அத்தியாயம் - 2

இதயம் முழுதும் உனது வசம்…

காலை வேளை அரசுப் பேருந்து ஒன்று.. படிக்கட்டு வரை நிரம்பி வழிந்தப் பயணிகளோடு.. உப்பிப் போன வயிற்றுடன்.. முக்கலும்,முனகலுமாய் மூச்சு வாங்க… புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்-என்ற சத்தத்துடன் ‘அந்த’ நிறுத்தத்திற்கு வந்து நின்றது.

கடைசிப் படிக்கட்டில் ஒரு காலும், காற்றில் ஒரு காலுமாய்.. ஜன்னல் கம்பியைப் பற்றிக் கொண்டு.. தொற்றியபடி நின்றிருந்த நான்.. இறங்கிச் செலும் பயணிகளுக்கு வழி விட வேண்டி.. படியிலிருந்துக் குதித்துக் கீழிறங்கி நின்றேன்.

“முத்து முத்தா பேஞ்ச மழை தன்னே தன்னானே..

அந்த மூங்கிலுல தொங்குதடி தன்னே நன்னானே..

முத்து மழை பறிச்சு தாடா தன்னே நன்னானே..

நான் மூக்குத்தியா போட்டுக்குவேன் தன்னே நன்னானே..

சோ சிட்டு.. சோள சோள சிட்டு..”

‘சோ சிட்டு.. சோள சோள சிட்டு’ - பேருந்தில் ஒலித்த பாடலோடு கூடச் சேர்ந்து பாடியபடி வலது கையால் முன் தலைமுடியைக் கோதிக் கொண்டு பஸ்ஸின் உள்புறம் பார்வையைச் செலுத்திய என் கண்கள்.. ஒரு நொடி.. காமாலை கண்டது போல் திடீரென மஞ்சள் வண்ணத்திற்கு மாறியது.

ஆடி அசைந்தபடிக் கடைசியாய்க் கீழிறங்கிய பெண்மணி, வழியை அடைத்துக் கொண்டு நின்ற என்னிடம் “ஒதுங்கி நில்லுப்பு!, ஆளு வர்றது கண்ணுக்குத் தெரியல??”-எனத் திட்ட… அந்த ‘பல்க்காவிடம்’ (பல்க்+அக்கா) ஒரு சாரியைப் போட்டு விட்டு.. ஒரே தாவலில் ஏறி மீண்டும் படியில் தஞ்சமானேன்!

உள்ளே இடமிருந்தும் நகரத் தோன்றாமல்.. முன்னிருந்த இருக்கையின் கம்பியைப் பற்றியபடி.. மெல்ல நிமிர்ந்து நோக்கினேன்.

தலை முதல் கால் வரைத் தங்கமாய்த் தகதகவென மின்னிய ‘அவள்’ சுற்றியிருந்த அனைவரையும் மங்கலாக்கி.. மஞ்சளாய் நின்றாள். ச்ச.. மஞ்சள் நிற உடையில் நின்றாள்.

அவள் நீள்விழியாள் மட்டுமல்ல! நீள்சிகையாளும் கூட! நேர் வகிட்டோடு நீண்டிருந்த அவள் கூந்தல்.. அடர்த்தியாய்.. முதுகை மறைத்திருந்தது.

இந்த வெயிலுக்கு முடியை விரிச்சுப் போட்டா.. கச,கசன்னு இருக்காது?

அதுவரைக் கம்பனாய் அவளை வர்ணித்துக் கொண்டிருந்த மனம்.. திடீரெனக் கட்டைக்குரலுடன் முன்னே வர.. குனிந்து தொண்டையைச் செருமிக் கொண்டு.. மீண்டும் அவளை நோக்கினேன்.

தோளில் தொங்கிய பையும், கையில் நோட்டுமாய் நின்றவளின் கருமணிகள் வழக்கம் போல் சோழியாய் சுழன்று கொண்டிருந்தது.

எப்போதும் முகத்தில் நிரம்பியிருக்கும் நிச்சலனம்.. நிலை தப்பியிருக்க.. கையிலிருந்த பர்ஸில் ஒரு கண்ணும், பத்தடித் தள்ளி நின்றிருந்த நடத்துனரின் மீது ஒரு கண்ணுமாக.. சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டாள்.

என்ன பிரச்சனையாம்?, அருகே சென்று விசாரிக்க மனம் ஆவல் கொண்டாலும்.. அதட்டி.. அடக்கமாய் நின்றேன். ஆனால்.. என் பார்வை மட்டும் பாவை மீதே!

குறுகுறுவென்ற என் பார்வையின் தாக்கம்.. குளிர்ச்சியாய் அவளுள் இறங்கியிருக்க வேண்டும்!

எதேச்சையாய் என் புறம் திரும்பியவளின் முகத்தில்.. பளீர் பனிப்படலம்!

அதுவரை ஆட்டமாடிய அவள் கருமணிகள் சற்றே ஆசுவாசப்பட.. மெல்லிய பெருமூச்சொன்றை வெளியிட்டபடி ஒரு நொடி கண்களை மூடித் திறந்து.. மீண்டும் என்னை நோக்கினாள்.

சுருக்கிய புருவங்களுடன் அவள் கண்கள் போகும் போக்கின் பின்னே நிதானமாகச் சென்று கொண்டிருந்த நான், அவள் மீதிருந்த என் பார்வையை மட்டும் அகற்றிக் கொள்ளவேயில்லை!

பற்றியிருந்தக் கம்பியை இறுக்கியபடி.. நன்றாக என் புறம் திரும்பியவள்.. கண்டக்டரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு.. என்னை நோக்கி.. லேசாகப் புன்னகைக்க முயன்றாள்.

அந்தப் புன்னகையின் பொருள் – என்னைத் தெரிகிறதா? – என்பதாகத் தான் இருக்க வேண்டும்.

இவளைக் கண்ட நாள் முதல் இன்று வரை.. பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிடமும்.. இவள் கண்களை மட்டுமே தேடி அலையும்.. என் மனதின் நிலை அறியாது.. என்ன கேள்வி கேட்கிறாள் இவள்?

எரிச்சல் வந்தது.

அவள் பார்வையின் பொருள் புரிந்தும்.. கண்டு கொள்ளாமல் சாலையின் புறம் திரும்பிக் கொண்டேன்.

நான் மீண்டும் அவள் புறம் திரும்பிய போது.. பல்லைக் கடித்தபடி என்னை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.

அப்படி வாடி என் ராசாத்தி! உரிமையுள்ள இடத்தில் தானே கோபம் கொள்ள முடியும்?

மெல்லிய புன்னகை உதட்டில் தோன்ற.. அவளை நோக்கி ‘என்ன’ என்பது போல் தாடையை உயர்த்தினேன்.

“ஒரு நிமிஷம் இங்க வர்றீங்களா? ப்ளீஸ்?” – என்றாள் சைகையில்.

“எதுக்கு?” – பதிலுக்கு சைகையில் நான்.

“வா…ங்க ப்ளீஸ்..”

அவள் கெஞ்சுவது பிடித்திருந்தாலும்.. மேலும் கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்கத் தோன்றாமல்.. படியை விட்டு முன்னேறி.. மேல் கம்பியைப் பற்றியபடி அவளருகே சென்று நின்றேன்.

“என்ன?, பஸ்ல எவனும் தொந்தரவு பண்றானா?” – அருகே நின்றிருந்த ‘வாலிப வயசு’-களை நோக்கியபடி நான் கேட்க..

“ப்ச்” – என முறைத்தாள் அவள்.

ஜன்னலை நோக்கி நேராய் நின்றிருந்தவளின் தலை மட்டும் பக்கவாட்டிலிருந்த என் புறம் திரும்பியிருந்தது.

அத்தனை அருகில் அவள் விழிகள்!

நிலமாய்.. நீராய்.. நெருப்பாய்.. காற்றாய்.. ஆகாசமாய்..! என் ஒட்டு மொத்த அண்டத்தையும் உள்ளடக்கி.. அழகாய் விரிந்திருந்தது!

கண்ணே! கண்மணியே…!!

அழகே! அமுதே!

கவியே! தமிழே! – வர்ணனைகளுடன் நீண்ட என் வார்த்தைகளின் வரிசை.. வியப்பைக் கொடுத்தது எனக்கு!

பெண்ணைத் தமிழோடு ஒப்பிடத் துவங்கும் நொடி.. ஆண்.. காதல் வயப்பட்டவனாகிறான்!

நானும்…….!

ண்ணான்னு சும்மா பேருக்குக் கூப்பிட்டா.. நிஜமான அண்ணன் மாதிரி கேள்வி கேட்பீங்களா நீங்க?” – எரிச்சலாய் கேட்டவளிடம்..

“நீ அந்த அண்ணனை விடவே மாட்டியா?, ஏன்?, இந்த மாதிரிக் கேள்வியெல்லாம் அண்ணன் மட்டும் தான் கேட்பானா?, காதலிக்கிறவன்,கட்டிக்கப் போறவனெல்லாம் கேட்க மாட்டானா?” – எரிச்சலாய் நானும் பதில் கூற..

“சார் என்ன சொல்ல வர்றீங்க?” – நக்கலாய் உதட்டை வளைத்தாள் அவள்.

“புரியாத மாதிரி நடிக்காத! இன்னொரு தடவை என்னை அண்ணான்னு கூப்பிட்டுப் பாரு! அப்புறம் இருக்கு உனக்கு!”

“ஏன்? என்ன பண்ணிடுவீங்க?”

“ப்ச்! கூப்பிடாதன்னா, கூப்பிடாத”

“மிரட்டலா! அதுசரி!” –நாலாபுறமும் சோழி சுழன்றது.

“சரி, என்ன பிரச்சனை? எதுக்கு என்னைக் கூப்பிட்ட?”

சட்டென விழிகள் பதட்டமாக.. அசடுவழிந்த முகத்துடன் என்னை நோக்கியவள்..

“ஆக்….சு..வ..லி…” – என்றாள்.

“ம், ஆக்சுவலி????”

“எனக்கு 5 ரூபாய் கடனா கொடுக்குறீங்களா?, நாளைக்கே திருப்பிக் கொடுத்துட்றேன்! யமுனா கிட்ட!”

“5 ரூபாயா??” – கேவலமாகக் கேள்வி கேட்ட என்னிடம்.. “ம்ம்ம்” எனத் தலையாட்டியவள்..

“பஸ் பாஸை வீட்லயே மறந்து வைச்சுட்டு வந்துட்டேன்! பர்ஸ்ல வேற காசு இல்ல!, டிக்கெட் எடுக்கனும்” எனக் கூற..

அவளது கால் நகங்களில் பளபளத்த மஞ்சள் ‘பாலிஷில்’ பார்வையை பதித்து நிமிர்ந்த நான்..

“இதுக்கெல்லாம் டைம் இருக்கு!, பர்ஸ்ல காசு இருக்கான்னு செக் பண்ண டைம் இல்லையா?, நான் இல்லாம போயிருந்தா.. எப்படி சமாளிச்சிருப்ப?” – எனக் கேட்டபடி.. பாக்கெட்டில் கை விட்டு நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவள் புறம் நீட்டினேன்.

“இதுக்கெல்லாம் டைம் எடுத்துக்கிட்டதால தான்.. பர்ஸை செக் பண்ண மறந்துட்டேன்!” – என்றவள் தொடர்ந்து..

“5 ரூபாய் கேட்டா.. 100 ரூபாய் கொடுக்குறீங்க! சார் ரொம்ப பணக்காரரோ?” என்றாள் புருவம் உயர்த்தி!

தூக்கி நின்ற புருவத்தின் உயரத்தை அளந்தபடி.. “ம்ஹ்ம்! ரொம்ப ஏழை! அப்பா போய் சேர்ந்துட்டார்! அம்மா, என் சித்தப்பா அதாவது உன் ஃப்ரெண்ட்டோட அப்பா கூட சேர்ந்து விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு.. என்னை வளர்த்து ஆளாக்குச்சு!”

-நான் என்னைப் பற்றிய எஸ்டிடியை சுருக்கமாகச் சொல்ல..

“அதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்! அதனால தான் 100 ரூபாய் வேணாம்ன்னு சொல்றேன்” என்றாள்.

“எப்படித் தெரியும்?”

“……………..”

“யமுனா கிட்ட என்னைப் பத்திக் கேட்டியா?”

“………”

“ஏன் கேட்ட?”

“ப்ச், எதுக்கு இப்போ இத்தனைக் கேள்வி?, எதேச்சையா.. உங்களைப் பத்திப் பேச்சு வந்தப்போ.. அவளே இதையெல்லாம் சொன்னா! நானா எதையும்.. வாண்டடா-ஆ போய்க் கேட்கல! புரியுதா?”

“அதாவது.. உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுல.. எனக்கு எந்த ஆர்வமும் இல்லடான்னு சொல்ற?,அப்படித் தான? அந்த 100 ரூபாயைத் திருப்பிக் கொடு!, உன்னையெல்லாம்.. பஸ்ஸை விட்டு பாதியில இறக்கி விட்டாத் தான் அடங்குவ”

-பேச்சோடு பேச்சாக.. ரூபாய் நோட்டைப் பிடுங்கிய என்னிடம்..

“ண்ணா,ண்ணா… ப்ளீஸ்ண்ணா.. ப்ளீஸ்ண்ணா.. கொடுங்கண்ணா” என்றவள்.. தன் புறம் இழுத்துக் கொள்ள…

“பல்லை உடைக்கப் போறேன் பாரு” எனக் கோபமாய் மிரட்டினேன் நான்.

அதற்குள் கண்டக்டர் அருகே வந்திருக்க.. அவளுக்கான பயணச்சீட்டைப் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டவள், சில்லறையை என் புறம் நீட்டினாள்.

“நான் வாங்க மாட்டேன்”

“லூசா நீங்க?, உங்க காசு தான இது?, எனக்கு 5 ரூபா போதும்! மிச்சத்தை வாங்கிக்கோங்க ஒழுங்கா!”

கண்ணைச் சுருக்கி மிரட்டியவளிடம் “பரவாயில்ல, மொத்தமா திருப்பிக் கொடு. வாங்கிக்கிறேன்!” என்றேன்.

“ப்ச்” – சலிப்புடன் என்னை நோக்கியவளிடம்..

“இதை கொடுத்துட்டு.. நீ என் 5 ரூபாயைத் திருப்பிக் கொடுக்காம, ஏமாத்திட்டா??, அதான்” என நான் கூற..

உதட்டை வளைத்தபடி.. தன் பர்ஸைத் திறந்து காசைத் திணித்தவள்..

“உங்க தங்கச்சிக்கு ஒரு தியரி! எனக்கு ஒரு தியரியா?” என்றாள்.

“புரியல”

“லவ்வெல்லாம் உங்க தங்கச்சிக்கு மட்டுமில்ல! எனக்கும் தான் செட் ஆகாது”

“லவ்ன்னு யாரு சொன்னா?”

“பின்ன? ஃப்ரெண்ட்ஷிப்-ஆ?”

“ச்ச,ச்ச, ஆணுக்கும்,பெண்ணுக்கும் இடைல ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் சான்ஸே இல்லன்றது என் கருத்து”

“ஓஹோ! அப்போ என்னையும்,கணேஷையும் என்னன்னு சொல்லுவீங்க?”

“அது வேற!”

“என்ன வேற?”

“ப்ச், டாபிக்கை மாத்தாத! உனக்கும்,எனக்கும் ஃப்ரெண்ட்ஷிப்க்கெல்லாம் சான்ஸ் இல்ல!”

“அப்டின்னா, அண்ணன்-தங்கச்சின்னு வைச்சுக்கட்டுமா?”

“ஏய்ய்ய்”

“………..”

“இப்போ என்ன?, நான் டைரக்டா சொல்லனுமா?”

“வேண்டாம்”

“ஏன்?”

“ரிஜெக்ட் ஆயிடுவீங்க. பரவாயில்லயா?”

“சரி, எப்போ அக்செப்ட் பண்ணிக்குவ-ன்னு சொல்லு! அப்போ சொல்றேன்”

கண்களில் சிதறிய வெட்கத்தை உதட்டு மடிப்புக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு.. அடக்கப்பட்ட சிரிப்புடன்.. வெளிப்புறம் நோக்கியவள்.. “சான்ஸே இல்ல” என்றாள்.

“ஏன்?”

“என்ன ஏன்?, நான் ஏற்கனவே யாரையாவது லவ் பண்ணிட்டிருந்தா?, அம்மா-அப்பாவுக்குப் பயப்பட்ற அடக்கமான பிள்ளையா இருந்தா?”

“நீயா? சான்ஸே இல்ல?”

“எப்படி சொல்றீங்க?”

“அம்மா-அப்பாவுக்கு அடங்குன பொண்ணா, உன்னை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியல”

“என்னைப் பத்தி ரொம்பத் தெரிஞ்ச மாதிரி ஃபர்ஸ்ட் மீட்டிங்ல இருந்து ஓவரா கலாய்க்குறீங்க?”

புருவத்தைச் சுருக்கிக் கொண்டு.. உதட்டைப் பிதுக்கியவளின் அருகே குனிந்து.. அவள் கண்களை நோக்கி..

“எல்லாத்துக்கும் இந்தக் கண்ணு தான் காரணம்!” என்றேன்.

கண்களை அகலத் திறந்து.. என் முகத்தை முழுதாய் நோக்கியவளிடம்..

“ஜென்ம ஜென்மமா… இந்தக் கண்ணைப் பார்த்து,ரசிச்சு,அனுபவிச்சுப் பழகுன மாதிரி ஒரு ஃபீலிங்!, இது தான்.. உன்னோட என்னை நெருக்கமா உணர வைக்குது! உரிமையா பேச சொல்லுது!” – என்று நான் கூற..

அமைதியாய்ப் பார்வையைத் திருப்பிக் கொண்டவள்..

“யமுனா உங்களைப் பத்தி சொன்னதுக்கும்,இந்த மாதிரி பேசுற உங்களுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்ல”

“அவ என் தங்கச்சி. நீ அப்டியா?”

“ஏன், நான் மட்டும் என்ன?”

“நீ……………….?”

“நான்????”

அலட்டிக் கொள்ளாமல்.. கேள்வியைக் கேட்டு விட்டு.. முகம் மாறாமலிருக்க பிரயத்தனப்பட்டபடி.. பெரும் தவிப்புடன் என் பதிலுக்காகக் காத்திருந்தவளை.. ஒரு நொடி.. புன்னகையுடன் நோக்கி..

“நீ என் பொண்டாட்டி” என்றேன் மெல்லிய குரலில்.

பல வண்ணப் பூக்களைக் கோர்த்து வைத்தாற் போல்.. கலர்,கலராய் அவள் முகத்தில் வந்து போன வெட்கச் சிதறல்களை ரசித்தபடி நின்ற என்னிடம்..

“ரெண்டே தடவை பார்த்த பொண்ணை பொண்டாட்டின்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்” என்றாள்.

“நான் ஒன்னு கேட்பேன்! உண்மையை சொல்லுவியா?”

“என்ன?”

“இந்த ஒரு மாசத்துல நீ என்னை ஒரு தடவை கூட நினைக்கவே இல்லையா?”

“…………..”

“ஆனா.. நான் உன்னைப் பத்தி மட்டும் தான் ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சிட்டிருக்கேன்”

“ஏன்?, ஏன் நினைச்சுட்டு மட்டும் இருக்கீங்க?, வாரத்துல 4 தடவை உங்க தங்கச்சியைப் பார்க்குறீங்கல்ல? என்னைப் பத்திக் கேட்க வேண்டியது தான?” – நொடித்துக் கொண்டவளைக் கண்டு வாய் விட்டு சிரித்து…

“வாரத்துல 4 தடவை நான் யமுனாவைப் பார்க்குறேன்றது வரை உனக்குத் தெரிஞ்சிருக்கு?, அப்டின்னா.. என்னைப் பத்தி அவ கிட்டக் கேட்டிருக்க! அப்படித் தான?” என்றேன்.

“அ….து…………” – மாட்டிக் கொண்ட குறுகுறுப்பில்.. உதட்டைக் கடித்தபடி மூக்கு விடைக்கத் தலையைத் திருப்பிக் கொண்டவளிடம்..

“ஏய்…” என்றேன்.

“ம்”

“இப்போ உன்னை இங்க பார்க்குற வரை எனக்குத் தெரியாது.. உன் கிட்ட இப்படியெல்லாம் பேசுவேன்னு”

“ஓஹோஓஓ”

“சத்தியமா!”

“…………..”

“ஏன்னு தெரியல.. யமுனா கிட்ட உன்னைப் பத்திக் கேட்கத் தோணல! என் உள்மனசு நம்புச்சு!.. நீயும், என்னை மாதிரி.. என்னைப் பத்தி மட்டும் தான் நினைச்சிட்டு இருப்ப-ன்னு”

“அப்டியெல்லாம் இல்லயே”

“அதை, இந்தப் பக்கம் திரும்பி.. என் முகத்தைப் பார்த்து சொல்லு..”

ரோஷத்துடன் என் முகம் நோக்கித் திரும்பியவளை.. இமைக்காது நோக்கினேன் நான்.

என்ன நினைத்தாளோ! “நீங்க இந்த பஸ்ல வருவீங்கன்னு யமுனா என் கிட்ட சொன்னா!” என்றாள் அமைதியான குரலில்.

மிதமிஞ்சிய வியப்பில் என் உதடுகள் பிளந்து கொள்ள… கண்களைப் பெரிதாய் விரித்த என்னிடம்..

“எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள். தேடித் தேடி ஆசையா.. இந்த ‘யெல்லோ’ டிரெஸ் வாங்குனேன்! ஏன்னு தெரியல.. காலைல ட்ரெஸ்ஸை மாட்டிக்கிட்டு கண்ணாடில என் முகத்தைப் பார்த்தப்போ.. நீங்க தான் ஞாபகத்துக்கு வந்தீங்க! அதான்.. எதையும் யோசிக்காம.. இந்த பஸ்ல ஏறிட்டேன்” என்றாள்.

பார்வையில் தயக்கமில்லை!

குரலில் தடுமாற்றமில்லை!

பெரிதாக வெட்கப்படவில்லை! அலட்டிக் கொள்ளவில்லை!

இன்னும் எத்தனை,எத்தனையோ ‘இல்லை’-களை ஏந்தியபடித் தெளிவாய் வந்தது அவள் வார்த்தைகள்.

“ரொம்ப யோசிச்சேன்! நீங்க என்னை மாதிரி நினைக்கலையோ! அதான்.. என்னைத் தேடி வரலயோன்னு!”

“……….”

அவள் கண்கள் பேசும் காதல் பாஷையை உணர்ந்தபடி அமைதியாய் நின்ற என்னை நிமிர்ந்து நோக்கினாள்.

“ரொம்பவும் கன்ஃபியூஷன்ல தான் பஸ்ல ஏறுனேன். அந்த டென்ஷன்ல தான் பர்ஸ்ல காசு இருக்கா,என்னன்னு கூடப் பார்க்கல”

தயக்கமின்றி என் முகத்தை ஏறிட்டு.. தடுமாறாமல் தன் எண்ணங்களை வெளிப்படுத்திய அந்தக் கண்களைக் கண்டு.. உள்ளே எழுந்த சுக அலைகளில்.. முற்றிலுமாக என்னை இழந்து.. முழுதாக அவளிடம்.. நான் சரணடைந்து நின்ற அந்த நொடி.. நான் நன்றி கூறியது இளமைக்கும், இயற்கைக்கும் தான்!

‘save’ பட்டனை அழுத்தத் தேவையின்றி.. என் நினைவடுக்கில் பதிந்து விட்ட அந்த நொடியை முழுமையாய் அனுபவித்தபடி.. நான் வார்த்தைகளற்று.. நின்ற சமயம்.. அவள் தொடர்ந்தாள்.

“வந்ததுல இருந்து பார்க்குறேன், நீங்க என் பக்கம் திரும்பக் கூட இல்ல! உங்களைப் பார்த்து நான் சிரிச்சப்புறமும் கூட கண்டுக்காம முகத்தைத் திருப்பிக்கிட்டீங்க”

“……………..”

இன்னமும் வார்த்தை வரவில்லை எனக்கு!

அவள் கண்களை..! இதழை..! அவளை..! பார்க்க..! பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது.

“ஏன் அமைதியா இருக்கீங்க?”

“……….”

“உங்கக்கிட்ட தான் கேட்குறேன்”

“நிஜமாவே…. எனக்காகத் தானா?”

“எது?”

“இந்த ‘யெல்லோ’ டிரெஸ்?, இந்த அலங்காரம்?”

“அலங்காரத்தை வேணா.. உங்களுக்காகன்னு சொல்லலாம்! ஆனா.. ‘யெல்லோ’ டிரெஸ் எனக்கே எனக்காக வாங்குனேன்”

“சரி, என்ன வேணும் கேளு”

“என்ன?”

“பிறந்த நாள்ன்னு சொன்னேல?, என்ன வேணும்? சொல்லு”

“ப்ச், முதல்ல விஷ் பண்ணுங்க”

“வெறுங்கையோட விஷ் பண்றதா?, நீ என்ன வேணும்ன்னு சொல்லு முதல்ல”

“கேட்டா.. தந்துடுவீங்களா?”

“என்னால முடிஞ்சா!”

“அப்டின்னா.. கேட்கட்டுமா?”

“கேளு”

“எனக்கு…”

“ம்??”

“நீங்க தான் வேணும்..”

கொஞ்சமும் அலட்டலின்றி, மீண்டும்,மீண்டும் உயிரைத் தாக்குகிறாள்!

அதுவரை அவளிடத்தில் குடி கொண்டிருந்த வெட்கம்.. ஒரு நொடி.. என் கண்களில் கசிய.. லேசான சிரிப்புடன்.. அவள் கண்களைத் தவிர்த்த என்னை.. ஆர்வமாய் நோக்கினாள் அவள்.

“எங்க இருந்து இப்படிப் பேசக் கத்துக்கிட்ட?” – குரல் வெகுவாகக் குழைந்து போனது எனக்கு.

“நீங்க சொன்ன மாதிரி தான்! உங்களை இங்க பார்க்குறதுக்கு முன்னாடி வரை, நான் இப்படியெல்லாம் பேசுவேன்னு எனக்கும் தெரியாது”

மெலிதாய் ஒரு சிரிப்பு என்னிடம்.

“ஏன்? பிடிக்கலயா?” - அவள்

“என்ன?”

“நான் அப்படி சொன்னது”

“ஏன் இப்படிக் கேட்குற?”

“இல்ல, பொதுவா பசங்களுக்கு,இப்படி வெளிப்படையா பேசுற பொண்ணுங்களைப் பிடிக்காது தான?”

“எனக்குப் பிடிக்கும். நீ பேசு”

“சரி, என் கிஃப்ட்டைத் தா-ங்க”

“இ..ங்கே..யா?” – ஆச்சரியமாய் நான் கேட்க..

“ஏன்?”

“இல்ல, இது பஸ்-ஆ போச்சேன்னு யோசிக்கிறேன்”

“இல்லன்னா?”

“எனக்காகத் தான் இந்த பஸ்ல ஏறுனன்னு நீ சொன்னப்பவே…”

“சொன்னப்பவே??”

“கட்டிப்பிடிச்சிருப்பேன்” – என் வார்த்தைகளில் அடங்கியிருந்த ஆசை.. என் கண்களில் பொங்கியிருக்க வேண்டும்.

வியப்பேறிய விழிகளுடன் என்னை நோக்கியவள்.. மெல்லத் தலை திருப்பியபடி..

“எனக்கு அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

“நான் வேணும்ன்னு தான கேட்ட?”

“ஆமா, அதுக்காக இப்டில்லாம் பேசுவீங்களா?, நீங்க வேணும்ன்னு கேட்டா.. அதான் அர்த்தமா?”

“பின்ன?”

“நீங்கன்னா… உங்க மனசு. இல்ல… சட்டைப் பாக்கெட்ல செருகியிருக்கிற பேனா,நீங்க முகம் துடைக்கிற கர்ச்சீஃப் இந்த மாதிரி உங்களை எப்பவும் ஞாபகப்படுத்துற ஏதாவது…”

“இதெல்லாம் இல்லேன்னா.. நீ என்னை நினைக்க மாட்டியா?”

“நான் அப்படி சொன்னேனா?”

“சரி, விடு” எனக் கூறியபடியே.. என் விரலிலிருந்த மோதிரத்தைக் கழட்டினேன் நான்.

என் பெயர் பொறித்த மோதிரம் அது!

என் செய்கையை கவனித்தபடி நின்றவளிடம்.. “கையை நீட்டு” என்றேன்.

மறுத்துப் பேசாமல் கை நீட்டினாள் அவள்.

சிரிப்புடன் அவளது பெரு விரலில் என் மோதிரத்தை மாட்டி..

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றேன்.

ஆசையாய்,ஆர்வமாய்,காதலாய் என் முகம் பார்த்தவளிடம்..

“எங்கக் காட்டுல தினம் வேலை பார்ப்பேன். அதுக்குக் கிடைச்சக் கூலி-ல வாங்குன மோதிரம் இது! என் உழைப்பு! என் காசு! நீ தைரியமா போட்டுக்கலாம்” என்றேன்.

மோதிரத்தைத் திருகியபடி.. தலை குனிந்து நின்றவளை… நான் ரசனையோடு நோக்க.. அருகில் நின்றிருந்த ‘வாலிப வயசு’-களில் ஒன்று எங்களை நோக்கி “ம்க்கும்,ம்க்கும்” எனக் கனைத்தது.

அடுத்தவன் குஜாலா இருந்தா.. இவனுங்களுக்குப் பொறுக்காதே??!!