அத்தியாயம் - 1
Cardiff University, Wales, United Kingdom.
நீல வானம்….!
அளக்க முடியா அகல,நீளத்துடன் ஒட்டு மொத்த அண்டத்திற்கும் உறையாய் நீண்டு கிடக்கும் நீருபத்தின் நிறம்.. நீலம் கொண்டிருப்பது தான் அழகா?
வெய்யோனின் வெளிச்சம் தரும் நீலப் பிண்ணனியில்.. தகதகக்கும் தரணியனின் தகிப்பு தாங்காது கலைந்து ஓடும் மேகக் கூட்டங்களோடு.. பள்ளிச் சிறுவனின் சீருடையைப் போல.. நீலமும்,வெள்ளையுமாய் ஒரு தோற்றம்! அழகு தான்! மறுப்பதற்கில்லை!
ஆனால்.. அந்தச் சண்டாளச் சண்டனுக்கே சங்கூதி விட்டு.. ஒளி தரும் ஒளியவனையே ஓரம் கட்டி விட்டு.. இருள் கடத்தி.. குளிர் பரப்பி.. ஒற்றுமையாய் ஒன்று கூடும் கார்மேகக் கூட்டங்கள், இயற்கையாய் பெறும் கருமை நிறம்.. வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது!
வரண்டு,வற்றிக் கிடக்கும் ஆற்றில்.. நுரை பொங்கத் ததும்பி வரும் பூம்புனலைப் போல! கண்ணீரைக் கொட்டத் தயாராயிருக்கும் காரிகையின்.. அழகிய,பெரிய நயனங்களைப் போல! வெண்மையும்,கருமையும் ஒரு கோட்டில் இணைந்து உருவாகும் சாம்பல் நிற வானம்… ரசனையின் உச்சம்!
அப்பேர்ப்பட்டக் கருத்த மேகங்கள் கூடிக் களித்திருந்த கார்கால வேளையது! எட்டு டிகிரி செல்சியஸில் விசிறியடித்தக் காற்றின் குளுமையை ரசிக்க முடியாது,சபிக்கவும் தோன்றாது, சலிப்புடன் நகர்ந்து கொண்டிருந்த மனிதக் கால்களை உணர்ந்தபடி அந்த நீள் இருக்கையொன்றில் கைபேசியோடு ஒன்றிப் போயிருந்தேன் நான்.
உள்ளங்கைக்குள் அடக்கமாயிருக்க வேண்டிய கைபேசி என் முழங்கையைத் தொட்டு விடும் நோக்கத்தோடு நீளமாய் நீண்டிருந்தது.
காதில் பொருந்தியிருந்த ஹெட்செட்டுடன்.. உதட்டில் படர்ந்திருந்த சன்ன சிரிப்புடன்.. பெருவிரலால்.. கைபேசி திரையை மெல்ல ‘ஸ்க்ரால்’ செய்து கொண்டிருந்தேன்.
அப்படி எதைக் கண்டு இந்த ரசனையான சிரிப்பு?
ஃபேஸ்புக்? ட்விட்டர்? இன்ஸ்டாக்ராம்?
இல்லை! பற்பல பாவனைகளுடன் என் அலைபேசி திரையை நிரப்பிய இளசுகளின் முகங்கள்.. ‘நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது டிக்டாக்’ என்றது.
(நீருபம்-வானம் வெய்யோன்,தரணியன்,சண்டன்,ஒளியவன்-சூரியன்)
@hrithikuttan
“நீ போற இடத்துலலாம் வெய்ட் பண்ணல,ஃபாலோ பண்ணல! பின்னாடியெல்லாம் வரல! ஃபோன் நம்பர் மட்டும் கொடுத்துட்டுப் போ”
ஆஹான்????!!!!
“அழகான பொண்ணு அப்டி,இப்டின்னுலாம் நான் தேடிப் போனதேயில்ல!
ஆனா.. உன் முகத்தைத் தாண்டி எதையும்.. யோசிக்க முடியல”
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!
“எக்ஸ்க்யூஸ் மீ…. உங்க ஃபேஸ்ல என்னவோ இருக்கு..!
இங்க…..! இங்க….!
ஒன்ன்ன்ன்னுல்ல.. க்யூட்நெஸ் இருக்குன்னு சொல்ல வந்தேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!
@jithuszz
“நீ என்ன வேல பண்ற?”
“நா…..ன்.. வேலை….க்கு ட்ரை பண்ணிட்டிருக்கேன்ங்க”
“இப்போ?”
“இப்போ… உங்கள லவ் பண்றேன்ல?”
“அப்புறம்???”
“அப்புறம் நம..க்கு கல்யாண வேலையெல்லாம் இருக்கும்! அந்த வேலையெல்லாம் பார்க்கனும்”
“அப்புறம்????”
“அப்புறம்.. குழ….ந்தைங்க..”
“என்னது???????”
“இல்லல்ல, ப்ரெக்னெண்ட்டா இருப்பீங்க, அந்த வேலையெல்லாம் இழுத்துப் போட்டு பண்ண வேண்டியதா இருக்கும்ன்னு சொல்ல வந்தேன்”
“சரிரிரிரிரி….. அப்ப்ப்புறம்?”
“அப்புறம்.. அந்தக் குழந்தை பெரு…சாகி… பெ..ரு….சாகி…”
“டேய்ய்ய்…. நீ வேலைக்குப் போகவே மாட்டியா டா??”
“ம்…….ஹ்…….ம்..”
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி!
@radhuramganesan
“வேலைக்குப் போனதும் என்னை மறக்க மாட்ட தான?”
“ம்ஹ்ம்..”
“வேற பொண்ணுங்கள சைட் அடிப்பியா?”
“ச்ச,ச்ச, ஐ லவ் யூ ஒன்லி கண்ணம்மா”
“என் தலைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லு”
“சத்தியமா உன்னைத் தவிர.. இந்த ஜென்மத்துல.. வேற யாரையும் மனசால கூட நினைக்க மாட்டேன் கண்ணம்மா”
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!
சிரிப்பு வந்தது எனக்கு!
“இந்த மாதிரி சோஷியல் மீடியால அட்டகாசம் பண்ற இளவட்டங்களோட எதிர்காலம் என்ன மாதிரி இருக்கும்? 10,15 வருஷம் கழிச்சு இதையெல்லாம் திரும்பிப் பார்க்கும் போது, எப்படி ‘ரியாக்ட்’ பண்ணுவாங்க?”
“‘கருமம்,நானா டா இது! ச்சை’-ன்னு சலிப்போட நகர்கிற ஆட்களா மாறலாம்! ‘எப்படியெல்லாம் சந்தோசமா இருந்திருக்கேன்!, வாழ்க்கை எவ்ளோ மாறிடுச்சு’-ன்னு பெருமூச்சு விடுற ஆட்களா இருக்கலாம்! “பார்த்தியா மகனே, அப்பா அப்பவே அப்பிடி!, இப்ப ஒரு டிக்டாக் வீடியோ பண்ணலாம், வர்றியா”-ன்னு கேட்குற… உற்சாகத்தைக் கை விடாத ஆட்களாகவும் இருக்கலாம்! யாருக்குத் தெரியும்!, இதை நிஜமான ஈடுபாட்டோட பண்ணுகிற ஆட்கள், சினிமா,சீரியல்ன்னு ராக்ஸ்டார்ஸா கூட மாறலாம்!”
டிக்டாக்- நல்லதா கெட்டதா?, இன்றைய தலைமுறையினருக்கு இது அவசியம் தானா?, இளைஞர்கள் தங்களோட வாழ்க்கையை அலைபேசி திரைக்குள்ள அடக்கிக்கிறாங்களா?, ஃபேன்டஸில வாழ்ற இந்தப் பசங்க.. நாளைக்கு ரியாலிட்டியை ஃபேஸ் பண்ணும் போது.. என்ன நிலைக்குத் தள்ளப் படுவாங்க? வாழ்க்கையை எதிர் கொள்கிற தைரியம் இருக்குமா?
நிச்சயம் நான் தர்க்கம் செய்யப் போறதில்லை!
யோசித்துப் பார்த்தால்….
இளமையின் அழகே…… பயமின்மை தான் இல்லையா?
புத்துணர்ச்சியும்,துள்ளலும் முழு வேகத்தில் தெறித்து ஓடுகிற வயது!
பெரிதாக கவலைப்பட,யோசிக்க,கட்டுப்படுத்த எதுவுமே இல்லாத வயது!
முக்கியமாக.. சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியமே இல்லாத வயது!
இன்னும் சொல்லப் போனால்… வயது மாற்றத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு.. அதை நாம ரசித்து வாழ்கிற ஒரே காலகட்டம்.. இளமைப் பருவம் மட்டும் தான்!
புதிதாக முளைக்கத் தொடங்கும் கன்னத்துப் பருவும்,மீசை முடியும்.. சுருக்கமாக விஷயத்தைச் சொல்லிவிடுமென்றாலும்… அடிக்கடி பார்க்கிற கண்ணாடி தான்… மொத்த மாற்றத்தையும்.. மிச்சமில்லாம விவரிக்கும்!
நொடிக்கொரு முறை முடி கோதப் பரபரக்குற கைகள், சிரிப்பில் இணைந்து கொள்ளும் வெட்கம், கண்களில் குடியேறும் சுவாரசியம், நடையில் மாற்றம், பார்வையில் தடுமாற்றம்!
எத்தனையோ இருக்கிறது.. அந்த வயதின் அசட்டுத்தனத்தை விவரிக்க!
ஆனாலும்.. இந்த ஹார்மோன் மாற்றத்தோட உச்சம்!
அவன்-அவள் உணர்வுகள் தான்!
உண்மை தானே? அந்த வயதில்.. அவனுக்கு அவளைத் தவிர, அவளுக்கு அவனைத் தவிர.. பெரிதாக யோசிக்க என்ன இருக்கிறது?
நல்லா படிக்கிற ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஆட்களாகட்டும்!, க்ளாஸை கட் அடிக்கிற லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் ஆகட்டும்! தீனீ மூட்டை குண்டாஸ், பிட் அடிக்கிற கணவான்ஸ்,ப்ரேயர்னாலே மயங்கி விழுகுற வீக் ப்ர்சனாலிட்டிஸ்,டீச்சரோட ஸ்பை-கள்ன்னு அத்தனை தரப்பு ஆட்களுக்கும்… ஒரு பொண்ணு இருப்பா! சுடுதண்ணீ பட்ட மாதிரி.. நெஞ்சைத் துடிக்க வைக்க!
அந்த வயசுல வெற்றின்னு கணக்கிடப் பட்றது இரண்டே விஷயத்துக்குத் தான்!
ஒன்னு.. க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி கெத்து காட்டுறது!
ரெண்டாவது.. ஒரு பொண்ணுக் கிட்ட காதலை சொல்லி.. அவளோட சம்மதத்தையும் வாங்கிட்றது!
25 வயசுக்கு மேல வர்ற காதலெல்லாம் நிறைய ‘கால்குலேஷன்களை’ உள்ளடக்கினது! எதிர்காலத்தைப் பற்றின புரிதலை ஓரளவு பெற்று விடுவதாலோ என்னவோ.. இது சரிப்படுமா,ஒத்து வருமான்ற பல கேள்விகளுக்கு மத்தியில் தான்.. காதல்,கத்திரிக்காயெல்லாம்!
ஆனா.. 15-25 அப்படிக் கிடையாது! காதலை மூச்சுக்காத்துக்கு இணையான அதிமுக்கியமான விசயமா நினைக்கச் சொல்லுகிற வயசு!
அப்படியொரு அசட்டுத்தனமான எண்ணப்போக்கு!
இனக்கவர்ச்சி,வயசுக்கோளாறு,அது,இதுன்னு பெருசுங்க எத்தனையோ பெயர் வைச்சாலும்.. அந்த வயதும்,அது தரும் உணர்வுகளும்.. புதிதாய் மொட்டு விரிந்த பூக்கள் மாதிரி! Fresh & cool! என்றும் மங்காத அழகு! மயக்கம் தருகிற அழகு!
ஆம்! மயக்கம் தான்! நானும் அதை அனுபவித்திருக்கிறேன்!
அது.. அவள் தந்த போதையின் விளைவால் உண்டான மயக்கம்!
விரல்கள் செல்ஃபோன் திரையை ஸ்க்ரால் செய்ய, மூளையோ.. காலத்தை ஸ்க்ரால் செய்து.. பின்னோக்கி.. என்னை இழுத்துச் சென்றது.
