இன்னும் பேரு வைக்கலைங்க!

தலை முதல் கால் வரைத் தங்கமாய்த் தகதகவென மின்னிய ‘அவள்’ சுற்றியிருந்த அனைவரையும் மங்கலாக்கி.. மஞ்சளாய் நின்றாள். ச்ச.. மஞ்சள் நிற உடையில் நின்றாள். அவள் நீள்விழியாள் மட்டுமல்ல! நீள்சிகையாளும் கூட! நேர் வகிட்டோடு நீண்டிருந்த அவள் கூந்தல்.. அடர்த்தியாய்.. முதுகை மறைத்திருந்தது. இந்த வெயிலுக்கு முடியை விரிச்சுப் போட்டா.. கச,கசன்னு இருக்காது? அதுவரைக் கம்பனாய் அவளை வர்ணித்துக் கொண்டிருந்த மனம்.. திடீரெனக் கட்டைக்குரலுடன் முன்னே வர.. குனிந்து தொண்டையைச் செருமிக் கொண்டு.. மீண்டும் அவளை நோக்கினேன். தோளில் தொங்கிய பையும், கையில் நோட்டுமாய் நின்றவளின் கருமணிகள் வழக்கம் போல் சோழியாய் சுழன்று கொண்டிருந்தது. எப்போதும் முகத்தில் நிரம்பியிருக்கும் நிச்சலனம்.. நிலை தப்பியிருக்க.. கையிலிருந்த பர்ஸில் ஒரு கண்ணும், பத்தடித் தள்ளி நின்றிருந்த நடத்துனரின் மீது ஒரு கண்ணுமாக.. சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டாள்.

என்ன பிரச்சனையாம்?, அருகே சென்று விசாரிக்க மனம் ஆவல் கொண்டாலும்.. அதட்டி.. அடக்கமாய் நின்றேன். ஆனால்.. என் பார்வை மட்டும் பாவை மீதே! குறுகுறுவென்ற என் பார்வையின் தாக்கம்.. குளிர்ச்சியாய் அவளுள் இறங்கியிருக்க வேண்டும்! எதேச்சையாய் என் புறம் திரும்பியவளின் முகத்தில்.. பளீர் பனிப்படலம்! அதுவரை ஆட்டமாடிய அவள் கருமணிகள் சற்றே ஆசுவாசப்பட.. மெல்லிய பெருமூச்சொன்றை வெளியிட்டபடி ஒரு நொடி கண்களை மூடித் திறந்து.. மீண்டும் என்னை நோக்கினாள். சுருக்கிய புருவங்களுடன் அவள் கண்கள் போகும் போக்கின் பின்னே நிதானமாகச் சென்று கொண்டிருந்த நான், அவள் மீதிருந்த என் பார்வையை மட்டும் அகற்றிக் கொள்ளவேயில்லை!

பற்றியிருந்தக் கம்பியை இறுக்கியபடி.. நன்றாக என் புறம் திரும்பியவள்.. கண்டக்டரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு.. என்னை நோக்கி.. லேசாகப் புன்னகைக்க முயன்றாள். அந்தப் புன்னகையின் பொருள் – என்னைத் தெரிகிறதா? – என்பதாகத் தான் இருக்க வேண்டும். இவளைக் கண்ட நாள் முதல் இன்று வரை.. பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிடமும்.. இவள் கண்களை மட்டுமே தேடி அலையும்.. என் மனதின் நிலை அறியாது.. என்ன கேள்வி கேட்கிறாள் இவள்? எரிச்சல் வந்தது. அவள் பார்வையின் பொருள் புரிந்தும்.. கண்டு கொள்ளாமல் சாலையின் புறம் திரும்பிக் கொண்டேன். நான் மீண்டும் அவள் புறம் திரும்பிய போது.. பல்லைக் கடித்தபடி என்னை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள். அப்படி வாடி என் ராசாத்தி! உரிமையுள்ள இடத்தில் தானே கோபம் கொள்ள முடியும்? மெல்லிய புன்னகை உதட்டில் தோன்ற.. அவளை நோக்கி ‘என்ன’ என்பது போல் தாடையை உயர்த்தினேன்.

“ஒரு நிமிஷம் இங்க வர்றீங்களா? ப்ளீஸ்?” – என்றாள் சைகையில்.

“எதுக்கு?” – பதிலுக்கு சைகையில் நான்.

“வா…ங்க ப்ளீஸ்..” - அவள் கெஞ்சுவது பிடித்திருந்தாலும்.. மேலும் கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்கத் தோன்றாமல்.. படியை விட்டு முன்னேறி.. மேல் கம்பியைப் பற்றியபடி அவளருகே சென்று நின்றேன்.

“என்ன?, பஸ்ல எவனும் தொந்தரவு பண்றானா?” – அருகே நின்றிருந்த ‘வாலிப வயசு’-களை நோக்கியபடி நான் கேட்க.. “ப்ச்” – என முறைத்தாள் அவள். ஜன்னலை நோக்கி நேராய் நின்றிருந்தவளின் தலை மட்டும் பக்கவாட்டிலிருந்த என் புறம் திரும்பியிருந்தது.

அத்தனை அருகில் அவள் விழிகள்! நிலமாய்.. நீராய்.. நெருப்பாய்.. காற்றாய்.. ஆகாசமாய்..! என் ஒட்டு மொத்த அண்டத்தையும் உள்ளடக்கி.. அழகாய் விரிந்திருந்தது! கண்ணே! கண்மணியே…!! அழகே! அமுதே! கவியே! தமிழே! – வர்ணனைகளுடன் நீண்ட என் வார்த்தைகளின் வரிசை.. வியப்பைக் கொடுத்தது எனக்கு! பெண்ணைத் தமிழோடு ஒப்பிடத் துவங்கும் நொடி.. ஆண்.. காதல் வயப்பட்டவனாகிறான்! நானும்…….!

மேலும் வாசிக்க... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்!!!!!