6.2. கலிலியோ காலனி-சில குறிப்புகள்!

‘Mission-ஆடலும்,பாடலும்’ – Gangster_Ganesh.

-என்கிற தலைப்பின் கீழ், தன் கணினித் திரையில் வரிசையாக நீண்ட ‘AI slide’-களை, பொறுமையாகப் பார்வையிட்டபடி கையிலிருந்த ப்ளாக் காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் அலெக்ஸ்.

மரண கலாய் மாதா, ப்ராங்க் காலின் (Prank call) பிதா, ஸ்கெட்ச் போடுவதில் குரு, இளசுகளின் இஷ்டதெய்வம், எங்கள் அன்பு அண்ணன் அலெக்ஸிற்கு முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தொடங்கி வளவளவென முதல் ஸ்லைடை நிரப்பியிருந்த ஆங்கில வாக்கியங்களின் தமிழாக்கம் இதோ:

அதாகப்பட்டது, கலிலியோ காலனி, 2-வது தெருவில் வசிக்கும் 15-வயதான gangster கணேஷூம், அதே காலனியில் மூன்றாவது தெருவில் குடியிருக்கும் 15-வயதான hunter ஹாசினியும், யாக்கோபுவையும்,ஏசாவையும் போல பர்ர்ர்ர்ர்ரம எதிரிகளாம்!

கிட்டத்தட்ட பிறந்ததிலிருந்து ஒரே ஏரியாவில்.. ஒன்றாகவே… வசித்து.. வளர்ந்திருந்தாலும், ஸ்கூல் மேட் மற்றும் க்ளாஸ் மேட்டாகவும் ஏன், ஒரு காலத்தில் அதி நெருங்கிய நட்பாகவும் இருந்த இருவருக்குள்ளும், அவர்களது பன்னிரெண்டாவது வயதில், கலிலியோ காலனியில் நடைபெற்ற ஆடலும்,பாடலும் நிகழ்ச்சியின் போது உண்டான சில,பல கசப்பான நிகழ்வுகளால் பிளவு ஏற்பட்டு.. தற்போது.. ஜென்மப் பகைவர்களாக மாறி, இருவரும் ஆளுக்கொரு திசையில் முறைத்து நிற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

விரிசல் விழுந்து விட்ட இருவரது நட்பை எண்ணி கணேஷிற்கு வருத்தம் தானென்றாலும், அதிலும் விளையாட்டு நேரத்தில் அவள் கொண்டு வரும் வெரைட்டி,வெரைட்டியான ஸ்நாக்ஸ்களை மிக…..வும் மிஸ் செய்தாலும், இரண்டு வருடத்திற்கு முன்பு, கடைசியாக.. ஆடலும்,பாடலும் மேடையில், அவள், அவனைப் பார்த்து இதழ் வளைய நக்கலாகச் சிரித்த வன்மச் சிரிப்பு, நித்தமும் பெருங்கோபத்தைக் கிளறி, பழிவெறியைத் தூண்டி, அவனது நாடி, நரம்புகளையெல்லாம் புடைக்கச் செய்து… ரத்தத்தை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

டிப்பில் சிறந்தவர்களான இருவரும், வகுப்பின் முதல் இரண்டு இடங்களை மாற்றி,மாற்றி ‘ஸ்கோர்’ செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இருவருக்குமிடையே நிலவுவது ஆரோக்கியமான போட்டி என்றே நம் gangster நம்பியிருக்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில், அந்தப் போட்டிக்குள் பொறாமை உணர்வு மிகுந்திருந்ததையும், வன்மம் பெருகியிருந்ததையும் அவன் அறிந்து கொண்ட தருணம் ஒன்று வந்தது!

இருவரும் பக்கத்து,பக்கத்துத் தெருவில் வசிப்பதால், அண்டை வீட்டுக்காரர்களைப் போன்று emergency ‘காபி பவுடர், கறிவேப்பிலை’ கடன்களோ, விசேஷ நாட்களின் ‘பண்ட,பலகார’-exchange-களோ வைத்துக்கொள்ளுமளவிற்கு இரு வீட்டாரிடையே நெருக்கம் இல்லாவிடினும், அவ்வப்போது மளிகைக் கடையிலும், மாரியம்மன் கோயிலிலும் ‘மீட்’ செய்து கொள்ளும் இருவரது அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளது படிப்பு குறித்து, ‘யாரு பெரியவ-ன்னு அடிச்சுப் பார்ப்போமா’ ரீதியில் வன்மத்தோடு பெருமை பீற்றுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

ப்போது நடந்த அரையாண்டுத் தேர்வு முடிவில் gangster-ஐ விட, hunter ஒரு மதிப்பெண் அதிகமாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்திருக்கிறாள்.

அன்று பார்த்து, மாரியம்மனுக்கு ‘மஞ்ச சேலை’ சாற்ற சென்ற இவனது அம்மாவிடம், அவள் அம்மா, தன் மகள் காலாண்டில் பெற்ற முதலிடத்தை அரையாண்டிலும் தக்க வைத்துக் கொண்டதை அருமை,பெருமையுடன் கூறி, ‘முதலிடம்’ என்பது hunter-க்கானது தான் என்பது போலவும், அதை அவள் பட்டா போட்டு விட்டதாகவும், இனி எதற்காகவும் அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாளென்றும், எந்தக் கொம்பனாலும் அவளை அசைக்க முடியாதென்றும் கர்வமாய், திமிராய், சவாலாய், வில்லுப்பாட்டு பாடிச் சென்றதில் காண்டாகிப் போன gangster-ன் அம்மா, அம்மனுக்கு சேலையைச் சாற்றிய கையோடு, வீட்டுக்கு வந்து இவனை சாற்றியதில் கொதித்துப் போன gangster,

தமிழ்ப் பாடத்தில் ‘1 மதிப்பெண்’ கேள்வி ஒன்றுக்கு, அவள் தப்பாக பதிலளித்ததாகவும், ஆசிரியர், கவனக்குறைவால் அதற்கு ‘டிக்’ போட்டு விட்டதாகவும், அதனால் அவள் தப்பி விட்டதாகவும், அது தெரிந்தும், ‘நல்ல எண்ணத்தில்’ அவன் வாத்தியாரிடம் போட்டுக் கொடுக்காததால், அவள் ஒரு மார்க் கூடுதலாகப் பெற்று முதலிடத்தைப் பிடித்து விட்டாளென்றும் உண்மையைப் புட்டு,புட்டு வைத்திருக்கிறான்.

இதைத் தெரிந்து கொண்ட இவன் அம்மா, மளிகைக்கடையில் வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்து வாங்கிக் கொண்டிருந்த hunter-ன் அம்மாவிடம் வரிந்து கட்டிக் கொண்டு, நடந்ததைச் சொல்லி, தன் மகனை, ‘வாய்மையே வெல்லும்’ எனக் கூறி வளர்த்து வருவதாகவும், பொய்யோ,புரட்டோ இல்லாதவனது நேர்மைக்கும்,உண்மைக்கும் அவன் என்றென்றைக்குமே முதலிடத்தைப் பிடித்தவனாய் மட்டுமே வாழ்வானென்றும், ‘சத்தியம் தோற்பதில்லை’- எனவும் ஆக்ரோஷமாய்ப் பேசி விட்டதில், வெறியாகிப் போன அவள் அம்மா, வெண்டைக்காய் வாங்கிய கையோடு, வீட்டுக்குச் சென்று, தன் மகளை வெளுத்து விட்டதில், கடுங்கோபத்துடன் hunter,

“அவன் மட்டும் என்ன யோக்கியமா?, போன முறை க்ளாஸ் டெஸ்ட்ல, Either/Or questions-ல, 2-வது கேள்விக்கு அவனுக்குப் பதில் தெரியாததால, முதல் கேள்வியில இருந்த ரெண்டு ஆப்ஷனுக்குமே ஆன்சர் பண்ணி ’10 மார்க்’ வாங்கிட்டான்!?, தெரியுமா? அது மட்டுமா….?, கணக்கு டீச்சருக்கு எடுபிடி வேலை பார்த்து, க்ளாஸ் டெஸ்ட்ல வரப் போற க்வஸ்டின்ஸ் எல்லாத்தையும் முன்னாடியே தெரிஞ்சு வைச்சு ஸ்கோர் பண்ணுவான்! Lab assistant-கூட பழகி வைச்சிக்கிட்டு practicals-ல யூஸ் பண்ணிக்குவான்! ஃப்ராடு பய!, மகனைப் பத்தி தெரியாம, அவங்கம்மா வாய் இருக்குதுங்குறதுக்காக வண்ணமயமா அள்ளி விட்டிருக்கு! நீயும் அதைக் கேட்டு, என்னை வாய்க்கு வந்தபடி பேசிட்டிருக்க?, போ-ம்மா” – எனப் பொங்கியதும்,

‘சரி,சரி,’-யென சமாளித்து ‘Mug cake’ செய்து கொடுத்து மகளை சமாதானப்படுத்தி விட்டாலும், தன் வன்மம் தீர்க்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார் hunter-ன் அம்மா!

வாய்ப்பும் வந்திருக்கிறது!

காலனி முழுதிலும் உள்ள குழந்தைகளும், பெரியவர்களும், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அங்கு நடைபெறும் ‘ஆடலும்,பாடலும்’ நிகழ்ச்சியை ஆர்வத்துடன் எதிர் நோக்குவதையும், உற்சாகத்துடன் பங்கு கொள்வதையும் வழக்கமாக்கி வைத்திருந்திருக்கிறார்கள்.

மாலை தொடங்கி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமென கேளிக்கைகளுக்குக் குறைவில்லாமல் நடு சாமம் வரை நீளும் இந்த community gathering event-ல், starter-லிருந்து dessert-வரையிலான இரவு விருந்தும் இடம்பெற்றிருக்கும்!

விளையாட்டுப் போட்டிகளனைத்திலும் தவறாது பங்கு பெறும் hunter-ம், gangster-ம், இரண்டு,மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே டான்ஸ் ப்ராக்டிஸ்களை நண்பர்களுடன் தொடங்கி விடுவார்கள்.

நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வந்ததுமே, hunter-ன் அம்மா, கோவில் பூக்காரியிடமும், மளிகைக் கடை அண்ணாச்சியிடமும், சாதாரணமாகப் பேசுவது போல, indirect-ஆக, “இந்தக் காலத்துப் புள்ளைங்க, படிப்புல மட்டும் பெஸ்ட்-ஆ இருந்தா போதாது பார்வதி! ஸ்போர்ட்ஸ்,டான்ஸூன்னு co curricular activities-லயும் கொடி கட்டிப் பறக்கனும்! அந்த வகையில நான் நெம்ம்ம்ம்பக் கொடுத்து வைச்சவ அண்ணாச்சி! ஏன்னா… என் மக ஹாசினி ஓட்டத்துல பி.டி.உஷாவாகவும், ஆட்டத்துல ஆடலரசியாகவும் இருக்குறா! இந்த முறை காலனியில நடக்குற அத்தனைப் போட்டிலயும் அவ மட்ட்ட்ட்ட்டும் தான் ஜெயிப்பா பாரேன்” – என்று gangster-ன் அன்னையைத் தாக்க…

அதற்கு நேரடியாக எந்தப் பதிலும் கொடுக்கா விட்டாலும், வீட்டில் மகனை முடுக்கி,முறுக்கி,முதுகைப் பிரித்து ’ஈ சாலா கப் நம்தே’ என சபதமெடுக்கச் செய்து, இரவு,பகல் பாராது வாட்டி,வதைத்து அவனைத் தீவிரமாய் உழைக்க வைத்திருக்கிறார்.

இருவரும் தத்தமது அன்னைமாரிடம் மாற்றி,மாற்றித் தங்களது பித்தலாட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட நாளிலிருந்து பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டாலும், அவ்வப்போது ‘யானைக்குச் சின்னப் பூனை போட்டியா’ என்று gangster-ம், ‘பாயும்புலி நான் தான், பார்க்கப் போற நீ தான்’ என்று hunter-ம் ஏரியாவுக்குள் மறைமுகமாகத் தாக்கிக் கொள்வதை வழக்கமாக்கியிருந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியன்று களமிறங்கிய இருவரும், பங்குபெற்ற விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் சரிசமமான வெற்றியைப் பெற்று, அன்னைமார்களை பதட்டத்தில் நகம் கடிக்க விட்டிருக்கின்றனர்.

ஆனால், இறுதியாக நடந்த நடனப் போட்டியில், வெள்ளை-வேட்டி சட்டையில், நெற்றியில் பட்டையுடன் ‘அதான் டா, இதான் டா அருணாச்சலம் நான் தான் டா’ – எனத் தலைவர் பாடலுடன் ஆடத் தொடங்கிய gangster, ‘பல்லே லக்கா’-வில் தொடர்ந்து, ‘சேட்டன் வந்தல்லே, சேட்டை செய்ய வந்தல்லே’ -என முடித்து, இடையில் மின்னல் வேகத்தினுடனான costume-change-களோடு மேடையில் ‘ஃபயர்’ விட்டுச் சென்றாலும்,

அடுத்ததாகக் களமிறங்கிய hunter, டைனோசர் காலத்துப் பாடலான ‘கவிதை கேளுங்கள், கருவில் பிறந்தது ராகம்ம்ம்’ -த்திற்கு பரதநாட்டியம், குச்சிப்புடி, ரெட்ரோ, வெஸ்டர்ன்,ஃபோக் என அனைத்து நடனக்கலைகளையும் கலந்தடித்துத் தெறிக்க விட்டு, கடைசியாக ‘இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்… ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’ – எனப் பரபரவென பம்பரமாய்ச் சுழன்று, விழுந்து, எழுந்து வைத்த வணக்கத்தில், crowd, violent-ஆகி பத்து நிமிடம் விடாது கைகளைத் தட்டி, அன்றைய ‘winner,winner chicken dinner’-அவளுக்குத் தான் என்பதை gangster-ன் கன்னத்தில் இடித்துரைத்திருக்கிறது.

அம்மாவும்,மகளும் இவர்களை நோக்கி இளக்காரமாகச் சிரிப்பதைக் கண்டு gangster-க்கு அவமானத்தில் முகம் சிவந்து, கண்கள் கலங்கி விட, “‘தகிட ததிமி,தகிட ததிமி தம்தானா’-ன்னு கமல் பாட்டுக்கு ஆடலாம்ன்னு சொன்னேன்! கேட்டியா டா நீ?, வேட்டி,சட்டை,கோட்டு,சூட்டு, டெனிம் ஜாக்கெட்டுன்னு உன்னை நம்பி எவ்ளோஓஓஓ செலவழிச்சேன்?, இப்பிடி அசிங்கப்படுத்திட்டியே டா” – எனக் கதறிய அம்மா, ‘ஹ்ம்’ என முகத்தைத் திருப்பிக் கொண்டு, நிகழ்ச்சியின் பாதியிலேயே வீட்டுக்குச் சென்று விட,

தன் பெர்ஃபார்மன்ஸின் மீது நம்பிக்கைக் கொண்டு, போட்டி முடிவு வரும் வரைக் காத்திருந்த gangster-க்கு, இரவு விருந்துக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்களில், hunter-க்கு முதலிடத்தையும், அவனுக்கு இரண்டாம் இடத்தையும் வழங்கி, அவனை ஏமாற்றத்துள்ளாக்கியது விழாக்குழு.

தொங்கிப் போன தலையுடன் இரண்டாம் பரிசை வாங்கியவன், பலத்த கரகோஷங்களுக்கிடையே, முகம் முழுதும் பூரிப்புடன் முதல் பரிசை ஏந்தியவாறு புகைப்படத்திற்கு புன்னகையுடன் ‘போஸ்’ கொடுத்த hunter, கையில் ‘கப்’ உடன் இவனை நோக்கி, உதடு வளைய, தோள் குலுங்க, வன்ம விழிகளோடு சிந்திய சிரிப்பு, சுர்ர்ர்ர்ர்ர்ரெனத் தலைக்கேறி, வரட்டு இருமலை உற்பத்தி செய்ததில், லொக்,லொக்கென இருமியவாறு மறுபுறம் திரும்பியவனின் கண்களில் கண்ணீர் வடிந்து கன்னத்தை எட்டியிருந்தது.

கொலைவெறியிலிருக்கும் அன்னையை எதிர்கொள்ள பயந்து ‘டின்னர்’ சாப்பிடும் சாக்கில் ஏரியா பாய்ஸிடம் தஞ்சம் புகுந்தவனிடம், “விட்றா கணேஷூ!, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்! சிம்மராசி படத்துல சரத்குமாரு, நீள முடியோட, மாரெல்லாம் சந்தனத்தை அப்பிக்கிட்டு, ‘தின்னதக்க, தின்னதக்க தா’-ன்னு ஆடுற மாதிரி ஒரு ஆட்டத்தைப் போட்டுட்டு பரிசைத் தட்டிட்டுப் போயிட்டாளேடா இவ!, கிழ போல்ட்டுகளெல்லாம் ஒன்னு சேர்ந்து கிறுக்கச்சி மாதிரி ஆடுனவளுக்குப் போய் கப்-ஐ கொடுத்துட்டானுங்க பாரேன்! விட்றா கணேஷூ!, நெக்ஸ்ட் டைம் கப் நம்தே! எப்பிடியாவது அடிக்கிறோம்! அவளை ஜெயிக்கிறோம்! கவலையை விடு” – என அவர்கள் சமாதானம் செய்ய,

அடுத்த முறை எப்படியேனும் அவளைத் தோற்கடித்து விட வேண்டுமென உள்ளுக்குள் உறுதி பூண்டபடி, உருளைக்கிழங்கு கட்லெட்டை சுவைத்துக் கொண்டிருந்தவனின் தலையில் அடுத்த இடியை இறக்கினர் காலனி மக்கள்.

ன்ன தான் ஏரியா மக்கள் அனைவரும் ஒன்று கூடி, ஒற்றுமையுடன் நடத்தும் தன்னார்வ நிகழ்ச்சியென்றாலும், அங்கும் அமைதியைக் குலைக்கவென்றே, பந்தியில் பங்காளிச் சண்டையை நிகழ்த்தும் பாழாய்ப்போன பாமரக் கூட்டம் ஒன்று உண்டு!

‘வாட்டர் பாட்டில் போதவில்லை’, ‘நாக்கடியில் 4 கட்லெட்டை பதுக்கிக் கொண்டு நான்கெட்டில் வீட்டுக்கு ஓடி விடுகிறார்கள் சிலர்’, ‘French Fries-ஐ flying-ல் விட்டு, குழந்தைகள் உணவை வீணாக்குகிறார்கள்’, ‘டப்பாவைப் பிரித்த நொடியிலேயே கப்-ஐஸ்க்ரீம்கள் மாயமாகி விடுகிறது’, ‘பாதாம் பாலுக்கு பதிலாக சுகர் இல்லாத காபி கேட்கும் தாத்தா,பாட்டிக்கள்’, – என வருடாவருடம் புகார்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பஞ்சமேயிருக்காது.

இந்த முறை பந்தி, பரபரப்பின்றி ஸ்மூத்தாக சென்று விட்டதை எண்ணி, விழாக்குழு பெருமைப்பட்ட வேளை, மேடைக்கருகே சலசலப்பு ஏற்பட, அனைவரும் அங்கு விரைகையில், இருதரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கிறது.

அது என்னவென்றால்,

கலிலியோ காலனி முதல் தெருவைச் சேர்ந்த அப்புசாமி தாத்தாவுக்கும், மூன்றாவது தெருவைச் சேர்ந்த சின்னப்பதாஸூக்கும், DJ-வின் ‘நீங்கள் கேட்ட பாடல்’ segment-ல் கைக்கலப்பாகியிருக்கிறது.

90ஸ்-கிட் ஆன தாஸ், ‘மஸ்தானா, மஸ்தானா நான் தான் உனக்கு மச்சானா?’ – என்ற பாடலை ஒலிக்கச் சொல்லி ரிக்வஸ்ட் செய்திருக்கிறான்.

ஆனால் 60ஸ்-கிட் ஆன அப்பு தாத்தா, ‘எலந்த பழம்,எலந்த பழம் யாஆஆஆஆஆஆங்ங்ங், செக்கச் சிவந்த பழம்’ – என்ற பாடலைப் போடும் படி ஆணையிட்டிருக்கிறார்.

காலனிக்குள் எப்போதும் கரைச்சல் செய்து, குடைச்சலைக் கொடுத்து, மக்களை மன உளைச்சலிலேயே வைத்திருக்கும் அப்பு தாத்தாவின் இந்த அராஜகத்தால் வெகுண்டு போன தாஸ், நியாயத்தைத் தட்டிக் கேட்டதில், ‘தன்னை ஒருவன் எதிர்த்துப் பேசுவதா’ என்ற இறுமாப்போடு, DJ system-த்தின் கேபிள்களைப் பிரித்து,பிய்த்துப் போட்டு வயோதிகத் திமிரைக் காட்டியிருக்கிறார் அப்பு.

இதனால் மனம் நொந்து போன DJ, ‘ஏரியாவா டா இது?, மனுஷனா டா நீங்க?, இனிமே இந்தக் காலனிப் பக்கம் எட்டியே பார்க்க மாட்டேன் டா! ஒழுங்கா பேமெண்ட்டை செட்டில் பண்ணுங்க’ – எனத் திட்டி விட்டுப் பொட்டியைக் கட்டத் தொடங்கியிருக்கிறான்.

தாத்தாவின் இது மாதிரியான reckless செய்கைகள், காலனியின் harmony-ஐக் குலைப்பதாக இரண்டுத் தெரு ஆட்களும் வாக்குவாதத்தில் இறங்க, அனைவரையும் ஒண்டியாக சமாளித்தபடி, நட்டநடுவில் ‘gigantic’-ஆக நின்றவரைக் கண்டு, ‘இந்தச் சண்டை இன்னைக்குத் தீராது’-என நினைத்த சிலர், ‘நல்ல நாள் அதுவுமா எதுக்குப் பிரச்சனை, இருக்கிற உற்சாக மனநிலையை கெடுத்துக் கொள்ள வேணாமே’-எனக் கூறி சண்டையைத் தற்காலிமாக விலக்கி, சபையைக் கலைக்க,

ஒவ்வொரு முறையும் ஜாலியாகச் செல்லும் விழாவின் உற்சாக நிலையை, ஏதேனும் குடைச்சலைக் கொடுத்து, சல்லி,சல்லியாக நொறுக்கி விட்டுக் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி தவுலத்தாக நிற்கும் தாத்தாவைக் கண்டு கடுகடுத்துப் போன விழாக் கமிட்டி,

‘கலிலியோ காலனியிலிருந்து அப்பு தாத்தாவை நீக்கும் வரை, இனி ஆடலும்,பாடலும் நிகழ்ச்சியே நடைபெறாது’ எனக் கூறி, கடையைச் சாற்றிச் சென்றதில், வெகுண்டு போன தாத்தா,

“அத்தனையும் வெத்து ப்ளாட்-ஆ(Plot) கிடந்தப்பவே, வீடு கட்டிக் குடி வந்தவன் டா!, நான் வந்த பொறவு தான் இதுக்கு, கலிலியோ காலனின்னே பேரு வந்துச்சு!, என்னைய விலக்கி வைச்சுக் கொண்டாட்டத்தைப் பார்த்துருவீங்களா நீங்க?, நான் உயிரோட இருக்குற வரை அது நடக்காது டா!,” என்று கத்திக் குவித்தபடி… தன் வீடு நோக்கிச் செல்ல,

“இந்தாளு இருக்குற வரை, விழா நடத்துறது கஷ்டம் தான்!, கமிட்டியும் எத்தனை வருஷம் தான் பொறுத்துப் போகும் சொல்லு?, ஆனா, இவரு கரைச்சல் பண்ணுவாருன்னு தெரிஞ்சும், இந்தத் தாஸ் எதுக்கு அவர் கூட உரண்டை இழுத்திருக்கான்?, அதுவும் அவன் கேட்டப் பாட்டைப் பார்த்தியா?, எல்லாம்… ‘கையில்லாத ஜாக்கெட்’ விக்குற அந்த எதிர்வீட்டுக்காரிக்காகத் தான் இருக்கும்! இந்தக் காலனியில குடியிருக்குறதுங்க பூரா ஒரு மார்க்கமாத் தான் இருக்குதுங்க! இதுங்களை ஒழிச்சாத் தான்.. இதுக்கு ஒரு முடிவு வரும்” – என ஆளாளுக்குப் பேசினாலும், வருடங்கள் இரண்டு கடந்த பின்னும், கலிலியோ காலனிக்கு விடிவு பிறக்கவில்லை! Gangster-ன் கனவும் பலிக்கவில்லை!

அதன் பிறகு, படிப்பில் பலமுறை அவளை முந்தியும் கூட, வெற்றியின் வாசனையை முழுதாக அவனால் நுகர முடியவில்லை!

அதே விழாவில், அதே மேடையில், அவளைத் தோற்கடித்துக் காட்ட வேண்டுமென்கிற வெறி நாளுக்கு, நாள் பெருகிக் கொண்டே சென்றது.

ஒவ்வொரு வருடமும் ‘ஆடலும்,பாடலும்’ குறித்த சலசலப்பு காலனி மக்களிடையே எழுவதும், பின்பு விழாக்குழுவின் demand-ஐ பூர்த்தி செய்ய முடியாது தோற்று.. மறைவதுமாய், கண் மூடித்திறக்கும் நேரத்தில் கடந்திருந்தது.

இதனால் மனமுடைந்து, விரக்தியுற்று, திக்கற்ற நிலையில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு, ‘குட்டையைக் குழப்பி விட்டு மீன் பிடிக்கும்’ சேட்டைக்காரன் ‘ப்ராங்க் கால்’ பரட்டையால் இதற்கொரு தீர்வு காண முடியும் எனத் தோன்ற, உடனே இன்ஸ்டாக்ராம் வழி இம்சை கொடுக்கத் தொடங்கியிருக்கிறான்.

பெருமூச்சை வெளியிட்டவாறு, மேலும்,மேலும் நீண்ட ஸ்லைடுகளைக் கண்ட அலெக்ஸிற்குக் கொட்டாவி வந்தது. ‘படிப்புக்குக் கூட பன்னாட இவ்ளோ நேரத்தை செலவழிச்சிருக்காது!, எத்தனை ஸ்லைடு’ எனப் புலம்பியபடி, கர்சரை சர்ர்ர்ர்ர்ர்ர்ரென கீழிறக்கி கடைசி ஸ்லைடை எட்டினான்.

‘தூக்கப்பட வேண்டிய டார்கெட்டுகள்’

என்ற தலைப்பின் கீழ், சில,பல புகைப்படங்களுடன் காணப்பட்ட பக்கத்தில், gangster-ன் அம்மா, hunter-ன் அம்மாவோடு, அப்புசாமி தாத்தா-அவரது சம்சாரம் மரகதம், தாஸ் அண்ணா, கடைசியாக ஸ்லீவ்லெஸ் அக்காவும் இணைந்திருந்ததைக் கண்டு, கிட்ட வந்தத் தூக்கம் தூரச் சென்று விட, அதிர்ச்சியில் கண்களைப் பெரிதாக விரித்தபடி, அவசர,அவசரமாக அலைபேசியை எடுத்தவனின் குரல், ‘கால் மீ டா gangster காவாலி நாயே’ – என்று வாய்ஸ் மெசேஜ் வழி கதறிக் கொண்டிருந்தது.