6.1. கலிலியோ காலனி-சில குறிப்புகள்!

வ கையை உடைங்க ஆண்டவரே!, ஓங்ங்ங்கி நடு மண்டையிலேயே அடிங்க ஆண்டவரே! வயித்தைக் கிழிச்சுக் குடலை உருவுங்க ஆண்டவரே! Hallelujah! ஏசுவின் ரத்தத்தைத் தெளிக்கிறேன் ஆண்டவரே! அவளைக் கடிந்து ஜெபிக்கிறேன், கட்டி ஜெபிக்கிறேன், முட்டி ஜெபிக்கிறேன் ஆண்டவரே! சாத்தானே போ! ஏசுவின் நாமத்தினாலே ‘போ,போ’! Hallelujah ஆண்டவரே!! என் ஜெபத்தைக் கேட்டதற்கு நன்றி ஆண்டவரே! Hallelujah! ஏசப்பாஆஆ! ஏசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்! Amen!”

-தொலைக்காட்சித் திரையை நிறைத்திருந்த ஆசீர்வாதம் சானலில்(channel) ஏசுவின் நாமத்தின் பேரில், கரித்து.. ம்க்க்க்கும்.. ஜெபித்துக் கொண்டிருந்த பெண்ணையே வெறித்திருந்த அலெக்ஸின் கண்கள் திரையில் பதிந்திருந்தாலும், சிந்தனை முழுக்க ஒரு ‘ஜிங்குனமணியையே’ சுற்றி வந்து கொண்டிருந்தது.

கட்டம் போட்ட அழுக்கு லுங்கியோடு சோஃபாவில் ஒருக்களித்து சாய்ந்திருந்தவனின் முன்னே, சிறிய ஸ்டூலின் மீது வீற்றிருந்த முக்கால்வாசி தீர்ந்த பட்டாணி, banana chips, wonder cake பாக்கெட்டுகள், காலியான 3 டீ டம்ளர்கள், அவன் அன்ன ஆகாரமின்றி அரும்பெரும் சோகத்திலிருப்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

“இப்பிடியெல்லாம் ஜெபம் பண்ணினா கர்த்தர், காவல் துறைக்குத் தான் call பண்ணுவாரே ஒழிய, கருணையெல்லாம் காட்ட மாட்டார்!,” – என fancy father ஒருவர் funny-ஆக பேசிக் கொண்டிருக்கையில், சரசரவென ப்ளாஸ்டிக் பைகளின் சத்தம் ஒலிக்க, கதவைத் திறந்து கொண்டு பொது,பொதுவென உள் நுழைந்தது androgen army.

“என்னா டே வாடை இது?” – மோசஸ்

“Harpic toilet cleaner டே!, ஏன் டே அலெக்ஸூ, உனக்கு பாத்ரூம் கழுவுற பழக்கமெல்லாம் இருக்கா டே?” – ஜார்ஜ்.

“எனக்கு அந்துருண்டை வாடை தான் டூட் வருது” – என்றபடியே ஹச்ச்செனக் கலை தும்மியதும்,

“ஜன்னலைத் திறந்து விடுங்க டா, கருமம்” என்ற சாதிக்கைத் தொடர்ந்து, “அவனுக்கு மூச்சு இருக்கா, இல்ல சுவாசக் கோளாறுல செத்துட்டானான்னு பாருங்க டே” எனக் கூறியபடியே சலிப்பும்,சோகமுமாய் முகத்தை வைத்துக் கொண்டு விட்டத்தை வெறித்தவாறு திறந்த மார்புடன் கிடந்த அலெக்ஸின் அருகே சென்றமர்ந்தான் மோசஸ்.

அவனைத் தொடர்ந்து மற்ற அனைவரும் ஒவ்வொருவராக அலெக்ஸைச் சுற்றி வந்தமர,

“நெஞ்சு முடிக்கு conditioner போட்றீங்களா டூட்?” – எனத் தன் மார்பை நோக்கிக் கரம் நீட்டிய ஜார்ஜின் விரல்களை ஒதுக்கி விட்டு ‘ப்ச்’ என்ற அலெக்ஸ்,

“வெறுப்புல இருக்குறவனுக்கு எதுக்கு டூட் விஸ்கி?, நான் இப்ப குடிக்குற மூட்ல இல்ல டே” என்றான் எரிச்சலுடன்.

“ஏய்ய்ய், எங்களைப் பார்த்தா குடிகாரனுங்க மாதிரி தெரியுதா உனக்கு?, நாங்கள்-லாம் குடும்பஸ்தனுங்க டே” – பொங்கிய ஜார்ஜிடம்,

“அப்போ கவர்ல என்ன?, கனகாம்பரப் பூவா?” – என்றான் அலெக்ஸ்.

“ஏ, ஆமா, ஏன் டே இப்போ-லாம் கனகாம்பரப் பூ கிடைக்குறதே இல்ல?, எம் பொண்டாட்டிக்கும், மாமியாருக்கும் கனகாம்பரப்பூ-ன்னா ரெம்ப இஷ்டம் தெரியுமா?, எங்க ஏரியா பூரா தேடிப் பார்த்துட்டேன் டூட்” – கலை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதும்,

ஆர்வமாய் “எதுக்கு டூட் இவ்ளோ கஷ்டப்படுற?, நம்ம ஆஃபிஸ் போற பாதையில, பாலத்துக்குக் கீழ, பத்மான்னு ஒரு பூக்கார அக்கா….. பல்லு எடுப்பா….” – எனத் தொடங்கிய சாதிக்கைக் கண்டு,

‘ஐயோஓஓ’ என நெற்றியைப் பிடித்துக் கொண்ட அலெக்ஸ், தன் காலருகே அமர்ந்திருந்த மோசஸின் குறுக்கில் மிதித்து,

“விரக்தில இருக்குறவனை வெறியேத்துறதுக்குன்னே வர்றீங்களா டே!, போய்த் தொலைங்க டே வெளிய” – எனக் கத்தியதைப் பொருட்படுத்தாது,

“டூட், அவனுக்கு பத்மாக்கா ஃபோன் நம்பரைக் கொடுத்துரு!, கலையரசா, பொண்டாட்டி ஆசைப்படுறத பட்டு,பட்டுன்னு நிறைவேத்திட்டா பக்குவமா குடும்பம் நடத்தலாம்! அதுவும் பட்ஜெட்டுக்குள்ள ஆசைகளை வைச்சிருக்குற பொண்டாட்டிக கிடைக்குறது ரெம்பபப் பெரிய விசயம்! என்ன?, கனகாம்பரப் பிரச்சனை sorted!, ஓகே?, இப்ப கவரைப் பிரிச்சு பிரியாணியை எடுத்து வெளிய வைங்க டே” – என்று பூ பஞ்சாயத்தை மோசஸ் தீர்த்து வைத்ததும்,

“பிரியாணியா?” – என்றபடியே கை முட்டியை ஊன்றி, மோப்பம் பிடித்தவாறு எழுந்தமர்ந்தான் அலெக்ஸ்.

“ஹார்ப்பிக்குக்கும், அந்துருண்டைக்கும் நடுவுல பிரியாணி வாசனையே அழிஞ்சு போயிருச்சு டூட்!, கரியமில வாயுவை விட ஆபத்தான வாடைக்குள்ள வசிச்சிக்கிட்டிருக்கான் டே இவன்!”

-நண்பனைத் திட்டியபடியே தரையை ஆக்கிரமித்த அனைவரும், சாதிக் வீட்டு மட்டன் பிரியாணியை பிடி,பிடியெனப் பிடித்து விட்டு.. ஆளுக்கொரு லிம்கா பாட்டிலுடன் அக்கடாவென சாய்ந்தமர்ந்தனர்.

லவை சாதத்தைத் திங்கத் தான் கார் ஓட்டிட்டு வந்தியா டே நீ?, இவனுக்கு மட்டும் என்ன டே தனி பார்சல்?, ஏன், துரை இன்னிக்கு பிரியாணி திங்க மாட்டீங்களோ?” – கலையை நோக்கி மோசஸ்.

“கார்-ல அவன் போட்டப் பாட்டைக் கேட்டியா இல்லையா நீ?, ‘பாபாஆஆ ஓர்ர்ர்ர் கருணாலயம்ம்ம்ம்ம்’” எனப் பாடிய ஜார்ஜை முறைத்து,

“என்ன டே இப்பிடிக் கேட்குற?, இன்னிக்கு வியாழக்கிழமை. நான் ‘பாபா’-வுக்கு விரதம் டே” என அலட்டலாய் மொழிந்தான் கலை.

“போன வாரம் ஞாயித்துக் கிழமை ப்ரேயர் ஹவுஸ்ல தந்த அப்பத்தை நான் கொடுத்தப்பக் கூட வேணாம்ன்னுட்டான் டே!, அன்னிக்கு என்னா டே விரதம்?” – ஜார்ஜ்.

“அ..அ..அன்னிக்கு விரதமெல்லாம் இல்ல!, வ..வயிறு தான் சரியில்ல”

“வயிறு சரியில்லாதவன் என்னத்துக்கு லே, வீட்டுக்கு வாளை மீன் வாங்கிட்டுப் போன?” – சாதிக்.

“டே சாதிக்-கு, இந்த ஞாயிறு காசிமேடு போலாம் டா!” – இடையில் மோசஸ்.

“என்னையும் சேர்த்துக்கங்க டே” – என்ற ஜார்ஜை ஒதுக்கி விட்டு,

“பதில் சொல்றா கலையரசா” – எனத் தன் முதுகில் மிதித்த சாதிக்கிடம் பம்மிய தோரணையில்,

“நி…நி..நிஜமாவே அன்னிக்கு வயிறு சரியில்ல டே” – என்று சமாளித்தவனைக் கண்டு நக்கலாய்ச் சிரித்த அலெக்ஸ்,

“ஆனா… ‘பார்****னுகளை’ விட உன்னை மாதிரி நவீன பார்*****னுக தொல்லை தான் டே நாட்டுல தீராப் பிரச்சனையா இருக்குது!,” என்று பொரும,

“தீண்டாமை ஒரு பாவச் செயல் லே கலையரசா” – என்றான் சாதிக்.

“எலே…. போன வாரம் உன் மவனுக்கு காய்ச்சல் விடலன்னு அல்லாக் கோயில்ல மந்திரிக்கப் போனேல நீயி? பீக்காளி நாயே!, அல்லா, அப்ப மட்டும் அல்வா மாதிரி இனிச்சாரோ!”

“அது மட்டுமா, படிக்குற காலத்துல.. நீ காதலிச்ச கவிதாவை, உன் நொண்ணனுக்குப் பயந்து கைக் கழுவி விட்டக் கவலையில, சர்ச் ஃபாதர் கிட்ட பாவ மன்னிப்புக் கேட்கல நீ?, ஜீஸஸ் , அப்ப மட்டும் gracious-ஆ தெரிஞ்சாரோ?”

“அப்போ-லாம் இவன் ‘எல்லாம் வல்ல ஏசுவே’-ன்னு கழுத்துல சிலுவை மாட்டிட்டுத் திரிஞ்சான் டே”

“பேரைக் கூட ஜோசஃப் கலையரசன்னு மாத்திக்குவேன்னு சொன்னான் டே” – ஜார்ஜ்.

“அந்தளவுக்கு அவனை மூளைச்சலவை பண்ணியிருக்கீங்க?, ஆனா இந்த மத மாற்று அறுவை சிகிச்சையை விடவே மாட்டீங்களா டே நீங்க?” – நமுட்டுச் சிரிப்புடன் கூறிய சாதிக்கைக் கண்டு,

“டேய்ய்ய்ய்ய்” – எனக் கோரஸாய்க் கத்திய ‘அலெக்ஸ்,ஜார்ஜ்,மோசஸின்’ குரல்களை அலட்சியம் செய்து விட்டு,

“அப்பிடிக் கேளு டே சாதிக்-கு!, உனக்கு ஞாபகமிருக்கா? நாம 3-ங் க்ளாஸ் படிக்கையில, கர்த்தர் உயிர்த்தெழுந்த கதையைச் சொல்லி, எல்லாரையும் ‘hallelujah’-ன்னு கோஷம் போட வைச்சானுங்கள்ல?, அது மட்டுமா?, 2 மாசத்துக்கு முன்னாடி நான் திருப்பதி லட்டு கொடுத்தப்ப, தொட்டுக் கூட பார்க்கல டே இவனுங்க! பெருசா பேச வந்துட்டானுங்க!, ஏழுமலையான்-னா இளக்காரமா இருக்கா லே உங்களுக்கு!” – என்று காண்டுடன் கூற,

“எனக்கு இனிப்புப் பிடிக்காதுப்பா” – என்று அலெக்ஸூம், “அன்னிக்கு எம் பொண்டாட்டி டிபன் டப்பாவுல மூளை வறுவல் கொடுத்து விட்டிருந்தா!, கவுச்சித் தொட்டக் கையால கடவுள் பிரசாதத்தைத் தொடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துல நான் வேணாம்ன்னு சொன்னேன்” என்று ஜார்ஜூம், “லட்டா?, என்னைக்கு லே கொண்டு வந்த?” – என்று மோசஸூம் கூறியதைக் கேட்டு, கலை counter argue செய்ய முனைகையில்,

“சரி,சரி விடுங்க லே! அதான் இப்ப.. அவன் சாய்ய்ய்ய்ய்ய்யின்னு.. பாபா கோயிலை சுத்திக்கிட்டிருக்கான்ல! விட்டா… இன்னும் கொஞ்ச நாள்ல அவனே ‘புத்தம்,சரணம்,கச்சாமி’-ன்னு புத்த மதத்தைத் தழுவ ஆரம்பிச்சுடுவான்! எல்லா மதத்தையும் ஒரு ரௌண்டு போயிட்டு தான் வரட்டுமே! என்னா இப்ப?, ஏன் டே கலையரசா?,” என்றவன் தொடர்ந்து “கூட்டாளிகளா!, மதங்களைப் புறந்தள்ளி விட்டு மனிதத்தைப் போற்றிப் பழகுங்க லே” – என்று ‘நாட்டில் minority-கள் mutualism-த்தைத் தான் விரும்புகிறார்கள்’-என்ற கூற்றை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் community-ஐச் சேர்ந்த சாதிக், சோசியல் மெசேஜ் ஒன்றை சமாதானமாய்க் கூறி, நண்பர்களின் முற்றுகையைத் தடுத்து கலையரசனைக் காப்பாற்றி விட்டான்.

“சரி,சரி இப்ப முக்கியமான விஷயத்துக்கு வருவோம்” என்ற மோசஸ், அலெக்ஸின் புறம் திரும்பி,

“நிஜமாவே அந்த நீலாம்பரி தான் உன் நீலோத்தியா டே?” – எனக் கேட்டான்.

பதில் கூறாது வாடிய முகத்துடன் லிம்கா பாட்டிலின் ஸ்டிக்கரை உரித்துக் கொண்டிருந்தவனிடம்,

“மட்டையைக் கையில எடுத்தா பிரி,பிரின்னு பிரிப்பாளே லே!, அவளா உன் கிட்ட மனசைப் பறி கொடுத்தா?, லே மோசஸூ, சட்டையைக் கழட்டி அவன் கிட்ட உன் முதுகைக் காட்டு டே” – என்றான் ஜார்ஜ்.

“ப்ச்,சமைஞ்ச புள்ள கணக்கா தலை குனிஞ்சு உட்காராம, நடந்ததைச் சொல்லு டே அமுக்குனி நாயே”

-கடித்தப் பற்களுடன் கடிந்த நண்பர்களிடம் ஆதியோடு அந்தமாய் நடந்த அத்தனையையும் கடகடவென ஒப்பித்தான் அலெக்ஸ்.

“பாஸ்ட் லவ், உன்னை இப்பிடி ‘pastor’ ஆக்கத் துடிக்குதுன்னா, நீ முன் ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்க லே அலெக்ஸூ” – என்ற கலையைக் கண்டு கொள்ளாது, நண்பனையே புருவம் சுருங்க நோக்கிய மோசஸ், அலெக்ஸின் தாடையைத் தொட்டுத் தன் புறம் திருப்பி,

“உறை பிரிஞ்சு மஞ்சப் பஞ்சு வெளியே தெரியுற சோஃபா செட்டு வைச்சிருக்குற கஞ்சப் பன்னாடை, உன்னையா லே அந்தப் புள்ள காதலிச்சுச்சு?, அப்பிடி என்னத்த லே கண்டா உன் கிட்ட?, உன்னை நினைச்சு கல்யாணம்,காட்சி காண்காம இத்தினி வருசமா ஒத்தைல நிக்குற அளவுக்கு?, அதுவும் நீ அந்தப் புள்ளய வேணாம்ன்னு ரிஜெக்ட் பண்ணதா வேற சொல்றியே! நிசத்தைத் தான் சொல்றியா?, இல்ல சும்மா அடிச்சு விட்றியா?”

“ப்ச்” – அவன் கையை ஒதுக்கி விட்டு உச்சுக் கொட்டினான் அலெக்ஸ்.

“சும்மா-லாம் இருக்காது டே!, மாருகோ,மாருகோ-ன்னு இவன் மார் மேல அது உருண்டு,புரண்டு ஆடுனதைத் தான் நாம ரெண்டு கண்ணால பார்த்தோமே” – என்று சாதிக் கூறியதும், அந்த நாளின் நினைவில் வெட்கமாய் முகம் மாற, மெலிதாய் இதழ் பிரித்தவனைக் கண்டு, ‘ஐயோஓஓ’ – வென ஒரு சேரக் கூறியபடி ‘காலம் போன காலத்துல இந்தக் கருமத்தை வேற பார்க்கனுமா’ -என அசூயையுடன் அனைவரும் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

வேகமாய் வாயைச் சுருக்கி, மூக்கு விடைக்க அனைவரையும் முறைத்துப் பார்த்தவன், பின் பாவமான பாவனையுடன்,

“எனக்கு அவ வேணும் லே! ஆனா என் மேல கொலைவெறியில இருக்கா!, அவ கோபத்தைத் தணிச்சு, நான் வாழ்க்கைல சிறக்க வழி சொல்லுங்க டே” – என்று கெஞ்சியதும், மோசஸை நோக்கித் திரும்பிய நண்பர்களிடம்,

“வாலிப வயசுலயே என்னை வரிக்குதிரையா மாத்துனவ டே அவ! நான் அவ கிட்ட வாங்குன வீரத்தழும்பைப் பத்தித் தெரிஞ்சும் என்னைப் பார்க்குறீங்களே டே!,” – என்று கண்ணைக் கசக்கினான் அவன்.

“பார்க்க aesthetic-ஆ இருந்தாலும், அவ ‘எலேய்,இசுக்கு’ கோஷ்டியாச்சே!, ஏன் மக்கா, உனக்கு அந்த ஸ்லீவ்லெஸ் அக்காவே தான் வேணுமா?” – ஜார்ஜ்.

“அவனுக்கு வேற என்ன லே சாய்ஸ் இருக்கு?, பாஸ்டர் ஆகுறதுக்கு, அந்த Boss lady, பெட்டர் ஆப்ஷன் இல்லையா?, ஏன் டே அலெக்ஸூ?” – சாதிக்.

“இப்பிடியெல்லாம் பேசாதீங்க லே!, அவ பாவம்! ரெம்ம்ம்ப நல்லவ! என்ன கொஞ்……சம் முன் கோபம்! அவ்வளவு தான்” – என்று கம்பி கட்டிய அலெக்ஸை முறைத்து,

“அவ முன் கோபத்துக்கு, இவன் பின் உடம்பு பலியாகிடுச்சு டே கூமுட்டைப் பயலே!, ஆனா ஒன்னு, கல்யாணம் கட்டின கையோட, அவளை அம்மா ஆக்கிடு டூட்! பொது,பொதுன்னு உடம்பு பெருத்துட்டா, இனி அவளால ஆக்ரோஷமா யாரையும் விரட்டி அடிக்க முடியாது பார்” – கலை.

“நூத்துல ஒரு வார்த்தை டே கலையரசா” – மோசஸ்.

‘கல்யாணம், அம்மா’- போன்ற வார்த்தைகள் சுகமான கற்பனையை விரியச் செய்ததில், மகிழ்ச்சியில் கண்கள் ஒளிர, தொண்டைக் குழி ஏறி,இறங்க அவஸ்தையுடன் எச்சில் விழுங்கி, ஆசை ததும்பிய முகத்தோடு,

“அதெல்லாம் நடக்குமா டூட்?” – என ஏக்கத்துடன் வினவியவன், Poor-ஆகத் தெரிந்ததில் பாவப்பட்டு, அவன் தோளை அணைத்துக் கொண்டு,

“கட்டாயம் நடக்கும் டே அலெக்ஸூ! நடத்திக் காட்டுவோம்” – என சபதமிட்ட மோசஸ், “வழி மொழிங்க டே கூறுகெட்டப் பயலுவளா” – என்று நண்பர்களைத் திட்ட, அவர்களும் வேறு வழியின்றி ‘ஆமாம்,ஆமாம்’ – எனத் தலையாட்டினர்.

“Operation – Marriage-ஓட முதல் படியா, உனக்கு ஒரு மாற்றம் வேணும் டே அலெக்ஸூ” – மோசஸ்.

“ஆமா, முதல்ல இளநரையை நீ கலர் பண்ணனும்” – ஜார்ஜ்.

“நரை-ன்னு மட்டும் சொல்லு!அதென்ன இளநரை?, 35-வயசுல வர்றதெல்லாம் இளநரையில சேர்த்தியா?”

-கர்வம் அழிந்து, கண்ணீரும்,கம்பளையுமாய் அமர்ந்திருக்கும் நண்பனின் மீது கொஞ்சமும் கருணை காட்டமல் fact பேசிய சாதிக்கைக் கண்டு உதடு பிதுங்க,

“புண்படுத்துறீங்க டே நீங்க என்னைய” – என நெஞ்சைக் குத்தியபடி அழுகையுடன் அலெக்ஸ்.

“லே வாடிப் போய்க் கிடக்குறவனை எதுக்கு டே வாரிக்கிட்டே இருக்கீங்க?, அலெக்ஸூ, நான் சொன்ன மாற்றம் அது இல்ல டே!, நீ முதல்ல இந்த Harpic house-ஐ மாத்தனும்” – மோசஸ்.

“இது அவன் சொந்த வீடு டூட். மாச,மாசம் EMI கட்டிட்டிருக்கான்”-சாதிக்.

“பரவாயில்ல! வீட்டைக் க்ளீன் பண்ணி, பெயிண்ட் அடிச்சு வாடகைக்கு விட்றலாம். என்னா டே?” – கலை.

“வாடகைக்கு விட்டுட்டு?, நான் எங்க குடியிருக்க?” – அலெக்ஸ்.

“நீ காலனிக்குப் போகப் போற?”

“காலனியா?, எந்தக் காலனி?”

“கலிலியோ காலனி!, அங்க தான் உன் பாஸ் லேடியோட பாசறையிருக்கு” -என்ற மோசஸைக் கண்டு,

‘கலிலியோ காலனியா’ – என விழி விரிய முணுமுணுத்த அலெக்ஸ், அவசரமாய் எழுந்து, சார்ஜிலிருந்தத் தன் கைபேசியை எடுத்து, இன்ஸ்டாக்ராமைத் திறந்து, இன்பாக்ஸில் நிரம்பியிருந்த மெசேஜ்களை விறுவிறுவென ஸ்க்ரால் செய்து, கடைசியில் Galileo_gangster-ல் நிறுத்தினான்.

அவன் அனுப்பியிருந்த ‘AI slides’-களில் பதிந்திருந்த முகங்களை ஒரு பார்வையில் நோக்கியவன்,

“டேய்ய்ய் கேங்க்ஸ்டர் கணேஷூ, Mission Accepted டா! அண்ணேன் வர்றேன் டா உன் காலனியில ‘பாம்’ வைக்க!” – என்று டைப் செய்தவாறு நண்பனிடம், “உடனடியா அங்க எனக்கொரு வீடு வேணும் டே மோசஸூ” என்றான் தீர்மானமாய்.

து ஒரு திங்கட் கிழமை காலை.

கலிலியோ காலனி, இரண்டாவது தெருவிலிருந்த அந்த மாடி வீட்டின் பலகணியில் நின்றவாறு, எதிர் வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது, தன் வாயிலிருந்த உணவைக் கொறித்தபடி நின்றிருந்த காக்காவையே, ஆழ்ந்த சிந்தனையுடன், அசையாத விழிகளோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அலெக்ஸ்.

சற்று நேரத்தில் அந்த வீட்டின் gate-ஐத் திறந்து கொண்டு, ப்ரௌன் நிற ப்ளைன் காட்டன் புடவையும், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸூமாய், வெயிலில் மினுமினுத்த Hazel நிறக் கண்களோடு, நெளிநெளியாய்த் தன் தோள் பட்டையை எட்டியிருந்த bob-cut- ஐ ஒரு கையால் தடவிச் சரி செய்தவாறு, மறு கையில் ப்ரோட்டின் ஷேக்கர் மற்றும், கார் கீயுடனும், தோளில் tote bag-உடனும் அவசர கதியில் வெளி வந்தாள் ஜெபமலர்.

காக்காவிடமிருந்துத் தன் மக்காவிடம் பார்வை தாவியதும், சடுதியில் பரபரப்புற்று, தடதடவெனப் படிகளில் தாவிக் குதித்திறங்கி, அரக்க,பறக்க ஓ…..டி வந்தவன், தன் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தவளை அவசரமாய் தடுத்து நிறுத்திப் பின் தன் கையிலிருந்த என்வெலப்பை மூச்சு வாங்க நீட்டினான்.

திடீரெனத் தன் கண் முன்னே வந்து நின்றவனைக் கண்டு அனிச்சையாய் உடல் உதற, இழுத்த மூச்சுடன் ஒரு நொடிக் கண் மூடி அதிர்ந்து நின்றவள், பிறகு நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, புருவம் சுருங்க எதிர் வீட்டை ஒரு முறை நோக்கி விட்டுப் பின் அருகே நின்றவனை ஆராய்ச்சியாய் ஏறிட்டவாறு அவன் நீட்டியதை வெடுக்கென வாங்கிப் பிரித்தாள்.

உள்ளே ஒரு புகைப்படம் இருந்தது.

புகைப்படத்தில் வெள்ளை நிற ஜிப்பாவும், தலையில் ‘prayer cap’-ப்புமாய் இரு உள்ளங்கைகளையும் நெஞ்சருகே, வான் நோக்கி விரித்தவாறு, நிமிர்ந்த முகமும், மூடிய கண்களும், அழுந்த மூடிய இதழ்களும்,விடைத்த மூக்குமாய் pose கொடுத்திருந்த அலெக்ஸின் புருவங்கள், மையினால் அடர்ந்து, மத்தியில் இணைந்திருந்தது.

கொலைவெறியுடன் அவள் பார்வையிட்டுக் கொண்டிருக்கையிலேயே,

“மாப்பிள்ளை பேரு முகமது அலெக்ஸ்! சொந்த ஊரு திருநெல்வேலி, கறிக்கடை வைச்சிருக்கிறாரு! கல்லா கட்டுற அளவுக்கு நல்ல சம்பாத்தியம்! காசுக்குக் குறையே இல்ல! ‘ப்ரேயர்’-ன்னா பிராணனை விடுவார்! இறையருள் மிக்கவர்! என்ன, 35 வயசாகியும் கல்யாண யோகம் வராம காய்ஞ்சு போய் கிடக்குறாரு! நீ கட்டிக்கிட்டா, உன் காலடி நாயா கடைசி வரை வாழ்வாரு. அதனால, உன் கன்னியாஸ்திரி கனவைக் கலைச்சு விட்டுட்டு, குடும்பஸ்திரியா வாழப் பாரு!”

-‘ஆம் எனச் சொன்னால் அடிமையாக வாழ்வேன்’ - என்பதை ஏற்ற,இறக்கத்துடனும், ஆர்ப்பாட்டமான தோரணையுடனும், அலட்டலும்,அதட்டலுமாய்க் கூறியவனை, புருவம் உயர்த்தித் திமிரான பார்வையுடன் அலட்சியமாய் ஏறிட்டவள்,

“ப்ச்! ஃபோட்டோல மாப்பிள்ளை கண்ணை மூடியிருக்குறாரு! சோ, ரிஜெக்டட்” என்று விட்டு முன்னே நடந்தாள்.

“ஆழ்ந்த தியானத்துல இருக்குறவரு, எப்பிடி மக்கா தன்னோட ஆழி விழிகளைத் திறந்து வைச்சிருப்பாரு?”

“ம்ம்ம்ம்ம்ம், மாறு கண்ணு உள்ளவனா இருந்தா, என்னால மாரடிக்க முடியுமா?” – நொடித்தவளிடம்,

“எப்பிடியும் கட்டிக்கப் போறவனை மாறு கை,மாறு கால் தான் வாங்கப் போற?, அதுக்கெதுக்குடி இவ்வ்வளவு அலட்டல்?” – சலித்துக் கொண்டவனைக் கடந்து காரைத் திறந்தவளைத் தடுத்துக் கதவைப் பிடித்துக் கொண்டவன், மறு புறம் நின்றிருந்தவளிடம்,

“ஸ்டோர்ஸூக்குத் தான போற?” எனக் கேட்டான்.

“நீ ஆஃபிஸ் போகலையா?”

“இன்னிக்கு நான் லீவு!”

“So?”

“S……o, இன்னைக்கு இந்தக் காருக்கு நான் தான் டிரைவர்”– அடக்கமான குரலில் கூறியவனைக் கடித்தப் பற்களோடு கடுப்பாய்ப் பார்த்தவளிடம்,

“என்ன?, புள்ள,குட்டிங்க ஸ்கூல் யூனிஃபார்மை இஸ்திரி போட வேண்டிய வயசுல, கன்னியாஸ்திரியாகப் போறேன்னு சொல்லிட்டுத் திரியுற உன் மனசை, மாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இல்லையா? ப்ளீஸ், தடை போடாதே! என்னைக் கடமை ஆற்ற விடு!” – என்றான்.

வளைந்த உதடுகளுடன், கண்கள் சுருங்க, விடாது அவனை நோக்கியவள், அடிக்குரலில் “எதிர் வீட்ல உனக்கென்ன லே சோலி?” – எனக் கேட்டாள்.

குரல், தேன் சிட்டிலிருந்து தென்னை மட்டைக்கு மாறி விட்டதை உணர்ந்தாலும், அசராமல்,

“நான் அங்க தான் புதுசா குடி வந்திருக்கேன் மக்கா!,நேத்து பால் காய்ச்சி, பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் பாயாசம் கொடுத்தேன்! உனக்கு மட்டும் தான் மிஸ்ஸிங்! நீ வீட்ல இல்லன்னு உன் ‘குக்’ குமுதா சொல்லுச்சு!” – என்றான்.

“சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்து எதுக்குக் குடியிருக்க?”

“உன்னை சொந்தமாக்கத் தான்” – முணுமுணுத்தவனிடம்,

“என்ன?” – என்று மூக்கை விடைத்தவளைக் கண்டு பயம் கொள்ளாது,

“வாஸ்துப் படி, என் வீட்டு வாசல் வடக்கு நோக்கி இருக்கனுமாம்! அதான் இடிச்சுக் கட்டிட்டிருக்கேன்! அதுவரை கொஞ்ச நாள் இங்க தங்கலாம்ன்னு…!” என்று இழுத்தவன் தொடர்ந்து “தவிர, இந்த கேப்ல உனக்கும் மாப்ள அமைஞ்சிட்டா… என் வாழ்க்கைலயும் ஒளி வீசும் பாரு?,” – அசட்டுச்சிரிப்புடன் சகஜமாய்ப் புளுகியவனைக் கண்டு,

நக்கலாய்ச் சிரித்தவளின் பாவனையை அசட்டை செய்து, பின் சீட்டை நோக்கிக் கை காட்டியவன், டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

உள்ளே தொங்கிய சிலுவைகள், ஜெபமாலைகள், ‘அது கார் அல்ல;கன்னி மேரி’- என்பதைப் பறைசாற்ற, பின் சீட்டில் அமர்ந்ததும், தன் பையிலிருந்த ஐ பேடைக் கையிலெடுத்து, அன்றைய நாளின் வேலை குறித்துப் பார்வையிட்டபடி, ப்ரோட்டின் ட்ரிங்க்கை உறிஞ்சியவளை, ரியர் வ்யூ மிர்ரர் வழி நோக்கியவன்,

“பிஸினஸ் நல்லாத் தான போகுது?, ஒரு பென்ஸ் கார் வாங்குனா என்ன?” – என்று வம்பிழுத்தான்.

நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தவள், பின் காலியான பாட்டிலைக் கீழே வைத்து விட்டு ஐபேடில் மூழ்கிப் போனாள்.

அப்படியும் விடாது, “பாட்டில்ல என்ன மக்கா?, ஏபிசி ஜூஸா?” எனக் கேட்டு அவளைப் பேச வைக்கப் பாடுபட்டவனின் முயற்சி பலனற்றுப் போக, ‘ரெம்ம்பக் கஷ்டம்’-எனப் பெருமூச்சு விட்டவாறு, முன்னேயிருந்த FM-ஐ On செய்தான்.

அது உடனடியாக, இன்பம் FM-லிருந்து ‘ஆரா….தனை உமக்கே!!!, ஏசு, ஆரா….தனை உமக்கே’ – என உச்சஸ்தாதியில் பாடத் துவங்க, வெடுக்கெனத் திரும்பி பின்னே நோக்கியவன்,

“ஜெபமலர்ன்னு பேரு வைச்சிருக்கிறதால, எப்பப் பாரு ஜெபம் பண்ணிட்டு தான் இருப்பியா?” – என்று முறைத்து விட்டு, நொட்டென ஸ்டேஷனை மாற்றினான்.

‘ஆண்டவனை அவமதிக்கிறவன், ஆண்டியாத் தான் போவான்’ – என்று முணுமுணுத்தவாறு, தீவிரமாய் அவள் ஐபேடில் பார்வை பதித்திருந்த வேளை,

ரேடியோ மிர்ச்சியில், “பூக்களின் கருவறையில்…. பிறந்தவள் நீயாஆஆஆ???” – என சங்கர்-கணேசின் இசையில் எஸ்.பி.பி மற்றும் சித்ரா, ஒரு காதல் தேவதையை, பூமிக்கு வர வைக்கும் முயற்சியில் ஈடுபட, புருவம் உயர்த்தித் தலையாட்டியவாறு, உடன் சேர்ந்து ஹம்ம் செய்தபடி ஸ்டியரிங்கில் பியானோ வாசித்தான் அலெக்ஸ்.

முதல் பத்தியில், முசுட்டு முகத்துடனிருந்தவளின் புருவங்கள், இரண்டாவது பிஜிஎம்மில் இயல்பாக, ‘யாருக்கு யார் உறவு… யாரறிவாரோ’ என்று சித்ரா தொடங்குகையில், தன்னிச்சையாக ஐபேடை மடியில் வைத்து விட்டு, மென்மை படர்ந்த விழிகளுடன், ஜன்னல் வழி,வெளியே பார்வையைச் செலுத்தினாள்.

பெரிதான உணர்ச்சிகளேதுமின்றி, மென்மை மட்டுமே நிறைந்திருந்த முகத்தை கண்டு கொண்டவனின் விழிகள், கட்டுப்பாட்டை மீறி அவளிடமே சென்று வந்து கொண்டிருந்தது.

அது புரிந்தும்,தெரிந்தும் அசராதிருந்தவளைக் கண்டு பற்கள் நெரிபட, ‘ராட்சசி’ என மனம் முணுமுணுத்தாலும், காலைக் கதிரொளியில் மினுமினுத்த ‘பன்’ கன்னங்களையும், கோடாய் நீண்டிருந்த இதழ்களின் கீழே, நாடியின் இருபுறமுமிருந்த முடிச்சுக்களையும் பார்த்திருந்தவனின் உள்ளத்தில் பெரும் உவகை ஊற்று!

வெயிலில் ஜொலிக்கும் இந்தக் கன்னங்களை முன்பொரு முறை கண்டிருக்கிறான். இன்று மென்மை நிறைந்திருக்கும் சின்னக் கண்களில், அன்று ஆசையும்,அன்பும் நிரம்பியிருந்ததை உணர்ந்திருக்கிறான்.

முதுகு உரிந்து கிடந்த மோசஸின் மீது பாவப்பட்டு அவள் மோட்சம் கொடுத்த அன்று, மாலை ஒளியில் பளபளத்தப் பார்வையுடன் அவனை ஏறிட்டவளின், விழியீர்ப்பு விசையில் ஈர்க்கப்பட்டு, அவளோடே பேருந்தில் ஏறி விட்டவனைக் கண்டு, மகிழ்ச்சியில் படபடத்தபடி, தானாய் மலர்ந்த புன்னகையை அடக்க முடியாது, அவசரமாய் ஜன்னல் புறம் திரும்பியவளின் பக்கவாட்டுத் தோற்றம் நினைவிற்கு வந்தது அவனுக்கு.

அன்று ‘அது சின்னப்புள்ள டே!’ எனத் தன்னைத் தானே கடிந்து ஒதுங்க எண்ணினாலும், அந்த மஞ்சள் முகத்தை நோக்கிச் செல்லும் விழிகளை கட்டுப்படுத்த முடியாமல், கள்ளப்பார்வையுடனே நின்றிருந்தவனுக்குத் தானும் பதில் பார்வை கொடுத்தவள், ஒரு கட்டத்தில் தன் முன்னே காலியான இருக்கையை நோக்கி வந்தமரும் படி கண் காட்டினாள்.

‘இல்ல,இல்ல பரவாயில்ல’ – அவசரமாய்க் கையசைத்து மறுத்துத் தலையாட்டியவனிடம் அவள் மூக்கை விடைத்து, முகத்தைச் சுருக்க,

‘கண்ணாலயே கட்டுப்படுத்துறாளே’-என்று புலம்பியபடி அவள் எதிரே சென்றமர்ந்தான்.

மனதின் எண்ணங்களை,முகத்தில் பிரதிபலித்து விடக்கூடாதென்கிற முனைப்பில், முழு வேகத்தில் அடித்துக் கொண்ட இதயத்தின் துடிப்பை அடக்கியபடி, வெளியே அலட்டிக் கொள்ளாதிருந்தவனை, எதிர்வெயிலில் சுருங்கிய விழிகளுடன், உரிமையும்,மகிழ்ச்சியுமாய் நோக்கியவள்,

“பொய் தானே சொன்ன?” எனக் கேட்டாள்.

“என்ன பொய்?”

“பைக் ரிப்பேர்ன்னு?”

– உயர்ந்திருந்த அவள் புருவங்களில் ஊஞ்சல் கட்டி ஆடத் தவித்த மனதை நொந்தபடி,

“இ…இ…இல்லையே! நிஜமாவே… ரிப்பேர் தான்” – என சமாளிக்கப் பார்த்தவன், வளைந்த உதடுகளோடு லேசாய் முறைத்தவளிடம்,

“அ…அப்பிடியெல்லாம், ஈ…ஈஸியா…. ஒரு பையன் பைக்ல ஏறிடக் கூடாது ஜெபா! பொண்ணுன்னா….. அ…அலட்டலா இருக்கனும்! கெ… கெத்து காட்டனும்!” – என்று உளறி வைத்தான்.

“ரொம்பத் தெரியுமோ உனக்கு?, பொண்ணுங்களைப் பத்தி?”

“இதெல்லாம் பொது அறிவு மக்கா! அறிவியல்,கணிதம், புவியியல், குடிமையியல் மாதிரி இதுவும்.. ஒரு சப்ஜெக்ட்டு”

நாடியில் முடிச்சு விழப் புன்னகைத்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு ஜன்னல் புறம் பார்த்தவள்,

“நான் உட்கார்ந்ததும், முதுகு விறைச்சு, நீ ஒரு அடி முன்னால போனது.. அப்பட்டமாத் தெரிஞ்சது” – என முணுமுணுக்க..

அசடு வழிந்த முகத்துடன், பிடரியைக் கோதியபடி அவசரமாய் அவளிடமிருந்துப் பார்வையைத் திருப்பியவன், கண்களை அழுந்த மூடி, கடித்தப் பற்களிடையே ‘நீ ஒரு கிறுக்கன் டே” என்று தன்னையே கடிந்து கொள்ள,

தோள் குலுங்க சிரித்தவளைக் கண்டு பெருகிய ரோஷத்தில்,

“எ..எ..எனக்குக் கொஞ்சம் கூச்சம் ஜாஸ்தி. அதுக்கென்னவாம் இப்ப?” என எகிறியவனிடம்,

“இருக்க வேண்டியது தான்” – எனக் கூறியபடி “ஸ்டாப் வரப் போகுது” என்று அவள் எழுந்து நடக்க,

“இருக்க வேண்டியது தான்-னா என்னாடி அர்த்தம்?, என்னைய என்னான்னு நினைச்சு வைச்சிருக்க நீ?” – என அவன் கதறியபடி அவளைத் தொடர்ந்து சென்ற வேளை,

டிரைவர் ‘சடன் பிரேக்’ இட, பிடிமானமின்றி அனிச்சையாய்ப் பின்னே சாய்ந்தவளை, “பார்…..த்….து ஜெபாஆஆ” எனப் பதறிக் கைப்பற்றி தாங்கியவனின் நெஞ்சில்… விழுந்த நிலையிலேயே, திரும்பி அவனை நோக்கியவளின்…. விழிகள் சொன்னது! அவள், அவனை என்னவாக நினைத்து வைத்திருக்கிறாள் என்பதை!

அன்று வயதையும், வாலிபத்தையும் தாண்டி, பேரன்பும், பெரு வாஞ்சையும் நிறைந்திருந்த அந்தக் கண்கள் கொட்டிய உணர்வுகளை, உதாசீனப்படுத்தி ஒதுக்கியதை எண்ணி, இன்று தன்னையே நொந்து கொண்டான் அலெக்ஸ்.

‘அப்பனுக்கு replacement-ஆ அவ உன்னை நினைச்சதுல என்ன லே தப்பிருக்கு?, அத்தனை பெரிய உயரத்துல உன்னைத் தூக்கி உட்கார வைக்க.. அவ எந்த அளவுக்கு யோசிச்சிருப்பா! எத்தனை மன அலட்டல்களைக் கடந்திருப்பா! தானே விருப்பத்தை வந்து சொன்ன பெண் பிள்ளையை, வேணாம்ன்னு விரட்டி அடிக்குற அளவுக்கு நீ என்ன பெரிய மன்மதனா லே!, தான் பாட்டுக்க, தன் போக்குல இருந்தவ மேல அக்கறை காட்டி, அன்பை விதைச்சுட்டு, கடைசியில மொத்தமா கருவறுத்து விட்டுட்டியே! இந்தப் பாவமெல்லாம் உன்னை சும்மா விடாது லே’ – என மனசாட்சி அவனுக்கு சாபமிட,

அன்று சரியெனப் பட்டது, இன்று மாபெரும் தவறாய்த் தெரிந்ததில், பரபரவெனத் தலையைக் கோதிக் கொண்டவனின் முகம் வாடி, இருண்டு, கன்றிக் கலையிழந்து விட்டது.

போதாதற்கு இளையராஜா வேறு FM வழி,

‘பெண் மனசு… ஆழம் என்று” எனத் தொடங்கி ‘அந்த ஆழத்திலே என்ன உண்டு, யாருக்குத் தான் தெரியும்?’ – என்று புலம்பிக் கொண்டிருக்க..

“லெஃப்ட்டு…., லெஃப்ட்ல போ” – என்றவளின் குரல் இடை புகுந்ததில், அவசரமாய் ஸ்டியரிங்கை வளைத்தபடி, அவளது கடையின் கார் பார்க்கிங்கினுள் வண்டியைச் செலுத்தியவன், அவள் காட்டிய இடத்தில் பார்க் செய்து விட்டுக் கீழ் இறங்கினான்.

உடையைச் சரி செய்து பின் தன் பொருட்களனைத்தையும் சேகரித்துப் பைக்குள் இட்டு, செல்ஃபோனைக் கையில் எடுத்தவாறுத் திரும்பியவள், சிறுத்துக் கருத்துப் போன முகமும், தெளிவற்றப் பார்வையுமாய் கலக்கமாக நின்றிருந்தவனை நோக்கி, சுருக்கிய புருவங்களுடன்,

“என்ன?” எனக் கேட்டாள்.

அவளையே பார்த்தபடி ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தவனைச் சந்தேகமாய் நோக்கியவாறு அவள் கடந்து செல்ல முற்பட,

அவளது விலகல் தொனி அவஸ்தையைக் கூட்டியதில், அவசரமாய், “ஜெபா…..” என்றழைத்து நிறுத்தினான்.

நின்று திரும்பி, என்னவென்பது போல் பார்த்தவளை ஒரு நொடி அசையாது நோக்கியவன், பின் வேக மூச்சுடன், பெரிய எட்டுக்களில் அருகே நெருங்கி, அவளிரு தோள்களையும் இறுகப் பற்றி, இடது கண்ணில் இதழ் புதைய…. அழுந்த முத்தமிட்டான்.

அனிச்சையாய்க் கண்களை இறுக மூடியவளின் மீது முழுதாய் சாய்ந்து, அவள் நெற்றியில் மூக்கை அழுத்தி, “சாரி…. ஜெபா….” என்று தன்னை மறந்து கலங்கிய குரலுடன் மெல்ல முணுமுணுத்தவனின் இதழ்களில் ஏதோ உறுத்த, லேசாய் விலகி, தன் வாயில் ஒட்டியிருந்ததைக் கையில் எடுத்தான்.

False eye lashes!

“என்னாடி இது????” – விழி பிளக்கக் கேட்டவனின் கையிலிருந்ததைக் கண்டுக் கோபத்தோடு அவன் தலையில் இடியை இறக்கி,

“செத்த பயலே!, வாயை வைச்சு அழுத்தி, மொத்தமா புடுங்கிட்டியே லே?, அறிவிருக்கா உனக்கு?” – எனத் திட்டியவாறு அதைப் பட்டெனப் பறித்தவளின் இடது கண்ணையும், வலது கண்ணையும் மாறி மாறிப் பார்த்தவன்,

“அத்தனையும் ஃபேக்-ஆ மக்கா?” – என வியந்த குரலில் கேட்டுப் பின் அவள் முகத்தை உற்று நோக்கி,

“அதென்னாடி….. ஐ-ப்ரோல…….” – என்று கூவத் தொடங்குவதற்குள்,

“ஷ்ஷ்ஷ், அது மைக்ரோப்ளேடிங்” – என்றவள் கண்ணாடியில் முகம் பார்த்தபடி, lashes-ஐ ஒட்டித் தன் மேக் அப்பை சரி செய்ய, கார் போன்னெட்டின் மீதிருந்த vanity kit-ஐ எட்டிப் பார்த்தவன், அதிலிருந்தவற்றைக் கண்டு தெறித்து,ஓடி நான்கடி தள்ளி நின்று கொள்ள, brush-ஆல் இரு கன்னங்களையும் சரக்,சரக் என தீட்டிக் கொண்டிருந்தவள், சைடாய்த் திரும்பி அவனைக் கண்களால் சுட்டுப் பொசுக்கினாள்.

அதற்கெல்லாம் அசராமல் நிமிர்ந்த நெஞ்சுடன், இரு கைகளையும் இடையில் பதித்து நின்றவன்,

“உன் நோ-மேக் அப் லுக்-ஐப் பார்க்க மாப்ள ஆசைப்படுறாரு, அதனால, சாயங்காலம் வீட்டுக்குப் போனதும், முதல் வேலையா, முகத்தைக் கழுவிட்டு, எனக்கு ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பு!” என்று தைரியமாய்க் கலாய்க்க,

கோப மூச்சில் நெஞ்சு ஏறி,இறங்க உதட்டை இறுக்கியவளைக் கண்டு அஞ்சாது,

“யாரை டி ஏமாத்தப் பார்க்குற?, ஹாங்ங்ங்???, அம்ம்ம்ம்புட்டும் ஃபேக்கு!! ஏய்ய்ய் ஏய்ய்ய் ஏய்ய்… நீ தைரியமான ஆளாயிருந்தா…. முகத்தைக் கழுவிட்டு வந்து… ஒத்தைக்கு,ஒத்தை நின்னு… என்னை மயக்கிக் காட்டுடி!! அதை விட்டுட்டு, மேக் அப் போட்டு இந்த அலெக்ஸை ஏமாத்த நினைக்குறியா!! நடக்க்க்க்க்காதுடி!” – என்று அங்குமிங்கும் நடந்து, எகிறிக் குதித்து, சொடுக்கிட்டு, கை நீட்டி ஆக்ரோஷமாய் வசனம் பேச..

‘அட எழவெடுத்தவனே!!! இவனைஐஐஐஐஐ’ – என்று அடித்தொண்டையில் கர்ஜித்தவள், கடுப்பும்,சிரிப்புமாய்த் தன் கையிலிருந்த ப்ரஷை அவனை நோக்கி விட்டெறிய, கேட்ச் பிடித்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டவன்,

“இதை வித்துப் பங்களா வாங்கலாம் போலயே!” – என்றவாறு அடுத்தப் பதினைந்து நிமிடங்கள் விடாது உருண்டு,பிரண்டு புலம்பித் தீர்த்ததில், ஜெபமலரின் காது கழண்டு விட்டது!

****இவனுக்கு பொண்ணு அழொ…..கா இருக்கனுமாம்!,அதுவும் மேக்-அப்பே இல்லாம அழகா இருக்கனுமாம்! என்னா பேராசை??, போய், முதல்ல, பிரிஞ்சு கிடக்குற உன் வீட்டு சோஃபாவுக்கு உறையை மாத்து லே ப்ளடி ராஸ்கல்!*****