அத்தியாயம் - 11
வயதேறியும் வதுவை முறைகளுக்குட்படாத வஞ்சியவளின் வாழ்க்கைக்கு வரலாறு எதுவும் இருந்தாக வேண்டிய கட்டாயமிருக்கிறதா என்ன?
முடிவில்லாப் படிக்கட்டுகளைக் கொண்ட நகரேணியைப் போல் மேலே மேலே நீண்டு கொண்டிருந்த வாழ்க்கைப் பாதையில்.. சிகரம் தொடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எதைப் பற்றிய சிந்தனைகளுமின்றி.. தங்குதடைகளேதுமின்றி.. ஒற்றை ஆளாகக் கடகடவென ஏறியவளுக்கு.. அப்போது தெரிந்திருக்கவில்லை! உச்சியில்.. தனியாக நிற்கப் போகும் சூழ்நிலை வரப் போகிறதென்றும்! தான் மூச்சுக்குத் தவிக்கப் போகிறோமென்றும்!
தந்தை இருந்திருந்தால்.. இந்தத் தவிப்புக்கு அவசியமே இருந்திருக்காது. அறியா வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்ட அன்னையின் அன்பு.. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனதிலிருந்து மறைந்து.. மறந்தே போய் விட்ட நிலையில்.. சகலமும்,சர்வமும் தந்தை மட்டுமே என்றெண்ணி வாழ்ந்து வந்தவளுக்கு.. அவர் மரணப்படுக்கையில் விழுந்த பின்பு தான்.. அவரும் மண்ணுக்குள் மக்கிப் போகும் சாதாரண மனித உயிர் தான் என்பது புரிய வந்தது,!
நாம் அனைவருக்கும் நம் பெற்றோர் சாகாவரம் வாங்கி வந்து விட்டதாய் ஒரு நினைப்பிருக்கிறது! அதனால் தான்.. அன்பு காட்டுவதை விட அதட்டி,உருட்டி அவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்வதில் முனைப்பாய் இருக்கிறோம்! இல்லாமல் போகும் வரை அவர்களின் அருமை புரியப் போவதில்லை!
திவ்யாவிற்கும் அதே எண்ணம் தான்! தன் பரம்பரையிலேயே முதன் முதலாக அமெரிக்கா செல்லும் ஒரே பெண் என்கிற பெருமையோடு நாடு விட்டு நாடு வந்தவளுக்கு.. செய்யும் வேலையில் முன்னேற வேண்டுமென்கிற முனைப்பு மட்டும் தான்! அதனாலோ என்னவோ.. வரும் வரன்களெல்லாம் ஏதேதோ காரணங்களுக்காகத் தட்டிப் போகிறது என்று தந்தை புலம்பிய போதெல்லாம்.. பெரிதாக சட்டை செய்யவில்லை!
எதுவாகயிருந்தாலும் தந்தையிருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார் என்ற நினைப்பில்.. தன் அமெரிக்க விசாவை நீட்டித்துக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டவள்.. வருடத்திற்கு 2 முறை ஊர்ப் பக்கம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள்.
தன் அண்ணனைக் கட்டிக் கொண்டு அண்ணியாக அடியெடுத்து வைத்தவள் தன்னையும்,தன் தந்தையையும் ஒதுக்குவதை உணர்ந்த பின்பு.. எப்படியேனும் அவரைத் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துக் கொள்ள வேண்டுமென்று அவள் தீவிரமாய் முயற்சி செய்து கொண்டிருந்த சமயம்.. திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் படுக்கையில் விழுந்தார் அவர்.
பெற்ற ஒரே மகனை இழந்து விடக் கூடாதென்கிற நினைப்பில்.. பேரக் குழந்தைகளைத் தவிர்க்க முடியாத் தவிப்பில்.. மருமகளின் உதாசீனத்தைப் பெரிதாக கண்டு கொள்ளாமல்.. மகன் வீட்டில் வசித்து வந்தவருக்கு.. மருமகளின் செய்கைகளும், மகளின் திருமணம் பற்றிய எண்ணங்களும்.. மன உளைச்சலை கொடுத்ததில்.. அவர் திடீரென மரணித்து விட.. அண்ணனிருந்தும் அநாதையாய் நின்றாள் திவ்யா.
மாமனார் சொர்க்கம் சென்று விட்டக் கையோடு சொத்தையும் பிரித்து விட வேண்டுமென்கிற எண்ணத்தில் அவள் அண்ணி, ‘இவளது படிப்பிற்கும்,அமெரிக்கா பயணத்துக்கும் பெரிதாக அவள் தந்தை செலவழித்து விட்டதாகவும்,அதனால் சொத்து அனைத்தும் தன் புருஷனுக்கு மட்டும் தான்’ என்றும் சண்டையிட்ட போது.. அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. சொல்லத் தோன்றவுமில்லை.
கவர்மெண்ட் அலுவலகத்தில் காலாட்டியபடி கால்காசுக்கு வேலை செய்யும் அண்ணன், அமெரிக்காவில் அவள் வாங்கும் சம்பளத்தில் பத்து சதவீதத்தைக் கூடத் தொட மாட்டான்! இந்த விவரம் புரியாமல் ஆடிய அண்ணியிடம் எதுவும் பேசாமல்.. அண்ணனை ஒரு அற்பப்பார்வை பார்த்து விட்டுக் கிளம்பியவள் தான்.. இன்று வரை ஊர் செல்லவில்லை!
தந்தைக்குப் பிறகு தனக்கென அங்கு எதுவும் இருப்பதாய்த் தோன்றவில்லை அவளுக்கு. அண்ணன் பிள்ளைகளிடம் பிரியமாய் இருப்பாள் தான். ஆனால் தங்களது அன்னையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவர்களும் அத்தையோடு ஒட்டுவதில்லை. அவளது அண்ணன் ஒரு சார்புண்ணி! மானம்,ஈனம் என அத்தனையையும் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு கையாலாகாதத்தனத்துடன் நிற்கும் ஒரு அதிசிறந்த ஆண் மகன்.
அவனது திருமணத்திற்குப் பின்பிருந்தே அவனிடம் ஒரு ஒதுக்கத்தைக் கண்டு விட்டதால்.. அவன் மீது பெரிதாகப் பாசமற்றுப் போனது அவளுக்கு.
தந்தையின் இறப்புக்கு வந்திருந்த சொந்தங்கள் சிலர் அவளது திருமணத்தைப் பற்றி முணுமுணுத்த போது.. அண்ணனும்,அண்ணியும் நின்ற திசையில் காற்று மட்டுமே இருந்தது. அதிலும் அண்ணியென்பவள்.. அமெரிக்காவிலேயே திருமணமாகி இவள் செட்டில் ஆகி விட்டாள் என்பது போல் புரளியைப் பரப்பி விட.. அதையும் நம்பி அவள் முதுகுக்குப் பின் பேசிய கூட்டத்தை அவள் அன்று கண்டு கொள்ளவேயில்லை.
மலைமுகட்டில் நின்றவளுக்கு.. மேகம் தொடும் ஆசையற்றுப் போய் விட… அனுபவமும்,முதிர்ச்சியும் பேச்சைக் குறைத்து சிந்தனைகளை அதிகப்படுத்தியதன் விளைவு.. தன்னாலேயே அனைத்திடமிருந்தும்.. அனைவரிடமிருந்தும் ஒரு வித ஒதுக்கத்துக்குப் பழகியது மனது. இயல்பிலேயே அமைதியான குணம் கொண்டவளுக்கு, ஐடி வேலையும், கணினியோடு கணினியாய் மாறிப் போன ரோபோ வாழ்க்கையும் ஒத்துப் போக.. தனியாய் வாழப் பழகிக் கொண்டாள்.
வாழ்வு தனிமையாகி விட்டாலும்.. தன் வளர்ப்பை,அது கற்பித்தக் கலாச்சாரத்தை, ஒழுக்கத்தை மீறி ஒரு நாளும் அவள் ஸ்வரம் தப்பியதில்லை.
நண்பர்களோடு சேர்ந்து பூபூகிட்ஸைத் தொடங்கியது.. உயிரற்ற வாழ்வுக்கு உணர்வு கொடுக்கும் நோக்கத்தோடு தான்!
குழந்தைகளைக் காணும் போது.. தோன்றும் மலர்ச்சியும்,சிரிப்பும், அமைதியும் தான்.. இன்னும் அவள் மனித வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையை அவளுக்கு எடுத்துக் கூறும். கணினியைப் புறந்தள்ளி விட்டு.. கண்மணிகளோடு கலந்து கொள்ளச் சொல்லும்!
தந்தையின் இறப்புக்குப் பின்பான அவளது வாழ்க்கையின் வரைமுறை இது!
வரைமுறைகளுக்கும் வரையறையுண்டு. அதை நிரூபிப்பது போலமைந்தது அவனுடைய வருகை.
இறுக்கமானப் பிணைப்பொன்றுக்குள் கட்டுண்டு.. சிக்கிக் கிடக்கும் உணர்வு அவளுக்கு.
அசையும் சக்தியை இழந்து விட்ட கால்கள், செயலற்றுப் போன கைகள், துடிக்க மறந்த இதயம், சுவாசிக்கத் தயங்கிய நாசி என அவன் தனக்குள் இறுக்கி வைத்திருந்த அவளது ஒட்டு மொத்த உடலும்.. செயல்பாட்டை நிறுத்தி வைத்திருப்பதாய்த் தோன்றியது.
முகம் முழுக்க நீர் வழிய.. மூச்சு வாங்க.. சற்று முன்புத் தன் வீட்டு வாசலில் நின்றவனின் உருவம் மட்டும் அவள் விழி முழுக்க.. நெஞ்சு நிறைய.. தழும்பி நின்றது. அழுத்தமாய் மூடியிருந்த கண்களின் இறுக்கத்தைக் கூட்டினாள் அவள். அவன் உருவம் மறைவதாய்த் தெரியவில்லை.
தனிமையைத் தன்மையாய் கழித்தாக வேண்டிய கட்டாயத்தில்.. தன்னைச் சுற்றி அவள் எழுப்பி வைத்திருந்த பாதுகாப்பு வளையம்.. வடிவம் பெற்று முன்னே நிற்கும் உணர்வு.
அன்று கடைசியாய் அவள் தந்தையின் கரம் பற்றுகையில்.. அவர் கையிலிருந்த சில்லிப்பு.. இன்று இவன் உடல் முழுக்கப் பரவிக் கிடப்பதாய் ஓர் எண்ணம். அந்தக் கரம் உருவமாகித் தன்னை முழுதாய் ஏந்தியிருப்பதாகத் தோன்றியது.
அன்பும்,அரவணைப்பும்,பாதுகாப்பும் நிறைந்த அந்தக் கரத்தின் இயல்பை வெகு நாளைக்குப் பிறகு இன்று உணர்வதாய் எண்ணியது மனம்.
ஆழ்ந்த உறக்கத்தில்.. புரண்டு படுக்கும் போது.. கைக்கு அகப்படும் தலையணையையோ,பொம்மையையோ இறுக அணைத்துக் கொண்டுத் தூக்கத்தைத் தொடர்கையில்.. உண்டாகும் சுகம்.. அது கொடுக்கும்.. பாதுகாப்பு உணர்வு.. இவையிரண்டையும் அனுபவித்தபடி நிம்மதியாய் சயனித்திருக்கும் மனநிலையோடு கண்களைத் திறக்க எத்தனிக்காமல்.. அந்தக் கரமளித்தக் கதகதப்பை ஆழமாய் உணர்ந்தபடி மூச்சடக்கி நின்றவள்.. “ஹச்ச்ச்ச்” என்ற சத்தத்தில் திடுக்கிட்டு.. அவனை விட்டு விலகி நின்றாள்.
அடுத்தடுத்துத் தும்மியபடி மூக்கை உறிஞ்சியவனைக் கண்டு அவனை நன்றாய் முறைத்தவளிடம்.. “ஒரு கப் டீ கிடைக்குமா?” என்றான் அவன்.
“உனக்கு அப்படியென்ன பிடிவாதம் கௌதம்? இதெல்லாம் தேவையா?” –எரிச்சலுடன் கேள்வி கேட்டவளைக் கண்டு..
“பின்ன?, ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டீங்களா?, நல்ல படியா போய்ட்டு வாங்கன்னு நான் டாட்டா சொல்லனுமா?” – என்றான் அவனும் கோபமாய்.
“இப்போ மட்டும் போக மாட்டேன்னு நினைச்சியா?”
“ம்ஹ்ம், இனி நீங்க எங்க போனாலும் பிரச்சனையில்ல.”
“என்ன திடீர் மாற்றம்?”
“நானும் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு உங்களோடவே வந்துடலாம்ன்னு டிசைட் பண்ணிட்டேன்”
“கௌ..தம்ம்”
“டீ குடுங்க ப்ளீஸ்”
பதில் சொல்லாமல் கைக்கட்டி நின்று அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு.. அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் அவள்.
சோஃபாவை விடுத்து.. அன்று அமர்ந்த அதே டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தான் கௌதம். விவரிக்க முடியா.. விளக்கமில்லா.. உவகையொன்று அவன் முகம் முழுதிலும் வியாபித்திருந்தது.
இரண்டு டீ கப்புகளோடு வந்தவள் அவனுக்கு ஒன்றைக் கொடுத்து விட்டுத் தானும் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
அவளைப் பார்த்தபடியே டீயை அருந்தியவனின் விழிகளைத் தளராமல் எதிர் கொண்டபடி அமர்ந்திருந்தவளிடம்..
“வெட்கப்பட மாட்டீங்களா?” என்றான் அவன்.
“வரல கௌதம்”
அவள் பதிலைக் கேட்டுத் தோள் குலுங்க சிரித்துத் தலை குனிந்தவனைப் பார்த்தபடி டீகப்பை வாயில் வைத்தவளின் விழிகளில் அழகாய் ஒரு பளபளப்பு.
“டீ,காஃபி மட்டும் தான் போட வருமா?, இல்ல நல்லா சமைப்பீங்களா?”
“நான் கொங்கு நாட்டுப் பொண்ணு. வஞ்சகமில்லாம வக்கணையா சாப்பிட்டு வளர்ந்த ஆளு! சமைக்கத் தெரியாம இருக்குமா?” – புருவம் தூக்கிக் கர்வமாய் வினவியவளிடம்..
“பார்றா.. அப்புறம்?”-என்றான் அவன்.
“என்ன அப்புறம்?”
“கொங்கு நாட்டுப் பொண்ணுன்னு இப்போ தான் உங்களைப் பத்தி புது இன்ஃபர்மேஷன் சொல்லியிருக்கீங்க. இந்த மாதிரி ஏதாவது சொல்லுங்க”
“என்ன சொல்ல கௌதம்?”
“வஞ்சரமா,வாழைக்காயா?, இளையராஜாவா,ஏஆர்ரஹ்மானா? புத்தகமா, படமா? இந்த மாதிரி உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பத்தி?”
“……………”
“என்னாச்சுங்க??”
“என்னைப் பத்தி எதுவுமே தெரியாம, எப்படி அப்படி சொன்ன?” – கம்மிய குரலில் வினவியவளின் புறம் நன்றாய்த் திரும்பியமர்ந்து..
“எப்படி சொன்னேன்?” என்றான் அவன்.
“……….”
“சொல்லுங்க”
“ப்ச், கௌ..தம்” – சிணுங்கியவளிடம்..
“வெட்கப்பட வரலன்னு சொன்னீங்க?” – கையைக் கட்டிக் கொண்டுப் புருவத்தைத் தூக்கி மெல்லிய குரலில் வினவியவனைக் கண்டு கொள்ளாமல்.. காஃபி கப்பை வருடியபடிப் பார்வையைத் தழைத்துக் கொண்டாள் அவள்.
அவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கித் தாழ்ந்திருந்த விழிகளும், பற்களிடம் பிடிபட்டிருந்த உதடும், சீரற்ற மூச்சும்.. அதை அடக்க அவள் செய்த முயற்சியும்.. முகத்தில் அதிகமாய் ரத்தத்தைப் பாய்ச்சியதில்.. நிறம் மாறிப் போய் அமர்ந்திருந்தவளைக் கண்டவனின் மனம் மென்மையானது.
“என்னை நிமிர்ந்து பாருங்க”
“………..” – அழுத்தமாய் உதட்டைக் கடித்தபடித் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
அவள் கன்னம் பற்றித் தன் புறம் திருப்பி….
“மனசுல இருக்குறது முகத்துல தெரிஞ்சுடுமோன்னு பயப்பட்றதை நிறுத்துங்க முதல்ல. நீங்க பிடிச்சிருக்குன்னு சொன்னாலும் சரி, பிடிக்கலைடான்னு விரட்டுனாலும் சரி, ரெண்டையுமே என்னால ஹாண்டில் பண்ண முடியும். அதனால ரொம்பக் கஷ்டப்படாதீங்க. சரியா?” என்றான்.
“……….”
“திவ்யா…” – அழுத்தமாய்த் தன் பெயரை உச்சரித்தவனை அலைபாயும் விழிகளோடு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“பிடிச்சிருக்கு கௌதம்” – தயங்கித் தவித்தக் குரல்.. தடையைத் தாண்டி ஒரு வழியாக வெளி வந்து விட.. உள்ளே அடித்துக் கொண்ட இதயம்.. தொண்டைக்கு இடம் மாறித் துடிக்கும் அதிசயத்தை உணர்ந்தபடி… உரிமையாய் அவளை நோக்கியவனின் விழிகளில்.. அநியாயக் காதல்!
“ஆனா.. என்னால ஹேண்டில் பண்ண முடியும்ன்னு உன்னை மாதிரி தைரியமா சொல்ல முடியல”
பிடித்திருப்பதாய் அவள் கூறிக் கேட்டு விட்டக் காதுகளுக்கு.. அடுத்து அவள் கூறும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தோன்றவேயில்லை.
“எது உங்களைத் தடுக்குதுன்னு நினைக்குறீங்க?”
“…………”
“உங்களுக்கும் எனக்குமிருக்கிற வயசு வித்தியாசமா?”
“பின்ன இல்லையா?, ஊர்ல இருக்குற என் தம்பிக்கு உன் வயசு கௌதம்”
“உங்க தம்பியும்,நானும் ஒன்னா உங்களுக்கு?”
“இல்ல தான். ஆனா அது ஊர்,உலகத்துக்கெல்லாம் புரியுமா?”
“ஊர்,உலகத்துல பேசுறதையெல்லாம் பெருசா நினைக்குற ஆளா நீங்க?”
“இது தான் என் விருப்பம்ன்னு துணிஞ்சு முடிவு பண்ணிட்டேன்னா, யாரையும்,எதையும் பெருசா மைண்ட் பண்ண மாட்டேன்! ஆனா.. இது எனக்குள்ள இருக்கிற உறுத்தல் கௌதம். உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்றதை என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல.”
“…………..”
“எனக்குப் புரியுது. நாம இப்போ இருக்குற காலகட்டம்,வாழ்ற வாழ்க்கை.. இந்த மாதிரி விஷயங்களைப் பெருசா கன்சிடர் பண்ணி குற்றம் சொல்ற வழக்கத்தையெல்லாம் மாத்திக்கிச்சுன்னு! ஆனா.. முடியல கௌதம்! என்ன தான் இன்னிக்கு அமெரிக்கால இருந்தாலும்.. நான் பிறந்து,வளர்ந்த சமூகம், அது கத்துக் கொடுத்தக் கொள்கை,கோட்பாடெல்லாம் என்னை அதிகமா டிஸ்டர்ப் பண்ணுது. ஸ்டாப் பண்ணுது.”
“அதனால?”
“………….”
“அதனால என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?”
“கண்ணில் படாதது கருத்திலும் நிலைக்காதுன்றதை ஃபாலோ பண்ணலாம்ன்னு தான் ட்ரான்ஸ்ஃபர் இனிஷியேட் பண்ணேன்”
“ஓஹோ”
“ஆனா.. இப்போ.. அப்படி… உன்னை விட்டு ஒதுங்கி இருந்துட முடியுமான்னு சந்தேகம் வருது”
“ஹாஹாஹா”
“சிரிக்காத கௌதம்”
“திவ்யா.. ஐ லவ் யூ” – மோகனப் புன்னகையுடன் கூறினான் அவன்.
“ப்ச்” – சலிப்புடன் முகம் திருப்பினாள் அவள்.
“ஐ லவ் யூ”
“திரும்பத் திரும்ப அதையே சொல்லாத கௌதம்”
“ஏன்?”
“மூச்சடைக்க வைக்குது” - தவிப்புடன் நெஞ்சைத் தடவிக் கொண்டாள் அவள்.
“………..”
“கௌதம்..”
“சொல்லுங்க..” – அவள் பேச்சு, முகத்தில் அது கொண்டு வரும் பாவனைகள் என அந்தக் கண்களும்,இதழ்களும் காட்டிய ஜாலங்களுக்குள் தன்னைத் தொலைத்து.. அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
“இப்போ என்ன பண்றது?”
“என்ன பண்ணலாம்?”
“நான் விளையாடல கௌதம். சீரியசா பேசிட்டிருக்கேன்”
“நானும் சீரியஸா ஒன்னு சொல்லட்டுமா?”
“சொல்லு”
“ஜஸ்ட்… கோ வித் த ஃப்ளோ..”
“கௌ…தம்..”
“நிஜமா தான்! சிட் பேக் அண்ட் ரிலேக்ஸ்! நிறைய யோசிக்காதீங்க. பிரயோஜனமேயில்லாத யோசனைகள் டென்ஷனை மட்டும் தான் கொடுக்கும். மூளையோட கனெக்ஷனை கொஞ்ச நாளைக்குக் கட் பண்ணி வைங்க. மனசு சொல்றதைக் கேளுங்க. என்னைக்காவது ஒரு நாள்.. என்னால இதையெல்லாம் ஹாண்டில் பண்ண முடியல, தூரமா போடான்னு நீங்க துரத்தும் போது.. நான் விலகிப் போயிட்றேன். ஓகே?”
“போயிடுவியா?”
“ஆமா! போ-ன்னு சொன்னா.. போய் தான ஆகனும்?”
“இப்போவே சொல்றேன்.. போய்ட்றியா?”
“சரி சொல்லுங்க”
அசால்ட்டாகக் கூறியவனைக் கண்டு புன்னகைக்கவும் தோன்றாமல், அழுது ஆர்ப்பாட்டம் செய்யவும் முடியாமல்.. தன்னுடைய ரெண்டுங்கெட்டான் மனநிலையை அவனுக்குப் புரிய வைத்து விடும் நோக்கத்தோடு…
“போய்டு கௌதம். ப்ளீஸ்.. ப்ரேக்கே இல்லாத வண்டில ட்ராவல் பண்ற மாதிரி ஒரு டேஞ்சரஸ் ஆன வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கேன் நான். நிறுத்துனா.. எங்க விழுந்து நொறுங்கிடுவேனோன்ற பயமிருக்கு. ஆனாலும் அதை வெளிக்காட்டாம.. நிலைமை கவலைக்கிடமா இருக்குன்றதை யாரோடயும் பகிர்ந்துக்காம.. யார் கிட்டயும் உதவி கேட்காம.. கெத்துக் குறையாம.. போயிட்டிருக்கேன்! என்னைப் புரிஞ்சுக்கவோ.. தெரிஞ்சுக்கவோ… யாரும் முயற்சி பண்ணதில்ல. யாரையும் நான் அனுமதிச்சதும் இல்ல. ஆனா.. நீ என் பெர்மிஷன் இல்லாம.. உள்ள வந்து.. காப்பாத்துறேன்னு கை நீட்டுற! உன் கையை டைட்-ஆ பிடிச்சுக்கிட்டு.. இந்த ஆபத்தான பயணத்துல இருந்து தப்பிச்சு வெளியே வந்துடனும்ன்னு மனசு ஆசைப்படத் தொடங்கிடுச்சு கௌதம்! போற வரைக்கும் போகட்டும், எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கிற மாதிரி என் வாழ்க்கைக்கும் ஒரு முற்றுப்புள்ளி இருக்கும்ன்னு தான் இதுவரைக்கும் நினைச்சிட்டிருந்தேன்! ஆனா.. அந்த முற்றுப்புள்ளிக்குப் பக்கத்துல நீ வைக்குற இன்னொரு புள்ளி.. என்னைத் திரும்பவும் முதல்ல இருந்து வாழ்ந்து பார்க்கச் சொல்லித் தூண்டுது! எங்கப்பா இறந்ததுக்கு அப்புறம் நான் பெருசா அன்புக்கு ஏங்க-லாம் இல்ல. அந்த அன்பு,இனி யார் கிட்டயும் கிடைச்சுடாதுன்றதுல ரொம்பத் தெளிவா இருந்தேன். இப்போ.. அதை உன் கிட்டத் தேடிப் பார்க்கனும்ன்னு தோணுது. சொந்தம்,உறவுன்னு அத்தனை மேலயும் ஒரு ஒவ்வாமையை வளர்த்துக்கிட்டு ஒதுங்கி நிற்கிற என்னை.. ஒரு மனுஷப் பட்டாளத்துக்குள்ள அடைக்கப் பார்க்குற நீ! உன்னைப் பார்த்தது.. நீ என் வாழ்க்கைக்குள்ள வந்து தொல்லை கொடுக்க ஆரம்பிச்சது.. அத்தனையும் ரொம்ப ஃபாஸ்ட்-ஆ கண்ணிமைக்குற நேரத்துல நடந்துட்ட மாதிரி இருக்கு. அதே வேகத்தோட.. இது.. இது அத்தனையும் பொய்யாகி.. நீயும்,உன் அன்பும் மறைஞ்சு போனா.. நான் என்ன பண்ணட்டும்? பெருசா ஏமாற்றமடைய மாட்டேன் தான். ஆனா.. இப்போ இருக்குற கொஞ்ச நஞ்ச உயிர்ப்பையும்,உணர்வையும் கூடத் தொலைச்சு.. மொத்தமா ரோபோ ஆயிடுவேனோன்னு ப..பயமா இருக்கு கௌதம்.”
“………..”
“உன்னை ஏத்துக்கச் சொல்லித் தூண்டுற மனசுக்கு.. நீ கொடுக்குற இந்த ஃபீலிங் ஒரு கட்டத்துல மறைஞ்சிடுமோன்ற பயமிருக்கு. அதனால.. உன் கூட இயல்பா இருக்க முடியாம போய்டுமோன்ற யோசனை! அதே நேரம்.. ஏத்துக்காம போனா.. உனக்காக ஏங்கித் தவிச்சு.. தனக்குள்ளயே புதைஞ்சிடுமோன்ற எண்ணம் வேற!”
“……………”
“இந்த ஃபீலிங்கை… உன்னை.. நான் ஏத்துக்கிட்டாலும்.. ஏத்துக்காம போனாலும்.. என் வாழ்க்கை.. கௌதமுக்கு முன்,பின்-ன்னு ரெண்டா வகுபடும்ன்றதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல.”
“……………….”
“நீ… நீ கொடுக்குற பாதிப்பு.. எனக்குக் கஷ்டத்தைக் கொடுக்குது கௌதம். ஒவ்வொரு நாளும் போராட்டமா இருக்கு. உன் கிட்ட இருந்துத் தப்பிச்சுடனும்ன்னு தோணுது. நீ போயிடேன் ப்ளீஸ்..”
தூக்கிக் கொஞ்சத் தூண்டும் அழகிய பூனைக்குட்டியொன்று.. தன் சின்ன முகத்தின் வடிவத்தை மேலும் சுருக்கி.. கண்கள் நிறையக் காதலையும்,தவிப்பையும் கொள்ளை,கொள்ளையாய் வைத்துக் கொண்டு… தன் நிலையிலிருந்துக் கீழிறங்கி.. அவன் அன்பின் முன்பு அடி பணிந்து நிற்க வேண்டியக் கட்டாயத்தில்.. உண்டான ஆயாசத்துடன்.. அவனுக்கானத் தன் எண்ணங்களை.. வார்த்தைகளாய்க் கோர்த்த அழகில்.. மூழ்கி.. அமிழ்ந்து.. கரைந்து போய்க் கிடந்தவன்..
படபடப்பில் வியர்த்து வழிந்த அவள் முகத்தில் ஒட்டி இழைந்தக் கூந்தல் கற்றைகளை விலக்கி.. கலங்கத் துடிக்கும் அவள் விழிகளோடுத் தன் விழிகளை உறவாட விட்டு.. ஒரு நொடி அவளை இமைக்காது நோக்கி.. மறு நொடி.. அவள் இதழ்களுக்குள் ஆழமாய்க் கலந்து போனான்.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பை உணர்த்தும்.. உணர வைக்கும் பெரும் சக்தி முத்தத்துக்கு மட்டுமே உண்டு!
அவன் செய்கையை எதிர்பாராது பதறி.. அவன் தோளைப் பற்றித் தள்ளி.. அவனிடமிருந்துத் தன்னைப் பிரித்துக் கொள்ள அவள் செய்த முயற்சி எதையும் அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
பத்து நிமிடம் அவள் பேசிய அத்தனை வார்த்தைகளுக்கும்.. பதிலளிக்கும் விதமாக அமைந்து போனது அவன் முத்தம்.
காலம் மறந்து,கவலை மறந்துக் கண் மூடிக் கரைந்திருந்தவனை.. ஒரே மூச்சில் விலக்கி.. நான்கடித் தள்ளி நின்றவளின் உடல்.. பதற்றத்திலும்,படபடப்பிலும் வியர்த்துக் குளித்திருந்தது.
மூச்சு வாங்க சுவரோடு சுவராய் ஒண்டிக் கொண்டவளுக்குக் கைகளும்,கால்களும் நடுக்கத்தில் வெட்டிக் கொள்வதைப் போல் தோன்ற… குழறிய நாக்கில் கோபத்தை வெளிப்படுத்த முயற்சித்து..
“எ…என்னடா பண்ற நீ?” என்று வினவியவளை…. அதே பார்வையோடு நோக்கியவன்..
“இன்னும் பண்ணனும்ன்னு தோணுது. பக்கத்துல வா” என்றான்.
பல்லைக் கடித்து மூக்கு விடைக்க.. முறைத்தவளைக் கண்டு.. பிடரியைக் கோதியபடித் தலை குனிந்தவன்.. அவள் இதழிலிருந்த சூடு.. உள்ளே கடத்திய வெப்பத்தின் விளைவால் உண்டான உஷ்ணம்.. உடல் முழுதும் பரவிய வேகத்தை எதிர்கொள்ள முடியாமல்… சட்டென எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தான்.
நடுக்கமெடுத்த விரல்களால் காதோர முடிகளை ஒதுக்கி.. அவன் எச்சிலின் ஈரம் படிந்திருந்த இதழ்களைத் தொடத் தயங்கி.. அடித்துக் கொண்ட இதயத்தின் வேகத்தை அடக்க முயற்சித்து… கைகளை இறுக்கிக் கண்களை மூடினாள் அவள்.
இருளை வெறித்திருந்தவன்.. அவள் புறம் திரும்புகையில்.. கண் மூடி அவள் நின்றிருந்த கோலத்தைக் கண்டு… மீண்டும் அவளிடம் தன்னைத் தொலைத்து.. செயலற்று.. மயங்கி நின்றான்.
அவன் பார்வையை உணர்ந்து விழிகளைத் திறந்தவள்.. மயங்கிக் கிடந்த அவன் முகம் உள்ளே கிளப்பிய சிலிர்ப்பை மறைத்து… மங்கத் தொடங்கிய மூளையைத் தட்டியெழுப்பி.. போதை கொண்ட மனதிற்குத் தண்ணீர் தெளித்து.. சொக்கி நின்ற உடலின் அத்தனை பாகங்களுக்கும் உணர்வூட்ட முயற்சி செய்து.. தோற்று…. எச்சில் விழுங்கியபடி அவனை நோக்கினாள்.
இமைப்பதை நிறுத்தி மையலுடன் அவள் மீது அவன் விழிகள் படர்ந்திருந்த விதத்தில்.. கொள்ளை போனத் தயாரான மனதை அடக்க முடியாமல்..
டைனிங் டேபிளிலிருந்த ஆப்பிள்களில் ஒன்றை அவன் மீது விட்டெறிந்து…
“அப்படிப் பார்க்காத டா” என்று கோபம் கொண்டவளைக் கண்டு.. லேசான சிரிப்புடன்.. பிடரியைக் கோதினான் அவன்.
“நீ இப்படியெல்லாம் பண்ணேனா.. கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்”
“சரி, வா. வெளிய தள்ளு.” எனக் கூறியபடியே.. அவளருகே வரப் பார்த்தவனை அவசரமாய்த் தடுத்து..
“பக்கத்துல வராத கௌதம். அங்கயே நில்லு” என்று எச்சரித்தவளைக் கண்டு.. கைகளைக் கட்டிக் கொண்டு ஜன்னலில் சாய்ந்து நின்றான்.
பத்தடி தூரத்தில் ஆளுக்கொரு பக்கமாய் நின்றிருந்தனர் இருவரும்.
“ஏன் இப்படிப் பண்ற கௌதம்?” – ஆயாசத்துடன் வினவியவளிடம்..
“நீ அப்படியெல்லாம் பேசுனா.. இப்படித் தான் பண்ணத் தோணும்” – என்றான் அவனும் அலட்டிக் கொள்ளாமல்.
“……………”
“திவ்யா, இழப்புன்றது உனக்கு மட்டும் நடந்த ஒன்னு இல்ல. எல்லாருக்கும் நடக்குறது. எனக்கும் நடந்திருக்கு. ஆனா.. நான் வாழ்க்கைய அதன் போக்குல ஏத்துக்கிட்டு வாழ நினைக்குற சிம்பிளான மைண்ட் செட் உள்ள சராசரி ஆளு. இருக்குற ஒரு வாழ்க்கையை மனசுக்குப் பிடிச்சப் பொண்ணோட.. நிறைவா வாழ்ந்து பிள்ளை,குட்டியெல்லாம் பெத்துப் பரம்பரையை நீட்டிச்சுக்கனும்ன்ற சாதாரண எண்ணம் கொண்ட மனுஷன். என் மனசைத் தொட்டப் பொண்ணுக்கு வயசு என்ன,எடை என்ன, உயரம் என்னன்னு கணக்குப் போட்டுப் பார்த்து என்னாலக் காதலிக்க முடியாது. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நான் உன்னைக் காதலிக்குறேன். மிச்சமிருக்கிற வாழ்க்கையை உன் கூடக் கழிக்கனும்ன்னு ஆசைப்பட்றேன். அவ்ளோ தான்! அதுக்கு மேல யோசிக்க இதுல எதுவுமே இல்ல! பிடிச்ச சாப்பாடை சாப்பிட்றதுக்கும், பிடிச்ச டிரெஸ்ஸை உடுத்திக்கிறதுக்கும் யோசிக்கிறோமா என்ன? பிடிச்சவங்களோட வாழ்க்கையை வாழ மட்டும் ஏன் இத்தனை யோசனை?”
“அது அவ்ளோ சிம்பிள் இல்ல கௌதம்”
“ஏன்? ஏன் சிம்பிள் இல்ல?, பிடித்தம்ன்றதுக்குக் கீழ… ஆப்போசிட் பார்ட்டியோட நிறை,குறைன்னு அத்தனையும் வந்துடுது திவ்யா. உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்றதோட அர்த்தம்.. உன் கண்ணு,மூக்கு,வாயோட சேர்த்து.. உன் வயசு, காம்ப்ளிகேடட்-ஆ யோசிக்குற உன் மூளை, உன் குணம், உன் அறிவு, உன் சந்தோசம், துக்கம், தயக்கம்,தவிப்புன்னு அத்தனையும் என்னைப் பாதிக்குன்றது தான்! என்னைப் பைத்தியமாக்கி உன் பின்னாடி அலைய வைக்குதுன்றது தான். உனக்கும்,எனக்கும் மனசு ஒத்துப் போனப்புறம்… யாரைப் பத்தி.. எதைப் பத்தி பெருசா யோசிக்கனும் நாம? குடும்பம்? சொஸைட்டி? இதையெல்லாம் சமாளிக்கத் தெரியாமலா இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கோம்?”
“ஏன்… ஏன் நான் கௌதம்?”
“புரியல”
“என்னை ஏன் பிடிச்சிருக்கு?” – அவன் கொடுத்த விளக்கத்தில் திணறியவளுக்கு.. இந்தக் கேள்வி மட்டுமே மனதில் எழுந்தது.
அவள் கேள்வியில் புன்னகை கொண்டவன்.. நின்றிருந்த ஜன்னல் திட்டில் ஏறியமர்ந்தான். வெகுவாய் யோசிப்பது போல் பாவனை செய்தவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.
“தெரியல.. லாவண்டர் வாசமா.. இல்ல, சாஃப்ட்,சாஃப்ட் கன்னமா, அதுக்கு அப்படியே ஆப்போசிட் ஆன உன் குணமா?, பூனைக்குட்டி மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு சின்னப்புள்ளத்தனமா ரைம்ஸ் பாடுற அழகா, சிரிக்கும் போது பளிச்,பளிச்ன்னு மின்னுற கண்ணா.. கோபமும்,எரிச்சலுமா எந்நேரமும் உர்ருன்னே இருக்குற முகமா.. யார் கிட்டயும் ஒட்டாம ஒதுங்கி நிற்குற உன் நேச்சரா?, அழுத்தமா, ஆளுமையா, ஷர்மா கிட்ட இந்த குறையைக் கண்டுக்காம, அவரோட ஃப்ரெண்ட்ஷிப்க்கு நேர்மையா இருந்த விதமா.. எது இம்ப்ரெஸ் பண்ணுச்சுன்னு சத்தியமாத் தெரியல”
“ட்ரமாடிக் எக்ஸ்ப்ளனேஷன்” – உதட்டை வளைத்தபடிக் கூறியவளைக் கண்டு கொள்ளாமல்..
“இது தான். என்னோட இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் மயங்காம.. அன்ரொமாண்ட்டிக், லெஸ் ட்ரமாடிக் ஆன ஆளா நீ இருக்கிறதால.. பிடிச்சிடுச்சோ என்னவோ” என்றான் அவன்.
அவன் கூறிய விதத்தில் புன்னகை கொண்டு.. மென்மை படர்ந்த முகத்துடன் அவனைப் பார்த்தவளிடம்..
“எனக்கு நிறையக் காதலிக்கனும். கல்யாணம் கட்டிக்கனும். என் மார்னிங் காஃபில இருந்துத் தொடங்கி.. நைட் நான் போர்த்திக்கிற பெட் ஷீட் வரை அத்தனையையும் என் கூட ஷேர் பண்ணிக்கிற.. காதலி வேணும்! பொண்டாட்டி வேணும்! என் கிட்ட நிறைய,நிறைய அன்பு இருக்கு. 29 வருஷமா சேர்த்து வைச்சிருக்கேன். எனக்கே,எனக்குன்னு வரப் போறவகிட்ட.. கொட்டனும்றதுக்காக! என்னைப் பார்த்துக்கோ,என் குடும்பத்தைப் பார்த்துக்கோன்னு எந்தக் கமிட்மெண்ட்டையும் உனக்கு நான் கொடுக்கப் போறதில்ல. ஆனா.. உன்னை நான் பார்த்துக்கிறதுக்கு… எனக்குப் பர்மிஷன் கொடு!” – என்றான் அவன்.
நெகிழ்ந்த மனது… விழிகளைக் கலங்கச் செய்ய.. இமை தாழ்த்தி… அதற்கு அணையிட்டு நிமிர்ந்தவள்.. புன்னகைக்க முயன்றபடி..
“காதலிக்குறேன்னு தான் சொன்ன? இப்போ கல்யாணத்துக்குப் போய்ட்ட?” என்றாள்.
“ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கா என்ன?”
“இல்ல தான்”
“திவ்யா..”
“ம்ம்..”
“என்னைத் தடுக்க நினைக்குறது வீண் முயற்சி”
“தெரியுது”
“ஏத்துக்கவே முடியாதுன்னு தோணுதா?”
“ம்ஹ்ம்”
“பின்ன?”
“மழைல நனைய ஆசையாவும் இருக்கு. அதே நேரம் ஜலதோஷம் பிடிச்சுடுமோன்ற பயமும் இருக்கு”
“நான் மழையா இருக்க விரும்பல. குடையா இருக்கத் தான் விரும்புறேன்!”
“………….”
“எங்க இவன் அன்பு,பாசமெல்லாம் மாறிடுமோன்னு யோசிக்காத. உன் அப்பாவோட அன்புல சந்தேகப்பட்ருக்கியா? இல்லேல்ல?, அப்படி நினை.”
“…………….”
“ஊர்,உலகம் பேசுறதையெல்லாம் பெருசா மதிக்குற அளவுக்கு நீ முதிர்ச்சி இல்லாத ஆள் கிடையாது”
“………….”
“திவ்யா…”
“………..”
“இன்னும்.. என்னங்க? ஏன் அமைதியா இருக்கீங்க?”
“எனக்கு.. எனக்கு டைம் கொடு கௌதம். எனக்கே எனக்கான அன்பு,பாசத்தையெல்லாம் ரொம்ப நாளைக்கப்புறம் உணர்றேன். பழகிக்க…. டைம் வேணும்..” – தயங்கிக் கூறினாள் அவள்.
“எவ்ளோ நாள் எடுத்துப்பீங்க?”
“ப்ச், டைம்லைன் எல்லாமா சொல்ல முடியும்?”
“அப்டின்னா.. நான் உங்களைக் காதலிக்க எனக்கு பர்மிஷன் கொடுத்துட்டீங்களா?”
“…………” – பதில் சொல்லாமல்.. தலை குனிந்தவளிடம்..
“நான் ஆமான்னு தான் எடுத்துக்கப் போறேன்” எனக் கூறியபடி ஜன்னலை விட்டுக் கீழிறங்கியவனிடம்.. அவசரமாக…
“அதுக்காக நீ.. அதிகமா அட்வாண்டேஜ் எடுத்துக்காத கௌதம்” என்றாள் அவள்.
“என்ன இப்போ அட்வாண்டேஜ் எடுத்தேன் நான்?”
“…………..”
“ஓஓ! கிஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்றீங்களா?, அது ரொம்பக் கஷ்டம்”
“கௌ….தம்”
“ஆமாங்க! நான் வாரத்துல 7 நாளும் நான்-வெஜ் சாப்பிட்ற ஆளு! கண்ட்ரோல் பண்றது அவ்ளோ ஈசி கிடையாது”
“நீ இப்படியே பேசிட்டிருந்தேனா… நான் யோசிக்காம………….”
“அடிச்சுடுவீங்களா?”
“இல்ல. ஓடிடுவேன் கௌதம்” –அழுகைக் குரலில் கூறியவளைக் கண்டு..
“ஹாஹாஹாஹா”-வெனச் சிரித்தான் அவன்.
“சிரிக்காத.”
“சிரிக்கல. சாப்பிடலாமா? எனக்குப் பசிக்குது”
“என்ன ஆர்டர் பண்ணட்டும்?” – கேட்டபடியே ஃபோனைத் தூக்கியவளிடம்..
“நல்லா சமைப்பேன்னு பீத்திக்கிட்டீங்க. போய் ஏதாவது சமைச்சுக் கொண்டு வாங்க”-என்று விரட்டினான் அவன்.
“எனக்கு சமைக்கத் தெரியும். ஆனா.. சாப்பிட்றதுல இருந்த இன்ட்ரெஸ்ட் எல்லாம் காணாம போய் ரொம்ப நாள் ஆச்சு கௌதம்”
“இனி நல்லா சாப்பிடுங்க. உங்களை நம்பி நான் ஒருத்தன் இருக்கேன்”
பாசமாய் ஒரு பார்வை பார்த்தவளிடம்.. “பார்த்தது போதும். பசிக்குது. போங்க” என்று அவன் விரட்ட.. முனகியபடியே அடுப்படிக்குச் சென்றாள் அவள்.
அடுத்த சில நிமிடங்கள் அக்கறையாய் சமைத்தவளை ஆசையாய்ப் பார்த்து விட்டு வீட்டைச் சுற்றினான் அவன்.
முட்டை கலந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸூடன் வந்தமர்ந்தவளை ஆர்வமாய் நோக்கி.. “லுக்ஸ் யம்மி” என்றவன்.. இருவருக்கும் அதைத் தட்டிலிட்டு விட்டு சாப்பிடத் தொடங்கினான்.
“ஏன் இந்த ரூம் பூட்டி வைச்சிருக்கீங்க?” – டைனிங் டேபிளுக்கு எதிர்த்தார் போலிருந்த அறையைக் கை காட்டியவனிடம்..
“அந்த ரூம்க்குள்ள கொஞ்சம் மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் இருக்கு” என்றாள் அவள்.
“நீங்க வாசிப்பீங்களா?”
“ம்ம்”
“நிஜமாவா?”
“ஏன் அவ்ளோ சர்ப்ரைஸ் ஆகுற?”
“ப்ச், சொல்லுங்க”
“ஹ்ம்ம் வீணை,கிட்டார்,பியானோ, சாக்ஸஃபோனெல்லாம் முறையா கத்துக்கிட்டேன். படிப்பைத் தவிர எனக்கு லைஃப்ல இருந்த ஒரே இன்ட்ரெஸ்ட் இது தான்”
“சர்ப்ரைஸிங். எனக்கு வாசிச்சுக் காட்டுறீங்களா?”
“ப்ச், ரொம்ப நாள் ஆச்சு கௌதம்! டச் விட்டுப் போச்சு”
“சும்மா ட்ரை பண்ணுங்க. எனக்காக ப்ளீஸ்…”
“உனக்கு வீட்டுக்குப் போறதா ஐடியாவே இல்லையா?”
“போகச் சொல்வீங்களா?”
“போ கௌதம்.”
“ம்ஹ்ம்ம் இன்னிக்கு உங்களோட தான் இருக்கப் போறேன்”
“கௌதம்…”
“வீட்டுக்குப் போனா.. தூக்கம் வராதுங்க. அப்புறம், மறுபடியும் உங்க வீட்டு வாசல்ல தான் வந்து நிற்பேன்.”
“இது தப்பு கௌதம்”
“எது தப்பு?, சும்மா உங்களோட உட்கார்ந்து பேசிட்டிருக்கிறதா? மனுஷ வாழ்க்கைக்கு விதிமுறையெல்லாம் கிடையாதுங்க”
“……………”
“நான் டர்ட்டியா எதுவும் யோசிக்கல. உங்களுக்கு அப்படி எதுவும் எண்ணமிருந்தா.. நான் இப்பவே கிளம்புறேன்”
“ஏய்ய்ய்ய்”-என்றபடி அவள் பாய்வதற்குள்..
“அந்த மியூசிக் ரூமை ஓபன் பண்ணுங்க ப்ளீஸ்” எனக் கூறி ஓடி விட்டான் அவன்.
அவள் கூறிய இசைக்கருவிகளோடு.. காட்சியளித்த அறையைப் பார்வையிட்டபடி.. நடந்தவன்.. பியானோவின் கீ-க்களைத் தடவி ஒலியெழுப்பி… பின்னே நின்றிருந்தவளின் புறம் திரும்பினான்.
“கச்சேரியை ஆரம்பிங்க”
அவன் கூறியதும் சிரித்தபடி கிட்டாரைத் தூசி தட்டியவளிடம்…
“இந்த இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், அவ்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட்ல கத்துக்கிட்டீங்க ஓகே. ஆனா.. குழந்தைங்க மேல ஏன் அவ்ளோ ஈடுபாடு வந்தது?” எனக் கேட்டபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் கௌதம்.
கிட்டாரை சோதித்தபடி நிமிர்ந்தவள் புருவம் சுருக்கி யோசித்து..
“ஏன்னா.. குழந்தைங்க யாரையும் ஜட்ஜ் பண்ண மாட்டாங்க. என் வயசு என்ன, பார்க்குற வேலை என்ன, என் பேக்க்ரவ்ண்ட் என்ன, எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா, பிள்ளை,குட்டி இருக்கான்னு அவங்க சிந்தனை என்னை ஆராயாது.. என்னால அவங்களோட ஈசியா கனெக்ட் ஆக முடிஞ்சது. அதனால வந்த ஈடுபாடு தான் போல!” என்றவளை சிரிப்புடன் நோக்கி..
“எவ்ளோ பெரிய விசயத்தை அசால்ட்டா சொல்றீங்க?” என்றவன்..
“ரெண்டு கையையும் விரிச்சு.. வந்துடு உள்ள, உன்னை நெஞ்சுக்கூட்டுக்குள்ளப் பத்திரமா வைச்சுக்குறேன்னு கத்தி சொல்லனும் போல இருக்கு” என்றான் உணர்ந்து.
“உன் பார்வையே என்னை பத்திரமாத் தான் வைச்சிருக்கு. அதனால நான் இங்கயே இருக்கேன்” – பட்டெனப் பல்ப் கொடுத்தவளை முறைத்து…
“ரொம்பப் பண்ணிக்காதீங்க. நான் உங்க கிட்ட வர்றதுக்கு உங்க அனுமதியெல்லாம் தேவையில்ல எனக்கு” என்று கடுப்படித்தவனைக் கண்டுப் பல்லைக் கடித்து..
“இப்போ நான் வாசிக்கிறதா வேணாமா?” என்றாள் அவள்.
“வாசிங்க,வாசிங்க”
“என்ன வாசிக்கட்டும்?”
“ஏதாவது…”
“நீ பாடு. நான் வாசிக்கிறேன்”
“நானா?”
“ம்ம், அன்னிக்கு நீ பாடுறதைக் கேட்டேனே! ரொம்ப நல்லாப் பாடின”
“அப்டின்னா அன்னிக்குக் காது கேக்காத மாதிரி செல்ஃபோனைப் பார்த்துட்டிருந்ததெல்லாம் வெறும் நடிப்பு? என்னைக் கடுப்பேத்தத் தான அப்படிப் பண்ணீங்க?”
“ப்ச், இப்போ நீ பாடுவியா மாட்டியா?”
“பாடுறேன்”
“ஹ்ம்ம், ஸ்டார்ட் பண்ணு“
“கண்ணாலே.. பேசிப் பேசிக் கொல்லாதே…” – எனத் தொடங்கியவனை ஆச்சரியமாய்ப் பார்த்தவளிடம்..
“என்ன பார்க்குறீங்க? உங்களோட சேர்ந்தப்புறம் நானும் எம்.எஸ்.வி ஃபேன் ஆயிட்டேன்” என்றவன் பாட்டைத் தொடர்ந்தான்.
அவன் பாடுவதற்கேற்ப கிட்டாரை இசைத்தவளின் முகத்தில் அப்படியொரு நிறைவு.
‘காதல் தெய்வீக ராணி.. போதை உண்டாகுதே.. நீ..
கண்ணே என் மனதை விட்டுச் செல்லாதே…’
“அவ்ளோ தான்-ங்க தெரியும்”
“ம்ம், வேற?”
‘ஹ்ம்ம்ம்….. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களைக் காண வந்தாள்..
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்..
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்..’
“பி.பி.எஸ் ஃபேனா நீ?” என்றவளைக் கண்டு கொள்ளாமல்..
‘பார்த்தேன்… சிரித்தேன்… பக்கத்தில் அழைத்தேன்.
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்..
அந்த மலைத்தேன்.. இதுவென மலைத்தேன்!’
வாசிப்பதை நிறுத்தி விட்டு.. “என்ன பாட்டு வேற திசைக்குப் போகுது?” எனக் கேட்டு அவனை முறைத்தவளிடம்..
“இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி?” என்றவன்..
“தாமரைக் கன்னங்கள்.. தேன் மலர்க் கிண்ணங்கள்..
எத்தனை வண்ணங்கள்.. முத்தமாய் சிந்தும் போது..
பொங்கிடும் எண்ணங்கள்…” – என்றபடி நமுட்டுச் சிரிப்புடன் தொடர்ந்து பாட.. அவனை அடிக்கப் பொருள் தேடியவளைக் கண்டு.. அவன் வாய் விட்டுச் சிரித்த சத்தம்.. அறை முழுக்க எதிரொலித்து.. அதுவரைக் கட்டிடமாய் மட்டுமே நின்ற அவள் வீட்டை.. இன்பம் நிறைந்த இல்லமாக மாற்றியது.
அந்த வாரக் கடைசி முடிவுற்று.. திங்களன்று காலை திவ்யா அலுவலகம் கிளம்பத் தயாராகி நிற்கையில்.. அவளது ஃபோன் ஒலித்தது.
“குட்மார்னிங்” – உற்சாகமாய்க் காலை வணக்கம் கூறியது கௌதமின் குரலில் புன்னகைத்து..
“சொல்லு கௌதம்” என்றாள்.
“ஆஃபிஸ் கிளம்பிட்டீங்களா?”
“ஆமா, ஏன் கேட்குற?”
“வெளிய வாங்க. நான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்”
“வாட்?”
“ஒரே ஆஃபிஸ்க்குத் தான போறோம்?, ஏன் தனித்தனியா போகனும்?”
“கௌ….தம்”
“ப்ச், எப்படியும் 2 வாரத்துல நியூயார்க் போயிடுவீங்க! அது வரை என்னோட வாங்க ப்ளீஸ்..”
“இன்னிக்கு அங்க ரிப்போர்ட் பண்ண இருந்த என்னை, இப்படி ப்ளீஸ் போட்டுத் தான் இங்க நிற்க வைச்சிருக்க நீ!”
“அன்னிக்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ணாம நான் காணாம போனதுல மேனேஜ்மெண்ட் என் மேல செம்ம காண்டுல இருக்குங்க! இப்போ நீங்க அங்க போறதை அவங்களும் விரும்ப மாட்டாங்க! 2,3 வாரம் இங்க இருந்து நிலைமையை சமாளிங்க”
“ஆனா.. உனக்குக் கொஞ்சம் கூடப் பயமே இல்ல கௌதம்”
“பயந்து என்ன ஆகப் போகுது?”
“அதுசரி”
“சரி, வெளிய வாங்க”
ஏன் தனக்காக இவ்வளவு பார்க்கிறான் என்ற எரிச்சலும், தனக்காக இவ்வ்வ்வளவு பார்க்கிறானே என்ற மகிழ்ச்சியுமாய்.. அவன் காரில் ஏறியமர்ந்தவளைப் பளிச் புன்னகையுடன் நோக்கி..
“போலாமா?” என்றவனிடம்.. சரியெனத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவளுக்கு.
அவனது அன்புத் தொல்லை அத்தோடு நிற்கவில்லை.
மதிய உணவு இடைவெளியின் போது மீண்டும் அவள் முன்பு வந்து நின்றான்.
“என்ன?” – திவ்யா.
“சாப்பிடப் போகலாம் வாங்க”
கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தவள்…
“அக்கறையா?” என்றாள்.
“ஆமா, பின்ன, சாப்பிட்றதுல இன்ட்ரெஸ்ட் போயிடுச்சுன்னு நீங்க சொன்னதுல இருந்து.. எனக்கு சரியா சோறு இறங்க மாட்டேங்குது. அதனால வாங்க.. சேர்ந்தே சாப்பிடலாம்”
“எத்தனை நாளைக்கு இப்படி டெஸ்க் வரை வந்துப் பாசமா அழைச்சிட்டுப் போவ?”
“என்னால முடியும் போதெல்லாம்..”
“உன்னால முடியாதப்போ?”
“புரியல”
“உன்னால முடியாதப்போ நான் என்ன பண்ணட்டும்?, நீ கூப்பிட்டுப் போன நிமிசங்களையெல்லாம் நினைச்சுப் பார்த்து ஏங்கனுமா?”
பெருமூச்சை வெளியிட்டு மூக்கை விடைத்தவன்.. தீவிரமான முக பாவத்துடன்..
“ஏன், என்னால முடியாதப்போ நீ என்னைத் தேடி வர மாட்டியா?, அப்படி என்ன உனக்கு சந்தேகம்? என் கிட்ட இருக்குற அன்பு எல்லாத்தையும் மிச்ச,சொச்சமில்லாம மொத்தமா அனுபவிக்கப் போறது நீ தான்னு நான் தெளிவா சொன்ன பிறகும்? உன் மனசு நினைக்குறதைக் கண்ணைப் பார்த்தேத் தெரிஞ்சுக்கிற ஆள் நான்! அப்படி உன்னை ஏங்க விட்டுக் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா?” என்றான்.
“திட்டுறியா கௌதம்?” – உள்ளே சென்று விட்டக் குரலுடன் ரோஷமாகக் கேட்டவளைக் கண்டுச் சிரித்து.. அவள் இரு கன்னத்தையும் கிள்ளி..
“இல்லடா பூனைக்குட்டி. பொறுமையா சொல்லத் தான் முயற்சி பண்றேன். ஆனா.. நீ என்னை டென்ஷன் ஆக்கிப் பார்க்குறியே!” எனக்கூற.. அவன் கைகளை விலக்கி..
“நீ போ. நான் வர்றேன்” என்றாள் அவள்.
“கோபமில்லையே?”
“கோபம் தான்! திட்டுனேல?” – சுருக்கிய புருவங்களுடன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டவளைக் கண்டு சிரிப்பு வந்தாலும்.. மறைத்து..
“அப்படித் தான் திட்டுவேன்.இனி பழகிக்கோங்க!” என்றவன்..
“சீக்கிரம் வாங்க” எனக் கூறி விட்டு அவள் அமர்ந்திருந்த அறையிலிருந்து வெளியே வந்தான்.
மந்தகாசப் புன்னகையோடு வருபவனை ஒரு கூட்டமே வாயைப் பிளந்து கொண்டு பார்க்க.. அனைவரது முகத்தையும் நோக்கி..
“என்ன அப்படிப் பார்க்குறீங்க?” என்றான்.
“உள்ள என்ன நடந்தது?” – ஆர்வமான குரலில் சூரஜ்.
இடுப்பில் கை வைத்துக் கொண்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்.. தாடியைச் சொரிந்தபடி..
“ஹ்ம்ம்ம், ஒரு கிஸ் கேட்டேன். ஆஃபிஸ்ல இருக்கோம், தர முடியாது போடான்னு துரத்திட்டா.” –என சோகமாய்க் கூறியவனைக் கேட்டு சூரஜ் இரு கை கொண்டு வாயை மூடியபடியும், ஜான்சி நமுட்டுச் சிரிப்புடனும் திரும்பிக் கொள்ள.. ஜாக் மட்டும் அவனைக் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான்.
“என்னய்யா?” - கௌதம்
“அந்தம்மாவைப் பார்த்தா.. ரொமாண்ட்டிக்-ஆ பேசுற ஆள் மாதிரியே தெரியல. நீ சும்மா அள்ளி விட்ற தான டா?” – என்ற ஜாக்கிடம்..
“சந்தேகமா?” என்று அவன் கேட்கையில்.. திவ்யா அறையை விட்டு வெளியே வர.. அவள் புறம் திரும்பியவன்..
“உன் கிட்ட ஜாக் ஏதோ சந்தேகம் கேட்கனுமாம்” என்று கோர்த்து விட்டான்.
தீவிரமான முகத்துடன்.. “என்ன சந்தேகம் ஜாக்?” எனக் கேள்வி கேட்டத் திவ்யாவிடம் பதறிய ஜாக்.. கௌதமை முறைத்து..
“ஒ..ஒ..ஒன்னுமில்ல திவ்யா. நான்.. நான் இவனோட ஜஸ்ட் பேசிட்டிருந்தேன்” என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளித்தான்.
“பேசி முடிச்சுட்டீங்களா?” – பொறுமையாய் கேள்வி கேட்டாள் திவ்யா.
அய்யய்யோஓஓஓவென அடித்துக் கொண்ட இதயத்தை அடக்கி.. “ஹாஆஆஆன்! முடிச்….சாச்சு” என்றுத் திக்கியவனிடம்.. தலையசைத்து விட்டு..
“போலாமா கௌதம்?” எனக் கேட்டவள்.. முன்னே நடக்க.. உதட்டை மடித்து சிரிப்பை அடக்கியபடி பின்னே சென்றான் கௌதம்.
சாப்பாட்டு மேஜையில் அவனுடன் அமர்ந்தவள்.. சாலட்டை உள்ளே தள்ளியபடி..
“நீங்க என்னை வைச்சு ஏதோ கேலி பேசுறீங்க தான?” –எனக் கேட்டாள்.
லேசாகச் சிரித்தவன்… “தே ஆர் ஹார்ம்லெஸ் திவ்யா” எனக் கூற..
“நான் இல்லைன்னு சொல்லலயே” – தோளைக் குலுக்கியவளை முறைத்து…
“ஆமா, இல்லைன்னு சொல்ல மாட்ட! ஆனா.. மீட்டிங்ல வைச்சு ஜாக்கைக் காய்ச்சி எடுத்து டவுசரைக் கழட்டி விட்ருவ. என்ன?” என்றான் அவன்.
கண்டு கொள்ளாமல்.. தட்டை நோக்கிக் குனிந்தவள்.. “அ…அது.. அவன் வேலையை சரியா செஞ்சா நான் ஏன் கேள்வி கேட்கப் போறேன்!” – என்று கூற..
“சமாளிக்குறதைப் பாரு! சரியான அழுத்தக்காரிடி நீ!” – என்றான்.
நாக்கைத் துருத்தி அழகு காட்டியவளிடம் அவன் புன்னகைக்கும் வேளை.. சாதனாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு அண்ணி”
“என்னடா பண்ற? ஃபோனே காணோம்?”
“நானா?, நான் என் லவ்வர் கூட உட்கார்ந்து லஞ்ச் சாப்பிட்டிட்டிருக்கேன். நீ என்ன பண்ற” – உல்லாசமான சிரிப்புடன்.. வழக்கம் போல் வம்பு வளர்த்தவனைக் கண்ட திவ்யாவின் முகத்தில் மெலிதாய் ஒரு சலனம்.
“ஹேஏஏ.. வர்க் அவ்ட் ஆயிடுச்சா டா? சொல்லவே இல்ல??” – எதிர்ப்புறம் குதித்த சாதனாவிடம்..
“பரண் மேல கிடக்குற தாம்பாளத் தட்டையெல்லாம் எடுத்து சுத்தம் பண்ணி வை அண்ணி! நாம சீக்கிரமே அவளைப் பொண்ணு பார்க்கப் போறோம்”
-எதிரில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் வந்து போன மாற்றங்களைக் கண்டபடி அண்ணியிடம் கூறியவன்…
“என்னடாஆஆ சொல்ற?” என்று பெரிதாகத் திறந்தவளை அடக்கி..
“இந்த வாரம் வீட்டுக்கு வந்து எல்லாம் டீடெய்ல்-ஆ சொல்றேன். இப்போ ஃபோனை வை. நாங்க சாப்பிடனும்” எனக் கூறி விட்டு ஃபோனைக் கட் செய்தான்.
அமைதியாய் உண்டு கொண்டிருந்தவளின் முகம் பார்த்தவன்.. “என்னாச்சு?” என்றான்.
“ஒன்னுமில்லயே”
“பொய். உன் முகத்துல வெளிச்சம் குறைஞ்சிடுச்சு. என்னன்னு சொல்லு ஒழுங்கா..”
“வ..வந்து.. உன் அம்மா,அண்ணா,அண்ணி எல்லாம் இதை எ..எப்படி எடுத்துப்பாங்க?” – தயங்கி வினவியவளிடம்..
“எதை?” என்றான் அவன்.
“உன் லவ்வை?”
“என் லவ்-ஆ?” – நக்கலாய் உதட்டை வளைத்தான் அவன்.
“…………………”
“நம்ம லவ்ன்னு வாயைத் திறந்து சொல்லுங்களேன்”
“ப்ச், ஏதோ ஒன்னு. அவங்க எப்படி எடுத்துப்பாங்க? அதை சொல்லு முதல்ல” – என்றவளை ஒரு மாதிரி நோக்கி விட்டு.. ஸ்பகட்டியை வாயில் அடைத்தவன்..
“அவங்க எப்படி எடுத்தாலும் என்ன?, எந்தவிதத்துல அது நம்மை பாதிக்கப் போகுது?” – என்றான் அசட்டையாய்.
“அவங்க உன் குடும்பம் கௌதம்”
“சோ வாட்? இப்படி யோசிச்சுப் பாருங்களேன்! ஆணும்,பெண்ணும் இணையனும்ன்றது இயற்கையோட நியதி. அதுல வயது,வரைமுறைன்னு கோட்பாடுகளை உண்டாக்கிட்டது நாம! இருக்குற இடம்,வாழ்ற காலகட்டத்தைப் பொருத்து இந்த விதி மாறுபடுது! இதையெல்லாம் எல்லாரும் புரிஞ்சு வைச்சிருக்க வேண்டியது அடிப்படையான விஷயமில்லையா?”
“நான் என்ன பேசிட்டிருக்கேன், நீ என்ன பேசிட்டிருக்க?”
“என் வாழ்க்கை என் விருப்பம்ன்னு சொல்றேன். அவங்க எதிர்ப்புக்கு பலமில்லங்க.”
“…………..” – கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தவளை ஒரு பார்வை பார்த்து..
“வாயைத் திறங்க” என்று அதட்டி..
தன் தட்டிலிருந்த ஸ்பகட்டியை எடுத்து அவளுக்கு ஊட்டியபடி..
“இதெல்லாம் என் ஏரியா. நீங்க இதுக்கெல்லாம் அலட்டிக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்ல. புரிஞ்சதா?” – எனக் கூற..
ப்ரௌன் நிறக் கண்மணிகளிரெண்டிலும் நிறைந்திருந்த அவன் முகத்தை.. அந்த நொடியை.. பத்திரமாய் மடித்து இதயத்துக்குள் அடுக்கிக் கொண்டு.. மெல்லத் தலையாட்டினாள் அவள்.
புன் சிரிப்புடன்… உரிமையாய் அவளையே பார்த்தபடி அவனும்.. அன்பும்,காதலுமாய் அவனையே பார்த்தபடி அவளும்.. நெகிழ்ச்சியாய் அமர்ந்திருந்த சமயம்..
“வாட் அ சீன் மேன்! வாட் அ சீன்!” – எனக் கேட்டபடி சிரிப்புடன் வந்தமர்ந்தார் ஷர்மாஜி.
“வாங்க சார்” - கௌதம்
“வரலாமா, வேணாமான்னு ரொம்ப நேரம் நின்னு யோசிச்சிட்டிருந்தேன் கௌதம்! இரண்டு பேரும் ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டிருந்தீங்க. டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு நினைச்சேன்”
“அதான் அல்ரெடி பண்ணிட்டீங்களே! உட்காருங்க சார்” – என்று கலாய்த்த கௌதமின் தோளில் அடித்தபடி அவனருகே அமர்ந்தவர்..
“கௌதம் ரொம்ப ஹிலாரியஸ் ஆன பர்சனாலிட்டி திவ்யா. ரொம்ப நல்ல பையன்” எனக் கூற.. தயங்கிச் சிரித்தவளைக் கண்டு..
“அய்யோ! நீங்க வேற ஏன் சார், அவங்க இன்னும் என்னைக் காதலிக்கிறேன்னு ஒத்துக்கவே இல்ல. நீங்க வேற அதை,இதைச் சொல்லாதீங்க” என்றான் கௌதம்.
“அவ உன்னைப் பார்க்குற காதல் பார்வை.. காஃபடீரியாவையே வெளிச்சமாக்கிடுச்சு! உனக்குத் தனியா சொல்லித் தான் தெரியனுமா?”
மேலும் கலாய்த்து சிரித்த ஷர்மாவைக் கண்டு.. அவள் தயக்கமாய்த் தலையைக் குனிந்து கொள்ள..
“மேடம் இன்னும் இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் பழகல சார்” என்றான் கௌதம்.
“பழகிடும். பழகனும். நீ இப்படிக் கடைசி வரைத் தனியாவே வாழ்க்கையை ஓட்டிடுவியோன்னு நான் உனக்காக நிறைய ஃபீல் பண்ணியிருக்கேன் திவ்யா. இப்போ கௌதம் மாதிரி ஒரு பையன் கிடைச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா உன் வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கும்.”
ஒரு நண்பனாக உணர்ச்சிப் பெருக்கில் பேசியவரைக் கண்டு சிரிக்க முயற்சித்தாள் அவள்.
“நன்றி சார்! அவங்க சொல்ல மாட்டாங்க வாயைத் திறந்து. அதனால நான் சொல்றேன்” என்றவன் அவரது மனைவி, குழந்தைகளைப் பற்றி விசாரித்தான்.
பெரிதாக சந்தோஷமில்லா விட்டாலும், பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை செல்வதாகக் கூறியவர்.. “சீக்கிரமே குட் நியூஸ் சொல்லுங்க. நான் எதிர்பார்த்திட்டிருப்பேன்” எனச் சொல்லிக் கிளம்பி விட.. திவ்யாவிடம் திரும்பினான் கௌதம்.
“இந்தாளைப் பார்த்தா.. எனக்கு லைட்-ஆ பொறாமையா இருக்கு”
“ஏன்?”
“உங்க கூட க்ளோஸ்-ஆ இருக்காரே”
“ப்ச், சில்லியா பேசாத கௌதம்”
“சரி, சொல்லுங்க. அவர் பேசுனதுக்கு ரெஸ்பாண்ட் பண்ண ஏன் அவ்ளோ யோசிச்சீங்க?”
“……..” பதில் கூறாமல் தட்டை அளந்தாள் அவள்.
“சொல்லுங்க..”
“இல்ல, என்னைத் தவிர எல்லாருமே நம்ம ரிலேஷன்ஷிப் பத்தின தெளிவோட இருக்காங்களேன்னு நினைச்சேன்”
“அப்டின்னா?”
“இது நிலைக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு வரவே மாட்டேங்குது கௌதம்”
“என்ன பண்ணா நம்புவீங்க?”
“தெரியல?”
“கல்யாணம்?”
“கௌதம்….” – ஆச்சரியத்துடன் விழிகளை விரித்தவளிடம்..
“ஏன்? ஏற்கனவே சொன்னேனே.. நான் காலைல குடிக்கிற காஃபில இருந்து, என் பெட்ஷீட் வரை எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்க ஆள் வேணும்ன்னு.. கல்யாணம் பண்ணிக்காமலே எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கலாம்ன்றீங்களா?”
“ப்ச், கௌதம்..”
“இல்ல, எனக்குப் புரியல. ஒரு மணி நேரம் உங்க கூட உட்கார்ந்து பேசுனா.. அன்பா,கோபமா,காதலா.. கௌதம்,கௌதம்ன்னு என் பேரை ஓராயிரம் தடவை.. உங்க வாய் உச்சரிக்குது. இதுக்கு முன்னாடியும்,இதுக்கு அப்புறமும் யார் பேரையும் நீங்க இந்த அளவுக்கு உச்சரிப்பீங்கன்னு தோணல எனக்கு! இன்னும் என்ன நம்பிக்கை வேணும் உங்களுக்கு?”
“…………..”
“திவ்யா…”
“………..”
“எனக்குக் கட்டிக்கனும். இப்படி மட்டுமில்ல, இப்படியும்…” – இரு கைகளையும் விரித்துக் கட்டிக் கொள்வது போல் காட்டிப் பின்.. கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது போலும் செய்து காட்டியவனைக் கண்டு.. புன்னகை உண்டானது அவளுக்கு.
“சிரிச்சுத் தப்பிக்கப் பார்க்காதீங்க. பதில் சொல்லுங்க”
“மீட்டிங் இருக்கு கௌதம்” – கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.
“உங்க கிட்ட சிகப்பு கலர் பட்டுப் புடவை இருக்கா?”
திடீரென டாபிக்கை மாற்றியவனிடம்.. புருவம் சுருக்கி..
“ஏன் கேட்குற?” என்றாள் அவள்.
“இல்ல, இந்த வாரம் வீட்டுக்குப் போறேன். நான் லவ் பண்ற பொண்ணு யாருன்னு கேட்டு என் அண்ணியும்,அம்மாவும் டார்ச்சர் கொடுக்குறாங்க. உங்களைக் கூப்பிட்டுப் போய் நேர்லயே காட்டலாம்ன்னு நினைச்சேன்”
“………” அமைதியாய் அவன் முகம் பார்த்தவளிடம்…
“பட், அவங்க ஏதாவது சொல்லி.. நீங்க ஹர்ட் ஆயிட்டா?, அதனால.. எல்லாத்தையும் கரெக்ட் பண்ணிட்டு.. அப்புறமா பொண்ணு பார்க்குற ஃபங்க்ஷன் வைச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அதான் சிகப்பு கலர் பட்டுப்புடவை இருக்கான்னு கேட்டேன்” – என்றான் அவன்.
“…………”
“திவ்யா..”
“…………..”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” – அடிக்குரலில் கேள்வி கேட்டவனை
இன்னதென்று புரியாத முக பாவத்துடன் இமைக்காமல் நோக்கியவள்.. பதிலற்று அமர்ந்திருந்தாள்.
அன்று காலை.. குளிருக்கு இதமாகப் போர்வைக்குள் சுருண்டிருந்த கௌதமை.. அவனது செல்ஃபோன் அழைத்தது.
“ஹலோ..”
“தினம் உங்களை பிக்-அப் பண்ண வருவேன்னு பெருசா பேசுன அன்னிக்கு?” – நக்கலாக ஒலித்தத் திவ்யாவின் குரலில்.. எழுந்து அமர்ந்தவன்.. மணியைப் பார்த்து விட்டு..
“ப்ச், நைட் ஃபுல்-ஆ ப்ரசண்டேஷன்க்கு ரெடி பண்ணிட்டிருந்தேன்-ங்க! தூங்க டைம் ஆயிடுச்சு” என்றான்
“ஆஃபிஸ்ல இருக்குற நேரமெல்லாம் விளையாடிட்டு, நைட் பேய் மாதிரி உட்கார்ந்து வேலை பார்க்குறியா நீ?”
“ஆமா! அங்க தான உங்களைப் பார்க்க முடியுது? இப்போல்லாம் உங்க வீட்டுக்குள்ளயும் என்னை அனுமதிக்க மாட்டேன்றீங்க”
குறையாகக் கூறியவனிடம் “ஹாஹாஹா”-வென நகைத்து…
“நான் உன்னை பிக்-அப் பண்ணிக்கட்டுமா? 30மினிட்ஸ்ல கிளம்பிடுவியா?” எனக் கேட்டவளிடம்..
“ஹய்யோ!!! சோ… ஸ்வீட்..” என்றவன்.. “நீங்க கிளம்புங்க. எனக்கு லேட் ஆகும்” எனக் கூறி விட்டு படுக்கையை விட்டு எழுந்தான்.
குளித்துக் கிளம்பி டைனிங் டேபிளில் அமர்ந்தவன்.. எதிரில் மாட்டியிருந்தத் தன் குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தபடி உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கையில்.. திடீரென ஒரு யோசனை தோன்றியது.
உடனே அலுவலகம் கிளம்பியவன்.. நேராக திவ்யாவின் முன்பு சென்று நின்றான்.
“எனக்கு லீவ் வேணும்”
வந்ததும்,வராததுமாகத் திடீரென விடுமுறை வேண்டுமெனக் கேட்டவனை புருவம் சுருக்கியபடி நோக்கியவள்..
“என்னாச்சு?” என்றாள்.
“உடம்பு சரியில்ல. சிக் லீவ் வேணும்”
திவ்யாவின் க்யூபிகிளில் அமர்ந்திருக்கும் ஜாக்,சூரஜ்,ஜான்சி மூவரும் திரும்பி அவனை நோக்கினர்.
குழப்பமாக அவனை நோக்கி “நல்லாத் தான இருக்க? எதுக்கு லீவ்?” என்றாள்.
“ப்ச், எனக்கு லீவ் வேணும், கொடுக்க முடியுமா முடியாதா?” – அவன் கேட்ட விதத்தில் மற்ற அனைவரும் களுக்கெனச் சிரிக்க..
“ஷ்ஷ், ஏன் கத்துற?” என்று அதட்டினாள் அவள்.
“லீவ் ரெக்வஸ்ட் ரைஸ் பண்ணியிருக்கேன். அப்ரூவ் பண்ணிடுங்க. அப்புறம்…” என்றவன்… தன் செல்ஃபோனைக் கையில் எடுத்து…
“அர்ஜண்ட்-ஆ உங்களோட ஒரு செல்ஃபி எடுக்கனும், போஸ் கொடுங்க” என்றான்.
“ஹாஹாஹா” – ஜான்சி சத்தமாகச் சிரிக்க..
“கௌ…தம்” என்று சங்கடத்தில் பல்லைக் கடித்தாள் திவ்யா.
அதற்கெல்லாம் அசராமல்.. “சிரிங்க” என்றவன்.. முறைப்புடனிருந்த அவள் முகத்தோடு சேர்ந்து நின்று.. செல்ஃபி எடுத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ்” என்றபடி ஃபோனை பாக்கெட்டில் திணித்தவன்..
“எனக்கு உங்க வீட்டு சாவி வேணுமே” எனக் கேட்க..
உச்சகட்டக் கடுப்புடன் “எதுக்கு? அதெல்லாம் தர முடியாது” என்று முறைத்தாள் அவள்.
இடுப்பில் கை வைத்து அவளை ஒரு நொடி நோக்கியவன்.. அவள் கழுத்தில் கிச்சு,கிச்சு மூட்டி..
“கொடுங்கன்னு கேட்டா.. கொடுக்கனும்” எனக் கூற.. அவன் செய்த ரகளையில்.. பதறித் தடுமாறி…. நாற்காலியை நகட்டிக் கொண்டு நான்கடி பின்னே சென்றவள் ஜான்சியின் சீட்டை இடித்து நின்று.. “ஹே…ஹே..ஹேண்ட் பேக்ல இருக்கு” என்று மூச்சு வாங்கக் கூற…
அவளது தோள்ப்பையைத் திறந்து சாவியை எடுத்துக் கொண்டவன் “தேங்க் யூ ஸ்வீட் ஹார்ட்” எனக் கூறிச் சென்று விட்டான்.
உஃப்ஃப்ஃப்ஃப்ஃப் என மூச்சை வெளியிட்டு.. கண்ணை மூடித் திறந்தவளை நக்கலாகப் பார்த்தபடி அமர்ந்திருந்த சூரஜ்ஜைக் கண்டு கடுப்பாகி…
“என்ன இங்க பார்வை?” என்று சிடுசிடுத்தாள்.
“பார்க்காம?, இப்படியொரு லவ் சீன் ஓடுனா.. எல்லாரும் பார்க்கத்தான் செய்வாங்க” – தைரியமாய் அவள் முகம் பார்த்துப் பதில் கூறியவனிடம்…
“ஓஹோ! அப்போ போன வாரம்.. ஃபினான்ஸ் டீம் குஜராத்தி பொண்ணு கூட.. பார்க்கிங்ல வைச்சு உன் காருக்குள்ள நீ ஓட்டுனியே ஒரு சீன்! அதெல்லாம் எந்த கேட்டகரில வரும்?” என்று அவள் அதட்ட…
“அய்யோ அய்யோ அய்யோ!” என வாயில் அடித்துக் கொண்ட ஜான்சி..
“யோவ் சூரஜ்ஜூ, உன் பொண்டாட்டி பெங்காலின்னு தானய்யா சொன்ன? இந்த குஜராத்தி யாருய்யா?” என்று வாயைப் பிளந்தாள்.
“ம்ம், நீ இப்படியே தமிழ்ல கேள்வி கேளு.. அவன் முழிச்சுக்கிட்டே உட்காரட்டும்” என்று ஜான்சியிடம் கூறிய திவ்யா தன் கணினியில் கண்ணைப் பதிக்க..
“அதான” என்ற ஜான்சி தொடர்ந்து “க்யா ரே சூரஜ்ஜூ.. செட்டிங்-ஆ?” எனக் கலாய்க்க.. “ஹேய்.. நோ நோ நோ” என்று பதறிய சூரஜ்ஜைக் கண்டு.. வந்த சிரிப்பை உதட்டில் அடக்கினாள் திவ்யா.
மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது.. கௌதம் அவள் வீட்டில் தானிருந்தான்.
அவள் காலிங் பெல் அடித்ததும் பளிச் சிரிப்புடன் “ஹல்லோ!!! வெல்கம்” என்றவன்.. கையில் கரண்டியுடன் நின்றான்.
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே வீட்டினுள் நுழைந்தவள்… தன் வீட்டு வரவேற்பறையை அவன் மாற்றியிருந்த அழகைக் கண்டுக் கண்ணை விரித்தாள்.
ஸோஃபா செட்டும்,டீபாயும்,வெற்று மதிலுமாய் இருந்த வரவேற்பறை.. அவனது கைங்கரியத்தால்.. அலங்காரப் பொருட்களுடன் அழகாய்க் காட்சியளித்தது.
மதில் முழுக்க.. அவளது புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவள் வாயைப் பிளக்க..
“உங்க லேப்டாப் பாஸ்வேர்ட் உங்க டேட் ஆஃப் பர்த் தான் போல?, சும்மா ட்ரை பண்ணேன்! திறந்திடுச்சு! இந்தச் சின்ன வயசு ஃபோட்டோல நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க” என்றான் அவன்.
அவனை முறைக்க முயன்று தோற்று.. சிரித்தபடி.. தானும்,தன் தந்தையுமிருந்தப் புகைப்படங்களை மெல்ல வருடினாள் திவ்யா.
நடுநாயகமாக வீற்றிருந்த இருவரது செல்ஃபி புகைப்படத்தைக் கண்டுக் கலகலவெனச் சிரித்தவளிடம்..
“நாம ஜோடியா இன்னும் எவ்ளோ ஃபோட்டோ எடுத்தாலும்.. இது தான் என்னோட ஃபேவரைட்-ஆ இருக்கப் போகுது பாருங்க”
மனதால் அவள் உணரும் விசயங்களுக்கு, வார்த்தை வடிவம் கொடுத்தவனைத் திரும்பி நோக்கினாள் அவள்.
“என்ன இதெல்லாம் கௌதம்?” – நெகிழ்ச்சியாய் வினவியவளிடம்..
“எனக்கு வீடு ஃபுல்-ஆ ஃபோட்டோ மாட்டி வைக்குறது ரொம்பப் பிடிக்கும்ங்க. நாம சந்தோசமா,அன்னியோன்யமா இருந்த நாட்களை அது நினைவு படுத்தும். இன்னும் சந்தோசமா வாழச் சொல்லி.. நம்மைத் தூண்டி விடும்” – புதிதாய் விளக்கம் கொடுத்தான் அவன்.
சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி.. “இதை நான் வீடா இது வரை பார்த்ததில்ல கௌதம். தங்குறதுக்கும்,தூங்குறதுக்குமான இடமாத் தான் பார்த்திருக்கேன்” – என்றவளிடம்..
“இனி பார்க்கத் தொடங்குங்க. ஏன்னா.. நம்ம பிள்ளை,குட்டிங்க எல்லாம் இங்க தான் ஓடி விளையாடப் போகுது”- என்று கூறியவனைத் திரும்பி நோக்கினாள் அவள்.
“நடக்குமா கௌதம்?”
“ஏன் நடக்காது?”
“………….”
“இங்க வாங்க”
அவன் அழைத்தும் அமைதியாய் நின்றவளின் கைப்பற்றி இழுத்து.. தன்னோடு அணைத்துக் கொண்டவன்..
“அன்னிக்குக் கேட்டப்போ பதில் சொல்லல, இப்போவாவது பதில் சொல்லுங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்டான்.
கண்களை இறுக மூடிக் கொண்டு.. இரு கைகளால் அவனை அணைத்து.. அவன் மார்பில் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்டாள் அவள்.
அவள் செய்கையில்.. சிலிர்த்து.. உள்ளே பொங்கிய காதலுடன்.. அவள் தலையை வருடிக் குனிந்து… அதில் தன் கன்னம் பதித்தவன்..
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்றான் மெல்லிய குரலில்.
“நீ என்ன பண்ணாலும், சரி தான்-ன்னு சொல்லத் தோணுது கௌதம்” – பதிலாக முணுமுணுத்தவளைக் கேட்டு மெல்லச் சிரித்து.. அவளைத் தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டான்.
“கைல கரண்டியோட நின்ன?, சமைக்கத் தெரியுமா உனக்கு?” – தொண்டையைச் செருமிக் கொண்டு கேள்வி கேட்டவளிடம்..
“இதுக்கு நான் பதில் சொல்றதை விட.. என் வஞ்சரம் ஃப்ரை பதில் சொன்னா கரெக்டா இருக்கும்” – என்றான் அவன்.
“ஹாஹாஹா! வாவ்! நான் வெஜ் எல்லாம் சமைப்பியா நீ?”
“எங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாருமே செஃப்ங்க!”
“அடேங்கப்பா” – முகம் மலரச் சிரித்தவளின் கன்னம் வருடி…
“என்னோட வாழ வாங்க என் வீட்டுக்கு. கைல வைச்சுத் தாங்குறதுன்னா.. என்னன்னு.. நான் காட்டுறேன் உங்களுக்கு”என்றான்.
பெருமூச்சை வெளியிட்டபடி மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டவளிடம்.. பார்வை மாற…
“திவ்யா” என்றழைத்தான்.
“ம்ம்”
“பசிக்குதா உங்களுக்கு?”
“இல்லையே! ஏன்?”
“அப்டின்னா.. அப்புறமா சாப்பிடலாமா?”
புரியாமல்.. “ஏன், இப்போ என்ன பண்ணப் போறோம்?” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்.. அவள் இதழ்களுக்குள் தன்னை அடைத்துக் கொண்டான் அவன்.
அந்த வாரம் முழுக்க நீடித்த இந்த மகிழ்ச்சி.. வாரக் கடைசியில் கீழிறங்கக் காத்திருந்தது. ஆம்! ஆரவாரமும்,ஆர்ப்பாட்டமுமாய் முழுத் துள்ளலுடன் ஓடிக் கொண்டிருப்பவனின் காலை இடரி விட்டுக் கீழே விழச் செய்ய.. ஆக்ரோஷமாய்க் காத்திருந்தார் ராஜாத்தியம்மாள்.
