அத்தியாயம் - 12
‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்…
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்..
நினைவு தராமல்.. நீ இருந்தால்..
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்…’
மகிழ்ச்சித் துகள்கள் தூவப்பட்டிருந்தக் குளிர்க் காற்று அவர்கள் செல்லும் வழியெங்கும் பின் தொடர.. ஆர்ப்பாட்டமாய் வரவேற்கும் அதன் வேகத்தோடு ஈடு கொடுத்தபடி.. அந்த நெடுஞ்சாலையில்.. நியூயார்க்கிலிருந்து ஜெர்சி சிட்டியை நோக்கிக் கௌதமின் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
பிண்ணனியில் மெல்லிசை மன்னரோடு பி.சுசீலா இணைந்ததில் தேன் மழை வேறு!.
கல்யாணம் பேசப் போகிறேன் எனக் கூறியவன் அடுத்த இரண்டு வார விடுமுறைகளையும் நியூயார்க் செல்லவிருந்தத் திவ்யாவுடனேக் கழித்து விட.. மூன்றாவது வார ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்துக்கு இடம் பெயர்ந்து விட்டவளை.. ஒருவார இடைவெளிக்குப் பிறகு அன்று தான் சந்தித்திருந்தான்.
பொதுவாக வாரக் கடைசியை பூ பூ கிட்ஸில் கழிக்கும் வழக்கம் கொண்டிருந்தத் திவ்யா.. தானும் அவனோடு ஜெர்சி சிட்டிக்கு வருவதாகக் கூற.. இருவருமாகச் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.
“நீ சப்மிட் பண்ணின செக்யூரிட்டி டாக்யூமெண்ட்ல என்ன சேஞ்சஸ் எல்லாம் தேவைப்படுதுன்னு லாரா ஈமெய்ல் பண்ணியிருக்கா கௌதம். நீ இந்த வீக்-எண்ட் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணினா, மண்டே ரிவ்யூக்கு அனுப்பிடலாம்”
மடியில் லேப்டாப்பை வைத்துக் கொண்டு.. அதன் திரையைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தத் திவ்யா, அவனிடமிருந்துப் பதில் வராது போகவும்.. நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
“ஏன் முறைக்குற கௌதம்?”
எரிச்சலுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையை உணர்ந்து.. அவள் கேட்க..
“பின்ன என்னங்க? எவ்ளோ ரொமாண்டிக் ஆன சிச்சுவேஷன் இது? இரவு,நிலவு,குளிர்,கார் ட்ராவல், கூடவே எம்.எஸ்.வின்னு ஏகாந்தமா இருக்குற சூழ்நிலையை கெடுக்கனும்ன்றதுக்காகவே.. இப்பவும் லேப்டாப்பைத் திறந்து வைச்சிருக்கீங்க நீங்க? ச்ச!” – பொரிந்துத் தள்ளியவனைக் கண்டு.. உதட்டை மடித்துச் சிரித்தபடி மடிக்கணினியை மூடி வைத்தாள் அவள்.
“சரி, சொல்லு” – திவ்யா
“என்ன சொல்ல?” – உர்ரென்ற முகத்துடனே வினவினான் அவன்.
“ப்ச், கௌதம்…”
“என்னை மிஸ் பண்ணீங்களா?” – வழிந்து வந்தது அவன் குரல்.
“இந்தக் கேள்வியைத் தான் நீ தினம் ஃபோன்ல கேட்குறியே”
“எத்தனை தடவைக் கேட்டாலும்.. நீங்க தான் பதில் சொல்ல மாட்டேன்றீங்களே! முழுசா 5 நாள் உங்களைப் பார்க்காம இருந்திருக்கேன்! கொஞ்சம் கூட உங்களுக்கும் ஃபீலிங்க்ஸே இல்லையா?”
“அதுக்காக இப்போ என் முகத்தை பார்த்துட்டே இருக்காத கௌதம். ரோட்டைப் பார்த்து ஓட்டு”
“ப்ச், மழுப்பாம பதில் சொல்லுங்க”
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்.. டூ பீ ஃப்ராங்க்…. பெருசா மிஸ் பண்ற ஃபீல் எல்லாம் எனக்கு இல்ல கௌதம்”
அசால்ட்டாகக் கூறியவளைத் திரும்பி முறைத்தான் அவன்.
பொங்கிய சிரிப்பை அடக்கி.. புருவம் சுருக்கி யோசித்தபடி..
“நிஜமா தான்! நீ எப்பவும் என் கூடவே இருக்குற மாதிரி உணர்றேனா.. அதான் மிஸ் பண்ணல போல!” – என்றாள் அமைதியான குரலில்.
விழி விரித்து.. ஆச்சரியமாய்,ஆசையாய்,காதலாய்.. அவள் முகம் பார்த்தவன்..
உதட்டைக் குவித்துக் காற்றில் முத்தமிட்டு “ஐ லவ் யூ” என்றான்.
லேசாய்ச் சிரித்தபடித் தலை குனிந்து கொண்டாள் அவள்.
“இந்த மாதிரி ஒரு நைட்ல.. என் அடி வயித்துல ஓங்கிக் குத்து விட்டப் பொண்ணையேக் கட்டிக்குவேன்னு நான் நினைக்கவே இல்லங்க”
“ஹாஹாஹா…”
“ஆனா.. சரியான.. வைல்ட் கேட்-ங்க நீங்க!” – சிரித்தவளைக் கண்டு முசுட்டு முகத்துடன் அவன் கூற..
“ஏய்ய்.. திமிரா? குடிச்சுட்டு மட்டையாகி என் கார்ல விழுந்ததுமில்லாம.. ட்ராப் பண்ண சொல்லி சண்டை போட்டு.. எனக்கு சுமார் ஃபிகர்ன்னு வேற பேர் கொடுத்தா.. உதைக்காம சும்மா விடுவேனா?” – பதிலுக்கு எகிறினாள் அவள்.
“போதைல தப்பா சொல்லிட்டேன்ங்க! நீங்க சுமார் ஃபிகர் இல்ல. சூப்பர் ஃபிகர்” – வெளிப்படையாகவே வழிந்தான் அவன்.
“இதோடா….”
“ஆனாலும்.. என் அபார்ட்மெண்ட் வாசல்ல ட்ராப் பண்ணதுமட்டுமில்லாம, வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டீங்க பார்த்தீங்களா?, அதான் நீங்க என் மனசுல நச்சுன்னு நின்னுட்டீங்க”
“ஆமா, அதனால தான்.. திருடி பட்டம் கொடுத்த எனக்கு” – அங்கலாய்த்துக் கொண்டாள் அவள்.
“ஹிஹி! அது சும்மா உங்களை வம்பிழுக்கச் சொன்னது.”
“அதுசரி”
“நிஜமா தான்ங்க. நீங்க குடிச்ச காஃபி கப்பைக் கூட நான் அப்படியே வைச்சிருக்கேன் தெரியுமா?”
“கழுவாமலேவா?” – அருவெறுப்பில் அவள் முகம் அஷ்டக்கோணலாகியது.
“கழுவினா.. லிப்ஸ்டிக் கரை மறைஞ்சிடுமே!”
“ச்சை! கருமம் ஃபங்கஸ் ஃபார்ம் ஆகி கப் என்ன கதில இருக்கோ!”
“ஏன்ங்க.. இது எவ்ளோ ரொமாண்ட்டிக் ஆன விஷயம்?, இப்டிப் பேசுறீங்க?” – எரிச்சலாகி விட்டது அவனுக்கு.
“இதுல என்ன ரொமான்ஸ் இருக்கு?, வீடுன்றது சுத்தமா வைச்சிருக்க வேண்டிய இடம்! நீ உன் இஷ்டத்துக்குக் கண்டதெல்லாம் வைப்பியா?”
“நான் இந்த ட்ராவல் முடியுற வரைக்கும் வாயைத் திறக்குறதாவே இல்லங்க” – வெறுத்து விட்டது அவனுக்கு.
“ஹாஹாஹாஹா” – சத்தமாகச் சிரித்தவளிடம்..
“உங்க ரொமான்ஸ் ஹார்மோன் எப்பவும் உறக்கத்துல தான் இருக்கும் போல! அப்பப்ப அதைக் கொஞ்சம் தட்டி எழுப்பப் பாருங்க” – எரிச்சலோடு கூறியவன் சாலையில் கவனத்தைத் திருப்ப.. “ம்க்கும்” என்றபடித் தானும் திரும்பிக் கொண்டாள் அவள்.
“ஆமா, ரொம்ப நாளா கேட்கனும்ன்னு நினைச்சேன்! என்னை ஆஃபிஸ்ல முதல் நாள் பார்த்தப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்க தான?, ஆனா.. தெரியாத மாதிரி ஏன் நடிச்சீங்க?” – மறுபடி அவனே தொடங்கினான் கௌதம்.
“நடிக்காம என்ன செய்யனும்?, நீ செஞ்சு வைச்ச வேலைக்கு?”
“ஹாஹாஹா!”
“ஏன் அப்படிப் பண்ண கௌதம்?, லவ் ஃபெயிலர்ல குடிச்சு மட்டையானவன் பார்க்குற வேலையா அது?”
“ம்க்க்க்கும்! தெரியலங்க! அந்த லாவண்டர் ஸ்மெல் என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணிடுச்சு போல!”
“தைரியம் தான் உனக்கு!”
“ஃபர்ஸ்ட் பார்த்தப்போ.. என்ன நினைச்சீங்க என்னைப் பத்தி?”
“பொறுக்கின்னு தான்!”
“ஹலோ! என்ன திமிரா?”
“பின்ன யார்ன்னே தெரியாத பொண்ணுக்கு முத்தம் கொடுத்தவனை உத்தமன்னா நினைக்க முடியும்?”
“அ…அது.. உங்கக் கன்னத்துல ஏதோ இருக்குங்க! கன்னத்துக்குன்னு ஸ்பெஷல் கேர் எதுவும் எடுத்துக்குறீங்களா?, ஏன் அநியாயத்துக்கு இவ்ளோ சாஃப்ட்-ஆ இருக்குது?”
“அதெல்லாம் இயற்கை கொடுத்தது.” – கெத்தாக அவள்.
“அதான்.. இறுக்கமா உங்களோட என்னைப் பிடிச்சு வைச்சிருக்கு” – வழிசலாக அவன்.
“ஒரு வேளை, காத்ரீனா உன் மேரேஜ் ப்ரோபோசலுக்கு ஓகே சொல்லியிருந்தா.. என்ன பண்ணியிருப்ப?”
“நடந்திருக்காதுங்க!”
“ஒரு வேளை நடந்திருந்தா…”
“நான் அப்படி யோசிக்கக் கூட விரும்பல! அவளைப் பத்தின நினைப்பெல்லாம் மூளையோட எந்த மூலைலயும் இல்ல! சொல்லப் போனா.. உன்னைத் தவிர வேற யார் கூடவும் அதிக நாள் என்னால காலம் கழிச்சிருக்க முடியாது.“
“ஏன் அப்படி சொல்ற”
“ஏன்னா.. உன் கிட்ட வெளிப்பட்ற என் அன்புல நிறைய வித்தியாசமிருக்கு! அது எனக்கே தெரியுது”
“என்ன வித்தியாசம்?”
“உன் கிட்ட ஈகோ பார்க்க முடியல, நீயும் என் மேல இதே அளவு காதலைக் காட்டனும்ன்னு எதிர்பார்க்கத் தோணல! என்னவோ.. நான் இந்தப் பிறப்பெடுத்ததே உன்னைக் காதலிக்க மட்டும் தான்-ன்ற மாதிரி நிறைய,நிறைய உன் மேல அன்பைக் கொட்டச் சொல்லி மனசு தூண்டுது! ஏன்னு தெரியல..”
“என் அப்பாவோட ஆவி உனக்குள்ளப் புகுந்துடுச்சு போல கௌதம்” –அன்பாய் அவனை விழிகளில் நிரப்பியபடி அவள்.
“ஹாஹாஹா! அப்படியா தோணுது உங்களுக்கு?”
“நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன் கௌதம்..”
“கவலையை விடுங்க! அதான்.. நான் இருக்கேனே!”
“…………..” – தூக்கக் கலக்கத்தில் சொக்கிக் கிடந்த விழிகள் இரண்டிலும் பூத்துக் குலுங்கி நின்ற காதல்… சோலையாய் நீண்டதன் விளைவு… பல்வேறு நிறங்களைப் பிரதிபலித்த அவள் முகத்தைக் கண்டு…
“இப்போவாவது சொல்லலாமே?” என்றான் அவன்.
“என்னன்னு?”
“……………”
“இப்போ…. முடியாது கௌதம்..” – தயங்கிய குரலில் அவள்.
“ஏன்?”
“அது அப்படித் தான்” – கெத்தாகக் கூறியபடிக் கையைக் கட்டிக் கொண்டு சீட்டில் தலை சாய்த்துக் கொண்டவளிடம்..
“தூக்கம் வருதா?” என்றான்.
“ஹ்ம்ம்!”
“கொஞ்ச நேரத்துல ரீச் ஆயிடுவோம்! இன்னிக்கு என் வீட்ல தங்கிக்குறீங்களா?”
மிகச் சாதாரணமாகக் கேட்டவனைக் கண்களை விரித்து நோக்கியவள் “உளறாத கௌதம்” என்றாள்.
“ஏன்ங்க? திஷா,என் அண்ணின்னு எல்லாரும் உங்களுக்குப் பழக்கம் தான?”
“அது வேற கௌதம்”
“திஷா உங்களைப் பார்த்தா ரொம்ப ஹாப்பி ஆவா”
“ஹாஹா! ஆமா! ரொம்ப அழகு அவ! பொம்மை மாதிரி! உன் வீட்ல ஃபோட்டோல பார்த்தப்புறம், அந்த வீக்-எண்ட் பூ பூகிட்ஸ்ல மீட் பண்ணேன்! பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன்! நானா போய் இன்ட்ரொடியூஸ் ஆய்க்கிட்டேன்! அவளும் என்னோட ஒட்டிக்கிட்டா!”
“ஹ்ம்ம், என்னைத் தவிர என் குடும்பத்துல எல்லாரையும் உங்களுக்குப் பிடிக்கும் போல”
“அப்படித் தான்!”
“ஆனா.. இவங்களையெல்லாம் விட முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கு. எங்கம்மா!” – என்றவனின் குரலில் அடுத்த நடக்கவிருக்கும் ரணகளத்தை உணர முடிந்தது.
சனிக்கிழமையன்றும் பூ பூ கிட்ஸ் இயங்கும் தானென்றாலும்.. விடுமுறை நாளாதலால் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைவாகத் தானாகிருக்கும்.
இரு நாட்களும் விடுமுறையை அனுபவித்து விட்டு.. மூன்றாம் நாள் ப்ளே ஸ்கூலுக்குச் செல்லத் திஷாவுடன் வார,வாரம் போராட வேண்டியிருப்பதால்.. சனிக்கிழமையன்றும் அவளைப் பள்ளிக்கு அனுப்பினர் விக்ரம்-சாதனா தம்பதியினர்.
சாதனா,விக்ரம் மற்றும் திஷா மூவரும் பூபூகிட்ஸூக்குள் நுழைந்த போது.. அங்கிருந்தத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சியபடி நின்றிருந்தாள் திவ்யா.
“மிஸ்.கேட்…” என்ற திஷா.. விக்ரமின் கையை உதறி விட்டு திவ்யாவை நோக்கி ஓடி வர..
“இந்தப் பொண்ணு தான்,இந்தப் பொண்ணு தான்” என்று கணவனின் தோளில் இடித்து முணுமுணுத்த சாதனா.. விரிந்த சிரிப்புடன் அவளருகே வந்தாள்.
மலர்ந்த முகத்துடன் குழந்தையைத் தூக்கினாலும்.. இருவரது முணுமுணுப்பையும் கவனித்தத் திவ்யா.. எப்போதும் போல்.. ரோபோ முகத்துடன் இருவரையும் கண்டு.. லேசாகப் புன்னகைக்க..
“ஹலோ! மிஸ்.கேட்! சாரி, திவ்யா.. என்னைத் தெரியும் தான?, நான் சாதனா. திஷாவோட அம்மா.. சாரி! கௌதமோட அண்ணி..” – எனப் படபடவென உளறிக் கொட்டினாள் சாதனா.
அவளது வேகத்தைத் தொடர முயன்ற திவ்யாவின் முகத்தைக் கண்டு..
“சாதனாஆஆஆஆ…” என்று மனைவியை அடக்கிய விக்ரம்..
“ஹாய் திவ்யா.. நான் விக்ரம். கௌதமோட அண்ணன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பதிலாக அவனிடம்.. மெல்லப் புன்னகைத்தவள்..
“பார்த்திருக்கேன்.. ஏற்கனவே.. நீங்க திஷாவை அழைக்க வரும் போது..” – என்று நிறுத்தி நிதானமாகக் கூற…
“ஹய்யய்யோ! நீங்க ஒரு செண்டென்ஸ் பேசி முடிக்கிறதுக்குள்ள.. கௌதம் ஒரு பேரக்ராஃபே முடிச்சிடுவானே! என்னங்க.. நீங்க.. இவ்ளோ ஸ்லோவா பேசுறீங்க” – அலுத்துக் கொண்ட சாதனாவை மீண்டும் முறைத்தான் விக்ரம்.
“சாரி! தப்பா எடுத்துக்காதீங்க! அவ அப்படித் தான்!” - விக்ரம்
“இ..இல்ல,இல்ல.. அவங்க சரியாத் தான் சொல்றாங்க” – என்றவள்..
“உள்ளே வாங்க. நீங்க லாபில உட்காருங்க. நான் போய் இவளை க்ளாஸ்ல விட்டுட்டு வர்றேன்.” எனக் கூறி விட்டுத் திஷாவுடன் வழக்கம் போல் அளவளாவியபடி திவ்யா முன்னே நடக்க..
அவள் நகர்ந்ததும் “வாயைக் குறையேன் டி!” என்று மனைவியிடம் பாய்ந்தான் விக்ரம்.
“ப்ச், இந்தப் பொண்ணு.. எண்ணி,எண்ணி பேசிட்டிருந்தா எனக்கு செட் ஆகாதுங்க!” – முகத்தைச் சுருக்கியபடி சாதனா.
“உனக்கு ஏன் டி செட் ஆகனும்?, அவனுக்கு செட் ஆனா.. போதும்! சும்மா.. உன் ஓரகத்தி கெத்தைக் காட்டலாம்ன்னு எதுவும் ப்ளான் பண்ண…..நொறுக்கிடுவேன் நொறுக்கி! சொல்லிட்டேன்”
“இப்போ என்ன? நான் அந்தப் பொண்ணு கூட எதுவுமே பேசக் கூடாதா?” – முகத்தைத் தூக்கியவளிடம்..
“நீ என்னமோ பண்ணு” என்றுப் பல்லைக் கடித்தான் விக்ரம்.
“வந்துட்டீங்களா?, வாங்க,வாங்க திவ்யா! திஷாவுக்கு எப்பவும் மிஸ்.கேட் புராணம் தான்! பூனை-ன்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமா?, வீட்ல எத்தனைப் பூனை வளர்க்குறீங்க?, எனக்குக் கூட செல்லப் பிராணிங்கன்னா.. ரொம்ப இஷ்டம்”
மறுபடி வளவளத்த சாதனா.. புருஷனின் வார்த்தைகளைப் பொருட்படுத்தியதாகவேத் தெரியவில்லை.
“இ..இல்ல! அது இங்க சும்மா.. ரைம்ஸ் வீடியோஸ்க்காக கேட்ன்னு வேஷம் போட்டது! மத்தபடி… எனக்குப் பிராணிங்க மேல பெருசா இன்ட்ரெஸ்ட் எதுவும் கிடையாது!” – அவள் எண்ணி,எண்ணித் தான் பேசினாள்.
“ஓ! பரவாயில்ல,பரவாயில்ல! வேற எதுலலாம் இன்ட்ரெஸ்ட்?” – சாதனா அவளை விடுவதாக இல்லை.
“சாதனா, நாம இப்ப அவங்களை இண்டர்வியூ எடுக்க வரல. நீ லூசுத்தனமா கேள்வி கேட்குறதை நிப்பாட்டு ப்ளீஸ்” – உச்சகட்ட எரிச்சலில் கிட்டத்தட்டக் கத்தினான் விக்ரம்.
சாதனாவின் திறந்தால் மூடாத வாயும், அதை சமாளிக்க முடியாமல் திணறும் விக்ரமையும் கண்டு சிரிப்பு வந்தது திவ்யாவுக்கு.
கையிலிருந்த குளிர்பான பாட்டிலை இருவரிடமும் நீட்டியபடி..
“இதைக் குடிங்க! நிறைய பேசியிருக்கீங்க! தொண்டை வரண்டு போயிருக்கும். நீங்க குடிக்கிற கேப்-ல நான் எனக்கு எதுலலாம் இன்ட்ரெஸ்ட்ன்னு சொல்றேன்” – எனக் கூறியவளைக் கண்டு விக்ரம் பக்கென சிரிக்க..
“என்னங்க திவ்யா, இப்டி ஒரே வாக்கியத்துல என்னை அசிங்கப்படுத்திட்டீங்க” – சலித்தபடி அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள் சாதனா.
அதன் பின்பு.. தொடர்ந்த ஒரு மணி நேரம்.. சாதனாவின் புண்ணியத்தால் கலகலவென.. அதாவது.. கடகடவெனக் கழிய.. சிறு புன்னகையுடனே அமர்ந்திருந்தாள் திவ்யா.
காதல்,கல்யாணம்,குலம்,குடும்பம் என்கிற வார்த்தைகளையெல்லாம் அவர்களிருவரும் உபயோகிக்காதது.. அவளை இயல்பான மனநிலையுடன் அவர்களோடு உரையாட வைத்தது.
“கிளம்புறோம் திவ்யா.. நேரமாச்சு! இன்னிக்கும் நான் ஆஃபிஸ் போகனும்” எனக் கூறியபடி விக்ரம் எழுந்து கொள்ள..
“நானும் கிளம்புறேன் திவ்யா, வீட்ல இருக்குற எருமைமாடு ஒன்னு, பெட்-ஐ விட்டுக் கூட கீழே இறங்கியிருக்க மாட்டான்! நான் போய் தான் அடிச்சு எழுப்பனும்” என்ற சாதனா.. நாக்கைக் கடித்தபடி..
“சாரி! அவனை எருமைமாடுன்னு சொல்லிட்டேன்! தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!”
“கவலைப்படாதீங்க! பதிலுக்கு நான் விக்ரம் சாரை எருமைமாடுன்னுல்லாம் திட்டிட மாட்டேன்” – நமுட்டுச் சிரிப்புடன் கூறியவளைக் கண்டு..
“வை மீ திவ்யா?” – அலறிய குரலில் விக்ரம்.
“நான் சொல்லலாம்ன்றியா? இல்ல சொல்லக்கூடாதுன்றியா?” – குழம்பியபடி சாதனா.
காது வரை நீண்ட புன்னகையொன்றை இருவருக்கும் பொதுவான பதிலாய்க் கொடுத்தவளைக் கண்டு.. “ஷ்ஷ் அப்பா! கஷ்டம்” என்ற சாதனா.. பின் சிரித்து “வர்றோம்” என்றபடிக் கிளம்ப.. தானும் புன்னகையுடனே வழியனுப்பினாள் திவ்யா.
அவர்களிருவருக்கும் தலையசைத்து விட்டு பெருமூச்சை வெளியிட்டபடி மரத்தடியில் நின்றவள்.. அடுத்த ஐந்து நிமிடத்தில்.. அருகில் அரவம் உணர்ந்து திரும்பி நோக்கினாள்.
விக்ரம் நின்றிருந்தான்.
“எ..என்னாச்சு?” – திகைப்புடன் திவ்யா.
“வ..வந்து…” – தயங்கியபடி நின்றிருந்தான் விக்ரம்.
“சொல்லுங்க”
“நேத்து நைட் முழுக்க.. கௌதம், என் லவ் ஸ்டோரியைக் கேளுங்கன்னு சொல்லி.. கொட்டக் கொட்ட முழிக்க வைச்சு.. கதறக்கதற கதை சொன்னான்!”
“………….”
“என்ன தான் கேலி பேசுனாலும்.. அவன் உங்க விஷயத்துல எவ்ளோ தீவிரமா இருக்கான்னு எங்களுக்குப் புரிஞ்சது! உங்களை ரொம்ப ரொம்ப லவ் பண்றான்.. காத்ரீனா கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தப்போ அவன் இப்படி இருந்ததில்ல!”
“………….”
“அ…அதனால.. எங்கம்மா என்ன சொன்னாலும், என்ன பண்ணாலும்.. அதைப் பெருசா எடுத்துக்காதீங்க! கௌதம் உங்க மேல வைச்சிருக்கிற அன்பை மட்டும் பாருங்க. ப்ளீஸ்! எனக்கு.. என் தம்பின்னா.. ரொம்ப இஷ்டம்… அவன் நல்லாயிருக்கனும். ரொம்ப,ரொம்ப நல்லாயிருக்கனும். அதான் என் ஆசை”
தயங்கித் தயங்கி வார்த்தைகளைக் கோர்த்து.. தன் தம்பிக்கான தனது அன்பை வெளிப்படுத்திய அந்த அண்ணனைக் கண்டு.. மனம் நெகிழ்ந்தது அவளுக்கு.
“கௌதம் ரொம்ப லக்கி…” என்றவள்.. தொடர்ந்து…
“எங்கப்பா செத்துப் போய் 4,5 வருஷமாச்சு. இழந்துட்டதா நான் நினைச்ச அந்த அன்பு,பாசம் எனக்கு மொத்தமா திரும்பக் கிடைச்சிட்டதா நான் உணர்ந்தது.. உங்க தம்பியைப் பார்த்தப்புறம் தான்! யாராவது.. எதுக்காகவாவது.. அப்பாவோட பாசத்தை வேண்டாம்ன்னு ஒதுக்குவாங்களா? ஒதுக்கிட முடியுமா?” என்று கேட்க…
மகிழ்ச்சியாகப் புன்னகைத்தவன் “நான் கடைசி வரைக்கும் உங்க ரெண்டு பேர் பக்கம் தான்!” எனக் கூறித் தலையாட்டி விட்டுச் சென்று விட.. அடுத்த ரெண்டாவது நிமிடம் சாதனா வந்து நின்றாள்.
“வ..வந்து திவ்யா.. ஹேண்ட் பேக், ஹேண்ட் பேக்கை மறந்து வைச்சுட்டேன்” எனக் கூறி நாற்காலியின் மீதிருந்தத் தோள்ப்பையை எடுத்துக் கொண்டு.. தயங்கியபடி அவள் முகம் பார்த்தாள்.
இப்போது அண்ணியின் முறை போலும்! அமைதியாகப் பார்த்து நின்றாள் திவ்யா.
“திவ்யா.. நான் சொல்றதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல.. கௌ..கௌதம்ன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அண்ணி,அண்ணின்னு தான் அவன் கூப்பிட்றான்னாலும், எனக்கும்,அவனுக்குமான உறவு அம்மா-பையன் மாதிரி! நிஜமா.. அவனைத் தான் என் மூத்த மகனா நான் நினைக்கிறேன்! அவனோட லைஃப் நல்லாயிருக்கனும்ன்றது தான் என் தினப்படி வேண்டுதலே! முதல்ல அவன் உன்னைக் காதலிக்கிறதா சொன்னப்போ.. கொஞ்சம் ஷாக்கிங்கா, நிறைய கோபமா இருந்தது. ஆனா.. உன் மேல அவன் ரொம்பத் தீவிரமா இருக்கான்னு தெரிஞ்சப்புறம், அவன் சந்தோசத்தை நானும் பகிர்ந்துக்கனும்ன்னு யோசிக்கத் தொடங்கிட்டேன்! ரெ…ரெண்டு பேரும்.. ஹாப்பியா,ஜாலியா ஒரு லைஃபை லீட் பண்ணனும்”
சிரிப்பும்,கண்ணீருமாய் உணர்ச்சிமிக்கப் பேசிக் கொண்டிருந்தவளிடம்.. மெல்லப் புன்னகைத்து…
“இங்க வாங்க” என்று அவளை அருகில் அழைத்தாள் திவ்யா.
என்னவென்று கேட்காமல் அருகே வந்தவளை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டவள்..
“ஆண்டவன் எல்லாத்தையும் காரணமாத் தான் பண்றான் போல! உறவுகள் மேல இருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையையும் இழந்து, தனியா ஒதுங்கி நிற்குற என் கண்ணுல… கௌதமைக் காட்டி.. சொந்தம்,பந்தம்ன்றதுக்கெல்லாம் புது அர்த்தம் கொடுத்து.. என் வாழ்க்கைல அதை வைச்சுப் புது அத்தியாயம் எழுதப் பார்க்குறார்! வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது” –என்றாள்.
அண்ணனும்,அண்ணியும் இங்கே பெண் பார்த்து.. பாக்கு,வெற்றிலை மாற்றாத குறையாகத் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க.. சம்மதிக்க வேண்டியவர் மட்டும்.. சண்டிராணியாய் சமையலறைக்குள் அமர்ந்திருந்தார்.
சமையலறையில் நாற்காலி போட்டு அமர்ந்து.. அவர் சுட்டுக் கொடுத்தத் தோசையை விழுங்கியடி, ஓரக் கண்ணால் அவரை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் கௌதம்.
“என்னம்மா, முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு! ரொம்பக் கோபமா இருக்க போலவே” – தானே தொடங்கி வைத்தான்.
“ஏன்? நான் கோபப்பட்ற மாதிரி இப்ப என்ன நடந்துச்சு? இல்ல நடக்கப் போகுது?” – ராக்கெட் வேகத்தில் ராஜாத்தி.
“அதாவது.. நீ கடைசி வரைவிஷயம் தெரியாத மாதிரியே பேசுவ! நான் என் வாயால.. என்னை விட வயசு மூத்தப் பொண்ணை நான் காதலிக்குறேன்னு சொல்லி.. கல்யாணம் பண்ணிக்கப் பர்மிஷன் கொடுன்னு உன் கிட்டக் கெஞ்சனும். அதான?”
“என்னடா சொன்ன?” பொங்கி எழுந்த ராஜாத்தியின் கையிலிருந்தக் கரண்டியைப் பறித்துக் கீழே வைத்து பொறுமையாக அடுப்பை அணைத்து விட்டு..
“அவ பேரு திவ்யா. அப்பா,அம்மான்னு யாரும் கிடையாது. இரு,இரு.. அதான் உன்னை வளைச்சுப் போட்டுட்டாளான்னு உடனே அவளைத் தப்பாப் பேசாத!, அவ்ளோ சீக்கிரம் கரெக்ட் ஆகுற ஆள் கிடையாது அவ! எவனையும் பார்வை வட்டத்துக்குள்ளக் கூட நெருங்க விட மாட்டா! ஒரு பார்வை பார்த்தான்னா.. ஆஃபிஸ்ல அத்தனை பேரும் விலகி நிற்பானுங்க! அவ்ளோ கண்ணியமான.. டெர்ரர் ஆன ஆளு! அவ தான் வேணும்ன்னு பிடிவாதம் பிடிச்சு.. அவளைக் காதலிச்சிட்டிருக்கிறது நான் தான்! தெரியல.. ஏன்னு.. ஆனா… எனக்குப் பொண்டாட்டியா அவ தான் வேணும்! அவ மட்டும் தான் வேணும்” என்று நீண்ட விளக்கமளித்தவன்.. அன்னையின் கோப முகத்தைக் கண்டு கொள்ளாமல், விறுவிறுவென வெளியேறி விட்டான்.
மீண்டும் அவன் வீடு திரும்பிய போது.. ராஜாத்தியைக் காணவில்லையெனப் பரபரப்பாகத் தேடிக் கொண்டிருந்தனர் சாதனாவும்,விக்ரமும்.
“எங்க போயிருக்கப் போகுது, அதெல்லாம் வந்துடும்! நான் சொன்ன விஷயத்தோட எஃபெக்ட் இது! எதிர்பார்த்தது தான்! நீங்க டென்ஷன் ஆகாதீங்க!” – கூலாகக் கூறியவனிடம்..
“இர்ரெஸ்பான்ஸிபிள்-ஆ பேசாத டா கௌதம்! மணி ஆறாச்சு! இந்தக் குளிர்ல அத்தை எங்க போய் மாட்டியிருக்காங்களோ தெரியல” – பதறினாள் சாதனா.
“மணி ஆறானா என்ன இப்போ? உன் அத்தைக்கு என்ன மாலைக்கண் நோயா?” – விடாது நக்கலடித்தவனிடம்..
“கௌ…தம்…” – எனப் பாய்ந்தாள் அவள்.
“கோவிலுக்கு எங்கயாவது போயிருப்பாங்களோ!” – விக்ரம்
“இருக்கலாம், இருக்கலாம்” – கௌதம்
“விளையாடாம போய்த் தேடு கௌதம்” என சாதனா அதட்டியதும்.. எரிச்சலுடன் அருகிலிருந்தக் கோவிலுக்குச் சென்றான்.
எதிர்பார்த்தபடி.. சன்னதிக்குள் அமர்ந்திருந்தவரைக் கண்டு..
“அம்மா” என்றபடி அவன் அருகே செல்ல.. இவனைப் பார்த்ததும் திரும்பி அமர்ந்து கொண்டார் அவர்.
“என்ன ராஜாத்தி, ஸ்ட்ரைக் பண்றீங்களா?” – அன்னையை உறுத்து விழித்தபடி அவன்.
“நக்கலா டா உனக்கு?”
“நான் இதுக்கெல்லாம் அசர்ற ஆளுன்னு நினைச்சீங்களா?, இதே கோவில்ல வைச்சு அடுத்த வாரமே அவளுக்குத் தாலி கட்டுறேன்! பார்க்குறீங்களா?” –மிரட்டியவனிடம்..
“அப்படி மட்டும் நடந்தா, நான் தூக்குல தொங்கி செத்துப் போயிடுவேன்” – பதிலுக்கு மிரட்டினார் ராஜாத்தி.
“பரவாயில்லை! பிடிவாதத்தில் செத்துப் போன தாய்ன்னு நியூஸ் வந்தா.. ஆர்.ஐ.பி மதர்ன்னு ஸ்டேட்டஸ் போட்டு.. எனக்கும்,அவளுக்கும் பிறக்குற பிள்ளைக்கு உங்க பேரை வைச்சு துக்கம் அனுசரிச்சுட்டுப் போய்ட்டே இருப்பேன் நான்!”
“பெத்த அம்மா மேல உனக்குக் கொஞ்சம் கூடப் பாசமே இல்லையாடா கௌதம்?” – அழுகைக் குரலில் அவர்.
“இந்த மாதிரி சீனெல்லாம் ஒரு இங்கிலிஷ் படத்துல பார்த்திருக்கியாம்மா நீ? நம்ம இண்டியன் அம்மாக்களுக்கு மட்டும் காதல்ன்னா ஏன் கசக்குது? தூக்குக் கயிறு,விஷ பாட்டில், மண்ணென்னைக் கேன்-ன்னு ஆயுதங்களோடக் கிளம்பிட்றீங்க?, அப்படி என்ன பிடிவாதம்..?, சாப்பிட்ற சாப்பாட்டுல இருந்து, உடுத்துற சட்டை வரை உனக்குப் பிடிச்சதை எடு ராசான்னு.. என் விருப்பத்துக்கு விட்டே வளர்த்துட்டீங்க! நான் பிடிச்சப் பொண்ணைக் கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சா மட்டும் ஏன் தடையா இருக்கீங்க?”
“நான் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல. உன் அண்ணன் காதலிக்கிறதா வந்து சொன்னப்போ.. அவனைப் புரிஞ்சுக்கிட்டு.. அவன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி கல்யாணம் செஞ்சு வைச்சு அழகு பார்த்த ஆளு நான்”
“இப்போ என் விஷயத்துலயும் அதையே பண்ண வேண்டியது தான?”
“அதுவும்,இதுவும் ஒன்னா டா? அந்தப் பொண்ணு வயசு என்ன, உன் வயசு என்ன? நீ..நீ சின்னப் பையன் டா கௌதம்”
“வயசு வித்தியாசமெல்லாம் என் ஜெனரேஷனுக்கு ஒரு மேட்டரே இல்லம்மா”
“என்னால அப்படி இருக்க முடியாதுடா”
“வாஸ்தவம் தான்! ஏன்னா நீ என் ஜெனரேஷன் கிடையாதே”
“கௌதம்… இது ஒருக்காலும் நடக்காது, நான் நடக்க விட மாட்டேன்”
“சரி, நீ இப்படி சீரியல் வில்லி மாதிரி பேசிட்டே இரு. நான் கிளம்புறேன், அண்ணன் கேட்டா.. அம்மாவைக் கோவில்லயே விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லிட்றேன்”
“பெத்தவ மேல அக்கறை இல்லாம போற அளவுக்கு சொக்குப் பொடி போட்டு வைச்சிருக்காளாடா அவ?”
“சொக்குப் பொடின்னா என்னது?, கடைசி வரைக்கும் உன் புருஷனை, அவங்கம்மாப் பக்கம் விடாம பிடிச்சு வைக்க.. நீ போட்டு வைச்சிருந்தியே! அதுவா?” – பங்கமாய் வாரினான் அவன்.
“டேய்… கௌதம்” – அரண்டு விட்டார் ராஜாத்தி.
“கத்தாத. காதலிக்கிறோம்ன்னு பன்மைல சொல்லிட்டிருக்கேன் நான்! அவ மட்டும் தான் எங்க காதலுக்குக் காரணம்ன்ற மாதிரி ப்ரொஜெக்ட் பண்ற நீ?, காலகாலத்துக்கும் இப்டியே பொண்ணுங்க மேல மட்டும் குற்றம் சொல்லிட்டிருந்தீங்கன்னா.. 8 வயசுப் பிள்ளை,இல்ல 3 வயசு பிள்ளையைக் கூட கற்பழிச்சுட்டுத் தான் இருப்பானுங்க”
“டேய்.. டேய்.. எந்த விஷயத்தை எதோட கோர்க்குற டா?” – தொண்டை வரண்டு போனது அவருக்கு.
“எல்லாம் இங்க இருந்து தான் ஆரம்பிக்குது ராஜாத்தியம்மா! அண்ணி கூட நீ நல்லா பழகுறதை வைச்சு நீ ரொம்ப ப்ராட் மைண்டட் பர்சனாலிட்டின்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்! பட், நீ அப்படி இல்ல”
“தப்பை நீ பண்ணிட்டு.. என்னையக் குற்றம் செஞ்சவ மாதிரி ட்ரீட் பண்ணிட்டிருக்கியா டா நீ?”
“லவ் பண்றது தப்பில்லம்மா” – பொறுமையான குரலில் அவன்.
“உன்னை விட வயசு மூத்தப் பிள்ளையை லவ் பண்றது தப்பு தான் டா” – மகனுக்குப் புரிய வைத்து விடும் வேகத்துடன் அவர்.
“காதலுக்கு வயசு முக்கியமில்லம்மா”
“நீ பேசாதடா! நீ என்ன பண்ணாலும்,பேசுனாலும் என்னால இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது”
“நீ ஏன் ஏத்துக்கனும்?, நீயா அவளுக்குத் தாலி கட்டிக் குடும்பம் நடத்தப் போற?, தள்ளி நின்னு அட்சதை தூவப் போற ஆளெல்லாம் இவ்ளோ பேசக் கூடாது”
“அப்டின்னா.. உன் விஷயத்துல நான் தலையிடவே கூடாதா டா? எனக்கு உன் மேல உரிமையே இல்லையா?”
“காலைல சுட்டு,சுட்டுப் போட்டியே தோசை! அதை என் தட்டுல போடுற வரைக்கும் தான் உன் உரிமை நிலைக்கும்! என் வாய்க்குள்ள திணிச்சு.. அதை செரிக்க வைக்குற சக்தியெல்லாம் உனக்குக் கிடையாது. அம்மா.. இது என் வாழ்க்கைம்மா! நீயும்,அப்பாவும் வாழ்ந்த மாதிரி,என் அண்ணனும்,அண்ணியும் வாழ்ற மாதிரி.. ஒரு நிறைவான வாழ்க்கை வாழனும்ன்னு நான் ஆசைப்பட்றேன்! நிம்மதி,சந்தோசமெல்லாம் எவளைக் கட்டினாலும் கிடைக்கும்! பட், ஒரு திருப்தி,முழுமை.. இதெல்லாம் இவளைக் கட்டுனா மட்டும் தான் கிடைக்கும்! இதுக்கு மேல பிடிவாதம் பிடிச்சு நீ இங்க தான் உட்காருவன்னா.. எனக்கு அதைப்பத்தி எந்த அக்கறையும் இல்ல! ஆனா, இங்க.. இந்த கோவில்ல.. சீக்கிரமே அவளுக்குத் தாலியைக் கட்டிட்டுக் குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவேன்! சொல்லிட்டேன்!” என்றவன்..
“இப்போ நான் கிளம்புறேன். நீ வர்றியா? வரலையா?” எனக் கேட்க..
பிடிவாதமாக முகத்தைத் திரும்பிக் கொண்டு அமர்ந்திருந்தவரை முறைத்து விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான் கௌதம்.
அதன் பின்பு விக்ரமும்,சாதனாவும் அவரை வெகுவாகச் சமாதானப்படுத்தி.. வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
விடாது இருவரும் “ஒரு தடவை அந்தப் பொண்ணைப் பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்” என நச்சரிக்க.. “ஏற்கனவே அவளைப் பார்த்ததால தான் வேணாம்ன்றேன்! பேசுறதுக்குக் கூலி கேட்பா போல! கர்வம் பிடிச்சவளா இருந்தா என்ன பண்றது? நம்ம குடும்பத்துக்கு எப்படி ஒத்து வருவா?” என ராஜாத்தி புலம்பித் தள்ளினார்.
“அந்தப் பொண்ணு அப்படிப்பட்ட ஆள் மாதிரி தெரியல. ஒரு தடவை பார்த்துட்டு நீ தப்பு,தப்பா முடிவு பண்ணியிருக்க. என் தம்பி விருப்பம் தான் என் விருப்பம். நீ ஒரு தடவை அந்தப் பொண்ணைப் பார்த்துப் பேசி.. எல்லாத்தையும் சுமூகமா நடக்க விடு. இல்லையா, அவனை அவன் இஷ்டத்துக்கு விடு. சும்மா.. நொய்,நொய்ன்னு அவனையும் நிம்மதியா இருக்க விடாம.. நீயும் நிம்மதியில்லாம… பிரச்சனையை வளர்க்காத” என்று விக்ரம் கடைசியாக எச்சரிக்க..
தன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாத மூத்த மகனும் தனக்கு எதிராகப் பேசுவதை எண்ணிக் கடுப்புற்று மறுநாள் திவ்யாவைக் காண முடிவு செய்தார் ராஜாத்தி.
“கௌதம்…”
கட்டிலில் மல்லாக்கப் படுத்தபடி கோபமும்,எரிச்சலுமாக விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனை செல்ஃபோனில் அழைத்திருந்தாள் திவ்யா.
“சொல்லுங்க”
“என்னாச்சு?, கோபமா பேசுற?”
“ம்ம், எல்லாம் என் மதர் தான்! குளிர்ல நடுங்கிக்கிட்டுக் கோவில்ல உட்கார்ந்து ஸ்ட்ரைக் பண்ணுது! இந்தக் கல்யாணம், என் காதல் இது எதுவும் எங்கம்மாவுக்குப் பிடிக்கலையாம்”
“அப்டியா?”
“என்ன நொப்பிடியா?, அசால்ட்டா கேட்குறீங்க? உங்களுக்குக் கோபம் வரல? எனக்கெல்லாம்.. கண்ணு முன்ன இருக்குற எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைக்கனும்ன்ற அளவுக்குக் கோபமா வருது”
“ப்ச், ரிலாக்ஸ் கௌதம்”
“ரிலாக்ஸ்-ஆ?, நக்கலா? ஏன் உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?, நீங்க ஏன் கஷ்டப்படப் போறீங்க! இன்னும் ஒரு ஐ லவ் யூ சொல்லல, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் தான் எனக்குன்னு வாயைத் திறந்து சொல்லல! நான் என்ன சொன்னாலும் தலையை மட்டும் ஆட்டி வைச்சிருக்கீங்க! எங்கம்மா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகலங்கன்னு நான் சொன்னா கூட.. அதுக்கும் மண்டையை ஆட்டிடுவீங்க”
“ஹாஹாஹா”
“சிரிக்காதீங்க”
“கௌதம்..”
“ம்”
“கோ வித் த ஃப்ளோன்னு நீ தான சொன்ன?, அதனால நான் எதுக்கும் கவலைப்படப் போறதே இல்ல!”
“அதுசரி”
“நிஜமா கௌதம்! கடவுள் என் கண்ணைக் கட்டி.. என்னை ஒரு சோலைக்குள்ள அழைச்சிட்டுப் போயிட்டிருக்கார்! என்னால.. அந்த சோலையில இருக்குற மரம்,செடி,கொடி,பூ,காய்ன்னு அத்தனையோட நறுமணத்தையும் உணர முடியுது! கண் கட்டு அவிழ்ந்ததும்.. நான் பார்க்கப் போறது.. இதுவரைக்கும் என் வாழ்க்கைல நான் பார்க்காத,அனுபவிச்சிடாத பேரழகுன்றது எனக்குப் புரிஞ்சு போச்சு! அந்த ஒட்டு மொத்த சந்தோஷமும் எனக்கே,எனக்கு தான்! அதுல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன்! முடிச்சு அவிழப் போற நிமிஷத்துக்காக ஒவ்வொரு நொடியும் காத்திட்டிருக்கேன்! என் யோசனை, எக்ஸைட்மெண்ட் எல்லாம்.. முடிச்சு அவிழப் போற நொடிக்குத்தானே ஒழிய, யார்,எப்படி அதைக் கழட்டப் போறாங்கன்றதுல இல்ல”
வார்த்தைகள் முழுக்க.. விரவிக் கிடந்தக் குளுமையுடன்.. சோலைக்குள் நின்றபடி பேசுபவளின் நீண்ட விளக்கத்தைக் கேட்டவனுக்குத் தானும்.. அவள் கையைப் பற்றிக் கொண்டு உடன் நிற்கும் உணர்வு தோன்ற.. லேசாகச் சிரித்து.. பிடரியைக் கோதிக் கொண்டவன்..
“ஐ லவ் யூ” என்றான்.
“சாப்பிட்டியா?”
“இல்ல, அண்ணி ராஜாத்தியம்மாவை சமாதானப்படுத்திட்டு வந்து எனக்கு சோறு போடும்” என்று விட்டு “நீங்க சாப்பிட்டீங்களா?” எனக் கேட்டவனின் பேச்சு.. அடுத்த சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்தது.
மறுநாள் காலை பூ பூ கிட்ஸில் திவ்யா சந்தித்தது, ராஜாத்தியம்மாவை! அவள் எதிர்பார்த்தது தான்!
எழுந்ததும் பல் துலக்கினாரோ இல்லையோ, நேராகத் திவ்யாவைக் காண வந்தமர்ந்து விட்டார்.
பனிக்காற்று மூக்கு நுனியைப் பதம் பார்த்து விட்டதாலோ என்னவோ.. விறைத்த நாசியுடன்… இறுகிப் போய் அமர்ந்திருந்தார் ராஜாத்தி.
எதையும் கண்டு கொள்ளாமல், ஒரு காஃபி கப்பையும்,நான்கு பிஸ்கட்டுகளையும் திவ்யா நீட்ட, அலட்டலின்றி வாங்கிக் கொண்டவர் அனைத்தையும் உண்டு முடித்த பின்பு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
நீண்டிருந்த மூக்கு.. ஒரு வழியாக வளைந்து நின்றது இப்போது.
“இதோ பாரு…” என ஆரம்பித்தவரை ஆளுமையுடன் கையமர்த்தி விட்டு…
“படத்துல,கதைலலாம் வர்ற மாதிரி என் பையனை விட்டுப் போக நான் உனக்கு எவ்ளோ கொடுக்கனும்ன்னுல்லாம் கேட்றாதீங்க. ஏன்னா.. உங்க பையனை விட நான் நிறைய சம்பளம் வாங்குற ஆளு!” – என்றாள் கெத்து குறையாமல்.
“……………….” – சத்தமில்லை. ராஜாத்தி கொஞ்சம் டர்ராகியிருக்க வேண்டும்.
“அதே போல, வயசுல சின்னவனை வளைச்சுப் போட்டுட்டியான்னு ஸ்டாண்டர்ட் டயலாக் எதுவும் அவசரப்பட்டுப் பேசிடாதீங்க! வளைக்குறதுக்கு உங்க பையன் முறுக்குக் கம்பியும் இல்ல! மயக்குறதுக்கு நான் குளோரோஃபார்மும் இல்ல! மூளை,மனசெல்லாம் நல்லா வேலை செய்யுற புத்திசாலிங்க நாங்க! அதனால இது ரெண்டுமே எங்களுக்கு சாத்தியமில்ல”
“………………….”
பொறுமையாக் காஃபியை உறிஞ்சி விட்டு “எனக்கு 2 லைஃப் சேஞ்சிங் மொமண்ட்ஸ் இருக்கு. ஒன்னு எங்கப்பா இறந்தது, இன்னொன்னு உங்க பையன் என் வாழ்க்கைல வந்தது! அவன் வந்து பண்ணிட்டுப் போன.. மேஜிக்.. இனி என் வாழ்க்கை முழுக்கத் தொடரும்! ஆரம்பத்துல, இது எல்லாம் இல்லைன்னு ஆயிட்டா.. கௌதம் என் வாழ்க்கைல இருந்து போய்ட்டா.. ஏமாற்றத்துல.. நான் உயிர்ப்பை எல்லாம் இழந்துடுவேனோன்னு நினைச்சிருக்கேன்! ஆனா.. இப்போ சொல்றேன்! உங்க பையன் கொடுத்த இந்த உணர்வு.. அவன் என் கூட இருந்தாலும்,இல்லாட்டியும் நான் சாகுற வரைக்கும் என்னை உயிர்ப்போடத் தான் வைச்சிருக்கும்! ஆயிரம்,லட்சம்,கோடி விசயங்கள் இருக்கு.. அவனைப் பத்தி.. நான் வாழ்நாள் முழுக்க நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்க..! அதனால.. அவன் என் லைஃப்ல இனி இல்லன்ற நிலைமை வந்தாலும்.. என்னால திருப்தியா வாழ முடியும்!” என்றாள்.
“…………” – கொஞ்சம் ஆச்சரியப்பார்வை ராஜாத்தியிடம்.
“உங்களை எதிர்த்துக்கிட்டு உங்க பையன் என் கிட்ட வரப் போறதில்ல. அப்படி வர்றவனை, ஏத்துக்கிற அளவுக்கு நான் மனசாட்சியில்லாத ஆளும் இல்ல! இந்த அம்மா-மகன் போராட்டத்தை நான் உங்க கிட்டயே விட்றேன்! நீங்களே ஹாண்டில் பண்ணிக்கோங்க! ஆனா.. அவனை வருத்தப்படுத்தாதீங்க! அவன்.. எதுக்காகவும்,யாருக்காகவும் லைஃப்ல ஹர்ட் ஆயிடக் கூடாது.”
கட்டளையாகக் கூறியவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர்..
“நீ அவனை விட்டுப் போனா.. அவன் ஹர்ட் ஆகாமலா இருப்பான்?” என்றார்.
“அதனால, எங்க ரெண்டு பேரையும் நீங்க சேர்த்து வைச்சிடவாப் போறீங்க?”
“மாட்டேன் தான்”
“அப்புறம் என்ன?, என் கோரிக்கை.. வலிக்காம ஊசி போடுங்கன்னு டாக்டர் கிட்ட சொல்ற அம்மாவோட மனநிலை மாதிரி!”
“…………….”
“நேரமாச்சு. கௌதம் எழுந்திருச்சிருப்பான். நான் உங்களை ட்ராப் பண்ணவா? இல்ல டாக்ஸி புக் பண்ணவா?”
“டாக்ஸி புக் பண்ண எனக்குத் தெரியும், என் பையன் எந்திரிச்சிருப்பான்றதும் எனக்குத் தெரியும்” – என்றபடி அவர் எழ..
“நல்லது”எனக் கூறித் தானும் எழுந்தவள்.. வணக்கம் வைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.
வீட்டிற்கு வந்த பின்னும் உர்ரெனத் திரிந்தவரைக் கண்டு சாதனா என்னவென விசாரிக்க.. அவர், தான் திவ்யாவை சந்தித்து விட்டு வந்ததாகக் கூறினார்.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அனைவரும் ஒரு நொடி அமைதியாக.. cereal-ல் இருந்த நட்ஸைக் கடித்தக் கௌதமின் பற்கள் எழுப்பிய ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
சாதனா அவனை முறைக்க.. ராஜாத்தித் தன் மகன் புறம் திரும்பினார்.
“அப்படி என்ன அவ கிட்ட இருக்குன்னு அவளைத் தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்ல நிற்குறடா?, சரியான திமிர்ப்பிடிச்சவ”
“அது பேர் திமிர் இல்ல. தன்னம்பிக்கை! எட்டு வருஷத்துக்கும் மேல தன்னந்தனியா யு.எஸ்ல வாழ்றா! நேர்மை,நெறி தவறாம..! நீ பார்த்து வைச்சிருக்கிற அன்னலட்சுமி,தனபாக்கியத்துக்கெல்லாம் இல்லாத ஸ்பெஷல் குணம் அவ கிட்ட இருக்கு! அதான் எனக்குப் பிடிச்சிருக்கு”
“……………”
“திஷா பேபி..” – அன்னையின் உர்ர்ராங்குட்டான் முகத்தைக் கண்டுகொள்ளாமல் பேபியை அழைத்தான் கௌதம்.
“என்ன சித்தா?”
“சித்தப்பா, மிஸ்.கேட்டைக் கல்யாணம் கட்டிக்கட்டுமா?”
“ம்க்க்க்க்க்கும்” – ராஜாத்தி.
“நிஜமாவா? நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா.. மிஸ்.கேட் நம்ம வீட்லயே இருப்பாங்களா?”
“அது… சொல்ல முடியாது! இந்த ராஜாத்தி கூட நாங்க இருக்குறது சந்தேகம் தான் பாப்பா”
“ஏன், என்னையக் கொண்டு போய் ஏதாவது முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு.. நீங்க எல்லாரும் ஒன்னா.. இருங்களேன்! என்ன கெட்டுடப் போகுது?” – பொறுமலுடன் ராஜாத்தி கத்த..
“அம்மாஆஆஆ, என்ன வார்த்தை பேசுறீங்க?” – என அதட்டினான் விக்ரம்.
“எதுக்கு?, அங்க போய்.. நீ 4 பேர் நிம்மதியைக் கெடுக்குறதுக்கா?” – கௌதம் அடங்கப் போவதில்லை!
“ப்ச், கௌதம், சரிக்கு சரியா பேசாதடா. அவங்க உடம்பு முடியாதவங்க” – இடையில் சாதனா வேறு!
“அதனால, பாவம் பார்க்க சொல்றியா? அவசரமா இந்தம்மா செலக்ட் பண்ணி வைச்சிருக்கிற பொண்ணைப் பார்த்தியா நீ? பேரு தனபாக்கியம்! ஊரு தூத்துக்குடி! ஆள்.. நல்லா.. நெல்லு மூட்டை மாதிரி.. நாலடி அகலத்துல இருக்கா!”
“ஏன், நீ பார்த்து வைச்சிருக்கிறவ மட்டும் உலக அழகியா?, அவ கலரும்,கண்ணும்!” – எரிச்சலுடன் ராஜாத்தி.
“எனக்கு அவளைத் தான் பிடிச்சிருக்கு. இப்ப என்னன்ற?”- எகிறி விட்டான் கௌதம்.
“நீ கட்டிக்கிட்டாலும், உன் அண்ணி கூட பழகுற மாதிரியெல்லாம் அவளோட பழக மாட்டேன் நான்” – முசுட்டு முகமாய் ராஜாத்தி கூற..
“அப்டின்னா.. கட்டிக்கிறதுக்கு பர்மிஷன் கொடுத்துட்டியா?” என்றான் கௌதம்.
“………….”
“அ…அ..அத்தை.. நிஜமா.. நிஜமாவா சொல்றீங்க?” – கண்ணை விரித்தபடி… அவர் கையைப் பற்றிக் கொண்டு அருகே அமர்ந்த சாதனாவைக் கண்டு…
“ஆமா, வேற என்ன பண்ணச் சொல்ற?, இவன் தான்.. நான் கோவில்ல தாலி கட்டி குடித்தனம் நடத்துவேன்னு சபதம் எடுக்குறானே! இதுக்கா நான் இத்தனை வருஷமா காத்துக்கிடந்தேன்” – என்று அவர் கண்ணில் தண்ணீர் விட..
“சரி,சரி விடும்மா..” என்று சமாதானப்படுத்தினான் விக்ரம்.
“அவளை மதிச்சு பேசப் போனா.. உங்க பையனை வருத்தப்படுத்தாதீங்க, அவன் ஹர்ட் ஆனா.. என்னால தாங்க முடியாது அப்டி,இப்டின்னு என்னை விட அவன் மேல பாசம் வைச்சிருக்கிறவ மாதிரி ரொம்பப் பேசுறா அவ!”
“ஹிஹிஹி! அத்தைக்கு லைட்-ஆ உங்க பேச்சுல பொறாமை தெரியுதே”
“சாதனா…” – நெற்றிக் கண்ணைத்திறந்தவரிடம்…
“சாரி அத்தை!” - எனப் பம்மி விட்டாள் சாதனா.
விக்ரமும்,சாதனாவும் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. கௌதம் மட்டும்.. அவரை சந்தேகமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“என்னடா? இன்னும் எதுக்கு அத்தையை முறைக்குற? அதான் ஓகே சொல்லிட்டாங்கள்ல, வா..வா.. போய் கல்யாண வேலையைப் பார்ப்போம்” – கேப் விட்டால் எங்கே மறுபடி மறுத்து விடுவாரோ என்ற நினைப்பில்.. சாதனா அவனை அப்புறப்படுத்தப் பார்க்க..
“இரு,இரு.. ராஜாத்தியம்மா என்ன ப்ளான்ல இருக்குன்னு தெரிஞ்சுக்காம என்னால இங்க இருந்து ஒரு அடி எடுத்து வைக்க முடியாது” என்றவன் தொடர்ந்து..
“சொல்லுங்க மிஸஸ்.ராஜாத்தி கனகரத்னம்” என்றான்.
“…………”
“மாமியார் கொடுமையெதுவும் பின்னால பண்ணிக்கலாம்ன்னு ப்ளான் வைச்சிருக்கீங்களா?,அதெல்லாம் அவ கிட்ட செல்லாது! யோசிக்காம உங்களை ஜெயில்ல தூக்கி போட்ருவா. தெரியும்ல?”
“கொடுமை பண்றதுக்கெல்லாம் நீ எனக்கு சான்ஸ் கொடுப்பியா என்ன?”
“யெஸ்! உங்களுக்கும் அவளுக்கும் செட் ஆகலைன்னா.. அவளை இந்தப் பக்கம் கூடக் கூட்டி வர மாட்டேன்”
“இங்க பாருடா, என்னைய ஆபத்தான மிருகம் மாதிரியும், அவளை அப்பாவி ஜீவன் மாதிரியும் சித்தரிக்கிறதை முதல்ல நிறுத்து”- பொங்கி விட்டது அவருக்கு.
“ஆபத்தான மிருகமா? ஹாஹாஹா.. திஷா கூட சேர்ந்து இங்கிலிஷ் படம் பார்க்குறியா நீ? அதுவும் தமிழ் டப்பிங்க்ல பார்க்குற போலயே”
“அவனைப் பேச்சை மாத்த வேணாம்ன்னு சொல்லு சாதனா”
“இப்போ என்ன, உங்களுக்கு அவளைப் பிடிக்கலயா, அப்டின்னா.. நான் அவளைக் கை கழுவி விட்டுட்றேன் அம்மான்னு சொன்னா.. உன் ஈகோ சாடிஸ்ஃபை ஆயிடுமா?, பொண்ணுங்களைக் காதலிச்சுக் கை விட்றவனை நான் ஆம்பளையாவே பார்த்ததில்ல! அதனால.. நாளைல இருந்து நீ கட்டுற சேலைல ஒன்னை எனக்கும் கொடு. நானும் கட்டிட்டு சுத்துறேன்!”
“வாயை மூட்றா கௌதம்” – எரிச்சலுடன் கத்தினாள் சாதனா.
“ஏன் டா தம்பி இப்படியெல்லாம் பேசுற?” – மகனின் பேச்சில் ராஜாத்தி கொஞ்சம் இறங்கி வந்தார்.
“நீ தான் என்னை இப்படிப் பேச வைக்குறம்மா”
“அதான் அவளைக் கட்டிக்கன்னு பர்மிஷன் கொடுத்துட்டேனே! இன்னும் ஏன் டா வாக்குவாதம் பண்ற?”
“சிரிச்சு,சந்தோஷமா சொன்னேனா.. நானும் சந்தோஷப்படுவேன்! நீ உர்ருன்னுல்ல இருக்க?அதான் எனக்கு சந்தேகமா இருக்கு”
“என் மூஞ்சியே அப்படித் தான் டா”
“இல்ல, நீ இப்ப சிரி. அப்ப தான் நான் நம்புவேன்”
“ஈஈஈஈஈஈஈஈ போதுமா?”
“என்ன ராஜாத்தி பல் எல்லாம் இவ்ளோ கரையா இருக்கு?” – எனக் கலாய்த்தவனை அவர் முறைக்க..
“உனக்கு அவளை நிஜமாவே பிடிக்கலையாம்மா?” என்றான் அவன்.
“பிடிக்காம சரின்னு சொல்வேனா?,”- கெத்து குறையாமல் அவர்.
“ஹாஹாஹா” – மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது கௌதமின் சிரிப்பில்.
“அவளோட உயிர்ப்பே நீ தான்னு சொன்னா டா!”
“நிஜமாவா? என் கிட்ட அப்படில்லாம் சொன்னதே இல்லயே”
“நீ அவளைப் பேச விட்ருக்க மாட்ட?” – இடையில் புகுந்து சாதனா.
“சரியாத் தான் ஜோடி சேர்த்திருக்கான் ஆண்டவன்! நீ வாயைத் திறந்தா மூட மாட்ட! அந்தப் புள்ள அளவா 4 வார்த்தைன்னாலும், நச்சுன்னு பேசுது! நல்ல பொறுப்பான புள்ள மாதிரி தெரியுது! ஒத்தைல வாழுது.. கெத்து,திமிரெல்லாம் இருக்கனும் தான்” – விழி விரிய.. மருமகளை நினைத்துக் கர்வமும்,ஆச்சரியமுமாய் பேசிக் கொண்டிருந்தவரைத் திறந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
அடுத்தடுத்து அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெற… இதோ பொகிப்சி அலுவலகத்திலிருக்கும் நண்பர்களுக்குக் கல்யாணப் பத்திரிக்கைக் கொடுப்பதற்காகத் திவ்யாவை அழைக்க.. நியூயார்க் வந்திருந்தான் கௌதம்.
பார்க்கிங்கில் காரில் சாய்ந்து நின்றிருந்தவனை நோக்கி முழுப்புன்னகையுடன் வந்தவளைக் கண்டுக் காதலாய்ச் சிரித்து… உரிமையாய் ஒரு பார்வை பார்த்து.. அருகே நின்றவளை நெருங்கி.. நெற்றியில் புரண்ட முடியைக் காதோரம் ஒதுக்கி..
“கட்டிக்கட்டுமா?” என்றான் அவன்.
“ம்ம்ம்ம்ம்” என யோசித்தவள்.. அவனைப் போலவே.. “இப்படியா, இல்ல இப்படியா?” என்று கட்டிக் கொள்வது போலவும்,தாலி கட்டுவது போலவும் செய்து காட்ட..
அவள் இடையை வளைத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டவன்.. “முதல்ல இப்படி.. அப்புறம் இப்படி” எனக் கூறி.. இரு கைகளாலும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் நுழைந்தவர்களை ஒட்டுமொத்த டீமும் ஆஆஆஆவென நோக்கியது.
பீச் மற்றும் சாம்பல் நிறத்தில் காட்டன் சல்வார் அணிந்து, ஆக்ஸிடைஸ்ட் சில்வரில் பெரிய குடை ஜிமிக்கி அணிந்து, நெற்றியில் பொட்டும்,கண்ணில் மையுமாக.. முகம் தேஜஸில் ஜொலிக்க.. தன் சிறிய வட்ட முகம் முழுக்க.. அழகை ஏந்தியபடி.. கௌதமோடு நடந்து வந்தவளைக் கண்டு “ஷீ லுக்ஸ் சோ பியூட்டிஃபுல்” என்றான் சூரஜ் விழிகளை விரித்து.
கையில் பத்திரிக்கையுடன் இருவரையும் ஒன்றாய்க் கண்டதும் அனைவரும் “ஓஓஓஓஓஓஓ” என்றபடிக் கையைத் தட்டத் துவங்க.. அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியாமல் சிவக்கும் முகத்தை அடக்க நினைத்துத் திணறி.. காதோர முடிகளை ஒதுக்கியபடி.. உதட்டைக் கடித்து நின்றாள் திவ்யா.
“கைஸ்! வீ ஆர் கெட்டிங் மேரீட்” என்று கௌதம் சிரித்தபடி கூறியதும்.. கைத்தட்டலும்,விசில் ஒலியும் பறக்க.. இப்போது அடக்க முடியாமல்.. புன்னகை பிறந்ததுத் திவ்யாவின் இதழ்களில்.
“கங்க்ராட்ஸ் கௌதம்..”
“கங்கராட்ஸ் திவ்யா”
“கடைசில எங்க சிங்கத்தை சாய்ச்சுப்புட்டியே மச்சான்”
“மேடம் வீட்ல புலியா இல்ல பூனைக்குட்டியா?”
பல்வேறு பக்கங்களிலிருந்தும் எழும்பிய வாழ்த்துக்களையும், கலாய்களையும் சிரித்தபடி வாங்கிக் கொண்டு.. பதிலுக்கு வம்பு வளர்த்துக் கொண்டிருந்த கௌதமின் அருகே வந்து அவனை அணைத்து ஜாக் வாழ்த்து சொல்ல.. “கங்க்ராட்ஸ் திவ்யா” என்று தைரியமாய்க் கை குலுக்கினாள் ஜான்சி.
“கங்க்ராட்ஸ் திவ்யா” – பம்மிய ஜாக் மற்றும் சூரஜ்ஜிடம்..
“கைஸ், நீங்க ரெண்டு பேரும் வர்க் பண்ண ரெக்வஸ்ட் ஒன்னுக்கு கஸ்டமர் லோயஸ்ட் ரேட்டிங் கொடுத்திருக்கான். இன்னிக்கு மார்னிங் எஸ்கலேட் ஆயிருக்கு. உங்கக்கிட்ட நான் அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணனும்”
பொறுப்பான தலைமை அதிகாரியாய் இருவரிடமும் பேசத் தொடங்கியவளை “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” எனத் தடுத்து.. “நீங்க இப்போ மேனேஜர் இல்ல, கல்யாணப் பொண்ணு” என்ற கௌதம் அவள் இடையைப் பற்றித் தன்னருகே நிறுத்தி “மறந்துட்டீங்களா?” என்று கூற…. “வாவ்வ்வ்வ்வ்வ்” எனக் கூட்டம் அதற்கும் கைத்தட்டியதும்.. “கௌதம்ம்ம்ம்” என்றுப் பல்லைக் கடித்தாள் திவ்யா.
அன்றிரவு அவள் வீட்டிலேயே உணவை முடித்து விட்டு அக்கடாவென கால் நீட்டி அவளது படுக்கையிலேயே கௌதம் படுத்து விட.. குளியலறையிலிருந்து வெளியே வந்தவள்.. நிலப்படியில் சாய்ந்து.. கைக்கட்டி நின்றபடி.. அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“என்ன?” - கௌதம்
“வீட்டுக்குப் போகலயா நீ?”
“ம்ஹ்ம் இன்னிக்கு உன் கூட தான்! துரத்த நினைக்காத. நான் போக மாட்டேன்”
“ப்ச், கௌதம்”
“நீங்க நியூயார்க்ல இருந்தா பரவாயில்ல!, ஒரே ஊர்ல இருந்தும், நீங்க ஒரு இடத்துலயும், நான் ஒரு இடத்துலயும் இருக்க முடியாதுங்க.”
“சரி, அப்போ நீ இங்க படு. நான் சோஃபால படுத்துக்கிறேன்”
“ஓய்ய்ய்ய்”
“என்ன?”
“தனித்தனியாப் படுக்க எதுக்கு ஒரே வீட்ல இருக்கனும்?”
“கௌ…தம்…”
“எனக்கு விவகாரமா எந்த எண்ணமும் இல்ல. அப்டியே நான் நினைச்சாலும்.. உங்களால என்னைத் தடுக்க முடியாது. ஒழுங்கா இங்க வாங்க” –மிரட்டலாய் அவன்.
“…………”
அசையாது நின்றவளை.. எழுந்து வந்து.. இரு கைகளாலும் தூக்கிக் கொண்டவன்.. “எனக்குக் கட்டிக்கனும்! கட்டிக்கிட்டேத் தூங்கனும். அவ்ளோ தான். சரியா?” எனக் கூறி.. சொன்னபடியே அவளைக் கட்டிக் கொண்டு அருகே படுத்துக் கொண்டான்.
தன் கன்னத்தில் அழுந்திய அவன் தாடியின் தீவிரத்தில் நடுங்கி.. வியர்த்து வழிந்தக் கை,கால்களுடன்.. ஆடாமல்,அசையாமல் படுத்திருந்தவளைக் கண்டு..
“உள்ளே ஓட்ற ரத்தம் கூட ஸ்டிஃப்-ஆ தான் இருக்குமா உங்களுக்கு?, இதுக்கு முன்னாடி நான் உங்களைக் கட்டிப்பிடிச்சதே இல்லையா?, எதுக்கு இவ்ளோ விறைப்பா இருக்கீங்க?”-என்று திட்டினான் கௌதம்.
“எனக்கு.. எனக்கு அன்கம்ஃபர்டிபிள்-ஆ இருக்கு கௌதம்” – முகத்தைச் சுருக்கியபடி அவள்.
“கல்யாணத்துக்கப்புறமும் இதே டயலாக்கை சொல்வீங்களா?”
“அது வேற கௌதம்”
“வேற கௌதமெல்லாம் இல்ல. இதே கௌதம் தான் அப்பவும் கட்டிப்பான்”
“ப்ச், விளையாடாத! எழுந்திரு முதல்ல”
“முடியாது. அமைதியா இருங்க. எனக்குத் தூக்கம் வருது” – என்றவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து.. அவளை இறுக அணைத்துக் கொண்டுக் கண்களை மூட..
எதிர்ப்புறமிருந்த சுவற்றை வெறித்தபடிக் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு.. அசையாமல் படுத்திருந்தவளின் கன்னத்தைப் பற்றித் தன்புறம் திருப்பினான்.
விறைத்த மூக்குடன்.. எங்கோ பார்த்தவளின் விழிகளில் முத்தமிட்டு.. தன் முகம் காணச் செய்தவன்..
“கட்டிக்கிட்டாப் பிடிக்கலையா?” என்றான் மெல்லிய குரலில்.
“பிடிக்கலன்னு சொன்னேனா?” – தானும் மெல்லிய குரலில் முணுமுணுத்தவளிடம்.. மெல்லப் புன்னகைத்து… அவள் கன்னத்தில் தன் நெற்றியைப் பதித்து..
“பின்ன எதுக்கு முகத்தை உர்ருன்னு வைச்சிருக்க?” என்றான்.
“அடுத்த வாரம் கல்யாணம் கௌதம்”
“அதனால?”
“இப்போ இதெல்லாம் தேவையா?”
“எதெல்லாம்?” என்றவனின் குரல் மென்மையிலிருந்து வன்மைக்குத் தாவியிருக்க.. அவன் நெற்றியைத் தொடர்ந்து.. அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் இடம்பெயர்ந்திருந்தது.
தலை சாய்த்திருந்தத் தலையணையிலிருந்து மெல்லக் கீழிறங்கி.. நழுவி.. அவன் இதழ்களிலிருந்துத் தன் கன்னத்தைப் பிரித்துக் கொண்டவளை முறைத்து.. அழுத்தமாய் அவள் கன்னத்தில் தன் இதழைப் பதித்தவன்.. அவளைத் திருப்பித் தன்னோடு கட்டிக் கொண்டு “தூங்குங்க” என்றான்.
“இப்படியேவா?”
“ஆமா”
“தூக்கம் வராது கௌதம்”
“வரும்”
“ப்ச்”
“நான் பாட்டு பாடுறேன்! தூங்குங்க”
திரும்பி அவன் முகம் பார்த்து.. “பாட்டா?” என்றவளிடம்..
“ம்ம்” என்றவன்.. அவள் தலைமுடிக்குள் விரல்களை அளைய விட்டு
‘ஒரு பொழுதேனும்… உன்னுடனே நான்..
உயிரால் இணைந்திருப்பேன்..
அதை.. இறப்பினுலும்.. மறு பிறப்பினுலும் நான்..
என்றும் நினைத்திருப்பேன்….
நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை..
நான் காத்திருந்தேன்.. உன்னைப் பார்த்திருந்தேன்…
என் கண்களும் மூடவில்லை…’
-மெல்லப் பாடியவனின் குரல்.. நின்று.. தேய்கையில்.. அவள் புன்னகை தேங்கியிருந்த முகத்துடன்.. ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருக்க.. அவள் இதழ்களில் லேசாக முத்தமிட்டுத் தானும் நித்திரையைச் சரணடைந்தான் கௌதம்.
தன்னைச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்டு.. அந்தச் சிறிய வட்டத்துக்குள் சிலரை,சிலவற்றை மட்டுமே அனுமதித்து... சிரிப்பை,சந்தோசத்தைச் சுருக்கி.. நிம்மதியை எதிர்பார்க்கக் கூட முயற்சிக்காமல்.. எந்திர வாழ்க்கையைத் தந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தத் திவ்யாவும்.. கவலை,துன்பங்கள் எதையும் தப்பித்தவறி கூட அண்ட விடாமல்.. அண்டியவற்றைத் துணிந்துத் தாங்கிக் கடந்து.. வாழ்க்கையின் போக்கில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டு.. வாழும் நிமிடங்களை அனுபவித்து வாழ நினைக்கும் கௌதமும்.. நல்ல நேரமும்,எமகண்டமும் தீண்டிடாத.. காதல் நாழிகையொன்றில்..
கரம் பற்றி.. கரை சேர்ந்தனர்.
முக்கலும்,முனகலுமாய் மகனோடு கல்யாண வேலையைத் தொடங்கிய ராஜாத்தியம்மாள்.. அதன் பின்பு அளவான சிரிப்பும்,பேச்சுமாய்.. அலட்டலின்றி நடந்து கொள்ளும் மருமகளை அநியாயத்திற்குப் பிடித்துப் போய்.. தலையில் தூக்கி வைத்து ஆடாத குறையாக.. அவளோடு இழையத் தொடங்கி விட.. குடும்பமே அவரைக் கலாய்த்துத் தள்ளியது.
நறுமணத்தைப் பரப்பும் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சுந்தரச் சோலையொன்றுக்குள்… அது தந்த நறுமணத்தை நுகர்ந்தபடி.. அதன் குளிர்ச்சியை உணர்ந்தபடி.. அகம் தீண்டும் அதன் மென்மையை ரசித்தபடி.. வாழாமல் விட்ட நொடிகளையும் சேர்த்து அனுபவித்துக் கொண்டு.. காலம் முழுக்க அதனுள் சிறையிருக்கத் தயாரானாள் திவ்யா.
அனுதினமும் புதுயுகம் காணும் அவனோடான வாழ்க்கையின் ஒரு காலை வேளை அது.
தனது காலை நேர மீட்டிங்கை வீட்டிலிருந்தே அட்டெண்ட் செய்து முடித்து விட்டு.. அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் பையுடன் வெளியே வந்தாள் திவ்யா.
“கௌதம்.. எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்! ப்ரேக் ஃபாஸ்ட் ஆஃபிஸ்ல பார்த்துக்கிறேன்” எனக் கூறியபடியே.. லிவிங் ரூமிலிருந்தக் கண்ணாடியில் தன் உடையைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவளை.. சமைலறையிலிருந்து எட்டிப் பார்த்த கௌதம்..
“சாப்பிட்டுக் கிளம்ப.. அப்படி ஒன்னும் டைம் ஆய்டாது. ஒழுங்கா வாங்க” எனக் கூறி முடியாதென மறுத்தவளின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் போனான்.
“இப்போ தான் புது கம்பெனில ஜாயின் பண்ணியிருக்கேன்! தினம் லேட்-ஆ போய் என் பேரைக் கெடுத்துக்க முடியாது கௌதம். நான் ரூல்ஸ் பேசுற ஆளு” – மீண்டும் நியூயார்க்கிலிருந்து பொகிப்சிக்குத் திரும்பியவள்.. வேறு நிறுவனத்திற்கு மாறியிருந்தாள்.
“ப்ரேக் த ரூல்ஸ்ன்னு சொல்லத் தான நான் உங்களைக் கன்னாலம் கட்டியிருக்கேன் திவ்யா மேடம்”
“ப்ச், கௌதம்..”
“ரெண்டே நிமிஷம்! என்னோட எக் மசாலா ப்ரெட் ரெடி ஆயிடுச்சு. சாப்பிட்டுக் கிளம்பலாம் ப்ளீஸ்” – என்றவனை முறைத்தபடியே அவள் அடுப்பிலிருந்ததைக் கிண்ட.. அவள் தோளில் தாடையைப் பதித்தவன்..
“யூ ஸ்மெல் குட்” எனக் கூறி..
“பொறுப்பான பொண்டாட்டியா நீங்க என்னைக்கு எனக்கு ப்ரேக் ஃபாஸ்ட் சமைச்சுக் கொடுப்பீங்க?” என்றான்.
“சமைச்சுக் கொடுத்தாத் தான் பொறுப்பான பொண்டாட்டின்னு பேர் வாங்க முடியும் அப்டின்னா.. எனக்கு அப்படி ஒரு பட்டமே தேவையில்ல கௌதம்”
“ம்க்கும்”
“ஏன் கௌதம், உனக்கு அந்த மாதிரி எக்ஸ்பெக்டேஷன் எதுவுமிருக்கா?”
“இருந்தது. ஆனா.. எங்கண்ணி எப்ப எங்க வீட்டுக்கு மருமகளா வந்துச்சோ.. எப்ப எங்கண்ணன் அதுக்கும் சேர்த்து கிட்சன்ல நின்னு சமைக்க ஆரம்பிச்சாரோ.. அப்பவே அந்த எதிர்பார்ப்பை நான் உடைச்சுத் தூக்கி எறிஞ்சுட்டேன்”
“குட்! அது தான் நல்லது! வயிறு,பசிக்கெல்லாம் ஜெண்டர் பார்க்கத் தெரியாது கௌதம்! சமையல்கட்டுக்குப் பொண்ணுங்க தான்னு ஒதுக்கி வைச்சது எந்த நாயோ தெரியல! நீ அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. சரியா?”
“அப்டியெல்லாம் இருந்தா.. தினம் உங்களுக்கு இப்படி சமைச்சுக் கொட்டுவேனா?”
“நீயும் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத கௌதம்”
“பரவாயில்ல! வர்க் போய்ட்டு டையர்ட்-ஆ வந்தாலும்.. நைட் ஆனா.. சில,பல ஸ்ட்ரெய்ன்களை நீ எனக்காகப் பண்றதில்லையா.. அதுக்காகவே உனக்கு காலத்துக்கும் ப்ரேக் ஃபாஸ்ட் பண்ணிக் கொடுக்கலாம்” – என்று அவன் முடிப்பதற்குள் அவன் வாயில் அடித்தாள் அவள்.
“அப்பப்ப வைல்ட் கேட்-ஆ மாறி எனக்கு அடியைப் போடுறதை நீங்க எப்போ தான் நிறுத்தப் போறீங்களோ”
“ப்ச், டைம் ஆச்சு கௌதம்…”
“ஆகட்டும்! நாம இன்னும் கொஞ்ச நேரம் லவ் பண்ணலாம்” – சொகுசாய் அவளைக் கட்டிக் கொண்டான் அவன்.
“ஏய் விளையாடாத கௌதம்”
“நீங்க இப்படி வார்த்தைக்கு வார்த்தை என் பேரைச் சொல்லும் போது.. எனக்கு எவ்ளோ போதையாகுது தெரியுமா?”
“கௌதம், உன் ரெசிபி ரெடி ஆயிடுச்சு! வா சாப்பிடலாம். டேவிட் வேற என் ஈமெய்ல் ரிப்ளைக்கு வெய்ட் பண்ணிட்டிருப்பான்” என்றபடி நகரப் பார்த்தவளைத் தன் புறம் திருப்பி..
“கல்யாணமாகி எத்தனை மாசமாச்சு! இதுவரை ஒரு ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா?, முதல்ல எனக்குப் பதில் சொல்லுங்க! அப்புறமா.. டேவிட்க்கு ரிப்ளை அனுப்பலாம்” என வம்புக்கு நின்றான் கௌதம்.
“நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்க-ன்னு எனக்குத் தெரியுது கௌதம். எதுவாயிருந்தாலும்.. நாம ஈவ்னிங் பேசிக்கலாம். ஓகே?” எனக் கூறி விட்டு நகர்ந்தவளின் கைப்பற்றி நிறுத்தினான்.
உதட்டோரமாய் ஒரு சிரிப்பும்,விழி முழுக்க காதல் மயக்கமும், உரிமையாய் அவள் கைப்பற்றி அவன் நிறுத்திய விதமும்.. எப்போதும் போல்.. மனதை செயலிழக்கச் செய்ய..
“அப்படிப் பார்க்காத கௌதம். நான் போகனும்” என எரிச்சலாகக் கூறியபடி அவனருகே வந்து.. இரு கைகளால் அவனைக் கட்டிக் கொண்டாள் அவள்.
உதடு முழுக்க நீண்ட சிரிப்பில்.. கண்களை மூடிக் கொண்டு.. அவள் தோளில் முகம் புதைத்துக் கொண்டவனின் மனதில்.. அத்தனை நிறைவு!
“சொல்லுங்க” – கௌதம்.
“என்னன்னு?”
“ஐ லவ் யூன்னு”
“வேணாம் கௌதம்”
“ஏன்?”
“…………..”
“பதில் சொல்லு” – அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கேள்வி கேட்டவனிடம்.. பெருமூச்சை வெளியிட்டு.. அவனை இறுகக் கட்டிக் கொண்டவள்..
“நீ தான சொன்ன?, உன் கிட்ட நிறைய நிறைய அன்பிருக்குன்னு! அதெல்லாம் காலியாகுற வரைக்கும்.. நான் அதைச் சொல்ல மாட்டேன்!” என்றாள்.
“ஏய்ய்ய்ய்” – கடுப்புடன் குரல் கொடுத்தான் அவன்.
“கௌதம்… இப்போ எனக்கு.. அந்த வார்த்தையை, உன்னை, நீ காட்டுற அன்பை.. முழுசா… சொகுசா.. அனுபவிக்கனும்! அப்புறம்… என்னைக்காவது ஒரு நாள்.. உன் கிட்ட இருக்குற அன்பெல்லாம்.. தீர்ந்து போனப்புறம்.. நான்.. உன் கிட்ட இருந்து கிரகிச்ச அன்பை.. சேர்த்து வைச்சு.. உனக்கே,உனக்குன்னு மொத்தமா காட்டுவேன்”
“அப்படியா?”
“ஆமா”
“அப்டின்னா.. அந்த ஒரு நாள் வரப் போறதே இல்ல. ஏன்னா… உனக்கான என் அன்பு அட்சயப் பாத்திரம் மாதிரி.. என்னைக்குமே தீரப் போறதில்ல” – மெல்லிய குரலில் கூறியவனை..
விழி விரிய.. நிமிர்ந்து பார்த்து.. ஆசையாய்,காதலாய்… அதைத் தாண்டிய அன்போடு.. அவன் முகம் முழுக்கப் பார்வையால்.. வருடி.. எம்பி… அவன் நெற்றி முட்டி.. அழகாய்ச் சிரித்தாள் திவ்யா.
***************** முற்றும் ***************
