட்டியும்?, நான் வீட்டை விட்டு வந்துத் தனியா வசிக்கிறதுக்குக் காரணமே உங்க அம்மாவும்,பொண்டாட்டியும் தான்!, இதெல்லாம் உங்களுக்கு எப்போ புரியப் போகுதோ!” – என்று கௌதம் திட்டத் துவங்க..
“அதெல்லாம் இருக்கட்டும். ஏன் கண்ணு ரெண்டும் இப்படி சிவந்திருக்கு?, நேத்து நைட் குடிச்சியா?” – என்று தன் கையிலிருந்தப் பெரிய,பெரிய பைகளைக் கீழே வைத்தபடி அவனை ஆராய்ச்சிப் பார்வையுடன் நோக்கினாள் அண்ணி சாதனா.
‘அய்யோ இதுக்கு லேசர் கண்ணாச்சே’ என்று உள்ளுக்குள் பதறியபடி வேறு புறம் திரும்பியவன் “அதெல்லாம் ஒன்னுமில்ல! நீ முதல்ல சூடா ஒரு காஃபி போட்டுக் கொடு. வித் அவுட் மில்க்” என்றவன் “திஷாக் குட்டி, சித்தா குளிச்சிட்டு வர்ரேன்” எனக் கூறி அறைக்குள் மறைந்து கொண்டான்.
குளித்து முடித்து.. முகம் துடைத்தபடி குளியலறையிலிருந்து வெளியே வந்தவன்.. கையில் காஃபியை வைத்துக் கொண்டு தன் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சாதனாவைக் கண்டு அவசரமாய் அருகே வந்தான்.
“ப்ச், என் ரூமுக்குள்ள வராதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?, சும்மா எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு.. வெளிய போ முதல்ல”
-அவள் கையிலிருந்தக் காஃபியை வாங்கிக் கொண்டு மறு கரத்தால் அவள் தோளைப் பற்றித் தள்ளியவனைப் பொருட்படுத்தாமல் திமிறியபடி அறையை ஆராய்ந்தவளின் கண்களுக்குத் தேடியது சிக்கி விட.. அவனைத் தள்ளி விட்டு ஓடியே சென்று.. டிரெஸ்ஸிங் டேபிள் மீதிருந்தக் காஃபி கப்பைக் கையில் எடுத்தாள்.
கண்கள் ஜொலிக்க “லிப்ஸ்டிக் கரை!!!!!” – என்றபடிக் காஃபியின் வாய்ப்பகுதியில் ஒட்டியிருந்த பிங்க் நிற உதட்டுச் சாயத்தைத் தொட்டுக் காட்டியவள்..
“என்ன டா உன் வெள்ளைக்காரக் காதலி ஒரு வழியா உன் மேரேஜ் ப்ரபோசலுக்கு ஓகே சொல்லிட்டா போல! நேத்து நைட்டே ஒரு கால் பண்ணி சொல்லியிருக்கலாம்ல?, சாட்டிங்ல இருந்து டேட்டிங் வரைக்கும் அத்தனையையும் ஷேர் பண்ணுன! இத்த வுட்டுட்டியே மச்சான்?” எனக் கலாய்க்க..
முழு எரிச்சலில்.. “வயித்தெரிச்சலைக் கிளப்பாத அண்ணி!” என்றான் அவன்.
“என்னடா?”
“அவ என்னை ஏமாத்திட்டா.” – மொட்டையாகக் கூறியவனைக் கண்டு “அய்யய்யோ!” என வாயில் கை வைத்தவள்..
துக்கத்தை முகத்தில் காட்டுகிறேன் பேர்வழி என அப்பாவியாய் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு.. மூக்கு விடைக்க.. இதழை வளைத்தவனைக் கண்டுப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி..
“நீ தான் காஃபி போட்டுக் கொடுத்தியா?, அதான் ரிஜெக்ட் பண்ணிட்டா போல” என்று மேலும் கலாய்க்க.. சுருசுருவென எழுந்தக் கோபத்துடன்..
“ஆமா, நீ பெரிய கிட்சன் குயின்!, வாயை மூடு” என்றவன் தொடர்ந்து “இந்தக் காஃபி கப்-ல குடிச்சது அவ இல்ல.” என்று உளறி விட..
“பின்ன?” என்று கேட்ட சாதனாவின் குரலிலிருந்த சுவாரசியத்தைக் கண்டு எரிச்சலுற்று... அவள் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துக் கொண்டு வாசலருகே சென்றவன்..
“காலங்கார்த்தால என் வாயைப் பார்க்கத் தான் வந்தியா? போ! போய் வந்த வேலையைப் பாரு!” – என்று துரத்தி விட்டுக் கதவை அடைத்தான்.
“வெள்ளாவில வெந்த வெள்ளைக்காரிகளெல்லாம் நமக்கு செட் ஆக மாட்டாளுகன்னு நான் சொன்னப்பல்லாம் கேட்கல! இப்பப் புட்டுக்கிச்சு பார்த்தியா?, நீ ‘ம்’-ன்னு சொல்லு! அத்தை உனக்கேத்தத் தமிழ்ப் பொண்ணுங்களை க்யூல கொண்டு வந்து நிறுத்துவாங்க! அதை விட்டுட்டு வெள்ளைக்காரியைக் கரெக்ட் பண்ணி சுத்திட்டிருக்கான் போக்கேத்தவன்! இந்த பிங்க் லிப்ஸ்டிக்காரி யாரு டா?, ரஷ்யனா?சைனீஸா?, இவளும் 6 மாசத்துல ஓடிடுவா! சாபம் விட்றேன்”
-வாசலில் நின்றபடி விடாது கத்திக் கொண்டிருந்த சாதனாவைக் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு டிரெஸ்ஸிங் டேபிளின் அருகே சென்றான்.
“ஏய்ய் வெட்டிப் பேச்சு பேசாம போய் ப்ரேக் ஃபாஸ்ட் பண்ணுடி! மாமியாரும்,மருமகளும் எப்போப் பாரு, ‘பொண்ணு,கல்யாணம்’-ன்னு அவனுக்கு டார்ச்சர் கொடுக்குறீங்க! அந்தக் கருமத்தைப் பண்ணிக்கிட்டு நான் பட்ற கஷ்டம் போதாதா?” – விக்ரம் தொடர்ந்து கத்துவதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் கௌதம் .
“ஓ! என்னைக் கல்யாணம் பண்ணதால நீங்க கஷ்டப்பட்டுட்டிருக்கீங்க. ம்ம்???” – சாதனா.
“இல்லைன்னு பொய்யெல்லாம் சொல்ல முடியாது” – தைரியமாக முறுக்கிக் கொண்டான் விக்ரம்.
“அப்டின்னா இன்னிக்கே டிவர்ஸ் அப்ளை பண்ணலாம். 10மில்லியன் டாலர்ஸ் ஜீவனாம்சமா கேட்பேன்! கொடுக்க ரெடியா இருங்க”
“விட்டா வைட் ஹவுஸை விலைக்கு வாங்கிக் கொடுங்கன்னு கூட கேட்ப போல! போடி ஏய் போடி..”
“ஏன் கேட்பேனே! பொண்டாட்டி மேல தான் அக்கறை இல்லன்னு பார்த்தா.. கூடப் பிறந்தத் தம்பி மேலயும் இல்ல! அவன் கண்ணெல்லாம் சிவந்திருக்கிறதைப் பார்த்தா.. மூக்கு முட்டக் குடிச்சிட்டு மட்டையான மாதிரி தெரியுது! நீங்க அவனை எதுவும் கேட்க மாட்டீங்களா?”
“கேட்கனும்! கேட்கனும்! என்னை விட்டுட்டு ஏன் டா நீ மட்டும் குடிச்சன்னு கண்டிப்பாக் கேட்கனும்”
“என்ன ஜோக்கா?”
“ப்ச், சானு எனக்கு டைம் ஆச்சு. நாம மறுபடி ஒன்றரை மணி நேரம் ட்ராவல் பண்ணனும். அவனைப் பார்க்கனும்ன்னு சொன்ன! பார்த்தாச்சுல? சீக்கிரம் கிளம்பு! போ!” என்று அவசரப்படுத்த.. “அண்ணனும்,தம்பியும் என்ன ஜென்மங்களோ” எனத் திட்டியபடி நகர்ந்து விட்டாள் சாதனா.
இருவரது சம்பாஷணையையும் கேட்டபடி கண்ணாடி முன் நின்று சட்டை அணிந்து கொண்டிருந்த கௌதம், திடீரெனத் தோன்றிய உணர்வுடன்.. கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கி நோட்டைக் கையில் எடுத்தான்.
அவள் எழுதிச் சென்றிருந்த வாக்கியங்களைக் கண்டுப் பல்லைக் கடித்தவன்.. கண்ணாடியின் அருகே சென்று.. தன் முகம் பார்த்துக் கீழுதட்டைத் தடவிக் கொண்டான்.
“நகமா அது?, நல்லா தீட்டி வைச்சக் கத்தி மாதிரி எவ்ளோ ஷார்ப்! ராட்சசி! முத்தம் கொடுத்ததுக்கு இப்படி மூக்கால அழ விட்டாளே!” – என்றவனுக்கு.. இரவு நடந்த சம்பவங்களனைத்தும் முழுதாய் நினைவுக்கு வராமல்.. உடைந்த கண்ணாடித் துண்டுகளாய்.. மூளை செல்களுக்குள் சிதறிக் கிடந்தது.
நினைவு கூர முயன்று தோற்றவனுக்கு.. அவள் முகம்,குரல் என எதையுமே ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அவன் தொட்ட போது சில்லிட்டிருந்த அவள் கரங்கள், அவனது நாசியை நிறைத்த லாவண்டர் மணம், அவன் முகம் உரசிய நான்கடி கூந்தல், கடைசியாக.. அந்த ‘ரோஸ்பட்’ கன்னங்கள் என கண் கண்ட பிம்பத்தை விட.. அவன் சருமம் உணர்ந்த ஸ்பரிசமே மனதுக்குள் நீடித்து நிலைத்திருந்தது.
ஐம்புலன்களில் மெய் மட்டுமே போதையிலும் விழித்திருக்கும் சக்தி கொண்டது போலும்! கண்றாவி! என மனதுக்குள் நினைத்துக் கொண்டு ‘இன்னொரு முறை உன்னைப் பார்த்தா.. இதே மாதிரி கண்டிப்பா கிள்ளி வைப்பேன்டி என் கிள்ளி வளவி” என்று திட்டியபடி டைனிங் டேபிளுக்கு சென்றான்.
ஃபுல் ஃபார்மல்ஸில்.. தெளிந்த முகத்துடன் வந்தமர்ந்தவன் ரொட்டித் துண்டுகளின் மீது கை வைக்க.. அவன் கையைத் தட்டி விட்டு முறைத்தாள் சாதனா.
“என்ன?” – கௌதம்.
“இனி தினமும் ரொட்டி தான் சாப்பிடப் போற! இன்னிக்கு ஒரு நாள் இட்லி சாப்பிடு! அத்தை உனக்காக காரச் சட்னியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்காங்க” என்றபடி அவனுக்கு இட்லியைப் பரிமாறினாள்.
“ப்ச், இப்ப என்ன இட்லி சாப்பிடாம என்னால உயிர் வாழ முடியாதா? வர வர நீயும்,அம்மாவும் ஓவரா போயிட்டிருக்கீங்க! நான் தான் வீக் எண்ட்ல வர்ரேன்னு சொன்னேனே?, காலைல வேலைக்குப் போறவரை இழுத்துட்டு இவ்ளோ தூரம் வரனுமா நீ?, இந்த இட்லியை எனக்கு சமைச்சு சாப்பிட்டுக்கத் தெரியாதா?”
“நல்லாக் கேளு!”
தன் பேச்சுக்கு ஒத்து ஊதிய தமையனைத் திரும்பி முறைத்த கௌதம் “ஆனா.. நீங்க இப்டி இருக்காதீங்க. அம்மாவும்,இதுவும் என்ன சொன்னாலும் தலையாட்டுவீங்களா நீங்க?” என்றான்.
“என்ன டா என்னைத் திட்டுற?” - விக்ரம்
“பின்ன திட்டாம?”
-அதுவரையில் இட்லியை வாய்க்குள் அடைத்துக் கொண்டிருந்த சாதனா உடனே பொங்கி எழுந்து “இப்ப என்னடா?, நான் வந்தது தப்பு தான்! புது ஊரு! புது இடம்! தனியா இருந்து கஷ்டப்படுவியே! புது வேலைல வேற சேரப் போறியேன்னு பாவப்பட்டுத் தேடி வந்தேன் பாரு! என்னைச் சொல்லனும்! ஏய்.. கிளம்புடி! உன் அப்பாவும்,சித்தப்பாவும் எப்படியோ போகட்டும்! நாம பாட்டிக் கிட்டப் போகலாம்” – எனப் பொரிய..
கையைக் கட்டிக் கொண்டு அவளை முறைத்தவன்..
“சும்மா சீன்-ஐப் போடாத. தட்டுல இட்லி காலியாய்டுச்சுன்னு தெரிஞ்சு தான எந்திரிச்ச இப்போ?” – என்றான்.
மூக்கை விடைத்துக் கொண்டு ரோஷத்துடன் விறுவிறுவென அடுப்படியில் நுழைந்தவளைக் கண்டு “நீ பாட்டுக்கக் கோபத்துல இன்னும் 4 இட்லியை உள்ள இறக்கிடாத! இப்பவே நீ ஏறுனா.. கார்ல ஒரு டயர்ல காத்து இறங்கிடுது” என்று விடாமல் வாரினான் கௌதம்.
“டேய் டேய் டேய்... ஒரு குழந்தைப் பெத்தப்புறமும் கூட இஞ்சி இடுப்பழகின்னு தான் டா உன் அண்ணன் என்னைப் பார்த்து பாடுறாரு!”
“அவருக்கு வேற வழி?”
“வாயை மூடிட்டு சாப்பிடு டா! மூஞ்சியைப் பேத்துடுவேன்”
“வாயை மூடிட்டு எப்படி சாப்பிட்றது?” என்று மொக்கை போட்டு “இன்னொரு இட்லி கொண்டு வா” என்று சத்தமிட்டான்.
அவன் கேட்டதை விட கூடுதலாகவே அவன் தட்டில் இட்லிகளை அடுக்கியவள்.. “அத்தைக் கிட்டப் பேசு டா கௌதம். பாவம் ரொம்ப ஃபீல் பண்றாங்க” என மெல்லக் கூற.. மீண்டும் நிமிர்ந்து அவளை முறைத்தான்.
“எதுக்கு?, மாயவரம் மலர்க்கொடி,கன்னியாகுமரி காயத்ரின்னு வரிசையா பொண்ணுங்க பேரைச் சொல்லி கட்டிக்கிறியான்னு கேட்பாங்க! முதல்ல கல்யாணம்,கருமாதின்ற பேச்சையெல்லாம் எடுக்க வேணாம்ன்னு சொல்லு. அப்புறம் நான் பேசுறேன்!, ஏற்கனவே இவங்க கொடுத்த பிரெஷரால காத்ரீனா கிட்ட ப்ரோபஸ் பண்ணி டிஸ்போஸ் ஆன கார்பேஜ் ஸ்டேட்ல இருக்கேன் நான். ”
“கௌதம்.. அத்தை சொல்ற பேச்சைக் கேளு டா! வெள்ளைக்காரப் பொண்ணுங்க எல்லாம் நமக்கு ஒத்து வர மாட்டாங்க டா!”
“தமிழ்ப் பொண்ணுங்க யாரும் என் டேஸ்ட்டுக்கு ஒத்து வர்ற மாதிரி தெரியலயே”
“உன் டேஸ்ட் என்ன பெரிய புடலங்கா டேஸ்ட்! உன் அண்ணனெல்லாம் என்னைக் கட்டிக்கல?”
“அதனால தான் வேணாம்ன்றேன்”
“டேய்ய்ய்ய்” எனப் பல்லைக் கடித்தவள் “நீயெல்லாம் சாமியாராத் தான் டா போவ” என்று சாபம் விட.. “இப்போல்லாம் குஜால் பண்றதுல எக்ஸ்பெர்ட்டா இருக்கிறவன் தான் சாமியாராக முடியும், அவசரப்பட்டு சாபம் விடாத” என்றவனிடம் “ச்சை” என்று விட்டு அவள் நகர்ந்து விட்டாள்.
தன்னைப் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த திஷாவைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டவன் “உங்கம்மாவுக்கு ஓரகத்தி சண்டை போட ஆள் தேவைப்படுது பாப்பா! அதனால தான் சித்தப்பாவை வம்பிழுக்குறா. “ எனக் கூறிச் சிரிக்க.. என்னவென்று புரியா விட்டாலும் அந்தக் குழந்தையும் சிரித்து வைத்தது.
“உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு டா! இவங்களையெல்லாம் டீல்ல விடு”
ஆதரவாகப் பேசிய அண்ணனிடம் அவன் முறுவலிக்க..
“காத்ரீன் நிஜமாவே கழட்டி விட்டாளா டா?” என்று கேட்டான் விக்ரம்.
“ஆமா!”
“ஃபீல் பண்றியோ?”
“பின்ன இருக்காதா?”
“ஏன்?, இவ தான் உனக்கு ஃபர்ஸ்ட் லவ்வா?”
“அப்டி இல்...ல”
“பின்ன என்ன?”
“ஃபர்ஸ்ட் டைம் ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கேன்! அவ கூட அட்டாச்டா ஃபீல் ஆயிட்டேன் போல! அதான் கடுப்பா இருக்கு”
“அடப்பாவி! அப்டின்னா.. 28 வருஷமா கற்போடவா வாழ்ந்திட்டிருந்த நீ?”
சாம்பார் படிந்த விரல்களை நக்கியபடிக் கண்ணை விரித்த விக்ரமை சந்தேகமாய் நோக்கி..
“அம்மாவோட செல்லப் பிள்ளை பேசுற பேச்சா இது?, அண்ணா... நீங்க பெரிய மன்மதன் போலயே! அண்ணி..... இங்க வா.. உன் புருஷன் ஏதோ கேட்குறாரு. என்னன்னு வந்து பாரு” என்றவனின் தலையில் அடித்து..
“வாயை மூட்றா குரங்கு” என்றவன் “சானு... நான் உனக்குப் பாத்திரம் கழுவித் தரட்டுமா டா?” எனக் கேட்டபடியே கிட்சனுக்குள் நுழைந்து கொண்டான் விக்ரம்.
ஒரு வழியாக அவர்களிருவரையும் கிளப்பி “இனியொரு முறை இப்படி அலைய வேண்டாம்! தனியாக சமாளித்துக் கொள்வேன்” என நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்து விட்டுத் தன் அலுவலகத்துக்குக் காரில் கிளம்பினான் கௌதம்.
அண்ணனும்,அண்ணியும் இத்தனை தூரம் அலைந்து அவனைக் காண வந்திருப்பதன் காரணம் அவனது அன்னை ராஜாத்தியாகத் தான் இருக்க முடியும். ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்டது அவருடன் அவன் பேசி!
அம்மா,அண்ணன்,அண்ணி,திஷா அனைவரும் ஜெர்சி சிட்டியில் வசிக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு வரை இவனும் கூட அங்கே தான்.
கௌதம் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். மேற்படிப்புக்காக முதலில் யு.எஸ் வந்தது விக்ரம். அதன் பின்பு அங்கேயே அவனுக்கு வேலையும் கிடைத்து விட.. அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் யு.எஸ்ஸில் படிப்பைத் தொடர்ந்தான்.
அவன் படித்துக் கொண்டிருக்கையிலேயே அவர்களது தந்தை கனகரத்னம் காலமாகி விட.. கௌதமும் அங்கேயே வேலைக்கும் சேர்ந்து விட்டதால் அண்ணனும்,தம்பியும் அன்னையை உடன் அழைத்துக் கொண்டனர்.
விக்ரம் தன் உடன் வேலை பார்த்த சாதனாவையே விரும்பித் திருமணம் செய்து கொள்ள.. அதன் பின்பு இந்தியா செல்வதற்கான அவசியமே இல்லாது போயிற்று ராஜாத்திக்கு. மகன்களுடனும்,பேத்தியுடனும் சேர்ந்துத் தானும் அமெரிக்கவாசியாகி விட்டார்.
அந்நாட்டின் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றவாறு உடைகளை மாற்றிக் கொள்ள முடிந்தவரால், பழக்கவழக்கங்களைப் பாரம்பரியத்தை அத்தனை எளிதில் மாற்றிக் கொள்ள முடியவில்லை!
விக்ரம் அன்னையின் பேச்சுக்கு அச்சுப்பிசகாமல் ஆட்டம் ஆடுபவன். ஆனால் கௌதம் அவனுக்கு நேர் எதிர். விக்ரமின் காதலுக்கு ராஜாத்தி ஒத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் சாதனா தமிழ்ப்பெண் என்பதால் தான்!
ஆனால் இவனோ.. ஜாதி,மதம்,இனம்,நாட்டையெல்லாம் பார்த்து வருவதில்லை காதல்! என் மனதிற்குப் பிடித்தவள் பில்கேட்ஸின் மகளாக இருந்தாலும்,அவளைத் தான் கட்டுவேன்! எனக் கூறி அன்னையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினான்.
எப்போது,எவளை இழுத்துக் கொண்டு வருவானோ, அதற்குள் தான் பார்க்கும் பெண்ணை இவனுக்குக் கட்டி வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இருக்க, இவனோ உடன் வேலை செய்யும் காத்ரீனாவின் மீது காதல் கொண்டான்.
மனம்,உடல் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டுத் தம்பதியாய் வலம் வந்தவர்களை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டாள் சாதனா.
அன்னையிடம் அவள் வற்றி வைத்ததில் அவரது திருமண டார்ச்சர் அதிகரிக்க... விளைவு.. அவன் பொகிப்சியில் வேலையைத் தேடிக் கொண்டு தனியே வசிக்கத் துவங்கி விட்டான்.
இதற்கிடையில் காத்ரீனாவிடம் இவன் திருமணத்துக்குக் கேட்டு அவள் “நான் திருமணம் செய்யும் நோக்கத்துடன் உன்னுடன் பழகவில்லை. நாம் பிரிந்து விடலாம்” என்று குண்டைத் தூக்கிப்போட... அது வேறு ஒருபுறம் தீராக் கோபத்தை அளித்திருந்தது அவனுக்கு,
இந்நேரம் சாதனா அன்னையிடம் இவனது ப்ரேக் அப் விசயத்தைச் சொல்லியிருப்பாள். மாமியாரும்,மருமகளும் கும்மாளமிடாத குறையாகக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்! மாமியார்-மருமகள் உறவென்பது சண்டை,சச்சரவுகளுடன் இருக்கும் வரை தான் ஆண்களுக்கு நல்லது! முற்றிலும் முரண்பாடான இந்தக் கூட்டணி ஒன்று கூடி விட்டால்.. அல்லி ராஜ்ஜியம் தான்!
காத்ரீனாவினுடனான காதலைத் தெரிந்து கொண்டதிலிருந்துத் தினம் நம் பாரம்பரியத்தைப் பெருமை பேசும் பாடல்களையும், செய்திகளையும் வாட்ஸ் அப் மெசேஜ்களாக அனுப்பி அவனைக் கதற விட்டவர் ராஜாத்தி. இப்போது நிச்சயம்.. காதலைத் தாண்டிக் குடும்ப உறவுகள் எத்தனை முக்கியம் என்பது குறித்த மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருப்பார். காத்ரீனாவுடனான சண்டையில் செல்ஃபோனை உடைத்தது நல்லதாகிப் போயிற்று!
பெருமூச்சுடன் அலுவலக பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவன், யோசனைகளனைத்தையும் ஒதுக்கி வைக்க முயற்சித்தபடி காரை விட்டுக் கீழிறங்கினான்.
காசுக்குக் குறைவில்லாதக் கணினித் துறையைச் சேர்ந்தவன் அவன். சொல்யூஷன் ஆர்க்கிடெக்ட்.
வேலை செய்யத் துவங்கிய.. இந்த எட்டு வருடங்களில் இது அவனது மூன்றாவது கம்பெனி. கம்பெனி,கம்பெனியாகக் குதிப்பதற்கு பெரிய காரணம் எதுவும் கிடையாது! முதல் முறை வெளியே வந்தது சம்பளம் போதவில்லை என்பதற்காக! இப்போது.. அன்னையின் தொல்லையிலிருந்துத் தப்பிப்பதற்காக!
பெரும்பாலான சாஃப்ட்வேர் மக்களைப் போல கடனுக்கு வேலை பார்க்காமல்.. செய்யும் தொழிலை நேசித்து உற்சாகமாய் வலம் வருபவன் அவன்!
ப்ரஷர்,டென்ஷனையெல்லாம் சுலபமாகக் கையாளத் தெரிந்தவன்! ஆனால்.. அதற்கும் விதிவிலக்காக அமைந்து விட்டது காத்ரீனாவுடனானக் காதல்!
ஸ்டைல் குறையாமல் பெக்,பெக் ஆக அடிப்பவனை ஒரே வார்த்தையில் மொடாக்குடிகாரனாக்கி அநாதையாய் தெருவில் சுற்ற வைத்து விட்டாள் கடன்காரி!
கடைசியில் காப்பாற்றிக் கரை சேர்த்தப் புண்ணியவதியும் காயத்தைத் தான் தந்து சென்றிருக்கிறாள்!
காத்ரீனா மனதைப் புண்ணாக்கினாள். இவள் உடலைப் புண்ணாக்கியிருக்கிறாள்.
அந்தக் கிள்ளி வளவியைப் பற்றி எண்ணியதும்.. கீழ் உதட்டில் உண்டான வலி.. சற்று அதிகமாகவேக் கீழிறங்கி.. அடிவயிற்றிலும் நமைச்சலைக் கொடுக்க.. திடீரென அவன் மூளை குறும்படம் ஒன்றை அவசரமாக அவனுக்கு ஒளிபரப்பிக் காட்டியது.
கம்பமொன்றின் அருகே அவன் நின்றிருக்க.. அவனெதிரே நின்றிருந்த உருவம் தன் வலக்கையால் அவனது அடிவயிற்றிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டது.
அப்போது தான் அடிவாங்கியதைப் போல் சட்டென நின்றவனுக்கு.. சரியான ஜாக்கி சானியா இருப்பா போலவே! என்னாஆஆஆ அடி! எத்தனை அடி! இதுவரை அவள் ஒரு கிள்ளி வளவி என்று தான் நினைத்து வைத்திருந்தான். இப்போது தான் புரிந்தது அவள் ஒரு குஸ்தி குருவம்மா என்பது!
‘ஆல் கேர்ள்ஸ் ப்ளேயிங் இன் மை லைஃப்’ எனக் கண்ணீர் விட்ட மனசாட்சியின் தலையைக் கோதி சமாதானம் செய்து விட்டு.. அலுவலகத்தின்னுள்ளே நுழைந்தான்.
அன்று தான் முதன் முறையாக வருகிறான் என்பதால்.. செக்யூரிட்டி அளித்த ‘டெம்ப்ரரி பாஸ்-ஐ’ கையில் வாங்கிக் கொண்டு லிஃப்ட்டின் அருகே சென்று நின்றான்.
அவனைத் தொடர்ந்து நடந்து வந்த வெள்ளைக்காரப் பெண்ணின் கண்களை நோக்கிச் சென்றது அவன் பார்வை.
காத்ரீனாவுக்கும் நீல நிறக் கண்கள் தான்! காதலும்,காமமுமாய் எத்தனையோ முறை அந்தக் கண்களுடன் அவன் உறவாடியிருக்கிறான்.
இது போலத் தன்னை நினைவூட்டும் எதுவும் அவள் கண்ணில் படாமலா இருக்கும்?, அவளும் தன்னைப் போல உணர்வாளா?, அவன் அருகாமையை நினைத்துப் பார்ப்பாளா?,
அடிமனதிலிருந்துப் பொங்கி எழுந்து அவன் தொண்டையை அடைக்க எண்ணியத் துக்க உணர்வை.. ஒரே அமுக்காய் அமுக்கிப் போட்டு விடும் நோக்கத்துடன் அவன் நாசியை நிறைத்தது அந்த மணம்.
கல்வின் க்ளெய்ன் லாவண்டர் பர்ஃப்யூமின் மென்மை பரப்பும் நறுமணம்!
சுவாச உறுப்புகளின் சுவர்களில் பாசியாய்ப் படிந்து போய்க் கிடந்த அந்த மணமும், புண்ணாகிப் போன உதட்டின் சதை ஓரத்தில்.. ஒட்டிக் கிடந்த அவள் கன்னத்தின் மீதியும்.. உடலிலும்,மனதிலும் கடத்திய மென்மை.. காத்ரீனாவைப் பற்றிய யோசனைகளைப் பின்னுக்குத் தள்ள.. ஆர்வமாய் நிமிர்ந்து நோக்கினான் அவன்.
தன்னை ஓர் ஆண்மகன் உற்று நோக்குவதை உணர்ந்த அந்தப் பெண்ணும்.. அதுவரை நடையிலிருந்த வேகத்தைக் குறைத்து விழி விரிய அவனை பார்த்துத் தயங்கித் தடுமாறிப் பின் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
இவள் தானா அது?, அவசரமாய் மூளையிடம் கேள்வியைக் கடத்தினான்.
பதில் தெரியவில்லை! ‘பாஸ்’ என்று விட்டது அது!
“ப்ச்” என சலித்துக் கொண்டு.. முன்னே நின்றவளின் பக்கவாட்டுத் தோற்றத்துக்கும், உரு தெரியாது உள்ளே பதிந்து கிடந்த உருவத்துக்குமான ஒற்றுமை,வேற்றுமையை ஆராய முற்பட்டான்.
முட்டி வரையிலான ஃபார்மல் ஸ்கர்ட்டில் நின்றவளின் சருமம் இந்திய நிறத்தைக் கொண்டிருந்தது. தான் முத்தமிட்ட அவளது கன்னத்தின் நிறத்தைக் கண் மூடி நினைவு கூர முயன்றான்.
உதடு உணர்ந்த அளவு கண்கள் உணரவில்லை போலும்! நினைவிற்கு வர மறுத்தது.
அதே நான்கடி கூந்தல்! அருகே சென்று அதில் மூக்கை நுழைத்துப் பார்த்தால்.. அவனது சந்தேகம் தீரலாம்! ஆனால்.. இந்த முறை அவள் மூக்கைக் கிள்ளி வைத்தாலானால்.. அவன் முகத்தை மூடிக் கொண்டு தான் வலம் வர வேண்டும்.
கடுப்புடன் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு நின்றவனுக்கு.. அவள் கர்ம சிரத்தையுடன் தன் முகத்தை அவனுக்குக் காட்டாமல் திரும்பி நிற்பதைப் போல் தோன்ற.. இவள் நிச்சயம், அவளாகத் தான் இருக்க வேண்டும்! எங்கே, திரும்ப கிள்ளி வைத்து விடுவேனோ என்கிற பயத்தில் திரும்பிக் கொண்டு நிற்கிறாள் போலும்!
இவளை..... என்றெண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டு அவன் ஓரடி முன்னே எடுத்து வைக்கையில்.. மீண்டும் குப்பென நாசியை நிறைத்தது லாவண்டர் மணம். இம்முறை சற்றுத் தூக்கலாய்!
தன்னையறியாமல் வாசம் வந்த பாதையில் அவன் பார்வையைத் திருப்புகையில்.. தூக்கிக் கட்டியக் கொண்டையுடன், அணிந்திருந்த ஃபார்மல் பேண்ட்டுக்குள் வலது கையை விட்டபடி.. ஹீல்ஸ் சப்தம் ஒலிக்க மிடுக்குடன் நடந்து வந்து லிஃப்ட் அருகே நின்றாள் ஒருத்தி.
திராவிட நிறத்திலிருந்த அவளது முகத்திலிருந்து நீண்டு இரண்டு இஞ்ச் முன்னே நின்ற கூரான மூக்கு விடைத்திருந்த விதமே சொல்லியது! அவள் காலை டிஃபனுடன் சேர்த்து ரெண்டு ப்ளேட் திமிரைத் தினமும் உண்பவள் என்று!
உச்சியை விட்டுக் கீழிறங்காது தூக்கிய வாக்கிலேயே நின்றிருந்தப் புருவங்கள் இரண்டும் அவளது கர்வத்தை எடுத்துக் காட்டின. லிஃப்ட்டின் டிஸ்ப்ளேயில் தெரிந்த எண்களில் மட்டுமே கருமணிகளைப் பதித்து இனம் புரியாத எதிர்மறை எண்ணங்களைக் காற்றில் உலவ விட்டுக் கொண்டிருந்தவளை.. அதற்கு மேல் பார்க்க முடியாதுத் திரும்பிக் கொண்டான் அவன்.
தோற்றத்தை வைத்து யாரையும் தீர்மானிக்கக் கூடாது தான்! ஆனாலும்.. ஏனோ.. முதல் பார்வையிலேயே அவள் மீது ஒரு வெறுப்பு தோன்றி விட்டது அவனுக்கு.
சுடுகாட்டு சாம்பலைப் பூசிட்டு சுத்த வேண்டிய ஜென்மங்களுக்கெல்லாம் எதுக்கு லாவண்டர் பர்ஃப்யூம்??, பலாப்பழத்துக்கு வெல்வெட் துணியால சொக்கா போட்ட மாதிரி!
மென்மை பரவிக் கிடக்க வேண்டிய மெய்யா இது?,
மூன்றே அடி முகத்தை மூக்கு நுனியில் சுருட்டி வைத்துக் கொண்டு சுருங்கிப் போய் நின்றவளிடம் அதற்கு மேல் ஆர்வம் காட்டாது.. அவன் முகத்தைத் திருப்புகையில் லிஃப்ட் வந்து நின்றது.
பாலைக் கண்டப் பூனைக்குட்டிகளாய் அனைவரும் லிஃப்ட்டை நோக்கி நகர.. கடைசியாய் ஏறிய கௌதம், அந்த லாவண்டர் மங்கைகளின் மத்தியில் நின்றான். மனம் மட்டும் நிகழ்தகவில் முனைவர் பட்டம் வாங்கி விடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
உலகத்திலேயே இவர்களிருவர் மட்டும் தான் லாவண்டர் பர்ஃப்யூம் உபயோகிப்பவர்களா?. இதென்ன முட்டாள்தனம்!
நேற்றிரவு அடித்த சரக்கின் மீதம் மூளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான் இந்தக் குழப்பமெல்லாம்! ஈரம் காய்ந்து போதை தீரும் போது.. தெளிவு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் இரண்டாவது தளத்தில் இறங்கியவன் அறிந்திருக்கவில்லை! குழம்பிக் குழம்பியேக் குட்டையில் மூழ்கப் போகிறோமென்பதை!
